HOME      Khutba      ஸுன்னாவின் அவசியம்!! | Tamil Bayan - 597   
 

ஸுன்னாவின் அவசியம்!! | Tamil Bayan - 597

           

ஸுன்னாவின் அவசியம்!! | Tamil Bayan - 597


ஸுன்னாவின் அவசியம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஸுன்னாவின் அவசியம்!!
 
வரிசை : 597
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 27-09-2019 | 28-01-1441
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை அஞ்சி வாழுமாறு, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு சுபஹானஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களையும், நமது பெற்றோர், உறவினர்கள் மற்றும் முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து, அல்லாஹ்வுடைய அருளுக்கும், அன்பிற்கும், மன்னிப்பிற்கும் உரியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
 
அல்லாஹ்வுடைய வேதத்தை பற்றிப்பிடித்து, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த தெளிவான, வெண்மையான பாதையில் மார்க்கத்தில் இந்த உம்மத்தை விட்டுச் சென்றார்களோ அந்த தெளிவான வெண்மையான பாதையில் நீடித்திருந்து, நிலைத்திருந்து அல்லாஹ்வை சந்திக்க கூடிய நற்பாக்கியத்தைத நமக்கு தருவானாக! 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை மதித்து நடக்கக் கூடிய, அதைப் பின்பற்றக் கூடிய, அதைப் பேணக்கூடிய, அதற்கு கண்ணியம் தரக்கூடிய நன் மக்களில் அல்லாஹுத்தஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
சமீப காலமாகவே மிகப்பெரிய ஒரு குழப்பத்தை நாம் சந்தித்து வருகிறோம். மக்களில் யாருடைய உள்ளங்களில் சந்தேக நோய் புகுந்து விட்டதோ, யாருடைய உள்ளங்களில் குழப்பத்தின் விதை விதைக்கப்பட்டு விட்டதோ, மார்க்கத்தை விட வேண்டும், மார்க்கத்தை விட்டு விலக வேண்டும், மார்க்கம் என்ற கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடாது என்ற ஷைத்தானிய சிந்தனை உள்ளத்தில் ஊடுருவி விட்டதோ, அந்த மக்கள் ஹதீஸ்களை விமர்சனம் செய்பவர்களாக, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை விமர்சனம் செய்யக்கூடியவர்களாக, ஹதீஸ் தேவையில்லை, குர்ஆன் மட்டும் போதும் அல்லது ஹதீஸ் தேவைதான் இருந்தாலும் ஹதீசை நாம் ஆராய்ச்சி செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; குர்ஆனுக்கு முரண்படும் போது அல்லது அறிவியலுக்கு முரண்படும் போது அல்லது அனுபவத்திற்கு முரண்படும் போது அல்லது அடிப்படை தத்துவங்களுக்கு முரண்படும் போது நாம் ஹதீஸ்களை ஏற்க தேவையில்லை அல்லது ஹதீஸ்களில் ஒரு சில ஸஹாபாக்கள், பிறகு ஒருசில தாபியீன்கள் மூலமாக வரக்கூடிய ஹதீஸ்கள் எல்லாம் அது ஸஹீஹான நூல்களில் பதிய பட்டிருந்தாலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதாக இந்த உம்மத்தின் மூத்த தலைமுறையால் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை எல்லாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெரும் திரளாக அறிவிக்கப்படக் கூடிய ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொண்டால் போதும் என்பதாக பலர் தாங்களும் குழம்பி, நயவஞ்சகத்திற்கும் நிராகரிப்பிற்கும் ஆளாகி மக்களையும் குழப்பி வருகிறார்கள். மக்களையும் வழி கெடுத்து வருகிறார்கள். நிராகரிப்பின் பக்கம் அழைத்து வருகிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இந்த சிந்தனை யாருக்கு வரும் என்றால், யார் வழிகெட வேண்டும் என்று தனக்குத் தானே முடிவு செய்து கொண்டானோ, தன்மீது வழிகேட்டை தானே இழுத்துக்கொண்டானோ அத்தகைய வழிகேடன்தான் இப்படி சிந்திப்பான். இந்த சிந்தனையை பரப்புவான். 
 
இஸ்லாமிய மார்க்கத்தில் நீடித்திருந்து, நிலைத்திருந்து, மறுமையில் அல்லாஹ்வை சொர்க்கத்தில் சந்திக்க வேண்டுமென்ற தூய மனதுடைய ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய மார்க்கம் அல்லாஹ்வுடைய தீன் என்று வரும்போது அவன் குர்ஆனையும் மதிப்பான். சுன்னாவையும் மதிப்பான்.
 
அல்லாஹ்வுடைய குர்ஆனுக்கு கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவத்தை, அதே மரியாதையை, அதே கண்ணியத்தை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸுக்கும் கொடுப்பான்.
 
அல்லாஹ் கூறுகிறான் என்று கூறும்போது அவனுடைய உள்ளம் எப்படி நடுங்குகிறதோ, அந்தக் கூற்றை அவன் மதிக்கின்றானோ, அதுபோன்றுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என்று அவன் செவியுறும்போதும் அதை மதிப்பான். அதைப் பேண முயற்சிப்பான். அதற்கு தலை சாய்ப்பான். அதற்கு கண்ணியம் கொடுப்பான். 
 
நம்முடைய நபி கூறினார்கள் என்று அன்போடும், இறை பயத்தோடும் அந்த ஹதீஸை அணுகுவான். அந்த சுன்னாவை அணுகுவான்.
 
இவர்கள்தான் முஸ்லிம்கள். இவர்கள்தான் முஃமீன்கள். இவர்களைத்தான் அல்லாஹுத்தஆலா தன்னுடைய அடியார்கள் என்று கூறுகிறான். இவர்களைதான் அல்லாஹு தஆலா முஸ்லிம்கள் என்று கூறுகிறான். இவர்களைத்தான் அல்லாஹு தஆலா முஃமீன்கள் என்று வர்ணிக்கிறான்.
 
யார் ஒருவர் குர்ஆனையும் ஹதீஸையும் பிரித்துப் பார்த்து  குர்ஆனுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுப்போம், ஹதீஸ் என்று வந்தால் பார்ப்போம், சிந்திப்போம், அதற்கு பிறகு அதை ஏற்றுக் கொள்ளலாமா என்று முடிவு செய்வோம் என்று கூறுகிறார்களோ இவர்கள் நிராகரிப்பாளர்கள், இவர்கள் நயவஞ்சகர்கள். 
 
இவர்களுடைய உள்ளத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்திலேயே இவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அமல்களை விட்டு வெளியேற வேண்டும், மார்க்க கட்டுப்பாட்டை உடைக்க வேண்டும், இப்லீஸ் உடைய சிந்தனைகளுக்கு ஆளாக வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். 
 
அதற்குத்தான் இப்படி ஒரு சாயம் பூசுகிறார்கள். தங்களுடைய இந்த மன இச்சைக்கு,  இந்த ஷைத்தானிய சிந்தனைக்கு இவர்கள் ஒரு முலாம் பூசுகிறார்கள். ஒரு அலங்கரிப்பு செய்கிறார்கள். பிறகு அந்த அலங்கரிப்பான வார்த்தைகளைக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். 
 
குர்ஆனை பாதுகாப்பது அல்லாஹ்வுடைய பொறுப்பு. குர்ஆன் ரஸூலுல்லாஹ் உடைய காலத்திலேயே தொகுக்கப்பட்டு விட்டது. ஹதீசை பாதுகாப்பதாக அல்லாஹ் சொல்லவில்லை. ஹதீஸ் பிறகு வந்த காலத்தில் தான் தொகுக்கப்பட்டது, எழுதப்பட்டது. அதில் பல குழப்பங்கள் இருக்கிறது. 
 
இப்படியாக ஒன்றுமில்லாத குப்பை வாதங்களை மக்களுக்கு மத்தியில் கூறி அப்பாவி மக்களுடைய ஈமானை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா கூறுகிறான்:
 
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
 
நிச்சயமாக நாம்தான் இந்த அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம். (அல்குர்ஆன் 15 : 9)
 
இந்த திக்ர் இதை எப்படி அல்லாஹ் பாதுகாக்கின்றானோ, இந்த திக்ருக்கு விளக்கமாக இருக்கக்கூடிய நபிமொழியையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்பு அல்லாஹ்வின் பொறுப்பு. 
 
அல்லாஹு தஆலா தனது நபிக்கு சொல்லுகிறான்:
 
وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
 
(இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும்; (அந்த ஞானத்தையும் நபியின் விளக்கத்தையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும்! (அல்குர்ஆன் 16 : 44)
 
திக்ர் பாதுகாக்கப்பட்டது, நபியின் விளக்கம் பாதுகாக்கபடவில்லை என்றால் குர்ஆனை அல்லாஹ் பாதுகாக்கவில்லை. குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்போம், பாதுகாத்து மக்களிடத்தில் சேர்ப்போம் என்றால் அந்த குர்ஆனுக்கு விளக்கமாக இருக்கக்கூடிய நபியுடைய ஹதீஸ்களையும் பாதுகாக்கப்பது அதற்குள் உள்ளடங்கிய ஒன்று. 
 
குர்ஆனை நாம் இறக்கினோம், நீங்கள் அமல் செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. நபியே இந்த குர்ஆனை மக்களுக்கு நீங்கள் விளக்கிச் சொல்லுங்கள். எப்படி புரிய வேண்டும், எப்படி அமல் செய்ய வேண்டும், எப்படி இதை ஏற்க வேண்டும், அல்லாஹ்வை எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டும், மறுமையை எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டும்? இப்படி ஒவ்வொன்றையும் நீங்கள் மக்களுக்கு புரிய வையுங்கள்.
 
குர்ஆனை புரியவைப்பது நபியின் முதல் கடமை. மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
 
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
 
அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர். (அல்குர்ஆன் 62 : 2)
 
அல்லாஹு தஆலா, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆனையும் கொடுத்தான், அந்த குர்ஆனோடு விளக்கத்தையும் கொடுத்தான். குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போன்று குர்ஆனுடைய விளக்கமும் பாதுகாக்கப்பட்டது. குர்ஆனை எந்த சஹாபாக்கள் பாதுகாத்தார்களோ, குர்ஆனை எந்த தாபியீன்கள் பாதுகாத்தார்களோ, இது குர்ஆன் தான் என்று அமானிதமாக இந்த உம்மத் துடைய எந்த மூத்த சமுதாயம் இந்த உம்மத்தினரிடத்தில் குர்ஆனை ஒப்படைத்ததோ, அதே சமுதாயம்தான் ஹதீஸையும் பாதுகாத்து, இது நபி சொன்னார்கள் என்று கூறி, இது பாதுகாக்கப்பட்ட சரியான ஹதீஸ், இது ஸஹீஹான சுன்னா என்று அந்த சுன்னாவை நம்மிடத்தில் அமானிதமாக ஒப்படைத்தார்கள். 
 
அவர்கள் கொடுத்ததில் ஒன்றை எடுத்துக் கொள்வோம், ஒன்றை எடுக்க மாட்டோம் என்று சொன்னால் அவர்கள் கொடுத்த மற்றொன்றையும் எதை நீங்கள் எடுக்கின்றீர்கள் என்று கூறுகிறார்களோ, அதையும் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். மறுக்கின்றீர்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா கண்ணியத்திற்குரிய வேதத்தில் கூறுகிறான்:
 
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا
 
இன்னும், தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை உறுதியாக பற்றிப் பிடியுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ அதை விட்டும் விலகிவிடுங்கள். (அல்குர்ஆன் 59 : 7)
 
நேரடியாக இந்த மார்க்கத்தில் ஏவல் விலக்கல் விஷயத்தில் நபிக்கு கட்டுப்பட வேண்டும் என்று அல்லாஹ்வுடைய கட்டளை. எந்த குர்ஆனை நம்புகிறோம், ஏற்றுக்கொள்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர்களோ அந்த குர்ஆனுடைய கட்டளை.
 
குர்ஆன் விலக்கியத்திலிருந்து மட்டுமல்ல, ஹதீஸ் விலக்கியத்திலிருந்தும் நீங்கள் விலகி ஆகவேண்டும். குர்ஆன் ஏவியதை மட்டும் பின்பற்றுவதில்லை. குர்ஆனுக்கு விளக்கமாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவியதையும் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். 
 
ஒவ்வொரு ஹதீஸும் குர்ஆனுக்கு விளக்கம். அதை நீங்கள் புரிந்தாலும் சரி, புரியவில்லை என்றாலும் சரி. வீணான வார்த்தைகளை, விளக்கமற்ற விஷயங்களை இந்த உம்மத்திற்கு நேர்வழி இல்லாத எந்த ஒன்றையும் அல்லாஹ்வின் பக்கம் இந்த உம்மத்தை நெருக்கமாக்கி வைக்கக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் நன்கு கவனியுங்கள். 
 
இந்த உம்மத்துக்கு எதில் ஹிதாயத் இருக்கிறதோ, இந்த உம்மத் எதை செய்வதால் அல்லாஹ் பொருந்திக் கொள்வானோ, இந்த உம்மத் எதை செய்வதால் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு சொர்க்கத்தை கொடுப்பானோ, இந்த உம்மத் எதை செய்தால் அந்த உம்மத்திற்க்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி இருக்கின்றதோ அதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இந்த உம்மத்துக்கு போதித்தார்கள்.
 
அல்லாஹ் சத்தியமிட்டு சொல்லுகிறான்:
 
وَالنَّجْمِ إِذَا هَوَى (1) مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى (2) وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى
 
(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது,  உங்கள் தோழர் (சத்திய பாதையிலிருந்து) வழி தவறவுமில்லை, (நேரிய கொள்கையிலிருந்து) வழி கெடவுமில்லை. (அவர் நேர்வழியிலும் சரியான கொள்கையிலும்தான் இருக்கிறார்.) இன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார்.  இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை. (அல்குர்ஆன் 53 : 1-4)
 
நேர்வழியில் இருக்கின்ற ஒருவரை பின்பற்றவில்லை என்றால் அவன் வழிகேட்டில் செல்லுவான். சூரா யாசினை படித்துப் பாருங்கள். அந்த ஹபீபுந் நஜ்ஜார் கூறியதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்:
 
وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَاقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ (20) اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ
 
பட்டணத்தின் கடைக்கோடியில் இருந்து ஓர் ஆடவர் விரைந்து வந்தார். அவர் கூறினார்: “என் மக்களே! இந்த தூதர்களை நீங்கள் பின்பற்றுங்கள்.” “உங்களிடம் அறவே கூலி கேட்காத (இந்த நல்ல)வர்களை பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள்.” (அல்குர்ஆன் 36 : 20,21)
 
ரசூலுல்லாஹ் நேர்வழியில் இருந்தார்கள் என்பதற்கு அல்லாஹ் சான்று சொல்கிறான்:
 
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
 
நபியே இந்த இஸ்லாமை அறியாமல் நீங்கள் இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமை கொடுத்தான். (அல்குர்ஆன் 93 : 6-7)
 
ஹிதாயத்தின் பக்கம் அழைக்கக்கூடிய அல்லாஹ் சொல்கிறான்:
 
إنك لتدعوهم إلى صراط مستقيم
 
நபியே, சத்தியமாக நீங்கள் மக்களை நேரான பாதைக்கு அழைக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 23:73)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
புகழுக்குரிய, கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் பாதையின் பக்கம் நீங்கள் மக்களை அழைக்கிறீர்கள் என்று. (அல்குர்ஆன் 14 : 1, 22 : 24)
 
இதற்குப் பிறகும் ஒருவன் ஹதீஸை பின்பற்றினால் குழப்பம் ஏற்படும், ஹதீஸை பின்பற்றினால் மார்க்கத்தை புரிய முடியாது, அதை பின்பற்றினால் வழிகேடு என்று சொன்னால் அவன் குர்ஆனை பொய்ப்பிக்கின்றான். 
 
அவன் தனது மன இச்சையை உங்களுக்குள் புகுத்தி, உங்களை வழி கெடுகின்றான். அவனுடைய வழிகேட்டுக்கு அவன் தவறான வாதங்களை கொண்டு உங்களை மயக்குகிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 
குர்ஆனுடைய எத்தனை விஷயங்கள் இருக்கின்றன. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய செயல் ரீதியான ஹதீஸ்களை, அவர்களுடைய சொல் ரீதியான ஹதீஸ்களை எடுக்கவில்லை என்றால், எப்படி அவற்றை புரிய முடியும். 
 
அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் தொழுங்கள் என்று சொல்லுகிறான். இப்போது தொழுகையை யாரிடம் நீங்கள் கற்பீர்கள். தொழுகையில் லுஹருடைய ரக்அத்துகளை, அதில் ஓதக்கூடிய அந்த திக்ருகளை, ஒவ்வொரு தொழுகையின் நேரங்களை, யாரைக் கொண்டு நீங்கள் அறிவீர்கள்? எதைக்கொண்டு நீங்கள் அறியமுடியும்? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي
 
நான் எப்படி தொழ நீங்கள் பார்க்கிறீர்களோ அப்படி நீங்கள் தொழுங்கள். (1)
 
அறிவிப்பாளர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6008.
 
ரசூலுல்லாஹ்வைப் பார்த்து ஒரு மனிதன் தொழுகையை கற்க வில்லை என்றால், அவனுடைய தொழுகை யஹூதிகளின் தொழுகையாக இருக்கும். அவனுடைய தொழுகை நசரானிகளின் தொழுகையாக இருக்கும்.
 
நீங்கள் வானம் நிரம்ப, பூமி நிரம்ப வணக்க வழிபாடுகளை கொண்டு வந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் காட்டித்தராத வழியில் அந்த வணக்க வழிபாடு இருந்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3 : 31)
 
என்னைப் பின்பற்றி இபாதத்தை செய்யுங்கள். என்னுடைய வழியில் அந்த இபாதத்தை செய்யுங்கள். ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் அல்லாஹ்வுடைய அறிவிப்பை கொண்டு அறிவிப்பு செய்தார்கள். 
 
நீங்கள், எந்த மனிதன் ஹதீசை மறுப்பானோ, இது குர்ஆனில் இல்லை என்று அல்லது குர்ஆனுக்கு விளக்கம் இல்லை என்று அந்த முட்டாளை கொண்டு வாருங்கள். ஒவ்வொரு ஹதீஸும் குர்ஆனுக்கு விளக்கம் என்பதை நிரூபிக்கக் கூடிய அறிஞர்கள் இருக்கிறார்கள். அதற்குரிய கல்வியாளர்கள் இருக்கிறார்கள். 
 
நபியவர்கள் சொன்னார்கள்:
 
«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»
 
நம்முடைய மார்க்கத்தில் நாம் கற்பிக்காத ஒன்றை அதாவது நாம் சொல்லித் தராத ஒரு வணக்கத்தை யார் செய்வார்களோ அது மறுக்கப்பட வேண்டியது. அது வழிகேடு என்று அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்களே.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2697.
 
இந்த ஹதீஸ் எதற்கு விளக்கம்?
 
«مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا، فَهُوَ رَدٌّ»
 
யார் நான் கட்டளையிடாத ஒரு அமலை செய்வாரோ, அது மறுக்கப்பட வேண்டிய ஒன்று. அது அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 2547.
 
இந்த மக்கள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள்? நூறு ஆண்டுக்கு முன்னால் செய்தது, இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் செய்தது, நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் செய்தது, ஏன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செய்திருந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் காண்பித்து தராததாக இருந்தால், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அங்கீகாரம் இல்லாத ஒன்றாக இருந்தால், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் செய்த ஒன்றாக நாம் அறிந்திருந்தாலும் சரி, அதை அல்லாஹ் குர்ஆனில் கூறாமல், ரசூலுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஹதீஸில் அதை நமக்கு எடுத்துக் கூறாமல் நாம் அதை பின்பற்றி செய்வோமேயானால் அல்லாஹ்விடத்தில் அது மறுக்கப்பட்ட ஒன்று.
 
உமருல் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு  கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள். கல்வியில் ஆசை உள்ளவர்கள். அவர்களுடைய கல்வி தேடல் எப்படி தெரியுமா? பொருளாதார நெருக்கடி, கஷ்டம் இருந்தாலும் கல்வியின் தேடலை பாருங்கள்.
 
அன்சாரியும் அவர்களும் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஒருநாள் நான் சம்பாதிக்க செல்கிறேன். நீ ரசூலுல்லாஹ்விடத்தில் கல்வி படி. நான் வந்தவுடன் அன்று இரவில் நீ காலையிலிருந்து ரசூலுல்லாஹ்விடத்தில் என்ன படித்தாயோ அதையெல்லாம் எனக்கு சொல்லிக் கொடு. நான் சம்பாதித்ததில் பாதி உனக்குத் தந்து விடுகிறேன். அடுத்த நாள் நான் ரஸூலுல்லாஹ்விடத்தில் கல்வி படிக்கிறேன். நீ சம்பாரிக்க செல். நான் கற்றதை எல்லாம் உனக்கு கற்றுத் தருகிறேன். (2)
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண்: 89.
 
இப்படிப்பட்ட கல்வியின் நேசர் ஒருமுறை அவர்கள் யூதர்களை சந்திக்க சென்ற போது தவ்ராத்தின் சில பிரதிகள் இருந்தன. அழகிய உபதேசங்களை கண்டார்கள். அதை அரபியில் எடுத்துக்கொண்டு நபி இடத்தில் ஓடோடி வருகிறார்கள். அதை படித்து காட்டுகின்றார்கள். ரசூலுல்லாஹ்! எவ்வளவு அழகான ஒரு உபதேசமாக இருக்கிறது என்று. படித்துக்கொண்டே இருக்கிறார்கள். 
 
ரசூலுல்லாஹ் உடைய முகம் சிவந்து கொண்டே இருக்கிறது. அபுபக்கர் பார்த்துவிட்டு உமரே! போதும் நிறுத்து. நீ நபியின் முகத்தை பார்க்கவில்லையா? என்று கேட்கிறார்கள். உமர் பார்க்கிறார், நபியின் முகம் சிவந்து இருக்கிறது. 
 
உடனே அவர் சொல்கிறார், அல்லாஹ்வின் கோபத்தில் இருந்தும் நபியின் கோபத்தில் இருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். 
 
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள், உமரே! இந்த தவ்ராத் எந்த மூசாவின் மீது இறக்கப்பட்டதோ இந்த மூசா உயிரோடு இருந்தால், அவருக்கு வேறு வழி இல்லை, என்னை பின்பற்றுவதைத் தவிர. 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, எண் : 26421.
 
தவ்ராத் இறக்கப்பட்ட மூசா அவரிடம் இருக்கக்கூடிய தவ்ராத் கண்டிப்பாக மாற்றப்பட்டதாக இருக்காது. குழம்பியதாக இருக்காது. கண்டிப்பாக பாதுகாக்கபட்டதாக இருக்கும். இருந்தும் அவர் அந்த தவ்ராத்தை பின்பற்ற முடியாது. அவர் என்னைத்தான் பின்பற்றியாக வேண்டும்.
 
இப்படிப்பட்ட தெளிவான வழிகாட்டுதலுக்கு பிறகு, ஒரு முட்டாள் ஹதீஸ் தேவையில்லை என்று சொன்னால், நபியின் சுன்னா தேவையில்லை என்று சொன்னால் அவனுடைய உள்ளத்தில் குப்ர் வருகிறது. அவனுடைய உள்ளத்தில் நிஃபாக் இடம் பெறுகிறது என்று பொருள். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய ஹதீஸை எப்படி நாம் புறக்கணிக்க முடியும்? எப்படி நாம் ஒதுக்க முடியும்? ஒவ்வொரு வசனத்திற்கும் தேவையான விளக்கத்தை ஹதீஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
  وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا
 
திருடிய ஆண், பெண்ணுடைய கையை வெட்டுங்கள் என்று. (அல்குர்ஆன் 5 : 38)
 
கை என்று சொன்னால் அக்குளில் இருந்து நம்முடைய விரலின் நுனி வரை கைதான். எங்கிருந்து வெட்டுவது? எப்படி வெட்டுவது? கை என்று அல்லாஹ் சொல்கிறானே, எல்லா கைகளையும் வெட்டி விடுவதா? அந்தக் கை என்றால், அதற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒருவன் முதல் தடவை திருடினால், மணிக்கட்டு வரை அவனுடைய இருக்கைகளில் ஒரு கையை வெட்டுங்கள் என்று விளக்கம் சொல்கிறார்கள்.
 
அறிவிப்பாளர் : அதிய்யி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : பைஹகி சுனன் ஸகீர், எண் : 2624.
 
இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னா நமக்கு வழிகாட்டுகிறது. எந்த சட்டத்தை எப்படி நாம் அமல்படுத்த வேண்டும் என்று. 
 
ஹராம் ஹலால் உடைய சட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவன் குர்ஆனை படித்து விட்டு (சூரா அன் நிஷா உடைய 23வது வசனம்) எந்த பெண்கள் எல்லாம் நமக்கு ஹராமாக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
 
ஒருவன் அது மட்டும் போதும் என்று கூறினால், அது எப்படி நேரான ஒரு வழியாக இருக்கும்? அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அதோடு சேர்த்து நமக்கு விளக்கம் சொல்கிறார்கள். அந்த குர்ஆனுடைய வசனத்தில் ஒரு பெண்ணையும் அந்தப் பெண்ணுடைய தாயின் சகோதரியையும் சேர்த்து முடிப்பதை பற்றி சொல்லப்படவில்லை. ஒரு பெண்ணையும் அந்தப் பெண்ணுடைய தந்தையின் சகோதரியையும் சேர்த்து முடிப்பதை பற்றி அல்லாஹ் சொல்லவில்லை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«لاَ يُجْمَعُ بَيْنَ المَرْأَةِ وَعَمَّتِهَا، وَلاَ بَيْنَ المَرْأَةِ وَخَالَتِهَا»
 
ஒருவன் ஒரு பெண்ணையும், அந்தப் பெண்ணுடைய மாமியையும் அதாவது தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணமுடிக்கக் கூடாது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புஹாரி, எண் : 5109.
 
குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது இரண்டு சகோதரிகளை மட்டும் தான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சேர்த்துச் சொல்கிறார்கள்.
 
அதுபோன்று தாயின் சகோதரியை மணம் முடிப்பது தான் குர்ஆனில் தடுக்கப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். ஒரு பெண்ணை நீங்கள் மணமுடிக்க அவளுடைய தாயின் சகோதரியையும் சேர்த்து நீங்கள் மணமுடிக்கக் கூடாது. 
 
இப்படி ரஸுலுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நாம் யாரை திருமணம் முடிக்க வேண்டும், யாரை யாரோடு சேர்த்து முடிக்கலாம், முடிக்கக் கூடாது என்பதை சொல்லி இருக்கின்றார்கள். இது தான் மார்க்கம்
 
பால்குடி என்று எடுத்துக்கொண்டால், அல்லாஹுத்தஆலா, நீங்கள் பால் கொடுக்கக்கூடிய , நீங்கள் பால் குடித்த தாய் , அதுபோன்று அந்தத் தாயோடு, உங்களோடு பால் குடித்த சகோதரிகள் உங்கள் மீது ஹராமாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 4:23)
 
ஆனால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அத்தோடு சேர்த்து சொல்கிறார்கள்.
 
«حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنَ النَّسَبِ»
 
உங்களுடைய ரத்த வம்சாவழியால் எந்த பெண்கள் ஹராம் ஆவர்களோ, அதுபோன்றுதான் உங்களுடைய பால்குடி உறவாலும் அவர்கள் எல்லோரும் ஹராம் ஆகிவிடுவார்கள். எப்படி ஒரு சகோதரியை மணமுடிக்கக் கூடாதோ, அந்த சகோதரியின் மகளை மணமுடிக்க கூடாதோ அதே போன்றுதான் பால் குடித்த சகோதரியின் மகளையும் மணமுடிக்கக் கூடாது. (3)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 4796.
 
குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது பால்குடி சகோதரி மட்டும்தான்.
 
இப்படி நூற்றுக்கணக்கல்ல, ஆயிரக்கணக்கான விளக்கங்களை நாம் ஹதீஸிலிருந்து தான் பெறுகிறோம். இதுதான் குர்ஆனுடைய விளக்கம்.
 
அல்லாஹ்வுடைய நோக்கத்தை அல்லாஹ்வுடைய தூதர் புரிய வைக்காமல், அல்லாஹ்வுடைய தூதர் கூறாமல், நானாக விளங்கிக் கொள்வேன் என்று ஒருவன் கூறுகிறான் என்றால், அவன் குர்ஆனை விட்டு விட்டு மனோ இச்சையின் பக்கம் செல்ல விரும்புகிறான்.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (அவருடைய கூற்றை) செவிமடுப்பவர்களாக இருக்கும் நிலையில் அவரை விட்டு விலகாதீர்கள். (அல்குர்ஆன் 8 : 20)
 
எவ்வளவு தெளிவான கட்டளை. ஒருவன் ஹதீசை ஏற்காமல், நான் ரசூலுல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து நடக்கிறேன் என்று சொல்லமுடியுமா? யோசித்துப் பாருங்கள்.
 
பொய் சொல்லுவது, வரட்டு வாதம் பிடிப்பது நபியின் உடைய ஹதீஸை, சுன்னாவை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாகவோ அல்லது தன்னுடைய அறிவுக்கு ஒத்துவரவில்லை என்றோ சொன்னால் என்ன அர்த்தம், அவன் ஹதீசை புறக்கணிக்கிறான் என்று பொருள். 
 
நபி கூறுவதை நீங்கள் செவியுற்று கேட்டுக்கொண்டிருக்க, அவர்களை விட்டு நீங்கள் விலகி விடுகிவீர்களா? விலகாதீர்கள். 
 
எப்படி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயிரோடு இருக்கும்போது, அவர்கள் ஒரு வழிகாட்டலை சொல்ல அந்த வழிகாட்டல் வேண்டாம் என்று ஒருவன் விலகிச் சென்றால், அவனுக்கு குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் என்ன சட்டமோ, ஒன்று அவன் காபிர் அல்லது முனாபிக். அதே சட்டம் தான், குர்ஆன் இருக்கின்ற வரை.
 
 இன்று ஒருவருக்கு ஸஹீஹான ஹதீஸ் என்று சொல்லப்பட்ட பிறகு அதைவிட்டு ஒருவன் விலகுவானேயானால் அவன் ஒன்று காபிராக இருப்பான் அல்லது முனாபிக்காக இருப்பான்.
 
சஹாபாக்கள் உடைய தாபியீன்களுடைய சில கூற்றுகளை பாருங்கள். அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்.
 
ரசூலுல்லாஹ் எந்த ஒரு காரியத்தை செய்தார்களோ, நான் அதை விடவே மாட்டேன். கண்டிப்பாக நானும் அதை செய்தே தீருவேன். நான் பயப்படுகிறேன், ரசூலுல்லாஹ் உடைய காரியத்தில் ஒரு காரியத்தை விட்டால், நான் வழிகெட்டு விடுவேன், நான் வழிதவறி விடுவேன், நான் பாதை பிசைகி விடுவேன் என்று நான் பயப்படுகிறேன்.
 
சொல்லக் கூடியவர் யார்? அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். ரசூலுல்லாஹ்வை நேரடியாக பார்த்தவர்கள். அவர்களோடு வாழ்ந்தவர்கள். அரபி சமுதாயத்தை சேர்ந்தவர்கள். குர்ஆனை நம்மைவிட சரியான முறையில் புரிந்தவர்கள். குர்ஆனோடு வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு வசனத்தையும் உணர்ந்தவர்கள்.
 
இந்த அறிவிப்பை பதிவு செய்யக்கூடிய இப்னு பத்தாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லுகிறார்கள்.
 
மிகப்பெரிய சித்திக் ஒரு நபியின் கட்டளைக்கு ஒன்றுக்கு மாறு செய்வதால் தனக்கு வழிகேடு ஏற்படும் என்று பயப்படுகின்றார்களே, இன்று மக்கள் நபியின் சுன்னாவை பரிகாசம் செய்கிறார்களே, நபியின் சுன்னாவை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களே, நபியின் சுன்னாவிற்கு மாறு செய்து பெருமை பேசுகிறார்களே, நபியின் சுன்னத்தையும், சுன்னாவை பின்பற்றக்கூடிய மக்களையும் கேள்வி பேசுகிறார்களே, இவர்களுடைய நிலை என்ன ஆகும்? என்று கூறுகிறார்கள்.
 
உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுவதை இமாம் இப்னுல் கையூம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
 
ரசூலுல்லாஹ் ஒரு சுன்னாவை செய்திருக்க, அதை விடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. இதுதான் என்னுடைய நிலைபாடு.
 
தாபியீன்களில் அபூகிலாஃபா ரஹிமஹுல்லாஹ்  சொல்கிறார்கள்:
 
ஒரு மனிதத்திடத்தில் நீங்கள் ஹதீஸை கொண்டு செல்கிறீர்கள். ஹதீஸில் இப்படி இருக்கிறது என்று. அவன் சொல்லுகிறான், இதை விடு. இது குர்ஆனில் இருக்கிறதா சொல் என்று.
 
அறிந்து கொள்! அவன் வழி கெட்டவன் என்பதாக. 
 
இமாம் ஷாபியி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதை பதிவு செய்கிறார்கள். இதை பதிவு செய்துவிட்டு, பிறகு இதற்கு விளக்கத்தை இமாம் தஹபி சொல்கிறார்கள்:
 
ஒரு மனிதன் தத்துவம் பேசுகிறான். விட்டுவிடு. குர்ஆனில் என்ன இருக்கிறது? ஹதீஸ்களில் என்ன இருக்கிறது? அறிவை கொண்டு வா முதலில் குர்ஆனை விளங்குவதற்கு அறிவு தேவை. தத்துவம் தேவை. தத்துவத்தைக் கொண்டு வா என்று ஒருவன் கூறினால், அவன் அபூஜஹ்ல் என்று புரிந்து கொள்.
 
ஒரு மனிதன் குர்ஆனும் தேவையில்லை, ஹதீஸும் தேவையில்லை, இந்த ஒற்றை ஹதீஸ்களெல்லாம் எதற்கு? முதலில் அறிவை நாம் சிந்திப்போம். முதலில் அறிவியலை படிப்போம். அப்போது தான் குர்ஆனை சரியாக புரிய முடியும் என்று ஒருவன் கூறினால், அவனே அபூஜஹல் என்று புரிந்துகொள்
 
மேலும் சொன்னார்கள்:
 
ஒரு மனிதன் சூஃபியிசத்தில் செல்கிறான். தரீக்காவில் செல்கிறான். ஹதீஸ்களை வையுங்கள். குர்ஆனை வையுங்கள். அறிவை வையுங்கள். முதலில் அன்பை பற்றி பேசுங்கள். முதலில் உணர்வுகளைப் பற்றி பேசுங்கள் என்று ஒருவன் கூறினால் அவனை இப்லீஸ் என்று புரிந்து கொள். அவன் மனிதனுடைய உருவத்தில் வந்திருக்கிறான், அல்லது ஒரு மனிதனுக்குள் நுழைந்து வந்திருக்கிறான். உன்னால் முடியவில்லையென்றால், பயந்தால் அவனை விட்டு ஓடிவிடு. 
 
இல்லை உனக்கு ஆற்றல் இருக்கிறது என்றால், அவனைக் கீழே தள்ளி அவனது நெஞ்சில் அமர்ந்து ஆயத்துல் குர்ஸியை ஓது, அவனுடைய கழுத்தை நெறி என்பதாக. 
 
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள். அதாவது அபூஹனீபா இப்னுஸ் ஸம்மா. இது இமாம் அபூஹனீபா அவர்கள் அல்ல. வேறு ஒருவர். இதே பெயரில் இருக்கக்கூடிய வேறு ஒருவர். அந்தத் தபவுத்தாபியீன் தனக்கு ஹதீஸ் அறிவித்த தாபியீன் இடத்தில் அவர்கள் பேசுகின்றார்கள். அந்த தாபியீன் என்ன ஹதீஸ் அறிவித்தார்,
 
மனிதனுடைய உறவுகளில் யாராவது கொல்லப்பட்டு விட்டால், அந்த ரத்த உறவுக்கு அனுமதி இருக்கிறது. ஒன்று பழிக்குப் பழி வாங்கலாம், அல்லது நஷ்ட ஈடு வாங்கிக் கொள்ளலாம் என்று. அந்த ஹதீஸை இப்னு அபீத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
 
இப்போது அந்த தபஉத்தாபியீன் அபூஹனீஃபா இப்னு ஸம்மாத் அவர்கள், தனக்கு ஹதீஸை அறிவித்த அந்த இப்னு அபீத் இடத்தில் கேட்கிறார்கள், நீங்கள் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதன்படி நீங்கள் அமல் செய்வீர்களா என்று? அவ்வளவுதான். அதாவது ஒரு மாணவரும், அந்த மாணவர் உடைய ஆசிரியரும் அந்த ஹதீஸை எப்படி எடுத்துக் கொள்வது என்று பேசுகிறார்கள். மாணவர் குர்ஆனில்.
 
கிசாஸ் உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 2:178) இந்த பழிக்குப் பழி வாங்குவது என்பது இருக்கின்றதே, ஹதீஸில் இரண்டும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று இருக்கிறதே என்று அர்த்தத்தில் அவர் கேட்கிறார். இப்படி என்றால் இப்படிக் கேட்க துணிந்தால் என்ன அர்த்தம் ஆகிவிடுகிறது?
 
இறக்கப்பட்ட வசனத்தை நபி புரியவில்லை அல்லது புரிந்து கொண்டு அதற்கு மாற்றமான ஒரு விளக்கத்தை நபி சொல்லிவிட்டார்கள் என்று ஆகிவிடும். 
 
இமாம் இப்னு அபீத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த வார்த்தையை தனது மாணவரிடமிருந்து கேட்டவுடன் அவ்வளவுதான் ஓங்கி நெஞ்சில் அடித்தார்.
 
கத்த ஆரம்பித்து விட்டார். கதற ஆரம்பித்து விட்டார். அடிக்க ஆரம்பித்து விட்டார். என்னை துன்புறுத்த ஆரம்பித்து விட்டார்.
 
நான் ரசூலுல்லாஹ் சொன்னார்கள் என்று ஒரு ஸஹீஹான ஹதீஸை அறிவிக்க, நீ என்னிடத்தில் கேட்கிறாயா, இந்த ஹதீஸின் படி நீங்கள் செய்வீர்களா என்று? ஆம், கண்டிப்பாக இந்த ஹதீஸின்படி நான் செய்வேன். இது தான் என் மீது கடமை. இந்த ஹதீஸை செவியுறக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமை.
 
மக்களில் அல்லாஹ் முஹம்மதை தன்னுடைய தூதுத்துவத்திற்காக தேர்ந்தெடுத்தான். முஹம்மதின் மூலமாகத்தான் அல்லாஹ் மக்களுக்கு நேர்வழியை கொடுத்தான். அவர்களுடைய கரத்தின் மூலமாக தான் அல்லாஹ் மக்களுக்கு நேர்வழியை காட்டினான்.
 
அல்லாஹ் தனது நபிக்காக தேர்ந்தெடுத்ததை தான் தன்னுடைய மக்களுக்காக, அடியார்களுக்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். தன்னுடைய நபியின் நாவின் மூலமாக அல்லாஹ் எதை கொடுத்தானோ, அதைத் தான் அல்லாஹ் தனது அடியார்களுக்கு தேர்ந்தெடுத்தான்.
 
அடியார்கள், ஒன்று பணிந்து, பயந்து இறையச்சத்துடன் அவர்களை பின்பற்ற வேண்டும். இல்லை என்றால், அவர்கள் வலுக்கட்டாயமாகவாவது அந்த நபிக்கு பின்பற்றியே தான் ஆக வேண்டும். ஒரு முஸ்லிமுக்கு நபியை பின்பற்றுவதை விட்டுவிட்டு வேறு ஒரு வழி இல்லை. 
 
இப்படிப்பட்ட ஒரு பெரிய நிகழ்வு நடந்ததற்கு பிறகு அவருடைய மாணவர் சொல்கிறார்கள்: நான் வருத்தப்பட்டேன், எனது ஆசிரியர் அமைதியாக வேண்டுமே அமைதியாக வேண்டுமே என்று.
 
சாதாரணமாக கேட்கப்பட்ட ஒரு கேள்வி. ஆனால், அது எவ்வளவு பெரிய பயங்கரமான தாக்கத்தை உண்டு பண்ணியது என்பதை பாருங்கள்.
 
நம்மில் கூட சில மக்கள் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் தான். சுன்னாவை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் தான். ஆனால் சில நேரங்களில் அது சொல்லப்படும்போது இப்படியா ஹதீஸ் இருக்கிறது? இப்படி எல்லாம் ஹதீஸ் இருக்குமா? இந்த ஹதீஸை இந்த காலத்தில் அமல் செய்ய முடியுமா? இந்த ஹதீஸ் நமக்கு ஒத்து வருமா ?இந்த ஹதீஸை இந்த காலத்தில் சொல்ல முடியுமா ?
 
இவ்வாறு நம்முடைய தாபியீன்கள், தபஉத்தாபியீன்களுடைய காலத்தில் சொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் பாருங்கள்.
 
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, அப்போது அவர்கள் ஹதீஸ் சொல்கிறார்கள். அவர்களுடைய மாணவர்களில் ஒருவர் சொல்கிறார்; இமாம் அவர்களே! இந்த ஹதீஸின் படி நீங்கள் நீங்கள் ஃபத்வா கொடுப்பீர்களா? என்று.  
 
இமாம் ஷாபிஈ சொல்கிறார்கள்: மனிதனே என்னை எப்படி பார்க்கிறாய்? நான் ஒரு சர்ச்சில் இருந்து வெளியேவருவதாக பார்க்கிறாயா? அல்லது எனது உடலில் பூணூல் இருப்பதை பார்க்கிறாயா? நான் ஒரு முஸ்லிம். ரசூலுல்லாஹ் உடைய அது ஹதீசை கூற அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை எப்படி சட்டமாக்க முடியும். 
 
ஒருவன் ஹதீஸ் என்று தெரிந்து கொண்டு அதை விடுவானேயானால் அவன் கண்டிப்பாக இஸ்லாமை விட்டு வெளியிலிருக்கூடிய ஒரு மதக் கொள்கையில் தான் இருக்க முடியும்.
 
இப்படியாக பல அறிஞர்கள் உடைய கூற்றைப் பார்க்கிறோம். அஹ்மது இப்னு ஹம்பல் சொல்கிறார்கள்.
 
யார் நபியினுடைய ஹதீஸை மறுப்பானோ, தள்ளி வைப்பானோ அவன் அழிவுனுடைய விளிம்புக்கு வந்து விட்டான். 
 
அவர்களுடைய மாணவர்களில் ஒருவர் இமாம் பர்பஹாரி ரஹிமஹுல்லாஹ் சொல்லுகிறார்கள்: ஒரு மனிதன் ஹதீஸ்களில் குறை சொல்வதை பார்த்தால், ஹதீஸ்களை தட்டி கழிப்பதை பார்த்தால், அவனுடைய இஸ்லாமிய பற்றில் சந்தேகப்பட்டு கொள்.
 
அவன் மன இச்சையைப் பின்பற்ற கூடியவன். மார்க்கத்தில் புதிய கருத்துகளை நுழைக்க விரும்புபவன் என்பதில் நீ சந்தேகப் படாதே.
 
இதான் நம்முடைய ஸஹாபாக்கள், தாபியீன்கள் உடைய நிலைப்பாடாக இருந்தது. அல்லாஹ்வுடைய மார்க்கம் என்பது, குர்ஆனை கொண்டு பாதுகாக்கப்பட்டது. நபியின் சுன்னாவை கொண்டு பாதுகாக்கப்பட்டது.
 
யார் சுன்னாவை, அறிவைக்கொண்டு மறுக்கின்றானோ அல்லது அறிவியலைக் கொண்டு மறுகின்றானோ அல்லது அனுபவத்தைக் கொண்டு மறுகின்றானோ அல்லது சுன்னாவெல்லாம் பிறகு காலத்தில்தான் தொகுக்கப்பட்டது, அதை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, அதில் குழப்பம் இருக்கிறது என்று கூறி, சுன்னாவை ஒதுக்கித்தள்ள விரும்புகிறானோ, அது தேவையில்லை என்று கூறுகிறானோ அவன் கண்டிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி, இப்லீஸ் உடைய பாதைகளில் ஏதோ ஒரு பாதையில் அவன் செல்ல ஆரம்பித்து விட்டான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
இது குறித்து நம்முடைய வளரும் தலைமுறைகளுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். நமது வாலிபர்கள், சகோதரர்கள், பெண்கள் அவர்கள் யாரோடு பழகுகிறார்கள், எதை பார்க்கிறார்கள், எதை  படிக்கிறார்கள் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். 
 
காரணம், மனிதன் யாரோடு பழகுகிறானோ, அவர்களுடைய கொள்கையில் அவர்களுடைய கோட்பாட்டில் சென்று விடுவான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், 
 
«الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِطُ»
 
மனிதன் அவனுடைய நண்பனின் மார்க்கத்தில் தான் இருப்பான். அவன் யாரோடு நட்பு வைக்கிறான் என்பதை பார்த்துக் கொள்ளட்டும் என்று.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 8028.
 
இன்று தீய நட்புகளால், தீய உறவுகளால், தீய தொடர்புகளால் வழிகேடர்கள் பலர் உருவாகுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. 
 
நாம் இதை ஆரம்பத்தில்யே அவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களை நாம் கைபிடிக்கவில்லை என்றால் பிறகு வழிகேடு உருவெடுத்து விடும்போது அது மிகப்பெரிய பின்விளைவுகளை உண்டாக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்கு காண்பித்துக் கொடுத்த, கற்றுக் கொடுத்த அந்த சுன்னாவை முழுமையாக மதித்து, பின்பற்றி நடந்து அல்லாஹ்வுடைய அன்பை பெறக்கூடிய நன்மக்களில் அல்லாஹுத்தஆலா என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي سُلَيْمَانَ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، فَظَنَّ أَنَّا اشْتَقْنَا أَهْلَنَا، وَسَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا فِي أَهْلِنَا، فَأَخْبَرْنَاهُ، وَكَانَ رَفِيقًا رَحِيمًا، فَقَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، وَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، ثُمَّ لِيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ» (صحيح البخاري 6008)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، قَالَ: كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ وَهِيَ مِنْ عَوَالِي المَدِينَةِ وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ اليَوْمِ مِنَ الوَحْيِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ، فَنَزَلَ صَاحِبِي الأَنْصَارِيُّ يَوْمَ نَوْبَتِهِ، فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا، فَقَالَ: أَثَمَّ هُوَ؟ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ، فَقَالَ: قَدْ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ. قَالَ: فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَإِذَا هِيَ تَبْكِي، فَقُلْتُ: طَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: لاَ أَدْرِي، ثُمَّ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ وَأَنَا قَائِمٌ: أَطَلَّقْتَ نِسَاءَكَ؟ قَالَ: «لاَ» فَقُلْتُ: اللَّهُ أَكْبَرُ (صحيح البخاري 89)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: اسْتَأْذَنَ عَلَيَّ أَفْلَحُ أَخُو أَبِي القُعَيْسِ بَعْدَمَا أُنْزِلَ الحِجَابُ، فَقُلْتُ: لاَ آذَنُ لَهُ حَتَّى أَسْتَأْذِنَ فِيهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ أَخَاهُ أَبَا القُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي القُعَيْسِ، فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي القُعَيْسِ اسْتَأْذَنَ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا مَنَعَكِ أَنْ تَأْذَنِي عَمُّكِ؟»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي القُعَيْسِ، فَقَالَ: «ائْذَنِي لَهُ فَإِنَّهُ عَمُّكِ تَرِبَتْ يَمِينُكِ» قَالَ عُرْوَةُ: فَلِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُولُ: «حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنَ النَّسَبِ» (صحيح البخاري 4796)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/