HOME      Khutba      உறவுகளை சேர்ப்போம்!! | Tamil Bayan - 596   
 

உறவுகளை சேர்ப்போம்!! | Tamil Bayan - 596

           

உறவுகளை சேர்ப்போம்!! | Tamil Bayan - 596


உறவுகளை சேர்ப்போம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உறவுகளை சேர்ப்போம்!
 
வரிசை : 596
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 03-09-2019 | 14-01-1441
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு கொடுத்து இருக்க கூடிய இந்த மார்க்கத்தில் நமக்கு தேவையான வழிகாட்டுதல்களை நிறைவாக, முழுமையாக கொடுத்து இருக்கிறான். 
 
நம்முடைய பிரச்சனைகளுக்கும் இன்றைய சோதனைகளுக்கும் அந்த மார்க்கத்தில் நாம் தீர்வு தேடுவோமேயானால், கண்டிப்பாக அழகிய தீர்வை அல்லாஹ்வுடைய வேதத்திலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவிலும் நாம் பெற்றுக் கொள்வோம். 
 
இன்று நம் வாழ்க்கையில் நாம் சந்திக்க கூடிய பல பிரச்சனைகளுக்கும், அல்லது சோதனைகளுக்கும் அல்லது அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டு நாம் தூரமாக இருப்பதற்கும் பல காரணங்களை நாம் பார்க்கிறோம். குர்ஆனை நாம் ஆழ்ந்து சிந்தித்து படிக்கும் போதும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களை நாம் சிந்தித்து படிக்கும் போதும் பல காரணங்களை அதற்குரிய பல விளக்கங்களை பார்க்கிறோம். 
 
அதில் மிக முக்கியமான ஒன்றாக உறவுகளை சேர்த்து வாழ்வது, உறவுகளை வெட்டி வாழ்வது என்பது ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. 
 
அல்லாஹ்வுடைய ரஹ்மத்திற்கு மிக முக்கியமான காரணமாக உறவுகளை சேர்த்து வாழ்வதும், அல்லாஹ்வுடைய சாபத்திற்கும், அல்லாஹ்வுடைய தண்டனைக்கும், இம்மை வாழ்க்கையிலும் மறுமை வாழ்க்கையிலும் அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்க பெறாமல் இருப்பதற்கும் உறவுகளை துண்டித்து வாழ்வது என்பது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. 
 
இன்று, மக்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். செல்வச் செழிப்போடு இருக்கிறார்கள். ஆனால், வாழ்க்கையில் பரக்கத் இருப்பதில்லை. அவர்களுக்கு ஒரு நிம்மதி இருப்பதில்லை. அவர்கள் சம்பாதிப்பதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருப்பதில்லை. 
 
இப்படி இருக்கின்ற இந்த முஸீபத்தான நிலைக்கு காரணத்தை தேடும்போது இன்று மக்கள் உறவுகளை துண்டித்து வாழ்வதை மிக முக்கியமாக குறிப்பிடலாம். 
 
ஷிர்க் போன்ற மற்ற பாவங்கள் இப்படி பல காரணங்கள் இருந்தாலும், இன்று முஸ்லிம் சமுதாயம் ரத்த உறவுகளை மறந்து வாழ்வதையும், ரத்த உறவுகளை புறக்கணித்து வாழ்வதையும், ரத்த உறவுகளை துண்டித்து வாழ்வதையும், ரத்த உறவுகளோடு சண்டைகள் செய்துகொண்டு, பிரச்சனைகள் செய்துகொண்டு அவர்களை ஒதுக்கி வாழ்வதையும் இன்றைய சோதனைக்குரிய பரக்கத்தின்மைக்குரிய மிக முக்கியமான காரணமாக நாம் பார்க்கலாம். 
 
அல்லாஹு தஆலா அவனுடைய கண்ணியதிற்குரிய வேதம் அல்குர்ஆனில் சூரா ரஅது உடைய 21 வது வசனத்தில் உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிடும் போது அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணக்கூடிய முஃமின்களுக்குரிய அடையாளத்தை அல்லாஹ் கூறுகிறான்.
 
وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ
 
இன்னும், அவர்கள், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள். இன்னும், அவர்கள், தங்கள் இறைவனை அஞ்சுவார்கள். மேலும், கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள். (அல்குர்ஆன் 13 : 21)
 
இதிலிருந்து உறவுகளை சேர்த்து வாழ வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய வேதத்தில் உள்ள கட்டளை என்பதை நாம் புரிய முடிகிறது.
 
உறவுகளை சேர்த்து வாழ்வதை அல்லாஹு தஆலா அவனையும் மறுமையையும் நம்பிக்கை கொண்ட, அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் சிறந்த பண்பாக ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான். 
 
இதை தொடர்ந்து ரப்புல் ஆலமீன் கூறுகிறான்: அவர்கள் தங்களுடைய ரப்பை பயந்து நடப்பார்கள். மறுமையின் கடுமையான விசாரணையையும் அவர்கள் பயப்படுவார்கள். 
 
இந்த இடத்தில் அறிஞர்கள் விளக்கம் கூறும்போது, உறவுகளை சேர்த்து வாழ்வார்கள் என்று குறிப்பிட்டதற்கு பிறகு ரப்பை பயப்படுவார்கள், மறுமையின் கடுமையான விசாரணையை பயப்படுவார்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதை தொடர்ந்து கூறியதில் இருந்து, உறவுகளை துண்டித்து வெட்டி வாழ்பவர்களுக்கு, உறவுகளை புறக்கணித்து வாழ்பவர்களுக்கு, மறுமையில் கடுமையான விசாரணை உண்டு, அல்லாஹ்வுடைய தண்டனை உண்டு. அந்த தண்டனையை யார் பயப்படுகின்றார்களோ, அந்த கடுமையான விசாரணையில் இருந்து யார் தப்பிக்க வேண்டும் என்று அஞ்சுகிறார்களோ அவர்கள் தங்களுடைய உறவுகளோடு சேர்ந்து வாழட்டும் என்ற எச்சரிக்கையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இடத்தில் நமக்கு குறிப்பிடுகின்றான். 
 
மேலும், அல்லாஹு தஆலா முனாஃபிக்குகள் உடைய கெட்ட குணத்தை பற்றி சொல்கிறான்: 
 
فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ (22) أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ
 
(அல்லாஹ்வின் வேதத்தை விட்டும் அதன் சட்டங்களை விட்டும்) நீங்கள் விலகிவிட்டால் பூமியில் குழப்பம் செய்வீர்கள்தானே! உங்கள் இரத்த உறவுகளை துண்டித்து விடுவீர்கள்தானே! அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை சபித்தான். ஆக, அவர்களை அவன் செவிடாக்கி விட்டான்; அவர்களின் பார்வைகளை குருடாக்கி விட்டான். (அல்குர்ஆன் 47 : 22,23)
 
உறவுகளை துண்டிப்பதை பூமியில் கலகம் செய்வதாகவும், நயவஞ்சகர்களின் அடையாளம் என்பதாகவும், அப்படி உறவுகளை துண்டித்து வாழ்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய வேதம் பலன் அளிக்காது, மார்க்க அறிவுரைகள் பலனளிக்காது, அவர்களுடைய செவிகள் செவிடாகி விடும், அவர்களுடைய பார்வைகள் குருடாகி விடும், நல்லுபதேசங்களை கொண்டு அவர்கள் பலன் பெற மாட்டார்கள் என்று அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்கின்றான்.
 
இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள், யார் உறவுகளை துண்டித்து வாழ்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சபித்து தனது அருளில் இருந்து அவர்களை தூரமாக்கி விட்டான். அவர்களுக்கு செவி புலன்களை அல்லாஹ் செவிடாக்கி விட்டான். 
 
எனவே, அவர்கள் தங்களுடைய செவிகள் மூலம் குர்ஆன் ஹதீஸ் உடைய உபதேசங்களால் அவர்கள் பலன் பெறமாட்டார்கள். அவர்களுடைய கண்களை அல்லாஹ் குருடாக்கி விட்டான். அவர்களுடைய அறிவுகளை அல்லாஹ் பிடுங்கி விட்டான். 
 
எனவே அல்லாஹ்வுடைய ஆதாரங்களை கொண்டு அவர்கள் தெளிவடைய மாட்டார்கள். இந்த குர்ஆனுடைய உபதேசங்களில் இருந்தும், ஆதாரங்களில் இருந்தும்,  படிப்பினைகளில் இருந்தும் அவர்கள் எதை பார்க்கின்றார்களோ அதை கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். 
 
ஒரு மனிதன் உறவை முறிக்கிறான் என்றால், ரத்த உறவுகளை துண்டித்து வாழ்கிறான் என்றால், அங்கே அவனுடைய உள்ளத்தில் இருக்க கூடிய ஈரத்தை அந்த பாசத்தை அல்லாஹ் பிடுங்கி விட்டான் என்று பொருள். 
 
எந்த மனிதனுடைய உள்ளத்தில் ரஹ்மத், இரக்கம், கருணை இருக்குமோ அந்த மனிதன் அந்த கருணையை அந்த இரக்கத்தை தன்னுடைய ரத்த உறவுகளோடு முதலாவது பகிர்ந்து கொள்வான். 
 
யாருடைய உள்ளத்தில் ரஹ்மத் -கருணை இருக்குமோ அவர்களுடைய உள்ளங்கள் தான் மென்மையாக இருக்கும், அவர்களுடைய உள்ளங்கள் பண்பட்டதாக இருக்கும். சில நேரங்களில் அவர்கள் சில தவறுகளை செய்தாலும் கூட, அவர்களுக்கு உபதேசங்கள் செய்யப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் மென்மையாக இருக்கின்ற காரணத்தால் அந்த உபதேசங்களை உள்வாங்கி அவர்கள் படிப்பினை பெற்று தங்களை திருத்திக் கொள்வார்கள். 
 
யார், ரத்த உறவுகளையே துண்டித்து வாழக்கூடிய அளவுக்கு அவருடைய உள்ளத்தில் இரக்கம் இல்லாமல் போய் விடுமோ, அவருடைய உள்ளத்தில் அந்த ஈரம் இல்லாமல் பாசம் இல்லாமல் போய் விடுமோ கண்டிப்பாக அவருடைய உள்ளம் இறுகி விட்டது. அவருடைய உள்ளம் காய்ந்து விட்டது என்று பொருள். 
 
யாருடைய உள்ளம் அந்த ஈரம் இல்லாமல் காய்ந்து விடுமோ அவர்களுக்கு உபதேசத்தால் எந்த பலனும் இருக்காது. 
 
மேலும், அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ (26) الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
 
ஆக, நிராகரிப்பாளர்கள் - அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் என்ன நாடினான்? என்று - (கேலியாக) கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை அவன் வழி தவற செய்கிறான். இன்னும், இதன் மூலம் அதிகமானோரை அவன் நேர்வழி நடத்துகிறான். இன்னும், பாவிகளைத் தவிர இதன் மூலம் அவன் வழி தவற செய்ய மாட்டான்.
 
(பாவிகளாகிய) அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை, அது உறுதியாகிவிட்ட பின்னர் முறிக்கிறார்கள். இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் ஏவினானோ அதை (-இரத்த உறவை)த் துண்டிக்கிறார்கள். இன்னும், பூமியில் விஷமம் (குழப்பம், கலகம், பாவம்) செய்கிறார்கள். அவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள். (அல்குர்ஆன் 2 : 26,27)
 
வசனத்தின் கருத்து : அல்லாஹ்வுடைய உதாரணங்களை கேலி கிண்டல் செய்து யார் மறுக்கின்றார்களோ அந்த பாவிகளை அல்லாஹு தஆலா குர்ஆனில் சொல்ல படக்கூடிய இந்த உதாரணங்களின் மூலமாக வழி கெடுத்து விடுவான்.
 
முஃமீன்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதாரணங்கள் வரும்போது அதை நம்பிக்கை கொள்வார்கள். அதிலுள்ள தத்துவங்களை சிந்தித்து பார்ப்பார்கள். 
 
முனாஃபிக்குகள், காஃபிர்கள், மறுமையை நம்பாதவர்கள் இதெல்லாம் ஒரு உதாரணமா என்று கேலியாக கிண்டலாக பேசுவார்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டு விட்டு, அந்த பாவிகள் பற்றி கூறுகிறான்.
 
இந்த குர்ஆனை கொண்டு நேர்வழி பெறுபவர்களும் இருக்கிறார்கள், குர்ஆனை கொண்டு வழி கெடுபவர்களும் இருக்கிறார்கள். குர்ஆனை கொண்டு வழி கெடுபவர்கள் யார் என்று அல்லாஹ் குறிப்பிடும்போது ஒப்பந்தங்களை முறிக்கக் கூடியவர்கள், வாக்குகளை மீறக் கூடியவர்கள், ஒன்று அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தமாக இருந்தாலும் சரி அல்லது மனிதர்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, அந்த ஒப்பந்தங்களை துண்டிப்பார்கள். 
 
முஸ்லிம்கள் பிஸ்மில்லாஹ் -அல்லாஹ்வின் பெயரை கூறி இந்த ஒப்பந்தத்தை எழுதுகிறோம் என்று எப்போது அந்த ஒப்பந்தத்தை செய்தார்களோ அல்லது பிஸ்மில்லாஹ் என்று கூறி எப்போது அந்த வாக்குறுதியை அவர்கள் செய்தார்களோ அது அவர்கள் அல்லாஹ்விற்கு செய்து கொடுத்த ஒப்பந்தமாகும். அல்லாஹ்விற்கு கொடுத்த வாக்குறுதியாக ஆகி விடுகிறது. 
 
அது இரண்டு வியாபாரிகள் தங்களுக்குள் செய்து கொண்டாலும் சரி, அல்லது ஒரு முதலாளி ஒரு தொழிலாளியோடு செய்து கொண்டாலும் சரி, ஒரு பணியாளர் தன்னுடைய எஜமானரோடு செய்து கொண்டாலும் சரி, அந்த ஒப்பந்தம் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தமாக ஆகி விடுகிறது. 
 
அந்த ஒப்பந்தத்தை மீறக் கூடியவர்களை அல்லாஹ்வுடைய ஒப்பந்தத்தை முறித்தவர்கள் என்பதாக அல்லாஹ் சொல்லுகிறான். 
 
அடுத்து அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் சேர்த்து வாழ வேண்டும் என்று கட்டளையிட்ட உறவுகளை இவர்கள் துண்டிப்பார்கள். பூமியில் அவர்கள் கலகம் செய்வார்கள். இவர்கள்தான் நஷ்டவாளிகள். 
 
மூன்று அடிப்படை காரணங்களை அல்லாஹ் சொல்கிறான். அவை ஒரு மனிதன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டம் அடைவதற்கு, அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாவதற்குள்ள காரணங்கள்.
 
1. தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவது. 
 
2. உறவுகளை துண்டித்து வாழ்வது. 
 
3. பூமியில் கலகம் செய்வது, சண்டைகளை உண்டாக்குவது, இரு நண்பர்களுக்கு மத்தியில் இரு குடும்பங்களுக்கு மத்தியில் பிரிவினைகளை உருவாக்குவது. 
 
இப்படிப்பட்டவர்கள் மிக பெரிய நஷ்டவாளிகள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான். 
 
அல்லாஹு தஆலா அவனுடைய தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக மேலும் இந்த உறவுகளை குறித்து நிறைய எச்சரிக்கைகளை நமக்கு செய்திருக்கிறான். 
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்நாளெல்லாம் அவர்களுடைய பிரச்சாரத்தில் தௌஹீதை குறிப்பிட்ட அந்த நேரத்தில், அல்லாஹுவை பயந்து வாழுங்கள் என்று குறிப்பிட்ட அந்த நேரத்தில், உறவுகளை குறித்து எச்சரிக்கை செய்வதை அவர்கள் விடவில்லை. 
 
குர்ஆனுடைய வசனங்களை எடுத்து பாருங்கள். அல்லாஹ்வை தவிர நீங்கள் யாரையும் வணங்க கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு சட்டம் கொடுத்து இருக்கிறான் என்று குறிப்பிடுகின்ற அதே இடத்தில் பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்; பெற்றோரோடு உபகாரமாக நடந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 
 
இப்படி குர்ஆனில் இபாதத்துகள் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹு தஆலா உறவுகளை நமக்கு நினைவு கூர்ந்து கொண்டே செல்கிறான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து கேட்கிறார். ஸஹீஹ் முஸ்லிமுடைய அறிவிப்பு. அவர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறார். ஆனால், பார்த்ததில்லை. 
 
எனவே, நேரடியாக வந்து நீங்கள் யார்? உங்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்கிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் சொன்னார்கள்: நான் நபியாக இருக்கிறேன். 
 
அவர் கேட்டார்: நபி என்றால் யார்? என்று. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அல்லாஹ் என்னை அனுப்பி இருக்கிறான். அல்லாஹ் யாரை தனது தூதராக அனுப்பியிருக்கிறானோ அவரை நபி என்று கூறப்படும். 
 
உடனே அந்த மனிர் மூன்றாவது முறையாக கேள்வி கேட்டார்: அல்லாஹு தஆலா உங்களை எதற்கு அனுப்பினான்? எந்த பணியை கொண்டு உங்களை அனுப்பினான்? 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்க வேண்டும். சிலைகளை வணங்குவதை விட்டும் நீங்கள் விலக வேண்டும். உறவுகளை நீங்கள் சேர்த்து வாழ வேண்டும் என்று உங்களுக்கு போதிப்பதற்காக அல்லாஹ் என்னை அனுப்பியிருக்கிறான். 
 
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 832.
 
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். உறவுகளை சேர்த்து வாழ்வது இஸ்லாமிய மார்கத்தில் எந்த தகுதியில் இருக்கிறது என்று. இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்க கூடிய மற்றொரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَقُولُ مَنْ وَصَلَنِي وَصَلَهُ اللهُ، وَمَنْ قَطَعَنِي قَطَعَهُ اللهُ»
 
இந்த ரத்த உறவு அல்லாஹ்வுடைய அர்ஷில் தொங்க விடப்பட்டுள்ளது. இது ஒரு துஆவை என்றென்றும் செய்து கொண்டே இருக்கிறது. யார் என்னை சேர்த்து கொள்வார்களோ அல்லாஹ் அவர்களை சேர்த்து கொள்வானாக! யார் என்னை துண்டித்து விட்டார்களோ அல்லாஹ்வும் அவர்களை அவனுடைய அருளில் இருந்து துண்டித்து விடுவானாக. 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2555.
 
இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இன்று நம்முடைய வாழ்க்கையில் தொழுகை இருக்கிறது. நோன்பு இருக்கிறது. ஜகாத் இருக்கிறது. ஹஜ் இருக்கிறது. உம்ரா இருக்கிறது. குர்ஆன் ஓதுகிறார்கள். பார்ப்பதற்கு மார்க்கத்தை பேணுகின்ற தோற்றத்தில் இருக்கிறார்கள். 
 
ஆனால், அவர்களுடைய குடும்ப உறவுகளை எடுத்துப் பார்த்தால், அவர்களுக்கு தாய் தந்தையோடு சண்டை, உடன் பிறந்தவர்களோடு சண்டை, ரத்த உறவுகளோடு சண்டை, அற்ப காரியங்களுக்கெல்லாம் பகைமையின் நெருப்பை மூட்டி கொண்டிருக்கிறார்கள். 
 
இந்த பிரபஞ்சத்திலேயே அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான ஒரு இடம் இருக்கிறது என்றால் அது அல்லாஹ்வுடைய அர்ஷ்தான். 
 
அந்த அர்ஷில் தொங்க விடப்பட்டிருக்கக் கூடிய அந்த ரத்த உறவு அல்லாஹ்விடத்தில் இந்த பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. 
 
யா அல்லாஹ்! என்னோடு யார் கருணையாக நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு நீ அருள் புரிவாயாக. யார், என்னை துண்டித்து விட்டார்களோ, என் மீது இரக்கம் காட்டவில்லையோ  அவர்களை நீயும் துண்டித்து விடுவாயாக.
 
இத்தகைய ஒரு கெட்ட பிரார்த்தனையில் அல்லாஹ்வுடைய அர்ஷில் இருந்து அந்த உறவுமுறை செய்து கொண்டிருக்கும் போது, அந்த உறவை முறிக்க கூடியவர்கள் இந்த உலகத்தில் எப்படி சுபிட்சத்தை பார்ப்பார்கள்? எப்படி அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அவர்கள் உணர்வார்கள்? அவர்களுடைய உள்ளத்தில் எப்படி விசாலம் இருக்கும்? 
 
எப்பொழுதுமே அவர்களுடைய உள்ளம் நெருக்கடியில், ஒரு விதமான இருளில், ஒரு விதமான குழப்பத்தில் மூழ்கி கொண்டிருக்கும். 
 
ஒரு ஏழையாக இருந்தாலும், அடிப்படை வசதி இல்லாதவராக இருந்தாலும், தாய் தந்தையோடு நன்மை செய்து ரத்த உறவுகளோடு பாசத்தோடு, இரக்கத்தோடு வாழக்கூடியவனின் அந்த வாழ்க்கையை பாருங்கள். 
 
அவன் மகிழ்ச்சியோடு இருப்பான் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவன் இருக்கின்ற காரணத்தால். 
 
மேலும் இமாம் புகாரி இமாம் முஸ்லிம் ரஹிமஹுமல்லாஹ் பதிவு செய்யக் கூடிய இன்னொரு ஹதீஸ். 
 
அபூ ஹுரைரா ரதியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
 
" إِنَّ اللَّهَ خَلَقَ الخَلْقَ، حَتَّى إِذَا [ص:6] فَرَغَ مِنْ خَلْقِهِ، قَالَتِ الرَّحِمُ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: نَعَمْ، أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى يَا رَبِّ، قَالَ: فَهُوَ لَكِ " قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} [محمد: 22] "
 
நிச்சயமாக அல்லாஹு தஆலா படைப்புகளை படைத்து முடித்த போது, அந்த ரஹிம் -ரத்த உறவானது அல்லாஹ்விடத்தில் பேசியது. யா அல்லாஹ்! இந்த நேரம் உன்னிடத்தில் நான் துண்டிக்கப் படுவதிலிருந்தும், நான் ஒதுக்கப் படுவதிலிருந்தும் பாதுகாப்பு தேடுவதற்குரிய சரியான நேரம் என்று கூறிய போது, அல்லாஹ் தஆலா அந்த ரத்த உறவிற்கு வாக்களித்தான். 
 
உன்னை சேர்ப்பவர்களை நானும் சேர்த்து கொள்கிறேன். உன்னை துண்டித்து வாழக் கூடியவர்களை நானும் துண்டித்து விடுகிறேன். இது உனக்கு திருப்தியாக இல்லையா? 
 
அதற்கு அந்த உறவு கூறியது: கண்டிப்பாக நான் இதை கொண்டு திருப்தி அடைந்தேன். அல்லாஹ் கூறினான். இந்த வாக்கை நான் உனக்கு கொடுக்கின்றேன். 
 
இந்த ஹதீஸை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுவிட்டு முன்பு ஓதிய சூரா முஹம்மதுடைய 22 வது வசனத்தை ஓதி விட்டு சொன்னார்கள். 
 
அல்லாஹ் குர்ஆனில் ஓதியதை நீங்கள் கவனித்து பாருங்கள். அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் இந்த பூமியில் சென்றால் குழப்பம் செய்வீர்கள். உறவுகளை முறித்து வாழ்வீர்கள். இந்த வசனத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி காட்டினார்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5987.
 
அதுபோன்று லுபை இப்னு ஹாரிஸ், அபு பகரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். 
 
உறவுகளை முறித்து வாழ்வது எவ்வளவு அல்லாஹ்வுடைய கோபத்திற்குரிய பாவம் என்றால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
 
«مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ العُقُوبَةَ [ص:665] فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الآخِرَةِ مِنَ البَغْيِ وَقَطِيعَةِ الرَّحِمِ»
 
அல்லாஹு தஆலா ஒரு பாவத்திற்கு மறுமையிலும் தண்டனை கொடுப்பதோடு, அந்த பாவத்தை செய்தவருக்கு உலகத்திலும் உடனடியாக ஒரு தண்டனையை கொடுப்பான் என்று இருக்குமேயானால் அந்த பாவம் இரண்டாகும். 
 
ஒன்று, பிறருக்கு அநியாயம் செய்வது. இரண்டாவது, உறவுகளை முறித்து வாழ்வது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2511.
 
பிறருக்கு அநியாயம் செய்வது என்பது அவர்களுடைய கண்ணியத்திலோ, அவர்களுடைய செல்வத்திலோ, அவர்களுடைய உரிமையிலோ அத்து மீறுவது. எந்த வகையில் ஒரு மனிதன் பிறருக்கு அநியாயம் செய்வானோ அது வியாபாரத்திலோ, தொழிலிலோ, கொடுக்கல் வாங்கலிலோ, கண்ணியத்தில் எதுவாக இருந்தாலும் சரி பிறருக்கு செய்யப்பட கூடிய அநீதி அல்லாஹ்விடத்தில் பாவத்தால் மிக கடுமையானது. 
 
அதுபோன்றுதான் உறவுகளை முறித்து வாழ்வதும். இந்த இரண்டு பாவங்களை செய்பவர்களுக்கு மறுமையில் தண்டனை இருப்பதோடு இந்த உலகத்திலும் அல்லாஹ் தஆலா உடனடியாக தண்டனை கொடுப்பான். 
 
ஆகவேதான், அநியாயக்காரர்களை பற்றி அல்லாஹ் சொல்லும் போது, அநியாயகாரர்கள் செய்ய கூடிய செயலை அல்லாஹ் பார்க்காமல் இருக்கிறான் என்று நபியே நீங்கள் எண்ணி விடாதீர்கள். அநியாயம் செய்பவர்கள் அவர்களுடைய மீளுமிடம் எது என்று கண்டிப்பாக நீங்கள் அறியத்தான் போகிறார்கள். (அல்குர்ஆன் 14 : 42)
 
ஆகவே, இந்த அநியாயத்தில் இருந்து நாம் தவிர்ந்து கொள்வதோடு, உறவுகளை முறித்து வாழ்வதில் இருந்தும் நாம் அல்லாஹ்வை அஞ்சி உறவுகளை சேர்த்து வாழ வேண்டும். 
 
அதுபோன்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மற்றுமொரு ஹதீஸை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்ய அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 
 
மூன்று விஷயங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டார்கள். 
 
(இன்று, சமுதாயத்தினுடைய அத்தனை நன்மைகளுக்கும், அல்லாஹ்வுடைய அத்தனை பரகத்துகளையும் அடைய பெறுவதற்குரிய அழகிய மூன்று உபதேசங்கள். 
 
யாருக்கு அல்லாஹ்வுடைய ஈமான் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, மறுமையின் நற்பாக்கியங்கள் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்க விரும்புகிறார்களோ, இந்த மூன்று உபதேசங்களை அவர்கள் வாழ்க்கையில் பேணட்டும்.)
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»
 
யார் அல்லாஹுவையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொள்வாரோ அவர் தன்னுடைய விருந்தாளியை கண்ணியப் படுத்தட்டும். 
 
விருந்தாளி வருவதை கொண்டு அவர் மகிழ்ச்சி அடைய வேண்டும். அவருடைய உள்ளம் விசாலம் அடைய வேண்டும். அவருடைய உள்ளத்தில் அல்லாஹுவிற்காக அந்த விருந்தாளியை நேசிக்கக் கூடிய ஈமானிய பண்பு வரவேண்டும். 
 
யார் ஒருவர் விருந்தாளி தனது வீட்டுக்கு வருவதால் உள்ளத்தால் நெருக்கடியாகின்றாரோ, அந்த விருந்தாளியின் மீது வெறுப்பை காட்டுகின்றாரோ அல்லது அந்த விருந்தாளி வருவதால் சங்கடத்திற்கு ஆளாகின்றாரோ அவருடைய ஈமான் பலவீனமாக இருக்கிறது. அவருடைய மறுமை நம்பிக்கை பலவீனமாக இருக்கிறது என்று பொருள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்: யார் அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்புவாரோ அவர் தன் விருந்தாளியை கண்ணியப் படுத்தட்டும்; யார் அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்புவாரோ அவர் தனது ரத்த உறவை சேர்த்து வாழட்டும். 
 
மேலும் சொல்கிறார்கள்: யார் அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்வாரோ அவர் நல்லதை பேசட்டும். இல்லை என்றால் வாய் மூடி இருக்கட்டும். யார் அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்வாரோ தன்னுடைய உறவுகளை சேர்த்து வாழட்டும். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6018.
 
ஒரு மனிதன் உறவுகளை துண்டித்து புறக்கணித்து அல்லது உறவுகளை மறந்து வாழ்கிறான். ஒன்று இருக்கிறது சண்டை செய்து விட்டு அந்த உறவுகளோடு பகைமையுடன் வாழ்வது. 
 
இன்னொன்று இருக்கிறது, தனக்கு இப்படி உறவு இருக்கின்றார்களா என்று கூட தெரியாமல் வாழ்வது. அதுவும் அந்த உறவை முறித்து வாழ்வது. 
 
சிலர் சொல்கிறார்கள்; நாங்கள் எந்த உறவோடும் சண்டை செய்து கொள்ளவில்லை. யாரோடும் எங்களுக்கு எந்த பகைமையும் இல்லை. அவர்கள் பேசினால் நாங்கள் பேசுவோம். சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்கள் சந்தித்து கொள்வோம் என்று. 
 
இப்படி இருப்பதும் உறவுகளை முறிப்பதற்கு சமம் ஆகும். உறவுகளை மறந்து வாழ்வது, உறவுகளை விட்டு தூரமாக வாழ்வது, அவர்களை சந்திக்காமல் இருப்பது, அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளாமல் இருப்பது, அவர்களின் நலன்களை விசாரிக்காமல் இருப்பது. இதுவும் உறவை முறிப்பதுடைய பாவத்திற்கு சமமானது. 
 
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபி என்று அறிந்து கொண்ட அந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதரின் உபதேசத்தை சொல்லி காட்டுகின்றார். 
 
ரசூலுல்லாஹ் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க விரும்பினேன். அவர்களுடைய உபதேசத்தை கேட்க விரும்பினேன். ஒரு நபியினுடைய உபதேசம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். 
 
அந்த நேரத்தில் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த உபதேசத்தை நான் உங்களுக்கு சொல்லி காட்டுகிறேன் என்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் மிக பெரிய யூத அறிஞராக இருந்தவர், இஸ்லாமை ஏற்று சொல்லுகின்றார். 
 
இப்னுமாஜா ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கின்றார்கள். 
 
«يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصِلُوا الْأَرْحَامَ، وَصَلُّوا بِاللَّيْلِ، وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ»
 
அல்லாஹ்வுடைய தூதர் மதீனாவுக்கு வந்தபோது செய்த உபதேசம், மக்களே ஸலாமை நீங்கள் பரப்புங்கள் - யாரை பார்த்தாலும் ஸலாம் சொல்லுங்கள். 
 
இன்று இது ஒரு முஸீபத் ஆக ஆகி விட்டது. தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் சொல்வது. மறுமையின் அடையாளங்களில் ஒன்று, அறிமுகமானவர்களுக்குள் மட்டும் ஸலாம் சொல்லி கொள்வார்கள். முஸ்லீம்களில் அறியாத மக்களை பார்த்தால் அவர்கள் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். இது மறுமையின் அடையாளங்களில் ஒன்று. 
 
அல்லாஹ்வுடைய தூதர் அப்படி சொல்லவில்லை. நீ அறிந்தவருக்கும் ஸலாம் சொல். அறியாதவருக்கும் ஸலாம் சொல். ஸலாமை பரப்புவது ஈமானின் அடையாளம் என்று சொன்னார்கள். 
 
மக்களே ஸலாமை நீங்கள் பரப்புங்கள். மக்களுக்கு உணவளியுங்கள். பசித்தவர்களுக்கு உணவளியுங்கள். ஏழைகளுக்கு உணவளியுங்கள். அனாதைகளுக்கு உணவளியுங்கள். ரத்த உறவுகளை சேர்த்து வாழுங்கள்.
 
இரவில் தூங்கும் போது நீங்கள் அல்லாஹ்விற்காக தொழுங்கள். அல்லாஹ்வுடைய பாதுகாப்போடு நீங்கள் சொர்க்கத்தில் நுழைவீர்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 3251.
 
இந்த 4 அமல்களை நீங்கள் செய்தால் அல்லாஹ்வுடைய பாதுகாப்போடு நீங்கள் சொர்க்கத்திற்குள் செல்வீர்கள். 
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸை அபு ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்க இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். 
 
இன்று மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் பரக்கத்துக்காக துஆ செய்கிறார்கள். பரக்கத் என்று சொன்னால் இரண்டு பரக்கத் இருக்கிறது. ஒன்று, மார்க்கத்துடைய பரக்கத். அல்லாஹ்வுடைய அன்பு கலந்த பரக்கத். அல்லாஹ் ஒரு மனிதனை மார்க்கத்தில் வைத்திருப்பது. 
 
இன்னொன்று இருக்கிறது. செல்வ செழிப்பு அதிகமாவது, அது ஹலாலா ஹராமா? அல்லாஹ்வின் விருப்பத்திற்குட்பட்டதா? என்பதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். காசு நிறைய வேண்டும். பணம் நிறைய வேண்டும். பணக்காரராக ஆக வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு அழகாக நமக்கு சொன்னார்கள் பாருங்கள்:
 
: «مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»
 
யாருக்கு தன்னுடைய வாழ்நாள் அபிவிருத்தி ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, யாருக்கு அல்லாஹ் தஆலா கொடுத்த ரிஜ்கில் பரக்கத் செய்ய பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் தன் ரத்த உறவுகளை சேர்த்து வாழட்டும்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2067.
 
இந்த ரத்த உறவுகளை முறித்துக் கொண்டு, உறவுகளோடு சண்டையிட்டுக் கொண்டு அல்லது ரத்த உறவுகளை புறக்கணித்து வாழ்ந்து கொண்டு ஒரு மனிதர் பள்ளியில் தொழுது விட்டு அல்லாஹ்விடத்தில் பரக்கத்துக்காக துஆ செய்தி கொண்டு இருப்பார். 
 
இவருக்கு எப்படி அல்லாஹு ரப்புல் ஆலமீன் பரக்கத் செய்வான்? பரக்கத்திற்கு என்று, ரஹ்மத்திற்கு என்று அல்லாஹ் சொன்ன வழியை அவர் அடைத்து விட்டு, அல்லாஹ் எதை முஸீபத்திற்கு காரணம் என்று சொன்னானோ அந்த காரணத்தை செய்து கொண்டு அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொண்டிருக்கிறார். 
 
இந்த துன்யா மட்டும் அவருக்கு முஸீபத்தாக மாறி விடும் என்பது அல்ல. இமாம் முஸ்லீம் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கின்ற மற்றுமொரு ஹதீஸில் வருகிறது.
 
«لاَ يَدْخُلُ الجَنَّةَ قَاطِعٌ»
 
உறவுகளை முறித்து வாழக் கூடியவர் சொர்க்கம் செல்ல மாட்டார்.
 
 அறிவிப்பாளர் : ஜுபைர் இப்னு முத்இம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5984.
 
அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பாவம் செய்திருந்தாலும் கூட அல்லாஹ் அந்த பாவங்களை மன்னித்து, அவர்களுடைய நன்மையின் காரணமாக விசாரணைகளை லேசாக்கி நரகத்திற்கு அனுப்பாமல் பலரை சொர்க்கத்திற்கு அனுப்புவான். 
 
ஆனால், பாவங்களில் யார் ரத்த உறவுகளை முறிக்கிற அந்த பாவத்தை செய்திருக்கிறார்களோ அவர்கள் அந்த முதல் கூட்டத்தில் சேர மாட்டார்கள். ரத்த உறவுகளை முறித்து துண்டித்து வாழ கூடியவர் அவர் சொர்க்கம் செல்ல மாட்டார். 
 
அதாவது, அல்லாஹ்வினால் பாவங்கள் மன்னிக்க பட்டு முதன்மையாக தண்டனை அனுபவிக்காமல் இவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்று அல்லாஹ் யாருக்கு தீர்ப்பு அளிக்கிறானோ அந்த கூட்டத்தில் இவர்கள் சேர மாட்டார்கள். 
 
இவர்கள் ரத்த உறவுகளை முறித்ததற்கு உரிய தண்டனையை நரகத்தில் அனுபவிப்பார்கள். அதற்கு பிறகு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாடினால் அவர்களை மன்னித்து அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்புவான்.
 
இந்த ரத்த உறவுகளை சேர்த்து வாழ்வதில் சிலர் எப்படி இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இணங்கி வாழ்ந்தால் நாங்களும் இணங்கி வாழ்வோம். அவர்கள் வெட்டினால் நாங்களும்  வெட்டுவோம். அவர்கள் துண்டித்தால் நாங்களும் துண்டிப்போம். அவர்கள் ஒதுங்கினால் நாங்களும் ஒதுங்கி கொள்வோம் என்ற தத்துவம் பேசுகிறார்களே இவர்களுடைய கூற்றை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மறுத்து சொல்லுகிறார்கள்.
 
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் அவர்கள் அறிவிக்க இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். 
 
«لَيْسَ الوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا»
 
பிரதி உபகாரம் செய்து கொள்ளக் கூடியவர்கள், அவர் ஒரு அன்பளிப்பு வாங்கி வந்தார் என்பதற்காக இவர் ஒரு அன்பளிப்பு வாங்கி வைக்கிறார். இன்று இவர் சந்தித்தார் என்பதற்காக நாளை இவர் சந்திக்க செல்கிறார். இப்படி பதிலுக்கு பதில் செய்ய கூடியவர் அவர் உறவுகளை சேர்த்து வாழ்பவர் அல்ல. 
 
உறவுகளை சேர்த்து வாழ்பவர் என்றால் யார்? எந்த ரத்த உறவு தன்னை துண்டித்து விடுகிறார்களோ தன்னை ஒதுக்கி விடுகிறார்களோ அவர்களிடத்தில் இவர் சென்று அந்த ரத்த உறவை சேர்த்து கொள்கிறார் அல்லவா, இவர் தான் சேர்த்து வாழ கூடியவர். பதிலுக்கு பதில் உறவாடக் கூடியவர் உறவுகளை சேர்த்தவர் அல்ல. 
 
உறவுகள் தன்னை துண்டித்தாலும் இவர் சென்று அந்த உறவுகளோடு நட்பு வைத்து கொள்கிறார் அல்லவா, இவர்தான் உறவுகளை சேர்த்து வாழ்பவர். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5991.
 
அதுபோன்று, உறவுகளுக்கு நாம் தான தர்மங்கள் செய்ய வேண்டும். அன்பளிப்புகள் செய்ய வேண்டும். இமாம் நசயி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கின்ற ஒரு செய்தி. 
 
«إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ»
 
ஒரு ஏழைக்கு நீங்கள் கொடுக்க கூடிய தர்மம் அது தர்மமாக மட்டும் இருக்கும். ஆக ரத்த உறவுக்கு நீங்கள் கொடுக்க கூடிய தர்மம் அது தர்மமாகவும் இருக்கும், உறவுகளை சேர்த்ததாகவும் இருக்கும். ரத்த உறவுகளுக்கு நாம் கொடுக்கும்போது இரண்டு நன்மைகளை அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு தருவதாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். 
 
அறிவிப்பாளர் : சல்மான் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 2582.
 
மேலும் இமாம் அஹமது ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்ய கூடிய ஒரு ஹதீஸ் ஹக்கீம் இப்னு ஹிசாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள். 
 
أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّدَقَاتِ، أَيُّهَا أَفْضَلُ؟ قَالَ: «عَلَى ذِي الرَّحِمِ الْكَاشِحِ»
 
ஒரு ரத்த உறவு இருக்கிறார். ஆனால் அவர் நம் மீது பகைமையோடு, வெறுப்போடு, காழ்ப்புணர்ச்சியோடு, ஏதோ ஒரு கோபத்தில் இருக்கிறார். அந்த ரத்த உறவை தேடி சென்று அவருக்கு அன்பளிப்பு செய்வது, அவருக்கு தர்மம் கொடுப்பது, நம்முடைய செல்வத்தில் இருந்து அவருக்கு கொடுப்பது இது தர்மத்தில் சிறந்த தர்மம் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள். 
 
எந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரத்த உறவுகளை பேணுவதற்கு, நம்மோடு பகைமையில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு அழகிய நடத்தையை நமக்கு சொல்லி காட்டுகின்றார்கள் பாருங்கள்.
 
இன்று பொதுவாக நம்மோடு இணக்கமாக இருக்க கூடிய ரத்த உறவுகளுக்கு கொடுப்பது வழக்கம். யார் நம்மை பகைத்து கொண்டு கோபமாக, நம்மை பற்றி தவறாக பேசி விட்டார்களோ அவனை நான் பழி வாங்குகிறேன் பார் என்று மக்கள் சொல்ல கூடிய இந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; 
 
இந்த நேரத்தில் இப்படி பட்டவருக்கு தர்மம் கொடுப்பது நீங்கள் கொடுக்க கூடிய தர்மத்தில் சிறந்த தர்மம். 
 
அறிவிப்பாளர் : ஹக்கீம் இப்னு ஹிசாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 15320.
 
காரணம் என்னவென்றால், இந்த தர்மம் அந்த மனிதரிடத்தில் இருந்து உங்கள் மீதான கோபத்தை நீக்கி விடுகிறது. இருவருக்கும் உண்டான உறவை மீண்டும் புதுப்பித்துவிடுகின்றது. ஆகவே இந்த தர்மம் தர்மத்தில் சிறந்ததாக இருக்கும். 
 
அதுபோன்று, நம்முடைய ரத்த உறவுகளுக்காக துஆ செய்வது. நம்முடைய தந்தையின் குடும்பத்தார், தாயின் குடும்பத்தார், அவர்களுடைய பிள்ளைகள், நமது சகோதரர்கள், நம்முடைய சகோதர சகோதரிகள் உடைய பிள்ளைகள் நாம் நம்முடைய துஆக்களில் அவர்களையும் சேர்த்து கொள்வது. 
 
ஸஃப்வான் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
 
நான் ஷாம் தேசத்திற்கு அபுத் தர்தாவை சந்திப்பதற்காக வந்தேன். அப்போது அபுத் தர்தா அங்கே இல்லை. உம்மு தர்தா அங்கு இருந்தார்கள். அவர்கள் என்னிடத்தில் கேட்டார்கள். நீ இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்கிறாயா என்று. 
 
நான் கூறினேன்; ஆம் என்று. அப்போது அவர்கள் சொன்னார்கள்; அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக நன்மையை வேண்டி துஆ கேட்பாயாக. ஏனென்றால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
" دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ "
 
யார் ஒரு மனிதர் தன் சகோதரருக்கு அவர் இல்லாத நேரத்தில் அவர் மறைவில் துஆ கேட்பாரோ அந்த துஆ ஏற்று கொள்ளப்படும். அவரின் தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். அவர் இந்த சகோதரர் தன்னுடைய சகோதரருக்காக துஆ செய்யும் போதெல்லாம் அந்த மலக்கு கூறுவார் ஆமீன். உனக்கும் அது போல் கிடைக்கட்டும் என்பதாக. 
 
அறிவிப்பாளர் : ஸஃப்வான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2733.
 
ரத்த உறவுகளுக்கு நாம் துஆ செய்யும் காரணமாக அவர்கள் மீது நம் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடுகின்றன. அல்லாஹ் அன்பை போட்டு விடுகின்றான். நம்முடைய பகைமையை மறைத்து விடுகின்றான். 
 
யார் மீதாவது உங்களுக்கு கோபம் இருக்குமேயானால் அல்லது வேறு எதாவது துன்யாவுடைய காரணமாக அவர்கள் மீது வெறுப்பு இருக்குமேயானால் அவர்களுக்காக துஆ செய்யுங்கள். அந்த வெறுப்பை அல்லாஹ் போக்கி விடுவான். 
 
அதுபோன்று, இந்த ரத்த உறவுகளை அவ்வப்பொழுது நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை சந்திப்பது, அவர்களுடைய பிரச்சனைகளில் நாம் நம்மால் முடிந்த அந்த உதவிகளை அவர்களுக்கு கொடுப்பது, நம்முடைய சக்திகள் என்ன இருக்குமோ அந்த சக்திகளை கொண்டு அவர்களுக்கு உதவி செய்வது, பொருளாதாரம் இருந்தால் பொருளாதாரத்தை கொடுப்பது. அல்லது உடல் ரீதியாக அவர்களுக்கு நாம் ஆதரவு தர முடியும் என்றால் அந்த ஆதரவை தருவது. 
 
இது உறவுகளை சேர்த்து வாழக் கூடிய நன்மையில் அடங்கும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கு மிக பெரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள். அல்லாஹ்வுடைய தீனில் இதற்கு மிக பெரிய நன்மை இருக்கின்றது. 
 
இன்று உறவுகளை துண்டித்து விட்டு உறவுகளோடு சண்டை சச்சரவு செய்து வாழக் கூடிய மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டு எவ்வளவு தூரம் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று. 
 
நம்முடைய மார்க்கத்தை பொறுத்தவரை எல்லா இபாதத்துகளையும் ஒரு மனிதர் சமநிலையாக செய்ய வேண்டும். பாவங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு பாவம் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு நேரடியாக காரணமாக இருக்கின்றதோ அத்தகைய பாவங்களை விட்டு அடியான் முதலாவதாக விலகி இருக்க வேண்டும். 
 
சில பாவத்தால் மறுமை பாதிக்கும். சில பாவத்தால் இம்மையும் மறுமையும் சேர்ந்து பாதிக்கும். அத்தகைய பாவங்களில் ஒன்றுதான், இந்த உறவுகளை துண்டித்து வாழ்வது. 
 
முஸ்லிம் சமுதாயம் ஒருவர் மற்றவரோடு பகைமை பாராட்டியவர்களாக, சண்டை செய்தவர்களாக, உறவுகளை முறித்துக் கொண்டவர்களாக வாழ்வதும் இன்று நாம் சந்திக்க கூடிய ஆபத்துகளுக்கும், சோதனைகளுக்கும் மிக முக்கிய காரணம் ஆகும். 
 
அல்லாஹு தஆலா இந்த ஒரு பெரும் பாவத்தில் இருந்து என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக. 
 
நம்முடைய உறவுகளிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்வது, அவர்களை நேசிப்பது, அவர்களுக்கு அன்பளிப்பு செய்வது, நமக்கு அல்லாஹ் செல்வத்தை கொடுத்திருந்தால் அந்த செல்வத்தில் அவர்களையும் சேர்த்துக்கொள்வது. 
 
இது அல்லாஹ்வுடைய ரஹ்மத்துக்கும், அன்புக்கும், அல்லாஹ் நம்மை மன்னிப்பதற்கும் மிக பெரிய காரணமாக இருக்கும். 
 
அல்லாஹு தஆலா இந்த ரத்த உறவுகளை பேணி வாழ்வதற்கும், அவர்களோடு மரியாதையோடு, கண்ணியத்தோடு, நேசத்தோடு வாழ்வதற்கும் எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/