HOME      Khutba      மவ்லிது மார்க்கமாகுமா | Tamil Bayan - 640   
 

மவ்லிது மார்க்கமாகுமா | Tamil Bayan - 640

           

மவ்லிது மார்க்கமாகுமா | Tamil Bayan - 640


بسم الله الرّحمن الرّحيم
 
மவ்லிது மார்க்கமாகுமா?
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும், உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய பயத்தை பின்பற்றி, அல்லாஹ்வுடைய சட்டங்களை அவன் இறக்கியது போன்றும், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது போன்றும், கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் பின்பற்றி நடந்தது போன்றும், பின்பற்றி வாழுமாறு உபதேசம் செய்தவனாக எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வுடைய வேத சட்டங்களை அல்லாஹு தஆலா இறக்கியது போன்று பின்பற்றி, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பின்பற்றி, அனாச்சாரங்களை விட்டும், குழப்பங்களை விட்டும், தங்களை பாதுகாத்துக் கொண்ட நன்மக்களில் அல்லாஹு தஆலா  எங்களையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்து இருக்கக்கூடிய இந்த கண்ணியமான மார்க்கத்தை அதை கூட்டுதல் குறைத்தல் இல்லாமல் பின்பற்றுவது கொண்டு மட்டும்தான் நமக்கு இம்மையின் வெற்றியும் மறுமையின் வெற்றியும் இருக்கிறது. 
 
இன்று உலக மக்களின் பார்வையில் முஸ்லிம்களுடைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உலகத்தை நம்பிக்கை கொண்டவர்கள், பொருளாதாரத்தை நம்பிக்கை கொண்டவர்கள், எதைக் கூறினாலும் அதற்கெல்லாம் மேலாக அடிப்படைக் காரணமாக இருப்பது முஸ்லிம்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு விலகி இருப்பது தான்.
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ் கூறாததை, அல்லாஹ்வுடைய தீனில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறாததை, செய்யாததை நுழைத்தது தான் அடிப்படைக் காரணம். 
 
எப்போது முஸ்லிம்கள் இந்த மார்க்கத்தில் ஷிர்க்கை நுழைத்தார்களோ, வணக்க வழிபாட்டின் பெயரால், முன்னோர்களை கண்ணியப்படுத்துகின்றோம் என்ற பெயரால், அல்லாஹ்விற்கு நிகராக அவர்களை மதித்து அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை தங்களுடைய முன்னோர்களுக்கு செய்தார்களோ, அவர்களின் அடக்கஸ்தலங்களில் அந்த வழிபாட்டை நிறைவேற்றினார்களோ, அதுபோன்று அல்லாஹ்வின் மார்க்கத்தின் பெயரால் நூதன அனுஷ்டானங்களை, பித்அத்துகளை, அனாச்சாரங்களை புகுத்தி அதன் மீது பற்று கொண்டு, அதன் மீது ஆர்வம் கொண்டு, அதுவே மார்க்கமாக மார்க்கத்தின் அடையாளமாக ஆக்கி கொண்டார்களோ அதனால் இந்த உம்மத்தின் மீது இழிவு சாட்டப்பட்டது என்று சொல்லலாம். இந்த உம்மத் அதனுடைய கண்ணியத்தை இழந்து விட்டது என்று சொல்லலாம். இன்னும் அல்லாஹ்வுடைய பார்வையிலே இந்த உம்மத் தரம் தாழ்ந்தற்கு இதுதான் அடிப்படை காரணம் என்று சொல்லலாம். 
 
உண்மையில் உலகத்தில் பின்தங்கி இருப்பது காரணமாக இருக்க முடியாது. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா  எத்தனையோ நிஃமத்துகளை பிறருக்கு கொடுக்காததை நமக்கு கொடுத்திருக்கிறான். அல்லாஹ்வுடைய  இந்த மார்க்கத்தை கொண்டு தான் நமக்கு கண்ணியம் என்பதை நமக்கு அல்லாஹ் இந்த வேதத்தின் மூலமாகவும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவின் மூலமாகவும் நமக்கு உணர்த்தி இருக்கின்றார்கள்.  
 
இன்று, இந்த ரபீஉல் அவ்வல் மாதம் தொடங்கியதில் இருந்து மக்களுடைய அந்த மோகத்தை பார்க்கின்றோம். பித்அத்துகள் மீது, அனாச்சாரங்கள் மீது, எதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கற்பிக்கவில்லையோ, அதை செய்வதை மார்க்கத்தின் அடையாளமாக, சுன்னாவின் அடையாளமாக, முஸ்லிம்களின் அடையாளமாக, மிகப்பெரிய ஒரு இஸ்லாமிய தொன்றுதொட்டு பாரம்பரிய கலாச்சாரமாக, ஆக்கிக் கொண்டு அதற்கு அவர்கள் செய்யக்கூடிய செலவுகள், கொடுக்கக்கூடிய நேரங்கள், இன்னும் எத்தனை முயற்சிகள், இவை எல்லாம் அல்லாஹ்வின் மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல், அல்லாஹ்வுடைய தூதரின் அனுமதி இல்லாமல் புகுத்தப்பட்ட மிகப்பெரிய இழிவான சடங்கு சம்பிரதாயங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 
அல்லாஹ்வுடைய மார்க்கம் நமக்கு கொடுக்கக்கூடிய வழிகாட்டுதல் என்ன? மிகத் தெளிவாக மிக இலகுவாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படி அல்லாஹ் தஆலா  கூறுவதைக் கேளுங்கள்.
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்.  உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்." (அல்குர்ஆன் 3 : 31)
 
உங்களுக்கு அல்லாஹ்வுடைய முஹப்பத் –அன்பு இருந்தால், அதாவது நீங்கள் வணக்க வழிபாடுகளை அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்பவராக இருந்தால், அல்லாஹ்வுடைய மன்னிப்பை நீங்கள் அடைய வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒரு காரியத்தை செய்பவராக இருந்தால், அல்லாஹ் சொல்கின்றான்.
 
நபியே! நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கள். என்னை அவர்கள் பின்பற்றட்டும். நபியாகிய உங்களை அவர்கள் பின்பற்றட்டும். அவ்வளவுதான் 
 
எந்த ஒரு காரியத்தை கொண்டு, ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய அன்பை மன்னிப்பை அடைய நாடுகிறானோ, சகோதரர்களே! அந்த காரியம் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ய வேண்டும் என்று கூறிய காரியமாக இருக்க வேண்டும். அவர்கள் செய்து காட்டிய செயலாக இருக்கவேண்டும். 
 
அதை தவிர வேறு எந்த ஒரு செயலை செய்தாலும் சரி, அது உலக மக்களுடைய பார்வையில் அழகாக, அற்புதமாக, மிகத் தூய்மையாக, பரிசுத்தமாக, இறையச்சமாக காட்சி தந்தாலும் சரி, அல்லாஹ்விடத்தில் அதற்கு அங்கீகாரம் இல்லை. ரப்புல் ஆலமீன் இடத்தில் எந்தவிதமான ஒப்புதலும் இல்லை. அல்லாஹ் சொல்கின்றான்;
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
நபியே! அந்த முஃமின்களைப் பார்த்து சொல்லுங்கள். உங்களுக்கு அல்லாஹ்வுடைய முஹப்பத் இருந்தால், அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், உங்களுடைய வணக்க வழிபாடு, உங்களுடைய வாழ்க்கை மற்றும் நீங்கள் எந்த ஒரு காரியத்தை எல்லாம் அன்பை அடைய வேண்டும் என்று மன்னிப்பு அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்கிறீர்களோ, அப்படியே அது உண்மையாக இருந்தால்,
 
இந்த நபியைப் பின்பற்றி அதை செய்யுங்கள். அப்போதுதான் அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன். மிகப்பெரிய கருணையாளன்.
 
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தீனை, பித்அத்துகள் இல்லாமல், அனாச்சாரங்கள் இல்லாமல், பின்பற்ற வேண்டும் என்று புரிந்து கொள்வதற்கு இதைவிட தெளிவான வசனத்தை அவர்கள் தேடுவார்களா என்று யோசித்துப் பாருங்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த வசனத்தின் தொடரிலேயே ரப்புல் ஆலமீன் மேலும் கூறுகிறான்.
 
قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
 
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை ". (அல்குர்ஆன்  3 : 32)
 
நபியே! தொடர்ந்து அவர்களுக்குச் சொல்லுங்கள். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடங்கள். கட்டுப்பட்டு நடங்கள். அல்லாஹ் என்ன வணக்கங்களை கூறினானோ, அந்த வணக்கங்களைக் கொண்டு அன்பை தேடுங்கள். அல்லாஹு தஆலா எந்த அமல்கள் செய்ய கூறினானோ, அந்த அமல்களை செய்து கொண்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுங்கள். ரசூலுக்கு கீழ்படிந்து நடங்கள். என்னை வணங்க வேண்டும் என்று  என்னுடைய தூதர் எப்படி காண்பித்துக் கொடுத்தார்களோ, என்னென்ன அமல்களை, இபாதத்களை, நன்மைகளை, நல்லறங்களை, புண்ணியங்களை, என்னுடைய தூதர் மூலமாக நான் காண்பித்துக் கொடுத்தேனோ, அதை செய்து நீங்கள் அன்பை, மன்னிப்பை தேடுங்கள்.
 
தொடர்ந்து அல்லாஹ் சொல்கின்றான்;
 
அவர்கள் இதை செவியுறவில்லை என்றால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இதை இவர்கள் புறக்கணித்தார்கள் என்றால் நீங்கள் தெளிவாக பிரகடனப்படுத்தி விடுங்கள். அறிவிப்பு செய்து விடுங்கள். நிராகரிப்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேசிக்க மாட்டான்.
 
தங்களுடைய வணக்க வழிபாடுகளை, மார்க்க சம்பிராதயங்களை, மார்க்கத்தில் செய்யக் கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் சரி, அதை அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நபியவர்களுடைய வழிகாட்டலுக்கு இணங்க யார் செய்ய மறுக்கிறார்களோ அவர்கள் காஃபிர்கள்.
 
எங்களுக்குத் தெரியும். எங்களுடைய எண்ணம் தூய்மை. நாங்கள் நல்ல எண்ணத்தில் தானே செய்கின்றோம். அவர்கள் ஆயிரம் நல்ல எண்ணங்களை கற்பித்தாலும் சரி. ஆயிரம் நல்ல எண்ணங்களை அவர்கள் போதித்தாலும் சரி.
 
அடியார்களே! நோக்கம் நல்ல நோக்கமாக இருப்பதால் செய்யக்கூடிய காரியம் பாவமாக இருக்கும்போது, அந்தப் பாவம் ஒருபோதும் நன்மையாக மாறாது. நல்ல நோக்கத்தால் ஒரு தீய காரியம் நன்மையாக மாறும் என்றால், உலகத்தில் பாவம் செய்யக் கூடிய ஒவ்வொருவரும், குற்றங்களை செய்யக்கூடிய பலர் தங்களுடைய குற்றங்களுக்கு, பாவங்களுக்கு நல்ல நோக்கங்களை, நல்ல எண்ணங்களை கற்பிக்கிறார்கள். போதிக்கிறார்கள்.
 
ஒரு போதும் அப்படி ஆக முடியாது. சில நேரங்களில் இப்படி வேண்டுமானாலும் ஆகலாம். பார்ப்பதற்கு நன்மையாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், நோக்கம் தவறாக இருக்கும் போது அந்த நன்மை பாவமாக மாறலாம். ஆனால் பாவம் ஒரு போதும் நல்ல நோக்கத்தால் நன்மையாக மாறாது. ஒரு மனிதன் தொழுகிறான்.
 
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ
 
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
 
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
 
அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
 
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
 
(மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள். (அல்குர்ஆன் 107 : 4-7)
 
தொழுகை பார்ப்பதற்கு வெளிரங்கத்தில் நல்ல இபாதத்தாக தெரிகிறது. ஆனால் முகஸ்துதியின் காரணமாக அல்லாஹ்விடத்தில் அந்தத் தொழுகை, ஒரு மனிதனுடைய நரகத்திற்கு காரணமாகி விடலாம். 
 
ஆனால் சகோதரர்களே! ஒரு மனிதன் வெளிரங்கமாக மார்க்கத்தில் பாவம் என்று அறியப்பட்ட, பாவம் என்று உறுதியாக தெளிவுபடுத்தப்பட்ட, அனாச்சாரம் என்று உறுதி செய்யப்பட்ட ஒன்றை எத்தனை நல்ல நோக்கங்களை வைத்து செய்தாலும் சரி, அல்லாஹ்வுடைய தீனிலே அந்த அடியானுக்கு மறுமையில் ஈடேற்றமாக நன்மையாக அமையாது.
 
இன்று மக்களுடைய வழிகேடுகள், பிரச்சனைகள், குழப்பங்களுக்கு என்ன காரணம்? ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி இந்த மார்க்கத்தில் அவர்கள் செல்வதை விட்டு விட்டார்கள். மன இச்சைகள், இவர் கூறினார், அவர் கூறினார், எங்களுடைய முந்தைய சமுதாயம் செய்தார்கள், அல்லாஹ்வுடைய தீனிலே அதற்கு எந்தவிதமான அனுமதியும் இல்லை. தெளிவான வழிகாட்டுதலை ரப்புல் ஆலமீன் கூறுகிறான்;
 
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
 
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)துதான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தாம் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24 : 54)
 
இந்த மார்க்கத்தைப் பொறுத்தவரை இரண்டு தான் இங்கே. ஒன்று அல்லாஹ்வின் சட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும். இரண்டு தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவிற்கு கட்டுப்படவேண்டும்.
 
முஃமின்களே! நீங்கள் இந்த தூதருக்கு கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே, அல்லாஹ்வுடைய தூதர் மட்டும் தான் எந்தவித நிபந்தனையும் இல்லாமல், ஏன்? எதற்கு? எப்படி? சாத்தியமா? இல்லையா? என்று எந்த விதமான கேள்விகள் இல்லாமல் முழுமையாக பின்பற்றுவதற்கு தகுதியானவர். இந்தத் தூதருக்கு நீங்கள் கீழ்படிந்தால் மட்டும்தான் உங்களுக்கு ஹிதாயத் -நேர் வழி உண்டு.
 
அல்லாஹ்வுடைய தூதர் மீது தெளிவாக இந்த மார்க்கத்தை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறு பொறுப்பில்லை. 
 
இன்று மக்கள் அல்லாஹ்வுடைய தீனிலே, அல்லாஹ்வை எதிர்த்துப் பேசக் கூடிய நிலையில், ரசூலை எதிர்த்து பேசக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள். சடங்குகளை செய்து கொண்டு அல்லாஹ்வுடைய பிரியத்திலே செய்தோம். இதற்காக அல்லாஹ் எங்களை நரகத்தில் போட்டு விடுவானா? ரஸூலுடைய பிரியத்திலே செய்கிறோம். ரஸூலுடைய முஹப்பத்திலே செய்கிறோம். நாங்கள் என்ன செய்துவிட்டோம்? ஏழைகளுக்கு உணவளிக்கிறோம். ரசூலுல்லாஹுடைய புகழை கூறி எங்களுடைய அன்பை அதிகப்படுத்துகிறோம். ஸலவாத் ஓதுகிறோம். நாங்கள் ஒன்று கூடி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு கூறுகிறோம். இது தப்பா? என்று கேட்கிறார்கள்
 
அல்லாஹ்வின் அடியார்களே! இவர்கள் கூறக்கூடிய இந்தக் கூற்றுக்கள் எல்லாம், இன்னும் இவர்களைப் போன்றவர்கள் என்னென்ன தவறான காரணங்களை அல்லது தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் திருப்திப் படுத்திக் கொள்வதற்காக பொய்யான மனோ இச்சைகளையும் கூறுகிறார்களோ, அவர்களை எல்லாம் எச்சரிக்கும் விதமாக ரப்பு சொல்வதைப் பாருங்கள்;
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49 : 1)
 
வசனத்தின் கருத்து : முஃமின்களே! அல்லாஹ்விற்கு முன்னால், அவனுடைய தூதருக்கும் முன்னால் நீங்கள் முந்தி பேசாதீர்கள். அவர்களை எதிர்த்து பேசாதீர்கள். அவர்கள் ஒரு சட்டத்தை கூறாமல் இருக்க, அவர்கள் ஒரு சட்டத்தை விளக்காமல் இருக்க, நீங்கள் நீங்களாக ஒரு கருத்தை மார்க்கத்தில் கூறாதீர்கள்.
 
அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் விஷயத்தில் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.
 
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் பேசுவதை செவியுறுகிறான். உங்களுடைய எண்ணங்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 
 
இப்போது சஹாபாக்கள் இந்த வசனத்தை எப்படி புரிந்தார்கள் என்பதை கவனிக்கவும். இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்து பதிவு செய்கிறார்கள். 
 
لا تقولوا خلاف الكتاب و السنة
 
அல்லாஹ்வின் அடியார்களே! இது ஏதோ இப்னு தைமியா கூறிய வார்த்தை அல்ல. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கூறிய வார்த்தை அல்ல. சிலர் இன்று மவ்லிதுகளை நாம் விமர்சனம் செய்யும்போது, மீலாதுகள் கூடாது என்று சொல்லும்போது, வஹ்ஹாபிகள் என்று சொல்கிறார்கள். இப்னு தைமியாவின் கூட்டத்தை சேர்ந்தவர் என்று சொல்கின்றார்கள். சவுதியின் கூட்டத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்தப் பெயரைக் கொண்டு நம்மை விமர்சனம் செய்தாலும் நமக்கு கவலையில்லை. நாம் கூறுவது அல்லாஹ் உடைய வேதத்தை. நாம் கூறுவதோ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கூற்றை, சஹாபாக்களின் வழிமுறையை.
 
இந்த ஆயத்திற்கு விளக்கம் யாருடையது? இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்; வேதத்திற்கு மாற்றமாக, சுன்னாவிற்கு மாற்றமாக நீங்கள் எதையும் சொல்லாதீர்கள். குர்ஆனில் சொல்லப்பட்டதுதான் மார்க்கம்.
 
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
 
இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) (அல்குர்ஆன் 5 : 3)
 
இபாதத் எது? எது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய காலத்தில் இபாதத்தாக இருந்ததோ, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டான முஹப்பத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும்? எப்படி அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் ஸஹாபாக்கள் வெளிப்படுத்தினார்களோ அவ்வளவுதான். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நேசம் மார்க்கத்தில் உள்ளதா? இல்லையா? என்றால் மார்க்கத்தில் உள்ளது. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது, அவர்கள் மீது ஸலவாத் கூறுவது, அவர்களைப் பற்றி உயர்வாக பேசுவது அல்லாஹ்வுடைய தீனில் உள்ளதா இல்லையா? என்றால் அது அல்லாஹ்விற்காக அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் இபாதத்தா? இல்லையா? என்றால் கண்டிப்பாக இபாதத். 
 
அது எப்படி சஹாபாக்களின் காலத்தில் நிறைவேற்றப்பட்டது? அதற்கு எப்படி அல்லாஹ்வின் தூதர் வழி காட்டினார்களோ, அந்த  வழிமுறைக்கு மாற்றமாக ஒன்றை ஏற்படுத்தி, இதை அல்லாஹ்வின் தூதர் முஹப்பத் என்று யார் எவ்வளவு வாய்கிழிய வாதிட்டாலும் சரி. அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது. நிராகரிக்கப்பட்டது. 
 
மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலமாக இமாம் தபரீ அவர்கள் பதிவு செய்வதை பாருங்கள்.
 
وخافوا الله أيها الذين آمنوا في قولكم, أن تقولوا ما لم يأذن لكم به الله ولا رسوله, وفي غير ذلك من أموركم وراقبوه, إن الله سميع لما تقولون, عليم بما تريدون بقولكم إذا قلتم, لا يخفى عليه شيء من ضمائر صدوركم, وغير ذلك من أموركم وأمور غيركم.
 
அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்திலோ  அல்லது உங்களது மற்ற காரியங்களிலோ, அல்லாஹ் எதை அனுமதிக்கவில்லையோ, அல்லாஹ்வுடைய தூதர் எதை அனுமதிக்கவில்லையோ, அதைத் தவிர நீங்கள் எதையும் பேசி விடாதீர்கள். சொல்லிவிடாதீர்கள். அவனை நீங்கள் கண்காணித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைப் பார்க்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதை அல்லாஹ் கேட்கின்றான். உங்களது உள்ளத்தில் நீங்கள் உங்களது கூற்றுக்கு என்ன நோக்கம் வைத்திருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து  இருக்கின்றான். உங்களது உள்ளங்களில் உள்ள எண்ணம் அல்லாஹ்விற்கு மறையாது.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இன்று மக்களிடத்திலே பார்த்தால் இஸ்லாமுக்கு இது அடையாளமாக மாறிவிட்டது. மீலாது கொண்டாடாதவர்கள் மவ்லிது செய்யாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல. சுன்னத்துல் ஜமாத்தை சேர்ந்தவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் நம்மை அவர்கள் அடக்குவதற்கு, முடக்குவதற்கு, நம்மை பலவீனப் படுத்துவதற்கு, இன்னும் நம்மை குறை சொல்வதற்கு, அல்லது நம் மீது காழ்ப்புணர்ச்சியை கொட்டுவதற்கு,  அவர்கள் வைத்திருக்கக்கூடிய வார்த்தைகளில் சில தான் பழமைவாதிகள் என்று நம்மை அடையாளப்படுத்துவது. 
 
இன்னும் சில இடங்களில் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று நம்மை அடையாளப்படுத்துவது. அல்லாஹ் பாதுகாப்பானாக.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் மார்க்கத்தை சொல்வது பழமைவாதம் என்றால் அந்த பழமைவாதம் தான் மார்க்கம் என்று புரிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்வதில் எந்த பயங்கரவாதமும் இல்லை. எந்த தீவிரவாதமும் இல்லை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, சஹாபாக்களுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் இரண்டு நாட்களை ஆண்டிலே  குறித்து வைத்து அதில் அவர்கள் விளையாடுவார்கள். சந்தோஷமாக இருப்பார்கள். அதை விழாவாக கொண்டாடி கொண்டிருந்தார்கள். எனவே இது குறித்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் இப்படி இரண்டு நாட்கள் கொண்டாடிக் கொண்டு இருந்தோம். இப்போது நாங்கள் கொண்டாடலாமா? அவர்கள் இதை வழமையாக செய்து கொண்டிருந்தார்கள். மார்க்கமாக செய்யவில்லை. அந்த நாளில் ஒன்று சேர்வார்கள். ஈட்டிகளைக்கொண்டு, அம்புகளைக் கொண்டு விளையாடுவார்கள். சந்தோஷமாக இருப்பார்கள். அவ்வளவுதான். வேறு எந்தவிதமான இபாதத் அங்கு இருக்கவில்லை.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய தெளிவான வழிகாட்டுதலை பாருங்கள்.
 
عَنْ أَنَسٍ، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا، فَقَالَ: مَا هَذَانِ الْيَوْمَانِ؟ قَالُوا: كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ " 
(سنن أبي داود 1134 -) ]حكم الألباني] : صحيح
 
அல்லாஹு தஆலா அந்த இரண்டு நாட்களுக்கு பதிலாக அவற்றை விட சிறந்த நாளை உங்களுக்கு கொடுத்திருக்கின்றான். அதுதான் ரமலானுடைய முடிவு ஈதுல் ஃபித்ருடைய நாள். அது போன்று ஹஜ் பெருநாள் உடைய ஈதுல் அல்ஹா உடைய நாள் .
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல் : அபூ தாவூது, எண் : 1134.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அந்த சஹாபாக்கள் ஒரு வணக்கமாக எடுத்து செய்யட்டுமா என்று கேட்கவில்லை. அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் நாங்கள் எல்லாம் ஒன்று கூடி விளையாடுவதற்காக, மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதற்காக நாங்கள் வழமையாக செய்து கொண்டிருந்த ஒருநாள் அவ்வளவுதான். இதை இப்போது செய்யலாமா என்று கேட்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இனி எந்த வழக்கத்துக்கும் அனுமதி இல்லை. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காண்பித்து கொடுத்ததை தவிர. 
 
இப்படி இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் மவ்லிது என்றும் மீலாது என்றும் கொண்டாடிக் கொண்டும், அதை விசேஷமான நாளாக ஆக்கிக்கொண்டு சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்கின்றார்களே! இபாதத்தாக செய்கின்றார்களே! இது அல்லாஹ்விடத்தில் எவ்வளவு பெரிய வெறுக்கத்தக்க காரியம் என்று யோசித்துப் பாருங்கள். 
 
இதை செய்வதற்கு அல்லாஹ்வுடைய அன்பு, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அன்பு, ரசூலை புகழ்வது என்று அடையாளப் படுத்துகிறார்களே! சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். இதில் அல்லாஹ்வுடைய அன்பு இருக்குமானால், இதில் அல்லாஹ்வுடைய பொருத்தம் இருக்குமானால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை செய்தார்களா? இதில் நன்மை இருக்குமானால் நன்மையை காண்பித்து தருவதற்கு தானே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் சொல்லித் தரவில்லையே! இது ஒரு சிறந்த நன்மையான காரியமாக இருக்குமேயானால் இதை சஹாபாக்கள் செய்யவில்லையே! ஏன்? ஸஹாபாக்களுக்கு தவறிய ஒன்று அதை நாம் அடைய முடியுமா? இந்த மார்க்கத்தில் அவர்களை நாம் முந்திச் செல்ல முடியுமா?
 
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ
 
நன்மைகளில் அவர்கள் முந்தியவர் ஆயிற்றே! நன்மைகளில் அவர்கள் முதலாம் ஆயிற்றே. (அல்குர்ஆன் 9 : 100)
 
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
 
(மூன்றாவது:) முன் சென்றுவிட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற யாவரையும் விட) முன் சென்று விட்டவர்கள். (அல்குர்ஆன் 56 : 10)
 
எந்த ஒரு நபியின் மீது இவர்கள் பிரியத்தை சொல்கிறார்களோ இதைவிட உண்மையான பரிசுத்தமான உறுதியான பிரியத்தை அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வைத்திருந்தார்கள். உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் வைத்திருந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் வைத்திருந்தார்கள். அலி (ரலி) அவர்களும் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு சஹாபியும் வைத்திருந்தார்கள். வரலாற்றிலே அந்த சஹாபாக்களுக்குரிய அந்த அன்பிற்குரிய ஆதாரங்களை பார்க்கவில்லையா? அவர்கள் ஏன் செய்யவில்லை? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
 
خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் (ரலி), நூல் : புகாரி, எண் : 2652.
 
மக்களில் சிறந்தவர்கள் என்று யாரை சொன்னார்கள்? எதிலே? செல்வத்திலா? உலக வசதியிலா? மார்க்கத்தில் மார்க்க விஷயங்களில் நாம் பின்பற்றுவதற்கு என்று அடையாளப் படுத்தினார்களே! அந்த சஹாபாக்கள் இதை செய்தார்களா? அவர்கள் செய்யாத ஒன்று அவர்கள் காண்பிக்காத ஒன்று எப்படி மார்க்கமாக ஆக முடியும்? என்று யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே!
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து கவி பாடி இருக்கின்றார். ஹஸ்ஸான் இப்னு ஸாபித் கவி பாடியிருக்கின்றார். இன்னும் எத்தனையோ ஸஹாபாக்கள் உயர்வை எடுத்துப் பேசி இருக்கிறார்கள். அந்த கவிதைகள் எல்லாம் தொகுத்து கொண்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாள் என்று சஹாபாக்களுக்கு தெரியாதா? அந்த நாளிலே ஒன்று சேர்ந்து அவர்கள் படித்திருக்கலாமே! 
 
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய புகழை எடுத்துச் சொல்வது, அவர்களுடைய மேன்மைகளை எடுத்துச் சொல்வதை எந்த மார்க்க அறிஞரும் பித்அத் என்று சொல்லவில்லை. அது தவறு என்று சொல்லவில்லை.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அவற்றின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களை, பொய்யான சம்பவங்களைக் கொண்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்வது.
 
பிறகு ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பு நாளை ஒன்று கூட கூடிய நாளாக ஆக்கிக் கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு சடங்கான நாளாக பின்பற்றப்படக் கூடிய நாளாக ஆக்கிக் கொண்டு, அதை ஒரு விசேஷமாக செய்வது பித்அத். 
 
இன்று மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பித்அத்துடைய அந்த  கொடூர முகம் தெரியவில்லை. அறிஞர்கள் சொல்வது என்ன? விபச்சாரத்தை விட திருடுவதை விட மது குடிப்பதை விட இன்னும் கொடிய பாவங்கள் செய்வதைவிட அல்லாஹ்வின் பார்வையிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையிலே பித்அத் மிக பயங்கரமானது. ஷிர்கிற்கு பிறகு குஃப்ருக்கு பிறகு நிஃபாக்கிற்கு பிறகு இந்த பித்அத் என்பது அல்லாஹ்வின் பார்வையிலே மிக பயங்கரமான செயல். ஷிர்க்  செய்தவர்கள் குஃப்ர் செய்தவர்கள் அல்லாஹ்விடத்தில் இவர்களுக்கு மன்னிப்பு இல்லை.
 
ஆனால் அவர்கள், தான் செய்வதை ஷிர்க் என்று அறியும் போது அவர்கள் திருந்துவார்கள். அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இந்த பித்அத்  செய்பவர்கள் எப்படி செய்கிறார்கள்? தாங்கள் செய்வதை மார்க்கம் என்று நம்பிக்கை கொண்டு மார்க்கம் என்று வாதிட்டு மார்க்கம் என்று ஆதாரங்களை தெரிந்து கூறி செய்கின்றார்களே. இவர்களுக்கு தவ்பாவுடைய வாய்ப்பு மிகக் குறைவு.
 
ஆகவே பித்அத் என்பது மிக மோசமான ஒன்று. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அழகிய முகத்தைக் கெடுக்கக்கூடிய ஒன்று. 
 
இன்று சிலர் உங்களுக்கு வேறு வேலை ஒன்றும் இல்லையா? இந்த பித்அத்துகளைப் பற்றி, தர்கா  வழிபாடுகளை பற்றி, ஷிர்க்கை பற்றி, மவ்லிதுகளைப் பற்றி நீங்கள் இப்படி பேசிக் கொண்டே இருப்பீர்களா? சமுதாயத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றது. எத்தனையோ காரியங்கள் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் பேச மாட்டீர்களா? என்று.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? எந்த பிரச்சினைகளை இவர்கள்  கூறுகிறார்களோ அதற்கான சடங்குகளை விட்டுவிட்டு தங்களுடைய செல்வத்தை பொருளாதாரத்தை நேரத்தை இவர்கள் அதற்கு செலவழித்தால் நாம் ஏன் இதைப் பற்றி பேசப்போகிறோம்? ஒரு பித்அத் இல்லை என்றால் சமுதாயத்திலே விமர்சனம் செய்வதற்கு என்ன காரணம்? அவர்கள் மீது தனிப்பட்ட வெறுப்பா நமக்கு? ஒரு பித்அத் இந்த மார்க்கத்தில் செய்யப்படும்போது அது எச்சரிக்க வில்லை என்றால் தடுக்கவில்லை என்றால் அல்லாஹ்வுடைய அதாபு –வேதனை நம்மையும் சூழ்ந்துகொள்ளும்.
 
كَانُوا لَا يَتَنَاهَوْنَ عَنْ مُنْكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ
 
அன்றி, அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே! (அல்குர்ஆன் : 5:79)
 
இஸ்ரவேலர்களுடைய அறிஞர்களை அல்லாஹ் சபித்த போது, அவர்கள் மீது கோபத்தை இறக்கிய போது, அல்லாஹ் சொல்கின்றான். அதற்கு காரணம் தங்கள் சமுதாயம் செய்த தீமையை அவர்கள் கண்டிக்காமல் விட்டு விட்டதனால்.
 
இவர்கள் இந்த பித்அத்தை காலங்காலமாக செய்கின்றார்கள். குடும்பத்தில் எங்கேயாவது நடக்கிறது என்றால் எச்சரிக்கை செய்யுங்கள். அல்லாஹ்வுடைய தூதர் மீது முஹப்பத் என்பது அவர்களுடைய சுன்னத்தை பின்பற்றுவதில் இருக்கிறது. மார்க்கத்தை முழுமையாக தெளிவாக கற்றறிந்து பின்பற்றுவதிலே இருக்கின்றதே தவிர இந்த சடங்கு சம்பிரதாயங்களில் இல்லை. அது போக இவர்கள் ஓதக்கூடிய இந்த மவ்லிதுக் கிதாபிலே இருக்கக்கூடிய ஷிர்க்குகள், குஃப்ருகள், இன்னும் மிக மோசமான வரலாறுகள், கற்பனையாக எழுதப்பட்டவைகள், அவற்றையெல்லாம் எடுத்துக் கூறி இந்த சமுதாயத்தை பித்அத்திலிருந்து ஷிர்க்கான காரியங்களிலிருந்து நாம் பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும். 
 
அல்லாஹு தஆலா அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தெளிவாக எடுத்துக் கூறி, பின்பற்றி, அதன்படி செயல் படக்கூடிய தவ்ஃபீக்கை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/