HOME      Khutba      அல்லாஹ்வின் மீது அன்பும் அமல்களில் ஆர்வமும் | Tamil Bayan - 589   
 

அல்லாஹ்வின் மீது அன்பும் அமல்களில் ஆர்வமும் | Tamil Bayan - 589

           

அல்லாஹ்வின் மீது அன்பும் அமல்களில் ஆர்வமும் | Tamil Bayan - 589


بسم الله الرحمن الرّحيم

அல்லாஹ்வின் மீது அன்பும்அமல்களில் ஆர்வமும்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் பயத்தையும் அச்சத்தையும் எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் மார்க்கத்தை அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றிப் பிடித்து,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டலின் படி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக, இந்த ஜும்மா குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹு தஆலா நம் அனைவரையும் அவன் பொருந்திக் கொண்ட நல்லவர்களில் ஆக்கி அருள் புரிவானாக! அல்லாஹ்வை உண்மையாக நேசித்து, அல்லாஹ்வின் மீது உண்மையான ஆர்வம் கொண்டு, அல்லாஹ் திருப்திபடுகின்ற நல்ல அமல்களை அதிகமதிகம் செய்கின்ற நல்லோரில் அல்லாஹு தஆலா உங்களையும் என்னையும் நமது சந்ததிகளையும் நம் குடும்பத்தாரையும் ஆக்கி அருள்வானாக!

நாளை மறுமையில் அல்லாஹுதஆலா நம்முடைய நன்மைகளை ஏற்று பாவங்களை மன்னித்து சொர்க்கம் செல்லக்கூடிய நல்லோரில் ஆக்கி அருள்வானாக! ஆமீன்!!

அல்லாஹ் சுபஹானஹு தஆலா சூரா அல் இஸ்ரா 57-வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்:

أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا

இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே! (அல்குர்ஆன் 17 : 57)

வசனத்தின் கருத்து : ஸாலிஹீன்களுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்து அவர்களுக்கு திருப்தியான அமல்களைச் செய்கிறோம் என்று, இந்த ஸாலிஹீன்களை திருப்தி படுத்தினால் அல்லாஹ்வை திருப்தி படுத்தி விடலாம் என்று நல்லோர்களை வணங்குவதில் ஈடுபட்ட மக்களை அல்லாஹு ரப்புல் ஆலமீன் கண்டிக்கும் போது சொல்கிறான்.

நீங்கள் எந்த நல்லவர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றீர்களோ, அந்த நல்லவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றால்,தங்களில் யார் அதிகம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற முடியும் என்ற தேடலில் அதிகம் அமல்கள் செய்பவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்தார்கள். அல்லாஹ்வுடைய தண்டனையை பயந்தார்கள்.

உண்மையான நல்லவர்கள் யார்என்றால், எந்த நல்ல அமல்களின் மூலமாக அல்லாஹ்வை நெருங்க முடியும் என்றால், அல்லாஹ் எந்த அமலை தன்னுடைய தூதர்கள் மூலமாக நமக்கு வழிகாட்டி இருக்கிறானோ, அந்த அமல்களை நாம் செய்ய வேண்டும்.

நான் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமானவனாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அமல்களை செய்ய வேண்டுமே தவிர, நல்லவர்களை நாடிச் செல்வதால் நீங்கள் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்களாக ஆகி விட முடியாது.

எதுவரை, அந்த நல்லவர்களுடைய அமல்களை நீங்கள் செய்ய மாட்டீர்களோ!

ஒரு மனிதன் நல்லவர்களின் அமல்களை செய்யாமல் அவர்களை நேசிப்பதால் மட்டும் அவன் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை அடைய முடியாது.

அதுவும் ஷிர்க்குகளைச் செய்து கொண்டு,பித்அத்களைச் செய்து கொண்டு ஒரு மனிதன்  நல்லவர்களை நேசிப்பதால் அல்லாவிற்குத், தான் நெருக்கமானவனாக ஆகி விடலாம் என்று நினைத்தால் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

உண்மையான நல்லவர்கள், இறையச்சம் உள்ளவர்கள், அல்லாஹ்வின் அன்பை தேடக் கூடியவர்கள், அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கக் கூடியவர்கள் உடைய கவனமெல்லாம் அமல்களில் இருக்கும். மனிதர்கள் மீது இருக்காது.

இரண்டாவதாக அல்லாஹ் கூறுகிறான் :

وَيَرْجُونَ رَحْمَتَهُ

அவர்களுடைய ஆதரவெல்லாம் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் மீது இருக்குமே தவிர, மனிதர்கள் மீது இருக்காது. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆசை வைத்தவர்களாக, அல்லாஹ்விடத்தில் நேரடித் தொடர்பு உள்ளவர்களாக இருப்பார்கள்.

மூன்றாவதாக,

وَيَخَافُونَ عَذَابَهُ

அல்லாஹ்வுடைய அதாபை  பயப்படுவார்கள்.

நம்மிடமிருந்து எதாவது ஒரு தவறு, பாவம், குற்றங்கள், அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல் நிகழ்ந்து விட்டால், அல்லாஹ் என்னை தண்டித்து விடுவானோ,என்னுடைய ஈமான் பலவீனப்பட்டுவிடுமோ, என்னுடைய மறுமை என்னவாகுமோ என்ற பயத்தில் இருப்பார்கள்.

இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,யார் அமல்களில் கவனம் செலுத்தாமல்,தாங்கள் யாரை நல்லவர்கள் என்று நம்புகிறார்களோ அவர்களை பொருத்தவரை அவர்களுடைய நம்பிக்கைஎப்படி இருக்குமென்றால், நாங்கள் எதை செய்தாலும் சரி, பாவத்தைச் செய்தாலும் சரி, அமல்களை விட்டாலும் சரி, நாங்கள் நம்பி இருக்கக்கூடிய அவுலியாக்கள் எங்களை கரை சேர்த்து விடுவார்கள்.

அன்பு சகோதரர்களே! இதைத்தான் அல்லாஹு தஆலா கடுமையாகக் கண்டிக்கின்றான். வன்மையாகக் கண்டிக்கின்றான்.

நீங்கள் எந்த இறை நேசர்கள் விஷயத்தில் இப்படி நம்பிக்கை கொள்கிறீர்களோ அந்த இறை நேசர்கள் எப்படி இருந்தார்கள் என்றால் அல்லாஹ்வுடைய அதாபை - தண்டனையைப் பயந்து கொண்டு இருந்தார்கள்.

இங்கே நாம் நம்முடைய தலைப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்,ஒரு மனிதன் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்ல மனிதன் என்றால்,அவனுக்கு அல்லாஹ்வுடைய அன்பும் ஆசையும் இருக்கிறது என்றால், முதலாவதாக அவர்அமல்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அதுவும் போட்டி போட்டுக் கொண்டு அமல்களில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களை விட நான் அதிகம் அமல் செய்பவனாக இருக்க வேண்டும்.

அல்லாஹு சுபஹானஹு தஆலா அமல்களில் போட்டியிடுவதை நமக்கு அல்குர்ஆனில் வலியுறுத்துகின்றான் :

فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ

நீங்கள் அமல் செய்வதில் ஒருவர் ஒருவரை முந்த பாருங்கள்;போட்டி போடுங்கள். (அல்குர்ஆன் 2 : 148, 5 : 48)

سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ

நீங்கள் உங்களுடைய ரப்புடைய மன்னிப்பை அடைவதில் ஒருவரை ஒருவர் முந்த பாருங்கள். (அல்குர்ஆன் 57 : 21)

கைசேதம் என்னவென்றால்,இன்று அமல்களில் போட்டி போடுவதை விட்டு விட்டோம். உலக விஷயங்களில் படிப்பு அல்லது பொருளாதாரம் அல்லது இன்னும் பல துன்யாவுடைய விஷயங்களில் போட்டி போட்டு, அவரை விட நான் பெரியவனாகஎன்ற போட்டி பொறாமை இருக்கிறதே தவிர, அமல்களுடைய போட்டி குறைந்து விட்டது.

யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் அன்பும்,ஆசையும், அல்லாஹ்வின் மீது உண்டான தேடலும் அதிகமாகி விடுமோ அவர்கள் அமல்களில் போட்டி போடுவார்கள்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆதரவு வைப்பார்கள். அல்லாஹ்வுடைய தண்டனையை பயப்படுவார்கள்.

சூரா சுமர் உடைய 9-வது வசனத்தில்அல்லாஹு ரப்புல் ஆலமீன் அந்த நல்லவர்கள் எப்படி அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆதரவு வைப்பார்கள் என்பதைக் குறிப்பிடும்போது,

أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்பவனா (நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவான்)? (நபியே!) நீர் கேட்பீராக: கல்வி அறிவுடையவரும், கல்வி அறிவில்லாதவரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தான். (அல்குர்ஆன் 39:9)

அல்லாஹ்வின் மீது ஒரு முஃமினுக்கு ஆசை,அன்பு, ஆர்வம், பாசம், தேடல் இருக்க வேண்டும். இவை அவனை அமல்களின் பக்கம் கொண்டு வர வேண்டும். மனிதர்களின் பக்கம் அல்ல. பொய்யான வீணான கற்பனைகளின் பக்கம் அல்ல.

யூதர்களைப் பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்படி குறிப்பிடுகிறான் :

نَحْنُ أَبْنَاءُ اللَّهِ وَأَحِبَّاؤُهُ

நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள். நாங்கள் அல்லாஹ்வின் நேசர்கள். நபிமார்களுடைய  நேரடி வாரிசுகள். நாங்கள் சொர்க்கத்திற்குத் தான் போவோம் என்று. (அல்குர்ஆன் 5:18)

இதற்கு அல்லாஹ் பதில் கூறுகிறான்:

قُلْ يَاأَيُّهَا الَّذِينَ هَادُوا إِنْ زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக்கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர்களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.'' (அல்குர்ஆன் 62 : 6)

وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ

இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 62 : 7)

அல்லாஹ்வுடைய அன்பிற்காக அமல்களில் அதிகத்தை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு அமலையும் அடியான் தேடித் தேடி செய்ய வேண்டும்.

அல்லாஹு சுபஹானஹு தஆலா அல்லாஹ்வை நேசித்த அல்லாஹ்வின் மீது அன்பு வைத்த நல்லவர்களைப் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ

நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள். (அல்குர்ஆன் 21:90)

இன்று,அல்லாஹ்வை அஞ்சாத ஒரு கூட்டம் அல்லாஹ்வின் அன்பைப் பற்றிப் பேசுகிறது. அல்லாஹ்வுடைய அமல்களில் ஆர்வம் இல்லாதவர்கள் ஈமானை பற்றி, அமல்களைப் பற்றியும் பேசுகின்றார்கள்.

ஒரு மனிதனுக்கு அல்லாஹ்வின் மீது அன்பு,  ஆசையிருக்குமேயானால் அவனுடைய வாழ்க்கையில் அந்த அன்பு என்பதுஅமல்களில் வெளிப்பட வேண்டும். நல்ல காரியங்களில் வெளிப்பட வேண்டும்.

இபாதத்தில், தக்வாவில், இன்னும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல் (ஸல்) அவர்களும் ஆர்வமூட்டி இருக்கக் கூடிய அந்த அமல்களில் அவனுக்கு ஆர்வம் இருக்க வேண்டும்.

நபிமார்களின் வாழ்க்கையிலிருந்து அல்லாஹுத்தஆலா நமக்கு இதைத்தான் போதிக்கின்றான். ஒவ்வொரு நபியும் அல்லாஹ்வின் மீது எவ்வளவு பாசம் உள்ளவர்களாக, தேடல் உள்ளவர்களாக  இருந்தார்கள் என்று.

அல்லாஹு தஆலா மூஸா நபியிடத்தில் பேசினான். அப்படி பேசும்போது மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது இருந்த அன்பு, பாசம் மிகைத்து அவர்கள் சொல்கிறார்கள்:

قَالَ رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ

என் இறைவா! உன்னை எனக்கு காண்பி! நான் உன்னை பார்க்கவேண்டும். (அல்குர்ஆன் 7 : 143)

அறிஞர்கள் எழுதுகிறார்கள்: இது மூஸா (அலை) அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது இருந்த அந்த அன்பு, தேடல், மிகைத்திருந்ததை காட்டுகிறது.

அல்லாஹு தஆலா மூசா (அலை) அவர்கள் இடத்தில் ஒரு கேள்வி தான் கேட்கிறான் :

وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَامُوسَى

மூஸா அவர்களே! உங்களுடைய வலது கையில் என்ன இருக்கிறது?

முஸா (அலை) அவர்களுடைய பதிலை பாருங்கள். பிறகு, அதனுடைய படிப்பினை, பாடங்களைப்  பாருங்கள். அல்லாஹ்விடத்தில் சொல்கிறார்கள்:

قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَى غَنَمِي وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَى

அதற்கவர் ‘‘இது என் கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு (பல) பயன்களும் இருக்கின்றன'' என்று கூறினார். (அல்குர்ஆன் 20 : 17,18)

அன்பு சகோதரர்களே! இரண்டு வகையான மக்கள் இருப்பார்கள். நம்மில் ஒவ்வொருவருக்கும் நாம் விரும்பக்கூடியவர்கள், நம்மை விரும்பாதவர்கள் என்று இருப்பார்கள்.

நாம் யாரை அதிகமாக விரும்புகிறோமோ அவர்களிடத்தில் நாம் அதிகம் பேச வேண்டும் என்று விரும்புவோம். அவர்களிடத்தில் பேசுவதால் நம்முடைய ஆசை தீர்ந்து விடாது. இன்னும் பேசுவோமா! இன்னும் பேசுவோமா! என்று பல கேள்விகளை கேட்பது, அவர்களுடைய நிலைகளை கேட்பது என்பதாக தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம்.

நமக்குப் பிடிக்காதவர்களிடத்தில் பேச நேரிட்டால் எவ்வளவு சுருக்கமாகவும் குறைவான நேரத்திலும் அந்த பேச்சை முடிக்க முடியுமோ முடித்துக் கொள்வோம்.

கவனித்துப் பாருங்கள்: மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் பேசுவதற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அல்லாஹ் கேட்கிறான்: உமது கையில் என்ன இருக்கிறது மூசா? என்று. அல்லாஹ்வின் மீது அவர்களுக்கிருந்த ஆசை, தேடலினால்இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அல்லாஹ் கேட்காத விஷயங்களுக்கெல்லாம் இவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

காரணமென்ன? அல்லாஹ்விடத்தில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு பேச முடியுமோ பேசிக் கொள்வோம் என்று.

இது தான் மிகப்பெரிய ரகசியங்களில் ஒன்று. இன்று நம்முடைய வணக்க வழிபாடுகள் சுருங்கி விட்டன. உலகத் தேவைகள் அதிகமாகி விட்டன. வணக்க வழிபாடுகளில் நாம் நேரம் கொடுக்கும் பொழுது,ஒரு மீனை தண்ணீயிலிருந்து வெளியே எடுத்தால் அந்த மீனுடைய நிலை எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறோம்.

அது குர்ஆன் ஓதும் போது ஆக இருக்கட்டும், திக்ர் செய்யும் போது ஆக இருக்கட்டும், தொழுகையில் இருக்கும்போது ஆக இருக்கட்டும்இப்படி எந்த நல்ல அமல்களில் நாம் இருந்தாலும்,ஒரு மீனை தண்ணீரில் இருந்து வெளியில் எடுத்தால் அது எப்படி திரும்ப தண்ணீரை நோக்கி செல்வதற்கு வேகம் காட்டுமோ, அது போன்று அந்த நல்ல அமலில் இருந்து எவ்வளவு வேகமாக சுருக்கமாக அந்த அமலை முடித்துக் கொண்டு திரும்ப துனியாவுக்குள் குதிப்போம் என்பதாக இருக்கிறோம்.

அதை நேரத்தில் துனியாவில் இருப்போமானால்,அந்த துன்யாவில் இருந்து நம்மை பிடுங்கி ஆகிரத்திற்கு கொண்டு வர வேண்டியதாக இருக்கிறது.

காரணம் என்ன? அல்லாஹ்வின் மீது உண்டான அன்பு குறைவு. அல்லாஹ்வின் மீது உண்டான தேடல் குறைவு.

தொழுகையில் நான் அல்லாஹ்விடத்தில் பேசுகிறேன் என்று நிற்க்கும் பொழுது ஒரு மனிதன் அந்த கியாமை பிரிய நினைப்பானா? ருகூவில் இருக்கும் போது என்னுடைய எஜமானனுக்கு முன்னால் குனிந்து,நான் அவனைப் போற்றிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது அந்த ருகூவிலிருந்து எழ நினைப்பானா?

ஸுஜூதுக்கு முன்னால் நிற்கும் போது என்னை படைத்த அந்த அதிபதிக்கு முன்னால் நான் பணிந்து விட்டேன் என்ற நிலையில் இருக்கும் போது அவன் எப்படி சுஜுதிலிருந்து எழுந்திருப்பான்!

நபிமார்கள்,ஸஹாபாக்கள்,தாபியீன்களுடைய தொழுகை எவ்வாறு இருந்தது?

அல்லாஹ் சொல்கிறான் :

تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا

குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். (அல்குர்ஆன் 48:29)

அவர்களுடைய தொழுகையில் கியாம் -நிலை நீண்டதாக இருக்கும். ருகூஃ நீண்டதாக இருக்கும். சுஜூது நீண்டதாக இருக்கும்.

காரணமென்ன? ஒவ்வொரு நிலையில் இருந்தும் பிரிய முடியாமல் அடுத்த நிலைக்கு அவர்கள் மாறுவார்கள். ஏனென்றால் ஒரு தொழுகையை இத்தனை அமைப்புகளைக் கொண்டு முடித்தாக வேண்டும்.

அந்த நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு அப்படி தான் மாறுவார்களே தவிர,நம்மை போன்று ஒவ்வொரு நிலையும் எவ்வளவு சுருக்கமாக முடித்து விட்டு வேகமாக தொழுதது கிடையாது.

ஆகவேதான், இன்னும் ஓத மாட்டார்களா? இன்னும் எங்களுக்கு தொழ வைக்க மாட்டார்களா? என்று ஸஹாபாக்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோடு தொழுவதில் ஆர்வம் கொண்டார்கள்.

அல்லாஹ் சுபஹானஹு தஆலா நல்லவர்களைப் பற்றிச் சொல்லும் பொழுது,

فَالسَّابِقَاتِ سَبْقًا

(இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 79:4)

அல்லாஹ் சுபஹானஹு தஆலாவுடைய இந்த கூற்றுக்கு அறிஞர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகிறார்கள்:

ஒன்று,மலக்குகள் முஃமின்கள் உடைய ரூஹை கொண்டு செல்வார்கள். ஒரு முஃமினுடைய ரூஹை அவர்கள் மிக விரைவாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு மலக்கும் அந்த ரூஹை,  இன்னொரு ரஹ்மத் உடைய மலக்கிடமிருந்து எடுத்து,யார் அதை சுவர்க்கதிர்க்கு விரைவாக கொண்டு செல்வது என்ற போட்டியில் கொண்டு செல்வார்.

இரண்டாவது விளக்கம் : முஃமின் உடைய ரூஹ் உயிர் பிரிகின்ற நேரத்தில் அல்லாஹ்வின் மீது உண்டான ஆர்வத்தால்  உடனடியாக தனது உடலில் இருந்து வெளியேறி மலக்குடைய கைக்கு செல்ல வேண்டும் என்று,உடலில் இருந்து அவ்வளவு விரைவாக வரும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்த அல்லாஹ்வின் மீது உண்டான ஆசை,ஆர்வம் என்பது மிக முக்கியமான ஒன்று. எந்த அளவிற்கு இது உள்ளத்தில் ஆழமாகப் பதியுமோ, அந்த அளவிற்குத் தான் நம்முடைய ஈமான், அமல், வணக்க வழிபாடுகள், நம்முடைய இக்லாஸ் -மனத்தூய்மையில் உயிரோட்டம் இருக்கும்.

கண்ணியத்திற்குரிய அறிஞர் இமாம் அப்துல் வாஹித் இப்னு ஸைத், ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அவர்களுடைய மாணவர்களில் ஒருவர். அல்லாஹ்வின் மீது உண்டான ஆசையை மறுமையின் மீது உண்டான ஆசையைப் பற்றி அவர்கள் கூறுவார்கள் :

يا إخوتاه! ألا تبكون شوقاً إلى الله؟

அல்லாஹ்வின் மீது உண்டான ஆர்வத்தால் நீங்கள் அழ வேண்டாமா?

இதைத்தானே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

ஒரு மனிதன் தனிமையில் உட்கார்ந்து அல்லாஹ்வை நினைத்தான். அவனுடைய இரண்டு கண்களில் இருந்தும் அப்படியே அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. இதன் காரணமாக இந்த மனிதன் நாளை அர்ஷுடைய நிழலில் இருப்பான் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.

தன்னுடைய பாவத்தை நினைத்தும் அழலாம். அதுபோன்று அல்லாஹ்வுடைய நிஃமத்தை நினைத்து, அதற்கு நன்றி குறைவாக செய்திருக்கிறேனே! என்றும் அழுகை வரலாம்.

அல்லாஹ்வின் மீது உண்டான அன்பினாலும் அழுகை வரலாம். சில நேரத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு பெற்றோர் பிள்ளைகளைச் சந்திக்கும்போது, கணவன் மனைவியை சந்திக்கும் போது, நண்பன் நண்பனைச் சந்திக்கும் போது,சந்தோஷத்தால்,மகிழ்ச்சியால் அழுவதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் மீது இதை விட அன்பும், ஆசையும் ஒரு அடியானுக்கு இருக்கவேண்டும்.

மேலும் இமாம் அவர்கள் கூறினார்கள் :

يا إخوتاه! ألا تبكون خوفاً من النار؟

நரகத்தின் அச்சத்தால் நீங்கள் அழ வேண்டாமா? யார் நரகத்தின் அச்சத்தால் அழுகிறார்களோ, அல்லாஹ் அவர்களை நரகத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

" عَيْنَانِ لَا تَمَسُّهُمَا النَّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ، وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ فِي سَبِيلِ اللَّهِ "

இரண்டு கண்களை அல்லாஹ் நரகத்தின் மீது ஹராமாக்கி விட்டான். ஒன்று,அல்லாஹ்வுடைய பாதையில் முஸ்லிம்களை பாதுகாத்தக் கண். இரண்டாவது, அல்லாஹ்வுடைய பயத்தால் நரக தண்டனையை நினைத்து அழுத கண்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 1639, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

மேலும் இமாம் அவர்கள் கூறினார்கள் :

يا إخوتاه! ألا تبكون خوفاً من العطش يوم القيامة؟

மறுமை நாளின் தாகத்தை நினைத்து நீங்கள் அழ வேண்டாமா? நீங்கள் அல்லாஹ்வுடைய அச்சத்தால் அழுங்கள்.

அன்பு சகோதரர்களே! அந்த நல்லவர்களுடைய அழுகையைப் பார்க்கிறோம். எப்படி எல்லாம் அல்லாஹ் உடைய நேசத்தால், மறுமையின் நினைவால் அழுதார்கள் என்று.

இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் தங்களது காலத்தில் வாழ்ந்த, வணக்க வழிபாடில் ஈடுபட்ட ஒரு முஸ்லிமான பெண்ணை பற்றி அவர்கள் எழுதுகிறார்கள். அந்த ஈமானிய பெண் கூறுகிறார்கள்:

والله لقد سئمت من الحياة لو وجدت الموت لاشتريته شوقا إلى الله وحبا للقائه

நான் இந்த உலக வாழ்க்கையில் வாழ்வதில் என்னுடைய மனம் விடுபட்டு விட்டது. நான் மவுத்தை விரும்புகிறேன். எனக்கு எங்கேயாவது மவுத்து விற்கப்படுகிறது என்று தெரியுமேயானால், நான் அந்த மவுத்தை விலை கொடுத்து வாங்கவும் தயார். காரணம்,அல்லாஹ்வின் மீது உண்டான ஆர்வத்தாலும் ஆசையாலும்.

அப்போது அந்தப்பெண்ணிடத்தில் கேட்கப்படுகிறது; உங்களுடைய அமலின் மீது அவ்வளவு நம்பிக்கையா?

சொன்னார்கள் : என்னுடைய அமலின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அல்லாஹ்வை நேசிக்கிறேன். அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்திருக்கிறேன். அல்லாஹ்வை நேசிக்கக் கூடிய அவன் மீது ஆர்வமுள்ள என்னை அல்லாஹ் வேதனை செய்யமாட்டான் என்று ஆதரவு வைக்கிறேன்.

அன்பு சகோதரர்களே! இப்படி உள்ளத்தில் இருந்து சொல்லக்கூடிய அந்த தகுதி, இன்று நம்மிடத்தில் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

நம்முடைய வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வுடைய அன்பும் ஆசையும் மிகைத்திருக்கிறதா? அல்லாஹ்வுக்கு என்று சில தனிமையை நாம் கொடுத்திருக்குமோ?அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பதற்கென்று, தனிமையில் தொழுவதற்கென்று,தனிமையில் அல்லாஹ்விடத்தில் பேசுவதற்கென்றுஅல்லாஹ்வின் மீது உண்டான அன்பால், நாம் அவனுக்கு நேரம் கொடுத்திருக்கிறோமா?

சில நேரங்களில் தனிமையில் நாம் தொழுவோம். தனிமையில் நாம் திக்ரு செய்வோம். அங்கே பார்த்தால் நம்முடைய ஒரு தேவை முன்னால் இருக்கும். நம்முடைய ஒரு ஹாஜத்துக்காகத்தான் அந்த தொழுகையை தொழுது இருப்போமே தவிர,

(அவ்வாறு செய்வதும் கண்டிப்பாக அவசியம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடத்தில் நாம் நம்முடைய தேவையைக் கேட்க முடியும்?அல்லாஹ் தான் நம்முடைய தேவையை நிறைவேற்றக்கூடியவன்.)

அதே நேரத்தில் அந்தத் தேவையை நிறைவேற்றியதற்குப் பிறகு அல்லாஹ்விற்காக அந்த தனிமையில் நாம் நன்றி செலுத்தி அழுதிருக்கிறோமா?

யா அல்லாஹ்! இந்த தேவையை நான் உன்னிடத்தில் கேட்டேன். எனக்கு நிறைவேற்றிக் கொடுத்தாய் என்று. எத்தனை முறை நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி இருக்கிறோம் என்று யோசித்து பாருங்கள்!

தேவைகளைக் கேட்பதற்கு முன்னால் மன்றாடிய நாம் தேவைகள் நிறைவேறியதற்குப் பிறகு அல்லாஹ்விற்கு அதற்காக நன்றி செலுத்துகிறோமோ? அந்த நன்றி உணர்வு நமக்கு வருகிறதா?

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா,அது போன்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சில அடையாளங்களை, சில விளக்கங்களை நமக்கு சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் மீது அன்பு உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்? யாருக்கு அல்லாஹ்வின் மீது அன்பு இருக்குமோ, தேடல் இருக்குமோ, பாசம் இருக்குமோ அவர்களுக்கு அல்லாஹ்வுடைய  ரஸுலின் மீதும் அன்பு இருக்க வேண்டும். ரசூலின் மீதும் பாசம் இருக்க வேண்டும். அவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டும். ரசூலை நாம் பார்க்க வேண்டுமே என்ற ஆசை இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

மூன்று குணங்கள் இருந்தால் அவர் ஈமானுடைய சுவையை அனுபவிப்பார். ஒருவர்,யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மற்றவர்கள் அனைவரையும் விட விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ!

இரண்டாவதாக, யார் தனது சகோதரனை விரும்பினால் அல்லாஹ்விற்காகவே தவிர விரும்பமாட்டாரோ!

(ஒருவர் மீது அன்பு வைத்தால் அல்லாஹ்விற்காக என்று இருக்க வேண்டும் அவருடைய செல்வத்திற்காகவோ, பதவிக்காகவோ அல்லது அவரால் ஏதாவது கிடைக்குமோ என்ற உலக ஆசைக்காக இருக்கக் கூடாது.)

மூன்றாவதாக, இறை நிராகரிப்பில் செல்வதை அவர் வெறுக்க வேண்டும். அதிலிருந்து அல்லாஹ் தன்னைப் பாதுகாத்த பிறகு, தான் நெருப்பில் போடப் படுவதை வெறுப்பது போன்று.

இந்த மூன்று குணங்கள் இருந்தால் அவருக்கு ஈமானுடைய சுவை கிடைக்கும் என்று சொன்னார்கள்.(2)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 16.

இதில் முக்கியமாக நாம் பார்க்கிறோம்.அல்லாஹ்வை நேசிப்பவர்கள் அவனுடைய ரஸூலையும் நேசிக்க வேண்டும்.

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

உங்களில் ஒருவர் முஃமினாக முடியாது. எதுவரை,நான் அவரிடத்தில் அவருக்கு அவருடைய செல்வத்தை விட, அவருடைய குடும்பத்தை விட, மக்கள் அனைவரையும் விட, விரும்பப்படக் கூடியவனாக, நேசிக்கப்படக் கூடியவனாக மாறுகின்றேனோ.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 44.

அல்லாஹ்வின் மீது அன்புள்ளவன்அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அன்பு இருக்கவேண்டும்.

ஒரு முறை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவருடைய கரத்தைப் பிடித்துக் கொண்டுச் செல்கிறார்கள். அப்போது ரசூல் (ஸல்) அவர்களுடைய கரம், தன் கையியே இருக்கிறது. ரசூல் (ஸல்) அவர்கள் மீது உயிரை வைத்திருந்த உமர் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் இந்த நெருக்கம்!

அல்லாஹ்வுடைய தூதரை பார்த்துச் சொன்னார்கள்: யா ரசூலல்லாஹ்! எல்லா வஸ்துகளையும் விட எல்லோரையும் விட உங்களை எனக்கு பிடிக்கும். ஆனால், என்னுடைய உயிரை விட, என்னுடைய நப்ஸை விட என்று.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:  உங்களில் யாரும் முஃமினாக முடியாது. எதுவரை நான் அவருக்கு அவருடைய நஃப்ஸை விட விருப்பத்திற்கு உரியவனாக மாறுகின்றேனோ!

உடனே அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உமர் கூறினார்கள் :

فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கிறேன்;இப்போது நான் எனது நப்ஸை விட உங்களை நேசிக்கிறேன் என்று.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: உமரே! இப்போது தான் நீங்கள் மூஃமினாக ஆகிறீர்கள் என்று.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் :புகாரி,எண் : 6632.

இந்த அன்பு என்பதும் நேசம் என்பதும் அமல்களோடு இருக்க வேண்டும். இதை நாம் மிக கவனத்தில் வைக்க வேண்டும். இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு பல ஹதீஸ்களில் உணர்த்துகின்றார்கள்.

அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களின் அடையாளங்களில் ஒன்று, அவர்கள் குர்ஆனோடு தொடர்பு உள்ளவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் குர்ஆனை ஓதுவார்கள், ஓதிக்கொண்டே இருப்பார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து அமல்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான அமல் எது? என்று கேட்கிறார்.

அதற்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

«الحَالُّ المُرْتَحِلُ»

தங்குவார். பயணிப்பார்.

இவ்வளவு ஒரு வித்தியாசமான வார்த்தையை ரசூல் (ஸல்) அவர்கள் கூறுகிறார்களே! "தங்குவார் பயணிப்பார்" என்று.

ஸஹாபாக்கள் கேட்டார்கள்:யா ரசூலுல்லாஹ்! தங்குவது என்றால் என்ன? பயணிப்பது என்றால் என்ன? அல்லாஹ்விற்கு மிக விருப்பமான அமல் எது?அல்லாஹ்விற்கு மிக விருப்பமான அமலைச் செய்பவர் யார்? என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் சொல்கிறீர்கள் தங்குவார் பயணிப்பார் என்று.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஆம், அவர் யார் என்றால்  குர்ஆனை ஆரம்பத்திலிருந்து ஓதிக் கொண்டே வருவார்,அவர் எங்கே நிறுத்துகிறாரோ, நிறுத்தி விட்டு அப்படியே சென்று விட மாட்டார். அடுத்து மீண்டும் அந்த இடத்திலிருந்து ஆரம்பித்துக் கொண்டே இருப்பார். குர்ஆனை தொடர்ந்து ஓதிக்கொண்டே இருப்பார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 2948.

ஓரிடத்தில் அவர் நிற்கிறார் என்றால் அத்தோடு பிறகு நீண்ட காலம் கழித்து அவர் குர்ஆனை திறப்பார் என்பது கிடையாது.

(இன்றைய மக்களுடைய அமலைப் போல ரமழான் வந்தால் குர்ஆன் திறக்கப்படுகிறது.ரமழான் முடியும் பொழுது குர்ஆன் மூடப்படுகிறது. பிறகு குர்ஆனுக்கும் உம்மத்துக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது).

ஒரு மனிதர் நீண்ட ஒரு பயணத்தில் செல்கிறார். வழியில் அவர் தற்காலிகமாக தங்குகிறார்.அந்த தற்காலிகமான தங்குதல் என்பது எவ்வளவு குறைவாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் அந்த இடத்தை விட்டு தன்னுடைய இலக்கு வரை செல்வதற்காக அவர் துடிப்பாக இருப்பார்.

அன்பு சகோதரர்களே! நம்முடைய பயணம் சொர்க்கத்தை நோக்கிய பயணம். நம்முடைய பயணம் அல்லாஹ்வுடைய விருப்பத்தை நோக்கிய பயணம்.

அப்போது, குர்ஆன் ஓதக் கூடியவருடைய அந்த ஈடுபாடு எப்படி இருக்குமென்றால்? குர்ஆனை ஓதிக் கொண்டே இருப்பார். அடுத்து அவருக்கு ஏதாவது வேலைகள் வரும் போது அல்லது அவருக்கு ஏதாவது முக்கிய காரியங்கள் வரும்போது அந்த இடத்தில் நிறுத்தி விட்டு அவர் செல்கிறார் என்றால், மீண்டும் எவ்வளவு சீக்கிரமாக வந்து குர்ஆனைத் திறந்து தான் விட்ட இடத்திலிருந்து ஓதுவேன் என்ற ஆர்வத்தோடு செல்வார்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொன்னார்கள்:இப்படி குர்ஆனோடு தொடர்புள்ளவர் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர்.

இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் பதிவு செய்யக்கூடிய மற்றும் ஒரு ஹதீஸை பாருங்கள் :

ஒரு சஹாபி சூரத்துல் இஹ்லாசை எப்போதுமே தொழுகையில் ஓதுவார். ஒன்று சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியதற்குப் பிறகு ஒரு சூராவை ஆரம்பிப்பதற்கு முன்பு, இல்லை என்றால் அந்த சூராவை முடித்ததற்கு பிறகு சூரத்துல் இக்லாஸை ஓதிவிட்டுத் தான் அவர் ருகூவிற்கு செல்வார். மக்கள் எல்லாம் கேட்டார்கள்;இது என்ன வித்தியாசமான ஒரு அமல் செய்கிறீர்களே! இதை நீங்கள் விடுங்கள்! என்று.

அவர் கூறினார்: விருப்பம் இருந்தால் நான் இமாமத் செய்கிறேன். ஆனால், இப்படித்தான் இமாமத் செய்வேன். இல்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் என்று.

குர்ஆன் அதிகம் ஓதியவர்,அவரை விட வேறு யாருமில்லை. மக்களுக்கு வேறு வழியில்லை. அவரைத்தான் இமாமத் செய்ய வைத்தார்கள்.

அவர்கள் திரும்பி வந்த உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அவர்களிடத்தில் முறையிட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! இமாமாக நிர்ணயிக்கப்பட்டவர் இப்படி ஒரு செயலைச் செய்தார் என்று. அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தோழரை அழைத்து கேட்டார்கள்.

தோழரே! நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள்? என்று.

அதற்கு அந்த தோழர் உடைய பதில் என்ன தெரியுமா? அல்லாஹ்வுடைய தூதரே! நான் இந்த சூராவை விரும்புகிறேன். ரஹ்மானுடைய பண்புகள்,சிறப்புகள்,ஷிபத்துக்கள்  சொல்லப்பட்ட இந்த சூராவை நான் நேசிக்கிறேன் என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் உடனே பதில் சொன்னார்கள் :

«حُبُّكَ إِيَّاهَا أَدْخَلَكَ الجَنَّةَ»

 

இந்த சூராவை நீ நேசித்தது உன்னை சொர்க்கத்தில் நுழைய வைத்துவிட்டது என்று.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, பாடம் ஒரு ரக்அத்தில் இரண்டு சூராக்கள்.

அன்பு சகோதரர்களே! குர்ஆனுடைய தொடர்பு பாருங்கள். அல்லாஹ்வின் மீது உண்டான ஆசை அவருக்கு குர்ஆனை அவ்வளவு நேசித்தார்.

அதில் குறிப்பாக இந்த சூரத்துல் இக்லாஸ் மீது அவருக்கு இருந்த முஹப்பத், அதற்கு ரசூல் (ஸல்) அவர்கள் கொடுத்த சான்றிதழ்.

இது போன்று அதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்வது, அது போன்று அல்லாஹ்வுடைய மார்க்க சபைகளில் கலந்து கொள்வது.

அது போன்று ஒரு மனிதன் எந்த அளவிற்கு முடியுமோ தன்னுடைய நாவில் அதிகமாக  அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பது.

மேலும், இந்த துன்யாவுடைய சூழ்நிலைகளில், கண்டிப்பாக சில காலம் செல்வமாக இருக்கும். சில காலம் வறுமையாக இருக்கும்.

சில நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்போம். சில நேரத்தில் கவலையாக இருப்போம். எந்த நேரத்திலும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டு இருப்பது.

அல்லாஹ்வின் மீது சடைவு வாராமல், அல்லாஹ்வின் மீது அதிருப்தி வராமல் இருக்க வேண்டும். மிக முக்கியமான ஒரு அமல்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இது குறித்து கூறுகிறார்கள் :

«عِظَمُ الْجَزَاءِ مَعَ عِظَمِ الْبَلَاءِ، وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلَاهُمْ، فَمَنْ رَضِيَ فَلَهُ الرِّضَا، وَمَنْ سَخِطَ فَلَهُ السُّخْطُ»

உங்களுக்கு அல்லாஹ்விடத்தில் கூலி அதிகமாக வேண்டுமா? அது சோதனை அதிகமாகுவதோடு தான் இருக்கிறது.

ஒரு கூட்டத்தை அல்லாஹ் நேசித்தால்  அவர்களை சோதிப்பான்.யார் அல்லாஹ்வை திருப்தி கொண்டாரோ அந்த நிலையிலும் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய திருப்தி இருக்கிறது.

யார் அந்த நிலையில் அல்லாஹ்வின் மீது அதிருப்தி கொள்கிறானோ அவன் மீது அல்லாஹ்வுடைய அதிருப்தி இருக்கிறது.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னுமாஜா,எண் : 4031, தரம் : ஹசன் (அல்பானி)

அல்லாஹ் சுபஹானஹு தஆலா இந்த ஈமானை அல்லாஹ்வுடைய அன்பின் மீதும்,  அல்லாஹ்வுடைய ஆதரவின் மீதும், அல்லாஹ்வுடைய பயத்தின் மீது வைத்திருக்கிறான்.

இன்று நாம் ஈமான் என்பதை அன்பு இன்னும் பயத்திலிருந்து பிரித்து வெறும் நம்பிக்கையாக மட்டும் பார்க்கின்ற காரணத்தினால் தான் நம்முடைய அமல்கள் சடங்குகளாக மாறி கொண்டிருக்கின்றன. (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!!)

அல்லாஹ்வுடைய அருளால் நம்முடைய ஈமானை அல்லாஹ்வுடைய அன்பாலும் அச்சத்தாலும் கலப்போமாக! இந்த ஈமானில் அல்லாஹ்வுடைய அன்பையும் அச்சத்தையும் அதிகபடுத்துவோமாக!

அல்லாஹு சுபஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கும் மறுமைக்குண்டான தயாரிப்புகளை அதிகமாக செய்வதற்கும் அருள் புரிவானாக!!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ")صحيح البخاري (660 -

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ " (صحيح البخاري- 16)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/