தவக்குலும் நன்மைகளும் | Tamil Bayan - 636
بسم الله الرحمن الرحيم
தவக்குலும்நன்மைகளும்.
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்தத் தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும், சலாமும் கூறியவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, எனக்கும் உங்களுக்கும் மறுமையை மரணத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றும் படி எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து, அல்லாஹ்வை நம்பி, அவனை மட்டுமே சார்ந்து, அவன் பக்கமே திரும்பி, அவனை முன்நோக்கி, அவனை வணங்கி வழிபட்டு அவனது அன்பைப் பெற்ற நல்லோரில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக ஆமீன்.
அல்லாஹ்வுடைய அடியார்களே! ஈமானுக்கு தேவையான மிக முக்கியமான ஒரு குணம், அந்த குணம் நம்மிடத்தில் இல்லை என்றால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். ஈமான் நம்மை விட்டு போய்விடும். ஈமானுக்காக சில குணங்களை ரப்புல் ஆலமீன் வரையறுத்து நமக்கு கூறுகிறான். அந்த குணங்களின் ஒன்றுதான்.
التوكل على الله-அல்லாஹ்வை சார்ந்து இருப்பது. அல்லாஹ்வை நம்பி இருப்பது. அல்லாஹ்வின் மீது பொறுப்பை ஒப்படைத்து, நம்முடைய காரியங்களெல்லாம் அல்லாஹ்வைக் கொண்டு தான் நிறைவுபெறும். அவன் நாடாமல் எனக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அவன் நாடாமல் எந்த ஒரு தீமையும் நான் என்னை விட்டு தடுக்க முடியாது. என்னுடைய எல்லா காரியங்களையும் நான் அவனிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று முழுமையாக அல்லாஹ்வைச் சார்ந்து விடுவது. அல்லாஹ்வின் பக்கம் தனது காரியங்களை ஒப்படைத்து விடுவது. இதைத்தான் தவக்குல் என்று கூறப்படும்.
ரப்புல் ஆலமீன் கூறுகிறான்;
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருங்கள். (அல்குர்ஆன் 5 : 23)
இதற்கு இப்படி பொருள் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதாவது எதையும் நான் செய்யமாட்டேன். நான் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து இருப்பேன் என்றும், அல்லாஹ் நம் மீது கடமையாக்கிய அந்த காரணங்களை கையாளாமல் தவறான முறையில் சார்ந்து இருப்பது அல்ல.
நோயாளி மருந்தை உட்கொள்ளவேண்டும். ஷிஃபா அல்லாஹ்வைக் கொண்டு தான் என்று நம்ப வேண்டும். வியாபாரத்திற்கு செல்ல வேண்டும். அதற்கான ஹலாலான முயற்சி செய்ய வேண்டும். எனக்கு உணவளிப்பவன் அல்லாஹ். என்னுடைய அறிவால், திறமையால், நான் சம்பாதித்து விட முடியாது. அல்லாஹ் எனக்கு நாடினால் தவிர.
சகோதரர்களே! இது தவக்குல். நமக்கு வெற்றி ஆயுதங்களை கொண்டு அல்ல. எண்ணிக்கைகளை கொண்டு அல்ல. தேவையான தயாரிப்புகள் எல்லாம் இருக்க வேண்டும். ஆனால் வெற்றி அல்லாஹ்வைக் கொண்டு என்று நம்ப வேண்டும்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும். இந்த தவக்குலுடைய உணர்வை, நன்மையை, அல்லாஹ் நமக்கு தர வேண்டும்.
இன்று பெரும்பாலும் நாம் நம்மை சார்ந்து இருக்கிறோம். நம்முடைய திறமை மீதும், அறிவின் மீதும், அனுபவத்தின் மீதும், இப்படியாக நம்மை சார்ந்து நமது கையில் உள்ளதை சார்ந்து இருக்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
நம்முடைய பல குழப்பங்களுக்கு, நம்முடைய மன உளைச்சலுக்கு, நம்முடைய தடுமாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக அறிஞர்கள் இதை கூறுகிறார்கள்.
நம்மில் பலர் எப்போதும் நமது கையில் இருக்கும் செல்வம் குறைந்து விடுமோ, வியாபாரம் நலிந்து விடுமோ, நம்மை விட்டு பிரிந்து விடுமோ, என்று தடுமாறி குழம்பி பல மன உளைச்சல்களுக்கு ஆளாகி விடுவதைப் பார்க்கிறோம்.
யார் அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருக்கிறாரோ எல்லா நிலைமையிலும் அவர் அமைதியாக இருப்பார். அவரது உள்ளம் அமைதியாக இருக்கும். தவக்குலுடைய மிகப்பெரிய நற்பாக்கியம் என்னவென்றால் அவருடைய உள்ளம் அமைதியாகி விடும். அவரது உள்ளத்திலே அல்லாஹு தஆலா அப்பேற்பட்ட நிம்மதியை கொடுப்பான்.
ரப்புல் ஆலமீன் தன்னுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் முஃமின்களுக்கும் சொல்லக்கூடிய ஆறுதல்களை கவனியுங்கள்.
وَإِنْ يُرِيدُوا أَنْ يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ
(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (உங்களை பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் போதுமானவனாக இருக்கின்றான். அவன்தான் உங்களை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான். (அல்குர்ஆன் 8 : 62)
கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் உஹது போருக்கு பிறகு எதிரிகளெல்லாம் அவர்களை சூழ்ந்துகொண்டு தாக்க வருகிறார்கள் என்று அச்சுறுத்தப்பட்டார்கள். அந்த நேரத்தில் அந்த சஹாபாக்கள் கூறினார்கள்.
وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
"அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 3 : 173)
அல்லாஹ்வை முழுமையாக சார்ந்து விட்டார்கள். எந்த எதிரிகள் பெரும் கூட்டமாக திரண்டு உஹதிலே காயப்பட்ட, பலவீனப்பட்ட அந்த சஹாபாக்களை அடுத்து முற்றிலும் வேரோடு அழித்து விடுவோம் என்று அவர்கள் மீண்டும் மக்காவிற்கு சென்ற வழியில் இருந்து திரும்ப வந்தார்களோ, ஹம்ராவுல் அஸது என்ற இடத்தை அடைகிறார்கள். சஹாபாக்கள் உடைய இந்த கூற்று.
அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் எங்களை பாதுகாப்பதில் பொறுப்பு ஏற்பதில் மிகச் சிறந்தவன் என்று அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அவர்கள் புறப்படுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய அடியார்களே! சஹாபாக்களோ ஏற்கனவே பாதிக்கப்பட்டு, காயப்பட்டு, போர் செய்வதற்கான எந்த ஒரு தயாரிப்பான நிலையில் இருக்கவில்லை. ஆனால் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் ஆதரவு வைத்தார்கள். தவக்குல் இருந்தது. அல்லாஹு தஆலா மறைவிலிருந்து உதவி செய்தான்.
வந்த அந்த காபிர்களின் உள்ளத்தில் பயத்தை, திகிலை, நடுக்கத்தை போட்டுவிட்டான். கொண்டுவந்த உணவுகள், ஆயுதங்கள், அனைத்தையும் அந்த மைதானத்தில் போட்டுவிட்டு அவர்கள் வெருண்டு ஓடினார்கள். அல்லாஹ் சொல்கின்றான்;
فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ
ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (அல்குர்ஆன் 3 : 174)
எந்த காயமும் ஏற்படாமல், எந்த தீங்கும் ஏற்படாமல், அவர்கள் போர் மைதானத்திற்கு வந்து போர் பொருட்களை கனீமத்துகளை அள்ளிக் கொண்டு சென்றார்கள்.
சகோதரர்களே! இது தவக்குலுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு பிரதிபலன். இந்த உலகத்திலேயே அல்லாஹ் காட்டுவான். மறுமையில் தவக்குலுடைய நன்மையை அங்கு செல்லும் போது தான் தவக்குலை உடையவர்கள் அடைவார்கள். இந்த துன்யாவில் எப்படிப்பட்ட நன்மையை அவர்களுக்கு காட்டினான்.
போர் செய்து, பல மணி நேரம் யுத்தம் செய்து, எத்தனை இழப்புகள் ஏற்படுமோ அல்லாஹு தஆலா அந்த எல்லா இழப்புகளையும் பாதுகாத்தான். அல்லாஹ்வின் மீதுள்ள தவக்குல் காரணமாக இதே நிலையை ரப்புல் ஆலமீன் அஹ்ஸாப் போரிலும் சொல்லிக்காட்டுகிறான்.
وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا
நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்ட பொழுது "(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்" என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. (அல்குர்ஆன் 33 : 22)
ஆயிரக்கணக்கான எதிரிகள், பல மாதங்கள் முற்றுகையிடுவதற்கு தேவையான தயாரிப்போடு அஹலுக்கு அந்தப்பக்கம் வந்துவிட்டார்கள். சஹாபாக்கள் அந்த நேரத்தில் அல்லாஹ்வின் மீது எப்படி நம்பிக்கை வைத்தார்கள்? அதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
அவ்வளவு ஆபத்துகளையும், எதிர்ப்புகளையும், குழப்பங்களையும், எதிரிகளுடைய தாக்குதல்களையும் பார்த்தும் கூட, அந்த சஹாபாக்களுக்கு அச்சம் வரவில்லை; அவநம்பிக்கை வரவில்லை; மனக்குழப்பம் வரவில்லை. அல்லாஹ் கை விட்டு விடுவானோ! என்ன ஆகுமோ நமது நிலைமை! என்ற பயம் வரவில்லை. மாறாக அவர்களது உள்ளத்தில் நிம்மதி ஏற்பட்டது.
அவர்கள் சொன்னார்கள்;
அல்லாஹ் சொல்வது உண்மையாக நிகழும். அல்லாஹ்வுடைய தூதர் சொல்வது உண்மையாக நிகழும். அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் வாக்கின் மீதும், அவர்களுக்கு நம்பிக்கை அதிகமானது.
அல்லாஹ்வுடைய கட்டளைக்கு இன்னும் நாங்கள் கட்டுப்படுவோம். அல்லாஹ்வுடைய தூதருடைய கட்டளைக்கு இன்னும் நாங்கள் கட்டுப்படுவோம் என்று அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்தார்கள். அல்லாஹ் சொல்கிறான்,
وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ
இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே காத்துக் கொண்டான். (அல்குர்ஆன் 33 : 25)
பயங்கரமான முறையில் நடக்க இருந்த போரிலிருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அவர்களின் தவக்குலின் பொருட்டால்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த தவக்குலை கொண்டுதான் அல்லாஹ்வுடைய முஹப்பத்தை நாம் அடையமுடியும். அல்லாஹ்வுடைய அன்பை அடைவதற்கு என்று அல்லாஹ் சில குணங்களை வைத்திருக்கின்றான்.
நம்முடைய தொழுகை, நம்முடைய நோன்பு, நம்முடைய ஜக்காத், இதற்கெல்லாம் ஒரு நன்மை இருக்கிறது. இதற்கு மேலாக அல்லாஹ்விற்கும், நமக்கும் உண்டான விசேஷமான நெருக்கம் என்று ஒன்று இருக்கிறது.
அல்லாஹு தஆலா தொழுகைக்கு சொர்க்கத்தை வாக்களிக்கின்றான். நோன்பிற்கு சொர்க்கத்தை வாக்களிக்கின்றான். சதகாவிற்கு, ஜகாத்திற்கு, ஹஜ்ஜிற்கு என்று நன்மைகளை வாக்களித்து கொண்டே இருக்கின்றான்.
ஈமானுக்கென்று சில குணங்கள் இருக்கின்றன. ஈமானுக்கென்று சில பண்புகள் இருக்கின்றன. அந்த பண்புகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வாக்கு கொடுக்கும் போது, தன் புறத்திலிருந்து நேரடியாக தன்னுடைய ஸிஃபத்தோடு சம்பந்தப்பட்டதை அல்லாஹ் வாக்காக கொடுக்கின்றான். உதாரணமாக,
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2 : 153)
அல்லாஹ்வுடைய அந்த விசேஷமானது, அந்த பொறுமையாளர்களுக்கு, பொறுமை உள்ளவர்களுக்கு, தடுமாற்றம் இல்லாதவருக்குத்தான்.
அது போன்று அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள். அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வுடைய முஹப்பத் எனக்கு கிடைக்கவேண்டும். சாதாரண விஷயமா இது?
ஒவ்வொரு நபியும் இந்த அன்புக்காக எவ்வளவு அல்லாஹ்விடத்தில் ஏங்கினார்கள். அல்லாஹு தஆலா இந்த அன்பை கொடுப்பதில் கஞ்சன் அல்ல. அவன் மிக விசாலமானவன். தன்னுடைய அன்பை தன்னுடைய அடியாருக்கு கொடுப்பதிலே அவன் மிகப் பெரிய கொடை வள்ளல். ஆனால் அதற்கு ரப்புல் ஆலமீன் எதிர்பார்ப்பது, அடியார்களிடத்தில் கேட்பது என்ன? சில ஸிஃபத்துக்களை கேட்கிறான். ரப்புல் ஆலமீன் கூறுகிறான்,
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 159)
யார் அல்லாஹ்வைச் சார்ந்து விட்டார்களோ, தங்களது காரியங்களை அல்லாஹ்விடத்தில் ஒப்படைத்து விட்டார்களோ, முயற்சிகளை செய்வார்கள். ஆனால் ஒரு துளி கூட என்னுடைய முயற்சியால் நடந்தது என்று நம்ப மாட்டார்கள். முயற்சி நூற்றுக்கு நூறு செய்வார்கள். அதில் எந்த குறையும் செய்ய மாட்டார்கள். அவர்களது அறிவு, அனுபவம் திறமை அனைத்தையும் செலவழிப்பார்கள். ஆனால் அவர்களது நம்பிக்கை அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்கும்.
இன்று நம்முடைய பலவீனம் எப்படி தெரியுமா? ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் நான் அதை செய்தால் நடந்திருக்கும். நான் அதை மட்டும் விட்டு விட்டேன். நடக்காமல் போய்விட்டது என்றும், ஒரு காரியம் நடந்து விட்டது என்றால் எல்லாத்தையும் சரியாக செய்தேன் நடந்து விட்டது என்பார்கள்.
இதற்கு என்ன பொருள்? நமக்கு தவக்குல் இல்லை என்று பொருள். நம்மிடத்தில் தவக்குல் இருக்குமேயானால் கிடைக்காத போதும், அல்லாஹ் நாடவில்லை எனக்கு கிடைக்கவில்லை என்றும், முயற்சிகள் எல்லாம் முழுமையாக இருந்தும் அல்லாஹ் நாடவில்லை எனக்கு கிடைக்கவில்லை. முயற்சிகள் அனைத்தும் இருந்தன கிடைத்தன. ஆனால் என்னுடைய முயற்சியால் கிடைக்கவில்லை. அல்லாஹ் நாடினான் கிடைத்தது என்பார்கள்.
சிறிய உதாரணம், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டினார்கள். மக்கா வெற்றியில் அவர்கள் ஓதிய துஆ உம்ரா செய்யக்கூடிய ஹஜ் செய்யக் கூடிய ஒவ்வொருவருக்கும், அல்லாஹு தஆலா அதை சுன்னத்தான ஒரு துஆவாக ஆக்கிவிட்டான். ஸஃபா மலை மீது ஓதுவது,
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ
மக்கா வெற்றிக்கு வருகிறார்கள். காஃபிர்கள் எல்லாம் பயந்து ஓடுகிறார்கள். கதவுகளை பூட்டிக் கொள்கிறார்கள். பாதுகாப்பு தேடி அலைகிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் மன்னிப்பை பொதுவாக்கி விட்டார்கள்.
பணிந்தவர்களாக வந்தார்கள். ஸஃபா மலையில் நின்று கொண்டு சொன்னார்கள்; வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனுக்கு இணை இல்லை. துணை இல்லை. எல்லா புகழும் அவனுக்கே உரித்தானது. நன்மைகள் அவனது கையில் இருக்கிறது. அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அவனே சகல வஸ்துக்கள் மீதும் ஆற்றலுடையவன். நமக்கு எந்த ஆற்றலும் இல்லை. அல்லாஹ் நாடாமல்.
பிறகு சொன்னார்கள்; வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. அவன் தான் எனக்கு இந்த வாக்கை நிறைவேற்றி கொடுத்தான். அவனது அடிமையாகிய எனக்கு அவன் தான் உதவி செய்தான். இந்த அரபு குலத்து இராணுவங்களை எல்லாம் அவன்தான் தோற்கடித்தான்.
அறிவிப்பாளர்: ஜஃபர் இப்னு முஹம்மத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் எண்: 1218
எட்டு ஆண்டுகளாக தொடர் போர்களை சந்தித்த பிறகு எப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைத்தது. ஒரு துளியாவது தன்னுடைய பொறுமையை நினைத்தோ, உறுதியை நினைத்தோ, தன்னுடைய வீரத்தை நினைத்தோ, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களோ, சஹாபாக்களோ பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. அப்படி பெருமைப்பட்டுக் கொள்ள அல்லாஹ்வுடைய தூதர் அழுத்தம் திருத்தமாக தங்களுக்கு கூறுவது மூலமாக தங்களது தோழர்களுக்கு நினைவூட்டினார்கள்.
அல்லாஹ்வுடைய அடியார்களே! இது தான் தவக்குல். எல்லா நிலையிலும் அல்லாஹ்வை முற்றிலுமாக சார்ந்திருப்பது. இந்த தவக்குல் உள்ளவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3 : 159)
தவக்குலிலே இன்னொரு விதமான போலி தவக்குல் உள்ளது. காரியம் நடந்து விட்டால் அல்லாஹ்வைப் புகழ்வது. காரியம் நடக்கவில்லை என்றால் அல்லாஹ்வை இகழ்வது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இப்படி செய்திருந்தால் எனக்கு நடந்திருக்கும். இப்படி செய்ததால் எனக்கு நடந்திருக்கும் என்று. தன்னை புகழ்வது அல்லது தன்னுடைய முயற்சியை புகழ்வது. இது தவக்குல் அல்ல. அல்லாஹ்வை இறுதியிலே முற்றிலுமாக புகழ்வது. அல்லாஹ்வுடைய முடிவை ஏற்றுக் கொள்வது.
கண்ணியத்திற்குரிய நல்லடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த தவக்குல் உடையவர்களுக்கு ரிஸ்குடைய பொறுப்பை அவன் எடுத்து இருக்கின்றான். அவரது ரிஸ்கை -வாழ்வாதாரத்தை அல்லாஹ் இலேசாக்கி கொடுத்துள்ளான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கூடிய ஹதீஸ்,
قَالَ: سَمِعْتُ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَوْ أَنَّكُمْ تَوَكَّلْتُمْ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ، لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ، تَغْدُو خِمَاصًا، وَتَرُوحُ بِطَانًا سنن ابن ماجه 4164 - »حكم الألباني]صحيح
நீங்கள் முற்றிலுமாக அல்லாஹ்வைச் சார்ந்து விட்டால், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அவன் உங்களுக்கு உணவளிப்பான். அந்தப் பறவைகள் காலி வயிறாக காலையில் பறந்து செல்கின்றன. மாலையில் வயிறு நிரம்பியதாக உணவை உண்டு வருகின்றன.
அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா, எண்: 4164
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக அழகான உதாரணத்தை நுட்பத்தோடு சொன்னார்கள்.
தவக்குலின் பெயரால் வீட்டில் அமர்ந்து கொள்வதல்ல. பறவையை உதாரணம் சொன்னார்கள். காலையில் எதுவும் இல்லாமல் பறந்து செல்கின்றன. அல்லாஹ்வை நம்பித்தான் உணவைத் தேடி பறந்து செல்கின்றன.
அல்லாஹ் தஆலா அதற்குரிய ரிஸ்கை கொடுக்கின்றான். அலைகின்றன, திரிகின்றன. திரும்பி வரும்போது பசியாறி வருகின்றன.
அதுபோன்றுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தவர்களாக நீங்கள் முயற்சி செய்வீர்கள். ஆனால் கண்டிப்பாக உங்களது முயற்சியை அல்லாஹ் தஆலா நன்மை உள்ளதாக பலனுள்ளதாக ஆக்கி கொடுப்பான்.
இன்று இல்லை என்றாலும் நாளை உங்களுடைய முயற்சிக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பறவைக்கு உணவளிப்பது போன்று கண்டிப்பாக உங்களுக்கும் ரிஸ்கை கொடுத்திருப்பான்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்;
هُمُ الَّذِينَ لاَ يَتَطَيَّرُونَ، وَلاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَكْتَوُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
இந்தத் தவக்குலுடைய நன்மைகளை, நாளை மறுமையில் சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு கூட்டம் என்று 70 ஆயிரம் மக்களை நாளை மறுமையில் ரப்புல் ஆலமீன் எந்த விதமான கேள்வி கணக்கும் இன்றி அனுப்புவான். அவர்களுக்கு எந்த சிரமமும் அங்கே இருக்காது. அவர்கள் யார் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்ட போது, அவர்கள் தங்களுடைய ரப்பின் மீது முழுமையாக சார்ந்திருப்பார்கள். எல்லா காரியங்களிலும் அவனையே அவர்கள் நம்பி இருப்பார்கள். (1)
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5752
அல்லாஹ்வுடைய அடியார்களே! இப்படி தவக்குலை பற்றி குர்ஆன் நமக்கு வலியுறுத்துகிறது. அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு காரியத்திலும் இந்தத் தவக்குல் நமக்கு இருக்க வேண்டும். காலையில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றாலும் கூட,
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ
எந்த காரியத்தை செய்தாலும், அல்லாஹ் இந்த காரியத்தை உன்னை நம்பி செய்கிறேன். எனக்கு நீ உதவி செய்வாயாக. (2)
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத், எண்: 5095
சிறிய காரியம், பெரிய காரியம், காரணங்கள் எல்லாம் ஒன்றுகூடி இருந்தாலும் சரி, காரணமே இல்லாமல் இருந்தாலும் சரி, அல்லாஹ் நீ நாடி தான் கிடைக்கும் என்று அல்லாஹ்வை சார்ந்திருப்பது.
அல்லாஹ்வுடைய அடியார்களே! இதற்கு அல்லாஹ் கொடுக்கக் கூடிய வெகுமதி என்ன? நம்முடைய ஈமானை நிறைவாக்கி தருகிறான். நம்முடைய கல்பிலே விசாலத்தை அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு கொடுக்கிறான். நம்முடைய வாழ்வாதாரத்தை அல்லாஹ் லேசாக்கி தருகிறான்.
நாளை மறுமையில் மஹ்ஷரின் அமளிகளில் இருந்து பாதுகாத்து, கேள்வி கணக்கில்லாமல் நம்மை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.
அல்லாஹு தஆலா அத்தகைய உயர்ந்த தவக்குலை எனக்கும், உங்களுக்கும் தந்தருள்வானாக! அவநம்பிக்கையில் இருந்தும், நயவஞ்சகத்திலிருந்தும், ஈமானிலே ஏற்படக்கூடிய தடுமாற்றங்கள், குழப்பங்கள், சந்தேகத்தில் இருந்தும் என்னையும், உங்களையும், நம்முடைய முஸ்லிமான சகோதர, சகோதரிகளையும் பாதுகாப்பானாக! காத்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1).
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ: " عُرِضَتْ عَلَيَّ الأُمَمُ، فَجَعَلَ يَمُرُّ النَّبِيُّ مَعَهُ الرَّجُلُ، وَالنَّبِيُّ مَعَهُ الرَّجُلاَنِ، وَالنَّبِيُّ مَعَهُ الرَّهْطُ، وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ، وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الأُفُقَ، فَرَجَوْتُ أَنْ تَكُونَ أُمَّتِي، فَقِيلَ: هَذَا مُوسَى وَقَوْمُهُ، ثُمَّ قِيلَ لِي: انْظُرْ، فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الأُفُقَ، فَقِيلَ لِي: انْظُرْ هَكَذَا وَهَكَذَا، فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الأُفُقَ، فَقِيلَ: هَؤُلاَءِ أُمَّتُكَ، وَمَعَ هَؤُلاَءِ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ " فَتَفَرَّقَ النَّاسُ وَلَمْ يُبَيَّنْ لَهُمْ، فَتَذَاكَرَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: أَمَّا نَحْنُ فَوُلِدْنَا فِي الشِّرْكِ، وَلَكِنَّا آمَنَّا بِاللَّهِ وَرَسُولِهِ، وَلَكِنْ هَؤُلاَءِ هُمْ أَبْنَاؤُنَا، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هُمُ الَّذِينَ لاَ يَتَطَيَّرُونَ، وَلاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَكْتَوُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ» فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ: أَمِنْهُمْ [ص:135] أَنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ» فَقَامَ آخَرُ فَقَالَ: أَمِنْهُمْ أَنَا؟ فَقَالَ: «سَبَقَكَ بِهَا عُكَاشَةُ» (صحيح البخاري 5752 -)
குறிப்பு 2).
سنن أبي داود (4/ 325)
5095 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْخَثْعَمِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ فَقَالَ بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، قَالَ: يُقَالُ حِينَئِذٍ: هُدِيتَ، وَكُفِيتَ، وَوُقِيتَ، فَتَتَنَحَّى لَهُ الشَّيَاطِينُ، فَيَقُولُ لَهُ شَيْطَانٌ آخَرُ: كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ هُدِيَ وَكُفِيَ وَوُقِيَ؟ "
[حكم الألباني] : صحيح