HOME      Khutba      ரமழானை எப்படி கழித்தோம்! | Tamil Bayan - 580   
 

ரமழானை எப்படி கழித்தோம்! | Tamil Bayan - 580

           

ரமழானை எப்படி கழித்தோம்! | Tamil Bayan - 580


ரமழானை எப்படி கழித்தோம்!

ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழானை எப்படி கழித்தோம்!

வரிசை : 580

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 31-05-2019 | 26-09-1440

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து வாழுமாறு, தக்வாவின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு,  இறையச்சத்தை நினைவில் வைத்து அல்லாஹ்வுடைய சட்டங்களை பேணி வாழுமாறு, ரசூலுல்லாஹி அவர்கள் நமக்கு உபதேசித்ததை போன்று அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபியின் சுன்னாவையும் பற்றிப் பிடித்து வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம் அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பானாக! இந்த ரமலானில் நாம் செய்த சிறிய சிறிய அமல்களை அல்லாஹு தஆலா ஏற்று அருள் புரிவானாக! எஞ்சி இருக்கக்கூடிய இந்த சில நாட்களில் அல்லாஹ்வை வணங்குவதற்கும் தவ்பா செய்வதற்கும்,இன்னும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடித் தரக்கூடிய சிறிய பெரிய ஒவ்வொரு அமலையும் செய்வதற்கும் அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் முஃமினான முஸ்லிமான ஒவ்வொருவருக்கும் அருள் புரிவானாக! என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

நாம் எத்தனையோ பல விஷயங்களை பல காரியங்களை எதிர்பார்க்கிறோம். நாம் எதிர்பார்க்க கூடிய விஷயங்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வுடைய இபாதத் -வணக்க வழிபாடு ஆகும்.

சிலர், திருமணத்தை எதிர்பார்த்திருக்கலாம். சிலர், தனக்கு வெளி நாட்டிற்கு விசா வரும் என்று எதிர்பார்க்கலாம். சிலர், தன்னுடைய படிப்பு முடிந்து பட்டம் பெறுவதை எதிர்பார்த்திருக்கலாம். சிலர் தன்னுடைய வேலைக்கான கடிதம் தனக்கு வரும் என்று எதிர்பார்த்து இருக்கலாம்.

இப்படி உலகத்தில் மகிழ்ச்சியை தரக்கூடிய முன்னேற்றத்தைத் தரக்கூடிய எத்தனையோ பல நல்ல காரியங்களை நல்ல செய்திகளை மனிதன் எதிர்பார்த்து இருக்கலாம்.

ஆனால்,அந்த எதிர்பார்ப்பு எல்லாம் இந்த உலகத்தோடு முடிந்து விடக் கூடியவை. அந்த எதிர்பார்ப்பில் நமக்கு வெற்றியா?நன்மையா? என்பதை அல்லாஹ் தான் அறிந்தவன்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 2: 216 ).

நாளையின் அறிவு அல்லாஹ்வுக்கு மட்டும் தான்.

மேலும் அல்லாஹு தஆலா கூறுகிறான் :

وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் (இவற்றை) நன்கறிந்தவனும் தெரிந்தவனும் ஆவான். (அல்குர்ஆன் 31:34 )

ஆகவே, நம்முடைய எதிர்பார்ப்புகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வுடைய இபாதத்.

ஆகவேதான் ரசூலுல்லாஹி அவர்கள் அழகாக நமக்கு ஆர்வமூட்டினார்கள்.

உங்கள் பாவங்களை அழித்து விடக்கூடிய, உங்களுக்கு நன்மைகளை பெருக்கி தரக்கூடிய காரியங்களை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?

என்று கேட்டு விட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

பள்ளிக்கு அதிகமான எட்டுகள் நடந்து செல்வது. ஒரு தொழுகைக்குப் பிறகு இன்னொரு தொழுகையை எதிர்பார்த்திருப்பது. (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 251.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு ஊட்டிய ஆர்வத்தை பாருங்கள்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ

எந்த மனிதனுடைய உள்ளம் எப்போதும் பள்ளியுடன் தொடர்பில் இருக்கிறதோ அர்ஷில் இருக்கின்ற ஏழு வகையான மக்களில் அவரும் ஒருவர். (2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.

எதிர்பார்ப்பிலேயே சிறந்த எதிர்பார்ப்பு இபாதத்தை எதிர்பார்ப்பது. அல்லாஹ்வை வணங்கக்கூடிய வணக்கத்தின் நேரத்தை எதிர்பார்த்திருப்பது.

ஒருவர் ஹஜ்ஜுக்காக முடிவு செய்து ஹஜ்ஜுக்கான வசதியை அதற்கான நாளை எதிர்பார்த்திருக்கிறார். இது சிறந்த எதிர்பார்ப்பு.

அதுபோன்று தான் ரமலானை நாம் எதிர்பார்த்து இருந்ததும் நம்முடைய எதிர்பார்ப்புகளில் சிறந்த எதிர்பார்ப்பாக இருந்தது.

அல்லாஹ்வுடைய குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். நம்முடைய உள்ளத்தின் அழுக்குகளை கழுவுவதற்கு உண்டான மாதம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய மாதம். விருப்பத்தோடு அதிகமான அமல்களை செய்வதற்கு வாய்ப்பாக அல்லாஹ் கொடுத்த மாதம்.

அந்த மாதத்தை எதிர்பார்த்து இருந்தோம். அந்த மாதத்தையும் அல்லாஹு தஆலா நம்மில் பலருக்கு கிடைக்கச் செய்தான்.

இது போன்று எதிர்பார்த்து இருந்தவர்களில் பலர், இந்த ரமலானை அடைவதற்கு முன்பே இறந்து விட்ட செய்திகளை நாம் கேட்கத்தான் செய்கிறோம்.

இந்த ரமலான் கிடைத்ததற்காக நாம் அல்லாஹ்விற்கு உரிய முறையில் நன்றி செலுத்தினோமா? இந்த ரமலானில் உரிய முறையில் நோன்பை பேணி வணக்க வழிபாடுகளில்,திக்ரில், திலாவத்தில் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பதில்,  முனாஜாத்தில், நன்மைகளை செய்வதில் நாம் ஈடுபட்டோமா?

என்று சுயபரிசோதனைக்கான சில நாட்கள் நமக்கு எஞ்சியிருக்கின்றன.

அல்லாஹு தஆலா அவனுடைய வேதம் அல்குர்ஆனில் மூன்று வகையான மக்களை குறிப்பிடுகின்றான்.

ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ

பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும். (அல்குர்ஆன் 35:32)

வசனத்தின் கருத்து : ஒரு மக்கள் அநியாயக்காரர்கள். அவர்கள் எப்போதும் பாவத்தை தான் அதிகரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், நன்மை மிக குறைவாக இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு கூட்டமும் இந்த ரமழானில் இருந்தார்கள். நோன்பை பேணவில்லை. ஃபர்லான நோன்பை வீணாக்கினார்கள். தேவையில்லாத  காரியங்களில் நேரங்களைக் கழித்தார்கள்.

குர்ஆன் ஓதுவதில் ஈடுபாடு கொள்ளவில்லை. தொழுகையில் பேணுதல் இல்லை. இப்படியாக தங்களுடைய அமல்களை விட்டது மட்டுமல்ல பாவங்களையும் சேர்த்துக் கொண்டார்கள். இவர் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டார்.

இரண்டாவது ஒரு கூட்டம், அவர்கள் நன்மை செய்தார்கள். ஆனால் ஒரு இறை அடியான் மறுமையை தேடக்கூடியவன் எந்த அளவு செய்ய வேண்டுமோ அந்த அளவு செய்யவில்லை. ஏதோ சில அமல்களை செய்தார்கள். பிறகு நேரங்களை அவர்கள் எப்படிப் பேண  வேண்டுமோ அப்படி பேணாமல் நேரங்களை வீணடித்து விட்டார்கள்.

இவர்கள் அமல்களில் முந்தவில்லை. நோன்பு நோற்றார்கள். தொழுகைகளைத் தொழுதார்கள். ஆனால் இந்த ரமலானுக்காக எவ்வளவு விசேஷமாக பிரயாசை எடுக்க வேண்டுமோ சிரமப்பட வேண்டுமோ அந்த சிரமத்தை இவர்கள் மேற்கொள்ளவில்லை.

மூன்றாவது ஒரு கூட்டத்தை அல்லாஹ் கூறுகிறான் :

அவர்கள் நன்மையில் முந்தக்கூடியவர்கள். நன்மையில் போட்டி போடக் கூடியவர்கள். (அல்குர்ஆன் 35:32)

இந்த மூன்றாவது உயர்ந்த கூட்டத்தில் நாம் இருக்கின்றோமா என்று நாம் பரிசோதிக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறோம்.

இவர்கள் பிறருடைய செல்வத்தை வசதியை பார்க்க மாட்டார்கள். பிறருடைய அமலைப் பார்ப்பார்கள். அவரை விட அதிகமாக நான் அமல் செய்ய வேண்டும்.

தன்னை விட அதிகமாக அமல் செய்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பார்கள்,உணர்வார்கள். அவர்களைப் போன்று தானும் ஆக வேண்டும் என்று அந்த நல்லவர்களின் அமல்களோடு அவர்கள் போட்டி போடுவார்கள்.

அபுமுஸ்லிம் அல்ஹவ்லானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தாங்கள் போட்டி போடுவதற்கு ஸஹாபாக்களை உதாரணமாக எடுத்து கொள்வார்கள்.

அவர்கள் கூறுவார்கள் : சஹாபாக்கள் தோழமையில் நபியோடு நட்பாக இருந்ததில் எங்களை முந்தி விட்டார்கள். அமல்களிலும் எங்களை முந்தி விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா?

இல்லை. நாங்கள் அவர்களோடு போட்டி போடுவோம். நாங்கள் நன்மையின் விஷயங்களில் அவர்களோடு போட்டி போடுவோம்.

நாளை அவர்கள் மறுமையில் எங்களைக் கண்டால் அமல்களில் வீரமாக இருந்த,அமல்களில் தீவிரமாக இருந்த, அமல்களில் கடினமாக முயற்சி செய்த ஒரு நல்ல கூட்டத்தை தான் நாம் விட்டு வந்தோம் என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

இன்று நாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலுக்கு நேர்மாற்றமாக செயல்படுகிறோம்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துன்யாவுடைய விஷயத்தில் உங்களுக்கு கீழ் உள்ளவர்களை பாருங்கள்.

அப்போதுதான் அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருளை நீங்கள் குறைவாக மதிக்க மாட்டீர்கள் என்று சொன்னார்கள்.

மேலும் கூறினார்கள் : மறுமை விஷயத்தில் உங்களுக்கு மேல் உள்ளவர்களை நீங்கள் பாருங்கள். உங்களை விட அதிகமாக அமல் செய்பவர்களை,உங்களை விட அதிகமாக பேணுதல் உள்ளவர்களை,உங்களை விட அதிகமாக தக்வா உள்ளவர்களை பாருங்கள்.

அது உங்களுக்கு மறுமையின் ஆசையை கொடுக்கும். அது உங்களுக்கு அல்லாஹ்வின் அன்பை தேடி கொடுக்கும் என்று சொன்னார்கள்.(3)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 10246

துன்யாவுடைய விஷயத்தில் நம்மைவிட பெரிய செல்வந்தரை பார்த்து அவரை முந்துவதற்கு போட்டி போட்டு கொண்டு இருக்கிறோம்.

ரசூல் அவர்களுடைய வழிகாட்டுதலை அப்படியே தலைகீழாக்கி கொண்டோம். எப்போதுமே செல்வத்தில் அதிகமாக உள்ளவர்களை பார்த்து அல்லாஹ் நமக்கு கொடுத்ததை குறைவாகவே மதிப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். (அல்லாஹ் மன்னிப்பானாக!!, பாதுகாப்பானாக!!)

அன்பு சகோதரர்களே! இது தான் இந்த ரமலான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு விட்டன முந்துங்கள். நன்மையின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன முந்துங்கள்.

பாவத்தின் கதவுகள், நரகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன என்று கூறினார்கள். (4)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 1632, முஸ்னது அஹமத்,எண் : 18795, திர்மிதி எண் : 682.

அந்த ரமலானை எதிர்பார்த்தோம். அந்த ரமலான் வந்தது. இப்போது பிரிய போகிறது. இனி இன்னும் சில தினங்களில் நீங்கள் ஒரு கோடி ரூபாய் செலவு செய்தாலும் கூட மஸ்ஜிதில் கியாமுல் லைல் இருக்காது. நீங்கள் ஒரு கோடி ரூபாய் செலவு செய்தால் கூட இந்த ரமலானுடைய நோன்பு கிடைக்காது. அடுத்த ரமலான் வந்தால் தான்.

இந்த மாதத்தில் செய்யப்படுகின்ற தர்மம் ஒவ்வொன்றுக்கும் பன்மடங்காக அல்லாஹு தஆலா இரட்டிப்பாக்கி கொடுக்கின்றான்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எவ்வளவு ஏழ்மையில் வறுமையில் இருந்தார்கள். அவர்களுடைய தர்மத்தை பாருங்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமாஅவர்கள் கூறுகிறார்கள் :

كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ

 

ரமலானுடைய மாதம் வந்து விட்டால், தன்னிடத்தில் இருக்கக்கூடிய செல்வத்தை தர்மம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். விரைவாக வீசக்கூடிய புயல் காற்றை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தர்மத்தின் வேகம் அதிகமாக இருக்கும்.(5)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹு அன்ஹுமா, நூல் : புகாரி, எண் : 6, 1769, 2981.

அல்லாஹு தஆலாவின் புறத்திலிருந்து எது தன்னிடத்தில் செல்லம் கிடைக்கபட்டதோ அதை உடனே ஏழைகளோடு பகிர்ந்து கொள்வார்கள். அந்த செல்வத்தை ரமலானுக்கு பிறகு தனக்கு வேண்டுமே என்று அவர்கள் தக்க வைத்துக் கொள்ளவில்லை. அந்த அளவு தன்னுடைய வறுமையிலும் அவர்கள் பிறருக்கு தர்மம் செய்கின்றவர்களாக இருந்தார்கள்.

நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரமலான் முடியப் போகிறது.

என்னுடைய உறவுகளில் எத்தனை உறவுகளுக்கு நான் கொடுத்தேன்? என்னுடைய தேவையுள்ள நண்பர்களில் எத்தனை நண்பர்களுடைய தேவைகளை நான் நிறைவேற்றினேன்? என்னுடைய உறவுகளில் உள்ள ஏழைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நான் என்ன செய்தேன்?

அல்லாஹ் எனக்கு நிறைவாக கொடுத்தானே! என்னுடைய தேவையை அல்லாஹ் நிறைவேற்றினானே! பிறருடைய தேவைக்கு நான் என்ன செய்தேன்?

என்று எஞ்சிய சில நாட்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

குறிப்பாக இந்த ரமழானுடைய மாதம் ஒவ்வொரு அமலையும் நாம் எடுத்துப் பார்க்க வேண்டும். பர்லான தொழுகையிலிருந்து,குர்ஆன் ஓதுவதிலிருந்து,இரவு தொழுகையிலிருந்து, தர்மத்திலிருந்து இப்படி ஒவ்வொரு அமலையும் எடுத்து நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

தொடக்கத்தை வீணடித்து இருந்தாலும் கூட முடிவை அழகாக்கி கொண்டால், இறுதி நாட்களை அழகாக்கி கொண்டால், அல்லாஹு தஆலா முந்திய நாட்களையும் அவனுடைய அருளால் மன்னித்து ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹு தஆலா ஒரு மனிதனுடைய முடிவைப் பார்க்கிறான்.

தவறிய அந்த நேரங்களுக்காக,அமல்களுக்காகநம்முடைய உள்ளத்தில் வருத்தம் ஏற்படுமேயானால் உண்மையிலேயே உணர்ந்து கைசேதப் படுவோமேயானால், யாஅல்லாஹ்! என்னை மன்னித்து விடு, நான் தவறிழைத்து விட்டேன், நிறைய நேரங்களை வீணடித்து விட்டேன் என்று உள்ளம் உருகி அல்லாஹ்விடத்தில்  மன்னிப்புத் தேடி எஞ்சிய நேரங்களை அவன் பேணிக் கொள்வானேயானால் அவன் மிகப் பெரிய வெற்றி அடைந்து விடுவான்.

நம்முடைய முன்னோர்களின் அமல்களைப் பாருங்கள். இந்த ரமலானில் எத்தனை முறை குர்ஆனை அவர்கள் ஓதி முடித்தார்கள். தொழுகைக்கு வெளியில் அவர்கள் ஓதியது எத்தனை முறை?!பிறகு தொழுகையில் அவர்கள் ஓதியது எத்தனை முறை?!பிறகு நஃபிலான தொழுகைகள், பிறகு தான தர்மங்கள் என்று அந்த முன்னோர்களின் அமல்களோடு நம்முடைய அமலைப் பார்த்தோமேயானால்  அவர்களுடைய அமல் எங்கே? நம்முடைய அமல் எங்கே?

இன்று இந்த ரமலானை, ஒரு கூட்டம் வியாபாரத்திற்கு உண்டான சீசனாக, சுற்றுவதற்கு உண்டான சீசனாக, வகை வகையான உணவுகளை உண்பதற்கு உண்டான சீசனாக, இன்னும் புத்தாடைகளை அணிவதற்கு உண்டான சீசனாக,இப்படியாக இந்த ரமலானையும் நப்சுக்கு உண்டான சீசனாக ஆக்கிக் கொண்ட பலர் தான் இன்று இந்த உம்மத்தில் இருக்கிறார்கள்.

மற்ற மாதங்களை நப்சுக்காக எப்படி கழித்தார்களோ, இந்த ரமலானில் அந்தத் தேவையை அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டார்கள். நப்சுடைய தேவையை அதிகப்படுத்திக் கொண்டு நப்சுடைய சுகத்திற்குப் பின்னால் தான் இருந்தார்கள்.

எதுவாக இருந்தாலும் சரி, அதில் வலி தெரிந்து விடக் கூடாது. கஷ்டம் தெரிந்து விடக் கூடாது. பகலில் நோன்பு வைத்து விட்டு தூக்கம். இரவில் கியாமுல் லைல் என்ற பெயரில் சில இபாதத்களைச் செய்து விட்டு, ஏதாவது ஒரு பயான் ஒன்றை கேட்டு விட்டால் அவ்வளவுதான், அதற்கு  பிறகு ஸஹருக்கு ரெடி ஆகிவிடுவார்கள்.

அன்பு சகோதரர்களே! இந்த ராமலனையும் நப்சுக்காக ஆக்கி கொண்டு, செய்யாத அமல்களைக் கொண்டும், இல்லாத தன்மைகளைக் கொண்டும் புகழைத் தேடிக் கொண்டு நம்மில் ஒரு கூட்டம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ் நம்மை அந்த கூட்டத்தில் ஆக்காமல் இருக்க வேண்டும்.

நம்முடைய முன்னோர்களைப் பாருங்கள். அந்த சிறப்பிற்குரிய சான்றோர்களைப் பாருங்கள்.

கலிஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய காலத்தில் ஆண்களுக்கு தொழுகை நடத்துவதற்கு உபை இப்னு கஃபை உமர் அவர்கள் நியமித்தார்கள். பெண்களுடைய கூட்டம் பெரிய கூட்டம், எனவே மஸ்ஜிதில் ஒதுங்குமிடத்தில் அவர்களுக்காக தமீமுத்தாரி ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை தனியாக இமாமாக நியமித்து அவர்களுக்கு தொழுகை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.

இந்த இருவரும் தொழுகையை ஆரம்பித்தால் ஓதுவார்கள், ஓதிக்கொண்டே இருப்பார்கள்.

அந்த காலத்தில் என்ன மைக் இருந்தது? என்ன ஸ்பீக்கர் இருந்தது? அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு என்ன கேட்டிருக்கும்!

அப்படியே நின்று கொண்டிருப்பார்கள். தொழுகை முடிந்து அவர்கள் ஸஹர்  செய்வதற்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்றால், சுபுஹ் உடைய அதானுக்கு முன்பாக 40அல்லது 50 ஆயத்துக்கள் ஓதக் கூடிய அளவுக்குத் தான் அவர்களுக்கு ஸஹருடைய நேரம் கிடைக்கும்.

பலர், இன்று நமக்கு ஸஹர் கிடைக்காது என்று பயந்து விடுவார்கள். (5)

அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மது, எண் : 12739.

அன்பு சகோதரர்களே! அத்தகைய உயர்ந்த நன்மக்களுக்கு இந்த ரமலான், ரமலானாக இருந்தது. எத்தனை முறை குர்ஆனை அவர்கள் கத்ம் செய்தார்கள்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒரு முறை முழுமையாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்துஅவர்கள் குர்ஆனை ஓதக் கேட்டு விடுவார்கள். பிறகு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீலுக்கு முழுமையாக ஓதிக்காட்டுவார்கள்.

எந்த ஆண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தார்களோ, அந்த ஆண்டு இரண்டு முறை ஜிப்ரீல் இடமிருந்து குர்ஆனை கேட்டார்கள். இரண்டு முறை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீலுக்கு குர்ஆனை மனப்பாடமாக உள்ளத்திலிருந்து ஓதிக் காட்டினார்கள். (6)

நூல் : புகாரி எண் : 3539, முஸ்னது அஹ்மது எண் : 3220.

இன்று சில அத்தியாயங்களை ஓதுவதற்கு கூட நமக்கு நேரமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ரமலானிலும் கியாமுல் லைலில் நம்மால் ஓத முடியவில்லை. ஓதக் கூடிய இமாம்கள் அவர்களுடைய தொழுகையிலாவது ஒரு முழு கத்மா -குர்ஆனை முழுமையாக நாம் கேட்க வேண்டும் என்பதற்காக ஒரு துடிப்பு நம்மிடத்தில் எவ்வளவு இருக்கிறது!

நான் இந்த ரமலானில், "அலிஃப் லாம் மீம்" என்று இமாம் ஆரம்பித்ததிலிருந்து "குல் அவூது பிரப்பின்னாஸ்" என்று முடிக்கின்ற வரை முழுமையாக ஒரு முறையாவது என்னுடைய  செவியால் செவியுற்று விடுவேன் என்ற ஆர்வம் கூட இன்று இல்லையே!

உலக விஷயங்களுக்காக கஷ்டப்படுகிறோம். நமக்கு உடல் வலி தெரிவதில்லை. வெயில் தெரிவதில்லை. எந்த கஷ்டத்தையும் நாம் உணர்வதில்லை. இப்படியாக நம்முடைய உலக தேவை என்று வந்து விட்டால் நம்முடைய நோய் காணாமல் போய் விடுகிறது. நம்முடைய பலவீனம் காணாமல் போய்விடுகிறது. நம்முடைய நேர நெருக்கடி காணாமல் போய்விடுகிறது.

எந்தெந்த பொய்யான, போலியான காரணங்களைக் கூறி இபாதத்களை ஒதுக்கினோமோ, இபாதத்களை விட்டு விலகினோமோ அந்த எல்லா காரணங்களும் துன்யாவின் விஷயம் என்று வந்துவிட்டால் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது.

அன்பு சகோதரர்களே! அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்!! அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்!!

எந்த முகத்தைக்கொண்டு நாளை மறுமையில் அல்லாஹ்வை நாம் சந்திக்க இருக்கின்றோம்.

ரப்பு கூறுகிறான் :

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 29:69)

அல்லாஹ்வுடைய பொருத்தத்தை மிகப் பெரிய சிரமம் எடுத்து அமல் செய்வது. கஷ்டப்பட்டு செய்வது.

கஷ்டம் தான்,வலிக்கத்தான் செய்யும். ஆனால் அல்லாஹ்வுக்காக தாங்கிக் கொள்கிறோம். எந்த ஒரு கஷ்டத்தை அல்லாஹ்விற்காக தாங்கிக் கொள்கிறோமோ இபாதத்துடைய விஷயத்தில் அதற்கு அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலி  இருக்கிறது.

அல்லாஹுதஆலா அந்த சஹாபாக்களுக்கு கூறினான்:

مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُمْ مِنَ الْأَعْرَابِ أَنْ يَتَخَلَّفُوا عَنْ رَسُولِ اللَّهِ وَلَا يَرْغَبُوا بِأَنْفُسِهِمْ عَنْ نَفْسِهِ ذَلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَطَئُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَيْلًا إِلَّا كُتِبَ لَهُمْ بِهِ عَمَلٌ صَالِحٌ إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ

மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகள் ஆகிய இவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்கள் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ்வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், கலைப்பு, பசி (ஆகியவையும்), நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை அடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுக்கு நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை.(அல்குர்ஆன் 9 : 120)

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் போது அல்லாஹ் என்னுடைய அமல்களை கொண்டு திருப்தி அடைவானா? என்ற உணர்வு இல்லை என்றால் அது என்ன ஈமானிய உணர்வாக இருக்கும்? யோசித்துப்பாருங்கள்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கால் வீங்க வணங்கினார்கள்.ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கேட்டார்கள்:

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுடைய முன் பின் பாவங்களை மன்னித்து விட்டானே! இப்படி நீங்கள் சிரமப்படுகிறீர்களே!

ஒரே வார்த்தை தான் நபியவர்கள் சொன்னார்கள் :

أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا

நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? (7)

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1130, 4460.

அன்பு சகோதரர்களே! நாளை மறுமையுடைய தினத்தை நாம் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பை நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய கேடயம் என்று கூறினார்கள்.(8)

அறிவிப்பாளர் : உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3973, 1629.

மேலும் கூறினார்கள் :

الصَّوْمُ لِيوَأَنَا أَجْزِي بِهِ

எல்லா அமல்களும் ஆதமுடைய மகனுக்காக! ஆனால் நோன்பைத் தவிர. நோன்பு எனக்காக! இந்த நோன்புக்கு நான் கூலி தருகிறேன்.(9)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7492, 6938.

என்று அல்லாஹ் கூறினானே! அத்தகைய நோன்பாக இந்த நோன்பை நாம் ஆக்கி கொண்டோமா? நம்முடைய உள்ளத்தை சுத்தப்படுத்தினோமா? நம்முடைய அமல்களை அதிகப்படுத்தினோமா?

அல்லாஹ்விற்க்கும் நமக்கும் இடையில் இருந்த அந்த தூரத்தை நாம் நீக்கி விட்டோமா? அல்லாஹ்விற்கு நெருங்கி விட்டோமா?என்றெல்லாம் பரிசோதனைக்கு உரிய நேரம் இன்னும் மிகக் குறைவாக இருக்கிறது.

அன்பு சகோதரர்களே! அது போக இந்த ஈத் உடைய நாள்களில் நாம் செய்ய வேண்டிய அமல்,இந்த ரமலான் உடைய இறுதியில் நாம் செய்ய வேண்டிய அமல்,ஜகாத்துல் ஃபித்ர், பித்ரா உடைய தர்மத்தை நாம் கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.

ஒவ்வொருவரும் அவருடைய ஊரில் உணவாக சாப்பிடக்கூடிய உணவுப் பொருளை இரண்டரை கிலோ அல்லது 3கிலோ அரிசி ஆகவோ அல்லது கோதுமை ஆகவோ அவர் ஏழைகளுக்கு பெருநாள் தொழுகைக்கு முன்பாக கொடுத்தாக வேண்டும்.

அல்லது அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த ஏழைகளிடத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.

இது நாணயமாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கப்படக் கூடாது. முழுமையான தானியமாக கொடுக்கப்பட வேண்டும்.

அது போன்று பிறை பார்த்து விட்டால் பெருநாள் தொழுகின்ற வரை அல்லாஹ்விற்கு அவனை உயர்வாக புகழ்ந்து துதித்து தக்பீர் கூற வேண்டும்.

وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்! (அல்குர்ஆன் 2:185)

ரமலான் உடைய பிறையை பார்த்ததிலிருந்து நாம் பெருநாள் தொழுகையை முடிக்கின்ற வரை தக்பீரை அதிகமாக ஓதி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டும்.

அன்பு சகோதரர்களே! அது போன்று இந்த ரமலானுடைய மாதத்தை முடிப்பது.ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய அடிப்படையில்.

ஒன்று பிறையை பார்க்க வேண்டும். அல்லது பிறை பார்த்த செய்தி நமக்கு கிடைக்க வேண்டும். அல்லது மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும். இதை தவிர மூன்றாவது ஒரு வழிகாட்டலை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு காட்டவில்லை.

இன்று மார்க்கத்தின் பெயரால், மார்க்கம் லேசு, சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிக் கொண்டு காலண்டரின் கணக்கின்படி நாங்கள் பெருநாளை ஆரம்பித்து விடுவோம் என்பதாகக் கூறி இந்த ஹிஜ்ரா கமிட்டி என்ற ஒரு கூட்டம் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தப் பிறையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எல்லா பிறையும் கணிக்கப்பட்டு விட்டது. அது மிகத் துல்லியமாக இருக்கிறது என்பதாகக் கூறி அமாவாசைக்கு அடுத்த நாள் அது தான் முதல் பிறை. எனவே, பெருநாள் கொண்டாட வேண்டியது தான் என்பதாகக் கூறி மக்களுக்கு மத்தியில்  குழப்பங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய குழப்பத்தில் சிக்கி நம்முடைய இபாதத்தை வீணாக்கி விடக் கூடாது.

மேலும் குறிப்பாக, இந்தப் பெருநாள் உடைய தினங்களிலும்,அது போன்று இந்த ரமலானின் கடைசி தினங்களிலும், நம்முடைய வாலிபர்களை குறிப்பாக நாம் கண்காணிக்க வேண்டும்.

வாகனங்களில் அவர்கள் ரேஸ் செல்வது, அது போன்று பெருநாள் உடைய  தினங்களில் செல்லக் கூடாத இடங்களுக்கு சென்று தங்களுடைய நேரங்களை,  காலங்களை கழிப்பது.

செல்வங்களை வீணாக்குவது. இது போன்ற பாவ செயல்களுக்கு அவர்களுக்கு துணையாக நாம் இருந்து விடக் கூடாது.

மாறாக நன்மையை ஏவி, அவர்களுடைய கரம் பிடித்து தீமையில் இருந்து தடுக்க வேண்டும். இந்த சமுதாயம் தீமையை கண்டும் காணாமல் இருக்குமேயானால், இந்த சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய சோதனை, அல்லாஹ்வுடைய தண்டனை பொதுவாக இருக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:25)

ஆகவே,  நம்முடைய பிள்ளைகளை பாதுகாப்பது நம்முடைய கடமை.

அல்லாஹ் கூறுகிறான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 66:6)

பெரியவர்கள் தொழுகைக்கு வரும் போது பெண்கள் தொழுகைக்கு வரும் போது தன்னுடைய பிள்ளை எங்கே செல்கிறான்? யாரோடு செல்கிறான்? எங்கே நேரத்தை கழிக்கிறான்? என்பதை கண்காணிக்க வேண்டும்.

அது ஆண் மகனாக இருக்கட்டும் அல்லது பெண் மகளாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உண்டான சரியான வழிகாட்டுதலை,இறையச்சத்தைக் கொடுக்க வேண்டும்.அ வர்களுக்கு நல்ல புத்தியை சொல்ல வேண்டும். இது பெற்றோருடைய கடமையாக,வீட்டில் உள்ள பெரியவர்கள் உடைய கடமையாக இருக்கிறது.

அல்லாஹு சுபஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும்,ஒவ்வொரு முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும்,இந்த ரமலானை ரஹ்மத் உடைய ரமலான் ஆகவும்,மன்னிப்புடைய  ரமலான் ஆகவும்,சொர்க்கத்திற்குரிய ரமலான் ஆகவும் ஆக்கி அருள்வானாக!!

நம்முடைய கடந்த காலங்களில் செய்த சிறிய,பெரிய அனைத்து  பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, வரக் கூடிய காலங்கள் இபாதத் உடைய காலங்களாகவும் அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்குரிய அமல்களை செய்வதற்க்குரிய காலமாகவும் ஆக்கி அருள்வானாக!

உலகத்தில் சிரமப்படக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அல்லாஹ் உதவி செய்வானாக! சிறையில் இருக்கக் கூடிய ஒவ்வொரு முஸ்லிமையும் அல்லாஹு தஆலா விடுதலை செய்வானாக! பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் அல்லாஹு தஆலா சிறந்த இழப்பீடை தருவானாக! அவர்களுடைய குடும்பத்தை பாதுகாப்பானாக!

அனாதைகளை ஆதரிப்பானாக! ஏழைகளுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ أَخْبَرَنِي الْعَلَاءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (صحيح مسلم 369 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ (صحيح البخاري 620 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ قَالَ أَبُو مُعَاوِيَةَ عَلَيْكُمْ (مسند أحمد 7137)

குறிப்பு 4)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ صُفِّدَتْ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ وَنَادَى مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ وَلِلَّهِ عُتَقَاءُ مِنْ النَّارِ وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ (سنن ابن ماجه- 1632)

குறிப்பு 5)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (صحيح البخاري- 1769)

குறிப்பு 6)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ فَلَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنْ الشَّهْرِ حَتَّى بَقِيَ سَبْعٌ فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ نَحْوٌ مِنْ ثُلُثِ اللَّيْلِ ثُمَّ لَمْ يَقُمْ بِنَا اللَّيْلَةَ الرَّابِعَةَ وَقَامَ بِنَا اللَّيْلَةَ الَّتِي تَلِيهَا حَتَّى ذَهَبَ نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَوْ نَفَّلْتَنَا بَقِيَّةَ لَيْلَتِنَا هَذِهِ قَالَ إِنَّ الرَّجُلَ إِذَا قَامَ مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ بَقِيَّةُ لَيْلَتِهِ ثُمَّ لَمْ يَقُمْ بِنَا السَّادِسَةَ وَقَامَ بِنَا السَّابِعَةَ وَقَالَ وَبَعَثَ إِلَى أَهْلِهِ وَاجْتَمَعَ النَّاسُ فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ قَالَ قُلْتُ وَمَا الْفَلَاحُ قَالَ السُّحُورُ (مسند أحمد- 20474)

குறிப்பு 7)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى أَخْبَرَنَا حَيْوَةُ عَنْ أَبِي الْأَسْوَدِ سَمِعَ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنْ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ فَقَالَتْ عَائِشَةُ لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَقَرَأَ ثُمَّ رَكَعَ (صحيح البخاري 4460 -)

குறிப்பு 8)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ أَنَّ مُطَرِّفًا مِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ حَدَّثَهُ أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ الثَّقَفِيَّ دَعَا لَهُ بِلَبَنٍ يَسْقِيهِ قَالَ مُطَرِّفٌ إِنِّي صَائِمٌ فَقَالَ عُثْمَانُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ كَجُنَّةِ أَحَدِكُمْ مِنْ الْقِتَالِ (سنن ابن ماجه 1629 -)

குறிப்பு 9)

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِي وَالصَّوْمُ جُنَّةٌ وَلِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ حِينَ يُفْطِرُ وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ (صحيح البخاري 6938 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/