ஸகாத் ஏன்? அமர்வு 1 | Tamil Bayan - 568
ஸகாத் ஏன்?
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஸகாத் ஏன்? (அமர்வு 1-2)
வரிசை : 568
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 29-03-2019 | 22-07-1440
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்தத் தூதரின் கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மீதும் ஸலாமும் ஸலவாத்தும் கூறியவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை கொண்டு உபதேசித்தவனாக இந்த ஜுமுஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவன் பொருந்திகொண்ட நல்லடியார்களில் நம்மை ஆக்கி அருள் புரிவானாக! அல்லாஹ் நம் மீது கடமையாக்கிய கடமைகளை சரிவர செய்து மறுமையில் வெற்றியை தேடக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்.
அல்லாஹு தஆலா அவனுடைய இஸ்லாமிய மார்க்கத்தை ஐந்து தூண்களின் மீது அமைத்திருக்கிறான். இதைத்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
بُنِيَ الإسْلَامُ علَى خَمْسٍ: شَهَادَةِ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ وأنَّ مُحَمَّدًا رَسولُ اللَّهِ، وإقَامِ الصَّلَاةِ، وإيتَاءِ الزَّكَاةِ، والحَجِّ، وصَوْمِ رَمَضَانَ
இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது; ஒன்று, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி சொல்வது; முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அல்லாஹ்வுடைய தூதர் என்று சாட்சி சொல்வது; இரண்டாவது, தொழுகையை நிலை நிறுத்துவது; மூன்றாவது, ஜகாத் கொடுப்பது; நான்காவது, யாருக்கு உடலால் பொருளால் வசதி இருக்கிறதோ அவர்கள் அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ் செய்வது; ஐந்தாவது, நோன்பு தோற்பது.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 8.
இந்த ஐந்து கடமைகளையும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்ற, அல்லாஹ்வுடைய வேதத்தை நம்புகிற, நன்மையை ஆதரவு வைக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக முழு முயற்சியோடு, தனது சக்திக்கு உட்பட்டவாறு, சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும்.
அதில் எந்த விதமான குறையையும் அல்லாஹு தஆலா ஏற்றுக்கொள்வதில்லை. தன்னுடைய அலட்சியத்தாலோ தன்னுடைய சோம்பேறித்தனத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலும் இந்த ஐந்து கடமைகளில் அலட்சியம் செய்யப்படுவதை மிகப்பெரிய பாவமாக அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நமக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இதில் ஒரு மனிதன் தவறு செய்து விட்டால் கண்டிப்பாக அந்த தவறுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ஐந்து கடமைகளில் மிக முக்கியமான ஒன்றுதான் ஜகாத் என்ற கடமை. இன்று, தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஜகாத்தை மறந்து விடுகிறார்கள். தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பலர் ஜகாத்தை மறந்து விடுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடு என்று எடுத்துக்கொண்டால், தொழுகை, திக்ரு செய்வது, குர்ஆன் ஓதுவது, நோன்பு, ஹஜ் செய்வது இவையெல்லாம் நாம் அல்லாஹ்வுக்கு செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளாக இருப்பது போன்றுதான் இந்த ஜக்காத்தும் ஒரு இபாதத். ஜகாத் என்பது நமக்கு செய்யக்கூடிய ஒரு இபாதத்.
இந்த ஜகாத்தை இஸ்லாம் நமக்கு நம்முடைய பொருளுக்கு கொடுத்த வரியாக நாம் எண்ணிவிடக் கூடாது. ஜகாத் என்பது நாம் அல்லாஹ்வுக்கு நம்முடைய செல்வத்திலும் கட்டுப்படக் கூடியவர்கள் செல்வத்தைக் கொண்டு அல்லாஹ்வை நாம் வணங்கக்கூடியவர்கள்.
எப்படி நமது உடலால் அல்லாஹ்வை வணங்குகிறோமோ அதேபோல் நம் செல்வத்தையும் அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கேற்ப அல்லாஹ்வுடைய கட்டளைக்கு ஏற்ப அதை செலவழித்து, அல்லாஹ்வுடைய வரம்புகளுக்கு உட்பட்டு அதை பயன்படுத்துவது.
பிறகு, அல்லாஹ்வுடைய மார்க்கம் ஏழைகளுக்கு என்று என்ன அளவை நிர்ணயித்து விட்டதோ அந்த அளவை மனமுவந்து தேடிச்சென்று கொடுக்கப்பட கூடியவர்களை கண்ணியப்படுத்தி அவர்களிடத்திலே சேர்த்துவிடுவது அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய இபாதத்.
ஒருவன் சொர்க்கம் செல்வதற்கு தொழுகை எப்படி அவசியமோ அதுபோன்றுதான் ஜகாத்தும். அல்லாஹு தஆலா தொழுகை இல்லாதவனை கோபப்படுவது போன்று ஜக்காத் கொடுக்காதவனை அல்லாஹ் கோபிகின்றான்; சபிக்கின்றான்; அவர்களை வெறுகின்றான் அவனிடத்தில் மற்ற அமல்கள் இருந்தாலும் சரியே.
இந்த ஜகாத் என்பது ஒரு இபாதத். அல்லாஹு தஆலா கூறுகின்றான்:
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)
தொழுகையோடு ஜகாத்தை அல்லாஹ் சேர்த்து சொல்வதிலிருந்து, தொழுகையை எப்படி ஒரு உயர்ந்த இபாதத்தாக அங்கீகரித்து இருக்கின்றானோ அதுபோன்று இந்த ஜகாத்தையும் அல்லாஹு தஆலா தனக்கு செய்யப்படக் கூடிய ஒரு இபாதத்தாக மனமுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று இந்த அடியார்கள் மீது அல்லாஹ் தஆலா அவர்களுடைய செல்வத்தை கடமையாக்கி இருக்கிறான்.
அல்லாஹ்வை பயந்து தன்னுடைய விருப்பத்தை எல்லாம் அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றார்களோ அத்தகைய முஃமின்களுக்கு என்று சில அடையாளங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான்.
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்ப(தற்கு தகுதி உள்ள)வர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்கள்தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 9 : 18)
வசனத்தின் கருத்து : அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை செழிப்பாக்கக் கூடியவர்கள், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதில் தொடர்புடையவர்கள், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை வணக்க வழிபாடுகள் செய்து அந்த மஸ்ஜிதை நிரப்பமாக வைத்து இருக்கக் கூடியவர்கள் அந்த மசூதி கட்டுவதிலும், அந்த மஸ்ஜிதை பராமரிப்பதிலும், அங்கே நேரங்களை செலவழிப்பதும், அங்கே வணக்க வழிபாடுகளை செய்வதிலும் மன அமைதியைத் தேட கூடியவர்கள் யார் என்றால்,
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்களோ, அதாவது யாருக்கு அல்லாஹ்வின் மீது ஈமான் பலமாக இருக்குமோ, யாருக்கு மறுமையின் மீது ஈமான் அதிகமாக இருக்குமோ, பிறகு தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்களாக, தொழுகையில் கவனம் உடையவர்களாக, தொழுகையில் ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றார்களோ அடுத்து கூறுகின்றான்;
ஜகாத்தை கொடுப்பவர்களாக இருக்கின்றார்களோ ஏனென்றால் சாதாரண ஏழைகள் பள்ளிவாசலுக்கு வந்து விடுவது அதுவும் ஒரு பெரிய விஷயம்தான். சாதாரணமானதல்ல.
சமுதாயத்தில் ஏழைகளும் இருப்பார்கள். செல்வந்தர்களும் இருப்பார்கள். ஏழைகளுக்கும் செல்வம் தேவைப்படுகிறது. செல்வந்தர்களுக்கும் செல்வம் தேவைப்படுகிறது. இப்படி தன்னுடைய வாழ்க்கையில் பொருளாதாரத்தை தேடி கொண்டிருக்கின்ற நிலையில் முதலீடு செய்ய இருக்கிறோம் அல்லது உழைக்கின்றோம்; கடையை திறந்து வைத்திருக்கிறோம்.
அப்போது நாம் கண்டிப்பாக வியாபாரம் செய்ய வேண்டும். கடையை மூட முடியாது அல்லது அடைக்க முடியாது; தொழிலாளிகள், வியாபாரிகள், வாங்க கூடியவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கின்ற நிலையில் எந்த அடியாருடைய உள்ளத்தில் இந்த செல்வம் நிரந்தரமானதல்ல மறுமை நிரந்தரமானது என்று யாருக்கு இந்த இறை வாக்கு மீது நம்பிக்கை இருக்குமோ, செல்வத்தின் மீது இருக்கக்கூடிய நேசத்தை விட தன்னைப் படைத்த ரப்பின் மீது இருக்கக்கூடிய நேசம் அதிகமாக இருக்குமோ, பொருளை சம்பாதிப்பதற்கு அவருடைய மனதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை விட ரப்பு முன்னால் தக்பீர் கூறி தன்னை அடிமை என்று வெளிப்படுத்தி நிற்பதிலும், ருகூவு செய்வதிலும், சுஜுது செய்வதிலும் யாருக்கு நிம்மதி இருக்குமோ, அவர்கள்தான் இந்த சொற்ப வியாபாரத்தை மறுமையின் பெரிய வியாபாரத்திற்காக விட்டுவிட்டு மஸ்ஜிதுக்கு வரமுடியும்.
யார், அல்லாஹ்வை தன்னுடைய ரப்பாக ஏற்றுக் கொண்டார்களோ, அல்லாஹ்வுடைய கட்டளையை பெரிய கட்டளையாக ஏற்றுக் கொண்டார்களோ, மறுமையில் லாபத்தை பெரிய லாபமாக பார்த்தார்களோ அவர்களால்தான் தங்களுடைய தற்காலிகமான அந்த வியாபாரத்தை விட்டுவிட்டு அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வுடைய வீட்டிற்கு அல்லாஹ்வுடைய அடியார்களை அழைக்கும் பொழுது அவர்கள் அங்கே ஆஜராக முடியும்.
யாருக்கு உலகத்தில் லாபம் பெரிதாக இருக்குமோ, போது யாருக்கு ரப்புடைய பொருத்தத்தை விட செல்வத்தை தேடுவது பெரிதாக இருக்குமோ அவர்களால் தங்கள் வியாபாரத்தை விட்டுவிட்டு மஸ்ஜிதுக்கு வர முடியாது.
ரப்புல் ஆலமீன் சொல்கிறான்: அப்படி மஸ்ஜிதுக்கு வரக்கூடியவர்கள் அந்த செல்வத்தை தேடுவது, அந்த செல்வத்தை சம்பாதிப்பது அவர்கள் அனுபவிப்பதற்காக மட்டும் இருக்காது. ஹலாலான முறையில் தானும் அனுபவிக்கலாம். நல்லவர்கள் செல்வத்தை தேடுவது என்பது அந்த செல்வத்தைக் கொண்டு தேவையுள்ள அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு கொடுப்பதற்காக இருக்கும்.
செல்வத்தை சம்பாதிப்பதிலேயே பல நோக்கங்கள் இருக்கலாம். ஒன்று, தான் பெரிய வீட்டை கட்ட வேண்டும், தான் பெரிய வாகனத்தை வாங்க வேண்டும், வசதியாக வாழ வேண்டும். இது ஒரு ஆகுமாக்கப்பட்ட நோக்கமாக இருந்தாலும் கூட, ஹலாலான முறையில் சம்பாதிப்பதாக இருந்து ஜக்காத் கொடுப்பவராக இருந்தால் அது ஒரு ஆகுமான நோக்கமாக இருந்தாலும் கூட, சிறந்த நோக்கம் என்னவென்றால், அல்லாஹ் அடியார்களுக்கு அதிகமதிகமாக ஜகாத்தை கொடுப்பதன் மூலமாக சதகா கொடுப்பதன் மூலமாக அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்வுடைய அடியார்கள் என்னிடத்தில் வரும்பொழுது அதை நல்ல வழியில் செலவு அளிப்பதற்காக இந்த செல்வத்தை சம்பாதிக்கிறேன் என்ற எண்ணம் ஒருவருக்கு இருக்குமேயானால் அந்த வியாபாரமும் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய ஒரு வணக்கமாக கருதப்படுகிறது.
ஆகவேதான், அல்லாஹு ரப்புல் ஆலமீன் முஃமின்களைப் பற்றி சூரா முஜம்மிலிலெ மூன்று பிரிவுகளாக கூறும் கூறும்பொழுது,
إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
73:20. நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும், உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்.” அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கிறான். நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அ(ல்லாஹ்வின் வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 73 : 20)
ஒரு கூட்டம் வணக்க வழிபாடுகளில் இரவில் நின்று கொண்டிருப்பார்கள். இரண்டாமவர் இந்த பூமியில் பயணம் செய்து அல்லாஹ்வுடைய செல்வத்தை தேடி கொண்டிருப்பார்கள் மற்றொரு கூட்டம் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்து கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறான்.
இந்த மூன்று கூட்டத்தாரையும் முஃமின்கள் உடைய கூட்டத்தார் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகின்றான் என்றால், அல்லாஹ்வுடைய செல்வத்தை அவனுடைய கிருபையை அவர்கள் தேடுவார்கள் என்று சொன்னதிலிருந்து, அல்லாஹ்வுடைய அந்த செல்வத்தை அல்லாஹ் ஹலாலாக்கிய முறையிலே அந்த வழியில் தேடுவார்கள், அல்லாஹ் விரும்பக்கூடிய வழியில் செலவு செய்வதற்காக தேடுவார்கள்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அங்கே நமக்கு சுட்டிக் காட்டுகிறான். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த ஜக்காத்தை கொடுப்பதை ஏதோ நம் மீது நம்முடைய செல்வத்திற்காக கடமையாக்கப்பட்ட ஒரு வரி என்று நினைக்காமல், அல்லாஹ்வுக்கும் எனக்கும் உண்டான தொடர்புக்கு பணிந்தவன் என்று வெளிப்படுத்தக் கூடிய மிகப்பெரிய ஒரு அத்தாட்சியாக அந்த அடியான் வெளிப்படுத்துவான்.
அல்லாஹ் கூறுகின்றான்; அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளை செழிப்பாக்க கூடியவர்கள் யார் என்றால், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர், தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்கள், ஜக்காத் கொடுப்பவர்கள்.
பிறகு கூறுகிறான்: அவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் எதையும் பயப்பட மாட்டார்கள்.
சில அறிவீனர்கள் இப்படிக் கூறலாம்; வருடா வருடம் ஜகாத் கொடுத்தால் வறுமை வந்துவிடுமே என்று. யாருடைய உள்ளத்திலே ஷைத்தானிய வழிபாடு இருக்குமோ யாருடைய உள்ளத்திலே ஷைத்தானுடைய அந்த குறுகிய எண்ணம் இருக்குமோ அவர்கள்தான் இப்படி பேசுவார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது:
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ ۖ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்துகிறான். இன்னும், மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 268)
அல்லாஹு தஆலா நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் செலவழித்தால் உங்களுக்கு மேலும் அவன் அதிகம் தருவதற்கு வாக்களிக்கிறான். மேலும் உங்களுக்கு மன்னிப்பை வாக்களிப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.
நான் ஜக்காத் கொடுப்பதாலோ அல்லது தர்மங்கள் செய்வதாலும் வறுமை தனக்கு ஏற்படாது என்று ஒரு முஸ்லிம் நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதால் வறுமை ஏற்படாது என்று பயப்படாதவர்கள் முஃமின்கள் முஸ்லிம்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வை தவிர இந்த முஃமின்கள் எவரையும் யாரையும் பயப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 9 : 18)
அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதால் கண்டிப்பாக அல்லாஹ் எனக்கு இன்னும் கொடுப்பான்; மறுமையிலும் கொடுப்பான் என்று உயர்ந்த நம்பிக்கை உடையவர்கள் முஃமின்கள், அவர்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
யார், இந்த மார்க்கத்தை முறையாக பின்பற்றக் கூடிய நற்பாக்கியத்தை பெற்றவர்கள் என்று கூறும்பொழுது இந்த தன்மையை அல்லாஹ் கூறுகின்றான்.
ஆகவே, ஒரு முஃமின் ஜக்காதை கொடுக்கும்போது, நான் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறேன்; அல்லாஹ்வை வணங்குவதற்காக கொடுக்கிறேன்; இதன் மூலமாக அல்லாஹ்வை வணங்குகிறேன் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா இம்மையிலும் மறுமையிலும் எனக்கு கொடுப்பான் என்று நற்கூலியை ஆதரவு வைத்து இந்த ஜகாத்தை கொடுக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தார்களோ அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 277)
நல்ல அமல்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் நூற்றுக்கணக்காக இருக்கிறது. அல்லாஹு தஆலா அந்த நல்ல அமல்களில் இருந்து இரண்டு பெரும் நல்ல அமல்களை குறிப்பிட்டுச் சொல்கிறான்.
வசனத்தின் தொடக்கம் எப்படி ஆரம்பிக்கிறது, யார் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்வார்களோ என்று.
இஸ்லாமிய மார்க்கம் நமக்கு விசாலமான நல்ல அமல்களின் பாதைகளை வழிகாட்டி இருக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல, அழகிய முறையில் பேசுவது அது ஒரு நல்ல அமல். தனது பிள்ளைகளை கொஞ்சுவது ஒரு நல்ல அமல். மனைவியிடம் நல்ல முறையில் இருப்பது அது ஒரு நல்ல அமல்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தர்மத்தின் வழிகளை கூறிக் கொண்டே சென்றார்கள். உன்னால் தர்மம் செய்ய முடியவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை பேசு; நல்ல வார்த்தைகளை உன்னால் பேச முடியவில்லை என்றால் வாய்மூடி மௌனமாக இருப்பதும் தர்மம் என்று சொன்னார்கள். (1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2989.
எந்தளவுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமின் நன்மையுடைய வாசல்களை நமக்கு கொடுத்திருக்கின்றான் பாருங்கள்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அந்த நல்ல அமல்களை பொதுவாக சொல்லிவிட்டு அந்த நல்ல அமல்களில் இருந்து நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இரண்டு அமல்களை குறிப்பிட்டுச் சொல்கிறான்.
இன்று சில பேர் இப்படி பேசிக் கொள்கிறார்கள்; தொழுகைக்கு அழைத்தால் நாங்க யாருக்கு என்ன அநியாயம் செய்கிறோம்? திருடுகிறோமா? பொய் சொல்கிறோமா? ஏமாற்றுகிறோமா? எங்களுக்கு கண்டிப்பா சொர்க்கம் கிடைக்கும். தொழுக வேண்டும் என்று அவசியம் ஏதும் இல்லை, தொழுதால் தான் சொர்க்கம் என்று அவசியம் ஒன்றும் கிடையாது. நல்லவங்களா இருந்தா போதும். நாங்கள்தான் யாருக்கும் எந்த அநியாயமும் செய்யவில்லையே என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!!
ஷைத்தான் அவர்களை எப்படி ஏமாற்றி இருக்கின்றான் பாருங்கள். படைத்த ரப்புக்கு முன்னாள் தலை வணங்காதவன் எப்படிப்பட்ட அநியாயக்காரன்! அவனுடைய அருளால் இந்த பூமியிலே அவன் வாழ்கிறான். அவனுடைய அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் சுவாசிக்கக் கூடிய காற்று, அவன் குடிக்க குடிக்க தண்ணீர், சாப்பிடக்கூடிய உணவு, அவருடைய வாழ்க்கை, மனைவி மக்கள், குடும்பம் இப்படியெல்லாம் அவனுடைய அருளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ ۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ
மேலும், உங்களிடம் உள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு) கிடைத்தன. பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்தித்து அதை நீக்கக் கோரி) மன்றாடுகிறீர்கள். (அல்குர்ஆன் 16 : 53)
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இந்த அருட்கொடைகளை கொடுக்க முடியுமா? நம்மால் இந்த அருட்கொடைகளை உருவாக்கிக் கொள்ள முடியுமா? யார் அல்லாஹ்வுக்கு முன்னால் ஸுஜூது செய்யாமல், தன்னை எவ்வளவுதான் நல்லவர்களாக யோக்கியர்களாக கருதிக் கொண்டாலும், அல்லாஹ்விடத்தில் அவர்கள் மிகப்பெரிய அநியாயக்காரர்கள்; அல்லாஹ்விடத்தில் நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்ட மகா நன்றி கெட்டவர்கள்.
ஆகவே, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல்ல அமல்களில் கவனம் செலுத்தக்கூடிய இரண்டை சொல்லும்பொழுது தொழுகையை நிலை நிறுத்துவார்கள். தொழுகையை அதற்குரிய நேரங்களில் பேணவேண்டிய முறைகளில் பேணி தொழுவார்கள். அதன்பிறகு ஜகாத்தை கொடுப்பார்கள். உடல் சார்ந்த வணக்க வழிபாடுகளில் தொழுகை ஒரு அடியானுக்கு லேசாகி விட்டால் மிகப்பெரிய விஷயம்.
ஏனென்றால், அல்லாஹ் கூறுகின்றான்:
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
இன்னும், நீங்கள் பொறுமையாக இருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். இன்னும், நிச்சயமாக அது (-தொழுகை) பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர. (அல்குர்ஆன் 2 : 45)
ஒரு அடியானுக்கு தொழுகை லேசாகி விட்டால் சுபஹானல்லாஹ் அவனுக்கு அல்லாஹ்வுடைய அருள் கிடைத்து விட்டது. இரண்டாவது, தன்னுடைய செல்வம் அல்லாஹ் கொடுத்த செல்வம்.
செல்வமானது மனிதர்களுக்கு மிகப்பெரிய சோதனை. இது இல்லை என்றாலும் சோதனை, இது இருந்தாலும் சோதனை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடிய ஒரு விஷயம்,
اللهم اني اعوذ بك من الفقر
யா அல்லாஹ்! முற்றிலுமான ஏழ்மைத்தனத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன் அறவே இல்லாமல் போய் பிறரிடத்தில் கையேந்தக் கூடிய அந்த பலவீனத்தில் இருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3842.
இந்த செல்வம் அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டால் அந்த செல்வத்தில் மனிதன் தனது உள்ளத்தைப் பறி கொடுத்து செல்வம் தான் எல்லாம் என்ற நிலைக்கு ஆளாகி விட்டால் அது அவனுக்கு அது மிகப்பெரிய சோதனை!
அது அடியானை மார்க்கத்தில் இருந்தே வெளியேற்றிக் கொண்டு சென்றுவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஒரு முஃமீன் ஜகாத்தை கொடுக்கும் பொழுது மறுமையை ஆதரவு வைத்தவனாக கொடுப்பான். கூலியை ஆதரவு வைத்தவனாக கொடுப்பான். அதைத் தான் அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 2 : 277)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
لَٰكِنِ الرَّاسِخُونَ فِي الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ وَالْمُقِيمِينَ الصَّلَاةَ ۚ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَٰئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا
எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள்; இன்னும் (உண்மையான) நம்பிக்கையாளர்கள் (உம்மிடம் மூடர்கள் கேள்வி கேட்டது போன்று கேட்க மாட்டார்கள். மாறாக,) உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் தொழுகையை நிலைநிறுத்துகின்ற வானவர்களையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; இன்னும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் (ஆகிய) இவர்கள் எல்லோருக்கும் மகத்தான கூலியைக் கொடுப்போம். (அல்குர்ஆன் 4 : 162)
யார், கல்வியில் ஆழமானவர்களாக, உறுதியானவர்களாக, கல்வி கற்றவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கென தனி மதிப்பை அல்லாஹு ரப்புல் ஆலமீன் சிறப்பித்து சொல்கிறான்.
இன்று சில முட்டாள்கள் பேசுவார்கள்; அது என்ன ஆலிம் என்று, அப்படியெல்லாம் யாரும் கிடையாது. எல்லோரும் ஒருவர்தான். எல்லோரும் சமமானவர்கள் தானே என்று.
அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறுகிறான்:
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ ۗ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
யார் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை ஆசை வைத்து, இரவு நேரங்களில் சிரம் பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்குவாரோ அவர் அல்லாஹ்வை நிராகரிப்பவருக்கு சமமாவாரா? (நபியே!) கூறுவீராக! “(அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு கீழ்ப்படிவதில் உள்ள நன்மையை) அறிந்தவர்களும் (அதை) அறியாதவர்களும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவதெல்லாம் நிறைவான அறிவுடையவர்கள்தான்.” (அல்குர்ஆன் 39 : 9)
இன்னும், அல்லாஹ் சொல்கிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ ۖ وَإِذَا قِيلَ انْشُزُوا فَانْشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
(நபியே!) உம்மிடம் தனது கணவரின் விஷயத்தில் விவாதிக்கின்றவளின் பேச்சை திட்டமாக அல்லாஹ் செவியுற்றான். இன்னும், அவள் (தனது கவலையை) அல்லாஹ்விடம் முறையி(ட்டு அதற்கான தீர்வை மன்றா)டுகிறாள். அல்லாஹ் உங்கள் இருவரின் உரையாடலை செவியுறுகிறான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன். (அல்குர்ஆன் 58 : 1)
முஃமின்களை அல்லாஹ் உயர்த்திப் பேசும் பொழுது ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான்; சிறபிப்பான். அதிலும் ஈமானுக்கு பிறகு மார்க்க அறிவை கற்று கொண்டவர்களின் அந்தஸ்துகளை பல அந்தஸ்துகளாக அல்லாஹ் சிறப்பிப்பான் என்று குர்ஆன் ஹதீசை கற்றவர்களை அதன்படி செயல்பட கூடியவர்களை அல்லாஹ் சிறப்பிக்கின்றான்.
அந்த அடிப்படையில்தான் முஃமின்களுடைய ஒரு பட்டியலை ரப்புல் ஆலமீன் கூறும் பொழுது சொல்கிறான்.
கல்வியில் மிக ஆழமானவர்கள் என்று. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது, கவனிக்க தவறி விடக்கூடாது.
அல்லாஹ் கல்வியில் ஆழமானவர்கள் என்று ஏன் குறிப்பிடுகின்றான்? கல்வியில் ஆழம் எப்போது வரும் என்று சொன்னால், அல்லாஹ்வுக்கு முன்னால் முற்றிலும் பணிந்து விடும்பொழுது, இறையச்சம் அதிகமாகி விடும்போது ஏற்படும். வார்த்தைகளை மனப்பாடம் செய்வதை கொண்டோ, சட்டங்களை நுணுக்கமாக பேசுவதைக் கொண்டோ ஒரு மனிதன் கல்வியிலே ஆழத்தை அடைந்துவிட முடியாது.
எந்த அளவு அல்லாஹ்விற்க்கு கட்டுப்பட்டவனாக, அல்லாஹ்விற்கு பணிந்தவன் ஆக, அதன்படி கல்வியை தேட கூடியவனாக இருப்பானேயானால் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு கல்வி ஆழத்தை கொடுக்கின்றான்.
அந்த கல்வி அவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய கல்வியாக இருக்கும். அந்த கல்வி குர்ஆனின் மூலமாக சுன்னாவின் மூலமாக நேர்வழி காட்டக்கூடிய கல்வியாக இருக்கும். இல்லையென்றால் இப்லீஸுக்கு எப்படி அவனுடைய அறிவு வழிகெடுத்ததோ அதே வழியில் இத்தகையவர்களின் கல்வி வழிகெடுக்கும் கல்வியாக அமைந்துவிடும்.
ஆகவேதான், அல்லாஹு தஆலா கல்வி பற்றி சொல்லும் பொழுது கல்வியின் ஆழமானவர்கள். அல்லாஹ்வுடைய அறிவை அல்லாஹ்வுடைய விருப்பத்தோடு நபியின் சுன்னாவோடு கற்றுத் தேர்ந்தவர்கள்.
பிறகு சொல்கிறான்: முஃமின்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்ட எல்லோரும் நபியே உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை நம்பிக்கை கொள்வார்கள். உங்களுக்கு முன்னால் இறக்கப்பட்ட வேதத்தை நம்பிக்கை கொள்வார்கள்.
அடுத்து மூன்றாவது பட்டியலில் அல்லாஹ் சொல்கிறான்; தொழுகையை நிலைநிறுத்துபவர்களை குறிப்பிட்டு இங்கே கூறுகிறான்.
அடுத்து நான்காவதாக, ஜகாத்தை கொடுப்பவர்கள். மீண்டும் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புவதில் உறுதியாக இருப்பவர்கள். இவர்களுக்கு நாம் கண்டிப்பாக மகத்தான கூலியை கொடுப்போம்.
ஒரு முஃமின் அல்லாஹ்வுடைய பாதையில் ஜகாத்தை ஏழை எளியவர்களுக்கு தேவையுடையவர்களுக்கு அல்லாஹு தஆலா வரையறுத்து சொல்லி இருக்கக் கூடிய அந்த வகையினருக்கு கொடுக்கும் பொழுது, அல்லாஹ்விற்காக நான் கொடுக்கின்றேன்; அல்லாஹ்வை வணங்குகிறேன் என்று அந்த நிய்யத்திலே கொடுப்பான். அதற்கு அல்லாஹ்விடத்தில் தனக்காக மகத்தான நன்மை இருக்கின்றது என்பதை ஆதரவு வைப்பான்.
இந்த செல்வத்தை நான் ஜகாத்தாக கொடுப்பதின் மூலமாக நான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறேன் என்ற அந்த நன்றி உணர்வோடு அந்த ஜகாத்தை கொடுக்க வேண்டும்.
சிலர் எப்படி எண்ணி இருக்கிறார்கள்; எல்லா நேரத்திலும் அல்ஹம்துலில்லாஹ் என்ற அந்த வார்த்தை நன்றியாக அமைந்துவிடும் என்று எண்ணுகிறார்கள்.
அல்ஹம்து லில்லாஹ் என்பது அல்லாஹ்வை நன்றி செலுத்துவதற்கு உரிய மிகப்பெரிய வாக்கியம். அது நாவினால் அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கூடிய வாக்கியம். அதே நேரத்தில் அல்லாஹ் நமக்கு செல்வத்தை வாரி வழங்கும் பொழுது அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி விடுவதால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவர்களாக நாம் ஆக முடியாது.
எப்படி அந்த செல்வம் கிடைத்த பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து நாம் நன்றி கூறினோமோ, அந்த செல்வத்தை ஹலாலான வழியில் செலவழிக்க வேண்டும்.
பிறகு இரண்டாவது அந்த செல்வத்திலிருந்து அல்லாஹ்விற்கு கொடுக்க வேண்டிய ஹக்கை கொடுக்க வேண்டும். ஜகாத் என்பது அல்லாஹ்வுடைய ஹக்கு. அது அல்லாஹ் குறிப்பிட்ட அவனுடைய அடியார்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஹக்கு.
அல்லாஹ்வுடைய ஹக்கை நேரம் வரும் பொழுது மனமுவந்து யார் எடுத்து கொடுக்கிறார்களோ அவர்கள் அந்த செல்வதற்கு நன்றி கூறியவர்கள் ஆவார்கள்.
சிலர், அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவார்கள். திக்ரு செய்து கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வுடைய திக்ரில் எப்பொழுதும் இருப்பதைப் போன்று காட்டிக் கொள்வார்கள் ஆனால் அவர்களுடைய செல்வத்தில் ஜக்காத் கொடுக்க வேண்டிய நேரம் வரும் பொழுது, அவர்களுடைய செல்வத்தில் உபரியான தான தர்மங்கள் செய்யக்கூடிய நேரம் வரும் பொழுது, கைகளை சுருக்கிக் கொள்வார்கள்.
ஆனால் அவர்கள் தங்களுக்கு கொடுத்த அருட்கொடைக்கு நன்றி செலுத்த மறந்தவர்கள்; நன்றி கெட்டவர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ் கூறுகிறான்:
وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا
மேலும், (மனிதனே! தர்மம் செய்யாமல்) உனது கையை உன் கழுத்தில் விலங்கிடப்பட்டதாக ஆக்காதே! (செலவு செய்வதில்) அதை முற்றிலும் விரிக்காதே! அதனால் நீ பழிப்பிற்குரியவராக, (செல்வம் அனைத்தும்) தீர்ந்துபோனவராக தங்கிவிடுவாய். (அல்குர்ஆன் 17 : 29)
அல்லாஹ் ஏழைகளுக்கு கொடுக்காதவர்களை ஜக்காத் கொடுக்காதவர்களை கடுமையாகக் கண்டிக்கின்றான்.
ரப்புல் ஆலமீன் கூறுவதைப் பாருங்கள்.
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
மேலும், “நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; இன்னும், நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் தண்டனை (உங்களுக்கு) கடுமையானதாக இருக்கும்” என்று உங்கள் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூருங்கள்! (அல்குர்ஆன் 14 : 7)
எப்பேற்பட்ட எச்சரிக்கை கலந்த வசனம் பாருங்கள்! அல்லாஹு தஆலா அவனுடைய கட்டளையை உங்களுக்கு வெளிப்படுத்தி விட்டான். இது எல்லாவற்றிலும் தான்.
ஒரு காலம் இருந்தது அதில் நாம் மிகவும் நிம்மதியானவர்களாக இருந்தோம். நாம் அதற்கு நன்றி செலுத்தாத காரணத்தினால் இன்று நாம் ஏதோ பெரிய சோதனைக்கு ஆளாகி கொண்டிருக்கின்றோமோ என்று நம்மை நாமே மேல் பரிசோதனை செய்யக்கூடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அல்லாஹு தஆலா அவன் ஒருக்காலும் அநியாயம் செய்யக் கூடியவன் அல்ல.
وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ
(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கப்படமாட்டான். (அல்குர்ஆன் 11 : 117)
அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் நன்றி செலுத்தினால் நான் உங்களது அருட்கொடைகளை அதிகப்படுத்த வேண்டும். அது ஆட்சியாக இருந்தாலும் சரி, அது செல்வமாக இருந்தாலும் சரி, அந்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தும் பொழுது கண்டிப்பாக அந்த அருட்கொடையை அல்லாஹ் நமக்கு நிரந்தரமாக்கி தருகிறான்.
அந்த அருட்கொடையில் நமக்கு அல்லாஹ் அருள் வளங்களை ஏற்படுத்தி தருகிறான். நீங்கள் நன்றி கெட்டவர்களாக ஆகிவிட்டால் என்னுடைய தண்டனை மிகக் கடுமையாக இருக்கும் என்பதை அறிவித்து விடுகின்றேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இமாம் ஸுபுகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ஜக்காத் உடைய நோக்கங்களில் ஒன்று, அல்லாஹ்வுடைய அருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாகும்.
அல்லாஹ்வுடைய அருட்கொடைக்கு நன்றி செலுத்துவது என்பது அல்லாஹ்வுடைய சட்டங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். உடல் சார்ந்த சட்டங்களாக இருக்கட்டும்; அல்லது பொருளாதார சட்டங்களாக இருக்கட்டும்.
அல்லாஹ்வுடைய அருட்கொடைக்கு நன்றி செலுத்துவது என்பது ஒரு பெரிய விசாலமான ஒன்று. அல்லாஹு ரப்புல் ஆலமீன் தன்னுடைய அடியார்களுக்கு உடலிலும் அருள் செய்திருக்கிறான். அவர்களுடைய செல்வத்திலும் அருள் செய்திருக்கிறான். உடலும் அல்லாஹ்வுடைய அருட்கொடை. செல்வமும் அல்லாஹ்வுடைய அருட்கொடை.
உடலுக்கு நாம் எப்படி நன்றி செலுத்துகிறோமோ, அதாவது அல்லாஹ் கொடுத்த உடலுக்காக தொழுகை செய்து நோன்பு வைத்து நாம் எப்படி நன்றி செலுத்துகிறோம்.
அதுபோல அல்லாஹ் கொடுத்த செல்வத்திலிருந்து அல்லாஹ் விரும்பிய அல்லாஹ் நிர்ணயித்த அந்த ஹக்கை அவன் அடியார்களுக்கு கொடுப்பதன் மூலமாக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம்.
ஆகவே, இந்த ஜக்காத்தை ஒரு அடியான் கொடுக்கும்பொழுது, நான் இதன் மூலமாக அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவனாக ஆகிறேன். அந்த நன்றி உணர்வோடு கொடுக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா நம்மிடத்தில் எதிர்பார்ப்பது இந்த அடிமைத்தனத்தை தான். அடியான் எப்பொழுதும் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும். அந்த அடிமைத்தனத்தை அவன் உணர வேண்டும். அல்லாஹ்விற்கு அதில் அவ்வளவு ஒரு சந்தோஷம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: புகழை விரும்புவதை அல்லாஹ்வை விட வேறு யாரும் அதிகமாக இருக்க முடியாது. அல்லாஹ் தான் புகழப்பட வேண்டும் என்பதை அதிகம் விரும்புகிறான்.
நூல் : புகாரி, எண் : 7416.
ஆகவேதான், அவன் கண்ணியத்திற்குரிய குர்ஆனில் பல சூராக்களை தன்னுடைய புகழ்ச்சியை கொண்டு ஆரம்பிக்கிறான். பல சூராக்களை முடிக்கும் பொழுது தன்னுடைய புகழ்ச்சியை கொண்டு முடிக்கிறான்.
அல்லாஹ்வை அடியான் புகழும்போது அவ்வளவு சந்தோஷப்படுகிறான். இந்த அடியான் அல்லாஹ்விற்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது அந்த அடியான் அல்லாஹ்விற்கு அவ்வளவு நெருக்கத்தை பெறுகிறான்.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹு தஆலா தன்னுடைய கண்ணியத்திற்குரிய வேதத்தில் கூறும் பொழுது;
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார். (அல்குர்ஆன் 17 : 3)
குர்ஆனுடைய விரிவுரையாளர்கள் விளக்கம் சொல்கிறார்கள்: இப்படி அல்லாஹ் அவர்களை புகழ்வதற்கு என்ன காரணம் என்று சொன்னால், அவர்களுக்கு ஒரு நாள் ஒரு கவளம் உணவு தான் கிடைக்கும். அந்த உணவை அவர்கள் எடுத்து சாப்பிடும் பொழுது கூட, யா அல்லாஹ்! இந்த ஒரு கவளம் உணவை நீ எனக்கு கொடுத்தாயே என்று பிஸ்மில்லாஹ் கூறி அந்த ஒரு கவளம் உணவு கிடைத்ததற்கு அல்ஹம்து லில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று நன்றி செலுத்துவார்கள்.
ஒரு மிடர் தண்ணீர் கிடைக்கும். அதை பிஸ்மில்லாஹ் என்று கூறி குடித்து, அல்ஹம்து லில்லாஹ் என்று நன்றி செலுத்துவார்கள்.
இது அல்லாஹ்வுக்கு அவ்வளவு பிடித்தமாக ஆகிவிட்டது. அல்லாஹு தஆலா இறுதி வேதமாகிய அல்குர்ஆனில் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத் புகழும்படி அவர்களை சிறப்பித்து சொல்கிறான்.
இந்த நேரத்தில் நாம் கொஞ்சம் நம்மை நினைத்து பார்க்க வேண்டும். அல்லாஹ் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்க, பசியில்லாமல் நம்மை வைத்திருக்க, எத்தனையோ நமது தேவைகளை எதிர்பார்க்காமல் நிறைவேற்றிக் கொண்டு இருக்க, இல்லை என்று கூறுபவர்கள் எத்தனை பேர்! அல்லாஹ்வின் மீது அதிருப்தி கொள்ளக்கூடியவர்கள் எத்தனை பேர்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை குறை காணக்கூடியவர்கள் எத்தனை பேர்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
أنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ كانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هذا يا رَسولَ اللَّهِ، وقدْ غَفَرَ اللَّهُ لكَ ما تَقَدَّمَ مِن ذَنْبِكَ وما تَأَخَّرَ؟ قالَ: أفلا أُحِبُّ أنْ أكُونَ عَبْدًا شَكُورًا
அவர்கள் கால் கடுக்க வணங்கியபோது அவர்களுடைய பரிசுத்தமான மனைவி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய முன் பின் பாவங்களை எல்லாம் அல்லாஹ் மன்னித்து இருக்க, நீங்கள் உங்களை இப்படி சிரமப்படுத்தி கொள்கிறீர்களே? அப்போது ஒரே பதிலை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: அதற்கு நான் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருக்க வேண்டாமா! என்பதாக.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 4387.
அந்த நன்றி உணர்வோடு நாம் அந்த ஜகாத்தை கொடுக்கும் பொழுது அது அல்லாஹ்விடத்தில் மிக ஏற்றத்திற்கு உரியதாக ஆகிவிடுகிறது. இந்த நன்றி உணர்வை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
அந்த உயர்ந்த நோக்கத்தில் அடியான் அந்த ஜகாத்தை கொடுக்கும் பொழுது, அந்த அடியான் உடைய இதயத்தில் அல்லாஹ்வுடைய திருப்தி வருகிறது. அல்லாஹ்வின் நெருக்கம் ஏற்படுகிறது.
அதுபோல்தான், நாம் கொடுக்க வேண்டிய இந்த ஜகாத் ஏதோ ஏழைகளுக்கு போய் சேரக்கூடிய நன்மையாக மட்டும் எண்ணி விடாதீர்கள். கொடுக்கக்கூடிய இவருக்கு மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஸகாத் அவருடைய பாவங்களை போக்கி விடுகிறது.
அல்லாஹு தஆலா தன்னுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கொடுத்த கட்டளையை குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான்;
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக. அதன் மூலம் அவர்களை நீர் சுத்தப்படுத்துவீர்; இன்னும், (உயர் பண்புகளுக்கு) அவர்களை உயர்த்துவீர். இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பீராக. நிச்சயமாக உம் பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 9 : 103)
இந்த சதக்கா அவர்களை சுத்தப்படுத்துகிறது. பாவங்களிலிருந்து அவர்களை போக்கிவிடுகிறது. நபியே ஜகாத் கொடுக்கக் கூடிய அவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் யாராவது ஸக்காத் கொண்டு வந்தால்,
«اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ»
யா அல்லாஹ் இந்த ஜகாத்தை கொடுத்தவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அருள்புரிவாயாக என்று துஆ செய்வார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :
முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக வருகிறது.
"சதக்கா பாவங்களை முற்றிலுமாக போக்கிவிடுகிறது".
நூல் : இப்னு மாஜா, எண் : 3973.
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்: மேற்கூறப்பட்ட இறை வசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மிகத்தெளிவாக சொல்கிறான். ஜக்காத் கொடுப்பதால் அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து விடுகிறான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பல நன்மைகளை இந்த ஜக்காத்தை நாம் கொடுப்பதிலே வைத்திருக்கிறான்.
தொழுகையை நிறைவேற்றக்கூடிய நாம், அல்லாஹ்வுடைய ஏனைய கடைமைகளை கவனம் செலுத்தக்கூடிய நாம், நமது செல்வத்தில் அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்ற இந்த மிகப்பெரிய கடமையை மறந்து விடக்கூடாது.
இந்த கடமையை நிறைவேற்றுவதனால் கண்டிப்பாக கொடுக்கக்கூடிய நாமும் பயன் பெறுகின்றோம். இதை நாம் யாருக்கு கொடுக்கிறோமோ அவர்களுக்கும் சமுதாயத்தில் மிகப்பெரிய பயன் இருக்கிறது.
மறுமை உடைய கூலி மிகப்பெரியது. இந்த நன்மையை ஆதரவு வைத்து அல்லாஹ்வுடைய எல்லா கடமைகளையும் நிறைவேற்றக் கூடியவர்களாக குறிப்பாக இந்த ஜகாத் என்ற இந்த கடமையை சரியாக நிறைவேற்ற கூடிய மக்களாக நாம் ஆக வேண்டும்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும், பாவத்தை விட்டு விலகக் கூடிய அந்த உயர்ந்த ஈமானையும் தந்தருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ، يَعْدِلُ بَيْنَ الِاثْنَيْنِ صَدَقَةٌ، وَيُعِينُ الرَّجُلَ عَلَى دَابَّتِهِ فَيَحْمِلُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ، وَكُلُّ خُطْوَةٍ يَخْطُوهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَيُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ» (صحيح البخاري- 2989)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/