HOME      Khutba      ஸகாத் ஏன்? அமர்வு 2 | Tamil Bayan - 568   
 

ஸகாத் ஏன்? அமர்வு 2 | Tamil Bayan - 568

           

ஸகாத் ஏன்? அமர்வு 2 | Tamil Bayan - 568


ஸகாத் ஏன்?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஸகாத் ஏன்? (அமர்வு 2-2)
 
வரிசை : 568
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 05-04-2019 | 29-07-1440
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை உபதேசித்ததாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து, அல்லாஹ் விரும்புகின்ற நல்ல அமல்களை அதிகம் செய்வதற்கும், அல்லாஹ் கடமையாக்கிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள் புரிவானாக! ஆமீன்.
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையாக்கி இருக்கக்கூடிய ஐந்து முக்கிய கடமைகளில் ஸக்காத் என்ற பொருளாதாரம் சார்ந்த கடமை செல்வந்தர்கள் மனமுவந்து அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும். 
 
அப்படி அவர்கள் மனமுவந்து அந்த கடமைகளை நிறைவேற்றும் பொழுது அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிகின்றான். இந்த ஸக்காத்தை கொடுப்பதாலும் அதுபோல இந்த ஸக்காத்தை அல்லாஹுத்தஆலா நம் மீது கடமையாக்கி இருப்பதிலும் நாம் இம்மையிலும் மறுமையிலும் என்னென்ன நன்மைகள் அடைகின்றோம் என்று சென்ற ஜும்ஆவில் பார்த்தோம். அது தொடர்பாக மேலும் சில விஷயங்களை இந்த ஜும்ஆவில் நாம் அறிய இருக்கின்றோம்.
 
இந்த ஸகாத் கடமையான தர்மம் ஆகும். அல்லாஹு ரப்புல் ஆலமீன், நமது மார்க்கத்தில் சிறப்பு தன்மையாக ஒரு மனிதர் ஏழை எளியவர்களுக்கு தன்னுடைய செல்வத்திலிருந்து தன் உழைப்பால் அவர் சம்பாதித்த அந்த செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்கு என்று தர்மத்தை கொடுப்பதில் மார்க்கத்தின் ஒரு பிரிக்க முடியாத கட்டாயமாக ஆக்கி இருக்கிறான். 
 
இது இஸ்லாமிய மார்க்கத்தின் தனி சிறப்பு. உண்மையான மார்க்கம் அல்லாத மற்ற மதத்தில் தர்மம் ஆர்வமூட்டப் பட்டிருக்கலாம். அவர்கள் முன்னோர்கள் பல நல்ல விஷயங்களை கூறி இருக்கலாம். ஆனால், மார்க்கத்தின் அடிப்படையில் முஸ்லிம் இதை செய்யவில்லை என்றால், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுவாய், நாளை மறுமையில் உனக்கு நரக தண்டனை இருக்கின்றது என்று கட்டாயமாக இந்த மார்க்கம் மட்டும்தான் வலியுறுத்துகிறது.
 
எப்படி தொழாதவன் இஸ்லாமை விட்டு வெளியேறி விடுவானோ அதைப்போன்று ஜகாத்தை கொடுக்காதவன் இஸ்லாமை விட்டு வெளியேறி விடுவான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இந்த ஸகாத் என்ற இந்த கடமையை நிறைவேற்றும் பொழுது இதை நிறைவேற்றுவது மூலமாக நாம் நமது உள்ளத்தை சுத்தப்படுத்துகிறோம். இந்த ஸகாத் நமது உள்ளத்தை சுத்தப்படுத்துகிறது. கருமித்தனம், கஞ்சத்தனம், செல்வம் என்னுடையதுதான் என்ற பெருமையை இந்த ஸக்காத் வெளியேற்றி நம்முடைய உள்ளத்திலே நல்ல குணங்களை, ஈகை, இரக்கம், கருணை, விட்டுக்கொடுத்தல், பிறருடைய துன்பத்தில் பங்கெடுத்தல் போன்ற உயரிய பண்புகளை ஏர்படுத்துகிறது.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
 
(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக. அதன் மூலம் அவர்களை நீர் சுத்தப்படுத்துவீர்; இன்னும், (உயர் பண்புகளுக்கு) அவர்களை உயர்த்துவீர். இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பீராக. நிச்சயமாக உம் பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 9 : 103)
 
இந்த உள்ளம் என்பது கருமை தனத்தின் மீது தான் அதன் நாட்டம் இருக்கும். தான் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். பிறருக்குக் கொடுப்பதில் இந்த உள்ளத்துக்கு எப்பொழுதும் கஷ்டம் இருக்கும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
قُل لَّوْ أَنتُمْ تَمْلِكُونَ خَزَائِنَ رَحْمَةِ رَبِّي إِذًا لَّأَمْسَكْتُمْ خَشْيَةَ الْإِنفَاقِ ۚ وَكَانَ الْإِنسَانُ قَتُورًا
 
(நபியே!) கூறுவீராக! என் இறைவனுடைய அருளின் பொக்கிஷங்களை நீங்கள் (உங்களுக்கு) சொந்தமாக்கியவர்களாக இருந்திருந்தால், அப்போது (செல்வத்தை) தர்மம் செய்ய பயந்து (அதை) தடுத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மகா கஞ்சனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 100)
 
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
 
وَأُحْضِرَتِ الْأَنفُسُ الشُّحَّ 
 
ஆன்மாக்கள் கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 4 : 128)
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் உள்ளத்தை படைத்தவன். அதிலுள்ள தன்மையை அறிந்தவன். அவன் சொல்கிறான்; இதை அதனுடைய அமைப்பிலேயே விட்டுவிட்டால் இது கொடைத் தன்மையை தூண்டாது. பிறருக்கு கொடுக்கும் எண்ணத்தை கொடுக்காது. உள்ளத்தை நான் கட்டுப்படுத்தி நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உள்ளத்தில் அந்த ஈகை, இரக்க குணத்தை நாம் கொண்டு வரவேண்டும்.
 
இந்த செல்வ மோகத்தைக் கொண்டு பணத்தை சம்பாதிப்பது. அதைக் கொண்டு தான் அனுபவிப்பது. பிறகு பணத்தை சம்பாதிப்பது. பிறகு அதைக் கொண்டு தான் அனுபவிப்பது. இப்படி பணத்தை பெருகிக் கொண்டே செல்வார்கள். 
 
அதனுடைய நோக்கம், தான் பணக்காரனாக வேண்டும்; தான் அனுபவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் பணத்தை தேடுகின்ற அவர்களை பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக எச்சரித்து சொல்கிறார்கள்.
 
«تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ»
 
தீனாரின் அடிமை, திர்ஹமின் அடிமை, ஆடைகளின் அடிமை நாசமாகட்டுமாக.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2886,2887.
 
அதாவது பைத்தியம் ஏறி விடுவது. காசு பணம், காசு பணம் என்ற அந்த பைத்தியம் தலைக்கு ஏறி விடுவது. இப்படி தலைக்கு ஏறி விட்டவர்களை தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பணத்தின் அடிமை என்று சொல்கிறார்கள். 
 
தீனாருக்கு அடிமை ஆகிவிட்டான். அதாவது, காசு எங்கே இருக்கின்றதோ அதன் பக்கம் ஹலாலா? ஹராமா? தேவையானதா? இல்லையா? என்பதை கூட மறந்து விடுகிறான். தனது உயிரையும், உடல் ஆரோக்கியத்தையும் பணையம் வைத்து பலர் வியாபாரம் செய்வதை பார்க்கிறோம். 
 
இப்படி எல்லாம் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொண்டு, மிக மோசமான நிர்பந்தங்களுக்கு ஆளாக்கி வியாபாரம் செய்வதை பார்க்கிறோம். அதற்கு என்ன காரணம், எப்படியாவது பணம் வந்தாக வேண்டும்.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய மற்றொரு ஹதீஸ் புகாரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.
 
«يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ مَا أَخَذَ مِنْهُ، أَمِنَ الحَلاَلِ أَمْ مِنَ الحَرَامِ»
 
கியாமத்துக்கு முன்பாக இறுதியில் ஒரு காலம் வரும், அவன் செல்வத்தை எப்படி சம்பாதித்தால் என்ன அவனுக்கு எந்த கவலையும் இருக்காது. ஹலாலில் வருகிறதா? ஹராமில் இருந்து வருகிறதா? என்று.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2059.
 
மனிதன், லாபம், வருவாய் என்ற ஒரு வார்த்தையை வைத்திருப்பான். அதன் மூலமாக தேடிக் கொண்டே இருப்பான். இது நமக்கு அனுமதிக்கப்பட்டதா? நமக்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? என்பதையெல்லாம் பற்றி அவனுக்கு கவலை கிடையாது. 
 
இது கியாமத்துக்கு முன்பாக நடக்கக் கூடிய ஒன்று. மக்கள் இறையச்சத்தில் குறைந்து விடுவார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ஈமான் குறைந்துவிடும். அல்லாஹ்வுடைய பயம் குறைந்துவிடும். மறுமையின் தேடல் குறைந்துவிடும். உலகத்தை பெரிதாக மதிப்பார்கள். 
 
பணத்திற்கு அடிமையானவனை பற்றி ரசூலுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறும்பொழுது,
 
வருவாய் வந்துகொண்டே இருந்தால் மகிழ்வாக இருப்பான். ஏதாவது அவனுக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டால் மன சஞ்சலத்தற்கு ஆளாகி விடுவான். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அவன் நாசமாகட்டும், அவனுக்கு கேடு உண்டாகட்டும். எவ்வளவுதான் தன்னை ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நாடினாலும் சரி, அது அவனால் முடியாது. அல்லாஹ் விதித்ததை அவன் அடைந்தே தீருவான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2886,2887.
 
செல்வந்தர்களை பார்க்கிறோம்; அவர்கள் பல வழிகளிலே பொருளாதாரத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். தான் பெரிய செல்வந்தராக ஆகி விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
 
ஒருநாள் அல்லாஹ் விதித்த அந்த நாள் வரும் பொழுது, அனைத்தையும் இழந்து, எனக்கு யாராவது உணவு அளிப்பார்களா? இந்த மாதத்திற்கு தனது குடும்பத்திற்கு ஆதரவுக்கு யாராவது கொடுப்பார்களா? என்று எண்ணும் அளவிற்கு வந்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களை நமது வாழ்க்கையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 
 
எப்படி இருக்கின்றது என்று சொன்னால், காருணை பார்த்து மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மக்கள், பலவீனமான ஈமான் உடையவர்கள் அல்லது செல்வமோகங்களில் உள்ளவர்கள் சொன்னார்கள்:
 
فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِ فِي زِينَتِهِ ۖ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا يَا لَيْتَ لَنَا مِثْلَ مَا أُوتِيَ قَارُونُ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ
 
ஆக, அவன் தனது அலங்காரத்தில் தனது மக்களுக்கு முன் வெளியில் வந்தான். உலக வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் (அவனைப் பார்த்து) கூறினார்கள்: “காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கும் (செல்வங்கள்) இருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பேருடையவன்.” (அல்குர்ஆன் 28 : 79)
 
என்பது வணக்க வழிபாடுகளில் மட்டுமல்ல. செல்வத்தை எப்படி சம்பாதிக்கிறோம்? அதில் ஏழைகள் உடைய பங்கை எப்படி கொடுக்கின்றோம்? என்பதிலும் இறையச்சம் இருக்கிறது.
 
பணத்திலிருந்து எப்படி நமது உள்ளத்தை பாதுகாத்துக் கொள்கிறோம். அல்லாஹ்வுடைய பயமும், அல்லாஹ்வுடைய பிரியமும் இருக்கக்கூடிய உள்ளத்தில் கருமித்தனம், இந்த உலக செல்வத்தின் மீது பேராசையும் இருக்கக்கூடாது. 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:
 
وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
 
யார் தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு அந்த செல்வத்தில் ஏழைகளுக்கு உரிமையை அறிந்து கொள்வாரோ வெற்றியாளர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 59 : 9)
 
எங்கு, அல்லாஹு தஆலா ஈமான் உடையவர்கள், நேர்வழி பெற்றவர்களுக்கு வெற்றியாளர்கள் என்று கூறுகின்றானோ அதேபோல்தான் உள்ளத்தை கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாத்து கொண்டவர்கள் பற்றி கூறுகிறான்.
 
உள்ளத்தில் இந்த உலக ஆசை வரவர அது எல்லா பாவங்களுக்கும் தவறுகளுக்கும் தலயாய் இருக்கிறது. யார், இதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வார்களோ அவர்கள் பவங்களில் இருந்தும் குற்றங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.
 
கருமித்தனம், கஞ்சத்தனம் செய்யக் கூடியவர்கள் பற்றி அல்லாஹ் எப்படி எச்சரிக்கின்றான் என்றால்,
 
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
 
இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்ததில் கஞ்சத்தனம் செய்பவர்கள், “அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீமையாகும். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ (அது மறுமையில் விஷப் பாம்பாக மாற்றப்பட்டு அவர்களின் கழுத்துகளில்) அதை சுற்றப்படுவார்கள். இன்னும், வானங்கள் இன்னும் பூமியின் உரிமை அல்லாஹ்விற்கே உரியதாகும். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 180)
 
இந்த வசனத்திற்கு விளக்கமாக இமாம் ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் எந்த அளவிற்கு பொருளாதாரத்தை தேடுவதில், அதை நேசிப்பதில் மூழ்கிக் கொண்டே செல்கிறானோ அது அவனை அல்லாஹ்வின் தேசத்திலிருந்து திருப்பிவிடும்‌.
 
எவ்வளவு பெரிய விஷயம் பாருங்கள். அல்லாஹ்வை மறந்து, அல்லாஹ்வுடைய நேசத்தை மறந்து, இந்த உலகத்தை சம்பாதித்து மனிதன் என்ன அடையப் போகிறான்? 
 
ரப்புல் ஆலமீன் முஃமின்களின் அடையாளமாக சொல்லும்பொழுது.
 
رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ
 
(இறை இல்லங்களில் தொழுகின்ற) ஆண்கள் - வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும். (அல்குர்ஆன் 24 : 37)
 
எந்த வியாபாரம் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து, தொழுகையிலிருந்து மனிதனை திருப்பி விடுகிறதோ அதில் அவனுக்கு பரக்கத் இருக்காது. அதில் அவனுக்கு அல்லாஹ்வுடைய அருள் வளம் இருக்காது. 
 
ஆனால், வணக்க வழிபாடுகளுடன் செய்யப்படக்கூடிய வியாபாரம் ஹலாலாக அல்லாஹ்வுடைய பரக்கத் விரிந்த வியாபாரமாக இருக்கும்‌. 
 
அல்லாஹ் இன்னும் எச்சரிக்கை செய்து சொல்லுகிறான்:
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
 
நம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் (திருப்பி உலகக் காரியங்களில்) ஈடுபடுத்தி விடவேண்டாம். ஆக, அத்தகையவர்கள்தான் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 63 : 9)
 
இமாம் ராஸி கூறுகிறார்கள்: யார் ஒருவர் இந்த செல்வத்தை தேடுவதில் அப்படியே மூழ்கி விடுகிறார்களோ அது அவர்களை அல்லாஹ்வுடைய அன்பை விட்டும் திருப்பி விடுகிறது. மேலும் மறுமைக்கு தயாராகுவதை விட்டும் அவனை திருப்பி விடுகிறது. 
 
ஆகவேதான், அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனது ஞானத்திலிருந்து, மனிதன் தான் சம்பாதித்த செல்வத்திலிருந்து ஒரு பகுதியை ஏழைக்கு கண்டிப்பாக செலவழிக்க வேண்டும் என்று கட்டாயம் ஆக்கினான். 
 
காரணம், அதன்மூலம் அவன் உள்ளத்தில் இருக்கக்கூடிய அந்த பேராசையை அவனுடைய செயலால் அவன் முறியடிக்க வேண்டும். இந்த உலகத்தின் பக்கம் திரும்பி அதிலிருந்து அவருடைய உள்ளத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
அறிஞர்கள் கூறுகிறார்கள்; இந்த வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு மகிழ்வு என்பது நல்ல நிலை என்பது பொருளை சம்பாதிப்பதிலோ, பொருளை சேர்த்து வைப்பதிலோ அல்ல. மாறாக அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கு ஏற்ப அந்த பொருளை செலவு செய்வதில் தான் பாக்கியம் இருக்கிறது.
 
மக்கள் எப்படி எண்ணுகிறார்கள்; செல்வத்திலே பெரிய அளவு தங்களிடத்தில் இருந்துவிட்டால் தாங்கள் பெரிய பாக்கியம் பெற்றவர்களாக தங்களை எண்ணுகிறார்கள். 
 
நமது உள்ளத்திற்காக அல்லாஹ் இந்த ஜகாத்தை கொடுத்திருக்கிறான். தன்னிடத்தில் இருப்பதை அல்லாஹ்விற்காக கொடுப்பதில் தான் நற்பாக்கியம் இருக்கிறது.
 
மேலும் இமாம் கூறுகிறார்கள்: இந்த ஸக்காத்தை கொடுப்பது என்பது இது கண்டிப்பான ஒரு கட்டாயமான நமது உள்ளத்திற்கு நாம் கொடுத்து கொள்ளக்கூடிய சிகிச்சை. இந்த உள்ளத்திலிருந்து உலகத்தின் மோகத்தை நீக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இந்த ஸக்காத்தை கொடுத்தே ஆக வேண்டும். 
 
அதுபோன்று, நாம் அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு இந்த ஸக்காத்தை கொடுக்கும்பொழுது, இந்த ஜகாத் கொடுக்கக் கூடிய செல்வம், இந்த செல்வத்திலிருந்து ஸக்காத் கொடுக்கப்பட்ட அந்த செல்வமும் தூய்மை ஆகிவிடுகிறது. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸக்காத்தை பற்றி கூறும் பொழுது,
 
«إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ، وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ، وَلَا لِآلِ مُحَمَّدٍ»
 
 தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் ஜகாத் ஹலால் அல்ல. ஜகாத்தாக வெளியேற்ற படக்கூடிய அந்த செல்வத்தை அழுக்கு என்று சொன்னார்கள். (1)
 
அறிவிப்பாளர் : ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1072.
 
நாம் சம்பாதிக்கக்கூடிய அந்த செல்வத்தில் சக்காத் கொடுக்கப்படவில்லை என்றால் அது அழுக்காக இருக்கிறது. அந்த ஸகாத்தை நாம் நீக்கி விடும் பொழுது அழுக்கு நீக்கப்பட்டு விடுகிறது. நம்முடைய அந்த பொருளாதாரம் சுத்தமாக்கப்படுகிறது.
 
இந்த ஸகாத்தின் மூலமாக சமுதாயத்தில் விளையக்கூடிய நன்மை என்ன என்றால், நம்மை சுற்றி உள்ள ஏழை எளியவர்கள், நம்மை சுற்றியுள்ள வறியவர்களுக்கு செல்வந்தர்கள் மீது உண்டான அந்த பொறாமை கால் புணர்ச்சி நீங்கி, அவர்கள் மீது அன்பும் நேசமும் ஏற்படுகிறது.
 
சாதாரண வரியவன், தன்னை சுற்றி உள்ள செல்வந்தர்கள் செல்வத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள், அது அவர்களுடைய வாகனம், அவர்களின் பிள்ளைகள் இருக்கக்கூடிய வசதிகளை பார்த்துக் கொண்டே செல்கிறான். 
 
ஆனால் அவனோ அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுகிறான். இப்படியான ஏழைக்கு எப்படியான எண்ணம் ஏற்படும்? கோபம், பொறாமை, கால்புணர்ச்சி. உதாரணமாக, அந்த செல்வந்தரின் வீட்டில் ஏதாவது ஆபத்து என்றால் அவனுக்கு நல்லா வேண்டும் என்பதாக சொல்வார்கள்.
 
அதேநேரத்தில் அந்த செல்வந்தர் அந்த ஏழைக்கு ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தன்மீது ஸகாத் கடமையாகும் போதெல்லாம் அந்த ஸக்காத்தை கொடுத்து, அந்த ஏழையின் மீது பரிவையும் இரக்கத்தையும் கொடுத்தால் அந்த செல்வந்தரின் வீட்டுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் தூரத்தில் இருந்து அரசாங்கத்தின் பாதுகாவலர்கள் வருவதற்கு முன்பாகவே அங்கு உள்ள ஏழைகள் பாதுகாப்பதற்கு வந்துவிடுவார்கள். உயிரைக் கூட அவர்கள் கொடுப்பதற்கு தயங்க மாட்டார்கள்.
 
ஒரு பெரிய நன்மையை அல்லாஹுத்தஆலா ஸக்காத்தை கொடுப்பதில் வைத்திருக்கிறான். ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் உண்டான அந்த இடைவெளி நீக்கப்பட்டு ஏழைகளுக்கு செல்வந்தர்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படுகிறது.
 
எப்படி ஜக்காத், கொடுப்பவர்கள் உடைய உள்ளத்தை கருமிதனத்திலிருந்து கஞ்சத்தனத்திலிருந்து சுத்தப்படுத்துகிறதோ அதுபோல, அந்த ஸக்காத்தை வாங்கிக் கொள்ளக்கூடிய அந்த ஏழையின் உள்ளத்தில் செல்வந்தர்கள் மீது உள்ள பொறாமை கால்புணர்ச்சியில் இருந்து அவர்களுடைய உள்ளத்தை சுத்தப்படுத்துகிறது.
 
இங்கு நீங்கள் வரலாற்று நிகழ்வு ஒன்றை கவனித்தே ஆக வேண்டும். கம்யூனிச நாடுகளில் அல்லது முஸ்லிம் நாடுகளில் கூட கம்யூனிசம் வேகமாக பரவியதற்கு காரணம் என்ன? கிறித்தவர்கள் பொருளாதார வசதி படைத்தவர்கள் மக்களை தங்களுடைய வேலைகளுக்காக அனுபவித்து, பிழிந்து, அவர்களை கொண்டு வேலை வாங்கி, அதன்படி செல்வத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.
 
அவர்களுடைய உரிமைகளை அற்பமாக சில்லரை காசுகளாக அவர்கள் கொடுத்தார்கள். அவர்களை நசுக்கி, அவர்களை தங்களுடைய வாழ்க்கையில் ஏறுவதற்காக ஒரு ஏணியாக படுத்தினார்களே தவிர, காலமெல்லாம் தங்களிடத்தில் வேலையாட்களாகவும், அடிமைகளாகவும், கூலி தொழிலாளிகளாகவும் இருக்க வேண்டும் என்றே அவர்கள் எண்ணினார்கள். 
 
இப்படிப்பட்ட நேரத்தில்தான் சோசியலிசம், பொருளாதாரம் அனைவருக்கும் சொந்தமானது இந்த அடிப்படையை வைத்து இந்த கம்யூனிசம் உருவானது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 
இஸ்லாம் அல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கி அங்கே அவர்கள் சிக்கி இருந்தார்கள் என்றால் ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் முஸ்லிம் நாடுகளையே இந்த கம்யூனிசம் விட்டுவைக்கவில்லை. முஸ்லிம் நாடுகளை சீரழித்ததுக் கொண்டிருக்கின்றது. 
 
இதற்கு என்ன காரணம்? அங்கு உள்ளவர்கள் ஸக்காத்தை சரியாக கொடுத்திருந்தால், ஏழைகள் எளியோர்களுக்கான ஹக்கை கொடுத்திருந்தால், நிச்சயமாக அவர்கள் கம்யூனிசம் பரவும் பொழுது இந்த ஏழைகள் இந்த சித்தாந்தத்திற்கு அடிமையாக இருக்க மாட்டார்கள். பல செல்வந்தர்கள் தன்னுடைய ஆசாபாசத்திற்காக, தன்னுடைய ஹராமான இசைக்காக, ஓர் இரவின் இச்சைக்காகவேண்டி பல கோடி டாலர்களை செலவு செய்வார்களேயானால், தன்னுடைய ஏழை தொழிலாளிக்கு ஒரு அடிப்படைத் தேவைக்கு சில காசுகளை செலவு செய்வதைக் கூட பெரிதாக கருதினார்கள்.
 
இதுதான் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சோதனையாக வந்தது என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம். 
 
நாம் அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்விற்காக கொடுக்கும் பொழுது இந்த உலகத்திலும் அல்லாஹ் நமக்கு அந்த செல்வத்தில் பரக்கத் செய்கிறான். மறுமையிலும் நமக்கு பரக்கத் செய்கிறான்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
 
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 261)
 
யார், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் கொடுப்பார்களோ கண்டிப்பாக இந்த ஸக்காதானது தன்னுடைய பொருள்களுக்கு உண்டான வளர்ச்சியாக இருக்கும். அல்லாஹுத்தஆலா அவர்களுடைய செல்வங்களை பாதுகாப்பான். அந்த செல்வத்தில் அல்லாஹ் அவருடைய அருள்வளங்களை செய்வான். 
 
ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
 
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
 
அல்லாஹ் வட்டியை அழிப்பான். இன்னும், தர்மங்களை வளர்ப்பான். பெரும் பாவியான மகா நிராகரிப்பாளரான ஒவ்வொருவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 2 : 276)
 
எந்த வியாபாரத்தில் வட்டி கலந்ததோ அந்த வியாபாரம் உருப்படாது. எந்த கொடுக்கல்-வாங்கலில் வட்டி கலந்ததோ குறிப்பாக முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
காஃபிர்களை போன்று முன்னேறுவதற்காக இதுதான் வழி என்று எந்த ஒரு முஸ்லிம் வியாபாரி வட்டியை தேர்ந்தெடுப்பானோ, வட்டியை ஹலாலாக்கி கொள்வானோ, கண்டிப்பாக ஒருநாள் அவன் எப்பேற்ப்பட்ட கோபுரத்தின் உச்சியில் இருந்தாலும் சரி, அவன் தெருக்கோடியில் வந்து நிற்கக்கூடிய நிலைமைக்கு அல்லாஹ் கொண்டு வந்து விடுவான்.
 
வட்டியை அல்லாஹ் ஒழிப்பான். தர்மத்தை அல்லாஹ் வளர்த்தே தீருவான். 
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ ۚ وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ
 
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகிறான். நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அதற்கு அவன் (சிறந்த) பகரத்தை ஏற்படுத்துவான். உணவளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன். (அல்குர்ஆன் 34 : 39)
 
அல்லாஹ்வுடைய இந்த வசனத்தின் மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸின் மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டும். அல்லாஹ்வினுடைய வாக்கின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, நபியின் வாக்கின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இந்த ஸக்காத்தையும், தர்மத்தையும் செய்து பாருங்கள்; கண்டிப்பாக உடனுக்குடன் அல்லாஹுத்தஆலா எத்தகைய பிரதிபலனை, நன்மைகளை, பரக்கத்துகளை கொடுக்கின்றான் என்று பாருங்கள்.
 
அல்லாஹ் கூறுகின்றான்: நீ ஒரு ரூபாய் செலவு செய்தால் அதற்குரிய கூலி அதுபோன்ற ஒரு ரூபாய் உனக்கு உடனே கிடைத்தே தீரும். பத்து மடங்காக அது கிடைக்கும். யார் ஒரு நன்மையை செய்வாரோ அவருக்கு அது பத்து மடங்காக கிடைக்கும். 
 
இன்று நமது உள்ளம் எப்படி என்று சொன்னால், அது ஒரு கணக்கு வைத்திருக்கிறது. எதுவரை அல்லாஹ்வுடைய இன்னும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் உடைய கணக்கிற்கு நாம் தலைசாய்க்க மாட்டோமோ அதுவரை ஈமான் வராது. அந்த அமல்களிலே பரக்கதை பார்க்க முடியாது.
 
நாம் என்ன சொல்கிறோம்; முதலில் எனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்கட்டும். அதிலிருந்து நாம் அப்புறமா பார்க்கிறேன் கொடுப்பதற்கு என்று சொல்கிறோம்.
 
 ஆனால், அல்லாஹ் என்ன சொல்கிறான்:
 
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
 
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (அல்குர்ஆன் 2 : 3)
 
நம்முடைய பாக்கெட்டில் நம்முடைய கையில் என்ன இருக்கிறதோ அதிலிருந்து அல்லாஹ்வுக்காக நாம் ஒதுக்குவோம். அல்லாஹ்விற்காக ஏழைகளுக்கு ஒதுக்குவோம். பிறகு பாருங்கள் அல்லாஹ் எப்படி கொடுக்கின்றான் என்று. 
 
நாம் என்ன செய்கிறோம் நாம் வைத்திருப்பதில்எல்லாம் ஏதோ நாமாக வைத்திருப்பதைப் போல இன்னும் ஏதோ நாமாக உருவாக்கியதை போல பதுக்கி வைத்துக்கொண்டு இது எல்லாம் நானும் சேர்த்து வச்சது இது அல்லாமல் அல்லாஹ் எனக்கு எங்கிருந்தாவது கொடுத்தாள் அதிலிருந்து நாம் செய்யலாம் என்பதாக அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவை பாருங்கள். அவர்கள் கூறுகிறார்கள்: 
 
" مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا "
 
ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலையில் எழும் பொழுது இரண்டு வானவர்கள் இறங்குகிறார்கள். அந்த இரண்டு வானவர்களில் ஒருவர் துஆ கேட்கிறார்; யார் தர்மம் செய்தார்களோ அவர்களுக்கு நீ பகரம் கொடுப்பாயாக! தர்மம் செய்ததற்கு நீ அவர்களுக்கு கைமாறு செய்வாயாக! செல்வத்தில் நீ அவர்களுக்கு பரக்கத்தை கொடுப்பாயாக என்று வானவர் கேட்கிறார்‌. இன்னொரு வாணவர் துஆ கேட்கிறார்; யா அல்லாஹ்! யார் அல்லாஹ்வுடைய பாதையிலே தர்மம் செய்யாமல் தடுத்து கொள்கிறானோ அவருடைய செல்வத்திற்கு நாசத்தை கொடுப்பாயாக! என்று.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1442.
 
இன்னும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகின்றார்கள்: 
 
مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ
 
ஸகாத், சதக்கா கொடுப்பதால் செல்வம் குறைந்துவிடாது.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2588.
 
மறுமைக்காக, சொர்க்கத்திற்காக படைக்கப்பட்டவர்கள்தான் இந்த செல்வத்தை அல்லாஹ் விரும்பிய வழியில் செலவு செய்வார்கள். அடியார்களுக்கு செல்வத்தைக் கொடுத்து அவர்களும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்கு, நன்றி செலுத்துவதற்கு அவர்கள் காரணமாக இருப்பார்கள்.
 
இன்று, எத்தனையோ ஏழைகளை பார்த்து பேசும்பொழுது, அவர்கள் அல்லாஹ்வை குறைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விதியை குறிப்பிடுகின்றார்கள். அது தவறு. 
 
ஆனால் அதற்கு ஒரு காரணமாக அவர்களை சுற்றி உள்ள செல்வந்தர்கள் இருந்து விடுகிறார்கள். அவர்களுடைய குடும்பத்தில் உள்ள செல்வந்தர்கள் இருந்து விடுகிறார்கள். அவர்களுடைய நண்பர்களில் உள்ள செல்வந்தர்கள் இருந்து விடுகிறார்கள். 
 
என்னுடைய உறவினர் இவ்வளவு செல்வந்தராக இருக்கின்றார். நான் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன். எனக்கு அல்லாஹ் எதையும் கொடுப்பதில்லை. அவன் எவ்வளவு நல்லா இருக்கான் என்று புலம்புகிறார்கள். 
 
அப்படி அவர் கூறுவதற்கு காரணம், அவரை சுற்றி உள்ள செல்வந்தர்கள்தான். 
 
அப்படிப்பட்ட செல்வந்தர்கள் நண்பர்களில் இருக்கலாம். உறவினர்களில் இருக்கலாம். அண்டை வீட்டார்களில் இருக்கலாம். முஹல்லா வாசிகளில் இருக்கலாம். சமுதாயத்திலே இருக்கலாம். 
 
அல்லாஹ்வுடைய ஹக்கை ஏழைகளுக்கு தேடிச்சென்று கொடுத்து பாருங்கள். அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ் என் கஷ்டத்திற்கு உதவுவதற்கு நல்ல மக்களை இந்த சமுதாயத்தில் வைத்திருக்கிறான். என்னுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு எனக்கு உதவக் கூடிய நல்ல அடியார்களை அல்லாஹ் இந்த சமுதாயத்தில் வைத்திருக்கின்றான் என்று அந்த மனிதன் அல்லாஹ்விற்கும் நன்றி செலுத்துவான். செல்வம் உள்ள அந்த நல்லவர்களுக்கும் நன்றி உள்ளவனாக இருப்பான். 
 
இப்படிப்பட்ட ஒரு அடிப்படை இந்த ஸக்காத்தில் இருக்கிறது. அல்லாஹு தஆலா இந்த செல்வத்தை பற்றி சொல்லும் பொழுது,
 
مَّا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنكُمْ ۚ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
 
அல்லாஹ் தனது தூதருக்கு (சுற்றி உள்ள) ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து எதை சண்டையின்றி உரிமையாக்கிக் கொடுத்தானோ அது அல்லாஹ்விற்கும் தூதருக்கும் (அதாவது, தூதர் மற்றும் தூதரின்) உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். ஏனெனில், செல்வம் உங்களில் உள்ள செல்வந்தர்களுக்கு மத்தியில் மட்டும் சுற்றக்கூடிய பொருளாக ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. இன்னும், தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை உறுதியாக பற்றிப் பிடியுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ அதை விட்டும் விலகிவிடுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் ஆவான். (அல்குர்ஆன் 59 : 7)
 
இன்று, பல செல்வந்தர்களை பார்க்கலாம்; அவர்கள் அன்பளிப்பு செய்வதை, விருந்து கொடுப்பதை தங்களுக்குல் மட்டுமே சுறுக்கி கொள்வார்கள். ஏழைகளின் பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள்.
 
இப்படிப்பட்ட பழக்கத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கடுமையாக கண்டிக்கிறார்கள்.
 
நம்முடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியை வெளிப்படுத்த கூடியதுதான் வலிமா விருந்து என்பது. அந்த வலீமா விருந்தை பற்றி சொன்னார்கள்:
 
«شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ، يُدْعَى إِلَيْهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْمَسَاكِينُ، وَمَنْ لَمْ يُجِبِ الدَّعْوَةَ، فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ»
 
வலிமா விருந்துகளில் மோசமான விருந்து எதுவென்றால், எந்த வலிமாவில் செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் விடப்பட்டார்களோ அது மோசமான வலிமா என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 5304.
 
இன்று பல செல்வந்தர்கள் பெரிய ஸ்டார் ஹோட்டலில் தன்னுடைய வலிமாக்களை வைக்கிறார்கள். இது கூடுமா, கூடாதா? என்று நான் பேசவில்லை. வைக்கப்பட்டால் ஒரு ஏழைகள் வந்து கலந்து கொள்ள முடியுமா? பெரிய ஆடம்பரமான இடத்தில் வைக்கப்பட்டால் சாதாரணமான ஒரு ஏழை உறவினர் அங்கு வந்து எப்படி சேர முடியும்? இதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இன்று, ஸக்காத் உடைய மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாக அல்லாஹ் நமக்கு கூறியிருப்பது, இஸ்லாம் பரவ வேண்டுமென்றால், இஸ்லாமை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வரவேண்டுமென்றால் அதற்கு ஸக்காத் சரியான முறையில், அல்லாஹ் கூறி இருக்கின்ற முறையில் அந்த வகையினருக்கு கொடுக்கப்பட வேண்டும். 
 
காரணம், அல்லாஹ் கூறி இருக்கக்கூடிய அந்த எட்டு வகையினரில் ஸக்காத் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஒருவர், யார் இஸ்லாமிய மார்க்கத்திற்கு புதிதாக வந்து இருக்கிறார்களோ அவர்கள்.
 
இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதி பெறுவதற்காக, இந்த சமுதாயம் நம்மை அணைத்துக்கொண்டது, சேர்த்துக்கொண்டது என்று அவர் புரிந்து கொள்வதற்காக, புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்கு இஸ்லாமை தழுவாமல் இருக்கக்கூடிய அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அவர்களுக்கும் இந்த ஸக்காத்தை கொடுக்கும்பொழுது, இந்த மார்க்கம் நம்முடைய உறவினர் இஸ்லாத்தை ஏற்றால் அவருக்கும் இந்த மக்கள் உதவி செய்கின்றார்கள்; நமக்கும் இந்த மக்கள் உதவி செய்கின்றார்களே என்று இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்பை புரிந்து அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார்கள். 
 
என்ற ஒரு காரணத்தை அல்லாஹு ரப்புல் ஆலமீன் குர்ஆனிலே கூறுகின்றான்:
 
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
 
(கடமையான) ஸகாத்துகள் - வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும், அவர்களின் உள்ளங்கள் (புதிதாக இஸ்லாமுடன்) இணைக்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை உரிமையிடுவதற்கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் இருப்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். இது அல்லாஹ்விடமிருந்து (விதிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட) கடமையாக இருக்கிறது. இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான். (அல்குர்ஆன் 9 : 60)
 
இப்படி ஏராளமான நன்மைகளை அல்லாஹ் தஆலா இந்த ஸக்காதில் வைத்திருக்கிறான். ரமலான் உடைய மாதம் வரப்போகின்றது. யார் ஸக்காத் கொடுப்பதில் அலட்சியமாக இருந்தார்களோ அவர்கள் அந்த ஸகாத்தை கணக்கிட்டு அதற்குண்டான ஹக்குகளை எடுத்து வைக்க வேண்டும். 
 
அதுபோன்று யாருக்கு இது குறித்து விளக்கம் இல்லையோ அவர்கள் அறிஞர்களை அணுகி, அதற்குரிய விளக்கங்களைக் கேட்டு தெரிந்து, ஜகாத்தை சரியாக நிறைவேற்றி, ஏழை எளியோருக்கு, வரியோர்களுக்கு, தேவை உடையவர்களுக்கு, கடனாளிகளுக்கு அவர்களுடைய ஹக்குகள் போய் சேர்வதற்கு காரணமாக நாம் இருக்க வேண்டும்.
 
அல்லாஹுத்தஆலா தொழுகையையும் ஸகாத்தையும் பிரிக்கவில்லை. தொழுகை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால், அந்த தொழுகையுடன் இணைந்த ஸகாத்தையும் நாம் சரியாக, அல்லாஹ்விற்காக, மறுமையின் வீட்டை தேடியவர்களாக கொடுக்க வேண்டும். 
 
அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றி, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ الْهَاشِمِيِّ، أَنَّ عَبْدَ الْمُطَّلِبِ بْنَ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ رَبِيعَةَ بْنَ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، وَالْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ قَالَا: لِعَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ، وَلِلْفَضْلِ بْنِ عَبَّاسٍ، ائْتِيَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ مَالِكٍ، وَقَالَ فِيهِ: فَأَلْقَى عَلِيٌّ رِدَاءَهُ، ثُمَّ اضْطَجَعَ عَلَيْهِ، وَقَالَ: أَنَا أَبُو حَسَنٍ الْقَرْمُ، وَاللهِ، لَا أَرِيمُ مَكَانِي حَتَّى يَرْجِعَ إِلَيْكُمَا ابْنَاكُمَا، بِحَوْرِ مَا بَعَثْتُمَا بِهِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَالَ فِي الْحَدِيثِ: ثُمَّ قَالَ لَنَا «إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ، وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ، وَلَا لِآلِ مُحَمَّدٍ» وَقَالَ أَيْضًا: ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «ادْعُوَا لِي مَحْمِيَةَ بْنَ جَزْءٍ»، وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَهُ عَلَى الْأَخْمَاسِ (صحيح مسلم  - 1072)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/