بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
வெற்றிக்கு வழி எது?
مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றிப் பிடித்து அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹலாலாக்கி, அல்லாஹ் ஹராமாக்கிய ஒவ்வொரு காரியத்தில் இருந்தும் விலகி, அல்லாஹ்வை பயந்து, ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை பின்பற்றி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுபஹானஹு தஆலா நம்மை மன்னிப்பானாக! நம்முடைய இம்மை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் சீர் செய்வானாக! நம்முடைய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், சோதனைகள், ஆபத்துகள் அனைத்திலிருந்தும் அல்லாஹு தஆலா நம்மை பாதுகாத்து அவன் பக்கம் திரும்பிய, அவனை முன்னோக்கிய, அவனுடைய வேதத்தைப் பற்றி பிடித்து அவன் கூறுகின்ற வழியில் நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடக்கூடிய நல்ல மக்களாக ஆக்கி அருள்வானாக!
அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹு சுபஹானஹு தஆலா இந்த உலகத்தை ஒரு சோதனைக் கூடமாக அமைத்திருக்கிறான். இந்த துனியா சோதனைகளால் சூழப்பட்ட ஒன்று. யாராக இருந்தாலும் சரி, எந்த சமுதாயமாக இருந்தாலும் சரி கண்டிப்பாக அந்த சமுதாயம் சோதிக்கப்படும். சோதனையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
அல்லாஹு தஆலா அவனுடைய ஞானம், அவனுடைய அறிவு, அவனுடைய அந்த ஏற்பாடு இவற்றை நம்முடைய அறிவால் நாம் சூழ்ந்து அறிய முடியாது. அல்லாஹு சுபஹானஹு தஆலா நம்மை ஏன் சோதிக்கின்றான்? என்பதிலே மிகப்பெரிய ஞானம், தத்துவம் இருக்கிறது. அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களை சில நேரங்களில் மகிழ்ச்சியை கொண்டும், நன்மைகளைக் கொண்டும் சோதிப்பான். சில நேரங்களில் கவலையை கொண்டும், துன்பங்களை கொண்டும் சோதிப்பான். சில நேரங்களில் செல்வத்தை கொடுத்தும் சோதிப்பான். சில நேரங்களில் வறுமையைக் கொண்டும் சோதிப்பான். சில நேரங்களில் வெற்றியை கொடுத்து சோதிப்பான்.
இப்படியாக அல்லாஹ்வுடைய சோதனையின் வகைகள் ஒவ்வொரு நேரத்திலும் மாறுபட்டதாகவும் மக்களுடைய நிலைக்கு ஏற்ப மாறுபட்டதாகவும் இருப்பதை நாம் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் பார்க்கிறோம். அல்லாஹு சுபஹானஹு தஆலா முஃமீன்
களுடைய பொறுமையை இதன் மூலமாக சோதிக்கின்றான். அவர்களுடைய நன்றி உணர்வை அல்லாஹு தஆலா சோதிக்கின்றான். அல்லாஹ்வுடைய நிஃமத்களை பெறும் போது அந்த நிஃமத்துகளுக்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றார்களா? அந்த நிஃமத்களை அல்லாஹ்விற்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்க்காக செலவழிக்கிறார்களா? அந்த நிஃமத்தை அல்லாஹ்விற்கு பிடித்தமான வழிகளில் செலவு செய்து அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு நன்மையை சேர்ப்பிக்கிறார்களா? என்று அல்லாஹு தஆலா நிஃமத்துகளைக் கொடுத்து அல்லாஹ் சோதிக்கின்றான்.
அல்லாஹு தஆலா வறுமையை கொண்டு, துன்பத்தைக் கொண்டு, எதிரிகளின் அச்சுறுத்தலைக் கொண்டு, ஆபத்துகளைக் கொண்டு, வானத்திலிருந்து, பூமியிலிருந்து சில அழிவுகளை இறக்கியும் அல்லாஹ் சோதிக்கின்றான். அப்போது அல்லாஹு சுபஹானஹு தஆலா அடியார்களை பார்க்கிறான். இவர்கள் பொறுமையாக இருக்கிறார்களா? இதைத் தாங்கிக்கொள்கிறார்களா? அல்லாஹ்வுடைய இந்த விதியை ஏற்றுக் கொண்டு இதில் எப்படி பொறுமையாக இருந்து,ஈமானிலும் இஸ்லாமிலும் இபா தத்திலும் பொறுமையாக இருந்து, அல்லாஹ்வை முன்னோக்கி மார்க்கத்தின் பக்கம் திரும்பி அல்லாஹ்விடம் இதற்குண்டான பாதுகாப்பை தேடுகின்றார்களா? என்று அல்லாஹு தஆலா பொறுமையை சோதிக்கின்றான் சகோதரர்களே!
நிஃமத்தின் போது ஷுக்ரை அல்லாஹ் சோதிக்கின்றான். பிரச்சனைகள், துன்பங்களின் போது நம்முடைய சப்ரை அல்லாஹு தஆலா சோதிக்கின்றான். யார் துன்பங்களின் போது சிரமங்களின் போது ஆபத்துகளின் போது பொறுமையாக இருப்பாரோ, அது போன்று அல்லாஹ்வுடைய நிஃமத்கள், செல்வங்கள், வசதிகள் கிடைக்கும் போது அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவராக இருப்பாரோ, அல்லாஹ்வை முன்னோக்கி அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தன்னை சீர்திருத்திக் கொண்டிருப்பாரோ அவர் தான் மிகப் பெரிய வெற்றி அடைந்தவர். அவர் தான் உண்மையாளர். அவருடைய ஈமான் உண்மையானது. அவருடைய இஹ்லாஸ் உண்மையானது. அல்லாஹு சுபஹானஹு தஆலா அத்தகைய சிறந்த மக்களைத் தான் அவன் மறுமையிலே அவனுடைய நல்லடியார்களோடு சேர்த்து சொர்க்கத்திலே பிரவேசிக்க வைக்கின்றான்.
ஸுரத்துல் அன்கபூத் உடைய ஆரம்ப வசனம், அல்லாஹு தஆலா கேட்பதை பாருங்கள்.
أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
மனிதர்கள்‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப்பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்துகொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்துகொள்வான். (அல்குர்ஆன் 29 : 2-3)
அன்பிற்குரியவர்களே! மிகப் பெரிய எச்சரிக்கை நிறைந்த வசனம். அல்லாஹு தஆலா இந்த சோதனைகளினால் உண்மையானவர்கள் யார்? என்று பிரித்து விடுகின்றான். பொய்யர்கள் யார்? என்று பிரித்துவிடுகின்றான். தடுமாற்றம் உள்ளவர்கள் யார்? என்று பிரித்து விடுகின்றான். சந்தேகத்தில் இருப்பவர்கள் யார்? என்று பிரித்து விடுகின்றான். துனியாகவுக்காக இருப்பவர்கள் யார்? மறுமைக்காக இருப்பவர்கள் யார்? என்பதை அல்லாஹு தஆலா பிரித்து விடுகின்றான் சகோதரர்களே!
அல்லாஹு தஆலா சூரத்துல் அன்பியாவுடைய 35 ஆவது வசனத்திலே கூறுவதைப் பாருங்கள்.
وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ
நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 21 : 35)
'பிஷர்' -தீமை, மனிதன் எதை தீமையாக கருதுகிறான்? வறுமையை தீமையாக கருதுகிறான். அதுபோன்று நஷ்டத்தை தீமையாக கருதுகிறான். இப்படி உலகத்திலே அவனுக்கு மன நெருக்கடிகளை கொடுக்கக்கூடிய ஒவ்வொன்றையும் அவன் தீமையாக கருதுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான், அந்தத் தீமையைக் கொண்டு உன்னைச் சோதிப்போம். நன்மை என்றால் எது? எதுவெல்லாம் மனிதனுடைய மனதிற்கு மகிழ்ச்சியை தருமோ,எது கிடைத்தால் எனக்கு நல்லது, முன்னேற்றம் என்று நினைக்கிறானோ அதை மனிதன் நன்மையாக கருதுகிறான். அந்த நன்மையை கொண்டும் உன்னை நாம் சோதிப்போம்.
அன்பு சகோதரர்களே! இந்த வசனத்திலிருந்து நமக்கு என்ன புரிய வருகிறது என்றால், வறுமை மட்டும், பிரச்சனைகள் மட்டும் சோதனை அல்ல. செல்வமும் மகிழ்ச்சியும் நம்முடைய வெற்றியும் கூட மிகப்பெரிய நமக்கு ஒரு சோதனை. அல்லாஹு தஆலா கூறுகிறான், 'وَإِلَيْنَا تُرْجَعُون நீங்கள் நம்மிடம்தான் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ஆகவே, எந்த நிலையில் நீங்கள் எப்படி இருந்தீர்கள்? என்பதை நீங்கள் சுதாரித்துக் கொள்ளுங்கள். யோசித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அமல்களுக்கு ஏற்பத்தான் நாளை மறுமையிலே அல்லாஹு தஆலா உங்களுக்கு சொர்க்கத்தை தருவான். உங்களுடைய உலக நிலைகளை வைத்து அல்ல.
இந்த உலகத்திலே சிரமத்தில் இருந்தவர்கள் எல்லாம் நாளை மறுமையிலே நரகத்திற்கு செல்வார்கள்; அல்லது மகிழ்ச்சியிலே செல்வத்தில் இருந்தவர்கள் எல்லாம் நாளை சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று அல்ல. இந்த உலகத்தின் நிலைகளின் அடிப்படையிலே அல்லாஹு தஆலா மறுமையுடைய தீர்ப்பு இருக்காது. இங்கே ஏழையாக இருந்தவன் நாளை சொர்க்கத்திற்கு செல்லலாம். இங்கே வசதியிலே, மகிழ்ச்சியிலே, சந்தோசத்திலே இருந்தவன் நாளை நரகத்திற்கு செல்லலாம்.
அன்பு சகோதரர்களே! ஈமான், அமல் அடியான் எப்படி இருந்தான்? என்பதை வைத்து தான் அல்லாஹ்வை முன்னோக்கினானா? அல்லாஹ்வின் பக்கம் திரும்பினானா? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலைநிறுத்தினானா? அல்லாஹ்வுடைய சட்டங்களை பேணினானா? ஹராமை விட்டு தங்களை விலக்கிக் கொண்டார்களா? இந்த அடிப்படையில் தான் மறுமையின் வெற்றி இருக்கிறது.
அல்லாஹ் சுபஹானஹு தஆலா சூரத்துல் அஃராப் உடைய 168 வது வசனத்திலே இன்னும் தெளிவாகக் கூறுகிறான்.
وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக இன்பங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம். (அல்குர்ஆன் 7 : 168)
அன்புசகோதரர்களே! அல்லாஹு தஆலா ஏன் சோதிக்கிறான்? சோதனையினுடைய ஞானம் என்ன? அல்லாஹு தஆலா தன்னுடைய அடியானை தன் பக்கம் திருப்ப விரும்புகிறான். தன்னை விட்டு தவறிவிட்ட அடியானை, தன்னை விட்டு விலகி விட்ட அடியானை, தன்னுடைய பாதையிலிருந்து பிசகி விட்ட அடியானை தன் பக்கம் திரும்ப கொண்டு வரவிரும்புகிறான்.
அன்பு சகோதரர்களே! அல்குர்ஆனை அறியாதவர்கள், அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் உண்மையை புரியாதவர்கள், சோதனை வரும் போது அல்லாஹ்வை விட்டு விட்டு விரண்டோடுகிறார்கள்.கவலை என்ன? மிகப்பெரிய துக்கமான அந்த செய்தி என்ன? எவ்வளவு சோதனைகள் வருமோ, அடியான் அல்லாஹ்வின் பக்கம் ஓடோடி வர வேண்டும். செல்வம் வந்தாலும் சரி, அது போன்று பிரச்சினைகள் வந்தாலும் சரி, அது அல்லாஹ்வின் பக்கம் ஒரு அடியானுக்கு நெருக்கத்தை கொடுக்க வேண்டும்.
இன்று அன்புக்குரிய சகோதரர்களே! இரண்டு நிலையிலும் நாம் சொல்லப் போனால் தோற்றுவிட்டோமோ! அல்லாஹ்வுடைய இந்த பரிட்சையில் நாம் நஷ்டம் அடைந்து விட்டோமா! என்று நாம் நம்மை பரிசோதிக்க கூடிய, நம்மை கேள்வி கேட்டுக் கொள்ளக் கூடிய நிலையில் இருக்கிறோம். இன்று மக்களுடைய நிலைமை என்ன?வறுமையிலிருந்து அவர்களுடைய நிலைமை செல்வத்தின் பக்கம் மாறும் பொழுது நெருக்கடியில் இருந்து அவர்கள் வாழ்க்கை வசதியின் பக்கம் மாறும் போது, அப்போதும் அல்லாஹ்வை விட்டு தூரமாகிவிடுகின்றார்கள்.
மற்றும் பலர் அவர்களுடைய வாழ்க்கையிலே நெருக்கடிகள், பிரச்சினைகள், குழப்பங்கள், ஏதாவது நஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும் போது, அப்போதும் அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்கள் தூரமாக சென்று விடுகிறார்கள். இது மிகப்பெரிய ஒரு கவலைக்குரிய ஒரு நிலை. அடியானுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய செல்வம் அந்த
அடியானை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கவில்லை என்றால் அது அவனுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும்.
ஒரு அடியானுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய வறுமை, பிரச்சனை அது அவனை அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வந்து நிறுத்தவில்லை என்றால் அவனுக்கு துனியாவும் முடிந்தது. மறுமையும் மிக நஷ்டமானது. துனியாவிலும் அவன் பிரச்சனைக்கு ஆளாகி விட்டான், மறுமையினுடைய பிரச்சினை இதை விட பெரிய பிரச்சனை. அல்லாஹ்வை விட்டு விட்டு, அல்லாஹ்வின் பக்கம் திரும்பாமல், நம்முடைய பிரச்சினைகளிலே நாம் தீர்வு காணலாம். அல்லது நம்முடைய வெற்றியை, மேலும், வெற்றியைக் கொண்டு உறுதி படுத்தலாம் என்று யாராவது நினைப்பார்களேயானால், அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு செல்வத்தை கண்ணியத்தை கொடுத்தான். ஆட்சி, அதிகாரத்தை கொடுத்தான். ஆனால், அவர்களிலே பலர், அந்த ஆட்சி, அதிகாரம்,
அந்த செல்வம், இந்த நிஹ்மத்களைத் தக்க வைப்பதற்கு இஸ்லாம் தடையாக இருக்குமோ என்று, அல்லாஹ்வுடைய மார்க்கம் தடையாக இருக்குமோ என்று, இஸ்லாமை புறக்கணித்துவிட்டு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஒதுக்கிவிட்டு தங்களுடைய துனியாவை ஆட்சியைப் பாதுகாக்க நினைத்தார்கள், நினைக்கிறார்கள்.
அல்லாஹு தஆலா இறுதியில் அந்த ஆட்சியையே அவர்களுக்கு சோதனையாக ஆக்கிவிடுவான். அந்த ஆட்சியையே அந்த நிஹ்மத்துகளையே அவர்களுக்கு அல்லாஹு தஆலா ஆபத்தாக ஆக்கிவிடுவான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அது போன்று தான் சகோதரர்களே! ஒரு மனிதனுக்கு துன்பங்கள், துயரங்கள் வரும்பொழுது இதை எப்படி சமாளிப்பது? என்று அல்லாஹ்விடம் திரும்பாமல் அவன் தீர்வுகளை தேடும் போது மேலும் மேலும் பல சிக்கல்களிலே, மேலும் மேலும் பல இன்னல்களிலும், துன்பங்களிலும் சோதனைகளிலும் அவன் சிக்கிக் கொள்வான். ஒருகாலும் அந்த சோதனையிலிருந்து அவன் வெளியே வரமுடியாது.
அல்லாஹு சுபஹானஹு தஆலா அவ்வப்போது அடியார்களுக்கு தன்னுடைய இந்த சோதனையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பான். இந்த டெஸ்டை அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய அடியார்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் காட்டி கொண்டே இருப்பான்.
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்கள் சிலவற்றின் தண்டனையை அவர்களுக்கு (இம்மையிலும்) சுவைக்க வைக்கிறான். (அல்குர்ஆன் 30 : 41)
அல்லாஹு தஆலா அவனுடைய அந்த தண்டனையை, அவனுடைய பிடியை நமக்கு வெளிப்படுத்தி, அந்த பாவத்தில் இருந்து மீண்டு, அந்த குற்றத்தில் இருந்து மீண்டு, இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களின் பக்கம், அல்லாஹ்வுடைய இந்த தீனின் பக்கம் வர வேண்டும் என்பதற்காக, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்படிபட்ட சோதனைகளை நமக்கு காட்டுகின்றான்.
அன்பு சகோதரர்களே! இந்த உலகத்திலே மனிதர்களுடைய குழப்பங்கள்,இந்தப் பிரச்சனைகள்,ஆபத்துகளுக்கு அல்லாஹ்வை நிராகரிப்பதும் அல்லாஹ்விற்கு இணை வைப்பதும் மக்கள் பெரும் பாவங்களில் ஈடுபடுவதும் தான் மிகப் பெரிய காரணம் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதுபோன்று, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது, அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி, வழிபட்டு, ஷிர்க்கில் இருந்து குஃப்ரில் இருந்து விலகி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றி பிடித்து, ஹராம் பெரும் பாவங்களிலிருந்து விலகி வாழ்வது. இது தான் நன்மைக்குரிய காரணம்.
நன்மையுடைய காரணம் நம்முடைய அறிவு அல்ல. நம்முடைய திறமை அல்ல. நம்முடைய படிப்பு அல்ல. நம்முடைய அரசியல் அல்ல. நன்மைக்கு காரணம் ஈமான், தவ்ஹீது, அமலசாலிஹ். ஆபத்துகளுக்கு பிரச்சினகளுக்கு குழப்பங்களுக்கு காரணம் நம்முடைய படிப்பின்மையோ அல்லது நம்முடைய இயலாமையோ அல்லது வேறு காரணங்களை ஒரு முஸ்லிம் கூறமாட்டான். 'குஃப்ர்' இறை நிராகரிப்பு, 'ஷிர்க்' இணைவைத்தல் பெரும்பாவங்களிலே ஈடுபடுவது. இது தான் இந்த உலகத்திலே மிகப்பெரிய சோதனைக்கு காரணம்.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் சுபஹானஹு தஆலா நமக்கு இதை அழகாக தெளிவுபடுத்துகிறான். சூரா முஹம்மதுடைய ஏழாவது வசனத்தைப் படித்துப் பாருங்கள்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை பலப்படுத்துவான். உறுதிப்படுத்துவான்.
(அல்குர்ஆன் 47 : 7)
அன்புசகோதரர்களே! அல்லாஹ்விற்கு என்ன உதவி தேவைப்படுகிறது? அல்லாஹு தஆலா மனிதர்களுடைய உதவியில் இருந்து அவன் முற்றிலும் தேவையற்றவன். அவன் கூறுகிறான் நீங்கள் அல்லாஹ்விற்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவுவான் என்று. அறிஞர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பலமாகப் பற்றிப் பிடித்து அல்லாஹ்வுடைய வேதத்தின் படியும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவின் படி வாழ்ந்து இந்த மார்க்கத்தை பரப்புவதற்காக.
அல்லாஹ்வுடைய தீனை பாதுகாத்து அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அந்த மக்கள் இந்த தீனிலே வருவதற்கு உண்டான முயற்சிகளை தியாகங்களை செய்வதை அல்லாஹு தஆலா நாம் அவனுக்கு செய்யக்கூடிய உதவியாக கூறுகிறான். அன்பு சகோதரர்களே! இந்த இடத்திலே ஒரு முக்கியமான விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
இன்று முஸ்லிம் வாலிபர்கள் மீது ஒரு பக்கம் பல பழிகளும் குற்றங்களும் வீணாக சுமத்தப்படுகின்றன. இந்த சமுதாயம் பல பழிகளைக் கொண்டு வீணாக சித்தரிக்கப்படுகின்றது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நம்முடைய வாலிபர்களில் சிலர் மார்க்கத்திற்கு உதவுகிறோம் முஸ்லிம்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறி அறிஞர்களின் வழிகாட்டுதல்களை மீறி அவர்கள் எடுக்கக் கூடிய அந்த செயல், இது அல்லாஹ்விற்கு உதவக்கூடிய செயல் அல்ல.
இது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவக் கூடிய செயல் அல்ல. முஸ்லிம்களுக்கு உதவ கூடிய செயல் அல்ல. மாறாக தங்களையும் அழிவிலே தள்ளி, தங்களுடைய சமுதாயத்தையும் அழிவிலே தள்ளி, தங்களுடைய மார்க்கத்தை அழிவிலே தள்ளக் கூடிய காரியம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் எடுக்கக்கூடிய அந்த பயங்கரவாத போக்கோ அல்லது பழி தீர்ப்பதற்காக அவர்கள் எண்ணக்கூடிய அந்த வழிமுறையோ நிச்சயமாக அல்லாஹ்வுடைய மார்க்கம் அங்கீகரிக்காத ஒன்று.
மார்க்கத்தின் அறிஞர்கள் நம்முடைய ஸஹாபாக்களில் இருந்து தாபியீன்களில் இருந்து இன்று வரை உள்ள கல்வி மான்கள் ஏற்றுக் கொள்ளாத ஒரு வழிமுறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளால் அவர்கள் இஸ்லாமை பாதுகாக்க முடியாது. முஸ்லிம்களை பாதுகாக்க முடியாது. மாறாக மேலும் பல பிரச்சினைகளுக்கும் ஆபத்து
களுக்களும் தான் இந்த உம்மத்தை அவர்கள் தள்ளுவார்கள்.
அன்பிற்குரியவர்களே! இஸ்லாமை பாதுகாக்க வேண்டுமா? முஸ்லிம்களுக்கு உதவி செய்ய வேண்டுமா? அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உதவ வேண்டுமா? அல்லாஹ் கூறுகிறான், அல்லாஹ்விற்கு நீங்கள் உதவினால், அல்லாஹ்வுடைய தீனை உங்களுடைய வாழ்க்கையிலே பின்பற்றுங்கள்; கடைபிடியுங்கள். பிறகு இந்த மார்க்கத்தை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த மார்க்கத்தின் பக்கம் பிற மக்களை அழையுங்கள். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த செல்வம், அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அறிவு, அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த திறமை நாச வேலைகளைச் செய்வதற்காக அல்ல. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நீங்களும் சரியாக புரிந்து, புரிந்த மார்க்கத்தை பிற மக்களுக்கும் புரிய வைத்து இந்த மார்க்கத்தின் வாசல்களைத் திறந்து வைத்து இந்த மார்க்கத்தின் மீது மக்களுக்கு அன்பை, பாசத்தை, நேசத்தை, நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் இந்த மார்க்கத்திற்கு உண்டான வழிகளை உருவாக்குவது தான் சகோதரர்களே!
திறந்து இருக்கக் கூடிய வழிகளை இது போன்ற செயல்களால் மூடுவதோ அல்லது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்படியான செயல்களை செய்து, மக்களை அச்சுறுத்தும் படியான செயல்களை செய்து இன்று பலர் அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பை கொண்டு வருகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்பை கொண்டு வருகிறார்கள். அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும் அவர்களுடைய முயற்சி வெற்றியைத் தராது. மேலும் பல ஆபத்துகளை தான் இந்த சமுதாயத்திற்கு தரும் என்பதை.
அல்லாஹ் கூறுகிறான், சூரத்துல் ஹஜ்ஜுடைய 40, 41 ஆவது வசனத்தைப் படித்துப் பாருங்கள். மூமின்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதாக.
وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
அல்லாஹ்விற்கு உதவக்கூடிய அவர்களுக்கு சத்தியமாக அல்லாஹ் உதவுவான். அல்லாஹ் மிகப்பெரிய வலிமை உள்ளவன். அனைவரையும் மிகைத்தவன். (அல்குர்ஆன் 22 : 40)
உலக மக்களெல்லாம் எவ்வளவு பெரிய சதித் திட்டங்களை கொண்டு வந்தாலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஒரு முஸ்லிம் பற்றி படித்து நேரிய சிந்தனையில் இருக்கின்ற வரை அவர்கள் எந்த விதமான நஷ்டத்தையும் உண்டு பண்ணமுடியாது.
கடைசியாக அப்படியே ஒரு நஷ்டத்தை உண்டு பண்ணினாலும் நம்மை கொல்வதைத்தான் அவர்களுக்கு முடியுமே தவிர நம்முடைய மார்க்கத்தை நம்மிடத்தில் இருந்து பறிக்க முடியாது. அப்படி ஒரு முஸ்லிம் அநியாயமாக கொல்லப்பட்டாலும் அவன் மறுமையிலே அல்லாஹ்விடத்திலே ஷஹிதாக, அல்லாஹ்வுடைய சொர்க்கத்திற்கு தகுந்தவனாகஆகிறான்.
அல்லாஹு சுபஹானஹு தஆலா இதையும் நமக்கு கூறுகிறான்,
قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَا إِلَّا إِحْدَى الْحُسْنَيَيْنِ
காஃபிர்களே! எதிரிகளே! நீங்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எங்களுக்கு எதுவாக இருந்தாலும் சரி, இரண்டில் ஒரு நன்மை எங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும். ஒன்று நாங்கள் வெற்றி கொண்டால் எங்களுக்கு உலகமும் கிடைத்தது. மறுமையும் கிடைத்தது. நாங்கள் கொல்லப்பட்டால் எங்களுக்கு உலகம் தான் அழிந்தது, நாசமானது. ஆனால் மறுமையின் சொர்க்கம் எங்களுக்கு உறுதியானது. (அல்குர்ஆன் 9 : 52)
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் சொல்கிறான் இந்த உலகத்திலே வசதி கிடைக்கும்போது செல்வம் கிடைக்கும் போது முஸ்லிம்களுக்கு ஆற்றல் கிடைக்கும் போது அவர்கள் என்ன செய்வார்கள்?
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
இவர்கள் எத்தகையோர் என்றால், நாம் அவர்களுக்குப் பூமியில் வசதியளித்தால் தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடைசெய்வார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 22 : 41)
அன்பு சகோதரர்களே! நம்மிடத்திலே அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய செல்வம், நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய அறிவு மாற்றார்களின் வழியிலே நாம் பழி தீர்ப்பதற்காக அல்ல. மாற்றார்களின் வழியிலே நம்முடைய மார்க்கத்தை உயர்த்துவதற்காக அல்ல. எவ்வளவு தெளிவாக அல்லாஹ் கூறுகிறான். முஃமின்களுக்கு இந்த பூமியிலே உறுதி கிடைத்தால் வெற்றி கிடைத்தால் பலம் கிடைத்தால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். ஜகாத்தை கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையிலிருந்து அவர்கள் மக்களை தடுப்பார்கள்.
அன்பு சகோதரர்களே! யார் எந்த பின்னணியிலே இயங்குகிறார்கள்? யார் அவர்களை இயக்குகிறார்கள்? என்று தெரியாமல், அவர்கள் பிற சதிகளுக்கு ஆளாகி தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அல்லாஹ் கொடுத்த செல்வங்கள் கோடிக்கணக்கான செல்வங்கள் முஸ்லிம்களிலே எத்தனை ஏழைகளுக்கு அந்த செல்வங்கள் சென்றிருந்தால் பயனுள்ளதாக இருக்கும். எத்தனை ஏழை மாணவர்களுக்கு நோயாளிகளுக்கு தேவையுள்ளவர்களுக்கு சென்றிருந்தால் அல்லது இந்த இஸ்லாமைப் பரப்புவதற்கு எத்தனை கல்வி நிலையங்களை உருவாக்கி இருக்கலாம்.
ஆனால், அவற்றையெல்லாம் செலவு செய்து அதற்கெல்லாம் மேலாக எந்த உயிரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அமானிதமாக தன்னிடத்திலே கொடுத்தானோ அந்த உயிரையும் அழித்துக் கொண்டு அவர்கள் பிற மக்களிடத்திலே பழி தீர்த்து முஸ்லிம் உம்மத்திற்கு உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களே அவர்களை விட இந்த உம்மத்திற்கு நஷ்டத்தை கொடுப்பவர்கள் யாருமில்லை. இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரிகளாக இருந்து நஷ்டத்தை உண்டு பண்ண நினைக்கக் கூடியவர்களை விட, இப்படி பட்ட தவறான புத்தியைக் கொண்டு இந்த உம்மத்திற்கு உதவ நினைக்கக்கூடியவர்கள் கண்டிப்பாக இந்த உம்மத்தை மேலும் மேலும் சோதனைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய அந்த வசனத்தை பாருங்கள். சூறா நூருடைய 55 ஆவது வசனத்தில் மேலும் தெளிவாக அல்லாஹ் கூறுகிறான்.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கைகொண்டு நற்செயல்களையும் செய்துவந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை (ப்பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கிவைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும் படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக்கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன்பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான். (அல்குர்ஆன்24:55)
لَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ
அல்லாஹ் தன்னுடைய வாக்கை ஒருபோதும் மாற்றமாட்டான். (அல்குர்ஆன் 30 : 6)
அல்லாஹ்வை விட உண்மையாக வாக்களிப்பவர் யார் இருக்க முடியும்? அல்லாஹ் கூறுகிறான்; கண்டிப்பாக அல்லாஹ் வாக்களித்து விட்டான். யாருக்கு வாக்களித்திருக்கிறான்? உங்களிலே யார் உறுதியான ஈமானில் இருக்கிறார்களோ?
யார் சாலிஹான நல்ல அமல்களை செய்கிறார்களோ? அவர்களுக்கு.
அன்பு சகோதரர்களே! நம்முடைய படிப்பு, அறிவு, அரசியல், திறமை, இந்த பலம் இவையெல்லாம் ஒரு உலக காரணங்களைத் தவிர அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாவதற்கு இவை காரணங்கள் அல்ல. இவையெல்லாம் இந்த துனியாவிலே நாம் செழிப்பாக வாழ்வதற்குரிய காரணங்களாக இருக்கலாம். நல்ல படிப்பு, நல்ல அறிவு, நல்ல திறமை, நல்ல அரசியல், அரசியலிலே நமக்கு இட உரிமை இதுவெல்லாம் இந்த துனியா வுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு, ஒரு பொருளாதாரத்திலே மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாக இருக்கலாமே தவிர, நன்றாக புரிந்துகொள்ளுங்கள் நம்முடைய கண்ணியத்திற்கு காரணமாக ஆகாது.
நம்முடைய வெற்றிக்கு, உயர்வுக்கு, மதிப்புக்கு காரணமாக ஆகாது. நம்முடைய கண்ணியத்திற்கு காரணம் அல்லாஹ்வுடைய மார்க்கம் தான். நாம் நம்மை முஸ்லிம் என்று வெளிப்படுத்தி இஸ்லாமிய அடையாளத்தோடு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழ்வது தான் நம்முடைய கண்ணியம். ஒரு மனிதன் அந்த கண்ணியத்தை எல்லாம் எடுத்து விட்டு அவனை பார்த்தால் முஸ்லிம் என்று தெரியாது.
அவனுடைய வாழ்க்கையிலே இஸ்லாமிய வழிபாடு இருக்காது. இப்படிப்பட்ட நிலையில் தான் வெறும் முஸ்லிம் என்ற பெயரிலே பொருளாதாரத்திலே ஒருவன் உயர்ந்து விட்டால் படிப்பின் மூலமாகவோ அல்லது வேறு பிற பதவிகளின் மூலமாகவோ, தயவு செய்து அதை இஸ்லாமிய மார்க்கத்தின் கண்ணியம் என்று நினைக்காதீர்கள்.அது வேண்டுமானால் முஸ்லிம் என்ற பெயரில் உள்ள ஒரு மனிதனுடைய வாழ்க்கை உயர்ந்து இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அது இஸ்லாமுடைய உயர்வு அல்ல.
இஸ்லாமுடைய உயர்வு எது? நம்முடைய மார்க்கம் பின்பற்றப்படுவதற்கு நமக்கு சுதந்திரம் வேண்டும். எங்கே இருந்தாலும் இஸ்லாமிய அடையாளத்தோடு நாம் வேலை செய்வதற்கு உண்டான உரிமை நமக்கு கிடைத்தாக வேண்டும். அல்லாஹ்வுடைய தீனில் நான் எந்த விதத்திலும் அதை மீறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படக் கூடாது. அல்லாஹ் தடுத்த ஹராமை செய்வதற்கு நான் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது.
இது தான் சகோதரர்களே! நமக்குரிய கண்ணியம். இது தான் நமக்குரிய உயர்வு. இஸ்லாமிய மார்க்கத்தின் பாதுகாப்பு நம்முடைய பாதுகாப்பு. இஸ்லாமிய மார்க்கத்தின் உயர்வு நம்முடைய உயர்வு. ஆனால், இன்று தவறாக கணக்குப் போட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் பொருளாதாரத்தால் உயர்ந்து விட்டால் அது இஸ்லாமிற்கு உயர்வு என்பதாகவும், முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு விட்டால் அது இஸ்லாமிய மார்க்கம் ஓங்கி விட்டதாகவும் நினைக்கின்றார்கள். ஒரு போதும் அப்படியல்ல. அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.
ஈமான் உள்ளவர்களுக்கு, 'அமல் சாலிஹ்' செய்பவர்களுக்கு, 'لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْض' இந்த பூமியிலே அல்லாஹ் அவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான். இதற்கு முன்னுள்ளவர்களை ஆக்கியது போன்று. அல்லாஹ் தான் பொருந்திக் கொண்ட தீனை அவர்களுக்குப் பலப்படுத்தி கொடுப்பான். அவர்களுடைய பயத்தை அல்லாஹ் போக்கி அவர்களுக்கு பாதுகாப்பைகொடுப்பான்.
அன்புசகோதரர்களே! இந்தவசனம், மனதிலேயே பதிவு செய்து கொள்ளுங்கள். ஈமானை கொண்டும் அமலசாலிஹைக் கொண்டும் தான் நாம் அல்லாஹ்வுடைய பாதுகாப்பைப் பெற முடியும். எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து நாம் அல்லாஹ்விடத்திலே பாதுகாப்பு பெறமுடியும்.
எதிரிகளுடைய அச்சுறுத்தலில் இருந்து நாம் பாதுகாப்பை பெற வேண்டும் என்றால் அவர்களைப் போன்று வசதி உள்ளவர்களாவோ அல்லது அவர்களிடத்திலே பழி வாங்கும் திறமை உள்ளவர்களாகவோ மாறிவிட்டால் நடக்காது. ஈமான், அமல் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அல்லாஹ் கண்டிப்பாக அந்த பயத்தைப் போக்கி அந்த ஈமானை, உறுதியை அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு கொடுப்பான்.
அப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? அப்படி அவர்களுக்கு பயம் போகி பாதுகாப்பு கிடைத்தால், இந்த உலகத்திலே வசதி கிடைத்தால், ஆதிக்கம் கிடைத்தால் என்ன செய்வார்கள்? 'يَعْبُدُونَنِي' அவர்கள் என்னை வணங்குவார்கள். 'لَا يُشْرِكُونَ بِي شَيْئًا' அவர்கள் எனக்கு இணை வைக்க மாட்டார்கள். இதற்குப் பிறகும் யார் நிராகரிப்பார்களோ அவர்கள் தான் பெரும்பாவிகள்.
அன்புசகோதரர்களே! முஸ்லிம்களுடைய உயிர் முஸ்லிம்களுடைய பொருளாதாரம், அறிவு இந்த உம்மத்திலே தவ்ஹீதை பரப்புவதற்காக வேண்டி உள்ளது. எத்தனை மக்கள் முஸ்லிம் என்ற பெயரிலே ஷிர்க்கிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிற்கு வெளியிலே எத்தனை கோடிக்கணக்கான மக்கள் ரப்புல் ஆலமீனுக்கு இணை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நமக்கு செய்யக்கூடிய அநியாயத்தைவிட நம்முடைய ரப்புக்கு செய்யக்கூடிய அநியாயம் மிகப் பெரியது. ஷிர்க்கை விட ஒரு அநியாயம் இருக்க முடியுமா?
إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும். (அல்குர்ஆன் 31 : 13)
அன்பிற்குரியவர்களே! இந்த தவ்ஹீதை, இந்த ஈமானை பரப்புவதற்கு செலவு செய்யப்பட வேண்டிய அறிவு, இந்த ஈமானை பரப்புவதற்காக, இஸ்லாமை பரப்புவதற்காக, இஸ்லாமின் மாண்புகளை பரப்புவதற்காக கொடுக்கப்பட்ட அறிவுகள், உடல்கள், உயிர்கள், இந்தத் திறமைகள் இன்று முஸ்லிம் வாலிபர்கள் சிலர் இடத்திலேயே தவறான முறையிலே இஸ்லாம் போதிக்கப்பட்டு தவறான முறையிலே அவர்களுக்கு அடிப்படைகள் போதிக்கப்பட்டு அவர்கள் வழி கெடுக்கப்படுகின்றார்கள். இது குறித்து சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
மற்றொரு பக்கம் இன்று மீடியாக்களும் மற்ற மற்ற துறைகளும் சில விஷயங்களை கொண்டு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை கூறுவதற்கும் பழி சுமத்துவதற்கும் அவர்கள் தயாராக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நாம் மிக கவனமாக இருக்கவேண்டும்.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு மிக அழகாகச் சொல்கிறான். அல்லாஹ்வுடைய சோதனை நன்மையை கொண்டும் இருக்கிறது. தீமையும் கொண்டும் இருக்கிறது. இந்த உலகத்திலே நமக்கு வெற்றி வேண்டுமானால் ஈமானைக் கொண்டு தக்வாவைக் கொண்டு தான். இந்த உலகத்திலே ஒருவர் சோதிக்கபடுகிறார் என்றால் அந்த சோதனையின் அடிப்படை அவர்கள் இந்த மார்க்கத்தை விட்டு விலகியதாக இருக்கும். அல்லாஹ்வை விட்டு விலகியதாக இருக்கும்.
சூரத்துல் அஃராப் உடைய 96 ஆவது வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்துவிட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாகநாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம். (அல்குர்ஆன்7:96)
அன்பு சகோதரர்களே! சூரா அஷ்ஷுரா உடைய முப்பதாவது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ
ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகவே தான். ஆயினும், (அவற்றில்) அனேகமானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான். (அல்குர்ஆன் 42 : 30)
உங்களுக்கு வரக்கூடிய சோதனை உங்களுடைய கரங்கள் செய்த பாவத்தின் காரணமாக. ஆகவே இந்த சோதனையில் இந்த உம்மத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறதோ, ஒன்று எதிரிகளால் அச்சுறுத்தபடக்கூடிய சோதனையாக இருக்கட்டும். நம்முடைய இஸ்லாமிய எதிரிகளால் கொடுக்கப்படக்கூடிய நெருக்கடிகள் ஆக இருக்கட்டும் அல்லது பொதுவாக இந்த பூமியிலே வரக்கூடிய ஆபத்துகளின் சோதனைகளாக இருக்கட்டும் இவையெல்லாம் நம்முடைய பாவத்தின் காரணமாக, அல்லாஹ்வை விட்டு வேறு ஒன்றின் பக்கம், துனியாவின் பக்கம் நாம் திரும்பியதன் காரணமாக என்று நாம் புரிந்து கொண்டு, எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி நம்முடைய ஈமானை அமலை சரி செய்து கொண்டு அல்லாஹ்விடத்திலே உதவி தேடுவோம்.
கண்டிப்பாக அல்லாஹு சுபஹானஹு தஆலா யார் அல்லாஹ்வின் பக்கம் திரும்பு கிறார்களோ, தங்களுடைய மார்க்கத்தை ஈமானை சரி செய்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு வெற்றி கொடுப்பான். சூரா அந்நூர் உடைய 31வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
முஃமின்களே! நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சமுதாயமாக சேர்ந்து நீங்கள் தவ்பா செய்து அல்லாஹ்வின் பக்கம் வந்து விடுங்கள் நீங்கள் கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள். (அல்குர்ஆன்24:31)
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்முடைய முஸ்லிம் சமுதாய உம்மத்திற்கு இந்த உலகத்திலே அவர்கள் எங்கிருந்தாலும் சரி வெற்றியையும் நிம்மதியையும் பாதுகாப்பையும் கொடுப்பானாக!! எதிரிகளுடைய சூழ்ச்சியிலிருந்தும் அவர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு சதித் திட்டங்களில் இருந்தும் அல்லாஹு சுபஹானஹு தஆலா நம்மையும் நம்முடைய சகோதரர்களையும் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பாதுகாப்பானாக!! நேசத்தையும் அன்பையும் கொண்டு நமக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு குழப்பத்தில் இருந்தும் அல்லாஹ் சுபஹானஹு தஆலா என்னையும் உங்களையும் நமது சமுதாயத்தையும் பாதுகாப்பானாக!!
ஆமீன்