HOME      Khutba      உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 1-9 | Tamil Bayan - 530   
 

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 1-9 | Tamil Bayan - 530

           

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 1-9 | Tamil Bayan - 530


உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் (அமர்வு 1-9)
 
வரிசை : 530
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 06-07-2018 | 22-10-1439 
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதரின் மீதும் அந்த தூதரின் சிறந்த தோழர்கள் மீதும் சிறந்த குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்துகளையும் ஸலாமையும் வேண்டியவனாக!
 
எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும், அருளையும், அன்பையும், ஈருலக வெற்றியையும் வேண்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னித்து நம்முடைய உள்ளங்களை அவன் பக்கம் திருப்புவானாக!
 
நம்முடைய உள்ளங்களை அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதிபடுத்துவானாக! பாதங்கள் தடுமாறுவதிலிருந்து, சிந்தனைகள் கெடுவதிலிருந்து, ஒழுக்கக்கேடான காரியங்கள், செயல்கள் நமது வாழ்க்கையில் வருவதிலிருந்து அல்லாஹ் தஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.
 
ரப்புல் ஆலமீன் அவனது கண்ணியத்திற்குரிய திருவேதமாகிய அல்குர்ஆனில் நம்மை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான். நம்மை படைத்த ரப்பாகிய அல்லாஹ் தஆலா நம்மீது கருணை உள்ளவன், நம்மீது இரக்கம் உள்ளவன், பாசம் உள்ளவன், நம்மை நேசிக்கின்றவன்.
 
நாம் நல்லவர்களாக ஆக வேண்டும்; அல்லாஹ்வுடைய அருளை, அன்பை, மன்னிப்பை அடைய வேண்டும் என்று விரும்புகின்ற அந்த மகத்தான இரட்சகன் நம்மை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான்.
 
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ (16) اعْلَمُوا أَنَّ اللَّهَ يُحْيِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
 
ஈமான் கொண்டார்களே! அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர். அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம். (அல்குர்ஆன் 57 : 16,17)
 
வசனத்தின் கருத்து : கேள்வியின் ஆரம்பத்தை பாருங்கள். ஈமான் உள்ளவர்களுக்கு, அந்த ஈமான் என்னிடத்தில் இருக்கிறதா? என்ற கவலை உள்ளவர்களுக்குதான் அல்லாஹ்வுடைய அறிவுரை பலன் தரும். 
 
ஈமானை பற்றியே சிந்திக்காதவர்களுக்கு, ஈமானை பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கு அல்லாஹ்வுடைய எந்த வசனமும் எத்தகைய மாற்றத்தையும் கொடுக்காது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
நான் முஃமினாக ஆக வேண்டும். என்னுடைய உள்ளத்தில் ஈமான் நிறைவடைந்து கொண்டே இருக்க வேண்டும், ஈமானில் நான் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை உள்ளவர்கள்தான் குர்ஆனை தேடுவார்கள், குர்ஆனின் சட்டங்களை பேணுவார்கள். தவறுகள், குற்றங்கள் நிகழ்ந்தாலும் தவ்பா செய்து அல்லாஹ்விடம் திரும்புவார்கள்.
 
ஈமானில் என்னதான் கோளாறுகள் ஏற்பட்டாலும், பலவீனம் ஏற்பட்டாலும், ஈமானே நாசமாக போனாலும் கூட, அதை பற்றி அக்கறை இல்லாதவர்கள், அதை பொருட்படுத்தாதவர்களுக்கு எந்த உபதேசம் கூறியும் பிரயோஜனம் கிடையாது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
ரப்பு கேட்கிறான்: ஈமான் உள்ளவர்களுக்கு இன்னுமா நேரம் வரவில்லை? முஃமின்களுக்கு, மறுமையை நம்பிய விசுவாசிகளுக்கு, ஆகிரத்தை நம்பிக்கை கொண்ட முஃமின்களுக்கு இன்னுமா நேரம் வரவில்லை?
 
அவர்களுடைய உள்ளங்களில் அச்சம் வருவதற்கு, அவர்களுடைய உள்ளங்கள் நடுங்குவதற்கு, உள்ளங்கள் பயப்படுவதற்கு, உள்ளங்கள் உருகுவதற்கு, உள்ளங்கள் மென்மையாவதற்கு இன்னுமா நேரம் வரவில்லை? 
 
அல்லாஹ்வை நினைத்து, அல்லாஹ்வுடைய சத்திய வேதத்தை ஓதி உள்ளங்கள் உருகுவதற்கு இன்னுமா அவர்களுக்கு நேரம் வரவில்லை?
 
அப்படி அவர்களை துன்யா மயக்கி இருக்கிறதா? ஏமாற்றி இருக்கிறதா? இந்த துன்யா அவர்களை தன்னுள் மூழ்கடித்து விட்டதா? இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் வாழப் போகிறீர்கள்? இன்னும் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? 
 
அடுத்து ரப்புல் ஆலமீன் கூறுகிறான், 
 
முந்திய வேதம் கொடுக்கப்பட்டவர்களை நமக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி கூறுகிறான்.
 
இதற்கு முன்னால் வேதம் கொடுக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், அந்த வேதங்களை பெற்றவர்கள் காலப் போக்கில் அதை ஓதி உணராததால், அந்த வேதத்தின் படி செயல்படாததால் அவர்களுடைய உள்ளங்களெல்லாம் கடினமாகி விட்டன. அவர்களில் அதிகமானவர்கள் பெரும்பாவிகளாக இருக்கிறார்கள்.
 
அல்லாஹு தஆலா அந்த முந்திய வேதக்கார மக்களை நமக்கு முன்னால் எடுத்து சொல்லி முஃமின்களே! இந்த வேதம் அருளப்பட்டுக் கொண்டிருக்கிறது, உங்கள் மீது இந்த வேதம் ஓதப்படுகிறது, இதை நீங்கள் செவியேற்று, புரிந்து செயல்படுத்தி இதை உணரவில்லை என்றால், இதனால் உங்களுக்கு உள்ளச்சம் ஏற்படாமல் ஏதோ கடமைக்காக ஓதிக் கொண்டிருந்தால், ரப்புல் ஆலமீனுடைய எச்சரிக்கை, இந்த வசனத்தில் முந்திய வேதக்காரருடைய உள்ளங்கள் எப்படி இறுகிவிடுமோ அப்படி உங்களது உள்ளங்களும் இறுகி விடும்.
 
அவர்களில் எப்படி அதிகமானவர்கள் பாவிகளாக இருக்கிறார்களோ அப்படி நீங்களும் பெரும் பாவிகளாக ஆகிவிடுவீர்கள். அல்லாஹு தஆலா இந்த வசனத்தின் தொடரில் நமக்கு ஒரு உதாரணம் கூறுகிறான். 
 
முஃமின்களே! அறிந்து கொள்ளுங்கள். ஒரு பூமி காய்ந்து வரண்டு இறந்ததற்கு பிறகு அதை அல்லாஹ் உயிர்பிக்கிறான்.
 
உங்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை அல்லாஹ் வெளிப்படுத்திவிட்டான். நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக. 
 
எப்படி இந்த பூமியில் மழை பெய்யவில்லை என்றால் இந்த பூமி காய்ந்து வரண்டு விடுகிறதோ அதுபோன்று தான் இந்த உள்ளங்கள் உபதேசங்களை கேட்கவில்லை என்றால், இந்த உள்ளம் காய்ந்து விடும்; எதற்கும் பயனற்றதாக ஆகிவிடும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹு தஆலா அறிவுரை கூறிக் கொண்டே இருந்தான். ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தான்.
 
சின்ன சோதனைகள் ஏற்படும் பொழுது, பெரிய சோதனைகள் ஏற்படும் பொழுது ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாஹு தஆலா தனது நபியை நேரான பாதையில் பலப்படுத்திக் கொண்டே இருந்தான்.
 
அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அல்லாஹு தஆலா கொடுத்துக் கொண்டே இருந்தான். அதே முறையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தங்களுடைய தோழர்களுக்கு உள்ளங்களை உருக்கக் கூடிய, உள்ளங்களை மென்மையாக்கக் கூடிய, உள்ளங்களை பசுமையாக்கக் கூடிய, உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய அறிவுரையை கூறிக் கொண்டே இருந்தார்கள்.
 
எந்த ஒரு தருணத்திலும் எனக்கு இனி அறிவுரை தேவையில்லை, எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற நிலை யாருக்கும் கிடையாது. 
 
அப்படி ஒரு நிலையை மனிதர்களில் யாரும் அடைய முடியும் என்றிருந்தால் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தான் இருந்திருக்கும். அவர்களுக்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதி வரை நஸீஹத் செய்து கொண்டே இருந்தார்கள்.
 
கலீஃபா உமருக்கு, உஸ்மானுக்கு, அலீக்கு என ஒவ்வொரு நபித்தோழர்களையும் குறிப்பாக அழைத்து பல நேரங்களில் பொதுவாக, பல நேரங்களில் குறிப்பாக இப்படியாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவுரை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
 
இன்று, அவர்களுக்கும் நமக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், யாராவது நம்மை அழைத்து உபதேசம் செய்தால், உடனே நீங்க என்ன ரொம்ப யோக்கியமா? என்று எந்தளவு உபதேசத்தை அலட்சியம் செய்ய முடியுமோ, புறக்கணிக்க முடியுமோ அல்லது அது வேறு யாருக்கோ சொல்லப்படுகிறது, நான் அப்படியில்லை என்று தன்னை தானே தூய்மைபடுத்திக் கொள்ள முடியுமோ அந்த நிலையில் தான் நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கிறோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
ஆனால், அந்த தோழர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் இது எனக்கு சொல்லப்பட்டது என்று பயந்து கொண்டிருந்தார்கள். 
 
சூரத்துல் ஹுஜுராத்துடைய ஒரு வசனம் இறங்குகிறது.
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ
 
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேல், உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும். (அல்குர்ஆன் 49 : 2)
 
இந்த ஒரு வசனம் இறங்குகிறது. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களில் நெருக்கமான ஒரு தோழர், வீட்டிற்கு சென்று கதவை சாத்திக் கொண்டார். 
 
ஃபர்ளான தொழுகைக்கு வருவது, பிறகு ஓடிவிடுவது. வீட்டிற்கு சென்று தன்னை அடைத்துக் கொள்வது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓரிரு நாட்கள் கழித்து அந்த தோழரை காணவில்லையே? என்பதாக தேடுகிறார்கள்.
 
பொதுவாக ஒரு முறை பார்த்தவர்களையே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடையாளம் வைத்துக் கொண்டு அந்த தோழரை காணவில்லை என்பதாக கேட்கின்ற வழக்கம் உள்ளவர்கள். 
 
நெருக்கமான தோழர் ஒருவர் சில தினங்களாக தன்னை பார்க்க வரவில்லை என்றால் அல்லாஹ்வுடைய தூதர் எப்படி தேடியிருப்பார்கள். அந்த நபியின் உள்ளத்தில் அந்த தோழர்கள் மீதும் நம்மீதும் அவ்வளவு பாசம் இருந்தது.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
 
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (அல்குர்ஆன் 9 : 128)
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் எங்கே என்று விசாரித்து வருவதற்காக அனுப்பினார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதரே! அந்த தோழர் உங்களை சந்திக்கப் பயப்படுகிறார். தன் விஷயத்தில் அல்லாஹ்வுடைய வசனம் இறங்கிவிட்டது, எனது அமல்களெல்லாம் நாசமாகி விட்டது, நான் அழிந்து விட்டேன், ஏனென்றால், கொஞ்சம் உரத்த குரலில் பேசிவிட்டேன்.
 
(அவர் சாதாரணமாக பேசினால் சத்தம் அதிகமாக இருக்கும் முரட்டு குரலாக இருக்கும்.)
 
இப்படிப்பட்ட ஒரு ஒழுங்கீனத்தை நபிக்கு முன்னால் நபியின் சபையில் செய்து விட்டேனே என்பதாக பயந்து அழுது கொண்டிருக்கிறார் என்று கூறியவுடன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த தோழரை அழைத்து வரச் சொல்லி அல்லாஹ் உங்களை பாதுகாத்தான். நீங்கள் அப்படிப்பட்ட மனிதர் அல்ல. நபியை விட தனது குரலை வேண்டுமென்றே உயர்த்தி தன்னை உயர்த்தி காட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் பேசக்கூடியவர்கள் அல்ல.
 
அல்லாஹ்வுடைய நேசம் உங்களுக்கு உண்டாகட்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்காக துஆ செய்கிறார்கள். அவருக்கு அல்லாஹ்வுடைய தூய சாட்சியத்தை கூறுகிறார்கள். 
 
அதற்கு பிறகு தான் அந்த தோழர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபைக்கு வருகிறார்கள்.
 
பார்க்க - தஃப்சீர் தபரி, முஸ்லிம், எண் : 170.
 
அவர் ஒரு உத்தமர், உண்மையான தோழர். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பொதுவான வசனம் இறங்கிய பொழுது அதனுடைய வெளிப்படையான அர்த்தத்தை பார்க்கும் பொழுது அதில் தானும் சிக்கிவிட்டேனோ என்ற பயம்.
 
இன்று, குர்ஆனுடைய வசனங்கள் ஓதும்பொழுதும், அதை சிந்திக்கும் பொழுதும், அதனுடைய பொருளை நீங்கள் படித்துப் பார்க்கும் பொழுதும் நேரடியாக நம்மை பார்த்து பேசக்கூடியதாக இருந்தாலும் கூட, அதை கண்டும் காணாமல் செல்லக் கூடிய மனநிலையில் தான் நம்முடைய இன்றைய ஈமானுடைய நிலை இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
உபதேசம் செய்து கொண்டே இருக்க வேண்டும். நமக்கு நாமும் உபதேசம் செய்ய வேண்டும். நமது மனைவிக்கு, நம்முடைய பிள்ளைகளுக்கு, நம்முடைய குடும்பத்தார்களுக்கும் செய்ய வேண்டும்.
 
உபதேசம் செய்யப்படாத குடும்பம், உபதேசம் செய்யப்படாத சமூகம், உபதேசம் செய்யப்படாத உள்ளங்கள் கண்டிப்பாக ஒரு நாள் பாழாகியே தீரும். (அல்லாஹ்  பாதுகாப்பானாக!)
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ 
 
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும். (அல்குர்ஆன் 51 : 55)
 
ஆகவே தான், நம்முடைய மார்க்க அறிஞர்கள் இமாம் புகாரியை போல, முஸ்லிமை போல இன்னும் பெரிய பெரிய நம்முடைய சான்றோர்களில் உள்ள சிறந்த அறிஞர்கள் ஹதீஸினுடைய நூல்களில் உள்ளங்களை உருக்குகின்ற, உள்ளங்களை மென்மை படுத்துகின்ற அறிவுரைகளை தனியாக தொகுத்து நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.
 
ரஸூலுல்லாஹ்வுடைய ஹதீஸ்களில் இவற்றை நீங்கள் படியுங்கள். உங்கள் உள்ளங்களை மென்மையாக்குங்கள். 
 
நம்முடைய ஒரு மோசமான நிலை, அல்லாஹ்வுடைய இபாதத்துகளில் இருக்கும் பொழுது கூட நம்முடைய உள்ளங்கள் காய்ந்திருக்கின்றன. உள்ளம் காய்ந்து விட்ட காரணத்தால் கண்கள் காய்ந்திருக்கிறது.
 
தொழுகையில் அழுகை இல்லை, துஆக்களில் அழுகை இல்லை, உபதேசங்களை கேட்கும் பொழுது அழுகை இல்லை. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அல்லாஹ்வுடைய அருளை நினைத்து அன்பாலோ அல்லது அச்சத்தாலோ அழுகை இல்லை. 
 
இப்படி ஒட்டுமொத்தமாக வரண்டு போன உள்ளத்தால் நம்முடைய கண்களும் வரண்டு போய் இருக்கின்றன.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்புத் தேடினார்களே, பல விஷயங்களிலிருந்து பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள். ஒன்று இரண்டு விஷயங்கள் அல்ல, பல விஷயங்களிலிருந்து அல்லாஹ்வுடைய தூதர் பாதுகாப்புத் தேடினார்கள்.
 
எதுவெல்லாம் ஒரு முஃமினுடைய மறுமையை பாழாக்குமோ, ஒரு முஃமினை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்கி விடுமோ, அவனுக்கு சொர்க்கத்தின் பாதையை கடினமாக்கி விடுமோ அத்தகைய எல்லா விஷயங்களிலிருந்தும் குறிப்பாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாவல் தேடினார்கள்.
 
எந்த செயல்கள், குணங்கள் ஒரு முஃமினை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குமோ மறுமையை அவனுக்கு பாழாக்கி விடுமோ, சொர்க்கத்தின் பாதையை அவனுக்கு கடினமாக்கி விடுமோ அத்தகைய எல்லா காரியங்கள், சொல்கள், செயல்களிலிருந்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாவல் தேடினார்கள்.
 
அத்தகைய துஆக்களில் ஒன்று தான், நபியவர்கள் கேட்கிறார்கள், 
 
اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا
 
யா அல்லாஹ்! கற்றதற்கு பிறகு பலன் தராக கல்வியிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். (1)
 
அறிவிப்பாளர் : ஜெய்து இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2722, 4899.
 
படிப்பதால் யாரும் ஆலிமாகி விட முடியாது. படித்தவர்களெல்லாம் ஆலிம்கள் அல்ல, படித்து அமல் செய்பவர்கள் ஆலிம்கள். யார் படித்து அதன்படி நடக்கிறார்களோ, அல்லாஹ்வை பயப்படுகிறார்களோ அவர்கள் ஆலிம்கள்.
 
படித்தவர்களிடத்தில் ஸனது -செர்டிஃபிக்கேட் இருக்கிறது என்ற காரணத்தால் மக்கள்களிடத்தில் வேண்டுமானால் ஆலிம்களாகி விடலாமே தவிர, ரப்பிடத்தே ஆலிமாக ஆக முடியாது. 
 
எனவேதான், இமாம் இப்னு ரஜப் ஹம்பலி கூறுகிறார்கள்: ஆலிம்கள் பல விதம் இருக்கிறார்கள்.
 
சிலர், அல்லாஹ்விடத்தில் ஆலிமாக இருப்பார்கள், மக்களிடத்தில் இருக்கமாட்டார்கள். மக்களுக்கு அவர்களை தெரியவே தெரியாது. அவர்கள் அல்லாஹ்விடத்தில் அமல் செய்து கொண்டு மக்களுக்கு படித்து கொடுத்துக் கொண்டு சாதாரணமாக மக்களில் மக்களாக இருப்பார்கள். 
 
சிலர், மக்களிடத்தில் ஆலிமாக இருப்பார்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் ஆலிமாக இருக்கமாட்டார்கள்.
 
யார் அவர்கள்? அவர்களிடத்தில் செர்டிஃபிக்கேட் இருக்கும். அவர்களுக்கு முன்னால், பின்னால் பல பட்டங்கள் இருக்கும். மக்களுக்கு கூறுவார்கள். மக்கள் அவர்களை நம்புவார்கள். 
 
ஆனால், அவர்களுடைய வாழ்க்கையோ அமல்களிலிருந்து, தக்வாவிலிருந்து தூரமாகி விடும். இவர்கள் யார்? இவர்கள் மக்களிடத்தில் ஆலிமாக இருப்பவர்கள். அல்லாஹ்விடத்தில் இவர்கள் ஆலிம்களாக ஆகவே முடியாது.
 
இமாம் இப்னு ரஜப் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் கூறிய வார்த்தை கல்வி படிக்கின்ற நமக்கு மிகப் பெரிய ஒரு எச்சரிக்கை.
 
ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்புத் தேடினார்கள்:
 
ரஹ்மானே! பலன் தறாத இல்மில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். உன்னை பயந்து மென்மையாகாத, உனது பயத்தால் அச்சம் அடையாத கல்பிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். உன்னை நினைத்து உன்னுடைய அச்சத்தால், அன்பால் அழுகாத கண்களிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். ஏற்றுக் கொள்ளப்படாத துஆக்களிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். (1)
 
அறிவிப்பாளர் : ஜெய்து இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2722, 4899.
 
இங்கே இரண்டு விஷயங்களை அல்லாஹ்வுடைய தூதர் இணைத்து கூறினார்கள்.
 
1. பயப்படாத, மென்மையாகாத, பணியாத உள்ளம்.
 
2. அழுகாத கண்கள்.
 
இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கும். உள்ளம் மென்மையாகி இருந்தால், உள்ளம் அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து பயந்திருந்தால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டிருக்கும். அவருடைய துஆவில் அவருக்கு அழுகை வரும், அவருடைய தனிமையில் அவருக்கு அழுகை வரும், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் அவருக்கு அழுகை வரும்.
 
இந்த உள்ளத்தை பக்குவப்படுத்துகின்ற அறிவுரைகளை நம்முடைய மார்க்க அறிஞர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள். இன்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு அத்தியாயம் அதில் இருக்கிறது. அதை நாம் படிக்க வேண்டும் என்று. 
 
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து சில ஜும்ஆக்களில் அத்தகைய அறிவுரைகளில் சிலவற்றை நாம் பார்க்க இருக்கிறோம்.
 
நம்முடைய உள்ளங்களை மென்மைபடுத்தக் கூடிய, உள்ளங்களை அந்த அல்லாஹ்வின் அச்சத்தில், நினைவில் இலகுவாக்கக் கூடிய அந்த விஷயங்களில் மிக மிக முக்கியமானதாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுக் கொடுத்தது அதனுடைய அடிப்படை என்னவென்றால் இந்த துன்யாவை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரிந்து கொள்ளுங்கள். ஆகிரத்தை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரிந்து கொள்ளுங்கள். 
 
இன்று நம்முடைய முரண்பாடான செயல்களுக்கு காரணம், நாம் துன்யாவையும் உள்டாவாக விளங்கி வைத்திருக்கிறோம், ஆகிரத்தையும் உள்டாவாக விளங்கி வைத்திருக்கிறோம்.
 
இந்த துன்யா ரொம்ப தேவை, காசு ரொம்ப தேவை, பணம் ரொம்ப தேவை, வாழ்வாதாரம் ரொம்ப தேவை, எல்லாம் ரொம்ப ரொம்ப தேவை என்று என்னவோ இந்த உலகத்தில் இப்படியே நிரந்தரமாக இருந்து விடுவோமோ என்பதை போல உலகத்தை முன்னால் வைத்துக் கொள்வது. 
 
ஆகிரத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்? கண்டிப்பாக ஒரு நாள் மவ்த்தா போவோம் போனா போய் பாத்துகலாம்.
 
அப்படியே போயிட்டாலும் கூட என்னிடத்தில் இருக்கின்ற அமல் மிகவும் அதிகம். இதற்கு எனக்கு கிடைத்தால் ரொம்ப பெரியது, அதுவே போதும் எனக்கு. 
 
என்னவோ ஆகிரத்தை பக்கத்து ஊர் மாதிரி, இங்கிருந்து நூறு, இறுநூறு ரூபாயை எடுத்துக் கொண்டு போனால் அங்கே போய் ஏதோ ஒரு நாள் சாப்பிட்டு விட்டு திரும்பி அடுத்த பஸ்ஸை பிடித்து வருகின்ற மாதிரி ஆகிரத்தை எடை போட்டு வைத்திருக்கிறார்கள்.
 
துன்யா பர்மனன்ட் அட்ரஸ். ஆகிரத் டெம்ப்ரவரி அட்ரஸ். டெம்ப்ரவரி அட்ரஸை பொறுத்த வரைக்கும் யாரும் கவலைப்படுவது கிடையாது. 
 
ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தோழர்களுக்கு முதலாவதாக ஆகிரத்தை பற்றிய அறிவுரையை கொடுத்து உள்ளத்தை மென்மையாக்கினார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹந்தக் உடைய த போருக்காக தயாரிப்பில் இருந்த பொழுது குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
 
எவ்வளவு கஷ்டமான போர் அது. சூரத்துல் அஹ்சாப் 33 -வது அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தோழர்களுக்கு நினைவூட்டுகிறார்கள். 
 
தோழர்களோடு தோழர்களாக அவர்களும் குழி தோண்டுகிறார்கள். அந்த மண்ணை எடுத்துக் கொண்டு போடுகிறார்கள். எல்லோரோடும் அவர்கள் அந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
வறுமையில் வறுமை, பிரச்சனை, பயம் அத்தனை சோதனைகளும் ஒன்று சேர்ந்து அந்த அஹ்சாப் யுத்தத்தில் இருந்தது.
 
அந்த நேரத்தில் தன் தோழர்களுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
 
اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ
 
அல்லாஹ்வே! வாழ்க்கை இல்லை மறுமையின் வாழ்க்கையை தவிர. 
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2961, 3795.
 
இன்று மனிதன் இந்த உலகத்தை மிக பெரிதாக நினைத்து வைத்திருக்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரே வார்த்தையில் அந்த எண்ணத்தை தரைமட்டமாக்கினார்கள். 
 
இந்த துன்யாவில் மிகப் பெரிய செல்வந்தன், வீடு இருக்கிறது, வாகனம் இருக்கிறது, வேலையாட்கள் இருக்கிறார்கள், வசதி இருக்கிறது, வியாபாரம் இருக்கிறது, தொழில் இருக்கிறது எல்லாம் இருக்கிறது. இவருடைய மனநிலை எப்படி இருக்கும் பாருங்கள்.
 
காசு, பணம், வசதி என்ற அந்த பந்தா, அதில் இருக்கக் கூடிய அந்த மனிதன் எப்படி இருப்பான் பாருங்கள். அவனுடைய நிலை எப்படி இருக்கும்? அவனுடைய எண்ணம் எப்படி இருக்கும்? 
 
என்றைக்காவது எனக்கு இந்த வாழ்க்கை ஒரு நாள் இல்லாமல் போகும், நான் இதை விட்டுவிட்டு விலகிவிடுவேன் என்ற எண்ணத்தை மனதில் அவனால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றால் முடியாது.
 
மரணம் வரும், மரணம் உண்டு, நான் மரணிப்பேன் என்ற எண்ணமெல்லாம் வரலாம். ஆனால், அந்த எண்ணம் தரிபடாது, அந்த எண்ணம் இருக்காது. 
 
அவனுடைய அந்த பந்தா, அவனுடைய அந்த கம்பீரம் இதை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பான். அடுத்தடுத்து இந்த உலகத்தில் என்ன அனுபவிப்பது? எதை வாங்குவது? எதை விற்பது? எதை தேடுவது? என்று முடிந்த அளவு தனக்கு அதிகமாக தேடிக் கொள்வான்.
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உபதேசம் எப்படி இருக்கிறது பாருங்கள். நம்முடைய நிலை எப்படி இருக்கிறது பாருங்கள். 
 
நாளைக்கு மவ்தாகுவதற்கு முன்னால் இன்றைக்கு இரண்டு டீல் முடிக்க முடியும் என்றால் அதை முடித்து விடுவோம் என்று பார்ப்போம். நாளைக்கு மவ்தா போகப் போறோமே இன்னும் இரண்டு நாள் தானே இருக்கிறது, ஆகிரத்திற்கு தவ்பா செய்வோமே, பெரும்பாலான மக்களுடைய நிலை அப்படி இல்லை.
 
இதை தானே ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
 
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
 
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் 57 : 20)
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த பாடத்தில் இந்த வசனத்தை பதிவு செய்து நமக்கு கூறுகிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் நமக்கு இதை தான் கூறுகிறார்கள். செல்வத்தில் இருக்கக் கூடிய மனிதனே! வசதியில் இருக்கக் கூடிய மனிதனே! நீ வாழக்கூடிய வாழ்க்கை ஒன்றும் இல்லை, அது முடிந்து விடக் கூடியது. இதை விட வசதியான வாழ்க்கை ஆகிரத்தில் இருக்கிறது, அதை தேடு. 
 
அடுத்து இன்னொரு மனிதன் கஷ்டத்தில் இருக்கிறான், பிரச்சனையில் இருக்கிறான், துன்பத்தில் இருக்கிறான், துயரத்தில் இருக்கிறான், சோதனையில் இருக்கிறான். 
 
எதை தொட்டாலும் விளங்குவதில்லை. காலையில், மாலையில், இரவில் டென்ஷன். ஒவ்வொரு வேலை உணவிற்கு டென்ஷன், தங்குமிடத்திற்கு டென்ஷன், அவனுக்கு எல்லாம் பிரச்சனை.
 
சோதனையில் சோதனை, இவன் என்ன நினைப்பான்? என்னடா முஸீபத்து புடிச்ச வாழ்க்கை இது, என்னடா கஷ்டமான வாழ்க்கை, இது என்னடா வாழ்க்கை இது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி உலகத்தை வெறுத்த மனிதருக்கு சொல்கிறார்கள். 
 
சோதனையில் சிக்கி தவிக்கக் கூடிய முஃமினே! ஏன் உன் மனதை தளர விடுகிறாய். மறுமையின் வாழ்க்கை இருக்கிறது, அதற்காக தேடு. நீ இந்த உலகத்தில் ஏழையாக, ஃபக்கீராக இருக்கலாம். மறுமையில் நீ பெரிய பேரரசனுக்கு அருகில் நீ ஒரு அரசனாக இருக்கலாம்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ (54) فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ
 
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 54 : 54,55)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا
 
அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். (அல்குர்ஆன் 76 : 20)
 
ஏழைகளுக்கு, வறுமையில் உள்ளவர்களுக்கு, பிரச்சனையில் உள்ளவர்களுக்கு நோய் நொடியிலோ, பொருளாதாரத்திலோ இப்படி எந்த சிக்கலில் இருந்தாலும் சரி அந்த முஃமினை பார்த்து ரஸூலுல்லாஹ் கூறுகிறார்கள், இந்த வாழ்க்கை நெருக்கடியாகி விட்டதை நினைத்து நீ மனம் துவண்டு போகிறாய். 
 
வாழ்க்கை எப்படியும் முடியப் போகிறது. இதை விட பயங்கரமான ஆபத்து ஆகிரத்தில் இருக்கிறது நரகத்தின் ஆபத்து, அல்லாஹ்வுடைய கோபத்தின் ஆபத்து, அந்த நரக படுகுழியின் ஆபத்து, ஸிராத்துடைய ஆபத்து, விசாரனை நாளுடைய அந்த ஆபத்து  அதை நீ நினைத்துப் பார். 
 
அந்த ஒரு நாளுடைய சில நேரங்களின் சோதனைகளை நினைத்துப் பார்த்தால் இந்த துன்யா வாழ்க்கையின் ஒட்டு மொத்த நேரங்களும் உனக்கு ஒன்றுமே இல்லை.
 
இரண்டு வகையான மனிதர்களுக்கும் ஒரே வாசகத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒரு பக்கம் செல்வந்தன் மிகப் பெரிய வசதியில் உள்ளவன், அவனுடைய பெருமையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தரைமட்டமாக்கினார்கள். 
 
இந்த துன்யாவை நினைத்து பெருமை கொண்டு இதில் மனதை பறிகொடுக்காதே! ஆகிரத்துடைய வாழ்க்கை இருக்கிறது. நீ இங்கே அனுபவிப்பதை விட ஆகிரத்தில் அனுபவிக்க வேண்டியது அதிகமாக இருக்கிறது. இதை அனுபவித்து ஆகிரத்தை அனுபவிக்காமல் போய்விடாதே! 
 
சிரமத்தில் இருக்கக் கூடிய முஃமின், துன்யாவையே அனுபவிக்காதவனை பார்த்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், முஃமினே! நீ இந்த துன்யாவில் அனுபவிக்காததை நினைத்து கைசேசதப்படாதே! கவலைப்படாதே! துவண்டு போகாதே!
 
நீ ஆகிரத்தை அனுபவிக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது.
 
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ (41) وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ (42) كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (43) إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ 
 
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள். இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு. “நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று கூறப்படும்). நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 77 : 41-44)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَفَاكِهَةٍ كَثِيرَةٍ (32) لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
 
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் - அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை. (அல்குர்ஆன் 56 : 32,33)
 
எவ்வளவு அழகான ஒரு அறிவுரையை அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்,  எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய அறிவுரைகள். 
 
இன்பத்தில், சந்தோஷத்தில், மகிழ்ச்சியில் வசதியான வாழ்க்கையில் வாழக்கூடிய முஃமினுக்கு இந்த அறிவுரை முக்கியமானது. 
 
முஃமினே! இந்த வசதிகளெல்லாம் தர்காலிகமானது, இதில் மனதை பரிகொடுத்து ஆகிரத்தை இழந்து விடாதீர்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்கு தான் ஒரு அழகிய உதாரணத்தை நமக்கு கூறினார்கள். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை பதிவு செய்கிறார்கள். 
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான்கு பக்கத்திலும் கோடுகள் போட்டு ஒரு கட்டம் போடுகிறார்கள். பிறகு, அதனுடைய நடுவில் ஒரு கோட்டை இடுகிறார்கள்.
 
அந்த கோடு நடுவில் கொண்டு வந்து அந்த கட்டத்தை தாண்டி போகும் அளவிற்கு கொண்டு வந்து முடித்தார்கள். பிறகு கட்டத்துடைய இரண்டு பக்கத்திலிருந்தும் சின்ன சின்ன கோடுகளை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போட்டார்கள். 
 
போட்டு விட்டு கூறினார்கள், நடுவில் உள்ள கோடு மனிதன். சுற்றி அவனுக்கு போட்ட கட்டம் இந்த மனிதனுடைய மவ்த். பிறகு சிறிய சிறிய கோடுகள் போட்டது, இது அவனுக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகள். 
 
நூல் : புகாரி, எண் : 5938.
 
ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்தால் அடுத்த பிரச்சனை, இதிலிருந்து தப்பித்தால் அடுத்த பிரச்சனை. 
 
சிலர் நினைக்கிறார்கள்; பிரச்சனையே இல்லாமல் வாழ்ந்துவிடலாம் என்று. அவர்கள் முடியாததை தேடுகிறார்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ
 
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். (அல்குர்ஆன் 90 : 4)
 
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
 
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். (அல்குர்ஆன் 84 : 6)
 
கஷ்டப்பட்டுக் கொண்டே வாழ வேண்டும். நீ இந்த துன்யாவில் கஷ்டமில்லாமல் வாழ்ந்து விடலாம் என்று நினைத்து விடாதே! இரவு தூங்கும் பொழுது பெட் சுகமாக இருக்கும், காலையில் எழுந்தால் டென்ஷனாக இருக்கும். 
 
ஒவ்வொரு நேரத்திலும் டென்ஷன் மனிதனை நோக்கி வந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சனையில் தப்பித்தால் அடுத்த பிரச்சனை.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், அந்த நடு கோடு மனிதன் என்று கூறினார்கள். சுற்றியிருக்கக் கூடிய நான்கு கோடுகளை அவனுடைய மவ்த் என்று கூறினார்கள். 
 
அதை விட்டு தப்பித்து வெளியே போக முடியாது. இடையில் இருக்கக் கூடிய கோடுகள் அவனுக்குரிய பிரச்சனைகள் என்று கூறினார்கள். அந்த நான்கு கோடுகளை தாண்டி சென்றது தான் மனிதனுடைய ஆசை.
 
அவனுடைய வாழ்நாளையும் தாண்டி அவனுடைய ஆசை இருக்கிறது. எவ்வளவு அழகாக நமக்கு புரிய வைத்தார்கள் பாருங்கள். 
 
நம்மிடத்தில் இருக்கக் கூடிய செல்வம் எத்தனையோ செல்வந்தர்களை நீங்கள் பார்க்கலாம். நூறாண்டுகள் வாழ்வதற்குரிய செல்வங்கள் இருந்தாலும் போதும் என்று சொல்வார்களா? சேர்க்கக் கூடிய செல்வங்களை பார்த்தால் இந்த துன்யாவை விட்டு இவர்கள் பிரியவே மாட்டார்கள் போலும்.
 
அந்தளவிற்கு அவர்கள் செல்வத்தை சேர்க்க நினைக்கிறார்கள். ஆனால், அந்த சேர்த்த செல்வத்தை அனுபவிப்பதற்கு முன்னால் அந்த மரணம் அவர்களை கவ்விக் கொண்டு செல்கிறது. 
 
இன்னொரு ஹதீஸில் பாருங்கள், இதை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். 
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 
 
" لاَ يَزَالُ قَلْبُ الكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ: فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الأَمَلِ "
 
ஒரு மனிதன் அவனுக்கு வயது முதிர்ந்து கொண்டே போகிறது. ஆனால், அவனுடைய உள்ளமோ இரண்டு விஷயங்களில் வாலிபமாக இருக்கிறது.
 
1. துன்யாவை விரும்புவது. 2. மிகவும் ஆசைப்படுவது.
 
ஒரு வாலிபனுக்கு ஒரு ஆசை இருக்கிறதென்றால் சரி. வயதாகி போய்விட்டது, தாடி முடிகள் நரைத்துக் கொண்டிருக்கின்றன. நோய் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தொற்றிக் கொண்டிருக்கிறது. 
 
இப்படி இருந்தும் கூட, ஒரு மனிதனுக்கு மரணத்தை நினைக்கக் கூடிய அந்த நினைவு வரவில்லை என்றால், ஆகிரத்துடைய பயம் வரவில்லை என்றால் எவ்வளவு கேவலமான ஒன்று.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், மனிதன் வளர்ந்து கொண்டே வருகிறான். அவனோடு இரண்டு ஆசைகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒன்று காசு, பணத்தின் மீது உள்ள ஆசை.  இரண்டாவது, நீண்ட காலம் வாழ வேண்டுமென்ற ஆசை.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5941, 6420.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பாக இந்த உள்ளங்களை பக்குவப்படுத்துவதற்கு ஆகிரத் பற்றிய நினைவை நமக்கு கூறினார்கள்.
 
முஃமின்களே! நீங்கள் இந்த உலகத்தில் ஒரு வழிப்போக்கரை போல, ஒரு அந்நிய ஊரில் வசிக்கக் கூடிய ஒரு அந்நியரைப் போல வாழுங்கள் என்று. 
 
ஆகிரத் மீது உண்டான இந்த இறை நம்பிக்கை கண்டிப்பாக நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை தவ்பா செய்யத் தூண்டும். செய்து கொண்டிருக்கக் கூடிய பாவங்களை விட்டு விலக நம்மை தூண்டும்.
 
அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்கு இந்த அறிவுரைகள் ரஸூலுல்லாஹ்வுடைய இந்த போதனைகள் நமக்கு துணையாக இருக்கும்.
 
ஆகவே, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கூறியதை போன்று அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அல்லாஹ்வுடைய அந்த ஆகிரத்தை நினைத்து இந்த துன்யாவுடைய வாழ்க்கையை ஆகிரத்திற்காக அமைத்துக் கொண்ட சிறந்த மக்களாக என்னையும் உங்களையும், முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள்வானாக!
 
இந்த உலக வாழ்க்கையில் ஏமாந்து, இந்த உலக வாழ்க்கையில் தங்களுடைய ஆயுள் காலத்தையும், தங்களுடைய சக்தியையும் வீணடித்து நாளை மறுமையில் நஷ்டப்படக் கூடிய பாவிகளாக நாம் ஆகிவிடாமல் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ - وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ، قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا - أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ، وَعَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: لَا أَقُولُ لَكُمْ إِلَّا كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: كَانَ يَقُولُ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْجُبْنِ، وَالْبُخْلِ، وَالْهَرَمِ، وَعَذَابِ، الْقَبْرِ اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا» (صحيح مسلم - 2722)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/