HOME      Khutba      உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 2-9 | Tamil Bayan - 530   
 

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 2-9 | Tamil Bayan - 530

           

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 2-9 | Tamil Bayan - 530


உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் (அமர்வு 2-9)
 
வரிசை : 530
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 13-07-2018 | 29-10-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவிடத்தில் அவனை புகழ்ந்து துதித்ததற்கு பிறகு, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நேர்வழியை வேண்டியவனாக, இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக!
 
இந்த உலக வாழ்க்கையில் மயங்கி விடாமல், இந்த உலக மோகத்தில் மனதை பரிகொடுத்து விடாமல், இந்த உலகத்தின் ஆசாபாசங்களில் சிக்கி நேர்வழி தவறிவிடாமல் இருப்பதற்கு அவனுடைய அருளை வேண்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இவ்வுலகில் மறுமையை முன் வைத்து வாழ்கின்ற, மறுமைக்காக அதிகமாக அமல்களை செய்கின்ற மறுமையின் அமல்களில் முன்னேறிய கூட்டத்தில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய கிரந்தத்திலிருந்து உள்ளங்களை மென்மைப் படுத்துகின்ற, உள்ளங்களை உருக்குகின்ற, உள்ளங்களில் இறையச்சத்தை ஏற்படுத்துகின்ற அறிவுரைகளை நாம் பார்த்து வருகிறோம்.
 
இந்த ஜும்ஆவிலும் இன்ஷா அல்லாஹ் இந்த உள்ளங்களை பண்படுத்துவதற்காக, இந்த உள்ளங்களில் உள்ள உலக மோகத்தை எடுத்து, இந்த உள்ளங்களை ஆகிரத்தை முன்னோக்கியதாக மாற்றுவதற்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கின்ற அறிவுரைகளிலிருந்து இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்ற சில விஷயங்களை பார்ப்போம்.
 
அல்லாஹ்வுடைய ஒரு வசனத்தை கொண்டு இந்த ஜும்ஆவை ஆரம்பிப்போம். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இந்த வசனத்தை இந்த அத்தியாயத்தில் பதிவு செய்கிறார்கள்.
 
மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு வசனம். இந்த உலகத்தை பார்த்து ஏமாந்து போகின்ற, இந்த உலக ஆடம்பரங்கள், இந்த உலகத்தில் அலங்கரிக்கப்பட்ட வஸ்துக்களை பார்த்து, உலக செல்வங்களை பார்த்து தனது மனதை பரிகொடுக்கக் கூடிய நம்மை போன்ற பலவீனமானவர்களுக்கு அல்லாஹ்வுடைய இந்த எச்சரிக்கை முக்கியமானதாகும்.
 
ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
 
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ (14) قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
 
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
 
(நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு;  அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன;  அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு;  இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 14,15)
 
வசனத்தின் கருத்து : இதெல்லாம் மனிதனின் ஆசைகள். இந்த ஆசையின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்படுவது அலங்கரிக்கப்பட்ட ஒன்று. 
 
இவையெல்லாம் இந்த துன்யாவுடைய தாழ்ந்த இன்பங்கள். அல்லாஹ்விடத்தில் அழகான மீளுமிடம், சிறந்த மீளுமிடம் சொர்க்கம் இருக்கிறது.
 
இதை விட உங்களுக்கு சிறந்ததை, எதில் நீங்கள் உண்மையில் நீங்கள் மனதை பரிகொடுத்து ஆசைப்பட வேண்டுமோ, எதற்காக நீங்கள் இந்த உலக வாழ்க்கையை செலவழிக்க வேண்டுமோ, எது உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டுமோ அதை நான் உங்களுக்கு சொல்லித் தரட்டுமா? 
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு ஆசிரியரை போன்று கேட்கிறான். அவன் உண்மையில் நமக்கு கற்றுக் கொடுக்கக் கூடியவன்.
 
அப்படிதான் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
 
الرَّحْمَنُ (1) عَلَّمَ الْقُرْآنَ
 
அளவற்ற அருளாளன், இக்குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 55 : 1,2)
 
இந்த குர்ஆனை அல்லாஹ் உங்களுக்கு கற்பிக்கிறான். உங்களுக்கு தேவையானதை அல்லாஹ் உங்களுக்கு சொல்லித் தருகிறான்.
 
وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ
 
நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 4 : 113)
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு சொல்லக்கூடிய அழகிய வழிகாட்டுதல், என் அடியார்களே! உங்களுக்கு இதை விட சிறந்ததை நான் சொல்லித் தரட்டுமா? எதை பார்த்து நீங்கள் மயங்கிப்போய் இருக்கிறீர்களோ, எந்த வாழ்க்கையில் நீங்கள் மனதை பறிகொடுத்திருக்கிறீர்களோ, எதற்கு பின்னால் இரவு பகலாக நீங்கள் அழைந்து கொண்டிருக்கிறீர்களோ, அது சிறந்ததல்ல.
 
அது உங்களுக்கு வேண்டுமானால் சில தேவைகளாக இருக்கலாம். உங்களது விருப்பங்களாக இருக்கலாம், அது உங்களுக்கு பிடித்ததாக இருக்கலாம். 
 
ஆனால், தயவு செய்து நீங்கள் அதை சிறந்ததாக மேன்மையாக நினைத்து உங்களுடைய உள்ளங்களை பறிகொடுத்து விடாதீர்கள்.
 
ரப்பு கூறுகிறான், அந்த சிறந்ததை நான் அறிவிக்கட்டுமா? சொல்லித் தரட்டுமா? கற்றுத் தரட்டுமா? என்று கேட்டுவிட்டு அந்த சிறந்ததை முதலில் அல்லாஹ் கூறவில்லை. அந்த சிறந்தது யாருக்கு கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
 
ஏனென்றால், மறுமையை ஆசைப்படக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அதற்குரிய அமல்கள் இல்லாமல். மறுமையை ஆசைபடக்கூடியவர்கள், சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், அதற்குரிய அமல்கள் இல்லாமல்.
 
ஆகவேதான், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நான் சொல்லக்கூடிய அந்த மேலான பாக்கியங்கள் இந்த உலகத்தை விட சிறந்த நற்பாக்கியங்கள் யாருக்கு கிடைக்கும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
 
யார் தக்வா உள்ளவர்களாக -அல்லாஹ்வை பயந்தவர்களாக ஷிர்க்கை விட்டு குஃப்ரை விட்டு பெரும் பாவங்களை விட்டு, சிறு பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்விற்கும் தனக்கும் இடையில் உண்டான ஹக்குகளையும் சரிசெய்து கொண்டு, தனக்கும் அடியார்களுக்கும் இடையில் உண்டான ஹக்குகளையும் சரிசெய்து, அந்த தக்வாவோடு வாழ்கிறார்களோ, அந்த தக்வா உள்ளவர்களுக்கு அவர்களது ரப்பிடத்தில் அவர்கள் வரும்பொழுது நதிகள் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய சொர்க்க தோட்டங்கள் அவர்களுக்கு உண்டு. 
 
அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பரிசுத்தமான மனைவிமார்கள் அங்கே அவர்களுக்கு உண்டு. அல்லாஹ்வுடைய பொருத்தம் அவர்களுக்கு கிடைக்கும். அல்லாஹு தஆலா அடியார்களின் செயல்களை நன்கு பார்த்துக் கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் 3 : 15)
 
இந்த வசனத்தை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்து விட்டு, உமர் அல் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்றை பதிவு செய்கிறார்கள்.
 
கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
 
யா அல்லாஹ்! நீ எங்களுக்கு அலங்கரித்துக் கொடுத்ததை கொண்டு சந்தோஷப்படாமல் எங்களால் எப்படி இருக்க முடியும்?! கண்டிப்பாக எங்களுக்கு மனைவிமார்களின் மீது பிரியம் இருக்கிறது. ஆண் பிள்ளையின் மீது, குழந்தைகளின் மீது பிரியம் இருக்கிறது. உலக செல்வங்களின் மீது பிரியம் இருக்கிறது. எங்களால் பிரியம் வைக்க முடியாமல் எப்படி இருக்க முடியும்? 
 
அதற்கு பிறகு அவர்கள் சொல்லக்கூடிய துஆவை கவனியுங்கள்.
 
யா அல்லாஹ்! எந்த துன்யாவை, செல்வத்தை எனக்கு இந்த உலக வாழ்க்கையில் கொடுக்கிறாயோ அதை அதற்குரிய சரியான வழியில் தர்மம் செய்வதற்குள்ள அருளை உன்னிடத்தில் கேட்கிறேன்.
 
நூல் : புகாரி.
 
இங்கேதான் ஸஹாபாக்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்களும் வித்தியாசப்படுகிறோம். 
 
அல்லாஹ் துன்யாவை அலங்கரித்திருக்கிறான், துன்யாவுடைய வாழ்க்கை அலங்காரமானது, இந்த துன்யா அல்லாஹ் கொடுத்தது தானே, அல்லாஹ் இப்படி தானே கூறுகிறான்,
 
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. (அல்குர்ஆன் 2 : 201)
 
இப்படியெல்லாம் நாம் நமக்கு தேவைக்கு ஏற்ப அந்த வசனங்களை எடுத்துக் கொள்வோம். 
 
ஆனால், இந்த துன்யாவை பெறுகின்ற நீங்கள்‌ இதனுடைய செல்வத்தை அனுபவிக்கின்ற நீங்கள், அதை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்யுங்கள். ஏழைகளுக்கு, இல்லாதவர்களுக்கு, அனாதைகளுக்கு, உறவுகளுக்கு கொடுங்கள் என்று சொல்கிறானே அதை மறந்து விடுவோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
இங்கே உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்விடத்தில் கேட்கக் கூடிய வார்த்தை, யா அல்லாஹ்! நீ அலங்கரித்துவிட்டாய், அதை கொண்டு சந்தோஷப்படாமல், அதன் மீது ஆசைப்படாமல் எங்களால் எப்படி இருக்க முடியும்! 
 
ஆனால், அதை கொடுத்ததற்கு பிறகு அதை அதற்குரிய ஹக்கில் செலவு செய்வதற்குரிய அருளை நீ கொடு.
 
அந்த செல்வம் எங்கள் உள்ளத்தின் மீது ஆட்சி செய்துவிடக் கூடாது. அந்த செல்வம் எங்களுடைய ஈகை குணத்தை நசுக்கிவிடக் கூடாது. எங்களுடைய உள்ளத்தில் கருமித்தனத்தை, பேராசையை ஏற்படுத்தி உறவுகளை துண்டிக்கக் கூடிய, ஏழைகளை புறக்கணிக்கக் கூடிய இந்த செல்வத்தை கொண்டு ஏழையின் மீது பெருமையடிக்கக் கூடிய அந்த கர்வத்தை தூண்டி விடக் கூடாது. அதிலிருந்து நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம்.
 
இவர்கள் உண்மையை புரிந்தார்கள் அதற்கேற்ப வாழ்ந்தார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்தார்கள். அவர்களுடைய ஆட்சி காலத்தில் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வுடைய இந்த தீன் உலகத்தில் வேறு யாருடைய ஆட்சியிலும் கண்டிராத வெற்றிகளை கண்டது.
 
ரோமர்களுடைய, பாரசீகர்களுடைய கனீமத்துகள் கொண்டு வந்து கொட்டப்பட்டன. கலீஃபாவுடைய பங்கு அதிலிருந்து எடுக்கப்பட்டது. அவ்வளவு பெரிய செல்வம். அந்த செல்வத்திலிருந்து பெற்ற சாதாரண முஜாஹித்கள் எல்லாம் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக இருந்த நேரத்தில், கலீஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்த பொழுது கடன்பட்டவர்களாக மரணித்தார்கள்.
 
அவ்வளவு செல்வங்கள் தன்னிடத்தில் குவிந்த பின்பும் கூட, அந்த செல்வத்தைக் கொண்டு தான் அனுபவித்தார்களா? அந்த செல்வத்தை கொண்டு தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்களா? என்றால் இல்லை. 
 
அவர்கள் மரணிக்கும் பொழுது கடன்பட்டவர்களாக இருந்தார்கள். அல்லாஹ் தனக்கு கிலாஃபத்தில் கொடுத்த அந்த கனீமத்தையும் அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தார்கள்.
 
ஏழை முஹாஜிர்களுக்கு, ஃபக்கீர்களுக்கு, யதீம்களுக்கு கொடுத்தார்கள். அதுபோக அவர்கள் பிறரிடம் கடன் வாங்கி தர்மம் செய்தார்கள். ஸஹாபாக்கள் கடன்பட்டிருக்கிறார்கள். நாமும் கடன்படுகிறோம். நாம் நம்முடைய ஆசைகளுக்காக, நம்முடைய அதிகப்படியான தேவைகளுக்காக கடன் படுகிறோம்.
 
ஸஹாபாக்கள், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு கொடுப்பதற்காக, ஸதகா செய்வதற்காக கடன்பட்டார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கடன்பட்டார்கள், பிலால் கடன்பட்டார்கள், நபித் தோழர்கள் கடன்பட்டார்கள். தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அல்ல. அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்வதற்காக. 
 
கலீஃபா உமர் அல்ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரண நேரத்தில் தன்னுடைய மகனை அழைத்து கூறுகிறார்கள், அப்துல்லாஹ்! நான் எவ்வளவு கடனை விட்டுச் செல்கிறேன் என்பதை கவனி. இந்த கடனை அடைப்பதற்காக பைத்துல் மாலிலிருந்து எதையும் வாங்கி விடாதே!
 
என்னுடைய உறவுக்காரர்கள், என்னுடைய வாரிசுதாரர்கள், என்னுடைய இரத்த சொந்தங்கள் அவர்களிடமிருந்து செல்வத்தை வாங்கி என்னுடைய இந்த கடனை அடைப்பாயாக! என்று கூறுகிறார்கள். 
 
அவர்கள் நாடியிருந்தால் வஸிய்யத் செய்திருக்கலாம். பைத்துல் மாலிலிருந்து எனக்கு கிடைக்கக் கூடிய அந்த செல்வத்தை கொண்டு அந்த கடனை அடையுங்கள் என்பதாக.
 
ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. இது தான் அவர்கள் இந்த உலகத்தை எப்படி புரிந்து கொண்டார்கள்; இந்த உலகத்தின் மீது நாம் வைக்கக் கூடிய அந்த அன்பு, ஆசை இது நம்மை மயக்கி ஏமாற்றி விடக்கூடாது என்பதை உணர்ந்திருந்தார்கள்.
 
இதை தான் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இன்னொரு பாடத்தின் வாயிலாக நமக்கு கூறும் பொழுது இந்த செல்வம், இது நல்ல ஒன்று தான், மாற்றுக் கருத்து கிடையாது. இது தேவையான ஒன்று தான். 
 
ஆனால், அதே நேரத்தில் இது ஃபித்னாவான ஒன்றும் கூட, இது பயன்தரக் கூடிய சிறந்த ஒன்றாக இருக்கின்ற அதே நேரத்தில் இது ஃபித்னாவுடைய ஒன்றும், குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதும், நம்முடைய உள்ளத்தை மயக்கி நம்முடைய பாதையை மாற்றிவிடக் கூடியதும் இந்த செல்வமாக இருக்கிறது.
 
ஆகவேதான், செல்வத்தை பயந்து கொள்ள வேண்டும். 
 
ரப்பு கூறுகிறான்,
 
إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللَّهُ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ 
 
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன் 64 : 15)
 
உன்னுடைய கல்பை எங்கே வைத்திருக்கிறாய்? அல்லாஹு தஆலா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு குழந்தையை கொடுத்தான். குழந்தையை விட ரப்புடைய கட்டளை முக்கியம் என்பதை கருதுகிறாரா? என்பதற்காக. 
 
முதலில் அந்த குழந்தையை கொண்டு போய் பாலைவனத்தில் விடச் சொன்னான் அதையும் செய்தார்கள்.
 
பிறகு, அந்த குழந்தையை அல்லாஹு தஆலா அறுக்க சொன்னான். அதற்கும் தயாராகி விட்டார்கள்.
 
وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا
 
இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் நண்பராக எடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன் 4 : 125)
 
இன்று நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் இருக்கக் கூடிய தூரம் எதற்காக? நாம் தொழுகிறோம். ஆனால், அல்லாஹ்வை நெருங்குகிறோமா? நாம் நோன்பு நோற்கிறோம். நம்மில் நஃபிலான நோன்பு நோற்பவர்கள் அதிகமானவர்கள், நம்மில் நஃபிலான ஹஜ் செய்பவர்கள் அதிகமானவர்கள், நம்மில் நஃபிலான உம்ரா செய்பவர்கள் அதிகமானவர்கள். இன்னும் நஃபிலான தான தர்மங்கள் செய்பவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். 
 
ஆனால், அந்த ஸஹாபாக்களுக்கு ஏற்பட்ட அல்லாஹ்வின் நெருக்கம் நமக்கு கிடைத்ததா? என்றால் அல்லாஹ் மிக அறிந்தவன். 
 
காரணம், இந்த கல்பு இன்னும் திருந்தாமல் இருக்கிறது. அமல்கள் அதிகமாகி விட்டன. ஆனால், இந்த கல்பில் துன்யாவின் மோகம், இந்த கல்பில் செல்வத்தை கொண்டு பெருமை, நான் பணக்காரன் என்ற பெருமை, நான் சிறந்தவன் என்ற பெருமை, ஏழைகளை பார்க்கும் பொழுது, இல்லாதவர்களை பார்க்கும் பொழுது ஏதோ அவர்களெல்லாம் பரிதாபமானவர்கள், இந்த உலகத்தில் பாக்கியமற்றவர்கள் என்பதாக பார்க்கக் கூடிய மனப்பக்குவம். 
 
அந்த ஸஹாபாக்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள். கலீஃபா உடைய கண்ணியம், உஸ்மான் உடைய கண்ணியம். அவர்கள் பெரிய செல்வந்தர்கள். ‍அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃபை நினைத்துப் பாருங்கள். 
 
ஆனால், அவர்களிடத்தில் பணிவு, அடக்கம் இருந்தது. இல்லாதவர்களை பார்க்கும் பொழுது, அவர்களுக்கு முன்னால் பணியக்கூடிய அந்த கண்ணியம்.
 
இதைகொண்டு தான் அல்லாஹு தஆலா அவனுக்கு நெருக்கமானவர்களாக நம்மை மாற்றுகிறான். இபாதத்துகளுக்காக கண்டிப்பாக சொர்க்கத்தில் நன்மை கிடைக்கும், சந்தேகமே இல்லை. 
 
ஆனால், அல்லாஹ்வுடைய விசேஷமான அந்த நட்பு, அன்பு, அல்லாஹ்வுடைய முஹப்பத், அல்லாஹ்வுடைய ஹிதாயத் கிடைக்க வேண்டுமென்றால் இந்த உள்ளத்தோடு போராடியாக வேண்டும்.
 
போராடி இந்த உள்ளத்தை பக்குவப்படுத்தாமல் செய்கின்ற அமல்கள் அல்லாஹ்விடம் நம்மை நெருக்கமாக்கிவிடாது. அந்த அமல்கள் இக்லாஸோடு இருந்தால் கண்டிப்பாக அதற்கு கூலி கிடைக்கும். 
 
ஆனால், எந்த ஒரு அன்பை அல்லாஹு தஆலா விசேஷமாக நல்லடியார்கள், நபிமார்கள், ஸாலிஹீன்கள், சித்தீக்குகள், ஷுஹதாக்களுக்கு கொடுத்தானோ அந்த அன்பை அடைய முடியாது.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான், உங்களது செல்வங்கள், உங்களது பிள்ளைகள் சோதனை. அவற்றில் நீங்கள் மயங்கிவிடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கிறது. ஆகவே, உங்களால் முடிந்த அளவு அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதரின் கூற்றுகளுக்கு நீங்கள் செவி சாயுங்கள். நீங்கள் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் செல்வத்தை உங்களது நன்மைகளுக்காக தர்மம் செய்யுங்கள். (அல்குர்ஆன் 64 : 15,16)
 
ரப்பு எப்படி கூறுகிறான், நீங்கள் செல்வத்தை உங்களது நன்மைகளுக்காக தர்மம் செய்யுங்கள். இங்கும் நாம் படிப்பினை பெற வேண்டும்.
 
ஏழைகளுக்கு கொடுக்கும் பொழுது, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் பொழுது அல்லது ஒரு மதரஸாவை கட்டும் பொழுது அல்லது ஒரு தாருல் அய்த்தாமுக்கு நாம் உதவி செய்யும் பொழுது அந்த இடத்தில் ஷைத்தான் நம்முடைய உள்ளத்தில் பெருமையை போடுகிறான். 
 
நான் இவர்களுக்கெல்லாம் உதவி செய்தேன், நன்மை செய்தேன் என்பதாக. 
 
அதற்கு தான் ரப்புல் ஆலமீன் இங்கே தர்பியா கூறுகிறான்.
 
وَأَنفِقُوا خَيْرًا لِّأَنفُسكم
 
(அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும். (அல்குர்ஆன் 64 : 16)
 
நீ அங்கே கொடுக்கவில்லை என்றால், அல்லாஹ்விடத்தில் கொடுப்பதெற்கென்று அவனுடைய அடியார்கள் இருக்கிறார்கள். அவர்களை கொண்டுவந்து அல்லாஹ் கொடுக்க வைப்பான். 
 
நீ ஒருவருக்கு உதவி செய்யாவிட்டால் அவர் நாசமாகிவிட்டார், கைவிடப்பட்டார் என்று நினைக்காதே! உன்னையும் அவரையும் படைத்த ரப்பு அவருக்கு இருக்கிறான்.
 
அவருடைய ரப்பு அவருக்கு கைக்கொடுக்கப் போதுமானவன். நீ ஒருவருக்கு, ஒரு மதரஸாவிற்கு, ஒரு மஸ்ஜிதிற்கு, ஒரு ஏழைக்கு, ஒரு முடியாதவருக்கு உதவி செய்ய உனக்கு வாய்ப்பு ஏற்பட்டால் அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து சொல்.
 
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا (9) إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا 
 
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). “எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்). (அல்குர்ஆன் 76 : 9,10)
 
ரப்பே! ஆகிரத்தை பயந்து, உன்னுடைய நரக நெருப்பை பயந்து நான் இந்த தர்மத்தை செய்தேன். எனக்கு இதை மறுமையில் நரகத்திலிருந்து தடுக்கக் கூடிய திரையாக ஆக்கி விடு.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 
 
«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»
 
பேரீத்தம் பழத்துடைய ஒரு பாதி அளவு உன்னிடத்தில் இருந்தாலும் கூட, அதிலிருந்து ஒரு பாதியை எடுத்து நீங்கள் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று.
 
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1324, 1417, 5564.
 
தர்மத்திற்குரிய வாய்ப்பு, ஸதகாவிற்கு உரிய வாய்ப்பு கிடைத்தால் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் என் மீது அருள் புரிந்தான். இந்த ஏழையை, இந்த இல்லாதவரை இந்த ஒரு நிர்பந்தத்தில் இருக்கக் கூடியவரை என்னிடத்தில் அனுப்பி, அல்லாஹ் எனக்கு நன்மை செய்தான் என்பதாக, உங்களது நன்மைக்காக நீங்கள் தர்மம் செய்யுங்கள்.
 
وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (16) إِنْ تُقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ شَكُورٌ حَلِيمٌ
 
எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன். (அல்குர்ஆன் 64 : 16,17)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த அடிப்படையில் தான் உள்ளங்களை தூய்மைபடுத்தினார்கள். நம்முடைய உள்ளங்களில் எதுவரை இந்த செல்வத்துடைய மோகம், இந்த பணத்துடைய மோகம், நான் பணக்காரன், நான் பெரிய செல்வந்தன், நான் பெரியவன் என்ற எண்ணம் இருக்குமோ, நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ்விடத்தில் மதிப்பு இருக்காது.
 
நம்முடைய உள்ளங்கள் எந்தளவு பண்பட்டு பணிவு, அடக்கம், அமைதி அல்லாஹ்விற்கு முன்னாலும், அல்லாஹ்வின் அடியார்களுக்கு முன்னாலும் புஜத்தை உயர்த்தாமல் பணிந்திருப்போமோ, அல்லாஹ்விடத்தில் அவ்வளவு பெரிய உயர்வை நாம் அடைகிறோம். 
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அடுத்துள்ள பாடத்தில் அழகாக முந்திய பாடத்திற்கு ஏற்ப இரண்டு விஷயங்களை கூறுகிறார்கள்.
 
நாம், காசு பணம் யாரிடத்தில் இருக்குமோ அவர்களை பெரியவர்களாக மதிக்கின்றோம். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ சிறியதாக இருக்கும். காசு, பணம் யாரிடத்தில் இல்லையோ அவர்களை சாதாரணமாக எண்ணுகிறோம், அவர்களோ உள்ளத்தால் பெரியவர்களாக இருப்பார்கள்.
 
ஒரு மனிதனை காசை வைத்து பணத்தை வைத்து முடிவு செய்யாதீர்கள். ஒரு மனிதனுடைய பொருளாதாரத்தை வைத்து அவன் உயர்ந்தவனா? சிறந்தவனா? தாழ்ந்தவனா? பெரியவனா? என்று முடிவு செய்யாதீர்கள். அவனுடைய உள்ளம் பற்றி உங்களுக்கு தெரியாது. உள்ளங்களை வைத்து அல்லாஹ் முடிவு செய்கிறான்.
 
நீங்கள் ஒருவனை சாதாரணமாக நினைக்கலாம், அவனோ அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவனாக இருப்பான். நீங்கள் ஒரு மனிதனை பெரிய ஆளாக நினைக்கலாம், ஆனால் அல்லாஹ்விடத்தில் அவனுக்கு எந்த மதிப்பும் இருக்காது. 
 
அப்படியென்றால் முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்களும் சரி, ஏழைகளும் சரி அல்லாஹ்வை பயந்து கொண்டே இருக்க வேண்டும்.
 
நான் ஏழையாக இருக்கின்ற அதே நேரத்தில், பொறுமை உள்ளவனாக இல்லை என்றால்,  அல்லாஹ் எனக்கு விதித்ததை பொருந்தி கொண்டவனாக இல்லை என்றால், செல்வந்தர்களின் செல்வத்தை பார்த்து ஆசைப்படக் கூடியவனாக இருந்தால், அதன் மீது பேராசை கொண்டவனாக இருந்தால், செல்வந்தர்களின் செல்வத்தின் மீது பொறாமை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் அவன் கேடுகெட்டவனாக ஆகிவிடுவான்.
 
தனக்கு அல்லாஹ் கொடுத்த செல்வத்தை கொண்டு உறவுகளை, ஏழைகளை, அநாதைகளை, இல்லாதவர்களை சேர்த்துக் கொள்கின்ற அந்த செல்வந்தன் அல்லாஹ்விடத்தில் சிறந்தவன். ஒரு செல்வந்தன் அல்லாஹ்விற்கு அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான்.
 
அல்லாஹ்வுடைய ஹக்கை ஜகாத்திலிருந்து, ஸதாகாவிலிருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் .
 
இன்னொருவர் ஏழை, அவனிடத்தில் கொடுப்பதற்க்கு ஏதும் இல்லை. ஆனால், அதே நேரத்தில் அவன் செல்வந்தர்களை பார்க்கும் பொழுது பொறாமைப்படுகிறான். எனக்கும் இவ்வளவு பெரிய செல்வம் வேண்டுமே, நானும் இப்படி இப்படியெல்லாம் செலவு செய்வேனே என்று துன்யாவிற்காக செல்வத்தை ஆசைப்படுகிறான். இந்த ஏழை அல்லாஹ்விடத்தில் தரம் கெட்டவன்.
 
யார் நன்றியுள்ள செல்வந்தராக இருக்கிறாரோ அவர் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர். 
 
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக்காட்டுகிறார்கள். அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். 
 
«لَيْسَ الغِنَى عَنْ كَثْرَةِ العَرَضِ، وَلَكِنَّ الغِنَى غِنَى النَّفْسِ»
 
செல்வம் என்பது வசதி வாய்ப்புகள், உலக வஸ்துக்கள் அதிகமாகி விடுவதால் அல்ல. செல்வம் என்பது அவருடைய உள்ளத்தில் இருக்க வேண்டும். அவருடைய உள்ளம் செல்வம் நிறைந்ததாக, திருப்தி நிறைந்ததாக இருக்க வேண்டும். 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5965, 6446.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
 
«لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى ثَالِثًا، وَلاَ يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
 
மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள். தங்கம் நிறைந்த ஒரு வயல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டாலும், இன்னும் இரண்டாவது ஒன்று இருக்க வேண்டுமே என்று ஆசைப்படுவார்கள். இரண்டாவது தங்க வயல் கொடுக்கப்பட்டாலும் மூன்றாவது ஒரு தங்க வயல் வேண்டுமே என்று ஆசைப்படுவார்கள். 
 
இந்த மனிதனுடைய வயிறு பேராசை பிடித்த வயிறு. இதை மண்ணை தவிர வேறு எதுவும் நிரப்பாது. இவன் ஆசை இவன் கப்ருக்கு போகின்ற வரை அடங்காது.
 
பிறகு கூறினார்கள், யார் இந்த பேராசையிலிருந்து திரும்பி விடுகிறார்களோ அல்லாஹ் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்கிறான். 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5958, 6436.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அந்த பாடத்தில் பதிவு செய்கிறார்கள்.
 
செல்வம் அதிகமாக இருப்பதால் செல்வந்தன் என்று எண்ணாதீர்கள். ஒரு ஏழையை நீங்கள் தரக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். அந்த இடத்தில் நாம் பெறக்கூடிய படிப்பினை என்ன? 
 
ஒரு மனிதருக்கு அல்லாஹு தஆலா செல்வத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். இந்த மனிதர் இந்த நேரத்தில் தன்னுடைய உள்ளத்தை மறந்து விடக்கூடாது என்பதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவுரையாக கூறுகிறார்கள்.
 
யா அல்லாஹ்! நீ எனக்கு இவ்வளவு செல்வத்தை கொடுக்கிறாய், இது உன்னுடைய அருள். என்னுடைய உள்ளத்தில் திருப்தியை கொடு, போதுமென்ற மனப்பான்மையை கொடு. தர்மம் செய்யக்கூடிய அந்த நஃப்ஸை அந்த ஈமானை கொடு என்று அந்த செல்வந்தர் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
 
ஒரு மனிதர் ஏழையாக, ஃபக்கீராக இருக்கிறார். அவர் எண்ணி விட வேண்டாம்; அல்லாஹ் என்னை கைவட்டு விட்டான், அல்லாஹ் என் மீது கோபமாக இருக்கிறான், அல்லாஹ்விற்கு என் மீது திருப்தி இல்லை. எனவேதான், அல்லாஹ் எனக்கு செல்வத்தை கொடுக்கவில்லை, நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதாகவும் அவர் எண்ணிவிட வேண்டாம்.
 
நீ ஏழையாக இருக்கின்ற அந்த நிலையில் அல்லாஹ்விடத்தில் உன்னால் நெருங்க முடியும். நீ ஏழையாக இருக்கின்ற, வறுமையில் இருக்கின்ற அந்த நிலையிலும் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவனாக இருக்க முடியும். அதை தான் இந்த சம்பவத்தின் மூலமாக இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் நமக்கு உணர்த்துகிறார்கள்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருக்கும் பொழுது அந்த வழியாக ஒரு மனிதர் செல்கிறார்.
 
நபியவர்கள் அவரைப் பார்த்து விட்டு கூறினார்கள், இதோ போகிறாரே இந்த மனிதரைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? அப்பொழுது ஸஹ்ல் இப்து ஸஅது ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அங்கிருந்தவர்களும் கூறினார்கள்:
 
இவரோ மக்களில் பெரிய ஒரு பணக்காரர்; சிறந்த மனிதர். அவர் தனக்கு யாரிடத்திலாவது பெண் கேட்டால் அவருக்கு மணமுடித்து கொடுத்து விடுவார்கள். அவ்வளவு பெரிய செல்வந்தர். 
 
அவர் யாருக்காவது சிபாரிக்கு சென்றால் உடனடியாக அவருடைய சிபாரிசை ஏற்றுக் கொள்வார்கள். அந்தளவுக்கு, மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு பெரிய மனிதர். 
 
இதை கேட்டு விட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியாகி விட்டார்கள். 
 
பிறகு, இன்னொரு மனிதர் அதே வழியாக செல்கிறார். அப்பொழுது கேட்டார்கள், இவரை பற்றி நீ என்ன சொல்கிறாய்? என்று.
 
அல்லாஹ்வுடைய தூதரே! முஸ்லிம்களில் உள்ள ஒரு ஃபக்கீர். 
 
(ஃபக்கீர் என்றால் அன்றைய நாள் சாப்பிடுவதற்கு கூட அவரிடத்தில் சாப்பாடு இருக்காது. இன்று நாம் தெருக்களில் யாசகம் கேட்பவர்களை ஃபக்கீர் என்று மிஸ்கீன் என்று எண்ணி வைத்திருக்கிறோம்.
 
அவர்களிடத்திலோ நம்மில் ஒருவரிடத்திலும் இல்லாத செல்வங்கள் அவர்களிடத்தில் குவிந்து கிடக்கிறது. 
 
ஃபக்கீர் யார்? அவரிடத்தில் இருக்காது. ஆனால், அவர் அல்லாஹ்வை பயந்து யாசகம் கேட்காதவராக, தன்னுடைய தேவையை வெளிப்படுத்தாதவராக இருப்பார்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்: நீங்கள் யாசகம் கேட்டு வரக்கூடியவர்களுக்கு தர்மம் கொடுக்கிறீர்களே அவர்கள் அல்ல மிஸ்கீன். ஒரு பேரீத்தம் பழம், இரண்டு பேரீத்தம் பழங்களை கொண்டு வாங்கி சென்று விடுகிறார்களே அவர்கள் அல்ல மிஸ்கீன். இன்றைய காலத்தில் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் கொடுத்தால் வாங்கி விட்டு செல்கிறார் அல்லவா? அவர் அல்ல மிஸ்கீன்.
 
மிஸ்கீன் என்பவர், மக்களிடத்தில் கையேந்தாமல் இருப்பார், கேட்காமல் இருப்பார். தன்னுடைய தேவையை மறைத்து வைத்திருப்பார். நீங்கள் அவரை அடையாளம் கண்டு அவருக்கு கொடுக்க வேண்டும். அந்த மிஸ்கீனுக்கு நீங்கள் தர்மம் செய்வதில் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த கூலி இருக்கிறது.
 
முதல் ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட பொழுது சொன்னார்கள்: அல்லாஹ்வுடைய தூதரே! இவர் முஸ்லிம்களில் உள்ள ஒரு ஃபக்கீர். இவர் யாரிடமாவது சென்று பெண் கேட்டால் இவருக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டார்கள். இவர் யாருக்காவது சிபாரிசு செய்தால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர் ஏதாவது பேச வந்தால் கூட இவர் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 
 
«هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا»
 
இந்த ஒரு மனிதர் முன்னால் சென்றால் அல்லவா? அது போன்ற மனிதர்களால் இந்த பூமி நிறைந்திருப்பதை விட இந்த ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் மிக சிறந்தவர். (1)
 
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6447.
 
கண்டிப்பாக இந்த துன்யா ஒரு விதியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அல்லாஹ் யாரை செல்வந்தனாக எழுதிவிட்டானோ அவன் இந்த உலகத்தில் செல்வந்தனாக இருப்பான். யாரை அல்லாஹ் ஃபக்கீராக எழுதிவிட்டானோ அவன் ஃபக்கீராக இருப்பான்.
 
செல்வம் கிடைத்தவர்கள் இந்த செல்வம் தனது அறிவால் கிடைத்தது என்று எண்ண வேண்டாம்.
 
وَأَنَّهُ هُوَ أَغْنَى وَأَقْنَى
 
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான். (அல்குர்ஆன் 53 : 48)
 
எத்தனையோ பேர் எப்படி இருந்தார்கள், எப்படி இருக்கிறார்கள், அல்லாஹ் கொடுக்கிறான், அந்த செல்வத்தை அவனுக்கு கொடுத்தவன் அல்லாஹ். இந்த செல்வம், வறுமை என்பது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் உள்ளது. இந்த விதியை நம்பக்கூடியவன், ஏற்றுக் கொள்ளக் கூடியவன் தான் உண்மையான முஃமின்.
 
இங்கே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு என்ன வழிகாட்டுகிறார்கள்? 
 
இந்த செல்வத்தின் மோகத்திலிருந்தும், நன்றி கெட்டத் தனமாக நடந்து கொள்வதிலிருந்தும், தன்னுடைய வறுமையை பார்த்து பயந்து தடுமாறிவிடுவதிலிருந்தும் நமக்கு ஈமானிய பாதுகாப்பு தேவை, நமக்கு ஈமானிய பலம் தேவை.
 
அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன வழிகாட்டினார்கள்? எவ்வளவு அழகாக கூறினார்கள்:
 
ஹதீஸின் கருத்து : நீங்கள் யாரையாவது பார்க்கிறீர்கள். பெரிய வசதியான வாகனத்தில் செல்கிறார்கள், வசதியான வீட்டில் வசிக்கிறார்கள், செல்வம் அவர்களிடத்தில் அதிகமாக இருக்கிறது.
 
இப்படி யாரையாவது நீங்கள் பார்த்தால், அது போன்று உங்களை விட மிக அழகாக இருக்கிறார், உடல் திடகாத்திரமாக இருக்கிறார். 
 
இப்படி நீங்கள் யாரையாவது பார்த்தால் உடனடியாக நீங்கள் உங்களை விட குறைவாக உள்ளவர்களை, உங்களை விட தாழ்ந்துள்ளவர்களை நீங்கள் பாருங்கள். 
 
ஒருவருடைய மாளிகையை நீங்கள் பார்க்கிறீர்கள். உடனடியாக உங்களுடைய பார்வையை தெருக்களின் ஓரத்தில் வசிக்கின்ற அந்த ஏழைகளின் பக்கம் திருப்புங்கள்.
 
நூல் : புகாரி, எண் : 6009.
 
செல்வத்தை பார்த்து மயங்கி நிற்கின்றோம். செல்வந்தனின் செல்வத்தை பார்த்து பிரம்மிக்கிறோம். அந்த நேரத்தில் ஈமானுடைய தடுமாற்றம் ஏற்படுகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடனடியாக நம்முடைய கவனத்தை திருப்ப சொன்னார்கள்.
 
எப்படி ஒரு அண்ணிய பெண்ணை பார்த்தால் உடனடியாக பார்வையை திருப்ப சொன்னார்களோ அதே அடிப்படையில் தான் இங்கே கூறினார்கள். 
 
உடனடியாக உங்களுடைய கவனத்தை திருப்புங்கள். அந்த செல்வ செழிப்பில் உங்களுடைய பார்வைகளை நோக்கி விடாதீர்கள்.
 
உங்களை விட செல்வத்தில், உங்களை விட படைப்பில், அழகில் தாழ்ந்திருக்கக் கூடிய ஒரு சாதாரண மனிதரை பாருங்கள் என்பதாக. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். அவர்கள் எத்தகைய கஷ்டத்தில், வறுமையில் அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வாழ்ந்தார்கள்.
 
எவ்வளவு பெரிய கஷ்டத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்தார்கள்! ஸஅது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், 
 
«إِنِّي لَأَوَّلُ العَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ، وَرَأَيْتُنَا نَغْزُو وَمَا لَنَا طَعَامٌ إِلَّا وَرَقُ الحُبْلَةِ، وَهَذَا السَّمُرُ، وَإِنَّ أَحَدَنَا لَيَضَعُ كَمَا تَضَعُ الشَّاةُ، مَا لَهُ خِلْطٌ، ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ تُعَزِّرُنِي عَلَى الإِسْلاَمِ، خِبْتُ إِذًا وَضَلَّ سَعْيِي»
 
நான் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்யும் பொழுது அல்லாஹ்வுடைய தூதரோடு நாங்கள் சாப்பிடுவதற்காக உணவு இருக்காது, இலைகளை தவிர. 
 
(செல்வம் தான் இந்த உலகத்தில் மிக சிறந்த ஒன்றாக இருக்குமேயானால் அந்த செல்வத்தை அல்லாஹ் தஆலா தனது தூதருக்கு கொடுத்திருப்பான்.
 
நபியே! நீங்கள் செல்வந்தர்களாகவே வாழுங்கள் என்று அல்லாஹு தஆலா நபிக்கு கட்டளையிட்டிருப்பான். அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்யும் பொழுது அவர்களுடைய கஷ்ட நிலையை பாருங்கள்.)
 
ஸஅது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், இந்த இலைகளை சாப்பிட்டதால் எங்களுடைய மலம் ஒரு ஆட்டினுடைய விட்டையை போன்று ஆகிவிட்டது.
 
எங்களுடைய குடல்களெல்லாம் சுறுங்கிவிட்டன, எங்களுடைய இறைப்பை அப்படியே இறுகி விட்டன. எந்த மாதிரியான ஒரு நிலைக்கு நாங்கள் ஆளானோம். எங்களுடைய குடும்பத்தார்கள் இஸ்லாமை ஏற்றதற்காக என்னை பழித்துக் கொண்டே இருந்தார்கள்.
 
நான் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக செல்வ செழிப்பை விட்டு இப்படி நாம் வந்துவிட்டதை எடுத்துக் கூறி என்னை பழித்து இழிவாக பேசிக் கொண்டே இருந்தார்கள். 
 
அவர்களுடைய பேச்சை கேட்டு அல்லாஹ்வுடைய தூதரோடு சென்றிருக்காமல் இருந்திருந்தால், அல்லாஹ்வுடைய தூதரை நான் புறக்கணித்திருந்தால், நான் நஷ்டமாகியிருப்பேன். எனது வாழ்க்கையே வீணாகிப் போயிருக்கும். 
 
அறிவிப்பாளர் : ஸஅது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5972, 6453.
 
நாம் எப்படி அனுமானம் வைத்திருக்கிறோம். சம்பாதித்து பெரிய நிலையை எட்டியவன் வாழ்க்கையில் சக்ஸெஸ் ஆகிவிடுவான். அதற்காக மார்க்கம் சோம்பேறியாக இருக்க சொல்லவில்லை. உழையுங்கள், கஷ்டப்படுங்கள் சிரமப்படுங்கள்.
 
தாவூது அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய கரத்தால் உழைத்து சாப்பிடக் கூடியவர்களாக இருந்தார்கள். ஸஹாபாக்கள் உழைக்கக் கூடியவர்களாக, கஷ்டப்படக்கூடியவர்களாக இருந்தார்கள், வியர்வை சிந்தி அவர்கள் வேலை செய்பவர்களாக இருந்தார்கள். 
 
என்ன வித்தியாசம்? அல்லாஹ் தனக்கு கொடுத்ததை கொண்டு போதுமாக்கிக் கொள்வது, மன நிறைவடைவது.
 
அல்லாஹ் தன்னை ஏழையாக வைத்திருக்கிறான் என்பதால் குறைபட்டுக் கொள்ளாமல், பதட்டப்பட்டு விடாமல், அல்லாஹ்வை குறை சொல்லி விடாமல், அல்லாஹ்வுடைய விதியை ஏசிவிடாமல் இருப்பது. இது தான் ஈமான்.
 
ஸஅது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரிய செல்வந்தர், குரைஷி வமிசத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கூறினார்கள், 
 
நான் இந்த துன்யாவின் மீது ஆசைப்பட்டு என்னுடைய குடும்பத்தார்கள் என்னை குறை கூறுகிறார்கள், நிந்திக்கிறார்கள் என்பதற்காக நான் இந்த இஸ்லாமை விட்டிருந்தால் நான் நஷ்டமடைந்திருப்பேன், நான் வழிகெட்டிருப்பேன். அந்த உலக வாழ்க்கையே எனக்கு வீணாகி போயிருக்கும்.
 
அறிவிப்பாளர் : ஸஅது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5972, 6453.
 
நம்முடைய சிந்தனையை இங்கே மாற்றுகிறார்கள். சம்பாதித்து செல்வத்தில் உச்சத்தை எட்டியவன் வாழ்க்கையில் அவன் சக்செஸ் ஆகிவிட்டான் என்பது அல்ல. அவனுக்கு அல்லாஹ் நாடியது கிடைத்தது. 
 
ஒரு ஏழை வறுமையில் இருக்கிறான், அவன் மரணிக்கும் பொழுது அவனுக்கு கஃபனிடுவதற்கு கூட எதுவும் இல்லையென்றாலும் அவரை பார்த்து இவர் உலகத்தில் என்ன செய்தார்? இவர் இந்த உலகத்தில் பெரிய வெற்றியாளர் அல்ல. இவர் சாதாரணமானவர், இந்த உலகத்தில் இவர் தோற்றுவிட்டார். 
 
இப்படியாக ஒருவன் நினைத்தால் அவனை விட முட்டாள் வேறு யாருமில்லை. இதற்கு தான் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொடர்ந்து அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சம்பவத்தை பதிவு செய்கிறார்கள்.
 
அவர்கள் கூறுகிறார்கள், எங்களில் அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள், ஜிஹாது செய்தவர்கள் இருந்தார்கள். அதற்குரிய கூலியை பெற்றுக் கொள்ளாமல் அந்த உலகத்திலிருந்து எதையும் அனுபவிக்காமல் இறந்துவிட்டார்கள்.
 
எங்களில் பலர் இப்பொழுது வசிக்கிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் தஆலா செல்வ செழிப்பை கொடுத்திருந்தான் என்பதாக கூறிவிட்டு, முஸ்அபை நினைத்துப் பாருங்கள். செல்வ செழிப்புள்ள அந்த சீமானை நினைத்துப் பாருங்கள் என்று கூறினார்கள். 
 
ஈமான், ஹிஜ்ரத் அல்லாஹ்வுடைய தீனுக்காக தன்னுடைய செல்வத்தை எல்லாம் துறந்துவிட்டு ஃபக்கீராக ரஸூலுல்லாஹ்வுடைய மஜ்லிஸில் இருந்தார்கள்.
 
உஹது போரில் கொல்லப்பட்டார். இந்த ஹதீஸை அறிவிக்கக் கூடிய ஹப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், அவரிடத்தில் இருந்ததெல்லாம் ஒரு போர்வை தான். அவ்வளவு செழிப்புள்ள மனிதர். அய்யாமுல் ஜாஹிலியாவில் ஒரு நாளைக்கு இருநூறு திர்ஹங்களுக்கு ஆடை அணியக்கூடிய செல்வந்தர்.
 
அல்லாஹ்விற்காக இந்த மார்க்கத்திற்காக எல்லாவற்றையும் இழந்தார். அவர் கொல்லப்படுகிறார். அவருடைய ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. அவருடைய கஃபனுடைய நிலையை ஹப்பாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
 
அவர் விட்டுச் சென்ற போர்வையை கொண்டு அவருடைய தலையை மறைத்தால் அவருடைய இரண்டு கால்களும் வெளிப்பட்டன. அவருடைய கால்களை மறைத்தால் தலை வெளிப்பட்டது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், நீங்கள் தலையை மறைத்து விட்டு காலை இலைகளை கொண்டு மறைத்து விடுங்கள் என்பதாக.
 
நூல் : புகாரி, எண் : 5967,1195.
 
இது ஈமான். செல்வ செழிப்பில் உயர்ந்துவிட்டதால் வாழ்க்கையில் சக்செஸ் ஆகிவிட்டோம் என்று எண்ணிவிட வேண்டாம். ஏழையாக இருப்பதால் வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என்று எண்ணிவிட வேண்டாம். நம்முடைய முடிவு ஈமானில், அமலில், இக்லாஸில், தவ்பாவில், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருக்கிறதா? அது தான் நமக்கு சக்செஸ்.
 
இதற்கு சான்றாக இன்னும் ஒரு சம்பவத்தை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள். அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி, மிகப் பெரிய செல்வ செழிப்பை பின்னால் உள்ள காலத்தில் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்தான். 
 
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு காலம் இருந்தது. பசியினால் குப்புறப்படுத்துக் கொண்டேன்.
 
எனது வயிற்றில் கல்லை கட்டிக் கொள்வேன். நான் ஒரு நாள் இப்படியாக மஸ்ஜிதை விட்டு வெளியேறுகின்ற வழியில் பசி தாங்க முடியாமல் வலியினால் குப்புறப்படுத்துக் கொண்டிருந்தேன். 
 
அப்பொழுது அபூபக்ர் வந்தார், அல்லாஹ்வுடைய வசனத்தில் ஒரு வசனத்தை ஓதி அதற்கு விளக்கம் கேட்டேன். எனக்கு அதற்குரிய விளக்கம் தெரியாது என்பதாக அல்ல.
 
எப்படியாவது பேச்சு கொடுத்து அபூஹுரைா! என்ன சோர்வாக இருக்கிறாயே, உனக்கு என்ன பசியா? என்று அபூபக்கர் கேட்டு, எனக்கு சாப்பாடு கொடுக்கமாட்டாரா? என்பதற்காக. ஆனால், அவரோ என் பசியை புரியவில்லை, சென்று விட்டார். 
 
பிறகு உமர் வந்தார், அவரிடமும் நான் அப்படி செய்தேன். அவரும் அதை புரியவில்லை, சென்றுவிட்டார்.
 
இறுதியாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். என்னை பார்த்து புன்முறுவலாக சிரித்தார்கள். என்னுடைய தேவையை புரிந்து கொண்டார்கள். என் முகத்தில் உள்ள பசியின் கொடுமையை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். 
 
அபூஹுரைரா! வாருங்கள் என்பதாக கூறினார்கள். நான் லப்பைக்க யா ரஸூலுல்லாஹ்! என்று கூறி அவர்களிடத்தில் சென்றேன்.
 
அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் ஒரு கோப்பையில் பால் இருந்தது. தன்னுடைய மனைவிமார்களிடத்தில் கேட்டார்கள், இந்த பால் எப்படி வந்தது? என்பதாக. மனைவிமார்கள் கூறினார்கள், இன்னார் உங்களுக்கு அன்பளிப்பு கொடுத்தார்கள் என்பதாக.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூஹுரைராவிடம் உடனடியாக அஸ்ஹாபுஸ் சுஃப்பாவை அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். 
 
அபூஹீரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், இந்த அஸ்ஹாபுஸ் சுஃப்பா இஸ்லாமுடைய விருந்தாளிகளாக இருந்தார்கள். இவர்கள் யாரிடமும் செல்ல மாட்டார்கள். இவர்களுக்கு குடும்பங்கள் இருக்காது. யாரிடத்திலும் இவர்கள் யாசகம் கேட்க மாட்டார்கள்.
 
ரஸூலுல்லாஹ்விற்கு ஏதாவது தர்மம் வந்தால் அதை இவர்களுக்கு கொடுப்பார்கள், சாப்பிட்டுக் கொள்வார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏதாவது அன்பளிப்பு வந்தால் அந்த அன்பளிப்பில் தானும் சாப்பிட்டு அந்த ஏழை திண்ணை வாசிகளுக்கும் அவர்கள் கொடுப்பார்கள். 
 
அந்த நேரத்தில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த கோப்பை பால் அன்பளிப்பு என்று தெரிந்து கொண்ட உடனே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த திண்ணை தோழர்களை அழைத்து வாருங்கள் என்பதாக கூறுகிறார்கள்.
 
(அல்லாஹ்வுடைய தூதர் எவ்வளவு பசியில் இருந்திருப்பார்கள். இதுதான் ஒரு முஃமினுடைய நிலை. ஒரு சமுதாய அக்கறை கொண்ட தலைவருடைய நிலை. தனக்கு வறுமை இருந்தாலும் தன்னுடைய தோழர்கள், தன்னுடைய நண்பர்கள் அவர்களும் தன்னை போன்று தானே கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றால், அவர்களையும் தனக்கு அல்லாஹ் கொடுத்த செல்வத்தில் கூட்டாக்கிக் கொள்ளக் கூடியவர் தான் உண்மையான முஃமின்.)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், அஸ்ஹாபுஸ் சுஃப்பாவை அழைத்து வாருங்கள் என்று. 
 
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மனதிற்குள்ளே பேசிக் கொள்கிறார்கள். இந்த பாலை குடிப்பதற்கு நான் அல்லவா தகுதி உடையவன், என்னை தானே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைத்து வந்தார்கள். என்னுடைய பசியின் கொடுமையை புரிந்து கொண்டார்கள்.
 
இந்த பாலை குடித்து கொஞ்சமாவது நிமிர்ந்து நடப்பதற்கு நான் ஒரு வலிமை பெற வேண்டாமா? இப்படி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்களே, அப்படியே நான் அவர்களை அழைத்து வந்தாலும் முதலில் எனக்கு குடியுங்கள் என்றா ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுவார்கள்? எல்லோரையும் குடிக்க சொல்வார்கள். அதற்கு பிறகு எனக்கு கிடைத்தால் தானே! எல்லோருக்கும் என்னையே கொடுக்க சொல்வார்கள்.
 
எத்தனை பேர் இதை குடிப்பது, எத்தனை பேர் வரப் போகிறார்களோ! எனக்கு இதிலிருந்து என்ன கிடைக்கப் போகிறது? 
 
இருந்தாலும் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்படுவதை தவிர வேறு வழியில்லை. 
 
(இதுதான் ஸஹாபாக்களுடைய தன்மை. என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி, என்ன சிக்கல் சிரமமாக இருந்தாலும் சரி, தனக்கு சிரமமான ஒன்றை சொன்னாலும் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய ரஸூலுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் ஸஹாபாக்கள். 
 
நாம் நமக்கு இலகுவாக இருந்தால் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் பெற்றுக் கொள்வோம்.
 
நமக்கு எங்கே சிரமமாக இருக்கிறதோ அங்கே அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரஸூலையும் மார்க்கத்தையும் விட்டு விட்டு நம்முடைய மன இச்சையின் பக்கம் ஒதுங்கி விடுவோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!) 
 
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள், வேறு வழியில்லை, அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். நான் சென்று அவர்களை அழைத்து வந்தேன்.
 
அவர்கள் அனுமதி கேட்டார்கள், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதி கொடுத்தார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னை அழைத்தார்கள், லப்பைக்க யா ரஸூலுல்லாஹ! 
 
இந்த பாலை இவர்களுக்கெல்லாம் கொடுங்கள் என்று கூறினார்கள். எல்லோருக்கும் கொடுத்து வந்தேன். எல்லோரும் திருப்தியாக குடித்தார்கள். கடைசியாக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்தேன். எல்லோரும் குடித்து திருப்தியாக இருந்தார்கள். 
 
அந்த பால் கோப்பையை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாங்கி தங்களுடைய கரத்தில் வைத்துக் கொண்டு, அபூஹுரைராவை பார்த்து சிரிக்கிறார்கள். பிறகு கூறினார்கள், அபூஹுரைரா! நான் கூறினேன் லப்பைக்க யா ரஸூலுல்லாஹ்! கூறினார்கள், நீயும் நானும் தான் மீதமாக இருக்கிறோம்.
 
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள், சரியாக தான் கூறினீர்கள். பிறகு கூறினார்கள், அமருங்கள் அபூஹுரைரா, குடிங்கள். குடித்தார்கள். குடித்துவிட்டேன் யா ரஸூலுல்லாஹ். 
 
ரஸூலுல்லாஹ் கூறினார்கள், இல்லை இன்னும் குடியுங்கள். குடித்துவிட்டேன் என்று கூறினார்கள், மீண்டும் கூறினார்கள் இன்னும் குடியுங்கள் என்று. 
 
لاَ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، مَا أَجِدُ لَهُ مَسْلَكًا
 
நபியே! உங்களை சத்திய மார்க்கத்தை கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக இனி இந்த பால் உள்ளே செல்வதற்கு வழியில்லை என்று. 
 
பிறகு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை எனக்கு காட்டுங்கள் என்று கூறினார்கள். அதை நான் அவர்களுக்கு கொடுத்தேன். அல்லாஹ்வை புகழ்ந்தார்கள்; பிஸ்மில்லாஹ் கூறினார்கள்; மிஞ்சியதை அவர்கள் குடித்தார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5971, 6452.
 
இது நம்முடைய நமது மூத்த தலைமுறையின் நிலை. யார் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் உயர்ந்தவர்களோ, யார் உண்மையில் இந்த உலகத்தின் செல்வ செழிப்பை அனுபவிக்க வேண்டியவர்களோ, அல்லாஹ்விற்காக யாருடைய உயிர் கொல்லப்பட்டதோ, யாருடைய பிள்ளைகள் யதீம்கள் ஆனார்களோ, யாருடைய மனைவிகள் விதவைகள் ஆனார்களோ அவர்களே இந்த உலகத்தை அனுபவிக்காமல் ஏழைகளாக இறந்தார்கள்.
 
இந்த உலக செல்வங்களை கொண்டு அவர்கள் இன்பமடையவில்லை என்றால் நாம் ஏழையாக இருப்பதில் ஏன் வருத்தப்பட வேண்டும்? நாம் ஏன் அல்லாஹ்வின் மீது கோபித்துக் கொள்ள வேண்டும்?
 
அல்ஹம்து லில்லாஹ். யா அல்லாஹ்! ஏழ்மையில் நாம் ஸபுரோடு இருக்க வேண்டும். இந்த ஏழ்மையிலும் நம்முடைய மார்க்கத்தை பின்பற்றுவதற்குரிய அருளை எனக்கு கொடு என்று நாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும்.
 
இதைத்தான் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் நமக்கு சொல்ல வருகிறார்கள். ரஸூலுல்லாஹ் வறுமையில் இருந்தார்கள்; அவர்கள் கஷ்டத்தில் இருந்தார்கள்; உண்ணுவதற்கு உண்டான உணவு அவர்களிடத்தில் இல்லாமல் இருந்தார்கள். 
 
இந்த உலக வாழ்க்கையில் நாம் உழைப்பு செய்யலாம், செல்வத்தை தேடலாம். ஆனால், அந்த செல்வம் நமது உள்ளத்தின் மீது ஆட்சி செய்துவிடக் கூடாது.
 
நாம் ஏழையாக, கஷ்டப்படக் கூடியவர்களாக, சிரமப்படக் கூடியவர்களாக இருந்தால் அதனால் நாம் துவண்டுவிடக் கூடாது, பலவீனப்பட்டு விடக் கூடாது. நாம் அல்லாஹ்வுடைய அருளில் இருந்து நிராசை அடையக் கூடாது. 
 
இதுதான் இன்றைய நம்முடைய தர்பியா. நம்முடைய உள்ளத்திற்கு திரும்ப திரும்ப நாம் கொடுக்க வேண்டிய இந்த தர்பியா இது.
 
முஃமினே! அல்லாஹ்வுடைய அடியானே! செல்வத்தின் மீது உண்டான ஆசை ஹராமான வழியில் அது உன்னை தேட வைத்து விட வேண்டாம். நீ செல்வந்தனாக ஆகிவிட்டால் அந்த செல்வம் காரூனை போன்று அல்லாஹ்வுடைய அடியார்கள் மீது பெருமையடிக்க உன்னை தூண்டி விட வேண்டாம்.
 
ஏழையாக இருந்தால் அல்லாஹ் விதித்ததை கொண்டு பொருந்திக் கொள்ள வேண்டும். ஸபுர் உள்ளவனாக, ஹலாலான வழியில் தேடக்கூடியவனாக, அல்லாஹ்வுடைய விதியை பொருந்திக் கொண்டவனாக, உனக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இதை விட சிறந்த ஆகிரத்தை எதிர்பார்க்கக் கூடியவனாக இரு.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் உயர்ந்த ஈமானை தந்தருள்வானாக! நம்முடைய பாவங்களை மன்னித்து நம்முடைய உள்ளங்களை அல்லாஹு தஆலா பரிசுத்தபடுத்துவானாக! செல்வத்தின் மோகத்திலிருந்தும், இந்த உலகத்தின் மீது உண்டான பேராசையிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வுடைய விதியை பொருந்திக் கொண்டவர்களாக, அல்லாஹ்வின் பக்கம் எப்பொழுதும் முன்னோக்கியவர்களாக, அல்லாஹ்விடத்தில் நம்முடைய தேவைகளை கேட்பவர்களாக, நம்முடைய துஆக்களுக்கு கண்டிப்பாக அல்லாஹ் பதிலளிப்பான் என்று யகீன் உள்ளவர்களாக என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ قَالَ: مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لرَجُلٍ عِنْدَهُ جَالِسٍ: «مَا رَأْيُكَ فِي هَذَا» فَقَالَ: رَجُلٌ مِنْ أَشْرَافِ النَّاسِ، هَذَا وَاللَّهِ حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ مَرَّ رَجُلٌ آخَرُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأْيُكَ فِي هَذَا» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ مِنْ فُقَرَاءِ المُسْلِمِينَ، هَذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْمَعَ لِقَوْلِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا» (صحيح البخاري- 6447) 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/