HOME      Khutba      உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 3-9 | Tamil Bayan - 530   
 

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 3-9 | Tamil Bayan - 530

           

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 3-9 | Tamil Bayan - 530


உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஆதரவும் அச்சமும் - உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் (அமர்வு  3-9)
 
வரிசை : 530
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 03-08-2018 | 21-11-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியாகளே! உங்கள் முன் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, 
 
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய தூதராகவும் அடியாராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சியம் கூறியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை முன்னிறுத்தி வாழ்க்கையின் எல்லா சந்தர்பங்களிலும் வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக, 
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணும்படியும், சிறிய பெரிய எல்லா விதமான பாவங்களை விட்டு விலகி தவ்பா செய்தவர்களாக, அல்லாஹ்வுடைய மார்க்க சட்ட வரம்புகளை பேணி, அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பாதுகாத்து வாழுமாறு உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னித்தருள்வானாக! நம்முடைய காரியங்களை சீர்படுத்தி அல்லாஹ்வை நெருங்கிய நல்லவர்களில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக!
 
ஷைத்தானை விட்டும்,  நஃப்ஸுடைய தீங்குகளை விட்டும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய கிரந்தத்திலிருந்து நம்முடைய உள்ளங்களை மென்மையாக்குவதற்கு அல்லாஹ்வுடைய அச்சத்தால் அந்த உள்ளங்களை நிரப்புவதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கின்ற முக்கியமான அறிவுரைகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
 
அதில் இன்ஷா அல்லாஹ் இன்று நாம் அல்லாஹ்வுடைய பயத்தை பற்றியும் அல்லாஹ்வை எப்படி பயப்பட வேண்டும்? அல்லாஹ்வுடைய பயம் குறித்து வந்திருக்கக் கூடிய ஆதாரங்கள் நமக்கு என்ன அறிவுரைகளை கூறுகின்றன? பிறகு அதன் அடிப்படையில் நம்முடைய அமல்கள், நாம் செய்யக்கூடிய நற்செயல்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றியும் இன்ஷா அல்லாஹ் பார்க்க இருக்கிறோம்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சொல்லக்கூடிய அறிவுரைகளை எனக்கும் உங்களுக்கும் பயனுள்ளதாகவும், கேட்டகக்கூடிய எல்லா மக்களுக்கும் பயனுள்ளதாகவும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு பாடத்தை தனது அத்தியாயம் அர்ரிகாக் என்பதில் பதிவு செய்கி றார்கள். 
 
அல்லாஹ்வின் மீது ஓர் அடியானிற்கு எவ்வளவு ஆதரவு இருக்க வேண்டுமோ, அது போன்று அல்லாஹ்வின் மீது பயமும் இருக்க வேண்டும். 
 
அல்லாஹ்வை கண்டிப்பாக நாம் ஆதரவு வைக்க வேண்டும். அல்லாஹ் என்னை மன்னிப்பான், அல்லாஹ் மகா கருணையாளன், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னை கைவிடமாட்டான், அல்லாஹு தஆலா எனக்கு சொர்க்கத்தை தருவான், அல்லாஹ் எனது மறுமையின் காரியங்களை சீர்படுத்துவான். 
 
இப்படியாக நன்மைகளையும், நல்ல விஷயங்களையும், நல்ல முடிவையும், சொர்க்க வாழ்க்கையையும் ஒவ்வொரு முஸ்லிமும் ஆதரவு வைக்க வேண்டும்.
 
இப்படி ஆதரவு இருக்கின்ற அதே நிலையில் ஒரு முஸ்லிம் -அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவன், அல்லாஹ்வின் மீது அவனுக்கு பூரண பயமும் அச்சமும் இருக்க வேண்டும். 
 
யா அல்லாஹ்! என்னை தண்டித்து விடாதே. யா அல்லாஹ்! பாவங்களை கொண்டு என்னை சோதித்து விடாதே! யா அல்லாஹ்! எனது முடிவை நான் கெடுத்துக் கொள்ளும்படியான அமல்களில் என்னை நீ சோதித்து விடாதே! யா அல்லாஹ்! என்னுடைய குற்றங்களால், பாவங்களால் நாளை மறுமையில் நீ என்னை தண்டித்து விடாதே!
 
யா அல்லாஹ்! நான் செய்யக்கூடிய பாவம் என் ஈமானை போக்கி விடும்படியாக ஆக்கிவிடாதே! என்னுடைய பாவத்தால் என் உள்ளத்தில் உள்ள ஈமானை பறித்து விடாதே! எனது ஈமானின் ஒளியை நீ எடுத்து விடாதே! நீ என் மீது கோபித்து விடாதே! இப்படியாக அந்த அடியானின் உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது உண்டான பயம் இருக்க வேண்டும்.
 
எனது பாவங்களை அல்லாஹ் தஆலா மன்னிக்காமல் நரகத்தை கொண்டு தண்டித்து விடுவானோ! நாளை மறுமையில் நன்மையின் தட்டுகள் இலேசாகி பாவத்தின் தட்டுகள் கனத்து விடுமோ! ஸிராத் என்ற பாலத்தை கடக்கும் பொழுது நான் நரகத்தில் விழுந்து விடுவேனோ! எழுதப்பட்ட ஏடுகள் கொடுக்கப்படும் பொழுது அது எனது இடது கையில் கொடுக்கப்பட்டு விடுமோ!
 
இப்படியாக ஒவ்வொரு விஷயத்தையும் நினைத்து நினைத்து அல்லாஹ்வை பற்றிய பயமும் அவனுடைய உள்ளத்தில் பசுமையாக நிரந்தரமாக இருக்க வேண்டும். ஆதரவு ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பயம். 
 
இந்த இரண்டும் கலந்தது தான் ஈமான். இந்த இரண்டையும் தனது உள்ளத்தில் வைத்திருப்பவர்கள் தான் உண்மையான முஃமின்களாக இருக்க முடியும்.
 
ஆதரவு இருந்து பயம் இல்லையென்றால் அவன் பாவத்தில் வரம்பு மீறக்கூடியவனாக, அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறக்கூடியவனாக மாறிவிடுவான். 
 
பயம் அதிகமாகி ஆதரவு இல்லையென்றால் அந்த பயமும் அவனை மார்க்கத்தை மீறக்கூடிய நிலையில் அல்லது செய்த பாவங்களுக்கு தவ்பா செய்யாமல் நான் பாவம் செய்து விட்டேன் எனக்கு எங்கே மன்னிப்பு கிடைக்கும் என்று அல்லாஹ்வை விட்டு தூரமாகக் கூடிய நிலைக்கு ஆகிவிடுவான்.
 
ஆதரவும் மிகைத்து விடக்கூடாது, பயமும் மிகைத்துவிடக் கூடாது. இரண்டும் சமமான நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக இந்த காலகட்டத்தில் வாழ்கின்ற நமக்கு இரண்டும் சமமாக இருக்க வேண்டும். மரணத்தருவாயில் அல்லாஹ்வின் மீது உண்டான ஆதரவு அதிகமாக இருக்க வேண்டும்.
 
அந்த ஸகராத்துடைய நிலையில் நம்முடைய நாள்கள் எண்ணப்பட்டு, மரணப்படுக்கையில் இருக்கின்ற அந்த நேரத்தில் அல்லாஹ்வின் மீது அதிகமாக ஆதரவு வைக்க வேண்டும். 
 
அல்லாஹ்வின் மீது உண்டான பயம் என்பது, இதெல்லாம் சாதாரணமான மக்களுக்கு என்பதாக நீங்கள் நினைத்து விடாதீர்கள்.
 
யார் ஒருவர் எந்த அளவு ஈமானிலும், இபாதத்திலும் உயர்ந்து கொண்டே போகிறாரோ, அவர் ஈமானில் உயர்வாக இருக்கிறார், உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்று, அவர் அல்லாஹ்வை பயப்படுவதில் அடங்கும். யார் எந்தளவு அல்லாஹ்வை பயப்படுகிறாரோ, அந்தளவு உள்ளத்தில் ஈமான் இருக்கிறது என்று பொருள்.
 
யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம்; பாவிகள் தான் அல்லாஹ்வை பயப்பட வேண்டும், நல்லவர்கள் அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை, இபாதத் செய்பவர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, பாவம் செய்பவர்கள் தான் அல்லாஹ்வை பயப்பட வேண்டும், நன்மையில் குறைவு செய்பவர்கள் தான் அல்லாஹ்வை பயப்பட வேண்டும் என்று யாரும் தவறாக கணக்கு போட்டு விட வேண்டாம்.
 
பாவிகள் கண்டிப்பாக அல்லாஹ்வை பயந்தே ஆக வேண்டும், வேறு வழியில்லை. நல்லவர்களும் கண்டிப்பாக அல்லாஹ்வை பயப்பட வேண்டும், அவர்களுக்கும் வேறு வழியில்லை. 
 
நல்லவர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டிய அவசியம் இல்லையென்றால் நபிமார்கள் ஏன் பயந்தார்கள்? நபிமார்கள் ஏன் அழ வேண்டும்?
 
அவர்களுடைய அழுகையை அல்லாஹ் தஆலா குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். அழுதார்கள்,  அழுதார்கள் என்று. 
 
நம்முடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழுகையின் சப்தத்தை அவர்களுடைய மனைவியார் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்:
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் தொழுகைக்காக நின்றால் குர்ஆன் வசனங்களை ஓதும் பொழுது தேம்பி தேம்பி அழுவார்கள்.
 
அவர்களின் அழுகையின் சப்தத்தை நான் செவியுற்றிருக்கிறேன். ஒரு அடுப்பின் மீது ஒரு பாத்திரத்தில் நீர் கொதிக்க வைக்கப்பட்டால், கடுமையாக கொதிக்கின்ற நீருடைய சப்தம் எப்படி இருக்குமோ அதுபோன்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நெஞ்சத்தில் வந்த சப்தத்தை நான் செவியுற்றேன் என்று.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : நசாயி, எண் : 1199.
 
தொழுகையில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழுதார்கள்; உரை நிகழ்த்தும் பொழுது அழுதார்கள்; மறுமையின் அடையாளங்களை பற்றி பேசும்பொழுது அழுதார்கள்; சொர்க்கம் நரகத்தை நினைவு கூறும்பொழுது அழுதார்கள்; அல்லாஹ்வுடைய இந்த உலக நியதிகளின் மாற்றங்களை பார்த்த பொழுது அழுதார்கள்.
 
வேகமாக காற்று வீசிவிட்டால்,  சூரிய சந்திர கிரகணம் ஏற்பட்டுவிட்டால், அதிகமாக மழை பெய்ய ஆரம்பித்து விட்டால் இப்படியாக அல்லாஹ்வுடைய பயம் அல்லாஹ்வுடைய ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்திருந்ததை பார்க்கிறோம். அவர்களுடைய தோழர்களும் அப்படி தான் இருந்தார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதருடைய சமுதாயத்தை விட வேறு ஒரு சமுதாயத்தை நாம் உதாரணம் காட்ட முடியுமா? அவர்கள் எப்படி பயந்தார்கள்! பிறகு தாபியீன்கள், தபஉ தாபியீன்கள்.
 
இந்த பயம் என்பது நமக்கு ஈமானிய உணர்வுகளை வலிமையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்குரிய மிகப் பெரிய ஒரு மருந்து. பயம் எந்தளவுக்கு இருக்குமோ அந்தளவு அவன் பாவத்தை விட்டு விலகியிருப்பான். 
 
ஆகவேதான், மூத்த அறிஞர்கள் கூறுவார்கள்: 
 
அல்லாஹ் மன்னிப்பான் என்று ஆதரவு வைத்து வைத்து மனிதன் பாவங்களை செய்து நாளை மறுமையில் மன்னிக்கப்படாமலோ அல்லது அந்த பாவத்தினால் கெட்ட முடிவுக்கு அவன் ஆளாகி விடுவதை விட அல்லாஹ்வை பயந்து நாளை மறுமையின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வது மேல்.
 
இமாம் சுப்யானுஸ் ஸவ்ரி என்ற மிகப் பெரிய அறிஞர். ஹதீஸ் கலை அறிவிப்பாளர்களில் மிகப் பெரிய ஒரு அறிவிப்பாளார். பல தபஅ தாபியீன்களிடத்தில் கல்வி படித்த மிகப் பெரிய ஒரு அறிஞர்.
 
தக்வா, பற்றற்ற வாழ்க்கை என்பதை உதாரணமாக ஹதீஸ் நூல்களில் குறிப்பிடும் பொழுது இவருடைய அறிவுரையை கண்டிப்பாக பதிவு செய்வார்கள். அப்படிபட்ட உயர்ந்த தரத்தை உடைய ஒரு அறிஞர். 
 
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய இந்த நூலில் இந்த பாடத்தை அவர்கள் துவங்கும் பொழுதே அங்கே இந்த அறிஞருடைய கூற்றை பதிவு செய்கிறார்கள்.
 
சுப்யானுஸ் ஸவ்ரி கூறுகிறார்கள்: நான் குர்ஆனில் அதிகமாக பயப்படக்கூடிய ஒரு வசனம் இருக்கிறது. இதை விட ஒரு வசனம் எனக்கு இவ்வளவு அச்சத்தை கொடுக்கவில்லை. இந்த வசனத்தை குறித்து அவ்வளவு பயமாக எனக்கு இருக்கிறது. 
 
அந்த வசனம்,
 
قُلْ يَاأَهْلَ الْكِتَابِ لَسْتُمْ عَلَى شَيْءٍ حَتَّى تُقِيمُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
 
(நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடிக்காதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்ல'' என்று நீர் கூறுவீராக. உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வரும். ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர். (அல்குர்ஆன் 5 : 68)
 
எப்படி சிந்தித்தார்கள் பாருங்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனுடைய இந்த அல்குர்ஆனில் எந்தெந்த விஷயங்களை எல்லாம் யூதர்கள், கிறிஸ்தவர்களை குறித்து சொல்கிறானோ தயவு கூர்ந்து அது வெறும் வரலாற்று அறிவுரைகள், அந்த முந்திய கால மக்களுக்கு சொல்லப்பட்டது என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள். 
 
அவர்களை பற்றிய எச்சரிக்கைகளை அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் சொல்லும் பொழுது ஏதோ கடந்த கால மக்களுக்கு சொல்லப்பட்ட எச்சரிக்கையாக மட்டும் படித்து விட்டு அவற்றை கடந்து சென்று விடாதீர்கள். 
 
அல்லாஹ் தஆலா நமக்கு வரலாற்று புத்தகத்தை இறக்கவில்லை. படிப்பினைக்குரிய புத்தகத்தை அல்லாஹ் இறக்கி வைத்திருக்கிறான். எந்த வரலாறு நமக்கு படிப்பினை கொடுக்க வேண்டுமோ அந்த வரலாற்றை மட்டும் தான் அல்லாஹ் கூறுவான். 
 
நபிமார்களுடைய பிறந்த தேதிகள் சொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா? அவர்கள் பிறந்த ஊர் சொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா? அவர்கள் எந்த வயதில் இறந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கலாம் அல்லவா?
 
அதை சொல்வது அல்லாஹ்வின் நோக்கம் இல்லை. அது ஹிதாயத்தோடு நேர்வழியோடு தக்வாவோடு சம்மந்தப்பட்டதல்ல. அது வெறும் வரலாற்று அறிவு, அவ்வளவு தான். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய ஈமானை புதுப்பிக்கக் கூடிய, பலப்படுத்தக்கூடிய நம்முடைய மார்க்கத்தோடு, தக்வாவோடு, இபாதத்தோடு நமக்கு சம்மந்தப்பட்ட விஷயங்களை தான் முந்தியவர்களின் வரலாற்றிலிருந்து அல்லாஹ் நமக்கு எடுத்துச் சொல்கிறான்.
 
அந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள், நஸாராக்கள் யார்? நபிமார்களுடைய நேரடி வாரிசுகள். பனூ இஸ்ராயீல் என்பவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகனார் இஸ்ஹாக், இஸ்ஹாக்குடைய மகனார் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் இந்த மாபெரும் இறைத்தூதர்களுடைய வரிசையில் வமிசத்தில் வந்தவர்கள் தான் அந்த இஸ்ரவேலர்கள்.
 
உலகிலேயே நபிமார்களின் தொடர்ச்சியில் அதிகமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட வமிசம் என்பதால் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மதிப்பை அடையவில்லை. உங்களுடைய தந்தை நபியாக இருக்கலாம், அவருடைய தந்தை நபியாக இருக்கலாம், அவருடைய தந்தை நபியாக இருக்கலாம். அது உங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்காது.
 
உங்களுடைய அமல் தான் நெருக்கமாக்கும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக அழுத்தமாக இதை கூறினார்கள்: 
 
உங்களது வமிசப் பரம்பரையோ அல்லது உங்களுடைய சமூக கவுரவ கண்ணியமோ உங்களை பாதுகாக்காது. ஒரு மனிதனை பாதுகாக்கக் கூடியது அவனுடைய அமல் தான். உங்களை உங்களது அமலை தவிர எதுவும் பாதுகாக்காது.
 
நூல் : முஸ்லிம், எண் : 4867.
 
உன்னுடைய அமல் நல்லதாக இருந்தால் அது உன்னை சொர்க்கத்திற்கு கொண்டு போய் சேர்க்கும். தீயதாக இருந்தால் அதை செய்பவன் கண்டிப்பாக நரகத்தின் தண்டனையை சந்தித்தே ஆக வேண்டும் .
 
இந்த இடத்தில் அல்லாஹ் தஆலா இந்த யூதர்களை, கிறிஸ்தவர்களை பார்த்து கூறுகிறான், தவ்ராத்திற்கு நீங்கள் சொந்தக்காரர்களாக இருக்கலாம், வேதம் கொடுக்கப்பட்ட மக்களாக நீங்கள் இருக்கலாம். இஸ்ராயிலுடைய சந்ததிகளாக நீங்கள் இருக்கலாம்.
 
ஆனால், அல்லாஹ் கூறுகிறான்: لَسْتُمْ عَلَىٰ شَيْءٍ -இதனுடைய நேரடி தமிழ் அர்த்தம் என்னவென்றால் குப்பை என்று சொல்வோம் அல்லது ஒன்றுமே கிடையாது, எதற்கும் நீங்கள் அருகதையல்ல என்பதாகும். 
 
நபிமார்களின் வாரிசுகளை பார்த்து அல்லாஹ் இப்படி கூறுகிறான். ஆனால், நீங்கள் அல்லாஹ்விடத்தில் மதிப்பிற்குரியவர்களாக ஆக வேண்டுமென்றால் அதற்கும் அல்லாஹ் வழி சொல்கிறான்:
 
நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; (அல்குர்ஆன் 5 : 68)
 
தவ்ராத்தை நிலைநிறுத்த வேண்டும், இன்ஜீலை நிலைநிறுத்த வேண்டும். உங்கள் ரப்பின் புறத்திலிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை நிலை நிறுத்த வேண்டும். 
 
اقامة  என்றால், அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களை அதனுடைய ஃபர்ளுகளோடு, வாஜிபுகளோடு, முஸ்தஹப்புகளோடு முழுமையாக பின்பற்றுவதற்கு தான் சொல்லப்படும்.
 
ஆகவே தான், தொழுகையை பற்றி கூறுகின்ற இடங்களில் و يقمون الصلاة ، اقيمو الصلاة என்பதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகிறான். 
 
اقيمو الدين -தீனை நிலை நிறுத்துங்கள். அல்லாஹ் தஆலா அந்த இஸ்ரவேலர்களுக்கு சொன்ன அறிவுரையை சுப்யானுஸ் ஸவ்ரி நினைத்துப் பார்க்கிறார்கள்.
 
தவ்ராத்தை நிலைநிறுத்துகின்ற வரை, இன்ஜீலை நிலைநிறுத்துகின்ற வரை, அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு இறக்கப்படுகின்ற வரை என்று அல்லாஹ் கூறுகிறான். 
 
தவ்ராத்தில் உள்ள சிலவற்றை நீங்கள் பின்பற்றி விடுவதால், இன்ஜீலில் உள்ள சிலவற்றை நீங்கள் பின்பற்றுவதால் என்று அல்லாஹ் கூறவில்லை.
 
முழு தவ்ராத்தை, முழு இன்ஜீலை அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்பட்ட அனைத்தையும் பின்பற்ற வேண்டும். 
 
இந்த இடம் நமக்கு பெரிய அச்சுறுத்தலை தருகிறது. இன்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் பெரும்பகுதியை மக்கள் விட்டுவிட்டார்கள். 
 
ஒவ்வொருவரும் அவரவருடைய நிலையில் அவர் மார்க்கத்தில் பின்பற்றுவது அதிகமா? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னத்தில் அவர்கள் போதித்த ஒழுக்கங்களில் அவர் பின்பற்றுவது அதிகமா? அல்லது அவர் விடுவது அதிகமா? என்று யோசித்துப் பாருங்கள். 
 
பிறரைப் பற்றி தீர்ப்பளிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் ஒவ்வொருவரும் நமது நஃப்ஸின் விஷயத்தில் நாம்  தீர்ப்பளிக்க நின்றால், அல்லாஹ் நாளை மறுமையில் நீயே உனக்கு தீர்ப்பளித்துக் கொள் என்று கூறுவான்.
 
اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا
 
“நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்). (அல்குர்ஆன் 17 : 14)
 
உன்னை விசாரிப்பதற்கு உன்னிடம் கேள்வி கேட்பதற்கு உனது கணக்குகளை பார்ப்பதற்கு நீயே போதுமானவன். முதலில் நீ படி!  உன்னுடைய அமல்கள் எழுதப்பட்ட ஏடு உனக்கு முன்னால் விரிக்கப்படுகிறது. 
 
மறுமையில் விரிக்கப்பட்டுவிடும். உன்னுடைய அமல்களில் எதையும் மறுக்க முடியாது.
 
الْيَوْمَ نَخْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا يَكْسِبُونَ
 
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (அல்குர்ஆன் 36 : 65)
 
ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்ப்போம். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் சுன்னத்துகள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஃபர்ளுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
 
கடமையான ஃபர்ழான விஷயங்களில் இன்று நாம் செய்வது அதிகமாக இருக்கிறதா? நாம் விடுவது அதிகமாக இருக்கிறதா? 
 
அல்லாஹ் கூறுகிறான், நீங்கள் எதற்கும் அருகதை கிடையாது என்று. இதை நபியே! நீங்கள் அவர்களுக்கு கூறுங்கள் என்று சொல்கிறானே, இந்த உபதேசம் நமக்கு இல்லையா? 
 
இன்று குர்ஆனை கொண்டு பெருமையடிக்கிறோம். இன்று அல்லாஹ்வின் தூதரைக் கொண்டு பெருமையடிக்கிறோம்.
 
எங்களது நபி அப்படி, எங்களது குர்ஆன் இப்படி என்று. இந்த பெருமை பேசுவதால் ஏதாவது அமல் கூடுமா? ஏதாவது நன்மைகள் சேருமா? ஏதாவது சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்குமா? 
 
அமல் இல்லாமல், நபியின் பெயரால் சிந்தாபாத், நாரே தக்பீர், இன்னும் எத்தனை எத்தனை கோஷங்கள். ஆனால், அமல்களில் மொத்தமாக ஜீரோ. 
 
இந்த வசனத்தை அப்படியே அல்லாஹ் நம்மை பார்த்து சொல்வதாக திருப்பி பாருங்கள். முந்திய உம்மத்தை பற்றி சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் அல்லாஹ் கூறும்பொழுது, இதை நாம் படிப்பினையாக ஆக்கினோம், இதை நாம் எச்சரிக்கையாக ஆக்கினோம் என்று கூறுகிறான். 
 
நீங்கள் எதற்கும் தகுதியில்லாதவர்கள் நீங்கள் குர்ஆனை முழுமையாக நிலைநிறுத்துகின்ற வரை, அல்லாஹ்வின் புறத்திலிருந்து அல்லாஹ்வின் தூதர் வழியாக இறக்கப்பட்டதை நிலைநிறுத்துகின்ற வரை. இறுதியில் அல்லாஹ்  இப்படி தான் கூறுகிறான். 
 
அல்லாஹ்வுடைய இந்த தீனில் நாம் பின்பற்றியது எவ்வளவு? நாம் விடுவது எவ்வளவு? காலையிலிருந்து அமல்களை எடுத்துக் கொண்டால், சுப்ஹு தொழுகையில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
 
இன்று சுப்ஹு தொழுகையை ஜமாஅத்தோடு தொழுதவர்கள், அதற்கு பிறகு உள்ள அமல்கள், இப்படியாக ஃபர்ளுகள், சுன்னத்துகள் மாறி மாறி தான் முஸ்லிம்களுடைய வாழ்க்கை இருக்கிறது. நம்முடைய அமல்கள் அதிகமாக இருக்கிறதா? அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் விடப்பட்ட அமல்கள், அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் செய்கின்ற பாவங்கள்.
 
அமல்களை எடுத்துக் கொண்டால் அமல்களில் விட்ட அமல்கள் அதிகமாக இருக்கிறது. பாவங்களை எடுத்துக் கொண்டால் (அல்லாஹ் பாதுகாப்பானாக! மன்னிப்பானாக!) விட்ட பாவங்களை விட செய்த பாவங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருக்கின்றன. எவ்வளவு பெரிய பயங்கரமான ஆபத்தில் இருக்கிறோம்! ஆனால், நிம்மதியாக வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.
 
பொருளாதாரத்தை கொண்டு நிம்மதி, பணத்தை கொண்டு நிம்மதி, நம்முடைய வியாபாரம் நடப்பதை கொண்டு நிம்மதி, நோய் நொடியில்லாமல் இருப்பதைக் கொண்டு நிம்மதி. 
 
நமக்கு நிம்மதி தொலைகிறதென்றால் எப்பொழுது தொலைகிறது?  நம்முடைய பொருளாதாரம் நசிந்தால் நிம்மதி தொலைகிறது.
 
மற்றபடி, மறுமையின் அமல்களை வைத்து, ஆகிரத்தின் காரியங்களை வைத்து, தக்வாவின் விஷயங்களை வைத்து சந்தோஷப்பட்டதாகவோ அல்லது அதில் குறைவு ஏற்படும் பொழுது மனம் வருத்தம் அடைந்ததாகவோ நாம் இருப்பதில்லை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது. அல்லாஹ்வின் தூதரே! நான் முஃமின் என்று எப்பொழுது என்னால் அறிய முடியும்? என்று.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள்:
 
«إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ»
 
உன்னுடைய நன்மைகள் உனக்கு மகிழ்ச்சியை தந்தால், நீ செய்யக்கூடிய பாவம் உனக்கு மனவலியை வருத்தத்தை ஏற்படுத்தினால் நீ முஃமின். 
 
அறிவிப்பாளர் : அபூஉமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21145.
 
தொழுகையில் இருக்கும் பொழுது, தொழுததற்கு பிறகு மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். பாவங்களை நினைக்கும் பொழுது (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அல்லது ஒரு பாவத்தில் சோதிக்கப்பட்டுவிட்டால் உடனடியாக கவலைபட்டு, நான் இந்த பாவத்தை செய்து விட்டேனே! தவ்பா செய்ய வேண்டுமே! அல்லாஹ் மன்னிக்க வேண்டுமே! என்ற மன உறுத்தல் வந்தால் அல்ஹம்து லில்லாஹ்! நீ ஈமானில் இருக்கிறாய், ஈமான் உன்னில் இருக்கிறது.
 
நன்மைகளை விடும்பொழுதும் மன வருத்தம் இல்லை, பாவங்களை செய்யும்பொழுதும் மன வருத்தமடையவில்லை என்றால் அந்த கல்பில் ஈமான் செத்துவிட்டது. அந்த கல்பு அவ்வளவு தான், அது ஜனாஸாவாக இருக்கிறது என்று அர்த்தம். 
 
எவ்வளவு பயங்கரமான ஒரு விஷயத்தை பார்க்கிறோம். 
 
அல்லாஹ் மொத்தமாக கூறுகிறான், நீங்கள் எதற்கும் தகுதியில்லை என்று. நீங்கள் செல்வந்தர்களாக இருக்கலாம், நபிமார்களின் வாரிசுகளாக இருக்கலாம், என்னென்ன சிறப்புகள் உங்களிடத்தில் இருந்தாலும் சரி, நீங்கள் மார்க்கத்தை நிலைநிறுத்தாத வரை, மார்க்கத்தின் அமல்கள் உங்களிடத்தில் வராத வரை, நீங்களெல்லாம் குப்பைகள்; எதற்கும் அருகதை அற்றவர்கள்.
 
என்னிடத்தில் உங்களுக்கு எந்த விதமான மதிப்பு மரியாதையும் இருக்காது. 
 
இதை தான் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் இங்கே கூறிவிட்டு, அடுத்து ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவை நாம் எந்தளவு பயப்பட வேண்டும், எந்தளவு ஆதரவு வைக்க வேண்டும்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கூடிய ஒரு ஹதீஸை அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 
 
«إِنَّ اللَّهَ خَلَقَ الرَّحْمَةَ يَوْمَ خَلَقَهَا مِائَةَ رَحْمَةٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعًا وَتِسْعِينَ رَحْمَةً، وَأَرْسَلَ فِي خَلْقِهِ كُلِّهِمْ رَحْمَةً وَاحِدَةً، فَلَوْ يَعْلَمُ الكَافِرُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ لَمْ يَيْئَسْ مِنَ الجَنَّةِ، وَلَوْ يَعْلَمُ المُؤْمِنُ بِكُلِّ الَّذِي عِنْدَ اللَّهِ مِنَ العَذَابِ لَمْ يَأْمَنْ مِنَ النَّارِ»
 
அல்லாஹு தஆலா கருணையை, இரக்கத்தை படைத்த பொழுது அதை நூராக படைத்தான். தன்னிடம் தொண்ணூற்றி ஒன்பதை அவன் வைத்துக் கொண்டான். தனது படைப்புகள் எல்லோருக்கும் அந்த ஒரு ரஹ்மத்தை அவன் பங்கு வைத்து கொடுத்து விட்டான். இந்த ஒரு ரஹ்மத்தை கொண்டு தான் உலக தொடக்க நாளிலிருந்து இறுதி நாள் வரை வரக்கூடிய எல்லா உயிரினங்களும் தங்களுக்குள் கருணை காட்டிக் கொள்கின்றன.
 
(அதில் மனிதர்கள் உட்பட, மீன்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும், கீரி கிழித்து திங்கக் கூடிய காட்டு மிருகங்களாக இருக்கட்டும், ஏனைய சாதாரண உயிரினங்களாக இருக்கட்டும், எல்லாம் அந்த ஒரு ரஹ்மத்தைக் கொண்டு தான் தங்களுக்குள் கருணை புரிந்துக் கொள்கின்றன.)
 
பிறகு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், அல்லாஹ்வை நிராகரிக்கக் கூடிய காஃபிர் அல்லாஹ்விடம் இருக்கக் கூடிய ரஹ்மத்தை அவன் தெரிந்து கொண்டால் அவன் சொர்க்கத்திலிருந்து நம்பிக்கையிழக்கமாட்டான். எனக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்று ஆதரவு வைத்துவிடுவான்.
 
அதுபோன்று, அல்லாஹ்விடத்தில் இருக்கக் கூடிய அவனுடைய கோபம் அவனுடைய தண்டனை அது எப்படிப்பட்டது என்பதை ஒரு நல்ல பரிபூரணமான ஈமான் உள்ள ஒரு முஃமின் அறிந்து கொண்டால், தான் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்வான்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5988, 6469.
 
இந்த ஹதீஸின் மூலமாக இமாம் அவர்கள் என்ன படிப்பினை பாடத்தை சொல்ல வருகிறார்கள்? அல்லாஹ்வின் மீது உண்டான பயமும், அல்லாஹ்வின் ரஹ்மத்தின் மீது உண்டான ஒரு ஆதரவும் ஒரு முஃமினுடைய உள்ளத்தில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த ஆதரவிலிருந்தும் அந்த பயத்திலிருந்தும் ஒரு முஃமின் விலகிவிடக்கூடாது.
 
ஆதரவு பாவத்தின் பக்கம் இழுக்கக் கூடியதாக இருந்தால், உடனே பயத்தை அங்கே கொண்டு வந்து விட வேண்டும். பயந்து கொண்டே இருக்க வேண்டும், பயம் நிராசையின் பக்கம் இழுக்கக் கூடியதாக இருந்தால் உடனே ஆதரவை கொண்டு வந்து விட வேண்டும்.
 
ஆதரவு வைக்க வேண்டும், அந்த  ஆதரவு துணிவை கொடுக்குமேயானால் பாவத்தை செய்வதற்கு தூண்டுமேயானால் அல்லாஹ் மன்னிப்பான், ஒரு தடவை செய்வோம் என்று. 
 
இப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை கொண்டு வந்தால் உடனே பயத்தில் சென்று விட வேண்டும். அல்லாஹ் தண்டிப்பான், அல்லாஹ்வின் நரகம் பயங்கரமானது, அல்லாஹ்வின் பிடி பயங்கரமானது என்று.
 
அல்லாஹ் திரையை எடுத்துவிட்டால் என்னவாகும்? என்கின்ற இந்த பயம் இருக்க வேண்டும். இந்த பயமே ஒரு மனிதனுக்கு நிராசையை தூண்டுமேயானால், நான் ரொம்ப பாவம் செய்துவிட்டேன், இனிமேல் எனக்கு என்ன இருக்கிறது? என்னுடைய பாவம் அதிகமாகிவிட்டது, இனிமேல் நான் அமல் செய்து எனக்கு என்ன கிடைக்கப் போகிறது?
 
அவ்வளவு தான், நானெல்லாம் நரகவாசிதான், இப்படியாக நினைத்து தவ்பாவை விட்டு அவனுடைய பாவம் அவனை தடுக்குமேயானால், பாவத்திலிருந்து மீளாமல் அந்த பாவத்திலேயே அவனை தள்ளக்கூடிய நிலைக்கு பயம் செல்லுமேயானால், இல்லை என்னுடைய ரப்பு எனக்கு இருக்கிறான். அவன் என்னை மன்னிப்பான்‌, அவன் என் மீது கருணையாளன், அவனுடைய மன்னிப்பின் வாசல் திறந்தே இருக்கிறது என்ற ஆதரவுக்கு வந்துவிட வேண்டும். 
 
இந்த பாடம் மிக முக்கியமானது. அடுத்துள்ள இரண்டு பாடங்களிலும் இமாம் அவர்கள் இதை தான் சுருக்கமாக கூறுகிறார்கள். 
 
அல்லாஹ்வின் மீது உள்ள பயத்தால் நாம் அழுது கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ்வின் பயத்தால் அழக்கூடியவர்கள் நாளை மறுமையில் அர்ஷின் நிழலில் விஷேஷமாக இருக்கக் கூடிய ஏழு கூட்டங்களில் ஒருவராக இருப்பார்கள் என்று அந்த ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.
 
ஏழு கூட்டங்களுக்கு அர்ஷுடைய நிழலை அல்லாஹ் கொடுப்பான். அதில் ஒரு மனிதர் அல்லாஹ்வை நினைத்ததால் அவருக்கு அவருடைய கண்கள் அழுகையால் பீரிட்டன.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.
 
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை நினைத்தார். தான் அதற்கு நன்றி செலுத்தாத அந்த நன்றி கெட்ட தனத்தை நினைத்தார், அல்லாஹ்வை நினைத்தார், மறுமையில் அவனுடைய தண்டனையை நினைவு கூர்ந்தார், பாவங்களை நினைத்தார், அதனால் அழுதார். 
 
இப்படியாக அல்லாஹ்வுடைய விஷயங்களில் எதை நாம் நினைத்தாலும் சரி, கண்டிப்பாக அந்த நல்ல நினைவு நமக்கு அழுகையை தரக்கூடியது.
 
அல்லாஹ்வை பயப்படும் பொழுது அல்லாஹ் நாளை மறுமையில் எப்படி அவனுடைய நரக நெருப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறான் என்பதற்கு ஒரு ஹதீஸை இமாம் பதிவு செய்கிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
 
ஒரு மனிதர் முற்காலத்தில் (அதாவது ரஸூலுல்லாஹ்விற்கு முன்பு இஸ்ரவேலர்களில்) அவர் எப்பொழுதுமே தன்னுடைய அமலை நினைத்து நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்.
 
நான் என்ன செய்துவிட்டேன்? என்ன தொழுகை? என்ன இபாதத் இருக்கிறது? இப்படியாக அவர் தன்னுடைய அமலை நினைத்து நினைத்து அவர் தன்னை தானே நொந்து கொண்டிருந்தார். 
 
இப்படி பயம் அதிகமான உடனே மவ்த்துடைய நேரத்தில் தன்னுடைய உறவுகளுக்கு கூறினார், நான் செத்து விட்டால் கண்டிப்பாக எனக்கு நரகம் தான். அதனால் நான் ஒரு யோசனை கூறுகிறேன், அப்படியே என்னை செய்துவிடுங்கள் என்று.
 
நான் இறந்துவிட்டால் என்னை எரித்து சாம்பலாக்கி, கடுமையாக காற்று வீசக்கூடிய அந்த நாளில் அதை எடுத்துக் கொண்டு கடலில் சென்று தூவி விடுங்கள். அவ்வளவு தான், என் கதை முடிந்துவிடும். என்னை மறுமையில் எழுப்பப்பட முடியாது, நான் தப்பித்துவிடுவேன்.
 
இப்படியாக பயத்தின் வெளிப்பாடு அவருக்கு இப்படி வஸிய்யத் செய்ய வைத்தது. அவருடைய வஸிய்யத்தை பேணி அவருடைய குடும்பத்தார்களும் செய்துவிட்டார்கள். 
 
ஆனால், அல்லாஹ்வை பொறுத்தவரை அவன் ஆகு என்று சொன்னால் அது ஆகிவிடும்.
 
ثُمَّ إِذَا دَعَاكُمْ دَعْوَةً مِّنَ الْأَرْضِ إِذَا أَنتُمْ تَخْرُجُونَ
 
பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள். (அல்குர்ஆன் 30 : 25)
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், அல்லாஹ் அவனை ஒன்று சேர்த்தான். அந்த அடியானிடத்தில் கேட்டான், ஏன் இப்படி செய்தாய்? என்ன ஒரு பெரிய பாவம்? ஒரு முஃமின் இறந்துவிட்டால் அவனை குளிப்பாட்ட வேண்டும், அவனுக்கு கஃபன் போட வேண்டும், அவனை பூமியில் அடக்கம் செய்யப்பட வேண்டும். அப்படி இல்லாமல் எரிக்க சொன்னாயே!
 
அல்லாஹ்விடத்தில் அந்த அடியான் கூறுகிறான், உனது பயம் தான் என்னை இப்படி செய்யத் தூண்டியது. உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன். அதை அவன் அப்படியே உண்மையாக சொல்கிறான். 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், அல்லாஹ் அவனை மன்னித்துவிட்டான்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3481.
 
ஆகவே, அல்லாஹ்வுடைய பயம் தான் நம்மை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கக் கூடியது, அல்லாஹ்வின் கோபத்திலிருந்து பாதுகாக்கக் கூடியது. அந்த கோபத்திற்கு, தண்டனைக்கு காரணமான பாவங்களிலிருந்து நம்மை தடுக்கக் கூடியது.
 
மேலும், அமல்களில் குறைவு செய்யாமல் அமல்களை அதிகமாக செய்து, அல்லாஹ்வின் விருப்பத்தின் பக்கம் அல்லாஹ்வின் அன்பின் பக்கம் நம்மை தூண்டக்கூடியது.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் மீது உண்மையான ஆதரவை, அவனுடைய ரஹ்மத்தின் மீது உண்மையான ஆதரவை கொடுத்து அல்லாஹ்வை பயந்து கொள்ளக் கூடிய உண்மையான நல்லடியார்களில் ஆக்கியருள்வானாக! பாவங்களை விட்டும் மன இச்சைகளின் தீங்குகளை விட்டும் என்னையும் உங்களையும் அல்லாஹ் தஆலா பாதுகாத்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " كَانَ رَجُلٌ يُسْرِفُ عَلَى نَفْسِهِ فَلَمَّا حَضَرَهُ المَوْتُ قَالَ لِبَنِيهِ: إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي، ثُمَّ اطْحَنُونِي، ثُمَّ ذَرُّونِي فِي الرِّيحِ، فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ عَلَيَّ رَبِّي لَيُعَذِّبَنِّي عَذَابًا مَا عَذَّبَهُ أَحَدًا، فَلَمَّا مَاتَ فُعِلَ بِهِ ذَلِكَ، فَأَمَرَ اللَّهُ الأَرْضَ فَقَالَ: اجْمَعِي مَا فِيكِ مِنْهُ، فَفَعَلَتْ، فَإِذَا هُوَ قَائِمٌ، فَقَالَ: مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ؟ قَالَ: يَا رَبِّ خَشْيَتُكَ، فَغَفَرَ لَهُ " وَقَالَ غَيْرُهُ: «مَخَافَتُكَ يَا رَبِّ» (صحيح البخاري- 3481)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/