உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 4-9 | Tamil Bayan - 530
உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : நாவைப் பேணுதல் - உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் (அமர்வு 4-9)
வரிசை : 530
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 28-09-2018 | 18-01-1440
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே. உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார், மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறியவனாக,
மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அடியாராகவும் இறுதி இறைத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சி கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு தாலா என்னுடைய உங்களுடைய நமது பெற்றோர் மற்றும் முஃமினான முஸ்லிமான அனைவருடைய பாவங்களையும் மன்னித்தருள்வானாக. அல்லாஹு தஆலா நேசிக்கின்ற நல்லடியார்களில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக.
அல்லாஹ்வுடைய கட்டளைகளை பேணி நடப்பதற்கும், அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகி வாழ்வதற்கும், அல்லாஹ்வுடைய சட்டவரம்புகளை பேணுவதற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.
நம்முடைய உடல் உறுப்புகளால் நமக்கு ஏற்படுகின்ற தீங்குகளை விட்டும் ஆபத்துகளை விட்டும், நமது உடல் உறுப்புகளால் நாம் செய்கிற பாவங்களை விட்டும், அல்லாஹ் விரும்பாத ஒவ்வொரு சொல் செயல் அனைத்தையும் விட்டும், அல்லாஹ்விடத்தில் உங்களுக்காகவும் எனக்காகவும் பாதுகாவல் தேடியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா ஏற்று அருள்புரிவானாக! ஆமீன்.
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய நூலில் இருந்து அர்ரிகாக் என்ற அத்தியாயத்தை நாம் பார்த்து வருகிறோம்.
ஒரு முஃமின் உடைய உள்ளம் எந்த அளவு அல்லாஹ்வுடைய நினைவினாலும் அல்லாஹ்வுடைய அன்பினாலும் அல்லாஹ்வுடைய பயத்தினாலும் மென்மையாக பண்பட்டதாக இருக்குமோ அந்த அளவுதான் அந்த அடியான் அல்லாஹ்வுடைய கட்டளைகளை பேணக்கூடியவராக இருப்பார். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அவர் பேணக்கூடியவராக இருப்பார்.
ஒருவரிடத்தில் அல்லாஹ்வுடைய தீன், அல்லாஹ்வுடைய மார்க்கம் எந்த அளவு இருக்கிறது என்று அவர் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்யவேண்டும் என்றால், அவர் தன்னுடைய உள்ளத்தை முதலாவதாக பரிசோதனை செய்யட்டும்.
தனது உள்ளம் வாடி காய்ந்து போய் இருக்கிறதா? அல்லது அல்லாஹ்வுடைய நினைவினாலும் அல்லாஹ்வுடைய அன்பினாலும் பயத்தினாலும் மென்மையாக பயந்த உள்ளமாக அல்லாஹ்விற்கு பணிந்த உள்ளமாக, அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும் போது நடுங்கக்கூடிய உள்ளமாக, அல்லாஹ்வுடைய நினைவு வரும்போது அந்த உள்ளத்தில் நடுக்கம் ஏற்படக்கூடியதாக இருந்தால், தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூறும்போது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஊற்றினால், அழுகை பீறிட்டு வந்தால் அந்த உள்ளம் மென்மையான உள்ளமாக இருக்கிறது.
அந்த உள்ளம் உடையவர் அல்லாஹ்வின் அச்சம் உள்ளவராக இருக்கிறார். இத்தகைய உள்ளம் உடையவர் தான் அல்லாஹ்விற்கு நெருக்கமானவராக இருப்பார்.
அல்லாஹ் கூறுகிறான்:
اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ
ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). (அல்குர்ஆன் 26 : 89)
இத்தகைய மனிதர்களுடைய உள்ளங்கள் தான் பாதுகாக்கப்பட்ட உள்ளங்கள். துன்யாவின் ஆசைகளில் இருந்தும் நஃப்ஸுடைய மன இச்சைகளில் இருந்தும் இன்னும் அல்லாஹ் வெருக்கக்கூடிய அத்தனை காரியங்களில் இருந்தும் அவருடைய உள்ளம் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்.
இந்த உள்ளத்தை அடைவதற்கு துஆவும் செய்ய வேண்டும். இதற்காக சில வழிமுறையும் இருக்கின்றன. நாம் பேண வேண்டிய நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில கடினமான நடைமுறைகளும் இருக்கின்றன. பழக்க வழக்கங்களும் இருக்கின்றன.
அவற்றை பேணும்போது தான் இத்தகைய உள்ளம் கிடைக்கப்பெறும். இந்த உள்ளம் எங்கேயோ கடைத்தெருவில் விற்கும், வாங்கிவந்து மாட்டி விடலாம் என்று எண்ணிவிடாதீர்கள்.
இந்த உள்ளம் எங்கேயாவது இதை கலட்டிக் கொடுத்து சரிசெய்யச் சொல்லி, பிறகு நாம் இதை உள்ளே மாட்டிக் கொள்ளலாம் என்பதெல்லாம் முடியாது. நம்முடைய செயல்களைக் கொண்டு நமது சொல்களைக் கொண்டு நம்முடைய அன்றாட காரியங்களை கொண்டு தான் இந்த உள்ளத்தை பண்படுத்த வேண்டும். ஒரு பக்கம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும்,
அல்லாஹ்வுடைய தூதர் இந்த உள்ளத்துக்காக துஆ செய்துக் கொண்டே இருந்தார்கள். இந்த கல்புக்காக அல்லாஹ் வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போதும் அல்லாஹ்விடத்தில் வேண்டக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك
நூல் : திர்மிதி, எண்: 2026, நூல் : முஸ்னத் அஹ்மத், 6321.
மற்றொரு பக்கம் இந்த உள்ளத்தை சீர்கெடுக்கக்கூடிய இந்த உள்ளத்தை பாழாக்கக்கூடிய அத்தனை செயல்களில் இருந்தும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னைப் பேணியவர்களாக பாதுகாத்தவர்களாக இருந்தார்கள். நமக்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை வலியுறுத்தினார்கள்.
இன்று நாம் நம்முடைய உள்ளம் சுத்தமடைய வேண்டும், நம்முடைய உள்ளமும் அல்லாஹ்வுடைய அச்சத்தால் மென்மையடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது.
தொழுகையில் நிற்கும்போது குர்ஆன் ஓதினால் அழுகை வரவேண்டுமென்று, தனிமையில் இருக்கும்போது அல்லாஹ்வை நினைத்தால் அழுகை வரவேண்டுமென்று, மார்க்க அறிவுரைகளை கேட்டால் நமது கண்களிலும் அழுகை வரவேண்டுமென்று நமக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது.
ஆனால் வருவதில்லையே. காரணம், நாம் நம்முடைய உள்ளத்தை சாகடித்து வைத்திருக்கிறோம். ஜனாஸாவாக இருக்கிறது. ஒரு ஜனாஸா சிரிக்கிறது அழுகிறது பேசுகிறது என்றால் நம்ப முடியுமா? அப்படிப் பட்ட கல்பாக நமது கல்பு இருக்கிறது.
இதற்கு தான் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அர்ரிகாக் என்ற தனி அத்தியாயத்தை வைத்து அதில் இந்த உள்ளங்களை மென்மையாக்கக்கூடிய காரியங்களையும் சொல்கிறார்கள். இந்த உள்ளத்தை காய வைக்கக்கூடிய, இந்த உள்ளத்தை சாகடிக்கக்கூடிய காரியங்களையும் எடுத்துச் சொல்லி நமக்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.
அதில் ஒன்றைத்தான் இந்த ஜும்ஆவில் பார்க்க இருக்கின்றோம். அதுதான் நாவினுடைய விபரீதங்கள். நாவை மிகச் சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்கிறோம்.
எதை வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும், எந்தவிதமான வரைமுறையும் கணக்கு வழக்குமில்லாமல் இந்த நாவை அவிழ்த்துவிட்டு வைத்திருக்கிறோம்.
நாடினால் பிறருடைய கண்ணியத்தில் விளையாடும். நாடினால் பிறரைப் பற்றி புறம் பேசும். நாடினால் பிறரைப் பற்றி கோள் சொல்லும்.
அல்லாஹ்வுடைய அச்சம் குறையக் குறைய பிறரைப் பற்றி அவதூறு பேசுவதற்குக்கூட நம்மில் பலருடைய நாவுகள் அல்லாஹ்வை பயப்படுவதில்லை.
பிறர்கள் செய்யாத காரியத்தை அவர்கள் மீது சுமத்துவது, பிறர்மீது பழி போடுவது, உறவுகளுக்கிடையில் சண்டை சச்சரவுகளை மூட்டுவது, நண்பர்களுக்கிடையே சண்டை சச்சரவுகளை மனஸ்தாபங்களை ஏற்படுத்துவது, இப்படி நாவினால் நடக்கக்கூடிய தீமைகளை மக்கள் சர்வ சாதாரணமாக இன்று செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவேதான், இமாம் புகாரி அவர்கள் இப்படி ஒரு பாடத்தை அமைத்து, அதற்கு தலைப்பே "நாவை பாதுகாப்பது" என்று வைத்தார்கள்.
நாவை பாதுகாக்காமல் உள்ளத்தை பாதுகாக்க முடியாது என்று சொல்லலாம். உள்ளத்தை பாதுகாப்பதற்குள்ள வாசல்களில் ஒரு வாசல் நாவை பாதுகாப்பது. ஒரு மனிதன் நாவை பாதுகாத்து விட்டால், உள்ளத்தினுடைய பேரழிவின் ஒரு வாசலை அவன் பாதுகாத்துக் கொண்டான்; அடைத்துக் கொண்டான்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா கூறுகிறான்:
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ
வசனத்தின் கருத்து : மனிதனே! நீ எதை பேச வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நீ எதைப் பேசினாலும் அந்த பேச்சை பதிவு செய்து கொள்ளக்கூடிய பாதுகாத்து வைக்கக்கூடிய நீ அந்த பேச்சை பேசும்போது உனக்கு அருகிலிருந்து உன்னிப்பாக கவனிக்கக்கூடிய இரண்டு வானவர்களும் உன்னோடு இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே. (அல்குர்ஆன் 50 : 18)
மனிதர்கள் மறக்கின்ற பல உண்மைகளில் அல்லாஹ்வுடைய இந்த வசனமும் ஒன்று. தான் எதை பேசினாலும் தன்னுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் வானவர்கள் அந்த பேச்சை, நாம் பேசுவதை கருத்தாக அல்ல நாம் எதை பேசுகிறோம் அதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வானவர்கள் அங்கே இருக்கிறார்கள்.
அந்த பேச்சுக்கள் பதிவு செய்யப்படுகின்றன. நம்முடைய முன்னோர்கள் இந்த பேச்சைக் குறித்து அவ்வளவு பயந்திருக்கிறார்கள்.
உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்துவிட்டார்கள். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாவைப் படித்து இழுத்து திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
உமர் பாரூக் அவர்கள் பயந்து விட்டு, கலீஃபா விடுங்கள், அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.
அதற்கு கலீஃபா அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் சொன்னார்கள்: உமரே! உங்களுக்கு தெரியாது, இந்த நாவு எனக்கு எத்தனை பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறதென்று.
நூல் : முஅத்தா இமாம் மாலிக், எண் : 1567.
அல்லாஹ்வை பயந்த அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணிய இந்த உம்மத்துடைய மூத்த ஸஹாபி ஒருவருடைய சுய பரிசோதனையை பாருங்கள்.
தான் அறிந்தோ அறியாமலோ சபையிலோ தனிமையிலோ யாரிடத்தில் என்ன பேசினோம்? அது எப்படிப்பட்ட பேச்சாக இருந்திருக்கும்? என்பதை நினைத்து தன்னை கண்டிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். தன்னைத் தானே திருத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
இந்த குணத்தைதான் நாம் இழக்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நம்மில் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி கேட்டால், நான் தான் மிகச் சரியானவன்; நான் தான் அனைத்திலும் மிக நிறைவானவன்; முழுமையானவன் என்று கூறுவார்கள்.
பிறரைப் பற்றி கேட்டால் அவர் எதிலும் சரியில்லை என்று கூறுவார்கள். ஆனால், அந்த தோழர்களோ தன்னைப் பற்றி குறை உள்ளவர்களாகவும் பிறரை பற்றி நிறைவானவர்களாவும் விளங்கி இருந்தார்கள். தனது பேச்சை அவர்கள் சுய பரிசோதனை செய்து தன்னைக் கண்டிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
இதுபோன்ற இன்னொரு சம்பவத்தை பாருங்கள். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவர் ஒருமுறை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுவை பார்த்து விட்டார்கள்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை நாவை பிடித்துக் கொண்டு, உனக்கு கேடு உண்டாகட்டும்; நாசம் உண்டாகட்டும்; நீ பேசினால் நல்லதை பேசு, உனக்கு நன்மை கிடைக்கும். இல்லையென்றால் கெட்ட விஷயங்களை விட்டு வாய் மூடி இரு, நீ பாதுகாப்பாக இருப்பாய் என்று கூறினார்கள்.
அப்போது அவர்களுடைய மாணவர்கள் கேட்டார்கள், உஸ்தாத்! என்ன இப்படி செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆனது?
சொன்னார்கள்; நாளை மறுமை நாளில் அடியான் தன்னுடைய உறுப்புகளில் ஒரு உறுப்பின் மீது அதிகம் கோபம் கொண்டவனாக வெறுப்புடையவனாக இருப்பானேயானால் அது தன்னுடைய நாவின் மீது தான்.
நூல் : ஸுஹ்த் - இமாம் அஹ்மது, எண் : 1057.
இந்த நாவு அவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தக் கூடியது.
அபுதர்தா, ஸல்மான் ஃபார்ஸீ ரழியல்லாஹு அன்ஹு உடைய மாணவர் அபுதுல்லாஹ் இப்னு ஜகரிய்யா என்ற தாபியீ ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்: இந்த நாவை பாதுகாத்து, தேவையற்ற விஷயங்களையும் பாவமான விஷயங்களையும் பேசாமல் இருப்பதற்காக நான் இருபது ஆண்டுகள் பயிற்சி எடுத்தேன்.
நூல் : அஸ்ஸம்த் - இப்னு அபித் துன்யா, எண் : 583.
நாம் எப்படி நினைக்கிறோம் என்றால், ஒரு பயானிலேயே நாமெல்லாம் பெரிய ஹஸன் பஸரியாக ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கான எந்தவித முயற்சியும் எடுக்காமல்.
இருபது ஆண்டுகள் போராடியும் கூட, இன்னும் நான் நினைத்த அளவிற்கு, நான் நாடக்கூடிய அளவிற்கு இந்த நாவை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் எனக்கு ஆற்றல் இல்லை என்று சொல்கிறார்கள் என்றால், இருபது நிமிஷம் கூட அமைதியாக வாய் மூடி இருக்க முடியாத நாம் எப்படி நாவை கட்டுப்படுத்த முடியும்? எப்படி நாவை பாதுகாக்க முடியும்? என்று யோசித்துப் பாருங்கள்.
எந்த விஷயங்கள் அல்லாஹ்விற்கு வெறுப்பாக இருக்கிறதோ அதிலிருந்து நான் என்னை தடுத்துக் கொள்வேன் என்று ஒரு நாளாவது நம்மால் நோன்பு வைக்க முடியுமா?
வயிற்று நோன்பு வைத்துவிடலாம். உண்ணாமல் குடிக்காமல் ஆசையின் பக்கம் செல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் தவறை பேசாமல் இருக்கக்கூடிய நோன்பு இருக்கிறதே அது மிகப் பெரிய நோன்பு.
ஆகவேதான், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
ஒரு மனிதன் ஹராமானதை பேசாமல், இல்லையென்றால் ஒரு மனிதன் ஹராமான செயலை விடாமல் இருந்தால், அவனுடைய உணவையும் பானத்தையும் விட்டுவிட்டு நோன்பிருப்பதில் அல்லாஹ்விற்கு எந்த ஹாஜத்தும் இல்லை.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1903.
எந்தளவு நம்முடைய முன்னோர்கள் இந்த நாவினால் ஏற்படக்கூடிய விபரீதத்தை பயந்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, நாமெல்லாம் நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
ஒருமுறை இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் ஹதீஸ் பாடத்தை சொல்லும்போது ஹதீஸ் அறிவிக்கக் கூடிய ஒரு அறிவிப்பாளர் 'ஹமீத் அத்தவீல்' அவருடைய பெயர் ஹமீத். மிக உயரமாக இருந்த காரணத்தால் மிக உயரமான ஹமீத் என்ற பெயரும் அவரோடு அப்படியே ஒட்டிக் கொண்டது.
அதை சொல்லிவிட்டு ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பயந்தவர்களாக சொன்னார்கள், ஒருவேளை இப்படி சொல்லி நான் புறம் பேசிவிட்டேனோ? இது புறமாக அமைந்து விடுமோ?
எல்லோரும் அவரைப் பற்றி சொல்லக்கூடிய வார்த்தையை தான் அவர்களும் சொன்னார்கள். சொல்லிவிட்டு பயந்திருக்கிறார்கள். இதுவொரு புறமாக இருக்குமோ என்று.
கிதாப் ஸுஹ்த் - இமாம் ஹன்னாத், எண் : 583.
இன்னொரு முறை முஹம்மத் இப்னு ஸீரின் என்ற தாபிஈ அவர்கள், ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது மக்களுக்கு அடையாளப் படுத்துவதற்காக அந்த கருப்பு மனிதர் இப்படி சொன்னார் என்று சொல்கிறார்கள். உடனே அவர்கள் அஸ்தக்ஃபிருல்லாஹ் நான் அவரை புறம் பேசிவிட்டேனோ என்பதாக பயந்து அல்லாஹ்விடத்தில் அதற்காக இஸ்திக்ஃபார் செய்தார்கள்.
ஹில்யா - இமாம் அபூநுஅய்ம்.
அந்த அளவு இந்த நாவினுடைய விபரீதங்களை நம்முடைய முன்னோர்கள் பயந்திருக்கிறார்கள். காரணம், மார்க்கம் அந்தளவு நாவைப் பற்றிய எச்சரிக்கையை நமக்கு கொடுக்கிறது.
இந்த நாவு அவிழ்த்து விட்ட மாட்டைப் போன்று. கடிவாளம் இடாமல் அதற்குரிய பாதுகாப்பு கயிறில்லாமல் அவிழ்த்து விட்டுவிட்டால் இது என்னவெல்லாம் செய்யுமோ அதனால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சினையும் அவனுடைய கல்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்யக்கூடிய ஹதீஸ். சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் அஸ்ஸகஃபி அறிவிக்கின்றார்கள். இந்த ஸஹாபி ரசூலுல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள், யாரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்! என் விஷயத்தில் நீங்கள் அதிகம் பயப்படுவது எது? எது எனக்கு மிகப் பெரிய ஆபத்தாக ஆகிவிடும் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள்?
உடனே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது நாவைப் பிடித்து இழுத்துச் சொன்னார்கள் 'இது' என்பதாக. (1)
அறிவிப்பாளர் : சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் அஸ்ஸகஃபி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2334, 2410, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
ஸஹாபாக்களுடைய கேள்வியையும் நபியுடைய அந்த நுண்ணறிவுமிக்க பதிலையும் கவனிக்க வேண்டும். ஸஹாபாக்களுடைய ஒவ்வொரு கேள்வியும் மறுமை சம்பந்தப்பட்டதாக, உள்ளம் சம்பந்தப்பட்டதாக, மார்க்கம் சம்பந்தப்பட்டதாக, அல்லாஹ்வுடைய அச்சம் சம்பந்தப்பட்டதாக, பாவத்திலிருந்து தான் எப்படி தப்பிப்பது? என்ற அந்த நரக தண்டனையை பயந்தவர்களாகத் தான் அவர்களுடைய கேள்விகள் இருக்கும்.
நம்மைப் போன்று எந்த ஆலிமை பார்த்தாலும் சரி, எங்கே ஒரு பெரிய நல்ல மனிதரை பார்த்தாலும் சரி, பரக்கத்துக்கு துஆ பன்னுங்கள், மொத்தமாக இந்த தீனை இந்த துன்யா இல்லை என்றால் இந்த தீனையே பின்பற்ற மாட்டார்கள். அந்தளவுக்கு தான் நம்மில் பலர் தீனில் இருக்கிறார்கள்.
எதுவாக இருந்தாலும் இதற்கு ஆகிரத்தில் என்ன நன்மை? என்று கேட்க மாட்டார்கள். இதை ஓதினால் பரக்கத் இருக்குமா? இதை ஓதினால் கடன் கிடைக்காதா? இதை ஓதினால் வறுமை போய்விடுமா? என்று தான் கேட்கிறார்கள்.
இன்னொரு ஹதீஸை பரா இப்னு ஆஸிஃப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பரா இப்னு ஆஸிஃப் ரழியல்லாஹு அன்ஹுக்கு சொன்னார்கள்;
فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنْ خَيْرٍ
உனது நாவை எப்போதும் தடுத்து வைத்திரு. நன்மை இருந்தாலே தவிர பேசாதே. (2)
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிஃப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 374, 375.
இன்று நமது நிலை, நன்மையை தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுகிறோம். யாரை எப்படி கவிழ்ப்பது? யாருக்கு எப்படி வஞ்சகம் செய்வது? யாரை எப்படி ஏசுவது திட்டுவது? யாருடைய உள்ளத்தை எப்படி காயப்படுத்துவது? இப்படி எல்லாவற்றிற்கும் நாவு பயன்படும்.
அல்லாஹ்வை நினைப்பதற்கு குர்ஆன் ஓதுவதற்கு நல்லதை பேசுவதற்கு நன்மையை ஏவுவதற்கு அதற்கெல்லாம் நாவை பயன்படுத்துவது கிடையாது.
எவ்வளவு ஒரு ஆபத்தான நிலையில் எவ்வளவு ஒரு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம். யோசித்துப் பாருங்கள்.
இன்னொரு முறை, உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வுடைய தூதரிடத்தில், யா ரசூலல்லாஹ்! நான் பாதுகாப்பாக எப்படி இருப்பது? என்று கேட்கிறார்கள்.
அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
امْلِكْ عَلَيْكَ لِسَانَكَ
உனது நாவை நீ உனது கட்டுப்பாட்டில் வை.
அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ, எண் : 2330, 2406.
இன்று குடும்பங்களில் விரிசல் ஏற்படுவது, நட்புகளில் சண்டை சச்சரவு ஏற்படுவது, உறவுகள் முறிவது இந்த நாவினால், அத்துமீறி பேசக்கூடிய பேச்சினால் தானே யார் மறுக்க முடியும்?
மரியாதை குறைவான பேச்சு, எடுத்தெறிந்து பேசுவது, எல்லாப் பேச்சுக்கும் பதில் கொடுக்க வேண்டும் என்று யோசிப்பது, கீழ்த்தரமாக பேசுவது, குறைகளை அடிக்கடி சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பது, உள்ளங்களை காயப்படுத்தும்படியாக பேசுவது, கண்ணியக் குறைவாக பேசுவது, அவமரியாதையாக பேசுவது, இல்லாததை பேசுவது இப்படி எத்தனை விதமான பேச்சுக்கள், இதனால் எவ்வளவு பிரச்சினைகள்.
இமாம் தப்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கக்கூடிய மற்றொரு ஹதீஸில் வருகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹுக்கு நிறைய நன்மைகளை சொன்னார்கள்.
இந்த நன்மைகளுக்கெல்லாம் அடிப்படையான ஒரு நன்மை இருக்கின்றது, அதை நான் சொல்லித் தரட்டுமா? என்று கூறி, பிறகு தனது நாவைப் பிடித்து காட்டினார்கள் இதுதான் என்பதாக.
முஆத் பயந்து கேட்டார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! நாங்கள் பேசுகிற பேச்சுகளுக்கெல்லாம் எங்களுக்கு மறுமையில் தண்டனை உண்டா? என்று.
நபியவர்கள் சொன்னார்கள்;
«ثَكِلَتْكَ أُمُّكَ يَا ابْنَ أُمِّ مُعَاذٍ، وَهَلْ يَكُبُّ النَّاسَ عَلَى مَنَاخِرِهِمْ فِي نَارِ جَهَنَّمَ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهُمْ؟»
மனிதர்களை அவர்களுடைய முகம் குப்புற நாளை மறுமை நாளில் நரகத்தில் தள்ளக்கூடியது அவர்கள் தங்கள் நாவினால் சம்பாதித்தவைகளைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
தொடர்ந்து சொன்னார்கள்: முஆத்! நீ எவ்வளவு வாய் மூடி பேசாமல் அமைதியாக இருக்கிறாயோ அவ்வளவு ஸலாமத்தோடு இருப்பாய். நீ பேசிவிட்டால் ஒன்று, அது உனக்கு தீமையாக எழுதப்படும் அல்லது நன்மையாக எழுதப்படும், பார்த்துக் கொள்.
அறிவிப்பாளர் : முஆத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஃஜம் கபீர் தப்ரானி, எண் : 116, 16541.
ஸலாமத் -பாதுகாப்பு வாய்மூடி இருப்பதில் இருக்கிறது.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், நாம் வாய் மூடி இருந்தால் நமக்கு பேசத் தெரியாது, நாம் பலவீனமானவர்கள், நமக்கு அறிவு இல்லை என்று நம்மை சாதாரணமாக நினைத்து விடுவார்கள்
எதையாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும், எதையாவது உளறிக் கொண்டே இருக்க வேண்டும், யார் எதைப் பேசினாலும் அதன் உள்ளே வந்துவிடுவது, தனக்கு எல்லாம் தெரிந்ததைப் போல் காட்டிக் கொள்வது, பொய் பேசுவது, தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது, தன்னுடைய பொருள்களைப் புகழ்வது, பெருமை பேசுவது, தான் செய்யாததை சொல்வது.
இப்படியாக எத்தனை விபரீதங்கள் இந்த நாவினால் மனிதன் அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறான்.
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதருக்கு அறிவுரை சொன்னார்கள்:
அபூதர்! எவ்வளவு முடியுமோ அமைதியாக இரு. இது ஷைத்தானை உன்னை விட்டு விரட்டிவிடும்.
நூல் : இப்னு ஹிப்பான், எண் : 362.
மேலும், அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«مَنْ صَمَتَ نَجَا»
யார் எந்தளவு வாய் மூடி அமைதியாக இருப்பாரோ அவர் கண்டிப்பாக பாதுகாப்பு பெற்றுவிடுவார்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ, எண் : 2425, 2501.
இந்த நாவு அவ்வளவு ஒரு பயங்கரமான ஒன்று. இந்த நாவை நன்மையான விஷயங்களில் நாம் திருப்பவில்லை என்றால், எதை பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்பதை அறியவில்லை என்றால், நாவினால் ஏற்படக்கூடிய விபரீதங்களை அல்லாஹ்வுடைய ஹக்குகளில், அதுபோன்று அடியாருடைய ஹக்குகளில் நாம் எப்படி இந்த நாவை உபயோகிக்க வேண்டும் என்பதை அறிந்து புரிந்து நிதானமாக நாம் நடந்துக் கொள்ளவில்லை என்றால் இது மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.
ஆகவே தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
ஒரு மனிதன் நல்ல முஸ்லிம் என்பதற்கு அடையாளம் அவன் தேவையில்லாததை பேசாமல் இருந்துவிடுவது.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3976.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ
யார் எனக்காக தன்னுடைய இரண்டு தாடைகளுக்கு இடையில் இருக்கக்கூடிய அந்த நாவை பாதுகாப்பதற்கும், தன்னுடைய இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இருக்கக்கூடிய மர்மஸ்தானத்தை பாதுகாப்பதற்கும் யாராவது பொறுப்பேற்றுக் கொண்டால் நான் அவர்களுக்கு சொர்க்கத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வேன்.
அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6474.
அவ்வளவு பெரிய வாக்குறுதியை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இந்த நாவை பாதுகாத்தால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் நமக்கு மறுமையில் சொர்க்கத்திற்கான சிபாரிசு செய்வதற்கு அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
இந்த ஹதீஸுக்கு விளக்கம் எழுதும்போது, அறிஞர் இப்னு ஃபத்தாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறுவதாக இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:
இந்த ஹதீஸ் உணர்த்தக் கூடிய பாடம் என்னவென்றால், இந்த துன்யாவிலேயே ஒரு மனிதனுக்கு, மிகப் பெரிய முஸீபத்தான விஷயங்கள் இருக்கின்றன என்றால், ஒன்று அவனுடைய நாவு இரண்டாவது அவனுடைய மர்மஸ்தானம்.
இந்த இரண்டுடைய தீங்கிலிருந்து அவன் பாதுகாக்கப்பட்டு விட்டால், எல்லா தீங்கிலிருந்தும் அவன் பாதுகாக்கப்பட்டு விடுவான்.
இன்று உலகத்தில் நடக்கக்கூடிய கொலைகள், அத்துமீறல்கள், அநியாயங்கள், இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது, மனிதன் இந்த நாவை பாதுகாக்காமல் இருப்பது, அவனுடைய மர்மஸ்தானத்தை பாதுகாக்காமல் இருப்பது.
நாவை பாதுகாப்பது என்றால், அது பேச்சு சம்பந்தப்படதாக இருக்கட்டும், அதுபோன்று ஹலால் ஹராம், நான் ஹலாலான வழியில் சம்பாதித்து ஹலாலானதை தான் உட்கொள்வேன். அதுவும் இங்கே கவணிக்க வேண்டியது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னார்களே அதில் மனிதன் உட்கொள்ளக்கூடிய உணவும் அடங்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
மனிதன் பேராசையின் காரணமாக ஹலாலான வியாபாரங்களை விட்டுவிட்டு ஹராமான வியாபாரத்தில் சென்று செல்வத்தை சேர்க்கிறான். ஹராமானதை உண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
வட்டிக்கு ஏன் செல்கிறார்கள்? ஏமாற்றி வியாபாரம் செய்வதற்கு இன்னும் தடுக்கப்பட்ட பல வியாபாரங்களுக்கு மனிதர்கள் ஏன் செல்கிறார்கள்? அவர்களுடைய நாவு, அவர்களுடைய வயிறு அப்படிப்பட்ட ருசியான ஆடம்பரமான உணவுகளை தேடுகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
உங்களுக்கு அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை இருந்தால், ஒன்று நன்மையை பேசுங்கள், இல்லை என்றால் பேசாமல் இருந்து விடுங்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5994, 6475.
ஒரு மனிதன் தன்னுடைய நாவை பேணுகிறார் என்றால், அவருடைய ஈமான் அல்லாஹ்வின் மீதும் ஆகிரத்தின் மீதும் முழுமையாக இருக்கிறது என்று பொருள்.
மேலும், எச்சரிக்கை செய்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும்போது, ஒரு மனிதர் பேசுகிறார், ஆனால், தான் பேசக்கூடிய அந்த பேச்சை அவர் சிந்தித்து பார்ப்பதில்லை.
இதனால் அந்த மனிதன் நாளை மறுமையில் நரகத்தில் விழுவான். கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்குமோ அந்த தூரம் நரக நெருப்பில் தூக்கி வீசப்படுவான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5996, 6478.
சாதாரண பேச்சு, சிந்திக்காமல் பேசிய பேச்சு, தான் பேசக்கூடிய பேச்சினால் யாருக்கு என்ன ஏற்படும், உறவுகள் முறியுமா? ஒரு மனிதருக்கு ஆபத்துகள் ஏற்படுமா? என்னவிதமான சோதனைகள் ஏற்படும்? யாருடைய உள்ளத்தையாவது இது காயங்கள் ஏற்படுத்துமா?
யாரைப் பற்றியும் புறம் பேசியதாக ஆகுமா? அல்லது ஒருவரிடத்தில் இல்லாததை சொன்னதாக ஆகுமா? இப்படியெல்லாம் சிந்திக்காமல் அல்லது சில மனிதர்களை நீங்கள் பார்க்கலாம். மஜ்லிஸ் தமாஷாக சிரிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
இப்படியாக சொல்லி சொல்லி பரிகாசம் செய்து செய்து அல்லாஹ்வுடைய தீனையே பரிகாசம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மார்க்க அடையாளங்களை மார்க்க சட்டங்களை மார்க்க ஒழுக்கங்களையே பரிகாசம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இது அவர்களை நரக நெருப்பில் கொண்டு போய் தள்ளிவிடும். குஃப்ர் இறை நிராகரிப்பில் கொண்டு போய் தள்ளிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
இந்த உள்ளம் எப்போது பாதிப்படைகிறது என்றால், மனிதன் அல்லாஹ்வை நினைவு கூறாமல், இந்த நாவை நன்மையான காரியங்களில் ஈடுபடுத்தாமல், மார்க்கத்தை பேணுவதிலும், அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், நல்ல காரியங்களிலும் ஈடுபடுத்தாமல் அல்லாஹ்வை மறந்தவனாக இந்த நாவை கொண்டு எப்போது பாவம் செய்கிறானோ அவனுடைய உள்ளம் கருக ஆரபம்பித்துவிடும். அவனுடைய உள்ளம் இருக ஆரம்பித்து விடுகிறது.
அவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய நினைவு எடுபட்டு அந்த உள்ளமானது ஆபத்திற்கு ஆளாகி விடும். அதற்கு பிறகு அவனுக்கு செய்யப்படக்கூடிய உபதேசங்கள் பலன் தருவது கிடையாது. அவனுக்கு உணர்வூட்டக்கூடிய ஈமானிய உபதேசங்கள் நல்லுரைகள் அவனுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது கிடையாது.
ஆகவேதான் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மனிதன் இந்த அழகிய முறையில் வாய் மூடி இருப்பது அவனுக்கு கொடுக்கப்பட்டு விட்டால் இதை விட சிறந்த ஒன்று கிடையாது என்று சொன்னார்கள்.
ஆகவே, நமது உள்ளத்தை பேணுவது மிக நமக்கு இன்றியமையாதது. நம்முடைய தொழுகையில் உள்ளச்சம் ஏற்பட வேண்டும் என்றால், நம்முடைய வணக்க வழிபாடுகளில் ஈமானிய உணர்வு ஏற்பட வேண்டும் என்றால், அல்லாஹ்வை வணங்கியதற்கு பிறகு அதனுடைய பலனை நாம் உணர வேண்டும் என்றால், இந்த உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும்.
இந்த உள்ளத்தை சுத்தப்படுத்துவதற்கு எதுவெல்லாம் உள்ளத்தை கலங்கப்படுத்திவிடுமோ இந்த உள்ளத்தை காயப்படுத்தி விடுமோ இந்த உள்ளத்தில் அல்லாஹ்வுடைய கோபத்தை இறக்கிவிடுமோ அத்தனை வழிகளையும் நாம் அடைத்து, அந்த உள்ளத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
அதற்குரிய முக்கியமான வழிதான் இந்த நாவை பாதுகாப்பது. தேவையற்ற விஷயங்களை பேசாமல் இருப்பது. ஒவ்வொரு விஷயத்தையும் இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் பேச சொல்கிறார்கள், ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன்னால் யோசிக்க வேண்டும்.
இதில் நமக்கு நன்மை இருக்கிறதா? நன்மை இருந்தால் பேச வேண்டும். இல்லையென்றால் வாய் மூடி இருந்துவிட வேண்டும். இப்படியான ஒரு பழக்கம் ஏற்படும்போது தான், இந்த உள்ளமானது அதில் ஒளி ஏற்படுகிறது.
அந்த உள்ளத்தில் அல்லாஹ்வுடைய நினைவு நிரந்தரமாக இருக்கும். நன்மையின் பக்கம் நமக்கு ஆசை பிறக்கும். அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதுவதற்கு, அல்லாஹ்வை திக்ரு செய்வதற்குண்டான அந்த தேடல் உள்ளத்தில் நமக்கு ஏற்படும்.
அப்படி இல்லாமல் தேவையற்ற விஷயங்களை அநாவசியமான விஷயங்களை பலன் தராத விஷயங்களை எல்லாம் ஒரு மனிதன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பானேயானால் அந்த உள்ளம் அல்லாஹ்வை திக்ரு செய்யக்கூடிய உள்ளமாக இருக்காது. அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதக்கூடிய உள்ளமாக இருக்காது. அவனுடைய உள்ளங்கள் காய்ந்து வறண்டு போய் பிறகு உபதேசங்கள் பலனளிக்காமல் போய்விடும்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நமது உள்ளங்கள் இறுகி விடுவதிலிருந்து நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹ்வுடைய அச்சத்தால் அழக்கூடிய கண்களையும், அல்லாஹ்வுடைய அச்சத்தால் நடுங்கக்கூடிய உள்ளங்களையும் எனக்கும் உங்களுக்கும் முஃமின்கள் அனைவருக்கும் தந்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَاعِزٍ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ، قَالَ: «قُلْ رَبِّيَ اللَّهُ ثُمَّ اسْتَقِمْ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ، فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ، ثُمَّ قَالَ: «هَذَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ» (سنن الترمذي- 2410) [حكم الألباني] : صحيح
குறிப்பு 2)
أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:98] عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ الْيَامِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ، قَالَ: «لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ، فَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ: أَعْتِقِ النَّسَمَةَ، وَفُكَّ الرَّقَبَةَ»، قَالَ: أَوَ لَيْسَتَا بِوَاحِدَةٍ؟، قَالَ: «لَا، عِتْقُ النَّسَمَةِ أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا، وَفَكُّ الرَّقَبَةِ أَنْ تُعْطِي فِي ثَمَنِهَا، وَالْمِنْحَةُ الْوَكُوفُ وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الْقَاطِعِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَاكَ، فَأَطْعِمِ الْجَائِعَ، وَاسْقِ الظَّمْآنَ، وَمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ، فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ، فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنْ خَيْرٍ» (صحيح ابن حبان- 374)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/