உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 6-9 | Tamil Bayan - 530
உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வை வணங்குவதில் நஃப்ஸோடு போரிடுவது - உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் (அமர்வு 6-9)
வரிசை : 530
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 12-10-2018 | 03-02-1440
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று துஆ செய்தவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய அன்பையும் வெற்றியையும் வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவை யார் பயந்து கொண்டார்களோ அவர்களின் இம்மை காரியங்களும் சீர்பெறும், மறுமையின் காரியங்களும் சீர் பெறும். எல்லா சிக்கல்கள் சிரமங்களில் இருந்து அல்லாஹ் ஒரு விடுதலையை ஏற்படுத்தி தருவான்.
அவர்களுடைய எல்லாக் கஷ்டங்களிலும் அல்லாஹ் துணை இருப்பான். அல்லாஹ்வை பயந்தவர் தான் இம்மையிலும் முழுமையாக வெற்றி அடைந்தவர், மறுமையிலும் வெற்றி அடையக் கூடியவர்.
நமது உள்ளங்களை உருக்கக்கூடிய, மென்மையாக்கக் கூடிய, அல்லாஹ்வின் அச்சத்தால் இந்த உள்ளத்தை பன்படுத்தக்கூடிய பல அறிவுரைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கெல்லாம் வழங்கி இருக்கிறார்கள்.
யார் இந்த உள்ளத்தை அல்லாஹ்வுடைய பயத்தை கொண்டு மென்மை படுத்தினாரோ, அல்லாஹ்வின் பயத்தால் இந்த உள்ளத்தை நிரப்பினாரோ கண்டிப்பாக அவருடைய உள்ளம் ஒரு அமைதி பெற்ற உள்ளமாக, அவருடைய அமல்களும் அல்லாஹ்வுக்கு பொருத்தமான அமல்களாக இருக்கும். அவர் ஷைத்தானுடைய தீங்கிலிருந்தும் நஃப்ஸுடைய தீங்கிலிருந்தும் பாதுகாப்பு பெற்றவராக இருப்பார்.
இதுகுறித்து தான் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், உள்ளத்தை உருக்கக்கூடிய உபதேசங்கள் என்ற அத்தியாயத்தில் ஒரு பாடத்தை நமக்கு பதிவு செய்கிறார்கள்.
யார் தனது நஃப்ஸோடு போரிடுவாரோ அவருடைய சிறப்பு என்று ஒரு தனி பாடத்தை அமைக்கிறார்கள்.
சில நேரங்களில் ஒரு சில விஷயங்களில் நாம் நஃப்ஸோடு போராடுவது உண்டு. இந்த நஃப்ஸோடு போராடுவது என்பது மரணம் ஏற்படும் வரையில் இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் 15 : 99)
நம்முடைய மவ்த் வரை அல்லாஹ்வை வணங்க வேண்டும். அல்லாஹ்வை வணங்குவது, வணக்க வழிபாட்டில் உறுதியாக இருப்பது. அதாவது, அல்லாஹ்விற்கு எது பிடிக்குமோ அதை செய்வது, அல்லாஹ்வுக்கு எது பிடிக்காதோ அதை செய்யாமல் விடுவது.
ஷைத்தானுக்கு எது பிடிக்குமோ அதை செய்யாமல் இருப்பது, ஷைத்தானுக்கு எது பிடிக்காதோ அதை செய்வது. ரஹ்மானுக்கு பிடித்ததை செய்வது, பிடிக்காததை விட்டுவிடுவது.
இந்த போராட்டம் என்பது ஒரு வக்த் தொழுகையோடு முடிந்து விடாது. மஸ்ஜிதோடு முடிந்து விடாது. மறுமைநாள் வரை, நாம் மரணிக்கின்ற வரை ஒவ்வொரு வக்த் தொழுகையின் சமயத்திலும் இதிலிருந்து வெளியே போகும்போதும் இருக்க வேண்டும்.
மஸ்ஜிதிற்க்கு உள்ளே வரும் போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் துஆவை சொல்லிக் கொடுத்தார்கள்.
اللهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
யா அல்லாஹ்! (உனது இபாதத்துக்காக வருகிறேன்.) உன்னுடைய ரஹ்மத்துடைய வாசல்களை திறந்து கொடு.
அறிவிப்பாளர் : அபூ உசைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 713, 1165.
அங்கே இன்னொரு துஆவும் இருக்கிறது.
«أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ»
யா அல்லாஹ்! வணக்க வழிபாடுகள் செய்யும்போது ஷைத்தான் குறுக்கீட்டு, எனது வணக்க வழிபாட்டில் மன ஓர்மையை குறைப்பதில் இருந்து, என்னுடைய கவனம் சிதறுவதில் இருந்து என்னை பாதுகாப்பது நீதான். நீதான் என்னை பாதுகாக்க வேண்டும் என்று துஆவோடு பள்ளிக்கு வாருங்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 394, 466, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிலிருந்து வெளியே வரும்போதும் ஒரு துஆவை சொன்னார்கள்:
اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
யா அல்லாஹ்! ஷைத்தானிடமிருந்து என்னை பாதுகாத்து வைத்துக் கொள்!
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 765, 773, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
மஸ்ஜிதுக்குள் வரும்போதும் ஷைத்தான் ஊசலாட்டங்களைக் கொண்டு, நமது வணக்க வழிபாடுகளை கெடுத்துவிடலாம். அல்லாஹ்வுக்கு முன்னால் நாம் நிற்கும்போது, குர்ஆனை ஓதும் போது, சுஜூதில் இருக்கும் போது, நம் நஃப்ஸை கெடுக்கக் கூடிய அளவிற்கு நம் உள்ளத்தில் விளையாடுகிறான் என்றால், அல்லாஹ்வுடைய இல்லமாகிய மஸ்ஜிதை விட்டு வெளியேறி கடைத்தெருவில் எங்கே ஷைத்தானுடைய ஆதிக்கம் இருக்கிறதோ, எங்கே இந்த நஃப்ஸை மயக்க கூடிய உலக ஆசைகளும், கெட்ட எண்ணங்களும் பரவி இருக்கிறதோ அந்த இடத்தில் நாம் செல்லும்போது எந்த அளவு நம்மீது ஆதிக்கம் செய்வான் என்று கவனியுங்கள்.
மஸ்ஜிதுக்குள் நம்மை கெடுக்க நினைக்கிறவன், அல்லாஹ்வுடைய வீட்டை விட்டும் வெளியேறி அவனது இடத்திற்குள் செல்லும் போது நாம் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்!
ஆகவேதான், நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் துஆ சொல்லிக் கொடுத்தார்கள்.
யா அல்லாஹ்! இந்த நஃப்சை உன்னுடைய கட்டுப்பாட்டில், பாதுகாப்பில், அரவணைப்பில், வைத்துக்கொள் என்று.
இந்த நஃப்ஸும், ஷைத்தானும் (அல்லாஹ் தஆலா இந்த இரண்டு தீங்கிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!) ஒரு மனிதனை நரக நெருப்பில் தள்ளுகின்ற வரை அவர்கள் ஓய மாட்டார்கள்.
நாம் வேண்டுமானால் இந்த நஃப்ஸோடு ஜிஹாத் செய்து பலவீனப்பட்டு விடலாம். நம்முடைய ஷைத்தானோடு ஜிஹாத் செய்து பலவீனப்பட்டு விடலாம்.
ஆனால், அவர்கள் ஒருபோதும் பலவீனப்பட்டு விடமாட்டார்கள். எதுவரை என்றால், நம்முடைய மவுத் அல்லாஹ்வுடைய திருக்கலிமாவில் அமைகின்ற வரை. கடைசிவரை இதிலிருந்து கெடுப்பதற்காக இவர்கள் ஓயாது போராடிக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
ஆகவே, உள்ளங்களை பக்குவப்படுத்துவதற்கு, பாதுகாப்பதற்கு, உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அச்சத்தை தரிப்படுத்தி, நிலைப்படுத்தி, உள்ளம் ஒரு பண்பட்ட உள்ளமாக, இந்த உள்ளம் அல்லாஹ்வுடைய பயத்தால் நிரம்பிய உள்ளமாக இருக்க வேண்டுமானால் இதற்காக ஒரு தனி கவனம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
காரணம், உள்ளம் கெட்டு விட்டால் அமல்கள் கெட்டுவிடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்:
أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹி பதிவு செய்கிறார்கள். உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சரி ஆனால் உள்ளம் சீராகிவிடும். உறுப்புகளில் இருந்து வரக்கூடிய எல்லா அமல்களும் சீராகிவிடும். அந்த ஒரு சதைத்துண்டு கெட்டுவிட்டால் எல்லாம் கெட்டு விடும். அவர்கள் சொன்னார்கள். அறிந்து கொள்ளுங்கள். அது தான் கல்பு என்பதாகும். (1)
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 50.
ஆகவேதான், நம்முடைய அறிஞர்கள் இந்த நஃப்ஸோடு போராடுவதில், இந்த நஃப்ஸை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.
இன்று நாம் நம் உடலோடு போராடிக் கொண்டிருக்கிறோம். பிபி வந்து விடக்கூடாது, சுகர், கொலஸ்ட்ரால் வந்துவிடக்கூடாது. இன்னும் இந்த உடல் சார்ந்த என்னென்ன நோய்கள் இருக்கின்றனவோ, ஒவ்வொரு நோயைக் குறித்தும் பயப்படுகிறோம்.
ஆனால், இந்த நஃப்ஸுடைய நோயிலிருந்து (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக) நம்மை போன்று பயமற்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
எப்படி நம்மில் ஒவ்வொருவரும் விளங்கி வைத்திருக்கிறோம்? என்றால், எனது நஃப்சை அப்படியே பாதுகாத்து அதை சரியாக வணக்க வழிபாட்டில் வைத்திருக்கின்றோம்; என்னை ஷைத்தான் ஒருபோதும் வழிகெடுக்க முடியாது; என்னுடைய நஃப்ஸ் என்னை வழி கெடுக்காது; நான் ரொம்ப சரி.
இப்படியாக விளங்கி வைத்துள்ளோம். அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும். ஒரு பெருமிதத்தில் ஒரு தவறான மனப்பான்மையில் இருக்கிறோம்.
அல்லாஹ் நேரடியாக படைத்து, தன்னுடைய சொர்க்கத்தில் தங்க வைத்த ஆதமையே நஃப்ஸுடைய துணை கொண்டு இந்த ஷைத்தான் வழிகெடுத்து விட்டான் என்றால், நாமெல்லாம் அவனுக்கு எம்மாத்திரம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய தந்தையை அல்லாஹ் அவனுடைய கரத்தால் படைத்தான். சொர்க்கத்தில் தங்க வைத்தான். அப்படி இருந்தும் கூட அவர்களுடைய நஃப்ஸுடைய துணைகொண்டு உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, அவரிடத்தில் பேசி, அவர்களை அல்லாஹ் உடைய கட்டளைக்கு மாறு செய்ய வைத்தான் என்றால், நம்முடைய பரிதாபமான நிலைமையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஷைத்தானோடு பேசிக்கொண்டே இருக்கிறோம். ஷைத்தானை கையில் வைத்துக்கொண்டே இருக்கிறோம். அவன் நம்முடைய தோளில் கை போடுகின்றானோ இல்லையோ, எங்கு சென்றாலும் அவனுடைய தோளில் கை போட்டு, என்னுடன் வா என்று அழைத்து செல்கிறோம். அந்த அளவுக்கு ஷைத்தானோடு நாம் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு முன்னால் வாழ்ந்த சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள், சான்றோர்கள் இவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தானே!
ஆனால், இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம், நாம் மண்ணில் அழிந்துவிடக் கூடிய இந்த உடலைப் பற்றி கவலைப் படுகிறோம். அவர்கள் அழியாத ஆன்மாவைப் பற்றி கவலைப் பட்டார்கள்.
இந்த துன்யாவுடைய சில குறைகளை, ஏற்றத்தாழ்வுகளை கூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு துன்யாவை நாம் பழக்கி வைத்திருக்கிறோம். ஆனால், மறுமையுடைய விஷயங்களில் நம்மை போன்ற ஏமாளிகள் யாரும் இருக்க முடியாது.
கொஞ்சம் சளி பிடித்து விட்டது என்றாலும் இந்த உடலைப் பார்த்து பயந்து கொள்வார்கள்.
ஆனால், கேன்சரை விட, எய்ட்ஸ் இன்னும் உடலில் இருக்கின்ற அனைத்து கொடிய நோய்களை விட மோசமான நோய்கள் இந்த உள்ளத்தில் இருக்கின்றது. ஆனால் அதுபற்றி நமக்கு கவலை இல்லை.
கேன்சர் ஹாஸ்பிடலில் போய் பார்த்தால் தெரியும். அந்த கேன்சர் ஒவ்வொருவரையும் எப்படி தாக்கி இருக்கிறது? என்று.
நம்முடைய நஃப்ஸுக்கு என்று ஒரு ட்ரீட்மென்ட் சென்டர் இருக்குமேயானால் அங்கே நாம் எந்த அளவு டேமேஜ் ஆகி உள்ளது என்று கண்டு பிடிப்பதற்கு ஒரு கருவி இருக்குமேயானால், அப்போது தெரியும்; எந்த அளவுக்கு நம்முடைய நஃப்ஸ் டேமேஜ் ஆகி இருக்கிறது என்று.
நமது முன்னோர்கள் பட்டினியாக கிடந்தார்கள். பஞ்சத்தில் இருந்தார்கள். உடுத்துவதற்கு ஆடை இல்லை. ஒரு ஆடை இருந்தாலே அதுவே பெரிய விஷயம்.
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து பேசிக்கொண்டிருந்தார். தன்னை ஏழையாக நினைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார்கள். ஆம் என்றார். ஏழையாக இருந்தால் திருமணம் முடித்து இருக்க முடியாதே? என்று கேட்டார்கள். திருமணம் முடித்து இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு செல்வந்தர் தான் என்றார்கள்.
அப்போது அந்த மனிதர் சொன்னார்: எனக்கு வீட்டில் வேலை செய்வதற்கு ஒரு பணியாளும் எனக்கு பயணிப்பதற்கு சொந்தமாக ஒரு வாகனமும் இருக்கிறது என்று சொன்னார்.
அபூதர் சொன்னார்கள்: மனிதனே! நீ ஒரு மன்னர் என்று சொன்னார்கள். நீ ஒரு அரசர் என்று சொன்னார்கள்.
இந்த துன்யாவுடைய சின்ன வசதிகளையே தேவையை விட பெரிய வசதியாக நினைத்துக் கொண்டார்கள். ஆனால், நாமோ துன்யாவில் எவ்வளவுதான் வசதி வந்தாலும், நம்மில் சிலருக்கு இப்போது அவர்கள் சம்பாதிப்பதை நிறுத்தினால் கூட, ஒரு உதாரணத்திற்கு யாரும் சம்பாதிப்பதை நிறுத்த வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை.
உதாரணத்திற்கு இப்போது அவர் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு, இனிமேல் நான் சம்பாதிக்க மாட்டேன், சம்பாதிப்பதை செலவு மட்டுமே செய்வேன் என்று சொன்னால் கூட, அவர் வாழ முடியும். நம்மில் அதிகமானவர்களுக்கு அந்த அளவிற்கு அல்லாஹ் செல்வத்தை கொடுத்திருக்கிறான்.
ஆனால், எங்கே அல்ஹம்துலில்லாஹ்? எங்கே ஸதகா? எங்கே ஜகாத்? எங்கே மறுமைக்கான தயாரிப்புகள்?
ஆனால், அவர்கள் துன்யாவில் அற்பமான அளவு வைத்திருந்தார்கள். மறுமைக்கு அவ்வளவு சேகரித்து வைத்திருந்தார்கள். மறுமையில் எவ்வளவு காலம் தான் என்பதை நினைத்துப் பார்த்த போது இந்த துன்யாவில் சேகரித்து வைத்ததை அற்பமாக மதித்தார்கள்.
இமாம் சுஃப்யானுஸ் ஸவ்ரி ரஹிமஹுல்லாஹ் (ஒரு பெரிய ஹதீஸ்கலை அறிஞர்) சொல்கிறார்கள்: எனது நஃப்ஸை சிகிச்சை செய்வதற்கு நான் சிரமப்பட்டதை போல வேறு எதற்கும் சிரமப்பட்டது இல்லை.
அதாவது, எனக்கு ஏற்பட்ட வயிற்று வலி, தலைவலி, உடல்வலி இப்படி என்னென்ன பிரச்சனையோ அதற்கான சிகிச்சைகளில் நான் இந்த அளவு சிரமப்பட்டது இல்லை. எனது நஃப்ஸை சிகிச்சை செய்வதற்கு நான் சிரமப்பட்டு இருக்கிறேன். இந்த அளவு நான் சிரமப்பட்டு சிகிச்சை எடுத்தும் கூட சில நேரங்களில் தான் அது என் பேச்சை கேட்கிறது. சில நேரங்களில் என்னை மிகைத்து விடுகிறது என்று சொல்கிறார்கள்.
நம்மை நினைத்துப் பாருங்கள். இப்போது, நாம் நாய் குட்டி வளர்ப்பது மாதிரி நமது நஃப்ஸை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எதை அல்லாஹ் வளர்க்கக் கூடாது என்று சொன்னானோ அதை வளர்ப்பவர்கள் இப்படித்தான். எதை அல்லாஹ் குடிக்கக்கூடாது என்று சொன்னானோ அதை குடிப்பவர்களும் இப்படித்தான்.
ஒரு ஜூஸ் குடிக்க சொல்லுங்கள். 1, 2, 3 கிளாஸ் குடிப்பார்கள். அதற்குமேல் போதும் என்பார்கள். ஆனால், இந்த மதுவை குடிப்பவர்களை பாருங்கள்.
என்றைக்காவது போதும் என்று சொல்வார்களா? இரவிலிருந்து காலை வரை குடிக்கச் சொன்னால் கூட குடித்துக் கொண்டே இருப்பார்கள். குடிக்க குடிக்க மயங்கி விடுவான். வாந்தி எடுப்பான். எழுந்தவுடன் மீண்டும் அதைத் தான் தேடுவான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இந்த நாய் குட்டி வளர்ப்பவர்களை பற்றி சொல்கிறேன். எப்படி ஒருவன் அந்த நாய்க்குட்டியை தட்டி கொடுத்து வளர்கின்றார்களோ, (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். நம்மை அல்லாஹ் மன்னிக்க வேண்டும். அல்லாஹ் நம்மை சீர்திருத்தம் செய்வானாக.) இந்த நஃப்ஸை இப்படித்தான் நம்மில் பலர் தட்டிக் கொடுத்து வளர்த்து வருகின்றோம். அது எதைக் கேட்டாலும், அது எதைச் சொன்னாலும், அது எதை விரும்பினாலும் எல்லாவற்றிலும் நஃப்ஸ் சொல்வதைக் கேட்பது.
இன்று ஜமாத்திற்கு போக வேண்டாமா? போகவேண்டாம். இன்றைக்கு குர்ஆன் ஓத வேண்டாமா? ஓத வேண்டியதில்லை. இன்று அங்கு சுத்த போலாமா? போகவேண்டியது இல்லை. அதை சாப்பிடலாமா? சாப்பிட வேண்டியது. இப்படி எதை எல்லாம் இந்த நஃப்ஸ் விரும்புகிறதோ அதை எல்லாம் நான் செய்கிறேன் என்று செய்ய வேண்டியது. அல்லாஹ் பாதுகாப்பானாக.
இந்த நஃப்ஸுக்கு சிகிச்சை செய்வதில் அவ்வளவு கஷ்டப்பட்டும் கூட, சில நேரத்தில் தான் என்னால் அதை மிகைக்க முடிகிறது. சில நேரங்களில் அது என்னை மிகைத்து விடுகிறது என்று சொல்கிறார்களே!
வாழ்நாளெல்லாம் நஃப்ஸுக்கு அதனுடைய பேச்சைக் கேட்டு வாழக்கூடிய நாம், கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்; நமது நிலைமை எப்படி இருக்கிறது? என்று.
இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்: நீங்கள் வளர்க்கக்கூடிய ஒரு முரட்டுத்தனமான வாகனம் குதிரையோ அல்லது மாடோ அதற்கு கண்டிப்பாக கடிவாளம் போடுவீர்கள். பொதுவாகவே வாகனங்களுக்கு கடிவாளம் தேவை. அப்போது தான் அதை கட்டுப்படுத்த முடியும். அதிலும் அதுவோ முரண்டு பிடிக்கக் கூடியதாகவும், திமிர் செய்யக் கூடியதாக இருந்தாலும் அந்த கடிவாளம் அதற்கு ரொம்ப தேவை.
இமாம் சொல்கிறார்கள், உன்னுடைய முரட்டுத்தனமான வாகனத்திற்கு கடிவாளம் தேவையாக இருப்பதை விட உன்னுடைய நஃப்ஸுக்கு கடிவாளம் தேவை.
நீ முதலில் உன்னுடைய நஃப்ஸுக்கு கடிவாளம் போடு. கடிவாளம் போடாத வாகனத்தில் ஏறி அமர்ந்து பயணிக்கும் போது சில நேரங்களில் நன்றாக பயணித்து விடலாம். அது முரண்டு பிடிக்கும் போது அதை கட்டுப்படுத்த முடியாது. அப்படி முரண்டு பிடித்து நம்மை கீழே தள்ளி விட்டால் மவுத்து தான்.
ஆனால், இந்த நஃப்ஸ் கடிவாளம் போடாமல் விட்டு விட்டால், இந்த நஃப்ஸ் முரண்டு பிடித்து நம்மை தள்ளினால், அதனுடைய முடிவு, நரகத்தில் தான் தள்ளும். நரகத்தில் படு பாதாளத்தில் தள்ளிவிடும்.
நரகத்தின் உச்சியிலிருந்து ஒரு கல் போடப்பட்டால் எழுபது ஆண்டுகள் ஆகும்.
நூல் : திர்மிதி - 2498, முஸ்னது அஹமது : 16917.
நரகத்தின் நெருப்பு இந்த உலகத்தின் நெருப்பை விட 69 மடங்கு சூடாக்கப்பட்டு இருக்கிறது.
நூல் : முஸ்லிம், எண் : 5077.
இமாம் மைமூன் இப்னு மெஹ்ரா ஒரு சிறந்த அறிஞர். அவர்கள் சொல்கிறார்கள்: நீங்கள் தக்வா உள்ளவர்களாக ஆகவேண்டும் என்றால், உங்களது நஃப்ஸை நீங்கள் கேள்வி கேளுங்கள். உங்களது வியாபார பங்குதாரர்களிடம் நீங்கள் எப்படி கேள்வி கேட்கிறீர்களோ அதுபோன்று.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
وَأَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ
அல்லாஹ்வின் உதவி பொறுமையோடு இருக்கிறது என்று.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹமது, எண் : 2666.
இமாம் முபாரக் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்: அது இரண்டு ஜிஹாதையும் எடுத்துக் கொள்ளும். எதிரிகள் இடத்தில் ஜிஹாத் செய்யும்போதும் பொறுமையாக இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். அது போன்றுதான் நஃப்ஸிடம் ஜிஹாத் செய்யும் போதும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நஃப்ஸின் மீது நாம் வெற்றி கொள்ள முடியும்.
அவசரப்பட்டால் முடியாது. ஒரு நாளில் முடிந்து விடக்கூடிய காரியமல்ல. இரண்டு நாட்களிலேயே முடிந்து விடக்கூடிய காரியமல்ல. வாழ்நாளெல்லாம் இதற்கு நாம் எதிரியாக இருக்க வேண்டும்.
இமாம் இப்னு கய்யிம் அவர்கள் சொல்லகூடிய ஒரு அழகான வார்த்தையை கவனியுங்கள். இந்த முஜாஹதுந் நப்ஸோடு ஒப்பிட்டு சொல்கிறார்கள். நஃப்ஸ் எப்படி என்றால், பிறரும் நம்மைப் புகழ வேண்டும். நாமும் நம்மை புகழ்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நஃப்ஸ் அப்படிப்பட்ட ஒரு நோயாளி. இருக்கின்ற தகுதியைக் கொண்டு புகழ்வதே அதன் வேலையாகும். புகழ்ச்சி என்பது அல்லாஹ் ஒருவனுக்கே தகுதியானது. ஆனால், இந்த நஃப்ஸ் இல்லாததைக் கொண்டும் தன்னை புகழ்ந்து கொள்ளும். தன்னைப் புகழ வேண்டும் என்பதாக ஆசைப்படும். அவ்வளவு மோசமான தன்மை கொண்டது.
இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள், தன்னைப் பற்றிய பெரிய நல்லெண்ணம் வைப்பவன் அவன் மக்களிலேயே மிக பெரிய முட்டாளாக இருப்பான். தன்னை அறியாதவன் தான் தன்னை பற்றி பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பான். யார் தன்னைப் பற்றி அறிந்து கொண்டானோ அவன் ஒருபோதும் தன் விஷயத்தில் நல்லெண்ணம் கொள்ள மாட்டான். தன்னை நல்லவன் என்று சொல்லமாட்டான்.
இந்த இடத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹு (அல்லாஹ்வின் தூதரிடத்தில் வாழ்நாளெல்லாம் கல்வி படித்து அவர்களிடம் நெருக்கமாக கண்ணியமாக இருந்த தோழர். குர்ஆனுடைய அறிஞர்.)
அவர்கள் தன் மாணவர்களிடத்தில் பல முறை சொன்ன வார்த்தை என்னவென்றால், மாணவர்களே! நீங்கள் என்னை சுற்றி சுற்றி வருகிறீர்கள். ஆனால், உண்மையில் என்னுடைய நிலை உங்களுக்கு தெரியுமேயானால் மண்ணை அள்ளி என் மீது வீசிவிட்டு என்னை விட்டுவிட்டு சென்று விடுவீர்கள்.
அந்த அளவு தனது குறைகளை புரிந்தார்கள். தன்னை தாழ்த்திக் கொண்டார்கள்.
நமக்கு மூன்று விதமான எதிரிகள் இருக்கிறார்கள். இந்த துன்யாவில் எதிரிகள் பல பேர் இருக்கிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியில் சிலரிடம் கேட்கப்படுகிறது. உங்களுடைய எதிரி யாரென்று? ஒரு முஸ்லிம் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு சர்வே நிகழ்ச்சி. மக்கள் எந்த அளவுக்கு மார்க்க விஷயத்தில் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதற்காக.
இப்படிக் கேட்கப்பட்டால், சிலர் பக்கத்து வீட்டுக்காரனை சொன்னார்கள். சிலர், பங்குதாரரை சொன்னார்கள். சிலர், நண்பனை சொன்னார்கள். சிலர், சகோதரனை சொன்னார்கள். இப்படியாக பலரும் பலரை சொன்னார்கள். சிலர், யஹூதி என்று சொன்னார்கள். சிலர், நஸ்ரானி என்று சொன்னார்கள். சிலர், சில நாட்டை சொன்னார்கள்.
ஆனால், யாருமே கவனமாக உன்னிப்பாக அந்த கேள்வியை உள்வாங்கவில்லை. தனது எதிரி யாரென்று கேட்டால் இப்படித்தான் நம் கவனம் செல்கிறதே தவிர, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையான எதிரி என்று யாரை சொன்னார்களோ, அவர்களை நாம் எதிரிகளாக பார்க்கவில்லை. அவர்களோடு நாம் தோழமை கொண்டுள்ளோம்.
எங்கிருந்தோ ஒரு நாட்டை சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம் சகோதரரை சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு சமுதாயத்தை குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இமாம் யஹ்யா இப்னு முஆத் ராஸிப் ரஹிமஹுல்லாஹ் சொன்னார்கள். மனிதனே! உனக்கு எதிரி யாரென்று தெரியுமா? உன்னுடைய இந்த துன்யா. எந்த துன்யா உனது கையில் இருக்கின்றதோ அந்த துன்யா தான். இரண்டாவது, உன்னோடு இருக்கக்கூடிய ஷைத்தான். மூன்றாவது, உன்னுடைய நஃப்ஸ். இந்த மூன்று பேர்தான் உனக்கு எதிரி.
மேலும், அவர்கள் சொன்னார்கள்: துன்யா என்ற எதிரியிடம் இருந்து பாதுகாப்பு பெற வேண்டுமா? இந்த துன்யாவை ஆசைப்படாதே. எவ்வளவு ஆசைப்படுகிறோமோ அவ்வளவு பிரச்சனை. இந்த துன்யாவில் நீ ஆசைப்படாதே.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு தோழர் வந்து கேட்கிறார்.
أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبُّكَ النَّاسُ»
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு உபதேசம் சொல்லுங்கள். நான் அந்த உபதேசத்தின் படி நடந்தால் அல்லாஹ்வும் என்னை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வின் அடியார்களும் நேசிக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: மனிதனே! அல்லாஹ்விடத்தில் இருப்பதற்கு ஆசைப்படு. அல்லாஹ் உன்னை நேசிப்பான். மனிதர்களின் கையில் இருப்பதை ஆசைப்படாதே. அது வேண்டும் என்று கேட்காதே. மக்களும் உன்னை நேசிப்பார்கள்.
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 4092, 4102.
இதைப் பற்றி நாம் அறிய வேண்டியது நிறைய உள்ளது. அல்லாஹ் உங்களையும் என்னையும் பாதுகாப்பானாக! இந்த நஃப்ஸுடைய குறைகளையும், தீமைகளையும், அதன் தீங்குகளில் இருந்தும் அல்லாஹ்வின் அருளால் பாதுகாப்பு பெற்றவர்களாக, அல்லாஹ்வின் அன்பை பெற்றவர்களாக, நாம் ஆகவேண்டும்.
நஃப்ஸுடையை ஷைத்தானுடைய தீங்கிலிருந்து எப்போதும் நாம் உஷாராக இருந்து, அல்லாஹ்வுடைய வேதத்தையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவையும் பற்றிப்பிடித்து, நன்மைகளில் உறுதியாக இருக்க வேண்டும்.
பாவங்களை விடுவதில் தீவிரம் காட்ட வேண்டும். நன்மைகளை செய்வதில் தீவிரம் காட்ட வேண்டும். அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் சொர்க்க பாதையை இலேசாக்குவானாக! நஃப்ஸுடைய கெடுதியிலிருந்தும், ஷைத்தானுடைய கெடுதியிலிருந்தும் பாதுகாப்பு தருவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ " (صحيح البخاري- 52)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/