HOME      Khutba      உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 7-9 | Tamil Bayan - 530   
 

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 7-9 | Tamil Bayan - 530

           

உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 7-9 | Tamil Bayan - 530


உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் (அமர்வு 7-9)

வரிசை : 530

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 19-10-2018 | 10-02-1440

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூரியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தைக் கொண்டு உபதேசித்தவனாக, அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை அஞ்சி வாழ்வது தான் இம்மை மறுமையின் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்று உபதேசித்தவனாக இந்த ஜும்ஆவின் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு சுப்ஹானஹுதஆலா என்னையும் உங்களையும் நமது குடும்பத்தார்களையும் அல்லாஹ்வை பயந்து,அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழ்கின்ற, மறுமையை தேர்ந்தெடுத்த நன்மக்களாக ஆக்கி தருவானாக, ஆமீன்.

இந்த உலகம் நிச்சயமாக பல மாற்றங்களை உடையது. இதனுடைய மாற்றங்களை யாரும் தடுக்க முடியாது. இன்று காலையில் ஒருவர் ஆட்சியாளராக அதிபராக இருப்பார். நாளை அவர் இருக்கமாட்டார்.

இன்று காலை உலகத்தில் அதிகமாக பேசப்படுகின்ற மனிதராக ஒருவர் இருப்பார். அடுத்து மறுநாள் விடிவதற்க்குள் அவரை பற்றிய பேச்சுகளை மக்கள் மறந்துவிடுவார்கள்.

ஏழ்மை செல்வம், வசதி வறுமை, ஆட்சி அதிகாரம் இப்படியாக பலவிதமான மாற்றங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டே இருக்கும். இந்த மாற்றங்களையும் இந்த ஏற்றத்தாழ்வுகளையும் இது போன்ற வித்தியாசங்களை உடையது தான் இந்த உலகம்.

அல்லாஹ் நிரந்தரமான ஒரு தன்மையுடைய உலகமாக மறுமையை தான் வைத்திருக்கின்றான், இந்த உலகம் அப்படிப்பட்டதல்ல.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுக்கு போரில் வெற்றியும் ஏற்பட்டிருக்கிறது போரில் தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் அழகிய முடிவு அல்லாஹ்வை பயந்து கொண்டவர்களுக்கு தான்.

وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ

இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும். (அல்குர்ஆன் 7 : 128)

முஃமின்களை பொறுத்தவரை, மறுமை என்ற வாழ்க்கையை முன் வைத்துதான் அவர்களுடைய இந்த உலக வாழ்க்கை இருக்கும்.

அல்லாஹ்வை நம்பாத மற்றவர்களைப் பொருத்தவரை, அவர்கள்  உலகத்தை வைத்துதான் உலகத்தை அனுமதிப்பார்கள். உலகத்தை உலகத்தை கொண்டு சீர்திருத்த பார்ப்பார்கள்.

அவர்களுடைய அனுபவங்களை கொண்டு அறிவைக் கொண்டு இந்த உலக வாழ்க்கையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் சரி செய்து வெற்றி காண முயற்சிப்பார்கள்.

ஆனால், முஃமினைப் பொருத்தவரை நான் என்னுடைய மறுமை வாழ்க்கையை முன்னிறுத்தாத வரை என்னுடைய உலக வாழ்க்கை சீர் ஆகாது, என்னுடைய எந்த ஒரு காரியமும் சரி ஆகாது.

மாறாக அல்லாஹ்வின் சாபத்துக்கு ஆளாகி பல சோதனைகளை இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலமை கண்டிப்பாக வரும் என்பதில் உறுதியாக இருப்பான்.

நாம் செய்யக் கூடிய இந்த செயல்களுக்கு மறுமையில் என்ன கூலி கிடைக்கும் என்பதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் ;

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.(அல்குர்ஆன் 99 : 7,8)

இதுதான் ஒரு முஃமினின் நம்பிக்கை. ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் இந்த மறுமையை அடிப்படையாக வைத்து எப்படி வாழ்வது என்பதற்குரிய வழிகாட்டுதலை தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்கள்.

மறுமையின் பக்கம் அழைப்பதற்கு தான் நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள்.நிரந்தரமான வாழ்க்கை அதுதான்.அல்லாஹ்வின் தூதர் மறுமையை கொண்டுதான் உள்ளங்களை பண்படுத்தினார்கள்.

மனிதனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் பயத்தை கொண்டுவருவதற்கு அமல்களின் மீது  ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு, மறுமையை நினைப்பதை தவிர வேறு ஒரு சிறந்த வழி இல்லை.

இன்னும் நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்,குர்ஆனில் அல்லாஹு தஆலா மறுமை நம்பிக்கையை அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதோடு சேர்த்து சொல்கிறான்.

பார்க்க – (அல்குர்ஆன் 2 : 62, 2 : 126, 2 : 127, 3 : 114, 4 : 19)

மறுமையை நம்பிக்கை கொள்ளக் கூடிய விஷயத்தை அல்லாஹு தஆலா தன்னோடு சேர்த்தே குர்ஆனில் தொடர்ந்து சொல்லி வருவதை நீங்கள் பார்க்கும் பொழுது ஒன்றை புரிந்து கொள்ளலாம்;

ஒரு மனிதன் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் என்று கூறி விட்டால் மட்டும் போதாது.நிச்சயமாக மறுமை என்று ஒரு வாழ்க்கை இருக்கின்றது.என் செயலுக்குறிய கூலி அங்கே உண்டு.அங்கே நான் எந்த அல்லாஹ்வை இந்த உலகத்தில் நம்புகிறேனா அந்த ரப்பை நான் அங்கே நேரடியாக சந்தித்தாக வேண்டும்.

அவன் என்னிடத்தில் விசாரிப்பான்.எனது செயல்களைக் குறித்து நான் அதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.இந்த நம்பிக்கையோடு இருந்தால் தான் அவன் அல்லாஹ்வை நம்புகின்றான் என்று பொருள்.

ரசூலுல்லாஹ் கூறினார்கள்:

«مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، وَلاَ حِجَابٌ يَحْجُبُهُ»

நாளை மறுமையில் உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் அல்லாஹ் பேசுவான்.அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் இருக்கமாட்டார். அதுபோன்று திரையும் இருக்காது.

அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6058, 7443.

அல்லாஹ் கேட்பான்; அடியானே! இந்த நேரத்தில் இந்த விஷயத்தை செய்தாயே, இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு சென்றாயே என்று ஒவ்வொன்றையும் குறித்து அல்லாஹ் விசாரிப்பான்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நமக்கு மறுமை என்ற நிகழ்வை குறிப்பிடும்போது இரண்டு விதமான மறுமையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஒன்று, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மறுமை இருக்கின்றது. இரண்டாவது, மொத்த உலகத்தையும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதற்கு ஒரு முடிவு நாளை வைத்து முடித்ததற்கு பிறகு ஒரு பெரிய மறுமை இருக்கிறது.

ஒரு மனிதனுடைய மறுமை என்பது ,அவன் மரணித்ததிலிருந்து ஆரம்பமாகி விடுகிறது. இதை சின்ன மறுமை என்று கூறுவார்கள்.

உலக முடிவுக்குப் பிறகு அல்லாஹ் ஏற்படுத்தக்கூடிய மறுமையை பெரிய மறுமை என்று சொல்வார்கள்.

உலக மக்களை எல்லாம் ஒரு மைதானத்தில் ஒன்று திரட்டி வைத்து அல்லாஹு தஆலா விசாரிப்பான். சொர்க்கம் முன்னால் கொண்டு வரப்படும். நரகம் முன்னால் கொண்டு வரப்படும். அவர்கள் செய்த அமல்கள் பதியப்பட்ட ஏடுகள் கொண்டு வரப்படும்.

சிராத் அங்கேயிருக்கும். நபி அவர்கள் அங்கே இருப்பார்கள். நபிமார்கள் இருப்பார்கள். இதை பெரிய மறுமை என்று சொல்லப்படும்.

இந்த இரண்டு விதமான மறுமையை குறித்தும் ஒரு முஃமின் எப்போதும் பயந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் அதற்கான தயாரிப்பில் இருக்க வேண்டும்.

எனக்கு இந்த வயதில் இந்த மாதத்தில் இந்த தேதியில் தான் நான் மரணிப்பேன் என்று யாராலும் சொல்ல முடியாது. பிறந்த குழந்தைக்கு மரணம் இருக்கிறது. விளையாடுகின்ற குழந்தைக்கு மரணம் இருக்கின்றது. வாலிபருக்கு மரணம் இருக்கிறது. வயோதிகர்களுக்கு இருக்கின்றது.

நோயாளிகள் மரணிக்கின்றார்கள். நோயாளிக்கு மருத்துவம் பார்க்கின்ற நல்ல சுகம் உள்ள மருத்துவர்கள் மருத்துவம் செய்து கொண்டிருக்கும்போதே அவர்களும் மரணித்து விடுகிறார்கள்.

மரணம் என்பது ஒரு விசித்திரமானது. அதனுடைய ஹகீகத்தை யாரும் புரிந்துகொள்ள முடியாது. இப்படிப்பட்ட ஒரு மரணம் அல்லாஹு தஆலா மனிதர்களுக்கு ஏற்ப்படுத்தி இருக்கின்றானே அது அவனுடைய முதல் கியாமத்.

ஏன்? அது ஏற்ப்பட்ட உடன் அவனுக்கும் மறுமைக்கும் உண்டான திரை நீக்கப்படுகிறது. எப்படி நமக்கும் மறுமைக்கும் திரை போடப்பட்டு இருக்கிறதோ அந்தத் திரை எடுக்கப்பட்டு விடுகிறது.

அவனுக்கு சொர்க்கம் காட்டப்படுகிறது. நரகம் காட்டப்படுகிறது. அவனுடைய கப்ரு வாழ்க்கையில் அவன் ஒன்று சுவர்க்க வாழ்க்கையில் அல்லது நரகப் படுகுழியில் இருப்பான்.

ஆகவே, அது அவனுடைய சிறிய கியாமத். அவனிடத்தில் அங்கே விசாரிக்கப்படுகிறது. பெரிய மறுமை என்ற இன்னொரு மறுமை இருக்கின்றது.

இது குறித்தும் நம்மில் பலர் அதை தூரமாக பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அனுப்பப்பட்டது மறுமையின் ஒரு அடையாளம்.

ஏன்?இறுதித்தூதர் வந்துவிட்டார்கள்.இனி ஒரு நபி வரமாட்டார்.இந்த இறுதி நபியை அல்லாஹு தஆலா தாமதப்படுத்தி வைத்திருந்தானே அந்த காலம் நெருங்கிவிட்டது.

நபிமார்களை அனுப்பிகொண்டே இருந்தால் உலகம் முடியாது.அல்லாஹு தஆலா நபிமார்களின் வருகையை நிறுத்தியதன் மூலம் உலக அழிவு தொடங்கிவிட்டது.மறுமையின் தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது என்பதை மக்களுக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்.

ரசூலுல்லாஹ் அவர்கள் கூறக்கூடிய ஒரு ஹதீஸைப் பாருங்கள்;

«بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ»

நானும் மறுமையும் இப்படி அனுப்பப்பட்டு இருக்கின்றோம் என்று கூறி தனது இரு விரல்களை சேர்த்து சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6022, 6504.

அறிஞர்கள் சிலர், கூறுகிறார்கள்; இந்த சிறிய விரலுக்கும் பெரிய விரலுக்கும் எவ்வளவு இடைவேளை இருக்கிறதோ அந்த அளவுதான் மறுமை நிகழ்வதற்கு உண்டான கால அளவு இருக்கிறது

நூல் : ஃபத்ஹுல் பாரி.

உலகத்தை அல்லாஹ் படைத்து, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி, பிறகு ஆதமிலிருந்து ரசூலுல்லாஹ் அவர்களுடைய காலம் வரை எத்தனை ஆண்டுகள் முடிந்து விட்டன!

அல்லாஹ்வின் தூதர் பிறந்து நபித்துவம் கொடுக்கப்பட்டு அவர்களும் இறந்து விட்டார்கள். இனி வேறு எதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?! யோசித்துப் பாருங்கள்.

சிலர் யோசிக்கலாம்; 1400ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் மறுமை வரவில்லையே, இதை எப்படி சமீபம் என்று சொல்லலாம்? என்பதாக சிலர் நினைக்கலாம்.

கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். 1400ஆண்டுகள் அல்ல.ரசூலுல்லாஹ் வருவதற்கு முன்பு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இந்த பூமி சந்தித்திருக்கின்றது.

முடிந்து போன ஆண்டுகளை நினைத்துப் பாருங்கள். இப்போது ரசூலுல்லாஹ் அவர்கள் பிறந்து வாழ்ந்து பணிசெய்து நபித்துவத்தை மக்களுக்கு எடுத்துவைத்து இறந்து விட்டதிலிருந்து இப்போது வரை உள்ள இந்த காலத்தை நினைத்துப் பாருங்கள்.

1400ஆண்டுகள் என்பது எண்ணிக்கையில் பார்க்கும் பொழுது பெரிதாக தெரியலாம். உணர்ந்து பார்க்கும் போது ஒன்றுமே இல்லை. 1400ஆண்டுகள் இந்த பூமியில் உருண்டோடிவிட்டன. எப்படி கழிந்தன? என்று யாரும் விளக்க முடியாது.

தன்னுடைய ஆயுளை எடுத்துப் பாருங்கள். தான் பிறந்ததில் இருந்து தான் வாழ்கின்ற இந்த வாழ்க்கை வரை.

ஒரு இடத்தில் சென்று ஒரு மணி நேரம் நாம் எதிர்பார்த்து இருக்கிறோம் என்று சொன்னால் பத்து தடவை நாம் நம் கடிகாரத்தை பார்த்து விடுவோம். இரண்டு மணி நேரம் நாம் எதிர்பார்த்து இருந்தால் நான் பக்கத்தில் ஒரு வேலையாக சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தை காலி செய்து விட்டு சென்று விடுவோம்.

நீங்கள் ஒரு நாள் எதிர்பார்த்து இருக்க வேண்டுமென்று சொன்னால் நான் வீட்டுக்கு அல்லது ஊருக்கு சென்று வந்துவிடுகிறேன் என்று இடத்தை காலி செய்து விட்டு செல்வோம்.

நீங்கள் வாழும் போது நீங்கள் சந்திக்க கூடிய அந்த நிகழ்கால நேரம், ஒரு மணி நேரம், அல்லது அரைமணி நேரம், ஒருநாள் உங்களுக்கு பெரிதாக இருக்கலாம். முடிந்ததை நினைத்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் கழிந்ததை நினைத்து பாருங்கள். அது ஒரு நேரமாகவே தெரியாது.

நாளை மறுமையில் மக்கள் எழுப்பப்படும் பொழுது இப்படித் தான் நிலைமை இருக்கும்.

قَالَ كَمْ لَبِثْتُمْ فِي الْأَرْضِ عَدَدَ سِنِينَ (112) قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَاسْأَلِ الْعَادِّينَ

ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்? என்று கேட்பான்.ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக! என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 23:112, 113)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا

நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும். (அல்குர்ஆன் 79:46)

அன்பு சகோதரர்களே!மறுமையை நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த உலகம் ஒன்றுமே இல்லை.

அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய இந்த ஹதீஸ்,நானும் மறுமையும் இப்படி தான் அனுப்பப்பட்டிருக்கிறோம் என்று சொல்லும் பொழுது,அவர்களுடைய இரண்டு விரல்களுக்கு உள்ள இந்த இடைவெளி தான் உலகத்திற்கும் மறுமைக்கும் உள்ள இடைவெளி என்றால் அதில் நம்முடைய வாழ்க்கை எவ்வளவு? என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று நமது கண்ணுக்கு முன்னால், நம்முடைய உறவுகள், நம்முடைய தாய் தந்தையர், நமது பாட்டன் முப்பாட்டன் போன்றவர்கள் 90வயதில் மரணிக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவருடைய 90ஆண்டுகள் எங்கே சென்றன?எப்படி சென்றன?

10நிமிடம் நம்மால் ஒரு இடத்தில் மின்விசிறி,மின்விளக்கு இல்லாமல் இருக்க முடியவில்லை. 90ஆண்டுகள் அவர்கள் இந்த உலகத்தில் கழித்திருக்கிறார்கள். பத்து நிமிடம் நமக்கு பெரிதாக தெரிகிறது.

90ஆண்டுகள் அவர்களுக்கு இந்த உலகத்தில் உருண்டோடி இருக்கிறது. என்னென்ன விஷயங்களை அவர் தன் வாழ்வில் சந்தித்து இருப்பார். இந்த உண்மையை நாம் புரிய வேண்டும்.

ரசூலுல்லாஹ் அவர்களுக்கும் மறுமைக்கும் உள்ள இடைவெளியை இந்த சிறிய விரல்களுக்கு இடையில் உள்ள இடைவெளி தான் என்றால் அதில் இப்பொழுது இருக்கக்கூடிய நம்முடைய இடைவெளி நாம் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.

ரசூலுல்லாஹ் உடைய இந்த கூற்றுக்கு இன்னும் சில அறிஞர்கள் கருத்துக்களை கூறுகின்றார்கள்;இந்த இரண்டு விரல்களை சுட்டிக்காட்டி சொன்னார்கள். இந்த இரண்டு விரல்களுக்கு மத்தியில் எவ்வளவு இடைவெளி இருக்கும்? அந்த அளவு ஒரு அற்ப காலம் தான் இந்த உலகத்தில் மிஞ்சியிருக்கிறது.

அல்லாஹு தஆலா உடைய அந்த கியாமத்து நாள் அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. எனவே ஒரு முஃமினால் அந்த மறுமையை மறந்து எப்படி வாழ முடியும்!? அந்த மறுமைக்கான தயாரிப்பு செய்யாமல் எப்படி இந்த உலக இன்பத்தில் ஈடுபட முடியும்!?

ரசூலுல்லாஹ் ஸல் அவர்கள் ஒருமுறை அவர்கள் மறுமையை பற்றி நினைவூட்டும் போது கூறினார்கள் :

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا

சூரியன் மேற்கிலிருந்து உதிக்கின்ற வரை மறுமை நிகழாது. சூரியன் மேற்கிலிருந்து உதித்து விட்டால் அதைப் பார்த்து மக்கள் எல்லோரும் ஈமான் கொண்டு விடுவார்கள்.இதைதான் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் சொல்கிறான்:

لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا

இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது. (அல்குர்ஆன் 6 : 158)

அல்லாஹு தஆலா குர்ஆனில் பல இடங்களில் மறுமையைப் பற்றி கூறுவதை நீங்கள் படித்திருக்கலாம்.

قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ حَتَّى إِذَا جَاءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوا يَاحَسْرَتَنَا عَلَى مَا فَرَّطْنَا فِيهَا وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَى ظُهُورِهِمْ أَلَا سَاءَ مَا يَزِرُونَ

ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 6 : 31)

يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

(நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 7 : 187)

இதற்கு ரசூலுல்லாஹ் விளக்கம் சொல்கிறார்கள்; ஒரு வியாபாரி தன்னிடம் வந்த வாடிக்கையாளரிடம் துணியை விரித்துக் காட்டியிருப்பார். அந்த வாடிக்கையாளர் தான் வாங்கி கொள்கிறேன் என்று கூறி அந்த துணியை மடித்து தருவதற்குள் மறுமை நிகழ்ந்துவிடும்.(1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரிஎண் : 6025, 6506.

நமக்கு வேண்டுமானால் இந்த பூமி இந்த பிரபஞ்சம் மிக பிரமாண்டமானதாக இருக்கலாம்.சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள்,கடல்,மலை, பரந்து விரிந்த கண்டங்கள் இன்று நமக்கு மிகப்பெரிய பிரமாண்டமாக தோற்றமளிக்கலாம்.ஆனால் படைத்த இறைவனுக்கு இவற்றை அழிப்பதற்கு நேரம் தேவையில்லை.

அல்லாஹ் கூறுகிறான் :

وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

வானங்களிலும் பூமியிலும் உள்ள ரகசியம் அல்லாஹ்வுக்கே சொந்தம். (அதை மற்றெவரும் அறிய மாட்டார்கள்.) ஆகவே உலக முடிவு, இமை மூடி விழிப்பதைப்போல் அல்லது அதைவிட விரைவாகவே முடிந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன் ஆவான்.(அல்குர்ஆன் 16 : 77)

கண்சிமிட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். இந்த கண் சிமிட்டும் நேரத்தை விட மிகச் சீக்கிரமாக இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும்.

சிலர் யோசிப்பார்கள்; அவர்களுடைய யோசனைக்கு அல்லாஹ் பதில் கூறுகிறான். மனிதனே! எனது செயலை உனது செயலோடு ஒப்பிட்டு அணுமானிக்காதே, என்னுடைய கட்டளைகளை உன்னுடைய திட்டங்களைப் போட்டு நீ அணுமானிக்காதே.

إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்(அல்குர்ஆன்16:77)

அல்லாஹ் நாடினால் படைப்பதும் அவனுக்கு எந்த சிரமம் இருக்காது.பரிபாலிப்பதும் அவனுக்குஎந்த சிரமமும் இருக்காது.அழிக்க நாடினால் அதுவும் அவனுக்கு சிரமம் இருக்காது.

أَفَعَيِينَا بِالْخَلْقِ الْأَوَّلِ بَلْ هُمْ فِي لَبْسٍ مِنْ خَلْقٍ جَدِيدٍ

(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா? (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குச் சிரமமெனக் கூறுவதற்கு!) எனினும், (மீண்டும் இவர்களை) புதிதாகப் படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர். (அல்குர்ஆன்50 : 55)

அல்லாஹு தஆலா எப்படி அவனுடைய கட்டளையைக் கொண்டு தனியாளாக தன்னுடைய அதிகாரத்தைக் கொண்டு இந்த பிரபஞ்சத்தை படைத்தானோ அவனுடைய கட்டளையை கொண்டு அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தை அழிப்பான். அதற்கு அவனுக்கு நேரம் ஆகாது. அவனுக்கு சிரமம் இருக்காது. ஒரு கண்சிமிட்ட கூடிய நேரம்தான்.

மேலும் ரசூலுல்லாஹ் தொடர்ந்து சொல்கிறார்கள்;இந்த மறுமை எப்படி திடீரென்று வரும் என்பதை விவரிக்கும் பொழுது,

ஒரு மனிதன் தன்னுடைய ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் அதனுடைய பாலை கரந்து வீட்டிற்கு எடுத்துச் சென்று,அதனை குடிக்கலாம் என்பதாக அதை எடுத்துக்கொண்டு வருவான்,அதற்குள் மறுமை நிகழ்ந்துவிடும்.

மேலும் சொன்னார்கள்;

وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهُوَ يَلِيطُ حَوْضَهُ فَلاَ يَسْقِي فِيهِ

ஒரு மனிதன் தன் கால்நடைகளுக்கு நீர் புகட்டுவதற்காக நீர் தொட்டியை பூசிக்கொண்டு இருப்பான்.பூமியில் பள்ளம் தோண்டி அல்லது கற்களை வைத்து எழுப்பி தண்ணீர் தொட்டியை செய்து அதற்கு வெளியில் பூசுவான்.

பூசி முடித்து அதிலிருந்து தனது கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது மறுமை நிகழ்ந்துவிடும்.

மேலும் சொன்னார்கள்; ஒரு மனிதன் சாப்பிடுவதற்கு அமர்ந்திருப்பான். உணவு முன்னால் இருக்கும். அதிலிருந்து ஒரு வாய் கவளம் உணவை எடுத்து தனது வாய்க்கு அருகில் கொண்டு சென்று இருப்பான். ஆனால் வாயில் வைத்திருக்க மாட்டான். அதற்குள் மறுமை நிகழ்ந்துவிடும். (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரிஎண் : 6025, 6506.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கக் கூடிய இந்த ஹதீஸில்,முதலாவதாக,ஒரு ஆட்டை விற்பனை செய்யக்கூடிய மனிதனை சொன்னார்கள்.இரண்டாவது,பால் கறந்து பாலை எடுத்து வருகின்ற மனிதரை சொன்னார்கள்.மூன்றாவது,நீர் தொட்டிக்கு பூசக்கூடிய மனிதனை சொன்னார்கள். நான்காவதாக, உணவு கவளத்தை எடுத்து வாயில் வைக்கக்கூடிய அந்த மனிதனை சொன்னார்கள்.

இந்த ஹதீஸை நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து கவனியுங்கள். மறுமை உடைய நிகழ்வை அல்லாஹ்வின் தூதர் எப்படி சொல்லி இருக்கிறார்கள். மக்கள் மறுமையை மறந்திருப்பார்கள்.

மறுமை எப்போது வரும்? சூரியன் மங்குவதா? சூரியன் பூமியில் விழுவதா? வானங்கள்சிதருவதா? மலைகள் பெயர்க்கப்படுவதா? மலைகளும் பூமியும் ஒன்றோடு ஒன்றாக அடிக்கப்படுமா? கடல் நெருப்பாக மாற்றப்படுமா? இதையெல்லாம் தூரமாக பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا (6) وَنَرَاهُ قَرِيبًا

(எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாக எண்ணுகின்றனர். நாமோ அதை வெகு சமீபமாகக் காண்கிறோம்.(அல்குர்ஆன்71 : 6,7)

இவ்வளவு பயங்கரமான எச்சரிக்கையை அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்லிக்காட்டுகிறான். இன்னும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் நமக்கு உணர்த்திக் காட்டுகிறார்கள்.

குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மை எங்காவது பொய்யாக இருக்கிறதா? அல்லாஹ்வுடைய தூதர் உண்மைக்கு மாற்றமாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா?

ஏன் நமது உள்ளங்கள் நம்பினாலும் உள்வாங்க மறுக்கின்றன?ஏன் நம் உள்ளங்கள் இதனை ஏற்றுக் கொண்டாலும் இதன் படி செயல்பட நம்மை தூண்டவில்லை?

நம்புகிறோம்;ஏற்றுக்கொள்கிறோம்;பேசுகின்றோம்.ஆனால்,அந்த மறுப்பாளர்கள் போலதான் தீனை விட்டு ஈமானை விட்டு அமல்களை விட்டு தூரமாக பாவங்களுக்கு நெருக்கமாக இச்சைகளுக்கு நெருக்கமாக இருக்கிறோம்.

ஏன்? நம்முடைய உள்ளத்தை பன்படுத்தவில்லை. இந்த எச்சரிக்கைகளை இந்த அச்சுறுத்தல்களை ஏதோ கொஞ்சம் நேரம் கேட்டுவிட்டு அப்படியே கடந்து சென்று விடுகிறோம். இதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. இந்த மறுமையின் பயம் உள்ளவர்களுக்கு தான் அல்லாஹ் உபதேசம் பயன்தரும் என்று சொல்கிறான்.

فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ

ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக(அல்குர்ஆன் 50 : 45)

سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்(அல்குர்ஆன் 87 : 10)

மேலும் பல விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நாம் அறிய வேண்டிய முக்கியமான செய்தி, நம்முடைய உள்ளம் எதுவரை இந்த துன்யாவில் அதற்கு சுகங்களை கொடுத்துக்கொண்டு அது தேடக்கூடிய இன்பங்களை எல்லாம் கொடுத்துக்கொண்டு எந்த அளவு இந்த துணியாவில் மூழ்க வைப்போமோ அந்த அளவு இந்த உள்ளமானது மறுமையை மறந்து அமல்களை விட்டு தூரமாக இருக்கும்.

இதற்கு மாற்றமாக இந்த உலக இன்பத்தில் மூழ்குவதிலிருந்து,இந்த உலகத்திலிருந்து மறுமைக்கான அமல்களில் நம்மை நிர்ப்பந்தப்படுத்தி எந்த அளவுக்கு நாம் மனதை ஈடுபடுத்துவதுமோ அதற்குப் பிறகுதான் இந்த மனதில் ஈமானுடைய ஒழி ஏற்படும்

மறுமையை புரியக்கூடிய எதிர்பார்க்கக் கூடிய உள்ளமாக இது மாறும்.உதாரணத்திற்கு, ஒரு மனிதன் சிறிய வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் கல்லூரி முடித்து பட்டம் வாங்கி என்ன பதவிக்கு போவான் என்பதை எல்லாம் கற்பனை செய்கிறார்கள்.

அதுபோன்று ஒரு வியாபாரி தொழிலை ஆரம்பம் செய்வதற்கு முன்பே அவர் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இந்த உலகத்தில் இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் நமக்கு இருக்கின்றன.

ஆனால், மறுமையை குறித்துப் பார்க்கும் பொழுது, எது நிச்சயமாக நிகழுமோ படிக்கக்கூடிய மாணவரோ வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரியோ தன்னுடைய எதிர்பார்ப்புகளை அடைவார் என்று யாரும் உறுதி கொடுக்க முடியாது. ஆனால்,பிறந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் மரணம் இருக்கு என்பது உறுதி.இரண்டு இல்லங்களை தவிர வேறு இல்லம் இல்லை.

فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ

(அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சொர்க்கத்திற்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள். (அல்குர்ஆன் 42 : 7)

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ (13) وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள். (அல்குர்ஆன்82 : 13,14)

இப்படிப்பட்ட நியதி அல்லாஹ்விடத்தில் இருக்கிறது என்று தெரிந்த பிறகும் நாம் தயக்கம் கொள்வதற்கு காரணம் என்னவென்றால் உலக விஷயம் என்றால் நாம் நிர்பந்தப்படுத்தி செய்ய வைப்போம்.

ஒரு நோயாளிக்கு மருந்து சாப்பிட வேண்டும்,அவரும் தன்னை கட்டாயப்படுத்தி சாப்பிடுவார். அதுபோன்று அவருடைய நண்பர்களும் கட்டாயப்படுத்தி அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வார்கள்.

துன்யாவில் ஒன்று தேவை என்றால் அது கண்டிப்பு என்று சொன்னால் அதற்கு கட்டாயப் படுத்துகிறோம். ஆனால் மறுமை என்று வரும்போது விரும்பினால் செய் என்று நமது உள்ளங்களை அப்படியே விட்டுவிடுகிறோம்.

இது ஷைத்தான் உடைய கூட்டாளிகளின் பண்பு. அவன் உள்ளிருந்து அவனுடைய கட்டளையை செயல்படுத்தக்கூடிய நம்முடைய எதிரி ஆவான்.

ஆகவே, உபதேசங்களை கேட்பது மட்டுமல்ல. அவற்றின் படி செயல்படுவதற்கு நம்மை நாம் கட்டாயப்படுத்த வேண்டும்.

தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்வது, அன்றாடம் தர்மம் செய்வது, வாக்கை நிறைவேற்றுவது, தொழில் துறைகளில் அமானிதங்களை பேணுவது, அல்லாஹ்வை பயந்து அழுது பிரார்த்தனை செய்வது, ஹராமை விட்டு விலகுவது, செய்த தவறுகளுக்காக தவ்பா செய்வது, இப்படியான அமல்களை அன்றாடம் நம் வாழ்க்கையில் நம்மை கட்டாயப்படுத்தி செய்ய வைக்க வேண்டும்.

விரும்பினால் செய், விரும்பினால் பரவாயில்லை, என்று விட்டுவிடுவோமேயானால் இந்த நஃப்ஸ் ஒரு பொழுதும் நன்மையில் ஆர்வம் கொள்ளாது.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹு சுப்ஹானஹுதஆலா அவனுடைய அச்சத்தைக் கொண்டு பாதுகாப்பு பெற்ற ஆன்மாவாக என்னுடைய ஆன்மாவையும் உங்களுடைய ஆன்மாவையும் நம் நம்மை எல்லோருடைய ஆன்மாக்களையும் ஆக்கியருள்வானாக!

பாவத்திலிருந்து விலகி நன்மைகளை செய்யக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள் புரிவானாக! இவ்வுலகிலும் வெற்றி அடைந்தவர்களாக மறுமையிலும் வெற்றி அடைந்தவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!

நாளை மறுமையில் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறக்கூடிய நல்ல மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا طَلَعَتْ فَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ، فَذَلِكَ حِينَ: {لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ، أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا} [الأنعام: 158] وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ نَشَرَ الرَّجُلاَنِ ثَوْبَهُمَا بَيْنَهُمَا فَلاَ يَتَبَايَعَانِهِ، وَلاَ يَطْوِيَانِهِ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدِ انْصَرَفَ الرَّجُلُ بِلَبَنِ لِقْحَتِهِ فَلاَ يَطْعَمُهُ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهُوَ يَلِيطُ حَوْضَهُ فَلاَ يَسْقِي فِيهِ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ رَفَعَ أَحَدُكُمْ أُكْلَتَهُ إِلَى فِيهِ فَلاَ يَطْعَمُهَا " (صحيح البخاري- 6506)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/