உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் அமர்வு 9-9 | Tamil Bayan - 530
உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : (மஹ்ஷரும் மனிதனும்) உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள் (அமர்வு 9-9)
வரிசை : 530
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 07-12-2018 | 30-03-1440
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவனாக அல்லாஹ்வின் தூதர் மீதும் கண்ணியத்திற்குரிய அவர்களுடைய குடும்பத்தார் மீதும் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டுவனாக, அல்லாஹ்வின் மார்க்கத்தை பேணி வாழும்படி, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை மீறாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு உபதேசம் செய்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து அல்லாஹ்விற்கு பொருத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு அருள் புரிவானாக! மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக!
நாம் எழுப்பப்படும் பொழுது அல்லாஹு தஆலா நேசித்த நல்லோர்களின் கூட்டத்தில் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!
அல்லாஹ், மறுமை நாளை பற்றி குர்ஆனில் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றான். மனிதர்கள் இந்த உலகத்தில் எத்தனையோ பல விஷயங்களைப் பற்றி பயந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த உலகத்தை பற்றிய பல விஷயங்களை கொண்டு அவர்கள் அச்சப்படுகிறார்கள். இப்படி நிகழ்ந்து விட்டால் எனக்கு என்ன ஆகும்? இப்படி ஒரு நேரம் வந்து விட்டால் எனக்கு என்னவாகும்? இப்படியாக இந்த உலக சம்பத்தப்பட்ட பல விஷயங்களைக் கொண்டு மக்கள் பயப்படுவதை பார்க்கிறோம்.
உண்மையில் நாம் பயப்படக் கூடிய ஒரு நேரம் இருக்கிறது என்றால், அது மறுமை தான். இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும் சரி, அந்த ஆபத்து சில நொடிகளில் முடிந்து விடும். அந்த ஆபத்தில் மனிதனுடைய வாழ்வு முடிந்து விடும்.
அதன் பிறகு, அந்த ஆபத்துக்களை கொண்டு அவன் வேதனைகளை அனுபவிக்க போவதில்லை. ஆனால், மறுமை உடைய அந்த நாள் ஆபத்துகளிலேயே பேராபத்து கொண்டது. அந்த ஆபத்தில் மனிதனுக்கு மரணம் கிடையாது. அந்த ஆபத்திலிருந்து அவன் தப்பித்து விட முடியாது.
அல்லாஹ் கூறுகிறான்:
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான். (அல்குர்ஆன் 87 : 13)
لَا تُبْقِي وَلَا تَذَرُ
அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது. (அல்குர்ஆன் 74 : 28)
அந்த மறுமையின் ஆபத்துகள் தண்டனைகள் எப்படிப்பட்டது என்றால், அது மனிதனை வைத்துக்கொள்ளவும் செய்யாது. மனிதனை விட்டு விடவும் செய்யாது.
அதாவது, மனிதர்கள் சிக்கல்களிலும் சிரமங்களிலும் பேராபத்துகளிலும் தண்டனைகளும் மாறி மாறி உழன்று கொண்டே இருப்பார்கள்.
அது முடிவில்லாத காலம். ஆகவேதான், மறுமையை குறித்து ஒரு அச்ச உணர்வு முஃமினுக்கு இருக்க வேண்டும். அந்த பயம் இருந்தால் தான் இந்த உலக வாழ்வில் மனிதன் கட்டளைகளை பேனுவான். அல்லாஹ்வின் சட்டப்படி அவன் நடப்பான்.
இந்த உலக வாழ்க்கையில் செல்வம் அவனை வரம்பு மீற செய்துவிடாது. வறுமை அவனை அல்லாஹ்வை மறக்கடிக்கவும் செய்துவிடாது.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த மறுமையை குறித்து நேரடியாக எச்சரிக்கை செய்கிறான்.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன் 35 : 5)
இறக்கம் படைத்த ரப்பு நம்மீது கருணை கொண்டு நமக்கு கொடுக்கக்கூடிய அந்த எச்சரிக்கையை கவனியுங்கள்.
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும். (அல்குர்ஆன் 51 : 6)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ (1) لِلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ (2) مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ
(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான். காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்). (அல்குர்ஆன் 70 : 1-3)
இன்னும் அல்லாஹு தஆலா அழுத்தம் திருத்தமாக கண்டித்து கேட்கிறான்:
عَمَّ يَتَسَاءَلُونَ (1) عَنِ النَّبَإِ الْعَظِيمِ (2) الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ (3) كَلَّا سَيَعْلَمُونَ (4) ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? மகத்தான அச்செய்தியைப் பற்றி, எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள். (அல்குர்ஆன் 78 : 1-5)
வசனத்தின் கருத்து : மக்கள் பேசிக் கொள்கிறார்கள்; மறுமையா? இருக்கிறதா? உண்மையா? என்றெல்லாம் அவர்கள் பேசுகிறார்கள்.
சிலர், சந்தேகத்தோடு பேசுகிறார்கள். சிலர், ஏளனமாக பேசுகிறார்கள். சிலர், நம்பிக்கையில்லாமல் பேசுகிறார்கள். இப்படி அந்த மறுமை பற்றி பலர் பல கருத்துகளில் இருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் கூட, (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!) நம்மோடு வாழக்கூடியவர்கள், சிலநேரம் நம்மோடு மஸ்ஜிதுகளில் அமர்ந்திருக்கிறார்கள், நம்மோடு வாழ்க்கையில் அன்றாடம் பழகக் கூடியவர்கள், நமது பெயர்களில் உள்ளவர்கள் அவர்களிலும் இந்த மறுமை மறுப்பு சிந்தனை பரவிக் கொண்டிருக்கிறது.
மார்க்கம் என்பதற்கு இஸ்லாமை தங்களுடன் அவர்கள் ஒட்டி வைத்திருந்தாலும் குறிப்பாக மறுமையைப் பற்றி வரும்பொழுது, அதை யார் பார்த்தது? அப்படி இருக்கிறதா? இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று ஏளனமாக உதாசீனமாக அலட்சியமாக பரிகாசமாக பேசுவதை நாம் பார்க்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்: அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். இவர்கள் எண்ணுவது போன்று அல்ல. கண்டிப்பாக இவர்கள் விரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.
எப்பொழுது இந்த மரணத்தில் அவர்களுடைய கண்கள் மூடும், அடுத்து மறுமையை பார்ப்பார்கள். தப்பிக்க முடியாது.
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ فَنَادَوْا وَلَاتَ حِينَ مَنَاصٍ
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர். (அல்குர்ஆன் 38 : 3)
இந்த உலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். ஒரு அரசனின் அரசாட்சி அவனை மயக்கி விடுகிறது. ஒரு மந்திரி பதவி அவனை மயக்கி விடுகிறது. செல்வம் அவனை மயக்கி விடுகிறது. ஒரு வாலிபனின் வலிமை அவனை மயக்கி விடுகிறது.
இப்படியாக இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் மனிதனை மறுமையை விட்டு மறக்க செய்யக் கூடியதாக இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
இன்னும் அல்லாஹு தஆலா சொல்கிறான்: இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன் 35 : 5)
ஷைத்தான் நம்முடைய உள்ளங்களில் அவன் செய்யக்கூடிய பெரும் முயற்சிகளில் ஒன்று, மனிதனுடைய உள்ளத்தில் இருந்து மறுமையை மறக்கடிப்பது. மறுமையில் எழுப்பப்பட கூடிய அந்த மஹ்ஷர் வாழ்க்கையையும் மறக்கடிப்பது.
இதை எப்பொழுது அவன் மறுகின்றானோ அதன் பிறகு அவனுடைய நிலைப்பாடு அல்லாஹ்வை மறுக்கக் கூடியவனாக ஆகிவிடுவான்.
ஒரு மனிதனுக்கு மறுமை குறித்து சந்தேகம் வரும் பொழுது, அவன் பின்பற்றக்கூடிய இஸ்லாம் மீதே அவனுக்கு சந்தேகம் வந்துவிடும். அதன் பிறகு அல்லாஹ்வின் விஷயத்திலேயே அவன் சந்தேகப்பட்டு விடுவான்.
ஆகவேதான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய ஈமானை பற்றி கூறும் போதெல்லாம் மறுமையோடு சேர்த்து சொல்கிறான். நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால் என்று.
குர்ஆனுடைய நூற்றுக்கணக்கான வசனங்கள் ஆயிரக்கணக்கான நபிமொழிகள் அல்லாஹ்வின் மீதான ஈமானையும் மறுமையின் மீது உண்டான ஈமானையும் சேர்த்தே சொல்கிறது. அது ஒரு சிறிய விஷயத்தை சொல்வதாக இருந்தாலும் சரி.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
நீங்கள் மறுமை நாளையும் அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவராக இருந்தால் நல்லதைப் பேசுங்கள். அல்லது வாய்மூடி இருங்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5559.
இது, ஒழுக்கத்தில் ஒரு முக்கியமான ஒன்று. நாம் சாதாரணமாக நினைக்கக் கூடிய ஒன்று. அதை சொல்லும்போது கூட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய நம்பிக்கையோடு மறுமை நம்பிக்கையும் சேர்ந்து சொன்னார்கள்.
இந்த உலகத்தில் பல நேரங்களில் நாம் உறுதி அளிக்கின்றோம். ஒன்று சேரக்கூடிய நாளென்று நிர்ணயிக்கப்பட்டால் அல்லது ஒரு அதிகாரியிடத்தில் உங்களுக்கு ஒரு நேரம் குறிக்கப்பட்டு அந்த அதிகாரி உங்களை சந்திக்க போகிறார், உங்களிடத்திலே உங்களது வியாபாரத்தை பற்றியோ கையில் இருக்கக்கூடிய செல்வத்தை பற்றியோ உங்களை எடுத்து விசாரிக்க போகிறார் என்று ஒரு நாளும் ஒரு நேரமும் ஒரு இடமும் குறிக்க பட்டால் அந்த நாளை நீங்கள் எப்படி எதிர்பார்ப்பீர்கள்?
அந்த நேரத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? அந்த நேரம் உங்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை நினைத்துப் பாருங்கள்.
அப்படி நமக்கு குறிக்கப்பட்ட நாள் குறிக்கப்பட்ட நேரம் குறிக்கப்பட்ட இடம்தான் அந்த மஹ்ஷர் உடைய மைதானம். நமது ரப்பு நம்மிடத்தில் விசாரணை செய்வான். எந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அல்லாஹ் நம்மை விசாரிப்பான்.
எனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்த ஒரு நபரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு மலக்கும் அல்லாஹ்வுக்கு முன்னால் நின்று அங்கு பரிந்துரை பேச முடியாது. எந்த ஒரு நபியும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் பரிந்துரை பேச முடியாது.
மனிதன் யாரையெல்லாம் நம்பிக்கை கொண்டிருக்கின்றானோ, மனிதன் யாரெல்லாம் ஆதரவு வைத்திருக்கின்றானோ எல்லோரும் அந்த மனிதனை விட்டு விரண்டு ஓடி விடுவார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்:
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்). அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும். (அல்குர்ஆன் 80 : 34-37)
மேலும், அல்லாஹு தஆலா அந்த மஹ்ஷர் உடைய காட்சியை பற்றி இப்படி கேட்கிறான்:
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (17) ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (18) يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன் 82 : 17-19)
அந்த மஹ்ஷர் உடைய நாள் நிர்ணயிக்கப்பட்ட நாள். அந்த மஹ்ஷர் அரசனுக்கெல்லாம் பேரசனாகிய அந்த ரப்பை நேரடியாக சந்தித்தாக வேண்டும். அவன் அங்கே நம்மிடத்தில் விசாரணை செய்வான். அவன் நிமிடத்தில் அங்கே கேள்விகளை கேட்பான்.
அந்த காட்சி சாதாரணமானதல்ல. இந்த உலகத்தைப் போன்றதல்ல. எதையாவது கொடுத்து எப்படியாவது தப்பித்து விடலாம் என்பதல்ல. அந்தநாளில் உறவுகள் இருக்கமாட்டார்கள். அந்த நாளில் செல்வம் இருக்காது. பரிந்து பேசக்கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
மேலும், அல்லாஹு தஆலா இப்படி கேட்கிறான்:
وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 48)
அதனால் ஏற்படக்கூடிய அந்த காட்சியை பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகப்பெரிய எச்சரிக்கையை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் நமக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். எத்தனையோ இன்னல்கள் சிரமங்கள் இருக்கலாம். ஆனால், அந்த பிரச்சனைகளை துன்பங்களை நினைப்பதை விட மறுமையின் பிரச்சினைகளை நாம் சிறிது நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.
இதனால், நமது உள்ளம் பண்பட்டு விடும். அவர் உள்ளத்தை பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அமல்களில் முன்னேறலாம்.
ஆகவேதான், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வறுமையை குறித்து அப்படி உபதேசங்களை நமக்கு செய்திருக்கிறார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக அழுத்தமாக கூறக்கூடிய ஒரு ஹதீஸை கவனியுங்கள். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«إِنَّكُمْ مُلاَقُو اللَّهِ»
மனிதர்களே! நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை சந்திப்பீர்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6043, 6525.
ரப்பு முன்னால் போய் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை சிறிது நேரத்திற்கு உள்ளத்தில் கொண்டு வரவேண்டும். பிறகு, இந்த உள்ளத்தில் அந்த ஈமானிய பயம், அந்த மறுமைகான தயாரிப்பு, ஹராமை விட்டு விலகுதல், பாவங்களுக்காக தவ்பா கேட்டல் தானாக வந்து விடும்.
ஆகவேதான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை புறக்கணித்து வருகிறார்களோ அவர்களுக்கு நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்கிறான்.
إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ (இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.) (அல்குர்ஆன் 10 : 7)
அதற்குப்பிறகு மார்க்கம் அவர்களுக்கு எந்த பலனும் கொடுக்காது. மார்க்கத்தைப் பற்றிய எந்த உணர்வும் அவர்களிடத்தில் இருக்காது. எவ்வளவு தான் உபதேசம் செய்தாலும் பார்க்கலாம் என்று சொல்வார்கள்.
சிலர் சொல்வார்கள்: எல்லாரும் சொர்க்கத்திற்கு போய்ட்டா நரகத்திற்கு போக ஆள் தேவை இல்லையா? சிலர் சொல்வார்கள்: அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்து விட்டான், நீங்கள் சொல்கிறீர்கள். எங்களுக்கு அருள் புரியும் போது நாங்களும் ஒரு நாள் இப்படியெல்லாம் உங்களை போன்று பள்ளிக்கு வருவோம். இப்படி எல்லாம் மார்க்கத்தை கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா பல இடத்தில் மறுமையை குறித்து சொல்கிறான்:
نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُوا لِأَنْفُسِكُمْ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ مُلَاقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 223)
யார், அல்லாஹ்வை சந்திப்போம் என்று அந்த அந்த உறுதியில் இருக்கிறார்களோ அவர்களை தான் முஃமீன் என்று அல்லாஹ் சொல்கிறான். அவர்களுக்கு நற்செய்தி என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரப்பை சந்திக்கப் போகக்கூடிய அந்த நாளில் ஏற்படக்கூடிய நிலைமைகளை பற்றி இந்த ஹதீஸில் சொல்கிறார்கள்.
«إِنَّكُمْ مُلاَقُو اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلًا»
அந்த நாளில் மனிதன் உடைய கால்களில் செருப்பு இருக்காது, அவனுடைய மேனியில் ஆடை இருக்காது. நடந்தவர்களாக வருவார்கள். கத்னா செய்யப்படாமல் இருப்பார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6043, 6525.
நாளை மறுமையில் மனிதன் எழுப்பப்படும் பொழுது, எவ்வளவு பெரிய செல்வந்தனாக அரசனாக இருந்தாலும் சரி, அல்லாஹு தஆலா மறுமையில் எழுப்பப்பட கூடிய அந்த நேரத்தில் அவனை இவ்வளவு ஒரு பரிதாபமான நிலையில் அவன் எழுப்புவான்.
அவனுடைய பெருமை அவருடைய திமிரு அவனுடைய ஆணவம் இன்னும் உலகத்தில் எப்படி எல்லாம் அவன் தன்னை கற்பனை செய்து கொண்டிருந்தானோ அது எல்லாம் அடியோடு அவனிடமிருந்து பிடுங்கிவிட்டு, தன்னை பார்க்கும் பொழுது தன்னைப்பற்றிய பரிதாபமான ஒரு நிலையில் தான் அந்த மனிதன் இருப்பானே தவிர, அவருடைய ஆட்சி அதிகாரம் செல்வம் பெருமை மமதை எதுவுமே அவனுக்கு வராது.
ஆகவேதான், நாளை மறுமையில் அல்லாஹ் இவர்களை இப்படி எழுப்புகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
நாளை மறுமையில் எழுப்பப்படும் பொழுது அல்லாஹு தஆலா, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முதலாவதாக அழைப்பான். அப்பொழுது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அழைக்கும் பொழுது மக்கள் எல்லாம் யார் ஆதம்? என்பதாக ஒருவருக்கொருவர் எட்டிக் கொண்டு பார்ப்பார்கள்.
இதோ இவர்தான் உங்கள் தந்தை ஆதம் என்பதாக சொல்லப்படும். அப்பொழுது ஆதம் அலைஹிஸ்ஸலாம் சொல்வார்கள்: உனக்கு முன்னால் நான் ஆஜராகி விட்டேன், உனக்கு முன்னால் நான் வந்துவிட்டேன் என்பதாக.
அல்லாஹு ரப்புல் ஆலமீன், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொல்வான்: ஆதமே! உங்கள் சந்ததிகளில் நரகத்திற்குரிய கூட்டங்களை நீங்கள் வெளியாக்குங்கள் என்பதாக.
அப்பொழுது ஆதம் அவர்கள் சொல்வார்கள்: என் சந்ததிகளில் எத்தனை பேரை நான் நரகத்திலிருந்து வெளியாக்க வேண்டும்? என்பதாக.
அப்போது அல்லாஹ் கூறுவான்: ஆதமே, ஒவ்வொரு நூறிலிருந்தும் 99 பேரை நரகத்திற்காக எடுத்துவிடுங்கள் என்பதாக.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6048.
இந்த ஹதீசை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு முன்னால் சொன்னார்கள். இந்த செய்தி நமக்கும் சொல்லபடுகிறது. நம்முடைய மன நிலையை கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள்.
யாருக்கு சொர்க்கம் இருக்கிறது என்று நற்செய்தி சொல்ல சொல்லப்பட்டதோ, யார் சொர்க்கத்தில் என்னுடைய தோழர்கள் என்பதாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்செய்தி சொன்னார்களோ, யாரை அல்லாஹ் சொர்க்கவாசிகள், நான் அவர்களைப் பொருந்திக் கொண்டேன், அவர்கள் என்னை பொருந்திக் கொண்டார்கள் என்று அல்லாஹு தஆலா நற்சான்று கூறினானோ அவர்களுக்கு முன்னால் இந்த செய்தி கூறப்படுகிறது. அந்த சஹாபாக்கள் உடைய ஈமானிய பயத்தை கவனியுங்கள். அவர்கள் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! எங்களில் 100 நபர்களில் 99 நபர்கள் நரகத்திற்காக எடுக்கப்பட்டு விட்டால் எங்களில் யார் மிச்சப்படுவார்? எங்களுடைய நிலை என்னவாகும்? என்று.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அல்லாஹு தஆலா உங்களுக்கு எப்படிப்பட்ட கருணை காட்டி இருக்கின்றான் என்றால் என்னுடைய உம்மத் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது எப்படி ஒரு கருப்பு மாட்டில் ஒரு சில முடிகள் வெள்ளையாக இருந்தால் தனியாக தெரியுமோ அதுபோன்று நீங்கள் தனியாக தெரிவீர்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6048.
இந்த ஹதீஸை கேட்கும் பொழுது, அல்லாஹ்வுடைய அருளால் அந்த சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு சிலரில் நானும் ஆகவேண்டும் என்ற அந்த ஆசையும் முயற்சியும் தேடலும் நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
«تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ؟ فَقَالَ: «الأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ»
செருப்பில்லாத நிலையில் ஆடை இல்லாத நிலையில் கத்னா செய்யப்படாத நிலையில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் நீங்கள் அல்லாஹ்வை சந்திப்பீர்கள்.
(இந்த ஹதீசை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு முன்னால் சொல்கிறார்கள்.
கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தங்களுடைய குடும்பத்தாரிடத்தில் மறுமையை குறித்த எச்சரிக்கையில் அவர்கள் தவறியதில்லை. ஒரு நபியுடைய மனைவிமார்கள் நபியுடன் வாழ்கிறார்கள். காலை மாலை இரவு என்று நபியுடன் வாழ்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, அவர்களுடைய வீட்டிற்க்கும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஸ்ஜிதுக்கும் இடையே ஒரே ஒரு திரை மட்டும்தான். அந்த திரையை நீக்கினால் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வீடு.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அவற்றை தனது வீட்டிலிருந்து பார்க்கக்கூடிய கேட்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கின்ற நிலையிலும் தங்களுடைய மனைவிமார்களுடன் தனித்து இருக்கக் கூடிய நிலையிலும் மறுமையை குறித்து எச்சரித்தார்கள், மறுமையை குறித்து விளக்கங்களை சொன்னார்கள் என்றால் நம்முடைய வீட்டு பெண்களை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாம் அவர்களுக்கு மறுமை குறித்த எச்சரிக்கையை பயத்தை கொடுக்காமல் தூரம் விலகி நிற்கின்றோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
ஒரு பெண்ணுக்கு எவ்வளவு மார்க்கப்பற்று இருந்தாலும் மறுமையை குறித்த எச்சரிக்கை அவளுக்குத் தேவை இல்லை என்றால் அந்த இடத்தில் முதலாவதாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவிமார்களும் அவர்களுடைய பிள்ளைகளும் தானே இருப்பார்கள்.
அப்படியிருந்தும் ரசூலுல்லாஹ் உடன் இவ்வளவு நெருக்கமாக இருந்தும்கூட தன்னுடைய மனைவிக்கு தனிப்பட்ட முறையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த செய்தியை சொல்லி காட்டுகிறார்கள்.)
ஹதீஸின் தொடர் : இந்த ஹதீஸை கேட்டவுடன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கேட்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே! ஆண்கள் பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே மைதானத்தில் இப்படி எழுப்பப்படுவார்களா? சிலர் சிலரை பார்ப்பார்களே? என்று கேட்டவுடன் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
ஆயிஷா! இப்படிப்பட்ட சிந்தனை எல்லாம் அங்கு வர முடியாது. இப்படிப்பட்ட எண்ணங்கள் எல்லாம் அங்கு வர முடியாது. பக்கத்தில் யார் இருக்கின்றார் என்பதே அங்கு கண்டு கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நிலையில் மக்கள் இருப்பார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 6043, 6044, 6527.
மேலும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு காட்சியைப் பற்றி சொன்னார்கள்:
மக்கள் மறுமையில் அவர்களின் பாவங்களுக்கு தக்கவாறு வியர்வையில் மூழ்கி இருப்பார்கள்.
நூல் : புகாரி, எண் : 6051.
இந்த நிலைதான் மஹ்ஷர் உடைய நிலை. இதைக் குறித்துதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். மக்களுக்கு இந்த ஈமானிய உணர்வுகளை கொடுத்தார்கள். மறுமையை நினைத்துப் பார்க்கின்ற அந்த ஈமானிய உணர்வை கொடுத்தார்கள்.
அல்லாஹு தஆலா பல இடங்களில் இதைப் பேசுகிறான்:
وَلَوْ تَرَىٰ إِذْ وُقِفُوا عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَٰذَا بِالْحَقِّ ۚ قَالُوا بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ
இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று "ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான். (அல்குர்ஆன் 6 : 30)
ஒவ்வொரு மனிதனுடைய நிலையும் அவனுடைய அமல்களை வைத்துதான் முடிவு செய்யப்படும். இந்த உலகத்தில் உள்ள எந்த செல்வமும் எந்த பதவியும் எந்தவிதமான மரியாதையும் சமூக கண்ணியமும் நாளை மறுமையில் அவனுக்கு அல்லாஹ்வுக்கு முன்னால் இருக்காது, அல்லாஹ் கண்ணியப்படுத்தியவர்களை தவிர.
அல்லாஹ் ஒரு அடியானை மறுமையில் பாதுகாப்பது அவனுடைய ஈமானை கொண்டு அவனுடைய அமல்களை கொண்டு.
ஆகவேதான், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானின் பக்கம் கவனம் செலுத்தும்படி அமல்களின் பக்கம் கவனம் செலுத்தும்படி நமக்கு ஆர்வமூட்டினார்கள்.
ஒரு மனிதனுக்கு இன்று செல்வத்தின் மீது அவனுடைய பதவியின் மீது இன்னும் இந்த உலக வஸ்துக்களின் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ இதிலிருந்து ஒரு பகுதியாவது அவனுக்கு மறுமையில் விஷயத்தில் இருந்திருக்க வேண்டாமா?
சஹாபாக்கள் இப்படி சொல்வார்கள்: நீங்கள் அழிந்து விடக் கூடிய உலகத்திற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நிரந்தரமாக இருக்கக்கூடிய மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். (அல்குர்ஆன் 87 : 17)
அல்லாஹ் மறுமை தான் சிறந்தது நிரந்தரமானது என்று சொல்கிறான். ஆனால், இந்த சிறந்ததை நிரந்தரமானதை மறந்து விட்டு மனிதன் இந்த உலக வாழ்க்கையில் மூழ்கினான். அவனுக்கு மரணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது மறுமையை அவன் நெருங்கிக் கொண்டிருக்கிறான்.
நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கி மறுமையை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறோம்; விடையளித்துக் கொண்டிருக்கிறோம்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நாளை மறுமையில் அடியானை சந்திக்கும் பொழுது அல்லாஹ் சந்தோஷமாக இருக்க வேண்டும், அல்லாஹ் நம்மை கொண்டு திருப்தி உடையவனாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு அல்லாஹ் சொல்லக்கூடிய நிபந்தனை, அடியானே! ஈமானை கொண்டு வா, தவ்பா செய்த நிலையில் வா, அல்லாஹ்வை திருத்திக்கொண்டு நிலையில் வா.
இன்று, மக்கள் ஈமானை மறந்துவிட்டார்கள். பாவங்களை செய்து கொண்டே இருக்கிறார்கள். பாவங்களுக்கான பரிகாரத்தையும் தேடுவது கிடையாது. நாம் செய்கின்ற நன்மைகளும் அற்பமான நன்மைகள். அவருடைய பாவத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.
ஆகவேதான், உமர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்:
நீங்கள் உங்களை விசாரித்துக் கொள்ளுங்கள், விசாரணை நாள் வருவதற்கு முன்னால்.
நூல் : புகாரி, எண் : 2383.
அல்லாஹு தஆலாவிடத்தில் நாம் பிரார்த்தனை செய்வோமாக! நம்முடைய இந்த உலக வாழ்க்கையில் மிக முக்கியமாக பெரிய கவலையாக மறுமையின் கவலையை ஆக்கிக் கொள்வோமாக!
அல்லாஹ்வை சந்திக்க கூடிய அந்த நாளில் அல்லாஹ் என்னை திருப்தி அடைந்திருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முயற்சி செய்வோமாக! அல்லாஹுவுடைய கடமைகளை நாம் செய்து வாழக்கூடிய நல்ல வாழ்க்கையையும் பாவங்களை விட்டு விலகி வாழக்கூடிய பாக்கியத்தையும் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் தந்து அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/