HOME      Khutba      நீதமும் நேர்மையும் அமர்வு 1-2 | Tamil Bayan - 528   
 

நீதமும் நேர்மையும் அமர்வு 1-2 | Tamil Bayan - 528

           

நீதமும் நேர்மையும் அமர்வு 1-2 | Tamil Bayan - 528


நீதமும் நேர்மையும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நீதமும் நேர்மையும் (அமர்வு 1-2)
 
வரிசை : 528
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 22-06-2018 | 08-09-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதரின் மீதும் அந்த தூதரின் கண்ணியத்துக்குரிய தோழர்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களை மன்னித்து, அல்லாஹ்விற்கு விருப்பமான அமல்களை செய்து, அல்லாஹு தஆலா அவர்களுக்காக தயார் செய்து வைத்திருக்கக் கூடிய அந்த சொர்க்கத்தில் சேர்வதற்கு எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக! ஆமீன்.
 
இன்று, நாம் கற்றுக் கொள்ளக் கூடிய இந்த ஒரு விஷயம் மிக மிக முக்கியமான விஷயம்.  இன்று நமது சமூகத்திலே பலவகையான நல்லவர்களை பார்க்கலாம். ஒருவரை பார்த்து அவர் மிகப்பெரிய தொழுகையாளி என்பதாகச் சொல்லலாம். அப்படியும் இருக்கிறார்கள். 
 
ஒருவரை பார்த்து இவர் அதிகம் நோன்பு வைக்கக் கூடியவர், இவர் எப்போதும் அதிகமான நஃபிலான நோன்பு நோற்கக்கூடியவர் என்பதாகவும் சொல்லப்படுகிறது. இருக்கிறார்கள். 
 
இவர் அடிக்கடி உம்ரா செய்வார். இவர் வருஷத்திற்கு ஒரு முறை சென்று விடுவார். இவர் மஸ்ஜிது கட்டுவார். இவர் மதரஸாவுக்கு உதவி செய்வார். இப்படியெல்லாம் பல நல்ல காரியங்களைக் கொண்டு பல நல்ல பண்புகளை கொண்டு மக்கள் அறியப்படுகிறார்கள்.
 
ஆனால், இன்று நாம் எந்த விஷயத்தை பார்க்கப் போகிறோமோ அந்த ஒரு நல்ல பண்பை அந்தக் காலத்தில் சொல்வார்கள். "அரிக்கல் விளக்கைக் கொண்டு இருட்டிலே காணாமல் போன பொருட்களை தேடுவது" போன்று. 
 
அந்த நல்ல பண்பு இந்த சமுதாயத்தின் அடிப்படை குணம். ஒருவன் முஸ்லிம், அத்தகைய குணம் இல்லாமல் அவனை முஸ்லிம் என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 
 
ஆனால், அந்த நல்ல பண்பு, அந்த நல்ல குணம், வாசனைக்காவது யாரிடமாவது கிடைக்குமா? என்று தேடக் கூடிய அளவிற்கு இன்று நம்முடைய நிலைமை மோசமாக இருக்கிறது. அது என்ன நல்ல பண்பு? 
 
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
 
நேர்மையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2 : 195)
 
தனக்கு ஒரு அளவுகோல், பிறருக்கு ஒரு அளவுகோல் இல்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு அளவுகோல், வேண்டாதவர்களுக்கு ஒரு அளவுகோல் இல்லை. யாராக இருந்தாலும் சரி, தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையாக இருந்தாலும் சரி, தான் பெற்றெடுத்த பிள்ளையாக இருந்தாலும் சரி, தான் கட்டிய மனைவியாக இருந்தாலும் சரி, ஏன் நமக்கு விருப்பமான நஃப்ஸாக இருந்தாலும் சரி, நேர்மைக்கு மாற்றமாக நான் நடக்க மாட்டேன் என்ற உறுதி வேண்டும். இந்தப் பண்பை அல்லாஹ் நேசிக்கிறான்.
 
நான் புரிவதற்காக இதை உங்களுக்கு சொல்கிறேன். குர்ஆனிலே தொழுகையாளிகளை அல்லாஹ் நேசிக்கிறான் என்று எங்கேயுமே இல்லை. தொழுகையை நிலைநிறுத்துங்கள். தொழுகை, நோன்பு, ஸகாத், இதெல்லாம் கட்டாய கடமைகள். செய்தாக வேண்டும். 
 
அல்லாஹ் சிலரை நேசிக்கிறேன் என்று சொல்கிறானே! அது பண்புகளின் அடிப்படையில் அல்லாஹ் சொல்கிறான். குணம், பண்பு, அஹ்லாக் அடிப்படையில். அந்த வரிசையில்தான் இவர்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான். நேர்மையானவர்களை அல்லாஹ் நேசிக்கிறான் என்று.
 
தன்னுடைய நபிக்கு அல்லாஹ் பல கட்டளைகளை கொடுத்திருக்கிறான். அதிலே குறிப்பாக நபியே நீங்கள் நேர்மையாக நடக்க வேண்டும், நீதமாக நடக்க வேண்டும். நேர்மையாக, நீதமாகத் தான் நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்ற கட்டளையை திரும்பத் திரும்பச் சொல்கிறான். வலியுறுத்தி சொல்கிறான். அதற்கு மாற்றமாக நபி நடந்து கொண்டால் மிக கடுமையாக அல்லாஹ் சோதிக்கின்றான்.
 
அல்லாஹ் நபியைப் பார்த்து கேட்கின்றான். நீங்கள் அநியாயக்காரர்களின் சார்பாக வாதாட வந்து இருக்கிறீர்களா? நபியே! அநியாயக்காரர்களுக்கு ஆதரவாக நீங்கள் பேச போகிறீர்களா? 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு சம்பவம் ஏற்படுகிறது. அந்த இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்கள் இடத்தில் நடந்துகொண்ட செயலை அல்லாஹ் இப்படிக் கண்டிக்கிறான்.
 
நபியே! மோசடிகாரர்களுக்கு ஆதரவாக நீங்கள் ஒருபோதும் பேசாதீர்கள். அடுத்து எப்படி கேட்கின்றான் தெரியுமா? அந்த மோசடிக்காரர்களுக்கு, இந்த அநியாயக்காரர்களுக்கு சாதகமாக இந்த உலகத்தில் பேசுகிறீர்களே, மறுமையில் இவர்களுக்கு ஆதரவாக எனக்கு முன்னால் யார் பேச வரமுடியும்?
 
அல்லாஹு அக்பர்! எப்படிப்பட்ட அச்சுறுத்தல், கண்டித்தல் என்பதை யோசித்துப் பாருங்கள். நபியே! இந்த உலகத்தில் நீங்கள் பேசிவிடலாம். அநியாயக்காரர்களுக்கு ஆதரவாக, அக்கிரமக்காரர்களுக்கு ஆதரவாக, மோசடிகாரர்களுக்கு ஆதரவாக. நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் யார் அவர்களுக்கு ஆதரவாகப் பேச முடியும்?
 
இந்த நேர்மை என்ற குணம் இன்று நம்மிடத்தில் யாரிடம் காணப்படுகிறது? அறிஞர்களிடத்தில் இருக்கிறதா? பொதுமக்களிடத்தில் இருக்கிறதா? தலைவர்களிடத்தில் இருக்கிறதா? ஏழைகளிடத்தில் இருக்கிறதா? செல்வந்தர்களிடத்தில் இருக்கிறதா? சமுதாயத்தில் எங்கே யாரிடத்திலாவது இருக்கிறதா? கொஞ்சம் வருந்த வேண்டும். நம்மை பற்றி நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டும். 
 
இது ஒரு சாதாரண விஷயமா? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் நான்கு குணங்களை சொல்கிறார்கள்.
 
أَرْبَعٌ مَن كُنَّ فيه كانَ مُنَافِقًا خَالِصًا، ومَن كَانَتْ فيه خَصْلَةٌ منهنَّ كَانَتْ فيه خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حتَّى يَدَعَهَا: إذَا اؤْتُمِنَ خَانَ، وإذَا حَدَّثَ كَذَبَ، وإذَا عَاهَدَ غَدَرَ، وإذَا خَاصَمَ فَجَرَ
 
நேர்மை தவறி மனிதன் நடக்கின்ற நான்கு குணங்களை சொல்கிறார்கள். நேர்மை தவறுகின்ற அந்த நான்கு குணங்கள் யாரிடத்தில் இருக்குமோ, அவர்களை சுத்தமான முனாஃபிக் என்று சொல்கிறார்கள். கலப்படமில்லாத முனாஃபிக் என்று சொல்கிறார்கள். 
 
وإذَا حَدَّثَ كَذَبَ
 
அவன் பேசினால் பொய் பேசுவான். 
 
போய் பேசுவதற்கு கூச்சமே இல்லாத மக்கள் இன்று யார்? எல்லோரும் சர்வசாதாரணமாக கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், பெற்றோர்கள் பிள்ளைகளிடம், பிள்ளைகள் பெற்றோர்களிடம், பணியாளர்கள் எஜமானிடம், எஜமான் பணியாளர்களிடம், ஆட்சியாளர்கள் மக்களிடம், மக்கள் ஆட்சியாளர்களிடம். இப்படி ஒட்டுமொத்தமாக பொய்யின் கலாச்சாரமாகவே மாறிவிட்டது.
 
வியாபாரம், கொடுக்கல், வாங்கல், தொழில்துறை, உறவுமுறைகள் என்றால் பொய்யின் அஸ்திவாரத்தின் மீது தான் அவைகள் அமையப் பெற்ற நிலைகளை நாம் பார்க்கிறோம்.
 
وإذَا عَاهَدَ غَدَرَ
 
வாக்கு கொடுத்தால் கண்டிப்பாக அந்த வாக்கை மீறியே ஆகுவான். வாக்கு சொன்னால் அந்த வாக்கை நிறைவேற்ற மாட்டான்.
 
إذَا اؤْتُمِنَ خَانَ
 
ஒப்பந்தம் செய்து கொண்டால் (அக்ரிமென்ட்) போட்டு கொண்டால் அதற்கு மோசடி செய்வான். அதை மீறுவான்.
 
وإذَا خَاصَمَ فَجَرَ
 
பிரச்சனை என்று வந்துவிட்டால் அசிங்கமாக பேசுவான். கெட்ட வார்த்தைகளை பேசுவான். அத்துமீறி பேசுவான். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 34, 2459.
 
இந்த நான்கு குணங்களுடைய சாராம்சம் என்ன? இந்த நான்கு குணங்களும் நேர்மை தவறுவதால், நீதம் தவறுவதால், ஒரு மனிதனிடத்தில் ஏற்படக்கூடிய கெட்ட குணங்கள்.
 
அன்பானவர்களே! முஸ்லிம்கள் நேர்மையாக இருக்க வேண்டும். நீதமாக இருக்க வேண்டும். எத்தனை வசனங்கள் இதை நமக்கு வலியுறுத்துகின்றன! 
 
கோபம் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, அல்லாஹ்விற்காக கோபம் கொள்வது. இன்னொன்று நஃப்ஸிற்காக கோபம் கொள்வது. 
 
நீங்கள் பட்ட கோபம் அல்லாஹ்விற்காக இருந்தாலும் கூட, அந்த கோபம் உங்கள் எதிரிகளின் விஷயத்தில் அவர்களோடு நீங்கள் நேர்மை தவறி நடக்கத் தூண்டி விட வேண்டாம். நீங்கள் நேர்மையாக தான் நடக்க வேண்டும். நேர்மையாளர்களை நீதமானவர்களை தான் அல்லாஹ் நேசிக்கின்றான். 
 
எவ்வளவு கடுமையான வழிகாட்டல் பாருங்கள்! எவ்வளவு அழுத்தமான எச்சரிக்கை என்பதை பாருங்கள்!
 
இன்று கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்று சொன்னால், பாதிக்கப்பட்டவன் அப்பாவியாக, அவன் அநியாயக்காரனாக ஆகி விடுகிறான். அநியாயக்காரனுக்கு ஆதரவாக பேசுவதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்துவிடுகிறார்கள். இயக்கங்கள் வந்துவிடும். தலைவர்கள் வந்துவிடுவார்கள். ஜமாத்தார்கள் வந்துவிடுவார்கள். செல்வந்தர்கள் வந்துவிடுவார்கள். வசதியானவர்கள் வந்துவிடுவார்கள். 
 
யாருக்கு ஆதரவாக பேசுவதற்கு? பாதிக்கப்பட்டவனுக்கு அல்ல. யாருடைய ஹக்கு பறிபோனதோ அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு அல்ல. யாருக்குத் துன்பம், கெடுதி இழைக்கப்பட்டதோ அவருக்கு ஆதரவாக பேசுவதற்கு அல்ல. அநியாயம் செய்தவனுக்கு ஆதரவாக. அவனின் செல்வத்திற்காக. அவனின் அந்தஸ்திற்காக.
 
அன்பானவர்களே! இது எந்த மார்க்கத்தில் இருக்கிறது? அல்லாஹ்வுடைய தீன் நமக்கு கொடுக்கக்கூடிய அந்த அறிவுரை, வழிகாட்டல்கள் என்ன? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: 
 
انْصُرْ أخاكَ ظالِمًا أوْ مَظْلُومًا. فقالَ رَجُلٌ: يا رَسولَ اللَّهِ، أنْصُرُهُ إذا كانَ مَظْلُومًا، أفَرَأَيْتَ إذا كانَ ظالِمًا، كيفَ أنْصُرُهُ؟ قالَ: تَحْجُزُهُ -أوْ تَمْنَعُهُ- مِنَ الظُّلْمِ؛ فإنَّ ذلكَ نَصْرُهُ
 
உன்னுடைய சகோதரனுக்கு உதவி செய். அவன் அநியாயக்காரனாக இருந்தாலும் சரி. 
 
நபித்தோழர்கள் கேட்டார்கள். இது ஒரு புதுவிளக்கமாக இருக்கிறதே அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு உதவுவது என்றால் எங்களுக்கு புரிகிறது. அநியாயம் செய்தவனுக்கு எப்படி உதவுவது? என்று கேட்டார்கள்.
 
அதற்கு அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்: அவனுடைய கரத்தை பிடித்து தடுத்தல் என்பதாக. 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6952.
 
ஆனால், இன்று அவர்களுக்கு ஆதரவு கொடுக்கப்படுகிறது. உதவி செய்தவன் நடுத்தெருவில். வாங்கியவன் தைரியமாக இருக்கிறான். ஏனென்றால் அவனுக்கு சாதகமாக பேசுவதற்கு கூட்டங்கள் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவன் கொடுத்தவன் அம்போ என்று நடுத்தெருவில் இருக்கிறான். 
 
குறிப்பாக மனிதர்கள் எதில் நேர்மை தவறி, நீதம் தவறி நடப்பார்கள்? பொருளாதார விஷயத்திலே, கொடுக்கல் வாங்கல் விஷயத்திலே, ஆட்சி அதிகார விஷயத்திலே. அதற்கு தான் நம்முடைய அறிஞர்கள் முன்னோர்கள் சொல்வார்கள். தொழுவதற்கு ஒரு சிறிய அளவு ஈமான் இருந்தால் போதும். அவன் தொழுகையாளியாக ஆகிவிடலாம். பொருளாதாரத்தில் நேர்மையானவனாகுவதற்கு அவனுக்கு மிகப்பெரிய அளவில் ஈமான் தேவை.
 
இரண்டாவது, ஆட்சி அதிகாரத்தில் நேர்மை ஆகுவதற்கு இன்னும் அதிகமாக ஈமான் தேவை.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கக் கூடிய ஒரு ஹதீஸ். பல நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். ஒருவரல்ல, இருவரல்ல. அந்த எல்லா அறிவிப்புகளிலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மனிதரைத்தான் முன்னிலைப் படுத்துகிறார்கள். 
 
ஏழு கூட்டங்களை சொல்கிறார்கள். ஹதீஸை பொறுத்தவரை அதனுடைய அறிவிப்புகள் முன்னும் பின்னுமாக வரும் பல அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் போது. ஆனால் இந்த ஹதீஸைப் பொறுத்தவரை பத்து கணக்கான சஹாபாக்கள் அறிவித்தாலும் எல்லாருடைய அறிவிப்பும் ஒரே கருத்தில் இருக்கிறது. ஒரே வாக்கியத்தில் ஆரம்பமாகிறது.
 
ஏழு மக்களுக்கு அல்லாஹு தஆலா அர்ஷுடைய நிழலை கொடுப்பான். அந்த நாளில் அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இருக்காது. அந்த ஏழு மக்களில் முதலாமானவர்கள் யார்?
 
إمام عادل
 
நேர்மையாக நடந்து கொண்ட அதிகாரி, நேர்மையாக நடந்து கொண்ட அரசர், நேர்மையாக நடந்து கொண்ட பொறுப்பாளர். (1)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1423.
 
நேர்மை நீதம் என்பது அப்பேற்ப்பட்ட ஒன்று. நாம் சாதாரணமாக இருக்கும்போது நேர்மை பற்றி மிக எளிதாக பேசி விடலாம். ஆனால், ஒருவரிடத்திலே கைநீட்டி கடன் வாங்கியதற்கு பிறகு, ஒருவரிடத்திலே வியாபார ஒப்பந்தம் செய்த பிறகு, ஒருவரோடு பொருளாதார கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்ட பிறகு, அல்லது நமக்கென்று ஒரு சிறு அதிகாரமோ ஒரு கையிலே, ஒரு அதிகாரம், ஒரு பொறுப்பு, ஒரு நிர்வாகம் வந்ததற்குப் பிறகு அப்போது நீதமாக, நேர்மையாக நடப்பதுதான் மிக முக்கியம்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இன்று நம்முடைய சமுதாயத்தின் நிலையைப் பாருங்கள். குறிப்பாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று. இந்த பொருளாதாரத்தில் நேர்மை தவறி நடப்பது. குறிப்பாக கடன் பெற்றதற்கு பிறகு, வியாபார ஒப்பந்தங்கள் செய்ததற்குப் பிறகு, நேர்மை தவறி நடப்பது மிக மிக இழிவான குணங்கள்.
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வெறுக்கக்கூடிய ஒரு குணம். ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய துஆக்களில் யா அல்லாஹ்! கடனை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அவசியமான தேவைக்கே தவிர என்று துஆ கேட்பார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடன் வாங்கியதே இல்லை. 
 
ஆனால், இன்றோ அனாவசியமான தேவைகளுக்கு அலட்சியமாக கடன் வாங்குவது ஒரு ஃபேஷனாகி விட்டது. செல்வந்தராக இருந்தால் அவர்கள் கடன்காரனாக இருக்க வேண்டும். இன்று சமூகத்தில் மிகப்பெரிய கடன்காரன் யாரென்றால் யார் சமூகத்தில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றானோ அவர் தான். அல்லாஹ் பாதுகாப்பானாக. 
 
எல்லோருக்கும் கடன், வட்டிக் கடனிலிருந்து, பேங்க் கடனிலிருந்து, வியாபாரக் கடனிலிருந்து, தொழிலே கடனிலிருந்து, வீடு வாங்கியதில் கடனிலிருந்து எல்லாவற்றுக்கும் கடன். இப்படிப்பட்ட மோசமான நிலையிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடனிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடினார்கள். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் சுஜூதில், அத்தஹியாத்தில் எங்கு துஆ கேட்டாலும்,
 
اللَّهمَّ إنِّي أعوذُ بكَ مِن المَأثمِ والمَغرمِ
 
யா அல்லாஹ்! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கேட்பார்கள்.
 
இவ்வளவு அதிகமாக அவர்கள் கேட்பதை பார்த்துவிட்டு, ஒரு தோழர் கேட்கிறார். யா ரசூலல்லாஹ்! நீங்கள் இவ்வளவு அதிகமாக கடனிலிருந்து பாதுகாவல் தேடுகின்றீர்களே! 
 
ரசூலுல்லாஹ் உடைய ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு வார்த்தையையும் அந்த சஹாபாக்கள் கவனித்தார்கள்.
 
இன்று, நமது மஜ்லிஸ் போன்று கிடையாது. இமாம் அவர்கள் என்ன பேசினாலும் ஒரு கூட்டம் தூங்கிக்கொண்டே இருக்கும். 
 
ஆனால், சஹாபாக்கள் கவனித்தார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகையை கவனித்தார்கள். ரஸூலுல்லாஹ் என்ன  ஓதினார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்தார்கள். எனவே தான் அந்த தோழர் கேட்டார்.
 
நீங்கள் கேட்கலாம்; எல்லோரும் கேட்கலையே, ஒரு தோழர் தானே கேட்டார்னு.
 
எல்லோரும் அப்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேசி விடமாட்டார்கள். அவர்களது பயம் அபூபக்ர், உமரை பாருங்கள். 
 
ரசூலுல்லாஹ்விடத்தில் பேசவே மாட்டார்கள். அமைதியாக தலைகுனிந்து இருப்பார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். ரஸூலுல்லாஹ்வை சுற்றியுள்ள சஹாபாக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். யாராவது ஒரு கிராமவாசி வரமாட்டாரா? ரசூலுல்லாஹ்விடத்தில் சில கேள்விகளை கேட்க மாட்டாரா? அதன் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாமே என்று.
 
ஹதீஸின் தொடர் : அவர் கேட்டார், யாரசூலல்லாஹ்! கடனிலிருந்து இவ்வளவு அதிகமாக நீங்கள் பாதுகாப்புத் தேடுகின்றீர்களே? என்று.
 
அதற்கு, பதிலாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சகோதரரே! ஒரு மனிதனுக்கு கடன் ஏற்பட்டு விட்டால் அவன் சொல்வான். ஆனால், பொய் சொல்வான். வாக்குக் கொடுப்பான். ஆனால், மாறு செய்து விடுவான். (2)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : நசாயி, எண் : 5487
 
ஒரு மனிதனுக்கு கடன் ஏற்பட்டு விட்டால் அவன் காரணங்கள் சொல்வான். ஆனால் பொய்யான காரணங்களாக இருக்கும். இன்றைக்கு, நாளைக்கு, அடுத்த வாரம், அடுத்த மாதம் என்று வாக்குக் கொடுப்பான். ஆனால் மாறு செய்வான். இங்கே இரண்டு நிலைகளையும் உள்ளடக்கி சொன்னார். 
 
ஒன்று, அது எதார்த்தமாகவும் இருக்கலாம். உண்மையில் நிர்பந்தமாகவும் இருக்கலாம். அல்லது அவருடைய திட்டம் ஏமாற்றுவதாக தள்ளிப்போடுவதாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் சரி. பொய் அங்கு ஏற்பட்டு விடுகின்றது. 
 
நாளை தருகிறேன் என்று சொல்லி விட்டு நாளை தரவில்லை என்றால், அடுத்த வாரம் தருகிறேன் என்று சொல்லி விட்டு தரவில்லை என்றால் அது வாக்கு மோசடி ஆகும்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வளவு பயந்தார்கள். பொருளாதாரத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலியுறுத்தியது மட்டுமல்ல, அப்படித்தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். 
 
யாரிடத்தில் கடன் வாங்கினாலும் அந்த கடனுக்குண்டான அமானிதத்தை கொடுக்காமல் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடன் வாங்க மாட்டார்கள். இன்று நம்மிலே யாரிடத்திலாவது ஏதாவது கொஞ்சம் அடமானமாக ஏதாவது கொடுத்துருங்கன்னு கேட்டா, என்ன என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உடனே இவர் ஏதோ ஜிப்ரீல் மாதிரி, இவர் வாக்குக்கே மாறு செய்யாத மாதிரி, இவர மாதிரி உத்தமர் உலகத்திலேயே இல்லாத மாதிரி, இவருடைய பேச்சு இருக்கும். எழுதிக் கொடுங்கள் என்று கேட்டுவிட்டால் போதும் அவ்வளவுதான். அது என்னமோ மானப் பிரச்சனையாக மாறிவிடுகிறது. 
 
அவர் உண்மையாளராக இருந்திருந்தால் அவர் அப்படி செய்ய மாட்டார். அல்லாஹ்வுடைய கட்டளைக்கு அடி பணிவார். எழுதி தருகிறேன் என்று சொல்லுவார். சாட்சியை வைப்பார். அடமானத்தைக் கொடுப்பார்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடமானம் கொடுத்து அவர்கள் கடன் பெற்று இருக்கிறார்கள். என்ன கடன்? உணவு தானியங்கள். பசிக்காக, பட்டினிக்காக அவர்கள் வாங்கிய அந்த கடன். அந்த நேரத்தில் கூட கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். இன்று உள்ள மக்களுடைய நிலையையும், ரஸூலுல்லாஹ்வுடைய நிலையையும். 
 
ஒருவன் கடன் கொடுக்கிறான். அவனுக்கு தேவைப்படுகிறது. தவணை வருகிறது. வந்து கேட்கிறான். ஒரு முறை வந்து கேட்டான். இல்லை நாளை, நாளை மறுநாள், நாளை மறுநாள் என்று சென்று விட்டான். 
 
இப்படியாக பல தவணைகள் மாறியதற்கு பிறகு அவர் திரும்ப வந்து கேட்கும்போது கொஞ்சம் கோபமாக கேட்டு விடுகிறான் என்றால், அடுத்து இந்த கடன் வாங்கியவருடைய திமிரு எப்படி இருக்கும். யோசித்துப்பாருங்கள்! 
 
தெளிவாக திறந்து சொல்வதென்றால், திமிர் பிடித்தவனாக மாறிவிடுவான். என்ன மிரட்டுகிறாயா? என்ன ஏசுகிறாயா? திட்டுகிறாயா? என்னை பேசி விட்டாய் அல்லவா? உன் கடனை எப்படி வாங்குகிறாய் என்று பார்த்துவிடுவோம். உடனே இவர் ஒரு பஞ்சாயத்திற்கு செல்வார். இவருக்கு வக்காலத்து வாங்குவதற்காக இயக்கங்கள், ஜமாஅத்கள், யாருக்கு கடன் வாங்கிவிட்டு கொடுப்பதற்கு சக்தி இருந்தும் ஏமாற்றுகிறானல்லவா அவனுக்கு வக்காலத்து வாங்குவதற்காக இயக்கங்கள்  ஜமாஅத்துகள்.
 
ஏன் இந்த உம்மத்தின் மீது அல்லாஹ்வுடைய சாபம் இறங்காது? இந்த உம்மத்து ஏன் அல்லாஹ்வுடைய பார்வையிலே மட்டமானதாக, கீழ்தரமானதாக ஆகாது? யோசித்துப் பாருங்கள்! 
 
இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள். ஒரு மனிதரிடத்திலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை அந்த மனிதர் கேட்டு வருகிறார். இது நீளமான ஹதீஸ். இமாம் புகாரி சுருக்கமாக பதிவு செய்கிறார். தவணை இன்னும் வரவில்லை. கவனித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பே அவர் வந்து கேட்கிறார். அந்த நேரத்தில் அந்த மனிதர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசி விடுகிறார்.
 
தடிப்பமான வார்த்தைகளால், கொஞ்சம் அருவருப்பான வார்த்தைகளால் பேசி விடுகிறார். நபித்தோழர்களுக்கு கோபம் வந்தது. தங்களது உயிரை விட மேலாக மதித்து கொண்டு இருக்கக்கூடிய  அல்லாஹ்வுடைய தூதர், அதிலும் மனிதர்களிலே நேர்மையான ஒரு மனிதரைப் பார்த்து தவணை வருவதற்கு முன்னால் கேட்கிறார். அமானிதம் கொடுக்கப்பட்டு அவர் கடன் வாங்கியதற்கு பிறகு இந்த நிலையிலே அவர் கேட்கிறார்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? நமக்கு சப்போர்ட் செய்ய சிலர் இருக்கிறார்கள் என்றால் அவ்வளவுதான். அந்த கடன் கொடுத்தவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, இழிவு படுத்த முடியுமோ எல்லாம் செய்து விரட்டி அடித்து விடுவோம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: அவரை பேச விடுங்கள். அவரைக் கேட்க விடுங்கள்.
 
ஹக்கை கொடுத்தவர் அவர். அவருக்கு பேசுவதற்கு உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள். 
 
இன்று கொஞ்சம் கடினமாக சொல்லிவிட்டால் போதும். அவ்வளவுதான். வாங்கிய கடன் வாங்கியவருக்கு ஹலாலாக ஆகிவிடும். நீ எப்படி கடனை வாங்குறனு சொல்லிட்டு.
 
அன்பானவர்களே! எவ்வளவு மோசமான நிலை பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு பேணுதலாக இருந்தார்கள். இந்த பொருளாதார விஷயத்திலே தங்களுடைய இந்த பேணுதலை கற்றுக்கொடுத்தார்கள். 
 
இந்த பேணுதல், இந்த நேர்மை, இந்த வாக்கு தவறாமை, வாங்கிய கடனை கொடுப்பது, செய்து கொண்ட ஒப்பந்தத்தை மிக சிறப்பாக அழகிய முறையில் நிறைவேற்றுவது, இந்தப் பண்பில் தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமுதாயத்தை உருவாக்கினார்கள்.
 
ஒரு முக்கியமான சம்பவம் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நிகழ்வு. ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தந்தையார் இறந்துவிட்டார். ஆனால், அதிகமான கடனை வைத்துவிட்டு இறந்துவிட்டார். நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள். 
 
ஒரு யஹூதி இடத்திலே அவர்கள் கடன் வாங்கி இருந்தார்கள். சொகுசு வாழ்க்கைக்காக அல்ல. உணவு தேவைக்காக. ஏறக்குறைய 3,915 கிலோ. இன்றைய கால அளவின் படி பேரித்தம் பழத்தை கடனாக வாங்கியிருந்தார். ஒரே சமயத்தில் வாங்கி இருக்க மாட்டார். 
 
சில வருடங்களாக தனக்கு, தனது குடும்பத்தாருக்கு, ஏன்? இவர்கள் தொடர்ந்து ஜிஹாதிற்கு சென்று கொண்டு இருந்ததால், சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லை. அன்சாரிகளை பொறுத்தவரை சொந்தமாக விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த விவசாயத்தை பேணக் கூடிய அளவுக்கு நேரம் இல்லை. எனவே அன்சாரிகள் கடன் வாங்கினார்கள். அதுவும் யூதரிடத்தில் வாங்கிவிட்டார்கள்.
 
பிறகு, இதே நிலையில் போரிலே கொல்லப்பட்டு விட்டார். யூதன் வந்து விட்டான். அந்தக் கடனை மகனிடத்திலே கேட்டு. 
 
இன்று, இப்படியும் மகன்கள் இருக்கிறார்கள். தந்தையுடைய கடனை கேட்கச் சென்றால், தந்தையுடைய சொத்தெல்லாம் தனக்கு வேண்டும். ஆனால் தந்தையின் மீது என்ன பொறுப்பு இருந்ததோ, அதை நிறைவேற்றுவதற்கு நான் தயாராக மாட்டேன். 
 
ஏன், அவருடைய மகன் தான் நான் என்று சொல்வதற்கு கூட அவன் துணியமாட்டான். மறைத்து விடுவான். இன்று எங்கு இப்படி ஜனாஸா தொழுகை நடத்தப்படுகிறது? எங்கே அந்த உறவுகள்? இறந்துவிட்ட செல்வந்தரின் செல்வத்தைக் கொண்டு, அவருடைய சொத்துக்களை கொண்டு, அதை பங்கு பிரித்து அடைய வேண்டும் என்று பேராசை பிடித்த வாரிசுகள்தான் இன்று நமது சமூகத்திலே இருக்கிறார்கள். 
 
தன்னுடைய தந்தை அல்லது தன்னுடைய சகோதரன் இறந்து விட்டானே! அவன் கடனுடைய நிலையில் இருந்தால் ஷஹீதாக இருந்தாலும் சொர்க்கம் செல்ல முடியாது. அவனுடைய கடனை நான் நிறைவேற்றுவேன் என்ற ஈமானிய உணர்வுள்ள இரத்த சொந்தங்கள் எங்கே? யோசித்துப் பாருங்கள்!
 
ஒரு காலம் இருந்தது. நமது முன்னோர்களில் யாராவது இறந்துவிட்டால் ஜனாசா தொழுகைக்கு முன்பாக உறவுகள் வருவார்கள். பிள்ளைகள் என்னுடைய தந்தை, இறந்தவர் தந்தையாக இருந்தால் அல்லது என்னுடைய சகோதரன் யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால், அவர் யாருக்காவது கொடுக்க வேண்டி இருந்தால் நான் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னிடத்தில் சொல்லுங்கள் நான் தருகிறேன் என்று. இப்படியும் ஒரு காலம் இருந்தது.
 
இன்று எப்படி என்றால், யாராவது கேட்டு வந்தால், அப்படியா, எப்போ கொடுத்தீங்க? எழுதி வச்சிருக்கீங்களா? அப்படி அவர் எங்களிடம் ஒன்னும் சொல்லலையே? இந்த மாதிரி நாலு பேரு வந்துக்கிட்டே இருந்தா நாங்க கொடுத்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? என்று சொல்வார்கள்.
 
என்ன அர்த்தம்? சமூகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நபர்களும் பொய்யர்கள் என்று ஆகிவிட்டதா, இல்லையா? முஸ்லிம் சமுதாயமே பொய் சொல்வது என்று ஆகிவிட்டது. ஒரு மனிதர் உனது தந்தை இறந்ததற்கு பிறகு, உனது தந்தை என்னிடம் கடன் வாங்கி இருந்தார் என்று கேட்டு வரும்போது, இப்படி பல பேர் கேட்டு வந்து கொடுத்துகிட்டே இருந்தா, அப்போ எங்களுக்கு என்ன கிடைக்கும்? அப்ப எங்க நிலைமை என்ன ஆகிறது? நாங்க எங்க குடும்பத்தை எப்படி பார்க்கிறது? 
 
இப்ப மட்டும் சாட்சி ஆதாரமெல்லாம் விளக்க வந்துருவோம். அப்போ என்ன அர்த்தம்? இவனும் பொய்யன். சமுதாயத்தையும் இவன் தன் மீது கணக்கு போட்டு பொய்யர்களாகவே விளங்கி வைத்து இருக்கிறான்.
 
ஹதீஸின் தொடர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே அந்த யூதர் வருகிறார். ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த யூதடத்தில் கெஞ்சுகிறார், கொஞ்சம் தவணை கொடு என்பதாக. 
 
அந்த யூதன் சொல்கிறான்: தவணை கொடுக்க முடியாது. ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலுல்லாஹ்விடத்திலே ஓடோடி வருகிறார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நான் இருக்கிறேன். நீங்கள் சிபாரிசு செய்யுங்கள் என்பதாக. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த யூதனை அழைத்துச் செல்கிறார்கள்.  அவருடைய அதாவது ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பேரீத்தம் தோட்டத்திற்கு நீங்கள் செல்லுங்கள். அந்த தோட்டத்தில் எவ்வளவு பேரீத்தம்பழம் இருக்கிறதோ அவ்வளவையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்பதாக சொல்லும்போது, அந்த யூதன் சொல்கிறான்:
 
அதுவெல்லாம் வேண்டாம். எனக்கு நான் கொடுத்த அந்த 60 ஸாஉ (3915 கிலோ) அந்த அளவு உள்ள பேரீத்தம் பழம் எனக்கு வேண்டும். தோட்டத்திலுள்ளதை எல்லாம் நான் அறுவடை செய்து எடுத்துக் கொள்ள முடியாது. எனக்கு தேவை நான் கொடுத்தது. அது எனக்கு கண்டிப்பாக இப்போது வேண்டும் என்று கூறுகிறார்.
 
மதினாவின் முஸ்லிம்களின் ஆட்சியாளரிடத்திலே அதிகாரியிடத்திலே இப்படி ஒருவர் பேச முடியுமா?
 
அன்பானவர்களே! இதுதான் இஸ்லாம். ஆட்சியாளராக இருந்தாலும் நீதம் தவறக் கூடாது. நீதம் தவறக் கூடியவருக்கு ஆதரவாக பேச கூடாது. அந்த சட்டத்தை புரிந்த அந்த யூதன் இவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள். தனது தோழராக இருந்தாலும் அநியாயம் இழைத்தவருக்கு ஆதரவாக பேச மாட்டார்கள் என்பதை புரிந்து வைத்து இருந்தார்.
 
இன்று ஒரு அதிகாரி அல்லது ஒரு ஜமாத்துடைய தலைவர், அவருடைய பிள்ளைகளோ, அல்லது குடும்பத்தார்களில் யாராவது தப்பு செய்து விட்டால் நீதம் கிடைத்துவிடும் என்று முஸ்லிம்களிடத்தில் நீங்கள் ஆதரவு வைக்கின்றீர்களா? 
 
முஸ்லிம்களிடத்தில், அந்த முஸ்லிம்களின் தலைவர், எத்தனை இயக்கங்கள், ஜமாஅத்துகள், அவருடைய குடும்பத்தில் யாராவது, ரொம்ப தூரத்து உறவினராக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களில் யாராவது தப்பு அநியாயம் செய்து விட்டால், அது சம்பந்தமாக அந்த தலைவரிடத்திலே, ஜமாஅத்திடத்திலே நீங்கள் அந்த கேஸை கொண்டு சென்றால் உங்களுக்கு நீதம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? 
 
பார்க்கலாம், வரட்டும், நான் பார்த்துகிறேன், நீ போ என்று சொல்வார்கள். என்ன துணிவு! ஏன் அல்லாஹு தஆலா எதிரிகளை இந்த சமுதாயத்தின் மீது சாட்டுகிறான்? இந்த சமுதாயம் நீதம் தவறியது. இந்த சமுதாயம் நேர்மை தவறியது. அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகி விட்டது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த யூதன் அப்படி சொன்னவுடனே சரி பரவாயில்லை தந்து விடுகிறோம் என்று கூறிவிட்டு ஜாபிரிடத்திலே சொன்னார்கள்:
 
வாருங்கள் உங்கள் தோட்டத்திற்கு செல்வோம். அல்லாஹு அக்பர். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாபிரை அழைத்துக் கொண்டு அப்படியே சுற்றி வருகிறார். அல்லாஹ்விடத்தில் துஆ செய்பவர்களாக. யா அல்லாஹ்! ஜாபிருக்கு அவருடைய தோட்டத்தில் பரக்கத் செய். இப்படி துஆ செய்தவர்களாக தோட்டத்தை அப்படியே ஒரு ரவுண்ட் செய்துவிட்டு, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியேறி விட்டு செல்கிறார்கள். ஜாபிரே! இப்பொழுது இந்த பேரீத்தம் பழங்களை அறுவடை செய்யுங்கள் என்று. ஜாபிர் அந்த பேரீத்தம் பழங்களை அறுவடை செய்கிறார்.
 
அறுவடை செய்துவிட்டு அந்த யூதனை அழைத்து அவருக்குரிய 3915 கிலோ அந்த பேரீத்தம் பழத்தையும் கொடுக்கிறார். அதுபோக அதனுடைய மூன்றில் இரண்டு பகுதி அளவில் ஏறக்குறைய 2500 கிலோ அளவிற்கு பேரீத்தம்பழம் மிச்சமாக இருக்கிறது. 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: ஜாபிரே! இந்த செய்தியை உமருக்கு சொல்லிவிட்டு வாருங்கள் என்பதாக. உமரிடத்திலேயே ஜாபிர் ஓடோடி வருகிறார். 
 
உமர் சொல்கிறார்: எனக்கு தெரியும். உனது தோட்டத்திற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகிறார்கள். துஆ செய்கிறார்கள் என்று சொன்னவுடனே நான் அறிந்துகொண்டேன்; அல்லாஹ் கண்டிப்பாக அதிலே பரக்கத் செய்தான் என்று. (3)
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 3641.
 
அன்பு சகோதரர்களே! நினைத்துப் பாருங்கள். இங்கே பல விஷயங்களை நாம் படிப்பினை பெறவேண்டும். அதிலே ஒன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உமரின் மீது இருந்த பாசம், உமருக்கு அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் இருந்த அந்த நெருக்கம், இந்த நற்செய்தியை, மகிழ்ச்சியான செய்தியை உமருக்கு நீங்கள் சொல்லுங்கள் என்று.
 
இதுதான் ஒரு முஸ்லிமின் பழக்கம். ஒரு முஸ்லிமின் பண்பு. உடனே நீங்கள் கேட்பீங்க; அப்போது அல்லாஹ்வின் பெயரால் இதை எழுதினால் தான் அந்த ஒப்பந்தத்தை பேண வேண்டுமா? பாதுகாக்க வேண்டுமா என்று? 
 
இல்லை. அன்பானவர்களே! ஒரு முஸ்லிம் செய்து கொள்ள கூடிய எல்லா ஒப்பந்தங்களும் அல்லாஹ்வுடைய பெயரால் செய்யக்கூடிய ஒப்பந்தங்கள்தான். பிஸ்மில்லாஹ் சொல்கிறானா இல்லையா? எல்லா ஒப்பந்தங்களும் அல்லாஹ்வின் பெயரால் செய்யக்கூடிய ஒப்பந்தங்கள். 
 
எனவேதான் மனிதர்களிடத்தில் நீங்கள் செய்யக்கூடிய ஒப்பந்தங்களை அல்லாஹு தஆலா தன்னுடைய ஒப்பந்தமாக சொல்கிறான். அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். அந்த ஒப்பந்தத்தை பற்றி அல்லாஹ் விசாரிப்பான். நீங்கள் மனிதர்களிடத்தில் செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தை அல்லாஹு தஆலா அதை நீங்கள் என்னிடத்திலே செய்யக்கூடிய ஒப்பந்தமாக சொல்கிறான்.
 
இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்; நீங்கள் ஒரு வியாபாரம் செய்கிறீர்கள். தொழில் செய்கிறீர்கள். அல்லது திருமண உறவுகள் இப்படி எந்த ஒரு ஒப்பந்தமாக இருக்கட்டும். சொன்ன அடிப்படையிலேயே நடந்துகொள்வது. அதுதான் முஸ்லிம்களின் கலாச்சாரம். 
 
முஸ்லிம்கள் யார்? அவர்கள் சொன்னதை செய்வார்கள். அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். குர்ஆனில் எத்தனை வசனங்களை நீங்கள் பார்க்கலாம். ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள். ஒப்பந்தத்தை மீறாதீர்கள் என்று.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அழகான சம்பவத்தை நமக்கு சொல்லிக் காட்டுகின்றார்கள். அல்லாஹு அக்பர். மிக படிப்பினை மிகுந்த ஒரு சம்பவம். எந்த அளவுக்கு நேர்மையானவர்கள் நமது முன்னோர்களில் இருந்திருக்கிறார்கள் என்று. 
 
ரசூலுல்லாஹ் சொன்ன அந்த சம்பவம் இஸ்ரவேலர்களில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு மனிதர் ஒரு செல்வந்தரிடத்திலே ஆயிரம் தீனார் கடன் வேண்டும் என்று கேட்கிறார். அந்த செல்வந்தர் சொல்கிறார்; சாட்சி கொண்டுவா என்று. 
 
அவர் சொல்கிறார்: நமக்கு சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன். செல்வந்தர் வாயை மூடிட்டு நிற்கிறார். 
 
இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இன்று பெரும்பாலான மோசடிக்காரர்கள் வாக்கு மீறுவார்கள். ஆரம்பத்திலே செய்வதெல்லாம் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்தான். அல்லாஹ்வுடைய திருப்பெயரை கூறியே அந்த திருப்பெயரையே மோசடிக்காக பயன்படுத்துகின்றார்கள். ஏமாற்றுவதற்காக பயன்படுத்துகின்றார்கள். ஒப்பந்தங்களை முறிப்பதற்காக பயன்படுத்துகின்றார்கள்.
 
ஒரு மனுஷன் இன்ஷா அல்லாஹ் சொன்னாலே ஏமாற்ற போறானு அர்த்தம் ஆகிப்போச்சு. எப்படி, எதற்கு, சொல்லப்படவேண்டிய அல்லாஹ்வின் திருப்பெயர்கள், எதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய அல்லாஹ்வின் மகத்தான அந்த பெயர்கள், இன்று எப்படி பயன்படுத்தப்படுகிறது என்று பாருங்கள்! 
 
அவர் சொன்னார்: இங்கே எந்த நல்லவர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம். சாட்சி கொண்டுவா என்று சொன்னபோது அல்லாஹ் சாட்சி. சாட்சிக்கு அல்லாஹ் போதுமானவன் என்று சொல்கிறார். உண்மையான நிய்யத்திலே சொன்னார். 
 
சரி, அப்படியா, இந்த கடனை நீ கொடுக்காமல் இறந்து விட்டால் இந்த கடனுக்கு பொறுப்பேற்பதற்கு யாரும் இருக்கிறார்களா? என்று கேட்கிறார்.
 
அப்போது அந்த மனிதர் சொன்னார்: பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்; சிறந்தவன் என்று அவர் சொன்னார். ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான். உடனே ஆயிரம் தீனாரை கொடுத்து விடுகின்றார். கொடுத்துவிட்டு அந்த மனிதர் அவர் ஒரு வேறு ஊரில் இருந்து வந்திருக்கிறார். அவர் பயணம் செய்து சென்றுவிட்டார். 
 
கடைசியில் என்ன ஒரு தவணைக்கு சொன்னாரோ அந்த தவணை வந்து விடுகிறது. கொடுத்தவர் வேறு ஊருக்காரர். அவருடைய ஊருக்கு செல்வதாக கப்பலிலே, தோணியிலே, பயணம் செய்து தான் செல்ல வேண்டும். அவர் வந்து பார்த்தால் அடுத்த ஊருக்கு செல்வதற்கு உண்டான வாகனமே கிடைக்கவில்லை. கடலிலே பயணிப்பதற்கு உண்டான அந்த தோனியோ, படகோ அந்த காலத்தில் என்ன வசதி இருந்ததோ அது கிடைக்கவில்லை. 
 
தவணை நெருங்கிக் கொண்டே வருகிறது. இவருக்கு பயம் கூடிக்கொண்டே வருகிறது. ஏன்? அல்லாஹ்வுடைய பெயரை சொல்லி கடன் வாங்கியிருக்கிறார். 
 
அன்பானவர்களே! நேர்மையாளர்கள், உத்தமர்கள் அவர்கள் அப்படித்தான். அவர்கள் பயப்படுவார்கள். ஓடி வருவார்கள் அந்த கடனை நிறைவேற்றுவதற்காக. அந்த ஹக்கை கொடுப்பதற்காக. 
 
என்ன செய்தார் தெரியுமா? யா அல்லாஹ்! உன்னுடைய பெயரை சொல்லி கடன் வாங்கினேன். அவர்களிடத்திலே கொடுக்க செல்வதற்கு இப்போது என்னிடம் வாகனம் இல்லை. இந்தக் கடலை தாண்டி என்னால் சாதாரணமாக செல்ல முடியாது என்பதாக ஒரு மரக்கட்டையை எடுத்து, அதனுடைய நடுவிலே பிளந்து, ஆயிரம் தீனார்களை உள்ளே வைத்து, பிறகு அந்த மரக்கட்டையை அந்த ஓட்டையை நல்ல அழுத்தமாக நிரப்பிவிட்டு, எப்படி சீர் செய்ய வேண்டுமோ செய்து விட்டு, யா அல்லாஹ்! உன்னை சாட்சி ஆக்குகிறேன். இதை இந்த ஹக் உடைய இடத்திலே சேர்ப்பாயாக! என்பதாக (தவக்கல்த்து அலல்லாஹ்) அந்த கட்டையை கடலில் தூக்கி வீசுகிறார். 
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அர்ஷுடைய இறைவன்; எண்ணங்களின் சுத்தத்தை பார்க்கிறான். எண்ணங்களில் உள்ள உண்மையை அல்லாஹ் பார்க்கிறான். அந்த கட்டையை அக்கரைக்கு கொண்டு வந்து சேர்க்கிறான். அந்த கடன் கொடுத்த மனிதர் ஏதாவது கடலிலே கட்டைகள், பலகைகள் மிதந்து வருகின்றனவா? எடுத்துக்கொண்டு சென்று அதைக் காய வைத்து அடுப்புக்கு பயன்படுத்தலாம்; நெருப்புக்கு பயன்படுத்தலாம் என்று வருகிறார். 
 
இப்படி ஒரு கட்டை வருகிறது. அந்த கட்டையை எடுத்துக் கொண்டு சென்ற பிறகு பார்த்தால் அதில் ஆயிரம் தீனார்களும் அதிலே ஒரு கடிதமும் இருக்கிறது. இந்த ஆயிரம் தீனார் இன்னாருடைய மகன் இன்னாருக்கு சேரவேண்டியது என்பதாக. அதை அவர் பெற்றுக் கொள்கிறார். 
 
இருந்தாலும் இங்கே கவனியுங்கள். அந்த கடன் வாங்கிய மனிதர் நிம்மதி அடையவில்லை ஒவ்வொரு நாளும் கரைக்கு வருகிறார். ஏதாவது கடலில் கப்பல், தோணி, படகு வருகிறதா அந்த ஊருக்குச் செல்வதற்கு என்பதாக. இன்னொரு ஆயிரம் தீனார்களை வைத்துக்கொண்டு கரைக்கு வந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
 
அதுபோன்று ஒரு நாள் ஒரு படகு வருகிறது. அதில் ஏறிக்கொண்டு அவர் அக்கரைக்கு சென்று, அந்த மனிதரை தேடிச்சென்று, உங்களிடத்திலே நான் வாங்கிய கடன் ஆயிரம் தீனார் இதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 
 
தவணை வருகின்ற நிலையிலே, உங்களிடத்தில் வந்து அந்த கடனை கொடுப்பதற்கு நான் வருவதற்கு முயற்சி செய்தபோது, எனக்கு வாகனம் கிடைக்கவில்லை என்பதாக, தனது பணிவான அந்த காரணத்தை சொன்னபோது, அவர் சொல்கிறார்: நீங்கள் எப்போதாவது வேறு ஒரு தந்திரம் செய்தீர்களா? இப்படி ஒரு காரியத்தை நீங்கள் செய்தீர்களா என்று? 
 
அவர் சொல்கிறார். ஆம் என்று. அந்த மனிதர் சொல்கிறார்: நீ அந்த கட்டையிலே எனக்காக அனுப்பிய அந்த தீனாரை அல்லாஹ் என்னிடத்திலே சேர்த்துவிட்டான். கொண்டு போன அந்த ஆயிரம்  தீனாரை எடுத்துக் கொண்டு அவர் திரும்ப வருகிறார்.
 
அன்பு சகோதரர்களே! இவர்கள் அல்லவா அல்லாஹ்விற்கு உள்ளான அடியார்கள். தஹஜ்ஜத் தொழுவது ஈமானின் அடையாளம் தான். ஆனால், அதே நேரத்திலே அதற்கெல்லாம் மிகப்பெரிய ஒன்று, அடியார்களிடத்திலே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தங்கள், வாக்குகள், அவர்களுடைய பொருளாதார விஷயங்களிலே நேர்மையாக நீதமாக நடந்து கொள்வது.
 
இந்த மார்க்கத்திலே ஏமாற்றுவதற்கோ, ஏமாற்றுவதற்கு துணைபுரிவதற்கோ ஒரு கடுகளவும் அனுமதி இல்லை. நீதம், நீர்மை, வாக்கு, சுத்தம் இதுதான் இந்த மார்க்கத்தினுடைய அஸ்திவாரம். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: எப்படி நீதவான்களாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.
 
ஒரு மனிதர் ஒருவரிடத்திலே ஒரு நிலத்தை வாங்கினார். விற்று விடுகிறார். பிறகு அந்த நிலத்தில் வீடோ தனக்கு தேவையான ஒரு கட்டிடத்தை கட்டுவதற்காக அவர் தோண்டும் போது, அதிலே ஒரு குடம் இருக்கிறது. அது நிறைய தங்க காசுகளாக இருக்கிறது. 
 
இன்றைய மனிதர்களாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? எப்படி இன்றைய காலம்? இன்றைய மனநிலை இப்படித்தான். உழைக்காத, தான் சம்பாதிக்காத, தான் சிரமப்படாத செல்வம், எப்படி வந்தாலும் சரி அதை அடைவதற்கு என்றே மனநிலையில் இருக்கிறார்கள்.
 
இந்த மனிதர் என்ன செய்தார்? அந்த தங்க குடத்தை அந்த தங்க காசுகளோடு அப்படியே எடுத்துக் கொண்டு செல்கிறார். சகோதரரே! உன்னிடத்தில் இருந்து நிலத்தை வாங்கினேன். அதற்கு கீழ் உள்ள இந்தப் புதையலை நான் வாங்கவில்லை. இது உனக்கு தான் சொந்தமானது என்பதாக கொடுக்கின்றார். 
 
அந்த மனிதரைப் பாருங்கள். அவர் எவ்வளவு பெரிய நேர்மையாளர்! நான் பூமியை விற்ற போதே அதற்கு மேலுள்ளதும் கீழுள்ளதும் உனக்கு சொந்தமாகி விட்டது. எனவே நான் இதை பெற மாட்டேன் என்று சொல்கிறார். எப்படிப்பட்ட நீர்மை, தக்வா சகோதரர்களே!
 
 
தொழுகை மட்டுமல்ல தக்வா. நோன்பு மட்டுமல்ல தக்வா. தொழுகை, நோன்பு, ஹஜ், உம்ரா இவற்றின் மூலமாக சமுதாய வாழ்க்கையிலே, குடும்ப வாழ்க்கையிலே, தக்வா வெளிப்பட வேண்டும். நேர்மை வெளிப்பட வேண்டும். தொழுதால் மட்டும் தக்வா முடிந்து விடுகிறது என்பது அல்ல.
 
இங்கே தான் நாமும் அவர்களும் வித்தியாசத்தில் இருக்கிறோம். நாம் என்ன செய்திருக்கிறோம்? தொழுதால் தக்வா. தொழுது விட்டேன் என்னிடத்தில் தக்வா இருக்கிறது. இனிமேல் பேசினால் பொய் பேசிக்கொள்ளலாம். வாக்கு கொடுத்தால் மாறு செய்யலாம். இது இன்றைய மக்களுடைய நிலை. 
 
அவர்கள் எப்படி தொழுகை, இபாதத்துகளின் மூலமாக தக்வாவிற்குண்டான பாடங்களை, படிப்பினை பெற்றார்களோ அதை சமூக வாழ்க்கையிலே குடும்ப வாழ்க்கையிலே, பொதுவாழ்க்கையிலே செயல்படுத்தினார்கள். 
 
இவரும் மறுக்கிறார். அவரும் மறுக்கிறார். அந்த அளவுக்கு இவர்கள் சுத்தமானவர்களாக இருந்திருக்கிறார்கள்.
 
இதை எடுத்துகிட்டு ரெண்டு பேரும் பஞ்சாயத்துக்கு போறாங்க. நம்மளா இருந்தால் நான் ரெண்டு தடவ சொன்னே வேணாம் வேணான்னு. அவர் தான் ரொம்ப சிரமப்படுத்தி வலுக்கட்டாயப்படுத்தினார். சரி வாங்கி வச்சுக்கிட்டேன் என்று சொல்வோம்.
 
இவர் வாங்கமாட்டேன் என்று சொல்கிறார். அவர் நான் எடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். இரண்டு பேரும் சேர்ந்து பஞ்சாயத்துக்கு ஒருத்தர்கிட்ட போறாங்க. இன்னைக்கு பஞ்சாயத்து இப்படி போனா அது வேறு கதையா போயிடும். 
 
அந்த மனிதரை பாருங்கள். அவர் எவ்வளவு நேர்மையானவர். அவர் எவ்வளவு சுத்தமானவர். என்ன சொல்கிறார் தெரியுமா? சரி உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று கேட்கிறார். ஒருவர் சொல்கிறார், எனக்கு ஒரு ஆம்பள பையன் இருக்கிறான். இன்னொருத்தர் சொல்றாரு, எனக்கு ஒரு பொம்பளைப் பிள்ளை இருக்கு என்று.
 
அப்போது அந்த நடுவர் சொல்கிறார்: உன்னுடைய ஆண்மகனை இவருடைய பெண் மகளுக்கு திருமணம் முடித்து வைத்து அந்த இருவருக்கும் இதை அன்பளிப்பாக கொடுத்து விடுங்கள். நீங்கள் விரும்பியதை இதிலிருந்து சதக்காவும் செய்து விடுங்கள் என்று சொன்னார்.
 
அன்பானவர்களே! இது அல்லவா சமூகத்தினுடைய நேர்மை. இதுவல்லவா அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் விரும்பக்கூடிய சமூகம்! 
 
இன்னும் பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அல்லாஹ் நாடினால் இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்ஆவிலே பார்ப்போம்.
 
அன்பு சகோதரர்களே! தொழுகைக்கு, நோன்புக்கு, குர்ஆன் ஓதுவதற்கு இன்னும் பல நல்ல அமல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நாம், அல்லாஹ்வுடைய அடியார்களின் விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறோம்? பொருளாதாரத்தில், சமூக வாழ்க்கையில், நம்முடைய குடும்ப வாழ்க்கையில், நம்முடைய வியாபாரத்தில், தொழில் துறையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? 
 
அதுவும் நாம் சொர்க்கம் செல்வதற்கு உண்டான அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெறுவதற்குண்டான அடிப்படை காரணங்களில் உள்ளவை என்பதை மறந்துவிட வேண்டாம். 
 
தொழுகையைக் கொண்டு அல்லாஹ்வை ஏமாற்றி விடலாம். தஹஜ்ஜத்தைக் கொண்டு அல்லாஹ்வை ஏமாற்றி விடலாம். ஹஜ், உம்ராவைக் கொண்டு அல்லாஹ்வை ஏமாற்றி விடலாம் என்று யாரும் எதிர்பார்க்காதீர்கள். நினைத்துவிடாதீர்கள். 
 
பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக நாளை மறுமையில் அல்லாஹ் சொல்கிறான் நான் வாதிடுவேன் என்பதாக. ஹக் உள்ளவனுக்கு சார்பாக நான் வாதிடுவேன் என்பதாக. 
 
அல்லாஹ் தஆலா நம்முடைய சமுதாயத்திற்கு இத்தகைய நல்ல குணத்தைத் தருவான். அநியாயத்தை விட்டும், நேர்மை தவறுவதை விட்டும், ஒழுக்கம் தவறுவதை விட்டும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக! சிறிய பெரிய கடனிலிருந்தும், எல்லா விதமான மோசடிகளில் இருந்தும், குற்றங்களிலிருந்தும் அல்லாஹ் என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى في ظِلِّهِ يَومَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إمَامٌ عَدْلٌ، وشَابٌّ نَشَأَ في عِبَادَةِ اللَّهِ، ورَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، ورَجُلَانِ تَحَابَّا في اللَّهِ، اجْتَمعا عليه وتَفَرَّقَا عليه، ورَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وجَمَالٍ فَقالَ: إنِّي أَخَافُ اللَّهَ، ورَجُلٌ تَصَدَّقَ بصَدَقَةٍ فأخْفَاهَا حتَّى لا تَعْلَمَ شِمَالُهُ ما تُنْفِقُ يَمِينُهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 1423 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (1423)، ومسلم (1031)
 
குறிப்பு 2)
 
 
 
كان رسولُ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ يُكثِرُ التعوُّذَ من المغرمِ والمأثمِ فقيل له يا رسولَ اللهِ إنك تُكْثِرُ التعوُّذَ من المغرمِ والمأثمِ فقال إنَّ الرجلَ إذا غرم حدَّثَ فكذبَ ووعد فأخلفَ الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح النسائي الصفحة أو الرقم: 5487 | خلاصة حكم المحدث : صحيح
 
குறிப்பு 3)
 
كان ليهوديٍّ على أبي تمرٌ ، فقُتِلَ يومَ أحدٍ ، وترك حديقتيْنِ ، وتمرُ اليهوديِّ يستوعبُ ما في الحديقتيْنِ ، فقال النبيُّ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ : هل لك أن تأخذَ العامَ نصفَه وتُؤخِّرَ نصفَه . فأَبَى اليهودىُّ ، فقال النبيُّ : هل لك أن تأخذَ الجِدادَ فآذني . فآذنتُه ، فجاء هو وأبو بكرٍ ، فجعل يجدُّ ويكالُ من أسفلِ النخلِ ورسولُ اللهِ يدعو بالبركةِ ، حتى وفَّيْنَاهُ جميعَ حقِّهِ ، من أصغرِ الحديقتيْنِ – فيما يحسبُ عمارٌ – ثم أتيتُهم برطبٍ وماءٍ ، فأكلوا وشربوا ، ثم قال : هذا من النعيمِ الذي تسألونَ عنهُ الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 3641 | خلاصة حكم المحدث : إسناده صحيح | التخريج : أخرجه البخاري (2127)، وأحمد (14359) بنحوه، والنسائي (3639) واللفظ له
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/