HOME      Khutba      நீதமும் நேர்மையும் அமர்வு 2-2 | Tamil Bayan - 528   
 

நீதமும் நேர்மையும் அமர்வு 2-2 | Tamil Bayan - 528

           

நீதமும் நேர்மையும் அமர்வு 2-2 | Tamil Bayan - 528


நீதமும் நேர்மையும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நீதமும் நேர்மையும் (அமர்வு 2-2)
 
வரிசை : 528
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 29-06-2018 | 15-10-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உரையின் ஆரம்பத்தில் எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை கடைப்பிடித்து வாழுமாறு உபதேசித்தவனாக, அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை மீறாமல், அல்லாஹ் ஹலாலாக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ஹராமான எல்லா காரியங்களில் இருந்தும், பொது வாழ்க்கையிலும், தனி வாழ்க்கையிலும், தங்களை பேணி வாழுமாறும் எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து, அல்லாஹ்விற்கு விருப்பமான, அவன் பொருத்தத்தை தேடக்கூடிய நல்லடியார்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! 
 
அல்லாஹ்வுடன் நாம் செய்துகொண்ட ஒப்பந்தத்திலும், அல்லாஹ்வுடைய அடியார்களோடு நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்திலும் நீதமானவர்களாக, நேர்மையானவர்களாக, அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளை பேணி நடக்கக் கூடியவர்களாக, அல்லாஹ்வின் விஷயத்திலும் வரம்பு மீறாதவர்களாக, அல்லாஹ்வின் அடியார்களின் விஷயத்திலும் வரம்பு மீறாதவர்களாக வாழ்வதற்கு அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக! ஆமீன்.
 
அன்பானவர்களே! நீதம் நேர்மை என்ற முக்கியமான அடிப்படையின் கீழே சில விஷயங்களை சென்ற உரையிலே நினைவூட்டினோம். அதனுடைய தொடரை தான் இன்ஷா அல்லாஹ் இந்த உரையில் அறிய இருக்கிறோம். 
 
இந்த நீதம் என்பது ஒரு காஃபிரிடமிருந்தால் கூட அந்த காஃபிருக்கு அல்லாஹு தஆலா அதன் காரணத்தினால் உதவி செய்வான். இந்த உலகத்திலே அநியாயம், வாக்கு மீறுவது, வஞ்சகம் செய்வது, துரோகம் செய்வது, ஏமாற்றுவது போன்றவை ஒரு முஸ்லிமிடம் இருந்தாலும் அல்லாஹு தஆலா இம்மையிலும் மறுமையிலும் அந்த முஸ்லிமை தண்டிப்பான்.
 
வாக்கை பேணுவது, நீதமாக நடப்பது, ஒப்பந்தங்களின் அடிப்படையில் நீதமாக நேர்மையாக நடப்பது என்பது அல்லாஹ்வுக்கு பிரியமான குணம் ஆகும். அல்லாஹ் நீதமானவன், நீதத்தை தான் விரும்புகின்றான். அல்லாஹ் நேர்மையானவன். நேர்மையை தான் விரும்புகின்றான்.
 
அன்பானவர்களே! எந்த இடத்தில் அல்லாஹு தஆலா தொழுகையை பேணுங்கள் என்று சொல்கின்றானோ, எந்த இடத்தில் ஜகாத்தை பேணுங்கள் என்று சொல்கிறானோ, எந்த இடத்தில் உங்கள் கற்பொழுக்கத்தை பேணுங்கள் என்று சொல்கின்றானோ அதனுடைய தொடரில் அல்லாஹு தஆலா வியாபாரத்தில், தொழில்துறைகளில், நீங்கள் உங்களது பங்காளிகளோடு நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களை உடன்படிக்கைகளை பேணுங்கள் என்று சொல்கிறான்.
 
சூரத்துல் மஆரிஜ் 70 வது அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். முஃமின்களுடைய அடிப்படை குணத்தை அல்லாஹு தஆலா விவரித்து வரும்போது தொழுகையை சொல்கிறான். ஜகாத்தை சொல்கிறான். பிறகு மறுமையின் பயத்தை சொல்கிறான். பிறகு கற்பொழுக்கத்தை அல்லாஹ் சொல்கிறான். அதன் பிறகு அல்லாஹ் சொல்கிறான். அவர்கள் ஒப்பந்தங்களை, வாக்குகளை பேணுவார்கள் என்று.
 
இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் எழுதும்போது சொல்கிறார்கள்: முஃமீன்கள் எப்படிப்பட்டவர்கள்? அல்லாஹ்வுடன் அவர்கள் செய்த ஒப்பந்தங்களையும் பேணுவார்கள். வியாபாரங்களில், தொழில்துறைகளில், கொடுக்கல் வாங்கல் பேச்சுவார்த்தைகளில் அல்லாஹ்வின் அடியார்களோடு எது இருக்கிறதோ அதில் அவர்கள் கொடுத்த வாக்குகளை பேணுவார்கள். வீணாக்க மாட்டார்கள். அதை அவர்கள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். 
 
நானும், எனது சகோதரனும், எனது பங்காளியும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் நான் சரியாக இருக்கிறேனா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அதில் அலட்சியம் இருக்காது. கவனக் குறைவு இருக்காது.
 
இதுதான் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா முஸ்லிம்களுக்கு வரையறுத்து சொல்லிக்காட்டிய மிக அழகிய பண்பு. ஹதீஸ்கள், ஆயத்துக்கள், நம் முன்னோர்களின் வரலாறுகளை நாம் படித்துப் பார்க்கும்போது நேர்மை, நீதம் என்ற இந்த குணம் அல்லாஹ்விற்கு எவ்வளவு விருப்பமானதாக இருந்தது என்பதை அறியலாம். 
 
மேலும், தனது இக்கட்டான தருணங்களில், துன்பமான தருணங்களில் நேர்மையை கூறி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர்கள் தொழுகையாளிகளாக இருந்தார்கள். நோன்பாளிகளாக இருந்தார்கள். இன்னும் பல எத்தனையோ நன்மைகளை செய்தார்கள். ஆனால், தன்னிடம் இருந்த நேர்மை என்ற இந்த பண்பை சொல்லி துஆ கேட்க, அல்லாஹ் அவர்களுடைய சிரமங்களை போக்கினான்.
 
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். மூன்று நபர்கள் காட்டு வழியாக செல்லும் போது மழை பெய்ய ஆரம்பித்த உடன் ஒரு குகையில் ஒதுங்குகிறார்கள். மழை அதிகமாகி இடி, மின்னல், காற்று அதிலே மேலே இருந்த ஒரு பார்வை உருண்டு விழுந்து அந்த குகையின் வாசலை அடைத்து விட்டது. அந்த நேரத்தில் மூன்று முஸ்லிம்களும் பேசிக்கொள்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் இருந்து நம்மைப் பாதுகாக்க கூடியது அல்லாஹ்வின் மீது சத்தியமாக நேர்மையை தவிர வேறு எதுவும் இல்லை என்று. 
 
எனவே, யார் ஒருவர் தான் எந்த தருணத்தில் நேர்மையாக நடந்து கொண்டோம் என்று நினைக்கிறாரோ, அந்த நேர்மையான தருணத்தை சொல்லி அல்லாஹ்விடம் துஆ கேட்கட்டும். இந்த நீண்ட சம்பவத்தில், ஒருவர் அவரிடம் நிறைய பணியாட்கள் இருந்தார்கள். அவர்களிடம் வேலை வாங்குவார். கூலி கொடுப்பார். 
 
இப்படியாக இருக்கும்போது ஒரு மாலை நேரத்தில் ஒரே ஒரு கூலியாளி தனது கூலி வாங்காமல் சென்று விடுகிறார். அந்த முதலாளி அந்த கூலியை வைத்து முதலீடு செய்து முதலில் மாடு வாங்குகிறார். அது பெருகி பெருகி பிறகு ஒட்டகம், பிறகு ஆடு, இப்படியாக பெருக, பெருக அதன் மூலம் நிறைய அடிமைகளை வாங்கிவிடுகிறார்.
 
பல காலம் கழித்து அந்த கூலியாளி வருகிறார். வந்து, சகோதரரே! எனக்குள்ள கூலியை நிறைவேற்றுங்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த முதலாளி இதோ உங்கள் கண்முன் தெரிகிறதே ஆடுகள், மாடுகள் அடிமைகள் எல்லாம் உங்களுடையது தான் என்கிறார். 
 
அதற்கு அவர், பரிகாசம் செய்யாதே அல்லாஹ்வுடைய அடியாரே! எனது கூலியோ சில படி அரிசி தானியம் தான். அதை எனக்கு மரியாதையாக கொடுத்து விடு. 
 
அந்த சகோதரர் சொல்கிறார்: சகோதரனே! உனது கூலியை வைத்து, அதை விற்று அதில் இருந்து வாங்கிய பொருள்களினால் ஏற்பட்ட பரக்கத்தான். இவையெல்லாம் உன்னுடைய கூலியில் இருந்து பெருகியது தான் என்று சொன்னவுடன், அந்த கூலியாள் அந்த அடிமைகளில், ஒட்டகங்களில், ஆடுகளில் மாடுகளில் ஒன்றைக்கூட விடாமல் அனைத்தையும் வாரி கொண்டு சென்றுவிட்டான். நான் அவரை கடிந்து கொள்ளவில்லை. 
 
யா அல்லாஹ்! அப்படியே கொடுத்து அனுப்பி விட்டேன். இதை நான் உனக்காக செய்திருந்தால், மறுமையை பயந்து செய்திருந்தால் எங்களுடைய கஷ்டத்தில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக, எங்கள் ரப்பே! என்று துஆ கேட்கிறார்.
 
உடனே அந்தப் பெரும் பாறை அந்த வாசலில் இருந்து மூன்றில் ஒரு பங்கு அகன்று விட்டது. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2272. 
 
இது நேர்மை அன்பானவர்களே! அவர் நாடியிருந்தால் அதற்கு பதிலாக ஒரு ஒட்டகம் ஒரு ஆடு கொடுத்திருக்கலாம். அந்த கூலியாளுக்கு என்ன தெரியும்? ஒரு படி அரிசி கொடுத்து இருக்கலாம். ஆனால், இதுதான் நேர்மை.
 
இருவர் வியாபாரம் செய்கிறார்கள். முதல் போடுகிறார்கள் என்றால், அதிலிருந்து அந்த நிறுவனத்தின் பெயரில் இருந்து, என்ன லாபம் வருகிறதோ எல்லாம் இருவருக்கும் சமமாக சொந்தமானது. 
 
ஆனால், இன்று சில காலம் கழித்த உடன், எனது அறிவை பயன்படுத்தி நான் உழைப்பு செய்தேன். நான் தான் உருவாக்கினேன். எனக்கு தான் யோசனை வந்தது என்பதாக கெட்ட எண்ணங்கள் உருவாகி, யாரை சம பங்காளியாக சேர்த்தானோ அவனுக்கு மோசடி செய்கிறான். இல்லை கழட்டி விடுகிறான்.
 
ஆனால், அந்த முதலாளியின் நேர்மையை பாருங்கள்! அதற்கு தான் அல்லாஹ் உதவி செய்கிறான். இந்த நேர்மை நபிமார்களிடம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். ஒரு நபி கூட சிறிதளவு நேர்மை தவற கூடாது.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
مَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
 
மோசடி செய்வது ஒரு நபிக்கு அழகல்ல. எவர் மோசடி செய்வாரோ அவர், தான் செய்த மோசடியுடன் மறுமை நாளில் வருவார். பிறகு, ஒவ்வோர் ஆன்மாவு(க்கு)ம் அது செய்ததை முழுமையாக (கணக்கிட்டு கூலி) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 161)
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: இப்படி ஒரு நிலையில் என்னை ஆக்கி விடாதீர்கள். நாளை மறுமையில் வரும்போது ஒருவன் தனது முதுகிலே ஒட்டகத்தை சுமந்திருப்பார். ஒரு மாட்டை, ஒரு ஆட்டை அல்லது ஒரு பொருளை இந்த உலகத்தில் யார் எதில் மோசடி செய்தானோ அந்த மோசடியோடு அவன் மறுமையில் வருவான். 
 
إنَّ الغادِرَ يَنْصِبُ اللَّهُ له لِواءً يَومَ القِيامَةِ، فيُقالُ: ألا هذِه غَدْرَةُ فُلانٍ
 
மோசடி செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கொடியை நிறுத்தி விடுவான். இவர் இன்னாருக்கு செய்த மோசடி என்பதாக. யார் யாருக்கு அவர் மோசடி செய்தாரோ, இவர் இன்னாருக்கு செய்தார் என்று எழுதப்பட்டு அந்தக் கொடி அவருக்கு முன்னால் நிறுத்தப்பட்டுவிடும்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 7111, முஸ்லிம் 1735.
 
ஆகவேதான், நம்முடைய இறைத்தூதர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், சஹாபாக்கள் பயந்தார்கள்; மோசடியை நினைத்து நேர்மை தவறி நடப்பதை நினைத்து, அல்லாஹ்வுடைய அடியார்களின் ஹக்குகளில் வரம்பு மீறுவதை நினைத்து பயந்தார்கள்.
 
கடன் விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நாம் முன்பு பார்த்தோம். 
 
இமாம் புகாரி (ரஹ்) அறிவிக்கக்கூடிய ஹதீஸ். ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹது மலையை பார்க்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதருக்கு விருப்பமான மலை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: 
 
- لَوْ كانَ لي مِثْلُ أُحُدٍ ذَهَبًا ما يَسُرُّنِي أنْ لا يَمُرَّ عَلَيَّ ثَلاثٌ، وعِندِي منه شيءٌ إلَّا شيءٌ أُرْصِدُهُ لِدَيْنٍ
 
இந்த உஹது மலை முழுவதும் தங்கமாக மாறி எனக்கு வந்து விட்டாலும், மூன்று நாட்களுக்கு மேல் நான் அதை என்னிடம் வைத்துக்கொள்ள மாட்டேன்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2389.
 
ரசூலுல்லாஹ்வின் ஈகை குணத்தை பாருங்கள். அந்த விசாலமான உள்ளத்தை பாருங்கள். 
 
யார் நஃப்ஸுடைய கஞ்சத்தனத்திலிருந்து கருமித் தனத்திலிருந்து பாதுகாப்பட்டார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 59 : 9)
 
அத்தகைய கருமித்தனத்தில் இருந்து பாதுகாக்கப் பட்டவர்கள்தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்கள். தனக்கு இல்லை என்றாலும் பிறருக்கு கொடுக்கக் கூடியவர்கள். அந்தக் குணத்தில் தான் தங்களுடைய தோழர்களையும் பயிற்றுவித்தார்கள். கற்றுக்கொடுத்தார்கள். உருவாக்கினார்கள்.
 
மேற்கூறிய ஹதீஸில் மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ஆனால், எனக்கு கடன் இருந்தால் அந்த கடனை நிறைவேற்றுவதற்கு நான் அதிலிருந்து வைத்துக்கொள்வேன். 
 
அவர்களுடைய அழகிய வார்த்தையை பாருங்கள். உஹது மலையே எனக்கு தங்கமாக மாறி விட்டாலும் அதைக் கொண்டு எனது வாழ்க்கையை மேம்படுத்துவேன் என்று சொல்லவில்லை. அனைத்தையும் அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்வேன். ஏழை எளியவர்களுக்கு கொடுப்பேன். அதிலிருந்து எதையும் மீதமாக வைத்துக் கொள்ள மாட்டேன். 
 
அதாவது, அடுத்த வாரத்துக்கு தர்மம் செய்யலாம் என்று கூட வைக்க மாட்டேன். மூன்று நாளைக்குள் தர்மம் செய்ய வேண்டியதை தர்மம் செய்து அனைத்தையும் காலி செய்து விடுவேன். அப்படி அதிலிருந்து சிலவற்றை நான் எடுத்து வைக்கிறேன் என்றால் அது கடனை அடைப்பதற்காக தான் இருக்கும்.
 
சகோதரர்களே! இந்த குணம் நம்மிடத்தில் வரவேண்டும். நமக்கு எப்போது வசதி வருகிறதோ அதை கொண்டு யாருடைய ஹக்கு நம்மீது இருக்கிறதோ அதை முதலில் கொடுக்கவேண்டும். அல்லாஹ் பரக்கத் செய்வான். எவ்வளவு அழகான வழிகாட்டுதலை சொன்னார்கள்!
 
இன்று நம் முஸ்லிம் சமூகத்தை பார்த்தால், நம்முடைய உறவுகளை கொடுக்கல் வாங்கலை பார்த்தால், நமக்கும் இஸ்லாமிய பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று எண்ண வைக்கிறது.
 
நம்முடைய ஹக்காக இருந்தால் எப்படியாவது வாங்கி விடலாம் என்று பார்க்கிறோம். பிறருடைய ஹக்காக இருந்தால் எப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமோ, தள்ளிப்போட முடியுமோ, பொய் காரணங்களை சொல்ல முடியுமோ அவ்வளவு காரணங்களைச் சொல்லி விடுகிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
நமக்கு வரவேண்டிய ஹக்காக இருந்தால் ஞாபகம் இருக்கும். நாம் கொடுக்க வேண்டியதாக இருந்தால் சர்வ சாதரணமாக சொல்கிறோம்; மறந்துவிட்டேன், ஞாபகப்படுத்தி இருக்கலாமே என்று. நமக்குரியது சிறு நாணயமாக இருந்தாலும் கூட அதை ஞாபகம் வைத்துக் கொள்கிறோம். பிறருக்கு கொடுக்க வேண்டியது பல ஆயிரமாக இருந்தால் கூட மறந்து விடுகிறோம்.
 
அன்பானவர்களே! இப்படிப்பட்ட குணத்தை அல்லாஹ்வின் தூதர் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை. அல்லாஹ்வுடைய தூதர் இஸ்லாமிய அடிப்படையாகவே சொன்னார்கள். அமல்கள் எண்ணங்களைக் கொண்டு. எண்ணங்கள் சுத்தமாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி இருக்கும். எண்ணங்களில் கோளாறுகள் இருந்தாலும் மாட்டிக் கொள்வான். ஆகிரத்தில் மாட்டியே ஆக வேண்டும்.
 
உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கொடுக்கல் வாங்கல் விஷயத்தில், செல்வத்தின் விஷயத்தில், பதவி வரும்போது, புகழ் வரும் போது, நம்மை தேடி மக்கள் சேரும் போது, மிக அதிகமாக அல்லாஹ்வை பயப்பட வேண்டும். 
 
ஆகவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பழக்கம்  வாழ்க்கையில் ஒரு நாள் கூட தான் தனியாக முன் சென்று, தனக்கு பின்னால் தோழர்களை வரும்படி செய்ததே இல்லை. 
 
எல்லா தோழர்களையும் அவர்கள் முன்னால் விட்டுவிட்டு கடைசியிலே தலைகுனிந்தவர்களாக அவர்களுடைய பணியாளரை போல செல்வார்கள். அவர்கள் விட்டுச் சென்ற சாமான்களை எடுத்துக் கொள்வார்கள். அவர்களில் யாராவது சுமக்க முடியாமல் இருந்தால் அந்த சுமையை சுமந்து கொள்வார்கள். 
 
திர்மிதி எண்: 3637 அபூதாவுத் எண்: 2269 தாரமி எண்: 46 முஸ்னத் அஹமது எண்: 14713
 
எப்படிப்பட்ட ஒரு பணிவு, அடக்கம்! எப்படிப்பட்ட ஒரு சிறந்த குணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றிருக்கிறார்கள்! 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: 
 
مَن أخَذَ أمْوالَ النَّاسِ يُرِيدُ أداءَها أدَّى اللَّهُ عنْه، ومَن أخَذَ يُرِيدُ إتْلافَها أتْلَفَهُ اللَّهُ
 
நீங்கள் ஒருவரிடம் ஒரு பொருளை செல்வத்தை வாங்குகிறீர்கள். அப்படி வாங்கும்போது நான் வாங்கிய படி இந்த பொருளை இவருக்கு கொடுத்து விட வேண்டும். இவருக்கு இதை நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்கினால், அல்லாஹ் இவர் சார்பாக அதை நிறைவேற்றுவான். யார் தான் அதை மறுத்து நாசமாக்கி தானே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வாங்குகிறார்களோ அல்லாஹ் அவரை நாசமாக்கி விடுவான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2387.
 
அன்பானவர்களே! சிலர் இன்றைய கால வியாபாரத்தில் எப்படி என்று சொன்னால், பிறரை யார் எந்த அளவுக்கு ஏமாற்றுவார்களோ, அவர்கள் அந்த அளவுக்கு திறமைசாலிகள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். 
 
சில முக்கிய பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் கடைகளில் சாமான்களை வாங்கி விடுவார்கள். காசு கொடுக்க மாட்டார்கள். இந்த சாதாரண மனிதன் எப்படி அதை அவரிடம் கேட்பார்? இப்படியெல்லாம் ஏமாற்றி அதை அவர்கள் திறமையாக நினைக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம். நாங்கள் வாழ்ந்து விடுவோம், தங்களுடைய செல்வம் பெருகும் என்று.
 
நம்முடைய வாழ்க்கையில் பார்த்திருக்கலாம்; அனுபவப்பட்டிருக்கலாம்ல்; எத்தனையோ கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் பிச்சை எடுப்பவர்களாக மாற்றியது. பெரிய செல்வந்தர்களாக வாழ்ந்தவர்களின் பிள்ளைகள், தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு ஒரு வேளை சோறு கூட பிறரிடத்தில் கையேந்தக்கூடிய அளவிற்கு தன்னுடைய குடும்பத்தார் வசித்து வந்த வீடு, சொத்து சுகம் அனைத்தையும் விற்று நடுத்தெருவிற்கு வந்த நிலைகளை உங்களது வாழ்க்கையில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
 
அன்பானவர்களே! அல்லாஹு தஆலா நீதமானவன். அநியாயக்காரர்கள் செய்கின்ற செயலை அவன் கண்டு கொள்ளாமல் இருக்கிறான் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். 
 
இதுதான் நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய தவறு. நாம் என்ன நினைக்கிறோம்? நாம் செய்வது தப்பாக இருந்தால் அதற்கு உடனே எனக்கு தண்டனை கிடைத்திருக்கும். நான் இப்படி வளர்ந்து இருப்பேனா? எனக்கு இப்படிப்பட்ட வசதிகள் ஏற்பட்டிருக்குமா? என்பதாக அல்லாஹ்வுடைய நீதியிலே தப்புக்கணக்கு போடுகிறார்கள். 
 
அல்லாஹ் உன்னை உடனடியாக தண்டிக்கவில்லை என்றால் ஏதோ ஒரு நன்மையினால் உனக்கு அவகாசம் கொடுக்கின்றான்; நீ திருந்துவதற்காக, அந்த ஹக்கை உரியவரிடத்தில் சேர்ப்பதற்காக, அல்லாஹ் உனக்கு ஒரு கால தவணை கொடுக்கின்றான். அந்த தவணையை நீ கடக்கும் போது, அந்த அவகாசத்தையும் நீ மீறும்போது, பிறகு அல்லாஹ்வினுடைய பிடி மிக பயங்கரமானது. மிகக் கடுமையானது.
 
அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு அழகிய வழிகாட்டலை சொன்னார்கள். 
 
الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ
 
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரனாக இருக்க வேண்டும். அவனுக்கு துரோகம் செய்யக்கூடாது.
 
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்று கூறிவிட்டு, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்யக்கூடாத, நடந்து கொள்ளக் கூடாத குணம் துரோகம் செய்வது. 
 
ஒரு முஸ்லிம் துரோகம் செய்யமாட்டான். அநியாயம் செய்யமாட்டான். அக்கிரமம் செய்ய மாட்டான். பிறருடைய ஹக்கில் வரம்பு மீற மாட்டான். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.
 
அன்பானவர்களே! இதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். நம்முடைய ஹக்கிலே பெருந்தன்மையோடு மன்னிப்பவர்களாக இருக்க வேண்டும். அடியார்களுடைய ஹக்கிலே அல்லாஹ்வை பயந்து, அதை உரியவர்களிடத்தில் உரிய நேரத்தில் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
 
சென்ற உரையில் பார்த்தோம். இஸ்ரவேலர்களுடைய ஒரு மனிதன் கடன் வாங்கி விட்டார். கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், கடலில் பயணம் செய்து கொடுப்பதற்கு வாகன வசதி ஒன்றும் இல்லை. ஒரு பலகை எடுத்தார். தோண்டினார். அதற்குள் அந்த நாணயத்தை வைத்து மூடினார். அல்லாஹ் இதை உரியவரிடத்தில் கொண்டு போய் சேர்ப்பாயாக! என்னை மன்னித்துவிடு! என்று அந்த கடலிலே அதை தூக்கி எறிந்தார். அல்லாஹ் அதைக் கொண்டுபோய் சேர்த்தான்.
 
புகாரி பாடம் கஃப்லா,  முஸ்னத் அஹமது எண்: 8232.
 
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: யார்  ஒருவர் ஒருவருடைய பொருளையோ,  செல்வத்தையோ கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குவானோ அல்லாஹ் அதை நிறைவேற்றுவான் என்று. 
 
அதனால் அந்த நாணயம் அவருக்கு போய் சேருகிறது. இருந்தும் இவர் சும்மா இருக்கவில்லை. அவரிடத்தில் சென்று சேர்ந்ததா இல்லையா என்று மனதில் பதறிக் கொண்டே இருந்தார். பிறகு வாகனம் கிடைத்த உடன் பயணம் சென்று அந்த நபரிடத்தில் சென்று ஆயிரம் தினார் வாங்கினேனே வைத்துக்கொள் என்று சொன்னபோது, இப்படி இப்படி நீ செய்தாயா? அந்த நாணயத்தை அல்லாஹ் என்னிடம் சேர்த்து விட்டான் என்று சொல்கிறார்.
 
ஆகவே, இதுதான் அல்லாஹ்வை, மறுமையை நம்பிக்கை கொண்ட முஃமீன்களுடைய பண்பாக இருக்கும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ، مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ»
 
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரனாக இருக்கிறான். அந்த முஸ்லிம் அவருக்கு அநியாயம், அக்கிரமம், துரோகம் செய்யமாட்டான். அவரை எதிரியிடத்தில் அவன் ஒப்படைத்து விட மாட்டான். யார் தன்னுடைய சகோதரனின் தேவையிலே அவருடைய தேவையை நிறைவேற்றுவதற்காக இருப்பாரோ, இவருடைய தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் இருப்பான்.
 
ஒரு முஸ்லிமுடைய சிரமத்தை, கஷ்டத்தை நீக்கினால் மறுமையின் கஷ்டங்களிலிருந்து, துன்பங்களிலிருந்து இந்த முஸ்லிமுக்கு நீக்குவான். யார் ஒரு முஸ்லிமுடைய பாவத்தை மறைக்கிறாரோ மறுமை நாளில் அவருடைய பாவத்தை அல்லாஹ் மறைத்து விடுவான்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2442.
 
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! முஸ்லிம்கள் பேண வேண்டிய ஒழுக்கம் இது. இதுதான் நம் அடிப்படை பண்பு. இன்று சில பேருடைய நிலை என்னவென்று சொன்னால், பொய்யான சாட்சிகளை அத்தாட்சிகளை உருவாக்கி, அதன் மூலமாக அல்லது மயக்க கூடிய வார்த்தை ஜாலங்களால் பேசி, இன்னொருவருடைய சொத்தை அபகரித்துக் கொள்கிறார்கள். 
 
இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? பிரச்சனை வந்தது, நாங்கள் பேசினோம், அவர்கள் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள். உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறையில்  இருக்கும் போது அறையின் வெளியில் இரண்டு பேர் வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள். ஒரு சாதாரண அப்பாவி மனிதர், அவருக்கு அதிகமாக பேச தெரியாது. ஒரு விஷயத்தை விளக்க தெரியாது. ஒரு பொருள் விஷயமாக வரும்பொழுது. இன்னொரு மனிதர் வாதத் திறமை உள்ளவராக இருந்தார். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னால் பேசி அந்த பொருளை வாங்கிக் கொண்டார். உண்மையில் அந்த பொருளோ சாதாரண மனிதருக்கு உரியது. இப்படியாக இருவரும் தர்க்கம் செய்த பொழுதிலே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து ஒரு வார்த்தை சொன்னார்கள்:
 
إنَّما أنَا بَشَرٌ، وإنَّه يَأْتِينِي الخَصْمُ، فَلَعَلَّ بَعْضًا أنْ يَكونَ أبْلَغَ مِن بَعْضٍ، أقْضِي له بذلكَ وأَحْسِبُ أنَّه صَادِقٌ، فمَن قَضَيْتُ له بحَقِّ مُسْلِمٍ فإنَّما هي قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَأْخُذْهَا أوْ لِيَدَعْهَا
 
நான் ஒரு மனிதன் தான். வழக்காடக்கூடியவர்கள் பிரச்சனையாளர்கள் என்னிடத்தில் வருகிறார்கள். அவர்களில் சிலர் சிலரை விட வழக்காடுவதிலே மிகத் தெளிவாக, மிக அழகிய முறையில் தெளிவாக பேசக்கூடியவராக இருக்கலாம். 
 
எனவே, அவர்களுடைய பேச்சில் மயங்கி, அவர் உண்மை சொல்கிறார் என்று நான் எண்ணி விடலாம். அவருக்கு அந்த பொருளை நான் தீர்ப்பளித்துவிடலாம். அல்லாஹ்வுடைய தூதராக நான் தீர்ப்பளித்து விட்டதால், அது அவருக்கு ஹலாலாகி விட்டதாக எண்ணி விட வேண்டாம். 
 
யாருக்கு ஒரு முஸ்லிமுடைய ஹக்கை நான் தீர்ப்பிலே கொடுத்துவிட்டேனோ அவர் ஹலாலாக நினைக்க வேண்டாம். அது நரகத்தினுடைய ஒரு துண்டு. அவர் விரும்பினால் அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும். இல்லை என்றால் விட்டுச் செல்லட்டும்.
 
அறிவிப்பாளர் : உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 7185.
 
குறிப்பாக சகோதரர்களே! வியாபாரத்தில் கூட்டாக இருக்கக்கூடிய பங்காளிகள், குடும்ப பங்காளிகளாக இருக்கக்கூடிய அண்ணன் தம்பி, சொத்துக்களில் பங்காளிகளாக இருக்கக் கூடியவர்கள், இவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டு நடுவர் இடத்தில் செல்கிறார்கள். 
 
அதிலே அப்பாவியாக ஒரு மனிதர் விஷயத்தை எடுத்துச் சொல்ல முடியாது. இன்னொருவர், திறமை உள்ளவராக இருக்கிறார். இப்படியாக தனது உறவுகளிடத்தில் உள்ள சொத்தை, தன்னுடைய சொத்தாக மாற்றிக் கொண்டு, தீர்ப்பிலே எனக்குக் கொடுக்கப்பட்டது என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
 
அன்பானவர்களே! இந்த துன்யாவிலே ஆயிரம் தீர்ப்பு வழங்கினாலும், நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய தீர்ப்பில் தவறு நிகழாது. யாருக்கு எது சொந்தம், யாருடைய பொருள் இது என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் வரும்பொழுது அந்த மனிதன் மாட்டிக் கொள்வான். 
 
ஆகவேதான், அல்லாஹ் குர்ஆனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வசனங்களில் மறுமையை பயப்படுங்கள்! குறிப்பாக வியாபாரம், தொழில் துறை என்று வரும்போது, இவர்களுக்கு மறுமையில் எழுப்பப்படுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா என்று கேட்கிறான். (அல்குர்ஆன் 83 : 5-6)
 
யார் வியாபார கொடுக்கல் வாங்கலில் நேர்மை தவறி நடக்கிறார்களோ, அவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்யும் பொழுது, அவர்களுக்கு மறுமையில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா என்று கேட்கிறான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. நம்மை சுத்தப்படுத்துவானாக!
 
இன்று, தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை பார்க்கிறோம். கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். மார்க்கத்துடைய ஒவ்வொரு ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். அப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நாம் இந்த கொடுக்கல் வாங்கல், வியாபாரம், தொழில்துறைகளில் நீதம் என்ற ஒரு அடிப்படையை, நேர்மை என்ற ஒரு குணத்தை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வலியுறுத்தினார்களே! இது முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த ஒரு பண்பாயிற்றே! இந்தப் பண்பு தவறி நடந்தால் இதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் பாதிக்கப்படுமே! இதனுடைய தண்டனை இருக்கிறதே மிக பயங்கரமானது.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஹதீஸ் குத்ஸியில் சொல்கிறான்: 
 
يا عبادي إنِّي حرَّمتُ الظُّلمَ على نفسي وجعلتُهُ بينَكم محرَّمًا فلا تَظالموا
 
அடியார்களே! அநியாயம் செய்வதை, நேர்மை தவறி நடப்பதை நான் எனக்கு ஹராமாக்கிக் கொண்டேன். உங்களுக்கும் தடுக்கப்பட்ட ஒரு குற்றமாக ஆக்கினேன். நீங்கள் நேர்மை தவறி நடக்காதீர்கள். அநியாயம் செய்யாதீர்கள். (1)
 
அறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2577.
 
எவ்வளவு கடுமையாக சொல்கிறான். அவனுக்கே வானம் பூமியில் உள்ள எல்லாம் சொந்தமானது. அவன் நேர்மை தவறி நடப்பதை, அநியாயம் செய்வதை, ஹக்குகளை மீறுவதை அல்லாஹ் தனக்கு ஹராமாக்கி கொண்டான். 
 
ஒரு துறவி வருகிறார். பஷீர் ரழியல்லாஹு அன்ஹு தன்னுடைய மகன் நுஃமானை அழைத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதரே! இவர் எனக்கு பிரியமான பிள்ளை; இவருக்கு நான் ஒரு அடிமையை கொடுக்க விரும்பினேன்; என்னுடைய மனைவி அல்லாஹ்வுடைய தூதரை இதற்கு சாட்சி ஆக்கி விடுங்கள் என்று சொன்னாள். பல மனைவி பிள்ளைகள் உடையவர். நாளை பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்தப் பிள்ளைக்கு அந்த அடிமையை அன்பளிப்பாக கொடுப்பதற்கு, நபியை சாட்சியாக இருங்கள் என்று பஷீர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார். 
 
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உனது பிள்ளைகளை எல்லோருக்கும் இதுபோன்று அன்பளிப்பு செய்தாயா? என்று கேட்டார்கள். உடனே அவர் இல்லை அல்லாஹ்வின் தூதரே! இந்த பிள்ளைக்கு மட்டும் கொடுக்கிறேன் என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அநியாயத்திற்கு என்னை சாட்சியாக்காதே! எழுந்து போ என்றார்கள்.
 
புகாரி எண்: 2456, முஸ்லிம் எண்: 3056, 3057, 3058, முஸ்னத் அஹமது எண்: 17640, 17646, 17684, 17702
 
ஒரு தந்தை தன்னுடைய சொத்தை தான் பெற்ற பிள்ளைகளுக்கு கொடுப்பதில் கூட நேர்மை தவறுவதை, பிரியம் என்பது உள்ளம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், கொடுக்கல் வாங்கல், அன்பளிப்புச் செய்தல், உரிமைகளை கொடுத்தல் என்பதிலே ஒரு முஸ்லிம் நேர்மையாக இருக்க வேண்டும்.
 
ஆகவேதான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல மனைவிமார்கள் உடையவர்கள். அவர்கள் செய்த துஆக்களிலே ஒன்று, 
 
«اللَّهُمَّ هَذَا قَسْمِي، فِيمَا أَمْلِكُ فَلَا تَلُمْنِي، فِيمَا تَمْلِكُ، وَلَا أَمْلِكُ»
 
அல்லாஹ் எனக்கு சக்தியுள்ளதில் நான் நீதமாக நேர்மையாக நடந்து கொள்கிறேன். ஒவ்வொரு மனைவிக்கும் கொடுக்க வேண்டிய காலம் இரவை கொடுக்கின்றேன். எனக்கு சக்தி இல்லாததில் என்னை பிடித்து விடாதே. அந்த கல்பு உன்னுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூ தாவூத், எண் : 2134.
 
மரண நோயில் தொழுகைக்கு வரும் போது கூட இரண்டு சஹாபாக்களின் துணையோடு தான் வர முடியும். எப்படி தொழுகைக்கு அவர்கள் வந்தார்களோ, அதுபோன்று ஒவ்வொரு மனைவிகளுடைய வீட்டிற்கும் சுமந்து சொல்லப்படுகிறார்கள். 
 
நீதம், நேர்மையின் அடையாளத்தை பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் ஒரு மனைவியின் வீட்டில் தங்கியிருந்தால் மற்ற மனைவிகள் ஏதும் சொல்லி இருப்பார்களா? அவர்களால் சுயமாக எழுந்து நடக்க முடியவில்லை. தோழர்களை தூக்கிச் செல்ல சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கு கொண்டுபோய் சேர்க்கிறார்கள். இறுதியாக ஆயிஷாவினுடைய வீடு எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள்.
 
மனைவிமார்கள் புரிந்துகொள்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆயிஷாவினுடைய வீட்டில் உயிர் பிரிய வேண்டும் என்று ஆசை என்பதாக. எல்லோரும் தங்களுடைய ஹக்கை விட்டு கொடுத்தார்கள். 
 
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டிற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு எல்லா மனைவிகளும் வந்து அல்லாஹ்வுடைய தூதரை கவனித்துக் கொண்டார்கள்.
 
அல்லாஹ்வுடைய நபி அவர்கள் ஒரு கட்டளை போட்டிருக்கலாம். நான் ஆயிஷாவினுடைய வீட்டில் இருக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஹக்கை விட்டுக்கொடுங்கள் என்பதாக கட்டளை போட்டிருந்தால், மாறுவார்களா அந்த மனைவிமார்கள்? பேச்சை தட்டுவார்களா? ஹக்கை ஒருவர் தானாக விட்டுக் கொடுக்க வேண்டும்.
 
அன்பானவர்களே! இப்போது பிறருடைய ஹக்கை விட்டு கொடுக்குமாறு இவர் சொல்கிறார். ஹக் உள்ளவர் விட்டுக் கொடுக்க வேண்டும். ஹக் உள்ளவர் மன்னிக்க வேண்டும். இவர் மன்னிப்பு தேட வேண்டும். இவர் பணிந்து செல்ல வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் பணித்தார்கள். வாய் திறக்கவே இல்லை. அவர்களுக்கு மயக்கம் இருந்தது. நாளை யாருடைய வீடு? என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் எந்த மனைவியுடைய நவ்பத்தோ -முறையோ அங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
 
புகாரி எண்: 1300, 3490, 4095, 4816, முஸ்லிம்: 4473.
 
அன்பானவர்களே! இப்படிப்பட்ட நேர்மையான ஒரு ரசூலை, அந்த ரசூலின் வழிகாட்டுதலை பெற்ற சமூகமாகிய நாம், எந்த அளவுக்கு மனைவிமார்களில், பிள்ளைகளில், குடும்பம், சகோதரர்கள், பெற்றோர்களின் விஷயத்தில், இன்னும் வாழ்க்கையின் அன்றாட கொடுக்கல் வாங்கலிலே நேர்மை தவறி கொண்டிருக்கிறோம் என்பதை சுய பரிசோதனை செய்வோமாக! அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமாக!
 
அல்லாஹ்வுடைய ஹக்கிலே இருக்கக்கூடிய சில குறைபாடுகளை அல்லாஹ் பெருந்தன்மையோடு மன்னிப்பான். அடியார்களுடைய ஹக்கிலே இருக்கக்கூடிய குறைகளை நாளை மறுமையில் இந்த அடியார்கள் மன்னிக்காமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: எந்த நாளிலே காசு, பணம், செல்வங்கள் பயன்தராதோ அந்த நாள் வருவதற்கு முன்னால் இந்த துன்யாவில் நீங்கள் செய்த அநியாயங்கள், அக்கிரமங்களுக்கு பரிகாரத்தை தேடிக்கொள்ளுங்கள். 
 
நூல் : புகாரி எண்: 2269, 6053.
 
எனவே, அல்லாஹு தஆலா எனக்கும், உங்களுக்கும், நம் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணி, அடியார்களுடைய ஹக்குகளை பேணி வாழக் கூடிய அந்த நல்ல ஈமானையும், தக்வாவையும், பேணுதலையும் தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
عَنِ النَّبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ فِيما رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى، أنَّهُ قالَ: يا عِبَادِي، إنِّي حَرَّمْتُ الظُّلْمَ علَى نَفْسِي، وَجَعَلْتُهُ بيْنَكُمْ مُحَرَّمًا، فلا تَظَالَمُوا، يا عِبَادِي، كُلُّكُمْ ضَالٌّ إلَّا مَن هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يا عِبَادِي، كُلُّكُمْ جَائِعٌ إلَّا مَن أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يا عِبَادِي، كُلُّكُمْ عَارٍ إلَّا مَن كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يا عِبَادِي، إنَّكُمْ تُخْطِئُونَ باللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يا عِبَادِي، إنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي، وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي، يا عِبَادِي، لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ، كَانُوا علَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنكُمْ؛ ما زَادَ ذلكَ في مُلْكِي شيئًا، يا عِبَادِي، لوْ أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ، كَانُوا علَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ؛ ما نَقَصَ ذلكَ مِن مُلْكِي شيئًا، يا عِبَادِي، لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ، قَامُوا في صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي، فأعْطَيْتُ كُلَّ إنْسَانٍ مَسْأَلَتَهُ؛ ما نَقَصَ ذلكَ ممَّا عِندِي إلَّا كما يَنْقُصُ المِخْيَطُ إذَا أُدْخِلَ البَحْرَ، يا عِبَادِي، إنَّما هي أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إيَّاهَا، فمَن وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدِ اللَّهَ، وَمَن وَجَدَ غيرَ ذلكَ فلا يَلُومَنَّ إلَّا نَفْسَهُ. وفي روايةٍ: إنِّي حَرَّمْتُ علَى نَفْسِي الظُّلْمَ وعلَى عِبَادِي، فلا تَظَالَمُوا. الراوي : أبو ذر الغفاري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم الصفحة أو الرقم: 2577 | خلاصة حكم المحدث : [صحيح
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/