HOME      Khutba      ரமழானுக்குப் பிறகு நாம் எப்படி? | Tamil Bayan - 527   
 

ரமழானுக்குப் பிறகு நாம் எப்படி? | Tamil Bayan - 527

           

ரமழானுக்குப் பிறகு நாம் எப்படி? | Tamil Bayan - 527


ரமழானுக்குப் பிறகு நாம் எப்படி?

ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழானுக்குப் பிறகு நாம் எப்படி?

வரிசை : 527

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 15-06-2018 | 01-10-1439

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து அவனுக்கு கட்டுப்பட்டு, அவனுடைய மார்க்கத்தைப் பேணி வாழுமாறு, எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா என்னையும் உங்களையும் நம்  குடும்பத்தாரையும் முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு, அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணி நடப்பவர்களாகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மதித்து நடப்பவர்களாவும், அல்லாஹ்வுடைய தீனை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களையும் இந்த தீனுல் இஸ்லாமின் பக்கம் அழைக்கக் கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலாநமக்கு ஒரு சிறந்த மார்க்கத்தை கொடுத்திருக்கிறான். இந்த மார்க்கம் நம்மை சுத்தப் படுத்துவதற்காக, நம்மை ஒழுங்கு படுத்துவதற்காக, நெறி படுத்துவதற்காக, நம்முடைய உள்ரங்கம் வெளிரங்கம் இரண்டையும் ஒருசேர ஒரே நேரத்தில் சிறப்பாக ஆக்குவதற்காக, தூய்மையாக ஆக்குவதற்காக கொடுக்கப்பட்டது தான் அல்லாஹ்வுடைய இந்த இஸ்லாம்; அல்லாஹ்வுடைய இந்த ஷரீஅத்.

சகோதரர்களே! நாம் ஒரு மாத காலம் இப்போது கடைப்பிடித்து வந்த இந்த ரமலான் உடைய நோன்பும் அந்த அடிப்படையில் உள்ளதுதான். நம்முடைய உள்ளத்தில் தக்வாவை புதுப்பிப்பதற்காக, தக்வாவை பலப்படுத்துவதற்காக, தக்வாவை நம்முடைய உள்ளத்தில் வேரூன்ற வைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள மாதம்தான் இந்த ரமலான் உடைய மாதம்.

சில சடங்குகளை செய்து சில சம்பிரதாயங்களின் படி சில காரியங்களை அனுசரித்து பிறகு பெருநாள் என்ற ஒரு தினத்தில் சந்தோஷமாக உண்டு கழிப்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை இந்த ரமலான் உடைய மாதம்.

ரமலான் முடிந்துவிட்டாலும் அல்லாஹ்வுடைய மார்க்கம் முடியவில்லை. ரமலான் முடிந்துவிட்டாலும் அல்லாஹ்விற்கும் எனக்கும் உண்டான அந்த உறவு, நட்பு, அன்பு முடியவில்லை.

ரமலான் எனக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள உறவை புதுப்பிப்பதற்காகவும், பலப்படுத்துவதற்காகவும், நான் பாவங்களை விட்டு தவ்பா கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்காகவும் கொடுக்கப்பட்டது.

இதற்குப் பிறகு நான் அல்லாஹ்வை விட்டு வேறு எங்கும் திரும்ப மாட்டேன். இனி நான் அல்லாஹ்வை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நான் புறக்கணிக்க மாட்டேன்.

வணக்க வழிபாடுகளோடு என்னுடைய உறவை நான் ஆழமாக பலமாக வைத்துக்கொள்வேன் என்ற ஒரு உறுதிமானத்தை, மனப்பக்குவத்தை கொண்டுவருவதற்காக அல்லாஹு தஆலா இந்த ரமலான் மாதத்தை கொடுத்தான்.

ஆகவேதான் அறிஞர்கள் சொல்வார்கள் :யாரொருவர் ரமலான் மாதத்தில் வணக்க வழிபாடுகள் செய்து, பேணுதலாக இருந்து ரமலான் முடிந்தவுடன் வணக்க வழிபாடுகளை விட்டுவிடுகிறார்; தொழுகையை விட்டு விடுகிறார்; பாவங்களின் பக்கம் அவர் திரும்பி விடுகிறார் என்றால், அதற்கு அர்த்தம், அவர்கள் அல்லாஹ்வை வணங்கவில்லை, ரமலான் மாதத்தை வணங்கிக் கொண்டிருந்தார். (அல்லாஹ் பாதுகாப்பானாக)

முஸ்லிம்களாகிய நாம் கஅபாவை தவாஃப் செய்கிறோம். தவாஃப் என்பது அல்லாஹ்வுடைய இபாதத். அல்லாஹு தஆலா கஅபாவை சுற்றி அவனை வணங்க சொல்லியிருக்கிறான். எனவே வணங்குகிறோம்.கஅபாவை வணங்குவதற்காக நாம் தவாஃப் செய்ய வில்லை.

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுகிறோம் என்றால் ஹஜருல் அஸ்வதை வணங்குவதற்காக அல்ல, அல்லாஹ்வை வணங்கியவர்களாக ஹஜருல் அஸ்வதை முத்தமிடுகிறோம்.

அதுபோன்றுதான் ரமலானில் நோன்பு நோற்றிருந்தோம் என்று சொன்னால் ரமலானை வணங்குவதற்காக அல்ல. நோன்பு என்பது அல்லாஹ்வுடைய இபாதத். அதை இந்த மாதத்தில் அல்லாஹ் நோக்க சொல்லியிருக்கிறான். இதனுடைய நோக்கம் அந்த நோன்பின் மூலமாக தக்வா என்ற இறையச்சம் வரவேண்டும் என்பது.

அல்லாஹ்வுடைய அந்த பயம். அன்பும் ஆதரவும் ஆசையும் கலந்த பயம். அந்த பயத்திற்கு பின்னால் மார்க்கத்தை பின்பற்றக்கூடிய உறுதியான மனநிலை. இது சேர்ந்தது தான் தக்வா.

இந்த தக்வா வருவதற்காக தான் ரமலான் நோன்பு கொடுக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும்படி அல்லாஹ் கட்டளையாக, நமக்கு கடமையாக ஆக்கினான்.

காலம் காலமாக அறிஞர்களுடைய உபதேசங்களை நாம் கேட்டு வருகிறோம். மக்களுடைய நிலையை பார்த்து வருகிறோம். நமக்கு மத்தியில் எவ்வளவு பெரிய ஒரு முரண்பாடான சூழ்நிலை இருக்கிறது என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் சமுதாய மக்கள் மற்றவர்களைப் போன்று மாறியிருக்கிறார்கள், அவர்கள் எப்படி ஒரு சில தினங்களை மட்டும் தங்களுடைய மதத்தின் அடையாளமாக, வழிபாட்டுக்குரிய நாட்களாக ஆக்கிக் கொண்டு, மற்ற நாட்களில் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அது போன்று நம்மிலும் பலர் மாறுவதைபார்க்கிறோம்.

அப்படி யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த ரமலானால் எந்த பிரயோஜனமும் இல்லை.

இந்த நோன்பால் அவர்களுக்கு எந்த விதமான பிரயோஜனமும் இல்லை. இந்த நோன்பு எண்ணில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தது? இந்த நோன்பினால் எனக்கு என்னுடைய ஆன்மீக ரீதியாக என்ன நன்மைகள் ஏற்பட்டன? என்பதை பரிசோதிக்க வேண்டிய, சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ரமலான் முடிந்தால் என்ன? அல்லாஹ் இறக்கிய குர்ஆன் உயர்த்தப்பட்டு விடவில்லையே!

ரமலானில் குர்ஆனை ஓதியவர்கள் ரமலான் முடிந்ததற்கு பிறகு குர்ஆனை கையிலெடுக்க வேண்டும். அந்த குர்ஆனோடு தன்னுடைய தொடர்பை காலையிலும் மாலையிலும் இரவிலும் ஒரு நேரத்தை ஒதுக்கி, அதை ஓதுவதற்கும் அதில் தன்னால் முடிந்ததை மனப்பாடம் செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட காலத்தை அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒதுக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் ரமலானில் குர்ஆனை அதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். குர்ஆனோடு அதிகம் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள் என்று வந்திருக்கிறதே தவிர, எங்குமே அந்த நபித்தோழர்கள் அந்த நல்லவர்கள் ரமலானில் குர்ஆன் ஓதுவார்கள், அதற்குப் பிறகு ஆண்டில் எந்த மாதத்திலும் குர்ஆன் ஓத மாட்டார்கள் என்று இல்லை.

ஆனால் இன்று முஸ்லிம்களுடைய நிலைமை மாற்றமாக மாறி இருப்பதை நாம் பார்க்கிறோம்.

வீட்டில் பெண்களை பார்த்தாலும் சரி அல்லது ஆண்களை எடுத்துக் கொண்டாலும் சரி, ரமலான் வந்தால் தான் குர்ஆனை அவர்கள் எடுப்பார்கள், எடுத்து தூசி தட்டுவார்கள், குர்ஆனுக்கு போடப்பட்ட அந்த உரையை அவர்கள் பிரிப்பார்கள்.

ரமலான் முடிந்துவிட்டால் அதற்கென்று உள்ள உரையில் குர்ஆனை போர்த்தி பூட்,டி அலமாரியில் உயரமாக வைத்து விடுகின்ற நிலையைப் பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய அடியார்களே!அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

ஒரு முஃமினுடைய அடையாளமாக அல்லாஹ் சொல்கிறான் : அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை காலையிலும் மாலையிலும் இரவின் ஓரங்களிலும் குர்ஆனை ஓதுவார்கள் என்று.

பார்க்க : (அல்குர்ஆன் 3: 113, 35: 29)

முதலாவதாக, இந்தக் குர்ஆனோடு உள்ள தொடர்பு எனக்கு ரமலானோடு முடியவில்லை. ரமலானில் அதிக நேரம் இந்த குர்ஆனை ஓதுவதற்காக செலவழித்தேன். ரமலான் முடிந்ததற்கு பிறகு இந்த குர்ஆனை ஓதுவதும், இதனுடைய கருத்துகளை புரிவதும், இதை சிந்திப்பதும் என்னுடைய வாழ்க்கையின் அன்றாட நாட்களில் ஒரு பகுதியாக நாம் இதை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற உறுதி ரமலான் முடிந்த இந்த இறுதித் தருணத்தில் நமக்கு இருக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால் இந்த ரமலானால் அவருக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.

குர்ஆன் என்ன ஒரு சடைவை ஏற்படுத்தக்கூடிய வேதமா? (அல்லாஹ் பாதுகாப்பானாக)

ஏதோ வலுக்கட்டாயத்திற்கு ஓதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரமலானில்  ஓதினோம், ஓதி சலித்து விட்டோம், இனி குர்ஆனை ஓதுவது எனக்கு சிரமமாக இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? (அஸ்தஃபிருல்லாஹ்)

ஒருவன் ரமலானோடு குர்ஆனுடைய தொடர்பை அவன் முடித்துக் கொண்டான் என்றால், அதற்குப் பிறகு அவனுக்கு திறப்பதற்கு மனம் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்?

ஒன்று, அவருக்கு ரமலானுக்கு பிறகு உள்ள மற்ற மாதங்களில் இவருடைய வாழ்க்கையில் குர்ஆனுக்கு நேரமில்லை, குர்ஆனை விட மிகப்பெரிய ஒன்று இவனுக்கு முக்கியமாக இருக்கிறது, அதற்கு நேரம் கொடுத்ததால் குர்ஆனுக்கு நேரம் கொடுக்க முடியவில்லை

அல்லது குர்ஆனை ரமலானில் ஓதி ஓதி இவன் சலிப்படைந்து விட்டான், இனி அதை  திறந்து ஓதுவதற்கு என்ன இருக்கிறது என்ற நிலைக்கு வந்துவிட்டான்.

இது தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும்? சொல்லுங்கள்.

அல்லது மூன்றாவதாக ஒன்று இருக்குமேயானால் அலட்சியம், வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?

அல்லது குர்ஆனை முற்றிலுமாக ஓதி, அதை மனப்பாடம் செய்து, அதனுடைய கருத்துகளை எல்லாம் புரிந்து, அதை உள்வாங்கி, அமல்களில் கொண்டுவந்து, வாழ்க்கையில் எதார்த்தமாக குர்ஆன் நம்மோடு ஒன்றி விட்டது, இனி நான் குர்ஆனை திறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்ல முடியுமா?

அந்த நிலையிலிருந்த அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளும் குர்ஆனிலிருந்து குறைந்தது 7பாகங்களை ஓதக்கூடிய வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.(1)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : எண் : 4666, இப்னு  மாஜா, எண் : 1336.

மூன்று நாளைக்கு ஒருமுறை ஒரு குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.

இது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழக்கமாக, சஹாபாக்கள் உடைய வழக்கமாக இருந்தது.

நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் இன்று தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் நேரம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் அனாவசியமான சந்திப்புகளுக்கும், பேச்சுகளுக்கும், உரையாடல்களுக்கும், கருத்துகளுக்கும், அந்த கருத்துகளுக்கு பதில் அளிப்பதற்கும் நேரங்கள் ஒதுக்கப்பட்ட காரணத்தால் குர்ஆனுக்கு நேரம் ஒதுக்குவதற்கு நேரம் இல்லை.

இந்த குர்ஆன் நம்மை பார்த்து கேட்கின்றது.

فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ أُولَئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ

அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 39:22)

அல்லாஹ் பாதுகாப்பானாக! கடுமையான எச்சரிக்கையான வசனம். யார் இந்த குர்ஆனை திறந்து படித்து சிந்திக்காமல், யாருடைய உள்ளம் இருகி விட்டதோ, அதை திறக்க அவர்களுக்கு மனம் வரவில்லையோ அவர்களுக்குக் கேடு உண்டாகட்டும்.  யாருடைய உள்ளம் இறுகி விட்டனவோ அவர்களுக்கு  நாசம் உண்டாகட்டும்.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?(அல்குர்ஆன் 47:24)

அன்புச் சகோதரர்களே! தொழுகையில் குர்ஆனை சிந்தித்து ஓதுவது; பொருளுணர்ந்து   ஓதுவது. அதில் நம்முடைய உள்ளத்தைப் பறிகொடுப்பது.

தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனை ஓதுவது. குறிப்பாக அரபி மொழி தெரியாத நம்மில் பலருக்கு அவர்கள் தொழுகையில் குர்ஆனை ஓதினால் மட்டும் போதாது. தொழுகைக்கு வெளியில் குர்ஆனை ஓதி, பிறகு அந்த வேத வசனங்களில் அல்லாஹ்  என்னோடு என்ன பேசுகிறான்? எனக்கு என்ன கட்டளைகளை கொடுக்கின்றான்? என்று அந்தப் பொருளையும் அவர்கள் உணரவேண்டும்.

ஏனென்றால், குர்ஆன் என்பது இன்று பரக்கத்தான வேதம், பரக்கத்திற்கு ஓதக்கூடிய ஒரு வேதம், அவ்வளவுதான், புது வீடு குடி போனால் குர்ஆன் பரகத், கடை திறந்தால் குர்ஆன் பரக்கத்திற்கு.

இப்படி குர்ஆனை ஒரு பரக்கத்திற்கு ஓதக்கூடிய, வேத மந்திரத்தை போன்று ஆக்கி வைத்திருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், நாம் உணர்த்தக்கூடிய அவசியத்தில் இருக்கின்றோம்.

குர்ஆனுடைய பரக்கத் என்பது மற்ற மதத்தவர்கள் எப்படி தங்களுடைய வேதங்களை அவர்களுடைய விசேஷங்களில் ஓதி இறை அருள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அப்படிப்பட்ட அர்த்தத்தில் சொல்லப்பட்டது அல்ல, குர்ஆனுடைய பரக்கத் என்பது.

ஆம், குர்ஆன் கண்டிப்பாக பரக்கத்தான வேதம், முபாரக் -அல்லாஹ்வுடைய அருளுக்குறிய வேதம்.

யார் அதை நம்பிக்கை கொள்கிறார்களோ, யார் அதை காலை மாலை இரவு நேரங்களில் ஓதுகின்றார்களோ, யார் அதனுடைய கருத்துகளை நம்புகிறார்களோ, அதனுடைய பொருளை உணர்கிறார்களோ, அவர்களுக்கு அது பரக்கத்.

என்ன பரக்கத்தை கொடுக்கும்? முதலாவதாக, அவருடைய மனக்கவலைகளை மன சஞ்சலங்களை அது நீக்கும்.

நீங்கள் எவ்வளவு அதிகமாக கவலையுடன் இருக்கிறீர்களோ அந்த நேரத்தில் குர்ஆனை ஓதிப் பாருங்கள். அந்த நேரத்தில் குர்ஆனை திறந்து படித்து வாசித்துப்பாருங்கள். அந்த கவலைகளையெல்லாம் போக்கக்கூடிய அருமருந்தை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் வைத்திருக்கிறான்.

நம்முடைய முகத்தில் ஒரு தெளிவை, நம்முடைய உள்ளத்தில் ஒரு உறுதியை கொடுக்கக்கூடிய அந்த ஈமானிய பவரை அல்லாஹு தஆலா அவனுடைய அல்குர்ஆனில் வைத்திருக்கிறான்.

وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ

உள்ளங்களில் உள்ள எல்லா  குழப்பங்களுக்கும் அதில் மருந்து இருக்கிறது. (அல்குர்ஆன் 10:57)

குர்ஆனுடைய பரக்கத் என்பது, அதன்படி அமல் செய்வதால் ஏற்படக்கூடிய பரக்கத்.

குர்ஆனுடைய மூத்த விரிவுரையாளர் இமாம் தபரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன்னைப் பற்றி சொல்கிறார்கள் :

நான் ஒரு சாதாரண மனிதனாக இருந்தேன். அல்லாஹ்வுடைய வேதத்தோடு என்னுடைய தொடர்பை ஏற்படுத்தினேன். அந்த வேதத்தை படித்தேன். அதை மனப்பாடம் செய்தேன். சிந்தித்தேன். அதனுடைய கருத்துக்களை தேடி அலைந்தேன். அதை கற்பதற்காக அறிஞர்களின் இல்லங்களுக்கு சென்றேன். அல்லாஹ் எனக்கு மிகப்பெரிய கண்ணியத்தை உயர்வை கொடுத்தான்.

எத்தகைய கண்ணியம்? எப்படி ஹதீஸ் துறையில் இமாம் புகாரி அவர்களை நினைவு கூறப்படுகின்றதோ அல்லது இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களை நினைவு கூறப்படுகின்றதோ அதைப்போன்று குர்ஆனுடைய விரிவுரை என்று வந்துவிட்டால் இமாம் தபரி, இதற்கு என்ன விளக்கம் சொல்கிறார் என்று பார்க்கக் கூடிய அளவிற்கு அந்த இமாமுடைய கண்ணியத்தை அல்லாஹ் உயர்த்தினான்.

இந்த குர்ஆனோடு யார் தன்னை இணைத்துக் கொண்டார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக அல்லாஹு தஆலா அவ்வளவு பெரிய கண்ணியத்தை கொடுக்கின்றான்.

இதை ஓதக்கூடியவர்களுக்கு இதனுடைய கருத்தை புரிந்தவர்களுக்கு இதனுடைய விளக்கத்தை அறிந்தவர்களுக்கு அவ்வளவு பெரிய கண்ணியம் இருக்கின்றது.

ஒரு மனிதன் ரமலான் முடிந்ததோடு தன்னுடைய குர்ஆனிய தொடர்பை முடித்துக் கொண்டான் என்று சொன்னால் அவன் அல்லாஹ்வுடைய வேதத்தை விளங்கவே இல்லை. அல்லாஹ்வுடைய வேதம் என்றால் என்னவென்று அவன் புரியவே இல்லை என்றுதான் அர்த்தம். (அல்லாஹ் பாதுகாப்பானாக)

ஆகவே சகோதரர்களே! ரமலானை முடித்துவிட்டு இருக்கின்ற இந்த தருணத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான மன உறுதியில் நமக்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அந்த ஈமானிய உடன்படிக்கைக்களில் ஒன்று, யா அல்லாஹ்! இனி நான் உனது குர்ஆனோடு வாழ்வேன்; குர்ஆனோடு எனக்குள்ள தொடர்பை நான் முடித்துக் கொள்ள மாட்டேன்.

ஒவ்வொரு நாளும் இந்தக் குர்ஆன் வாயிலாக உன்னோடு நான் பேசுவேன். இந்த குர்ஆனின் வாயிலாக நீ எனக்கு சொன்ன ஒவ்வொரு கட்டளையும் நான் அறிவேன். அந்த குர்ஆனின் வாயிலாக நீ எனக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த இஸ்லாமிய  மார்க்கத்தை நான் அறிந்து கொள்வேன் .மறுமையைப் பற்றிய நினைவை நான் இந்த குர்ஆன் வாயிலாக புதுப்பித்துக் கொள்வேன்.

மௌத்தை பற்றிய, ஆகிரத்தை பற்றிய அச்சத்தை இந்தக் குர்ஆனை ஓதுவதின் மூலமாக, சிந்திப்பதின் மூலமாக என்னுடைய உள்ளத்தில் நான் பசுமையாக வைத்திருப்பேன். இந்த உறுதியை இந்த நேரத்தில் நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

அப்படி இல்லையென்றால் அவர்கள் இந்த ரமலானில் குர்ஆனை ஓதி அதை கேட்டதில் எந்த அர்த்தமும் இல்லை. ரமழான்னோடு குர்ஆனுடைய தொடர்பை முடித்துக் கொண்டார்கள் என்றால் அவர்கள் குர்ஆன் என்னவென்றே புரியவில்லை. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ரமலானுடைய மாதத்தில் ஹலாலை பேணியவர்கள், ஹராமை விட்டு விலகி இருந்தவர்கள், ரமலான் முடிந்து விட்டதற்குப் பிறகு, மீண்டும் அந்த ஹராமின் பக்கம் திருப்பினால், மீண்டும் தடுக்கப்பட்ட பாவங்களின் பக்கம் திரும்பினால்இவர்கள் இந்த ரமழானை அழித்துக் கொள்கிறார்கள்.

அல்லது நம் பாவங்கள் நாம் செய்த நன்மைகளை அழித்து விடுகின்றன.

إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ

நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன. (அல்குர்ஆன் 11:114)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

واتبع السيئة الحسنة تمحها

நீ ஒரு தீமையை, பாவத்தைச் செய்து விட்டால் அதைத் தொடர்ந்து உடனடியாக நன்மையை செய்து அந்த பாவத்தை அழித்துவிடு.

நூல் : திர்மிதி, எண் : 1910.

இப்படித்தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.

இன்று, நம்முடைய உம்மத் இரவும் பகலுமாக ரமலானில் சம்பாதித்த நன்மைகளை, அல்லாஹ்வின் அந்த அருள்களை நிஃமத்களை ரமலான் முடிந்ததற்கு பிறகு அவர்கள் பாவங்களில் ஈடுபட்டு அழிக்கின்றார்கள்.

அந்த நன்மைகளால் அவர்களுக்கு வந்த ரஹ்மத்தை அவர்கள் தடுகின்றார்கள். அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு பிறகு அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளாகின்றார்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

மார்க்கத்தின் உபதேசமாவது, நீ தெரியாமல் ஒரு பாவத்தைச் செய்து விட்டால் அந்தப் பாவத்திற்கு பிறகு ஒரு நன்மையைச் செய்து, நீ செய்த பாவத்தை அழித்து கொள், அதை போக்கிவிடு, அதற்குண்டான மன்னிப்பை தேடிக்கொள் என்பதாக சொல்கிறது.

நூல் : திர்மிதி, எண் : 1910.

ஆனால், இன்று நமது உம்மத்துடைய நிலை, நன்மைக்கு பிறகு பாவம் செய்வது, இபாதத்திற்கு பிறகு பாவம் செய்வது, அமல்களை செய்ததற்குப் பிறகு அதை பாழாக்கி செய்த நன்மைகளை இழக்கிறார்கள் என்றால் இதைவிடப் பெரிய நஷ்டம் என்ன இருக்க முடியும்?

நம்முடைய உறவுகள், ஏழைகளுக்கு கொடுக்கின்ற அந்த ஈகை குணம், இரக்க உணர்வு ரமளானில் மட்டும் இருக்க வேண்டிய உணர்வா? கண்டிப்பாக இல்லை.

எந்தக் கை அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளிய மக்களுக்காக மார்க்கத்திற்காக ரமலான் மாதத்தில் நீண்டு இருந்ததோ அந்த கை எப்போதும் அல்லாஹ்வுடைய பாதையில், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக, ஏழை எளிய மக்களுக்காக, உறவுகளுக்காக, இல்லாதவர்களுக்காக, சிரமப்படக் கூடியவர்களுக்காக அந்த கை எப்போதும் விரிந்தே இருக்கவேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் வந்துவிட்டால் அவர்கள் அதிகமாக தர்மம் செய்வார்கள் என்று வந்திருக்கிறதே தவிர, ரமலான் மாதத்தில்தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தர்மம் செய்வார்கள் என்று வரவில்லை.

ரமலான் மாதம் வந்துவிட்டால் வேகமாக வீசக்கூடிய புயல் காற்றைவிட மிக அதிகம் விரைவாக வேகமாக கொடை கொடுப்பவர்களாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என்று ஹதீஸில் வருகிறது. (2)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5.

இன்று மிகப்பெரிய ஒரு கவலையான மனதிற்கு சங்கடமான ஒரு நிலையில் பலரை பார்கிறோம்.

ஏதாவது ஒரு நிர்பந்தத்துக்காக யாராவது தர்மம் கேட்டு வந்தால் நாங்கள் ரமலானில்  கொடுக்கிறது, மற்ற நேரத்துல கொடுக்கிறதில்லை.

இல்லையென்றால் நாங்கள் ரமலானில் கொடுத்து முடித்துவிட்டோம், இப்போ ஒன்னும் கொடுப்பதற்கு இல்லை.

இப்படிப்பட்ட வார்த்தை ஒரு முஸ்லிமிடமிருந்து வரக்கூடாது. (அல்லாஹ் பாதுகாப்பானாக.)

கேட்டு வந்தவர்கள் அதற்குண்டான தகுதியானவர்களா? அந்த தேவை அவர்களிடம்  இருக்கிறதா? அவர்கள் சொல்லக்கூடிய அந்த சிரமம் உண்மையானதா? என்று இருக்குமேயானால், ஏதாவது சில செல்வத்தை கொடுத்தாவது நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு 100ரூபாய் உங்களிடம் இருந்து அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் செலவு செய்து ஒருவருக்கு குடிக்க கூடிய ஒரு தேநீரின் விலை, அதை தியாகம் செய்தாவது அந்த மனிதனுக்கு உதவ வேண்டும். இத்தகைய இரக்க சிந்தனை முஸ்லிம்களுடைய ரத்தத்தோடு கலக்க வேண்டும்.

அல்லாஹ் யாருக்கு செல்வத்தைக் கொடுத்தானோ அவர்களுடைய மனதோடு அந்த ஈகை குணம் சேர வேண்டும்.

ரமலனோடு கொடையை நிறுத்திக்கொள்வது, தர்மத்தை நிறுத்திக்கொள்வது, இது ஒரு சிறந்த முஸ்லிமுடைய மனப்போக்கு அல்ல. ஒரு சிறந்த முஸ்லிம் அப்படி இருக்க மாட்டான்.

எப்போதெல்லாம் ஏழைகளும் தேவை உள்ளவர்களும் தன்னைத் தேடி வருகின்றார்களோ, அல்லாஹ் எனக்கு வாய்ப்பு ஒரு கொடுக்கின்றான், அவனுடைய  மன்னிப்பை பெறுவதற்காக.

அல்லாஹ்வுடைய மன்னிப்பை பெறுவதற்கு, ரஹ்மானுடைய அந்த ரஹ்மத்தை பெறுவதற்கு., சதக்காவைவிட சிறந்த ஒன்று இல்லை.

தொழுகையை பார்க்கிலும் ஏழைகளுக்கு கொடுக்கின்ற தர்மம் மிக விரைவாக அல்லாஹ்வுடைய அந்த ரஹ்மத்தை நமக்கு தேடி தரக்கூடியது. அல்லாஹ்வுடைய மன்னிப்பை நமக்கு தேடி தரக்கூடியது.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சில நேரங்களில் இபாதத்திற்கு முன்பு நீங்கள் தர்மம் செய்துவிட்டு வாருங்கள் என்பதாக சொல்லியிருக்கிறான்.

உதாரணத்திற்கு, ரமளான் முடிந்து ஈத் பெருநாளை கொண்டாட இருக்கின்றோமே இதை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை உங்கள் மீது கடமையாக்கினான். உங்கள் நோன்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக. (3)

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 1407.

அல்லாஹ் சொல்கிறான் : ஆதமுடைய மகன் செய்யக்கூடிய வணக்கம் எல்லாம் அவனுக்கு, நோன்பைத் தவிர, அது எனக்கு உரியது. அதற்கு நான் கூலி தருகிறேன் என்று சொல்கிறான். அவன் உணவை விட்டான், குடிப்பதை விட்டான், தன்னுடைய மனைவியிடம் சேர்வதை விட்டான் எனக்காக, எனவே நான் கூலி தருகிறேன்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1761.

அந்த நோன்பு அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு, அந்த நோன்பில் நாம் வீணாக கழிக்கப்பட்ட நேரங்கள் மன்னிக்கப் படுவதற்கு அல்லாஹு தஆலா ஸதக்காவை கடமை ஆக்கினான்.

நீங்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு முன்பாக அந்த தர்மத்தை கொடுத்து விட்டு வாருங்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 1407.

யோசித்துப்பாருங்கள்! அல்லாஹு தஆலா இந்த சதக்காவை எந்த அளவிற்கு நேசிக்கிறான் என்று.

وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ (24) لِلسَّائِلِ وَالْمَحْرُومِ

அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு. அதைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால் கேட்காத) வரியவர்களுக்கும் (கொடுப்பார்கள்). (அல்குர்ஆன் 70:24,25)

வசனத்தின் கருத்து : ஹக் என்று சொன்னால் கட்டாயமாக உரிமை.அவர்களாக கடமை ஆக்கிக் கொண்டது. அல்லாஹ் கடமை ஆக்கியது ஸகாத். அது போக அந்த நல்லவர்கள் தங்களது செல்வத்தில் அவர்கள் கட்டாயமாக ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு.

முதலாவதாக, இல்லாதவர்கள் கேட்டு வருவார்கள்

இரண்டாவதாக, இல்லாதவர்கள், ஆனால் கேட்டு வர மாட்டார்கள்.

இவர்கள் நாமாகத் தேடிச் சென்று கொடுக்க வேண்டிய அந்த நிலையில் இருப்பார்கள். வெட்கத்தால் அவர்கள் பிறரிடத்தில் கேட்க மாட்டார்கள்.

அவர்களைப் பார்க்கும்போது செல்வந்தர்களாக மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஏனென்றால், மக்களிடத்தில் அவர்கள் கேட்காத காரணத்தினால். ஆனால், அவர்கள் தேவை உள்ளவர்களாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்காக தங்களது செல்வத்தில் ஒரு பகுதியை அவர்கள் ஒதுக்கி வைத்துக் கொள்வார்கள், அல்லாஹ்வுக்காக கொடுப்பதற்காக.

அன்புச் சகோதரர்களே!நம்முடைய உள்ளத்தில் உள்ள ஒரு தவறான புரிதலை அல்லது நம்முடைய சிந்தனையில் உள்ள ஒரு தவறான புரிதலை கண்டிப்பாக நாம் களையவேண்டும்.

யாராவது நிமிடத்திலே ஏதாவது கேட்டு விட்டால் உடனே அவருடைய மதிப்பை நாம் குறைக்கிறோம். இது மிகப்பெரிய தவறு.

இப்படி ஒரு பக்குவத்தை மனப்பான்மையை நம்முடைய மார்க்கம் நமக்கு கற்றுத் தரவில்லை.

وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ

யாசிப்போரை விரட்டாதீர். (அல்குர்ஆன் 93:10)

சிலர் இருப்பார்கள், யாசகம் கேட்பதையே பழக்கமாக வைத்திருப்பார்கள்.

சாலைகளில் வீதிகளில் யாசகம் கேட்பவர். யாசகம் கேட்பதை அவர்கள் தொழிலாக வைத்திருப்பார்கள்.

நம்முடைய மார்க்கம் நமக்கு என்ன சொல்கிறது?

அவர்களை கூட நீங்கள் விரட்டாதீர்கள், அவர்களிடத்தில் கூட நீங்கள் கடுமையாக பேசாதீர்கள். ஒன்று கொடுங்கள் அல்லது அழகிய வார்த்தையை சொல்லுங்கள்.

என்பதாக சொல்லி இருக்கும்போது உங்களைத் தேடிவந்து, உங்களோடு தனிமையிலிருந்து, தன்னுடைய சிரமத்தை கூறி, தன்னுடைய தேவையை கூறக்கூடிய ஒரு மனிதன், அவர் உங்களுடைய தம்பியாக இருக்கலாம், அண்ணனாக இருக்கலாம்,  சகோதரியாக இருக்கலாம், சகோதரியின் உறவினர்களாக இருக்கலாம், உங்களது நண்பர்களாக இருக்கலாம், வியாபாரத்தில் உங்களோடு பழகியவர்களாக இருக்கலாம், உங்களுடைய முஹல்லாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம், உடனே அவரைப் பற்றிய ஒரு தவறான மனப்பான்மை, தவறான மதிப்பு, இந்த நிலை ஒரு  முஃமினுக்கு வரக்கூடாது.

என்ன நிலை அவனுக்கு வரவேண்டும்?தன்னைப் பார்த்து அவர் வெட்கப்பட வேண்டும்.

எனக்கு நெருக்கமானவர்களுடைய சிரமத்தை அறியாத அளவிற்கு அலட்சியத்தில் நான் இருந்து விட்டேனா, அவர்களின் தேவையை புரியாத அளவிற்கு நான் கவனக்குறைவில் இருந்து விட்டேனா, என்று தன்னைப் பற்றிய ஒரு குற்ற உணர்வு அந்த முஃமினுக்கு வரவேண்டும். அதுதான் ஈமானுடைய அடையாளம்.

பிறகு அவரை கண்ணியப்படுத்தி, தன்னால் எது முடியுமோ அதை கொடுப்பது.  இல்லையென்றால், யாரிடத்தில் கை காட்டினால் இவருக்கு அவர் கொடுப்பாரோ அத்தகைய ஒரு மனிதரை கைகாட்டி அவருடைய தேவை நிறைவேறுவதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்வது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பழக்கம் இப்படித்தான் இருந்தது.

தன்னிடத்தில் கேட்டு வரக்கூடியவர்களுக்கு அவரிடம் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக கொடுப்பார்கள்.

இல்லையென்றால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில தோழர்களை வைத்திருந்தார்கள், இன்னாரிடத்தில் சென்று நான் கேட்டேன் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்பதாக.

அப்படி அந்தத் தோழர்களிடத்திலும் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றால், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வேறு சில தோழர்களிடத்தில் கைக்காட்டி நீங்கள் அவர்களிடத்தில் செல்லுங்கள், அவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள், என்பதாக வழிகாட்டி அனுப்புவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒன்று கேட்கப்பட்டு அவர்கள் இல்லை என்று மறுத்ததாக இல்லை. (5)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னது அஹ்மது,எண் : 23837.

அன்பு சகோதரர்களே! கொஞ்சம் உள்ளத்தில் நினைத்துப் பாருங்கள். நாம் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறோம், ரப்பு இப்பொழுது நமக்கு சொல்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு, உமரே! உனக்கு துன்யாவில் என்ன வேண்டுமோ எல்லாவற்றையும் நான் கொடுத்து விட்டேன், இனிமேல் என்னிடம் கேட்காதே, கொடுக்க முடியாது என்று சொல்வானா? அப்படி சொன்னால் நம்முடைய நிலைமை என்ன?(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

அல்லாஹ்விடத்தில் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று செல்வத்தையும் ரஹமத்தையும் பரகத்துக்களையும் கேட்டுக்கொண்டே இருக்கிறோமே, அல்லாஹ்  கொடுத்ததிலிருந்து தானே அல்லாஹ் கொடுக்கச் சொல்கிறான்.

நீங்கள் குர்ஆனை ஒரு முறை பொருளுணர்ந்து வாசித்துப் பாருங்கள், தர்மத்தைப் பற்றி ரப்பு எங்கெல்லாம் சொல்கிறானோ அந்த எல்லா இடங்களையும் ஒரு முறை நீங்கள் தொகுத்துப் பாருங்கள்.

அல்லாஹு தஆலா சொல்கின்றான் : உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாக நீங்கள் தர்மம் செய்து கொள்ளுங்கள் என்று.

இபாத்துக்களை பற்றி சொல்லும்போது கூட அப்படி சொல்லவில்லை, வணக்க வழிபாடுகளை வலியுறுத்தும் போது கூட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அப்படி சொல்லவில்லை. 

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 63:11)

ரமலானோடு தர்மத்தை முடித்துக் கொண்டால், ரப்புடைய பொருத்தம் அவ்வளவு சாதாரணமானதா?

ஒரு முஸ்லிம் எல்லா மாதங்களிலும் தன்னுடைய சம்பாத்தியத்தில் இருந்து ஸதக்கா என்ற அந்த தான தர்மத்திற்காக அவன் ஒரு பகுதியை ஒதுக்கி அதன்மூலமாக அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடி தன்னுடைய உறவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தன்னுடைய நண்பர்களுக்கு உதவ வேண்டும்; தனக்கு அறிமுகமானவர்களுக்கு உதவ வேண்டும்;தன்னுடைய ரத்த உறவுகளுக்கு உண்டான ஹக்குகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அதுபோக ஏழை எளியவர்களுக்கு, புஃகராக்கள், மிஸ்கீன்கள், எதீம்கள், வழிப்போக்கர்கள், அதுபோன்று கணவனை இழந்த ஆதரவற்ற பெண்கள்,  இப்படிப்பட்டவர்களுக்கு இவன் அறிந்து தேடிச் சென்று உதவி செய்ய வேண்டும்.

ஆகவே, ரமலான் முடிந்துவிட்டாலும் அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையே உண்டான உறவு முடியவில்லை. மார்க்கத்தின் பற்று முடியவில்லை. மார்க்கத்தைப் பேணி நடக்க வேண்டிய நம்முடைய கோட்பாடு நமக்கு முடியவில்லை.

ரமலானில் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளுடன் தொடர்போடு இருந்தது போன்று, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணுகின்றவர்களாக இருந்தது போன்று, அல்லாஹ் கொடுத்த செல்வங்களில் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கக்கூடிய நன்மக்களாக இருந்தது போன்று ரமலான் முடிந்து விட்ட பிறகும் நாம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடியவர்களாக, அல்லாஹ்வுடைய மன்னிப்பை தேடியவர்களாக,  அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பேணியவர்களாக, அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக் கூடிய இந்த ஷரீஅத்தை பாதுகாக்கக் கூடியவர்களாக, அல்லாஹ்வின் பக்கம், அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்களாக வாழ்வதற்கு உதவி செய்வானாக!

அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவனுடைய அருளையும் அன்பையும் நமக்கு வழங்குவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي إِسْحَاقُ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ شَيْبَانَ عَنْ يَحْيَى عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى بَنِي زُهْرَةَ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ وَأَحْسِبُنِي قَالَ سَمِعْتُ أَنَا مِنْ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ قُلْتُ إِنِّي أَجِدُ قُوَّةً حَتَّى قَالَ فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلَا تَزِدْ عَلَى ذَلِكَ (صحيح البخاري 4666 -)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ يَحْيَى بْنِ حَكِيمِ بْنِ صَفْوَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ جَمَعْتُ الْقُرْآنَ فَقَرَأْتُهُ كُلَّهُ فِي لَيْلَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي أَخْشَى أَنْ يَطُولَ عَلَيْكَ الزَّمَانُ وَأَنْ تَمَلَّ فَاقْرَأْهُ فِي شَهْرٍ فَقُلْتُ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي قَالَ فَاقْرَأْهُ فِي عَشْرَةٍ قُلْتُ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي قَالَ فَاقْرَأْهُ فِي سَبْعٍ قُلْتُ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي فَأَبَى (سنن ابن ماجه 1336 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ ح و حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يُونُسُ وَمَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ نَحْوَهُ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (صحيح البخاري 5 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ وَالذَّكَرِ وَالْأُنْثَى وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ (صحيح البخاري 1407 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا (صحيح البخاري 1761 -)

குறிப்பு 5)

حَدَّثَنَا عَفَّانُ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ وَنُعْمَانُ أَوْ أَحَدُهُمَا عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْلِمًا مِنْ لَعْنَةٍ تُذْكَرُ وَلَا انْتَقَمَ لِنَفْسِهِ شَيْئًا يُؤْتَى إِلَيْهِ إِلَّا أَنْ تُنْتَهَكَ حُرُمَاتُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَلَا ضَرَبَ بِيَدِهِ شَيْئًا قَطُّ إِلَّا أَنْ يَضْرِبَ بِهَا فِي سَبِيلِ اللَّهِ وَلَا سُئِلَ شَيْئًا قَطُّ فَمَنَعَهُ إِلَّا أَنْ يُسْأَلَ مَأْثَمًا فَإِنَّهُ كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَلَا خُيِّرَ بَيْنَ أَمْرَيْنِ قَطُّ إِلَّا اخْتَارَ أَيْسَرَهُمَا وَكَانَ إِذَا كَانَ حَدِيثَ عَهْدٍ بِجِبْرِيلَ عَلَيْهِ السَّلَام يُدَارِسُهُ كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (مسند أحمد 23837 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/