HOME      Khutba      ரமழான் முடியப்போகிறதே! | Tamil Bayan - 526   
 

ரமழான் முடியப்போகிறதே! | Tamil Bayan - 526

           

ரமழான் முடியப்போகிறதே! | Tamil Bayan - 526


ரமழான் முடியப்போகிறதே!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழான் முடியப்போகிறதே!
 
வரிசை : 526
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 8-6-2018 | 24-9-1439
 
بسم الله الرحمن الرّحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் இந்த ரமலானை அடைவதற்குரிய பெரும் வாய்ப்பை நமக்கு வழங்கி இருக்கிறான். இந்த ரமலான் கிடைக்கப்பெற்றவர்களில் சிறந்த கூட்டத்தில் அல்லாஹ் என்னையும் உங்களையும் சேர்த்து அருள் புரிவானாக! சொர்க்கம் சேர்க்கப்பட்ட நல்லவர்களிலும், நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்களிலும் நம் அனைவரையும் சேர்த்து அருள் புரிவானாக! ஆமீன். 
 
ஒருபக்கம், பெருநாள் வரப் போகிறது என்ற மகிழ்ச்சி சிலருக்கு இருக்கலாம். இன்னொரு பக்கம், ரமலான் முடிய போகிறது என்று ஒரு கவலை. 
 
இந்த மாதத்தில் நாம் கூட்டமாக நோன்பு வைத்தது, ஜமாஅத்தாக தொழுதது. இவையெல்லாம் மற்ற மாதங்களில் நாம் எப்படி செய்ய முடியும்?? 
 
இந்த ரமலானில் நம் உள்ளங்கள் எந்த அளவு பண்பட்டு இருந்தது? பாவமான எண்ணங்களில் இருந்து தூரமாக இருந்தது. நம் உள்ளங்கள் அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பி இருந்தன. அல்லாஹ்வை நினைக்க கூடியதாகவும், அல்லாஹ்வுடைய வேதம் ஓதக் கூடியதாகவும் நம் உள்ளங்கள் இருந்தன. நம் அமல்கள் இருந்தன.
 
இப்படிப்பட்ட ஒரு சிறந்த மாதம் இன்னும் சில தினங்களில் நம்மை விட்டுப் பிரியக் கூடிய நிலையில் இருக்கிறது. 
 
கிடைத்த இந்த பெரும் பாக்கியம் நம்மை விட்டுச் செல்லப் போகிறது என்றால் அடுத்து அந்த பாக்கியம் நமக்கு எப்படி கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? அல்லது கிடைக்குமா? என்ற கவலை நம்மிடம் இருக்க வேண்டும்.
 
உங்கள் வீட்டிற்கு மிக விருப்பமான மதிப்புமிக்க நல்ல ஒரு விருந்தாளி வருகிறார். யார் மீது நீங்கள் பாசம் வைத்திறிக்கிறீர்களோ, யாரை நீங்கள் தேடுகிறீர்களோ அந்த விருந்தாளியின் வருகையால் உங்களுக்கு எப்படி மகிழ்ச்சி, பேரானந்தம் இருக்குமோ, அந்த விருந்தாளி, தான் செல்லக்கூடிய தேதியை கூறிவிட்டால், அந்த தேதியை நாம் எண்ண ஆரம்பிப்போம். 
 
அவர் வரும்போது, தான் திரும்ப எப்போது செல்கிறேன் என்று சொல்ல மாட்டார். ஓரிரு நாட்கள் தங்கிய பிறகு, இன்னும் இரண்டு நாட்களில் என் பயணம் இருக்கிறது என்று சொன்னால், வீட்டில் இருப்பவர்கள் அதை மறுப்பார்கள். 
 
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய இந்த மாதம், நம்முடைய உள்ளங்களுக்கு, ஈமானுடைய முஃமின்களுக்கு இப்படித்தான் இருக்கும். 
 
நாம் இந்த உலகத்தில் நேசிக்ககூடிய மனிதர்களாக இருக்கட்டும் அல்லது நாம் நேசிக்கக் கூடிய எதுவாக இருக்கட்டும், இவை அனைத்தையும் விட ரமலான் நமக்கு பெரும் விருப்பமானது; நெருக்கமானது. 
 
ஒரு உறவை இழக்கக்கூடிய கவலையை விட ஒரு முஃமினுக்கு ரமலானை இழக்கின்ற கவலை மிகப்பெரியதாக இருக்கும். 
 
அல்லாஹ்வுடைய ரஹ்மத்களும், மன்னிப்புகளும், நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் விடுதலையும் அளிக்கின்ற இந்த ரமலான் மாதத்தின் இறுதியில் நாம் இருக்கின்றோம். 
 
இந்த ரமலான், இதற்கு முன்பு பல நல்லவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து, அவர்களின் சிறந்த தலைமுறையாகிய அவர்களுடைய தோழர்கள், பிறகு அந்த தோழர்களின் மாணவர்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள், இமாம்கள் இப்படியாக இந்த உம்மத்தில் அல்லாஹ்வுக்காகவே வாழ்ந்த, மறுமைக்காக வாழ்ந்த, சொர்க்கத்தின் தேடலில் இந்த உலகத்தை தியாகம் செய்தவர்களையெல்லாம் இந்த ரமலான் பார்த்திருக்கிறது. 
 
கடந்த காலத்தை அறிவிப்பதற்கு, இந்த ரமலானுக்கு பேசும் சக்தி இருக்குமேயானால், இந்த ரமலான் நம்மைப் பார்த்து எப்படி பேசி இருக்கும் என்று நாம் ஏன் சுயபரிசோதனை செய்யக் கூடாது!? 
 
ரமலான் பேசவில்லை என்றாலும் நம் உள்ளம் பேசும். எது நல்லது? எது கெட்டது? என்பதை இந்த நஃப்ஸிற்கு அல்லாஹ் புரிய வைத்திருக்கிறான். 
 
எனவே தான் ஒருவன் கெட்ட செயலை செய்யும் போது அந்த மனசாட்சி இது கெட்டது, செய்யாதே, வேண்டாம் என்று சொல்லும். மீறி அதை செய்பவன் அந்த மனசாட்சியை சாகடித்து விட்டு, அந்த செயலை செய்கிறான்.
 
அல்லாஹ் கூறுகிறான் :
 
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
 
எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். (அல்குர்ஆன் 91 : 9, 10)
 
அந்த மனசாட்சி நமக்கு அறிவுரை சொல்கிறது; நமக்கு உபதேசம் சொல்கிறது; சில நேரங்களில் நம்மை பழிக்கிறது.
 
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ (1) وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
 
மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன். (குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். (அல்குர்ஆன் 75 : 1,2)
 
நம் மனசாட்சியில் ஒன்று, நம்மை பழிக்கக் கூடிய ஏசக்கூடிய மனசாட்சி. நம்மை திருத்தக் கூடிய மனசாட்சி. அந்த மனசாட்சியின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். நம்மை புகழக்கூடிய மனசாட்சி என்று ஒன்றை அல்லாஹ் படைக்கவில்லை. 
 
தீமையின் பக்கம் நம்மை திருப்பக் கூடிய ஒரு நஃப்ஸ் இருக்கிறது. யார் அந்த தீமையில் மூழ்கி விட்டார்களோ அவர்கள் கடலில் விழுந்த கப்பலைப் போல. நடு கடலில் மூழ்கிய கப்பலை எப்படி தேடுவது? 
 
அதுபோன்று தான் பாவத்தில் ஒரு நஃப்ஸ் மூழ்கி விட்டால், மன இச்சைகளில் இந்த நஃப்ஸ் மூழ்கிவிட்டால் மரணத்தை தவிர அதற்கு வேறு இல்லை. 
 
மரணம் மட்டும் தான் அதனுடைய ஆசையை முடிவுக்கு கொண்டு வரும். மரணமே அதன் எல்லை. 
 
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று மனிதனுடைய வயிறை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. இன்னொரு அறிவிப்பில் மனிதனுடைய வாயை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. (1)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5956, 5957.
 
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! பழிக்கக்கூடிய ஆன்மா பேசும், நாம் தனிமையில் இருக்கும்போது பேசும், உன்னுடைய மறுமைக்காக என்ன தேடினாய் என வினவும்? உன்னுடைய ரப்பை திருப்தி படுத்தினாயா எனக் கேட்கும்? 
 
இப்படி பல விஷயங்களை பழிக்கக் கூடிய இந்த நஃப்ஸ் வினவும். ஒருவரை நாம் கண்டித்து கொண்டிருப்போம், அந்த நேரத்தில் நம் நஃப்ஸ் நம்மை கண்டிக்கும். 
 
சில நேரங்களில் நம் பிள்ளைகளிடம் இந்த விஷயத்தை செய்யாதே என கூறுவோம். அப்போ நம் நஃப்ஸ் நீ இதை செய்தாயே எனக்கூறும்! 
 
ரமலான் பேசவில்லை என்றால் என்ன? அந்த நஃப்ஸ் நம்மிடத்தில் பேசும். அந்த நஃப்ஸை பேச விடுங்கள், தனிமையில் அதற்கு பேசுவதற்கு உரிமை கொடுங்கள். 
 
நம்மைப் பற்றி அல்லாஹ்விற்கு அடுத்ததாக நம்முடைய நஃப்ஸிற்கு தான் நம்மை நன்றாக தெரியும். பிறருக்கு யோக்கியமானவர்களாக இருக்கலாம். நம் நஃப்ஸ் வெளியே வேஷம் போடாதே! எனக்கூறும். 
 
ஆகவேதான், அரபியில் முபாலகா -ஒன்றை மிகைப்படுத்தி அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி சொல்வதற்கான அந்த பதத்தை அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான். 
 
லவ்வாமா என்று கூறுகிறான். மிகைப்படுத்துவது என்று பொருள். பழிக்கக்கூடிய, அந்த மனிதனை பழித்துக் கொண்டே இருக்கக்கூடிய அந்த ஆன்மாவின் மீது சத்தியமாக! என்று அல்லாஹ் கூறுகிறான். மகத்தான ஒன்றின் மீது தான் ரப்பு சத்தியம் செய்வான். 
 
முந்தியவர்களின் வரலாறுகளை இந்த ரமலான் கூறவில்லை என்றால் என்ன? நாம் படித்திருக்கவில்லையா? 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அமல்களை பார்க்கிறோம் . 
 
يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ
 
மற்ற நாட்களில் அவர்கள் சிரமப்படாத சிரமத்தை இந்த ரமலானில், குறிப்பாக இறுதிப் பத்தில் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2009.
 
ரமலானே வணங்குவதற்காக. அதற்குப் பிறகு, இந்த கடைசி பத்து வந்துவிட்டால் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு இரவையும் அவர்கள் அமல்களைக் கொண்டு உயிர்பிப்பார்கள். 
 
நம்மை போன்று கிடையாது. இரவில் மூன்றில் ஒரு பகுதியை வீணடித்து விட்டு பிந்திய பகுதியில் தான் நாம் இபாதத்தை ஆரம்பிக்கிறோம். அதிலும் கடைசி பகுதியை வெட்டி விடுகிறோம்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃரிபிலிருந்தே அந்த இரவை எதிர் பார்த்து அதில் அமலை ஆரமிப்பார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடிக்கின்ற வரை இபாதத்தில் இருப்பார்கள். 
 
ஆனால் நாம் ஓரிரு மணி நேரங்கள் நின்று தொழுதால் போருக்கு சென்று வந்தது போல் உணருகின்றோம்.
 
தபூக் போரை நினைத்துப்பாருங்கள். ஏறக்குறைய மதீனாவில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகரத்திற்கு கடுமையான வெயில் காலத்தில், அதிலும் அரேபிய பாலைவனத்தின் உச்ச வெயிலில் ஆயுதங்களை எடுத்து, நடந்தவர்களாக சென்று, நடந்தவர்களாக திரும்பி வந்தார்கள். 
 
அந்த ஒரு போரை நினைத்துப் பார்த்தால் நாம் வாழ்க்கையில் செய்யக்கூடிய இபாதத்துகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. 
 
இந்த நஃப்ஸை பேசவிட்டு பாருங்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதரின் இந்த ஹதீஸை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். 
 
மற்ற நாட்களில் அவர்கள் சிரமப்படாத சிரமத்தை இந்த ரமலானில் கடைசிப் பத்து இரவுகளில், அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இரவை முழுமையாக அவர்கள் உயிர்ப்பித்து விடுவார்கள். (2)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1884.
 
இரவை உயிர்ப்பிப்பது என்றால் என்ன? இவர்கள் இரவில் விழித்து இருப்பார்கள். முழுமையாக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். 
 
நம்மை போன்றா? நாம் அந்த கடைசிப் பத்து நாட்களில் தான் ஷாப்பிங் செய்கிறோம். நம்மிடத்தில் இருக்கக்கூடிய எத்தனையோ ஆடைகள், புதுமை மாறாமல் இருக்கின்றனவா? இல்லையா? மனசாட்சியோடு சொல்லுங்கள்.
 
இது இபாதத்துடைய நேரம் என்று நம்முடைய நஃப்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் அதை கெடுத்து வைத்திருக்கின்றோம்.  நஃப்ஸ் நம்மை கெடுக்கிறது எனக் கூறுகிறோம் அல்லவா? உண்மையில் பார்த்தால் அந்த நஃப்ஸை கெடுத்தது நாம் தான். இந்த இரவை நான் வீணாக்க மாட்டேன் என்று ஏன் நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை? 
 
அல்லாஹ்வின் தூதர் இரவை ஹயாத்தாக்குவார்கள் என்றால் அந்த இரவை முழுமையாக ஈடுபடுத்தி விடுவார்கள். 
 
ஆகவேதான், அந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : 
 
شَدَّ مِئْزَرَهُ
 
அவர்கள் தங்கள் ஆடையை இறுக்கிக் கட்டிக் கொள்வார்கள். (2)
 
என்ன கருத்து? நபியவர்கள், மனைவிமார்களிடத்தில் கூட நெருங்க மாட்டார்கள். அவர்களை விட்டு விலகியிருப்பார்கள். 
 
இன்னும் மேலாக நபியவர்களுடைய வீடு மஸ்ஜித் உடைய சுவர் அவ்வளவுதான், திரையை நீக்கினால் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வீடு. ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வீடு.
 
இன்று நம்முடைய வீட்டை போலவா, நபியவர்களின் வீடு? அந்த வீட்டில் என்றாவது வீணான பேச்சுக்கள் நடந்து இருக்குமா? அல்லாஹ்வை மறந்த செயல்கள் நபியவர்களின் வீட்டில் நடந்திருக்குமா? பாவத்தை பார்ப்பவர்கள், பாவத்தை கேட்பவர்கள், மறுமையை மறந்தவர்கள் அங்கே இருந்தார்களா?
 
இல்லையே! அத்தகைய பரிசுத்தமான வீட்டை கூட நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒதுக்கி வைத்து விட்டு, முழுமையாக மஸ்ஜிதுக்குல் வந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். அல்லாஹ்விடம் அண்டி விடுகிறார்கள். 
 
ஏன் இன்னும் மேலாக, அந்த மஸ்ஜிதில் கூட உட்கார்ந்தால் பிறரிடத்தில் பேச வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என பயந்து அதற்குள் ஒரு கூடாரத்தை அல்லாஹ்வை வணங்குவதற்காக ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
 
பகல் நேரத்தில் தொழுகை முடிந்து விட்டால், அந்த கூடாரத்தின் திறைகளை மூடிக்கொண்டு, அதில் புகுந்து கொள்வார்கள். 
 
எவ்வளவு திக்ர் செய்திருப்பார்கள்! எவ்வளவு அழுதிருப்பார்கள்! எவ்வளவு இஸ்திஃபார் செய்திருப்பார்கள்! தனது ரப்பிடத்தில் என்ன என்ன துஆக்கள்  கேட்டிருப்பார்கள்! சிந்தித்து[ பாருங்கள்! 
 
இன்று நாம் வாழும் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்! எந்த அளவு மறதியிலும், அலட்சியத்திலும், கவனக்குறைவிலும், வேறு வேறு காரியங்களில் ஈடுபடுபவர்களாக இந்த ரமலானை செலவு செய்கிறோம். சிலர் எப்போது இந்த ரமலான் முடியும் என நினைக்கிறார்கள்! (அஸ்தஃபிருல்லாஹ்)
 
சிலர் இந்த ரமலான் என்னை விட்டுப் போகிறது என்று கவலை கொள்வார்கள்! 
 
ஸாலிஹுன் என்ற நல்லவர்களுக்கும், அமல்களில் முந்தக்கூடிய அல்லாஹ்விற்கு நெருக்கமாக முயற்சி செய்யும் சாபிகூன்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இதுதான் வித்தியாசம். 
 
அமல்களுக்குரிய சீசனாக எடுத்துக்கொண்டு இரட்டிப்பான நன்மைகளை கிடைக்க அமல்களில் ஈடுபடக்கூடிய நல்லவர்கள் இந்த ரமலான் போகிறதே! என வருந்தி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள்; பயந்து கொண்டிருப்பார்கள். 
 
சோம்பேறிகளாக இருப்பவர்கள் ரமலான் கஷ்டமாக இருக்கிறதே! என எண்ணி ஈத் கொண்டாடுவதற்கான ஏற்பாட்டில் ரமலானை கழிப்பார்கள். 
 
இங்கே ரமலானில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கிடைத்ததை வாயில் போட்டுக்கொண்டு, அல்லாஹ்வுக்கு முன்னால், அழுகையிலும், இபாதத்திலும்  இருந்தார்கள். 
 
ஆனால் நம்மில் சிலர் ரமலானிற்குப் பிறகு உள்ள ஈத் கொண்டாட்டத்திற்கு திட்டம் போடுகிறார்கள். 
 
நம்முடைய இந்த இழி நிலையைப் பார்த்து, நம்முடைய நஃப்ஸ், உனக்கு நான் என் கிடைத்தேன்? எனக்கு முன்னதாகவே நீ இறந்திருக்கக் கூடாதா? என்று அல்லவா கேட்கும்.
 
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரில் ஏறும்போது, மூன்று படிகளில் கால் வைக்கும்போது, மூன்று முறை ஆமீன் கூறினார்கள். 
 
அதில் ஒரு ஆமீன் இந்த ரமலான் கிடைக்கப்பட்டதற்கு பிறகும், யாருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வில்லையோ அவர்கள் நாசமாகட்டும்! (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!) (3)
 
அறிவிப்பாளர் : கஃப் இப்னு உஜ்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானி, எண் : 15647, 16004.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லைலத்துல் கத்ரை தேட சொன்னார்கள். அந்த கடைசி பத்து இரவுகளில் குறிப்பாக நாம் அதனை கவனத்தில் வைக்க வேண்டும். 
 
இன்று அமல் என்று வந்தால் சரி போயிட்டு போகுது என்கிறோம். 
 
யாருக்கு போகிறது? அமல் செய்பவனே! நரக வேதனையிலிருந்து உன்னை நீ காத்துக்கொள்கிறாய். அமல் செய்பவனே அல்லாஹ்வின் பொருத்தம் உனக்கு கிடைக்கப்போகிறது. நாம் அமலுக்கு தேவையில்லை. நமக்கு தான் அமல் தேவை. அமல் அல்லாஹ்வுடையது.
 
நீ குர்ஆனை ஓதவில்லை என்றால் என்ன? குர்ஆன் ஓதக் கூடிய லட்சக்கணக்கான ஹாபிள்கள் இருக்கிறார்கள். நீ தொழவில்லை என்றால் என்ன? லட்சக்கணக்கான மக்கள் தொழுவார்கள். மக்கள் தொழாமல் இருந்தாலும் அல்லாஹ்வின் கோடிக்கணக்கான படைப்புகள் அவனைத் தொழுது கொண்டிருப்பார்கள்.
 
சொர்க்கம் நமக்குத் தேவை. சொர்க்கத்திற்கு நாம் தேவையில்லை. சொர்க்கத்தை தேடி அமல் செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். சொர்க்கத்திற்கு நீங்கள் தேவை என்று கூறவில்லை. 
 
அமல் என்று வந்த பிறகு கூட, ஒரு கூட்டம் தேவையில்லை என புறக்கணித்துக்கொண்டு, அவர்கள் இஷ்டத்திற்கு இருக்கிறார்கள். 
 
இன்னொரு கூட்டமோ, அரைகுறை கூட்டம். அமல்கள் அனைத்தும் செய்வார்கள். ஆனால் அதில் சலுகைகளை எதிர்பார்ப்பார்கள். 
 
உதாரணமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். எனவே 21, 23, 25, 27 ஆகிய நாட்களில் மட்டும் தொழுது மற்ற நாட்களில் தொழமாட்டார்கள்.
 
அமல்கள் மீதுள்ள ஆர்வம் நம்மைப்போன்ற சோம்பேறிக்கு இவ்வளவுதான். அமல் செய்ய வேண்டும், ஆனால் நமக்கு ஏற்றவாறு அமல்களில் கொஞ்சம் சலுகை இருக்க வேண்டும். இதுதான் நாம்.
 
இன்னொரு கூட்டம் கடைசி பத்தாக இருக்கட்டும், ரமலானாக இருக்கட்டும், ஒரு சஹாபி 27 ல் அதிகபட்சம் இருக்கலாம் என்பதை வைத்துக்கொண்டு அந்த இரவு மட்டும் தொழுவார்கள். மஸ்ஜிதை செழிப்பாக்குவார்கள்.
 
ஹத்முல் குர்ஆன் என்று ஒரு துஆவை ஓதுவார்கள். ஆனால் அந்த துஆவிற்க்கும் குர்ஆனுக்கும் சம்பந்தம் கிடையாது. அந்த துஆவிற்க்கும் ஹதீஸ்களுக்கும் சம்பந்தம் கிடையாது. இவ்வளவு குழப்பம் மிக்க துஆ அது.
 
அவர்கள் சுப்ஹ் தொழமாட்டார்கள், ஜும்ஆவிற்கு வருவார்கள், அசர் தொழுகைக்கு வர மாட்டேன் என்ற நோக்கத்தோடு. இவர்களிடமிருந்து அல்லாஹ் ஜும்ஆ தொழுகையை ஏற்பானா? ஏற்க மாட்டான்.
 
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ
 
அசருடைய தொழுகை ஒரு நாளில் இழப்பது, தனது சொத்து, குடும்பம் என அனைத்தையும் இழப்பதற்கு சமம் என்று கூறினார்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 519.
 
சகோதரர்களே! நாம் எப்படிப்பட்ட இழிவான நிலையில் இருக்கிறோம் என்று பாருங்கள். லைலத்துல் கத்ரை பற்றி வரக்கூடிய பெரும்பாலான ஹதீஸ்கள்,
 
تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
 
ரமலானின் கடைசிப் பத்தில் எல்லா இரவிலும் தேடுங்கள் என்று தான் வந்திருக்கிறது.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1880.
 
இன்னொரு ஹதீஸில் ஒற்றைப்படையில் தேடுங்கள் என்று வருகிறது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள். 
 
எனக்கு இந்த லைலத்துல் கத்ர் காண்பிக்கப்பட்டதை உங்களுக்கு சொல்வதற்காக வரும்போது, இருவர் சண்டை செய்து கொண்டிருந்தார்கள், அதனால் எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால், எனக்கு காண்பிக்கப்பட்ட லைலத்துல் கத்ரில், நான் அன்று மஸ்ஜிதில் தொழுது விட்டு திரும்பும் போது, எனது முகமெல்லாம் ஈரமாக இருந்தது, மண் ஒட்டி இருந்தது, அதை நான் பார்த்தேன் என்றார்கள். 
 
இந்த ஹதீசை அறிவிக்கக்கூடிய சஹாபி அன்று 23 ஆக இருந்தது, மழை பெய்தது, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஸ்ஜித் கூறையாக இருந்தது, மழை நீரை தடுக்க கூடிய அளவுக்கு இல்லை. மழை பெய்து ஈரமான போது அந்த சேற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஃபஜர் தொழ வைத்தார்கள் என்று கூறுகிறார்கள். (4)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உனைஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1997.
 
நாமாக இருந்தால் சேற்றில் தொழுவதா? என்று பள்ளிக்கே சென்றிருக்கமாட்டோம். நமக்கெல்லாம் சௌகரியமாக இருந்தால்தான் இபாதத். 
 
முஸ்லிமிலும் சரி, புகாரியிலும் சரி கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவில் தேடுங்கள் என வருகிறது. ஒற்றைப்படை இரவு 21, 23, 24, 27 என்று வருகிறது. 
 
ஆனால் இதே முஸ்லிம், புகாரியில் ஒற்றைப்படை இரவை பின்னால் இருந்து ஆரம்பியுங்கள் என வருகிறது. 
 
فِي تَاسِعَةٍ تَبْقَى فِي سَابِعَةٍ تَبْقَى فِي خَامِسَةٍ تَبْقَى
 
பின்னால் இருந்து கவனித்து பார்த்தால் மீதமிருக்க கூடிய 9 ஆவது இரவென்றால் அது 28 ஆக இருக்கும். மீதம் இருக்கக்கூடிய ஐந்தாவது இரவில் என்றால் அது 6 ஆக இருக்கும் இப்படி வருகிறது. (5)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1881.
 
அல்லாஹ் தஆலா இந்த லைலத்துல் கத்ருடைய விஷயத்தை இவ்வளவு மறைவாக ஆக்கிவிட்டான்.
 
இன்று எப்படி இந்த கடைசி பத்து எப்படி எடுத்துக்கொள்ள படுகிறதோ நபித்தோழர்களின் வாழ்க்கையில் அப்படி இல்லை. 
 
அவர்கள் ஹதீஸை முழுமையாக விளங்கிய காரணத்தால் தான் கடைசி பத்து இரவில் முழுமையாக பயன்படுத்தினார்கள்.
 
நாம் ஒரு ஹதீஸை எடுத்துக் கொண்டு, இன்னொரு ஹதீஸை விட்டு விடுகின்ற காரணத்தினால்தான் நாம் சோம்பேறித்தனமாக, நமது சலுகைகளுக்கு ஏற்றவாறு ஹதீஸ்களை எதிர்பார்க்கிறோம். 
 
அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! இந்த அமல்களின் பலனை அல்லாஹ் மறுமையில் காட்டுவான். 
 
அமல்கள் செய்தவர்கள் எல்லாம் சிராத்து பாலத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய அமல்களின் ஏடுகள் எல்லாம் கனத்துக் கொண்டிருக்கும் போது, நபியவர்களின் சிபாரிசுக்கு தகுதியான முதல் கூட்டத்தில் அவர்கள் கொண்டு செல்லும் போது, சொர்க்கம் அலங்கரிக்கப்பட்டு, விசாரணை இல்லாமல் சொர்க்கத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்படும் போது, அப்போது தெரியும் இந்த அமல்களின் அருமை! 
 
ஆஹிரத்திலுள்ள ஒரு நாள் உலகத்தின் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமானது. அந்த நாளில் மஹ்ஷரில் நிற்கக்கூடிய நிலையை நினைத்துப் பாருங்கள்! 
 
மஹ்ஷரில் நின்று தீர்ப்பை எதிர்பாத்து நிற்கக்கூடிய அந்த ஒரு நாள், இன்னாருடைய மகன் இன்னார் வலது பக்கம் வாருங்கள் என்பதை எதிர்பார்த்து நிற்க கூடிய அந்த நாள், நல்லவர்களின் கூட்டத்தோடு ஒதுங்குங்கள், தக்வாவோடு உள்ளவர்களிடம் ஒதுங்குங்கள் என்று அழைக்கப்படுகின்ற அந்த ஒருநாளை நினைத்துப் பாருங்கள். 
 
பூமி எல்லாம் வேறு பூமியாக மாற்றப்பட்டு, சூரியன் ஒரு மைல் தூரத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்குமே! அப்போதுதான் நம் அமல்களின் பலன் தெரியும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
 
நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும் (என்றும் கூறுவார்கள்). (அல்குர்ஆன் 76 : 10)
 
சஹாபாக்கள் மறுமைக்குப் பயந்து பயந்து அமல் செய்தார்கள். அங்கே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே உண்மையில் வெற்றியாளர்கள். 
 
இந்த கடைசி பத்து நாட்களில், கஷ்டப்பட்டு, நமது கண்கள் வலிக்க, நமது உடல் உறுப்புகளில் அந்த இபாதத்துடைய வலிகள் தெரியட்டும். அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதற்காக, நாம் செய்த பாவங்களை மன்னிப்பதற்காக.
 
எத்தனை விஷயங்களுக்காக இரவை கழித்திருக்கிறோம், எத்தனை இரவுகளை வீணான செயல்களுக்காக வீணடித்து இருக்கின்றோம். 
 
அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்க இந்த உடலுக்கு அசதி ஏற்படுகிறது என்றால், இந்த உடல் மறுக்கிறதென்றால், பின் எதற்கு அல்லாஹ் கொடுத்த உணவை சாப்பிடுகிறோம், எதற்காக இந்த உடல்? அல்லாஹ்விடத்தில் நின்று வணங்கவில்லை என்றால், இந்த உடல் எதற்கு? அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
 
நபியவர்களின் இந்த ஒரு ஹதீஸை நினைத்து பாருங்கள் :
 
கடைசி பத்து வந்து விட்டால், இபாதத்தில் அந்த இரவை முழுமை ஆக்குவார்கள், மனைவிமார்களை எழுப்பி விடுவார்கள், குடும்பத்தை விட்டு விலகியிருப்பார்கள், மற்ற நாட்களில் செய்யாத சிரமங்களை இந்த நாட்களில் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2009.
 
ஆகவே, மற்ற நாட்களை விட இந்த கடைசி பத்தில் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் முழுமையாக அல்லாஹ்விடம் நின்று வணங்குவார்கள். 
 
நபியவர்களைப் பின்பற்றி, அந்த ஆர்வத்தை நாம் நமக்குள்ளே வரவழைத்து,  அல்லாஹ்வுடைய இபாதத்தில் முன்னேறுவோமாக! அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுவோமாக! 
 
நமக்காகவும் நம்முடைய சமுதாய மக்களுக்காகவும் துஆ செய்வோமாக! அல்லாஹ் நம்மை நேர்வழியின் பக்கம் திருப்பி, வேதத்திற்காகவும் நபியின் சுன்னாவிற்காகவும் வாழ்ந்து, பின்பற்றி வாழக் கூடிய நன்மக்களில் உங்களையும், என்னையும் அல்லாஹ் சேர்த்து அருள் புரிவானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى ثَالِثًا وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ (صحيح البخاري 5956 -)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ (صحيح البخاري 1884 -)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا عَلِيُّ بن عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا إِسْحَاقُ بن مُحَمَّدٍ الْفَرْوِيُّ ح، وَحَدَّثَنَا يَحْيَى بن أَيُّوبَ الْعَلافُ، حَدَّثَنَا سَعِيدُ بن أَبِي مَرْيَمَ، قَالا: حَدَّثَنَا مُحَمَّدُ بن هِلالٍ، مَوْلَى بني جُمَحَ الْمَدِينِيُّ، عَنْ سَعْدِ بن إِسْحَاقَ بن كَعْبِ بن عُجْرَةَ، عَنْ أبِيهِ، عَنْ جَدِّهِ كَعْبِ بن عُجْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَرَجَ يَوْمًا إِلَى الْمِنْبَرِ، فَقَالَ حِينَ ارْتَقَى دَرَجَةً:"آمِينَ، ثُمَّ ارْتَقَى الأُخْرَى، فَقَالَ: آمِينَ، ثُمَّ ارْتَقَى الثَّالِثَةَ فَقَالَ: آمِينَ"، فَلَمَّا نَزَلَ عَنِ الْمِنْبَرِ وَفَرَغَ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ سَمِعْنَا مِنْكَ كَلامًا الْيَوْمَ مَا كُنَّا نَسْمَعُهُ قَبْلَ الْيَوْمِ؟، قَالَ:"وَسَمِعْتُمُوهُ؟"، قَالُوا: نَعَمْ، قَالَ:"إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ الَسَلامَ، عَرَضَ لِي حِينَ ارْتَقَيْتُ دَرَجَةً، فَقَالَ: بَعُدَ، مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبْرِ أَوْ أَحَدَهُمَا لَمْ يُدْخِلاهُ الْجَنَّةَ، قَالَ: قُلْتُ: آمِينَ، وَقَالَ: بَعُدَ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ وَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ رَمَضَانَ، فَلَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ". (المعجم الكبير للطبراني- 15647)
 
குறிப்பு 4)
 
و حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرِو بْنِ سَهْلِ بْنِ إِسْحَقَ بْنِ مُحَمَّدِ بْنِ الْأَشْعَثِ بْنِ قَيْسٍ الْكِنْدِيُّ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ وَقَالَ ابْنُ خَشْرَمٍ عَنْ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أُنْسِيتُهَا وَأَرَانِي صُبْحَهَا أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ قَالَ فَمُطِرْنَا لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ فَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْصَرَفَ وَإِنَّ أَثَرَ الْمَاءِ وَالطِّينِ عَلَى جَبْهَتِهِ وَأَنْفِهِ (صحيح مسلم 1997 -) قَالَ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ أُنَيْسٍ يَقُولُ ثَلَاثٍ وَعِشْرِينَ 
 
குறிப்பு 5)
 
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ الْقَدْرِ فِي تَاسِعَةٍ تَبْقَى فِي سَابِعَةٍ تَبْقَى فِي خَامِسَةٍ تَبْقَى (صحيح البخاري 1881 -)
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/