HOME      Khutba      ரமழான் இறுதி பத்து வரப்போகிறது | Tamil Bayan - 524   
 

ரமழான் இறுதி பத்து வரப்போகிறது | Tamil Bayan - 524

        

ரமழான் இறுதி பத்து வரப்போகிறது | Tamil Bayan - 524


بسم الله الرحمن الرّحيم
 
ரமழான் இறுதி பத்து வரப்போகிறது
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
 
அல்லாஹ்வை பயந்து வாழுமாறு, அல்லாஹ்வின் பயத்தை தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும், அல்லாஹ்வுடைய இல்லத்திலும், கடை தெருவிலும் இப்படி எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா நேரங்களிலும் அல்லாஹ் நம்மை பார்க்கிறான்; கண்காணிக்கிறான்; நமது செயல்கள் பதிவு செய்யப்படுகிறது; ஒவ்வொரு சொல்லும் செயலும் எழுதப்படுகிறது; என்பதை நினைவில் வைத்தவர்களாக, அல்லாஹ்வை பயந்து அச்சத்தோடு வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்துக் கொண்டு இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
 
 
அல்லாஹ் நம் அனைவருடைய பாவங்களையும் இந்த புனிதமான மாதத்தில் மன்னித்தருள்வானாக! நம்முடைய பெற்றோர், குடும்பத்தார், முஃமினான ஆண் பெண் அனைவருடைய பாவத்தையும் மன்னித்து நல்லடியார்கள் உடன் அல்லாஹ் உங்களையும் என்னையும் சேர்த்து அருள் புரிவானாக! ஆமீன். 
 
 
அன்பானவர்களே! எந்த ஒரு மாதத்தை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமோ அல்லாஹ்வுடைய அருளால் அந்த மாதம் கிடைக்கப் பெற்றிருக்கிறோம். ரமலான் மாதம் வந்த உடனேயே முஃமின்களின் அடுத்த எதிர்பார்ப்பு; ரமலானில் கடைசிப் பத்து கிடைக்க வேண்டுமென்பது. இந்த ரமழானின் கடைசி பத்து எனக்கு எப்படி கிடைக்கும்? அந்த கடைசி பத்தை நான் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமே என்று முஸ்லிம்கள் முஃமின்கள் ஆர்வம் கொள்கிறார்கள். 
 
 
 
அதாவது இபாதத்துக்காக வாழக்கூடியவர்கள், இபாதத்துகளை சேகரித்துக் கொள்ள வேண்டும், அதிகப்படுத்த வேண்டும் என்று நாட்டம் உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். 
 
 
 
சகோதரர்களே! இங்கே நாம் ஒரு விஷயத்தை குறிப்பாக நினைவில் வைக்க வேண்டும். நம்முடைய இன்றைய கலாச்சாரத்தில் பல விஷயங்களில் நாம் இஸ்லாமிய அடிப்படைகளை விட்டு விலகி இருக்கிறோம் என்பதுடைய உதாரணங்களில் ஒன்று; இன்று நமது சமூக மக்கள் இந்தக் கடைசி பத்தை வீணடிப்பது. ஒரு சொற்ப கூட்டம்தான் இபாதத்துக்காக செலவழிக்கிறார்கள்; இபாதத்தில் கவனம் கொள்கிறார்கள். 
 
 
 
உம்மத் உடைய பெரும்பாலான மக்களை நாம் கவனித்தால் கடைசி பத்து என்பது குடும்பத்தார்களுக்கு உள்ளது. அதாவது அவர்களுக்கு பெருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடு செய்வது, ஷாப்பிங் செய்வது. பெருநாளில் உணவுக்காக வேண்டியுள்ள ஏற்பாடு. இப்படியாக அந்த கடைசி 10 நாட்கள் பொருள்களை வாங்குவதில், பெருநாள் கொண்டாடும் தயாரிப்பில், ஆடை அலங்காரம் சேர்ப்பதில் வீணடிக்கப்படுவது மிகப்பெரிய வருத்தத்திற்குரிய செய்தி. 
 
 
 
ரமலான் மாதமா? இல்லை எனில் வேறு ஏதேனும் விழாவா? என்று நம் சமூக மக்களை பார்த்து கவலைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். 
 
 
 
ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் கூற்றான, நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்கு தவிர வேறு எதற்கும் படைக்கவில்லை. (அல்குர் ஆன் 51 : 56) என்பதை மிகச்சரியாக புரிந்தவர்கள். அதற்குப் பிறகு அவருடைய தோழர்கள். 
 
 
 
வாழ்க்கையே வணங்குவதற்கு என்றால் வணக்கத்திற்கு பிறகுதான் மற்ற வேலைகள். படைத்த ரப்புல் ஆலமீனுக்கு முன்னால் சூஜூது செய்த பிறகுதான் மற்ற வேலைகள். அந்த படைத்த ரப்பு உடைய ஹக்கை நிறைவேற்றிய பிறகு தான் நம்முடைய மற்ற விருப்பங்கள். 
 
 
 
எனக்கு தூக்கம் தேவை; பிள்ளைகள்கள் தேவை; வியாபாரம் தேவை. ஆனால் எல்லா தேவைகளை விட அல்லாஹ்வின் கட்டளை எனக்கு முதன்மையானது என்ற அந்த அடிப்படை நோக்கத்தை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் முன்வைத்து வாழ்ந்தார்கள். எனவே அவர்களுக்கு இபாதத்கள் லேசாக இருந்ததுல்; இலகுவாக இருந்தது. 
 
 
 
இபாதத் என்பது சிரமமான ஒன்று. ஆனால் நோக்கத்தை புரிந்த காரணத்தால் மறுமையை நம்பி இருந்த காரணத்தால் அந்த இபாதத் நபியவர்களுக்கு லேசாக இருந்தது. 
 
 
 
காரணம் என்ன? இந்த இபாதத் இல்லை என்றால் மறுமை சிரமமாகிவிடும். மறுமையின் சிரமம் மிக பயங்கரமானது. 
 
 
 
நரகவாசிகளை பார்த்து, பாவம் செய்யக் கூடியவர்களைப் பார்த்து, அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணிப்பவர்களைப் பார்த்து, ஹராம் செய்யக்கூடியவ மக்களைப் பார்த்து, மன இச்சைகளின் பின்னால் செல்லக்கூடிய மக்களைப் பார்த்து ரப்புல் ஆலமீன் கேட்கிறான். 
 
فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ
 
நரக நெருப்பை தாங்குவதற்கு உங்களுக்கு என்ன சக்தி இருக்கிறது? (அல்குர்ஆன் 2 : 175)
 
 
 
சகோதரர்களே! நமது நபியின் வாழ்க்கையை நாம் பார்த்தால், அவர்கள் சுன்னத் தொழுதார்கள்; நஃபில் தொழுதார்கள்; துஆக்கள் ஓதினார்கள்; வணக்க வழிபாடுகளில் அவர்கள் சிறந்து இருந்தார்கள்; குர்ஆன் ஓதினார்கள்; மேலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு இந்த புனிதமான இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்து வைத்தார்கள். 
 
 
 
சமூகப்பணிகள், குடும்ப சுமைகள், போர்கள் இவ்வளவு இருந்தும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இபாதத்திற்காக தங்களை ஒதுக்கிக்கொண்டார்கள்.
 
 
 
நான் எனக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்கிறேன்; அவர்களுடைய பொறுப்புகளில் பணிகளில் கடமைகளில் ஒரு கடமை ஒருவருக்கு இருந்தாலும் நாம் என்ன செய்திருக்க முடியும்? 
 
 
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகத்தான பணியை சுமந்தார்கள். இரவுபகலாக அவர்கள் சிரமப்பட்டார்கள். ஆனால் அவர்களுடைய அந்த சிரமங்கள், அசதி, களைப்பு, அவர்களுடைய கல்வி பணியாக இருக்கட்டும், சீர்திருத்த பணியாக இருக்கட்டும், குடும்ப சுமையாக இருக்கட்டும், அது எதுவும் அவர்களை அல்லாஹ்வின் இபாதத்துகளில் இருந்து திருப்பவில்லை. அல்லாஹ்வுக்கு சிரம் பணிவதை சுமையாக ஆக்கவில்லை. 
 
 
 
நபி (ஸல்) அவர்கள் நம்மை போன்ற வசதி உடையவராக இருந்தார்களா? வசதிகளை அனுபவித்தார்களா? 
 
 
 
இல்லை. தண்ணீர்கூட ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டு வந்தால்தான் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கும். இன்னும் மற்ற மற்ற தேவைகளை நிறைவேற்றுவதிலும் சிரமங்கள் இருந்தன. இவ்வளவு சிரமங்கள் இருந்தும் அல்லாஹ்வுடைய இபாதத்துக்கு அவர்கள் கொடுத்த நேரத்தை கவனியுங்கள்.
 
 
 
அன்பானவர்களே! இன்று நம்மிடம் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் இபாபதத்துடைய நேரத்தை நாம் எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து மற்ற விஷயங்களுக்கு எவ்வளவு கூட்டம் முடியுமோ கூட்டி வைத்திருக்கிறோம். 
 
 
 
ஓய்விற்கு, உணவிற்கு இன்னும் பல விஷயங்களுக்கு நேரத்தை கூட்டிவிட்டு இபாதத்துக்கு மட்டும் நேரத்தை குறைத்து வைத்திருக்கிறோம்.
 
 
 
மஸ்ஜிதுக்கு வரும்போதே மணியை பார்த்து உள்ளே வருவோம். தொழுது முடித்த உடனே அவசரமான வேலை இருக்கிறது என கூறி வெளியேறி விடுவது. 
 
 
 
அன்பானவர்களே! நாம் வெட்கப்பட வேண்டும். வாழ்நாளை இபாதத்துக்காக செலவழித்த ரசூலுல்லாஹ் இரவிலே நீண்ட நேரம் தொழும் வழக்கம் உடையவராக இருந்த நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களின் மனைவியார் கூறுகிறார்கள். 
 
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»
 
 
 
ரமலானுடைய கடைசி பத்து வந்துவிட்டால் முழு இரவிலும் இபாதத் செய்வார்கள். தனது குடும்பத்தாரையும் அவர்கள் தூங்க விடமாட்டார்கள் (எழுப்பி விடுவார்கள்). தன்னுடைய கீழ் ஆடையை இருக்க கட்டிக்கொள்வார்கள். 
 
 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2024.
 
 
 
இன்னும் மேலாக, தான் வேறு எதிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வுடைய மஸ்ஜிதில் இஃக்திகாஃபிற்கு வந்துவிடுவார்கள். படைப்புகளின் தொடர்பில் இருந்து விலகி படைத்தோனுடைய தொடர்புக்கு நபி (ஸல்) அவர்கள் முழுமையாக வந்து விடுவார்கள். 
 
 
 
சகோதரர்களே! ரமலான் நன்மைகளுக்கான மாதம். அதிலும் இந்த கடைசி பத்து மிக விஷேசமான ஒன்று. இந்த கடைசி பத்தில் தான் அல்லாஹ் விசேஷமான இரவை வைத்திருக்கிறான். அதுதான் லைலத்துல் கத்ர். 
 
 
 
மனிதர்களாகிய நாம் இதை புரிந்துகொண்டோமோ இல்லையோ அல்லாஹ்வுடைய வானவர்கள் இந்த இரவின் உடைய மகத்துவத்தை விளங்கி வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்;
 
 
 
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ
 
அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். (அல்குர்ஆன் 97 : 4)
 
 
 
ரப்புல் ஆலமீன் இந்த இரவைப் பற்றி கூறும் போது,
 
حم (1) وَالْكِتَابِ الْمُبِينِ (2) إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ
 
ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம். (அல்குர்ஆன் 44 : 1-3)
 
 
 
நான் விளங்கி வைத்திருக்கும் பரக்கத் வேறு; அல்லாஹ்வுடைய கஜானா வேறு. சொர்க்கத்தின் பரக்கத்தை நினைத்துப்பாருங்கள். 
 
 
 
அன்பானவர்களே! பரக்கத் என்ன தெரியுமா? நீங்கள் இங்கு ஒரு ''சுப்ஹானல்லாஹ் '' அல்ஹம்துலில்லாஹ் '' அல்லாஹு அக்பர் '' கூறினால் ரப்புல் ஆலமீன் சொர்க்கத்திலே உங்களுக்கு ஒரு மரத்தை நடுகின்றான். 
 
 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3807, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
 
 
அந்த மரத்தைப் பற்றி நபி ஸல் அவர்கள் மற்றொரு இடத்தில் சொன்னார்கள் ;
 
 
 
வேகமாக குதிரையில் சவாரி செய்யும் ஒரு குதிரை வீரர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் கூட அந்த மரத்தை சுற்றி விடமுடியாது.
 
 
 
அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6552.
 
 
 
நாம் கூறக்கூடிய திக்ருகளுக்கு பதிலாக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகை தருகிறானே அது பரக்கத்தான வியாபாரம். 
 
 
 
ஆனால் பரக்கத் என்றால் நம்முடைய சிந்தனைக்கு எது வருகிறது? பணம், காசு. அமல்கள் வருவதில்லை. அமல்களோடு, இபாதத்துகளோடு, தக்வாவோடு, ஈமானோடு, இக்லாஸோடு, ஹலாலோடு செல்வம் வந்தால் அது பரக்கத்.
 
 
 
ஆனால், ஹராமான வழியில் ஈட்டப்பட்ட செல்வம், ஜகாத் கொடுக்காமல் சேகரிக்கப்பட்ட செல்வம் ஆகியவை நரகத்தின் நெருப்பு கங்குகள். அனாதைகளுக்கு அநியாயம் செய்து, உறவுகளுக்கு வாரிசுகளுக்கு அநியாயம் செய்து, ஏமாற்றி மோசடி செய்து இப்படி ஹராமான வழியில் சேகரித்த எல்லா செல்வங்களும் நரகத்தின் நெருப்பு கங்குகள்.
 
 
 
ஒரு மனிதன் ஹராமில் வாழ்கிறான் என்றால் அவன் நரக நெருப்பில் வாழ்கிறான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! சம்பாதித்து கார் ஓட்டுவதை விட சம்பாதித்து ஒரு சைக்கிள் ஓட்டுவது சிறந்தது.
 
 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த லைலத்துல் கத்ர் உடைய இரவிலே லவ்ஹூல் மஹ்ஃபூலில் எழுதப்பட்ட நம் முடிவுகள் அதிலிருந்து எடுக்கப்பட்டு வானவர்களுக்கு ஒப்படைக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் அடுத்த ரமலான் வரை அடுத்த லைலத்துல் கத்ர் வரை யார் மரணிப்பார்? யாருக்கு திருமணம்? எது நடக்கும்? ஒவ்வொரு செயலும் எடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
 
 
 
அப்படி ஒரு பரக்கத்தான இரவு. அல்லாஹ் படைப்பினங்கள் உடைய அந்த தக்தீரை லவ்ஹுல் மஹ்ஃபூலில்  இருந்து எடுத்து வானவர்களிடம் ஒப்படைக்கிறான். இந்த இரவிலே நம்முடைய விதிகள் வானவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
 
 
 
புனிதமான குர்ஆன் அருளப்பட்ட லைலத்துல் கத்ருடைய இரவு இந்த கடைசி பத்தில் இருக்கிறது. அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இந்த லைலத்துல் கத்ர் இரவைத் தேடி இஃதிகாஃப் இருந்தார்கள். ஒவ்வொரு இரவையும் அவர்கள் ஹயாத் ஆக்கினார்கள்.
 
 
 
நபி (ஸல்) அவர்கள் ரமலான் அல்லாத மற்ற மாதங்களில் ஒருநாள் கால் வீங்க வணங்கிய போது அவர்களுடைய மனைவியார் ஆயிஷா (ரலி) கேட்கிறார்கள்; '' யா ரசூலுல்லாஹ் நீங்கள் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராயிற்றே! நீங்கள் ஏன் வணங்குகிரீர்கள்? '' அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்ன பதில்;'' நான் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக வேண்டும்'' (1)
 
 
 
நூல் : புகாரி, எண் : 4837.
 
 
 
இப்படி வாழ்நாள் முழுவதும் இபாதத்கள் செய்துகொண்டு இருந்தவர்கள் இந்த லைலத்துல் கத்ரை தேடி இரவெல்லாம் விழித்திருந்தார்கள் என்றால் இதனுடைய மகத்துவத்தை நாம் விளங்க வேண்டும். 
 
 
 
இதன் நன்மதிப்பை புரிந்தவர்களுக்கு தான் இது புரியும். யார் இந்த உலக விஷயங்களில் உழன்று கொண்டு மறுமையில் அலட்சியமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. 
 
 
 
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இந்த கடைசி பத்திலே தங்களுடைய குடும்பத்தார்களை எழுப்பி விடுவார்கள். தங்களுடைய தோழர்களுக்கு லைலத்துல் கதர் இரவை தேடுமாறு கட்டளை கொடுத்தார்கள். 
 
 
 
நபி (ஸல்) அவர்களின் ஆர்வத்தை முயற்சியை பார்த்த தோழர்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். 
 
 
 
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு அல்லாஹ்வின் மஸ்ஜிதிலே இருக்கும் வழக்கம் உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். 
 
 
 
யோசித்துப்பாருங்கள்; அவர்களுடைய வணக்க வழிபாடுகள் பற்றி அறிந்திருக்கிறோம். ஒவ்வொருவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
 
 
 
இரவு வணக்க வழிபாடுகள், அவருடைய நோன்புகள், தர்மங்கள் என்று இவ்வளவு தீவிரமாக இபாதத்திலே இருந்தவர்கள் ரமலானுடைய இந்த கடைசி பத்திலே ரசூலுல்லாஹ்வை  பின்பற்றி அவர்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். 
 
 
 
இவையெல்லாம் நமக்கு எப்படி சாத்தியம்? நம்மில் யாராவது இப்படி செய்வோமா? நம் வீட்டுப் பெண்களை நாம் அனுமதிப்போமா? 
 
 
 
அல்லாஹ்வின் அடியார்களே! அவர்களுடைய நோன்பு பேரித்தம் பழத்திலும் அவர்களுடைய இப்தார் பேரீத்தம்பழத்திலும் தண்ணீரிலும் இருந்தது. அதனால் அவர்களுக்கு இஃதிகாஃப் எடுப்பதில் சிரமம் இல்லை. 
 
 
 
ஆனால் நம் இப்தார், வகைவகையான உணவு பட்டியலில் இருந்தால் நாமும்  இஃதிகாஃப் இருக்க முடியாது. மனைவிமார்களும் இருக்க முடியாது.
 
 
 
நாம்தான் தலைகீழாக மாற்றி வைத்திருக்கிறோம். இன்றைய நாட்களில் பள்ளிவாசல்களுக்கு இஃதிகாஃபிற்கு அழைத்தால், முதலில் என்னென்ன வசதிகள் உள்ளது? உணவு அளிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நம்முடைய சிந்தனை எப்படி இருக்கிறது பாருங்கள்.
 
நபி (ஸல்) அவர்களின் மஸ்ஜிதில் என்ன அளித்தார்கள்? சஹாபாக்கள் அவரவர் தனியாக கொண்டு வந்து அனைவருக்கும் அளித்து சேர்ந்து உண்பார்கள்.
 
 
 
நாம் நம்முடைய உணவு தேவைகளையும் சுருக்க வேண்டும். ஸஹாபாக்களுக்கு ஏன் இலகுவானது? அவர்கள் அதை லேசாக்கி கொண்டார்கள். நம்மிடம் என்ன பிரச்சனை என்றால், இப்படி எல்லாம் இருந்தால் நோன்பு வைக்க முடியுமா? என்று சந்தேகிப்பது. இது அல்லாஹ்வின் மீது சத்தியமாக முடியும்.
 
 
 
"பிஸ்மில்லாஹ்" என்று கூறி சாப்பிட்டால் "யா அல்லாஹ் இந்த உணவிலே எனக்கு பரக்கத் செய்" என்று கூறி சாப்பிட்டால் அது நமக்குப் போதுமானது (“அல்ஹம்துலில்லாஹ்”). நம் நஃப்ஸை அல்லாஹ்வின் இபாதத்தை கொண்டு நாம் பழக்கப்படுத்தி நாம் திருத்திக் கொண்டால் அந்த குறைவான உணவிலும் அல்லாஹ்வுடைய பரக்கத் உண்டு.
 
 
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; 
 
«مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
 
 
 
யார் இந்த லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கிறார்களோ அவர்களுடைய முந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். 
 
 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 37.
 
 
 
ஒவ்வொரு அமலிலும் அல்லாஹ்வும் நம் தூதரும் வாக்களிப்பது, நீங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதர்களாக மறுமையில் வரவேண்டும் என்பது தான்.
 
 
 
ஹஜ் செய்யுங்கள்; பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. உம்ரா செய்யுங்கள்; பாவங்கள் மன்னிக்கப்படுகிறது நோன்பு வையுங்கள்; பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. தொழுங்கள்; பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஸதகா செய்யுங்கள்; பாவங்கள் மன்னிக்கப் படுகின்றது.
 
 
 
நபி (ஸல்) அவர்கள் நமக்கு உதாரணம் காட்டுகிறார்கள்; "நம்முடைய உடலில் எப்படி அழுக்கு படிந்து கொண்டே இருக்கிறதோ, அதுபோன்று பாவங்கள் நமது பட்டியலில் ஏறிக்கொண்டே இருக்கிறது." 
 
 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3334, தரம் : ஹசன் (அல்பானி)
 
 
 
பார்வையில் பாவம்; சொல்லில் பாவம்; செயலில் பாவம்; எண்ணத்தில் பாவம். அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கு மாறு செய்வது, சாதாரணமான விஷயமா? சிந்தித்துப்பாருங்கள்.
 
 
 
அல்லாஹ்விடத்தில் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக நாம் மறுமையில் எழுப்பப்படுவது என்பது மிகப்பெரிய பாக்கியம். ஏனென்றால் எந்த பாவத்தால் அடியான் ஒருவன் நரகத்தில் தூக்கி எறியப்படுகிறானோ? எந்த ஒரு நன்மையால் அடியான் ஒருவன் சொர்க்கத்தில் நுழைக்கபடுவானோ? இதை நினைத்துப் பாருங்கள்.
 
 
 
ஒரு பெண் பூனைக்கு அநியாயம் செய்த காரணத்தால் அவள் வணக்கசாலியாக இருந்தும் இபாதத்திலே நல்லவளாக இருந்தும் அவள் நரகத்தில் வேதனை செய்யப்பட்டாள். 
 
இன்றைக்கு நடக்கும் அநியாயங்கள் என்னென்னவோ! இது ஒரு முஃமின் அஞ்ச வேண்டியநிலை.
 
 
 
ஒரு பெண் தீமை செய்யக்கூடியவளாக இருந்தும் அல்லாஹ்வின் பாவமன்னிப்பை ஆதரவு வைத்து ஒரு நாய்க்கு தண்ணீர் அளித்த காரணத்தால் அல்லாஹ் அவரை மன்னித்து விட்டான். 
 
 
 
ஆதலால் எந்த ஒரு நன்மையாக இருந்தாலும் அது நமக்கு சொர்க்கத்தை தரக்கூடும்.
 
 
 
சகோதரர்களே! இந்த தேடல்தான் நபி (ஸல்) அவர்களின் தீவிரமான இபாதத்திற்கு காரணம். நபித்தோழர்களின் உறுதியான இபாதத்திற்கு காரணம். இந்த புரிதல் இல்லாத காரணத்தினால்தான் ஒவ்வொரு சிறிய அமலையும் கூட சுமையாக பார்க்கிறோம். நம்மால் முடியுமா? சாத்தியமா? என்று நினைக்கிறோம்.
 
 
 
இப்போது நம் இன்பத்திற்காக, சுகத்திற்காக நாம் பழக்கி வைத்திருக்கும் பழக்கத்தை பார்க்கிறோம். எனவே அதை விடுவது சிரமமாக இருக்கிறது. ரப்புக்கு முன்னால் நிற்கக்கூடிய அந்த நாளின் பயம் இருக்குமானால் இந்த இபாதத், அல்லாஹ்வுக்காக கொடுப்பது, சகிப்பது, மன்னிப்பது எல்லாம் நமக்கு லேசாகிவிடும்.
 
 
 
இந்த ரமலான் மாதத்தில் நாம் அதிகமாக குர்ஆன் ஓத வேண்டும் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு வலியுறுத்தினார்கள். இந்தக் குர்ஆன் கூறக்கூடிய அடிப்படை என்ன? சொர்க்கத்தின் மீது ஆசை; நரகத்தின் மீது பயம்.
 
 
 
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
 
நீ செய்யக் கூடிய நன்மை அணு அளவு இருந்தாலும் சரி, அதையும் நீ காண்பாய். நீ செய்யக்கூடிய பாவம் அணுவளவு இருந்தாலும் சரி அதையும் நீ காண்பாய். (அல்குர்ஆன் 99 : 7,8)
 
 
 
ஆகவே இந்த ரமலானில் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுவதோடு இந்த இறுதிப் பத்தில் அதிகம் நன்மை செய்வோம். அல்லாஹ்விடம் "யா அல்லாஹ் இபாதத்துத்களை செய்வதற்கு எனக்கு லேசாக்கி கொடு, எனக்கு துணையாக இருப்பாயாக" என்று அல்லாஹ்விடத்தில் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் நாம் மீள்வோமாக. இன்று இரவுகளிலே நம் உணவு தேவைகளை குறைத்து பாவ மன்னிப்பு கேட்பதற்கும், அல்லாஹ்வின் வேதத்தை ஓதி முடிப்பதற்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَيْوَةُ، عَنْ أَبِي الأَسْوَدِ، سَمِعَ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: «أَفَلاَ أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَقَرَأَ ثُمَّ رَكَعَ» (صحيح البخاري4837 -)
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/