இரவுத் தொழுகையில் இன்பம் பெறுவோம் | Tamil Bayan - 523
இரவுத் தொழுகையில் இன்பம் பெறுவோம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : இரவுத் தொழுகையில் இன்பம் பெறுவோம்
வரிசை : 523
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 25-08-2018 | 09-09-1439
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அன்பிற்கும் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வின் பயத்தைக் கொண்டு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வை பயந்து அவனுடைய மார்க்கத்தின் சட்ட வரம்புகளை பேணி அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா தடுத்த சிறியபெரிய எல்லா பாவங்களையும் விட்டும் விலகி, அல்லாஹ்விற்கு பொருத்தமான, பிரியமான அமல்களை அதிகமாக செய்து, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய நல்லடியார்களில், சுவர்க்கத்திற்கு தகுதியானவர்களில் அல்லாஹு தஆலா என்னையும், உங்களையும், நமது பெற்றோரையும், முஃமினான ஆண்பெண் அனைவரையும் ஆக்கி அருளவேண்டும் என்று அல்லாஹ்விடத்திலே துஆ செய்தவனாக இந்த குத்பாவை தொடங்குகிறேன்.
புனிதமான ரமலானுடைய மாதத்திலே நாம் இருக்கிறோம். ரமலானுடைய மாதம் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய நோக்கம் மற்றும் எண்ணத்திற்கு ஏற்ப அமையும்.
பொதுவாக மக்கள் சொல்வதுண்டு; இந்த ரமலான் மிகவும் சிறப்பாக இருந்தது என்று. இந்த ரமலான் மிகவும் பரக்கத்தாக இருந்தது என்றும் சொல்வார்கள். அவர்களிடத்திலே நீங்கள் விளக்கம் கேட்டால், இந்த வருடம் நம் பள்ளிவாசலில் சஹர் இஃப்தார் மிகவும் சிறப்பாக விசேஷமாக ஏற்பாடுகள் இருந்தது என்று சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ரமலான் சிறப்பு என்றால் அதுதான்.
வியாபாரிகள் கூறுவார்கள்: இந்த ரமலான் மிகவும் சிறப்பாக இருந்தது, என்னவென்று விளக்கம் கேட்டால் சென்ற ரமலானை விட இந்த ரமலானில் வியாபாரம் நன்றாக நடந்தது. லாபம் நன்றாக கிடைத்தது. நன்றாக கல்லா கட்டினோம் என்று கூறுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது அவர்களுக்கு சிறப்பு.
பெண்களிடத்தில் கேட்டால் இந்த ரமலான் மிகவும் பரக்கத்தாக இருந்தது என்று சொல்வார்கள். தங்கள் கணவன் நிறைய துணிமணிகள் வாங்கி வந்து கொடுத்தார். தனது கணவர் எக்கச்சக்கமாக காசு கொண்டு வந்து கொடுத்தார். எனவே, இந்த ரமலான் மிகவும் பரக்கத்தாகவும் சிறப்பாகவும் இருந்தது.
பிள்ளைகளிடத்தில் கேட்டால், அத்தா நிறைய துணிமணிகள் வாங்கிட்டு வந்து கொடுத்தார்கள். சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுத்தார்கள். எனவே, ரமலான் பரக்கத்தாக இருந்தது.
மொத்தத்தில் பார்க்கவேண்டும் என்றால் இந்த ரமலானை நாம் எப்படி மாற்றி வைத்திருக்கிறோம் என்றால், நம்முடைய உடல் சார்ந்த மன இச்சைகளுக்குரிய மாதமாக மாற்றி இருக்கிறோம்.
அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய ரூஹ் நம்முடைய ஆன்மாவுக்குண்டான மாதமாக மாற்றியிருக்கிறோமா?அல்லாஹ் அறிவான்.
நமது முன்னோர்களை பொருத்தவரை, அவர்கள் ரமலான் சிறப்பாக இருந்ததென்றால் இபாதத்தை அடிப்படையாக வைத்து சொல்வார்கள். அல்லாஹ்வின் பக்கம் அவர்கள் நெருங்கிய நெருக்கத்தை வைத்துச் சொன்னார்கள்.
நம்மால் கொஞ்சமாவது இந்த அமல்களுக்காக திட்டம் போட முடிகிறதா? சொல்லுங்கள் பார்க்கலாம். நம்முடைய உடலுக்கான இந்த உடல் ஆசைக்கான, இந்த நாக்குக்கான, இந்த வயிற்றுக்கான திட்டத்தை போடுவதிலேயே ரமலான் முடிந்து விடுகிறது.
ஸஹருக்கு திட்டம், இஃப்தாருக்கு திட்டம், அடுத்து கடைசிப் பத்து வந்துவிட்டால் முடிந்துவிட்டது மொத்தமாக ஷாப்பிங் தான். இப்படியாக இந்த திட்டத்தில் தான் ரமலானை நாம் பழகி வைத்திருக்கிறோம். ரமலானை கடத்திக் கொண்டிருக்கிறோம்.
நான் எனக்காக சொல்லிக் கொள்கிறேன், நாம் கவலைப்பட வேண்டும். வெட்கப்பட வேண்டும். இதற்காக கொடுக்கப்பட்டதல்ல ரமலான். இப்படிப்பட்ட ஒரு அற்பமான நோக்கத்திற்காக, சாப்பிடுவதற்குரிய சீசனுக்காக கொடுக்கப்பட்டதல்ல ரமலான். வியாபாரத்திற்குரிய சீசனுக்காக கொடுக்கப்பட்டதல்ல ரமலான். உலக ஆசைகளை பெருக்கிக்கொள்வதற்காக, அது கிடைப்பதன் மூலமாக இன் புரிவதற்காக மகிழ்ச்சி அடைவதற்காக கொடுக்கப்பட்டதல்ல ரமலான்.
ரமலான் முற்றிலும் அடியான் தன்னை வருத்தி அமல் செய்து, அல்லாஹ்வுடைய குர்ஆனோடும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியிலே, அந்த இரவு வணக்கத்திலும், தன்னை களைப்படையச் செய்வதிலே, அந்த வலியை உணர்வதிலே, அதற்காக தன் உடல் இளைப்பதிலே இன்பம் காணுவதற்காக, அதன் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்காக கொடுக்கப்பட்ட மாதம் இந்த ரமலான் மாதம்.
சகோதரர்களே! நம்மையெல்லாம் நம்முடைய முன்னோர்கள் சலஃப்புகள் பார்த்தார்கள் என்று சொன்னால், உங்களை அல்ல நான் என்னை சொல்கிறேன், அவர்கள் நம்மை பார்த்தார்கள் என்றால் நமக்கு என்ன பெயர் வைத்திருப்பார்கள் தெரியுமா? சோம்பேறிகள் என்று பெயர் வைத்திருப்பார்கள்.
அல்லது தமிழிலே சொல்வார்கள்: சாப்பாட்டு ராமன் என்று. அப்படித்தான் நமக்கு பேர் வைத்திருப்பார்கள்.
நமக்கெல்லாம் ஸலாம் சொல்லக் கூட அவர்கள் வெட்கப்படுவார்கள். இந்த சோம்பேறிகளுக்கு எல்லாம் சலாம் சொல்வதா என்று. நம்மையெல்லாம் பக்கத்திலே நெருங்கிக் கொள்வார்களா? என்றால் அல்லாஹ் அறிந்தவன்.
காரணம் என்ன? நமக்கு அவர்கள் எல்லாம் நமது முன்னோர்கள் என்ற பெருமை. ஆனால், அவர்களுடைய வணக்க வழிபாட்டை பற்றி தெரிந்துகொண்டு, அந்த வணக்க வழிபாட்டை பற்றி ரமலானிலாவது, அந்த வணக்க வழிபாட்டில் கொஞ்சமாவது ரமலானிலாவது செய்து பார்ப்போமே.
இந்த ரமலானில் ஆவது அப்படி ஒரு முயற்சியை எடுத்து பார்ப்போமே. அப்படியாவது ஒரு ஆசை ஏற்படுகிறதா? இதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது, அதையும் நாம் சிந்தித்தாக வேண்டும், புரிந்தாக வேண்டும்.
முதலில் இந்த வாழ்க்கை எதற்காக யாருக்காக என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி தெரிந்தால்தான் நாம் நம்மை மாற்றிக் கொள்ள முடியும்.
குர்ஆனுடைய வசனங்கள் நம்மிலே மாற்றத்தை ஏற்படுத்தும். நாம் என்ன விளங்கி வைத்திருக்கிறோம் கண்டிப்பாக இந்த துனியாவில் நாம் பிறந்து விட்டோம், இறந்துப் போக தான் போறோம் அதில் சந்தேகமில்லை. அதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது.
துன்யாவில் நன்றாக வாழ்ந்து விடவேண்டும். எவ்வளவு காலம் வாழ்கிறோமோ அதை சிறப்பாக வாழ்ந்து விட வேண்டும். கம்போர்ட்டாக வாழ்ந்துவிட வேண்டும். இந்த துன்யா உடைய வாழ்க்கையில் இதனுடைய எந்த ஆடம்பரத்திலும் சுகத்திலும் எதுவும் குறைந்து விடக்கூடாது.
எப்படியும் நாம் இறக்கத்தானே போகிறோம். இப்படியாக ஒரு திட்டத்திலே, இந்த ஒரு மன எண்ணத்தில், அல்லாஹ்தான் மன்னிப்பவன் ஆச்சே, பார்த்துக் கொள்ளலாம், நம்ம செய்கின்ற அமல்களே அதிகம், இதற்கு அல்லாஹ் கொடுத்தாலே பெரிது, இப்படியாக ஒரு எண்ணத்தில்தான் பெரும்பாலும் இருக்கிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்!
இப்படிப்பட்டவர்களுக்கு குர்ஆன் கிடையாது. இவர்களுக்கு அறிவுரை இல்லை. இந்த அறிவுரை எல்லாம் இவர்களுக்கு பிரயோஜனம் அளிக்காது. துன்யா குறையக்கூடாது, துன்யாவிலே எந்த சுகவீனமும், பலவீனமும், இயலாமையும், உடல் சோர்வும், அசதியும், வியாபாரத்திலே குறைவும் ஏற்பட்டு விடக்கூடாது. துன்யாவுக்காக துன்யாவை இழப்பார்கள்.
நம்மில் பலர் காசுக்காக உடல் சுகத்தை இழந்தவர்கள் இல்லையா? நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தானே இன்றைக்கு இவ்வளவு நோயை மக்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள்.
நான் சொல்லவில்லை. பொதுவாக சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகதான் சரியான நேரத்தில் உணவு கிடையாது. நேரத்தில் உறக்கம் கிடையாது.
எல்லாம் அதனுடைய நேரத்தை அதனுடைய அளவை அதனுடைய எல்லையை அதற்கான முறையை தாண்டி போவதற்கு காரணம் என்ன? காசு சம்பாதித்து விடவேண்டும். சம்பாதித்ததற்குப் பிறகு என்ன?
நாற்பது ஐம்பது வயதிற்குப் பிறகு எந்த காசை சுகமாக வாழ்வதற்கென்று சம்பாதித்தோமோ கடைசியில் அந்த காசை சுகம் பெறுவதற்காக செலவழிக்க வேண்டிய நிலமையிலே மாறிவிட்டோம். நோய்க்காக மருத்துவத்திற்காக இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
துன்யாவை துன்யாவிற்காக இழப்போம். அதுவல்ல இங்கு பேச்சு. மறுமைக்காக இந்த துன்யாவில் போராடக் கூடியவர்கள், மறுமைக்காக இந்த துன்யாவைவிடக் கூடியவர்கள், மறுமையின் சுகத்திற்காக இந்த துன்யாவின் சுகத்தை இழப்பவர்கள், மறுமையின் இன்பத்திற்காக இந்த துன்யாவின் இன்பத்தை துறப்பவர்கள், சொர்க்கத்தின் நிஃமத்துகளுக்காக இந்த துன்யாவின் நிஃமத்துகளை இழப்பவர்கள், இவர்கள் எங்கே? இவர்கள் யார்?
அவர்கள்தான் நபித்தோழர்கள், தாபியீன்கள், நல்லவர்கள், அவர்கள் புரிந்திருந்தார்கள்: இந்த துன்யாவில் என்ன தான் கஷ்டப்பட்டாலும், சிரமப்பட்டாலும், எவ்வளவுதான் தலைகீழாக நின்று தொழில் செய்தாலும், வியாபாரம் செய்தாலும், அல்லாஹ் நாடிய அளவை விட எனக்கு அதிகம் கிடைக்காது.
அல்லாஹ் முடிவு செய்ததை விட அதிகம் கிடைக்காது. நீ பொய் சொல்லி வியாபாரம் செய்தாலும் எது உனது விதியில் எழுதப்பட்டிருக்கிறதோ அதுதான் கிடைக்கும். நீ உண்மை சொல்லி வியாபாரம் செய்தாலும் அதுதான் உனக்கு கிடைக்கும். எது உங்களுக்கு விதியில் எழுதப்பட்டதோ அதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். ஹலாலில் தேட போகிறாயா? உனக்கு முடிவு செய்யப்பட்டதை அல்லது ஹராமில் தேடப் போகிறாயா? என்று.
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைத்தான் சொன்னார்கள்:
ولا يَحمِلَنَّ أحدَكم استبطاءُ الرِّزقِ أن يطلُبَه بمَعصيةِ اللهِ
அல்லாஹ்வுடைய ரிஸ்க்கு தாமதமாக வருவது ஹராமான வழியில் தேடுவதற்கு உங்களை தூண்டி விட வேண்டாம். (1)
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : சஹீஹுல் ஜாமிஃ, எண் :2085.
அல்லாஹ்வுடைய ரிஸ்க் வரும். அதற்கென்று ஒரு நேரம் இருக்கிறது. தாமதமாக அது வருவதைப் பார்த்து, என்னடா நாம் என்ன வியாபாரம் செய்தாலும் ஒன்றும் சரியாக அமைய மாட்டேன்கிது. இப்படியெல்லாம் நாம ஹராம் ஹலால் என்று பார்த்து, உண்மையைப் பேசிக்கொண்டு நேர்மையாக வியாபாரம் பண்ணினால் போதாது, கொஞ்சம் குறுக்கு வழியில் போனால் தான் சரியாகும். இப்படிதான் ஷைத்தான் நம் உள்ளத்தில் நுழைகிறான். நம் உள்ளத்திலே ஒரு ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான்.
இதைத்தான் அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
ரிஸ்க் தாமதமாக வருவது ஹராமான வழியிலே அதைதேடுவதற்கு உங்களைத் தூண்டி விட வேண்டாம்.
நீங்கள் ரிஸ்க்கை தேடுவதிலே ஹலாலான வழிகளைத் தேடுங்கள்.
மேலும் சொன்னார்கள்:
நீ உன்னுடைய உணவை சாப்பிட்டு முடிக்காத வரை உனக்கு மரணம் வராது. உன்னுடைய வயிற்றுக்குள் செல்ல வேண்டிய ஒரு பருக்கை உன்னுடைய வயிற்றுக்குள் செல்லாத வரை உனக்கு மரணம் வராது, பயப்படாதே!
அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : சஹீஹுல் ஜாமிஃ, எண் :2085.
உனது ரிஸ்க்கை இன்னொருவன் எடுத்துக் கொள்ள முடியாது. இன்னொருவருடைய ரிஸ்க்கையும் நீ எடுத்துக்கொள்ள முடியாது. இங்கே நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் கொண்டு வந்து பாருங்கள். அவர்களோடு நம்மை கொஞ்சம் ஒப்பிட்டு உரசிப் பாருங்கள்.
இன்று துன்யாவிற்காக நாம் சிரமப்படுகிறோம். படிப்புக்காக பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் சிரமப்படுகிறார்கள். நல்ல உணவு, நல்ல உறைவிடம், நல்ல உடைக்காக சிரமப்படுகிறோம்.
நம்முடைய ஆகிரத்துடைய வாழ்க்கை என்ன ஆனது? மஹ்ஷரிலே ஒருநாள் நிற்பதற்கே நம்முடைய வாழ்நாள் முழுக்க நாம் செய்த அமல்கள் நம்மைக் காப்பாற்றுமா? மஹ்ஷரில் ஒருநாள் நிற்பதற்கு அல்லாஹ்வுடைய அந்த கோபத்திற்கு முன்னால் சில மணி நேரம் நிற்பதற்கு நம்முடைய வாழ்நாள்களுடைய அமல்களெல்லாம் எங்கே?
அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மக்களெல்லாம் சென்று, அல்லாஹ்வுடைய நண்பரே! நீங்கள் கொஞ்சம் பேசலாமே அல்லாஹ்விடத்திலே, நீங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்யலாமே அல்லாஹ்விடத்திலே என்று சொன்னபோது, எவ்வளவு தியாகம் செய்து இருப்பார்கள்.எவ்வளவு அமல்கள் செய்திருப்பார்கள். எத்தனைமுறை எங்கெங்கெ நாடோடியாக ஓடினார்கள், அலைந்தார்கள், எந்த அமலையாவது நினைத்துப் பார்க்க முடிந்ததா அந்த நாளிலே,தான் பேசிய மூன்று பேச்சுகளை நினைத்துப் பார்த்தார்கள்.இல்லை இல்லை நான் அதற்குத் தகுதியானவன் அல்ல.
யாரை அல்லாஹு தஆலா தனது நண்பராக எடுத்துக்கொண்டானோ, யாரைப் பார்த்து ரப்பு சொல்கிறானோ, நான் சோதித்த அத்தனை சோதனைகளிலும் இப்ராஹிம் வெற்றியடைந்தார், எனவே நான் அவரை இமாமாக ஆக்குகிறேன் என்று.
அவர் தன்னுடைய அமலை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தன்னுடைய இபாதத்தை அவர் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அல்லாஹ்விற்காக தான் செய்த தியாகங்களை நினைத்து பார்க்க முடியவில்லை.
தான் செய்த மூன்று தவறை நினைத்து பார்த்து சொல்கின்றார்: நான் அதற்குத் தகுதியானவன் அல்ல. நீங்கள் மூசா அலைஹிஸ்ஸலாம் இடத்திலே செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.
எந்த மூஸாவை பார்த்து ரப்பு சொன்னானோ, யா மூஸா! எனது பேச்சுக்கும் எனது தூதுத்துவச் செய்திகளுக்கும் நான் உன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறேன், உன் மீது நான் விசேஷமான அன்பு வைத்திருக்கிறேன், எது வேண்டுமானாலும் உடனுக்குடனே அல்லாஹ்விடத்திலே மலக்குகளுடைய எந்தத் துணையும் இல்லாமல், யா அல்லாஹ் எனக்கு இது வேண்டும் என்று கேட்கக்கூடிய அந்த உரிமை பெற்றவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம்.
நாளை மறுமையிலே நினைத்துப் பார்ப்பார்கள்; அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும்போது எனது சமுதாயம் காளைக் கண்றை வணங்கி விட்டதே! நான் எப்படி அல்லாஹ்விடத்திலே பேசுவது! தன்னுடைய சமுதாயம் செய்த தவறை நினைத்து அல்லாஹ்விடத்திலே பேசுவதற்கு வெட்கப்படுவார்கள்.
அவர்களுடைய அமல்கள் என்ன! செய்த தியாகங்கள் என்ன! அவர்களுக்கே வந்த சோதனை!
அல்லாஹு தஆலாவே ஒரு நபியைப் பார்த்து ஒரு நபிக்கு உபதேசம் செய்கிறான். நபியே மூஸாவிற்கு கடுமையான சோதனை கொடுக்கப்பட்டது அவர் பொறுமையாக இருந்தார், முஹம்மதே! நீங்களும் பொறுமையாக இருங்கள் என்று.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்திலே மிக கண்ணியமிக்க நபியாக இருந்தார்கள். அல்லாஹ்வை பரிசுத்தப்படுத்தினார்.
சகோதரர்களே! அப்படிப்பட்ட தூதர், நாளை மறுமையிலே வந்து நின்று விட்டபோது தனது சமுதாயம் செய்த பாவத்தை நினைத்து வெட்கப்படுவார்கள்.
இன்று நாம் எங்கேயாவது யோசித்து பார்க்கிறோமா? என்னுடைய பிள்ளைகள் பாவம் செய்தால் நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் நான் எப்படி நிற்பேன்! பிள்ளைகளைப் பெற்று விட்டால் மட்டும் முடிந்துவிட்டதா கதை. என்னுடைய பிள்ளைகள் தவறு செய்தால் என்னுடைய ரப்பை நான் எப்படி சந்திப்பேன்?
நாம் என்ன வைத்து இருக்கிறோம்? செல்லாத காசு மாதிரி செல்லாத அமல்களும் வைத்திருக்கிறோம். செல்லாத காசை எவ்வளவு தான் நாம் மூட்டை மூட்டையாக வைத்திருந்தாலும் அது செல்லாத காசு தான். அதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. எந்த நன்மையும் இல்லை. ஒன்றும் இல்லை. நாம் தனிமையில் உட்கார்ந்து இருக்கும்போது நமது அமல்களை நினைத்து ரேட் போட வேண்டும்.
தக்பீர் கட்டிய உடனேயே ஷைத்தான் தான் நம் நினைவிற்கு வருகிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக! கொஞ்ச நேரம் இங்கே நிற்பதற்குள் உலகத்திற்கே போய்விடுகிறோம். யோசித்துப் பாருங்கள்!
இரண்டு ரக்அத் சலாம் சொல்லி முடிப்பதற்குள் நமக்கு என்னமோ பத்ரு போருக்குப் போன மாதிரி இருக்கு. இரண்டு ரக்அத் முடிப்பதற்குள் ஷைத்தானுடைய அவ்வளவு ஊசலாட்டங்கள், ருகூவிற்குப் போனால் அவ்வளவு சிந்தனைகள், சுஜூதிற்குப் போனால் அவ்வளவு சிந்தனைகள்.
இமாம் ஓதும்போது நாம் எங்கேயோ போய் விடுகிறோம். அப்புறம், மற்றபடி நோன்பு ஜகாத் ஹஜ்ஜையெல்லாம் நாம் கணக்கு எடுத்தோம் என்றால் தொலைந்தது மொத்தமாக. ஆனால், நமக்கு பெருமை மட்டும் குறைந்தபாடு கிடையாது.
இஸ்லாமிய மார்க்கத்தின் அழைப்புப் பணியின் அந்த ஆரம்ப காலம், அல்லாஹு தஆலா வசனங்களை இறக்கினான்.
يَاأَيُّهَا الْمُزَّمِّلُ (1) قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا (2) نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا (3) أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
போர்வை போர்த்தியவரே! (வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!) அதன் (-இரவின்) பாதியில் எழுந்து தொழுவீராக! அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!) அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73 : 1-4)
இந்த வசனத்தை பதிவு செய்துவிட்டு இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்:
மதீனாவிற்கு வந்த பிறகு ரமலானுடைய மாதத்தில் நபியும் நபித்தோழர்களும் எப்படி இபாதத் செய்தார்களோ அதுபோன்று இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் இரவில் நின்று தொழுதார்கள்.
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இலகுவாக்கி ஐந்து நேர தொழுகைகளை கடமையாக்கியதற்கு பிறகு இரவு நேர தொழுகையை நஃபிலாக ஆக்கினான்.
ஆரம்பத்தில் இரவு தொழுகை மட்டும் நபிக்கும் மற்ற எல்லா முஸ்லீம்களுக்கும் ஃபர்ளாக இருந்தது. பிறகு, இரவு தொழுகை நபிக்கு மட்டும் ஃபர்ள் ஆக்கப்பட்டது. உம்மத்துக்கு அது நஃபிலாக உபரியாக ஆக்கப்பட்டது. நபித்தோழர்கள் இஸ்லாமின் ஆரம்ப காலத்திலேயே இரவில் நீண்ட நேரம் தொழக்கூடிய வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.
நான் ஆரம்பத்தில் சொன்னேன்; இரண்டு கூட்டத்தார்களைப் பற்றி சொன்னேன். முதலாமவர்கள், ஆஹிரத்துகாக வாழக்கூடியவர்கள். இன்னொருவர்கள், துன்யாவிற்காக வாழக்கூடியவர்கள். ஆஹிரத்துக்காக வாழக்கூடியவர்கள் ஆஹிரத்துகாக துன்யாவை இழப்பார்கள்.
எனவே, நான் ஹலால் படி தான் வாழ்வேன். நான் உண்மையைத் தான் பேசுவேன். எனவே இபாதத்துக்குதான் நான் முன்னுரிமை கொடுப்பேன்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக்கொடுத்த சுன்னத்தான நஃபிலான வணக்க வழிபாடுகளை, ஃபர்ளான வணக்க வழிபாடுகளை அவர்கள் செய்தது போன்று நான் செய்வேன். இதனால் எனக்கு உடல் பலவீனம் ஏற்பட்டாலும் சரி, சுகவீனம் ஏற்பட்டாலும் சரி, இதனால் எனக்கு நோய்நொடி ஏற்பட்டாலும் சரி.
துன்யாவிற்காக நமக்கு துன்யாவிலே நோய்நொடி ஏற்படலாம். எத்தனை படிக்கக்கூடிய பிள்ளைகள் இரவிலே விழித்து விழித்து படித்ததால் பார்வைக்கு கண்ணாடி போட்டிருக்கிறார்கள். பசியாக இருந்து படித்ததால் வயிற்றுப் புண் ஏற்பட்டு ஆப்ரேஷன் செய்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அதாவது, துன்யாவிற்காக எத்தனை சுகத்தை நாம் இழந்திருக்கிறோம்!
இதுவே சொல்ல முடியுமா? குர்ஆன் ஓதி, ஹதீஸ்களை மனப்பாடம் செய்ததற்காக, அல்லாஹ்வை வணங்கியதற்காக நான் இப்படி ஆகி விட்டேன் என்று.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி சொல்லப்படுகிறது; அல்லாஹ்வின் அச்சத்தால் அழுது கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் கண்பார்வை சென்றுவிட்டது.
அதற்கு முன்னால் நபிமார்களின் வரலாறுகள் ஏராளமாக இருக்கின்றன. அப்போ வித்தியாசம் என்ன? இரண்டு கூட்டம் இருக்கிறார்கள். ஒரு கூட்டம், ஆஹிரத்துக்காக வாழ்பவர்கள். இவர்கள் மறுமையின் வாழ்க்கையில் அந்த ஆஹிரத்துடைய அமல்களிலே எந்த குறையும் ஏற்படாது. துன்யா தலைகீழாகப்பட்டாலும் அதனால் எனக்கு பிரச்சினை இல்லை.
இன்னொரு கூட்டம் துன்யாவிற்காக வாழ்பவர்கள். இவர்கள் என்ன செய்வார்கள்? இந்த துன்யா உடைய சுகங்களில், இன்பங்களில், சுவைகளில், தேடல்களில், விருப்பங்களில், ஆசைகளில் எதுவும் குறையாமல், அதற்கு நஷ்டம் ஏற்படாமல், அதற்கு பாதிப்பு ஏற்படாமல், மறுமைக்கு செய்ய முடிந்ததை செய்யலாம்; இல்லேன்னா மறுமையை அம்போன்னு விடவேண்டியது; துன்யாவை புடிச்சிக்க வேண்டியது.
இவர்கள் துன்யாவுடைய கூட்டம். ஆஹிரத்தையே நம்பாத காபிர்கள் கூட்டம். இவர்கள் மிகவும் பலகீனமான ஒரு கூட்டம்.
அவர்கள் எப்படி என்றால், ஆகிரத்து வேண்டும்தான். ஆனால், துன்யாவிற்கு இடைஞ்சல் இல்லாமல் வேண்டும். எனக்கு கால் வலிக்காமல் சொர்க்கம் வேண்டும். எனக்கு முதுகு வலிக்காமல் சொர்க்கம் வேண்டும். எனக்கு பசி ஏற்படாமல் சொர்க்கம் வேண்டும். இபாதத்துக்காக சிரமப்படாமல் எனக்கு ஆகிரத்து வேண்டும்.
முடிஞ்சா அல்லாஹ் கொடுக்கட்டும், இல்லன்னா பாத்துக்குவோம். எப்படிப்பட்ட டீல் பேசுகிறார்கள் பாருங்கள் அல்லாஹ்விடத்திலே!
அன்பானவர்களே! முஃமின்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். இது வெட்கப்பட வேண்டிய நிலைமை.
அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ
நமது வசனங்களை நம்பிக்கைக் கொள்பவர்கள் எல்லாம் எவர்கள் என்றால் அவர்களுக்கு அவற்றின் மூலம் அறிவுரை கூறப்பட்டால் அவர்கள் சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்து விடுவார்கள்; இன்னும், தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்களோ பெருமையடிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 32 : 15)
இது முஃமின்களுடைய எப்பொழுதும் உள்ள ஷிஃபத்து -பண்பு என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
யார் ரமலானில் இரவில் ஈமானோடு அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குவார்களோ அவர்களுடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1901.
இந்த பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், வணக்க வழிபாடுகள் கஷ்டமாக இருக்க கூடாது என்று ஆசைப்படுகிறோம். கால் வலி ஏதும் இல்லாமல் தொழ வேண்டுமென்றால் சும்மா பேருக்காகதான் தொழுக முடியும். காண்பிப்பதற்காக தான் தொழ முடியும். நானும் இரவுத்தொழுகை தொழுதேன் என்று சொல்லிக் கொள்ளத்தான் முடியும்.
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடவா உடல் பலவீனமான ஒரு மனிதர் இருக்க முடியும். நீங்கள் சொல்வீர்கள்; உடனே ரசூலுல்லாஹ் ரொம்ப பலமானவர்கள் என்று.
பலமானவர்கள் தான். அவர்களுக்கு வயோதிகம் ஏற்படவில்லை. ஏன் ஆரம்பத்திலேயே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜெயிக்க பின்னால் ஆயிஷா நாயகி ரலி ஜெயிக்க. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வலி ஏற்படவில்லையா?
ஒரு மனிதர் 10 ஆண்டுகளிலே 19 பெரிய போர்களையும் 65 சிறிய போர்களையும் சந்தித்தார்கள் என்றால் ஒவ்வொரு போருக்கும் பல மைல்கள் நடந்தவர்களாகவே பயணம் செய்தார்கள் என்றால், இத்தனைக்கும் தினந்தோறும் வயிறார சாப்பிடுவதற்குரிய உணவே இல்லாமல் அவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டிருக்காது? அவர்களுக்கு உடல் வலி இருந்திருக்காது?
அவர்கள் நின்றால் அவர்களது கால் வீங்கி விடும் என்று அவர்களது மனைவியார் நமது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூராவை ஆரம்பித்தார்கள். பகராவை ஓதினார்கள். பிறகு நிஸாவை ஓதினார்கள். பிறகு ஆல இம்ரானை ஓதினார்கள். பிறகு மாய்தாவை ஓதினார்கள். பிறகு அன்ஆமை ஓதினார்கள். பிறகு அராஃபை. ஒரு ரக்கஅத்திலே அவர்கள் ஓதியதை எடுத்துப் பாருங்கள்.
சஹாபாக்களுடைய இரவு தொழுகையை எடுத்துப் பார்த்தால் சூரா பகராவுடைய அளவிற்கு, இரண்டரை பாகங்கள் இருக்கக்கூடிய அளவிற்கு குறைவாக ஓதி அவர்கள் இரவு தொழுததில்லை.
இன்றைக்கு நாம் தொழுவது மாதிரி கிடையாது. அவர்கள் ஓதுவார்கள், ஓதுவார்கள், நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்:
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. (அல்குர்ஆன் 73 : 4)
இன்றைக்கு சொல்கிறார்கள்; நிறுத்தி நிறுத்தி ஓதினால் தூக்கம் வருகிறது. டிவி பார்த்தால் தூக்கம் வராது. வாட்ஸ்அப் பேசினால் தூக்கம் வராது. ஐஎம்ஓ பேசினால் தூக்கம் வராது. துன்யாவில் விளையாட்டு பார்க்க வேண்டும் என்றால் தூக்கம் வராது.
மேட்ச் பார்க்க சொல்லுங்கள்; கேம் விளையாடச் சொல்லுங்கள், தூக்கம் வராது; சுத்த சொல்லுங்கள், தூக்கம் வராது; ராத்திரியெல்லாம் பேசி அரட்டை அடிக்க சொல்லுங்கள், தூக்கம் வராது. தொழுகையில்தான் தூக்கம் வரும்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்:
நல்லவர்களுக்கு ஜிஹாதிலே தூக்கம் வரும். தொழுகையிலே உற்சாகமாக இருப்பார்கள். முனாஃபிக்குகளுக்கு தொழுகையிலே தூக்கம் வரும்.
அல்லாஹு அக்பர்! அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானுடைய இரவு தொழுகைக்கு கூறிய நற்செய்தியை பாருங்கள்.
யார் ரமலானில் இரவுத் தொழுகையில் நின்று தொழுவார்களோ அவர்களுடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1901.
இவ்வளவு பெரிய பாக்கியத்தை ஈஸியாக சம்பாதித்துவிட நினைக்கிறீர்களா? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
இன்று இபாதத்தை நம்முடைய திருப்திக்கு செய்கின்றோம். அல்லாஹ் மன்னிப்பானாக! இபாதத்தை அல்லாஹ்வுடைய திருப்திக்காக செய்ய வேண்டும். யா அல்லாஹ்! என்னுடைய இந்த இபாதத்தை கொண்டு நீ திருப்திப்படுகிறாயா. நீ திருப்தி படுகிறவரை நான் இபாதத்து செய்வேன் என்ற நோக்கத்தோடு இபாதத் செய்ய வேண்டும்.
ஆனால், நாம் அப்படியா இபாதத் செய்கின்றோம்? நான் தொழுதேன், நான் இவ்வாறு செஞ்சிட்டேன் என்று திருப்தி அடைந்து சென்று விடுகிறோம்.
நமக்கு திருப்தி ஏற்படுவதற்காக, நான் ஐந்து வேளை தொழுது விட்டேன், நான் நோன்பு நோற்று விட்டேன் என்று நம் நஃப்ஸ் விரும்பிய அளவுக்கு இபாதத் செய்துவிட்டு நாம் திருப்தி அடைந்து விட்டு சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
அல்லாஹ் திருப்தி அடையும்வரை இபாதத் செய்யாதவரை நிச்சயம் சொர்க்கம் சொல்ல முடியாது.
சஹாபாக்களை பார்த்து அல்லாஹ் சொன்னான்:
يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا
அந்த நபி தோழர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தை அல்லாஹ்வின் மன்னிப்பை தேடி தொழுவார்கள் என்று. (அல்குர்ஆன் 48:29)
நமக்கு இந்த வசனம் பொருந்துமா? நமக்குத் தான் கொஞ்சம் கால் வலித்தாலே தொழுகையை விட்டு விடுகிறோமே! கால் வலிக்கிறதா உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறுவோம்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், ஸஹாபாக்களின் வாழ்க்கையும் பாருங்கள். அந்த நபித்தோழர்களுக்கு வயது ஆகவில்லையா? அவர்களுக்கு கால் வலிக்கவில்லையா? அவர்களுக்கு பலவீனம் ஏற்படவில்லையா? அவர்களில் சிறுவர்கள் இருக்கவில்லையா? அவர்களிலே போருக்குச் சென்று கை வெட்டப்பட்டு கால் வெட்டப்பட்ட தோழர்கள் இல்லையா?
ஆனால், நமக்கு இந்த துன்யாவிற்கு உழைச்சு உழைச்சு, பிபி இருக்கு, சுகர் இருக்கு, எல்லாம் இருக்கு. அங்கே நபித்தோழர்களுக்கு சிலருக்கு கால் இல்லை. அல்லாஹ்வின் பாதையிலே வெட்டப்பட்டது. சிலருக்கு கை இல்லை. சிலருக்கு தோள் புஜங்களிலே வெட்டு. ஆனால், அவர்கள் இபாதத் செய்யவில்லையா?
சில தோழர்களுக்கு உடலில் எந்த ஒரு பகுதியிலும் வெட்டுக்காயங்கள் இல்லாமல் இல்லை. அவ்வளவு வேதனையிலும் அவர்களுக்கு தொழுகையிலே அவ்வளவு ஈடுபாடு, தொழுகையிலே அவ்வளவு ஒரு சுகம் இருந்தது.
ஹசன் பஸரி ரஹ்மத்துல்லாஹி அவர்களிடத்திலே கேட்கப்பட்டது; ஒருவனுக்கு இரவுத்தொழுகை சுகம் ஏற்படுவதில்லையே? தொழ முடிவதில்லையே? என்று.
அதற்கு இமாம் சொன்னார்கள்: அவனுடைய பாவம் அதற்கு காரணம் என்று சொன்னார்கள்.
இரவுத் தொழுகையில் அப்படிப்பட்ட சுகம் அப்படிப்பட்ட ஒரு இன்பம் இருக்கிறது.
மிகப்பெரிய தாபியீன்களில் ஒருவர் சொல்கிறார்கள்: எப்படி எல்லாம் பயிற்சி எடுத்து இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
நான் 20 ஆண்டுகள் இந்த இரவுத் தொழுகையில் பயிற்சி பெறுவதற்காக முயற்சி செய்தேன். அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் இன்பமாக அந்தத் தொழுகையை செய்தேன்.
இங்கு வித்தியாசம் என்ன தெரியுமா? ஒரு மனிதர் பெரிய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். பெரிய ஒலிம்பிக் போட்டி மாதிரி போன்ற ஒரு விளையாட்டிலே வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்.
அவர் அதற்காக பயிற்சி எடுக்கும் போது என்ன செய்வார்? இன்னைக்கு ரொம்ப கலைச்சு போயிட்டோம். அதனால பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு இன்னும் ஒரு வாரத்திற்கு ரெஸ்ட் எடுத்து விடலாம் என்று இருந்து விடுவாரா? அப்படி இருப்பவரால் போட்டியில் வெற்றி பெற முடியுமா?
அந்த வெற்றியை நினைத்து நினைத்து அவர் படக்கூடிய ஒவ்வொரு சிரமத்தையும் ஒவ்வொரு கலைப்பையும் இன்பமாக கருதி அந்த வெற்றிக்காக, அந்த வெற்றியை நினைத்து, அந்த புகழை நினைத்து இது எல்லாம் அவருக்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.
நீங்கள் பார்த்திருக்கலாம்; ஒரு விளையாட்டுக்கு முன்பு அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிற பயிற்சி அவ்வளவு கடினமானதாக இருக்கும். ஆனால், அவருக்கு அதில் ஒரு இன்பம் வரும், அந்த வெற்றியை நினைத்து. அந்த புகழை நினைத்து.
நாளைக்கு மறுமையில் ஆகிரத் உடைய வெற்றி சாதாரணமான வெற்றியா? எப்பேற்ப்பட்ட மகத்தான வெற்றி. அதிலே அல்லாஹ்வுடைய பொருத்தம் மிக்கவர்கள் வலது பக்கத்தை சேர்ந்தவர்கள்.
எனக்கு நெருக்கமானவர்கள் அமலிலே முந்தியவர்கள், போட்டி போட்டவர்கள் எங்கே? என்று அல்லாஹ் அழைத்து நெருக்கமாக்குவானே அந்தக் கூட்டத்திலே சேர வேண்டுமென்றால் நம்முடைய இந்த சோம்பேறித்தனத்தை, நம்முடைய அலட்சியத்தை, நம்முடைய இந்த சோர்வை, நம்முடைய இந்த உடல் வலியை நம்முடைய இந்தக் கலைப்பை பொருட்படுத்தலாமா?
என்ன வார்த்தை சொன்னார்கள் என்று பாருங்கள். இரவிலே நின்று நான் தொழக்கூடிய அந்த தொழுகையில் எனக்கு இன்பம் ஏற்பட வேண்டும். அதை பழகுவதற்காக 20 ஆண்டுகள் முயற்சி செய்தேன். அதற்கு பிறகு இருபது ஆண்டுகள் சுகமாக தொழுதேன்.
அன்பானவர்களே! அந்த நல்லவர்களுடைய ஆசையெல்லாம் ஆகிரத்துடைய ஆசைதான். இரவுத் தொழுகையில் அப்படிப்பட்ட ஒரு பரக்கத் இருக்கிறது. நம்முடைய ஈமானுக்கு அப்படிப்பட்ட ஒரு வலிமையை கொடுக்கக் கூடியது.
நன்றாக கவனியுங்கள்! ஜிஹாத் உடைய நேரத்திலே போர் உடைய நேரத்திலே பர்ளான இரண்டு ரக்அத் தொழுகையில் ஒரு ரக்அத் நமக்கு மன்னிக்கப்பட்டு விடுகிறது. ஸஃபரிலே இருக்கும்பொழுது இரண்டு ரக்அத் தான். உள்ளூரில் இருக்கும் பொழுது நான்கு ரக்அத்.
பொதுவாக சஃபரிலே இருந்தால் நான்கு ரக்காயத் இரண்டு ரக்காயத் ஆக மாறிவிடும். அதுவும் போர் வந்துவிட்டால் போர் மைதானத்தில் இருக்கும்பொழுது தொழுகையை விடக்கூடாது. அப்பொழுதும் தொழுது விட வேண்டும். ஒரு ரக்அத்தாவது தொழ வேண்டும்.
இவ்வளவு சலுகை கொடுக்கப்பட்டிருந்த அந்த நபிதோழர்கள், அவர்களுடைய போர்க் காலங்களிலும் இரவுத் தொழுகையை அவர்கள் விட்டதில்லை. இன்று நாம் எதை ரமலானில் செய்கின்றோமோ, சஹாபாக்கள் அந்த இபாதத்தை போர்க் காலங்களில் செய்து கொண்டிருந்தார்கள்.
மக்காவில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்களே, மக்கா வெற்றியின்போது சஹாபாக்கள் உடைய இரவுத் தொழுகையை பார்த்து.
வெற்றிக் கொண்ட ஒரு கூட்டம் குடிப்பதிலும் களியாட்டங்களிலும் அல்லவா மூழ்கி இருப்பார்கள். ஊர்களை கொள்ளையடிப்பதிலும், சூரையாடுவதிலும், பெண்களோடும் அல்லவா இரவைக் கழிப்பார்கள்.
இது என்ன ஒரு அற்புதமான ஆச்சரியமான கூட்டம்! முஹம்மதின் தோழர்கள். வெற்றியின் நாளிலே அவர்கள் இரவை அல்லாஹ்வுக்கு முன்னால் நின்று தொழுவதிலே கழித்துக் கொண்டிருக்கிறார்களே! இதைப்பார்த்து மக்கள் முஸ்லிமானார்கள். இதைப் பார்த்து பல பெண்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
இந்த இரவுத் தொழுகை என்பது அவ்வளவு ஒரு பரக்கத்தான தொழுகை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மற்றுமொரு அறிவிப்பை இமாம் முஸ்லிம் அவர்கள் பதிவு செய்ய அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
யார், ரமலானிலே ஈமானோடு இஹ்திஸாபோடு தொழுவார்களோ அவர்களுடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். யார் லைலத்துல் கத்ரிலே ஈமானோடு இஹ்திசாபோடு தொழுவார்களோ அவர்களுடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1901.
ஈமான் என்றால் அல்லாஹ்வின்மீது நம்பிக்கையோடு, இஹ்திசாப் என்றால் அல்லாஹ் கொடுத்த நன்மை எனக்கு கிடைக்கும் என்ற ஆதரவோடு, அல்லாஹ் என்னை மன்னிப்பான், எனக்கு நன்மைகளை வழங்குவான் என்ற ஆதரவோடு.
இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய முந்திய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகிறது.
ஒவ்வொரு ரமலானும் இப்படித்தான் நமக்கு வருகிறது. அடுத்து வரக்கூடிய ரமலான் முந்திய ரமலானை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று ரமலான் முடிந்ததற்கு பிறகு திட்டம் போடுகிறார்கள். ரமலான் இப்போது நமக்கு கையிலே இருக்கிறது. சில இரவுகள் கழிந்து விட்டால் என்ன இன்னும் மிச்சம் எவ்வளவு இரவுகள் இருக்கின்றன.
நமது முன்னோர்கள் ரமலான் வந்துவிட்டால் மொத்த பகலையும் சேர்த்து இபாதத்திற்காக ஒதுக்கினார்கள். இரவை முழுமையாக இபாதத்திற்காகவே ஆக்கினார்கள்.
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களை பற்றி வருகிறது; மஸ்ஜிதிலே இமாமுடன் சேர்ந்து இரவு தொழுவார்கள். இமாமோடு சேர்ந்து மக்களோடு சேர்ந்து இரவு தொழுவார்கள். அது இந்த ரெண்டரை ஜூஸ்உ அல்லது மூன்று ஜூஸ்உ கடந்துவிடும். அதற்குப் பிறகு, மக்கள் மஸ்ஜிதை விட்டு சென்றதற்கு பிறகு அவர்கள் நஃபில் தொழுகையிலே குர்ஆன் ஓத ஆரம்பிப்பார்கள். மூன்று நாட்களில் (இரவுகளில்) ஒரு குர்ஆனை ஓதி முடித்து விடுவார்கள்.
இதுபோன்று எத்தனை இமாம்களுடைய வரலாறுகள்! எத்தனை நல்லவர்களுடைய வரலாறுகள்!
நாம் ஒப்பாக வேண்டுமென்றால், போட்டி போட வேண்டுமென்றால் இந்த நல்லவர்களோடு போட்டி போட வேண்டும்.
தாபியீன்களிலே ஒரு பெரிய தாபியீன் அபூ பக்ர் உமரால் கண்ணியப்படுத்தப்பட்ட தாபியீ, அபூ ஹுஸ்ரிம் ஹவ்லானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்: அவர்களுடைய அந்த நிகழ்வு பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் அசதி ஏற்பட்டால் சோர்வு ஏற்பட்டால் அப்போது அவர்கள் தனக்கு சொல்வார்கள்:
நபியினுடைய தோழர்கள் நம்மைப் பின் தள்ளிவிட்டு நம்மையெல்லாம் முந்தி அமல்களிலே சென்று விடுவார்கள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டு விட்டார்களா?
அல்லாஹ்வுடைய நெருக்கத்திலும் நபியின் நெருக்கத்தைப் பெறுவதிலும் நானும் அந்த தோழர்களோடு போட்டிப்போடுவேன். நாளை மறுமையிலே அவர்கள் என்னை பார்க்கும்போது தெரிந்து கொள்வார்கள்; அவர்களும் தங்களுக்குப் பின்னால் சில வீரர்களை விட்டு வந்திருக்கிறார்கள் என்று.
எப்படிப்பட்ட ஆசை பாருங்கள்! இந்த வார்த்தையைச் சொல்லி விட்டு அசதியை புதுப்பித்துக் கொண்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விடுவார்கள்.
அன்பானவர்களே! இந்த நப்ஸ் எப்படி தெரியுமா? இந்த நப்ஸை நீங்கள் எதற்கு பழக்குகின்றீர்களோ அந்த நப்ஸ் அதை பழகிக் கொள்ளும் அவ்வளவுதான். ஒருவன் மதுகுடிக்க பழகி கொள்கிறானே அதை விட கேவலமானது ஒன்றுமில்லை. அதை குடித்த பின் அவன் மிகவும் மோசமான நிலைக்கு ஆளாகின்றான். அதனால் ஏற்படும் துர்நாற்றமும் வாந்தியும் மூன்று நாள் பழக்கத்திலே அதற்கே ஒரு மனிதன் அடிமையாகிறான். இன்னும் எத்தனை பழக்கங்களுக்கு!
பாவிகளின் பழக்கங்களை பாருங்கள்! பாவங்களை செய்வதற்கு அவர்கள் சிரமப்படுகிறார்கள். அந்த சிரமத்திலே இன்பம் காணுகிறார்கள். ராத்திரியெல்லாம் களியாட்டங்களிலே, சூது விளையாடுவதிலே இன்னும் இன்னும் எத்தனையோ காரியங்களிலே திளைத்திருப்பதென்றால் சிரமம் இல்லையா? பாவத்திலே இன்பம் கண்டிருக்கும்பொழுது.
நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள் என்றால் ஏன் அல்லாஹ்வை வணங்குவதிலே நாம் இன்னும் இன்பம் காணவில்லை?
அப்படியென்றால் அல்லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கையின் மீது பலஹீனமா? சொர்க்கத்தின் மீது உள்ள நம்பிக்கையின் மீது பலஹீனமா? ஆகிரத்தின் மீதுண்டான நிஃமத்துடைய அந்த பேராசைகளிலே பலஹீனமா? யோசித்துப் பார்க்க வேண்டாமா?
எப்படிப்பட்ட ஒரு ஈமானிய உணர்வு நமக்கு வேண்டும். அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும் பொழுது நம்முடைய உடலில் சோர்வு வலி கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். யா அல்லாஹ்! இதன் பொருட்டால் என்னை மன்னித்துக் கொள்வாயாக! என்று துஆ கேட்க வேண்டும்.
இந்த நப்ஸைப் பற்றி சொல்லி முடிக்கின்றேன். இந்த நப்ஸ் எப்படி என்று சொன்னால் நீங்கள் எதற்கு பழக்குகிறீர்களோ அதை பழகிவிடும். ஒரு மனிதன் 100 கிலோ தூக்குகிறான். நம்மால் இப்போது தூக்கச் சொன்னால் முடியாது. ஏனென்றால், அவன் பழகியிருக்கிறான்.
உதாரணமாக, குழந்தைகளுக்கு பால் கொடுப்பது மாதிரிதான். பால் குடுத்துக்கிட்டேயிருந்தால் அது குடிச்சிக்கிட்டேயிருக்கும். ஒருவயதிலிருந்து நான்கு வயது வரை. நீங்கள் ஒரு வயதிலேயே மறக்கச்செய்ய வேண்டுமென்றாலும் மறக்கச்செய்யலாம். குழந்தையைக் கொண்டுதான் இந்த நப்ஸ். எதை நாம் அதற்கு பழக்குகிறோமோ இந்த நப்ஃஸ் அதை பழகிக் கொள்ளும்.
அல்லாஹ்விற்காக சிரமப்படுவதை பழக்கி, அந்த சிரமத்தை இன்பமாக கருதக்கூடிய அளவுக்கு நம்முடைய நப்ஸை கொண்டு வருகிறோமா? அப்படி கொண்டு வந்தால், என் வணக்க வழிபாட்டிலே திளைத்து அமைதிப்பெற்ற ஆத்மாவே! நீ என் பக்கம் திரும்பி வா! நான் உன்னை திருப்திக் கொண்டேன், நீயும் என்னை தருப்தி கொள்வாய், எனது சொர்க்கத்தில் வந்து சேர்ந்துவிடு, என் அடியார்களோடு சேர்ந்துகொள் என்று அல்லாஹ் சொல்லுவான். (அல்குர்ஆன் 89 : 27-30)
இல்லையென்றால் அந்த மலக்குல் மவ்த்தைப் பார்த்தாலே இந்த நஃப்ஸ் மிரண்டுவிடும். அந்தநேரத்திலே எந்த பிரயோஜனமும் இல்லை.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய அந்த அன்பை அடைவதற்கும், பொருத்தத்தை அடைவதற்கும், அல்லாஹ் விரும்பக்கூடிய வழியிலே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்த முறையிலே அல்லாஹ்வை வணங்குவதற்கும் இபாதத் செய்வதற்கும் நமக்கு உதவி செய்வானாக!
நம்முடைய வணக்க வழிபாட்டிலும் நம்முடைய இன்ன பிற அமல்களிலும் ஏற்படக்கூடிய குறைகளை அல்லாஹ் மன்னித்து அவனுடைய சொர்க்கத்தை தந்தருள்வானாக! நரகத்தை விட்டு பாதுகாப்பானாக!
இந்த ரமலானை நமக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நன்மையாக ஆக்கித் தந்தருள்வானாக!
இன்னும் நம் முஸ்லிம் சகோதரர்களில் அநியாயமாக சிறை பிடிக்கப்பட்டிருக்கக்கூடிய சகோதரர்கள் விடுதலையாவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!
உலகமெல்லாம் சிரமப்படக்கூடிய எல்லா முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சிறந்தத் தீர்வை விடுதலையை சிறந்த வாழ்வை நஸீபாக்குவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
إنَّ رُوحَ القُدُسِ نفثَ في رُوعِي ، أنَّ نفسًا لَن تموتَ حتَّى تستكمِلَ أجلَها ، وتستوعِبَ رزقَها ، فاتَّقوا اللهَ ، وأجمِلُوا في الطَّلَبِ ، ولا يَحمِلَنَّ أحدَكم استبطاءُ الرِّزقِ أن يطلُبَه بمَعصيةِ اللهِ ، فإنَّ اللهَ تعالى لا يُنالُ ما عندَه إلَّا بِطاعَتِهِ الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح الجامع الصفحة أو الرقم: 2085 | خلاصة حكم المحدث : صحيح
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/