HOME      Khutba      ரமழான் பேசுகிறது | Tamil Bayan - 522   
 

ரமழான் பேசுகிறது | Tamil Bayan - 522

           

ரமழான் பேசுகிறது | Tamil Bayan - 522


بسم الله الرحمن الرّحيم

ரமழான் பேசுகிறது

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

 

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

ஒவ்வொரு ஆண்டும் இந்த ரமலான் நமக்கு வந்து செல்கிறது. இந்த ரமலானுக்காக இந்தப் பிரபஞ்சமே ஒரு பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது என்று சொன்னாலும்,அது ஒரு பொருத்தமான வார்த்தையாகத் தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமல்ல நமக்கு மறைக்கப்பட்டிருக்கும் மறுமை வாழ்க்கையும் இந்த ரமலான் மாதத்திலே ஒரு பெரிய மாற்றத்தை பார்க்கிறது.

 

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அப்படிப்பட்ட ஒரு மாதத்தை அடையக்கூடிய பாக்கியத்தை நமக்கு கொடுத்திருக்கிறான். சென்ற ஆண்டு நம்மோடு வாழ்ந்து இந்த ஆண்டு நம்மோடு இருக்காத,நம்மோடு வாழாத எத்தனையோ நமது உறவுகள் நண்பர்கள் நமக்கு அறிமுகமானவர்கள் மற்றவர்களெல்லாம் இருக்கலாம்.

 

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்;கப்ரிலே இருக்கக்கூடியவர்களுக்கு நீங்கள் உயிரோடு இருப்பவர்களிடத்தில் பேசலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டால் நம்மை பார்த்து அவர்கள் என்ன சொல்வார்கள்?

 

நம்மைப் போன்று தான்,ரமலானை அடைந்தபோது அவர்கள் எந்த திட்டமும் இல்லாமல் இது தன்னுடைய கடைசி ரமலானாக இருக்கும் என்ற அந்த ஞானம் இல்லாமல், அந்த சிந்தனை இல்லாமல், அதற்கான ஏற்பாடு எதுவும் இல்லாமல்,மௌத்தை அவர்கள் எதிர்பார்த்து இருக்காமல் தானே கழித்திருப்பார்கள்.

 

இன்று அவர்கள் பேசுவதற்குரிய அனுமதி வழங்கப்பட்டால் அவர்கள் முதலாவதாக கைசேதத்தைதான் வெளிப்படுத்துவார்கள்.

 

இது என்னுடைய இறுதி ரமலான் என்று நான் அறிந்திருந்தால் நான் தவ்பா செய்திருப்பேனே! தொழுகைகளைப் பேணியிருப்பேனே! இரவுத் தொழுகையில் கவனம் செலுத்தியிருப்பேனே! குர்ஆன் ஓதுவதில் கவனம் செலுத்தியிருப்பேனே!நேரத்தை வீணடித்து இருக்க மாட்டேனே!எனது செல்வங்களில் பெரும் பகுதியை அல்லாஹ்விற்காக செலவழித்து இருப்பேனே!என்னுடைய மறுமை வாழ்க்கைக்காக முற்படுத்தி இருப்பேனே! இப்படியாகத்தான் அவர்களுடைய புலம்பல் இருக்கும்.

 

அல்லாஹு தஆலா நமக்கு இந்த ரமலானை அடையக் கூடிய வாய்ப்பை கொடுத்திருக்கிறான். நம்மில் யாருக்கு இது இறுதி ரமலானாக இருக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.

 

நாம் ஒவ்வொருவரும் அந்த எண்ணத்தில் தான் இருக்க வேண்டும். அமல் செய்ய வேண்டுமென்றால், அமலிலே ஆர்வம் ஏற்பட வேண்டுமென்றால், மறுமையின் பயம் வேண்டுமென்றால், பாவங்களை இன்றே விட்டு விலக வேண்டும் என்றால், செய்த பாவங்களுக்காக தவ்பா கேட்க வேண்டும் என்றால் ஒவ்வொரு முஸ்லிமும் இப்படித்தான் நினைக்க வேண்டும்;

 

இன்று என்னுடைய இறுதி நாளாக இருக்கலாம். இந்த ரமலான் எனது இறுதி ரமலானாக இருக்கலாம்.

 

அல்லாஹ்வுடைய அடியார்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் தங்களில் ஒருவர் மற்றவர்களுக்கு இப்படித்தான் அறிவுரை கூறினார்கள்.

 

அவர்களுடைய அந்த பயமோ மிகமிக பெரிய பயம். தோழர்கள் பற்றி வருகிறது; அவர்களிலே ஒருவர் மற்றவருக்கு சொல்வார்;

إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ

தோழரே!உனக்கு காலைப்பொழுது கிடைத்தால் மாலைப்பொழுதை எதிர்பார்க்காதே!உனக்கு மாலைப்பொழுது கிடைத்தால் காலைப்பொழுதை எதிர்பார்க்காதே! அந்த அளவு மரணம் உனக்கு சமீபமாக இருக்கிறது என்பதை நீ புரிந்து கொள்.

 

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6416.

 

அதுதான் எதார்த்தம்.ஒரு காலை நமக்கு வரும்.அது நமது வாழ்க்கையின் இறுதிக் காலைப் பொழுதாக இருக்கும். ஒரு மாலைப் பொழுது நமக்கு வரும். அது நமது வாழ்க்கையின் இறுதி மாலைப்பொழுதாக இருக்கும். யாரும் அறிய மாட்டார்கள்.

 

அது எந்த காலை?எந்த மாலை?எந்த இரவு?எந்த கிழமை?எந்த மாதம்?என்று யாரும் அறிய மாட்டார்கள். அல்லாஹ்விடத்திலே அது மறைக்கப்பட்டதாக இருக்கிறது.

 

அன்பானவர்களே! அந்த மரணித்தவர்களுக்கு ஒரு அனுமதி இருக்குமேயானால் அவர்களுடைய புலம்பல் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

 

அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கக்கூடிய இந்த பாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் எனக்கு கிடைக்கப்பெறுகிறது.

 

நமது மறுமைக்காக என்ன சேகரித்தோம்? இந்த ரமலான் இதற்கு பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால்,இந்த ரமலான் நம்மிடத்திலே பேசினால் எப்படி இருக்கும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

 

ரமலானை வீணடிக்கக்கூடிய, ரமலானை அலட்சியம் செய்யக்கூடிய, ரமலானிலே கவனக்குறைவாக இருக்கக்கூடிய, ரமலானை பேணாத நம்மை பார்த்து இந்த ரமலான் பேசினால் எப்படி இருக்கும்?!

 

ஒன்றுடைய மேன்மையை முக்கியத்துவத்தை அதனுடைய உயர்வை மதிப்பை உணர்வதற்கு அது சம்பந்தமாக அல்லாஹ்வுடைய வேதத்திலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களிலும் என்ன வந்திருக்கிறது என்று பார்த்தால் புரிய வரும்.

 

ஒரு விஷயத்தைப் பற்றி ஒரே ஒருமுறை குர்ஆனிலே சொல்லப்பட்டிருந்தால், ஒரே ஒரு முறை ஒரே ஒரு வார்த்தை மட்டும் ஹதீஸ்களில் சொல்லப்பட்டு இருந்தாலே அந்த விஷயம் எவ்வளவு பெரிய ஒன்றாக இருக்கும்.!

 

அல்லாஹ்வுடைய பேச்சிலே இடம் பெற்ற ஒன்று,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பேச்சிலே இடம்பெற்ற ஒன்று. அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் சிறப்பித்துக் கூறிய ஒன்று என்பதே போதுமானது.

 

ஆனால்,ரமலான் அப்படிப்பட்டதல்ல,ஒரு சிறப்பு அல்ல, இரண்டல்ல, பல சிறப்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் இந்த மாதத்திற்கு சொல்லி இருக்கிறார்கள் என்றால்! அதுவும் இந்த மாதத்தை உயர்த்தி உயர்த்தி அதை சிறப்பித்து சொல்லக்கூடிய அந்த ரப்பு கூறுகிறான்;

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ

ரமலானுடைய மாதம் எப்படிப்பட்ட மகத்துவம் உடையது என்றால் இந்த மாதத்தில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது. (அல்குர்ஆன் 2 : 185)

 

தனது கலாம் இறக்கப்பட்டதை, தன்னுடைய கலாம் இந்த மாதத்தில் உலக மக்களுக்கு வழங்கப்பட்டதை இந்த மாதத்தின் சிறப்பாக அல்லாஹ் சொல்கிறான் என்றால் குர்ஆனுக்கு என்ன சிறப்பு என்ன முக்கியத்துவம் என்ன மகத்துவம் முஸ்லிம்களுடைய உள்ளத்தில் இருக்க வேண்டுமோ அதுபோன்று சிறப்பு முக்கியத்துவம் மதிப்பு இந்த மாதத்திற்கு இருக்க வேண்டும்.

 

அன்பானவர்களே! அறிஞர்கள் விளக்கம் சொல்வார்கள்; குர்ஆன் எதற்காக இறக்கப்பட்டது?

 

வழிகேட்டில் இருந்தவர்களை பாவங்களில் மூழ்கியிருந்தவர்களை,அல்லாஹ்வை மறந்திருந்தவர்களை, மறுமையை அறியாமலிருந்தவர்களை,இந்த வாழ்க்கையை வீணான காரியங்களில் தொலைத்துக்கொண்டிருந்தவர்களைமீட்டெடுத்து அல்லாஹ்வின் பக்கம் கொண்டுவருவதற்காக,சொர்க்கத்தின் பக்கம் கொண்டு வருவதற்காக, மறுமையின் வெற்றியின் பக்கம் கொண்டு வருவதற்காக குர்ஆன் உலகத்தாருக்கு கொடுக்கப்பட்டது.

 

இந்தக் குர்ஆன் இது அறிவுரை; இது உபதேசம்; உள்ளங்களை மாற்றக்கூடியது; மனிதனுடைய செயல்களை மாற்றக்கூடியது; மனிதனுடைய கலாச்சாரம் பண்பாட்டை மாற்றக்கூடியது.

 

சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு மனிதனை அல்லாஹ்விற்கு விருப்பமான மனிதனாக, நம்மைப் படைத்த ரப்புக்கு விருப்பமான மனிதனாக,படைத்த ரப்பு நல்லவர்களுக்காக தயார் செய்து வைத்திருக்கக்கூடிய அந்த சொர்க்கத்திற்கு தகுதி உடையவனாக ஆக்குவது குர்ஆனுடைய வேலை.

 

அப்படி அந்த குர்ஆன் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றால், எப்படி ஒரு விதை அது பயிரை முளைக்க வைத்து அதிலிருந்து தானியங்களை விளைவிக்க வேண்டுமென்றால் அந்த விதை எங்கே விதைக்கப்பட வேண்டுமோ அங்கே விதைக்கப்பட வேண்டும்.

 

விதைக்கப்பட்டதற்கு பிறகு அதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அந்தந்த காரியங்களை செய்தாக வேண்டும்.அது போன்றுதான் இந்த குர்ஆன் எந்த மாற்றத்திற்காக இறக்கப்பட்டதோ அந்த மாற்றங்களை குர்ஆன் செய்ய வேண்டுமென்றால் அந்தக் குர்ஆனை ஏற்றுக் கொள்பவர்களிடத்திலே அந்த மாற்றங்களை உள்வாங்குவதற்குரிய, அந்த மாற்றங்களை அங்கீகரிப்பதற்குரிய அந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்குரிய, தகுதி அவர்களிடத்திலே இருக்கவேண்டும்.

 

ஆகவேதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையில் இந்தக் குர்ஆன் இறக்கப்பட்ட அந்த ரமலான் மாதம் முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் எப்போதெல்லாம் வருமோ அப்போதெல்லாம் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.

 

முஸ்லிம்கள் வாழ்நாளிலே ஒவ்வொரு ஆண்டும் இந்த ரமலானை அவர்கள் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

 

அந்த ஒவ்வொரு ரமலானிலும் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும். ஒன்று,இத்தகைய ஒரு ரமலான் மாதத்தில் தானே அல்லாஹு தஆலா நமக்கு குர்ஆனை கொடுத்தான் என்று நன்றி சொல்வதற்காக.

 

இரண்டாவதாக எந்தக் குர்ஆனை பற்றி அல்லாஹு தஆலா

هُدًى لِلْمُتَّقِينَ

இந்தக் குர்ஆன் தக்வா உள்ளவர்களுக்கு நேர்வழி காட்டும். (அல்குர்ஆன் 2 : 2)

 

அந்த தக்வா உள்ளவர்களில் நாம் ஆகுவதற்காக அல்லாஹுதஆலா இந்த ரமலான் மாதத்திலே நமக்கு நோன்பை கடமையாக்கியுள்ளான்.

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம். (அல்குர்ஆன் 2 : 183)

 

நோன்பை நான் உங்கள் மீது கடமையாக்கியதன் நோக்கம் என்ன? ரப்புச் சொல்கிறான்;உங்களிடத்திலே தக்வா வரவேண்டும்;அல்லாஹ்வுடைய பயம் வர வேண்டும்; அல்லாஹ்வுடைய அச்சம் வரவேண்டும்;அல்லாஹ் கண்காணிக்கிறான் என்ற அந்த ஈமானிய உணர்வு பிறக்க வேண்டும்.

 

சகோதரர்களே!சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வுடைய எப்பேற்ப்பட்ட ஏற்பாடு. இந்த ரமலானுடைய மாதம் என்பது ஏதோ இஃப்தார் பார்ட்டிகளுக்காக உள்ளது அல்ல. ரமலானுடைய நோன்பு பெருநாளை எதிர்பார்த்திருந்து புத்தாடைகளை வாங்கி குவிப்பதற்காக அல்ல.

 

ரமலானுடைய நோன்பு என்பது விழாக்கள் கொண்டாடுவதற்காக அல்ல;விளக்குகள் எரித்து தொங்க விடுவதற்காக அல்ல; வீடுகளையும் பள்ளிகளையும் அலங்கரிப்பதற்காக உள்ளது அல்ல. கலாச்சாரம் மாறிக்கொண்டே போகிறது.

 

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே அவர்களுடைய ரமலான் எப்படி அறியப்பட்டது? இன்றைய மஸ்ஜிதுகளை போன்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலே மஸ்ஜிதுகள் இருந்தனவா சொல்லுங்கள் பார்க்கலாம்.

 

ஒரு மஸ்ஜித் அதனுடைய கட்டிடத்தை கொண்டு அதற்கு செலவழிக்கப்பட்ட செலவினங்களை கொண்டு அல்லாஹ்விடத்திலே மதிப்பை பெறுவதில்லை.

 

முதலாவதாக ஒரு மஸ்ஜித் அல்லாஹ்விடத்திலே மதிப்பைப் பெறுகிறதென்றால் அதைக் கட்டக்கூடியவர்களின் எண்ணம் (இஹ்லாஸ்) எப்படி இருக்கிறது.

 

இரண்டாவது அந்த மஸ்ஜிதில் என்ன அமல் செய்யப்படுகிறது? அந்த மஸ்ஜிதுடைய அமலை வைத்துதான் அல்லாஹுத்தஆலா அந்த மஸ்ஜிதை உயர்த்துகிறான்.

 

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஸ்ஜித் சாதாரணமாக இருந்தது. மண் விரிப்பை தவிர பாய்களோ அல்லது போர்வைகளோ கம்பளங்களோ எதுவுமே இல்லை.மழை பெய்தால் ஒழுகும்;வெயில் அடித்தால்அந்த வெயிலை ஓரளவுக்குத்தான் தாங்கும்.

 

இப்படிப்பட்ட சாதாரணமான ஒரு குடிசைப் பள்ளியாகத்தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய பள்ளிவாசல் இருந்தது.

 

ஆனால் காபாவிற்கு அடுத்து மிக உயர்ந்த மஸ்ஜிதாக அல்லாஹ் அங்கீகரித்தான் என்றால் அதற்கு காரணம் அந்த மஸ்ஜிதை கட்டியெழுப்பிய ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும், அவர்களுடைய தோழர்களின் இஹ்லாஸ். பிறகு அங்கே அவர்கள் செய்த அமல்கள்.

 

அன்பானவர்களே! இன்று நம்முடைய மஸ்ஜிதுகளுக்கு செலவழிக்கப்படக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய்களில், செல்வங்களில், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மஸ்ஜிதுகள் அங்கே கட்டி எழுப்பப்பட்டிருக்கவில்லை.

 

ஆனால்,ஒன்றை கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள்!அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்நாளிலே அந்த மஸ்ஜிதில் ஒரு நாளில் நடந்த அமல் இன்று உலகத்தில் உள்ள எந்த மஸ்ஜிதில் நடக்கிறது?

 

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவியிலே அவர்களுடைய அந்த ரமலானின் ஒரு நாள்,ஒரு பகல்,ஒரு இரவு,உலகத்தில் இன்று எத்தனை விலை உயர்ந்த மஸ்ஜிதுகள்,எத்தனை ஆடம்பரமான மஸ்ஜிதுகள் இவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து அதிலே தொழக்கூடியவர்களுடைய ஓதக்கூடியவர்களுடைய வணக்க வழிபாடுகளையெல்லாம் ஒன்று சேர்த்தாலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய காலத்தில் அவர்களுடைய தோழர்கள் மஸ்ஜிதுன் நபவியிலே செய்த ஒருநாள் இபாதத்திற்கு சமமாகுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

 

நமது மஸ்ஜிதுகளிலே எல்லா வசதிகளும் இருக்கின்றன. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மஸ்ஜிதிலே எந்த வசதிகளும் இருக்கவில்லை.

 

அவர்களின் காலத்திலே எங்கே பாத்ரூம்கள் இருந்தன? அவர்களின் காலத்திலே மின்சாரம் கிடையாது. அங்கே மின்விசிறிகள் இருந்திருக்குமா? விளக்குகள் இருந்திருக்குமா? என்ன வசதி அங்கே இருந்தது?

 

ஆனால், அந்த மஸ்ஜிதை விட்டு பிரிய மனமில்லாமல் நபித்தோழர்கள் அந்த மஸ்ஜிதிலே குடிக்கொண்டிருந்தார்களே! அங்கு ஓதுவதிலும், நின்று வணங்குவதிலும்,அவர்களின் மனம் லயித்து இருந்ததே!

 

அவர்கள் எப்படி வணங்கினார்கள்? இரவுத்தொழுகையை ஆரம்பித்தால் இன்று நமக்கு சஹர் சாப்பிட நேரம் இருக்காது என்று பின்னால் தொழக்கூடிய தோழர்கள் முடிவு செய்து விடுவார்கள்.

 

அந்த மாதிரி இன்றைக்கு தொழுகை வைத்தால் இமாம் மட்டும் நிற்பார்;மற்றவர்கள் எல்லாம் போய் விடுவார்கள்.

 

ஆனால் அன்று மஸ்ஜிதுன் நபவியில் ஒவ்வொரு நாளும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமுடைய காலத்திலே

خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ

ஸஹரை நாங்கள் பயந்தோம். அதாவது கிடைக்காது போலிருக்கிறது. இமாம் கடைசியில் ஸலாம் கொடுப்பார்;ஓடுவார்கள்;சில பேரிச்சம் பழங்களை சாப்பிடுவார்கள். சில மிடறு தண்ணீரை குடிப்பார்கள். ஃபஜர் தொழுகைக்காக அதான் சொல்லப்பட்டு விடும்.(1)

 

அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1375, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

 

இன்று இந்த ஒரு மணி நேரத் தொழுகையை தொழுவதற்குள்,அதிலேயும் அரைமணி நேரம்

தாமதம். தொழ வருபவர்களிடம் எப்படிப்பட்ட ஒரு அலட்சியம்!கவனக்குறைவு!என்ன நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்?

 

இந்த ரமலான் நம்மிடத்திலே பேசுவதாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய விருந்தாளி வருகிறார்;நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

ஒரு பெரிய அரபு நாட்டில் இருந்து ஒரு பெரிய மன்னர் வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அமல்களிலும், தக்வாவிலும், இபாதத்திலும், நீதியிலும், எல்லா விஷயத்திலும் நல்லவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

 

அப்படிப்பட்ட ஒரு மன்னர் திடீரென்று உங்கள் வீட்டுக்கு வருகிறார் என்றால் எப்படி இருக்கும் உங்களுக்கு?!அவரை எப்படி எல்லாம் நேசிப்பீர்கள்.அவருக்காக எப்படி எல்லாம் ஓடுவீர்கள்.

 

உங்கள் உள்ளம் எப்படி பூரிப்படையும். எவ்வளவு சந்தோஷப்படுவீர்கள். அவரை எப்படி சந்தோஷப்படுத்துவது?திருப்திப்படுத்துவது?என்றெல்லாம் நீங்கள் உங்கள் உள்ளங்களிலே என்னென்ன எண்ணங்கள் வரும் என்று யோசித்துப்பாருங்கள்.

 

அன்பானவர்களே! 11மாதங்களில் சிறந்த மாதம்; குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். எந்த மாதத்தில் சுவர்க்கம் அலங்கரிக்கப்பட்டு அதனுடைய வாசல்கள் திறக்கப்பட்டு விடுகின்றனவோ,நரகம் பூட்டப்பட்டு ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டு விடுகிறதோ அந்த மாதம் நம்மைத் தேடி வந்திருக்கிறது.

 

அந்த மாதம் சொல்கிறது; குர்ஆன் இறக்கப்பட்ட மாதம், நான் வந்திருக்கிறேன். உன்னை தேடி வந்திருக்கிறேன். நான் வந்ததற்காக அல்லாஹுத்தஆலா சொர்க்கத்தை அலங்கரித்து வைத்திருக்கிறான்.

 

நான் வந்த காரணத்தால் நரகத்தை அல்லாஹுத்தஆலா பூட்டி விட்டான். என்னால் அல்லாஹுத்தஆலா ஒவ்வொருநாளும் நரக நெருப்பிலிருந்து பாவிகளை விடுதலை செய்கிறான்.

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் பாவிகள் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள். என்னுடைய இந்த மாதத்திலே நீ செய்யக்கூடிய துஆக்கள் ஏற்கப்படுகின்றன. உன்னுடைய அமல்களுக்கு இரட்டிப்பாக கூலி கொடுக்கப்படுகின்றன என்று இந்த ரமலான் நம்மை பார்த்து பேசுவதாக வைத்துக்கொள்ளுங்கள். (ஹதீஸ்களின் கருத்துக்கள்)(2)

 

இந்த ரமலானுக்குரிய ஹக்கை நாம் கொடுத்தோமா? இந்த ரமலான் சொல்கிறது; குர்ஆன் இறக்கப்பட்ட லைலத்துல் கத்ருடைய இரவு என்னிடத்திலே இருக்கிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு என்னிலே இருக்கிறது.

 

முஃமினே! எனக்காக நீ உற்சாகப்பட மாட்டாயா? என்னுடைய வருகையை கொண்டு நீ சந்தோஷப்பட மாட்டாயா? உங்களுடைய வீட்டிற்கு அவ்வளவு ஒரு பெரிய விருந்தாளி வந்திருக்கும்போது அவரை விட்டுவிட்டு அவரை கவனிப்பதை விட்டுவிட்டு, அவரை உபசரிப்பதை விட்டுவிட்டு, அவரை மறந்துவிட்டு வேறு வேலைகளிலே, வேடிக்கைகளிலே, வீண் சிரிப்பிலே, ஈடுபட்டு நீங்கள் அவரை மறந்து விட்டால் உங்களைப் பார்த்து அந்த மனிதர் என்ன சொல்வார்?

 

அப்படித்தானே இந்த ரமலானுக்கு அல்லாஹு தஆலா பேசக்கூடிய ஒரு வாய்ப்பை கொடுத்திருந்தால் இந்த ரமலான் நம்மை பார்த்து சொல்லி இருக்கும்.

 

ரமலான் வந்ததுl; இன்னும் பலருடைய வீடுகளிலே சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய அன்றாட அமல்களிலே மாற்றம் இல்லை. அவர்களுடைய தொழுகையிலே மாற்றம் இல்லை.

 

அவர்களுடைய ஈடுபாடு குர்ஆனோடு ஏற்படவில்லை. சதகா, ஜக்காத்துக்காக அவர்களுடைய செல்வங்கள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. தன்னுடைய ஆடைக்காக,தான் இஃப்தார் செய்வதற்காக, தான் ஸஹர் செய்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டால் எத்தனை ஏழைகள் இந்த ரமலானில் வறுமையிலே, பஞ்சத்திலே, இஃப்தார் இல்லாமல்,சஹர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்று உணர்ந்து அவர்களுக்காக தங்கள் செல்வங்களை ஒதுக்குவதற்கான ஏற்பாடு இல்லை.

 

பார்க்கலாம்;பார்க்கலாம்;கடைசி பத்திலே பார்க்கலாம். பிறகு, கடைசி நாட்களிலே பார்க்கலாம்.

 

அன்பானவர்களே! இந்த நஃப்ஸ் எப்படிப்பட்டதென்றால் அல்லாஹ் சொன்னதைப் போன்று கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்ட ஒன்று. (அல்குர்ஆன் 4 : 128)

 

இதிலிருந்து செல்வத்தைப் பிடுங்கிநம்முடைய மறுமைக்காக நாம் செலவழிக்க வேண்டும்.

 

இல்லையென்றால் இது நம்மை அல்லாஹ்வின் பாதையிலே செலவழிக்க விடாது. இன்னும் வேண்டும், எவ்வளவுதான் நாம் இந்த நஃப்ஸுக்கு கொடுத்தாலும் சரி இந்த நஃப்ஸ் திருப்தியே படாது.

 

ஆகவேதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அல்லாஹ்விடத்திலே செய்த துவாக்களிலே ஒன்று,

وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ

யா அல்லாஹ்! திருப்தி பெறாத ஆன்மாவிலிருந்து,நஃப்ஸிலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்.(3)

 

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3482, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ரமலான் மாதம் வந்து விட்டாலே இந்த ரமலான் வந்து விட்டது என்ற சுபச் செய்தியை மக்களுக்கு சொன்னார்கள்.

 

أَتَاكُمْ رَمَضَانُ-அத்தாக்கும் ரமலான்.

ரமலான் உடைய மாதம் உங்களுக்கு வந்திருக்கிறது. அதை பற்றிய உணர்வை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.(2)

 

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 2106, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

 

இந்த மாதம் நமக்கு அப்படி என்ன கொடுக்கப் போகிறது?

 

அலட்சியத்தினாலும் மறதியினாலும் பதினோரு மாதங்கள் செய்த பாவங்கள் அமல்களிலே ஏற்பட்ட குறைகள் இவையெல்லாம் நமக்கு இம்மாதத்திலே நீக்கப்படுகிறது, பூர்த்தி செய்யப்படுகிறது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிவர்த்தி செய்யப்படுகிறது.

 

எப்படிப்பட்ட பாக்கியம் இது! ஒரு எஜமானிடத்திலே வேலை செய்கிறீர்கள்; அந்த எஜமானன் காலையிலிருந்து மாலை வரை உங்களிடத்தில் வேலை வாங்குகிறான். மாலை நீங்கள் வீட்டிற்குப் போகும்போது உங்களிடத்திலே சொல்கிறான். உங்களுக்கு 10நிமிடம் அவகாசம். காலையிலிருந்து மாலை வரை எட்டு மணி நேரம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

 

இந்த எட்டு மணி நேரத்திலே ஏழு மணி நேரம் ஐம்பது நிமிஷம். நீ எப்படி வேலை செய்தியோ.கொஞ்சம் முன்ன பின்ன இடையில் சாப்பிடப் போனாய், ஓய்வெடுத்த நேரம், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாய். பரவாயில்லை.அதை எல்லாம் நான் விட்டுவிட்டேன். இந்த கடைசி பத்து நிமிஷம் சரியாக வேலை செய்து விடு மொத்தத்தையும் நான் மன்னித்து விடுகிறேன் என்று சொல்கிறார்.

 

கடைசி 10நிமிடம் நீ சரியாக வேலை பார்த்து விட்டால் உன்னுடைய மீதி நேரங்களிலே நீ செய்த கவனக்குறைவையெல்லாம் நான் மன்னித்து விடுகிறேன் என்று சொன்னால் இந்தப் பத்து நிமிஷத்தை இந்த அடியான் எப்படி பெறுவான் சொல்லுங்கள்.

وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ

11மாதங்களில் நடந்த பாவங்களையெல்லாம் இந்த ரமலான் மன்னித்து விடுகிறது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.(4)

 

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 233.

 

அத்தோடு நன்மைகள் இரட்டிப்பாக்கப்பட்டு விடுகின்றன. மேலும் சொர்க்கத்திற்காக உன்னுடைய பெயர் எழுதப்பட்டு விடுகிறது. ரய்யான் என்ற சொர்க்கத்தின் அந்த வாசலில் இந்த ரமலானுடைய நோன்பைப் பேணியவர்களைத் தவிர யாரும் செல்லமாட்டார்கள். (5)

 

அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1896.

 

சிந்தித்துப் பாருங்கள் இப்படிப்பட்ட ஒரு பாக்கியம் கிடைக்கப் பெற்றிருந்தும் இந்த ரமலானை பேணாதிருந்தால் நம்மை விட ஒரு நஷ்டவாளிகள்,நம்மை விட ஒரு அலட்சியக்காரர்கள் யார் இருக்க முடியும்?!

 

நம்முடைய முன்னோர்கள் ரமலானை எதிர்பார்த்திருந்தார்கள். எதற்காக? இன்று நம்மிலும் பலர் ரமலானை எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பின் பின்னணியும் வேறு வேறு.

 

பலர் வகைவகையான உணவுகளுக்காகவும் இஃப்தார்களுக்காகவே ரமலானை எதிர்பார்த்திருப்பது உண்டு. பலர் அந்த ரமலானுடைய இரவு காலங்களிலே பொழுதுகளை போக்கலாம், சுற்றித் திரியலாம் என்பதற்காக வீண் விளையாட்டுகளுக்காக.

 

நமது வாலிபர்களைப் பாருங்கள்; எல்லா முஸ்லிம் மஹல்லாக்களிலும் நாம் பொறுக்கி எடுத்தால் ஒவ்வொரு மஹல்லாவிலும் குறைந்தது ஐம்பது பேரையாவது பொறுக்கி எடுக்கலாம்.

 

என்ன சிந்திக்கத் தோன்றுகிறது என்றால் இவர்களுக்கு தாய் தந்தை இல்லையா? இவர்களுடைய வீட்டிலே இவர்களை கேட்கக்கூடிய பொறுப்பாளர்கள் இல்லையா? இவ்வளவு நேரம் இவர்கள் வெளியிலே சுற்றித் திரிந்துகொண்டு நேரங்களை வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறார்களே! இவர்களுடைய காப்பாளர்கள்,பொறுப்பாளர்கள் எங்கே சென்றார்கள்?யோசித்துப் பாருங்கள். எப்படி நேரங்கள் வீணாக கழிந்து கொண்டிருக்கின்றன.

 

ரமலானை நம்முடைய முன்னோர்கள் எதிர்பார்த்தார்கள்.எதற்காக?அந்த ரமலானிலே குர்ஆன் ஓதுவதற்காக,எப்போதுமே குர்ஆன் ஓதக்கூடிய வழக்கம் உள்ள அவர்கள் ரமலான் வந்துவிட்டால் குர்ஆனிலே ஈடுபாடு கொண்டவர்களாக எல்லா நேரங்களிலும் குர்ஆனை திலாவத் செய்பவர்களாக இருந்தார்கள்.

 

பகல் காலங்களில் குர்ஆனைப் பார்த்து ஓதித் கொண்டிருப்பார்கள். பின்னர்,இரவு நேரங்களில் குர்ஆனை தொழுகையிலே ஓதுவார்கள். இன்று நமக்கு குர்ஆன் மனப்பாடம் இல்லை என்று இருந்தாலும் அங்கு இரவுத் தொழுகைகளிலே நாம் எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு கலந்து கொள்கிறோம்.

 

சகோதரர்களே! இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். நம்மிடம் ஆர்வமின்மை. இந்த மாதத்தை பற்றிய சரியான ஒரு அறிவு இல்லாமை. இந்த மாதத்தை நாம் எப்படி பார்க்க வேண்டும். இந்த மாதத்துடைய நோக்கம் என்ன என்பதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

இந்த மாதம் எதற்காக என்பதை நாம் புரியாமல் இருப்பது. இன்னொரு பக்கம் மறுமையைப் பற்றி நாம் அறியாமை. சொர்க்கத்தை பற்றிய அறியாமை. நரகத்தைப் பற்றிய அறியாமை. இவற்றோடு நம்முடைய சோம்பேறித்தனம். அடுத்து இந்த துன்யாவின் மீதுள்ள நமது மோகம். நம்முடைய அமல்களை பின்னடைய செய்திருக்கிறது.

 

இந்த ரமலானை நாம் அலட்சியம் செய்வதற்கு இவையெல்லாம் காரணம். இன்று இன்னொரு பக்கம் எடுத்துக் கொண்டால் ரமலான் என்பதுகுறையாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்;பல வியாபாரிகளுக்கு ரமலான் வியாபாரத்துக்குரிய மாதமாக மட்டுமே ஆகிவிடுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

வியாபாரம் செய்ய வேண்டாம்;பொருள்களை வாங்க வேண்டாம்; விற்க வேண்டாம்என்று மார்க்கம் தடுக்கவில்லை. ரமலான் வியாபாரத்துக்குண்டான சீசன் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சீசனாக சஹாபாக்களுடைய வாழ்க்கையிலே ரமலான் இருந்ததில்லை.

 

ரமலான் அமல்களுடைய சீசனாக மட்டுமே இருந்தது. அமல்களுக்குண்டான மாதமாக மட்டுமே இருந்தது. அப்படியென்றால் நிர்பந்தங்கள் இருக்கின்றனவே, தேவைகள் இருக்கின்றனவே, இந்த 11மாதங்களில் என்ன செய்தோம் அன்பானவர்களே!?

 

இந்த ரமலானை நாம் எதிர்பார்த்திருந்தால், எப்படி ஒரு பஞ்ச மாதம் வருகிறது என்று அறிந்திருந்தால், அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு சேகரிக்க வேண்டிய பொருட்களை சேகரித்து வைத்து, வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி வைத்து, அதற்குரிய கவனத்தோடு அதற்குரிய ஏற்பாட்டோடு நாம் இருப்போமா இல்லையா?

 

ரமலானிலே இபாதத் செய்ய வேண்டும்; இபாதத்திற்கு அதிகமாக நேரத்தை கொடுக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்திருந்தால் மற்ற மாதங்களிலேயே நாம் முன்கூட்டியே அதற்குண்டான ஒரு அவசியமான ஏற்பாடுகளை நாம் செய்து வைத்திருப்போம்.

 

சரி வியாபாரியாக இருப்பவர்கள் இன்றைய சூழலிலே என்ன செய்வது? நாம் நிய்யத்து வைத்து அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்க வேண்டும். என்று அந்த மன உறுதிக்கு வந்துவிட்டால் கண்டிப்பாக அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா பரக்கத்செய்வான்.

 

பொதுவாக பாருங்கள்; இன்று எவ்வளவு தாமதமாக கடைகளை திறக்க முடியுமோ அவ்வளவு தாமதமாக மக்கள் கடைகளை திறக்கிறார்கள். இதனுடைய பாதிப்பு என்ன?

 

எவ்வளவு தாமதமாக கடைகளை அடைக்க முடியுமோ அவ்வளவு தாமதமாக கடைகளை அடைக்கிறார்கள். வியாபாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றார்கள். நாங்கள் இஃப்தாரோடு கடையை மூடி விடுவோம்,எந்த கடையாக இருந்தாலும் என்று இருந்தால் மக்கள் பகலிலேயே தங்கள் தேவைகளை வாங்குவதை வாங்கிக்கொண்டு அவரவர் இபாததத்திற்காக வந்து விடுவார்கள்.

 

நாம் இரவெல்லாம் கடைகளைத் திறந்து வைத்திருப்போம் என்ற காரணத்தினால் தான் அவர்கள் பகலை அலட்சியம் செய்துவிட்டு இரவிலே அவர்களுடைய இபாதத்தையும் வீணாக்கி கொண்டு நம்முடைய இபாதத்தையும் வீணாக்க வந்துவிடுகிறார்கள். அல்லது அவர்கள் இபாதத்தை வீணாக்குவதற்கு நாம் கடைகளை திறந்து வைத்திருப்பதும் ஒரு காரணம்.

 

இந்தப் பொழுதோடு இந்த கடைகள் அடைக்கப்பட்டு விடும். இப்போது உதாரணத்திற்கு, அரசாங்கத்துடைய அலுவலகங்கள் இருக்கிறது. காலை இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிக்குள் என்று இருந்தால் நான் நோன்பு வைத்திருக்கிறேன்,அதனால் வரமாட்டேன். எனக்கு இரவிலே கடையைத் திறங்கள் என்று அரசாங்கத்திடத்திலே யாராவது சொல்ல முடியுமா? அல்லது ஒரு தனியார் அலுவலகத்திலே சொல்ல முடியுமா?

 

அன்பானவர்களே! இதற்கு காரணம் என்ன? நம்முடைய பலவீனம். இந்தத் திட்டமிடுதல், அந்த முறைப்படுத்துதல்,வணக்க வழிபாட்டுக்காக. அதற்குண்டான ஏற்பாடு அதற்குண்டான ஆர்வம்.

 

அன்பானவர்களே! ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்; அல்லாஹு தஆலா நமக்கு எதை முடிவு செய்துவிட்டானோ அதுதான் நமக்கு கிடைக்கும். அதிக நேரம் கடை திறந்து இருப்பதால் எக்ஸ்ட்ரா கிடைத்துவிடும் என்ற ஒரு மனிதன் நம்புகிறான் என்றால் அவன் விதியை அறியவே இல்லை.

 

நாம் துனியாவை நம்முடைய இபாதத்திற்காக, நம்முடைய வணக்க வழிபாட்டுக்காக, ஆஹிரத்துக்காக என்று ஒரு திட்டமிடுதலுக்கு ஒரு ஏற்பாட்டுக்கு வந்துவிட்டால் கண்டிப்பாக அதற்கு ஏற்றது போல் மாற்றித்தான் ஆக வேண்டும். தோழர்கள் அப்படித்தான் மாற்றினார்கள்.

 

துனியாவிற்கு ஏற்ற படி ஆஹிரத்தை மாற்றமுடியாது.ஆஹிரத்திற்கு ஏதுவாகத்தான் நாம் துன்யாவை மாற்றிக்கொள்ள வேண்டும். தோழர்கள் அப்படித்தான் மாற்றினார்கள். நம்முடைய வாழ்க்கையிலே தீனுடைய அந்த ஒரு உயர்வு அவர்களுக்கு துனியாவிலும் வெற்றியை கொடுத்தது.

 

நம்முடைய தீனை சமரசம் செய்துகொண்டு துனியாவிற்கு ஏற்ப இந்த தீனை மாற்றி மாற்றி கடைசியிலே ஒரு சின்ன அடையாளம், ஒரு பொட்டுவைப் போன்று, சின்ன ஒரு துளியை போன்று, இந்த தீனை நம்முடைய வாழ்க்கையிலே வைத்திருக்கிறோம்.அல்லாஹ் மன்னிப்பானாக!

 

அல்லாஹ்வுடைய அடியார்களே! இவ்வளவு சிறப்புகளை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் பாருங்கள். இந்த ரமலானுடைய நோன்பு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு கொடுக்கப்பட்ட எவ்வளவு பெரிய பாக்கியம்!

 

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரில் ஏறுகிறார்கள். ஆமீன் சொல்கிறார்கள். பிறகு ஆமீன் சொல்கிறார்கள். பிறகும் ஆமீன் சொல்கிறார்கள். குத்பா முடிந்த உடனே தோழர்கள் கேட்கிறார்கள்;அல்லாஹ்வுடைய தூதரே! இன்று ஒரு வித்தியாசமாக நீங்கள் செய்தீர்களே? ஆமீன் ஆமீன் என்று சொன்னீர்களே.அதற்கு என்ன அர்த்தம்?

 

சொன்னார்கள்;ஜிப்ரீல் (அலை)எனக்கு முன்னால் தோன்றினார்கள்;அவர் துவா கேட்டார். நான் ஆமீன் சொன்னேன்.

 

யாருக்கு ரமலான் கிடைக்கப்பெற்று அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வில்லையோ அவர் நாசமாகட்டும் என்று அவர் சொன்னார். நான் ஆமீன் என்று கூறினேன். (6)

 

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானி, எண் : 2022.

 

அல்லாஹ்வுடைய அடியார்களே!நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த பத்துஆவுக்கு நாம் ஆளாக வேண்டுமா? அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்!

 

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரை பார்த்து சொன்னார்களோ, அவர் நரகத்திலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்;சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது;மலக்குகள் சொல்கிறார்கள்;

يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ

நன்மையை நாடக்கூடியவனே! இதோ நன்மைக்கான மாதம் வந்துவிட்டது; முன்னேறி வா! என்று. அந்த மக்களில் நாம் ஆகவேண்டும்.(7)

 

அறிவிப்பாளர் : ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 682, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

 

அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் இந்த ரமலானை அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கும், அல்லாஹ்வுடைய அன்பிற்கும், நம்முடைய அமல்கள் அதிகமாகுவதற்கும் காரணமாக ஆக்கி அருள் புரிவானாக!

 

அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது போன்று நன்மையுடைய மாதத்தில் அதிகமாக நன்மைகளை நாம் சேகரித்துக் கொள்வதற்கு,நன்மையிலே அதிகமாக ஈடுபடுவதற்கு,அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வானாக!

 

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ، فَلَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنَ الشَّهْرِ حَتَّى بَقِيَ سَبْعٌ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، فَلَمَّا كَانَتِ السَّادِسَةُ لَمْ يَقُمْ بِنَا، فَلَمَّا كَانَتِ الْخَامِسَةُ قَامَ بِنَا حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا قِيَامَ هَذِهِ اللَّيْلَةِ، قَالَ: فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ»، قَالَ: فَلَمَّا كَانَتِ الرَّابِعَةُ لَمْ يَقُمْ، فَلَمَّا كَانَتِ الثَّالِثَةُ جَمَعَ أَهْلَهُ وَنِسَاءَهُ وَالنَّاسَ، فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قَالَ: قُلْتُ: وَمَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ، ثُمَّ لَمْ يَقُمْ بِقِيَّةَ الشَّهْرِ(سنن أبي داود 1375 -) حكم الألباني : صحيح

குறிப்பு 2)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، عَنْ زُهَيْرِ بْنِ الأَقْمَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، أَعُوذُ بِكَ مِنْ هَؤُلَاءِ الأَرْبَعِ» وَفِي البَابِ عَنْ جَابِرٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَابْنِ مَسْعُودٍ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ (سنن الترمذي3482 -) حكم الألباني- : صحيح

குறிப்பு 3)

أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ»(سنن النسائي 2106 -) حكم الألباني- صحيح

தரம் : ஸஹீஹ் (அல்பானி)

 

குறிப்பு 4)

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أَبِي صَخْرٍ، أَنَّ عُمَرَ بْنَ إِسْحَاقَ مَوْلَى زَائِدَةَ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ»(صحيح مسلم-(233

 

குறிப்பு 5)

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ فِي الجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ القِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، يُقَالُ: أَيْنَ الصَّائِمُونَ؟ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ"(صحيح البخاري1896 -)

குறிப்பு 6)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ بْنِ عَقِيلٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرٍ، قَالَ: صَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قَالَ: " أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ أَحَدَ وَالِدَيْهِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ، قَالَ: يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ فَمَاتَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَأُدْخِلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ، قَالَ: وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ، قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ"المعجم الكبير للطبراني2022 -

குறிப்பு 7)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ [ص:58] مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ " (سنن الترمذي 682 -) حكم الألباني: صحيح

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/