HOME      Khutba      பகுதி 1-2 இஸ்லாம் வென்றேதீரும் | Tamil Bayan - 520   
 

பகுதி 1-2 இஸ்லாம் வென்றேதீரும் | Tamil Bayan - 520

           

பகுதி 1-2 இஸ்லாம் வென்றேதீரும் | Tamil Bayan - 520


இஸ்லாம் வென்றே தீரும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : இஸ்லாம் வென்றே தீரும் (பகுதி 1-2)
 
வரிசை : 520
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 13-04-2018 | 28-07-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீனை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் எதை உலக மக்களுக்கும் உபதேசித்தானோ, அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வுடைய தக்வாவோடு வாழுமாறு அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆவின் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹுத்தஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து, அல்லாஹ்வுடைய அருளும் அன்பும் பெற்ற நல்லடியார்களின் ஆக்கி அருள்வானாக! அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நாமும் பின்பற்றி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
 
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் இந்த உலகத்தில் ஓங்குவதற்கும், இந்த உலகத்தில் உயர்வதற்கும், உலகமெல்லாம் "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்ற இந்தத் தூய திரு கலிமாவின் பக்கம், அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கமாகிய இஸ்லாமின் பக்கம், உலக மக்களை எல்லாம் அழைப்பதற்கும், உலக மக்களெல்லாம் இந்த மார்க்கத்தில் நுழைவதற்கு காரணமாக இருப்பதற்காக அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் அங்கீகரிப்பானாக! என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
பொதுவாக, இன்று சில முஸ்லிம்கள் மனதளவில் சோர்வடைவதை பார்க்கிறோம். உலகமெல்லாம் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக, சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றனவே, முஸ்லிம்கள் ஆங்காங்கே கொல்லப்படுகிறார்களே, இஸ்லாமிய நாடுகளை கைப்பற்றுவதற்காக, எதிரிகள் திட்டம் தீட்டுகிறார்களே, முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடுகளில், குறிப்பாக அவர்கள் சிறுபான்மையினராக வசிக்கின்ற நாடுகளில், அவர்களை மத மாற்றம் செய்வதற்கும், அவர்களை அந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கும், அவர்களை அந்த நாட்டில் படுகொலைகள் செய்வதற்கும் எதிரிகள் திட்டம் தீட்டி மிகப்பெரிய சூழ்ச்சிகளை செய்கின்றார்களே!
 
அதில் சில இடங்களில் அவர்கள் வெற்றி கண்டது போல, இன்றைய செய்திகள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் பரவுகின்றனவே. இப்படியெல்லாம் பல நிகழ்வுகளை, பல செய்திகளை பார்க்கும்போது, முஸ்லிம்களில் சிலருக்கு மனதளவில் சோர்வு ஏற்படுகிறது. 
 
அல்லாஹுத்தஆலா நம்மை கைவிட்டு விட்டானா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!) நாம் இந்த மார்க்கத்தில் இனி என்ன செய்வது? நாம் திரும்ப இந்த பூமியில் ஓங்குவோமா? அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் நிலைக்குமா? என்றெல்லாம் பலவிதமான கேள்விகள் அவர்களுடைய உள்ளத்தில் வருவதைப் பார்க்கிறோம்.
 
அந்த ஒரு குழப்பத்தை நீக்குவதற்காகவும், இப்படிப்பட்ட மனசோர்வுகளை, தாழ்வு மனப்பான்மையை, தோல்வி மனப்பான்மையை நீக்குவதற்காகவும் தான் இன்று சில விஷயங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா சூரத்துர் ரூம் உடைய 47-வது வசனத்தில் சொல்கிறான்:
 
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ‏
 
நிச்சயமாக, முஃமின்களுக்கு உதவுவது நம் மீது கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் : 30:47)
 
சத்தியமாக அல்லாஹு தஆலா நமக்கு உதவுவான். அல்லாஹ்வுடைய உதவி உண்மை முஃமின்களாக இருக்கின்ற நிலையில், நமக்கு உண்டு என்ற உறுதியான, ஆழமான, அழுத்தமான நம்பிக்கை, ஒவ்வொரு முஃமீனுடைய உள்ளத்திலும் இருக்க வேண்டும். 
 
நாம் தோற்று விட்டோம். அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டானா? என்ற சந்தேகங்கள், குழப்பங்கள் ஒரு முஃமீனுக்கு அரவே வரக்கூடாது. அல்லாஹ்விற்கு முன்னால் ஸுஜூது செய்யக்கூடிய ஒரு முஃமின், அல்லாஹு அக்பர் என்ற தக்பீரை கூறி, அல்லாஹ்வை தொழக்கூடிய ஒரு முஃமின், கண்டிப்பாக இந்த மார்க்கம்தான் உலகத்தில் நிலைத்திருக்கும். 
 
அல்லாஹ்வுடைய உதவி இந்த தக்பீரை கூறியவர்களுக்கு, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்கு, கண்டிப்பாக கிடைக்கும் என்ற மன உறுதி, மனவலிமை அவர்களிடத்தில் இருக்கவேண்டும். அவர்கள் சோர்வடைய வேண்டிய அவசியமே இல்லை.
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா, இதற்கு முந்தைய சமுதாயங்களின் வரலாறுகளை நமக்கு எடுத்துச் சொல்கிறான். அல்லாஹ்வுடைய இறைத் தூதர்கள், வஹியை கொண்டு அனுப்பப்பட்ட அந்த இறைத் தூதர்கள் சோதிக்கப்படவில்லையா? அவர்களை எதிரிகள் தாக்கவில்லையா? 
 
ஏன், சில நேரங்களில் அவர்களை எதிரிகள் கொல்லவில்லையா? அவர்களோடு ஈமான் கொண்டவர்களை, தங்களது ஊரை விட்டு வெளியேற்றவில்லையா? ஆனால் முடிவு யாருக்கு? இறுதி வெற்றி யாருக்கு? என்பதை அல்லாஹ் நினைவூட்டுகின்றான்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா சூரத்துல் காஃபிர் உடைய 51-வது வசனத்தில் சொல்வதைப் பாருங்கள்!
 
اِنَّا لَنَـنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُ 
 
நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம். (அல்குர்ஆன் 40 : 51)
 
அல்லாஹ்வுடைய இந்த வாக்குகள் எல்லாம் நமது உள்ளங்களுக்கு உறுதியை தரவில்லையா? இந்த வசனங்களை நாம் ஓத வேண்டாமா? நமது ஈமானை புதுப்பிக்க வேண்டாமா? நமது ஈமானிய உற்சாகத்தை, ஈமானிய வீரத்தை, ஈமானிய தைரியத்தை இந்த வசனங்களை கொண்டு நாம் மீட்டெடுக்க வேண்டாமா? 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான். "நிச்சயமாக! நாம் நமது தூதர்களுக்கு உதவி செய்தே தீருவோம். மேலும் சொல்கிறான், ஈமான் கொண்டவர்களுக்கு, ஈமான் உடையவர்களுக்கு நாம் உதவி செய்தே தீருவோம். இந்த உலக வாழ்க்கையிலும், சாட்சிகள் மறுமை நாளில் வரக்கூடிய அந்த நாளிலும் கண்டிப்பாக நாம் உதவி செய்தே தீருவோம்.
 
அல்லாஹ்வுடைய வாக்கு அதற்குரிய நேரத்தில் வந்தே தீரும். தாமதமாகாது. அல்லாஹு தஆலா அதற்குரிய நேரத்தை வைத்து இருக்கிறான். ஆனால், அல்லாஹு ரப்புல் ஆலமீன் கைவிட்டு விட மாட்டான்.
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் எதிரிகள் நம்மை கொன்று குவிக்கும் படி, அவர்கள் நம்மை மிகைக்கும்படி, நாம் அழியும்படி அல்லாஹ் விட்டு விட மாட்டான். அல்லாஹு தஆலா ஒரு தவணை வைத்திருக்கிறான். ஒரு சோதனை வைத்திருக்கிறான். அவனிடம் திருந்தக்கூடியவர்கள் திருந்தி வருகின்ற வரை, அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒரு எல்லையை வைத்து இருக்கிறான்.
 
இஸ்ரவேலர்கள் பட்ட கஷ்டத்தை அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சூரத்துல் கஸஸ், இன்னும் இதுபோன்ற சூராக்களில் கூறுவதை நாம் பார்க்கவில்லையா? 
 
இஸ்ரவேலர்கள் எத்தனை நூறு ஆண்டுகளாக, ஃபிர்அவுன் மற்றும் அவனுடைய அந்த வம்சத்தார்களுடைய ஆக்கிரமிப்பில், அவர்களுடைய அந்த கெடுபிடியில், அவர்களுடைய அந்த வம்புதனத்திற்கு மத்தியில் எவ்வளவு கொடுமைகளை சந்தித்தார்கள். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சொல்லிக் காட்டுகின்றான்:
 
وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ‏
 
இன்னும், பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை ஆட்சியாளர்களாக நாம் ஆக்குவதற்கும் (ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் பூமிக்கும் சொத்துகளுக்கும்) சொந்தக்காரர்களாக அவர்களை நாம் ஆக்குவதற்கும் நாடினோம். (அல்குர்ஆன் 28 : 5)
 
மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு ஈமான் கொண்டு, அவர்களுக்கு கீழ்ப்படிந்த போது, இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கொடுத்த ஆட்சி அதிகாரம், அந்த கண்ணியத்தை இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். 
 
மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அல்லாஹ்வுடைய வேதத்தையும் நிராகரித்து, மூசா நபி அவர்களுக்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டிய, மிகப்பெரிய ஆட்சிக்கு சொந்தக்காரனாகிய ஃபிர்அவ்னை, அல்லாஹு தஆலா எப்படி அழித்தொழித்தான் என்பதையும் நமக்கு இந்த அத்தியாயத்தில் சொல்லிக் காட்டுகிறான்.
 
ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய மற்றுமொரு ஆறுதலை, சூரா ஸாஃப்ஃபாத் உடைய ஆகிய வசனங்களில் பாருங்கள்.
 
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ (171) إِنَّهُمْ لَهُمُ الْمَنْصُورُونَ (172) وَإِنَّ جُنْدَنَا لَهُمُ الْغَالِبُونَ
 
திட்டவட்டமாக நமது வாக்கு தூதர்களான நமது அடியார்களுக்கு முந்திவிட்டது. நிச்சயமாக அவர்கள்தான் உதவப்படுவார்கள். நிச்சயமாக நமது இராணுவம்தான் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 37 : 171-173)
 
எவ்வளவு அழுத்தம் திருத்தமாக ரப்புல் ஆலமீன் சொல்கிறான். யார் அல்லாஹ்வை ஈமான் கொண்டார்களோ, அல்லாஹ்வுடைய தீனுக்காக வாழ்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்வுடைய ராணுவம். அவர்கள் அல்லாஹ்வுடைய பட்டாளம். 
 
அல்லாஹ்வுடைய ராணுவம் என்றால், துப்பாக்கியை வைத்துக்கொண்டு, ராணுவ உடைகளை அணிந்து கொண்டிருக்கக்கூடியவர்கள் என்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ளாதீர்கள். 
 
முஸ்லிம்களில் சிலர், ஆயுதங்களைக் கொண்டு வெற்றி கிடைத்துவிடும். படை பலங்களைக் கொண்டு நம் நாடுகளை வெற்றி கொண்டு விடலாம் என்று எண்ணுகிறார்கள். 
 
இஸ்லாமை தங்களது சொந்த வாழ்க்கையில் பாழ்படுத்திக் கொண்டு, இஸ்லாமை விட்டு சொந்த வாழ்க்கையில் தூரமாக வாழ்ந்து கொண்டு, அவர்கள் படையைக் கொண்டு, பலத்தை கொண்டு, மற்ற அதிகாரத்தைக் கொண்டு அல்லது மற்ற மற்ற விஷயங்களை கொண்டு வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள்.
 
கொஞ்சம் நினைத்து பாருங்கள்! தனது தனிப்பட்ட வாழ்க்கையில் குஃப்ரையும், இறைநிராகரிப்பையும், ஷிர்க்கையும் வைத்துக்கொண்டு, தனிப்பட்ட வாழ்க்கையில், ஒவ்வொருவரும் இறைநிராகரிப்பையும், ஷிர்கையும் அல்லாஹ்விற்கு எதிரான, அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு எதிரான அசிங்கங்களையும், ஆபாசங்களையும், பாவங்களையும் வைத்துக்கொண்டு, நாடு மட்டும் இஸ்லாமிய நாடாக மாற வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முரண்பட்ட சிந்தனை என்பதை யோசித்துப் பாருங்கள். 
 
இன்று பலர் பேசுகிறார்கள், பல முஸ்லிம் நாடு அப்படி மாறிவிட்டது, இப்படி மாறிவிட்டது. அந்த நாட்டில் அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த நாட்டில் இது நடக்கிறது. அந்த நாட்டிலேயே அப்படி இப்படி என்பதாக, நாடுகளைப் பற்றி பேசுகிறார்கள். 
 
நாடுகள் என்பது எதனால் உருவாகிறது? சமுதாயம் தானே நாடு! நாடு என்பது கட்டிடமா? நாடு என்பது பாலைவனமா? நாடு என்பது ஆறுகளா? அங்குள்ள செல்வங்களா? மனிதர்கள்தானே நாடுகள்.
 
அந்த நாடுகளைப் பற்றி பேசக்கூடிய நாம், நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? நம்முடைய குடும்பம் எப்படி இருக்கிறது?
 
இது மிகப்பெரிய ஒரு முரண்பாடான சிந்தனையாக இன்று இருக்கிறது. இன்றைய முஸ்லிம்கள், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இஸ்லாமை ஒதுக்கி வைத்துவிட்டு, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில், அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு எதிராக நடந்து கொண்டு, எங்கோ தூரத்தில் இருக்கக்கூடிய நாடுகளை பார்க்கிறார்கள். அங்குள்ள அரசாங்கங்களை பார்க்கிறார்கள். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நபித்தோழர்களுக்கு எப்படிப்பட்ட வாக்குகை கொடுத்தான்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நபித்தோழர்களை எப்படி உருவாக்கினார்கள்? ஒவ்வொரு நபித்தோழரையும் பன்படுத்தினார்கள். ஒவ்வொரு சஹாபிக்கும் ஈமானிய தர்பியத்தை கொடுத்தார்கள். இஸ்லாமிய சட்டங்களை பேணக்கூடிய அந்த வாழ்க்கை முறையை கற்றுக் கொடுத்தார்கள். அவர்களின் மூலமாக நாடு உருவாகியது.
 
இன்று தனிநபர்களை எல்லாம் நாம் நாசமாக்கி விட்டு, நம்முடைய குடும்பத்தை நாசமாக்கி விட்டு, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை குடும்பத்திலிருந்து தூரமாக்கி விட்டு, பல நாடுகளைப் பார்த்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம். 
 
நம்மை விமர்சனம் செய்வதற்கு, நம்முடைய குறைகளை பார்ப்பதற்கே இன்னும் எத்தனை ஆயுள் தேவையோ? ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளை சிந்திப்பார்களேயானால், என்ன முரண்பாடுகள்? என்று பலர் என்ன நினைக்கிறார்கள். சில விஷயங்களை பெரிதாக அவர்கள் பார்க்கிறார்கள். கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய விஷயமாகவும் இருக்கலாம். 
 
அதை மட்டும் பார்த்துவிட்டு, எத்தனையோ பல பெரும் பாவங்களை, தன்னுடைய சுய வாழ்க்கையில் செய்து கொண்டு, தன்னுடைய குடும்பத்தில் அதை நிகழ்த்திக் கொண்டு, நடத்திக்கொண்டு நாம் உண்மையான முஸ்லிம்கள்; அவர்கள் எல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டுவிட்டார்கள் என்பதாக நினைக்கின்றோமோ!
 
எப்படி அவர்கள் இன்று மாறி இருக்கிறார்களோ, அது போன்றுதான் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! நம்மிலும் பலர் மாறியிருக்கிறார்கள். 
 
எந்த மக்கள் எந்த மார்க்கத்தில், எந்த கொள்கையில் இருப்பார்களோ அதற்கேற்ப தான் அல்லாஹு தஆலா அவர்களுக்கு ஆட்சியை கொடுப்பான். மக்கள் நல்லவர்களாக இருந்தால், அவர்களை ஆழக்கூடியவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள். மக்கள் கெட்டுவிட்டால் அவர்களும் கெட்டு விடுவார்கள்.
 
ஏனென்றால், ஆட்சியை ஆளவும் அவர்களிலிருந்து தான் வருவானே தவிர, அவன் ஒன்றும் வானத்தில் இருந்து இறங்க மாட்டான். அல்லது பூமியிலிருந்து முளைக்க மாட்டான். 
 
ஆகவேதான் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நபிமார்களை அனுப்பும் போது, மக்களை சீர்திருத்தம் செய்யக்கூடிய தஃவா பணியை கொண்டு தர்பியா பணியை கொண்டு அனுப்பினானே தவிர, மக்களை ஆட்சி செய்வதற்குரிய அரசாட்சியை கொண்டு, அரசாங்கத்தை கொண்டு அல்லாஹ் அனுப்பவில்லை. 
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நபிமார்களுக்கு முதலாவதாக மக்களை சீர்திருத்தம் செய்ய கூடிய, மக்களை தர்பியா செய்யக்கூடிய, மக்களின் உள்ளங்களை மாற்றக்கூடிய, மக்களின் உள்ளங்களில் ஈமானை, தக்வாவை போதிக்கக்கூடிய, உருவாக்கக் கூடிய அந்த ஈமானிய புரட்சியை உண்டாக்கினார்கள். அதற்குப் பிறகு ஆட்சி அவர்களுக்கு அமைந்தது.
 
இன்று பலர் தலைகீழாக சிந்திக்கின்றார்கள். இன்று பலருடைய எண்ணங்கள், பலருடைய அணுகுமுறைகள் தலைகீழாக இருக்கிறது. ஆட்சியை கொண்டு வருவோம். பிறகு சீர்திருத்தத்தை செய்வோம் என்பதாக. மன்னர் திருந்தட்டும் சட்டங்கள் வரட்டும், அதற்கு பிறகு மக்கள் திருந்துவார்கள் என்பதாக.
 
அப்படி என்றால் சீர்திருத்தம் ஏற்படாது. சீர்கேடுகளும், சண்டை சச்சரவுகளும், குழப்பங்களும், இன்னும் பலவிதமான முரண்பாடுகளும் தான் ஏற்படும். ஒரு சட்டத்தை போடும்போது, அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, மக்களுடைய மனநிலையை அல்லாஹ்வும் அல்லாஹ் உடைய தூதரும் மாற்றினார்கள். பிறகு அங்கே சட்டம் கொடுக்கப்பட்டது. 
 
மது ஹராம் என்ற சட்டம் வருவதற்கு இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன? மக்காவுடைய 13 ஆண்டுகால ஈமானிய உழைப்பு, பிறகு மதினாவில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகால ஈமானிய உழைப்பு. 
 
அதற்குப் பிறகு, மது ஹராம் என்ற சட்டம் இறங்குகிறது. இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்கள் சொல்கிறார்கள், யாருடைய வாயில் இருந்ததோ அவர்கள் துப்பினார்கள். யாருடைய தொண்டைக்குழியில் சென்றதோ அவர்கள் வாந்தி எடுத்தார்கள். யாருடைய வீடுகளில் இருந்தனவோ அதை எல்லாம் உடைத்து தெருக்களில் ஓட்டினார்கள் என்பதாக. (1)
 
நூல் : புகாரி எண்:2284, முஅத்தா எண்: 1335, தாரமி எண்: 2142, அபூதாவூத் எண்: 3188.
 
அதையெல்லாம் மற்ற நாடுகளுக்கு அனுப்பி விற்று காசாக்கலாம் என்பதாக நினைக்கவில்லை. உடனடியாக அதற்குரிய சட்டங்களை அவர்கள் பின்பற்றினார்கள்.
 
ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:
 
قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ .‌ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏
 
மூஸா தன் சமுதாயத்திற்கு கூறினார்: “அல்லாஹ்விடம் உதவிதேடுங்கள்! இன்னும், (உறுதியுடன்) பொறுத்திருங்கள்! நிச்சயமாக பூமி அல்லாஹ்விற்குரியதே. அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குவான். இன்னும், (வெற்றியின் நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே.” (அல்குர்ஆன் 7 : 128)
 
இந்த பூமி அல்லாஹ்விற்கு சொந்தமானது. எந்த சிலைக்கும் சிலுவைக்கும் சொந்தமானது அல்ல. அந்த சிலையும் சிலுவையும் அல்லாஹ்விற்கு சொந்தமானது. அல்லாஹ் ஒருவன் தான் உயிரோடு இருக்கக் கூடியவன். அல்லாஹ்வைத் தவிர மக்கள் யாரை, எதை வணங்குகிறார்களோ அவை எல்லாம் செத்த பிணம். அவர்களுக்கு எந்த உணர்வும் கிடையாது.
 
اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ‌
 
அவர்களெல்லாம் செத்தவர்கள். உயிரற்றவர்கள். (அல்குர்ஆன் 16 : 21)
 
எந்த ஆற்றலும் இல்லாதவர்கள். அல்லாஹ் ஒருவன் தான் உயிர் உள்ளவன், நித்திய ஜீவன், அனைத்தையும் அடக்கி ஆளக்கூடிய ஆற்றல் உள்ளவன்.
 
அந்த உயிருள்ள, உண்மையான இரட்சகனை நாம் வணங்குகிறோம். நாம் சோர்வடைய வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு சொந்தமான இந்த பூமியில் நாம் இருக்கிறோம். மற்றவர்களுக்கு சொந்தமான பூமியில் அல்ல. 
 
ரப்புல் ஆலமீன் சொல்கிறான், இந்த பூமி அல்லாஹ்விற்கு சொந்தமானது. தனது அடியார்களில் அல்லாஹு தஆலா தான் நாடக்கூடியவர்களுக்கு இந்த பூமியை தருகிறான். (அல்குர்ஆன் 7 : 128)
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா இதையும் சொல்லிகாட்டுகிறான்.
 
لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا‌
 
இந்த பூமியில் குழப்பத்தை விரும்பாத, பெருமையை விரும்பாத, நல்லெண்ணம் உள்ள, தக்வா உள்ள அடியார்களுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த பூமியை இறுதியாக கொடுப்பான். (அல்குர்ஆன் 28 : 83)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கக் கூடிய ஒரு ஹதீஸை முஸ்னது அஹமதில் காண்கிறோம். அவர்கள் சொன்னார்கள்; 
 
இந்த உம்மத்துக்கு நற்செய்தி சொல்லுங்கள். இந்த உம்மத்துக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொல்லுங்கள். இந்த உம்மத் ஒளிரும். இந்த உம்மத்திற்கு பிரகாசமான ஒரு எதிர்காலம் உண்டு. இந்த உம்மத்திற்கு உயர்வு உண்டு. இந்த உம்மத்துடைய தீனை அல்லாஹ் உறுதிப்படுத்தினான். இந்த உம்மத்திற்கு இந்த பூமியில் ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் கொடுப்பான்.
 
நூல் : முஸ்னது அஹ்மது, எண்: 20273, 20274.
 
எப்படிப்பட்ட ஒரு நற்செய்தியை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள்.
 
இதன் தொடர் அடுத்த அமர்வில் இடம் பெற்றுள்ளது.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
وحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ: سَأَلُوا أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْفَضِيخِ، فَقَالَ: مَا كَانَتْ لَنَا خَمْرٌ غَيْرَ فَضِيخِكُمْ هَذَا الَّذِي تُسَمُّونَهُ الْفَضِيخَ، إِنِّي لَقَائِمٌ أَسْقِيهَا أَبَا طَلْحَةَ، وَأَبَا أَيُّوبَ، وَرِجَالًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِنَا إِذْ جَاءَ رَجُلٌ، فَقَالَ: هَلْ بَلَغَكُمُ الْخَبَرُ؟ قُلْنَا: لَا، قَالَ: «فَإِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ»، فَقَالَ: يَا أَنَسُ، أَرِقْ هَذِهِ الْقِلَالَ، قَالَ: فَمَا رَاجَعُوهَا، وَلَا سَأَلُوا عَنْهَا بَعْدَ خَبَرِ الرَّجُلِ (صحيح مسلم - 1980)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/