HOME      Khutba      பித்அத் ஓர் எச்சரிக்கை - அமர்வு 1 | Tamil Bayan - 513   
 

பித்அத் ஓர் எச்சரிக்கை - அமர்வு 1 | Tamil Bayan - 513

           

பித்அத் ஓர் எச்சரிக்கை - அமர்வு 1 | Tamil Bayan - 513


பித்அத் ஓர் எச்சரிக்கை
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : பித்அத் ஓர் எச்சரிக்கை அமர்வு 1
 
வரிசை : 513
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 30-03-2018 | 13-07-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து வாழுமாறு, தக்வாவின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் என்னையும் உங்களையும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெற்ற நல்ல மக்களாக ஆக்கி அருள வேண்டும்; அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தை அல்லாஹு தஆலா தனது வேதத்தில் எப்படி நமக்கு எடுத்து சொல்கிறானோ, அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எப்படி வழிகாட்டினார்களோ, அல்லாஹ் யாரை பார்த்து நான் இவர்களை பொருந்திக் கொண்டேன், இவர்கள் சொர்க்கவாசிகள் என்று வாழ்த்துகின்றானோ அந்த நன்மக்கள் அல்லாஹ்வுடைய இந்த தீனை  எப்படி புரிந்து பின்பற்றினார்களோ அதுபோன்று நாமும் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு, அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றுவதற்கு அல்லாஹு தஆலா நமக்கு உதவி செய்வானாக!
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறைகளையும் சுன்னத்துகளையும் முழுமையாக பின்பற்றி, எல்லாவிதமான அனாச்சாரங்களிலிருந்தும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நமது உம்மத்துகளையும் பாதுகாப்பானாக! ஆமீன்.
 
இன்றைய முஸ்லிம் சமுதாயம், எந்த அளவு சுன்னத்துகளுக்கு, மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒழுக்கங்களுக்கு, மார்க்கத்தின் வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் தருகிறதோ அதைவிட அதிகமாக பித்அத்துகளுக்கும் முக்கியத்துவம் தருவதை நாம் பார்க்கிறோம். 
 
இன்னும் பல இடங்களிலே ஃபர்ளுகளை பாழாக்கினால் கூட, அவர்களுக்கு ஒரு ரோஷம் வராது; கோபம் வராது. அல்லாஹு தஆலா தனது வேதத்தில் சட்டமாக்கிய கட்டாயக் கடமையாக்கிய ஃபர்ளுகள் விடுபடுவதை கூட அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். 
 
ஆனால், அவர்கள் உருவாக்கிய பித்அத்திலே ஒரு பித்அத் விடுபடுவதை கூட, அவர்கள் விரும்ப மாட்டார்கள்; சகித்துக்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வுடைய இந்த தூய்மையான மார்க்கத்தின் மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய மதிப்பு மரியாதையை விட அவர்களுடைய முன்னோர்கள் உருவாக்கிய பித்அத்துகளின் மீது மதிப்பு மரியாதை இருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
அதை செய்யும்பொழுது அவர்களுக்கு ஒரு பக்தி, அதை செய்யும்போது அவர்கள் தங்களது ஈமான் அதிகரிப்பதை போன்று உணர்வது. இப்படியாக பல சீர்கேடுகளை சமுதாயத்தில் சர்வசாதாரணமாக பார்க்கிறோம். 
 
எப்படி ஷிர்க்கை பார்த்து பார்த்து அந்த ஷிர்க்கின் மீது உண்டான வெறுப்பு இந்த சமுதாயத்திற்கு எடுபட்டு விட்டதோ என்று நாம் அச்சப்படுவது போல, அதுபோன்று இந்த பித்அத்துகளை பார்த்து பார்த்து பித்அத்துகளை கண்டிக்காமல் விட்டிருக்கக்கூடிய அந்த நிலையை பார்க்கும் பொழுது அல்லாஹ்விடத்திலே நாம் பயப்பட வேண்டும்! நாமும் அந்த பித்அத்துகளை நாம் ஏற்றுக்கொண்டோமா? என்று. 
 
பித்அத்துகளை நாம் செய்யாமலிருப்பது மட்டும் போதாது. பாவத்தை செய்யாமலிருப்பது, பாவத்தை விட்டு விலகி இருப்பது மட்டும் ஒரு முஸ்லிமுக்கு போதாது.  
 
மாறாக, அந்தப் பாவம் செய்கிற மக்களை கரம்பிடித்து அந்தப் பாவத்திலிருந்து தடுப்பது, அந்த பாவத்தை பற்றி எச்சரிப்பது, இது பாவம், இதை செய்யாதே, அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகாதே என்று அம்மக்களைப் பார்த்து கண்டிப்பது எச்சரிப்பது இதுவும் இறை நம்பிக்கையினுடைய ஒரு அம்சம் என்பதை மறந்து விடக்கூடாது.
 
ஒரு முஸ்லிம் பாவங்களை விட்டு விலகி இருப்பார் என்று மட்டும் அல்லாஹ் சொல்லவில்லை. பாவத்தை தடுக்கக் கூடியவராக இருப்பார் என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنْكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
 
(சொர்க்க பாக்கியம் பெறுகின்ற அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்; வணக்கசாலிகள்; அல்லாஹ்வை புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; (தொழுகையில் பணிவாக அல்லாஹ்விற்கு முன்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்; நன்மையை ஏவக் கூடியவர்கள்; இன்னும், பாவத்தை விட்டுத் தடுக்கக் கூடியவர்கள்; இன்னும், அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவார்கள். (இத்தகைய தன்மைகளை உடைய) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 9 : 112)
 
அல்லாஹ் கூறக்கூடிய முஃமின்கள் யார் என்றால், பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் சட்ட வரம்புகளை பாதுகாப்பார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பாதுகாப்பது என்றால் என்ன? தானும் அல்லாஹ்வுடைய சட்டத்தின் படி நடப்பது; மக்களையும் அல்லாஹ்வின் சட்டத்தின்படி நடக்க தூண்டுவது. அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை மீறக் கூடியவர்களை பார்த்தால் அவர்களை அது குறித்து எச்சரிக்கை செய்வது. அவர்களுக்கு உணர்த்துவது. 
 
அவர்கள் செய்வது பாவம், தவறு என்று உணர்த்துவது. இதுதான் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணுவதாகும். 
 
இப்போது, இது பாவம்; இது தவறு; இது பித்அத் என்று தெரிகிறது. நாம் விலகி இருக்கிறோம். ஆனால், தடுப்பதில்லை. பொதுவாக சமூகமாக அதை செய்யக் கூடியவர்களுக்கு மத்தியில் அதை எச்சரித்து, அவர்களை தடுத்து இந்த காரியத்தை தொடர்ந்து நாம் அழுத்தமாக, விரிவாக, விசாலமாக, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் பயப்படாமல் செய்யவில்லை என்றால் வளரக்கூடிய நமது சந்ததிகள் இவையெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டவை என்ற உணர்வுகளுக்கு வந்து விடுவார்கள்.
 
இப்படித்தான் பல பித்அத்துகள் இந்த சமுதாயத்தில் முஸ்லிம் மக்களுக்கு மத்தியிலே இஸ்லாமிய மார்க்கத்தின் ஓர் அங்கமாகவே இன்று மாறபட்டிருப்பதை அரசாங்கங்கள் அதை அங்கீகரித்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். 
 
இன்று, எத்தனை முஸ்லிம் நாடுகளில் மிஃராஜ் இரவுக்கு விடுமுறை விடப்படுகிறது. அது அரசாங்க ரீதியாக கொண்டாடப்படுகிறது. அரசாங்க விடுமுறையாக முஸ்லிம்களுடைய திருநாளில் ஒரு பெரிய நாளாக ஆகி இருப்பதை பார்க்கிறோம்.
 
இதுபோன்று ஷஃபான் மாதத்துடைய இரவும். இப்படியாக பல பித்அத்துகளை பார்க்கிறோம். இவையெல்லாம் ஒரு காலத்திலே மார்க்க அறிஞர்களால் எச்சரிக்கப்பட்டு கொண்டிருந்தது. 
 
பின்னால் வந்தவர்கள் அந்த எச்சரிக்கையை செய்யாத காரணத்தால் அது ஒரு கூட்டத்தினுடைய மார்க்கமாகவே ஆகி, அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும், அதுவும்  இஸ்லாமில் உள்ளது தான் என்ற அளவிற்கு இன்று எல்லோராலும் நம்பப்படக்கூடிய அளவுக்கு உள்ள நிலைமை மாறி இருப்பதை பார்க்கிறோம். 
 
மீலாது நபிக்கு விடுமுறை. அது ஒரு பெருநாளாக பார்க்கப்படுகிறது. இதை நினைத்து நாம் மிகப்பெரிய ஓர் அச்ச உணர்வு கொள்ள வேண்டும். இப்படியாக பித்அத்துக்கள் மிகைத்துக் கொண்டே சென்றால் அடுத்து சுன்னத்துகளுக்கு இந்த மார்க்கத்தில் இடம் இருக்காது. 
 
அதுமட்டுமல்ல சுன்னத்துகள் எதிர்க்கப் பட்டுவிடும் பித்அத்துகள் எதிர்க்கப்படவில்லை என்றால். 
 
இந்த பித்அத்வாதிகள், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் காண்பித்து கொடுத்த ஒழுக்கங்களை செய்யக் கூடியவர்களை பார்த்து, இவர்கள் குழப்பம் செய்கிறார்கள்; இவர்கள் தவறு செய்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்து, சுன்னத்திற்கு எதிராக அவர்கள் போர்தொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் இன்று நமது காலத்திலேயே நடப்பதை பார்க்கிறோம்.
 
இந்த பித்அத் என்பது இது மிக மோசமான ஒன்று. இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்ட அதாவது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனைகள். எதிரிகளின் தாக்குதலால் ஏற்பட்ட சோதனைகளை விட, எதிரிகளின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட சோதனைகளை விட, இந்த பித்அத்தினால் ஏற்பட்ட சோதனை மிக பயங்கரமானது! இந்த பித்அத் வாதிகளால் ஏற்பட்ட சோதனை மிக பயங்கரமானது! இந்த பித்அத் வாதிகளால் ஏற்பட்ட ஆபத்தும், இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் மிக மோசமானது! 
 
ஆகவேதான், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் இந்த தினிலே பித்அத் இருக்கக் கூடாது; அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் என்ன சொன்னார்களோ அது தான் மார்க்கம் என்பதை அழுத்தம் திருத்தமாக அல்குர்ஆனில் கூறியிருப்பதையும் ஹதீஸிலே கூறியிருப்பதையும் அடுத்து தொடர்ந்து வந்த சஹாபாக்கள் தாபியீன்கள் இது குறித்து எச்சரிக்கை செய்ததையும் நாம் பார்க்கிறோம்.
 
மார்க்கத்திலே புதுமையான காரியங்களை உண்டாக்குவதால் அநேக ஆபத்துக்கள் அநேக பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் ஒன்று, இந்த உம்மத்தை அந்த பித்அத் ஆனது கூறுபோட்டு விடும். உம்மத்துடைய ஒற்றுமையை குலைத்து விடும். உம்மத்துக்கு மத்தியிலே சண்டை சச்சரவுகளை, போரை, யுத்தங்களை, குழப்பங்களை ஏற்படுத்தி விடும். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திற்குப் பிறகு ஹாரிஜியாக்கள் உருவானார்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் உருவான பித்அத்களிலே ஒரு முதல் பித்அத் தில் ஹீரூஸ். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ்வுடைய ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய கலிஃபாக்களுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தார்கள். 
 
அந்த கலிஃபாக்கள் நீதமாக ஆட்சி செலுத்தவில்லை; மார்க்கத்தை பேணவில்லை என்று அவர்கள் அந்த கலிஃபாக்களுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். வாள் தூக்க ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களை இரண்டு கூறாக பிரிக்க ஆரம்பித்தார்கள். 
 
அடுத்ததாக, அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யஹூதி இஸ்லாமிய மார்க்கத்தை தான் ஏற்றுக் கொண்டேன் என்று கூறி, முஸ்லிம்களுக்கு மத்தியிலே வந்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு வைக்க வேண்டும்; அவர்களின் குடும்பத்தாரை நேசிக்க வேண்டும்; அப்படி என்றால் அவர்கள் தான் கிலாஃபத்துக்கு தகுதியானவர்கள் என்று கூறி, அந்த அஹ்லுல்பைத் -ரசூலுல்லாஹ் உடைய குடும்பத்தார்கள் என்று சொல்லப்படுகின்ற அந்த தோழர்களையும் அவர்களின் வாரிசுகளையும் மதிக்க வேண்டும் என்பதாக மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்து, இறுதியாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கடவுள் என்று சொன்னால் அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். 
 
உருவானது எப்படி? சின்ன சின்ன விஷயங்களை கொண்டு, நம்மிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களை கொண்டு, அவர்கள் நமக்குள் வந்தார்கள். கடைசியாக அதை ஏற்றுக்கொண்டு அவனுக்கு என்று ஒரு கூட்டம் உருவாகி, அந்த கூட்டத்திற்கு அவன் தலைவனாக ஆகி விட்டபோது, இறுதியாக இதையும் ஏற்றுக் கொண்டார்கள். 
 
அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அவன் அல்லாஹ் என்று சொன்னான். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹ் என்று சொன்னான். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹ் என்று சொன்னான். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். 
 
இப்படியாக இந்த ஷியாக்கள் ராஃபிதாக்களுடைய பித்அத்துக்கள் உருவாகின. அதை தொடர்ந்து யுனானி தத்துவக்கலை இந்த மார்க்கத்திலே நுழைந்தபோது, குர்ஆனிலே குதர்க்கம் செய்து, குர்ஆனிலே விளையாடி, அல்லாஹ்வுடைய ஷிஃபத்துக்களை மறுக்கக் கூடிய கூட்டம், அல்லாஹ்வுடைய பண்புகளை மறுக்கக் கூடிய கூட்டம் உருவானது.  
 
தங்களுடைய புத்திக்கு ஏற்ப குர்ஆனை புரிந்து கொண்டு குர்ஆனில் வெளிப்படையாக சொல்லப்பட்ட வசனங்களுக்கு அதனுடைய அர்த்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை கொன்று சென்றது அந்த யுனானி தத்துவம். 
 
அவர்கள் படித்த அந்த யுனானி இறையாண்மை கல்வி என்ன போதித்ததோ அதையெல்லாம் மக்களுக்கு மத்தியில் பரப்பி இவர்கள் அல்லாஹ்விற்கு இலக்கணங்களை உண்டாக்கினார்கள். இவர்கள் அல்லாஹ்விற்கு பண்புகளை கொடுக்க ஆரம்பித்தார்கள். 
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அல்லாஹ்விற்கு சொன்ன பண்புகளை எல்லாம் மறுத்தது மட்டுமல்ல, அல்லாஹ் குர்ஆனில் தன்னை பற்றி எப்படி புகழ்ந்து பேசி இருக்கின்றானோ, தன்னுடைய தன்மைகள் தன்னுடைய குணங்கள் தன்னுடைய உள்ளமையின் ஷிஃபத்துகள் என்று அல்லாஹ் எதை பற்றியெல்லாம் சொல்லியிருக்கின்றனோ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வைப் பற்றி எப்படியெல்லாம் புகழ்ந்தார்கள்! அவற்றை உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொண்டால், அப்படியே ஏற்றுக் கொண்ட மக்களை பார்த்து முஷ்ரிக்குகள் என்று சொன்னார்கள். 
 
அப்படி ஏற்றுக் கொண்ட மக்களை பார்த்து இவர்கள் அல்லாஹ்வை படைப்புகளுக்கு ஒப்பாக்கி விட்டார்கள், மனிதனை போன்று ஆக்கி விட்டார்கள், இவர்களெல்லாம் முஷ்ரிக்குகள், அல்லாஹ்விற்கு உடலமைப்பை ஏற்படுத்தியவர்கள் என்று உண்மையான முஃமீன்களைப் பார்த்து குற்றம் சொன்னார்கள். 
 
இந்த ஃபித்னாவும் நாளடைவிலே பெருகி பெருகி இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் ஏற்பட்டபோது சுன்னாவை பின்பற்றிய மக்களிடத்திலே பழி வாங்கினார்கள்; பழிதீர்த்தார்கள். அவர்களையெல்லாம் அடித்து துன்புறுத்தி சிறையில் தள்ளினார்கள்.
 
யார் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ் சொல்லாத விஷயங்களை கொண்டு மக்களுக்கு போதித்து அதன் மூலமாக மக்களை பிரிப்பார்களோ, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் எப்படி எச்சரிக்கை செய்கிறார்கள் என்று பாருங்கள்!
 
اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَـعًا لَّسْتَ مِنْهُمْ فِىْ شَىْءٍ‌  اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَـبِّـئُـهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‏
 
நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்துக்கொண்டு, (அவர்களும்) பல பிரிவினர்களாக ஆகிவிட்டார்களோ அவர்களுடன் நீர் (எந்த) ஒரு விஷயத்திலும் (கலந்தவராக) இல்லை. (அவர்களது மார்க்கம், அவர்களது வழிபாடு வேறு, உமது மார்க்கம், உமது வழிபாடு வேறு.) அவர்களுடைய காரியமெல்லாம் அல்லாஹ்வின் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6 : 159)
 
வசனத்தின் கருத்து : யார் தங்களது மார்க்கத்தை பிரிவுகளாக தங்களது கொள்கையை பிரிவுகளாக ஆக்கிக் கொண்டார்களோ, இது எனது கொள்கை, இது எங்கள் ஜமாஅத்தின் கொள்கை, இது எங்களது இயக்கத்தின் கொள்கை, இது எங்களது மத்ஹபின் கொள்கை, இது எங்களது தரீக்காவின் கொள்கை, இப்படியாக ஏற்படுத்தி கொண்டாலும் சரி, அவர்கள் ஏற்படுத்திக் கொண்டதற்கு அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய நேரடியான ஹதீஸில் இருந்தும் அவர்கள் அதற்குரிய ஆதாரத்தை கொடுக்காமல், இதை இப்படித்தான் விளங்கிக்கொள்ள வேண்டும்; இதை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; இதை இப்படித்தான் புரிய வேண்டும் என்று அவர்கள் கூறினால் அவர்கள் எல்லாம் இந்த வசனத்தின் கீழே வருவார்கள்.
 
பல பிரிவுகளாக ஆகிவிட்டார்கள் என்பதை எப்படி புரிவது? அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்திலே ஈமான் உள்ளவர்கள் எல்லாம் சகோதரர்கள் என்ற அந்த ஈமானிய சகோதரத்துவத்தை குறித்து தனது ஈமானிய சகோதரனை அந்நியனாக பார்த்து ஒரு காஃபிரை தனக்கு நெருக்கமாக ஒருவன் பார்க்கிறான் என்றால் அவன் இந்த எச்சரிக்கையின் கீழே வருவான்.
 
தன்னுடைய இயக்கத்தின் வெறி, தன்னுடைய ஜமாத்தின் வெறி, தன்னுடைய தரீக்காவின் வெறி, தன்னுடைய மத்ஹபின் வெறி, இன்னொரு முஸ்லிமை பார்க்கும் பொழுது அவனுக்கு ஸலாம் சொல்வதிலிருந்து அவனை தடுத்தால், அவனிடத்திலே பேசுவதிலிருந்து அவனைத் தடுத்தால், அவர்களெல்லாம் இந்த பட்டியலில் வருவார்கள்.
 
யார் இந்த மார்க்கத்தை பிரித்துக்கொண்டு அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கூட்டமாக ஆகி கொண்டார்களோ அல்லாஹு தஆலா சொல்கின்றான்: நபி அவர்களுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று.
 
அன்பானவர்களே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! உள்ளத்திலே ஒரு கேள்வி கேட்டு பாருங்கள்! எந்த ஜமாஅத்தை விட்டு இந்த பிரிவினைவாதிகளை விட்டு அல்லாஹு தஆலா தன்னுடைய தூதரை பிரித்து விட்டானோ, தூதரே உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தூதரை அவர்களிலிருந்தே அல்லாஹ் விலக்கி விட்டானோ, அவர்கள் எந்த சொர்க்கத்திற்கு போவார்கள்? 
 
தூதர் இல்லாத சொர்க்கத்தை அவர்கள் தேடட்டும். அதற்குப் பிறகு அதைப் பற்றி பேசலாம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஜமாத்தை விட்டு பிரிந்து விட்டார்கள், நீங்கி விட்டார்கள் என்றால், அவர்கள் எப்படி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை எதிர்பார்க்க முடியும்?
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ
 
அல்லாஹ்வுடைய அன்பு இனிக்கிறதென்றால் நபியை பின்பற்ற வேண்டும். நபியை பின்பற்றினால் தான் அல்லாஹ்வுடைய அன்பும் அல்லாஹ்வுடைய மன்னிப்பும் கிடைக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 3 : 31)
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்: அவர்களில் காரியம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கூடியது.
 
எங்கே அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா கடுமையாக கோபம் கொண்டு எச்சரிக்கை செய்வானோ அந்த இடத்திலே அல்லாஹ் சொல்கிறான்: அவனுடைய காரியம் என்னிடத்தில் இருக்கிறது, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று. 
 
பாவிகளை எச்சரிக்கை செய்யும் பொழுது அல்லாஹ் சொல்கிறான்:
 
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ (25) ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
 
அவர்கள் நம்மிடம் வர வேண்டியதிருக்கிறது. நாம் அவர்களை விசாரணை செய்வோம். (அல்குர்ஆன் 88 : 25,26) 
 
என்று சொல்வதைப்போல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான்: அவர்களின் காரியம் அல்லாஹ்வின் பக்கம் தான் வரப்போகிறது என்று.
 
பிறகு, அல்லாஹ் சொல்கிறான்: அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நாளை மறுமையிலே அவர்களுக்கு உணர்த்துவான், அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் எப்படி அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாமல் போனதென்று. 
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُشْرِكِيْنَ مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏
 
இணைவைப்பவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். தங்களது மார்க்கத்தை(யும் வழிபாடுகளையும் இறைவன் அல்லாதவர்களுக்காக) பிரித்து பல (கடவுள்களை வணங்கி, பல) பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். (அல்குர்ஆன் 30 : 31, 32)
 
வசனத்தின் கருத்து : முஷ்ரிக்குகளிள் நீங்கள் ஆகிவிடாதீர்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹு தஆலா இந்த இடத்திலே முஷ்ரிக்குகளிடத்திலே இருக்கின்ற அல்லாஹ் வெறுத்த செயல்களில் ஒரு முக்கியமான செயலை சொல்கிறான். 
 
நீங்கள் முஷ்ரிக்குகளிடத்திலே சேர்ந்து விடாதீர்கள்! அவர்களை போன்று ஆகிவிடாதீர்கள் என்று கூறிவிட்டு சிலை வணங்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்லி இருந்தால் அது அந்த இடத்தில் அந்த எச்சரிக்கை. 
 
இந்த இடத்திலே அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா முஷ்ரிக்குகளிடத்திலே இருக்கின்ற ஒரு செயல் ஒரு முஸ்லிம்களிடத்திலே வந்துவிடக்கூடாது; காஃபிர்களிடத்தில் இருக்கின்ற ஒரு தன்மை ஒரு அடிப்படை ஒரு செயல்பாடு அது முஃமின்களிடத்திலே வந்து விடக்கூடாது என்பதற்காக அல்லாஹுத்தஆலா அந்த செயலை முதலாவதாக தடுக்கவில்லை. அந்த செயலை தடுப்பதற்கு முன்பாக, முஃமீன்களே நீங்கள் முஷ்ரிக்குகளிடையே சேர்ந்து விடாதீர்கள் என்று அல்லாஹு தடுக்கின்றான்.
 
இதிலிருந்து அல்லாஹ் என்ன உணர்த்துகின்றான்? அந்த செயலை ஒருவர் செய்வதால் அவரும் முஷ்ரிக்காக ஆகிவிடுவார். உதாரணத்திற்கு, சூரத்துல் அன்ஆமிலே அல்லாஹு தஆலாஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறான். 
 
அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனிலே நாம் எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட கூடாது? என்பதை விவரமாக விளக்கி எடுத்துச் சொன்னான். அதிலே ஒன்று, இறந்த பிராணி. அதை சாப்பிடக்கூடாது.
 
முஷ்ரிக்குகள் முஃமின்களிடத்திலே வந்தார்கள். முஸ்லிம்களிடத்திலே வந்தார்கள். வந்து கேட்டார்கள்: ஒரு பிராணி அறுத்து செத்துப் போய் விட்டதே? இதை யார் மௌத்தாக்கியது என்று. ஒரு பிராணி அறுத்ததால் அது செத்துப் போய்விட்டது இதை யார் மௌத்தாக்கியது என்று கேட்டார்கள். 
 
அறுத்தவர் மௌத்தாக்கினார். அப்படித்தானே வெளிப்படையிலே. யார் இதை அறுத்தாரோ அவர் இதை மௌத்தாக்கினார். சரி, ஒரு ஆடு மாடு தானாக மௌத்தாகிறது. இதை யார் மௌத்தாக்கியது? என்று கேட்டார்கள். 
 
என்ன சொல்வோம்? அல்லாஹ் என்று சொல்வோம். இப்போது அவர்கள் கேள்வி கேட்டார்கள்: அல்லாஹ் மௌத்தாக்கியதை சாப்பிட மாட்டீர்கள், நீங்கள் மௌத்தாக்கியதை சாப்பிடுவீர்களா? 
 
லாஜிக்!  ஷைத்தான் சொல்லக்கூடிய லாஜிக்.
 
இப்படியாக கேள்வி கேட்டவுடன் பாமர முஸ்லிம்களில் சிலருக்கு பயம் வந்துவிட்டது. ஓஹோ என்ன இது? என்று சொல்லிவிட்டு அப்படியே அமைதியாகி விட்டார்கள்.
 
அல்லாஹ் தஆலா சூரத்துல் அன்ஆம் உடைய வசனத்தில் சொல்கிறான்:
 
وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ
 
இந்த வேதத்திலேயே நான் உங்களுக்கு தெளிவு படுத்தி விட்டேன். (அல்குர்ஆன் 6 : 119)
 
நீங்கள் அறுத்ததை சாப்பிடுங்கள். எது தானாக இறந்ததோ அதை சாப்பிடாதீர்கள் என்று நான் தடுத்து விட்டேன். 
 
இதற்குப் பிறகும் அல்லாஹு தஆலா விளக்கம் எல்லாம் சொல்லவில்லை. தானாக செத்ததை ஏன் சாப்பிடக்கூடாது? அறுத்ததை ஏன் சாப்பிட வேண்டும்? இதற்கென்ன விளக்கம்? அதற்கு என்ன விளக்கம் என்றெல்லாம் அல்லாஹு தஆலா விளக்கம் சொல்லத் தேவையில்லை.
 
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ 
 
அவன் போடக்கூடிய சட்டத்தைப் பற்றி அவனிடத்திலே யாரும் கேள்வி கேட்க முடியாது! நாம் தான் கேள்வி கேட்கப்படுவோம். (அல்குர்ஆன் 21 : 23)
 
ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:
 
وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ
 
கருத்து : முஸ்லிம்களே! அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அறுக்கப்பட்ட பிராணிகளை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால், அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு அறுக்கப்பட்ட பிராணிகளை சாப்பிடுவதை தவிர்த்துக் கொண்டால் அல்லது அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு செத்த பிராணியை சாப்பிட ஆரம்பித்து விட்டால் சத்தியமாக நீங்களும் முஷ்ரிக்குகள் தான். (அல்குர்ஆன் 6 : 121)
 
சிலை வணங்கி இருக்கணும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் கோயிலுக்கு போய் மாலை போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு முஷ்ரிக்குக்கு அவனுடைய ஷிர்க்கிலே அவனுடைய அந்த சட்டத்திலே அல்லாஹ்வின் சட்டத்தை விட்டுவிட்டு ஒரு முஷ்ரிக்கின் சட்டத்தை எடுத்துக் கொண்டு, அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கி அல்லது ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்கிக் கொண்டால் நீயும் முஷ்ரிக்குகள் தான். அதுவும் சத்தியமிட்டு அல்லாஹ் சொல்கிறான்.
 
அன்பானவர்களே! எவ்வளவு நாம் இந்த மார்க்கத்திலே பேணுதலாக கண்ணும் கருத்துமாக மிகப் பயமாக இருக்க வேண்டும் என்று பாருங்கள்! 
 
இன்று முஷ்ரிக்குகள் சொன்னார்கள்; யஹூதிகள் சொன்னார்கள்; நஸரானிகள் சொன்னார்கள் என்று அல்லாஹ்வுடைய வேதத்திலே சந்தேகம், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களிலே சந்தேகம்! 
 
குர்ஆனை ஏற்பதற்கும் ஹதீஸை ஏற்பதற்கும் முஷ்ரிக்குகள் இதன்மீது யூதர்கள் கிறிஸ்தவர்கள் இதன்மீது ஆட்சேபனை செய்யாமல் இருக்கிறார்களா? என்பது இன்று பலருடைய அளவுகோலாக இருக்கிறது அல்லாஹ்வுடைய தீனை ஏற்றுக்கொள்வதற்கு என்றால் இது எவ்வளவு பயங்கரமான விபரீதமான ஒரு நடைமுறை!
 
இந்த வசனத்தை பாருங்கள்! அல்லாஹ் தொடர்ந்து சொல்கிறான்: அவர்கள் பல கூட்டங்களாக குழுக்களாக மாறி கொண்டார்கள். ஒவ்வொரு கூட்டமும் தங்களிடத்தில் இருக்கக்கூடிய கொள்கையைக் கொண்டு, தங்களிடத்தில் இருக்கக்கூடிய வழிபாட்டை கொண்டு, தாங்கள் வணங்கக்கூடிய அந்த சிலையை கொண்டு பெருமை அடிக்கின்றன. இதை அவர்கள் செய்தார்கள். இப்படிப்பட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான். (அல்குர்ஆன் 30 : 32)
 
யாரொருவர் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தராத ஒன்றை கொள்கையாக ஆக்கி, அதை மார்க்கமாக ஆக்கி, தனக்கென்று ஒரு ஜமாஅத்தையோ, மத்ஹபையோ, தரீக்காவையோ, இயக்கத்தையோ, ஒரு அரசியல் அமைப்பையோ யார் ஏற்படுத்திக் கொள்வார்களோ அவர்கள் எல்லாம் இந்த எச்சரிக்கையிலே வருவார்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
யூதர்கள் 72 கூட்டங்களாக கிறிஸ்தவர்களும் அதுபோன்று 72 கூட்டங்களாக பிரிந்தார்கள். என்னுடைய உம்மத் 73 ஆகப் பிரியும். அவர்களில் ஒரு கூட்டத்தை தவிர எல்லோரும் நரகத்திற்கு செல்வார்கள். அந்த ஒரு கூட்டம் யார்? 'அல்ஜமாஆ' யார் இந்த குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து நிற்கின்றார்களோ, இந்த குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் இருக்கின்றார்களோ, அல்ஜமாஆ என்று அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தோழர்களை சொன்னார்கள். 
 
இன்னொரு ஹதீஸில் அதற்கு விளக்கத்தை பார்க்கிறோம் அந்த சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு கூட்டம் யார் என்று அல்லாஹ்வின் தூதர் இடத்திலே கேட்டபோது சொன்னார்கள்:
 
«مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي»
 
நானும் எனது தோழர்களும் என்று சொன்னார்கள். (1)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2565, 2641, தரம் : ஹசன் (அல்பானி)
 
தோழர் என்று சொல்லவில்லை, ஜமாஅத் என்று சஹாபாக்களின் ஒட்டுமொத்தமான அந்த அமைப்பினை சொன்னார்கள். அந்த ஜமாஅத் எதில் இருக்கிறதோ அந்த கொள்கையை அந்த தீனிலே இருப்பவர்களை தவிர.
 
ஆகவேதான், இந்த பித்அத்தானது உம்மத்தை பிரித்து வைத்துவிடும். உம்மத்திடையே மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்கு ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும். 
 
கடைசியில் காலங்கள் செல்ல செல்ல அவர்களுக்கு மார்க்கம் என்பதெல்லாம் சடங்குகளாகத்தான் தெரியும். இன்று, எத்தனை பேருக்கு இஸ்லாம் என்று எடுத்துக்கொண்டால் தர்காக்கள் நினைவுக்கு வரும். முஸ்லிம்கள் என்று எடுத்துக்கொண்டால் தர்காக்களில் வழிபாடுகளை காட்டுவார்கள். 
 
எத்தனை இஸ்லாமிய தலைவர்கள், அதாவது அரசியல்வாதிகள் முஸ்லிம்களிடையே ஆதரவு கேட்க வேண்டுமென்றால், அவர்கள் முதலாவது எங்கே செல்கிறார்கள்? பள்ளிவாசலுக்கு வருகிறார்களா? மார்க்க அறிஞர்களை சந்திக்கிறார்களா? சமுதாய தலைவர்களை சந்திப்பார்களா? என்றால் சந்திக்க மாட்டார்கள்.
 
நேராக தர்ஹாக்களுக்கு செல்வார்கள். அங்கு வந்து நின்று கொண்டு ஒரு போட்டோ பிடித்து கொண்டு தாங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாளர்கள் என்பதாக மக்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவார்கள். 
 
காரணம் என்ன? முஸ்லிம் மக்களுடைய பெரும்பான்மை அதை அங்கீகரிக்க கூடியதாக மாறிவிட்டது. அது முஸ்லிம் மார்க்க தீனுடைய அடையாளமாக மாறி விட்டதை பார்க்கிறோம். 
 
அதற்கு காரணம் என்ன? ஆரம்பத்தில் அது உருவாகும்போதே அதுகுறித்து எச்சரிக்கை செய்யப்படாதது. அது தடுக்கப்படாதது. இதுதான் அதற்குரிய அடிப்படை காரணம். 
 
சகோதரர்களே! இந்த பித்அத் தான் அது மிக ஆபத்தான ஒன்று. ஒரு மனிதன் செய்யக்கூடிய அமல்களை அது நாசமாக்கிவிடும். ஒரு பித்அத்வாதி அவன் அந்த பித்அத்களை செய்வதோடு என்ன அமல்களை செய்தாலும் சரி, அந்த அமல்களை எல்லாம் அந்த பித்அத்தானது நாசமாக்கிவிடும். அவனிடத்திலிருந்து அடுத்து வேறு எந்தவிதமான அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. அவன் அந்த இடத்திலிருந்து திருந்தி தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்ளாத வரை. 
 
அல்லாஹு தஆலா தனது கண்ணியமிக்க வேதம் அல்குர்ஆனில் சொல்வதைப் பாருங்கள்!
 
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ (2) عَامِلَةٌ نَاصِبَةٌ (3) تَصْلَى نَارًا حَامِيَةً (4) تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ (5) لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ (6) لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ
 
(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும். (அவை தண்டனையை) அனுபவிக்கும்; (தண்டனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது நன்மையென கருதி பாவங்களை செய்தன; அவற்றில் உறுதியாக இருந்தன; அவற்றைச் செய்வதில் களைப்படைந்தன.) (அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கும். கொதிக்கக்கூடிய சுடு நீரின் ஊற்றிலிருந்து அவற்றுக்கு நீர் புகட்டப்படும். அவர்களுக்கு உணவு இல்லை, முட்களை உடைய விஷச் செடியிலிருந்தே தவிர. (அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(கி பலனளிக்)காது. (அல்குர்ஆன் 88 : 2-7)
 
வசனத்தின் கருத்து : நரகத்தின் கொடிய தண்டனை அவர்களுக்கு உண்டு என்று எச்சரிக்கை செய்யக்கூடிய இழிவடைந்த முகங்களையுடைய இந்த வகையினர் யார் என்று அல்லாஹ் விவரிக்கும்போது ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:
 
அவர்கள் யார் தெரியுமா? அமல் அதிகமாக செய்து இருப்பார்கள். அப்படி அமல் செய்ததால் களைத்திருப்பார்கள். எப்படி ரப்பு அப்படி சொல்கிறான்? இந்த இடத்திலே பெரும்பாவங்கள் செய்தவர்களை ரப்பு சொல்லவில்லை. குஃப்ரு ஷிர்க் செய்தவர்களை ரப்புல் ஆலமீன் சொல்லவில்லை. 
 
இந்த பாவிகள் யார்? இப்படி நரகத்திலே கொதிக்கக்கூடிய நீரில் முல்லையும், அந்த விஷமான உணவையும் உண்டு, அது பசியையும் போக்காது, தாகத்தையும் தீர்க்காது. அப்படிப்பட்ட வேதனைக்குரிய இந்த பாவிகள் யார்? 
 
அல்லாஹ் சொல்கிறான்: இவர்கள் அமல் செய்திருப்பார்கள். அமல் செய்ததால் களைத்திருப்பார்கள். 
 
இந்த தரீக்கா கூட்டங்களை பாருங்கள். சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் என்று இப்படி திக்ரு செய்தால் களைப்பு வருமா? நீண்ட நேரம் செய்தால் ஒரு களைப்பு வரும்.  அது வேறு விஷயம். ஆனால், இவர்கள் திக்ரு செய்யக்கூடிய அந்த காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம்; உலகத்திலே அப்படி மோசமாக, கிறுக்குத்தனமாக, பைத்தியக்காரத்தனமாக, உண்மையான ஒரு பைத்தியக்காரன் கூட அப்படி ஆடமாட்டார்; குதிக்க மாட்டார். 
 
இவர்கள் திக்ரு செய்யக்கூடிய அந்த முறையானது, உண்மையிலேயே ஒருத்தனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். உண்மையிலேயே உலகத்திலேயே ஒரு பெரிய கிறுக்கனாக மாறி விட்டாலும் கூட, அவன் கூட அது போன்று அந்த சேட்டைகளை, அந்த மாதிரியான அசைவுகளை, துள்ளல் குதிப்புகளை செய்யமாட்டான். 
 
அப்படிப்பட்ட ஒரு சேட்டைகளை செய்துகொண்டு, குதித்துக்கொண்டு, துள்ளிக்கொண்டு, என்னென்ன விதமான அசைவுகளை எல்லாம் செய்து கொண்டு இவர்கள் திக்ரு செய்கிறார்களோ அதனால் எவ்வளவு களைப்பு வரும்? 
 
அந்த களைப்புகளை எல்லாம் இவர்கள் தாங்குகிறார்கள். இன்னும் என்னென்ன வேலைகளை செய்வார்கள்! என்னென்ன சிரமங்களை எடுத்துக் கொள்கிறார்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான்: இவர்கள் அமல் செய்து களைத்துப் போனவர்கள். அமலால் களைத்துப் போனவர்கள். 
 
அல்லாஹ் கேட்கிறான்: நீ செய்த அமலுக்கு என்ன ஆதாரம்? உன்னுடைய இந்த அமலுக்கு, நீ இப்படி குதிப்பதற்கும். 
 
அவர்கள் தலையாட்டும் விதத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், உண்மையிலேயே நம்ம தலையெல்லாம் இருந்தது என்றால் தனியாக போய் விடும் போலிருக்கும்! அந்த மாதிரி அந்த தலையை ஆட்டுகிற ஆட்டு என்ன! குதிக்கின்ற குதி என்ன! இதெல்லாம் என்ன? 
 
அல்லாஹ் கேட்பான்: இதற்கு என்ன ஆதாரம்? இந்த நபி உனக்கு இதை சொல்லிக் கொடுத்தார்களா?
 
மேலும், அல்லாஹு ரப்புல் ஆலமீன் சூரத்துல் கஹ்ஃபில் சொல்கிறான்:
 
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا (103) الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
 
(நபியே) கூறுவீராக! “செயல்களால் மிகப் பெரிய நஷ்டவாளிகளை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?” உலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சிகள் (எல்லாம்) வழிகெட்டு விட்டன. அவர்களோ நிச்சயமாக அவர்கள் நல்ல செயலை செய்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள். (அல்குர்ஆன் 18 : 103,104)
 
யாரை பார்த்து அல்லாஹ் சொல்கிறான்? எந்த அமலுக்கு அல்லாஹ்வுடைய வேதத்தில் ஆதாரம் இல்லையோ, எந்த அமலுக்கு அல்லாஹ்வுடைய தூதருடைய வழிகாட்டுதலில் ஆதாரம் இல்லையோ, அதை உலக மக்களெல்லாம் நல்ல காரியம் என்று ஏற்றுக் கொண்டாலும் சரி, எவ்வளவுதான் கவர்ச்சியாக அழகாக தோன்றினாலும் சரி, அது அல்லாஹ்விடத்தில் வழிகெட்ட ஒரு அமல்; அதை செய்பவர் அல்லாஹ்விடத்தில் நஷ்டவாளி.
 
ரப்புல் ஆலமீன் மேலும் சொல்கிறான்: 
 
أَفَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا فَإِنَّ اللَّهَ يُضِلُّ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَاتٍ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُونَ
 
ஆக, எவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுகிறவரை வழிகெடுக்கிறான். தான் நாடுகிறவரை நேர்வழிபடுத்துகிறான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 35 : 8)
 
யார், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அல்லாஹ்விடம் விட்டுவிடாமல், அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே விட்டு விடாமல் அந்த மார்க்கத்திலே தனது அறிவை நுழைப்பாரோ, தனது விருப்பத்தை நுழைப்பாரோ, தன்னுடைய சுய கருத்துக்களை நுழைப்பாரோ, அவர்களெல்லாம் இந்த வசனத்தின் கீழ் வருவார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழி காட்டினார்கள் பாருங்கள்:
 
«مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»
 
யார் ஒரு காரியத்தை செய்கிறார். ஆனால், அதை செய்யும்படி நாம் கூறவில்லை என்றால் அந்த செயல் மறுக்கப்பட்டதாகும்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1718.
 
மிஃராஜ் கொண்டாடுவதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதாவது சொல்லி இருக்கிறார்களா? இந்த ரஜப் மாதம் பிறை 27 வந்துவிட்டால் தெரியும். லைலத்துல் கத்ர் என்பதே எந்த இரவுகளில் என்று தெரியாது. கடைசி பத்தில் தேட சொல்லி விட்டார்கள்.
 
இன்று, ரமலானுடைய அந்த கடைசி பத்துக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம், பல முஸ்லிம்களிடத்திலே கொடுக்கப்படுவதை பார்க்கிறோம். 
 
அந்த மிஃராஜ் உடைய இரவிலே கொஞ்ச நேரம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஃராஜ் போய்விட்டு வந்த பயானை சொல்லிட்டு, அப்புறம் தஸ்பீஹ், நபீல், அந்த தொழுகை, இந்த தொழுகை என்று இரவு முழுவதும் தொழுதுவிட்டு சுபுஹ் தொழுகாமல் தூங்குகிற கூட்டம் எல்லாம் இருக்கிறது. அப்புறம் அதற்கு பகலில் நோன்பு வேறு. 
 
இப்படிப்பட்ட அமல்களை அல்லாஹ்வுடைய தூதர் காட்டிக் கொடுத்தார்களா? மிஃராஜ் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சென்றார்கள் என்பது உண்மை. உடலாலும், உயிராலும், விழிப்பில் அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஏழு வானங்களுக்கு மேலாக அல்லாஹ்வை சந்திப்பதற்காக சென்றார்கள். 
 
அது சம்பந்தமாக வரக்கூடிய அறிவிப்புகள் அந்த மார்க்கத்தின் நம்பகத்தன்மை உடைய உறுதியான அறிஞர்களின் மூலமாக அறிவிக்கப்பட்ட உண்மையான செய்தியாகும்.
 
அல்லாஹு தஆலா அதனுடைய ஒரு பகுதியை குர்ஆனிலும் சொல்கிறான்:
 
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
 
(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை(யாகிய முஹம்மது நபி)யை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த மஸ்ஜி)தைச் சுற்றி நாம் அருள் புரிந்தோம். நமது அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக அவரை அழைத்து சென்றோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 17 : 1)
 
இதற்கு மேலாக நான் இந்த ஆண்டு மிஃராஜிற்கு சென்றேன், இந்த மாதத்திலே இந்த இரவிலே சென்றேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிடவே இல்லை. 
 
இஸ்லாமிய வரலாற்று அறிஞர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்று நிகழ்வுகளை கொடுத்தார்கள். ஒருவேளை ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிஃராஜ் நடந்து இருக்கலாம். அல்லது, ஹிஜ்ரத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்திருக்கலாம். 
 
இப்படித்தான் ஏறக்குறைய ஏழு விதமான அறிவிப்புகளை அவர்கள் பதிவு செய்கிறார்கள். எந்த ஒரு அறிவிப்புகளிலும் எதையும் பெரும்பாலும் உறுதி செய்ய முடியாத அளவுக்குதான் இதனுடைய அறிவிப்புகள் இருக்கின்றன. 
 
இந்த மிஃராஜ் உடைய நாளை அல்லது இரவை குறிப்பிடுவதில் நமக்கு ஒரு நன்மை, புனிதம், அதன் மூலமாக அல்லாஹ்வை நெருங்க முடியும் என்றிருந்தால் அல்லாஹு தஆலா நமக்கு அதை சொல்லாமல் விட்டு இருப்பானா? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அதை சொல்லாமல் விட்டிருப்பார்களா?
 
அந்த இரவை புனிதமாக்கி, அதற்கென்று விசேஷமான தொழுகை என்று அதற்கெல்லாம் ஒரு தர்தீப் வைத்திருப்பார்கள். இத்தனை தடவை குல்ஹுவல்லாஹு ஓதனும்; அத்தனை தடவை ஆயத்துல் குர்ஸியை ஓதனும். இப்படியான சடங்கு சம்பிரதாயத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
 
நாளை மறுமையில் அல்லாஹ் கேட்பான்: நான் கூறியிருக்கிறேனா? என்னுடைய தூதர் சொல்லி இருக்கிறார்களா? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
நான்  ஏவாத ஒரு காரியத்தை யார் ஒருவர் செய்வாரோ அவரின் அந்த செயல் மறுக்கப் பட்டதாகும். 
 
யார் செய்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய தாடி வைத்துக்கொண்டு, தலைப்பாகை கட்டிக் கொண்டு, இவரை மாதிரி அவுலியா இந்த உலகத்திலேயே இல்லை என்று மக்கள் எல்லாம் நினைத்துக்கொண்டு இருந்தாலும் சரி, அவர் செய்வதை வைத்து ஒரு மார்க்கம் இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மறுக்கப்பட்டதாகவும் ஆகிவிடாது.
 
அவர் செய்யக்கூடிய அமல் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்தால்தான் அது மார்க்கமாக ஆகும். அதை செய்யக்கூடியவர் நல்ல மனிதராக இருப்பதைக் கொண்டு, ஒரு மனிதர் அவருடைய தோற்றம் நமக்கு வியப்பாக இருப்பதைக் கொண்டு அவர் செய்யக் கூடிய காரியங்களை எல்லாம் சரியான காரியம் என்று முடிவு செய்யக் கூடிய பரிதாப நிலையில் இன்று நிலைமைகள் இருக்கின்றன. 
 
எவ்வளவு பரிதாபமாக ஆகிவிட்டது என்று சொன்னால் எப்படி மாற்று மதத்தை சேர்ந்தவர்களிடத்திலே அவர்களுடைய சாமியார்கள், பண்டிதர்கள், துரவிமார்கள் என்று அவர்களுடைய மதகுருக்கள் எதை செய்கின்றார்களோ அதற்கு அவர்கள் வேதத்திலிருந்து எந்த விதமான ஆதாரங்களையும் கேட்க மாட்டார்கள். அந்த நிலைமைதான் இந்த பித்அத் செய்யக்கூடியவர்களின் மார்க்கம் மாறி இருப்பதை பார்க்கலாம்.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:
 
مَن أَحْدَثَ في أَمْرِنَا هذا ما ليسَ فِيهِ، فَهو رَدٌّ
 
யார் நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாததை இதில் புதிதாக கொண்டு வருவார்களோ அது மறுக்கப்பட்ட ஒன்றாக ஆகிவிடும். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2697.
 
ஆகவே, இந்த மாதம் அடுத்து வரும் மாதம் தொடர்ந்து நாம் பார்க்க இருக்கிறோம்; உம்மத்துகள் எவ்வளவு பெரிய பித்அத்துகளை செய்ய போகின்றது என்பதை. 
 
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனையோ அழகான துஆக்களை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அந்த துஆக்களை எல்லாம் படிக்கவும் மாட்டார்கள். அதில் இருக்கும் அர்த்தங்களை எல்லாம் உணரவும் மாட்டார்கள்.
 
இந்த ரஜபு மாதம் வந்தவுடன் பள்ளிவாசல்களில் ரொம்ப பெரிய விஷயமாக ஒரு துஆவை ஓதுவார்கள். அதற்கு ஆமீன் சத்தத்தை பார்க்கவேண்டுமே! அவ்வளவு பெரிய ஆமீனாக இருக்கும்.
 
யா அல்லாஹ்! இந்த ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரக்கத்து செய். ரமலான் மாதத்தை நாங்கள் அடைவதற்கு எங்களுக்கு உதவி செய். 
 
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி ஒரு துஆவை கேட்கவே இல்லை. இந்த ஹதீஸ் மறுக்கப்பட்டது. மிகமிக பலகீனமானது. ஆதாரமற்ற ஒன்று. 
 
ஆனால், இதற்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை பாருங்கள்! எவ்வளவு ஒரு மார்க்க வழிபாடாக, இதை கேட்பதை ஒரு அவசியமாக, இதை ஒரு தக்வாவாக, இல்லாத ஒரு அமலை செய்வதை தக்வாவாக நினைத்து மக்கள் செய்கிறார்கள் என்றால் எவ்வளவு தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள்! 
 
மக்களையும் எவ்வளவு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனியுங்கள்.
 
யார் ஒருவர் இந்த பித்அத்துகளை செய்வாரோ அவர் அல்லாஹ்வின் மீது குறை கூறுபவர்கள் ஆவார். அல்லாஹ்வின் மீது பழி போடுபவர் போல. அல்லாஹ் தனது மார்க்கத்தை பூரணமாக்கவில்லை, இவருடைய இந்த செயல் மார்க்கத்தை பூரணமாக்கியிருக்கிறது. 
 
இந்த செயல் நல்லதாக இருந்திருந்தால் இந்த செயல் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கக் கூடியதாக இருந்திருந்தால் அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்க வேண்டும்.
 
அப்படி இல்லாமல் இவர் ஒரு காரியத்தை அறிமுகப்படுத்தி இதை செய்யுங்கள் என்று சொன்னால் அவர் அல்லாஹ்வை சந்தேகிக்கிறார், அல்லாஹ் தனது மார்க்கத்தை பூரணமாக்கவில்லை என்ற ஒரு குழப்பம் இருக்கிறது. அல்லாஹ் இவரை பாதுகாக்க வேண்டும்!
 
இமாம் ஜுஹ்ரி ரஹ்மத்துல்லாஹ் என்ற ஒரு பெரிய தாபியி இருந்தார். இந்த மார்க்கத்தை புரிய வைப்பதற்கு, மக்களுக்கு விளங்க வைப்பதற்கு ஒரு அழகான ஒரு வாக்கியத்தை சொல்கிறார்கள் பாருங்கள்!
 
புகாரி : கிதாபுத் தவ்ஹீது - பாடம் அல்குர்ஆன் வசனம் 5 : 67.
 
அல்லாஹ்வின் புறத்திலிருந்து இந்த மார்க்கத்தின் தூதுத்துவம் வந்தது. இந்த மார்க்கத்தின் தூதுத்துவம் அல்லாஹ்விடம் இருந்து வந்தது.
 
நம்முடைய வேலை என்ன? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதை நமக்கு எடுத்து சொன்னார்களோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு அதன்படி இருப்போம். 
 
அல்லாஹ்வின் புறத்திலிருந்து தூதுத்துவம் வந்தது, அதை எடுத்து வைப்பதுதான், எடுத்துச் சொல்வதுதான் ரசூல் உடைய கடமை. நம்முடைய கடமை அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை ஏற்றுக் கொள்வது.
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் அல்லாஹு தஆலா உடைய வேதத்திலிருந்து இந்த மார்க்கத்தில் இருந்து ஒரு விஷயத்தை அல்லாஹ்வுடைய தூதர் மறைத்து விட்டார்கள் என்று கூறுகிறாரோ அவர்கள் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை சொல்கிறார்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான்: 
 
يَاأَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
 
தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை நீர் எடுத்துரைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையென்றால் அவனுடைய தூதை நீர் எடுத்துரைக்கவில்லை. மக்களிடமிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 5 : 67)
 
இப்படி, அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்து கூறியிருக்க, ஒரு மனிதர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லாததை அல்லாஹ்வுடைய தீனிலே கொண்டுவந்தால், அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்கிறார். ரசூலுல்லாஹ் அதை சொல்லிக் கொடுக்கவில்லை, அல்லது அல்லாஹ்வின் மீது குறை கூறுகின்றார்.
 
அல்லாஹ்வின் மீது மட்டுமல்ல, அல்லாஹ்வின் தூதருடைய விஷயத்திலும் குறை காணுகிறார். அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மார்க்கத்தை முழுமையாக சொல்லித்தரவில்லை அல்லது முழுமையாக நம்மிடத்திலே ஒப்படைக்கவில்லை என்று.
 
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி (மிகப் பெரிய) மார்க்க அறிஞர் சொல்கிறார்கள். இந்த பித்அத்துகளை குறித்து அந்த காலத்திலேயே எப்படி எச்சரிக்கை செய்தார்கள் என்பதை பாருங்கள்!
 
அல்இஹ்காம்- இப்னு ஹஸ்ம்
 
யார் ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்திலே பித்அத் செய்வாரோ, அது மீலாது ஆக இருக்கட்டும், மவ்லிது ஆக இருக்கட்டும், கத்னா விழாவாக இருக்கட்டும் அல்லது எதுவாக இருக்கட்டும்.
 
எப்படி காஃபிர்களுடைய காலண்டரை எடுத்து பார்த்தால் வரிசையாக அவர்களிடத்திலே தினங்கள் இருக்கும். அதுபோன்று முஸ்லிம்களிடத்தில் வரிசையாக நாட்கள் இருக்கும். அதாவது விசேஷ நாட்கள் இருக்கும். அதாவது இதற்கு முன்னாடி எல்லாம் நான்கு மாதம் இருந்தது. 
 
மவ்லிது மாதம் என்று கூறி, ரசூலுல்லாஹ் மவ்லிது மாதம், மொய்தீன் ஆண்டவர் மவ்லிது மாதம், நாகூர் ஆண்டவர் மவ்லிது மாதம், அஜ்மீர் ஆண்டவர் மவ்லிது மாதம், இப்பொழுது சில நாடுகளில் டெவலப் செய்து 12 மாதத்திற்கு 12 மவ்லிது. 
 
இனி மாத பெயர்கள் எல்லாம் அல்லாஹ்வும் ரசூலும் வைத்த பெயர்களைக் கொண்டு அறியப்படுவதில்லை. அங்கு இது எந்த ஆண்டவருடைய மௌலூது மாதம் என்று அறியப்படுகிறது. 
 
இப்பொழுது அவர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர எத்தனை ஆண்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்படி அவர்களை அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்ன துணிவோடு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. 
 
முகைதீன் ஆண்டவர், சாகுல் ஹமீது ஆண்டவர், மாலிக் -அரசர் என்று சொல்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 
இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: இஸ்லாமிலே ஒரு பித்அத்தை உண்டாக்கி அதை அழகாக பார்ப்பாரோ, அவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கொடுக்கப்பட்ட தூதுத்துவத்தை மோசடி செய்து விட்டார்கள் என்று சொல்ல வருகிறார். 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ
 
இன்று நான் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 5 : 3)
 
எது அல்லாஹ்வின் தூதரிடத்திலே காணவில்லையோ அது இன்று மார்க்கத்தில் இருக்க முடியாது. 
 
இப்படிப்பட்ட அறிஞர்கள் நம் மார்க்கத்தில் இருக்கிறார்கள். இதில் என்ன கைசேதம் என்று சொன்னால், கடைசியிலே இந்த அறிஞர்களின் பெயரிலேயே பித்அத்தை செலுத்தி விட்டார்கள். அந்த அறிஞர்களே பித்அத்திற்கு தலைவர்களைப் போல, முன்னோடிகளைப் போல, வழிகாட்டிகளை போல ஆக்கிக் கொண்டார்கள் என்றால் எவ்வளவு இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
 
அன்பானவர்களே! ஒவ்வொரு காரியத்தை செய்யும் பொழுதும் இது அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதலின்படி இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லாத ஒரு காரியத்தை உங்கள் குடும்பத்தில் யார் செய்தாலும் சரி, அதை துணிவோடு, உபதேசங்களும் ஞானமிக்க அறிஞர்களும் சொன்னதை சுட்டிக்காட்டி அதை தடுப்பது நமது கடமையாகும். இல்லை என்றால் அது ஹராமாக பெருகி பெருகி அது மார்க்கமாக மாறிவிடும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ الأَفْرِيقِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بني إسرائيل حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بني إسرائيل تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً»، قَالُوا: وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي»: «هَذَا حَدِيثٌ مُفَسَّرٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ» (سنن الترمذي 2641) [حكم الألباني] : حسن
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/