பித்அத் ஓர் எச்சரிக்கை - அமர்வு 2 | Tamil Bayan - 513
பித்அத் ஓர் எச்சரிக்கை
ஜுமுஆ குத்பா தலைப்பு : பித்அத் ஓர் எச்சரிக்கை (அமர்வு 2-2)
வரிசை : 513
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 06-04-2018 | 20-07-1439
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவை போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதரின் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக!
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்விடத்தில் எனக்கும் உங்களுக்கும் மறுமையின் வெற்றியை வேண்டியவனாக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறைகளை சரியாக நிரந்தரமாக பின்பற்றக்கூடிய நற்பாக்கியத்தை வேண்டியவனாகவும் இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்ற நன்மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
அல்லாஹ்விற்கு பிடிக்காத கொள்கைகள், செயல்கள், இன்னும் குணங்கள் அனைத்திலிருந்தும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக! ஆமீன்.
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட ,அல்லாஹ்வால் கோபிக்கப்பட்ட, அல்லாஹ் சபித்திருக்கக்கூடிய பல காரியங்களில் ஒன்றுதான், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மனிதர்கள் தாங்களாக அல்லாஹ்வுடைய தூதர் கூறாத, அவர்கள் வழி காட்டாத பல விஷயங்களை இந்த மார்க்கத்திற்குள் கொண்டுவருவது.
எப்படி பெரும் பாவங்களை அல்லாஹு தஆலா வெறுக்கின்றானோ அதுபோன்று அல்லாஹ்வுடைய இந்த தீனில் மனிதர்கள் தங்களது சுய விருப்பத்திற்கேற்ப அவர்களாக சில விஷயங்களை நன்மைகளாக அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கக்கூடிய புண்ணியங்களாக நினைத்துக்கொண்டு நுழைப்பதையும் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா வெறுக்கின்றான், கோபிக்கின்றான். அதைச் செய்யக் கூடியவர்களை அல்லாஹு தஆலா சபிக்கவும் செய்கின்றான்.
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தில் நடக்கக் கூடியவர்கள் மிகமிக பேணுதலோடு, மிகவும் நுணுக்கமாக, பயந்தவர்களாக, தாங்கள் செல்லக்கூடிய அந்தப் பாதை அல்லாஹ்வுடைய வேதத்தில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறதா? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக அது வழிகாட்டப் பட்டிருக்கிறதா? என்ற சுயபரிசோதனையோடு அந்த கல்வியோடு இந்த மார்க்கத்தில் ஒவ்வொரு எட்டையும் நாம் எடுத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு அமலையும் நாம் செய்ய வேண்டும்.
நாம் செய்யக்கூடிய எந்த காரியம், அது அல்லாஹ் தனது வேதத்தில் சொல்லாத ஒன்று அல்லது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழி காட்டாத ஒரு செயல் என்று எப்போது நமக்கு தெரியவருமோ உடனடியாக அந்த செயலில் இருந்து நாம் விலக வேண்டும். அல்லாஹ்விடத்தில் தவ்பா இஸ்திக்பார் செய்ய வேண்டும்.
சுன்னா -ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வழிகாட்டுதல் எது என்று நமக்கு தெரிகிறதோ உடனடியாக அதை நாம் பின்பற்ற வேண்டும். அது நம்முடைய மனதுக்கு பாரமாக இருந்தாலும் சரி.
நாம் வாழக்கூடிய அந்த சமுதாய மக்களுக்கு மத்தியில் அது அந்நியமான ஒன்றாக, பழக்கப்படாத ஒன்றாக, ஏன் அவர்கள் வெறுக்கின்ற ஒன்றாக இருந்தாலும் சரியே! அந்த சுன்னத்தை தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கின்றதே தவிர, எதை நாம் செய்து வந்தோமோ அதில் நாம் நீடித்து இருப்பதற்கு நமக்கு அனுமதி இல்லை. மாறாக அது பற்றி அல்லாஹு தஆலா கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறான்.
நாம் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறோம்? ஒரு ஃபாத்திஹா ஓதுவது அல்லது ஒரு கத்தம் ஓதுவது, இது மட்டும்தான் பித்அத் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
பித்அத் என்பது கொள்கையில் இருக்கிறது. பித்அத் என்பது குணங்களில் இருக்கிறது. பித்அத் என்பது செயல்களில் இருக்கிறது, இபாதத்துகளில் இருக்கிறது.
பித்அத்கள் என்பது அது ஒரே ஒரு முகத்தை கொண்டதல்ல. அதற்கு பல முகங்கள், பல தோற்றங்கள், பலவிதமான அதற்குரிய நிறங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பித்அத்தும் அல்லாஹ்விடத்தில் வெறுக்கப்பட்ட ஒன்றுதான். அதிலும் குறிப்பாக, கொள்கையில் ஒரு மனிதனுக்கு பித்அத் உடைய நோய் ஏற்பட்டுவிட்டால், (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!) அவன் நிரந்தர நரகவாதியாக ஆகிவிடுவான்.
செயல்களில் இருக்கக்கூடிய பித்அத் ஆனது பெரும் பாவங்களை விட பயங்கரமானது. ஒரு மனிதன் பல பெரும் பாவங்களை ஒரு நேரத்தில் செய்வதைவிட, தான் நன்மை என்று ஒன்று கருதி, எது அல்லாஹ்வுடைய வேதத்திலும், நபியினுடைய வழிகாட்டுதலிலும் இல்லையோ, அதை நன்மையாக கருதி, வெளிரங்கத்தில் பார்ப்பதற்கு நமக்கும் அது நன்மையை போன்று தான் தெரியும்.
ஆனால், அதற்கு நமது மார்க்கத்தில் வழி காட்டுதல் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு செயலை செய்வது பல பெரும் பாவங்களை ஒரே நேரத்தில் செய்வதைவிட அல்லாஹ்வுடைய பார்வையில், மார்க்கத்தின் பார்வையில் பயங்கரமானது.
தோற்றத்தில் நல்ல ஒரு காரியமாக இருந்தாலும் சரி. உதாரணத்திற்கு, இறந்துபோன ஒரு மனிதருக்காக ஒன்றுகூடி கப்ருஸ்தானில் கையேந்தி துஆ கேட்கிறார்கள். அல்லது அவருடைய வீட்டில் அவருக்காக துஆ கேட்கிறார்கள்.
பார்ப்பதற்கு என்ன தோன்றும்? இறந்து போன மனிதருக்கு கையேந்தி எல்லோரும் கூட்டாக சேர்ந்து துஆ கேட்கிறார்கள். இதில் என்ன தப்பு இருக்கிறது? என்பதாக நமக்கு தோன்றும்.
துஆ என்பது ஒரு வணக்கம் தானே! ஆனால், அந்த துஆவை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி செய்ய வேண்டும் என்று வழிகாட்டி இருக்கிறார்களோ, ஒரு இறந்து போன மனிதருக்கு எப்படி துஆ கேட்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வுடைய தூதரிடம் வழிகாட்டுதல் இருக்கும்போது, அதற்கு மாற்றமாக, இவர்களாக ஒன்றை உருவாக்கிக் கொண்டு, அதை நம்பிக்கை கொண்டு அதில் நன்மை கிடைக்கும், அது ஒரு நல்ல காரியம் என்பதாக நினைத்து செய்கிறார்களே, இதுதான் மிக பயங்கரமானது.
இப்படி எந்த ஒரு பித்அத்தாக இருந்தாலும் சரி, அது பல பெரும் பாவங்களை விட பயங்கரமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பித்அத்களை பற்றி மேலும் பல எச்சரிக்கைகளை நம்முடைய மார்க்கத்தில் பார்க்கிறோம். அவற்றைப் பற்றிய சில விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவில் நாம் பார்ப்போம்.
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கமானது அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது. இதில் ஒன்றை ஹலால் ஆக்குவதற்கோ, ஹராம் ஆக்குவதற்கோ அதற்குரிய உரிமை அல்லாஹ்விற்கு உள்ளது. அதை விளக்கக் கூடிய அதிகாரம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
யாரொருவர் ஒரு பித்அத்தை செய்வாரோ, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கற்பிக்காத ஒன்றை செய்வாரோ, அந்த மனிதர் அல்லாஹ்வுடைய அதிகாரத்தை தனது கையில் எடுக்கின்றார்.
ஒன்றை மார்க்கம் ஆக்கி, அதை ஏவுவது, அதை செய்தால் நன்மை என்று மக்களுக்கு சொல்லக்கூடிய அந்த அதிகாரம் அல்லாஹ்விற்குள்ள அதிகாரம். அல்லாஹ்விற்கு உரிய அந்த அதிகாரத்தை அவர் தனது கையில் எடுக்கின்றார்.
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தில் தனக்கும் அதிகாரம் இருக்கிறது, தானும் ஒன்றை அமலாக மக்களுக்கு சொல்லலாம் என்ற உரிமையை அவர் கொண்டாடுகிறார்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இதுகுறித்து பயங்கரமாக எச்சரிக்கை செய்கிறான்:
أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
(அல்லாஹ்வின்) மார்க்கத்தில் அல்லாஹ் எதை கட்டளை இடவில்லையோ அதை இவர்களுக்கு சட்டமாக (-மார்க்கமாக) ஆக்கித்தருகின்ற தெய்வங்களும் இவர்களுக்கு உண்டா? (இவர்களுக்கு தண்டனை மறுமையில்தான் என்ற) தீர்ப்பின் வாக்கு மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 42 : 21)
வசனத்தின் கருத்து : அல்லாஹு தஆலா பித்அத் செய்யக்கூடிய அந்த மக்களைப் பார்த்து கேட்கிறான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டாத செயல்களை செய்யக் கூடிய மக்களைப் பார்த்து அல்லாஹ் கேட்கிறான்.
உங்களுக்கு என்ன இணை தெய்வங்கள் இருக்கின்றார்களா? அல்லாஹ்விற்கு சமமாக சிலரை நீங்கள் கூட்டாக்கி கொண்டீர்களா? அல்லாஹ்வுடைய அந்த அதிகாரத்தில் நீங்கள் இணைகளை ஏற்படுத்திக் கொண்டீர்களா?
ரப்புல் ஆலமீன் என்ன கேள்வி கேட்கிறான்? யார் ஒருவர், மார்க்கத்தில் அனாச்சாரம் செய்யக்கூடிய ஒரு மனிதருடைய பேச்சை கேட்பாரோ, ஒரு மனிதர் அவர் யாரை எடுத்துக் கொண்டாலும் சரி, ஒரு ஆலிமையோ, ஒரு ஷேக்கையோ, ஒரு படித்தவரையோ இப்படி யாரையோ.
அவர் ஒரு காரியத்தை சொன்னார் என்று இவர் செய்கிறார். ஆனால் அதற்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது இவருக்குத் தெரியும். அந்த ஆலிம் அல்லது அந்த ஷேக் சொல்லக்கூடிய, அந்தக் கூற்றை தவிர, குர்ஆனிலோ ஹதீஸிலோ இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
என்னுடைய உஸ்தாத் இப்படித்தான் பாத்திஹா ஓத சொன்னார். இப்படித்தான் மௌலூது ஓத சொன்னார். இப்படித்தான் மீலாது கொண்டாடச் சொன்னார். இப்படித்தான் ஹத்தம் செய்யச் சொன்னார்.
இப்படியாக அந்த பித்அத்துகள் எதுவாக இருந்தாலும் சரி, என்னுடைய ஆசிரியர்கள், என்னுடைய ஊர்க்கார மக்கள் என்று யாருடைய வழிகாட்டுதலை எடுத்துக் கொள்கிறார்களோ, அல்லாஹ் என்ன சொல்கிறான் என்றால், வழிகாட்டிகளாக யாரை இவர்கள் எடுத்துக் கொண்டார்களோ, இவர்கள் அந்த வழிகாட்டிகளை அல்லாஹ்விற்கு சமமாக ஆக்கிவிட்டார்கள்.
இதனுடைய விபரீதத்தை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்காத காரணத்தினால்தான், இன்று மக்கள் யார் எதைச் சொன்னாலும், யார் எந்த விதமான சடங்கு சம்பிரதாயங்களை சொன்னாலும், அதில் என்ன தப்பு இருக்கிறது? இது என்ன பாவமா? என்பதாக சொல்கிறார்கள்.
ஒரு மனிதன் ஒரு விஷயத்தை சொல்கிறான், அதற்கு அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து, நபியின் சுன்னாவிலிருந்து அவர் ஆதாரத்தை கொடுக்காமல், இது செய்தால் தப்பில்லை. இதை செய்யுங்கள்! என்பதாக அவர் மக்களுக்கு போதிக்கின்றார்.
ஒரு அமலை, ஒரு இபாதத்தை மக்களுக்கு சொல்லித்தருகிறார். ஆனால், அதற்கு ஆதாரம் இல்லை. இப்படி இருக்கின்ற அந்த மனிதனை, ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொண்டு அவர் சொன்னார் என்ற காரணத்தினால் அந்த இபாதத்தை வெளிரங்கத்தில் இபாதத்தாக தெரிகின்ற அந்தக் காரியத்தை அவன் செய்தால் அந்த சொல்லிக் கொடுத்தவரை அவர் அல்லாஹ்விற்கு சமமாக ஆக்கி விட்டார்.
இதைத் தான் அல்லாஹ் மேற்சொன்ன வசனத்தில் சொல்கிறான், என்ன இவர்களுக்கு இணை தெய்வங்களா இருக்கின்றார்கள்? அல்லாஹ்விற்கு சமமானவர்கள் இவர்களுக்கு இருக்கின்றார்களா? அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தை சட்டமாக ஆக்கிகொடுப்பதற்கு, எதற்கு அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லையோ அப்படிப்பட்ட ஒரு செயலுக்கு.
அல்லாஹ் அனுமதி கொடுத்திருந்தால், அது அல்லாஹ்வுடைய வேதத்தில் இருந்திருக்கும். அல்லாஹ் அனுமதி கொடுத்திருந்தால் அது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலில் இருந்திருக்கும்.
அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லாத ஒன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலில் இல்லாத ஒன்று, அல்லாஹ் அனுமதிக்காத ஒன்று என்று அர்த்தம்.
அதைச் சொல்லித் தருவதற்கு நீங்கள் யாரையும் வைத்திருக்கிறீர்களா? அவர்களை நீங்கள் அல்லாஹ்விற்கு சமமானவர்களாக ஆக்கிக் கொண்டீர்களா? என்பதாக ரப்புல் ஆலமீன் மிகவும் கோபமாக கேள்வி கேட்டு விட்டு சொல்கிறான்:
பாவத்திற்கு உரிய தண்டனை மறுமையில் என்ற அந்த வாக்கு மட்டும் இல்லை என்றால், குற்றத்திற்கு உரிய அந்த முழுமையான தண்டனை மறுமையில் கொடுக்கப்படும் என்ற அந்த வாக்கு மட்டும் இல்லை என்றால், உலகத்திலேயே இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கும்.
இத்தகைய அநியாயக்காரர்களுக்கு கடுமையாக நோவினை தரக்கூடிய, வலி தரக்கூடிய வேதனை மறுமையில் உண்டு என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் எச்சரிக்கை செய்கிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை சூரா தவ்பா உடைய 31வது வசனத்தை ஓதுகிறார்கள். அதாவது, யூதர்களும் கிறிஸ்தவர்களும், தங்களது பாதிரிகளையும், தங்களது துறவிகளையும், தங்களது அறிஞர்களையும் கடவுளாக எடுத்துக் கொண்டார்கள் என்ற பொருளுடைய வசனம்.
அந்த வசனத்தை ஓதும் போது, கிறிஸ்தவராக இருந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அதி இப்னு ஹாதம் அங்கே அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் கேட்கிறார்கள், அல்லாஹ்வுடைய தூதரே! கிறிஸ்துவர்களும், யூதர்களும் தங்களுடைய பாதிரிகளை, குருமார்களை அவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டார்கள் என்ற பொருளுடைய வசனத்தை நீங்கள் இப்போது ஓதினீர்களே! நாங்கள் அப்படி யாரையும் எடுத்துக் கொள்ளவில்லையே?
ஈஸா (அலை) அவர்களை வணங்கியது உண்மை. உஜைரை வணங்கியது உண்மை. ஆனால், பாதிரிகளை நாங்கள் கடவுள் என்று சொன்னது இல்லையே? எங்கள் குருமார்களை நாங்கள் கடவுள் என்று சொன்னது இல்லையே? என்ற கேள்வியை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டபோது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதி இடத்தில் அவர்கள் ஒரு கேள்வி கேட்கிறார்கள்.
அதி அவர்களே! இந்த யூதர்களும், கிறிஸ்துவர்களும் இவர்களது பாதிரிகள் அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலால் என்று சொல்லும்போது, அல்லாஹ் ஹலாலாக்கியதை இந்த பாதிரிகள் ஹராம் என்று சொல்லும்போது அதை கிறிஸ்துவர்களும், பாதிரிகளும் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா?
எது தவ்ராத்தில், இன்ஜீலில் ஹலால் என்று இருக்கிறதோ அதை ஹராமாக்கினார்கள். எது ஹராமாக இருக்கிறதோ அதை ஹலாலாக ஆக்கினார்கள்.
அப்போது நீங்கள் அந்தப் பாதிரிகளின், அந்தத் துறவிகளுடைய, அந்தப் பண்டிதர்களுடைய கூற்றுகளை ஏற்று அப்படியே நீங்கள் செயல்பட்டீர்கள் தானே! நீங்கள் தவ்ராத்தையும் இன்ஜீலையும் பின்பற்றவில்லையே! அதை விட்டுவிட்டு உங்களது பாதிரிகளுடைய கூற்றுகளை தானே நீங்கள் பின்பற்றினீர்கள்?
இதைத் தான் அல்லாஹ் சொல்கிறான்:
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் அறிஞர்களையும் தங்கள் துறவிகளையும் மர்யமுடைய மகன் (ஈஸா) மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனை அவர்கள் வணங்குவதற்கே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிகத் தூயவன். (அல்குர்ஆன் 9 : 31)
அல்லாஹ்வுடைய தூதர் மிகத்தெளிவாக சொல்கிறார்கள். வேத சட்டங்களுக்கு மாற்றமாக, நீங்கள் உங்கள் குருமார்களுக்கு, பாதிரிகளுக்கு உங்கள் துறவிகளுக்கு நீங்கள் கீழ்படிந்து நடந்தது, இதுதான் நீங்கள் அவர்களை வணங்கியது.
பாதிரிகளுக்கு, குருமார்களுக்கு, துறவிகளுக்கு சிலைகளை வைத்து அதற்கு பூஜை செய்து, அந்த சிலைகளை கடவுள்களாக நம்பி அவர்களிடத்தில் அவர்கள் பிரார்த்திக்க வில்லை.
ஆனால், அந்த கிறிஸ்துவர்கள் யூதர்கள் செய்தது என்ன? தங்களது பாதிரிகள் எதைச் சொல்வார்களோ, அதுதான் அவர்கள் இடத்தில் மார்க்கம்.
வேதத்தில் இருக்கிறதா? என்பதை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். வேதம் என்பதே எதை பாதிரிகள் சொல்கிறார்களோ, அவர்களது குருக்கள் சொல்கிறார்களோ அதுதான்.
இதைத்தான் அல்லாஹு தஆலா இதுதான் நீங்கள் அவர்களை வணங்குவது என்று ரப்பு சொல்கிறான் என்பதாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.
இன்றைய நமது முஸ்லிம் சமுதாயத்தில் இந்த மோசமான நிலை இருக்கிறதா? இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்!
குர்ஆனுடைய வசனங்களை ஓதி காட்டுங்கள்; ரசூலுல்லாஹ் உடைய வாழ்க்கை வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். இவற்றையெல்லாம் தூக்கி தூர வையுங்கள் என்று சொல்வார்கள்.
இன்று, முஸ்லிம் சமுதாயத்தில் கொள்கை சார்ந்த வழிகேடுகள், அவற்றைப் பற்றி கொஞ்சமாவது நாம் அறிவோமேயானால் நமது உள்ளங்கள் எல்லாம் நடுங்கி விடும். இப்பேர்ப்பட்ட கொள்கைகளை பாமர முஸ்லிம்களுக்கு மத்தியில் புகுத்தி இருக்கிறார்களா? இதை பாமர முஸ்லிம்கள் நம்பி இருக்கிறார்களா? என்று.
இந்த கப்ருகளை வணங்கக் கூடிய, தரீக்காக்களை நம்பக்கூடிய அந்த வழிகேட்டில் உள்ளவர்களுடைய கொள்கையில் ஒன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் حاضر وناظر அவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.
எங்கெல்லாம் அவர்களைப் பற்றி பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அவர்கள் வந்துவிடுவார்கள். எல்லோரையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹு தஆலா எப்படி இந்த பிரபஞ்சத்தில் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அதுபோன்று பார்க்கக் கூடிய ஆற்றல் அல்லாஹ்வுடைய தூதருக்கு இருக்கிறது என்பதாக நம்புகிறார்கள்.
அல்லாஹ்வுடைய இறைநேசர்கள் என்று நாம் யாரை சொல்கிறோமோ, மார்க்க அறிஞர்கள் அல்லது இந்த சமுதாயத்திற்காக நல்ல பல தியாகங்களை செய்தவர்கள். அவர்களுக்கெல்லாம் அவர்கள் இறந்ததற்குப் பிறகு, அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தை இயக்கக்கூடிய, நன்மை தீமையில் பங்கெடுக்கக்கூடிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
எனவே, அவர்களிடத்தில் நேரடியாக பிரார்த்தனை செய்யலாம். இப்படிப்பட்ட பல நம்பிக்கைகளை, மக்களுக்கு மத்தியில் புகுத்தி, அதை அவர்கள் கொள்கையாக கொண்டிருக்கிறார்கள்.
அது தவறு என்று சொல்லக்கூடிய பலநூறு வசனங்களை நாம் எடுத்துக் காண்பித்தாலும் சரி, அதை அவர்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. மறைவான ஞானம் அல்லாஹ் ஒருவனுக்கு தான் உண்டு. அல்லாஹ்வை தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார்கள் என்று பல குர்ஆனுடைய வசனங்கள் அழுத்தந்திருத்தமாக சொல்லுகின்றன.
ஏன்? சில இடங்களில் நபியைப் பார்த்தே அல்லாஹ் சொல்லச் சொல்கிறான். நபியே! நீங்கள் சொல்லுங்கள் என்பதாக.
قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எந்த ஒரு பலனுக்கும் (அதை எனக்கு தேடுவதற்கு) இன்னும், எந்த ஒரு கெடுதிக்கும் (அதை என்னை விட்டு அகற்றுவதற்கு) நான் உரிமை பெறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மையை அதிகம் பெற்றிருப்பேன்; இன்னும், தீங்குகள் ஏதும் எனக்கு ஏற்பட்டிருக்காது. (பாவிகளை) எச்சரிப்பவராகவும் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நற்செய்தி கூறுபவராகவுமே தவிர நான் இல்லை.” (அல்குர்ஆன் 7 : 188)
இப்படிப்பட்ட நேரடி வசனங்கள் இருந்தும்கூட, எப்படி மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு இருக்கிறதோ, அதுபோன்று ஞானம் ரசூலுல்லாஹ்விற்கு இருக்கிறது. ரசூலுல்லாஹ்விற்கு அடுத்து யார் இறைநேசர்களாக, அவுலியாக்களாக, தரீக்காவினுடைய அந்த ஷேக்குகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இருக்கிறது.
அவர்கள் இந்த உலகத்தில் இருந்து கொண்டு, சொர்க்கத்திற்கு யார் செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள், நரகத்திற்கு யார் செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள், நீங்கள் உங்களது வீட்டிலேயே அவர்களைப் பற்றி என்ன பேசுகிறீர்கள்? என்பதையும் தெரிந்து கொள்வார்கள்.
நீங்கள் அவர்களிடத்தில் பைஅத் செய்து கொடுத்துவிட்டால், உங்களுடைய எண்ணங்களை எல்லாம் அவர்கள் கண்காணிப்பார்கள். இப்படிப்பட்ட பலநூறு பொய்களை மக்களுக்கு மத்தியில் பரப்பி, இதை கொள்கையாக ஆக்கி, அவர்களுடைய நம்பிக்கையாக ஆக்கி மக்களை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
யார் ஒருவர் பித்அத்களை செய்கிறார்களோ, கண்டிப்பாக அவர்கள் சுன்னத்துகளுக்கு எதிரியாக ஆகிவிடுவார்கள். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்ப்பதைத்தான் நம்முடைய அறிஞர்கள் இன்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
பித்அத் ஆனது கண்டிப்பாக சுன்னத்தை அழிக்கக்கூடிய ஒன்று. ஒரு மனிதனுடைய உள்ளத்தில் மார்க்கப்பற்றை வேரறுக்கக் கூடிய ஒன்று. பித்அத் என்பது சுன்னத்தை எதிர்க்கக் கூடிய ஒன்று. சுன்னத்தை போக்கக்கூடிய ஒன்று, முஸ்லிமுடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய மார்க்கப்பற்றை வேரறுக்க கூடிய ஒன்று.
அப்துல்லாஹ் அத்தைலமி என்ற ஒரு தாபியி, ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட நபிதோழர்கள் இடத்தில் கல்வி படித்த ஒரு பெரிய அறிஞர். ஹிஜ்ரி 73ல் வஃபாத்தானவர்.
அவர்கள் சொல்கிறார்கள், இந்த மார்க்கத்தில் மக்கள் முதலாவதாக சுன்னத்தை தான் விடுவார்கள். மக்கள் பேணிக்கை இல்லாமல், பின்பற்றுதல் இல்லாமல் சுன்னத்தை விடுவார்கள். ஒரு ஒரு சுன்னத்தாக கடைசியில் சென்றுகொண்டே இருக்கும்.
எப்போது பித்அத் வருகிறதோ அப்போது சுன்னத்துகள் சென்றுவிடும். மேலும் அவர்கள் சொல்கிறார்கள், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.
"மார்க்கத்தில் மக்கள் ஒரு பித்அத்தை உருவாக்கினால், ஒரு அனாச்சாரத்தை அவர்கள் செய்ய ஆரம்பித்தால், அந்த அனாச்சாரமானது நல்ல ஆழமான இடத்தை அப்படியே பிடித்துக் கொள்ளும். அது பரவ ஆரம்பித்து விடும்.
மேலும் சொன்னார்கள், சுன்னத்தை மக்கள் விட ஆரம்பித்தால், அதை அப்படியே விட்டு கொண்டே இருப்பார்கள். எல்லோரும் அதைப் புறக்கணித்து கொண்டே அதை மறந்து கொண்டே செல்வார்கள்.
அல் இபானா - இப்னு பத்தா
எவ்வளவு அழகான வார்த்தை பாருங்கள்! இன்று எத்தனை சுன்னத்துகள், ஒரு இடத்தில் முதலாவதாக விடப்பட்டது. அதைப்பார்த்து அடுத்தவர். அந்த ஊரைப் பார்த்து அடுத்த ஊர்.
இப்படியாக சுன்னத்துகளை பின்பற்றுவது அந்நியமாக மாறிவிட்டது. ஒரு இடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பித்அத், ஒரு ஊரில் என்றைக்காவது ஒரு காலத்தில், ஏறக்குறைய நம் வரலாறுகளை பார்க்கும்போது, 500 ஆண்டுகளுக்கு முன்பாக, யாரோ ஒருவர் ஒரு பித்அத்தை, மௌலூதை உண்டாக்கினார் அவ்வளவுதான்.
இன்று உலகமெல்லாம் மௌலூது கொண்டாடுவது, இஸ்லாமிய மார்க்கத்தினுடைய கலாச்சார பழக்கம் என்பதாக மாறிவிட்டது. இந்த கபூர் வணக்கங்களாக இருக்கட்டும். மீலாது பழக்கங்களாக இருக்கட்டும்.
இவற்றையெல்லாம் உருவாக்கும்போது ஒரு ஊரில் ஒருவர் உருவாக்கினார். அந்தக் காரியத்தை ஒரு ஊரில் ஒரு மன்னரோ, சில மக்களோ அந்தக் காரியத்தைச் செய்தார்கள். அவ்வளவுதான்.
அடுத்து, எப்படி சொன்னார்களோ அது அப்படியே பரவ பரவ எல்லா இடங்களுக்கும் பரவியது மட்டுமல்லாமல், அது ஒரு கொள்கை பிடிப்பாகவும், அதைக் கொண்டாடுவது மார்க்க கலாச்சாரமாகவும், அதை செய்வது அல்லாஹ்வின் மீதும் அவனுடைய நபியின் மீதும் பிரியம் இருப்பதற்குரிய அடையாளமாகவும் மாற்றப்பட்டு விட்டது.
எப்படிப்பட்ட ஒரு கேவலம். ஒரு பித்அத்தானது, அதன் மீது வெறுப்பு வர வேண்டும். இது அல்லாஹ்வினுடைய மார்க்கத்தில் இல்லையே என்ற ஒரு கோபம் வர வேண்டும்.
ஆனால், அந்த பித்அத்துகளின் மீது இன்று அவ்வளவு ஆசை. அனாச்சாரங்கள் செய்பவர்களை பாருங்கள்! அந்த பித்அத்களை செய்யும்போது அந்த கூடு, கந்தூரி, இன்னும் எத்தனை அனாச்சாரங்களை செய்கிறார்களோ, அதை செய்ய போகும்போது அவர்களை நீங்கள் பாருங்கள்!
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுக்கு தொழுகைக்கு வரும்போது, ஹஜ் உம்ராவுக்கு செல்லும்போது அவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த ஆசை, உற்சாகம், வேகம் அதைவிட எல்லாம் அவர்களுக்கு அந்த தர்ஹாக்களுக்கு செல்வதில், அங்கே வணங்குவதில், அங்கே நேர்ச்சைகள் செய்வதில், அங்கே இரவுகளை கழிப்பதில், இப்படியான அனாச்சாரங்கள் செய்வதில் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆசைகளை பாருங்கள்! அந்த உற்சாகத்தை பாருங்கள்!
என்னமோ முஸ்லிம்கள் பெருநாள்களில் நல்ல ஆடைகளை அணிவது போன்று, அந்த தர்ஹாக்களுக்கு செல்லும்போது, அந்தக் கூடு கந்தூரிகளுக்கு செல்லும் போது, அதற்கான ஆடைகள் என்ன! நறுமணங்கள் என்ன! குடும்பத்தோடு சென்று அங்கே கொண்டாடிவிட்டு வருவதை பார்க்கிறோம்.
யூதர்கள் பெண்களை தீட்டு பிடித்தவர்கள் என்று சொல்லி ஒதுக்கி வைத்திருப்பதைப் போல, மஸ்ஜிதில் இருந்து பெண்களை மஹ்ரூம் ஆக்கி வைத்து விடுவார்கள். பெண்கள் மஸ்ஜிதிற்கு வந்தால், தொழுகைக்கு வந்தால் குழப்பம் என்று ஒதுக்கி விடுவார்கள்.
ஆனால், கந்தூரிகளுக்கு, கூடுகளுக்கு, உரூஸ்களுக்கு இன்னும் பல அநியாயங்களுக்கு குடும்பமாக அழைத்துச் சென்றுவிட்டு, அத்தனை அனாச்சாரங்களையும், அத்தனை அசிங்கங்களையும் குடும்பமாக கண்டுகளித்து விட்டு வருகிறார்கள் என்றால், எந்த அளவிற்கு அந்த பித்அத்தின் மீது மோகம் அவர்களுடைய உள்ளத்தில் வேரூன்றி விட்டது என்பதை யோசித்துப் பாருங்கள்!
இமாம் இப்னு கைய்யூம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள், இவர்கள் இமாம் இப்னு தைய்மியா ரஹிமஹுல்லாஹ் உடைய மாணவர், மிகப்பெரிய கல்வி அறிஞர் சொல்கிறார்கள்:
இந்தப் பித்அத்துகளில் உள்ளங்கள் ஈடுபட்டு விட்டால், அந்த உள்ளங்களுக்கு சுன்னத்துகளை பிடிக்காது. எந்த உள்ளங்கள் பித்அத்களில் ஆசை கண்டுவிட்டனவோ, அதில் ஈடுபாடுகள் கண்டு விட்டனவோ அந்த உள்ளங்கள் சுன்னத்துகளை புறக்கணித்து விடும். சுன்னத்துகளில் அந்த உள்ளங்களுக்கு ஆர்வம் ஏற்படாது.
இகாத்துல் லஹ்ஃபான் - இப்னு கய்யீம்
யார் ஒருவர் பித்அத் செய்கின்றாரோ, அவர் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ்வின் விஷயத்தில் பொய் சொல்கிறார். ஒரு பித்அத்வாதி அல்லாஹ்வின் மீது தன்னுடைய செயலால் ஒரு பொய்யை சொல்கிறார்.
ஒன்று இருக்கிறது, பொய் சொல்லுவது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லாததை தனது நாவால் நபியவர்கள் இப்படி சொன்னார்கள் என்று சொல்லால் சொல்வது. இதுவும் போய்.
இன்னொரு பொய் இருக்கிறது. தன்னுடைய செயலால் பொய் சொல்வது. அபூஷாமா என்ற ஒரு அறிஞர் சொல்கின்றார்கள், இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய ஆசிரியர், ஹிஜ்ரி 590 ல் பிறந்து, 605 ல் வஃபாத்தான ஒரு அறிஞர்.
இந்த பித்அத்தை பற்றி எச்சரிக்கை செய்யும் போது அவர்கள் சொல்கிறார்கள், பொதுவாக எப்படி பித்அத் உருவாகிறது? அதற்குரிய அடிப்படை காரணம் என்ன? என்பதை விளக்குகின்றார்கள்.
யாரை மக்கள் ஒரு நல்ல மனிதர் என்று கருதுகிறார்களோ, யார் ஒரு ஒழுக்கமானவர், தக்வா உடையவர், மார்க்கத்தைப் பேணக்கூடியவர் என்பதாக யாரை பார்க்கிறார்களோ, அந்த மனிதர் ஒரு காரியத்தை செய்தால், மக்களுடைய நம்பிக்கை எப்படி வந்துவிடுகிறது?
இவர் செய்வது மார்க்கத்தில் இருக்கிறது. இவர் செய்வது சுன்னாவில் இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, யார் ஒருவர் மக்களுக்கு மத்தியில், ஒரு நல்ல மனிதராக அறியப்படுகிறார். அந்த மனிதர் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காண்பித்து தராத வழிகாட்டி தராத ஒரு செயலை செய்வாரோ அவர் அந்த செயலை மக்களுக்கு மத்தியில் இது ஒரு சுன்னத் என்ற ஒரு எண்ணத்தை கொண்டு வருகிறார்.
மக்களுக்கு அப்படிப்பட்ட ஒரு அபிப்ராயத்தை தன்னுடைய அந்த செயலின் மீது அவர் கொண்டு வருகிறார். எனவே
அவர் தன்னுடைய செயலால் அல்லாஹ்வுடைய தூதரின் மீது பொய் சொல்கிறார். யார் இப்படி செய்கிறார்களோ, நல்ல மனிதராக இருக்கும் போது, மார்க்கக் கல்வியோடு, மார்க்க ஒழுக்கத்தோடு, மார்க்கப் பிரச்சாரத்தோடு தொடர்புடைய ஒரு மனிதர், மக்கள் யாரை பார்த்து அவருடைய பேச்சை கேட்கிறார்களோ, நல்லவர் என்று சொல்கிறார்களோ, மார்க்க அழைப்பாளர் என்று சொல்கிறார்களோ, அவர் ஒரு காரியத்தைச் செய்கிறார். ஆனால், அந்த காரியத்திற்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.
ஆனால், பார்க்கக் கூடியவர்கள் என்ன நம்புவார்கள்? இவர் ஒரு நல்ல மனிதர். இவர் தப்பு செய்வாரா? மார்க்கத்தில் இல்லாததை செய்வாரா? என்று அவரை பார்த்து, அவர் மீது உள்ள நல்ல எண்ணத்தால், அந்த செயலை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
இவருடைய செயல்பாடு இப்போது எப்படி அமைந்து விட்டது என்று சொன்னால், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னத்தில், அதில் இல்லாத ஒன்றை தன்னுடைய செயலால் இவர் உருவாக்கி, அதுவும் மார்க்கம்தான் என்ற எண்ணத்தை மக்களுக்கு மத்தியில் கொண்டு வந்துவிடுகிறார்.
எனவே, சொல்லால் நபியின் மீது பொய் சொல்பவரை போன்று தான், தன்னுடைய செயலாலும் செய்பவருக்கு உரிய குற்றம் என்பதாக அந்த அபூ ஷாமா ரஹிமஹுல்லாஹ் என்ற அறிஞர்கள் நமக்கு சொல்லிக் காட்டுகின்றார்கள்.
இதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். மக்களுக்கு மத்தியில் சுன்னத்துகள் பரவுது. அந்த ஆலிம் செய்தாரே? ஆலிம்களை எப்படி பார்க்கிறார்கள் என்று சொன்னால், மார்க்கத்தை வைத்து ஆலிம்களை எடை போட வேண்டும்.
அவர் என்ன ஆதாரப்பூர்வமாக பேசுகிறாரா? அவருடைய கல்வி எப்படி இருக்கிறது? அவர் பின்பற்றக் கூடிய விஷயங்கள் மார்க்கத்தில் இருக்கிறதா? இதை வைத்து ஒரு மனிதனை மதிப்பதற்கு, எடைபோடுவதற்கு பதிலாக மக்கள் இன்று ஒரு ஆலிமை வைத்து
மக்கள் இன்று எப்படி மாற்றி விட்டார்கள்? ஆலிமை வைத்து ஒரு பேச்சாளரை வைத்து மார்க்கத்தை முடிவு செய்கிறார்கள்.
அதற்கு பல அளவுகோல் இருக்கிறது. ஒவ்வொரு கொள்கையுடையவர்களிடத்திலும், ஒவ்வொரு இயக்கவாதிகள் இடத்திலும், ஒவ்வொரு மத்ஹபுவாதிகள் இடத்திலும், தரீக்காவாதிகள் இடத்திலும் அவர்களுக்கென்று ஒரு அளவுகோல் இருக்கின்றது.
சிலர் பெரிய தலப்பாகட்டி இருந்தால், பெரிய ஜிப்பா போட்டிருந்தால் அவர் ஒரு பெரிய ஆலிம். தரீக்கா சூஃபிகள் இடத்தில் அவர்களைப் பொருத்தவரை மண்டையில் அரை சதவீதம் கூட சரக்கு இல்லை என்றாலும் சரி, கடைந்தெடுத்த முட்டாளாக இருந்தாலும் கூட, தலப்பா பெரியதாக இருந்தால் போதுமானது. அவர் பெரிய ஞானியாக, பெரிய அறிவாளியாக மாறிவிடுவார். பெரிய ஜிப்பா போட்டுவிட்டால் போதுமானது. பெரிய ஆலிமாக மாறி விடுவார்.
இயக்கவாதிகளை பொருத்தவரையில், குர்ஆன் ஹதீஸ் உடைய பெயரில், இஸ்லாமை பரப்புவதை விட, இயக்கத்தை பரப்புவதில் வெறிகொண்டு இருக்கக் கூடிய இந்த புதிய பித்அத்வாதிகள். இவர்களும் பித்அத்வாதிகள் தான்.
எப்படி மத்ஹபு உருவாக்கியது பித்அத் என்று சொல்கிறோமோ, எப்படி தரீக்காக்களை உருவாக்கியது பித்அத் என்று சொல்கிறோமோ, அதுபோன்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இயக்கங்களை உருவாக்குவதும் பித்அத். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ஜமாத்துகளாக முஸ்லிம்களை பிரிப்பதும் பித்அத்.
எப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சஹாபாக்களை ஒரே உம்மத்தாக விட்டுச் சென்றார்களோ, அந்த உம்மத்துகளுக்கு மத்தியில் பெயர்களைக் கொண்டு குழப்பங்களை ஏற்படுத்துவதும் பித்அத்.
அவர்களிடத்தில் அடையாளம் என்ன? அவர்களுக்கு ஒரு அடையாளம் வைத்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டு பிரச்சாரம் செய்கிறாரா? இவரால் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது? இவர் என்ன சொன்னார்? எப்படி பிரச்சாரம் செய்தார்? இவரால் ஒரு மனிதன் தரீக்காவில் இருந்து நேர்வழிக்கு வந்திருக்கிறான் என்று இதை மட்டும் பார்ப்பார்கள்.
இதை பார்த்த உடனே, ஆஹா! எவ்வளவு பெரிய ஆலிம். எவ்வளவு பெரிய சீர்திருத்தவாதி. இதுதான் அவர்களுக்கு. அதற்குப்பின்னால் படுபாதாளத்தில் எங்கே கொண்டுவந்து தள்ளியிருக்கிறார்கள், அதையெல்லாம் பார்க்க மாட்டார்கள். ஒரு பக்கத்தை பார்ப்பார்கள்.
நான் பெயரை சொல்கிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய, அதாவது ஈமானைப் பரப்புகின்றோம் என்று சொல்லக்கூடிய தப்லீக் ஜமாத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த ஜமாத்தை பொருத்தவரை, எப்படி அவர்களுக்கு ஈடுபாடு என்று சொன்னால் குறிப்பாக, இந்த தொழுகையே இல்லாத, மார்க்கமே இல்லாத, வழிபாடுகளே இல்லாமல் ஒரு மனிதன் இருந்திருப்பான். அவரை யாராவது ஜமாத்தில் போனவங்க போய் பார்த்து, அவருக்கு ஏதாவது அறிவுரை சொல்லி கொண்டுவந்து, பள்ளிவாசலுக்கு சேர்த்திருப்பார்கள்.
3 நாளு அவரை எங்கேயாவது கூட்டிட்டு போய் அவருக்கு தக்வா வந்திருக்கும். தொழுகை வந்திருக்கும். நல்ல விஷயம் நம்ம மறுக்கல. இப்படிப்பட்ட மனிதனிடம் போயி, அந்த ஜமாஅத்தில் உள்ள கொள்கை சார்ந்த தப்புகளை சொல்லிப் பாருங்கள்.
அவர் என்ன சொல்வார்? இந்த ஜமாத்தின் மூலமாகத்தான் அல்லாஹ் எனக்கு ஹிதாயத்தை கொடுத்தான். இதன் மூலமாக தான் எனக்கு நேர்வழி கிடைத்தது. அப்படி என்றால் இது எப்படி வழி கேடாக இருக்கும்? அவர்களுடைய அந்த அளவுகோல் என்ன?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
وإنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هذا الدِّينَ بالرَّجُلِ الفاجِرِ
"ஒரு பாவியை கொண்டும் அல்லாஹு தஆலா இந்த மார்க்கத்தை பரப்புவான். ஒரு பாவியை கொண்டும் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு உதவி செய்வான்". (1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6606.
ஒரு மனிதரால் ஒரு விஷயத்தில் உங்களுக்கு நேர்வழி கிடைத்து விட்டதால் மொத்த நேர்வழிக்கும் அவர்தான் குத்தகைக்காரர், அவர்தான் ஏஜென்ட், அவரைப் பார்த்துதான் மார்க்கத்தை எடைபோட வேண்டும் என்ற நிலைப்பாடு மிக பயங்கரமான, வழிகேட்டின் அடிபாதாளத்தில் தள்ளக்கூடிய நிலைபாடு.
ஒரு மனிதர் இஸ்லாத்திற்கு வந்திருந்தார். அவரைப்பார்த்து கேட்டோம், நீங்கள் ஏன் இஸ்லாத்திற்கு வந்தீர்கள்? என்று. நான் நாகூர் ஹனிபா பாட்டு நிறைய கேட்பேன், அதனால உள்ளம் உருகி இஸ்லாத்திற்கு வந்தேன் என்று சொன்னார்.
ஒரு மனிதர் இஸ்லாத்திற்கு வந்தார். எப்படிங்க இஸ்லாத்திற்கு வந்தீங்க? என்று கேட்டோம். நான் தினத்தந்தி பத்திரிக்கை பார்ப்பேன். அதில் ஒரு கார்னரில் எப்போதுமே குரள், பைபில் உள்ளது, குர்ஆனில் உள்ள ஒரு வசனம் போடப்பட்டிருக்கும். அதை பார்த்து படிச்சு நான் இஸ்லாத்திற்கு வந்தேன்.
அதனால யாராவது இஸ்லாத்திற்கு வரதா இருந்தால், தினத்தந்தி பத்திரிக்கை படிங்கனு போய் என்று சொல்வோமா?
தினத்தந்தி பத்திரிக்கையில் அவர் குர்ஆனை படிச்சிட்டு வந்தார், அது வேற விஷயம். ஆனா அதை விட்டுப்புட்டு, யாருக்காவது இஸ்லாம் பரவ வேண்டும் என்று சொன்னால், ஒரு முஸ்லிம் அல்லாதவரை பார்த்து, உங்களுக்கு இஸ்லாம் தெரியணும்னா தினத்தந்தி பத்திரிக்கையை பாருங்க! என்று சொன்னால் அது தவறாகும்.
யாரை நாம் நம்முடைய மார்க்கத்திற்கு முழு வழிகாட்டியாக ஆக்க வேண்டும்? அந்த தகுதி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாருக்கு கொடுக்க முடியும்?
அல்லாஹ் கூறுகிறான்:
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ
நபியே! நீங்கள் சொல்லுங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வின் மீது அன்பை இருக்குமேயானால், நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். (அல்குர்ஆன் 3 : 31)
முழுமையாக எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல், நாம் பின்பற்றுவதற்கு தகுதியான ஒரே தலைவர், ஒரே வழிகாட்டி, ஒரே இமாம், ஒரே முஃப்தி, ஒரே ஷேக் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும்தான்.
அவர்களை தவிர வேறு யாராக இருந்தாலும் சரி, அவர் அல்லாஹ்வுடைய தூதருடைய வழிகாட்டுதலில் அவர் நிறுக்கப்படுவார். அவருடைய செயல்கள், சொல்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய ஹதீஸ்களை அளவுகோலாக எடுத்து, அவர் அளக்கப்படுவார்.
ஹதீஸ்களுக்கு, ரசூலுல்லாஹ்வுடைய வழிகாட்டுதலுக்கு ஒத்துப் போயிருந்தால் அவரை நாம் ஒரு உஸ்தாதாக, ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அல்லாஹ்வுடைய தூதருடைய கூற்றுக்கே முரணானாலும் சரி, நம்முடைய இமாம்களுக்கு தெரியாத வழிகாட்டுதலா? என்று முந்தைய மத்ஹப்வாதிகள் சொல்லி, ஹதீஸ்களை புறக்கணித்தார்களோ, இன்று எங்களுடைய வழிகாட்டி அல்லது எங்களுடைய தலைவர், எங்களுடைய ஆலிம், எங்களுடைய மவுலவி, இவர்களுக்கு தெரியாததையா நீங்கள் சொல்லிவிட்டீர்கள்? என்று இந்த இயக்கவாதிகள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள்.
எங்களுடைய தலைவர்களுக்கு புரியவில்லை என்ற காரணத்தால், ஹதீஸ்களை ஒட்டுமொத்தமாக ஜமாத்தாக சேர்ந்து மறுக்கிறார்களே, இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
மத்ஹபுகளின் பெயரால், தரீக்காக்களின் பெயரால் நீங்கள் ஹதீஸ்களை மறுங்கள். அல்லது ஜமாத்துகளின் இயக்கங்களின் பெயர்களால் ஹதீஸ்களை மறுங்கள் அல்லது தூரம் ஆக்குங்கள். இரண்டுக்கும் மத்தியில் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்? அவர்கள் செய்தால் தவறு, நீங்கள் செய்தால் தவ்ஹீதா? அவர்கள் செய்தால் அது பித்அத், நீங்கள் செய்தால் அது சுன்னத்தா?
இதுதான் மிகப்பெரிய வழிகேடு. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மார்க்கத்தில், நமக்கு வழிகாட்டியாக, இமாமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை மட்டும் தான்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லகூடிய எச்சரிக்கையைப் பாருங்கள்! இமாம் இப்னு மாஜா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்:
إنَّما أخافُ علَى أمَّتي الأئمَّةَ المضلِّينَ
"நான் எனது சமுதாயத்தின் மீது பயப்படக்கூடிய அந்த காரியங்களில் மிக அதிகமாக பயப்படுவது, வழிகெடுக்க கூடிய வழிகாட்டிகளை. இந்த மார்க்கத்திற்கு தங்களை பிரச்சாரர்களாக, அழைப்பாளர்களாக, இமாம்களாக, ஆலிம்களாக யார் அறிமுகப்படுத்திக்கொண்டு, பிறகு, மக்களை வழிகெடுப்பார்களோ, தவறான வழியில் நடத்துவார்களோ, அவர்களை குறித்து தான் நான் அதிகம் பயப்படுகின்றேன்.
அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2229.
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
إنَّ اللَّهَ لا يَقْبِضُ العِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ العِبَادِ، ولَكِنْ يَقْبِضُ العِلْمَ بقَبْضِ العُلَمَاءِ، حتَّى إذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُؤُوسًا جُهَّالًا، فَسُئِلُوا فأفْتَوْا بغيرِ عِلْمٍ، فَضَلُّوا وأَضَلُّوا
அல்லாஹு தஆலா இந்தக் கல்வியை ஒரேடியாக ஒரே நேரத்தில் மக்களிடம் இருந்து எடுக்க மாட்டான். கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பான். அறிஞர்கள், கல்வி கற்றவர்கள் இறந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுவான். ஒவ்வொரு ஆலிமாக மரணிக்க மரணிக்க, இறுதியில் மார்க்கத்தைப் படித்த கல்விமான்கள், இல்ம் உள்ளவர்கள் இருக்க மாட்டார்கள்.
எனவே, மக்கள் மடையர்களை முட்டாள்களை தங்களது தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள். யாருக்கு குர்ஆனுடைய ஞானம் இல்லையோ, குர்ஆனை மனனம் செய்யவில்லையோ, ஹதீஸ்களை மனனம் செய்யவில்லையோ அப்படிப்பட்டவர்களை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் இல்ம் இல்லாமல் ஃபத்துவா கொடுப்பார்கள். மக்களை அவர்கள் வழி கொடுப்பார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 100.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன இன்ஷா அல்லாஹ், முடிந்தவரை அடுத்த ஜும்ஆவில் பார்ப்போம்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா உடைய இந்த மார்க்கத்தை, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எப்படி விரும்புகிறார்களோ அப்படி நாம் பின்பற்ற வேண்டும். நம்முடைய மனம் விரும்பிய வழியில் அல்ல.
இந்த மார்க்கமானது அல்லாஹ்வுடைய வேதத்திலுள்ள அடிப்படையிலேயே பின்பற்றப்பட வேண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த அந்த வழிமுறையின் அடிப்படையில் எந்தக் கூடுதல் குறைவும் இல்லாமல் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் நம்முடைய மறுமை வெற்றிக்கு காரணம் ஆகும்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய தூதருடைய சுன்னத்தை முழுமையாக பின்பற்றி நடப்பதற்குரிய அந்த அருளை தந்தருள்வானாக! பித்அத்களை விட்டு, சிறிய பெரிய எல்லா விதமான அனாச்சாரங்களை விட்டும், கொள்கைகள், நம்முடைய செயல்பாடுகள், நம்பிக்கைகள், நம்முடைய பழக்க வழக்கங்களில் உள்ள எல்லா விதமான அனாச்சாரங்களை விட்டும், அல்லாஹ் சுபஹானஹுவதஆலா என்னையும் உங்களையும் நமது சமுதாயத்தையும் பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ مِمَّنْ مَعَهُ يَدَّعِي الإِسْلاَمَ: «هَذَا مِنْ أَهْلِ النَّارِ» فَلَمَّا حَضَرَ القِتَالُ قَاتَلَ الرَّجُلُ مِنْ أَشَدِّ القِتَالِ، وَكَثُرَتْ بِهِ الجِرَاحُ فَأَثْبَتَتْهُ، فَجَاءَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ الرَّجُلَ الَّذِي تَحَدَّثْتَ أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، قَدْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ مِنْ أَشَدِّ القِتَالِ، فَكَثُرَتْ بِهِ الجِرَاحُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ» فَكَادَ بَعْضُ المُسْلِمِينَ يَرْتَابُ، فَبَيْنَمَا هُوَ عَلَى ذَلِكَ إِذْ وَجَدَ الرَّجُلُ أَلَمَ الجِرَاحِ، فَأَهْوَى بِيَدِهِ إِلَى كِنَانَتِهِ فَانْتَزَعَ مِنْهَا سَهْمًا فَانْتَحَرَ بِهَا، فَاشْتَدَّ رِجَالٌ مِنَ المُسْلِمِينَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ صَدَّقَ اللَّهُ حَدِيثَكَ، قَدِ انْتَحَرَ فُلاَنٌ فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا بِلاَلُ، قُمْ فَأَذِّنْ: لاَ يَدْخُلُ الجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ، وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الفَاجِرِ " (صحيح البخاري 6606)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/