மறுமைதான் சிறந்தது, நீடித்து இருக்கக்கூடியது | Tamil Bayan - 504
மறுமை தான் சிறந்தது, நீடித்து இருக்கக்கூடியது
ஜுமுஆ குத்பா தலைப்பு : மறுமை தான் சிறந்தது, நீடித்து இருக்கக் கூடியது!
வரிசை : 504
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 09-07-2021 | 29-11-1442
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! ரப்புல் ஆலமீனை பயந்து வாழுமாறு அல்லாஹ்வுடைய தக்வாவை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழ்பவர் தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைவார் என்பதை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா என்னையும் உங்களையும் அனைத்து முஸ்லிம்களையும் அல்லாஹ்வை பயந்து வாழும் முத்தகீன்களில் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
இந்த ஜும்ஆவில் மறுமையை குறித்த ஒரு நினைவூட்டலை பார்க்க இருக்கிறோம். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா மறுமைக்காக வாழக்கூடிய நல்லவர்களில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ، وَفِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் سورة الاعلىٰ, سورة الغاشية – சூரத்துல் அஃலா இன்னும் சூரத்துல் காஷியா ஆகிய இந்த இரண்டு சூராக்களையும் பொதுவாக ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம். எண் : 878.
அதற்கு அறிஞர்கள் கூறக்கூடிய பல காரணங்களில் ஒன்று, இந்த இரண்டு சூராக்களும் சிறியதாக இருந்தாலும் இந்த சூராக்கள் ஒவ்வொரு மூஃமீனுக்கும் மறுமையை நினைவூட்டக்கூடியதாக இருக்கும்.
சொர்க்கத்தைப் பற்றி அவனுக்கு ஆசையூட்டக் கூடியதாக, நரகத்தை பற்றி அவனுக்கு அச்சமூட்டக் கூடியதாக இருக்கின்றது. விசாரணை நாளை பற்றிய பயத்தை உள்ளத்தில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.
எனவேதான், அதிகமாக மக்கள் கூடும் ஜும்ஆ தொழுகையில் இந்த இரண்டு சூராக்களையும் தொடர்ந்து ஓதக்கூடிய வழக்கம் உடையவர்களாக தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள்.
சூரத்துல் அஃலா உடைய அத்தியாயத்தில் அல்லாஹு தஆலா ஒரு வசனத்தை கூறுகிறான். நாமெல்லாம் நம்மைப்பற்றி சுயபரிசோதனை செய்து கொள்ளக்கூடிய, நாம் ஒவ்வொருவரும் நம்மைப்பற்றி கவனிக்கக் கூடிய ஒரு முக்கியமான வசனம்.
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا (16) وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى
மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். மறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 87 : 16,17)
அல்லாஹு தஆலா ஒன்றைப்பற்றி அது சிறந்தவை, மேன்மையானவை என்று அவன் குறிப்பிடுகிறான் என்றால் அந்த சிறப்பை நமது சிந்தனையால் கற்பனை செய்ய முடியாது.
அல்லாஹுத்தஆலா இரண்டு விஷயங்களை கூறுகிறான்; ஒன்று, மிகச்சிறந்த மறுமை வாழ்க்கை. இரண்டாவது, முடிவுறாத நிரந்தரமான வாழ்க்கை.
அதை நாம் இவ்வுலக வாழ்க்கையோடு எவ்விதத்திலும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இவ்வுலக வாழ்க்கையை நாம் பார்த்தால் இவ்வாழ்க்கையில் உள்ள ஆடம்பரங்கள் செழிப்பு, வசதி, வாலிபம் இப்படி இவ்வுலகில் உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய எதுவுமே நிரந்தரமானது அல்ல. ஆனால், மறுமையில் அல்லாஹ் அளிக்கக்கூடிய அனைத்து இன்பங்களும் நிலையானது, நிரந்தரமானது.
இந்த நிரந்தரமான மறுமையின் இன்பம் சிறந்ததா? அல்லது ஒரு நிழலை போன்று முடிந்து விடக்கூடிய, இல்லாமல் ஆகிவிடக் கூடிய இவ்வுலக இன்பம் சிறந்த இன்பமா?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாட மாட்டார்கள். ஆனால் முந்திய காலத்தில் வாழ்ந்த கவிஞர்களுடைய நல்ல அர்த்தம் நிறைந்த கவிகளை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதை அவர்கள் திரும்ப எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
الا كل شيء ماخلا الله باطل وكل نعيم لامحالة زائل
உமையா இப்னு அபீ ஸல்த் என்னும் மிகப்பெரிய சிந்தனைவாதி, அவர் சொல்லிய அந்த கவிதையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி சொல்லி வந்தார்கள்.
தஹ்திபுல் ஆசார் -தபரி எண் - 572. இது கவிஞர் லபீது அவர்களின் கூற்று.
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா இன்பங்களும் நிச்சயமாக நீங்க கூடிய இன்பங்கள் தான். அல்லாஹ்வைத் தவிர எல்லாம் அழியக் கூடியவைகள் தான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விஷயத்தை உண்மைப்படுத்தக்கூடிய வசனத்தை ஓதிக் காண்பிப்பார்கள்.
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ (26) وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
அதன் மீது இருக்கிற எல்லோரும் அழிந்துவிடுவார்கள். பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் (கொடைகளுக்கும் அருள்களுக்கும்) உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும். (அல்குர்ஆன் 55 : 26,27)
நம்முடைய நிலை எப்படி என்றால் ஒருபக்கம் இபாதத்திற்கு வந்தால் மறுமை நினைவிற்கு வருகிறது. அடுத்து சிறிது துன்யாவின் பக்கம் இறங்கினால் சதுப்பு நிலத்தில் மாட்டிக் கொள்பவர்களைபோல கொஞ்சம்தான் என்று இறங்கி, பின்னர் அதிலேயே உழன்று, பின்னர் மறுமையை மறக்கக் கூடிய அளவுக்கு நிலைமை ஆகிவிடுகின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹு தஆலா அப்படிப்பட்ட மக்களைப் பார்த்து தான் எச்சரிக்கை செய்கிறான்: உங்களுக்கு என்ன ஆனது? இந்த உலக வாழ்க்கைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்களே? என்று.
சில மக்களை பார்த்தால் துன்யாவுடைய வாழ்க்கைக்கு எல்லா காரியத்திற்க்கும் ஒரு வழிமுறையும், பார்மாலிட்டியும் வைத்திருப்பார்கள்.
வாழ்க்கையின் தேவையாகிய திருமணத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எளிமையான முறையில் நடத்தினார்கள்.
ஆனால், இன்றைய முஸ்லிம்கள் மறுமையை விட இவ்வுலகத்திற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தோமேயானால் இன்று நடக்கும் திருமணத்தை சொல்லலாம்.
தொழுகைக்கு கூட எந்தவித ஏற்பாடும் இருக்காது. ஆனால் வாழ்க்கையின் ஒரு தேவையாகிய, ஒரு மனிதனுக்கு உணவின் அவசியத்தைபோல, உடையின் அவசியத்தைப்போல, வாழ்க்கைக்கு அவசியமான திருமணத்தை இன்று மக்கள் மிகப்பெரிய பார்மாலிட்டியாக, பல நிலைகளை, சடங்குகளை கொண்டதாக, பல அனாச்சார பழக்கவழக்கங்களை கொண்டதாக வாழ்நாளெல்லாம் நீடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வுலக வாழ்க்கையின் மோகத்திற்கு நாம் பல உதாரணங்களை சொல்லலாம். இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். இந்த உலகத்தில் சம்பாதிக்க வேண்டும், ஒரு தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக மறுமையை விட துன்யாவிற்கு நாம் அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்பதற்குரிய மிகப்பெரிய சான்று.
இன்று நமக்கும் சரி, நமது பிள்ளைகளுக்கும் சரி, தரமான வாழ்க்கை, நல்ல பொருளாதாரம், வாழும் பொழுது சில நல்ல வசதிகளை அவர்கள் சிரமமில்லாமல் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இவ்வுலக பொருளாதார கல்விக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்!
அதை கற்றுக் கொள்வதற்கு, அதில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு அவர்களை எந்த அளவிற்கு சிரமப்படுத்தி தயார் படுத்துகிறோம்! அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை, கல்வி வகுப்புகளை மாறி நாம் ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.
கொஞ்சம் நீதமாக நியாயமாக சிந்தித்துப் பாருங்கள். உலகக் கல்வியை குறை சொல்லவில்லை. கல்வி வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.
இந்தப் பொருளாதார கல்விக்கு நாம் கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தில் இருந்து, இதற்கென்று நாம் நமது பிள்ளைகளுக்கு ஒதுக்கிக் கொடுக்கக்கூடிய நேரத்திலிருந்து ஒரு சதவீதமாவது அவர்கள் அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்கு, மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கு, அவர்களுடைய ஷரீஅத்தை அறிந்து கொள்வதற்கு, அவர்களுடைய தூதரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, ஹலால் ஹராம் பற்றி அறிந்துகொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்புகளை அதற்குரிய சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோமா? அவர்களுடைய கவனத்தை அதன் பக்கம் நாம் திருப்பி இருப்போமா?
இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. நீ இந்த உலகில் படிப்பில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சரி, உன்னுடைய மார்க்கத்தைப் பற்றிய, ரப்பை பற்றிய, ஆஹிரத்தை பற்றிய அறிவு உனக்கு இல்லை என்றால் இந்த உலகத்தில் நீயும் ஒரு மிருகமும் சமம்.
மறுமையை அறியாதவனும், ரப்புடைய வேதத்தை படித்து உணராதவனும் ஒரு மிருகத்திற்கு சமம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஏனென்றால், அல்லாஹ் இதை இறக்கியது நாம் அதை ஓதி சிந்தித்து தெளிவு பெறுவதற்காகவா? அல்லது இது முஸ்லிம்களுடைய வேதம் என்று பெருமை அடிப்பதற்காகவா வேதம் இறக்கப்பட்டது? என்று யோசித்துப் பாருங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்லி இருக்கக்கூடிய மார்க்க அறிவு என்பது வெறும் புத்தகங்களில் இருப்பதற்காக சொல்லப்பட்டதா? அல்லது முஸ்லிம்கள் வாழ்க்கையில் படித்து செயல்படுத்தி மார்க்கத்தைப் பின்பற்றி அதன் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதா?
நம்முடைய வாழ்க்கையில் அந்த அளவு இவ்வுலக வாழ்க்கை மிகைத்து விட்டது. ஒருவனுடைய வாழ்க்கையில் மறுமையை விட இவ்வுலகம் எவ்வளவு மிகைத்து விட்டது என்பதற்கு இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.
உலகமா? மறுமையா? என்று வந்தால் அப்படியே மறுமையை நடுத்தெருவில் விட்டுவிட்டு உலகத்தை தூக்கிக்கொண்டு சென்று விடுகிறான்.
இவ்வாறாகத்தான் இன்று பெரும்பாலானவர்களின் நிலை இருக்கிறது. அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இப்படிப்பட்ட பலவீனமான ஈமான் உள்ள அடியார்களைப் பார்த்து சொல்லக்கூடிய ஒரு அறிவுரையை பாருங்கள்.
وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَاأُولِي الْأَلْبَابِ
நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிவான். கட்டுச் சாதத்தை (உங்களுடன்) எடுத்துக் கொள்ளுங்கள். ஆக, நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது தக்வா - அல்லாஹ்வின் அச்சம்தான். இன்னும். நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் என்னை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 2 : 197)
ஷிர்க்கை விட்டு விலகுவது, பெரும் பாவங்களை விட்டு விலகுவது, அல்லாஹ்வுக்கு பிடித்த நல்ல காரியங்களை செய்வது, வியாபாரம் தொழில் துறை இன்னும் உலகத்தில் ஆட்சி அதிகாரமென்று இருந்தால் கூட, அல்லாஹு தஆலாவை மறக்காமல் இருக்கக்கூடிய அந்த வாழ்க்கைதான் சிறப்பான நன்மைகள் நிறைந்த வாழ்க்கை.
எனவேதான், அல்லாஹு தஆலா மறுமைக்காக நீங்கள் தக்வாவுடைய வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறான். அறிவுடையவர்கள் என்னை பயந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 2:197)
இந்த வசனத்திலிருந்து நாம் புரிய வேண்டியது என்ன? யார் அல்லாஹ்வை பயப்பட வில்லையோ அவன் ஒரு முட்டாள். அவன் ஒரு அறிவிலி. ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்:
புத்தியுடைவர்களே! என்னை பயந்து கொள்ளுங்கள் என்று.
இப்போது நமக்கு முன்னால் ஒரு நெருப்பு இருக்கிறது. அந்த நெருப்பை யாராவது கையால் தொடுவார்களா? ஒரு பெரிய படு பாதகமான ஒரு குழி இருக்கிறது. மிகவும் படு பாதகமான குழி. அதற்குள் என்ன இருக்கிறது என்று சொல்ல முடியாது. பாம்போ தேளோ இன்னும் விஷஜந்துகள் எத்தனையோ இருக்கலாம். அந்தக் குழியை கண்ணால் பார்த்த பிறகும் நான் அதில் விழுவேன் என்று சொல்பவனை நாம் செய்ய என்ன சொல்ல முடியும்?
மிகவும் பயங்கரமான பாழடைந்த கிணறு என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அதை பார்த்துவிட்டு அதில் நான் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால் நாம் அவனை என்ன சொல்வது?
அதுபோன்றுதான், மறுமை உண்மை என்று அறிந்த பிறகும், நன்மைகளின் கூலி சொர்க்கம், பாவத்தின் தண்டனை நரகம் என்று அறிந்த பிறகும், நன்மைகளைப் புறக்கணித்து விட்டு, நன்மைகளை உதறித் தள்ளிவிட்டு, மனிதன் பாவத்தில் ஆசையோடு, ஆர்வத்தோடு, அல்லாஹ்வை மறந்து, ஈமானை மறந்து, இபாதத்தை மறந்து, அந்த பாவத்தில் குதிக்கிறான் என்றால், பாவத்தில் சுகம் அடைக்கிறான் என்றால் அதைவிட முட்டாள் யார் இருக்க முடியும்?
எனவேதான் அல்லாஹு தஆலா சொல்கிறான்: புத்தியுடையவர்களே! அறிவுடையவர்களே! என்னை புரிந்து கொள்ளுங்கள் என்பதாக.
அல்லாஹ்வுடைய தக்வாவுடைய வாழ்க்கை தான் ஆஹிரத்துடைய முக்கியத்துவத்தை நமக்கு புரிய வைக்கும்.
தக்வா இல்லை என்றால் ஆஹிரத்தை பற்றிய எந்த கவனமும் அந்த மனிதரிடம் இருக்காது. அவன் என்ன நினைத்துக் கொள்வான் என்றால் சிலர் சொல்வதை போன்று ஆஹிரத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அந்த காலத்தில் அபூலஹப் எப்படி பேசினானோ அதுபோன்று.
பார்க்க : தப்சீர் தபரி - 41:50, 19:77,78
அபூ லஹப் அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, சரி முஹம்மதே! நீங்கள் சொல்வது போல் சொர்க்கம் நரகம் இருக்கிறது, உமது ரப்பு உங்களுக்கு உதவி செய்வான் என்று வைத்துக் கொள்வோமேயானால் இன்றோ அந்த ரப்பு உன்னை ஏழையாக வைத்துவிட்டு என்னை பணக்காரனாக வைத்திருக்கின்றான் என்றால் இதன் மூலம் நான் சரியான பாதையில் இருப்பதாகதானே அர்த்தம்.
அல்லாஹ் என்னை பணக்காரன் என்ற அந்தஸ்துடன் வைத்திருக்கின்றான். உங்களையோ ஏழையாக வைத்திருக்கின்றான்.
ஒருவேளை மறுமை என்று ஒன்று இருக்குமேயானால் அங்கும் என்னை உயர்வாகவே வைத்திருப்பான். இந்த துன்யாவிலேயே எனக்கு இவ்வளவு வாழ்க்கை வசதியும் அந்தஸ்தையும் கொடுத்தவன், அந்த ஆஹிரத்திலேயும் எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பான் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
அந்த காஃபிர்கள் சொல்லிய அந்த வார்த்தையும் இன்று பெயரளவில் முஸ்லிமாக இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடைய வார்த்தையையும் ஒப்பிட்டு பாருங்கள்.
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால், மறுமை நினைவூட்டப்பட்டால் என்ன பதில் சொல்கிறார்கள்?
நாங்கள் செய்வது தவறாக இருந்தால் அல்லாஹ் எங்களை இந்நேரம் தண்டித்திருப்பானே! ஆனால், இன்று நாங்கள் நல்ல வாழ்க்கையை தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இவ்வாறு ஒரு பதில்.
இரண்டாவதாக, மறுமை மறுமையில் வரும். இன்று இருக்கக்கூடிய துன்யாவை முதலில் பாருங்கள். அங்கு மறுமைக்கு போகும்போது அதை பார்த்துக் கொள்ளலாம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இப்படிப்பட்ட மனிதர்கள் அல்லாஹ்வையும் புரிந்து கொள்ளவில்லை; மறுமையின் ஆழத்தையும் புரிந்து கொள்ளவில்லை.
மறுமையின் திடுக்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
فَكَيْفَ تَتَّقُونَ إِنْ كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا (17) السَّمَاءُ مُنْفَطِرٌ بِهِ كَانَ وَعْدُهُ مَفْعُولًا
ஆக, நீங்கள் (அல்லாஹ்வை) நிராகரித்தால், பிள்ளைகளை வயோதிகர்களாக ஆக்கிவிடுகிற ஒரு நாளை எப்படி பயப்படுவீர்கள்? வானம் அ(ன்றைய தினத்)தில் (துண்டு துண்டாக தெரித்து) பிளந்து விடும். அவனது வாக்கு கண்டிப்பாக நிறைவேறக்கூடியதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 73 : 17,18)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ
மக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமை (நிகழும்போது பூமி)யின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். நீங்கள் அதை பார்க்கின்ற நாளில், பாலூட்டுகின்ற ஒவ்வொரு பெண்ணும் தான் பால் கொடுத்ததை (-அந்த குழந்தையை) மறந்து விடுவாள். இன்னும், கர்ப்பம் தரித்த ஒவ்வொரு பெண்ணும் தமது கர்ப்பத்தை (குறை மாதத்தில்) ஈன்று விடுவாள். இன்னும், மக்களை மயக்கமுற்றவர்களாக நீர் பார்ப்பீர். ஆனால், அவர்கள் (மதுவினால்) மயக்கமுற்றவர்கள் அல்லர். என்றாலும், அல்லாஹ்வுடைய தண்டனை மிகக் கடினமானதாகும். (அல்குர்ஆன் 22 : 1,2)
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு சொல்லக்கூடிய அறிவுரைகளில் ஒன்று, நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த காரூனுக்கு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக அல்லாஹ் கூறிய அறிவுரை.
காரூனை பற்றி நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அவன் அல்லாஹ்வினால் அவ்வளவு செல்வம் கொடுக்கப்பட்டிருந்தான். இன்றோ அவனைப் போல் பணக்காரர்கள் யாரையும் பார்க்க முடியாது. அவ்வளவு செல்வங்கள் அவனிடத்தில் இருந்தது.
அவனுக்கு அல்லாஹ் கூறிய அறிவுரை என்ன? அல்லாஹ் கொடுத்ததை வைத்து மறுமையை தேடு.
இந்த வசனம் நாம் மிகவும் சிந்திக்க வேண்டிய வசனம். மூன்று விஷயங்களை அல்லாஹுத்தஆலா இந்த வசனத்தில் கூறுகிறான்.
وَابْتَغِ فِيْمَاۤ اٰتٰكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ وَلَا تَبْغِ الْـفَسَادَ فِى الْاَرْضِ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
இன்னும், அல்லாஹ் உமக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டை தேடிக்கொள்! இன்னும், உலகத்திலிருந்து (மறுமைக்கு நீ எடுத்துச் செல்லவேண்டிய) உனது பங்கை மறந்து விடாதே! இன்னும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீ (மக்களுக்கு) உபகாரம் செய்! பூமியில் கெடுதியை விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் கெடுதி செய்வோரை நேசிக்க மாட்டான்.” (அல்குர்ஆன் 28 : 77)
1. உனக்கு அல்லாஹ் கொடுத்ததில் ஆஹிரத்தை மறுமையை தேடு.
2. இந்தத் துன்யாவிலிருந்து மறுமைக்காக எடுத்துச் செல்ல வேண்டிய உன்னுடைய பங்கை மறந்து விடாதே.
3. அல்லாஹ் உனக்கு உபகாரம் புரிந்ததை போன்று அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு நீ உதவி உபகாரம் செய்.
அந்த மூன்று அறிவுரைகளை அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக காரூனுக்கு கூறியது. இது இன்று நம்மில் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் சொன்ன அறிவுரை.
இவ்வாறு அல்லாஹ் கூறிய அறிவுரைகளை ஒவ்வொன்றாக சிந்தித்துப் பாருங்கள். மனிதன் சிந்தனை தடுமாறுவதற்கும், அவன் வழிகெடுவதற்கும், மமதை, பெருமை, ஆணவம், கர்வம், அகம்பாவம் அவனுடைய தலையில் குடி கொண்டிருப்பது முக்கியமான காரணங்களில் ஒன்று.
நான் நான் என்ற சிந்தனை. இது நான் சம்பாதித்தது, என் திறமையால் நான் சம்பாதித்தது, என்னுடைய அனுபவத்தினால் நான் சம்பாதித்தது, இந்த செல்வம் என்னுடைய உழைப்பினால் வந்தது என்று அல்லாஹ் அவனுக்கு அளித்ததை உணராமல் நான் நான் என்ற சிந்தனை அவனை ஆட்டிப்படைக்கிறது.
ஒரு நொடி அல்லாஹ் நாடினால் அவனையும் அந்த செல்வந்தனையும் கையேந்தக்கூடிய ஏழையாக மாற்றிவிட ஆற்றலுள்ளவன் இல்லையா?
ரப்பு தான் செல்வத்தை கொடுக்கிறான். அல்லாஹ் சொல்கிறான்:
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு வாழ்க்கை வசதியை விசாலப்படுத்துகிறான். (தான் நாடுகிறவர்களுக்கு அதை) சுருக்கிவிடுகிறான். மேலும், (மறுமையை நிராகரிக்கின்ற) அவர்கள் உலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்கிறார்கள். உலக வாழ்க்கையோ மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும்போது) ஒரு (சொற்ப) சுகமாகவே தவிர இல்லை. (அல்குர்ஆன் 13 : 26)
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக கொடுக்கின்றான்தான் நாடியவர்களுக்கு சுருக்கமாக்கிவிடுகிறான். ஒருவனை ஏழை ஆக்குவதும், ஒருவனை செல்வந்தனாக்குவதும் அல்லாஹ்வுடைய செயல்.
இதனை அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் மிகவும் அழகாக தெளிவாக சொல்கிறான்:
وَأَنَّهُ هُوَ أَغْنَى وَأَقْنَى
இன்னும், நிச்சயமாக அவன்தான் (சிலரை) செல்வந்தராக ஆக்கினான். இன்னும், (அவர்களுக்கு அவர்களது செல்வத்தில்) சேமிப்பை ஏற்படுத்தினான். (இன்னும் சிலரை பரம ஏழையாக்கினான்.)
(அல்குர்ஆன் 53 : 48)
எனவேதான், ஒரு மனிதன் படித்து உழைத்து என்னதான் செல்வந்தனாக இருந்தாலும் உள்ளத்தின் ஆழத்தில் இது எனக்கு எனது ரப்பு கொடுத்தது, படிப்பு ரப்பு கொடுத்தான், அறிவு ரப்பு கொடுத்தான், அனுபவம் ரப்பு கொடுத்தான், என்னிடம் இருக்கும் அனைத்துமே இது என்னுடைய ரப்பு கொடுத்தது என்ற உணர்வு ஒரு முஸ்லிமிற்கு வந்து விடுமேயானால் அவன் கண்டிப்பாக மறுமையை மறக்க மாட்டான்.
ஒரு மனிதன் இந்த செல்வம் தனக்கு அல்லாஹ் கொடுத்தது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அவன் அல்லாஹ்வுடைய தொடர்பில் இருக்கிறான்.
பின்னர் மறுமையை மறப்பானா? மறக்க மாட்டான். ஆகவே இப்போது அந்த மனிதன் என்ன செய்வான்?
இந்த துன்யாவை வைத்து இந்த துன்யாவில் அல்லாஹ் தனக்கு கொடுத்ததை வைத்து எப்படி மறுமையை அடைவது? என்ற முயற்சியில் இறங்கி விடுவான். அவனுக்கு இந்த துன்யா முக்கியமல்ல. இந்த செல்வம் முக்கியமல்ல. செல்வத்தை வைத்து மறுமையை எப்படி வாங்கலாம்? அவன் என்ன செய்வான்? அவனுடைய சிந்தனை எப்படி இருக்கும்?
எத்தனை மஸ்ஜிதுகளை கட்டலாம்? எத்தனை மதரஸாக்களை உருவாக்கலாம்? எத்தனை எத்தீம்களை படிக்க வைக்கலாம்? எத்தனை முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கலாம்? என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவான்.
இவ்வாறு சிந்திப்பதற்கு காரணம், இங்கு அவன் செய்யக்கூடிய நன்மைகள் தான் மறுமையில் அவனுக்கு ஆதாரமாக வரப்போகிறது.
ஒரு மனிதன் எப்பொழுது தன்னிடம் இருக்கக்கூடிய செல்வம் இது தனது தரப்பு கொடுத்தது என்ற எண்ணத்திற்கு அவன் வந்துவிட்டானோ அப்போது அவன் அந்த செல்வத்தை தனது மறுமையை சம்பாதிப்பதற்காக திருப்பி விடுவான்.
எப்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் வாழ்ந்தார்களோ, எப்படி அந்த தோழர்களிலும் வியாபாரிகள் இருந்தார்கள், செல்வந்தர்கள் இருந்தார்கள்.
ஆனால் மறுமையின் காரியம் என்று வந்துவிட்டால் உதாரணத்திற்கு நாம் லட்சத்தில் ஒன்றை அல்லாஹ்விற்காக கொடுத்தால் அவர்களோ லட்சத்தையும் அல்லாஹ்வுடைய பாதையிலேயே கொடுத்தார்கள்.
அல்லாஹ்வுடைய பாதையில் கொடுத்தது போக மிச்சம் இருந்தால் துன்யாவை பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணும் அளவிற்கு அவர்களுடைய ஈமான் உயர்ந்து இருந்ததற்கு காரணம் என்ன? செல்வம் அல்லாஹ் கொடுத்தது என்ற நம்பிக்கை அவர்களிடம் உறுதியாக இருந்தது.
ஆனால், இன்று நமக்கு எவ்வளவுதான் வாயால் இது அல்லாஹ்விடம் இருந்து வந்தது, அல்லாஹ் கொடுத்தது என்று சொன்னாலும் அந்த உறுதி நமது உள்ளத்தில் இல்லை. உள்ளத்தில் அந்த நம்பிக்கை இல்லை .
எனவேதான், சொந்தத் தாய் தந்தைக்கு கூட கொடுக்காத கருமிகளை இந்த துன்யாவில் நாம் பார்க்கிறோம். உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு, ரத்த உறவுகளுக்கு, அண்டை வீட்டாருக்கு கூட உதவி செய்யாத கருமிகளான செல்வந்தர்களை இந்த உலகத்தில் நாம் பார்க்கிறோம்.
இன்று, எத்தனையோ சேதங்கள் ஏற்படுவதை பார்க்கிறோம். பாதிப்புகள் ஏற்படுவதை பார்க்கிறோம். தேவை உள்ளவர்கள் அந்த நேரத்தில் கையேந்துவதைப் பார்க்கிறோம். கொடுப்பதற்கு மனமில்லை.
இதற்கு காரணமென்ன? நான் உழைத்து கஷ்டப்பட்டு தேடிய இந்த செல்வத்தை நான் எவ்வாறு பிறருக்கு கொடுப்பது?
உண்மைதான். இன்று ஜகாத் கூட கொடுக்காத முஸ்லிம் பெயர் தாங்கிகள் இருப்பதை பார்க்கிறோம்.
ஜகாத் என்பது கட்டாயமாக கொடுக்க வேண்டிய ஒன்று. அதை கொடுக்காதவர்களுக்கு இஸ்லாத்தில் பங்கு இல்லை.
யார் ஒருவன் தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்து பார்க்கிறானோ அவனுக்கு நமது மார்க்கத்தில் பங்கில்லை.
அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ المَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا
யாரொருவன் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஜகாதிலிருந்து ஒரு ஒட்டகக் குட்டியை கொடுப்பதை இப்போது மறுப்பார்களோ அவர்களிடத்தில் நான் போர் செய்வேன், யுத்தம் செய்வேன் என்று.
நூல் : புகாரி, எண் : 1400.
இன்று முஸ்லிம்கள் என்று சொல்கிறார்கள். ஹாஜிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஸக்காத்தை கொடுப்பதில்லை.
என்ன ஒரு அடிப்படையை அல்லாஹ் நமக்கு சொல்கிறான் என்று பாருங்கள்.
அல்லாஹ் உனக்கு கொடுத்த செல்வம் வசதி வாய்ப்புகளை வைத்து ஆஹிரத்தை தேடு. ஆஹிரத்திற்காக தான் இந்த துன்யா, செல்வம், பதவி, அறிவு, வசதி வாய்ப்புகள் அனைத்தும் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தன்னிடம் இருக்கும் அனைத்தும் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தவன் தான் உண்மையான முஸ்லிம்.
இந்த துன்யா துன்யாவிற்காகவே கொடுக்கப்பட்டது என்று எண்ணுபவன் முனாபிக். ஒரு காஃபிர்.
அவன் தன்னிடம் இருக்கக்கூடிய எந்த ஒன்றையும் மறுமைக்காக செலவு செய்ய மாட்டான். அப்படியே ஒருவேளை செலவு செய்தாலும் கூட, இன்று துன்யாவில் தனக்கு பெயர் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்வானே தவிர, அது இந்த துன்யாவிலேயே முடிந்துவிடும். மறுமைக்கென்று அவனுக்கு ஒரு சேமிப்பும் இருக்காது.
இது ஒரு முக்கியமான அடிப்படை. மறுமையை நம்பக்கூடியவன் இந்த துன்யாவை மறுமைக்காக அவன் வைத்துக் கொள்வான்.
நம்முடைய வாழ்க்கைக்காக, தன்னுடைய குடும்பத்திற்காக, தன்னுடைய தேவைக்காக அவன் தனது செல்வத்தை பயன்படுத்தினாலும் அவனுடைய உண்மையான லட்சியம் நோக்கம் மறுமையை அடைவதாக இருக்கும்.
இரண்டாவதாக அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள். இதற்கு அறிஞர்கள் இரண்டு விதமான கருத்து கூறுகிறார்கள்.
ஆஹிரத்திற்காக செலவு செய்யக்கூடிய நீ, இந்த துன்யாவிலும் உன்னுடைய தேவைகளை மறந்துவிடாதே. உனக்கு தேவையான விஷயங்களையும் அல்லாஹ் உனக்கு கொடுத்த செல்வத்தை கொண்டு ஹலாலான வழியில் நீ தேடிக்கொள்.
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்:
وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا
மேலும், (மனிதனே! தர்மம் செய்யாமல்) உனது கையை உன் கழுத்தில் விலங்கிடப்பட்டதாக ஆக்காதே! (செலவு செய்வதில்) அதை முற்றிலும் விரிக்காதே! அதனால் நீ பழிப்பிற்குரியவராக, (செல்வம் அனைத்தும்) தீர்ந்துபோனவராக தங்கிவிடுவாய். (அல்குர்ஆன் 17 : 29)
நீங்கள் உங்கள் செல்வங்களை செலவு செய்யும் பொழுது முற்றிலுமாக அனைத்தையும் விரித்து செலவு செய்து விடாதீர்கள். அதே நேரம் கைகளை சுருக்கியும் மடக்கியும் வைத்துக் கொள்ளாதீர்கள். நடுநிலையாக அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்யுங்கள்.
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا
அன்றி, அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள். (அல்குர்ஆன் 25 : 67)
இது பொதுவாக முஃமின்களில் நடுத்தர மக்களுக்காக அல்லாஹ்வால் கூறப்பட்டது. அபூபக்ர் அவர்களுடைய தகுதியில் யார் சென்றுவிட்டார்களோ அவர்களைப் போல்.
அதாவது, தான் ஏழையானாலும் பரவாயில்லை, ஏழ்மையை அல்லாஹ்வுக்காக பொருந்திக்கொண்டு, பிறரிடத்தில் கையேந்தாமல் இருக்கக்கூடிய அந்த صبر இருப்பவர்களுக்கு என்று வேறு சட்டம் இருக்கிறது. இப்படி ஒரு விளக்கம் அறிஞர்கள் கொடுக்கிறார்கள்.
இன்னொரு விளக்கம் என்ன என்று பார்த்தால்,
وَابْتَغِ فِيْمَاۤ اٰتٰكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ وَلَا تَبْغِ الْـفَسَادَ فِى الْاَرْضِ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
இன்னும், அல்லாஹ் உமக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டை தேடிக்கொள்! இன்னும், உலகத்திலிருந்து (மறுமைக்கு நீ எடுத்துச் செல்லவேண்டிய) உனது பங்கை மறந்து விடாதே! இன்னும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீ (மக்களுக்கு) உபகாரம் செய்! பூமியில் கெடுதியை விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் கெடுதி செய்வோரை நேசிக்க மாட்டான்.” (அல்குர்ஆன் 28 : 77)
இதுவும் மறுமைக்காக அல்லாஹ் சொன்னது .
இந்த உலகத்தில் நாம் எதை சம்பாதித்தாலும், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் எதை நாம் அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தோமோ அதுதான் மறுமையில் நமக்கு சேமிப்பாக வரக்கூடியது. மற்றவை எல்லாம் இவ்வுலகில் நமது சந்ததிகளுக்காக விட்டுவிட்டு செல்லக்கூடியது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தினம் வீட்டுக்கு வந்தார்கள். அன்றைய தினம் ஆடு ஒன்று அறுக்கப்பட்டிருந்தது.
أَنَّهُمْ ذَبَحُوا شَاةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَقِيَ مِنْهَا»؟ قَالَتْ: مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا قَالَ: «بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا»
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டார்கள். ஆயிஷா! ஆடு அறுத்ததில் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா? என்று.
உடனே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பதறி விட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் பசிக்கு சாப்பிடுவதற்காக கேட்கிறார்களா? அல்லது பிறருக்கு விருந்து வைப்பதற்காக கேட்கிறார்களா? என்று.
பின்னர் பதிலளிக்கிறார்கள்; யா ரஸூலல்லாஹ்! நாம் அனைத்தையும் கொடுத்து விட்டோமே. அந்த ஆட்டின் முன் சப்பையில் சிறிது தான் மீதம் உள்ளது என்று சொல்கிறார்கள்.
இதைக் கேட்டவுடன் நபி ஸல்லல்லாஹு ஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: ஆயிஷா! அனைத்துமே நிரந்தரமாக பத்திரமாக மீதமிருக்கிறது. நீ மீதமிருக்கிறது என்று சொன்னாய் அந்த ஒன்றை தவிர.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 2470.
எதை நீ ஏழைகளுக்காக விருந்தினர்களுக்காக தானமாக கொடுத்தாயோ அதன் நன்மைகள் எல்லாம் ஆஹிரத்தில் நமக்கு நிரந்தரமான நன்மையாக மீதமிருக்கிறது. பத்திரமாக சேமிக்கப்படுகிறது.
எதை நாம் நமக்கு சாப்பிடுவதற்காக எடுத்து வைத்தோமோ அதுதான் இந்த துன்யாவிலேயே அழிந்து விடக்கூடியது.
எதை நாம் அல்லாஹ்விற்காக கொடுத்தோமோ அதுதான் நமக்கு. அல்லாஹ்வுக்காக கொடுப்பது என்றால் மார்க்கத்திற்காக, ஏழைகளுக்காக, மிஸ்கீன்களுக்காக, மதரஸாக்களுக்காக, வறியவர்களுக்காக, அல்லாஹ்வுடைய தீனுக்காக என்று நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுதான் மறுமையில் நமக்கு நம்முடைய சேமிப்பாக நன்மைகளாக மீதம் இருக்கக்கூடியது.
அல்லாஹ்விற்காக என்ற நிய்யத்தில் நன்மையின் வழிகளில் எந்த ஒரு வழியில் நாம் செலவு செய்தாலும், அதுதான் நமக்குரிய உண்மையான செல்வம். அதைத்தான் நாம் மறுமையில் அனுபவிக்கப் போகிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 73 : 20)
எனவேதான் அல்லாஹ் சொல்கிறான் இந்த துன்யாவிலிருந்து நீங்கள் மறுமைக்காக எடுத்துச் செல்லக்கூடியது எது? என்று சிந்தித்துப் பாருங்கள்.
செல்வம் அளிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு முஸ்லிமும் ஆழ்ந்து உணர்ந்து புரிய வேண்டிய வசனம்.
ஏனென்றால், செல்வநிலை என்பது ஒரு மனிதனை தடுமாற வைக்கக்கூடியது. பணம் என்பது ஒரு மனிதனுடைய குணத்தை மாற்றக்கூடிய ஒன்று. வசதி வாய்ப்புகள் ஒரு மனிதனுடைய சுபாவத்தை மாற்றக்கூடிய ஒன்று. அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர.
அல்லாஹுத்தஆலா அன்று நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக காரூனுக்கு சொன்ன அறிவுரை இன்று நமக்கும் துல்லியமாக பொருந்தக்கூடிய அறிவுரை.
அல்லாஹ் சொல்கிறான்: பிறருக்கு உதவி ஒத்தாசை செய்து கொண்டே இரு. நன்மை செய்து கொண்டே இரு.
அல்லாஹ் உனக்கு உதவி செய்திருக்கின்ற காரணத்தினால், செல்வம் கொடுத்திருக்கின்ற காரணத்தினால், பதவி, அறிவு போன்றவைகள் கொடுத்திருக்கின்ற காரணத்தினால் நீ அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு அல்லாஹ் அளித்ததை கொண்டு உதவி செய்துகொண்டே இரு.
நீங்கள் கொஞ்சம் நினைத்து பாருங்கள். அல்லாஹ்வுடைய இந்த வழிகாட்டுதல் எவ்வளவு துல்லியமாக ஒரு மனிதனை நெறிப்படுத்துகிறது என்று.
ஒரு மனிதனை சரியான, நேரான பாதையில் தடுமாற்றம் இல்லாமல் அவனது சிந்தனையில், அறிவில், எண்ணங்களில் குழப்பம் ஏதும் ஏற்பட்டு விடாமல்.
ஏனென்றால் ஒரு மனிதனுக்கு சிந்தனைகளில் குழப்பம் ஏற்பட்டு விட்டால் பாலில் கலக்கப்பட்ட விஷத்தைப் போல. புத்தியில் கோளாறு ஏற்பட்டால் ஒரு நல்ல உணவில் விஷம் கலப்பதை போல.
உணவுடைய அளவுக்கு விஷம் கலக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், நல்ல உணவில் ஒரு துளி விஷம் கலந்தாலும் மொத்த உணவும் வீணாகி விடுவதை போன்று ஒரு மனிதனுடைய சிந்தனையில் ஏற்படும் சிறிய கோளாறு அவனுடைய முழு வாழ்வையுமே சிதைத்து விடும்.
இதுதான் மனிதனுடைய நிலை. செல்வம் வரும் பொழுது, “அல்ஹம்து லில்லாஹ்” -அல்லாஹ் இதை எனக்கு கொடுத்தான். அதை அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு கொடுப்பேன் என்று கூறுபவன் மறுமை வாழ்வுக்கு தன்னை தயார் செய்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
“எதை அவர்கள் தர்மம் புரியவேண்டும்?’’ என்று உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “செல்வத்திலிருந்து நீங்கள் எதைத் தர்மம் செய்தாலும் அது பெற்றோர், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்களுக்கு செய்யப்பட வேண்டும். நீங்கள் நன்மை எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து உங்களுக்கு அதற்கேற்ப கூலி கொடுப்)பவன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 2 : 215)
உங்களது செல்வத்தில் எதை நீங்கள் செலவு செய்யப் போகிறீர்களோ முதலில் உங்களை பெற்றெடுத்த தாய் தகப்பனுக்கு கொடுங்கள்.
ஆனால், இன்றைய நிலையோ தனக்கு எல்லாம் செலவு செய்தது போக மிச்சம் இருந்தால் பெற்றோருக்கு கொடுப்பதை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
அப்படியே கொடுத்தாலும் அதிலும் ஒரு அளவு வைத்து கொடுப்பது. கொடுக்க வேண்டியதில் முதலாவது உனக்கு என்று சொல்லவில்லை, உனது பிள்ளைகளுக்கு என்றோ, மனைவிக்கு என்றோ சொல்லவில்லை.
பெற்றெடுத்த தாய் தந்தைக்கு முதலாவதாக கொடு. பிறகு நெருக்கமான உறவுகள். அதில் மனைவி, பிள்ளைகள் வருவார்கள்.
ஆனால், தாய் தந்தையருக்கு செலவு செய்வதை முற்படுத்தப்பட வேண்டும். தாய் தந்தையர் பணக்காரர்களாக, செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நமது செல்வம் தேவை என்று இல்லாமல் இருக்கும் பொழுதும் கூட, பிள்ளைகள் தங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு அவர்களது ஹக்கை கொடுக்க வேண்டும்.
பிறகு மூன்றாவதாக எத்தீம்கள். இன்று சிலரை பார்க்கலாம். எங்கேயோ ஊர்களிலுள்ள எத்தீம்களுக்கு கொடுப்பார்கள். ஏனென்றால் எத்தீம் கானாவிற்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தவர்கள் என்று பெயர் கிடைக்கும் புகழ் கிடைக்கும்.
ஆனால், தனது ரத்த உறவுகளில் சகோதரியின் கணவர் இறந்து அவளுடைய பிள்ளைகள் எத்தீம்களாக இருப்பார்கள். சகோதரன் இறந்து அந்தப் பிள்ளைகள் எத்தீம்களாக இருப்பார்கள்.
இவருடைய பிள்ளையோ உயர்ந்த பள்ளியில் படித்துக் கொண்டிருப்பார். இவனுடைய பிள்ளைகள் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்வார்கள்.
ஆனால், தனது இரத்த உறவில் உள்ள பிள்ளைகளோ அன்றாடம் வாழ்க்கைக்கு கூட சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
எனவேதான், முதலில் நமது ரத்த உறவில் உள்ள அனாதைகளுக்கு. பிறகு முஹல்லாவில் உள்ளவர்கள், தெருவில் உள்ளவர்கள் என்று தர்மம் செய்ய வேண்டும்.
அடுத்து நான்காவதாக வருபவர்கள் வழிப்போக்கர்கள். இப்படியாகத்தான் நாம் நமது செல்வத்தை செலவு செய்ய வேண்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளோம்.
ஒரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
«مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ، وَمَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهُ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا قُدِّرَ لَهُ»
யாருடைய சிந்தனை மறுமையாக இருக்குமோ அவரை விட்டுப் பிரிந்து இருக்கக் கூடிய எல்லா காரியங்களையும் அல்லாஹ் ஒருங்கிணைத்து விடுவான். அவருடைய செல்வத்தை அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் அல்லாஹ் வைத்து விடுவான். அவர் எப்பொழுதும் மனநிறைவோடு இருப்பார். தன்னிடம் இருப்பது போதும் என்று மனம் நிறைந்திருப்பார். துன்யா அவரைத் தேடி வரும்.
யாருடைய கவலை துன்யாவாக இருக்குமோ, துன்யாவைப் பற்றி அதிகமான சிந்தனையாக இருக்குமோ அவருடைய ஒருங்கிணைந்த காரியங்களையும் அவரை விட்டு அல்லாஹ் பிரித்து விடுவான். அவருடைய வறுமையை அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் அல்லாஹ் வைத்து விடுவான். அவனுக்கு துன்யாவில் எது விதியில் எழுதப்பட்டதோ அதை தவிர அதிகமாக அல்லாஹ் ஒன்றையும் கொடுக்க மாட்டான்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2465.
அல்லாஹு தஆலா சொல்லக்கூடிய மிக முக்கியமான ஒரு வசனம். அந்த வசனம் எப்போதுமே நம்முடைய கண்ணுக்கு முன்னால் நம்முடைய சிந்தனையில் தொடர்ந்து இருக்க வேண்டும்.
قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌ وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰى وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا
(நபியே!) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானதாகும்! அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மிக மேலானதாகும். (மறுமையில் நீங்கள்) ஒரு நூல் அளவு கூட அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன் 4 : 77)
துன்யா காலத்தாலும் குறைவானது. அளவாலும் குறைவானது. துன்யாவினுடைய வசதியை நாம் எவ்வளவுதான் கட்டி ஆள முடியும்?
இவ்வுலகத்திற்கு ராஜாவானாலும் கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும், வடக்கிலிருந்து தெற்கு வரைக்கும் இருக்கக்கூடிய அனைத்து செல்வத்திற்கும் நீ அரசனாகவே ஆனாலும் மறுமையில் அவனுக்கான செல்வம் எதுவும் இல்லை என்றால் நினைத்துப் பாருங்கள் நிலைமையை.
ஒரு சாதாரண முஃமின் அதுவும் நரகத்திலிருந்து அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு, அதுவும் தவழ்ந்து தவழ்ந்து கடைசியாக சொர்க்கத்தில் நுழையக் கூடிய அந்த சாதாரணமான ஒரு முஃமினுக்கே இந்த துன்யாவைப் போல் பத்து மடங்கு சொர்க்கத்தை அல்லாஹ் வழங்குகிறான் என்றால் நினைத்துப் பாருங்கள்.
நூல் : புகாரி, எண் : 6086 .
அதற்குப் பிறகு அந்த சொர்க்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நிஃமாவும் இந்த துன்யாவை விட பெரியதாகும்.
எனவேதான், நபியே! நீங்கள் சொல்லுங்கள்; துன்யாவுடைய இன்பம் அற்பமானது. அதை ஆகிரத்தோடு ஒப்பிடவே முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான்.
சொர்க்கத்தில் இருக்கக்கூடிய தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை குதிரையில் ஏறி ஒருவன் 100 வருடம் பயணித்தாலும் அவனால் அந்த மரத்தின் நிழலை கூட முடித்திருக்க முடியாது.
நூல் : புகாரி, எண் : 3012, திர்மிதீ எண் : 2447
இந்த துன்யாவில் ஒரு கோபுரத்தை கட்ட வேண்டுமென்றால் அதை எவ்வளவு உயரம் தான் நாம் கட்டிவிட முடியும்!
ஆனால், நாளை மறுமையில் ஒரு முஃமினுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய கோபுரங்களில் ஒன்று, முத்தினால் செய்யப்பட்டிருக்கும்.
நூல் : புகாரி எண் : 4501.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயரத்தை பற்றி தான் சொன்னார்கள். அகலத்தை அல்ல. தூரத்தில் 60 மைல்கள் இருக்கும். உயரத்தில் 60 மைல் இருக்கும். அல்லாஹ் சுவனத்தில் கொடுக்கும் ஒரு மாளிகையில் 70000 அறைகள்.
அவனுக்கு வேலை செய்வதற்கென்று அவ்வளவு பணியாளர்கள். அதை எல்லாம் நினைத்துப் பார்த்து இப்பொழுது சொல்லுங்கள்
அத்துர்ருல் மன்சூர் சூரா 32 வசனம் 17 தப்ஸீர் இப்னு அபி ஹாதம் எண் : 18296.
இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது. அளவிலும் குறைவானது, காலத்திலும் குறைவானது.
உலகில் ஒரு மனிதன் வசதியான வாழ்க்கையை அடைவதற்கு எத்தனை வயது அவனுக்கு தேவைப்படுகிறது? ஒரு நாற்பது வயது தேவைப்படலாம்.
இன்னும் அதிக அந்தஸ்தான நிலையை 50 வயதில் அடைவான். அதன்பிறகு அதை அவன் எவ்வளவு நாள் அனுபவிக்க முடியும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தால், ஒரு இருதய நோய் வந்தாலோ வேறு ஏதேனும் நோய்கள் வந்தாலோ முடிந்துவிட்டது.
எனவேதான் இந்த உலகத்தை ஒரு மனிதன் அனுபவிப்பதும் மிகவும் அற்பமான காலம் மட்டும்தான். ஆனால் மறுமை வாழ்க்கையோ அப்படி அல்ல.
அல்லாஹ் கூறுகிறான்:
ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰى
பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான். (அல்குர்ஆன் 87 : 13)
அவன் நரகத்திற்கு செல்வான். ஆனால், அங்கு அவனுக்கு மரணம் கிடையாது. அதிலிருந்து விடுதலை பெறுவதற்கு. ஆனால், அங்கு அதாபுடன் வாழவும் முடியாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸை சொல்லி நிறைவு செய்வோம்.
خَطَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا مُرَبَّعًا، وَخَطَّ خَطًّا فِي الوَسَطِ خَارِجًا مِنْهُ، وَخَطَّ خُطَطًا صِغَارًا إِلَى هَذَا الَّذِي فِي الوَسَطِ مِنْ جَانِبِهِ الَّذِي فِي الوَسَطِ، وَقَالَ: " هَذَا الإِنْسَانُ، وَهَذَا أَجَلُهُ مُحِيطٌ بِهِ - أَوْ: قَدْ أَحَاطَ بِهِ - وَهَذَا الَّذِي هُوَ خَارِجٌ أَمَلُهُ، وَهَذِهِ الخُطَطُ الصِّغَارُ الأَعْرَاضُ، فَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا، وَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا "
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதலில் ஒரு கோட்டை போட்டார்கள். பிறகு மிகவும் பெரிய கோடு ஒன்றை போட்டார்கள். பின்னர் குறுக்கால் ஒரு கோடு போட்டார்கள். இப்போது மூன்று கோடு.
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: முதலில் போட்ட கோடு அவன் தான் மனிதன். அந்த நீளமான கோடு மனிதனுடைய ஆசைகள்.
ஏனென்றால், மனிதனுடைய ஆசைக்கு என்றும் முடிவே கிடையாது. ஒன்று முடிந்தால் அடுத்து, ஒன்று முடிந்தால் அடுத்து என்று அவனுடைய ஆசைகள் நீண்டு கொண்டே இருக்கும்.
மூன்றாவதாக குறுக்கால் போட்ட கோடு தான் மரணம்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6417.
ஒரு மனிதன் தனது ஆசையை அடைவதற்காக அவன் ஓடிக் கொண்டிருப்பான். பறந்து கொண்டிருப்பான். பலவிதமாக போராடிக் கொண்டிருப்பான்.
அப்பொழுது அவனுக்கு குறுக்கால் அவனது முயற்சிகளுக்கு இடையே மரணம் வந்துவிடுமேயானால் அப்பொழுது அவனது ஆசை நிறைவேறி இருக்காது. மரணம் அவனது வாழ்க்கையை, அவனது ஆசையை முடித்துவிடும்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா மறுமைக்கான தயாரிப்புகள் செய்யக்கூடிய நல்ல மக்களாக நம்மை ஆக்குவானாக!
எந்த அளவு மறுமையுடைய கவலை, அக்கறை நமக்கு இருக்குமோ நமது அமல்களை நாம் அதிகப்படுத்துவோம். பாவங்களை விட்டு தவ்பா செய்து, மீண்டு விலகி, மரணத்தை எதிர் கொண்டவர்களாக மறுமையில் நமது இறைவனை சந்தித்து, அந்த விசாரணை நாளில் பதில் சொல்வதற்காக நம்மை நாம் இன்றே தயார் படுத்திக் கொள்வோமாக!
அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வை பயந்து வாழக்கூடிய, மறுமைக்காக வாழக்கூடிய, துன்யாவுடைய ஆசாபாசங்களில் மூழ்கி மறுமையுடைய வாழ்க்கையை மறக்கக்கூடிய நிலையிலிருந்து பாதுகாத்து, நிலையான சொர்க்கத்தை, நிரந்தரமான வாழ்க்கையை நமக்கு மறுமையில் வழங்குவானாக! ஆமீன்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/