HOME      Khutba      ஆதரவு! | Tamil Bayan - 631   
 

ஆதரவு! | Tamil Bayan - 631

           

ஆதரவு! | Tamil Bayan - 631


بسم الله الرّحمن الرّحيم
 
ஆதரவு!
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உரையில் ஈமானுடைய மிக முக்கியமான குணங்களிலிருந்து ஒரு குணத்தை இன் ஷா அல்லாஹ் நாம் அறிந்துகொள்ளப் போகிறோம். 
 
ஈமான் -அல்லாஹ்வை நம்புவது என்பது அது தனி ஒரு விஷயம் அல்ல. அதற்குள் பல கிளைகள் இருக்கின்றன. அவை எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் அது ஈமானாகும். 
 
எப்படி மனிதன் என்ற சொல் அவனுடைய முழு உடலை தலையிலிருந்து, கையிலிருந்து, காலிலிருந்து, மேலும் நாம் பார்க்க முடியாத உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் இருக்கின்றதோ அதுபோன்று  நம் ஈமான் என்பதும் பல கிளைகளை கொண்டது. 
 
அதற்கு வெளிரங்கமான அமல்கள்  இருக்கின்றன; உள்ரங்கமான அமல்களும் இருக்கின்றன. உள்ரங்கமான அமல்கள் மிகமிக முக்கியமானவை. உள்ளம் சார்ந்தவை. அது ஈமானுடைய ஸிஃபாத். ஈமானுடைய அஹ்லாக்.  ஈமானுடைய பண்புகள் ஆகும்.
 
அந்த ஈமானுடைய குணங்கள் மற்றும் பண்புகளில் ஒன்று தான் الرّجاء -அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பது. நம்முடைய ஆதரவை அல்லாஹ்வின் மீது வைத்து விடுவது. 
 
அதாவது, அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆதரவு வைப்பது; அல்லாஹ்வுடைய அன்பை ஆதரவு வைப்பது; அல்லாஹ்வுடைய மன்னிப்பை ஆதரவு வைப்பது; நாம் ஒரு நல்ல அமல் செய்கிறோம் என்றால் அந்த அமலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆதரவு வைப்பது; நாம் ஒரு தர்மம் செய்கிறோம் என்றால் அந்த தர்மத்தை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டும் என்று ஆதரவு வைப்பது. 
 
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! நாம் மன இச்சையின் தூண்டுதலால் ஒரு பாவம் செய்து விட்டாலும், அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடி என்னுடைய ரப்பு என்னுடைய பாவத்தை மன்னிப்பான் என்று ஆதரவு வைப்பது. பாவம் செய்யாதவர்கள் இந்த பூமியில் இருக்க முடியாது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
 
عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ» (سنن ابن ماجه 4251 -)
 
உங்களில் ஒவ்வொருவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர் அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கூடியவர்கள். பாவத்திலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம் தவ்பா செய்பவர்களே சிறந்தவர்கள்.
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா, எண்: 4251.
 
இப்படி ஒரு மனிதன் பாவம் செய்து விட்டால் கூட, அல்லாஹ் அவனுடைய கருணையால் என்னை மன்னிப்பான் என்று அல்லாஹ்வுடைய மன்னிப்பின் மீது ஆதரவு வைக்க வேண்டும். 
 
ஒரு மனிதன் ஏழ்மையில் இருந்தால்  என்னுடைய ஏழ்மையை போக்கி செல்வ நிலையை கொடுப்பான் என்று அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்க வேண்டும். -செல்வநிலை என்று சொன்னால் நம்முடைய கற்பனைக்கு தவறான எண்ணம் வந்துவிடக்கூடாது. பெரிய பங்களா, ஆடம்பரமான வாகனம், ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது- கடன் இல்லாத வாழ்க்கை இருந்தால் அது செல்வநிலை. பிறரிடத்தில் கையேந்தாத நிலை இருந்தால் அது செல்வநிலை. அல்ஹம்து லில்லாஹ்.
 
நம்மால் ஒரு 10 ரூபாய் தர்மம் செய்யும் அளவிற்கு அல்லாஹ் கொடுத்து இருந்தால் அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பலருக்கு இது புரிவதில்லை. நம்மைவிட செல்வத்திலே புரளக் கூடியவர்களை பார்த்து பார்த்து   நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய நிஃமத்துகளை குறைத்து மதிப்பிடுபவர்கள் நம்மில் அதிகம் இருக்கின்றார்கள். 
 
இப்படி இந்த அர்ரஜா -ஆதரவு வைத்தல் என்பது ஈமானில் இருக்கக் கூடிய ஒரு முக்கியமான பண்பு. ஒரு நொடி கூட அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் இருந்து நம்முடைய உள்ளம் விலகி விடக்கூடாது. 
 
ஒரு மனிதர் 10 ஆண்டுகளாக துஆ கேட்கிறார். 20 ஆண்டுகளாக துஆ கேட்கிறார். தேவை நிறைவேறவில்லை. ஆதரவு வைப்பதை விட்டுவிடலாமா? கூடாது. வாழ்நாளெல்லாம் அல்லாஹ்வின் ரஹ்மத்தின் மீது, அல்லாஹ் கொடுப்பான் என்ற அவன் கொடைத்தன்மை மீது, அல்லாஹ் எனக்கு தாமதப்படுத்துகிறான் என்றால் அதற்கும் அல்லாஹ்விடத்தில் ஒரு ஹிக்மத் -ஞானம் இருக்கும். அதற்கும் ரப்பிடத்தில் ஒரு அழகான காரணம் இருக்கும். எனக்கு தேவையானதை என்னைவிட அல்லாஹ் அறிந்தவன். எனக்கு எப்பொழுது கொடுத்தால் அது நன்மையோ அந்த நேரத்தில் என்னுடைய ரப்பு கொடுப்பான் என்று ஆதரவு வைத்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். துஆ செய்து கொண்டு அவனிடத்தில் மன்றாடிக் கொண்டே இருக்க வேண்டும். 
 
இந்த ஆதரவு வைத்தல் என்பது நபிமார்களுடைய ஸிஃபத். இது நல்லோர்களுடைய ஸிஃபத். அல்லாஹ் ஈமானுடைய ஒரு குணமாக பண்பாக சொல்கிறான். ஒரு அடியான் தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து விட்டு, அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, என்னுடைய ரப்பு என்னுடைய முயற்சியில் வெற்றியை தருவான் என்ற நம்பிக்கை வைப்பது அர்ரஜா –ஆதரவு ஆகும்.
 
இங்கு இன்னொரு  வகையான ஆதரவையும் கவனிக்கவேண்டும். அதாவது  ஒவ்வொன்றிலும் அசல் ஒன்று இருக்கும், போலி ஒன்று இருக்கும். அது போன்று தான் இந்த ஆதரவிலும் ஒரு போலி, இவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் மீது ஆதரவு இருக்கிறது என்று சொல்வார்கள். 
 
யார் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கிறானோ, எதை ஆதரவு வைக்கிறானோ, அதை அவன் அதற்குரிய காரணங்களை முதலில் செய்ய வேண்டும். பின்பு அல்லாஹ்விடம் ஆதரவு வைக்க வேண்டும். 
 
ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு ஆதரவு வைக்கின்றானா? சொர்க்கத்திற்குரிய அமல்களை செய்ய வேண்டும். பின்பு அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை ஆதரவு வைக்க வேண்டும். ஒரு மனிதன் அல்லாஹ் தன்னை மன்னிக்க வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றானா? முதலில் அவன் பாவத்தை விட வேண்டும். பிறகு அல்லாஹ்விடத்தில் தவ்பா கேட்க வேண்டும். செய்த பாவத்திற்காக வருந்த வேண்டும். அல்லாஹ் என்னை மன்னிப்பான் என்று ஆதரவு வைக்க வேண்டும். இதுதான் ஆதரவு. 
 
பாவம் செய்து கொண்டே இருக்கின்றான். அல்லாஹ்வை முகம் திருப்பியவனாக அலட்சியம் செய்து கொண்டே இருக்கின்றான். யாராவது அவனுக்கு உபதேசம் செய்தால் அல்லாஹ் என்னை மன்னிக்கப் போதுமானவன் என்று பேசினால் அவன் பெருமை பேசுகிறான். வீண் ஆதரவை போலியாக சொல்கிறான். அது உண்மையான ஆதரவு அல்ல. 
 
ரப்புல் ஆலமீன் சொல்வதைப் பாருங்கள்;
 
فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
 
ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!" (அல்குர்ஆன் 18 : 110)
 
உங்களில் யாரும் தனது ரப்பை சந்திக்க வேண்டும். அப்போது அவன் தன்னை மன்னித்து சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ஆதரவு வைக்கிறார்களா? அல்லாஹ் கேட்கின்றான். அப்படி ஆதரவு வைப்பவர்கள் நல்ல அமல்களை செய்யட்டும். அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் இருக்கட்டும். எவ்வளவு அழகான அறிவுரை பாருங்கள்? 
 
ஒரு மனிதன் ஐந்து நேர தொழுகைகளை  தொழுவதில்லை; அல்லாஹ்வுடைய செல்வத்தில் கடமையாக்கிய ஜகாத்தை நிறைவேற்றுவதில்லை; ஹஜ்ஜை நிறைவேற்றுவதில்லை; இப்படி ஃபர்ளுகளை ஒரு பக்கம் பாழாக்கி கொண்டிருக்கின்றான். 
 
இன்னொரு பக்கம், பொருளாதாரத்தில் அல்லாஹ் கடமையாக்கிய ஹலால் ஹராமை பேணாமல், எங்கிருந்து வருமானம் வந்தாலும் எனக்கு தேவை என்பதாக ஹராமிலே உழன்று கொண்டு இருக்கின்றான் என்றால், இப்போது அவன், அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறான், அல்லாஹ் பெரியவன், அல்லாஹ் பெரிய கரீம், அவன் எனக்குப் போதுமானவன் என்று சொன்னால், அவன் ஈமானோடு அதை சொல்ல வில்லை. அவன் அல்லாஹ் மீது திமிர் கொண்டு சொல்கிறான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
காஃபிர்களின் ஒரு குணத்தை ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனிலே நமக்கு அழகாக எடுத்துச் சொல்கிறான். சூரா கஹ்ஃபிலே, சூரா முத்தஸ்ஸிரிலே அல்லாஹ் சொல்கிறான். அதாவது அவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டால், அவர்கள் நாங்கள் செய்தது தவறு, பாவம் என்றால் எங்களுக்கு இவ்வளவு செல்வங்களை, இவ்வளவு குழந்தைகளை, குடும்பங்களை, இவ்வளவு பெரிய வசதிகளை இறைவன் கொடுத்திருக்க மாட்டான் அல்லவா? அப்படியே மறுமை என்று இருந்திருந்தாலும்,
 
وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنْقَلَبًا
 
ஒருகால் (மறுமை நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்'' என்றும் கூறினான். (அல்குர்ஆன் 18 : 36)
 
இங்கே எனக்கு கொடுத்தவன் அங்கேயும் எனக்கு கொடுப்பான். இது காஃபிர்களுடைய நம்பிக்கை என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
முஃமின்கள் யார்? அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர் யார்? நல்ல அமல்கள் செய்து கொண்டு பாவத்தை விட்டு விலகி, அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை, மன்னிப்பை, சொர்க்கத்தை, அல்லாஹ் உடைய நற்கிருபைகளை ஆதரவு வைப்பவர்கள் தான் முஃமின்கள். இதுதான் முஃமின்களுடைய தன்மை என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلَا يَجِدْ لَهُ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
 
(நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப் படியோ, வேதத்தையுடையோர் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கின்றானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவர்களையோ அல்லது துணை புரிபவர்களையோ (அங்கு) காணமாட்டான்.(அல்குர்ஆன் 4 : 123)
 
முஃமின் என்று சொல்லிக்கொண்டு, முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத் என்று சொல்லிக்கொண்டு, நீங்கள் எதை செய்தாலும் விட்டு விடுவோமா? இப்படித்தான் யூதர்கள் செய்தார்கள். யூதர்கள்  நாங்கள் நபிமார்களின் உம்மத், இப்ராஹீமுடைய வாரிசுகள், இஸ்ஹாக் உடைய வாரிசுகள், யாகூப் போன்ற பெரிய நபிமார்களுடைய வாரிசுகள், அவர்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிள்ளைகள். எனவே எங்களை அல்லாஹ் ஒன்றுமே செய்ய மாட்டான். அப்படியே அல்லாஹ் எங்களை தண்டித்தாலும் நாற்பது நாள் நரகத்திலே வைத்திருப்பான். அதன்பிறகு கண்டிப்பாக சொர்க்கத்திற்கு அனுப்பியே ஆகவேண்டும்.
 
ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَاتٍ وَغَرَّهُمْ فِي دِينِهِمْ مَا كَانُوا يَفْتَرُونَ
 
இதன் காரணம்: "சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது" என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான். அன்றி, தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது. (அல்குர்ஆன் 3 : 24)
 
எங்களுடைய முன்னோர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள் அல்லவா? அந்த அளவுக்கு தான் எங்களை நரகத்தில் வைத்திருப்பான். அதன் பிறகு எங்களுக்கு சொர்க்கம் தான். என்ன பாவம் செய்தாலும் அல்லாஹ் எங்களை கேட்க மாட்டான் என்று அவர்கள் கூறினார்கள். 
 
وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَيْسَ عَلَيْنَا فِي الْأُمِّيِّينَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ
 
(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (யாதொரு குறைவுமின்றி) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரையில் அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) "பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை" என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன்  3 : 75)
 
எந்த மக்களுக்கு என்ன அநியாயம் செய்தாலும் அல்லாஹ்  எங்களை குற்றம் பிடிக்க மாட்டான். 
 
நம்மிலும்கூட  சில கூட்டம் இருக்கின்றார்கள். சில சடங்குகள் செய்து விட்டால் போதும். மீலாது கொண்டாடினால், மௌலிது கொண்டாடினால், இன்னும் சில சடங்குகள் செய்தால் போதும். மார்க்கத்தை திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதாக. 
 
வருடாந்திர சடங்குகளை செய்து விட்டு அபிலாசைகளில் ஆசைகளில் உட்கார்ந்து இருக்கின்றார்களே இவர்கள் யூதர்களைப் போல. அல்லாஹு தஆலா நமக்கு தெளிவாக வலியுறுத்தி சொல்கிறான். 
 
உங்களுடைய கற்பனையின் படியும் நடக்காது. யூதர்கள், கிறிஸ்தவர்கள் கற்பனையின் படியும் நடக்காது. யார் யாருக்கு வாரிசாக இருந்தாலும், யார் யாருடைய சந்ததிகளாக இருந்தாலும், யார் எந்த மார்க்கத்தோடு தன்னை சம்பந்தப்படுத்தி கொண்டாலும், அதனால் அல்லாஹ்  முடிவு செய்ய மாட்டான். அல்லாஹ் உடைய  முடிவு என்ன?
 
مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ
 
ஆயினும், எவன் பாவம் செய்கின்றானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். (அல்குர்ஆன்  4 : 123) 
 
யார் தப்பு செய்தாலும் சரி, தப்புக்குரிய தண்டனை உண்டு. அல்லாஹ் அக்பர். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போருக்கு சென்ற போது, அவர்களுடைய அடிமை ஒருவர் போரில் கொல்லப்பட்டு விடுகிறார். அப்போது தோழர்கள் எல்லாம் போரிலே கொல்லப்பட்டவர் ஷஹீத்  ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அடிமை. இவர்களுக்கு சொர்க்கத்தில் நற்செய்தி உண்டாகட்டுமாக. 
 
அவ்வளவு பெரிய பாக்கியம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அடிமையாக இருந்து பணிவிடை செய்தவர் போரிலே கொல்லப்பட்டு விட்டார். அவருக்கு சொர்க்கத்தின் வாழ்த்து என்று சொன்னபோது, அல்லாஹ்வுடைய தூதர் இல்லை என்று மறுத்தார்கள். சஹாபாக்கள் திகைத்து கேட்கின்றார்கள். 
 
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்; போரிலே கனீமத்துகள் பங்கு வைப்பதற்கு முன்பாக அவர் ஒரு போர்வையை எனக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டார். அது அவர் மீது நெருப்பாக எரிந்து கொண்டிருக்கின்றது. தோழர்கள் ஓடோடிச் சென்று அவர்களுடைய சாமான்களை பிரித்துப் பார்க்கிறார்கள்; அதில் ஒரு போர்வை இருந்தது. அதனுடைய மதிப்பு  அதிகப்படியான மூன்று தீனார்கள் தான். (1)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புஹாரி எண்: 4234, 6707, 3074, முஸ்லீம் எண்: 114, இப்னு மாஜா எண்: 2849
 
சகோதரர்களே! இன்று நம்மில் பலருடைய நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும். ஹராம் எப்படி கலக்கின்றது? வியாபாரத்தில் ஏமாற்றத்தினால் கலக்கிறது. மோசடிகளால் கலக்கின்றது. வாக்கு மீறுவதால், கொடுக்க வேண்டியவருக்கு கொடுக்காததால், இப்படி எத்தனையோ ஹராமான பட்டியல்களை போடலாம். நம்முடைய அமல்கள் எல்லாம் பாழாகிவிடுமே! இந்த ஹராமினால் என்று நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்; இந்த பொய்யான ஆதரவை பற்றியும் உண்மையான ஆதரவை பற்றியும் நமக்கு உணர்த்தும் விதமாக,
 
الكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ المَوْتِ، وَالعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ
 
திர்மிதீ எண்: 2459 (2)
 
புத்திசாலி யார் என்றால் தன்னுடைய நஃப்ஸை கட்டுப்படுத்தி மரணத்திற்கு பிறகுள்ள வாழ்க்கைக்கு அமல் செய்பவர்.
 
இரண்டு விஷயங்கள் இருக்கின்றது. ஒன்று நஃப்ஸுக்கு நாம் கட்டுப்படுவது. அது சொல்லும் தூங்கலாம் இன்னும் நேரமிருக்கிறது. பிறகு சொல்லும் இங்கே போ! அங்கே வா! என்று. இந்த நஃப்ஸு நம்மை அழைத்துக் கொண்டே இருக்கும்  இது ஒன்று. 
 
இன்னொன்று, மார்க்கத்திற்கு கட்டுப்படும் படியாக நம்முடைய நஃப்ஸை செய்வது.  ஒன்று  நஃப்ஸுடைய  பேச்சை நாம் கேட்பது. இன்னொன்று நம்முடைய பேச்சை நஃப்ஸ் கேட்கும் படி நாம் மாற்றுவது. 
 
இந்த நஃப்ஸ் என்ன செய்யும்? அதையும் அல்லாஹ் தெளிவாக சொல்கிறான். யூசுஃப் அலைஹி வசல்லம் அவர்கள் எப்பேர்பட்ட நபி.  நபியுடைய மகன். அவர்கள் சொல்கின்றார்கள்;
 
وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ
 
அன்றி, "நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்" என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" (என்றார்.) (அல்குர்ஆன் 12 : 53)
 
என்னை நானே உயர்வானவன், சுத்தமானவன் என்று உயர்த்திப் பேச மாட்டேன். இந்த நஃப்ஸ் இருக்கே தீமையை தான் ஏவிக் கொண்டே இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு பயந்தார்கள்! இந்த நஃப்ஸை பற்றி எவ்வளவு உணர்த்தினார்கள்! இங்கே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டாவது வகையை பற்றி சொல்கிறார்கள்.
 
மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கைக்காக அமல் செய்து கொண்டவர். இதுதான் நல்ல ஆதரவு. 
 
ஒரு மனிதன் சொர்க்கத்தை ஆதரவு வைக்கின்றான் என்றால் அது ஆதரவுகளிலே சிறந்த ஆதரவு. இங்கும்  இரண்டு வகையான ஆதரவு இருக்கின்றது. ஒன்று அழிந்து போகக்கூடிய ஆதரவு. 
 
مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ
 
உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உண்டு. மறுமையை விரும்புபவர்களும் உண்டு. (அல்குர்ஆன்  3 : 152)
 
ஒரு மனிதர் அழிந்து போகக்கூடிய துன்யாவை –உலகத்தை ஆதரவு வைப்பது. ஒரு மனிதர் தொழுவார். நோன்பு வைப்பார். ஜகாத் கொடுப்பார். ஹஜ் செய்வார். துஆவில் பார்த்தீர்களென்றால் துன்யாவை கேட்டு விட்டு அதோடு முடித்துக் கொள்வார். முழுக்க உலகத்தையே கேட்டு விட்டு முடித்துவிடுவார்.
 
فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
 
(பிரார்த்தனையில்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக!" என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ஆனால், இத்தகையவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. (அல்குர்ஆன் 2 : 200)
 
وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
 
அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. (அல்குர்ஆன்  2 : 201)
 
அல்லாஹ் சொல்கின்றான் உங்களில் ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்கள் உலகை விரும்பக் கூடியவர்கள். உங்களில் இன்னொரு கூட்டம் அவர்கள் மறுமையை விரும்பக் கூடியவர்கள். 
 
உங்களில் ஒரு கூட்டம் எப்ப துஆ கேட்டாலும், அல்லாஹ்! துன்யாவில் எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று நிறுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் சொல்கிறான். மறுமையில் அவர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது. இன்னொரு கூட்டம் இருக்கின்றார்கள். அவர்கள், யா அல்லாஹ்! துன்யாவிலும் நன்மையை கொடு. ஆகிரத்திலும் எங்களுக்கு நன்மையை கொடு! நரக வேதனையிலிருந்து எங்களை பாதுகாத்துக் கொள்! அல்லாஹ் சொல்கிறான்; இவர்களுக்கு இவர்கள் செய்ததின் பங்கு கூலி கண்டிப்பாக கிடைக்கும்.
 
مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَدْحُورًا
 
எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள். (அல்குர்ஆன்  17 : 18)
 
وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا
 
எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படும். (அல்குர்ஆன்  17 : 19)
 
உங்களில் பலர் உலகத்தை நாடி அதற்காக முயற்சி செய்கின்றார்கள். அல்லாஹ் சொல்கிறான். அவன் நாடட்டும். அவன் முயற்சி செய்யட்டும். ஆனால் நாம் நாடியதைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு கொடுக்க மாட்டோம். அல்லாஹ் அக்பர். ஆனால் மறுமையை பொறுத்தவரைக்கும் அல்லாஹ்  என்ன சொல்கிறான்?
 
 
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
 
(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய பொருளைச் செலவு செய்கின்றவர்களுடைய (பொருளின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து உற்பத்தியாயின.) அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை பின்னும்) இரட்டிப்பாக்குகின்றான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனுமாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2 : 261)
 
யார் மறுமையை விரும்பி அதற்கான அமலை இக்லாஸோடு செய்வாரோ, அவர்களுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் மிகப்பெரிய கூலி வழங்கப்படும். ஒன்று பத்து, பத்து நூறு, நூறு 700 ஆக வழங்கப்படும். அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை தான் நமக்கு சொன்னார்கள். (திர்மிதீ: 2459)
 
ஆதரவு எதை வைப்பது? முதலாவதாக மறுமையின் ஆதரவு இருக்க வேண்டும். கண்டிப்பாக உலகத்தின் தேவைக்காக அல்லாஹ்வை தான் ஆதரவு வைத்தாக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் விரும்பக்கூடிய, ஆதரவு வைக்கக் கூடிய, மிகப் பெரிய தேவை என்ன? மறுமையுடைய தேவை. 
 
அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தை கொடுக்க வேண்டும்! நம் பாவங்களை மன்னிக்க வேண்டும்! யா அல்லாஹ்! உலகத்தில் எங்களுடைய பாவங்களை மறைத்தது போன்று மறுமையில் எங்கள் பாவங்களை மன்னித்து விடு. நம்முடைய அமல்களை அல்லாஹ் சுண்டி பார்த்தால் என்ன மிஞ்சும் ?
 
உதாரணத்திற்கு இரண்டு ரக்அத் தொழுகையை கொண்டு வா! என்று கூறுகிறான். அந்த இரண்டு ரக்அத் தொழுகையில  நீ என்னை தவிர யாரையும் நினைக்காமல் தொழுத தொழுகையைக் கொண்டு வா. நான் உனக்கு சொர்கத்தை தருகிறேன் என்று சொல்கிறான். எங்கே போவது? 
 
ஒரு நோன்பை கொண்டுவா! உன்னுடைய கண் தவறு செய்திடாத, உன் காது தவறு செய்திடாத, அமல்களால் நிரப்பப்பட்ட ஒரு நோன்பை கொண்டு வா! நான் உனக்கு சுவர்க்கம் தருகிறேன் என்று சொல்கிறான். என்னுடைய முகத்தை மட்டும் நாடி நீ செய்த தர்மத்தை கொண்டு வா நான் சொர்க்கம் தருகிறேன் என்று சொன்னால், சொல்லுங்கள் பார்க்கலாம்! தலைகுனிவை தவிர வேறு எதாவது  நமக்கு வழி இருக்குமா? ஆனாலும் அல்லாஹ் பெருந்தன்மைக்காரன். நம்முடைய அமல்களின் குறைகள் எல்லாம் அவன் மறைக்க தயாராக இருக்கின்றான்.
 
பாவங்களை மன்னிக்க தயாராக இருக்கும் போது நம்முடைய அமல்களின் குறையை மன்னிக்க தயாராக இருக்க மாட்டானா? மன்னிப்பான். எப்போது மன்னிப்பான்? அடியானிடத்தில் பணிவு இருக்க வேண்டும். பயம் இருக்க வேண்டும். நல்லாதரவு  இருக்க வேண்டும். மறுமையை நினைத்தவனாக இருக்க வேண்டும். 
 
உலக மோகம் கொண்டவனாக, உலகத்தையே தேடக்கூடியவனாக இருந்தால் அல்லாஹ் அவன் பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டான். அடுத்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; (திர்மிதீ: 2459).
 
وَالعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ
 
العَاجِزُ -வீணா போனவர்கள் எதற்குமே வேலைக்கு ஆகாதவர், பலவீனமானவன், எதற்கும் லாயக்கற்றவன், யார் தெரியுமா? தன்னுடைய நஃப்ஸுடைய விருப்பங்களுக்கு பின்னால்  செல்பவன். இப்படி செய்து கொண்டு அவன் அல்லாஹ்வின் மீது ஆசை வைக்கிறான். எனக்கு அல்லாஹ் இருக்கிறான், அல்லாஹ் எனக்கு போதுமானவன் என்று கற்பனை செய்கிறான். என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். திர்மிதீ: 2459
 
அவன் அல்லாஹ்வின் மீது கற்பனை செய்து கொண்டிருக்கிறான். கற்பனை என்றால் எதற்கு சொல்லப்படும்? நடக்க முடியாத ஒன்றை ஆதரவு வைப்பது கற்பனை என்பதாக சொல்லப்படும். 
 
அல்லாஹ்வை  ஆதரவு வைப்பது என்பது  கல்புடைய வணக்க வழிபாடுகளில் பெரிய வணக்கமாகும். மூன்று கல்புடைய இபாதத்துகளை அல்லாஹ் தஆலா சூரா இஸ்ராவின் 57- ஆவது வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான். நல்லோர்களுடைய குணங்களை அல்லாஹ் சொல்லும் போது,
 
أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا
 
இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கின்றார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்க மானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர் பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கின்றார்கள். ஏனென்றால், நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக் கூடியதே! (அல்குர்ஆன் 17 : 57)
 
 
ஒன்று நாம் முன்பு கூறிய அர்ரஜா -ஆதரவு வைப்பது, அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை, மன்னிப்பை, தயாளத்தை, உதவியை. 
 
 
இரண்டாவது, அல்லாஹ்வுடைய அன்பு, அல்லாஹ்வையும், அவனது ரஸூலையும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது, சொர்க்கத்தை நேசிப்பது, மறுமையை நேசிப்பது. 
 
 
மூன்றாவது, பயம். அல்லாஹ் என்னை தண்டித்து விடுவானோ, என்னுடைய பாவத்தால் அல்லாஹ் என் மீது கோபம் கொண்டு விடுவானோ, என்னுடைய நன்மைகள் பயன் இல்லாமல் போய்விடுமோ என்று பயப்படுவது. மேலும் அல்லாஹ் தண்டனை கொடுப்பவன் என்ற ஸிஃபத்தை நினைத்து அல்லாஹ்வை அஞ்சுவது. இந்த மூன்றும் ஒவ்வொரு முஃமின்களின் உள்ளத்திலும் இருக்க வேண்டும்.
 
 
அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்; நல்லவர்களைப் பற்றி சொல்லும்போது, அந்த நல்லவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? அல்லாஹ்வை வணங்கிக் கொண்டே இருப்பார்கள். எப்படி அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடிய அமல்களை செய்து கொண்டே இருப்பார்கள்.
 
இன்று நாம் உலக செல்வங்களில் போட்டி போடுகிறோம்; ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் என்று. நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, நல்லவர்கள் அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்வுக்கு நான் மிக நெருக்கமானவனாக, அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவனாக இருக்க வேண்டும் என்று அமலை செய்வார்கள். 
 
 
இந்த ஒரு தேடல் வந்துவிட்டால் போதும் நமக்கு தொழுகை சிரமமாக இருக்காது. இரவு தொழுகை சிரமமாக இருக்காது. அல்லாஹ்வுடைய கட்டளைகளை செய்ய எதுவும் சிரமமாக இருக்காது. எவ்வளவு நஃப்ஸுக்கு பழக்கமான பாவமாக இருந்தாலும் சரி அதை விடுவதற்கு சிரமமாக இருக்காது. என்ன காரணம்? அல்லாஹ்வின் அன்பு கிடைக்க வேண்டும். எல்லோரையும்விட அல்லாஹ்விற்கு நான் நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அடியானும் இப்படி முயற்சி செய்தால்,
 
 
சகோதரர்களே! நபிமார்கள் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களைத் தான் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் ஒரு தரஜாவை வைத்திருந்தான். ஆனால் நபிமார்கள் ஒவ்வொருவரும் எப்படி அமல் செய்தார்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். நபிமார்களுக்கு ஆதம் (அலை), நூஹ் (அலை) ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் ஒவ்வொரு தரஜா வைத்திருந்தான். 
 
 
ஆனால் அதில் கடைசி தரஜாவில் உள்ள  ஒரு நபி கூட அமல்கள் செய்யும் போது எப்படி செய்தார்கள் என்று சொன்னால், எல்லா நபிமார்களை விட, ரசூல்மார்களை விட அல்லாஹ்விற்கு நான் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அமல் செய்தார்கள். கற்பனை அல்ல அமல். தன்னுடைய அமலை கொண்டு அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை தேடினார்கள். அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்தார்கள். அல்லாஹ்வுடைய தண்டனையை பயந்தார்கள்.
 
قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
 
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்."(அல்குர்ஆன்  6 : 15, 39 : 13)
 
நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள் சொன்ன வார்த்தை, என் ரப்புக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் தண்டனையை நான் பயப்படுகிறேன். அல்லாஹ்வுடைய தூதர் ரஸுல் (ஸல்) அவர்கள் இதே வார்த்தையை சொன்னார்கள். நான் என் ரப்புக்கு மாறு செய்தால் மகத்தான நாளின் தண்டனையை நான் பயப்படுகிறேன் என்று.
 
சகோதரர்களே! நமக்கு  அல்லாஹ் அந்த நல்ல அருளை தந்தருள்வானாக! ஆமீன். இந்த ஆதரவு நமக்கு இருக்க வேண்டும். ஒரு நல்ல அமல்கள் செய்தால் அந்த அமல்களின் ஆதரவு இருக்க வேண்டும். அடியான் ஏதாவது பாவம் செய்துவிட்டால் உடனே அந்தப் பாவத்திலிருந்து திருந்தி அல்லாஹ் என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாக என்று அல்லாஹ்வின் மன்னிப்பின் மீது ஆதரவு வைக்க வேண்டும். 
 
பிறகு நமக்கு இந்த துன்யாவில் ஏதாவது நோய் நொடிகள், கஷ்டங்கள், சிரமங்கள், வியாபார நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் என்று எது வந்தாலும் சரி, அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டு விட்டு, யா அல்லாஹ்! உன்னுடைய உதவியை நான் எதிர்பார்க்கிறேன். உன்னுடைய அருளை ரஹ்மத்தை நான் எதிர்பார்க்கிறேன் என்று நிராசையாகி விடாமல், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை, அல்லாஹ்வுடைய ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
 
யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மகனார் யூசுஃப் அலைஹி வசல்லம் அவர்களை எதிர்பார்த்து ஆதரவு வைத்திருந்தார்கள். பிள்ளைகளிடத்தில் தேடச் சொல்கிறார்கள். பிள்ளைகள் சொல்கிறார்கள்; தந்தையே! எத்தனை காலமாயிற்று இதன் பிறகும் அவர்கள் வருவார்கள் என்று நினைக்கிறீர்களா? யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் அழகாக சொன்னார்கள்; 
 
 
إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
 
நிராகரிப்பவர்களை தவிர அல்லாஹ்வின் கருணையில் யாரும் நிராசையாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 12 : 87)
 
நான் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் மீது ஆதரவு வைக்கின்றேன் என்று சொன்னார்கள். உலகத்தில் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் சரி அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து, உதவியை ஆதரவு வைத்து, அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோமாக! அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து கஷ்டங்களை தீர்க்க போதுமானவன். ஆமீன்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، قَالَ: حَدَّثَنِي ثَوْرٌ، قَالَ: حَدَّثَنِي سَالِمٌ، مَوْلَى ابْنِ مُطِيعٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: افْتَتَحْنَا خَيْبَرَ، وَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلاَ فِضَّةً، إِنَّمَا غَنِمْنَا البَقَرَ وَالإِبِلَ وَالمَتَاعَ وَالحَوَائِطَ، ثُمَّ انْصَرَفْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى وَادِي القُرَى، وَمَعَهُ عَبْدٌ لَهُ يُقَالُ لَهُ مِدْعَمٌ، أَهْدَاهُ لَهُ أَحَدُ بَنِي الضِّبَابِ، فَبَيْنَمَا هُوَ يَحُطُّ رَحْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ سَهْمٌ عَائِرٌ، حَتَّى أَصَابَ ذَلِكَ العَبْدَ، فَقَالَ النَّاسُ: هَنِيئًا لَهُ الشَّهَادَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّ الشَّمْلَةَ الَّتِي أَصَابَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ المَغَانِمِ، لَمْ تُصِبْهَا المَقَاسِمُ، لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا» فَجَاءَ رَجُلٌ حِينَ سَمِعَ ذَلِكَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِرَاكٍ أَوْ بِشِرَاكَيْنِ، فَقَالَ: هَذَا شَيْءٌ كُنْتُ أَصَبْتُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شِرَاكٌ - أَوْ شِرَاكَانِ - مِنْ نَارٍ» (صحيح البخاري 4234 -)
 
குறிப்பு 2).
 
حكم الألباني : ضعيف ,حكم المنذري -إسناده صحيح أو حسن أو ما قاربهما
 
இமாம் அல்பானி (ரஹ்) இந்த ஹதீஸை லயீஃப் –பலகீனமானது என்று குறிப்பிடுகிறார்கள் 
 
இமாம் முன்திரி (ரஹ்) இது ஹசன் -நல்ல தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று கூறுகிறார்கள். 
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/