உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை - அமர்வு 3-3 | Tamil Bayan - 491
உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை (அமர்வு 3-3)
வரிசை : 491
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 09-02-2018 | 23-05-1439
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து வாழுமாறு, அல்லாஹ்வுடைய பயத்தை உங்களுக்கும் எனக்கும் இந்த ஜும்ஆ உடைய குத்பாவில் நினைவூட்டுகிறேன்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனை பயந்து வாழக்கூடிய, அவனுடைய மார்க்கத்தை பின்பற்றக்கூடிய, அவனுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியில் செல்லக்கூடிய அந்த நன்மக்களில் நம்மை ஆக்கியருள்வானாக! ஆமீன்.
அல்லாஹு தஆலா இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டாவது வணக்கமாக தொழுகையை ஆக்கி இருக்கின்றான். அந்த தொழுகையை எப்படி சரியாக நிறைவேற்றுவது? அல்லாஹ் விரும்பக் கூடிய விதத்தில் என்னுடைய தொழுகையை எப்படி அமைப்பது? இதைப் பற்றித்தான் நாம் கடந்த சில வாரங்களாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.
எப்படி தொழுகைக்காக வெளியில் ஃபர்ளுகள், தூண்கள் இருக்கின்றனவா, அதுபோன்று, தொழுகையில் உள்ளச்சம் என்ற அந்த தக்வா இருக்கவேண்டும்.
மறுமை சிந்தனை, அல்லாஹ்வின் பயம் சொர்க்கத்தின் ஆசை, நரகத்தின் பயம், இப்படியாக உலக சூழ்நிலைகளில் இருந்து வெளியேறி, மறுமைக்கான விஷயங்களில் முழுமையாக ஈடுபட்டு விடுவது உள்ளச்சம் என்பதாக சொல்லப்படுகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உள்ளச்சம் தொழுகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அனேக ஹதீஸ்களை நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கக் கூடிய இந்த ஹதீஸை உபாதா இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ تَعَالَى مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلَّاهُنَّ لِوَقْتِهِنَّ وَأَتَمَّ رُكُوعَهُنَّ وَخُشُوعَهُنَّ كَانَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ، وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ، إِنْ شَاءَ غَفَرَ لَهُ وَإِنْ شَاءَ عَذَّبَهُ»
ஐந்து தொழுகைகளை அல்லாஹு தஆலா கட்டாயமாக்கி இருக்கிறான். யார் அந்த ஐந்து நேர தொழுகைக்கான உளுவை சரியாக செய்து, அந்த தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழுவாரோ, அல்லாஹு தஆலா அவரை மன்னிப்பதை கட்டாயமான ஒரு வாக்காக எடுத்துக் கொள்கிறான்.
அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 361,425.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் கையாண்டு சொல்லி இருக்கிறார்கள். தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது. அதனுடைய அதானை எதிர்பார்த்து, அதனுடைய இகாமத்தை எதிர்பார்த்து, ஜமாஅத்தை எதிர்பார்த்து அந்த நேரத்தை எதிர்பார்த்து பேணுதலுடன் தொழுவது.
பெரும்பாலான மக்கள் இந்த ருகூஃ செய்வதில்தான் ஷைத்தான் அவர்களோடு விளையாடுகிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வகையான மக்களைதான் இங்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.
சில பேர் எப்படி செய்கிறார்கள் என்றால், அந்த நிலைக்கு சென்றவுடன் தஸ்பீஹ்களை ஒத ஆரம்பித்து விடுகிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். ருகூவிற்கு சென்றுவிட்டால் முதலில் அமைதி ஆவார்கள். அந்த அமைதி ஏற்பட்ட பிறகுதான் நபியவர்கள் திக்ருகளை ஓத ஆரம்பிப்பார்கள்.
நமது மக்கள் அல்லாஹு அக்பர் என்று சொல்லி ஒரு ருகூஃ சென்ற உடனே தஸ்பீஹ்களை ஓத ஆரம்பித்து விடுவார்கள். ருகூவிற்க்கு சென்று அமைதி அடைய வேண்டும். அதன் பிறகு தஸ்பீஹ் ஓத வேண்டும். குறைந்தது மூன்று முறை அந்த திக்ருகளை திருத்தமாக சொல்லுவது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; யார் அந்த ருகூகளை நிறைவாக செய்வாரோ, மேலும் அந்தத் தொழுகையை உள்ளச்சத்துடன் நிறைவேற்றுவாரோ அல்லாஹு தஆலா அவரை மன்னிப்பதை கட்டாயமான ஒரு வாக்காக எடுத்துக் கொள்கிறான்.
எவ்வளவு பெரிய வாக்கை அல்லாஹ் தருகிறான் பாருங்கள், நம்முடைய அலட்சியத்தால் சிறிய கவனக்குறைவால் ஒரு பெரும் பாக்கியத்தை அல்லாஹ்வின் நற்பாக்கியத்தை இழந்து விடுகிறோம் என்றால், எவ்வளவு பெரிய கைசேதம் என்று யோசித்துப் பாருங்கள். நம்முடைய சின்ன கவனக்குறைவு அவனுக்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி விடுகிறது பாருங்கள்.
அடுத்து சொன்னார்கள்; யார் இப்படி செய்யவில்லையோ, இவருக்கும் அல்லாஹ்விற்கும் இடையே எந்த வாக்கும் கிடையாது. அல்லாஹ் நாடினால் அவரை மன்னிப்பான். நாடினால் அவரை தண்டிப்பான்.
அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 361,425.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ஹதீஸை நான் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால், இந்த உள்ளச்சம் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பது நமக்கு புரியவரும்.
தொழுகையின் நோக்கம் என்ன? அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை பெறுவது. அல்லாஹ் எனது முந்திய பாவங்களை மன்னிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருளுக்கு உரியவனாக நான் ஆக வேண்டும்.
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அல்லாஹ்விடத்தில் அந்த நல்லவர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கக்கூடிய அந்த வீட்டை பெறுவது எப்படி என்றால் தொழுகையில் உள்ளச்சம் இருந்தால்தான் அந்த வீட்டை பெறமுடியும். அந்த வெளிச்சம் இல்லை என்றால் எந்த நோக்கத்திற்காக அந்த மனிதன் அந்த தொழுகையை நிறைவேற்றுகிறானோ அந்த நோக்கத்தை அவனால் அடைய முடியாது.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இன்னொரு ஹதீஸை பார்க்கிறோம்.
உக்பா இப்னு ஆமீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க கூடிய ஹதீஸை இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்.
நபியவர்கள் போருக்கு செல்லும் பொழுது தோழர்களை பல குழுக்களாக பிரித்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்பு கொடுத்திருப்பார்கள். உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒட்டகங்களை பாதுகாப்பது, மேய்ப்பது இந்த பொறுப்பு.
அவர்கள் சொன்னார்கள், நான் ஒட்டகங்களை மேய்த்து விட்டு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மாலையில் சந்திக்க வரும்பொழுது நபியவர்கள் நின்றவர்களாக மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் இறுதியாக வந்து சேர்ந்த பொழுது நபி அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை நான் நன்கு நினைவு படுத்திக் கொண்டேன்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»
ஒரு முஸ்லிம் உளு செய்கிறான். அந்த உளுவை மிக அழகாக செய்கிறான். பிறகு இரண்டு ரக்அத் தொழுகிறான். (அது ஃபர்ளான தொழுகையோ அல்லது சுன்னத்தான தொழுகையோ) அந்தத் தொழுகையில் எப்படி இருக்கின்றான் என்றால் அவனுடைய உள்ளத்தாலும் முகத்தாலும் அந்த இரண்டு ரக்அத் தொழுகையை முன்நோக்கி இருக்கின்றான். இப்படி ஒரு மனிதன் தொழுது விட்டால் கண்டிப்பாக அவனுக்கு சொர்க்கம் கட்டாயமாகி விடும். (1)
அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 234.
இன்னொரு ஹதீஸைப் பாருங்கள், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கூடிய இந்த ஹதீசை உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவருடைய அடிமை ஹும்ரான் அறிவிக்கிறார்கள்:
அந்த ஹதீஸில் வருகிறது, அல்லாஹ்வுடைய தூதர் எப்படி உளு செய்தார்களோ அதுபோல அந்த அழகிய முறையை உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்கள் அழகாக கற்றுக் கொடுத்துவிட்டு இப்படி சொன்னார்கள்.
«مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
யார் நான் செய்ததை போல இந்த அழகிய முறையில் உளூச் செய்து இரண்டு ரக்அத்துகளை தொழுவாரோ, அந்த தொழுகையில் தனது உள்ளத்தில் அவர் எந்தவிதமான பேச்சுகளையும் பேசவில்லையோ, தொழுகையில் வீணான எண்ணங்களை அவர் கொண்டு வரவில்லையோ அவருடைய முந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்.
அறிவிப்பாளர் : ஹம்ரான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 164.
இந்த மூன்று ஹதீஸ்களையும் பாருங்கள். இந்த மூன்று ஹதீஸ்களில் முதலாவது ஹதீஸ், தொழுகையில் இறையச்சம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அல்லாஹ்வின் மன்னிப்பை நமக்கு தருவதாக வாக்களிக்கிறான். யாருக்கு தொழுகையில் இறையச்சம் இல்லையோ அவர்களுக்கு அல்லாஹ்வுடைய மன்னிப்புக்கான வாக்குறுதி கிடையாது.
ஒருவனுடைய உடல் அமைதியாக இருக்கிறது. ஆனால், உள்ளம் எங்கெங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கின்றது என்றால் அது நயவஞ்சகனின் இறையச்சம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
உக்பா இப்னு ஆமிர் அறிவிக்கக் கூடிய இந்த ஹதீஸில் தனது உள்ளத்தால் தான் தொழக்கூடிய தொழுகையில் அப்படியே ஈடுபட்டு விடுகிறார்.
ஒரு மனிதன் எந்த ஒரு செயலில் தனது உள்ளத்தோடு ஈடுபடுவானோ அதுதான் அவனை மெய்மறக்கச் செய்யும். ஒருவன் உடலால் ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். ஆனால், அவனுடைய உள்ளமோ வேறு எங்கேயோ ஈடுபட்டுக் கொண்டிருக்கும். அது அவனுக்கு சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் சுமையை ஏற்படுத்தும். அவனுக்கு வசதியை ஏற்படுத்தும். நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
நம் வாழ்க்கையோடு இதை ஒப்பிட்டு பார்க்கலாம். எந்த விஷயத்தில் நாம் உள்ளத்தோடு இணைந்து விடுவோமோ நமக்கு அதில் நேரம் போவது தெரியாது. அதில் நமக்கு அசதி தெரியாது. காரணம், நம்முடைய உள்ளம் அதில் ஈடுபட்டு விடுகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களும் தொழுகையில் உள்ளத்தால் ஈடுபட்டுக்கொண்டிருந்த காரணத்தினால்தான் நீண்ட நீண்ட ரக்அத்துக்கள் தொழுவதற்கு இன்பமாக இருந்தது.
இன்று, நமக்கு சின்ன சின்ன ரக்அத்துகள் சிரமமாக இருக்கக்கூடிய இந்த காலத்தில் நபியவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களும் நீண்ட நீண்ட ரக்அத்துகள் தொழுவது இன்பமாக இருந்தது என்றால் அவர்களுடைய உள்ளம் அதில் ஈடுபட்டிருந்தது.
ஒருமுறை அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு பெருநாள் தொழுகைக்காக வந்து நிற்கிறார்கள். அவருடைய ஆட்சி காலத்தில் பெருநாள் தொழுகை வைக்கிறார்கள்.
அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ரக்அத்தில் முழு சூரா பகராவையும் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஓதுகிறார்கள். தோழர்கள் எல்லாம் பின்னாடி நின்று தொழுகிறார்கள் என்றால் அந்த தொழுகையில் அப்படிப்பட்ட ஒரு இன்பத்தை அவர்கள் உணர்ந்தார்கள்.
அல்லாஹ்விற்கு முன்னால் நின்ற உடன் தன்னையும் தன்னை சுற்றியுள்ள அந்த உலக சூழ்நிலைகளையும் மறந்து விட்டார்கள். அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும். நமக்கு தொழுகையில் வந்துவிட்டால் தான் எல்லாமே நினைவுக்கு வருகிறது.
தொழுகைக்கு வந்து விட்டால்தான் மறந்த வழிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது. இல்லாத வழிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது. அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்.
அடுத்தது மூன்றாவது ஹதீஸ் நமக்கு ஒரு விளக்கமாக அறிவிக்கின்றது. வீணான எண்ணங்களை கற்பனைகளை நாம் தொழுகையில் கொண்டு வரக்கூடாது.
இன்று, இதுதான் பெரிய பிரச்சனையே. சில நேரங்களில் நம்மை அறியாமலே ஏதாவது ஒரு சிந்தனை வரும். உடனடியாக நான் தொழுகையில் இருக்கின்றேன் என்று அந்த எண்ணத்தை வளர்க்காமல், அந்த எண்ணத்துடன் தானும் சென்றுவிடாமல், அந்த எண்ணத்தை தன்னை விட்டு விலகிவிட வேண்டும். இதுதான் தொழுகையாளி செய்ய வேண்டிய கடமை.
சிலர், அந்த தொழுகைக்கு வந்த உடனே தக்பீர் கட்டி விடுகிறார்கள். இப்பொழுது இமாம் ஓத ஆரம்பித்து விட்டார். அவர் ஓதுவது புரியவில்லை. இவர் சூரத்துல் பாத்திஹாவை ஓதுவதாக இருந்தால் அரை நிமிடத்தில் ஓதி முடித்து விடுவார்.
அடுத்தது என்ன? சும்மா நிக்கணும். இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தொழுகையின் நிலையில் கூட இமாம் ஓதுவதை நமக்கு புரியவில்லை என்றால் சும்மா இருப்பது தவறு என்று புரிந்து கொள்ளுங்கள்.
இமாம் ருகூவிற்குப் போகும்வரை உங்களுக்கு தெரிந்த சூராவை திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு வெறும் சூரத்துல் இக்லாஸ் மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது. இமாம் ருகூஉ செல்லும் வரை அதை ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்பொழுது அந்த நேரத்தில் வாயை மூடி சும்மா நின்று விட்டால் அந்த இடத்தில் நேரத்தை கடத்துவதற்கு எதையாவது ஒரு சிந்தனையை கொண்டு வந்து அப்படியே சிந்திக்க ஆரம்பிப்பான்.
இந்த ரயில் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விடும். அதுவரைக்கும் இவர் ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். இறங்குமிடம் வந்துவிட்டது என்று சொன்னவுடன் அவசரமாக எடுத்துக்கொண்டு இறங்குவதைப் போல இமாம் ஸலாம் குடுத்துட்டாரு. தொழுகையை முடிக்கணும், அப்படி என்று சொல்லும் அளவிற்கு தொழுகையாளியின் நிலை உள்ளது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
நபியவர்கள் சொன்னார்கள்; உள்ளத்தில் பேசக்கூடாது. அந்த எண்ணங்கள் வரும்பொழுது அதை நாம் துண்டித்து விட்டு, ஓதுவதில் அந்த தொழுகையில் நாம் கவனத்தை கொண்டு வர வேண்டும்.
இந்த உள்ளச்சம் நமக்கு வருவதற்காக அறிஞர்கள் நமக்கு நான்கு வழிகளை கற்றுத் தந்திருக்கிறார்கள்:
தொழுகைக்கு முன்கூட்டி தயாராகுவது. முன்பு சொன்னதைப்போல உளுவை சரியாக செய்வது. உளு உடைய சுன்னத்துகளை சரியாக பேணுவது. உளுவிற்கு பிறகு துஆ ஓதுவது. தொழுகைக்கு சுத்தமான நல்ல ஆடையை அணிந்து நறுமணம் பூசிக்கொண்டு தொழுகைக்கு வருவது. இப்படியாக அந்த தொழுகையை முன்கூட்டி எதிர்பார்த்து இருந்து தொழுவது.
அவசர அவசரமாக ஓடி வந்து தொழுவது தொழுகையில் கண்டிப்பாக உள்ளத்தை கொண்டு வர முடியாது.
ஒரு மனிதர் தன்னுடைய தொழுகையை உள்ளச்சம் உடைய தொழுகையாக ஆக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த தொழுகைக்காக முன்கூட்டி அவர் தயாராக வேண்டும்.
தொழுகைக்கான அந்த நேரம் வரும் பொழுது அதற்கு உளூ செய்து தயாராக இருப்பது. குறைந்தபட்சம் அதான் சொன்னவுடன் உளூ செய்வது. மஸ்ஜிதிற்கு முன்கூட்டி வருவது. சுன்னத் தொழுவது. தொழுகையின் நேரங்களை எதிர்பார்த்து இருப்பது. தொழுகையின் என்னென்ன திக்ருகள் இருக்கின்றனவோ, அவைகளை சரியாக ஓதுவது.
இப்படி அமைதியாக அவர் தொழுகையை எதிர் கொள்வார். இது அவருக்கு கண்டிப்பாக உள்ளச்சம் உடைய ஒரு அமைதியான தொழுகை கிடைக்கும்.
எனவேதான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
«إِذَا نُودِيَ بِالصَّلَاةِ فَأْتُوهَا وَأَنْتُمْ تَمْشُونَ، وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»
நீங்கள் தொழுகைக்காக வரும் பொழுது அமைதியாக வாருங்கள். நீங்கள் ஓடோடி கொண்டு வராதீர்கள். எந்த ரக்அத்துகள் கிடைத்தனவோ அதை தொழுங்கள். விடுபட்டதை இமாம் தொழுது முடித்தவுடன் எழுந்து தொழுங்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 602.
அமைதியாக வாருங்கள் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள். அதன் ரகசியங்களில் ஒன்று, தொழுகைக்கு இப்படி கடைசியாக வருவது, அவசர அவசரமாக வருவது, மனிதனுடைய மனதை பதட்டப்பட வைத்து, அவனுடைய எண்ணங்களில் குழப்பங்களை உண்டாக்கி அமைதி நிலையில் இருந்து அவனை வெளியேற்றிவிடும்.
ஒவ்வொரு நிலைகளிலும் அமைதியாக இருக்க வேண்டும். முதலில் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டி, அதற்குப் பிறகு சனாவை ஓத ஆரம்பிப்பது, அதற்குப் பிறகு சூரா பாத்திஹாவை ஓதுவது, அதைக்கூட எப்படி ஓத வேண்டும் என அல்லாஹ்வுடைய தூதர் வழிகாட்டி இருக்கிறார்கள், அது கூட இறையச்சத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை இமாம் அஹ்மது பதிவு செய்கிறார்கள்:
«إِنَّ أَسْوَأَ النَّاسِ سَرِقَةً، الَّذِي يَسْرِقُ صَلَاتَهُ» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَسْرِقُهَا؟ قَالَ: " لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا
திருடர்களில் மோசமான திருடன் யார், என்றால் தனது தொழுகையில் திருடுபவன். தோழர்கள் கேட்டார்கள், தனது தொழுகையில் ஒரு மனிதன் திருடுவானா? அப்படி என்ன திருட்டு? என்று. ருகூவையும் சுஜூதையும் சரிவர முழுமையாக நிறைவேற்றாதவர் தான் அந்த திருடன்.
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 11532.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: தனது ருகூவை முழுமையாக நிறைவேற்றாதவன், தனது சுஜூதை கொத்தி கொத்தி செய்பவன், ரொம்ப பசித்தவன் இரண்டு பேரீச்சம் பழமோ அல்லது ஒரு பேரீத்தம் பழமோ சாப்பிடுகிறான். இந்த ஓரிரண்டு பழங்கள் அவனுக்கு எந்த பசியைப் போக்கும். இதுதான் ருகூவை சரியாக செய்யாதவன் இன்னும் சுஜூதை சரிவர நிறைவேற்றாதவனின் உதாரணம்.
நூல் : முஃஜம் கபீர்-தப்ரானி : 7027.
தொழுகையில் நமக்கு உள்ளச்சம் ஏற்பட வேண்டுமென்றால், தக்பீர் சொல்லும் பொழுது அவசரப்படாமல் அமைதியாக தக்பீர் சொல்வது. நேரான நிலைக்கு வந்த பிறகு எப்படி நமது முகத்தை கஅபாவிற்கு முன்னோக்கி வைத்தோமோ அதேபோன்று நமது உள்ளத்தை அல்லாஹ்வை நோக்கி வைக்க வேண்டும்.
நான் தொழுகைக்கு வந்து விட்டேன் என்ற உணர்வை அந்த தொழுகையின் ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் அடுத்து தொடர்ச்சியாக அந்த உள்ளம் நமது தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.
தொழுகையை ஆரம்பிக்கும் பொழுதே அந்த உள்ளம் நமது கையை விட்டு சென்று விட்டால் பிறகு எப்படி அடுத்தடுத்த நிலைகளில் அந்த உள்ளம் ஓதுவதை சிந்தித்துக் கொண்டிருக்கும்?
இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் அதை அமைதியாக இருந்து செய்வது. பிறகு மரணத்தின் சிந்தனையை தொழுகையில் கொண்டு வருவது. இது ரொம்ப பேருக்கு பிடிக்காத ஒன்று. மரணம் என்று சொன்னாலே ரொம்ப பேருக்கு பயம்.
மரணத்தை நினைப்பது மரணம் வந்து விடுமோ என்று ஒரு பயம். அப்படி நினைக்காதீர்கள். இன்று மரணமாகி விடுவேன் என்று சொல்லிவிட்டால் மரணமாகி விடுவேனோ என்று நினைக்கிறார்கள். மரணம் எப்பொழுது வருமோ அப்பொழுது தான் வரும். அது முந்தவும் செய்யாது பிந்தவும் செய்யாது. அல்லாஹ்வுடைய விதிப்படி சரியான நேரத்தில் வரும்.
மரணத்தை ஏன் நிணைக்க வேண்டுமென்றால் அப்பொழுதுதான் அவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் ஏற்படும். அப்போதுதான் அவன் பாவத்தை விட்டு விலகிச் செல்வான். தான் செய்த பாவங்களுக்காக வருந்துவான். இனி பாவம் செய்யாமல் தன்னை தடுப்பான். அல்லாஹ்வுடைய உரிமைகளையும், அடியார்களுடைய உரிமைகளையும் சரியாக நிறைவேற்றுவான்.
மரணத்தை நினைக்காத நிலையில் ஒருவனுக்கு மரணம் வருவது, அது மிக கைசேதமான ஒரு நிலையில் உள்ள மரணமாகும். ஏனென்றால், எப்பொழுது ஒரு மனிதன் மவுத்தை நினைக்கின்றானோ குறைந்தபட்சம் அல்லாஹ் என்னை மன்னித்துவிடு என்று கேட்பான். இந்த வாழ்க்கை அவனுடைய மறுமை வாழ்க்கை சீராக ஆவதற்குப் போதுமானது.
ஒருவன் மரணத்தை நினைக்கின்றான். நான் மரணம் ஆகி விடுவேனோ என்பதாக. ஒரு நாளைக்கு ஒரு தடவை நினைக்கின்றான். அப்பொழுது யா ரப்பே! என்னை மன்னித்து விடுவாயாக என்று ஒரே ஒரு வார்த்தை கூறுகிறான். அந்த ஒரு வார்த்தை போதுமானது, அவனுடைய மறுமை வாழ்க்கை எல்லாம் வெற்றியாக ஆகிவிடும். அவன் மீது கருணை இறக்கப்பட்டு அவனுடைய பாவங்களை எல்லாம் அல்லாஹ் மன்னித்து விடுவான்.
தொழுகையில் நமக்கு மரணத்தின் நினைவு வருவது என்பது, நாம் முன்னே சொல்வதை போன்று இந்த உலக சூழ்நிலையில் இருந்து நம்மை அப்படியே வெளியேற்றிவிடும்.
இங்கு துன்யா உடைய குழப்பம், இது துன்யா உடைய பொய்யான அலங்காரங்கள், இந்த துன்யா உடைய அலங்காரம் எப்படி என்று சொன்னால் முன்னோர்கள் சொல்வார்கள், ஒரு வயதான விகாரமான கிழவியை குமரியாக அலங்கரித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த துன்யா.
அல்லாஹ் கூறுகிறான்:
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ (14) قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளியின் குவிக்கப்பட்ட (பெரும்) குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர் ரக அழகிய) குதிரைகள், கால்நடைகள், விளைநிலம் ஆகிய ஆசைகளின் விருப்பம் மக்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை (அனைத்தும் அற்ப) உலக வாழ்க்கையின் (சொற்ப) இன்பமாகும்! அல்லாஹ் - அவனிடம்தான் (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு. (நபியே!) கூறுவீராக: “இவற்றைவிட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு தங்கள் இறைவனிடம் சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இன்னும் பரிசுத்தமான மனைவிகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் (அவர்களுக்கு) உண்டு. இன்னும் அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3 : 14,15)
மனிதன் மறுமைக்குள் செல்ல வேண்டும் என்று சொன்னால் இந்த மரணத்தை நினைக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: நீ உனது தொழுகையில் மரணத்தை நினைப்பாயாக.
மனிதன் தொழுகையில் மரணத்தை நினைத்தால் அந்த தொழுகையை அவன் அழகாக தொடுவதற்கு அதுவே போதுமானதாக இருக்கும். நீ ஒரு மனிதனைப் போன்று தொழுகு, எவன் தனது தொழுகையை இதுதான் என்னுடைய கடைசித் தொழுகை என்று நினைத்துக் கொள்வானோ அவனைப் போன்று.
நூல் : அஸ்ஸில்ஸதுல் ஸஹீஹா, எண் : 1421.
தொழுகை தொடங்கும் பொழுது இதுதான் எனக்கு கடைசித் தொழுகை, அதன் பிறகு இந்த தொழுகையை என்னால் தொழ முடியாது என்று ஒரு மனிதன் நினைத்தால் எப்படி தொழுவானோ அப்படி தொழவேண்டும்.
அந்த நேரத்தில் அவன் அல்லாஹ்வைத் தவிர, சொர்க்கத்தை தவிர, மறுமையை தவிர, அவனுடைய பாவமன்னிப்பை தவிர, அல்லாஹ்வுடைய கருணையை தவிர வேறு எதையாவது நினைத்து பார்ப்பானா? கண்டிப்பாக நினைத்துப் பார்க்க மாட்டான்.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய ஹதீசை அபூ அய்யூப் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க இமாம் இப்னு மாஜா பதிவு செய்கிறார்கள்.
ஒரு மனிதன் நபியவர்கள் இடத்தில் வருகிறார், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுங்கள். ஆனால், சுருக்கமாக கற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ، وَلَا تَكَلَّمْ بِكَلَامٍ تَعْتَذِرُ مِنْهُ، وَأَجْمِعِ الْيَأْسَ عَمَّا فِي أَيْدِي النَّاسِ»
நீ தொழுகையை தொழுவதாக இருந்தால் தனது குடும்பம், பிள்ளைகள், சொத்து, சுகங்கள், எல்லாத்தையும் விட்டு விட்டு இந்த உலகத்தை பிரியக்கூடியவன் எப்படி தொழுகையை தொழுவானோ அப்படி உனது தொழுகையை அமைத்துக் கொள். பேசிவிட்டு அந்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்கும் படியான பேச்சுகளை பேசாதே. அதாவது கவனமாக பேசு! மக்களுடைய கரத்தில் எது இருக்கின்றதோ அதற்கு ஆசைப்படாதே. அல்லாஹ்விடத்தில் எது இருக்கின்றதோ அதற்கு நீ ஆசைப்படு என்று மூன்று உபதேசங்களை அந்தத் தோழருக்கு நபியவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா எண் : 4171.
தொழுகை என்பது நமது மார்க்க தூண்களில் மிக முக்கியமான தூண். இந்த தொழுகையில் உள்ளச்சம் என்பது மிக முக்கியமான ஒன்று.
இன்று, நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு சிரமப்பட்டு தொழுகிறோம். அந்த தொழுகையில் பல துஆக்கள் கேட்கிறோம். ஆனால், சிலர் சொல்கிறார்கள்; எனது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; எனது தொழுகையில் எனது உள்ளங்கள் ஈடுபடுவதில்லை என்று.
தொழுகையை அதற்குரிய முறையை அறிந்து தொழாதது தான் இந்த பலவீனத்திற்கு காரணம் என்று புரிந்துகொண்டு நமது தொழுகைகளை அல்லாஹ் விரும்பக்கூடிய முறையில் காட்டித் தந்த அந்த ஒழுக்கங்களைப் பேணியவர்களாக அதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அல்லாஹு தஆலா, நமக்கு மறுமையில் சொர்க்கத்திற்கு உண்டான சாவியாக இருக்கும்படியான இறையச்சமுடைய தொழுகையை, அல்லாஹ்வுடைய நினைவுடன் கூடிய தொழுகையை உங்களுக்கும் எனக்கும் நஸீப் ஆக்குவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ يَعْنِي ابْنَ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ. ح، وَحَدَّثَنِي أَبُو عُثْمَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الْإِبِلِ فَجَاءَتْ نَوْبَتِي فَرَوَّحْتُهَا بِعَشِيٍّ فَأَدْرَكْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا يُحَدِّثُ النَّاسَ فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ: «مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ» قَالَ فَقُلْتُ: مَا أَجْوَدَ هَذِهِ فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَيَّ يَقُولُ: الَّتِي قَبْلَهَا أَجْوَدُ فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ قَالَ: إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا، قَالَ: " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ - أَوْ فَيُسْبِغُ - الْوَضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ". (صحيح مسلم -234)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/