HOME      Khutba      உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை - அமர்வு 2-3 | Tamil Bayan - 491   
 

உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை - அமர்வு 2-3 | Tamil Bayan - 491

           

உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை - அமர்வு 2-3 | Tamil Bayan - 491


உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை (அமர்வு 2-3)
 
வரிசை : 491
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 02-02-2018 | 16-05-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீனை போற்றிப் புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் தக்வாவை வசிய்யத் செய்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வை பயந்து கொண்ட நல்ல மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
சென்ற ஜும்ஆவிலே தொழுகையைப் பற்றி தொழுகையில் நமக்கு இருக்க வேண்டிய தக்வா -உள்ளச்சத்தை பற்றி நாம் பார்த்தோம்.
 
இன் ஷா அல்லாஹ் தொடர்ந்து இந்த ஜும்ஆவிலும் இந்த உள்ளச்சம் சம்பந்தமான சில விஷயங்களை நாம் பார்க்க இருக்கின்றோம். நம்முடைய மார்க்கத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த மார்க்கத்தையும் நாம் இரண்டு விஷயங்களில் உள்ளடக்கலாம்.
 
ஒன்று, حقوق الله -அல்லாஹ்வுடைய ஹக்குகள், அல்லாஹ்விற்கு நாம் செய்யவேண்டிய ஹக்குகள். இரண்டாவது, حقوق العباد -அடியார்களுடைய ஹக்குகள், அடியார்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் உரிமைகள்.
 
இந்த இரண்டிலும் யார் சிறப்பாக இருப்பார்களோ இந்த இரண்டையும் யார் சரியாக செய்வார்களோ அவர்கள் அல்லாஹ்விடத்திலே மிக நெருக்கமானவர்கள். 
 
இதைத்தான் மார்க்கத்திலே அல்லாஹ்வுடனும் அழகிய தொடர்போடு இருப்பது அல்லாஹ்வுடைய படைப்புகளுடனும் அழகிய தொடர்புடன் இருப்பது என்று சொல்லப்படும்.
 
அல்லாஹ்வுடன் நமக்கு இருக்கக்கூடிய அழகிய தொடர்பு என்பது அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம் மீது என்னென்ன இபாதத்துகளை கடமையாக்கி இருக்கின்றானோ அந்த வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்காக சரியாக உணர்ந்து மண ஓர்மையோடு செய்வது. 
 
வணக்க வழிபாடுகளை நாம் சரியாக நிறைவேற்றும்போது அல்லாஹ்வுடன் நமக்கு இருக்கக்கூடிய அந்த தொடர்பானது மிகச் சரியாக மிக அழகானதாக இருக்கும்.
 
இந்த வணக்க வழிபாடுகளிலே தொழுகையை நாம் எடுத்துக் கொண்டால் எல்லா இபாதத்களிலும் மிகப்பெரிய ஒரு இபாதத்தாக மிக தலையாய ஒரு இபாதத்தாக இந்தத் தொழுகை இருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
நமக்கு முந்திய சமுதாயத்தவர்களுக்கும் நபிமார்களுக்கும் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்தத் தொழுகையைத் தான் இபாதத்துகளில் முதல் இபாதத்தாக கடமையாக்கினான். 
 
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்கிறார்கள்:
 
وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا
 
இன்னும், நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையையும் தர்மத்தையும் (பாவங்களை விட்டு விலகி தூய்மையாக இருப்பதையும்) அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 19 : 31)
 
இந்த தொழுகை எப்படி நம்முடைய மார்க்கத்தின் கடமைகளில் வணக்க வழிபாடுகளில் மிகப்பெரிய கடமையோ அதுபோன்று அந்த தொழுகையிலே நமக்கு உள்ளச்சம் இருப்பது மன ஓர்மை இருப்பது தொழுகையின் அடிப்படைக் கடமைகளிலே மிக முக்கியமான கடமை ஆகும்.
 
தொழுகையில் நிறைய ருக்னுகள் இருக்கின்றன. தொழுகைக்கு வெளியிலும் தொழுகைக்கு உள்ளிலும் நிறைய ருக்னுகள் இருக்கின்றன. ஆனால், அந்த ருக்னுகளிலேயே மிகப்பெரிய ருக்னு அந்த தொழுகையில் நமக்கு உள்ளச்சம் இருப்பது. 
 
ஷைத்தானுடைய வேலை, அல்லாஹ்வுடைய நினைவிலிருந்தும் அந்த உள்ளச்சத்தில் இருந்தும் நம்மை திருப்புவது. இதுதான் ஷைத்தானுடைய மிகப்பெரிய திட்டம் நமது தொழுகையை உள்ளச்சம் இல்லாத தொழுகையாக அல்லாஹ்வுடைய நினைவற்ற தொழுகையாக ஆக்குவது. 
 
இது, ஷைத்தான் ஒரு தொழுகையாளிக்கு ஏற்படுத்தக்கூடிய மிகப் பெரிய இடையூறு. ஒருவன் தொழுகைக்கு நின்று விட்டால், ஷைத்தான் அந்த தொழுகையாளி உடைய மனதை கெடுத்து, அவனுடைய சிந்தனைகளைக் கெடுத்து, அவனுக்கு தவறான பல எண்ணங்களை தொழுகைக்கு வெளியில் கூடஅவன் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான், அப்படிப்பட்ட எண்ணங்களை எல்லாம் அவனுக்கு தொழுகையிலே கொண்டுவந்து நினைவுறுத்தி, அவன் மறந்த பல விஷயங்களை எல்லாம் அவனுக்கு நினைவு படுத்தி, குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருப்பான்..
 
இறுதியாக மனிதன், தான் தொழுகிறோம் என்ற நிலையை மறந்து ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்குப் பின்னால் சென்று விடுகிறான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
 
ஆகவேதான், இந்த ஷைத்தானுடைய திட்டங்களிலே ஒன்று, ஒரு முஸ்லிமுடைய தொழுகையில் அவனுடைய உள்ளச்சத்தை, அவனுடைய உணர்வுகளை, இறை நினைவை பாழாக்கி விடுவது. 
 
இதற்காக ஷைத்தான் அல்லாஹ்விடத்திலே சபதமிட்டு வந்திருக்கிறான். அதுகுறித்து அல்லாஹ் கூறுகிறான்:
 
ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ
 
“பிறகு, அவர்களுக்கு முன் புறத்திலிருந்தும், அவர்களுக்கு பின் புறத்திலிருந்தும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்.” (அல்குர்ஆன் 7 : 17)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் சொன்னார்கள்: 
 
இந்த மார்க்கத்தில் முதலாவதாக காணாமல் போகக்கூடிய ஒரு விஷயம், அவர்களுடைய தொழுகையில் உள்ள உள்ளச்சமாகும்.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக!  எவ்வளவு சிந்திக்க வேண்டிய, பயப்பட வேண்டிய, நம்மை நாமே பரிசோதனை செய்ய வேண்டிய ஒரு நபிமொழி என்பதை நாம் உணர வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீண்டும் சொன்னார்கள்:
 
எத்தனையோ தொழுகையாளிகள் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களிலே நன்மை இருக்காது.
 
அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் எதை சொன்னார்கள்? ஒரு மனிதனுடைய தொழுகை அவனுக்கு அல்லாஹ்வுடனான உறவை புதுப்பித்து, அவனுடைய பாவங்களுக்காக அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி, நன்மைகளில் அவனிடம் ஏற்பட்ட சோர்வுக்காக அவனுக்கு உள்ளத்திலே வருத்தத்தை ஏற்படுத்தி, அவனுக்கு மரண நினைவை கொடுத்து, ஆகிரத்துடைய நினைவை கொடுத்து, அல்லாஹ்விற்கு முன்னால் நிற்க வேண்டும் என்ற அந்த நிலையை அவனுக்கு ஞாபகப்படுத்தி, அல்லாஹ்வுடன் அவனுக்கு மீண்டும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பது தான் இந்த தொழுகை.
 
இந்த தொழுகை அல்லாஹ்வை விட்டு பிரிந்திருந்த நம்மை அல்லாஹ் உடைய வீட்டுக்கு அழைத்து வந்து, உனது உறவை அல்லாஹ்வோடு புதுப்பித்துக்கொள், செய்த பாவங்களுக்காக வருந்து, நீ செய்து விட்டு விட்ட அமல்களுக்காக வருந்து. 
 
அல்லாஹ்வை விட்டு நீ தூரமாகி விட்டாயே, அந்த தூரத்தை போக்கி அல்லாஹ்வுடன் நெருக்கமாகிகொள். மறுமைக்கு முன்னால் நீ நிற்க வேண்டுமே என்ற நிலையை நினைத்துப் பார். கப்ருக்கு நீ செல்ல வேண்டுமே என்ற நிலையை நினைத்துப் பார். 
 
இப்படியாக, இந்த உலகத்தில் அத்தனை அழுக்குகளிலிருந்து, சுமைகளிலிருந்து, உலக ஆசாபாசங்களில் இருந்து நம்மை விடுவித்து, பரிசுத்தமான மறுமை சிந்தனைக்கு, பரிசுத்தமான சொர்க்க பூங்காவிற்குள் நம்மை கொண்டுபோய் நிறுத்துகின்ற ஒரு பெரிய இபாதத் தான் இந்த தொழுகை.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஆனால், அந்த தொழுகையைத் தொழக் கூடியவர்களில் பலர், அவர்களில் நன்மை இருக்காது. 
 
என்ன அர்த்தம் இதற்கு? அவர் வெறும் கடமைக்காக தன்மீது இந்தத் தொழுகை கடமையாகி விட்டது அதை தட்டிக் கழிக்க முடியாது, எப்படியோ தொழுது அதை கழித்து விடுவோம் என்பதாக தன்னுடைய பொறுப்பை நீக்கிக் கொள்வதற்காக, மஸ்ஜிதிற்கு வந்து அவர்கள் சில அசைவுகளை செய்வார்கள்.
 
அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக அவர்களிடத்திலே சில அசைவுகள் இருக்கும். 
 
எந்த மாற்றத்தை தொழுகையின் மூலம் ஒரு மனிதனிடம் கொண்டு வர வேண்டுமோ அந்த மாற்றம் அவர்களிடம் இருக்காது. அவர்கள் தொழுவார்கள்; தொழுகைக்குப் பிறகு பொய் சொல்வார்கள். தொழுகைக்குப் பிறகு மீண்டும் பழைய தப்பான காரியங்களிலே ஈடுபடுவார்கள். ஏமாற்றுவார்கள். புறம் பேசுவார்கள். 
 
இன்னும், என்னென்ன ஹராமான காரியங்கள் இருக்கிறதோ அவற்றை எல்லாம் செய்தால் அவர்களுடைய தொழுகையில் என்ன நன்மை இருக்கிறது?
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
 اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ 
 
நிச்சயமாக தொழுகை ஒரு மனிதனை அசிங்கமான செயல்களை விட்டு வெறுக்கத்தக்க அருவருப்பான செயல்களை விட்டு தடுக்க வேண்டும். (அல்குர்ஆன் 29 : 45)
 
ஆசைகள் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று, ஹலால் அனுபவித்துக் கொள். அதில் அல்லாஹ் உன்னை குற்றம் பிடிக்கவே மாட்டான். உன்னுடைய ஆசைகளில் ஹலாலான ஆசையிலே நீ குறைக்க வேண்டுமென்று அல்லாஹ் விரும்பவில்லை. ஆனால், ஹராமான ஆசையின் பக்கம் நெருங்கி விடாதே, அல்லாஹ் தடுத்த ஆசைகளின் பக்கம் நீ நெருங்கி விடாதே.
 
ஷைத்தானுடைய சதித் திட்டங்களில் ஒன்று என்னவென்றால், ஹலாலான விஷயங்களில் ஆசை ஏற்படாமல் உங்களை வைத்துக் கொள்வான். ஹராமான விஷயங்களிலே அவ்வளவு ஆசையை ஏற்படுத்துவான். 
 
ஒரு சின்ன உதாரணம் பாருங்கள். அல்லாஹு தஆலா பழத்தை ஹலாலாக்கி அந்தப் பழத்தில் இருந்து வரக்கூடிய சுவையான ஜூசை (மதுவை) அல்லாஹ் ஹலாலாக்கி இருக்கிறான். அதிலே மனம் எவ்வளவு நாட்டம் கொள்கிறது. ஒரு மனிதன் மதுவை குடித்து பழகியிருக்கிறான். 
 
இப்படித்தான் பெண்கள் விஷயத்திலும். ஹலாலான மனைவியின் மீது பரிசுத்தமான மனைவியின் மீது அவனுக்கு இருக்கக்கூடிய நாட்டத்தை விட விபச்சாரத்தில் சென்றவனுக்கு அதன்மீதுதான் அவனுக்கு ஆசை அதிகமாக இருக்கும். 
 
அதுபோன்றுதான், ஹராமான வியாபாரமும். அதிலே அவனுடைய மனது சீக்கிரமாக செல்லும். மனிதர்களை ஷைத்தான் வழிகெடுத்து ஹலாலான விஷயங்களில் நம்முடைய மனதை பற்றற்றதாக ஆக்கிவிடுவான். விருப்பம் அற்றதாக ஆக்கிவிடுவான். ஹராமிலே நம்முடைய மனதை ஆசை கொண்டதாக மாற்றி விடுவான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
மார்க்கம் என்ன சொல்கிறது? ஹலாலை எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைப்படு. ஹலாலான முறையில் எவ்வளவு வேண்டுமானாலும் அல்லாஹ் அனுமதித்திருக்கின்ற அந்த விஷயங்களை நீ ஆசைப்படு. ஹராமிலே ஒரு துளியும் நீ ஆசைப்படாதே. 
 
ஷைத்தானுடைய வேலை, ஒட்டுமொத்த ஹலாலிலிருந்து மனிதனுடைய சிந்தனையைத் திருப்பி ஹாராமிலே கொண்டுபோய் தள்ளுவது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய இந்தக் கூற்று நமக்கு மிகப்பெரிய ஒரு சுய பரிசோதனையை நமக்கு ஏற்படுத்தக்கூடியது.
 
எத்தனையோ தொழுகையாளிகள். ஆனால், அவர்களுடைய தொழுகையில் அவர்களுக்கு நன்மை இருக்காது என்று சொன்னார்கள். 
 
நீங்கள் மஸ்ஜிதிற்கு செல்வீர்கள். ஆனால், உள்ளச்சத்தோடு தொழக்கூடிய ஒருவரையும் நீங்கள் காண மாட்டீர்கள். 
 
அதாவது முந்தைய வேதங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறியதாக வரக்கூடிய ஒரு செய்தி. தொழுகையாளிகள் எல்லோரும் தொழுகையாளிகள் அல்ல. நான் தொழுகையை யாரிடமிருந்து ஏற்றுக் கொள்கிறேன் என்றால், யார் என்னுடைய கண்ணியத்திற்கு முன்னால் பணிந்து விடுகின்றார்களோ, நான் தடுத்த ஹராமான விஷயங்களை விட்டு தன்னுடைய ஆசைகளை தடுத்து கொள்கிறார்களோ, பசித்தவருக்கு உணவு அளிக்கின்றார்களோ, ஆடை இல்லாதவருக்கு ஆடை அணிவிக்கிறாரோ, கஷ்டத்தில் இருப்பவர்கள் மீது கருணை காட்டுகின்றாரோ, அந்நியர்கள் பரதேசிகள் முசாஃபிர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றாரோ இவரிடம் இருந்துதான் நான் தொழுகையை ஏற்றுக் கொள்கிறேன்.
 
இதுதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் உடைய இந்த ஹதீஸிலிருந்து பார்க்கிறோம். தொழுகை அவனை அல்லாஹ்வுடைய ஹக்குகள் விஷயத்திலும், அடியார்களுடைய ஹக்குகளுடைய விஷயத்திலும் சரியான இருப்பதற்கு தூண்ட வேண்டும். 
 
ஒரு மனிதன் தொழுகிறான். பிறகு தாய் தந்தைகளுக்கு தொந்தரவு தருகிறான். அவர்களுக்கு செலவழிப்பது இல்லை. அவர்களுக்கு பணிவிடை செய்வதில்லை என்றால் இவனுடைய தொழுகையை கொண்டு என்ன பிரயோஜனம்? 
 
ஒரு மனிதன் தொழுகிறான். ஆனால் ஏழைகள் உடைய ஹக்கான ஜகாத் கொடுப்பதில்லை. தன்னுடைய உறவுகளுக்கு அல்லாஹ் தனக்கு கொடுத்த செல்வத்தை கொடுத்து ஆதரிப்பதில்லை என்றால் இவர்களுடைய தொழுகையால் என்ன பிரயோஜனம் இருக்கிறது?
 
மேலும், அந்த அறிவிப்பிலே தொடர்ந்து பார்க்கிறோம், அல்லாஹ் சொல்லுகிறான்; என் கண்ணியத்தின் மீது சத்தியமாக இப்படிபட்ட தொழுகையாளிகள் உடைய முகத்தின் ஒளி என்னிடத்திலே சூரியனின் ஒளியை விட பிரகாசமானது. 
 
தொடர்ந்து அல்லாஹ் சொல்கிறான்: மக்கள் அவரிடத்திலே அறியாமையாக முட்டாள்தனமாக நடந்து கொண்டாலும் நான் அவருக்கு பொறுமையை கொடுப்பேன். அவருக்கு ஒளியை ஏற்படுத்துவேன். அவர் என்னை அழைப்பார். அவருடைய அழைப்புக்கு நான் பதில் கொடுப்பேன். அவர் என்னிடத்தில் கேட்பார், நான் அவருக்கு கேட்டதை நான் கொடுப்பேன். என் மீது அவர் சத்தியம் செய்வான். நான் அவன் சத்தியம் செய்ததை அவருக்கு நிறைவேற்றி கொடுப்பேன்.
 
சஹாபாக்கள் உடைய வரலாறுகளிலே நாம் இதற்கு பல சான்றுகளை பார்க்கிறோம்.
 
இப்போது நாம் நமக்கு நாமே சில கேள்விகளை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். நம்முடைய தொழுகையிலே நமக்கு உள்ளச்சம் ஏற்படுவதில்லையே, தொழுகையின் மீது நமக்கு ஒரு ஈடுபாடு ஏற்படுவதில்லையே, தொழுகைக்காக நாம் வரும்போது என்ன ஒரு ஆர்வம் என்ன ஒரு ஆசை இருக்க வேண்டுமோ அந்த ஆர்வம் ஆசை இல்லாமல் ஒரு அலட்சியமாக இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
ஒரு சோம்பேறித்தனத்தோடு அந்த தொழுகைக்கு வரக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோமே இப்படிப்பட்ட ஒரு நிலை நமக்கு ஏன் ஏற்படுகிறது? இந்தத் தொழுகையை ஒரு சுமையாக கருதக்கூடிய அளவுக்கு நம்முடைய நிலைமை ஏன் ஏற்பட்டது? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை தனக்கு ராஹத்தாக சொன்னார்கள். 
 
இன்று தொழுகை சுமையாக கருதப்படுகிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! மிக வேதனையான விஷயத்தை சொல்கிறேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் தொழுகையை கொண்டு எங்களுக்கு ராஹத்தை கொடு பிலால் என்பதாக சொன்னார்கள்.
 
இன்று எப்படி எப்படியோ தொழுது முடிச்சி வெளியே வந்துருவோம். நபி தொழுகையில் இருப்பதை ராகத்தாக கருதினார்கள். 
 
ஆகவேதான், இன்று பாருங்கள், பல இடங்களிலே நடக்கக்கூடிய ஒரு ஒரு நிகழ்வை சொல்கிறேன். இன்று நம்முடைய நிலை எப்படி இருக்கின்றது? மஸ்ஜிதிற்கு தொழுகைக்காக வருகிறோம். மஸ்ஜிதிலே தொழுகைக்காக எதிர்பார்த்து இருக்கிறோம். 
 
ஆனால், இன்று உலகளாவிய முஸ்லிம்களுடைய நிலையை நினைத்துப் பாருங்கள். பலர் தொழுகைக்காக வருவார்கள். ஆனால், தொழுத உடனே சென்று விடுவார்கள். மஸ்ஜிதில் சிறிது நேரம் கழிக்கமாட்டார்கள்.
 
அந்த தொழுகையின் மூலமாக எப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களோ, அந்த மன ராஹத்தை பெறவேண்டும் என்பதற்காக இருந்திருக்குமேயானால் என்ன செய்திருப்பார்கள்? அந்த தொழுகையில் இன்னும் நேரம் செலவழித்து இருப்பார்கள். இன்னும் நேரம் செலவழித்து இருப்பார்கள்
 
எப்படி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஒவ்வொரு தொழுகைக்கான ஒழுக்கத்தை சொல்லிக் கொடுத்தார்களோ இன்று அதுவெல்லாம் வெறும் புத்தகத்தோடு நிறுத்தப்பட்டுவிட்டது. 
 
பிறகு, எதார்த்த வாழ்க்கையிலே இவர்கள் ஒரு தொழுகையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். மக்கள் ரொம்ப நேரமா எதிர்பார்த்து கிட்டு இருக்காங்க அதனால சீக்கிரமா தொழ வையுங்கள். மக்கள் இன்று மக்கா மதினாவிற்கு சென்று விட்டால் கூட, மக்களெல்லாம் அதிகமாக ரொம்ப நேரமா தொழுகைக்கு எதிர் பார்த்துகிட்டு இருக்காங்க, அதனால சீக்கிரமா தொழுகை வைக்க வேண்டும் என்பதாக அங்கேயே நிலை மாறி இருக்கின்றது. 
 
இந்தத் தொழுகைக்கு தானே இவ்வளவு நேரம் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அது அவசரமாக உணர்வில்லாமல் நிறைவேற்றப்படுகிறது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் இதை ஓதுங்கள் இதை ஓதுங்கள் என்று வழிகாட்டி அதை ஓதி அவர்கள் வாழ்நாளெல்லாம் தொழுதார்கள். சில நேரங்களில் கூடும் என்பது கற்றுக் கொடுப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்ற சில சூராக்களை ஓதி இருக்கிறார்கள்.
 
இன்று நம்முடைய நிலைமை எப்படி மாறிவிட்டது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதெல்லாம் ஒரு பக்கம், ஃபஜ்ருடைய தொழுகையிலே சூரத்துல் இக்லாஸை ஓதி தொழக்கூடிய அளவுக்கு இன்று மக்களுடைய சோம்பேறித்தனம் உச்சத்தை அடைந்திருக்கிறது.
 
ஃபஜ்ருடைய தொழுகையில் ஒரு சாதாரண நபில் உடைய தொழுகையை விட ஃபஜ்ருடைய ஃபர்லுகளை சுருக்கமாக தொழக் கூடிய அளவுக்கு முஸ்லிம்களிடத்தில் சோம்பேறித்தனம் அதிகமாகி இருக்கிறது. 
 
இதற்கு என்ன காரணம்? மக்களுடைய மனநிலை. அதுபோன்று இந்த தொழுகையை நடத்தக் கூடியவர்கள் இடத்திலே இருக்கக்கூடிய சோம்பேறித்தனம், மக்களிடத்தில் இருக்கக்கூடிய சோம்பேறித்தனம். அதுபோன்று அந்த தொழுகையாளிகள் இடத்திலே இருக்கக்கூடிய சோம்பேறித்தனம். இப்படியாக இரண்டும் கலந்து இந்த இபாதத்தை பாலாக்கி இருப்பதை பார்க்கிறோம் .
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே அங்கும் தொழுகைக்காக எதிர்பார்த்திருந்தார்கள். நம்மைவிட பல மடங்கு அவர்கள் தொழுகைக்காக எதிர்பார்த்திருந்தார்கள். நமக்கு இருக்கக்கூடிய சிரமத்தை விட மிகப்பெரிய சிரமத்திற்கு இடையில் அவர்கள் தொழுதார்கள். 
 
இந்த விதமான எந்த எந்த வசதியும் இல்லை. மாறாக கடுமையாக வெப்ப நேரத்திலே உஷ்ணம் பொசுக்கி கொண்டிருக்கும் அந்த தரையிலே தலை பட்டுவிட்டால் நெற்றி பட்டுவிட்டால் தோள்களை கருக வைத்துவிடும். அந்த நேரத்தில்கூட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் ஒரு சிறிய அளவை குறைத்துக் கொள்ளவில்லை. 
 
காரணம், அவர்கள் தொழுகைக்காக வந்தார்கள். அல்லாஹ்வுடைய இபாதத்திற்காக வாழ்ந்தார்கள். அதிலே சமரசம் செய்து கொள்ளவில்லை. நாம் நம்முடைய துணியாவிற்காக வாழ்கிறோம். எனவே இபாதத்திலே சமரசம் செய்து கொண்டோம். 
 
நம்முடைய துனியா உடைய விஷயங்களிலே பாருங்கள்; எந்த வகையிலும் சரி நாம் நம்முடைய சுகத்தை குறைத்துக் கொள்வதற்கு தயார் கிடையாது. நம்முடைய உலக விஷயங்களில் நம்முடைய துனியாயுடைய விஷயங்களில் நம்முடைய சுகத்தை சமரசம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லவே இல்லை. 
 
துனியாவிற்காக படக்கூடிய கஷ்டம் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி, அத்தனை கஷ்டங்களையும் இன்முகத்தோடு தாங்கிக்கொள்ள தயார். அப்படியே தீன் என்று வந்துவிட்டால் நம்முடைய அந்த சுகத்தோடு இபாதத் செய்ய முடிந்தால் செய்வோம். இல்லையென்றால் விட்டுவிடுவோம்.
 
ஒரு உதாரணத்தை வைத்துக் கொள்வோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! திடீரென்று கரண்ட் போய் விட்டது. எந்த காற்றும் இல்லை. வேர்த்துக் கொட்டுது. இவ்வளவு பேர் இருக்கிறோம். நம்ம எல்லாம் பொதுவாக என்ன ஆசைப்படுவோம்? இமாம் குத்பாவ சீக்கிரம் முடித்து விடவேண்டும். தொழுகையை சுருக்கமாக விரைவாக முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் உடைய காலத்திலே சஹாபாக்கள் யாராவது இப்படி ஆசைப்பட்டு இருப்பார்களா? இப்போது நாம் படக்கூடிய இந்த சிரமத்தை விட பயங்கரமான சிரமம் அவர்களுக்கு இருந்தது.
 
காலை அந்த மண்ணிலே வைக்க முடியாது. நெத்தியை வைக்க முடியாது. அந்தநேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜருக்கு ஓதக்கூடிய அந்த சூராக்கள் நம்ம ஃபஜருக்கு ஓதுவது போன்று அல்ல. 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஃபஜருக்கு ஓதியது ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு சூராக்களை ஓதுவார்கள். தபாரக்கல்லதி, சூரத்துல் கலம், சூரத்துல் ஹாக்கா, சூரத்துல் மஆரிஜ் இப்படியாக ஏறக்குறைய 150, 200 வசனங்களை அந்த பஜ்ருடைய தொழுகையிலேயே ஓதுவார்கள்.
 
நின்று ஓதிய அளவிற்கு ருக்குவிலே இருப்பார்கள், சுஜூதிலே இருப்பார்கள். ஃபஜர் உடைய தொழுகை பற்றி நீங்கள் ஹதீஸ்கள் உடைய நூல்களை எடுத்துப் பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஃபஜர் தொழுகையும், லுஹர் தொழுகையும் சரிசமமாக இருக்கும். 
 
இன்று எங்கேயாவது மஸ்ஜிதில் இப்படி தொழுகை வச்சா அந்தப் பள்ளியில் வேற எந்தப் பள்ளியிலும் ஆளு குறைவாய் இருக்க மாட்டாங்க. 
 
இன்று பல காரணங்களை சொல்லி தொழுகைகளை சுருக்கிக்கொள்கிறோம். நம்முடைய துன்யாவுக்காக தீனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, நம்முடைய இபாதத்துக்காக நம்மை மாற்றிக்கொள்ள நினைக்கிறோமா? இபாதத்துக்காக நம்முடைய தேவைகளை நம்முடைய உலக காரியங்களை முன்பின் ஆக்கிக்கொள்ள நினைக்கிறோமோ?
 
சஹாபாக்கள் மார்க்கத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட முடியுமோ அதை இன்பமாக கருதினார்கள். துன்யாவுக்காக அற்ப கஷ்டத்தை போதுமாக்கிக் கொண்டார்கள். துன்யாவுக்காக அவர்கள் எந்த சுகத்தையும் பெரிதாக தேடியதில்லை. 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உடைய உடலை உமர் பார்க்கிறார்கள் உமர் வந்தவுடன் எழுந்து உட்காருகிறார்கள். உமர் அவர்கள் அப்படியே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மேனியை பார்க்கிறார்கள். படுத்த அந்த படுக்கையில் விரிப்பு இல்லை. பேரிச்சம் கீத்துகளால் செய்யப்பட்ட விரிப்பு விரிப்பதற்கு எதுவுமே இல்லை. அதன் மீது அப்படியே வெறும் உடம்போடு படித்து எந்திரிச்சா அந்த கோடுகள் இருக்குமோ அந்த மாதிரி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடம்பெல்லாம் அப்படியே அந்த பேரித்தம் கீற்றுடைய கோடு இருந்தது.
 
ஏற்கனவே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் உடைய மேனி அவ்வளவு மென்மையான மேனி. அப்புறம் அப்படியே வீட்டை பாக்குறாங்க. வீட்ல ஒரு சாமானும் இல்ல. உமர் அவர்கள் கேட்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் துஆ செய்து கொள்ள மாட்டீர்களா? அல்லாஹுத்தஆலா இந்த துன்யாவை உங்களுக்கு கொஞ்சம் விசாலப்படுத்தட்டுமே! 
 
ரோமர்களை பாருங்கள்; அல்லாஹ்விற்கு இணை வைக்கக் கூடியவர்கள், பாரசீகர்கள் அல்லாஹ்விற்கு இணை வைக்கக் கூடியவர்கள். அவர்கள் இந்த துன்யாவை எப்படி அனுபவிக்கிறார்கள். நீங்கள் இவ்வளவு சிரமத்தில் இருக்கிறீர்களே? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முகம் சிவந்தவர்களாக சொன்னார்கள்: உமரே! அவர்களுக்கு அவர்களுடைய துன்யா இன்பங்கள் இந்த உலகத்திலே அவசரமாக கொடுக்கப்பட்டு விட்டது. நம்முடைய இன்பம் நமக்கு மறுமைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. 
 
இது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடத்திலே படித்த அந்த சஹாபாக்கள் உடைய நிலையாக இருந்தது.
 
எதற்காக என்று சொன்னால் இந்த ஒரு நிலையை நாம் புரிய வேண்டும். நம்முடைய தொழுகை தான் நமக்கு வாழ்க்கையின் நோக்கம். இதுதான் நமக்கு மறுமையின் உடைய கட்டுசாதம். இதை கொண்டு தான் மறுமையில் வெற்றி பெறமுடியும் என்ற ஒரு நம்பிக்கை வருமேயானால், இந்த தொழுகையை சரிசெய்வதற்கு, அல்லாஹ் விரும்பக் கூடிய விதத்திலே தொழுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ 
 
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1,2)
 
ஆகவே, இந்தத் தொழுகையில் உள்ளச்சம் மிக முக்கியமான ஒன்று. அல்லாஹுத்தஆலா சொல்கிறான்: 
 
 وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏
 
நீங்கள் அல்லாஹ்விற்கு முன்னால் பயந்தவர்களாக பணிந்தவர்களாக நில்லுங்கள் என்று சொல்லுகிறான். (அல்குர்ஆன் 2 : 238)
 
எப்படி? நம்முடைய உடல் உறுப்புகள் அமைதியாக இருக்க வேண்டும். பார்வைகள் தாழ்ந்து இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய பயத்தால் உடல் உறுப்புகள் அசைவற்றதாக இருக்க வேண்டும். 
 
இங்கே இன்னொரு விஷயம் இருக்கிறது; உடலுடைய அமைப்பும் சரியாக இருக்க வேண்டும். உள்ளமும் சரியாக இருக்க வேண்டும்.
 
ஹுதைஃபா இப்னு அல்யமான் அவர்கள் ஒரு முறை தங்களுடைய தோழர்களுக்கு சொல்லும்பொழுது, நயவஞ்சகதுனுடைய அந்த உள்ளச்சத்தை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். 
 
அப்போது ஹுதைஃபா இப்னு அல்யமான் ரலியல்லாஹு அன்ஹு உடைய தோழர்கள் கேட்கிறார்கள்; ஆசிரியர் அவர்களே! நயவஞ்சகமான உள்ளச்சம் என்றால் என்ன? என்று.
 
அப்போது ஹுதைஃபா இப்னு அல்யமான் ரலியல்லாஹு அன்ஹு சொல்லுகின்றார்கள்: உடல் அமைதியாக இருக்கும். உடலை பார்த்தால் இவர் உள்ளச்சம் உடையவர் என்பதாக நீர் கருதுவீர். ஆனால், உள்ளம் உள்ளச்சம் உடையதாக இருக்காது. இதுதான் நயவஞ்சகமான نفاق. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்த உள்ளச்சம் உள்ள தொழுகையைத்தான் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறான். இந்த தொழுகை நமக்கு கிடைக்கப் பெற்றால்தான் அது நமக்கு ராகத் ஆக இருக்கும். தொழ இன்பமாக இருக்கும். அப்படி இல்லை என்றால் ஏதோ கடமையை முடிச்சுட்டு வெளியே போகக் கூடிய உணர்வுதான் நமக்கு இருக்குமே தவிர, அடுத்து இந்த தொழுகைக்கு சீக்கிரமா வர வேண்டுமே என்ற ஆசை இருக்காது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் சொன்னார்கள்: மஸ்ஜிதோடு உள்ளம் தொடர்புடையவர் அர்ஷ் உடைய நிழலிலே இருப்பார். யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்? யாருக்கு தொழுகையின் மூலமாக ராஹத் கிடைக்கிறதோ, அவர்தான் அடுத்து உடனடியாக மஸ்ஜிதிற்கு வரவேண்டும் என்ற ஆசையோடு செல்வார். யாருக்கு தொழுவது சிரமமாக இருக்குமோ அவர் எப்படி இதை எதிர்பார்ப்பார்?
 
ஆகவே, இந்த உள்ளச்சம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. நமக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உண்டான அந்த உண்மையான உறவை, நான் அல்லாஹ்விற்கு عبد என்ற அந்த அடிமைத்துவத்தை அல்லாஹ்விற்கு முன்னால் நிலைநிறுத்தி, நம்முடைய ஈமானை பரிசுத்தமாக்கி, நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சரி செய்யக் கூடிய ஒன்றுதான் தொழுகையிலே நமக்கு இருக்கக்கூடிய உள்ளச்சம். 
 
ஆகவேதான் அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு நபிக்கும் அதை சொல்லும்பொழுது, மூசா அலைஹிசலாது வஸல்லம்அவர்களுக்கு சொன்னதை பாருங்கள்;
 
وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ‏
 
மூசா! என்னுடைய நினைவை நீங்கள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இந்த தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று சொல்லுகிறான். (அல்குர்ஆன் 20 : 14)
 
அத்தகைய தொழுகை நமக்கு வரவேண்டுமேயானால் அதற்கான பயிற்சி நமக்குத் தேவை. அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஹதீஸ்கள், அது சம்பந்தமாக அறிஞர்கள் கூறி இருக்கக்கூடிய விளக்கங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
அதை நாம் பயிற்சி எடுக்கும் பொழுது, அதற்காக அல்லாஹ்விடத்திலே துவா செய்யும்பொழுது அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அத்தகைய தொழுகையை நமக்கு நசீப் ஆக்குவான். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் உடைய தொழுகையை நசீப் ஆக்குவானாக! இந்த தொழுகையை அவனுக்காக நிறைவேற்றக்கூடிய, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எப்படி தொழ வேண்டும் என்று நமக்கு கட்டளைகளை ஒழுக்கங்களை சொல்லி கொடுத்து இருக்கிறார்களோ, அதன் அடிப்படையிலே தொழுகையை நிறைவேற்றி, அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மன்னிப்பையும் அடையக்கூடிய நன்மக்களில் அல்லாஹ் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/