உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை - அமர்வு 1-3 | Tamil Bayan - 491
உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை
ஜுமுஆ குத்பா தலைப்பு : உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை (அமர்வு 1-3)
வரிசை : 491
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 12-01-2018 | 25-04-1439
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹு தஆலாவைப் பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழ்பவர்கள் தான் இம்மையிலும் வெற்றி அடைவார்கள், மறுமையிலும் வெற்றி அடைவார்கள்;
அல்லாஹ்வுடைய அருளும் அன்பும் பாதுகாப்பும் அல்லாஹ்வை பயந்து வாழக்கூடியவர்களுக்கு தான் கண்டிப்பாக உரியது என்பதை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆவின் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வை பயந்து வாழ்கின்ற நல்லவர்களில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! அல்லாஹு தஆலா நல்லவர்களுக்காக ஏற்படுத்தி இருக்கின்ற சொர்க்கத்தை எனக்கும் உங்களுக்கும் முஃமினான ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் நசீப் ஆக்குவானாக!
அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்தும் கோபத்தில் இருந்தும் அல்லாஹு தஆலா நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்.
صلاة الخاشعين -உள்ளச்சம் உள்ளவர்களின் தொழுகை என்ற தலைப்பின் கீழே சில விஷயங்களை நாம் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். இந்த உலகத்தில் நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்குரிய பலன் இல்லாமல் செய்வதில்லை.
ஒரு மனிதர் ஒரு வியாபாரம் செய்கிறார். அதில் அவருக்கு லாபமே கிடைக்கவில்லை என்றால், அதை அவர் செய்யமாட்டார்.
இப்படியாக பல உதாரணங்களை நாம் சொல்லலாம். எந்த ஒன்றில் மனிதனுக்கு லாபம் இல்லையோ நன்மை இல்லையோ அதை மனிதன் செய்வதில்லை. அதை மனிதன் தொடர்வதில்லை.
எந்த ஒன்றாக இருக்கட்டும்; அதனால் கிடைக்கக்கூடிய லாபத்தை பிரதிபலனை அடிப்படையாக வைத்துதான் மனிதன் அதை தொடர்கிறான்.
தொழுகை என்ற உயர்ந்த வணக்கம் அது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நன்மையை தர வேண்டுமென்றால் அந்த தொழுகையில் خشوع என்ற உள்ளச்சம் இருந்தால்தான் அது கிடைக்கும்.
خشوع என்ற உள்ளச்சம் இல்லாத தொழுகை தொழுபவர்களுக்கு எவ்வித நன்மையும் தராது. இபாதத்களிலேயே மிக உயர்ந்த இபாதத் தொழுகை தான். அந்தத் தொழுகை அதற்குரிய பலனை நன்மையை தர வேண்டும் என்றால், அந்த தொழுகையில் உள்ளச்சம் இருக்க வேண்டும்.
அந்த உள்ளச்சம் இருந்தால் தான் தொழுகை அதற்குரிய நன்மையை நமக்கு இம்மையிலும் தரும்; மறுமையிலும் தரும்.
உள்ளச்சம் இல்லாத தொழுகையை அல்லாஹு தஆலா ஏறிட்டுப் பார்ப்பதில்லை. அந்த தொழுகைக்கு அல்லாஹ்விடத்தில் எவ்விதமான மதிப்பும் இல்லை.
இப்போது கொஞ்சம் நினைத்து பாருங்கள்! நாம் ஐங்காலத் தொழுகையை தொழுகிறோம். இந்த தொழுகைக்காக நேரத்தை ஒதுக்குகின்றோம். சிரமப்படுகிறோம். அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை நோக்கி வருகின்றோம்.
நாம் எந்த அளவு இந்த தொழுகைக்கான சிரமம் எடுக்கிறோமோ அதுபோன்று தொழுகையில் உள்ளச்சம் ஏற்படவும் முயற்சி எடுக்க வேண்டும்.
இந்தத் தொழுகையில் என்னால் எந்த அளவு உள்ளச்சத்தை கொண்டு வந்திருக்க முடிகிறது? இனி எந்த அளவு உள்ளச்சத்தை என்னால் கொண்டுவர முடியும்? இந்த உள்ளச்சத்தை கொண்டு வருவதற்கு நான் என்ன முயற்சி செய்கிறேன்? இதற்கு நான் எந்த அளவு சிரமப்படுகிறோம்?
அல்ஹம்து லில்லாஹ்! ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கிறது. தொழுகையாளிகளின் எண்ணிக்கை கூடுகிறது. வாலிபர்கள் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் தொழுகையாளிகள் ஆக இப்போது காட்சி தருகிறார்கள்.
ஒரு காலத்தில் மஸ்ஜிதுகளில் வயதானவர்கள் மட்டும் இருக்கின்ற நிலை இருந்தது. அந்த நிலை மாறி சிறுவர்கள் வாலிபர்கள் எல்லோரும் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை நிரப்பமாக்கக்கூடிய ஒரு சிறந்த நிலையை பார்க்கிறோம்.
இந்த தொழுகையினுடைய உள்ளச்சம் என்பது மிக முக்கியமான ஒன்று. அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சூரத்துல் முஃமினுடைய முதலிரண்டு வசனங்களில் சொல்கிறான்:
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
நிச்சயமாக ஈமான் உள்ளவர்கள் வெற்றி பெற்றார்கள். அவர்கள் தங்களது தொழுகைகளில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1,2)
ஒன்று, கண்டிப்பாக ஈமான் உள்ளவர்களுக்கு தான் வெற்றி. அந்த ஈமான் என்பது வார்த்தையால் சொல்லப்படக்கூடிய வார்த்தைகள் மட்டும் அல்ல, அதையும் தாண்டி அந்த ஈமான் என்பது சொற்களைத் தாண்டி நம்பிக்கைகளை தாண்டி அந்த முஃமினுடைய செயல்களில் உறுதிபெற வேண்டும்.
இன்று, ஈமானுக்கு தவறான அர்த்தம் சொல்லப்படுகிறது. நான் அல்லாஹ்வை நம்புகிறேன், எனக்கு இது போதும், நான் தொழுதால் என்ன? தொழவில்லை என்றால் என்ன? எப்படித் தொழுதால் என்ன? பாவங்கள் செய்தால் என்ன? அதனால் எனது ஈமானுக்கு எந்தவிதமான பாதிப்பு இருக்காது. நான் அல்லாஹ்வை நம்புகிறேன். மறுமையை நம்புகிறேன் என்று பலர் தங்களையே ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
நமது முன்னோர் மிக அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்கள்; ஈமான் நன்மைகளைக் கொண்டு அதிகரிக்கிறது. இன்னும் பாவத்தால் குறைகிறது.
பாவங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு நேரம் ஈமானே இல்லாமலும் போய்விடலாம். ஒரு மனிதன் தொடர்ந்து பாவங்களை செய்து செய்து ஒரு கட்டத்தில் பாவங்களை அவன் ருசிக்க ஆரம்பித்து விட்டால், பாவத்தை ஹலாலாக கருத ஆரம்பித்து விட்டால், ஈமான் என்ற ஒளி அவனது உள்ளத்தில் இருந்து எடுபட்டு விடுகிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அல்லாஹ் சொல்லுகிறான்: ஈமான் உள்ளவர்கள் வெற்றி அடைந்தார்கள். அந்த ஈமான் உள்ளவர்களுடைய இபாதத்துகளை முதலாவது சொல்கிறான். பிறகு, அவர்களுடைய வாழ்க்கையை சொல்கிறான்.
சூரத்துல் முஃமினுடைய அந்த முதல் 6 வசனங்களை கண்டிப்பாக வீடுகளில் நீங்கள் உங்களது மனைவி மக்களோடு குடும்பத்தாரோடு கலந்து நீங்கள் பரிமாறி பேசிக் கொள்ள வேண்டும்.
இதனுடைய கருத்துகளை நமது குடும்பத்தில் கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்ய வேண்டும்
அல்லாஹ் சொல்கிறான்: அந்த மூமின்கள், அவர்களது தொழுகையில் அவர்கள் خشوع பயம் உடையவர்களாக இருப்பார்கள். உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்.
இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லுகிறார்கள்: இந்த خشوع என்ற அந்த தன்மை அது கல்பில் இருந்து வெளிப்பட வேண்டும். ஒரு மனிதன் கை கட்டி நிற்க்கிறான். அவனுடைய பார்வை ஸஜ்தாவின் இடத்தில் இருக்கிறது. உடலெல்லாம் அமைதியாக இருக்கிறது. உள்ளம் எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறது?
அவனுடைய நிற்கக்கூடிய அமைப்புகளை பார்த்தால், அவன் ஒரு பயந்தவனைப் போன்று தெரிகிறான். ஆனால், அவனுடைய சிந்தனை எல்லாம் வேறொன்றில் இருக்கிறது. உடலும் அமைதியாக இருக்க வேண்டும். உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டும்.
உடலும் அல்லாஹ்வை பயப்படுகின்ற அந்த அமைப்பில் இருக்க வேண்டும். அதைத் தாண்டி உள்ளம் அல்லாஹ்வின் பயத்தில் அதிகமாக நிலை கொண்டிருக்க வேண்டும்.
ஒன்று இருக்கிறது; அல்லாஹ்வுடைய தண்டனையை எண்ணி அல்லாஹ்வுடைய தண்டனையை அறிந்து அதை நினைத்துப் பயப்படுவது.
அல்லாஹு தஆலா நரகத்தில் பாவிகளுக்காக ஏற்படுத்தி இருக்கக்கூடிய பயங்கரமான அந்தத் தண்டனை அந்த மாதிரியான தண்டனைகளை உலகத்தில் யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
எப்படி சொர்க்கத்தின் நிஃமத்துக்களை உலகத்தில் யாராலும் கற்பனை செய்ய முடியாதோ, எந்த கண்களும் பார்த்து இருக்காதோ, எந்தக் காதுகளும் செவியுற்றிருக்காதோ, எந்த மனிதனுடைய சிந்தனையிலும் உதித்திருக்காதோ, அதுபோன்றுதான், நரகத்துடைய அதாப் என்பது.
நூல் : புகாரி, எண் : 3005, 4406.
ரப் குர்ஆனில் சொல்கிறான்: பல வேதனைகளை சொல்லிவிட்டு, இது மட்டும் அல்ல, இன்னும் வகைவகையான எத்தனையோ அதாப்கள் இருக்கின்றன என்று. (அல்குர்ஆன் 38 : 58)
இப்படி அல்லாஹ்வுடைய தண்டனையை அல்லாஹ்வுடைய பிடியை நினைத்து பயப்படனும். இதற்கு خوف என்று சொல்லப்படும். அல்லது خشية என்று சொல்லப்படும். அல்லது رغبة என்று சொல்லப்படும்.
இன்னும் அதற்குள் விளக்கங்களும் இருக்கின்றன. خشوع என்று சொன்னால் அல்லாஹ் உடைய தண்டனையை நினைத்துப் பயப்படுவதற்கு மேலாக அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளை –தன்மைகளை, அவனுடைய மகத்துவமிக்க பண்புகளை உயர்வுகளை நினைக்கும்போது, உள்ளத்தில் ஏற்படக்கூடிய மரியாதை, கண்ணியம், அந்த கம்பீரம் கலந்த அந்த அச்சம் தான் خشوع என்பது.
ஒரு மனிதன் பெரிய ஒரு ராஜாவை நினைக்கிறான். நல்ல படைபலமும் கண்ணியம் கம்பீரம் மதிப்பு மரியாதையும் மிக்க ஒரு ராஜா உடைய பெயர் சொல்லும் போது அவனுடைய உள்ளத்தில் ஒரு விதமான பயம் ஏற்படுகிறது.
ரப்பு சொல்லுகிறான்:
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; இன்னும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்; இன்னும், அவர்கள் தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்கள். (அல்குர்ஆன் 8 : 2)
யார் அல்லாஹ்வை அவனுடைய ஸிஃபத்களோடு அறிந்தார்களோ அவர்களுக்கு முன்னால் அல்லாஹ்வைப் பற்றி பேசப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கும்.
இன்று, நாம் அல்லாஹ்வை அறிந்து வைத்திருக்கிறோம். அறியாமல் இல்லை. எப்படி அறிந்து வைத்திருக்கிறோம் என்றால், அல்லாஹ் என்று ஒரு ரப் இருக்கிறான் என்றுதான் அறிந்து வைத்திருக்கிறோமே தவிர, அந்த ரப் உடைய ஸிஃபத்துகள் என்ன? அவனுடைய மகத்துவம் என்ன என்று நமக்கு தெரியாது.
அல்லாஹ்வுடைய மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு சொல்லத் தெரியும்? குறைந்தபட்சம் சூரத்துல் இக்லாஸ் உடைய அர்த்தத்தை உணர்ந்தவர்கள் எங்கே? பலர் ஆயத்துல் குர்ஸியை மனப்பாடம் செய்திருக்கலாம். ஆனால், அதனுடைய அர்த்தத்தை எவ்வளவு புரிந்திருக்கிறார்கள்?
அல்லாஹ் கூறுகிறான்:
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا
அவனுடைய குர்சிய் – பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (-பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. (அல்குர்ஆன் 2 : 255)
இந்த ஒரு வசனத்தை இரவில் தனித்து சிந்தித்துப் பாருங்கள். அப்படியே நடுங்கிவிடுவோம்.
இத்தகைய ஒரு உயர்ந்த வானங்கள் பூமி அர்ஷ் உடைய அதிபதிக்கு முன்னாள் சாதாரண இந்த அடிமை என்னால் நிற்பதற்கு எனக்கு ஒரு பாக்கியம் கிடைத்திருக்கிறதே! அந்த ரப்புக்கு முன்னால் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே! என்னுடைய தேவையை அந்த ரப்புக்கு முன்னால் சொல்வதற்கு அவன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறானே!
என்ற உணர்வுகளை கொண்டு வரும்போது ஏற்படக்கூடிய அந்த உள்ளத்தின் மாற்றங்கள் இருக்கிறனவே அதுதான் خشوع.
இமாம் குர்துபி சொல்கிறார்கள்: இந்த கல்பில் அந்த அச்சம் வந்து விட்டால் அவனுடைய உறுப்புகள் எல்லாம் அமைதியாக அந்த அச்சத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும்.
காரணம், உள்ளம் தான் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் அரசனாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் கட்டளை போடக் கூடியதாக இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸை நாம் இந்த இடத்தில் நினைவு கூறலாம்.
أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ
உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அந்த சதைத்துண்டு சரியாக இருந்தால் உடலெல்லாம் சீராக இருக்கும். அந்த சதை துண்டு கெட்டு விட்டால் உடலெல்லாம் சீர்கெட்டு விடும். அதுதான் கல்ப் ஆகும். (1)
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 52.
எனவே தான் خشوع என்பதற்கு அறிஞர்கள் அர்த்தம் செய்யும்போது உள்ளச்சம் என்று அர்த்தம் செய்கிறார்கள். خوف என்பதற்கு பயம், அல்லாஹ்வை அஞ்சுவது என்று பொருள்.
அந்த பயம் எப்படி ஏற்பட வேண்டும் என்றால், அல்லாஹ்வை அறிந்ததால் அல்லாஹ்வுடைய மகத்துவத்தை அறிந்ததால் அவனுடைய கம்பீரத்தை அவனுடைய பரிபூரணத்துவத்தை அறிந்ததால் ஏற்படக்கூடிய பயம்.
சொல்லுகிறார்கள் : யார் எந்த அளவு அல்லாஹ்வை அவனது ஸிஃபத்துகளோடு அறிவாரோ அவர் தொழுகையில் உள்ளச்சம் உடையவராக இருப்பார்.
அப்போ நம் தொழுகையில் நம்முடைய உள்ளத்தில் அந்த நடுக்கம் வர வில்லை என்றால் அந்த அளவு நாம் ஜாஹிலாக இருக்கிறோம்.
அல்லாஹ்வைப் பற்றி ஜாஹிலாக இருக்கிறோம். எவ்வளவு கேவலம் பாருங்கள்! மனிதன் தன்னுடைய படைத்த இறைவனை அறியாமல் இருப்பது அறியாமையிலேயே மோசமான அறியாமை. கேவலமான அறியாமை. அல்லாஹ் பாதுகாப்பானாக!
சஹாபாக்கள் எப்படி தொழுதார்கள்? அவர்களது தொழுகை எப்படி இருந்தது? அப்துல்லாஹ் இப்னு உமர் சொல்லுகிறார்கள்: அவர்கள் தொழுகைக்காக வந்தால் அந்தத் தொழுகையை தான் கருத்தில் கொண்டு இருப்பார்கள். அந்தத் தொழுகையின் பக்கம் அப்படியே முன்னோக்கி விடுவார்கள்.
பார்க்க : அத்துர்ருல் மன்சூர் - இமாம் ஸீயூத்தீ 7/184
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! இன்று மஸ்ஜிதிற்கு வரும்போதுதான் பலநூறு சிந்தனைகளை கொண்டு வருகிறோம். ஷைத்தானுக்கு எந்த அளவு அவனுடைய வலையில் நாம் சிக்கி இருக்கிறோம் என்றால், நாம் மறந்தது எல்லாம் நமக்கு மஸ்ஜிதிற்கு வந்தால் தான் நினைவுக்கே வருகிறது.
யாருக்கு எதை கொடுத்தோம்? யார் நமக்கு எதைக் கொடுக்க வேண்டும்? எங்கே போகவேண்டும்? எங்கே வரவேண்டும்?
இப்படியாக ஷைத்தானுடைய அந்த ஊசலாட்டங்களில் நாள்தோறும் சிக்கி இருக்கின்ற நாம் மஸ்ஜிதுக்கு வரும்பொழுது மறுமை சிந்தனை, தான் செய்த பாவங்களை நினைத்து இந்த தொழுகையில் தவ்பா கேட்டு தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படியான ஒரு நினைவுகள் நமக்கு அங்கே வருவது கிடையாது. யா அல்லாஹ்! எனக்கு பல சிரமங்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் உன்னிடத்தில் கேட்க வந்திருக்கிறேன். நீ எனக்கு சீர்படுத்தி கொடுப்பாயாக! அது துவா உடைய நிய்யத்
ஆனால், நான்தான் எல்லாம் என்று பல எண்ணங்களில் வரும்பொழுது அந்த தொழுகை எப்படி தொழுகையாக இருக்கும்? அதில் எப்படி அவனுடைய மனம் ஈடுபடும்?
ஒரு கல்யாணத்துக்கு செல்லும் பொழுது மனிதன் வேறு எதையாவது சிந்திக்கிறானா? தன்னுடைய சந்தோஷம் கெட்டு விடுமோ என்று அவன் எதையும் நினைப்பதில்லை.
ஆனால், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிற்கு வரும்பொழுது அவ்வளவு சிந்தனையில் செல்கிறான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
அல்லாஹ்வுடைய தொடர்பைத் துண்டிக்க கூடிய அனைத்தையும் சிந்தித்து கொண்டு வருகிறான். அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிற்கு வரும்பொழுது அல்லாஹ்வோடு இவனுக்கு இருந்த அந்த பலவீனமான தொடர்பை பலப்படுத்தக்கூடிய, அல்லாஹ்வுடன் இவனுக்கு இருந்த அந்தத் தொடர்பை பிரகாசமாக்க கூடிய, அதிகப்படுத்தக் கூடிய விஷயங்களை சிந்திப்பதற்கு பதிலாக, இருக்கின்ற அந்த பலவீனமான தொடர்பையும் அறுத்துவிடக் கூடிய சிந்தனைகளை கொண்டுதான் மஸ்ஜிதுக்குள் நுழைகிறார்கள்.
அல்லாஹ்விற்கு என்ன சிந்தனை பிடிக்கும்? யா அல்லாஹ்! நான் தப்பு செய்து விட்டேன், என்னை மன்னிப்பாயாக! யா அல்லாஹ் நான் அமல்களில் பலவீனமாக இருக்கிறேன், எனக்கு அமலுக்கு அருள் புரிவாயாக! யா அல்லாஹ்! உன்னுடைய அன்பு குறைவாக இருக்கிறது, அந்த அன்பை எனக்கு அதிகபடுத்து! நான் எத்தனையோ நன்மைகளை செய்ய நினைக்கிறேன்.
ஆனால், என்னுடைய பலவீனத்தால் செய்யமுடியவில்லை. அந்த நன்மைகளை செய்வதற்கு எனக்கு வாய்ப்பு கொடு! யா அல்லாஹ்! ஆஃகிரத்தில் எனக்கு உயர்ந்த தர்ஜாவை கொடு!
இப்படியாக, இந்த சிந்தனைகள்தான் அல்லாஹ்வுடன் அவனுக்கு இருக்கக்கூடிய தொடர்பை அதிகப்படுத்தும்.
அவனுடைய வியாபார சிந்தனை, கொடுக்கல் - வாங்கல் சிந்தனை, பொருளாதார சிந்தனை அல்லது அவனுடைய வீண் விளையாட்டுகள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அடுத்து இவன் வாழ்க்கையில் விளையாண்டது வீணாகக் கழித்தது சுற்றியது வந்தது போனது இவற்றையெல்லாம் சிந்திக்கக்கூடிய நிலைக்கு இந்த மனிதர் தள்ளப்பட்டால், அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு பலப்படுமா? அல்லது பலவீனமாகி குறைந்து போகுமா? என்று. யோசித்துப் பாருங்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்: நபித்தோழர்கள் தொழுகைக்காக தயாராகி விட்டால், அவ்வளவுதான், தொழுகையைத் தவிர வேறு ஒன்றுமே நினைவுக்கு இருக்காது.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து இப்படி பாடத்தை அவர்கள் படித்து இருந்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்:
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிலிருக்கும்போது கிழிந்த ஆடைகளைத் தைப்பார்கள். எங்களுக்கு ஆடுகள் இருந்தால் அந்த சமயத்தில் அந்த ஆடுகளில் பால் கறக்க வேண்டும் என்றால், அந்த ஆட்டிலிருந்து பால் கரந்து எங்களுக்கு கொடுப்பார்கள். தன்னுடைய காலனி பிய்ந்து இருந்தால் அந்தக் காலனியை அவர்களே தைத்துக் கொள்வார்கள்.
இப்படியாக வீட்டின் வேளைகளை சீர் செய்வதில் ஈடுபட்டிருப்பார்கள்.
இன்னும் தெளிவாக இப்படி வருகிறது;
«كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ - تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ - فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ»
தனது மனைவிமார்களுக்கு பணிவிடை செய்வதில் இருப்பார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 635, 676.
இங்கே ஆண்கள் கொஞ்சம் படிப்பினை பாடம் பெறவேண்டும். இன்று, மனைவிமார்களுக்கு பணிவிடை செய்வது என்பதோ அது ஒரு கேவலமான ஒரு வேலையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கும் குடும்பத்திற்கும் சாப்பிடுவதைத் தவிர, தூங்குவதை தவிர, அல்லது சம்பாதித்து கொடுப்பதை தவிர, வேறு எதுவுமே நமக்கு சம்பந்தம் இல்லை என்பதைப் போன்ற உணர்வில் இருக்கின்றார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் தன்னுடைய மனைவிமார்களுக்கு பணிவிடை செய்வதில் இருப்பார்கள்.
எவ்வளவு பெரிய ரசூல்! அங்கேயும் போய் தக்பீர் கட்டிகிட்டு நான் அல்லாஹ்வோடு பேசிகிட்டே இருப்பேன், இன்னைக்கு சில போலி மக்கள் செய்வதைபோல அல்ல.
தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வை வணங்க வேண்டும். மக்களோடு இருக்கும்போது மக்களோடு மக்களாக பழக வேண்டும். சிரிக்க வேண்டும் .அவர்களுடைய இன்பத் துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
நடிப்பவர்கள் என்ன செய்வார்கள்? தனிமையில் இருந்தால் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். மக்களோடு வரும்போதுதான் பெரிய அறிவாளி; தான் பெரிய மார்க்க சிந்தனை உள்ளவன்; தான் பெரிய ஆன்மீகவாதியை போன்று அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அல்லது ஒருமாதிரியாக பார்த்துக் கொண்டு அல்லாஹ் உடைய சிந்தனையில் மறுமை சிந்தனையில் இருப்பதைப் போன்று இருப்பார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இத்தகைய குணங்களில் இருந்து மிக தூய்மையானவர்கள் தனிமையில் இருந்தால் அழுவார்கள் அல்லாஹ்வுடைய அச்சத்தால் நடுங்குவார்கள் மக்களோடு பழகினாள் அவர்களை விட சிரித்த முகம் உடையவர் யாரும் இருக்க மாட்டார்கள் அவர்களைவிட மலர்ந்த முகம் உடையவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்
அன்பானவர்களே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்லுகிறார்கள்:
எங்களோடு இருக்கின்ற ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பிலால் உடைய சத்தத்தைக் கேட்டு விட்டால் எங்களை விட்டுச் செல்வார்கள். எங்களை அவர்கள் அறியாதவர்களை போல, ஏதோ நாங்க அவர்களுக்கு ஏதோ முன்னப்பின்ன தெரியாதவர்களை போல, அப்படியே சென்றுவிடுவார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 635, 676.
அல்லாஹ்வுடைய தொழுகைக்கான அழைப்பு வந்து விட்டால், தொழுகை என்று வந்து விட்டால், அவ்வளவுதான் நான், பெரிய வியாபாரி, கொடுக்கல் வாங்கல் தொழில் எல்லாம் அவ்வளவுதான்.
இப்போது எனக்கு முன்னால் எனது ரப்பை தவிர, எனது ரப்பை வணங்குவதைத் தவிர, அவனிடம் கேட்பதைத் தவிர, எனக்கு வேறு சிந்தனை இல்லை.
இதுதான் சஹாபாக்கள் உடைய பழக்கமாக இருந்தது. அவர்கள் தொழுகையில் நின்று விட்டால் அவர்களது பார்வைகள் எல்லாம் அவர்களுடைய சுஜுத் உடைய இடத்தில் அப்படியே நிலை குத்தி விடும். அந்த பார்வைகளை அப்படியே தாழ்த்திக் கொள்வார்கள்.
இன்று, தக்பீர் கட்டியவுடன்தான் பாக்கெட்டை நோண்டுறது. அங்க பாக்குறது, இங்க பார்க்கிறது, சுத்தி வந்துருவாரு, உலகத்தையே கல்பு சுத்துது, கண்ணும் சேர்ந்து சுத்துகிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
ஆனால், அந்த நபித்தோழர்கள் அல்லாஹு தஆலா தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தொழுவார்கள். அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும்பொழுது அல்லாஹ் இப்போது நம்மை முன்னோக்க ஆரம்பித்துவிட்டான், எனவே இங்கும் அங்கும் அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
அப்படித்தானே ஹதீஸ் சொல்கிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ»
ஒரு அடியான் தொழுகைக்காக நின்று விட்டால் தனது ரப் இடத்தில் பேசுகிறான் தனது ரப் இடத்தில் அவன் உரையாடுகின்றான். (2)
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 405.
நீங்களும் பேசுகிறீர்கள். ரப்பும் உங்கள் இடத்தில் பேசுகிறான். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் சொல்வதாக சொன்னார்கள்:
நான் தொழுகையை எனக்குப் பாதி எனது அடியானுக்குப் பாதியாக வைத்து விட்டேன். அவன் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று சொன்னால், நான் சொல்லுகிறேன்; حمدني عبدي எனது அடியான் என்னைப் புகழ்கிறான் என்று.
அர் ரஹ்மானிர் ரஹீம் என்று அவன் சொன்னால், நான் சொல்கிறேன்; اثنى علي عبدي -எனது அடியான் என்னை துதி பாடுகிறான்.
அவன் மாலிகி யவ்மித்தீன் என்று கூறினால் எனது அடியான் என்னை கண்ணிய படுத்துகிறான். அவன் اياك نعبد واياك نستعين என்று கூறினால் நான் சொல்லுகிறேன் هذا بيني وبين عبديஇது எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் உள்ள ஒப்பந்தம் என்று.
அடுத்து, எனது அடியான் எதை கேட்கிறானோ அது அவனுக்கு கிடைக்கும் என்று நான் சொல்லுகிறேன். (3)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 821.
நாம் தொழுகையில் நின்று குர்ஆன் ஓதும் போது அல்லாஹ்விடம் அவனது வசனங்களைக் கொண்டு நாம் பேசுகிறோம்.
இமாம் இப்னு ஜரீர் தபரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய விளக்கத்தை எழுதுகிறார்கள்;
(அல்குர்ஆன் 23 : 2) என்ற வசனத்திற்கு خَاشِعُوْنَ என்றால் உள்ளத்தால் அல்லாஹ்வை பயந்தவர்களாக உடலால் அமைதியானவர்களாக இருப்பார்கள்.
பல பேரை நீங்கள் பார்க்கலாம்; சிலநேரங்களில் கவனிக்கவில்லை என்றால் நாமும் அந்த நிலைக்குள் கூட இருந்திருக்கலாம். இப்படிச் சாய்வார்; அப்படி சாய்வார்; காலை இந்த பக்கம் வைப்பார்; அந்த பக்கம் வைப்பார்; அவருக்கே தெரியாமல் என்னென்னமோ காரியங்களை செய்வார்.
ஏனென்றால், நான் தொழுகையில் இருக்கிறேன் என்ற உணர்வை அதனுடைய ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நாம் அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால், ஒரு செகண்ட் கிடைத்தால் போதும், ஷைத்தான் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுவான். ஷைத்தானுக்கு நம்முடைய சிந்தனையை நம்முடைய உள்ளத்தை பரித்து செல்வதற்கு நீண்ட நேரம் தேவையில்லை. நிமிடக் கணக்கில் நேரங்கள் தேவை இல்லை. ஒரு நொடி போதுமானது.
நான் தொழுகையிலேயே இருக்கிறேன் என்ற உணர்வை சில நொடிகளுக்கு நாம் மறந்தால் போதுமானது, ஷைத்தான் நம்முடைய தொழுகையில் நம்முடைய உள்ளத்தை பறித்து வேறு சிந்தனைக்கு கொண்டு சென்று, உள்ளமும் இருக்காது உடலும் இருக்காது.
அப்போது ஏதும் தெரியாது. நாம் கேட்ட துஆக்கள் கூட நாம் அந்த உணர்வோடு கேட்காத நிலைக்கு ஆளாகி விடுவோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இதற்கு விளக்கம் கூறுகிறார்கள்:
இந்த உள்ளச்சம் என்ற இந்த உணர்வு யாருக்கு கிடைக்கும் என்றால், யார் தொழுகைக்காக தனது உள்ளத்தை முழுமையாக ஒதுக்கி கொண்டார்களோ அவர்களுக்குத்தான் இது கிடைக்கும்.
உள்ளத்தை கடையில் பாதி வைத்துவிட்டால் தொழிலில் பாதி வைத்துவிட்டால் அங்கு பாதி இங்கு பாதி என்பதாக உள்ளத்தை பங்கு போட்டு விட்டு தொழுகைக்கு வரக்கூடியவர்களுக்கு அந்த خشوع கிடைக்காது.
ஒரு பாத்திரம் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தில் நீங்கள் ஒன்றை நிரப்ப வேண்டும் என்று விரும்புகிறீர்கள். முதலில் அந்தப் பாத்திரம் காலியாக இருக்க வேண்டும். ஏற்கனவே பாத்திரம் ஒரு பொருளால் நிரம்பி இருக்கும்போது எப்படி நிரப்ப முடியும்?
அதுபோன்றுதான், ஏற்கனவே உலக சிந்தனைகளாலும் பற்பல சிந்தனைகளாலும் முரண்பட்ட எண்ணங்களாலும் நம்முடைய உள்ளங்கள் நிரம்பி இருக்க, இப்போது ஆஃகிரத்துடைய எண்ணங்களை இதில் கொண்டுவர வேண்டும் என்றால், முதலில் அந்த உலக சிந்தனைகளை நாம் களைய வேண்டும்.
முதலில் நம்முடைய உள்ளத்தை அந்த எண்ணங்களிலிருந்து சுத்தப்படுத்தி, கொஞ்ச நேரத்துக்கு அந்த எண்ணங்களை எல்லாம் வெளியே வைக்க வேண்டும்.
இந்த துன்யாவே! கொஞ்ச நேரத்துக்கு நீ பள்ளிவாசலுக்கு வெளியில இரு! திரும்பி வந்த உடனே நான் உன்னை எடுத்துக்கிறேன். பயப்படாதே நான் உன்ன விட்டு போக மாட்டேன். நான் ஒன்னும் பள்ளிவாசலுக்கு போறது சன்னியாசி ஆகுறதுக்கு போகல.
அந்த மாதிரி பயம் ரொம்ப பேருக்கு இருக்கு. சில பெற்றோர்கள், தன் பிள்ளை சினிமாக்கு போகும்போது, சுத்தப் போகும்போது, கெட்டுப் போகும் போது கவலைப்பட மாட்டார்கள்.
பள்ளிவாசலுக்கு பேணுதலா போய்ட்டா அவர்களுக்கு பயம் வந்துரும். என்ன பயம்? ஆஹா உலக ஆசை இல்லாமல் போய்டுவானோ! என் புள்ளைக்கு துன்யா இல்லாமல் போய் விடுவானோ! ஆஃகிரத் ஆஃகிரத்னு இப்படியே போய்டுவானோ!
இப்படி ஷைத்தான் பண்ணக்கூடிய வேலையை ஷைத்தான் தூண்டக்கூடிய சிந்தனையை செய்கிறார்கள். இன்னும் சில பெற்றோர்கள் சொல்லி அனுப்புவாங்க; பள்ளிக்கு போனா சீக்கிரமா தொழுதுட்டு சீக்கிரமா வந்துடு.
வேற எங்க போனாலும் இதை சொல்ல மாட்டாங்க. காரணம், துன்யா அந்த அளவு உள்ளத்தில் இடம் பிடித்திருக்கிறது. தீன்ல போயிட்டா என் புள்ள துன்யாவுக்கு இருக்கமாட்டான், அப்புறம் எனக்கு என்ன இந்தத் துன்யால? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
இமாம் இப்னு கசீர் சொல்லுகிறார்கள்: இந்த خشوع என்பது யாருக்கு கிடைக்கும் என்றால், யார் தொழுகைக்காக தனது உள்ளத்தை காலியாக்கி விட்டு அந்தப் பள்ளிக்கு வருகிறார்களோ அவர்களுக்கு இது கிடைக்கும்.
தொழுகையில் முழுமையாக ஈடுபட்டு, மற்ற விஷயங்களை எல்லாம் ஒதுக்கி விடுகிறார்களோ, அவர்களுக்குதான் இந்த உள்ளச்சம் கிடைக்கும்.
அப்படி யாருக்கு அந்தத் தொழுகை அமைந்ததோ, அந்த தொழுகை அது அவருக்கு ராஹத்தான தொழுகையாக இருக்கும். நீண்ட நேரம் தொழுததால் கால் வலிக்கும், உடல் வலித்திருக்கும்.
ஆனால், அது ரெஸ்ட் ஆக இருக்கும். இரவில் நீண்டநேரம் தொழுவதால் கண்கள் விழித்து இருக்கும். ஆனால், கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிலாலுக்கு சொன்னார்கள்:
«يَا بِلَالُ أَقِمِ الصَّلَاةَ أَرِحْنَا بِهَا»
பிலால்! இந்த தொழுகையின் மூலமாக எங்களுக்கு ராகத்தை கொடுப்பீராக! தொழுகைக்காக இகாமத் சொல்லி, எங்களுக்கு ராகத்தை கொடுப்பீராக!
அறிவிப்பாளர் : சாலிம் இப்னு அபில் ஜஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4985.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்னும் சஹாபாக்கள் தொழுகையில் ராஹத்தைப் பார்த்தார்கள். கஷ்டமான போர் உடைய நேரம். எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்!
அன்றைய இரவில் அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள் என்றால், தொழுகையில் எவ்வளவு ராகத்தை அவர்கள் பார்த்திருப்பார்கள்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: எனக்கு துன்யாவில் பெண்கள் பிடிக்கும். எனக்கு துன்யாவில் நறுமணம் பிடிக்கும். ஆனால், எனது கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது என்று சொன்னார்கள்.
இப்படிப்பட்ட நிலை யாருக்கு கிடைக்கும்? எந்த தொழுகையின் மூலமாக நாம் அல்லாஹ்வை நெருங்குவதற்கான நம்முடைய கல்பை காலியாக்கி விட்டு, உலக சிந்தனைகளிலிருந்து ஒதுக்கிவிட்டு, ஆஃகிரத்துக்காக தொழுகிறோமோ அத்தகைய தொழுகையாளிகளுக்கு அந்த خشوعகிடைக்கும்.
அப்படி கிடைத்தால் தொழுகை ராகத் ஆக இருக்கும். அந்தத் தொழுகை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
இமாம் இப்னு ஜரீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இன்னொரு விளக்கத்தை சொல்கிறார்கள்: அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சூரத்துல் பகராவில் நாற்பத்தி ஐந்தாவது வசனத்தில், நீங்கள் தொழுகையின் மூலமாக அதுபோன்று பொறுமையாக இருந்து அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2 : 45)
உங்களுக்கு உதவி வேண்டும் என்றால், அது எந்த வகையான உதவியாக இருந்தாலும் சரி, உங்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய இரண்டு ஆயுதங்கள், ஒன்று, பொறுமை. இன்னொன்று, தொழுகை.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு மைதானத்திற்கு சென்றபோது, அன்று, இரவெல்லாம் அல்லாஹ்விடத்தில் தொழுது, யா அல்லாஹ்! உனது வாக்கை நிறைவேற்று! உனது வாக்கை நிறைவேற்று! என்று தொழுகையில் துஆ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் தனது மனைவியை அந்த எகிப்து உடைய அரசன் அபகரிப்பதற்காக இழுத்துச் சென்ற பொழுது, அந்த மனைவியை அந்த காவலாளிகள் அழைத்துச் சென்றதிலிருந்து அவர்கள் திரும்பி வருகின்ற வரை அப்படியே தொழுகையில் நின்று விட்டார்கள்.
அல்லாஹ் பாதுகாத்தான். இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் இந்த செய்தியை பதிவு செய்கிறார்கள்.
நூல் : முஸ்லிம், எண் : 4371.
இமாம் தபரி சொல்கிறார்கள்; இந்த சூரத்துல் பகரா உடைய இரண்டாவது அத்தியாயத்தின் நாற்பத்தி ஐந்தாவது வசனத்திற்கு விளக்கமாக, நிச்சயமாக இந்த தொழுகை யார் பயந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்று அல்லாஹ் சொல்லுகிறான்.
இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லும் பொழுது, خاشعين என்பவர்கள் யார்? அல்லாஹ்வுடைய கட்டளைக்குப் பணிய வேண்டும் என்ற அந்தப் பணிவுள்ளவர்கள். அல்லாஹ்வுடைய பிடியை பயந்தவர்கள். அல்லாஹ்வுடைய வாக்கையும் எச்சரிக்கையும் உண்மை என்று நம்பக் கூடியவர்கள்.
இவர்களுக்கு தொழுகை கஷ்டமாக இருக்காது. இவர்களுக்கு தொழுகை இன்பமாக இருக்கும். இவர்களுக்கு தொழுகை ராஹத் ஆக இருக்கும்.
இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதே வசனத்திற்கு விளக்கம் சொல்லும் பொழுது எழுதுகிறார்கள்;
அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான்; தொழுகை خاشعين களை தவிர மற்றவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்று. அந்த خاشعين யார் தெரியுமா? அவர்கள் உறுதியாக மனதில் அறிந்து நம்பிக்கை கொண்டிருப்பார்கள்;
நாம் மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் கொண்டு வரப்படுவோம். நாம் அல்லாஹ்விற்கு உன்னால் சமர்ப்பிக்கப்படுவோம். நமது எல்லா காரியங்களும் அல்லாஹ்வின் பக்கம் தான் திரும்பக் கூடியது.
தனது நீதத்தால் அல்லாஹு தஆலா அவன் நாடிய தீர்ப்பை எனது காரியங்களில் செய்வான். எனக்கு மறுமை என்ற ஒன்று இருக்கிறது. அந்த மறுமையில் நான் செய்த செயல்களுக்கு கூலி இருக்கிறது என்ற நம்பிக்கையில் யார் இருப்பார்களோ, அவர்களுக்கு தொழுகை லேசாக இருக்கும். இன்பமாக இருக்கும்.
இந்த நம்பிக்கை இருக்கின்ற காரணத்தினால் தான் இமாம் இப்னு கஸீர் சொல்லுகிறார்கள் இப்படிப்பட்ட இந்த தன்மை உள்ளவர்களுக்கு இந்தத் தன்மையை எட்டியவர்களுக்கு இது சும்மா வந்து விடாது.
எங்கேயோ ஒரு பயானை கேட்டுட்டா படிச்சுட்டு வந்துடும்னு நினைக்காதீங்க. இதற்காக நாம் அல்லாஹ்விடத்தில் துவா கேட்பதில் இருந்து, சிந்திப்பதில் இருந்து, மீண்டும் மீண்டும் நம்மை அந்த சிந்தனைக்கு உட்படுத்துவதிலிருந்து, இப்படியாக நம்மை பயிற்சியில் கொண்டு வரும்போதுதான், இந்த தன்மை ஏற்படும்.
இமாம் இப்னு கஸீர் சொல்லுகிறார்கள்: யாருக்கு இந்த தன்மை வந்துவிடுமோ அவருக்கு வணக்க வழிபாடுகள் லேசாக இருக்கும். பாவங்களை விட்டு விலகுவது அவருக்கு லேசாக இருக்கும்.
இந்த நம்பிக்கை வராதவரை அவரால் வழிபாடுகள் செய்வது அவருக்கு சிரமமாக இருக்கும். பாவங்களை விட்டு விலகுவது சிரமமாக இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. இந்தத் தொழுகையில் உள்ளச்சம் ஏற்படுவதற்கு அறிஞர்கள் கூறிய பல கருத்துகள் குறிப்புகள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து மற்ற ஜும்மாகளில் பார்ப்போம்.
எப்படி நம்முடைய ஒரு தொழிலோ வியாபாரமோ அதில் லாபம் இல்லை என்றால் அதை செய்து என்ன பலன்? நம்முடைய இந்தத் தொழுகை நாளை மறுமையில் நமக்கு வெற்றியைத் தேடித் தரக்கூடிய தொழுகையாக இருக்க வேண்டுமென்றால், அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடித்தரக்கூடிய தொழுகையாக இருக்க வேண்டுமென்றால் அந்தத் தொழுகையில் உள்ளச்சம் இருக்க வேண்டும்.
அந்த உள்ளச்சத்தை பெறுவதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அத்தகைய உள்ளச்சம் உடைய அல்லாஹ்வுடைய பயமும் மறுமையின் நினைவும் உடைய தொழுகைகளை நசீப் ஆக்குவானாக! அல்லாஹ் நம் குறைகளை மன்னித்தருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ " (صحيح البخاري- 52)
குறிப்பு 2)
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي القِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ، فَقَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ، فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ» ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ، فَبَصَقَ فِيهِ ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ: «أَوْ يَفْعَلُ هَكَذَا» (صحيح البخاري- 405)
குறிப்பு 3)
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زَهْرَةَ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ [ص:217] فَهِيَ خِدَاجٌ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ» قَالَ: فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ، إِنِّي أَكُونُ أَحْيَانًا وَرَاءَ الْإِمَامِ قَالَ: فَغَمَزَ ذِرَاعِي، وَقَالَ: اقْرَأْ بِهَا يَا فَارِسِيُّ فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " قَالَ اللَّهُ تَعَالَى: قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ: فَنِصْفُهَا لِي، وَنِصْفُهَا لِعَبْدِي، وَلِعَبْدِي مَا سَأَلَ " قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اقْرَءُوا يَقُولُ الْعَبْدُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: حَمِدَنِي عَبْدِي، يَقُولُ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَثْنَىعَلَيَّ عَبْدِي، يَقُولُ الْعَبْدُ {مَالِكِ يَوْمِ الدِّينِ}، يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: مَجَّدَنِي عَبْدِي، يَقُولُ الْعَبْدُ {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5]، يَقُولُ اللَّهُ: هَذِهِ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ، يَقُولُ الْعَبْدُ {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ، صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ، وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، يَقُولُ اللَّهُ: فَهَؤُلَاءِ لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ " (سنن أبي داود- 821)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/