HOME      Khutba      ஆதரவின் நற்பலன்கள் | Tamil Bayan - 632   
 

ஆதரவின் நற்பலன்கள் | Tamil Bayan - 632

           

ஆதரவின் நற்பலன்கள் | Tamil Bayan - 632


 بسم الله الرحمن الرحيم
 
ஆதரவின் நற்பலன்கள்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணி வாழுமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக இந்த ஜும்ஆவின் குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா  நம்முடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள் புரிவானாக! நம்முடைய இம்மை வாழ்க்கையையும், மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக்கி வைப்பானாக! நாம் ஆதரவு வைக்க கூடிய அல்லாஹ்வின் மன்னிப்பையும், அல்லாஹ்வின் அன்பையும், அவனுடைய சொர்க்கத்தையும் நமக்கு தந்தருள்வானாக! நாம் பயப்படக்கூடிய அவனுடைய கோபத்தையும், அவனுடைய வெறுப்பையும், அவனுடைய நரக தண்டனைகளை விட்டும் அல்லாஹ் என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள் புரிவானாக ஆமீன்!
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! சென்றவார குத்பாவிலே அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல் என்ற தலைப்பில் சில முக்கியமான விஷயங்களை நாம் பகிர்ந்து கொண்டோம். அதனுடைய தொடர்ச்சியாக இந்த ஆதரவு சம்பந்தமான மேலும் சில விஷயங்களை இன் ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவிலே நாம் பார்ப்போம். 
 
அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல். அல்லாஹ்வுடைய அன்பை, அல்லாஹ்வுடைய மன்னிப்பை, இன்னும் நமக்கு எது தேவை என்று நன்மையான விஷயங்களில் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கிறோமோ, இது நம்முடைய ஈமானோடு தொடர்புடைய ஒரு குணம். ஈமானோடு தொடர்புடைய ஒரு ஸிஃபத் என்பதை பார்த்தோம். 
 
நிராசையாகி விடுவது, அல்லாஹ்வின் மீது உண்டான ஆதரவை இழந்து விடுவது, அல்லாஹ்வின் மீது அல்லது அவனுடைய விதியின் மீது சடைவடைவது, வெறுப்பு கொள்வது இது ஒரு மனிதனை இறை நிராகரிப்பிலே நயவஞ்சகத்திலே தள்ளி விடும் என்பதை நாம் பார்த்தோம்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இன்றைய இந்த ஜும்ஆவிலே நாம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய அருளின் மீதும் ஆதரவு வைப்பதால் நமக்கு என்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதையும், அந்த ஆதரவை நாம் எப்படி நமக்குள் கொண்டு வருவது என்பதைப் பற்றியும் இன் ஷா அல்லாஹ் பார்ப்போம். 
 
நற்பலன் : 1 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா யார் அவன் மீது அதிக ஆதரவு வைக்கிறார்களோ, அவனுடைய ரஹ்மத்தையும் அவனுடைய நற்கூலிகளையும் அவர்களுக்கு அல்லாஹு தஆலா கொடுக்கக்கூடிய ஒரு பெரிய நற்பாக்கியம் என்னவென்றால், அவர்களுடைய உள்ளங்களில் நல்ல அமல்களில் மீது, நன்மைகளை செய்வதின் மீது, ஆர்வம் ஏற்படும். 
 
நன்மைகளை, இபாதத்களை அவர்கள் வீரத்தோடு, அதிக ஆர்வத்தோடு, அது எவ்வளவு தான் சிரமமாக இருந்தாலும் சரி, அந்த இபாதத்களை செய்வதில் ஏற்படக்கூடிய சிரமங்களை பொருட்படுத்தாமல், அந்த நன்மைகளை செய்யும் போது ஏற்படக்கூடிய இடையூறுகளை பொருட்படுத்தாமல் அவர்கள் நன்மைகளை செய்வதில் முந்திக் கொண்டு செல்வார்கள். 
 
காரணம் என்ன? இந்த நன்மைகளை செய்வதால் அல்லாஹ்விடத்தில் எனக்கு என்ன கூலி இருக்கிறது? என்பதை அவர்கள் அறிந்து கொண்டு அந்த நன்மையை அவர்கள் ஆதரவு வைக்கின்ற காரணத்தால் அந்த கூலியினுடைய மதிப்பு, அதனுடைய பெருமதி அவர்களுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகின்ற காரணத்தால், இந்த இபாதத்துகளை செய்வதில் உலகத்தில் ஏற்படக்கூடிய தற்காலிக சிரமங்கள், இந்த சிறிய சிறிய இடையூறுகள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. 
 
பிறகு ஒரு காலத்திலே அவர்களுடைய நஃப்ஸ் அவர்களுக்கு எப்படி கட்டுப்பட்டதாகி விடும் என்றால், இபாதத்துகளில் ஏற்படக்கூடிய சிரமங்கள், இபாதத்துகளில் ஏற்படக்கூடிய அந்த உடல் சோர்வுகளும், இபாதத்துகள் செய்யும் போது ஏற்படக் கூடிய அந்த உடல் வலிகளும் அவர்களுக்கு இன்பமாக மாறிவிடும். கஷ்டம் அவர்களுக்கு ஆதரவாக இன்பமாக மாறிவிடும். 
 
நம்முடைய ஸலஃபுகளில் ஒருவர் கூறுகிறார்கள்;
 
كابدت قيام الليل عشرين سنة ثم تنعمت به عشرين سنة
 
இரவு வணக்க வழிபாடுகளை செய்வதில் எனக்கு 20 ஆண்டுகள் அதில் சிரமம் தான் இருந்தது. அந்த சிரமத்தோடு, நஃப்ஸுக்கு அது சுமையாக இருக்கும் போது, அந்த இரவு வணக்கத்தை செய்து செய்து நான் பழகினேன். பிறகு அந்த இரவு வணக்கத்திலே நான் சுகம் கண்டேன். அந்த இரவு வணக்கத்திலே நான் இன்பம் கண்டேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கால்கடுக்க, காலெல்லாம் வீங்குகிற அளவுக்கு அவர்கள் இரவில் தொழுதார்களே எவ்வளவு வலி ஏற்பட்டிருக்கும்? நமக்கும் அந்த நல்லோர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இது போன்ற சிரமங்கள் இபாதத்துகளிலே நமக்கு ஏற்படும் போது நாம் இந்த இபாதத்துகளால் மறுமையில் கிடைக்கக் கூடிய நன்மைகளை கண்ணுக்கு முன்னால் கொண்டு வருவதில்லை. 
 
ஆகவேதான் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட்ட உடன், கொஞ்சம் உடலுக்கு வலி ஏற்பட்ட உடனேயே அல்லது வேறு ஏதாவது சிரமங்கள் ஏற்பட்ட உடனே அந்த இடத்தை விட்டு விடுகிறோம். போதும் இப்பொழுது என்பதாக நமக்கு நாமே திருப்திக் கொள்ள வைத்து கொள்கின்றோம்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இதனால் கிடைக்கக் கூடிய மகத்தான கூலிகளை ஆதரவு வைப்பவர்கள், இந்த இபாதத்துக்காக எவ்வளவுதான் நான் என்னை வருத்திக் கொண்டாலும் அது ஒரு சாதாரணமான ஒன்றுதான் என்பதாக அவர்கள் இந்த சிரமங்களை இந்த கஷ்டங்களை பொருட்படுத்த மாட்டார்கள். 
 
இந்த ஆதரவு என்பது அவர்களுக்கு இவ்வளவு பெரிய மன வலிமையைக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் சிரமங்களை சந்திப்பதிலே, இன்னல்களை சந்திப்பதிலே, அவர்களுக்கு ஒரு பெரிய மன தைரியத்தைக் கொடுக்கிறது. 
 
எதிரிகளுக்கு முன்னால் கொல்லப்படுவோம் என்ற எதார்த்த நிலையை பார்த்ததற்கு பிறகு சஹாபாக்கள் எந்தவிதமான தற்காப்பு ஆயுதங்கள் கூட இல்லாமல் கையில் இருந்த ஒரு வாளை மட்டும் எடுத்துக்கொண்டு எதிரிகளுடைய கூட்டங்களுக்கு முன்னால் அவர்கள் நுழைந்தார்களே! என்ன காரணம்? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த அந்த வாக்கின் மீது அவர்களுக்கு இருந்த ஆதரவு. யார் இந்த போரில் கொல்லப்படுவாரோ அவர் சொர்க்கம் செல்வார் என்று கூறிய உடனே கையிலிருந்த பேரீத்த பழங்களை போட்டுவிட்டு இந்த பேரித்தம் பழங்களை சாப்பிடுகின்ற வரை நான் இந்த வாக்கை கேட்டதற்கு பிறகு வாழ்வேனேயானால் அது ஒரு நீண்ட வாழ்க்கை ஆயிற்றே என்று அவர் எதிரிகளுக்கு முன்னால் செல்கின்றார். ஷஹீதாகி விடுகின்றார்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ஒரு ஆதரவு சஹாபாக்களுக்கு தாபியீன்களுக்கு அந்த நல்லோர்களுக்கு இருந்தது. இபாதத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை அவர்களுக்கு இலேசாக்கி கொடுத்தது. மேலும் அந்த இபாதத்துகளை தொடர்ச்சியாக செய்வதற்கு அவர்களுக்கு ஒரு பெரிய உந்து சக்தியாக இருந்தது. 
 
நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். அதைக் கேட்கும்போது நமக்கு ஆர்வம் வரும். அந்த நேரத்தோடு முடிந்தது. அதற்கு பிறகு ஜமாஅத் தொழுகைக்கு எழும்போது, அல்லது ஒரு தொழுகைக்கு தயாராகும் போது அந்த தொழுகையினுடைய சிறப்பு நமக்கு ஞாபகத்திற்கு வராததால் அந்த சிறப்பை அடைய வேண்டுமென்ற ஆதரவு நம்முடைய உள்ளத்தில் ஆழமாக இல்லாத காரணத்தால் அப்படியே சோம்பலும் மறதியும் அதிகமாகி அதிகமாகி நாம் எந்த அளவு பலவீனப்படுகிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே.
 
நற்பலன்: 2
 
அடுத்தது, இந்த ஆதரவின் காரணமாக அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் மீதும், சொர்க்கத்தின் மீதும், நமக்கு ஆதரவு அதிகமாகும் போது நமக்கும் அல்லாஹ்விற்க்கும் இடையில் உண்டான தொடர்பு அதிகமாகின்றது. இந்த கல்பு அல்லாஹ்வை முன்னோக்கியதாக இருக்கின்றது. எப்போதும் அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டே இருக்கும். 
 
ஒரு நல்ல மனிதர் அவரிடம் கேட்டால் நமக்கு கொடுப்பார், தன் தேவையை நிறைவேற்றுவார் என்று ஒருவருக்கு தெரிந்தால் அவர் கொடுக்கின்ற வரை அவர் கேட்டுக் கொண்டே இருப்பார். ஒரு நல்ல மனிதர் கேட்டால் கோபப்படமாட்டார். கேட்டால் கொடுப்பார் என்று அவரின் மீது அவருடைய அன்பினாலும், அவருடைய செல்வத்தினாலும், அவருக்கு ஆதரவு வந்துவிட்டால் அவர் எந்த அளவு அந்த மனிதரை பின் தொடர்வார் என்று யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே!
 
இது சாதாரணமாக நமக்குள் இருக்கக்கூடிய ஒரு பலவீனமான தொடர்பிலே இப்படி என்று சொன்னால், கொடுப்பதில் அல்லாஹ் விசாலமானவன். கொடையில் அல்லாஹ் விசாலமானவன். கஜானாவால் அல்லாஹ் விசாலமானவன். கேட்பதால் அல்லாஹ் சந்தோஷப்படுகிறான். 
 
இப்படி இருக்கக்கூடிய அல்லாஹ்விடத்தில் ஒரு அடியான் அவனுடைய ஆதரவை அதிகப் படுத்திக்கொண்டால், கண்டிப்பாக அல்லாஹ் கொடுப்பான் என்ற ஆதரவு அவனுடைய உள்ளத்தில் வந்து விடுமேயானால், இந்த அடியான் அவனுடைய உள்ளத்தால் அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொண்டே இருப்பான். அல்லாஹ்விடத்தில் கேட்டுக்கொண்டே இருப்பான். இந்த ஆதரவும் இந்த துஆவுமே அவனுக்கு மிகப்பெரிய ஒரு இன்பமாக இருக்கும்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த துஆ என்பது நபிமார்களுடைய ஒரு பெரிய வணக்கம். இறைத்தூதர்களுடைய ஒரு பெரிய இறைவழிபாடு.. நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி நினைவு கூறக் கூடிய இடங்களில் எல்லாம் அவர்களுடைய துஆவை அல்லாஹ் சொல்கின்றான். 
 
இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் வர்ணிக்கும்போது اوّاه -அவ்வாஹ் என்ற அழகிய ஒரு திருப்பெயரைக் கொண்டு அழகிய பண்பை கொண்டு வர்ணிக்கின்றான். அவ்வாஹ் என்றால் அல்லாஹ்விடத்தில் அதிகமாக துஆ செய்பவர்.  
 
துஆவுக்கென்று  ஒரு சில நேரங்களை மட்டுமே நாம் சுருக்கி வைத்திருக்கின்றோம். தொழுகைக்கு பிறகு கொஞ்சம், ஏதாவது நஃபிலான தொழுகைக்கு பிறகு கொஞ்சம், இப்படியாக சில குறிப்பிட்ட சொற்ப அளவுள்ள நேரங்களை தான் நாம் துஆவிற்காக சுருக்கி இருக்கின்றோம். 
 
ஆனால் சகோதரர்களே! நபிமார்களுடைய வழிகளிலே வந்த நல்லோர்களுடைய வாழ்க்கையை பார்த்தோமேயானால் அவர்களுடைய வாழ்க்கையே துஆவாகத் தான் இருந்தது. அவர்களுடைய தொழுகையிலே துஆ, தொழுகைக்கு பிறகு துஆ, அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில், மஸ்ஜிதில், வியாபாரத்தில், தொழிலில், அதுபோக அவர்கள் சாதாரணமாக இருக்கக்கூடிய எல்லா நேரங்களிலும் அல்லாஹ்விடத்தில் துஆக்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். 
 
எப்படி சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று திக்ரு செய்வது இபாதத்தாக இருக்கின்றதோ, குர்ஆன் ஓதுவது இபாதத்தாக இருக்கின்றதோ, நஃபிலான தொழுகை, தான தர்மங்கள் இபாதத்தாக இருக்கிறதோ, அதுபோன்று அல்லாஹ்விடத்தில் நாம் இம்மை மறுமையின் தேவைகளை துஆவின் மூலமாக கேட்பதும் இபாதத்தாக இருக்கிறது. 
 
நீங்கள் உங்களது வாகனத்தில் செல்லும்போது அல்லது உங்களுடைய வியாபாரத்தில் இருக்கும் போது அல்லது உங்களுடைய குடும்பத்தாருக்கு மத்தியில் இருக்கும்போது உங்களுடைய மனதால் அல்லாஹ்விடத்தில கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். 
 
யா அல்லாஹ்! என்னையும் என்னுடைய குடும்பத்தையும் சீர்படுத்து. யா அல்லாஹ்! இம்மை வாழ்க்கையை எங்களுக்கு சிறப்பாக்கு. யா அல்லாஹ்! மறுமையில் எங்களுக்கு சொர்க்கத்தை கொடு. யா அல்லாஹ்! உனது அன்பை கொடு. யா அல்லாஹ்! உனது கோபத்தில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள். குறைந்தபட்சம்,
 
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ
 
யா அல்லாஹ் என்னையும் என் பெற்றோரையும் முஃமின்களையும் மன்னிப்பாயாக. (அல்குர்ஆன் 71 : 28)
 
யா அல்லாஹ்! எனது ரப்பே! என்னை மன்னிப்பாயாக. இது சாதாரண ஒரு வார்த்தையாக நமக்கு தெரியலாம். ஆனால் இது மகத்தான வார்த்தை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு சபையில் அவர்கள் தங்களுடைய தோழர்களுடன் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது அல்லது ஏதாவது ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, நான் எண்ணி இருக்கின்றேன். ஒரு சபை முடிவதற்குள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  நூறு முறை என்று رَبِّ اغْفِرْلِىْ என்று  கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்
 
எவ்வளவு அழகான வார்த்தை! அல்லாஹ்வுடைய மன்னிப்பின் மீது ஆதரவின் காரணமாக ரஸுலுல்லாஹ்வுடைய நாவில் இருந்து வந்த வார்த்தையை யோசித்து பாருங்கள் சகோதரர்களே!
 
இது எதனுடைய பிரதிபலிப்பு என்று பார்த்தால் அல்லாஹ்வின் மீது உண்டான ஆதரவின் பிரதிபலிப்பு. அல்லாஹ்வுடைய மன்னிப்பின் மீது ரஹ்மத்தின் மீது உண்டான ஆதரவின் பிரதிபலிப்பு. நம்மை அல்லாஹ்விடத்தில் அதிகமாக துஆ கேட்க வைக்கிறது. 
 
எந்த அடியான் அல்லாஹ்வுடைய வாசலை தட்டி விட்டானோ அல்லாஹ்விடத்தில் கையேந்தி விட்டானோ அந்த அடியானை அல்லாஹ் நிராசையாக்க மாட்டான் அவன் தூக்கிய கைகளை அல்லாஹு தஆலா நஷ்டவாளி ஆக ஆக்கிவிடமாட்டான். அவன் ஆதரவு வைத்ததையும் அவனுக்கு கொடுப்பான். அவன் ஆதரவு வைத்ததை விட சிறந்ததையும் அவனுக்கு கொடுப்பான். துஆவினுடைய மறுமையின் கூலியோ மிக  மகத்தானது. 
 
நற்பலன்: 3
 
அது போன்று இந்த ரஜா -ஆதரவின் மூலமாக நமக்கு கிடைக்கக்கூடிய நற்பலன்களிலே ஒன்று நம்முடைய உள்ளத்திலே பணிவு வரும். 
 
நான் தேவையுள்ள அடியான். என்னுடைய ரப்பு என்னுடைய எஜமானன். நான் அவனிடத்தில் கேட்க வேண்டும். அவனிடத்தில் என்னுடைய ஏழ்மையையும், என்னுடைய தாழ்மையையும், என்னுடைய தேவையாகுதல் என்ற தன்மையையும், அவனுக்கு முன்னால் வெளிப்படுத்த வேண்டும். அல்லாஹ்வை விட்டு ஒருபோதும் தேவையற்றவனாக கருதாமல்  அல்லாஹ்வின் பக்கம் தனது தேவையுள்ள அந்த தன்மையை காட்டிக்கொண்டு பணிவாக இருந்து கொண்டே இருப்பான். 
 
இந்த பணிவு என்பது மிக முக்கியமான ஒன்று. அல்லாஹு தஆலா காஃபிர்களை பற்றி சொல்லும்போது,
 
أَنْ رَآهُ اسْتَغْنَى
 
இந்த காஃபிர்கள் எப்படி என்றால் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்களாக, ரப்பின் பக்கம் தேவையுள்ளவர்களாக, அவர்கள் தங்களை கருதமாட்டார்கள். (அல்குர்ஆன் 96 : 7)
 
பொதுவாக இறை மறுப்பாளர்கள், இணைவைப்பவர்களுடைய குணங்களை பார்த்தால் அவர்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால், ஏதாவது ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் சிலைகள் இடத்தில் சென்று பூஜை செய்வார்கள். ஏதாவது சடங்கு சம்பிரதாயங்களை செய்வார்கள். காசு பணங்கள், செல்வம் வந்த பிறகு அவர்களுக்கு பெருமை வந்துவிடும். மமதை வந்து விடும். அந்த செல்வமெல்லாம் தான் தேடியது தனக்கு கிடைத்தது என்பதாக அவர்கள் அந்த இறை நம்பிக்கையை விட்டு தங்களை தேவையற்றவர்களாகவும், தங்களுடைய வாழ்க்கையில் எல்லாம் தங்களால் ஆனது என்ற ஆணவம் கொண்டவர்களாகவும் ஆகிவிடுவார்கள். 
 
அதனால்தான் வரம்பு மீறுகிறார்கள். பாவங்கள் செய்வார்கள். இன்னும் என்னென்ன தடுக்கப்பட்ட தவறான காரியங்கள் இருக்கிறதோ அதில் எல்லாம் அவர்கள் நீண்டுகொண்டே இருப்பார்கள்.
 
ஆனால் இறைநம்பிக்கையாளர்கள் முஃமின்களை பொறுத்தவரை அவர் ஒரு பெரிய அரசராக ஆகி விட்டாலும் கூட, உலகத்தில் மிகப்பெரிய செல்வந்தராக ஆகி விட்டாலும் கூட, அவர் ஒரு நொடி கூட தன்னை அல்லாஹ்வின் கருணையிலிருந்து தேவையற்றவராக கருதமாட்டார். 
 
அவருடைய ஒவ்வொரு சுஜுதும் ரப்பே! நீ எனக்கு கொடுத்தாய், நான் உனது அடிமை. ஒவ்வொரு மன்னரும் அவர் முஸ்லிமாக இருப்பாரேயானால் அவர் தனது சுஜூதின் மூலமாக நான் மக்களுக்கு ஆட்சி செய்யக்கூடிய மன்னராக இருந்தாலும் என்னுடைய ரப்புக்கு நான் அடிமை. பிறகு அவர் கை தூக்கும்போதும் நான் எனது ரப்பிடத்திலே கேட்டுப் பெறுகிறேன். என்னுடைய ரப்பு எனக்கு கொடுத்தான் என்ற அந்த ஈமானிய உணர்வை அவருக்கு உணர்த்தும் இந்த ஆதரவு என்ற தன்மை.
 
சகோதரர்களே! அல்லாஹ்வின் பக்கம் தேவையாகுதல் என்ற குணம் அல்லாஹ்விற்கு மிகப் பிடித்தமான ஒரு குணம். ஒரு அடியான் என்னால் எதுவும் முடியாது என்னுடைய ரப்பு நாடினாலே தவிர. எனக்கென்று எதுவுமே இல்லை. என்னுடைய ரப்புடைய நாட்டத்தை தவிர என்று தன்னை முழுமையாக அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்கும் போது அல்லாஹு தஆலா மிகப்பெரிய சந்தோஷம் அடைகின்றான்.
 
ஒரு அடியானுடைய தொழுகையால் அல்லாஹ் சந்தோஷமடைவது போல, ஒரு அடியானுடைய நோன்பால், தர்மத்தால் அல்லாஹ் சந்தோஷப்படுவது போல, ஒரு அடியான் தன்னுடைய உள்ளத்தால் நான் தேவையுள்ளவன். என்னுடைய ரப்பு தேவையற்றவன். என்னுடைய ரப்புடைய அருள் இல்லாமல் எனக்கு எதுவும் நடக்காது என்று தன்னுடைய ரப்பின் பக்கம் உள்ள ஏழ்மையை, தாழ்மையை வெளிப்படுத்தும் போது அல்லாஹ் அந்த அளவு சந்தோஷப்படுகிறான். 
 
இப்லீஸின் மீது அல்லாஹ் கோபப்பட்டதற்கு காரணம் என்ன? ரப்புடைய மன்னிப்பு தேவையில்லை என்று நினைத்தான். ரப்புடைய ரஹ்மத்தை தேவையில்லை என்று புறக்கணித்தான். அல்லாஹ்வுடைய கோபத்தை தேடிக்கொள்ள அவன் தயாராகிவிட்டான். 
 
ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் உணர்ந்தார்கள்; புரிந்தார்கள். அல்லாஹ்வுடைய மன்னிப்பு இல்லை என்றால் அல்லாஹ்வுடைய கருணை இல்லை என்றால் நாம் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்.
 
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
 
யா அல்லாஹ்! எங்கள் இறைவா! நீ மன்னிக்கவில்லை என்றால் நீ கருணை காட்டவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளிகளிலே ஆகிவிடுவோம். (அல்குர்ஆன் 7 : 23)
 
சகோதரர்களே! இந்த பணிவு, அல்லாஹ்விற்கு முன்னால் அவர்கள் ஏற்படுத்திய பலவீனம், இந்தத் தாழ்மை, அல்லாஹ்விற்கு பிடித்துவிட்டது. அல்லாஹ் அவர்களை மன்னித்தான் மீண்டும் அதே பழைய நிலைமைக்கு அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
 
ஆகவே அடியார்கள் எப்போதுமே இந்த ரஜாவில் இருக்க வேண்டும். இந்த ரஜா என்பது அடியானுக்கு அவன் அல்லாஹ்வின் அடிமை என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும். 
 
நற்பலன் : 4
 
அதுபோன்று இந்த ஆதரவின் மூலமாக நமக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பலன் என்னவென்று சொன்னால் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அவனுக்கு விருப்பமான ஒரு காரியத்தை நாம் நிறைவேற்றிக் கொண்டே இருக்கின்றோம். யார் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கிறார்களோ அவர்கள் என்ன செய்கின்றார்கள்? 
 
அல்லாஹ்வுக்கு பிரியமான ஒரு அமலை அவர்கள் செய்கிறார்கள். அல்லாஹ்விற்கு பிரியமான அமல் என்ன? அடியார்கள் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். ரப்புல் ஆலமீன்,
 
ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
 
என்னிடம் துஆ கேட்டுக் கொண்டே இருங்கள். நான் உங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்கின்றான். (அல்குர்ஆன் 40 : 60)
 
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
 
(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குர்ஆன் 2 :186)
 
சகோதரர்களே! அடியார்கள் அல்லாஹ்விடத்தில் கேட்கவேண்டும். அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்க வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகின்றான். 
 
ஆகவே யார் ஒருவர் அல்லாஹ்வின் மீது ஆதரவு  வைக்கிறாரோ அவர் என்ன செய்கிறார்? அல்லாஹ் விரும்பியதை செய்கின்றார். ஆகவே இவர் விரும்பியதை அல்லாஹு தஆலா அவருக்கு  நிறைவேற்றி கொடுப்பான்.
 
யார் அல்லாஹ்விடத்தில் கேட்கவில்லையோ, யார் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கவில்லையோ, அவர்களை அல்லாஹு தஆலா கோபப்படுகிறான். ஒரு மனிதன் தன்னுடைய ஆதரவை அல்லாஹ்வை விட்டு துண்டித்துவிட்டு, தன்னுடைய அறிவின் மீது, தன்னுடைய திறமையின் மீது, தன்னுடைய அனுபவத்தின் மீது, தன்னை சுற்றியுள்ள தனது குடும்பத்தார்கள், தன்னுடைய வம்சம், தனக்கு இன்னார் இன்னார் பக்கபலமாக இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வை விட்டு புறக்கணித்துவிட்டால், அல்லாஹு தஆலா கோபப்படுகிறான். ரப்புல் ஆலமீன் அவர்கள்மீது சாபத்தை இறக்குகிறான். 
 
அல்லாஹு தஆலா அந்த அடியானுக்கு மிகப் பெரிய சோதனையை கொடுத்து விடுகின்றான். நான் இல்லாமல் உன்னுடைய காரியம் நிறைவேறி விடுமா என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த அடியானை நோக்கி சவால் விடுகிறான். எப்படி நிறைவேறும் யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே. 
 
ஆகவே தான் யார் அல்லாஹ்வின் பக்கம் தேவையுடையவராக ஆகிவிட்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொண்டார்கள். அல்லாஹ்வுடைய அன்பு அவர்களுக்கு கிடைத்து விடுகின்றது.
 
நற்பலன் : 5
 
அதுபோன்று யார் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வை நோக்கிய அந்த மறுமை பயணம் அவர்களுக்கு இனிமையாக ஆகிவிடுகின்றது. அவர்களுடைய வாழ்நாளிலே அவர்கள்  வணக்க வழிபாடுகளில் திளைத்திருப்பது அவர்களுக்கு இலகுவாகி விடும். 
 
இந்த உலக வாழ்க்கையில் மாறி வரக்கூடிய கால சூழ்நிலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், தொழிலிலோ, உடல் நலத்திலோ, அல்லது வேறு எந்த விஷயத்திலும் சரி இப்படி எதுவுமே அவர்களுடைய மறுமையுடைய பயணத்தில் குறுக்கீடாக இருக்காது. அவர்கள் தங்களுடைய இபாதத்துகளிலே தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். 
 
இன்று நம்முடைய பொதுவான நிலைமையை பொறுத்தவரை என்னவென்றால் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு தஆலா நம்மை முஸ்லிமாக படைத்துவிட்டான். முஸ்லிமுடைய குடும்பங்களில் நாம் வாழ்கின்றோம். சில வணக்க வழிபாடுகளை பழகிக் கொண்டோம்; நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
 
உண்மையான அந்த நிலை அறியப்பட வேண்டும் என்றால் அது சோதனையின் போதுதான். நாம் இன்னும் சோதிக்கப்படவில்லை. சோதனையை தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு, சோதனையை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு, நம்மில் எத்தனை பேருக்கு ஈமான் இருக்கிறது? யகீன் இருக்கிறது? என்று அல்லாஹ் அறிந்தவன். 
 
சஹாபாக்களுடைய நிலைகளை யோசித்துப் பாருங்கள். பின்னால் வந்த தாபியீன்களுடைய நிலையை யோசித்துப் பாருங்கள். இன்று நூற்றுக்கணக்கில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளக்கூடிய சகோதர சகோதரிகளுடைய நிலைமைகளை யோசித்துப் பாருங்கள். எத்தனை சோதனைகளை கடக்கிறார்கள். அந்த நபித் தோழர்களுக்கு அவ்வளவு சோதனைகளை எல்லாம் கடப்பது ஏன் இலகுவாக இருந்தது.
 
அல்லாஹ்வின் மன்னிப்பின் மீது உண்டான ஆதரவு. அந்த ரஹ்மத்தின் மீது உண்டான ஆதரவு. காஃபிர்கள் கொடுக்கக்கூடிய துன்பங்கள், சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டது. எங்கு சென்றாலும் நிம்மதியாக விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது. அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. 
 
மேலும் சொல்லப்போனால் அந்த துன்பங்களையெல்லாம், அந்த துன்பங்களில் அவர்கள் சிக்கும் போதெல்லாம் அவர்களுக்கு ஈமானும் யகீனும் அல்லாஹ்வின் அன்பும் தான் அதிகமானது. 
 
ஹுபைப் (ரலி) அவர்களை யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்திலே காஃபிர்கள் எல்லாம் சுற்றிக்கொண்டு ஹுபைபை கொல்வதற்கு மக்காவிற்கு வெளியில் கொண்டு வந்து அவர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். கழுமரம் தயாராக இருக்கிறது. எல்லோருடைய கையிலும் ஈட்டியும், வாளும் இருக்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படி கொல்வார்களோ? அம்பால் எறிந்து  கொல்வார்களோ? ஈட்டியால் குத்திக் கொல்வார்களோ? ஒரே ஒரு வார்த்தை கேட்கப்படுகிறது. 
 
நீங்கள் இருக்கக்கூடிய இந்த இடத்திலே முஹம்மது இருப்பது உங்களுக்கு விருப்பம் என்று சொல்லிவிடுங்கள். உங்களை நாங்கள் விட்டு விடுகின்றோம். நடக்குமோ நடக்காதோ அது வேறு விஷயம்.. ஒரே ஒரு வார்த்தையை சொல்லி விடுங்கள். நாங்கள் உங்களை விட்டு விடுகின்றோம். 
 
சகோதரர்களே! அந்த ஒரு வார்த்தையை சொல்லி நாம் தப்பித்து விட்டு மதீனாவிற்கு சென்று தவ்பா செய்து கொள்ளலாம். ரசூலுல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம். அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம். பிறகு நல்ல அமல்களை அதிகமாக செய்து அல்லாஹ்வை நெருங்கி கொள்ளலாம் என்று நினைத்தார்களா? 
 
நம்மை போன்ற சாதாரணமான பலவீனமானவர்கள் இப்படித்தான் செய்திருப்போம் யோசித்து இருப்பார்கள்.
 
ஹுபைப் (ரலி) அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் கூறுகிறார்கள் நான் கொல்லப்பட்டால் என்னுடைய உடல்கள் எல்லாம் கூறு கூறாக கூறு வைக்கப்பட்டாலும், அம்புகளால் துளைக்கப்பட்டாலும் நான் ஆதரவு வைக்கிறேன் அல்லாஹ் எனக்கு இந்த கூறுபோடப்பட்ட உடல்களிலே பரக்கத் செய்யவேண்டும். 
 
وَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا ... عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي
 
நான் முஸ்லிமாக கொல்லப்படும் போது நான் எதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் முஸ்லிமாக கொல்லப்படும் போது நான் எதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? நான் எங்கு கொல்லப்பட்டால் என்ன? நான் எங்கு இறந்தால் என்ன? என்னுடைய மரணம் அல்லாஹ்விற்காக இருக்கிறது. அல்லாஹ் என்னுடைய உடலிலே பரக்கத் செய்வான். யா அல்லாஹ்! என்னுடைய ஸலாமை நபிக்கு நீ எடுத்து சொல்லி விடுவாயாக என்று துஆ செய்கிறார்கள். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 7402.
 
அதேநேரத்தில் அல்லாஹு தஆலா ரசூலுக்கு ஹுபைப் உடைய சலாமை சொல்கிறான். என்ன நடக்கிறதோ அதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காண்பித்து கொடுக்கின்றான். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய தோழர்களுக்கு சொல்கிறார்கள்.
 
மறுமையை நோக்கி பயணம் செய்யும்போது சோதனைகளை கடந்து தான் செல்ல வேண்டும். சில சிரமங்களை கடந்துதான் செல்ல வேண்டும். 
 
அல்லாஹு தஆலா சோதனைகளை வைத்திருக்கிறான். அந்த சோதனைகளை எல்லாம் நாம் கடப்பதற்கு அல்லாஹ்வின் மீது உண்டான  ரஜா. சொர்க்கத்தின் மீது உண்டான ஆதரவு. அல்லாஹ்வின் மீது உண்டான ஆதரவு. அந்த ஆதரவு இருக்குமேயானால் அவருக்கு இந்த சோதனைகள் எல்லாம் இன்பமாக இருக்கும். அது அவருக்கு ஒரு சடைவை கொடுக்காது. 
 
அவர் இப்படி நாம் சோதிக்கப்படுகிறோமே என்று வெருட்சியாக மாட்டார். மாறாக தன்னுடைய இபாதத்துகளை செய்து கொண்டே இருப்பார். இன்னும் அதிகப்படுத்துவார். துஆக்களை அதிகப்படுத்துவார். மறுமையை முன்னோக்கி முற்றிலும் சென்று கொண்டே இருப்பார்.
 
நற்பலன் : 6
 
யார் இந்த உலகத்தில் அதிகமாக ஆதரவு வைத்தார்களோ அவர்கள் நாளை மறுமையில் அதிக அளவு சந்தோஷம் அடைந்தவர்களாக இருப்பார்கள். சொர்க்கத்தில் சென்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சி இருக்கும். எல்லோருக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுடைய அந்த மகிழ்ச்சியை நிறைவேற்றிக் கொடுத்து கொண்டே இருப்பான். 
 
ஆனால் இந்த உலகத்தில் யார் அதிகமாக அல்லாஹ்வின் மீது ஆதரவு உள்ளவர்களாக இருந்தார்களோ, அந்த ஆதரவை கொண்டு இபாதத்துகள் செய்தார்களோ, அவர்களுக்கு அல்லாஹு தஆலா மகிழ்ச்சியை  இரட்டிப்பாக்குவான்.
 
அபூ ஸயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸ். இமாம் புகாரி இமாம் முஸ்லிம் ரஹிமஹுமுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
 
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ؟ فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالُوا: يَا رَبِّ، وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا " (صحيح البخاري 6549 -)
 
நாளை மறுமையில் அல்லாஹ் சொர்க்கவாசிகளை சொர்க்கவாசிகளே! என்று அழைப்பான். அப்பொழுது சொர்க்கவாசிகள் பதில் சொல்வார்கள். எங்கள் இறைவா! உனக்கு முன்னால் நாங்கள் ஆஜர் ஆகிவிட்டோம். உனக்கு முன்னால் நாங்கள் சமர்ப்பணம் ஆகிவிட்டோம். நன்மைகள் எல்லாம் உனது கரத்துக்கு முன்னால் இருக்கின்றது. 
 
சொர்க்கவாசிகளை பார்த்து அல்லாஹ் கேட்பான். நீங்கள் சந்தோஷப்பட்டு விட்டீர்களா? மகிழ்ச்சி அடைந்து விட்டீர்களா? அவர்கள் சொல்வார்கள். நாங்கள் சந்தோஷம் அடையாமல் இருக்க எங்களுக்கு என்ன? உனது படைப்புகளில் யாருக்கும் கொடுக்காததை நீ எங்களுக்கு கொடுத்தாயே! 
 
அப்போது அல்லாஹ் கூறுவான்; இதை விட சிறந்ததை உங்களுக்கு நான் கொடுக்க வேண்டாமா? அவர்கள் கேட்பார்கள்; எங்கள் இறைவா! இதைவிட சிறந்தது என்ன இருக்கிறது என்று? அப்போது அவன் கூறுவான்; உங்கள் மீது நான் என்னுடைய பொருத்தத்தை, என்னுடைய அன்பை நான் உங்களைக் கொண்டு திருப்தி அடைந்ததை இப்போது இறக்கி விட்டேன். இனி நான் உங்கள் மீது ஒருபோதும் கோபம் அடைய மாட்டேன் என்று கூறுவான்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த மகிழ்ச்சி அவர்களுடைய உள்ளங்களை நிரப்பிவிடும். அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா சொர்க்கவாசிகளைப்பற்றி அறிவிக்கக் கூடிய இன்னொரு அறிவிப்பை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள் .
 
சுஹைப் ரூமி ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்;
 
عَنْ صُهَيْبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، قَالَ: يَقُولُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ؟ فَيَقُولُونَ: أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا؟ أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ، وَتُنَجِّنَا مِنَ النَّارِ؟ قَالَ: فَيَكْشِفُ الْحِجَابَ، فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ "، 
(صحيح مسلم- (181
 
சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்குச் சென்றதற்கு பிறகு அல்லாஹ் அவர்களை பார்த்து கேட்பான். உங்களுக்கு ஏதும் வேண்டுமா? நான் உங்களுக்கு அதை அதிகப்படுத்தி கொடுக்கிறேன் என்று. சொர்க்கவாசிகள் சொல்வார்கள்; எங்களுடைய முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நீ சொர்க்கத்தில் நுழைவிக்கவில்லையா? நரகத்திலிருந்து எங்களை நீ பாதுகாக்கவில்லையா என்று. இவ்வளவு எங்களுக்கு நீ செய்திருக்கிறாய் என்று. 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் தூதர் சொல்லிக் காட்டுகிறார்கள். அல்லாஹுதஆலா தன்னுடைய திருமுகத்திலிருந்து திரையை நீக்குவான். அல்லாஹ்வுடைய அந்த அடியார்கள், அல்லாஹ்வை ஆதரவு வைத்தவர்கள், அல்லாஹ்வை நேசித்தவர்கள், மறுமைக்காக வேண்டி வாழ்ந்தவர்கள், அந்த நல்லடியார்களுக்கு அல்லாஹ் அவனுடைய அருளை பூர்த்தி செய்வான். 
 
அதனுடைய தொடர்ச்சியாக தனது திருமுகத்தை அவன் காட்டுவான். தங்களுடைய ரப்பை அவர்கள் பார்ப்பார்கள். அதைவிட விருப்பமான ஒன்று சொர்க்கத்தில் அவர்களுக்கு இருக்காது. அல்லாஹ்வை பார்ப்பதைவிட அல்லாஹ்வை தரிசிப்பதை விட சிறப்பான ஒரு விருப்பமான ஒன்று சொர்க்கத்திலே இருக்காது. அந்த அளவுக்கு பெரிய ஒரு நற்பாக்கியம் 
 
அல்லாஹ்வுடைய அந்த திருமுகத்தை பார்ப்பது அதை அல்லாஹ் கொடுக்கின்றான். யாருக்கு என்றால் யார் இந்த உலகத்தில் நல் ஆதரவோடு அல்லாஹ்விடத்தில் நல்ல ஆதரவு வைத்து அல்லாஹ்வை வணங்கி வழிபட்டார்களோ, அல்லாஹு தஆலா கூறக் கூடிய வசனத்தையும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டினார்கள். 
 
சூரா யூனுஸுடைய 26 ஆவது வசனம்,
 
لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ
 
யார் நல்லமல்களை தொடர்ந்து செய்கின்றார்களோ, அல்லாஹ்வுடன் உண்டான தனது தொடர்புகளை அழகுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களுக்கு மறுமையில் சொர்க்கம் உண்டு. அந்த சொர்க்கத்திலே அவர்களுக்கு அதிகப்படியான கூலியும் உண்டு. (அல்குர்ஆன் 10 : 26)
 
இந்த ஆதரவு என்பது நபிமார்களுடைய மிகப்பெரிய ஒரு நற்பண்பாகும். ரஸூலுல்லாஹ்வுடைய வாழ்க்கையை எடுத்துப்பாருங்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய தோழர்களுக்கு இந்த ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முன்னறிவிப்புகள் எல்லாம் இந்த ஆதரவு சம்பந்தப்பட்டதுதான். 
 
ரஸுலுல்லாஹ்வுடைய சீராவை படித்துப் பாருங்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாக்குகளை படித்துப் பாருங்கள். குர்ஆனுடைய வசனங்களை படித்துப்பாருங்கள். 
 
அல்லாஹு தஆலா முஃமினுக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த மிகப்பெரிய ஆயுதங்களில் ஒன்று, அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பதும் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்பதும் ஆகும். 
 
இந்த ஆதரவு அல்லாஹ்வோடு தொடர்பான எல்லா விஷயங்களிலும் நமக்கு இந்த ஆதரவு இருக்க வேண்டும். ஒரு நொடி கூட இந்த ஆதரவு நம்மிடத்தில் பலவீனப்பட்டு விட்டால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! ஷைத்தான் வந்துவிடுவான். 
 
இந்த ஆதரவு பலவீனப்பட்டு விட்டால், நம்முடைய உள்ளத்தில் குஃப்ரான, ஷிர்க்கான சந்தேகங்களை எண்ணங்களை உண்டுபண்ணி அல்லாஹ்விற்கும் நமக்கும் இடையில் இருக்கக் கூடிய அந்த தொடர்பை பலவீனப்படுத்துவான். இறுதியாக மொத்தமாக அல்லாஹ்விடமிருந்து நம்மை விலக்கிவிட முயற்சி செய்வான். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மை பாதுகாப்பானாக!
 
நம்முடைய உள்ளத்தில் அவனுடைய ஆதரவை முழுமைப்படுத்துவானாக! யகீனை அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு முழுமைப்படுத்துவானாக! நிராசை அடைந்து அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து நம்பிக்கையிழந்த இந்த காஃபிர்களின் கூட்டத்தை விட்டு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/