HOME      Khutba      வெற்றி எப்பொழுது? அமர்வு 2-2 | Tamil Bayan - 488   
 

வெற்றி எப்பொழுது? அமர்வு 2-2 | Tamil Bayan - 488

           

வெற்றி எப்பொழுது? அமர்வு 2-2 | Tamil Bayan - 488


வெற்றி எப்பொழுது
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : வெற்றி எப்பொழுது (அமர்வு 2-2)
 
வரிசை : 488
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 05-01-2018 | 18-04-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு சுப்ஹானஹு வதஆலாவை போற்றிப் புகழ்ந்தனவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும் என்று துஆ கேட்டவனாக, எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டிவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
 
இந்த  சோதனைகள் நிறைந்த காலத்தில் அல்லாஹ்விடமிருந்து வெற்றியை எதிர்பார்த்து இருக்கின்ற இந்த சமுதாயம், அந்த வெற்றிக்காக எப்படி தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்? அல்லாஹ் வாக்களித்த அந்த வெற்றியை அல்லாஹ்விடமிருந்து பெறுவதற்கு தங்களை எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும்? என்ற விஷயங்களைத்தான் சென்ற ஜும்ஆவில் நாம் பார்த்தோம். அதனுடைய தொடரில் இன்னும்  சில விஷயங்களை நாம் பார்ப்போம்.
 
ஒன்றை நாம் கண்டிப்பாக நினைவில் வைக்க வேண்டும். அல்லாஹ்வுடைய உதவி இருந்தால் மட்டும்தான் நம்மால் எந்த சோதனையிலும் ஜெயிக்க முடியும். அது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின் சோதனையாக இருந்தாலும் சரி, சமுதாயம் சந்திக்கின்ற சோதனையாக இருந்தாலும் சரி, நம்முடைய குடும்பத்தில் ஏற்படக்கூடிய சோதனையாக இருந்தாலும் சரி.
 
அல்லது இஸ்லாமிற்கு வெளியில் முஸ்லிம்களுடைய எதிரிகள் புறத்தில் இருந்து வரக்கூடிய சோதனையாக இருந்தாலும் சரி, யா அல்லாஹ்! நீ என்னை கைவிட்டு விட்டால் நான் கண்டிப்பாக தோற்று விடுவேன். நீ எனக்கு கை கொடுத்து விட்டால், நீ என்னை காப்பாற்றிக் கொண்டால், நீ எனக்கு உதவி செய்து விட்டால், நான் எனது நஃப்ஸையும், ஜெயிக்க முடியும். ஷைத்தானையும் ஜெயிக்க முடியும். 
 
இன்னும் எவ்வளவு பெரிய எதிரிகள் இஸ்லாமை முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு வந்தாலும் அவர்களையும் என்னால் ஜெயிக்க முடியும் என்று அல்லாஹ்வைக் கொண்டு உறுதி கொண்டவனாக இருக்க வேண்டும்.
 
அப்படிப்பட்டவர்களுக்கு தான் அல்லாஹ்வுடைய அறிவுரை பலன்தரும். ஒரு மனிதன், தன்னுடைய திறமையால் ஜெயித்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். தன்னுடைய அனுபவத்தால், தன்னுடைய வீரத்தால், தன்னுடைய திட்டங்களால், ஜெயித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அல்லாஹு தஆலா அவனை அவன் எண்ணிய அவன் போட்ட திட்டங்களோடு விட்டுவிடுவான். 
 
அவனுடைய உதவியை அல்லாஹ் உயர்த்திக் கொள்வான். ஒரு சின்ன சம்பவத்தை பாருங்கள். ரப்புல் ஆலமீன் சொல்லிக் காட்டுகின்றான். சூரா தவ்பாவில் ஒரு முக்கியமான வசனம், அல்லாஹு தஆலா அந்த வசனத்தை ஆரம்பிக்கும்போது சொல்கிறான்.
 
لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ
 
அதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் போரிலும் அல்லாஹ் உங்களுக்கு திட்டவட்டமாக உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. இன்னும், பூமி - அது விசாலமாக இருந்தும் உங்களுக்கு நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பி (ஓடி)னீர்கள். (அல்குர்ஆன் 9 : 25)
 
இந்த ஹுனைன் போரின் போது, நீங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது உங்களுக்கு பெருமையை கொடுத்துவிட்டது. நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்து, எத்தனையோ பெரிய எதிரிகளின் கூட்டத்தை சமாளித்திருக்கும் போது, இன்றோ இந்த ஹுனைன் போரில் எதிரிகளை விட பல மடங்கு நாங்கள் அதிகமாக இருக்கும் போது, இந்த எதிரிகளை சந்திப்பது எங்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல என்பதாக அந்தப் போரில் கலந்துகொண்ட சிலர் எண்ணினார்கள். 
 
எல்லோரும் எண்ணவில்லை. அல்லாஹ்வுடைய தூதருக்கு அந்த எண்ணம் இல்லை. அபூபக்ர், உமர், உஸ்மான் அலி ரலியல்லாஹு அன்ஹும் அந்த எண்ணம் இல்லை. 
 
கலந்து கொண்டவர்களில் சிலர் எண்ணினார்கள். அவ்வளவுதான், வானத்திலிருந்து இறங்கி கொண்டிருந்த உதவியை அல்லாஹ் நிறுத்திவிட்டான். உள்ளத்தில் இருந்த ஈமானிய உறுதியை, ஈமானிய வீரத்தை அல்லாஹ் தடுத்து விட்டான். 
 
புறமுதுகிட்டு மைதானத்தை விட்டு நாலா திசைகளிலும் ஓட ஆரம்பித்து விட்டார்கள். மைதானத்தில் எஞ்சிய சில நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரோடு இருக்கிறார்கள். 
 
ரசூலுல்லாஹ் அவர்கள், தோழர்களே! என் பக்கம் வாருங்கள்! என் பக்கம் வாருங்கள்! என்று அந்த மக்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
 
ஒரு சிறிய தவறு. அல்லாஹ்வின் மீது உண்டான நம்பிக்கையில் ஏற்பட்ட தடுமாற்றம். அல்லாஹ்தான் உதவக் கூடியவன்; ஆயுதங்கள் அல்ல; அல்லாஹ்தான் எதிரிகளின் மீது நமக்கு வெற்றியைத் தரக்கூடியவன்; நம்முடைய எண்ணிக்கை அல்ல என்ற நம்பிக்கையில் சமுதாயத்திலிருந்த சிலரிடம் ஏற்பட்ட அந்தத் தடுமாற்றம், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சோதனைக்கு ஆளாக்கியதை அல்லாஹு தஆலா அவனது வேதத்தில் நமக்கு நினைவு கூறுகிறான். 
 
ஆகவேதான், சமுதாயமாக சேர்ந்து திருந்த வேண்டும். சமுதாயம் அனைவரும் சேர்ந்து  அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்க வேண்டும். ஏதோ நாம் செய்கிறோம். மக்கள் எப்படி போனால் எனக்கென்ன? என்று இந்த சமுதாயத்தில் அக்கறை உள்ள, மார்க்கத்தை புரிந்த ஒரு முஸ்லிம் சமுதாயத்தை அலட்சியம் செய்தவனாக, நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதை அலட்சியம் செய்தவனாக இருக்க முடியாது.
 
நான் என்னளவில் மார்க்கத்தை பெறுகிறேன். என் குடும்பம், என் மனைவி, என் பெற்றோர், என்னை சுற்றி உள்ளவர்கள் எப்படி போனால் எனக்கென்ன? என்று அவன் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் அலட்சியகாரனாக இருக்கவே முடியாது. 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
 
அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார் (இருக்கிறார்)? ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பார்களாக! (அல்குர்ஆன் 3 : 160)
 
ரசூலுல்லாஹ்வின் மீது இறக்கப்பட்ட இந்த இறை வசனம், இன்றும் நம்மை நோக்கி அது பேசிக் கொண்டே இருக்கிறது. நமக்கு அந்த ஈமானிய உணர்வை தூண்டிக்கொண்டே இருக்கிறது. 
 
ஓதும்போது அந்த உணர்வு, அந்த சிந்தனை, அந்த ஈமானிய வீரம், அந்த ஈமானிய தவக்குல் வரவேண்டும். அல்லாஹ் சொல்கின்றான்:
 
நம்பிக்கை கொண்ட சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை சார்ந்து இருங்கள். அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கி இருங்கள். 
 
பெரும்பாலும் நம்முடைய ஈமானுடைய பலவீனம், நம்முடைய மார்க்க புரிதலில் இருக்கக்கூடிய அந்த குறைபாடு, உடனடியாக ஆட்சியை நோக்கி, ஆட்சியாளர்களை நோக்கி, அரசியலை நோக்கி, அதிகாரிகளை நோக்கி பாய்கிறது. 
 
இவரால், இந்த கட்சியால், இந்த சமூகத்தால், இதனால், அதனால், எனக்கு பாதிப்பு என்பதாக நம்முடைய கவனங்கள் எல்லாம் அதன் பக்கம் திரும்புகின்றது.
 
ஒன்றை கவனமாக நாம் உணர வேண்டும். இஸ்ரவேலர்களுடைய சம்பவங்களை அல்லாஹு தஆலா அவனது வேதத்தில் சொல்லிக் காட்டுகின்றான். 
 
இஸ்ரவேலர்கள் நபிமார்களின் வாரிசுகள். யாகூப் நபி அலைஹிஸ்ஸலாம் உடைய வாரிசுகள். அவர்களுடைய வரலாறுகளை நமக்கு எடுத்துச் சொல்கிறான். அவர்களோடு அல்லாஹ் எப்படி நடந்துகொண்டான் என்பதை சொல்லுகிறான்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பாக, இந்த பூமியில் முஸ்லிம்களாக வாழ்ந்தவர்கள் தான் இஸ்ரவேலர்கள். 
 
இந்த பூமியில் நபிமார்களின் உம்மத்துகளாக, மூசா நபியின் உம்மத்தாக, தாவூத் நபியின் உம்மத்தாக, சுலைமான் நபியின் உம்மத்தாக, இன்னும் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்களுடைய நபிமார்களின் உம்மத்தாக, முஸ்லிம்களாக வாழ்ந்தவர்கள் தான் இஸ்ரவேலர்கள். அவர்கள் வழி கெட்டவர்கள். 
 
பிறகு, தங்களது மார்க்கத்திற்குள் தவறான கொள்கைகளை புகுத்தி, அதிலிருந்து வழிதவறினார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையை அல்லாஹ் நமக்கு உதாரணமாக சொல்கின்றான். 
 
எப்போது அவர்கள் கெட்டார்களோ, அப்போது அவர்கள் மீது அநியாயக்கார அரசர்களை அல்லாஹ் சாட்டினான்.
 
فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا (5) ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا (6) إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا (7) عَسَى رَبُّكُمْ أَنْ يَرْحَمَكُمْ وَإِنْ عُدْتُمْ عُدْنَا وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ حَصِيرًا
 
ஆக, அவ்விரண்டில் முதல் (முறையின்) வாக்கு வந்தபோது கடுமையான பலமு(ம் வீரமும் உ)டைய நமக்குரிய (சில) அடியார்களை உங்கள் மீது அனுப்பினோம். ஆக, அவர்கள் (உங்கள்) வீடுகளுக்கு நடுவில் ஊடுருவிச் சென்றனர். மேலும், (அது) ஒரு நிறைவேற்றப்பட்ட வாக்காக இருந்தது. பிறகு, (நீங்கள் திருந்தி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பியதால்) உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை (வெற்றியை) திருப்பினோம். செல்வங்கள்; இன்னும், ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். இன்னும், (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம்.
 
நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்கள் ஆன்மாக்களுக்காத்தான் நன்மை செய்தீர்கள். மேலும், நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றுக்கே (தீமையாக அமையும்). ஆக, (இரண்டு வாக்குகளில்) மற்றொரு வாக்கு வந்தபோது, (மீண்டும்) உங்கள் முகங்களை அவர்கள் கெடுப்பதற்காகவும் (-தோல்வியினால் உங்கள் முகங்கள் இழிவடைந்து வாடிபோவதற்காகவும்), முதல் முறை மஸ்ஜிதில் அவர்கள் நுழைந்தவாறு (இம்முறையும்) அவர்கள் அதில் நுழைவதற்காகவும், அவர்கள் வெற்றிகொண்ட ஊர்களை எல்லாம் அழித்தொழிப்பதற்காகவும் (அவர்களை மீண்டும் உங்கள் மீது அனுப்பினோம்). உங்கள் இறைவன் உங்களுக்கு கருணை புரியலாம். இன்னும், நீங்கள் (அழிச்சாட்டியத்தின் பக்கம்) திரும்பினால் நாமும் (உங்களைத் தண்டிக்க) திரும்புவோம். மேலும், நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 17 : 5- 8)
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மத்துக்கு இறக்கப்பட்ட இந்தக் குர்ஆனில் இந்த வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த  நீண்ட வரலாறை அல்லாஹு தஆலா இவ்வளவு சுருக்கமாக நமக்கு கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். 
 
இறுதி உம்மத்தாகிய நமக்கு இந்த குர்ஆன் என்ன வரலாறுகளாக, சம்பவங்களாக எடுத்துச் சொல்லக்கூடிய புத்தகமா? அல்லது படிப்பினை புத்தகமா? பாடம் பெறுவதற்குரிய புத்தகமா? அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய கூடிய புத்தகமா? நமக்கு அறிவுரை சொல்லக் கூடிய புத்தகமா? யோசித்துப் பாருங்கள்.
 
இன்று, நாம் இந்த சம்பவங்களைப் பற்றி எல்லாம் பேசும்போது அப்படியே கடந்து சென்று விடுகின்றோம். ஏதோ முந்தைய காலத்தில் நடந்த வரலாறுகளை இந்த குர்ஆன் பேசுவது போல இல்லை. 
 
நிகழ்காலத்திற்கு இந்த குர்ஆன் வழிகாட்டுகிறது. எதிர்காலத்திற்குரிய அறிவுரைகளை இந்த குர்ஆன் நமக்கு சொல்கிறது. 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا
 
இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் நடைமுறைதான் (இவர்கள் விஷயத்திலும்) பின்பற்றப்படும். அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் அறவே நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் 33 : 62)
 
ஒரு சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். ரப்புல் ஆலமீனை பொறுத்தவரை, அவனுக்கு கட்டுப்படக்கூடியவர்கள் மீது தான், அவனை பயப்படக்கூடியவர்கள் மீது தான், அவனுடைய சட்ட திட்டங்களுக்கு வழிகாட்டுதலுக்கு சரணடைய கூடியவர்களுக்கு தான், அல்லாஹ் உதவுவான். 
 
அவர்கள் மீதுதான் அவனுடைய அருளை அல்லாஹ் வழங்குவான். யூனுஸ் நபியை நினைத்துப்பாருங்கள். எத்தனை ஆண்டுகள் இணைவைத்தவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள். 
 
வஹீ இறங்கக்கூடிய ஒரு நபியாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் அல்லாஹ்வுடைய ஒரே ஒரு கட்டளையை மீறி விட்டார்கள். அல்லாஹு தஆலா அதை நமக்கு சொல்லிக் காட்டுகிறான்:
 
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
 
இன்னும், மீனுடையவரை நினைவு கூர்வீராக! அவர் கோபித்தவராக சென்றபோது, நாம் அவருக்கு அறவே நெருக்கடியை கொடுக்க மாட்டோம் என்று எண்ணினார். ஆக, அவர் இருள்களில் இருந்தவராக (என்னை) அழைத்தார், “நிச்சயமாக உன்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் இருக்கிறேன்.” (அல்குர்ஆன் 21 : 87)
 
அல்லாஹ்வுடைய தண்டனை வரும் என்று அல்லாஹ் கட்டளையிட்டு இருந்தான். ஆனால், யூனுஸ் நபிக்கு தெரியாமல் அந்த மக்கள் தவ்பா செய்துவிட்டார்கள். அல்லாஹு தஆலா தண்டனையை நிறுத்தி விட்டான். 
 
யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ் எச்சரித்தது போன்று தண்டனை வரவில்லையே! இந்த மக்கள் நம்மை பொய்யாக நினைத்து விடுவார்களோ! என்று ஒருபக்கம், இன்னொரு பக்கம், அல்லாஹு தஆலா தனக்கு வாக்களித்ததை நிறைவேற்றவில்லையே! என்று அல்லாஹ்வோடு கொஞ்சம் வருத்தம்.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்; ஊரை விட்டு புறப்பட்டுவிடுகிறார்கள். 
 
ஒரு சிறிய விஷயம் இது. ஆனால், நபிமார்களை பொறுத்தவரை அவர்களுக்கு சிறிய விஷயம், பெரிய விஷயம் என்ற வித்தியாசம் கிடையாது. நமக்கு கட்டாயம், மிக கட்டாயம், வாஜிப், சுன்னத், விரும்பத்தக்கது, ஒழுக்கமானது இப்படி எல்லாம் சாதாரண மக்களாகிய நமக்கு இருக்கலாம். 
 
ஆனால், நபிமார்களை பொருத்தவரை அல்லாஹ்வுடைய கட்டளை என்று வந்துவிட்டால் அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். அவர்கள் செய்தாக வேண்டும். இந்த ஒரு விஷயத்தில் அவர்களிடம் ஏற்பட்ட தவறால், ஆழ்கடலில் நடுக்கடலில் அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.
 
فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ
 
ஆக, (அவர் தன்னை கடலில் எறியவே) அவரை திமிங்கலம் விழுங்கியது. அவர் (தனது இறைவனின் கட்டளை இன்றி கடலுக்கு சென்றதால்) பழிப்புக்குரிய செயலை செய்தவர் ஆவார். (அல்குர்ஆன் 37 : 142)
 
கடலில் மீன் வயிற்றுக்குள் சென்றார்கள். தவறை உணர்ந்தார்கள்.
 
யா அல்லாஹ்! உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை. நீ பரிசுத்தமானவன். நான் குற்றம் செய்துவிட்டேன். நான் அநியாயக்காரன். (அல்குர்ஆன் 21 : 87)
 
தன் தவறை உணர்ந்தார்கள். உடனே, அல்லாஹ் மன்னித்து விட்டான். மன்னித்தது மட்டுமல்லாமல் மீண்டும் அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். 
 
இந்த நபிமார்களின் வரலாறுகளில் நமக்கு படிப்பினை இல்லையா? இந்த நபிமார்களின் வரலாறுகள் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறுகளை நாம் திருத்திக் கொள்ள உபதேசமாக இல்லையா? 
 
இன்று ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கில் பாவங்களை, குற்றங்களை, அத்துமீறல்களை, அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு எதிரான குற்றங்களை, சமுதாயம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து செய்து கொண்டிருக்கிறது. 
 
அரசாங்கமாக சேர்ந்து செய்கிறார்கள். அல்லாஹ்வுடைய தீனை எதிர்ப்பதற்கு அரசாங்கம் தயாராகி விட்டது. எதற்காக அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்தானோ, எதற்காக அல்லாஹ் அதிகாரத்தை கொடுத்தானோ, அந்த ஆட்சியை அதிகாரத்தை வைத்து கொண்டு அல்லாஹ்வுடைய தீனை அவர்கள் புதைக்கிறார்கள். 
 
சட்டம்  அல்லாஹ்வுடைய தீனுக்கு எதிராக, மக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை செய்கிறார்கள். 
 
இப்படி இருந்தால், அல்லாஹ்வுடைய சோதனை வராதா? நாமென்ன அல்லாஹ்விடம் ஏதாவது வாக்குகள் வாங்கியிருக்கிறோமா? அல்லாஹ் கேட்கிறான்; உங்களை தண்டிக்காமல் இருப்பதற்கு நீங்கள் என்னிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறீர்களா? 
 
உங்களிடத்தில் ஏதாவது அதற்குரிய வாக்குறுதி இருக்கிறதா? நீங்கள் தனி கூட்டம். நீங்கள் எந்தத் தவறு செய்தாலும் உங்களை நான் தண்டிக்க மாட்டேன் என்று ஏதாவது சலுகைகள் இருக்கிறதா?
 
முஃமினான சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கின்றான்? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை, உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமுதாயத்திலும், அந்த மார்க்கத்தை நீ பாதுகாப்பவனாக இருக்கின்றவரை உனக்கு என்னுடைய உதவி. உன்னை யாரும் எதிர்க்க முடியாது. உன்னை பார்த்தால் எதிரி பயந்து விடுவான். 
 
அல்லாஹ்வுடைய தீனுக்கு உதவியவனாக நீ இருக்கின்ற வரை நெஞ்சை நிமிர்ந்து நடக்கலாம். துணிவோடு நடக்கலாம். உன்னை பார்க்க கூடிய எதிரியின் உள்ளத்தில் நான் பயத்தை போடுவேன் என்று அல்லாஹ் சொல்கிறான். நாம் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தை உண்டாக்குவோம். 
 
அவர்கள் வணங்கக் கூடிய அந்த தெய்வமும் பலவீனமானது. வணங்கக்கூடியவர்களும் பலவீனமானவர்கள். (அல்குர்ஆன் 22 : 73)
 
நீங்கள் அழைக்கக்கூடிய அல்லாஹ் பலமுள்ளவன். அவனுடைய பலத்தால் நீங்களும் பலமானவர்கள். 
 
அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த வசனத்தை கவனியுங்கள்:
 
وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
 
இன்னும், நிச்சயமாக எவர் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) உதவுவாரோ அவருக்கு அல்லாஹ் உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை உள்ளவன், மிகைத்தவன் ஆவான். (அல்குர்ஆன் 22 : 40)
 
அல்லாஹ்வுக்கு உதவக்கூடியவர்களுக்கு அல்லாஹ் உதவுவான். அல்லாஹ்வுக்கு உதவி என்றால் என்ன? அல்லாஹ்வுடைய தீனுக்கு நீ என்ன செய்தாய்? 
 
இன்று, நாம் நமக்காக எவ்வளவு சேர்த்துக் கொள்கிறோம்? ஒவ்வொரு மனிதனும் அவரவர்களுடைய துறையில் அவர்கள் படக்கூடிய சிரமங்களை எல்லாம் யோசித்துப் பாருங்கள். 
 
ஒரு டெய்லர் நாள் கணக்காக நின்று வெட்டி கொண்டிருக்கிறார். தைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு செக்யூரிட்டி இரவெல்லாம் விழித்து இருக்கிறார். இன்னும் ஒவ்வொரு மனிதனும் அவன் அவனுடைய துறையில் கஷ்டப்படாமல் எதையும் சம்பாதிக்க முடியாது.
 
நீங்கள் கேட்கலாம்; தொழுகிறோமே? நோன்பு வைக்கிறோமே? ஜகாத் கொடுக்கிறோமே? ஹஜ் செய்கிறோமே?
 
இதெல்லாம் தீனுக்காக நாம் செய்வதாக அல்லாஹ் சொல்லவில்லை. தீனுக்காக தான் நாம் செய்கிறோம். தீனிலிருந்து தான் செய்கிறோம். அல்லாஹ்வுக்காக செய்கிறோம். இதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்லவில்லை. 
 
என்னுடைய மார்க்கத்தை பரப்புவதற்காக, பாதுகாப்பதற்காக, இந்த தீனை பிறரிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக நீ என்ன செய்தாய்? என் பக்கம் மக்களை அழைப்பதற்காக, என்னை அறியாதவர்களுக்கு என் பக்கம் அவர்களை அழைப்பதற்காக, என்னுடைய தீனை பற்றி அவர்களுக்கு சொல்வதற்காக நீ என்ன செய்தாய்?
 
அல்லாஹ்வுக்கு உதவக்கூடியவர்களுக்கு அல்லாஹ் உதவுவான் என்றால், அல்லாஹ்வுடைய தீனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இரண்டு கடமை நமக்கு இருக்கிறது. ஒன்று, இந்த தீனின் படி நாம் நமது வாழ்க்கையை அமைக்க வேண்டும்.
 
இரண்டாவது, இந்த தீனை பிறருக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.  அதற்காக உடனே எல்லாரும் மதரசாவில் படிக்கணுமா? நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்கிறோமா? யாராக இருக்கட்டும். 
 
நீங்கள் யாரிடத்தில் வேலை செய்கிறீர்களோ அந்த முதலாளியாக இருக்கட்டும். நீங்கள் அன்றாடம் சென்று வரக்கூடிய கடைகளாக இருக்கட்டும். அன்றாடம் தெருக்களில் நீங்கள் சந்திக்கின்ற அந்த தெருமக்களாக இருக்கட்டும். முஹல்லாவாசிகளாக இருக்கட்டும். அவர்களுக்கு அல்லாஹ்வுடைய தீனை எடுத்து சொன்னோமா?
 
அல்லாஹ்வுடைய தீன், அல்லாஹ்வுடைய மார்க்கம் பரவுவதற்கு என்ன செய்தாய்? இதைத்தான் அல்லாஹ் சொல்கின்றான். அல்லாஹ்வுடைய தீனுக்கு உதவக்கூடியவர்களுக்கு நான் கண்டிப்பாக உதவுவேன் என்று. 
 
அல்லாஹ்வுடைய தீனுக்கு உதவுவது என்றால், அவர்கள் நன்மையை ஏவுவார்கள், தீமையைத் தடுப்பார்கள். நன்மையில் பெரிய நன்மை, தவ்ஹீது -வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அழைப்பு கொடுப்பது. தீமையில் பெரிய தீமை, அல்லாஹ்விற்கு இணை வைப்பது. 
 
இன்று, முஸ்லிம் எந்த அளவு பயந்து விட்டான் என்றால், கோழையாகிவிட்டான் என்றால், அந்த முஸ்லிமை சந்திக்கக்கூடிய ஒரு நஸ்ரானி தனது நஸ்ரானியத்தின் பக்கம் ஒரு அழைக்கிறான். அந்த கிறிஸ்தவத்தின் பக்கம் அந்த முஸ்லிமை அழைக்கிறான். 
 
இன்னும் எந்த அளவுக்கு என்றால், அவர்களுடைய பண்டிகைகளை கொண்டாடுவதை முஸ்லிம்கள் சமுதாயத்தின் மீது அல்ல, முஸ்லிம் அரசாங்கங்களின் மீது திணிக்கிறார்கள். அவர்களுக்கு பயந்து கொண்டு முஸ்லிம் அரசாங்கங்கள் அதை அங்கீகரிக்கின்றன. அதை தங்களுடைய தீனுடைய பெருநாட்களை போல அரசாங்கம் சார்பாக அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
 
இஸ்லாமிய நாடுகளில் வாழக்கூடிய அந்த சமுதாய மக்கள், அவர்களுடைய பெருநாட்களை கொண்டாடுவதற்கு இஸ்லாம் தடை போடவில்லை. ஆனால், அவர்களால் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களின் மீதும், அந்த சமுதாயத்தின் தலைவர்களின் உள்ளங்களில் ஈமானிய பலவீனத்தால் ஏற்பட்ட அந்த கோழைத்தனம் இன்னும் அதிகமாக அந்த நாடுகளில் வாழக்கூடிய, கடைசியாக அறிஞர்களும் அதற்கு ஆதரவாக பேசுவதை பார்க்கிறோம்.
 
கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறு இல்லை. மாற்றுமத பண்டிகைகளில் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதில் தவறு இல்லை. நியூ இயர் கொண்டாடுவது தவறு இல்லை. அந்த அரசாங்கங்களின் மார்க்க கல்வியை படித்து, மார்க்கப் பணியில் இருக்கக்கூடிய அறிஞர்கள் இன்று புதுப்புதுப் ஃபத்துவாக்களை மக்களுக்கு கொடுக்கிறார்கள். 
 
அந்த அரசாங்கத்தினுடைய பத்திரிக்கைகளில் செய்திகளில் பார்க்கிறோம். எப்படி மக்கள் மாறினார்கள்? அரசாங்கம் மாறியது? இப்போது அறிஞர்களும் மாற்றப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 
எந்த அறிஞர்கள், மாற்றுமத கலாச்சாரத்தில் செல்வது என்னென்ன ஹதீஸ்களின் படி நமக்கு தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதை நம்முடைய முன்னோர்களின் நூல்களில் படித்து நமக்கு சொன்னார்களோ, நம்முடைய நபியுடைய ஹதீஸ்களில் நமக்கு சொன்னார்களோ, இன்று அந்த அறிஞர்கள் ஃபத்வாஇப்படி கொடுக்கிறார்கள். 
 
கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறு இல்லை. கிறிஸ்மஸில் கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்து சொல்வது தவறில்லை. நியூ இயர் கொண்டாடுவது தவறு இல்லை. நியூ இயரில் வாழ்த்து சொல்வது தவறில்லை என்கிறார்கள். இதெல்லாம் தேவை என்பதாகச் சொல்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
எவ்வளவு ஒரு பலவீனமான நிலைக்கு இன்று நம்மை நாமே தள்ளிக் கொண்டு இருக்கிறோம். யோசித்து பாருங்கள். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இதைத்தான் நமக்கு நிபந்தனையாக சொல்கிறான். முதலாவதாக, இந்த சோதனைகளில் நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய உள்ளத்தில் தைரியம், வீரம், நான் ஒரு முஸ்லிம் என்ற ஒரு ஈமானிய உறுதி பிறக்க வேண்டும் என்றால், முதலில் நீ உனது மார்க்கத்தில் உன்னை நீ உறுதிப்படுத்து. உன்னுடைய மார்க்கத்தின் பக்கம் அழைப்பவனாக இரு.
 
ஒன்றை அழுத்தமாக பதிவு செய்து கொள்ளுங்கள். மனதில் நன்கு தெளிவாக உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் வணக்கசாலிகளாக தனிப்பட்ட வாழ்க்கையில் மார்க்கத்தைப் பேணக்கூடியவர்களாக இருந்தாலும், குர்ஆன் ஹதீஸ் சட்டங்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கற்றவர்களாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக்கூடிய, அல்லாஹ்வுடைய தீன் தான் உண்மையான தீன் என்று அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடியவராக நீங்கள் ஆகாத வரை, உள்ளத்தில் வீரம் இருக்காது. தைரியம் இருக்காது. அல்லாஹ் எடுத்துவிடுவான்.
 
அந்த அல்லாஹ்வுடைய தீனின் பக்கம் அழைக்கக் கூடியவனாக நான் இருக்கவேண்டும் என்ற அந்த கொள்கை இல்லை என்றால், இங்கே தொழுதுவிட்டு செல்வீர்கள், அங்கே ஒரு மாற்றாரை பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடுவீர்கள். 
 
எங்கே சென்றது தொழுகை? எங்கே சென்றது லாயிலாஹ இல்லல்லாஹ்? இது ஒரு உதாரணம். ஆயிரம் நிகழ்வுகள் அன்றாட வாழ்க்கையில் இருக்கின்றன. தஃவா இல்லை என்றால் நான் முஸ்லீம் என்பதை சொல்வதற்கு உங்களது உள்ளத்தில் பயம் ஏற்பட்டு விடும். 
 
என்னுடைய மார்க்கம் இது, என்னுடைய தீன் இது, இது அறைகளில் வைத்துப் பூட்டுவதற்கு அல்ல. புத்தகங்களில் வைத்து படித்து முடித்துவிட்டு அந்த புத்தகங்களை அலமாரியில் வைப்பதற்கான மார்க்கமில்லை. எடுத்துச் சொல்வதற்கான மார்க்கம். நூற்றுக்கணக்கான வசனங்கள் இந்த மார்க்கம் மக்களுக்குச் எடுத்துச் சொல்ல வேண்டிய மார்க்கம். 
 
இந்த செய்தி மக்களுக்கு போக வேண்டிய செய்தி என அல்குர்ஆன் சொல்கிறது. யார் எப்படி போனால் எனக்கென்ன? நான் பெரிய முஸ்லிம். 
 
இஸ்லாமுடைய ஒரு பகுதியை செய்கிறாய். இன்னொரு பகுதியை பாழாக்கிக் கொண்டு இருக்கிறாய்.
 
அன்பானவர்களே! அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு அந்த ஈமானிய உறுதியை, தவ்ஃபீக்கை கொடுக்கவேண்டும். அல்லாஹ் தஆலா சொல்கிறான்,
 
அல்லாஹ்வுக்கு உதவ நீங்கள் வந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான். 
 
ஆகவே, நம்மில் ஒவ்வொருவரும் என்னால் இந்த மார்க்கம் பரவுவதற்கு, இந்த மார்க்கத்தின் பக்கம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு நான் என்ன செய்ய முடியும்? அதற்காக நீங்கள் எல்லாரும் ஒரு தாவா சென்டர் திறக்கனும், எல்லோரும் ஒரு தாவா சென்டரில் போய் வேலைக்கு சேரணும் என்று இல்லை. 
 
நீங்கள் இருக்கக்கூடிய இடத்தில் இருந்துகொண்டு, உங்களுடைய தொழிலில் இருந்து கொண்டு,  உங்களுடைய அன்றாட பயணங்களில் இருந்து கொண்டு நீங்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இந்த அழைப்பை கொண்டுபோய் சேர்க்கலாம். 
 
சொல்லால் சேர்க்கலாம். சிறு சிறு பிரசுரங்களால் நீங்கள் அவர்களுக்கு சேர்க்கலாம். உங்களுடைய உள்ளத்தில் அந்த கொள்கை, அந்த உறுதி, அந்த  நிலைப்பாடு வந்துவிட்டால் போதும். வழிகள் ஆயிரங்களை அல்லாஹ் திறந்து விடுவான்.
 
அதுபோன்று, இந்த சோதனைகளில் நாம் வெற்றி பெறுவதற்கு, அல்லாஹ்வுடைய உதவியை இந்த கடுமையான காலங்களில் பெறுவதற்கு, அவ்வளவு சோதனை. அடை மழை பொழிவதை போல சோதனை. 
 
அல்லாஹ்வுடைய தூதர் இப்படித்தான் சொன்னார்கள். மழை பொழிவதை போல சோதனைகளை நான் பார்க்கிறேன் என்று.
 
وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ
 
அரபுகளுக்கு நாசம் உண்டாகட்டும் என்று அரபுகளை குறிப்பிட்டுச் சொன்னார்கள். நெருங்கி விட்ட அந்த குழப்பத்தின் காரணமாக நான் பார்க்கிறேன். எப்படி ஒரு மழைத்துளி விழுவதை இந்த பூமியில் பார்க்கப்படுமோ, சோதனைகள் உங்களது வீடுகளுக்குள் புகுவதை நான் பார்க்கிறேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள். (1)
 
அறிவிப்பாளர் : ஜெய்னப் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 3346, 3598.
 
உலக முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய அந்த அரபு சமுதாயம், இன்று காஃபிர் நாடுகளுடன் சொல்கிறார்கள். அரபு முஸ்லீம்களே இஸ்லாமை மாற்றிக்கொண்டார்கள். 
 
அங்கே பலதார மணம் தடுக்கப்பட்டுவிட்டது. அங்கே தலாக்கில் சட்டம் மாற்றப்பட்டு விட்டது. நீங்கள் என்ன இஸ்லாமை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று காஃபிர்கள் அவர்களை நமக்கு எடுத்துக்காட்டாக சொல்லி பேசுகின்ற அளவுக்கு அவர்களுடைய தரம் தாழ்ந்து இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல்களில் இதற்கு நமக்கு மிகப்பெரிய படிப்பினை பாடம் இருக்கிறது. நாம் அல்லாஹ்விடம் துஆ கேட்க கூடிய மக்களாக இருக்க வேண்டும். 
 
அன்றாட நமது வாழ்க்கைக்காக செய்கின்ற துஆ மட்டுமல்ல. யா அல்லாஹ்! எங்களது நிலையை மாற்று. எங்களுக்கு உதவி செய். உன்னுடைய மார்க்கத்தில் எங்களை பலப்படுத்து என்ற துஆவை இந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர் வரை செய்ய வேண்டும்.
 
இன்று, போராட்டங்கள் நடந்த அளவுக்கு, இயக்கங்களுக்காக இன்னும் எத்தனையோ காரியங்களுக்காக செலவழிக்கப்பட்ட நேரங்கள் எங்கே? அல்லாஹ்விடத்தில் கேட்பதற்காக செலவழிக்கப்பட்ட நேரங்கள் எங்கே? அல்லாஹு தஆலா இதைத்தான் நமக்கு சொல்கின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (எதிரிகளின்) ஒரு பிரிவை (போரில்) சந்தித்தால், நீங்கள் வெற்றி பெறுவதற்காக (போர்க்களத்தில்) உறுதியாக இருங்கள். (-போர் நடக்கும் மைதானத்தை விட்டு விலகி ஓடிவிடாதீர்கள்.) இன்னும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 8 : 45)
 
இன்று, அல்லாஹ்வை மறந்து விடுகிறார்கள். அவர் நினைவுக்கு வருகிறார், இவர் நினைவுக்கு வருகிறார், அது நினைவுக்கு வருகிறது, இது நினைவுக்கு வருகிறது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாளை பத்ரு போரை சந்திக்க இருக்கிறார்கள். அந்த இரவெல்லாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள். அதை அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்;
 
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ
 
உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, “தொடர்ந்து வரக்கூடிய ஆயிரம் வானவர்களின் மூலம் நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்” என்று (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன் 8 : 9)
 
மாற்றார்களுக்கு வேண்டுமானால் அவர்களுடைய ஆயுதங்களின் மீது, அவர்களுடைய திறமைகளின் மீது, அவர்களுடைய இராணுவங்களில் மீது நம்பிக்கை இருக்கலாம். 
 
நமக்கோ இவற்றையெல்லாம் தனது கரத்திற்குள் வைத்திருக்கக்கூடிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருக்கிறது. அல்லாஹ்வின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். 
 
அல்லாஹு தஆலா அவனுடைய படையை இறக்கி விட்டால், அவ்வளவுதான். ஒரு மழை போதும். ஒரு காற்று போதும். கடலின் ஒரு அலை போதும். பூமியில் அல்லாஹ் கட்டளையிடக்கூடிய ஒரு பிளவு போதுமானது. இந்த பூமியின் ஓர் அசைவு போதுமானது. அல்லாஹ் காட்டிக் கொண்டுதான் இருக்கிறான். 
 
அல்லாஹு தஆலா, இந்த இஸ்லாமை இந்த தீனை எதிர்க்க கூடியவர்களுக்கு, அல்லாஹ்வுடைய அடியார்கள் முஸ்லிம்களின் மீது நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியவர்களுக்கு சோதனைகளை காட்டிக் கொண்டுதான் இருக்கிறான். 
 
நாம் அல்லாஹ்விடத்தில் கேட்கவேண்டும். அல்லாஹு தஆலா நம் மீது அருள் கொண்டு, நம் எதிரிகளை சோதித்துக் கொண்டு தான் இருக்கிறான். 
 
ஆனால், அவர்களும் அதை பார்த்து படிப்பினை பெறுவதில்லை. முஸ்லிம்களும் அதை பார்த்து கூட  அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதும் இல்லை. அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதும் மில்லை.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இதைத்தான் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான். உங்களது ரப்பு உங்களுக்கு உதவுவான், நீங்கள் அவரிடம் மன்றாடி கேட்கும்போது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்காகவே துஆக்களை கற்றுத் தருகிறார்கள்.
 
அல்லாஹ்வே! இந்தக் குர்ஆனை இறக்கியவனே! 
 
அல்லாஹ்வை புகழ்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் உதவிக்காக வேண்டி எதிரிகளை தோற்கடிக்கும் படி நபியவர்கள் துஆ கேட்க போகிறார்கள். அந்த துஆவின் தொடக்கத்தில் சொல்கிறார்கள்;
 
அல்லாஹ்வே! குர்ஆனை இறக்கியவனே! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதிலிருந்து என்ன உணர்த்த விரும்புகிறார்கள்? துஆ கேட்பவனே! அல்லாஹ்வுடைய வேதத்தை புறக்கணித்த நிலையில் நீ துஆ கேட்டால் உன்னுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படாது. 
 
அல்லாஹ்வுடைய குர்ஆனை புறக்கணித்த நிலையில், எதிரிகளுக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் உதவும்படி சொன்னால், அவனுடைய வேதத்தை புறக்கணித்தவர்களுக்கு அல்லாஹ் உதவமாட்டான். 
 
இன்று, ஃபேஷனாக மாறிவிட்டது. உலகளாவிய குர்ஆன் போட்டிகள் முஸ்லிம் நாடுகளில் நடத்துகின்றன. அல்ஹம்து லில்லாஹ். 
 
ஆனால், அதே முஸ்லிம் நாடுகள் அந்த குர்ஆனுக்கு எதிராக சட்டங்கள் இயற்றுகின்றனரா? இல்லையா? அப்படி என்றால், எதற்காக இந்த போட்டி? குர்ஆனின் வார்த்தைகளை அலங்கரிப்பதற்காகவா? வார்த்தைகளை ஓதுவதில் போட்டியா? 
 
அந்த குர்ஆனுடைய அமல் எங்கே சென்றது? குர்ஆடைய கட்டளைகள் எங்கே? ஃபர்ளுகள் எங்கே? அதனுடைய ஏவல் விலக்கல்கள் எங்கே? 
 
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்,
 
«اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الأَحْزَابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ»
 
அல்லாஹ்வே! வேதத்தை இறக்க கூடியவனே! மேகங்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ஓட வைப்பவனே! எதிரிகளைத் தோற்கடித்தவனே! எங்களது எதிரிகளையும் தோற்கடிப்பாயாக! அவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3024.
 
இப்படி பல துஆக்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 
 
ஒன்று, அல்லாஹ்வுடைய தீன் என்னால் பாதுகாக்கப்படவேண்டும். அல்லாஹ்வுடைய தீனுக்கு எதிராக நானோ, எனது குடும்பமோ செயல்பட்டு விடக்கூடாது. அல்லாஹ்வுடைய தீனை பரப்பக் கூடியவர்களாக நானும் எனது குடும்பமும் இருக்க வேண்டும். 
 
அதுபோன்று அல்லாஹ்வுடைய மார்க்க சட்ட ஒழுக்கங்களை பேணுவதோடு, அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, இதற்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக நம்முடைய துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ 
 
நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை அழைத்தால் என்னை தவிர வேறு யார் இருக்கிறார்கள்? உங்கள் அழைப்புக்கு பதில் தருவதற்கு. (அல்குர்ஆன் 27 : 62)
 
ஆகவே, நாம் கடந்து செல்லக்கூடிய இந்த காலகட்டங்கள் மிக சோதனையான ஒரு காலகட்டமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு நாளும் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் கடுமையான சோதனைகள் நிகழ்த்தப்படுவதை, கடுமையான எதிர்ப்புகள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். 
 
இதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்து, நம்முடைய மார்க்கத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், வரக்கூடிய நமது சமுதாயம், நமது அடுத்த தலைமுறை இந்த மார்க்கத்தில் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக அல்லாஹ்வுடைய வேதத்தைப் பற்றி பிடித்து, ரசூலுல்லாஹ் உடைய சுன்னாவை பற்றி பிடித்து, அதை பாதுகாத்து, அதற்காக பிரச்சாரத்தில் அழைப்பில் இருக்கும் போது தான் அல்லாஹ்வுடைய உதவியை நாம் பெற முடியும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அவனுடைய பாதுகாப்பை தருவானாக! நம்முடைய எதிரிகளுக்கு எதிராக அல்லாஹு தஆலா நமக்கு உதவி செய்வானாக!
 
நம்மை எதிர்க்க கூடியவர்களுடைய உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவானாக! யார் அல்லாஹ்வுடைய இந்தத் தீனுக்கு உதவியாக இருக்கிறார்களோ, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு முஃமீன்களுக்கு உதவியாக இருக்கிறார்களோ, அல்லாஹ் அவர்களை அதிகப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் உதவுவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ حَدَّثَتْهَا، عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ، وَمأْجُوجَ مِثْلُ هَذَا، وَحَلَّقَ بِإِصْبَعِهِ، وَبِالَّتِي تَلِيهَا» فَقَالَتْ زَيْنَبُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ» (صحيح البخاري- 3598) 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/