HOME      Khutba      வெற்றி எப்பொழுது? அமர்வு 1-2 | Tamil Bayan - 488   
 

வெற்றி எப்பொழுது? அமர்வு 1-2 | Tamil Bayan - 488

           

வெற்றி எப்பொழுது? அமர்வு 1-2 | Tamil Bayan - 488


வெற்றி எப்பொழுது
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : வெற்றி எப்பொழுது (அமர்வு – 1-2)
 
வரிசை : 488
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 29-12-2017 | 11-04-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து வாழுமாறு, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, தக்வாவுடைய வெற்றி தான் இம்மை வெற்றிக்கும் மறுமை வெற்றிக்கும் காரணமாக இருக்கும் என்பதை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.
 
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நம் அனைவருடைய எல்லா பாவங்களையும் மன்னித்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அவனுடைய சட்ட வரம்புகளை பேணி, அல்லாஹ்வுடைய தூதர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த ஒரு சரியான பாதையில் நம்மை விட்டுச் சென்றார்களோ, அந்த பாதையில் நாம் நிலைத்திருப்பதற்கு அல்லாஹு தஅலா நம் அனைவருக்கும் உதவி செய்வதற்கு அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கின்றேன்.
 
இன்றைய நம் முஸ்லிம் சகோதரர்கள் சகோதரரிகள் மத்தியில் ஒரு கேள்வி வருவதுண்டு. இந்த கேள்விகளை இவர்கள் மட்டும் கேட்கவில்லை. இவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்கள், அந்த நபிமார்களோடு இறைநம்பிக்கையை ஏற்றுக் கொண்ட முஃமின்களும் கேட்டிருக்கின்றார்கள்.
 
அந்த கேள்வி என்ன? அந்த கேள்வியின் பதில் என்ன? என்பதை அல்லாஹு தஅலா இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை ஆரம்பிக்கும் போதும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மிடத்தில் ஒரு கேள்வியை கேட்டே ஆரம்பிக்கின்றான். 
 
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
 
உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு (வந்த சோதனைகள்) போன்று உங்களுக்கு (சோதனைகள்) வராத நிலையில் நீங்கள் சொர்க்கத்தில் (இலகுவாக) நுழையலாமென்று நினைத்துக் கொண்டீர்களா? அவர்களுக்கு கொடிய வறுமையும் நோயும் ஏற்பட்டன. இன்னும், “அல்லாஹ்வுடைய உதவி எப்போது (வரும்)?‘’ என்று தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் வரை அவர்கள் (எதிரிகளால்) அச்சுறுத்தப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி சமீபமானதாகும்.’’(அல்குர்ஆன் 2 : 214)
 
வசனத்தின் கருத்து : நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றீர்களா?
 
கண்டிப்பாக சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்பது தான் ஒவ்வொரு முஃமினுடைய ஆசை, ஒவ்வொரு முஃமினுடைய துஆ. அந்த சொர்க்கத்திற்காக தான் இவ்வளவு அமல்களை செய்கின்றோம். அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை கொண்டது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்றிருப்பது.
 
இப்படியாக இந்த துன்யாவின் எத்தனையோ ஆசாபாசங்களை எல்லாம் புறக்கணித்து, ஹலால் ஹராமை பேணி வாழ்வது, அந்த சொர்க்கத்திற்காக தான். அந்த சொர்க்கத்திற்காக நீங்கள் அமல் செய்யுங்கள் என்பதும் அல்லாஹ்வுடைய கட்டளை தான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ
 
(உலக வாழ்க்கையில்) அமல் செய்பவர்கள் இது போன்ற (சொர்க்க பாக்கியத்தை மறுமையில் அடைவ)தற்காக அமல் செய்யட்டும். (அல்குர்ஆன் 37 : 61)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
 
இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3 : 133)
 
இதுவும் அல்லாஹ்வுடைய கட்டளை தான். அப்படியிருக்க அல்லாஹ் நம்மை பார்த்து இத்தகைய ஒரு கேள்வி கேட்கிறானே?
 
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ -நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றீர்களா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கின்றதா?
 
என்றால், இந்த கேள்விக்கு அறிஞர்கள் என்ன விளக்கம் சொல்கின்றார்கள்? இந்த வசனத்தினுடைய இரண்டாவது பகுதி, இந்த முதல் பகுதிக்கு விளக்கமாக இருக்கின்றது.
 
அல்லாஹ் எப்படி கேட்கிறான்? உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை இதுவரை உங்களுக்கு வரவில்லை. 
 
எந்த கஷ்ட நஷ்டங்களையும் சந்திக்காமல் நீங்கள் சொர்க்கத்தில் சென்று விடலாம் என்று நினைக்கிறீர்களா? சொர்க்கம் செல்வதற்கு ஆசை ஆனால் அந்த ஆசையானது, அதற்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளாமல், உங்களுக்கு வருகின்ற சோதனையில் பொறுமையாக இருந்து, அல்லாஹ்வுடைய வெற்றியை பெறாமல் நீங்கள் சொர்க்கத்தில் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றீர்களா?
 
உங்களுக்கு முன் உள்ளவர்களுக்கு என்னென்ன சோதனையெல்லாம் வந்திருக்கின்றது பாருங்கள்.
 
அல்லாஹ் சொல்கிறான்: مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا -அவர்களுக்கு வறுமை வந்தது. நோய் வந்தது. பல யுத்தங்களுக்கு போர்களுக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டார்கள்.
 
இந்த உலகத்தில் மனிதன் சந்திக்கின்ற மிகப்பெரிய துன்பங்களில் ஒன்று, போரை சந்திப்பது. நோய்நொடி, வறுமை, பசி, பட்டினி, பஞ்சம் இவையெல்லாம் கண்டிப்பாக ஒரு பெரிய கஷ்டம் தான். 
 
ஆனால், அந்த கஷ்டங்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் போரை சந்திப்பதற்குண்டான கஷ்டத்தை ஒப்பிட்டு பார்த்தானேயானால் யுத்தத்தை சந்திப்பது மிகப்பெரிய கஷ்டங்களில் ஒன்று. அப்படிப்பட்ட போர்களுக்கெல்லாம் யுத்தங்களுக்கு எல்லாம் அவர்கள் ஆளாக்கப்பட்டார்கள்.
 
அடுத்து அல்லாஹ் சொல்கின்றான்: அவர்களுக்கு நாலா பக்கமும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. பயமுறுத்தப்பட்டார்கள்.
 
போர், அதுபோக அவர்கள் ஊரில் இருந்தாலும் சரி, நிம்மதியாக இருக்க முடியவில்லை. கடமையான   பயமுறுத்தலுக்கு  மத்தியில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் இருந்தார்கள். அந்த அச்சுறுத்தல் என்ன  என்பதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
 
நபிமார்களை  பார்த்து அவர்கள் சொன்னார்கள்: 
 
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ
 
மேலும், நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது, எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள். ஆக, அவர்களுடைய இறைவன், “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு (தூதர்களுக்கு) வஹ்யி அறிவித்தான். (அல்குர்ஆன் 14 : 13) 
 
ஈமானை ஏற்றுக் கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆணி சீப்புகளை கொண்டு  அவர்களது உடல்கள்  சீவப்பட்டன.
 
பூமியில் புதைக்கப்பட்டு,   தலையிலிருந்து ரம்பத்தால்  அப்படியே அறுக்கப்பட்டு இரண்டு துண்டுகளாக்கப் பட்டார்கள். இப்படியான  அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு ஏற்பட்டன.
 
நூல் : புகாரி, எண் : 6430.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்: 
 
حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
 
அந்த காலத்தில் வாழ்ந்த ரஸூல்மார்கள், அவர்களுடன் ஈமான் கொண்டவர்கள்  இவ்வளவு கஷ்டங்களைதாங்கி சகித்துக் கொண்டு,  அல்லாஹ்விடத்தில்  கை ஏந்தினார்கள். 
 
யா அல்லாஹ்! உன்னுடைய உதவி எங்களுக்கு எப்போது வரும்?  எங்களுடைய ரப்பே! உனக்காக இந்த சோதனையை  நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். (அல்குர்ஆன் 2 : 214)
 
எதிரிகளை   வீழ்த்தும்படியான உதவி, எதிரிகளை மிகைக்கும் படியான உதவி, எதிரிகளை தோல்வியுறச் செய்து முஸ்லிம்களுக்கு உரிய கண்ணியத்தை மீட்டுக் கொடுக்கும்படியான உதவி, அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தான் இறங்க வேண்டும். 
 
உங்களது ஆயுதங்களைக் கொண்டோ? அறிவைக் கொண்டோ? திட்டங்களைக் கொண்டோ? அந்த உதவியை நீங்கள் பெற முடியாது. அல்லாஹ் அந்த உதவியை  இறக்குவான்.
 
கண்டிப்பாக அந்த உதவியை அல்லாஹ்   இறக்குவான்.  இறக்கி  இருக்கிறான். இறைத்தூதர்களுக்கு உதவி செய்தான். நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்தான்.  ஆனால், அல்லாஹு தஅலா  அதற்குரிய நிபந்தனைகளை வைத்திருக்கின்றான்.
 
அந்த நிபந்தனைகள் பூர்த்தி ஆகும் போது தான் அல்லாஹ்வுடைய உதவி வரும். நீங்கள் முஃமின்கள் என்று சொல்லிவிட்ட காரணத்தினாலேயே உங்களுக்கு உதவ வேண்டும் என்பது அல்லாஹ்விற்கு கட்டாயமல்ல.
 
அல்லாஹு தஅலா  நம்மிடம் இப்படியும் கேட்கிறான்:
 
أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
 
“நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று அவர்கள் கூறுவதால் அவர்கள் சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள்?” என்று மக்கள் நினைத்துக் கொண்டனரா? திட்டவட்டமாக நாம் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை சோதித்தோம். ஆக, அல்லாஹ் நிச்சயமாக உண்மையாளர்களையும் அறிவான். இன்னும், நிச்சயமாக பொய்யர்களையும் அவன் அறிவான். (அல்குர்ஆன் 29 : 2,3)
 
நம்முடைய அறிவைக் கொண்டு நம் வெற்றிக்கான காரணங்களை நாம் வகுத்து விட முடியாது. நம்முடைய படிப்பைக் கொண்டு, அனுபவங்களைக் கொண்டு நம்முடைய வெற்றிக்கான காரணங்களை வகுத்து விட முடியாது.
 
காரணம், நாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து குர்ஆன் கொடுக்கப்பட்டவர்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதரின் இருபத்தி மூன்று கால வாழ்க்கை முஃமினான நமக்கு முழு படிப்பினையாக இருக்கிறது. அவர்களது வாழ்க்கையை இருபத்தி மூன்று ஆண்டுகளாக முன்வைத்து, அந்த முழு வாழ்க்கையையும் ஒரு பாடத் திட்டமாக அமைத்து, அதன்படி நம்முடைய வாழ்க்கையை சீர்திருத்தம் செய்தால் தான், அல்லாஹ்வுடைய உதவியை நாம் எதிர்பார்க்க முடியும்.
 
வெற்றிக்கான காரணங்கள் என்ன? என்று குர்ஆன் என்ன சொல்லுகிறது. முன்னோர்களுக்கு வெற்றி கொடுத்ததை எதை காரணமாக அல்லாஹ் சொல்கின்றான்? என்பதை மொத்த குர்ஆனையும் பாடமாக வைத்து நாம் நமது வாழ்க்கையை சீர் செய்யும் போது தான் வெற்றி கிடைக்கும்.
 
இன்று, பல கூட்டம் எப்படி அமைத்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு விருப்பமான ஒரு வசனத்தை எடுத்து கொள்வார்கள். அந்த வசனத்தின் அடிப்படையில் அவர்கள் ஒரு இயக்கம் ஆரம்பிப்பார்கள். ஒரு திட்டம் போடுவார்கள். 
 
அவ்வளவு தான் அடுத்து உள்ள குர்ஆன் வசனங்களை எல்லாம் மறந்து விடுவார். இன்னும் அவர்களுடைய கொள்கைக்கு முரணாக ஏதும் அப்படிப்பட்ட குர்ஆனுடைய வசனங்கள் எல்லாம் தனக்கில்லை என்பதை போன்று அவர்கள் புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம். 
 
நம்முடைய மூத்த மார்க்க அறிஞர்கள் இப்படியாக குர்ஆனுடைய வசனங்களை, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த ஹதீஸ்களை ஆய்வு செய்து, அல்லாஹு தஅலா வெற்றிக்கான காரணங்கள் எது? என்று எதை குறிப்பிடுகின்றானோ, அதை நமக்கு வகைப்படுத்தி தந்திருக்கிறார்கள். 
 
அவற்றில் முக்கியமான சில விஷயங்களை எல்லாம் இன்ஷா அல்லாஹ் நாம் தொடர்ந்து பார்ப்போம்.
 
அந்த காரணங்களில் ஒன்றுதான், முதலில் நம்முடைய ஈமானை சரி செய்ய வேண்டும். ஈமான் என்ற இறை நம்பிக்கை, தவ்ஹீது -அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவது. 
 
ஈமான் என்று சொன்னால் அதற்கு சிலர் இப்படியும் அர்த்தம் சொல்கிறார்கள்; அல்லாஹ்வை நம்புவது அவ்வளவுதான். 
 
அல்லாஹ்வை ஏற்றுக்  கொள்வதில் காஃபிருக்கும் கருத்து வேற்றுமை கிடையாது. படைத்தவன் ஒருவன் இருக்கின்றான்; கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை மறுக்க கூடியவர்கள் யார்? நாத்தியவர்களைத் தவிர,  படைத்தவன் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்பதை  மறுப்பவர்கள் யாரும் இல்லை.  
 
அல்லாஹ் இருக்கிறான் என்பதை சொல்வது மட்டுமல்ல ஈமானுடைய அர்த்தம்.  "லாயிலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. அந்த அல்லாஹ் ஒருவனைத் தான் வணங்கப்படவேண்டும். அவனைத் தவிர மற்ற அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியவை.
 
அல்லாஹ்வைத் தவிர வணங்கக்கூடிய அனைத்தையும் விட்டு நான் விலகிக் கொள்கிறேன். அல்லாஹ் ஒருவனை மட்டுமே நான் வணங்குவேன என்று மொழிந்து, கொள்கையாக ஏற்றுக்கொண்டு, அந்த இபாதத்தை அடிப்படையாக வைத்து வாழ வேண்டும்.  
 
இன்று, அல்லாஹ் தான் வணக்கத்திற்குரியவன் என்ற கருத்தில் ஈமான் கொண்டவர்கள் அல்லாஹ்வை வணங்கி  வாழ்கின்றார்களா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
 
முஸ்லிம்கள் அல்லாத நாடுகளில் வசிக்கக்கூடிய முஸ்லிம்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். முஸ்லிம் நாடுகளில் வசிக்கக்கூடிய முஸ்லிம்களிடத்திலேயே இபாதத்கள் இல்லாமல் இருப்பதைப் பார்க்கின்றோம். 
 
வணக்க வழிபாடுகள் இல்லாத வாழ்க்கையை பார்க்கின்றோம். அப்படியே வணக்க வழிபாடுகள் இருந்தாலும் அந்த வணக்க வழிபாடுகள், எப்படி மாற்றார்கள் இடத்தில்  அவர்களுடைய மதத்திற்கு அந்த மதத்தை தக்க வைப்பதற்கு சில சடங்குகள் அவர்களித்தில் இருக்குமோ, அந்த அளவுக்குத்தான் இபாதத்தை இன்றைய பல நாடுகளில் பல முஸ்லிம்கள் மாற்றி வைத்திருக்கிறார்கள்.
 
உயிரோட்டம் இல்லாத, தாக்கத்தை ஏற்படுத்தாத, உண்மை எதார்த்தத்தை புரியாத,  ஏன் இதை செய்கின்றேன்? இந்த இபாதத்தின் நோக்கம் என்ன? என்பதை உணராமல் அவர்கள் இபாதத்தை  வைத்திருக்கின்றார்கள்.
 
இபாதத்துடைய உணர்வுகள், இபாதத்துடைய பாடங்கள் அங்கே போதிக்கப்பட்டால்,  அதை புறக்கணிப்பவர்களாக மட்டுமல்ல, அதை எதிர்ப்பவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.)
 
இந்த  ஈமானுடைய அடிப்படையில்தான் அல்லாஹ் உதவி செய்வான். அல்லாஹ் சொல்கிறான்:
 
إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ
 
நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம். (அல்குர்ஆன் 40 : 51)
 
எந்த ஈமானை தூதர்கள் போதித்தார்களோ, எந்த ஈமானுக்காக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பத்ரை, உஹதை, அஹ்ஸாபை, ஹூனைனை, சந்தித்தார்களோ, அந்த ஈமான் ஏதோ சில வரிகளை படிப்பது, சில வார்த்தைகளை மனப்பாடம் செய்வது, அதுவல்ல.
 
அது தொடக்கத்தில் ஒரு சில துளி என்று சொல்லலாம். வாழ்கையில் அந்த ஈமான் வர வேண்டும்.
 
அல்லாஹ் சொல்கிறான் : 
 
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
 
முஃமினுக்கு உதவி செய்வது நம்மீது கட்டாயக் கடமை என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 30 : 47)
 
ரப்பு யாரை முஃமின் என்று சொல்கிறான்? அல்லாஹு தஅலா யாரை முஃமின் என்று ஏற்றுக் கொள்கிறான்? அரபியில் பெயர் வைத்திருப்பவரை வைத்தோ அல்லது அடையாளத்திற்கு தாடிகளை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்கத்தை புறக்கணிப்பவர்களையோ அல்லது சில ஹிஜாபை மட்டும் அணிந்து கொண்டு அல்லாஹ்வுடைய சட்டத்தை ஏளமிடக்கூடியவர்களையோ அல்ல.
 
அல்லாஹு தஅலா சொல்கின்றான்:
 
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
 
நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; இன்னும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்; இன்னும், அவர்கள் தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்கள். (அல்குர்ஆன் 8 : 2) 
 
அவர்களது உள்ளத்தில் ஒரு பயம் ஏற்படும். ஒரு திடுக்கம் ஏற்படும். தங்களது ரப்பை நினைத்து அவர்களுக்கு அன்பும் ஆசையும் பயமும் பிறக்கும்.
 
இன்று, அல்லாஹ்வுடைய வேதத்தை புறக்கணித்த சமுதாயத்தை தான் நாம் பார்க்கின்றோம். இசை, ஆபாசம், இன்னும் சினிமா சார்ந்த, சீரியல் சார்ந்த இந்த ஒரு கலாச்சாரத்தில் மூழ்கியிருந்து, குர்ஆன் ஓதுவதையும், குர்ஆன் ஓதப்படுவதையும் புறக்கணித்த ஒரு பெரிய கூட்டத்தை பார்கின்றோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நூறு ஆயத்துகள், நூற்றி ஐம்பது ஆயத்துகளை வழக்கமாக ஓதக்கூடிய அந்த ஃபஜ்ருடைய தொழுகையை ஐந்து நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடுகளில்  சட்டம் போடுகிறார்கள். 
 
ஆனால், இரவெல்லாம் விழித்திருந்து இசை நிகழ்ச்சி நடத்தலாம். கழியாட்டங்கள், க்ளப்புகள் என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள், ஆடல்பாடல்கள் எல்லாம் நடக்கலாம். 
 
ஆனால், மஸ்ஜிதுகளில் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் நிமிடங்கள் குறிக்கப்பட்டு, இதற்கு மேல் அந்த தொழுகை நீட்டப்படக் கூடாது என்ற சட்டம் போடப்பட்டிருக்கிறது என்றால், அந்த நாடுகளின் மீது ஏன் அல்லாஹு தஅலா எதிரிகளை சாட்ட மாட்டான்?
 
அல்லது அந்த நாட்டு முஸ்லிம்கள் இமாம்களுக்கு இப்படி தான் தொழ வைக்க வேண்டும் என்று இதற்கு மேல் தொழக்கூடாது; தொழுகை நடத்தக்கூடாது; இதற்கு மேல் ஓதினால் அங்கு அந்த இமாமுக்கு வேலையில்லை. 
 
இப்படியாக அல்லாஹ்வுடைய இபாதத்திற்கு அவர்கள் அர்ப்பத்தை ஒதுக்கிவிட்டு, இரவெல்லாம் விழித்திருந்து, அந்த ஆடல், பாடல், இசை, சுற்றித்திரிவது அவர்களுக்கு ஈசியாக இருக்கிறது.
 
சனிக்கிழமை ஆகிவிட்டால் மக்களெல்லாம் சுற்றி திரிந்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை சுப்ஹ் தொழுகையில் பார்த்தால் கூட்டம் வெகு குறைவாக இருக்கும். 
 
முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கின்ற காரணத்தால் வியாழக்கிழமை எல்லாம் சுற்றித்திரிந்து விட்டு இரண்டு மணி மூன்று மணிக்கு தூங்குவார்கள்.
 
ஃபஜ்ருக்கு அங்கே கூட்டம் இருக்காது. கடைசியாக குத்பாவின் போது வருவார்கள்.  எந்தெந்த நாட்டில் எதற்கெல்லாம் அனுமதியிருக்குமோ, அங்கெல்லாம் சுற்றித்திரிவார்கள். கடைசியில் சுப்ஹு தொழுகைக்கு ஆள் இருக்காது.
 
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் சொல்கின்றான்; குர்ஆனை ஓதி ஓதி அவர்கள் ஈமானை அதிகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வுடைய அந்த வேதத்தை தொடர்ந்து ஓதி ஓதி, அந்த குர்ஆனை தினந்தோறும் அவர்கள் வாசித்து வாசித்து, அதனுடைய கருத்துக்களை புரிந்து, அந்த உணர்வுகளோடு வாழ்ந்து தங்களது இறைநம்பிக்கையில் இருப்பார்கள்.
 
தங்களது ரப்பின் மீது முழு நம்பிக்கையோடு சார்ந்திருப்பார்கள். நட்பு பகை அல்லாஹ்விற்காக இருக்கும். யாருக்கு பகைத்தால் என்ன? யாரும் என்னுடைய ரிஸ்கைக் என்னிடமிருந்து பறித்து விட முடியாது.
 
இன்று, எத்தனையோ பல நாடுகள் யூதர்களோடு கிறிஸ்தவர்களோடு நட்பு பாராட்டிக் கொண்டு, முஸ்லிம்களோடு பகைமை காட்டுகின்றார்கள். 
 
அதற்கு என்ன காரணம்? இந்த யூதர்களை கிறிஸ்தவர்களை பகைத்துக் கொண்டால்  இந்த சுக போக வாழ்க்கை கிடைக்காது. இந்த ஆடம்பரமான வாழ்க்கை கிடைக்காது என்ற  அற்ப பயத்தை ஷைத்தான் அவர்களுக்குள் போடுகின்றான்.
 
மக்கா வெற்றி பெற்ற கொள்ளும் போது, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஒரு கட்டளை இறக்கினான். அது என்ன கட்டளை என்றால், இனி எந்த முஷ்ரிக்குகளும் மக்காவிற்குள்ளே இருக்கக்கூடாது.
 
இனி யாரும் எவ்வளவு பெரிய வியாபாரியாக இருந்தாலும், மக்காவுடைய ஹரம் எல்லைக்குள் முஷ்ரிக்காக இருப்பவர் யாரும் வரக்கூடாது என்ற ஒரு சட்டத்தை அல்லாஹ் இறக்கினான். (அல்குர்ஆன் 9 : 28) 
 
அப்பொழுது சிலர் பயந்தார்கள்; வியாபாரிகள் நம் நாட்டிற்குள் வரவில்லை என்றால் வறுமை ஏற்பட்டு விடுமே! செல்வம் ஏற்படாதே! என்ற பயம் அவர்களுக்கு இயற்கையாகவே ஏற்பட்டது.
 
அல்லாஹ் கூறினான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ
 
நம்பிக்கையாளர்களே! இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். ஆகவே, அவர்கள் அவர்களுடைய இந்த ஆண்டிற்குப் பின்னர் புனித மஸ்ஜிதை நெருங்கக் கூடாது. வறுமையை நீங்கள் பயந்தால், தனது அருளினால் உங்களை நிறைவாக்குவான் (உங்களுக்கு தேவையான செல்வத்தை வழங்குவான்) அல்லாஹ் நாடினால். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான். (அல்குர்ஆன் 9 : 28)
 
இன்று, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்க்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. தங்களுடைய சுகபோக வாழ்க்கையில் எந்தவித கோளாறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே  யூதர்களோடு, கிறிஸ்தவர்களோடு நட்பு பாராட்டி அவர்களையே தங்களுடைய உற்ற தோழர்களாக  ஆக்கிக் கொண்டவர்களை பார்க்கின்றோம்.
 
முஃமின்களைத் தவிர யாரையும் நெருக்கம் ஆக்காதீர்கள் என்று அல்லாஹ் சொன்னான். (அல்குர்ஆன் 3 : 118)
 
ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த ரகசியத்தை எல்லாம் அவர்களது கையில் கொடுத்து விடுகிறார்கள். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்).
 
அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த முஃமின்கள் யார்? அவர்களுடைய அடையாளங்கள் என்ன?
 
அவர்கள் தொழுகையை சரியாக நிறைவேற்றுவார்கள். (அல்குர்ஆன் 8 : 3)
 
இன்று, தொழுகையைப் பற்றி யாராவது பேசினால் இவர்களெல்லாம் பிற்போக்குவாதிகள், இவர்களெல்லாம் பழமைவாதிகள் என்று இப்படியே சொல்லிக் கொண்டே இருப்பார்கள். 
 
காலங்காலத்திற்கும் இவர்கள் தொழுகை, தொழுகை என்றே சொல்வார்கள். இதைத் தவிர இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
 
உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கின்றது. உலகில் எதை எதையோ முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் என்னும் தொழுகையைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
 
எப்படி ஷைத்தான் அவர்களுடைய மனதை கெடுத்து வைத்திருக்கின்றான் பாருங்கள்! இந்தத் தொழுகை இல்லை என்றால், பிறகு இஸ்லாம் எங்கே இருக்கும்? நீ படித்து பட்டதாரியாகி, அறிவாளியாகி, பெரிய செல்வந்தனாகி, ஏன் அரசனாகவே வாழ்வதில் என்ன பலன்?   உன்னிடத்தில் தொழுகை இல்லை என்றால்.
 
ஒட்டுமொத்த இஸ்லாம் என்ற மார்க்கம் இந்த தொழுகையை சுற்றிச் சுற்றி வருகின்றது. எனவேதான், ஜிஹாத் நடக்கக்கூடிய நேரத்திலும் கூட அல்லாஹு தஅலா இந்த தொழுகையை தனது நபிக்கே மன்னிக்கவில்லை.
 
அல்லாஹ் தொழுகையை யாருக்காவது மன்னிப்பதாக இருந்தால், எந்த ஒரு தருணத்திலாவது அல்லாஹு தஅலா தொழுகையை மன்னிப்பதாக இருந்தால், போர் உக்கிரமாக நேரத்தில் அல்லாஹு தஅலா தொழுகையை தனது நபிக்கு மன்னித்திருப்பான்.
 
அந்த நேரத்தில் கூட, தொழுகையை அல்லாஹ் மன்னிக்கவே இல்லை. நீங்கள் தொழுகையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறான். 
 
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
 
(எல்லாத்) தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணி பாதுகாத்து வழமையாக நிறைவேற்றி வாருங்கள். இன்னும், (தொழுகையில்) அல்லாஹ்விற்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
 
ஜிஹாத் இருகின்றதோ இல்லையோ, எதிரிகள் உங்களை கொல்கின்றார்களோ இல்லையோ, நீங்கள் அவர்களை தாக்குகின்றீர்களோ இல்லையோ, தொழுகையை நீங்கள் தவற விடக்கூடாது.
 
فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا
 
ஆக, நீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் (நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களாக இருங்கள். ஆக, (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் (பாதுகாப்பு பெற்று) நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி முழுமையாக) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 4 : 103)   
 
இந்த இரண்டு வசனங்கள் எங்கு இறக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள்! படித்துப் பாருங்கள்!
 
இதற்கு முந்தைய வசனங்கள் போரைப் பற்றி, இதற்கு பிந்தைய வசனங்கள் போரைப் பற்றி, அதற்கு நடுவில் அல்லாஹ் இந்த வசனத்தை சொல்கின்றான்.
 
இரவெல்லாம் கழியாட்டங்களில் ஈடுபட்டு விட்டு, ஃபஜ்ருடைய தொழுகைக்கு வராத ஒரு பெரும்பான்மை மக்களை கொண்ட சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கின்றதே! இவர்கள் வெற்றிக்கு காரணங்களை வகுக்கின்றார்கள்.
 
உலகமெல்லாம் வெற்றிக்கான காரணங்களை வகுத்து, உலகமெல்லாம் வெற்றிக்குரிய இலக்கணங்களை வகுத்து, வெற்றிக்குரிய இலக்கணங்கள் என்று எதை எதையோ காரணங்களாக இட்டு, அதற்காக அழைத்துக் கொண்டு இருந்தார்களோ, அந்த நேரத்தில் தான் இரண்டு வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்.
 
يَا أَيُّهَا النَّاسُ قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، تُفْلِحُوا "
 
நீங்கள் "லாயிலாஹா இல்லல்லாஹ்" என்ற ஈமானைப் பெற்றுக் கொள்ளுங்கள்; வெற்றி அடைவீர்கள். இரண்டாவது, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிற்கு தொழுகைக்கு வாருங்கள். நீங்கள் தொழுகைக்கு வாருங்கள். வெற்றிக்கு வாருங்கள் என்று அழைத்துச் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மது, எண் : 16023.
 
அல்லாஹ்வின் தூதருடைய இந்த சீர்திருத்தத்தை செய்வது, இன்று நம்மில் பலருக்கு பழமைவாதமாக தெரிகிறது.
 
தொழுதுவிட்டால் என்ன கிடைத்துவிடும்? தொழுகையால் எல்லாம் ஆகிவிடுமா? தொழுதால் உணவு கிடைத்து விடுமா? தொழுதால் எதிரிகளை நாம் மிகைத்துவிட முடியுமா? இப்படியாக ஷைத்தானுடைய வஸ்வசாக்கள், ஈமானிய குழப்பங்கள் பலருடைய மண்டைக்குள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
அல்லாஹ் சொல்கிறான்: முஃமின்களுக்கு நாம் உதவி செய்வோம். யார் அவர்கள்? தொழுகையை சரியாக தொழுவார்கள். (அல்குர்ஆன் 8 : 1-3) 
 
இந்த தொழுகையை நீ பாழாக்கி விட்டு, எதற்கெல்லாம் நீ திட்டம் தீட்டினாலும் சரி, எல்லா திட்டங்களையும் அல்லாஹ் பாழாக்கி விடுவான். உன்னுடைய அத்தனை திட்டங்களையும் அல்லாஹ் பாழாக்கி விடுவான். தொழுகையை நீ பாதுகாத்தால் உன்னுடைய அத்தனை காரியங்களையும் அல்லாஹ் பாதுகாப்பான்.
 
கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒரு கடிதத்தை இமாம் மாலிக் அவர்கள் பதிவு செய்கிறார்கள். 
 
கலிபா என்று சொன்னால், இன்று முஸ்லிம் நாடுகளில் எத்தனையோ சீர்திருத்த வாதிகள், கவிஞர்கள், பேச்சாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், சிந்தனைவாதிகள் முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்படும் போது உடனே அரசர்களை மன்னர்களை அதிகாரிகளை குறை சொல்வார்கள். 
 
எங்களுக்கு உமர் வேண்டுமே! எங்களுக்கு உமரை போன்று ஒரு கலிஃபா வேண்டுமே! எங்களுக்கு ஹாலிதை போன்று ஒரு படைத் தளபதி வேண்டுமே! சுல்தான் சலாஃபுதீன்  ஐயூப் போன்று ஒரு மன்னர் வேண்டுமே!  அப்படி ஒரு கலிஃபா வந்தால் அவரை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு இருக்கின்றீர்களா?  
 
கலிஃபா உமரை போன்று ஆட்சி செய்யக்கூடிய மன்னர் வந்தால் அவருடைய சட்டத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் நீங்கள் இருக்கின்றீர்களா? அந்த ஈமானிய பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா? கலிஃபா உமர் உடைய அந்த  நீதத்தை  தாங்கக் கூடிய மன உறுதி உங்களிடம் இருக்கிறதா?
 
ஆனால், தன்னிடத்தில் உள்ள குறைகளை எல்லாம் மறந்து விட்டார்கள், மறைத்து விட்டார்கள், எண்ணிப் பார்க்கவில்லை.
 
ஆனால், மன்னரை பார்த்து  உமரை போன்று  கலிஃபா வேண்டுமே! ஹாலிதைப் போன்று படைத்தளபதி வேண்டுமே! சுல்தான் சலாவுத்தீன் அய்யூப்பை போன்று ஒரு மன்னர் வேண்டுமே! என்று.
 
ஆனால், இவர்களோ ஒட்டுமொத்த வாழ்க்கையில் யூதர்களாக, கிறிஸ்தவர்களாக இருக்க,  ஈமானை விலைபேசியிருக்க, அத்தனை அசிங்கங்கள் ஆபாசங்களை எல்லாம் செய்து கொண்டு, இவர்கள் ஆட்சியாளர்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள்.
 
ஸலஃபுகள் -நம்முடைய சான்றோர்கள் ஒருவரிடத்தில் கேட்கப்பட்டது; 
 
(இன்று, மக்கள் பள்ளிவாசல்களில் தொழுவதை பார்க்கின்றோம். எத்தனை பேருடைய தொழுகைகள் சுன்னதாக இருக்கின்றது?  ஒழு செய்வது எப்படி? என்று படிக்காத சமுதாயம்தான் இன்று இருக்கிறோம்.
 
 ஏதோ அவரை பார்த்து நான் ஒழு செய்தேன். நான் செய்கின்ற உளூ சரிதானா? என்று ஒரு ஆலிமிடத்தில் செய்து காட்டி சரிசெய்திருக்கின்றோமா?
 
அல்லது குறைந்தபட்சம், உளூ செய்கின்ற ஹதீஸ்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு நான் செய்கின்ற உளூ சரியா? என்று நம்மால் பார்க்க முடிகின்றதா?
 
உளூவே சரியில்லை என்றால், அப்பொழுது தொழுகையைப் பற்றி என்ன சொல்வது? ஏதோ போய்க்கொண்டே இருக்கின்றது.  இப்படித்தான் செய்தேன் நான் செய்வதில் என்ன தப்பு இருக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாம். கேள்வி கேட்டால் இப்படி அடுத்த கேள்வி.)
 
அவர்களிடத்தில் (ஸலஃபுகள்) கேட்கப்பட்டது; மக்கள் இன்று தொழுகையில் சரி இல்லையே?  அவர்களிடத்தில் சுன்னத்தான தொழுகை இல்லையே? ஏன்? என்று. 
 
அதற்கு அந்த ஸலஃப் சொன்னார்; இன்று அறிஞர்கள், பிரசங்கிகள், சீர்திருத்தவாதிகள் மக்களின் இபாதத்துகளை  சீர்செய்வதை விட்டு விட்டு, மன்னர்களை, ஆட்சியாளர்களை, அரசர்களை, விமர்சனம் செய்வதை, அவர்களுடைய குறைகளை ஆராய்வதை வழக்கமாக  எடுத்துக் கொண்டார்கள். எனவே மக்களின் தொழுகை கெட்டு இருக்கின்றது.
 
அதேநேரத்தில் மக்களிடத்தில் என்னென்ன விஷயங்கள் வர வேண்டுமோ, அதையும் நாம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இன்றைய நிலை எப்படி என்றால்,  எல்லாமே ஒரு கவர்ச்சியாக இருக்க வேண்டும். புதுசு புதுசா ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும்.  
 
இங்கு நாளைக்கு ஒரு வகுப்பு வைக்கின்றோம் என்று சொல்லுங்களேன். எத்தனை பேர் வருகிறார்கள்? அதனால் வராதவர்களை எல்லாம் குறை சொல்வதா இல்லை.  நிர்பந்தமான ஒரு காரணத்தால் வரவில்லை என்றால் அது வேறு விஷயம்.
 
அல்லது அவர்கள் படித்த காரணத்தால் வரவில்லை என்றால் வேறு விஷயம். தனக்கு தெரியவில்லை என்று உணர்ந்ததற்குப் பிறகும் வரவில்லை என்றால், அது குற்றம்.
 
அதற்குரிய வசதி இருந்தும், நேரம் இருந்தும், தனக்கு தெரியவில்லை என்று தெரிந்ததற்கு பிறகும், வரவில்லை என்றால், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
கலிஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய கடிதத்தை இமாம் மாலிக் ரஹுமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள். 
 
தங்களது கவர்னர்களுக்கு எழுதுகிறார்கள். எங்கெல்லாம் இஸ்லாமிய ஆட்சி பரவி விட்டதோ, அந்த கவர்னர்களுக்கு கலிஃபா உமர் எழுதுகிறார்கள். 
 
أَنَّ عُمَرَ بْنَ الَخْطَّابِ كَتَبَ إِلَى عُمَّالِهِ: إِنَّ أَهَمَّ أَمْرِكُمْ عِنْدِي الصَّلاَةُ، مَنْ حَفِظَهَا وَحَافَظَ عَلَيْهَا، حَفِظَ دِينَهُ، وَمَنْ ضَيَّعَهَا، فَهُوَ لِمَا سِوَاهَا أَضْيَعُ.
 
உங்களது, வேலைகளில் காரியங்களில் என்னிடத்தில் நீ செய்யக்கூடிய மிக மிக முக்கிய காரியம் தொழுகை தான். அந்த தொழுகையை நீ பேணினால் முஸ்லிம்களின் அத்தனை காரியங்களையும் நீ பேணுவாய். அந்த தொழுகையை நீ வீணக்கினால் முஸ்லிம்களின் அத்தனை காரியங்களையும் நீ வீணாக்கி விடுவாய்.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முவத்தா மாலிக், எண் : 9.
 
இதற்கு மேல் ஒன்றுமே கிடையாது. கலிஃபா உமர் உடைய சீர்திருத்தம் இது. கலிஃபா உமர் ஒரு அதிகாரியை சீர்திருத்த நாடும் பொழுது, அவருடைய தொழுகையை சீர்திருத்தம் செய்தார்கள். அவர்களுடைய மற்ற அமல்கள் தானாக சீர்திருத்தம் ஆகிவிடும்.
 
இன்று, மக்கள் வசதி வாய்ப்புகளைத் தான் எதிர்பார்க்கின்றார்களே தவிர, நிம்மதியான, கண்ணியமான, பாதுகாப்பு மிக்க இறைவழிபாட்டுடைய வாழ்க்கையை எதிர் பார்க்கவில்லை.
 
அல்லாஹு தஅலா முஃமின்களுக்கு வெற்றியைச் சொல்கின்றானே, அந்த முஃமின்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். அவர்கள் ஜகாத்தை சரியாக நிறைவேற்றுவார்கள். (அல்குர்ஆன் 8 : 1-3)
 
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இத்தகைய முஃமின்களுக்கு தான் இந்த பூமியில் கிலாஃபத்தை வாக்களிக்கின்றான்.
 
கிலாஃபத் என்பது, நீங்கள் பீரங்கிகளை வாங்கிவிட்டீர்கள்; ஏரோ பிளேன்களை வாங்கிவிட்டீர்கள்; விமானம் தாங்கிய கப்பலை வாங்கி விட்டீர்கள்; உலகத்தில் உள்ள அத்தனை ஆயுதங்களையும் குமித்து விட்டீர்கள். 
 
கிலாஃபத் அதன் மூலமாக கிடைக்காது. அது அப்போது வந்து போகக்கூடிய ஒரு மேகத்தை போன்று, நீங்கள் ஆசைப்படக் கூடிய ஒன்றாக இருக்குமே தவிர, அல்லாஹ் கொடுக்கக்கூடிய கிலாஃபத் என்பது அப்படி அல்ல.
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
 
உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: அவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) ஆட்சியாளர்களாக ஆக்கியது போன்று இப்பூமியில் அவர்களை ஆட்சியாளர்களாக ஆக்குவான். இன்னும், அவர்களுக்காக அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். அவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை அவர்களுக்கு மாற்றித்தருவான். அவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள். (அல்குர்ஆன் 24 : 55) 
 
இன்னும் பல  விஷயங்கள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்ஆவில் பார்ப்போம். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய முஃமின்களை, சகோதர சகோதரரிகளை இப்படியாக சோதிக்கப் படுகின்ற நிலையிலேயே அல்லாஹ் விட்டுவிட விரும்பவில்லை. கண்டிப்பாக உதவி செய்வான்.
 
அவன், நபிமார்களுக்கு உதவி செய்தவன். நபி தோழர்களுக்கு உதவி செய்தவன். நமக்கும் உதவி செய்வான். ஆனால், அல்லாஹ்வுடைய நிபந்தனை, அந்த ஈமானோடு, அல்லாஹ்வுடைய நிபந்தனைகளோடு நாம் வாழ வேண்டும். 
 
அத்தகைய ஒரு வாழ்க்கை, நம்மை திருப்தி படுத்துவதோடு, அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு உட்படுத்தும் போது, கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு உதவி செய்வான். நம்மை பாதுகாப்பான். 
 
நம்மை பாதுகாக்கக்கூடிய ஆட்சியை அல்லாஹு தஅலா ஏற்படுத்திக் கொடுப்பான். யார் மூலமாக? அல்லாஹ் வாக்களித்த இந்த சிறந்த வாக்கை உண்மைப் படுத்துவானோ அத்தகையவர்களை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான். இது நாமாக ஏற்படுத்தக்கூடிய ஒன்றல்ல.
 
கலிஃபா அலி இப்னு அபிதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய ஒரு வார்த்தையை கூறி நிறைவு செய்கிறேன். 
 
கலிஃபா அமீருல் முஃமினீன் அலி இப்னு அபிதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டார்கள். அல்லாஹ் எங்களது உள்ளங்களைப் பார்த்தான். எங்களில் சிறந்தவர்களை அல்லாஹு தஅலா எங்களுக்கு கலிஃபாவாக கொடுத்தான்.
 
அபூபக்ர் ஏன் கலிஃபா ஆனார்? அங்கே அபூபக்ரை ஏற்றுக் கொள்ளக் கூடிய, அவர்களுடைய கட்டளைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மக்கள் இருந்தார்கள். பிறகு, உமரை அல்லாஹ் கலிஃபாவாக தேர்ந்தெடுத்தான். பிறகு, அவர் இருந்தார். பிறகு உஸ்மான். இப்போது நான் இருக்கிறேன்.
 
உங்களில் நன்மையிருக்குமேயானால், அல்லாஹ் உங்களில் உள்ள நல்லவர்களை கலிஃபாவாக தேர்ந்தெடுப்பான்.
 
நூல் : ஹாகிம், எண் : 4681.
 
இதிலிருந்து என்ன தெரிகிறது? எதை அவர்கள் சுட்டுக் காண்பித்தார்கள்? ஒரு முஸ்லிம் மன்னர் கெட்டுப் போகிறார் என்றால், ஒரு இஸ்லாமிய அரசாங்கம் கெட்டு போகிறது என்றால், அதற்கு முன்பு மக்கள் அங்கே கெட்டுவிட்டார்கள் என்று பொருள்.
 
அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை மாற்றி கொண்டார்கள். அதனால் அவர்களுடைய ஆட்சியாளர்களும் அவர்களுக்கு அப்படி வருகிறார்கள்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும், உங்களுக்கும் உலகத்தில் உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும், முஃமின்களுக்கும் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் அல்லாஹ்வுடைய வெற்றியை, அல்லாஹ்வுடைய பாதுகாப்பை தந்தருள்வானாக! 
 
எதிரிகளுடைய சூழ்ச்சிகளிலிருந்தும், அவர்களுடைய எல்லா விதமான குழப்பங்கள், அச்சுறுத்தல்களிலிருந்தும் முஸ்லிம்கள் எல்லோரையும் அல்லாஹு தஅலா பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/