எழுப்பப்படும் நாளின் திடுக்கங்கள் - அமர்வு 2-2 | Tamil Bayan - 487
எழுப்பப்படும் நாளின் திடுக்கங்கள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : எழுப்பப்படும் நாளின் திடுக்கங்கள் (அமர்வு 2)
வரிசை : 487
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 22-12-2017 | 04-04-1439
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹு ரப்புல் ஆலமீனை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வின் ஷரீஅத்தை பேணி வாழுமாறு அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறாமல் அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு உட்பட்டு வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
இதற்கு முந்திய ஜும்ஆவில் நாம் பேசியது போன்று, மஹ்ஷருடைய சில விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
மேலும், இன்றைய முஸ்லிம்களுடைய கலாச்சார சீரழிவின் ஒரு வெளிப்பாட்டையும் இந்த ஜும்ஆவில் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனுடைய அன்பையும் மன்னிப்பையும் பெற்ற, இம்மை மறுமையில் வெற்றி பெற்ற நல்லமக்களில், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தவர்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
மஹ்ஷருடைய அந்த நாள் என்பது, மனிதர்களெல்லாம் எழுப்பப்படுகின்ற நாள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய அமல்களுக்கு ஏற்ப எழுப்பப்படுகின்ற அந்த நாள். அவனுடைய செல்வம் ஆட்சி அதிகாரம் இவை எல்லாம் மறைந்து போய், மனிதனும் அவனுடைய அமல்களும் மட்டும் அங்கே மீதம் இருக்கும்.
அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டார்கள்;
فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ
நாளை மறுமையில் மனிதன் எழுப்பப்படுகின்ற அந்த நிலையில் அவன் தன்னுடைய வலது புறத்தில் பார்ப்பான்.
எந்த அமலை அவன் உலகத்தில் இருக்கும் போது செய்தானோ, எந்த அமலைச் செய்து மறுமைக்கு அனுப்பி இருந்தானோ, அதைத் தவிர வேறு எதையும் அவன் காணமாட்டான்.
அவனுடைய இடது பக்கத்தில் பார்ப்பான்; அவனுடைய அமலைத் தவிர வேறு ஒன்றும் இருக்காது. அவனுடைய வலது பக்கம் இடது பக்கம் வேறு ஒன்றுமே இருக்காது. சொர்க்கம் நல்லவர்களுக்காக நெருக்கமாக்கப் பட்டிருக்கும். பாவிகளுக்காக நரகம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். (1)
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7512.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் மனிதன் அங்கே இருப்பான். மனிதர்கள் அங்கே பிரிக்கப்பட்டு கொண்டிருப்பார்கள். நல்லவர்கள் நல்லவர்களிலும், ஒவ்வொரு நல்லவருக்கு அவரவர் அமல்களுக்கு ஏற்ப, அந்த அமலை அதிகம் செய்த மக்களுடைய கூட்டத்தில் அவர் சேர்க்கப்பட்டுக் கொண்டிருப்பார்.
இப்படியாக நல்லவர்கள், அமல்களுக்கு ஏற்ப அவர்களும் அங்கே பிரிக்கப்பட்டு சொர்க்கத்திற்கு செல்வதற்காக, அவர்களுடைய விசாரணைக்காக, அவர்களுடைய அமல்கள் எடைபோடப்படுவதற்காக அவர்களும் அங்கே காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், நல்லவர்களுக்கு அந்த நாள் மிக ஒரு லேசான நாளாக இருக்கும்.
அல்லாஹ் சொல்கிறான்:
لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْأَكْبَرُ
மிகப்பெரிய திடுக்கம் நல்லவர்களை கவலைக்குள்ளாக்காது. (அல்குர்ஆன் 21 : 103)
அந்தத் திடுக்கங்களை அவர்கள் பார்ப்பார்கள். ஆனால், அதனால் அவர்கள் பீதிக்கு ஆளாக மாட்டார்கள். அல்லாஹு தஆலா அவர்களைப் பாதுகாத்தருள்வான்.
பாவிகளுக்கு அந்த நாள் மிக சிரமமாக இருக்கும். அல்லாஹ் சொல்கிறான்:
فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ (9) عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
அந்த மஹ்ஷருடைய நாள் மிக சிரமமான நாளாக இருக்கும். மிகக்கடுமையான நாளாக இருக்கும். காபிர்களுக்கு சாதாரணமான நாளாக இருக்காது. (அல்குர்ஆன் 74 : 9,10)
அல்லாஹு தஆலா இதுகுறித்து மேலும் சொல்கிறான்:
وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا
மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி அவர்கள்) தங்கள் முகங்கள் மீது (நடந்து வரும்படி செய்து) ஒன்று திரட்டுவோம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது அனல் தணியும் போதெல்லாம் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு அதிகப்படுத்துவோம். (அல்குர்ஆன் 17 : 97)
இன்று, எப்படி இந்த உலகத்தில் காலின் மீது நடந்தவர்களாக முகம் உடலுடைய மேல்புறத்தில் இருக்கிறதோ, நாளை மறுமையில் அந்த காஃபிர்கள் எழுப்பப்படும் போது, அவர்களுடைய உடல் அப்படியே தலைகீழாக மாற்றப்பட்டுவிடும். அவர்கள் தங்களது முகத்தின் மீது தேய்தவர்களாக வருவார்கள். கால் மேல் இருக்கும்.
இமாம் புகாரி ஓர் ஹதீஸை பதிவு செய்கிறார்கள். அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
இந்த வசனத்தை ஓதியபோது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபித்தோழர்களில் ஒருவர் கேள்வி கேட்கிறார்;
يَا نَبِيَّ اللَّهِ يُحْشَرُ الكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ القِيَامَةِ؟ قَالَ: «أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ القِيَامَةِ»
அல்லாஹ்வுடைய நபியே! நாளை மறுமையில் காஃபிர் அவனுடைய முகத்தின் மீது எழுப்பப்படுவானா? அவனால் நடக்க முடியுமா? எப்படி நடப்பான்? அந்த விசாரணை இடத்தை நோக்கி வரவேண்டுமே?
இப்படியாக அவர்களுக்கு எழுந்த அந்த ஐயத்திற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மறு கேள்வியை பதிலளிக்கிறார்கள்.
இந்த பூமியில் இருக்கும்போது அந்த காஃபிரை அவனுடைய இரண்டு கால்களின் மீது நடக்க வைத்த "அல்லாஹ்" அவன் ஆற்றல் பெற்றிருக்க வில்லையா? நாளை மறுமையில் அவனை அவனுடைய முகத்தின் மீது நடக்க வைப்பதற்கு.
எந்த இரண்டு கால்களுக்கு அல்லாஹு தஆலா நடக்கக்கூடிய ஆற்றலை கொடுத்தானோ, அந்த அல்லாஹ் ஏன் முகத்திற்கு கொடுக்க முடியாது? இந்த கேள்வியை பதிலாக்குகிறார்கள். கண்டிப்பாக கொடுக்க முடியும்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4760, 6523.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த ஹதீஸ் மேற்கூறப்பட்ட இஸ்ராவுடைய வசனத்திற்கு விளக்கமாகும்.
அல்லாஹு தஆலா காஃபிர்கள் எழுப்பப்படுகின்ற அந்த நேரத்தில் அவர்களுக்கு இழிவை கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக, இன்னும் பெரிய சோதனைகளை கொண்டு அவர்களை சோதிப்பான்.
நல்லவர்கள் இந்த பூமியில் இருக்கும்போது, அந்த நல்லவர்களை எப்படியெல்லாம் இந்த காஃபிர்கள் இம்சை செய்தார்கள்; அவர்களுக்கு தொந்தரவு தந்தார்கள்; அவர்களுக்கு வேதனை தந்தார்கள்; அவர்களை பரிகாசம் செய்தார்கள்.
அல்லாஹு தஆலா இதற்கெல்லாம் நாளை மறுமையில் அவர்களிடத்தில் பழிவாங்குவான்.
அல்லாஹு தஆலா சொல்கிறான், இந்த காஃபிர்கள் முஃமின்களைப் பார்த்தால் சிரிக்கிறார்கள்; பரிகாசம் செய்கிறார்கள்; கேலி கிண்டல் செய்கிறார்கள். அல்லாஹு தஆலா இதை கூறிவிட்டு சொல்கிறான்:
فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ (34) عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ (35) هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ (36)
ஆக, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள். கட்டில்கள் மீது அமர்ந்தவர்களாக (அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள். நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா (இல்லையா)? (அல்குர்ஆன் 83 : 34-36)
அல்லாஹு தஆலா மஹ்ஷரில் அந்த காஃபிர்களுக்கு அப்படிப்பட்ட கேவலத்தை தருவான். இந்த உலகத்தில் இந்த குஃப்ரில் -இறை நிராகரிப்பில் இணைவைப்பில் இருந்துகொண்டு, அல்லாஹ்வை எதிர்த்துக் கொண்டு, ரப்புடைய கட்டளைகளை, ரப்புடைய மார்க்கத்தை, ரப்பை நம்பிக்கை கொண்டவர்களை எதிர்த்துக்கொண்டு, இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய பெருமையில் இருந்தார்கள்.
ஆட்சியினால் பெருமை, செல்வத்தினால் பெருமை, தன்னுடைய அதிகாரத்தினால் பெருமை என்று. அல்லாஹு தஆலா அவர்களை அங்கே இழிவு படுத்துவான்.
மற்றுமொரு ஹதீஸில் வருகிறது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;
பொதுவாக, நாளை மறுமையில் மக்கள் எழுப்பப்படும் போது, மூன்று வகையான கூட்டங்களாக இருப்பார்கள். ஒரு கூட்டம் நடந்து வருவார்கள். இன்னொரு கூட்டம் வாகனத்தில் கண்ணியமாக பயணித்து வருவார்கள். இன்னொரு கூட்டம் முகங்களில் எழுப்பப்பட்டு அந்த முகங்களை தேய்த்தவர்களாக வருவார்கள்.
நல்லவர்கள், தக்வா உள்ளவர்கள், அல்லாஹ்வை பயந்து வாழ்ந்தவர்கள், அல்லாஹ்வுடைய மார்க்க சட்ட வரம்புகளை பேணியவர்கள் குறித்து அல்லாஹு தஆலா சொல்கிறான்:
يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِينَ إِلَى الرَّحْمَنِ وَفْدًا (85) وَنَسُوقُ الْمُجْرِمِينَ إِلَى جَهَنَّمَ وِرْدًا
இறையச்சமுள்ளவர்களை ரஹ்மானின் பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ற நாளில், இன்னும் குற்றவாளிகளை நரகத்தின் பக்கம் அவர்களோ தாகித்தவர்களாக இருக்கும் நிலையில் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்ற நாளில். (அல்குர்ஆன் 19 : 85,86)
இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லும் போது, தப்ஸீர் உடைய அறிஞர்கள் சொல்கிறார்கள்; இந்த இடத்தில் அல்லாஹு தஆலா தக்வா உள்ளவர்கள் என்ற ஒரு கூட்டத்தை தான் பிரிக்கிறான்.
இந்த தக்வாவைக் கொண்டு தான் உங்களில் அல்லாஹ்விடத்தில் கண்ணியத்திற்குரியவராக இருப்பார்.
அல்லாஹு தஆலா விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கக்கூடியது நம்முடைய அமல், நம்முடைய தக்வா.
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ
அவற்றின் இறைச்சிகள், அவற்றின் இரத்தங்கள் அல்லாஹ்வை அறவே அடையாது. எனினும், இறையச்சம்தான் உங்களிடமிருந்து அவனை அடையும். (அல்குர்ஆன் 22 : 37)
அல்லாஹு தஆலா இந்த தக்வாவின் அடிப்படையில்தான் நம்முடைய ஈமானுக்கும் நம்முடைய அமலுக்கும் மார்க் போடுகிறான். நாம் என்ன விளங்கி வைத்திருக்கிறோம்? நம்முடைய தொழுகைக்கு நாம் ஒரு மார்க் போடுகிறோம். நம்முடைய ஈமானுக்கு நாம் ஒரு மார்க். நம்முடைய நோன்பு ஜகாத் ஹஜ்ஜுக்கு நாம் எண்ணிக்கைகளை வைத்து மார்க் போடுகிறோம்.
இவர் எவ்வளவு ஹஜ் செய்தவர்? இவர் எவ்வளவு உம்ரா? ரொம்ப பெருமையாக பேசுபவராக இருப்பார். அதுபோன்று, சதகா தர்மம் செய்பவர்கள் அள்ளிக் கொடுப்பவர்கள் இருப்பார்கள்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்முடைய அமல்களின் அளவுகளை பார்ப்பதில்லை. எத்தனை கொண்டு வந்திருக்கிறாய் என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். கொண்டு வந்திருக்கக்கூடிய அமல் இக்லாஸோடு தக்வாவோடு இருக்கிறதா? அதைத்தான் அல்லாஹுதஆலா பார்ப்பான்.
எத்தனையோ நல்லவர்களுடைய இரண்டு ரக்அத் தொழுகை நம்முடைய வாழ்நாளெல்லாம் நாம் தொழுத தொழுகைகளை விட நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் தராசு தட்டில் கனமானதாக இருக்கும். வலுவானதாக இருக்கும்.
அந்த இரண்டு ரக்அத்துகள் அல்லாஹ்விடத்தில் அவ்வளவு உயர்ந்ததாக இருக்கும். காரணம், அந்தத் தொழுகையின் உள்ளச்சங்களை அவர்கள் பேணினார்கள். அந்தத் தொழுகையை உணர்ந்து தொழுதார்கள். இப்படித்தான் ஒவ்வொரு அமலும்.
இன்று, ஒரு பக்கம் அமல்களில் கவனம் ஏற்பட ஆம்பித்திருக்கின்ற அதே நிலையில், வாலிபர்கள் மற்றும் நம்முடைய சகோதர சகோதரிகள் அமல்களில் கவனத்தை அல்ஹம்து லில்லாஹ் திருப்ப ஆரம்பித்திருக்கின்ற அதே நிலையில், நம்முடைய அமல்கள் இக்லாஸோடு தக்வாவோடு அதாவது அந்த இபாதத்துகளை எந்த ரப்புக்கு செய்கிறோமோ அந்த ரப்புக்கு அந்த இபாதத்திற்கு வெளியில் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும்.
அந்த ரப்புடைய சட்டங்களை இபாதத்திற்கு வெளியில் மீறாமல் இருக்க வேண்டும். இன்று படிக்கின்றோம்; அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு பெறுவதற்காக உம்ரா செய்ய செல்கிறார்கள். இஸ்லாமிய அரசாங்கங்கள் செய்யக்கூடிய நிலை.
அங்கே உம்ராவிற்கு சென்றுவிட்டு, உம்ரா சென்றவர் அங்கிருந்து போட்டோ அனுப்புகிறார்; நான் உம்ரா செய்து முடித்துவிட்டேன் என்று. அதற்குப் பிறகு அவர், அதே நாட்டில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்தி, நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்களை ஒன்றுசேர்த்து ஆடல் பாடல் செய்கிறார்.
ஒரு பக்கம் உம்ரா. இன்னொரு பக்கம் ஹஜ். ஏன் நம்முடைய நாடுகளிலிருந்தும் இன்னும் எத்தனையோ இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் இசை இசைப்பவர்கள், ஆடல் பாடல்களை ஹலால் ஆக்கிக் கொண்டவர்கள், ஆபாசங்களை தொழிலாக ஆக்கிக் கொண்டவர்கள் முஸ்லிம்கள் என்ற பெயரில் ஹஜ்ஜுக்கு செல்கிறார்களா இல்லையா?
சென்றுவிட்டு திரும்பி வந்ததற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கையை மாற்றினார்களா? அதுபோன்று, எத்தனை முஸ்லிம் வியாபாரிகள் வட்டியோடு வியாபாரம் செய்கின்றவர்கள்.
இன்னும் ஹராமான சந்தேகமான தொழில்களை செய்யக் கூடியவர்கள். அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை ஹலாலான வாழ்க்கையாக மாறுகிறதா?
அவர்கள் நம்முடைய மார்க்கத்தை தவறாக கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள். பிறருடைய மார்க்கம், மதம் என்பது அவர்களுடைய வாழ்க்கையோடு சம்பந்தப்படாது. நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் வந்து விட்டால் உனக்கு போதுமானது. அல்லது வாரத்தில் சனிக்கிழமை வந்து விட்டால் போதுமானது.
இப்படியாக ஒரு நாளைக் குறிப்பிட்டு, அந்த நாளில் நீ செய்யக்கூடிய சடங்குகள் உன்னுடைய பாவங்களைப் போக்கிவிடும். நீ பாவங்களை விட்டு விலக வேண்டும் என்ற அவசியமில்லை.
அவர்களுடைய மத சடங்குகள் அவர்களுக்கு என்ன போதிக்கின்றன என்றால், மனிதன் பாவங்களை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை. அதற்காக வருந்த வேண்டிய அவசியம் இல்லை.
வாரத்தில் ஒருநாள் மாதங்களில் ஒருநாள் ஒரு நாளைக்கு அந்த சடங்குகளை செய்தால் போதும் என்று. அல்லாஹ்வுடைய மார்க்கம் அப்படி சொல்லவில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا
முஃமின்களே! அல்லாஹ்விடம் பரிசுத்தமான முறையில் பாவ மன்னிப்புத் தேடுங்கள். (அல்குர்ஆன் 66 : 8)
செய்த பாவத்தை விட்டு விலகாத வரை, செய்த பாவத்திற்காக வருந்தாத வரை, அல்லாஹு தஆலா அந்த பாவங்களை மன்னிக்க மாட்டான்.
உம்ரா செல்கிறார்கள். கடந்த காலங்களுக்காக தவ்பா கேட்கிறார்கள். இனி அடுத்து வரக்கூடிய காலங்களில் இன்னொரு உம்ராவை ஹஜ்ஜை செய்து கொள்ளலாம் என்பதாக நினைக்கிறார்கள்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் இப்படிப்பட்டவர்களுடைய பாவங்களை மன்னிக்க மாட்டான். யார், தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறாரோ, இனி பாவம் செய்ய மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிறார்களோ, அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.
ரப்பு சொல்கிறான்:
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் அறியாமையினால் பாவத்தைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். ஆக, அல்லாஹ் அவர்களது தவ்பாவை அங்கீகரி(த்து அவர்களை மன்னி)ப்பான். இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 17)
ஒன்று, பாவம் செய்யும்போது அறியாமையில் செய்துவிட்டார்கள். தெரிந்து வேண்டுமென்றே செய்யவில்லை. இரண்டாவது, தவ்பா கேட்டுவிட்டு, அந்தப் பாவத்திலிருந்து விலகி விடுகிறார்கள்.
இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று, இஸ்திக்பார். இரண்டாவது, தவ்பா. இஸ்திக்பார் என்றால் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்பது. தவ்பா என்றால் விலகுவது, திரும்புவது, திருந்துவது.
பாவத்தை விட்டு விலக வேண்டும். அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். இனி செய்ய மாட்டேன் என்று திருந்தி வாழ வேண்டும். இந்த தவ்பா என்ற வார்த்தைக்குள்ளே இத்தனை அர்த்தங்கள் இருக்கின்றது.
எனவேதான், அல்லாஹ் சுபஹானஹு தஆலா தவ்பா என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். இந்த விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா நாளை மறுமையில் தக்வா உள்ளவர்களை அவனுடைய அர்ஷுடைய நிழலுக்கு அவர்களை அழைத்து வரும்போது, அவர்களை நல்ல கொழுத்த உயர்ந்த ஒட்டகங்களில் அமரவைத்து அழைத்து வரப்படுவார்கள். மறுமையில் எழுப்பப்படும் போது அந்த பூமி இன்றைய பூமியாக இருக்காது.
பூமி முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடும். வேறொரு பூமியாக மாற்றப்பட்டு விடும். வானங்களும் மாற்றப்பட்டு விடும். அந்த ஏழு வானங்களும் சுக்குநூறாக நொறுக்கப்பட்டு ஒரே வானமாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஆக்கிவிடுவான். (அல்குர்ஆன் 14 : 48)
எல்லோரும், அடக்கி ஆளக்கூடிய ஒருவனான அந்த அல்லாஹ்விற்கு முன்னால் வந்து வெளிப்பட்டு விடுவார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மற்றுமொரு ஹதீஸை கவனியுங்கள்.
«يُحْشَرُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ، كَقُرْصَةِ نَقِيٍّ» قَالَ سَهْلٌ أَوْ غَيْرُهُ: «لَيْسَ فِيهَا مَعْلَمٌ لِأَحَدٍ»
நாளை மறுமையில் எழுப்பப்படும் போது இந்த பூமி வேறொரு பூமியாக மாற்றப்பட்டு, முற்றிலும் வெள்ளை நிறமான பூமியாகி விடும். எப்படி சுத்தமான ஒரு மாவில் சுடப்பட்ட ரொட்டி சமமாக மென்மையாக இருக்கிறதோ அதுபோன்று பூமியில் அவர்கள் எழுப்பப்படுவார்கள்.
அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6521.
இந்த பூமி வேறு ஒரு பூமியாக மாற்றப்படும்போது மக்கள் எங்கே இருப்பார்கள்? என்று யூத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கிறார்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நபித்துவத்தை உறுதி செய்வதற்காக அந்த யூத அறிஞர் அப்படி கேட்கிறார். யூத அறிஞர்கள் பலர் இப்படியாக உறுதி செய்துகொண்டு, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்த பதில் தங்களது முந்திய வேதங்களில் சொல்லப்பட்டது போன்று அப்படியே இருக்கின்றதை பார்த்து இஸ்லாமிய மார்க்கத்திற்குள் ஏராளமான யூத அறிஞர்கள் நுழைந்திருக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய முகத்தைப் பார்த்து அடையாளம் கண்டார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பேச்சை அடையாளம் கண்டார்கள். அவர்களுடைய குணத்தை அடையாளம் கண்டார்கள். சிலர் கேள்விகளுக்கு பதிலை கேட்டு அந்த பதில் சரியாக இருப்பதை பார்த்து இஸ்லாமிய மார்க்கத்திற்குள் இணைந்ததை வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.
அதுபோன்று, இந்த யூத அறிஞர் அல்லாஹ்வுடைய தூதரிடம் கேட்கிறார்கள்;
أَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُمْ فِي الظُّلْمَةِ دُونَ الْجِسْرِ»
வானம் பூமி மாற்றப்படும்போது மக்கள் எங்கே இருப்பார்கள்? என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; அவர்கள் நரகத்தின் மீது போடப் படக்கூடிய அந்தப் பாலத்திற்கு அடியில் அல்லது அந்தப் பாலத்தின் இருளில் மீது இருப்பார்கள் என்பதாக.
அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 315.
இந்த மஹ்ஷருடைய நம்பிக்கை. இந்த மஹ்ஷருடைய காட்சிகளின் மீது
அல்லாஹு தஆலா அந்த மஹ்ஷரில் என்னென்ன நடக்கும் என்று கூறுகிறானோ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படியெல்லாம் அந்த மஹ்ஷரைப் பற்றி நமக்கு வர்ணித்திருக்கின்றார்களோ அந்த விஷயங்களை நாம் நம்பிக்கை கொள்ளும் போது, நமக்கு கிடைக்கக்கூடிய ஈமானிய நன்மைகள் என்ன?
ஒன்று, அந்த நாளைக்காக நாம் அமல் செய்வதற்கு விரைவோம். எதுவரை அந்த நாளைப் பற்றி அதனுடைய அந்த திடுக்கங்களைப் பற்றி அதிகமாக பேசி நம்முடைய உள்ளத்திற்குள் அந்த பயத்தை அச்சத்தை கொண்டு வரமாட்டோமோ, பாவங்களை விட்டு விலகுவதும் நன்மைகளை அதிகம் சேகரித்து கொள்வதும் நமக்கு வெகு கஷ்டமாக இருக்கும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அல்லாஹு தஆலா சொல்வதை படியுங்கள்.
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்ததையும், தீமையில் தான் செய்ததையும் (தனக்கு முன்) சமர்ப்பிக்கப்பட்டதாக காணும் நாளில், தனக்கு மத்தியிலும், அதற்கு (-தீமைக்கு) மத்தியிலும் நீண்டதூரம் இருக்க வேண்டுமே! என (தீமை செய்த ஆத்மா) விரும்பும். அல்லாஹ், தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ் அடியார்கள் மீது மிக இரக்கமுள்ளவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 30)
தனக்கும் தன்னுடைய அமலுக்கும் இடையில் வெகுதூரமான இடைவெளி இருக்க வேண்டுமே என்பதாக அந்த பாவம் செய்த நஃப்ஸ் நாளை மறுமையில் ஆசைப்படும்.
ஆனால், பலன் இருக்கிறதா? இன்றைய உலகத்தின் பாவத்தை விட்டு விலகாமல் நன்மையை சேகரித்துக் கொள்ளாமல் மறுமையில் வந்ததற்குப் பிறகு அங்கே பிரலாபித்து என்ன பலன்?
மேலும், அல்லாஹ் சொல்கிறான்:
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَاوَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
இன்னும், (செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (மக்கள் முன்) வைக்கப்படும். ஆக, குற்றவாளிகளோ அ(ந்த புத்தகத்)தில் உள்ளவற்றினால் பயந்தவர்களாக இருப்பதைப் பார்ப்பீர். இன்னும், எங்கள் நாசமே! இந்த புத்தகத்திற்கு என்ன? (குற்றங்களில்) சிறியதையும் பெரியதையும் அவற்றைக் கணக்கிட்டே தவிர (-அவற்றைப் பதிவு செய்து வைக்காமல்) அது விடவில்லையே! எனக் கூறுவார்கள். அவர்கள் செய்ததை (எல்லாம் அவர்கள் தங்கள் கண்களுக்கு) முன்னால் காண்பார்கள். இன்னும், உம் இறைவன் (யார்) ஒருவருக்கும் (அவரின் நன்மையை குறைத்தோ, பாவத்தை கூட்டியோ) தீங்கிழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18 : 49)
அல்லாஹ் சொல்கிறான்: அந்த மஹ்ஷர் மைதானத்தில் அவர்களுடைய அமல்களின் ஏடுகள் கொடுக்கப்படும் போது, உனது அமல்களின் ஏட்டை நீ படி! என்பதாக சொல்லப்படும்.
படித்துப் பார்ப்பான். ஒரு பக்கம் இரண்டு பக்கம் வரி வரியாக படிப்பான். பார்த்து அலறுவான். இந்த புத்தகத்துக்கு என்ன கதியானது? இது எப்படிப்பட்ட மோசமான புத்தகம். நான் செய்த சிறிய பெரிய அத்தனையையும் விட்டு விடாமல் தெளிவாக பதிய வைத்திருக்கறதே என்று கூறுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!)
மஹ்ஷர் மைதானத்துடைய திடுக்கத்தைப் பற்றி அல்லாஹ் சொல்லக்கூடிய மற்றும் ஒரு வசனத்தை கவனியுங்கள்.
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
அந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான். இன்னும், தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும், இன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்). அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற (-அவனை கவனமற்றவனாக ஆக்கிவிடுகிற) காரியம் இருக்கும். (அல்குர்ஆன் 80 : 34-37)
எல்லோருக்கும் அவரவர் பிரச்சனையே பயங்கரமாக இருக்கும். என்னை நான் எப்படி பாதுகாத்துக் கொள்வது? என்பதே பிரச்சினையாக இருக்கும் போது எனது பிள்ளைகளை என்னுடைய மனைவி மக்களை என்னால் எப்படி பார்க்க முடியும்? மனிதனுடைய எதார்த்த நிலையை அல்லாஹ் சொல்கிறான். அந்த நாள் அவ்வளவு பெரிய திடுக்கமான நாள் ஆகும்.
பாவிகளை பற்றி அல்லாஹ் சொல்கிறான்; இந்த உலகத்தின் சொற்ப வாழ்க்கையை எவ்வளவு ஆடம்பரமாக அவர்கள் வாழ்கிறார்கள்!
இந்த 60 வருஷம் அல்லது 70 ஆண்டுகள் ஒரு அற்பமான வாழ்க்கையில் எந்த நாளில் மரணம் வரும் என்பதை அறியாமல் ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு நொடியிலும், அடுத்த நொடி மரணமாக இருக்கலாம் என்பதை தெரிந்திருந்தும் கூட, இந்த உலகத்தை ஒரு பெரிய நீண்ட வாழ்க்கையாக அவர்கள் நம்பி வாழ்கிறார்களே!
அல்லாஹு தஆலா அவர்களுடைய கைசேதத்தைப் பற்றி சொல்கிறான்:
وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَنْ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِنَ النَّهَارِ
இன்னும், அவன் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், - பகலில் ஒரு (சொற்ப) நேரத்தைத் தவிர (உலகில்) அவர்கள் தங்கி இருக்கவில்லை என்பது போன்று (அவர்களுக்கு) தோன்றும். (அல்குர்ஆன் 10 : 45)
மறுமையில் அவர்கள் எழுப்பப்படும் பொழுது இந்த உலகத்தை அவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்றால், மறுமையில் அவர்கள் எழுப்பப்பட்டு நிற்கின்ற அந்த நாள் எத்தனையோ கட்டங்கள் இருக்கும்.
எனவேதான் அல்லாஹ் சொல்கிறான்; அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகள். மறுமையில் 50 கட்டங்கள் உள்ளன. அதை மனிதன் அங்கே கடக்கவேண்டும். அது, 50,000 ஆண்டுகளுக்கு சமமானது.
ஒருநாள் அப்படிப்பட்ட நாளாக இருக்கும். இதுபோன்று, எத்தனை நாள் இந்த காஃபிரை அல்லாஹ் அங்கே தங்க வைப்பானோ, நிறுத்தி வைப்பானோ!
அவனது உலக வாழ்க்கையை அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுக்கு திருப்பிக் காட்டுவான். இந்த உலகத்தை பார். நீ வாழ்ந்ததைப் பார். நீ அனுபவித்ததை பார். எவ்வளவு நாள் என்று, அந்த காஃபிர் நினைப்பார்.
ஒரு பகலில் இருந்து ஒரு மணி நேரம் தான் தனது உலகத்தில் அவள் தங்கியதாக நினைத்துப் பார்ப்பான். (அல்குர்ஆன் 10 : 45)
இந்த ஒரு மணி நேரத்திற்காக இவ்வளவு பெரிய ஆட்டம். இவ்வளவு பெரிய ஆடம்பரம். என்னென்ன விளம்பரங்கள்! என்னென்ன வசதிகளை மனிதன் சேர்க்கிறான்! தனது கப்ருக்கு அவன் சேர்த்திருக்க வேண்டாமா! தன்னுடைய ஆகிரத்துக்கு அவன் சேர்த்திருக்க வேண்டாமா!
ஒரு மனிதன் தன் சுய தேவையை நிறைவேற்றுவதற்கான ஒரு பாத்ரூமை அவன் எப்படி அழகு படுத்துகிறான். அலங்கரிக்கின்றான். அதற்கு என்னென்ன வசதிகளை அவன் செய்துகொள்கிறான். அதிகப்படியாக அந்த பாத்ரூமில் அவ்வளவு வசதி இருப்பதால் போய் ஒரு மணி நேரம் தங்க முடியுமா?
பல செல்வந்தர்கள் பாத்ரூமிற்கு ஏசி எல்லாம் செய்து வைத்திருப்பார்கள். தப்பு என்று சொல்லவில்லை. அவர்களுக்கு அது தேவை என்றால் அந்த கிளைமேட்டுக்கு அவர்களுக்கு தேவை என்றால், அது தனிப்பட்ட விஷயம்.
ஆனால், இவ்வளவு எல்லாம் வசதியை செய்து கொண்ட மனிதன் தன்னுடைய கப்ருக்காக என்ன வசதியை செய்து வைத்தான். ஒரு பத்து நிமிடம் இருக்கக்கூடிய அந்த ஒரு பாத்ரூமிற்கு இவ்வளவு வசதிகள் என்றால், எவ்வளவு காலம் அந்தக் கப்ரில் இருக்க வேண்டும்? எவ்வளவு காலம் அந்த மஹ்ஷரில் இருக்க வேண்டும்? அதற்காக என்ன வசதிகளை அவன் சேகரித்துக் கொண்டான்.
இப்படிப்பட்ட ஒரு திடுக்கம் நிறைந்த நாள்தான் அந்த ஆகிரத்துடைய நாள். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அந்த நாளுடைய திடுங்களில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் அந்த நாளை எண்ணி அதற்காக நாம் அதிகமாக துஆ செய்ய வேண்டும்.
யா அல்லாஹ்! என்னை கேவலப் படுத்தி விடாதேல்; என்னுடைய நல்ல அமல்களை குறைத்து விடாதே; என்னுடைய நல்ல அமல்களை என்னுடைய பாவங்களை கொண்டு வீணாக்கி விடாதே; யா அல்லாஹ்! பாவத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்; நன்மைகளில் முந்தியவனாக என்னை ஆக்கு என்பதாக துஆ செய்ய வேண்டும்.
அடுத்ததாக, இன்று நமது முஸ்லிம் மக்கள் அவர்களுடைய அறியாமையினால் இந்த கிறிஸ்துமஸ் என்ற நாளை பலர் கொண்டாடுவதை பார்க்கின்றோம். மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு வேண்டுமானால் இது அவர்களுடைய ஒரு பெருநாளாக இருக்கலாம். நம்மை பொருத்தவரை நமக்கு அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இரண்டு பெருநாட்களை கொடுத்திருக்கின்றான்.
ஒன்று, ஈதுல் அழ்ஹா. இன்னொன்று, ஈதுல் ஃபித்ர். இந்த இரண்டைத் தவிர வேறு எந்த ஒரு நாளையும் பெருநாட்களாக திருநாட்களாக கொண்டாடுவது, அவற்றுக்காக வாழ்த்துச் சொல்வது, இது நமக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; யார் நம்முடைய மார்க்கங்களில் புதிதாக ஒரு காரியத்தை உருவாக்குவாரோ அது மறுக்கப்பட்ட ஒன்று.
மேலும், சொன்னார்கள்; யார் நாம் கட்டளையிடாத ஒரு செயலை செய்வாரோ அது மறுக்கப்பட்ட ஒன்று.
ஆகவே, இந்த பெருநாட்கள் திருநாட்கள் சந்தோஷமான நாள் என்பது இதுவும் நமது நமது மார்க்கத்தில் நமக்கு சொல்லப்பட்ட ஒன்று. இது ஏதோ நமது வழக்கத்திற்கு ஏற்ப அதிகப்படியாக செய்து கொண்டிருக்கலாம் என்று நினைத்துவிட வேண்டாம்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் தான் நம்முடைய முஸ்லிம்களில் பலர், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்னும் வாட்சப்பில் சில மெஸேஜ்களைப் பார்க்கிறோம்; அவர்கள் ரசூலுல்லாஹ்விற்கு பிறந்தநாள் என்று விழா கொண்டாடி கேக் வெட்டுகிறார்கள். எப்படிப்பட்ட மடமைத்தனம் என்பதை யோசித்துப் பாருங்கள்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வந்த போது, அங்கே சில தினங்களை அவர்கள் கொண்டாடியதை பார்த்தார்கள். அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
" كَانَ لَكُمْ يَوْمَانِ تَلْعَبُونَ فِيهِمَا وَقَدْ أَبْدَلَكُمُ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الْأَضْحَى "
மதீனா முஸ்லிம்களே! இந்த நாட்களை விட்டு விடுங்கள். அல்லாஹு தஆலா உங்களுக்கு சிறந்த நாட்களை கொடுத்திருக்கிறான். ஒன்று, ஈதுல் ஃபித்ர். இன்னொன்று, ஈதுல் அழ்ஹா.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயீ, எண் : 1556.
இப்படியாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்கள்.
அதுபோன்று, கிறிஸ்மஸ் என்ற இந்த பெருநாளை அவர்கள் கொண்டாடுவது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை உயர்த்துவதற்காக அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக செய்கிறார்கள்.
அவர்களை கண்ணியப்படுத்துவது மதிப்பது என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. எப்படி எல்லா நபிமார்களையும் ஈமான் கொள்வது நம்முடைய ஈமானிய கடமைகளில் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.
ஆனால், அவர்க நபிமார்கள் ரசூல்மார்கள் என்று நாம் ஈமான் கொள்வோமே தவிர, அவர்களை அல்லாஹ்விற்கு சமமானவர்கள் என்றோ, அல்லாஹ் உடைய சக்திகளில் ஒரு சக்தி அவர்களுக்கு இருக்கிறது என்பதாகவோ, அல்லாஹ்வுடைய பிள்ளையாகவோ நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு விலகி விடுவார்கள்.
எந்த கிறிஸ்தவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிறப்பை கொண்டாடுகிறார்களோ அவர்களை அல்லாஹ்வுடைய குழந்தை என்ற நம்பிக்கையில் கொண்டாடுகிறார்கள். அல்லது அல்லாஹ் என்ற நம்பிக்கையில் கொண்டாடுகிறார்கள்.
எனவே, அவர்களுடைய அந்த பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடும் போது அந்த நம்பிக்கையை இவர்களும் ஏற்றுக்கொண்டதாக சரி கண்டதாக ஆகிவிடுகிறது.
இங்கே, இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய மத கலாச்சாரங்களில், அவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்குள் நாம் தலையிட மாட்டோம்.
இரண்டு நிலைப்பாடுகளை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்; உடனே இந்த பயானை கேட்டுவிட்டு நீங்கள் யாராவது வெளியில் போய் அவர்கள் கொண்டாடக்கூடிய அந்த கிறிஸ்மஸை எதிர்ப்பதோ, அவர்களிடத்தில் சண்டை செய்வதோ நமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.
அல்லாஹ்வுடைய தூதரின் தோழர்கள் அவர்களுடைய நாடுகளை வெற்றி கொண்டபோது அவர்களுடைய மத அடையாளங்களில் அவர்கள் சுதந்திரமாக விடப்பட்டார்கள்.
நாம் நமக்குள் பிரச்சாரம் செய்வோம். அவர்கள் நம்மை அணுகி விளக்கம் கேட்கும்போது விளக்கம் சொல்வோம். அவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்வோம்.
ஆனால், அவர்களுடைய மத ஸ்தலங்களில் அவர்களுடைய எல்லைகளில் அவர்கள் தங்களுடைய பெருநாட்களையோ அல்லது தங்களுடைய திருவிழாக்களையோ கொண்டாடும்போது இஸ்லாமிய மன்னர்கள் கலீஃபாக்கள் முஸ்லிம்கள் அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவையும் செய்யவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த இரண்டுவிதமான சரியான நிலைப்பாடுகள் இல்லையென்றால், இதனால் மிகப்பெரிய ஒரு தவறான புரிதலுக்கு ஆளாகி, மிகப்பெரிய தவறான செயல்களுக்கு நம்மில் சிலர் சென்று விடுவதற்கு கூடும்.
எனவே, இந்த இடத்தில் நான் உங்களுக்கு உணர்த்தி கொள்கிறேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனிதர்களை தூதர்களை எப்படி உயர்த்த வேண்டும் என்பதையும் நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து சிலர் அவர்களை உயர்த்தி பேசினார்கள். நீங்கள் எங்களது தலைவர். எங்களது தலைவருடைய பிள்ளை. எங்களில் மிகச் சிறந்தவர். எங்களில் மிகச் சிறந்தவருடைய பிள்ளை என்பதாக உயர்த்தினார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
«لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ»
என்னை இப்படியாக உயர்த்திப் பேசாதீர்கள். எப்படி கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை உயர்த்திப் பேச ஆரம்பித்து இறுதியாக அவரை அல்லாஹ்வுடைய குழந்தை என்று சொல்ல ஆரம்பித்தார்களோ அல்லது அல்லாஹ்வுடைய ஸ்தானத்திற்கு ஏற்ற ஆரம்பித்தார்களோ அந்த நிலைக்கு ஆளாக்கி விடாதீர்கள். என்னை நீங்கள் சொல்ல வேண்டுமென்றால் நான் அல்லாஹ்வுடைய அடிமை என்பதாக சொல்லுங்கள். அல்லாஹ்வுடைய ரசூல் என்பதாக சொல்லுங்கள்.
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3445.
மேலும், ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
யார் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக நடந்து கொள்கிறார்களோ, (அதாவது, அவர்களுடைய அடையாளச் சின்னங்கள், அவர்களுடைய மதக் கலாச்சாரங்கள், அவர்களுடைய மதம் சம்பந்தப்பட்ட ஆடைகள், மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்கள், இவற்றை யார் எடுத்துக் கொள்கிறார்களோ) அவர்கள் அந்த மக்களை சேர்ந்தவர்களே.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4031.
இன்று, கிறிஸ்தவர்கள் தங்களுக்காக தனி ஒரு தொப்பி வைத்திருப்பார்கள். அல்லது கிறிஸ்துமஸ் தாத்தா என்ற பெயரில் ஒரு ஆடையை வைத்திருப்பார்கள். அல்லது ஸ்டார் மாதிரி செய்து அதை விற்ப்பார்கள்.
இப்படியாக, நிறைய விஷயங்கள். முஸ்லிம்கள் கூட அன்றைய நாளில் அதை அணிந்து கொள்வதை, தங்களுடைய பிள்ளைகளுக்கு அதை அணிவிப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
இது, கண்டிப்பாக ஒரு மனிதனை குஃப்ரில் தள்ளக்கூடியது. அவனுடைய மார்க்கத்திலிருந்து வெளியேற்றக் கூடியது என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மிகப்பெரிய எச்சரிக்கையை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ، شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ»، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، اليَهُودُ وَالنَّصَارَى؟ قَالَ: «فَمَنْ»
உங்களுக்கு முன் சென்றவர்களுடைய பழக்கவழக்கங்களை நீங்கள் ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் என்னென்ன செய்கிறார்களோ அப்படியே நீங்கள் அதை காப்பி அடிப்பீர்கள்.
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7320.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். முன்னோர்கள் செய்த ஒன்றை நாம் செய்ய வேண்டும் என்றால், அந்த முன்னோர்கள் யார்? அந்த முன்னோர்கள் கண்டிப்பாக நபிமார்களாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் தனது நபிக்கு சொல்கிறான்:
أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِنْ هُوَ إِلَّا ذِكْرَى لِلْعَالَمِينَ
(நபியே!) அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை நேர்வழி நடத்தினான். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே - அதையே நீர் பின்பற்றுவீராக. “இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். இ(ந்த வேதமான)து இல்லை, அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே தவிர’’ என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 6 : 90)
நாம் முன்னோர்களை பின்பற்ற வேண்டும் என்றால், அந்த முன்னோர் நபிமார்களா? என்று நாம் பார்க்க வேண்டும்.
அடுத்து, எந்த ஒரு விஷயம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் தடை செய்யப்பட்டு விட்டதோ, அதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கண்டித்து விட்டார்களோ, அது முந்திய வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடத்தில் இருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தாலும், அதை நாம் செய்யக்கூடாது.
அப்படித்தான், இந்த கிறிஸ்மஸ் கொண்டாடுவதோ அல்லது வேறுவேறு தினங்களை பெருமைப்படுத்தி மகிமைப்படுத்தி கொண்டாடுவதோ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தடுக்கப்பட்ட ஒன்று.
நபிமார்களை தவிர, வேறு முன்னோர்களை நாம் பின்பற்றுவதாக இருந்தால் கண்டிப்பாக அங்கே சில விஷயங்களில் மனிதன் விழுந்தாவான்.
ஒன்று, தன்னைத்தானே கேவலப் படுத்திக் கொள்வது. இரண்டாவது, அல்லாஹ் கொடுத்த பொருளாதாரத்தை வீண்விரயம் செய்வது. மூன்றாவது, நேரங்களை வீணடிப்பது. பிறகு கேளிக்கைகள் என்ற பெயரில் அனாச்சாரங்கள் ஆபாசங்களை செய்வது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
யாரெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிக்கொடுத்த இந்த வரம்பை மீறி சில தினங்களை பெருமைப்படுத்தி மகிமைபடுத்தி கொண்டாடுகிறார்களோ, ஒன்று அந்த கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அந்த திருவிழாக்கள் என்ற பெயரில் மனிதன் மனிதனையே கேவலப்படுத்திக் கொள்கின்ற ஒரு நிலை.
தனது செல்வம் மற்றும் பொருளாதாரங்களை வீணடிக்கின்ற நிலைக்கு அவர்கள் ஆளாகுவார்கள்.
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்; இந்த நாட்களில் அவர்கள் செய்யக்கூடிய அலங்காரங்கள். பொருள்களை வீணடிப்பதை தவிர, வேறு என்ன இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.
இலட்சக்கணக்கான விளக்குகளை எரிப்பதோ அல்லது மரங்களை அலங்கரிப்பதோ அல்லது கட்டிடங்களை விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பதோ இன்னும் காகிதங்களைக் கொண்டு அட்டைகளை கொண்டு படங்களை செய்து, உருவங்களை செய்து அவைகளுக்கு விளக்கூட்டுவதோ, இப்படி மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை வீண்விரயம் ஆக்குவதை தவிர, வீணாக அழிப்பதைத் தவிர, வேறு என்ன அதில் பலன் இருக்கிறது?
மனிதனுடைய சந்தோஷம் என்றால் உண்பதில் இருக்கிறது. உடுத்துவதில் இருக்கிறது. அதில்தானே மனிதனுடைய சந்தோஷத்தை அல்லாஹ் வைத்திருக்கிறான். இதில் சந்தோஷம் இருப்பதாக ஷைத்தான் அவர்களுக்கு காட்டுகிறான்.
வீண்விரயம் என்பது, ஷைத்தானுடைய செயல். அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கிறார்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)
ஆகவே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எச்சரிக்கை நமக்கு சொல்லப் பட்டிருக்கிறது. முன்னோர்களுடைய கலாச்சாரத்தில் நீங்கள் செல்வீர்கள். ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் அவர்களுடைய பாதையில் செல்வீர்கள். உஷாராக இருங்கள் என்று.
அப்படி நீங்கள் தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வில்லை என்றால், எந்த அளவுக்கு முட்டாள்களாக மாறிவிடுவீர்கள் என்றால், அவர்கள் ஒரு உடும்புடைய பொந்துக்குள் நுழைந்திருந்தாலும் அவர்கள் போய் இருக்கிறார்களே, அதற்குள்ளாக ஏதாவது இருக்குமா? என்று நீங்களும் அதற்குள் நுழைய பார்ப்பீர்கள்.
ஸஹாபாக்கள் பயந்து கேட்டார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! முன்னோர்களின் கலாச்சாரம் என்றால் யாரை நீங்கள் சொல்கிறீர்கள்? யூதர்களையா? கிறிஸ்தவர்களையா? என்று.
நபியவர்கள் கேட்டார்கள்; இந்த இருவரைத் தவிர நான் வேறு யாரை சொல்வேன் என்பதாக.
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7320.
ஆகவே, நம்முடைய பிள்ளைகளுக்கு இந்த விஷயங்களை உணர்த்த வேண்டும். அதே நேரத்தில் மாற்றாருடைய விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குள், தங்களுடைய மதங்களின் அடிப்படையில் தங்களுடைய கோயில்களில் தங்களுடைய சர்ச்சுகளில் என்ன செய்கிறார்களோ, அவர்களுக்கு நாம் தொந்தரவை கொண்டு நாம் அணுக மாட்டோம்.
அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளையும் நாம் செய்வதற்கு நம்முடைய மார்க்கம் அனுமதிக்கவில்லை.
ஆனால், அதே நேரத்தில், அவர்களோடு நாம் இணக்கமாக இருக்கிறோம்; சமூக நல்லிணமாக இருக்கிறோம்; அவர்களோடு நாம் நல்ல உறவுகளை பேணுகிறோம் என்பதற்கு அடையாளம் என்ன?
அவர்களை போன்று நாம் மாறிவிட வேண்டும் என்பதல்ல. அவர்களுடைய கலாச்சாரத்தில் நாம் கரைந்து விட வேண்டும் என்பதல்ல. அவர்களுடைய விழாக்களுக்கு நாம் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதல்ல.
இரண்டும் தனித்தனி நிலைப்பாடு. இந்த நடுநிலையை நாம் பேண வேண்டும். அல்லாஹ் சுபஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய தீனை சரியாக பின்பற்றுவதற்கும் அல்லாஹ்வுடைய எச்சரிக்கையில் இருந்து விலகி வாழ்வதற்கும் உதவி செய்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْكُمْ أَحَدٌ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "، قَالَ الأَعْمَشُ: وَحَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، مِثْلَهُ، وَزَادَ فِيهِ: «وَلَوْ بِكَلِمَةٍ طَيِّبَةٍ» (صحيح البخاري- 7512)
குறிப்பு 2)
حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ وَهُوَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، يَعْنِي ابْنَ سَلَّامٍ، عَنْ زَيْدٍ، يَعْنِي أَخَاهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَلَّامٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو أَسْمَاءَ الرَّحَبِيُّ، أَنَّ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ قَالَ: كُنْتُ قَائِمًا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ حِبْرٌ مِنْ أَحْبَارِ الْيَهُودِ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ يَا مُحَمَّدُ فَدَفَعْتُهُ دَفْعَةً كَادَ يُصْرَعُ مِنْهَا فَقَالَ: لِمَ تَدْفَعُنِي؟ فَقُلْتُ: أَلَا تَقُولُ يَا رَسُولَ اللهِ، فَقَالَ الْيَهُودِيُّ: إِنَّمَا نَدْعُوهُ بِاسْمِهِ الَّذِي سَمَّاهُ بِهِ أَهْلُهُ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اسْمِي مُحَمَّدٌ الَّذِي سَمَّانِي بِهِ أَهْلِي»، فَقَالَ الْيَهُودِيُّ: جِئْتُ أَسْأَلُكَ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَنْفَعُكَ شَيْءٌ إِنْ حَدَّثْتُكَ؟» قَالَ: أَسْمَعُ بِأُذُنَيَّ، فَنَكَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُودٍ مَعَهُ، فَقَالَ: «سَلْ» فَقَالَ الْيَهُودِيُّ: أَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُمْ فِي الظُّلْمَةِ دُونَ الْجِسْرِ» قَالَ: فَمَنْ أَوَّلُ النَّاسِ إِجَازَةً؟ قَالَ: «فُقَرَاءُ الْمُهَاجِرِينَ» قَالَ الْيَهُودِيُّ: فَمَا تُحْفَتُهُمْ حِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ؟ قَالَ: «زِيَادَةُ كَبِدِ النُّونِ»، قَالَ: فَمَا غِذَاؤُهُمْ عَلَى إِثْرِهَا؟ قَالَ: «يُنْحَرُ لَهُمْ ثَوْرُ الْجَنَّةِ الَّذِي كَانَ يَأْكُلُ مِنْ أَطْرَافِهَا» قَالَ: فَمَا شَرَابُهُمْ عَلَيْهِ؟ قَالَ: «مِنْ عَيْنٍ فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا» قَالَ: صَدَقْتَ. قَالَ: وَجِئْتُ أَسْأَلُكَ عَنْ شَيْءٍ لَا يَعْلَمُهُ أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ إِلَّا نَبِيٌّ أَوْ رَجُلٌ أَوْ رَجُلَانِ. قَالَ: «يَنْفَعُكَ إِنْ حَدَّثْتُكَ؟» قَالَ: أَسْمَعُ بِأُذُنَيَّ. قَالَ: جِئْتُ أَسْأَلُكَ عَنِ الْوَلَدِ؟ قَالَ: «مَاءُ الرَّجُلِ أَبْيَضُ، وَمَاءُ الْمَرْأَةِ أَصْفَرُ، فَإِذَا اجْتَمَعَا، فَعَلَا مَنِيُّ الرَّجُلِ مَنِيَّ الْمَرْأَةِ، أَذْكَرَا بِإِذْنِ اللهِ، وَإِذَا عَلَا مَنِيُّ الْمَرْأَةِ مَنِيَّ الرَّجُلِ، آنَثَا بِإِذْنِ اللهِ». قَالَ الْيَهُودِيُّ: لَقَدْ صَدَقْتَ، وَإِنَّكَ لَنَبِيٌّ، ثُمَّ انْصَرَفَ فَذَهَبَ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ سَأَلَنِي هَذَا عَنِ الَّذِي سَأَلَنِي عَنْهُ، وَمَا لِي عِلْمٌ بِشَيْءٍ مِنْهُ، حَتَّى أَتَانِيَ اللهُ بِهِ» (صحيح مسلم-315)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/