HOME      Khutba      எழுப்பப்படும் நாளின் திடுக்கங்கள் - அமர்வு 1-2 | Tamil Bayan - 487   
 

எழுப்பப்படும் நாளின் திடுக்கங்கள் - அமர்வு 1-2 | Tamil Bayan - 487

           

எழுப்பப்படும் நாளின் திடுக்கங்கள் - அமர்வு 1-2 | Tamil Bayan - 487


எழுப்பப்படும் நாளின் திடுக்கங்கள்  (அமர்வு 1)

ஜுமுஆ குத்பா தலைப்பு : எழுப்பப்படும் நாளின் திடுக்கங்கள்  (அமர்வு 1)

வரிசை : 487

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 15-12-2017| 27-03-1439

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்களின் மீதும் ஸலவாத்தும்ஸலாமும் கூறியவனாக, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பேணி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! இம்மை, மறுமையின் வெற்றிகளை நன்மைகளை நமக்கு தருவானாக! அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் அன்பையும் பெற்ற நல்ல மக்களில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

இந்த உலகத்தில் மனிதன் எவ்வளவு தான் வாழ்ந்தாலும் கண்டிப்பாக அவன் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். இந்த உலக வாழ்க்கையில் யார் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் கண்டிப்பாக மரணத்தை ஒரு நாள் அவர் சந்தித்தே ஆகவேண்டும்.

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ

நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும். (அல்குர்ஆன் 62:8)

மரணித்ததற்கு பிறகு எவ்வளவு காலம் தான் அவர் மண்ணறையுடைய வாழ்க்கையில் இருந்தாலும் கண்டிப்பாக ஒரு நேரம் வரும். இந்த பூமியிலிருந்து எல்லோரும் எழுப்பப்படுவோம்.

அதற்குப் பிறகு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மனிதர்கள் மட்டுமல்ல, அவன் படைத்த எல்லா படைப்புகளையும் இந்த உலகத்தை அழித்ததற்குப் பிறகு மஹ்ஷர் என்ற மைதானத்தில் ஒன்று திரட்டுவான்.

முன்னோர், பின்னோர், மனிதர்கள், ஜின்கள், பறவைகள், மிருகங்கள் என்ற அவன் படைத்த அத்தனை ஜீவராசிகளையும் அல்லாஹ் தஆலா ஒன்று சேர்ப்பான்.

வித்தியாசம் என்ன? மற்ற படைப்புகளுக்கு நீதம் வழங்கப்பட்டு அவை மீண்டும் அழிக்கப்பட்டு விடும். மண்ணோடு மண்ணாக அந்த படைப்புகள் ஆக்கப்பட்டுவிடும்.

ஆனால், மனிதர்கள், ஜின்களுக்கு மட்டும் நீதம் வழங்கப்படும், விசாரிக்கப்படுவார்கள். அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி உண்டு.

அவர்கள் தங்கக் கூடிய இடங்கள், இரண்டு இடங்களில் ஒரு இடமாக இருக்கும். ஒன்று சொர்க்கம், அந்த சொர்க்கத்திற்கு உரியவர்களை அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஅந்த சொர்க்கத்தில் அனுப்புவான். இரண்டாவது நரகம், அந்த நரகத்திற்கென்று யார் முடிவு செய்யப்பட்டுவிட்டார்களோ, அவர்கள் கண்டிப்பாக நரக நெருப்பில் தள்ளப்படுவார்கள்.

அந்த மறுமையில் ஒன்று சேர்க்கப்படக் கூடிய அந்த நாளை கண்டிப்பாக நாம் பயந்தே ஆக வேண்டும்.

குர்ஆனுடைய பல வசனங்கள் அந்த நாளை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் என்று நமக்கு மிக அழுத்தமாக, மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (அல்குர்ஆன் 2:281)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ مُلَاقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:223)

அன்பிற்குரியவர்களே! யாரும் எந்த திசையிலும் ஓடி தப்பிக்க முடியாது. அந்த மஹ்ஷருடைய மைதானம்ஒரு விசாலமான மைதானம். உலகத்தில் அல்லாஹ் தஆலா ஆதமிலிருந்து இறுதி மனிதர் வரை, படைத்த எல்லா படைப்புகளையும் மனிதர்கள், ஜின்கள் இன்னும் அத்தனை கோடி படைப்புகளையும் அல்லாஹ் தஆலா உயிரோடு அந்த நாளில் ஒன்று திரட்டுவான் என்றால், அதற்கு எவ்வளவு பெரிய விசாலமான ஒரு மைதானம் தேவைப்படுமென்று யோசித்துப் பாருங்கள்.

நம்முடைய கற்பனையால் அதனுடைய நீலத்தை, அதனுடைய அகலத்தை நாம் முடிவு செய்துவிட முடியாது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் அறிந்தவன், அது எவ்வளவு பெரிய மைதானமாக இருக்குமென்று.

அல்லாஹ் தஆலா கூறுகிறான் :

قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ (49) لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ

(நபியே!) நீர் கூறும்: “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும். “குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள். (அல்குர்ஆன் 56:49, 50)

மேலும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகிறான் :

وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ

நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன். (அல்குர்ஆன் 15:25)

இரண்டு விஷயங்கள், ஒன்று கப்ரிலிருந்து எழுப்பப்படுவது. இரண்டாவது, அந்த பரந்த மைதானத்தில் அவரவர் எழுந்திருக்கக்கூடிய அந்த இடத்திலிருந்து விசாரனை நடைபெறுகின்ற அந்த இடத்தை நோக்கி, எங்கே மனிதனுடைய அமல்கள் நிறுக்கப்படுவதற்காக தராசுகள் நிறுத்தப்பட்டிருக்குமோ, எங்கு அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா தீர்ப்புக்காக இறங்கி வருவானோ, அந்த இடத்தை நோக்கி அவர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்.

அல்லாஹு தஆலா  கூறுகிறான்: அவன் மிகுந்த ஞானவான், நன்கு அறிந்தவன். ஒவ்வொரு செயலையும் அவன் திட்டமிட்டு வைத்திருக்கிறான், அவனுடைய ஞானத்தின் அடிப்படையில். மனிதனுடைய படைப்புகள் இந்த பூமியில் அழிந்து விட்டாலும், காலங்கள் பல உருண்டோடி விட்டாலும் ஒவ்வொரு மனிதனுடைய படைப்பையும் மிகத் துள்ளியமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கணக்கிட்டு வைத்திருப்பான்.

இவனுடைய உடல், இவனுடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகள் மண்ணில் எங்கே மறைந்திருக்கின்றன என்பதை அல்லாஹ் அறிந்தவன்.

அவன் தன்னுடைய இல்மின் அடிப்படையில் படைப்புகளை ஒன்று திரட்டுவான், ஒன்று சேர்ப்பான். யாரும் அல்லாஹ்வுடைய அந்த ஆற்றலிளிருந்து தப்பித்து விட முடியாது.

إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِمَنْ خَافَ عَذَابَ الْآخِرَةِ ذَلِكَ يَوْمٌ مَجْمُوعٌ لَهُ النَّاسُ وَذَلِكَ يَوْمٌ مَشْهُودٌ

நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும். (அல்குர்ஆன் 11:103)

அந்த நாளில் மக்கள் எல்லோரும் ஒன்று திரட்டப்படுவார்கள். ஒருவரும் அங்கே மிச்சமிருக்கமாட்டார். அந்த நாள் எல்லோரும் ஆஜராகக் கூடிய நாள். நபிமார்கள், மன்னர்கள், மந்திரிகள், செல்வந்தர்கள், ஏழைகள், அடிமைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிகமானவர்கள் இப்படி எல்லோரையும் அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஒரு இடத்தில் ஒன்று சேர்த்து விடுவான்.

மனிதனுடைய உலக அந்தஸ்துகளை வைத்து அந்த நாளில் மனிதன் தப்பிக்க முடியாது. இந்த உலகத்தில் உள்ள பெருமைகளை கொண்டு, இந்த உலகத்திலுள்ள சிறப்புகளை கொண்டு, அங்கே மனிதன் அல்லாஹ்விடத்தில் தனிச்சிறப்பையோ, தனி மேன்மையையோ, தனி இடத்தையோ, தேட முடியாது. எல்லோரும் சரிசமமாக வந்தே ஆக வேண்டும். அல்லாஹ் தஆலா மனிதர்களை ஒன்று திரட்டுவான்.

சிலருடைய கப்ரிலிருந்து சிலரை ஒன்று திரட்டுவான். சிலரை மிருகங்கள் தின்றிருக்கும் அந்த மிருகங்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வெளியேற்றுவான். சிலர் நெருப்பில் எரிந்து பொசுங்கி இருப்பார்கள். அந்த நெருப்பிலிருந்து அல்லாஹ் அவர்களை வெளியேற்றுவான். சிலர் கடலில் மூழ்கி அழிந்திருப்பார்கள், அவர்களை அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த கடலிலிருந்து வெளியேற்றுவான்.

யார் எப்படி இறந்தாலும் அந்த இடத்திலிருந்து அவர்களை கொண்டு வருவதற்கு அல்லாஹ் ஆற்றல் பெற்றவன். அல்லாஹ் கூறுகிறான்:

أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 2:148)

ரஸூலுல்லாஹ் அவர்களுடைய காலத்தில், ஒரு காஃபிர் இருந்தான். நபி அவர்களை கப்ருகள் இருக்கின்ற இடத்தை நோக்கி அழைத்துச் சென்றான். நபியை கடுமையாக எதிர்த்த காஃபிர்களில் ஒருவர், ரஸூலுல்லாஹ்வையும் மார்க்கத்தையும் பரிகாசம் செய்தவர்களில் ஒருவன்.

நபியை கப்ருகள் இருக்கின்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த எலும்புகளை ஒன்று திரட்டி,அவற்றை நசுக்கி பொடியாக்கி தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு ரஸூலுல்லாஹ் அவர்களை பார்த்து, அந்த எலும்பு பொடிகளை ஊதினான்.

ஊதிவிட்டு, இப்படி மக்கி மண்ணாகிப் போன தூள் தூளாகி தூசிகளாகிப் போன இந்த எலும்புகளையா அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்று கூறுகிறாய் முஹம்மதே!?

பகுத்தறிவை, அறிவை, சிந்தனையை, ஞானத்தைப் பற்றி பேசுகின்ற நீ. இப்படி எலும்புகளாக, அதுவும் மக்கி ஒன்றுமில்லாமல் போன படைப்பை அல்லாஹ் மீண்டும் எழுப்புவான் என்று கூறுகிறாயே!?

مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ (78) قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ

“எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!(அல்குர்ஆன் 36 : 78, 79)

அடுத்து அல்லாஹ் தஆலா கூறுகிறான் :

إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ

எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.(அல்குர்ஆன் 36 : 82)

கண்ணியத்திற்குரியவர்களே! நமக்கு மேல் உள்ள பிரம்மாண்டமான வானத்தை நாம் சிந்திந்து பார்க்க வேண்டாமா? எப்படிப்பட்ட பிரம்மாண்டமான வானம், அந்த வானத்திற்கு கீழ் இருக்கின்ற நட்சத்திரங்கள், மேகங்கள், இன்னும் எத்தனை மனித அறிவுகளுக்கு அப்பாற்பட்ட கோல்கள், அடுத்து நாம் வசிக்கின்ற பூமி, இந்த பூமியில் இருக்கின்ற எத்தனையோ படைப்புகள், இந்த பூமிக்கு கீழ் இருக்கின்ற எத்தனையோ பிரபஞ்ச அமைப்புகள்.

இவற்றையெல்லாம் அல்லாஹ் தஆலா அவனுடைய 'குன்' என்ற வார்த்தையை கொண்டு, திட்டமிட்டால் தான் திட்டமிட்டபடி ஆகு என்று சொன்னால் அது ஆகிவிடும். அல்லாஹ் தஆலா அதற்காக அவன் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு அவனுக்கு நேரம் பிடிக்காது.

வானங்கள், பூமிகளை படைத்தது மட்டுமல்ல, அவற்றை இயக்கி பாதுகாப்பதும் எனக்கு சிரமமானதல்ல.

அல்லாஹ் கேட்கிறான் :

أَفَعَيِينَا بِالْخَلْقِ الْأَوَّلِ بَلْ هُمْ فِي لَبْسٍ مِنْ خَلْقٍ جَدِيدٍ

எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 50:15)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அத்தகைய பேராற்றலுடையவன். அவன் மனிதர்களையும், மனிதனுடைய செயல்களையும், படைப்புகளையும், படைப்புகளுடைய அத்தனை விஷயங்களையும் அவன் ஏடுகளில் பதிவு செய்து வைத்திருக்கவில்லை என்றாலும், அவனுடைய இல்மே போதுமானது. அவன் எதையும் மறக்கமாட்டான், அவனை விட்டு எதுவும் மறைந்துவிடவும் முடியாது.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا

உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.”(அல்குர்ஆன் 19:64)

நபியே! உமது இறைவன் எதையும் மறக்கமாட்டான். எதுவும் அவனைவிட்டு தவறி விடாது.  இது யாருடைய கண், யாருடைய மண்டை, யாருடைய மூளை, இவர் யார்? இவருடைய தந்தை யார்? இப்படியெல்லாம் துள்ளியமாக உலகத்திலுள்ள பிரபஞ்சத்தினுடைய அத்தனை படைப்புகளையும். நினைத்துப் பாருங்கள், நம்மால் எத்தனை விஷயங்களை நியாபகம் வைக்க முடியும்.

மனிதன் தயாரிக்கக்கூடிய கம்ப்யூட்டரால் எத்தனை விஷயங்களை நினைவு வைக்க முடியும்? அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஉடைய அறிவு அவ்வளவு விசாலமானது. எனவே தான் கூறுகிறான் :

وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ

அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. (அல்குர்ஆன் 2:255)

وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا

இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் 17:85)

ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம்அவர்களை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு ஒரு தர்பியா கொடுப்பதற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு ஏற்பாடு செய்தான். அந்த பயணத்தின் முடிவில் ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் மூஸா நபியை பார்த்து கூறினார்கள். அந்த நேரத்தில் ஒரு குருவி அந்த கடல் அல்லது ஒரு நதியின் ஓரத்திலிருந்து தண்ணீர் குடிப்பதற்காக தன்னுடைய அலகை அதில் முக்கி எடுத்தது.

அதைப் பார்த்து ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள். மூஸா பார்த்தாயா? இந்த குருவி தன் அழகை தண்ணீரில் நுழைத்து எடுத்த போது, இதனுடைய அலகில் எந்தளவு தண்ணீர் ஒட்டி இருக்கும், அந்த அளவினால் இந்தக் கடலில் கண்டிப்பாக ஒரு பகுதி தண்ணீர் குறைந்திருக்கும்.

இந்த அளவு தான் என்னுடைய இல்ம் மட்டுமல்ல, உன்னுடைய இல்மும், இந்த உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுடைய இல்மும், அல்லாஹ்வுடைய இல்மை கவனித்து படைத்த ரப்புல் ஆலமீனுடைய இல்மோடு பார்க்கும் பொழுது, இந்தப் பறவையின் அலகில் ஒட்டிருக்கக் கூடிய தண்ணீரைத் தவிர வேறெதும் இருக்காது. அவ்வளவு விசாலமானவன்,

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ

என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று கூறினார். (அல்குர்ஆன் 6:80)

மேலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا

(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”(அல்குர்ஆன் 18:109)

மேலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا

(நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். (அல்குர்ஆன் 18:47)

மேலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَنِ عَبْدًا (93) لَقَدْ أَحْصَاهُمْ وَعَدَّهُمْ عَدًّا

ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். (அல்குர்ஆன் 19: 93,94)

நம்மால் இந்த உலகத்தில் எதை எண்ண முடியும், எவ்வளவு எண்ண முடியும். நம்மால் இந்த உலகத்திலுள்ள மரங்களின் இலைகளை எண்ணிவிட முடியுமா? மரங்களை தான் எண்ண முடியுமா? கடலில் உள்ள மீன்களை எண்ண முடியுமா? ஆகாயத்தில் உள்ள பறவைகளை எண்ண முடியுமா?

அன்பானவர்களே! இந்த வசனங்களுடைய வெளிச்சத்தில் பார்க்கும் பொழுது, இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நாளை மறுமையில் எழுப்புவது மனிதர்களை மட்டுமல்ல, மனிதர்களுக்கும் மறுமையில் ஹஷர் உண்டு, எல்லா ஜீவராசிகளுக்கும் நாளை மறுமையில் ஹஷர் உண்டு. எல்லா ஜீவராசிகளும் நாளை மறுமையில் எழுப்பப்படுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். (அல்குர்ஆன் 6:38)

இன்னும் தெளிவாக அல்லாஹ் கூறுகிறான் :

وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-(அல்குர்ஆன் 81:5)

وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِنْ دَابَّةٍ وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் கால்நடைகள் (முதலியவற்றைப்) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:29)

மனிதனுடைய அற்ப அறிவினால் அவன் சிந்திக்கலாம், எத்தனை மலக்குகள், எத்தனை உயிரினங்கள், எத்தனை ஜீவராசிகள் இவற்றையெல்லாம் அல்லாஹ் தஆலா மீண்டும் கொண்டு வருவானா? என்று.

ஒரே நேரத்தில் அதுவும் ஒரே மைதானத்தில், அல்லாஹ் தஆலா இவை அனைத்தையும் கொண்டு வருவானா? என்று.

கண்டிப்பாக அல்லாஹ் கொண்டு வருவான். அவன் இவற்றையெல்லாம் மீண்டும் கொண்டு வருவதற்குஆற்றலுடையவன்.

கண்ணியத்திற்குரியவர்களே! அந்த மஹ்ஷருடைய மைதானத்தில் நாம் எப்படி எழுப்பப்படுவோம். அந்த நிலை ஒரு பரிதாபமான நிலை, பயப்பட வேண்டிய நிலை. அந்த நிலையை நினைத்து அல்லாஹ்விடத்தில் நாம் துஆ கேட்க வேண்டும்.

யா அல்லாஹ்! என்னை கேவலப்படுத்திவிடாதே! என்னை அசிங்கப்படுத்தி விடாதே! அல்லாஹ்வுடைய கலீல், இப்ராஹிம் நபி அவர்கள் துஆ செய்கிறார். யா அல்லாஹ்!  மக்கள் எழுப்பப்படுகின்ற அந்த நாளில் என்னை நீ கேவலப்படுத்தி விடாதே! என்னை நீ அசிங்கப்படுத்தி விடாதே! தலை குணிய வைத்து விடாதே! என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஒவ்வொரு நாள் இரவில் தூங்கும் பொழுது, அல்லாஹ்விடத்தில் கேட்ட துஆக்களில் ஒன்று,

رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

என் இறைவா! உன்னுடைய அடியார்களை மஹ்ஷரில் ஒன்று சேர்க்கின்ற அந்த நாளில்,  உன்னுடைய வேதனையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! (1)

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1159.

எவ்வளவு பயம் இருந்திருக்கும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுக்கு.

சிலர் எண்ணுகிறார்கள், நாம் என்ன பாவம் செய்திருப்போம். நாம் எதற்கு பயப்பட வேண்டும், பாவிகள் பயப்பட வேண்டும், பாவிகள் தானே பயப்படுவார்கள் என்பதாக,

இதுவே ஒரு மிப்பெரிய அடையாளம், அந்த மனிதன் பாவத்தில் இருக்கிறான் என்பதற்கு.

நல்லவர்கள் பயப்படுவார்கள், அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான். யாரிடத்தில் எவ்வளவு நன்மை இருக்குமோ, அந்தளவு பயப்படுவார்கள்.

நபிமார்கள், நன்மையில் குறைந்தவர்களா? வாழ்க்கையில் அவர்கள் செய்த தவறுகளை கூட விரல் விட்டு எண்ணி விடலாம். எந்தளவு பயந்தார்கள்.

இமாம் ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: இந்த உலகத்தில் யார் மறுமையை பயந்தார்களோ, கண்டிப்பாக நாளை மறுமையில் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : நல்லவர்கள் சொர்க்கத்தில் பேசிக்கொள்வார்கள்.

قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ

இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.(அல்குர்ஆன் 52 : 26)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ

இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள். (அல்குர்ஆன் 70:27)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا

நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17:57)

கண்ணியத்திற்குரியவர்களே! அந்த மஹ்ஷருடைய காட்சி இருக்கிறதே, மிகவும் திடுக்கமான ஒரு காட்சியாக இருக்கும். மனிதன் எதிர்பார்த்திருக்கமாட்டான், இப்படி ஒரு நிலையா என்று.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கூறியதை அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் அறிவிக்க, இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்.

நாளை மறுமையில் மனிதன் எழுப்பப்படுவான். அவர்களுடைய கால்களில் செறுப்பு இருக்காது. அவர்களுடைய மேனியில் ஆடை இருக்காது. அவர்களுக்கு கத்னா செய்யப்பட்டிருக்காது.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாகூறுகிறார்கள் :

யா ரஸூலுல்லாஹ்! ஆண்கள், பெண்கள் எல்லோருமா இப்படிப்பட்ட நிலையில் எழுப்பப்படுவார்கள். இன்னொரு ஹதீஸ்களில் வருகிறது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் கூறினார்கள்: யா ரஸூலுல்லாஹ்! ஆண்கள், பெண்கள் ஒரு சேர இப்படி எழுப்பப்பட்டால், யாரும் யாரையும் பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுமே?

அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்: ஆயிஷா! அதெல்லாம் எங்கே சாத்தியம், யாரும் யாரையும் பார்க்க முடியாது. அவ்வளவு ஒரு கடுமையான, ஒரு திடுக்கம் நிறைந்த நாளாக இருக்கும். யாரும் மற்றவரின் பக்கம் திரும்பி பார்க்க முடியாது. தனக்கு அருகில் யார் இருக்கிறார்? ஆணா, பெண்ணா, சகோதரனா, நண்பனா, எதிரியா என்று யாரும் யாரையும் ஏரெட்டு பார்க்க முடியாது. அந்தளவுக்கு அங்கே நிலைமைகள் கடுமையாக இருக்கும்.(2)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 6046.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கூருகிறார்கள் :

يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ

 

அடியான் எழுப்பப்படுவான், அவன் எந்த நிலையில் மரணிக்கிறானோ, யார் எந்த அமலை செய்கின்ற நிலையில் மரணித்தார்களோ, அல்லது இறுதியாக எந்த அமலை செய்தார்களோ, அந்த நிலையில் எழுப்பப்படுவான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 5126.

ஒரு மனிதன் தொழுதான், அந்த நிலையில் மரணிக்கிறான், அவன் தொழுத நிலையில் எழுப்பப்படுவான். ஒரு மனிதன் தொழுது விட்டு ஹலாலான வியாபாரத்திற்கு செல்கிறான். தொழுகைக்குப் பிறகு சென்றிருக்கிறான், அந்த தொழுகையின் நிலையில் அவன் எழுப்பப்படுவான்.

ஒரு மனிதன் ஹஜ்ஜிற்கு செல்கிறான், இறந்து விடுகிறான், ஹஜ்ஜுடைய நிலையில் எழுப்பப்படுவான். ஒரு மனிதன் நோன்பு வைக்கிறான், அவருக்கு மரணம் வருகிறது, நோன்பு வைத்த நிலையில் அவன் எழுப்பபப்படுவான். ஒரு மனிதன் குர்ஆன் ஓதுகிறான், மரணித்துவிடுகிறான், குர்ஆன் ஓதிய நிலையில் அவன் எழுப்பப்படுவான்.

ஒரு மனிதன் குர்ஆன் ஓதினான், அதற்கு பிறகு ஹலாலான ஒரு காரியத்திற்கு செல்கிறான். எந்த அமல் இவனுடைய இறுதி அமலாக இருக்குமோ, அந்த அமலில் எழுப்பப்படுவான்.

அப்படியென்றால் யார் தங்களுடைய அமல்களோடு பாவத்தை கலக்கின்றார்களோ, நன்மைகளையும் செய்கிறார்கள், பிறகு பாவங்களையும் அந்த நன்மையோடு கலந்துவிடுகிறார்கள்.

தொழுகிறார், நன்மையான அமல் சிறந்த அமல். ஆனால், தொழுதுவிட்டு சென்ற பிறகு ஒரு பாவத்தை குறுக்கே கொண்டு வந்து விடுகிறான். அதற்கு பிறகு அவனுக்கு மரணம் வந்து விடுகிறது. அவன் எந்த நிலையில் எழுப்பப்படுவான், அந்த பாவத்தை செய்த நிலையில். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கூறினார்கள்: 

ஒவ்வொரு அடியானும் அவன் இறந்த நிலையில் எழுப்பப்படுவான்.

கண்ணியத்திற்குரியவர்களே! இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மஹ்ஷர் மைதானம் எப்படிப்பட்டதாக இருக்கும்? நல்லவர்கள் எப்படி எழுப்பப்படுவார்கள்? பாவிகளுடைய நிலை எப்படி இருக்கும்? அல்லாஹ்வுடைய அந்த விசாரனை எப்படி இருக்கும்? இப்படியாக நிறைய ஹதீஸ்களை அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு விளக்கியிருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அடுத்த அடுத்த வாரங்களில் பார்ப்போம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனை சந்திக்கின்ற நாளை நினைவு கூர்ந்து, அதை பயந்து அதற்காக நல்ல அமல்களை அதிகமதிகம் சேகரித்துக் கொண்ட நல்ல மக்களில், நல்ல முஃமின்களில், முத்தக்கீன்களில்என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ مِسْعَرٍ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ ابْنِ الْبَرَاءِ عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ فَسَمِعْتُهُ يَقُولُ رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ أَوْ تَجْمَعُ عِبَادَكَ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ (صحيح مسلم 1159 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا حَاتِمُ بْنُ أَبِي صَغِيرَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ (صحيح البخاري 6046 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/