HOME      Khutba      அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய அமல்கள் | Tamil Bayan - 482   
 

அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய அமல்கள் | Tamil Bayan - 482

           

அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய அமல்கள் | Tamil Bayan - 482


அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய அமல்கள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய அமல்கள் 
 
வரிசை : 482
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 17-11-2017 | 28-02-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ்வுடைய பொருத்தம் இந்த உலகத்தில் நாம் தேட வேண்டிய ஒன்று. இதைத்தேடி, இதை பெற்றவர்களாக நாம் உலகத்திலிருந்து பிரிந்தால்தான்  நம்முடைய மறுமை வாழ்க்கை சீர் பெறும்.
 
அல்லாஹ்வுடைய பொறுத்தம் என்பது, இந்த உலகத்தில் மனிதன் தேடக்கூடிய செல்வங்களிலேயே மனிதன் தேடக்கூடிய நிஃமத்துகளிலேயே மிகப்பெரிய ஒன்று. 
 
இறைநம்பிக்கைக் கொண்ட ஒரு முஃமின், மறுமையை நம்பிக்கைக்கொண்ட ஒரு முஃமின், சொர்க்கம் நரகம் உண்டென்று ஈமான் உள்ள ஒரு முஃமின், அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்ற நிலையில் எனது மரணம் என்னை சந்திக்க வேண்டும் என்ற உறுதியில், என்ற எண்ணத்தில், என்ற துஆவில் அவன் இருக்க வேண்டும்.  ஒரு நிமிடம் கூட இதை அவன் மறக்கக் கூடாது .
 
அந்த அழகிய துஆக்களில் ஒன்று, யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது பொருத்தத்தை உனது அன்பை இன்னும் சொர்க்கத்தை கேட்கிறேன்.
 
அல்லாஹ்வே!  நான் உன்னிடத்தில் உன்னுடைய பொருத்தத்தை கேட்கிறேன்.  நீ என்னை பொருந்திக்கொள்ள வேண்டும். உனது கோபம் என்மீது இருக்கக்கூடாது.
 
பார்க்க : ஃபத்வா ஷைக் இப்னு பாஸ்.
 
மிக இக்கட்டான தருணம் தாயிஃப் உடைய தருணம். அந்த நேரத்தில் கூட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் இப்படி துஆ கேட்டார்கள்.
 
யா அல்லாஹ்! நீ என்னை பொருந்திக் கொண்டால் எனக்கு அது போதும். நீ என் மீது விருப்பமுடையவனாக இருந்தால் எனக்கு அது போதும். உன்னுடைய கோபத்திலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்.
 
இந்த மக்கள் எனக்கு செய்யக்கூடிய அவமரியாதைகள்ம, இவர்கள் கொடுத்த தொந்தரவுகள் இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. உனது விருப்பம் எனக்கு இருக்குமேயானால் உன்னுடைய பொருத்தம் எனக்கு இருக்குமேயானால்.
 
நூல் : தப்ரானி, எண் : 1036.
 
இதுதான் ரஸுல் ஸல்லல்லாஹி அலைவஸல்லம் அவர்களுடைய தேடலாக இருந்தது. அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காகவே ஒவ்வொரு காரியத்தையும் செய்பவர்களாக இருந்தார்கள். அப்படி ஒரு சமுதாயத்தையும் உறுவாக்கினார்கள்.
 
முஃமின்கள் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடக்கூடியவர்களாக இருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை அவர்கள் பாழாக்க மாட்டார்கள். அல்லாஹ் தடுத்த பாவங்களின் பக்கம் நெருங்கவும் மாட்டார்கள்.
 
எப்போது மனிதன் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை வாழ்க்கையின் இலக்காக லட்சியமாக நோக்கமாக வைக்க மாட்டானோ, அப்போதுதான் அல்லாஹ் தன் மீது கடமையாக்கிய கடமையை மனிதன் பாழாக்குவான். அல்லாஹ் தடுத்த பாவங்களின் பக்கம் திரும்புவான். 
 
அல்லாஹ்வின் பொருத்தத்தை கொள்கையாக கொண்டவன், அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வேண்டும் என்ற தேடலில் உள்ளவன் ஒருபோதும் அல்லாஹ்வை கோபமூட்டகூடிய அல்லாஹ்வுக்கு வெறுப்பை கொடுக்கக்கூடிய எந்த காரியத்தையும் அவன் நினைத்துகூட பார்க்க மாட்டான்.
 
அப்படி தெரியாமல் ஒரு நிர்ப்பந்தத்தில் அவனிடமிருந்து சில பாவங்கள் நிகழ்ந்துவிட்டாலும் அதற்காக அவன் கண்ணீரை சிந்தி அல்லாஹ்விடத்தில் அழுது மன்றாடி பாவமன்னிப்பு தேடிக்கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடக்கூடிய முஃமின்கள் இப்படித்தான் இருப்பார்கள்.
 
இன்று, நாம் எதையோ தேடுகிறோம். ஒவ்வொரு சிறிய பெரிய அற்பமான பொருளை தேடி, நம்முடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை தொலைத்து விடுகிறோம்.
 
நாம் எதை எடுத்துச் செல்ல முடியும்? நாம் கட்டிய வீட்டை நம்மோடு எடுத்துச் செல்லமுடியுமா? நாம் வாங்கி வைத்திருக்கூடிய எந்தவொரு பொருளையாவது மரண தருவாயில் எடுத்துச் செல்ல முடியுமா? அல்லது என்னோடு அனுப்பி வையுங்கள் என்று யாரிடமாவது வஸிய்யத்து செய்ய முடியுமா? அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தவிர.
 
ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய அந்த அழகிய வசனத்தைப் படியுங்கள்!
 
يَاأَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27) ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً
 
(எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே! நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்று கூறுவான்) (அல்குர்ஆன் 89 : 27, 28) 
 
அமைதி அல்லாஹ்வுடைய இபாதத்தில் இருக்கிறது. அல்லாஹ்வுடைய தீனில் இருக்கிறது.
 
எந்த அளவு தீனீல் நாம் ஈடுபடுவோமோ அந்தளவுக்கு மனம் அமைதியாக உறுதியாக இருக்கும். எந்த அளவுக்கு மனிதன் துன்யாவில் ஈடுபடுவானோ அந்த அளவுக்கு மனம் குழப்பம் அடையும்.
 
மனதில் எண்ணங்கள் உருவாகும். வீணான கற்பனைகள் உருவாகும். வீணான சிந்தனைகள் உருவாகும். 
 
தீனைக்கொண்டு அதற்கு வேலி போடவில்லையென்றால், தீனைக்கொண்டு அந்த துன்யாவை நாம் பாதுகாக்கவில்லையென்றால், அந்த துன்யா நம்மை அழிக்காமல் விடாது.
 
தீனைக்கொண்டு நம்முடைய துன்யாவை பாதுகாக்கவில்லையென்றால் கண்டிப்பாக அந்த துன்யா மனிதனை அழித்துவிடும். மனிதனுடைய நிம்மதியை அவனுடைய மனதிலிருக்கூடிய ராஹத்தை அழிக்காமல் விடாது துன்யா. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அமைதிப்பெற்ற ஆத்மாக்கள் யார்? யார் அல்லாஹவுடைய தீனைக்கொண்டு திருப்தி அடைந்தார்களோ, உலகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் பார்க்கவில்லையோ அவர்கள்தான்.
 
அல்லாஹ் என்னை ஐங்கால தொழுகைக்குறிய அருளை கொடுத்திருக்கிறான். எந்த ஒரு தொழுகையையும் அதனுடைய நேரத்தை வீணாக்காமல் அதை பேணி தொழக்கூடிய பாக்கியத்தை கொடுத்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்.
 
கடனற்ற வாழ்க்கையை அல்லாஹ் எனக்கு கொடுத்திருக்கிறான். பிறருடைய ஹக் என்னிடத்தில் இல்லை. என்னுடைய ஹக் பிறருடத்தில் இருந்தால் மன்னித்துவிடுங்கள்.
 
நான் எல்லோருக்கும் அவருக்குரிய கடமையை செய்து விடுகிறேன். பிறர் எனக்குறிய ஹக்கை கொடுக்கவில்லையென்றாலும் பரவா இல்லை, நான் அவர்களை மன்னித்து விடுகிறேன். இப்படியாக, அல்லாஹ் மார்க்கத்தில் வைத்திருக்குடிய அந்த நிலையை கொண்டு திருப்தியடையக்கூடிய மனிதன்.
 
துன்யாவைக் கொண்டு யாருமே திருப்தியடையவே முடியாது. எங்கேயாவது உலகத்தில் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு மன்னர் அடுத்த நாட்டின் மீது போர் செய்யாமல் வாழ்ந்திருக்கிறார் என்று. 
 
அவருடைய நாட்டில் அவருக்கு என்ன குறை இருந்தது? வேலை செய்வதற்கு பணியாட்களின் குறையா? செல்வத்தில் குறையா? மொத்த நாடே தனக்கு இருந்தாலும் கூட, அடுத்த நாட்டையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு வளைத்துப் போட்டுக்கொள்ள வேன்றுமென்ற ஆசையில்தான் உலகத்தில் வாழ்ந்த எல்லா மன்னர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.
 
ஒருவனுக்கு அல்லாஹு தஆலா இந்த துன்யாவில் கொஞ்சம் செல்வத்தை கொடுக்கட்டும். செல்வம் சேர சேர அந்த செல்வத்தை தான் அனுபவித்து, பிறருக்கு அனுபவிக்க கொடுப்பொம் என்று எண்ணுகிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? 
 
அந்த செல்வத்தை வைத்து, தான் சொத்து வாங்க வேண்டும், தன் வசதியை பெருக்க வேண்டும். இப்படியாக திட்டம் தீட்டக் கூடியவர்கள் தான் அதிகம். எங்கேயாவது உலகத்தில் மனிதன் செல்வத்தை எனக்குப் போதும் என்று சொல்லி இருக்கிறானா?
 
அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى وَادِيًا ثَالِثًا، وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ»
 
ஒருவனுக்கு தங்கத்திலான ஒரு ஓடை அல்லது ஒரு பள்ளத்தாக்கு இருக்குமேயானால் அவன் இரண்டாவது தங்கவயல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். மூன்றாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். மனிதனுடைய வயிறை மண்ணைத் தவிர வேறு ஏதும் நிரப்பாது. அதாவது மனிதனுடைய ஆசையை மண்ணைத் தவிர எதுவுமே நிரப்பாது.
 
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1408, 1738.
 
அல்லாஹு தஆலா இந்தக் கூற்றை உண்மைப் படுத்தியவனாக இந்த வசனத்தை இறக்கினான்:
 
أَلْهَاكُمُ التَّكَاثُرُ (1) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
 
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது). (அல்குர்ஆன் 102 : 1,2)
 
இந்த உலகத்தில் நாம் தேடக்கூடிய நிஃமதுத்துக்களிலேயே மிக முக்கியமானது அல்லாஹ்வுடைய பொருத்தம்.
 
இந்த உலகத்துடைய செல்வம் அல்லாஹ் விதித்ததைத் தவிர நாம் அதிலிருந்து எதையும் அடைய முடியாது.
 
அல்லாஹ் நமக்கு விதித்ததை நாம் தவறி விடவும் முடியாது. அல்லாஹ்வுடைய பொருத்தம் ஒன்றை தான் நாம் தேட வேண்டும். இதற்காக நாம் அமல்களை செய்ய வேண்டும். இதற்காக நம்மை நாம் கஷ்டப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். 
 
இதற்குத்தான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ரப்புல் ஆலமீனும்  நமக்கு வலியுறுத்தி இருக்கின்றார்கள்.
 
ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்கிறார்கள்:
 
«لَوْ أَنَّ رَجُلًا يَخِرُّ عَلَى وَجْهِهِ، مِنْ يَوْمِ وُلِدَ إِلَى يَوْمِ يَمُوتُ، هَرَمًا فِي مَرْضَاةِ اللَّهِ، لَحَقَّرَهُ يَوْمَ الْقِيَامَةِ»
 
ஒரு மனிதன், அவன் பிறந்த தினத்திலிருந்து மரணிக்கின்ற வரை, சிறு பிராயத்திலிருந்து வயோதிகம் வரை அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக அவன் அவனுடைய முகத்தினால் இழுப்பது. 
 
(அதாவது, உலகத்திலேயே கஷ்டமான தண்டனைகளில் ஒன்று, ஒரு மனிதனை குப்புற படுக்க வைத்து அவனது காலை பிடித்து அவனுடைய முகம் தரையில் படும் படியாக இழுப்பது; கேவலப்படுத்துவது. இதில் வேதனை இருக்கிறது.)
 
இப்படி ஒரு மனிதன் வேதனை செய்யப் படுகிறான், அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடுவதற்காக.
 
அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு இப்படி ஒரு தண்டனை அவனுக்கு கொடுக்கப்பட்டு, அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு அந்த தண்டனையை அவன் சகித்துக் கொண்டிருந்தாலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய பொருத்தம் அவனுக்கு கிடைக்கும் போது, இந்த துன்யாவில் அவன் பட்ட கஷ்டத்தை சாதாரணமாக பார்ப்பான். 
 
(காரணம், அல்லாஹ்வுடைய பொருத்தம் அவ்வளவு பெரியது.)
 
அறிவிப்பாளர் : உத்பா இப்னு அப்த் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 16991, 17649.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸை அபூ ஸயீத் அல்குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 
 
" إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ؟ فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالُوا: يَا رَبِّ، وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا "
 
மறுமையில் அல்லாஹ் சொர்க்க வாசிகளை பார்த்து சொல்வான்; சொர்க்கவாசிகளே! என்று அல்லாஹ் அழைப்பான். அப்போது சொர்க்க வாசிகள் சொல்லுவார்கள்; எங்கள் இறைவா! உன் முன்னால் நாங்கள் ஆஜராகி இருக்கிறோம். உனக்கு முன்னால் நாங்கள் பணிந்து இருக்கிறோம். எல்லா நண்மைகளும் உன் இரு கரத்தில் இருக்கிறது.
 
அல்லாஹு தலா கேட்பான்; சொர்க்க வாசிகளே! நீங்கள் திருப்தியாக பொருத்தத்தோடு சந்தோசமாக இருக்கின்றீர்கள்.
 
இறைவா! நாங்கள் பொருந்திக்கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? நாங்கள் திருப்தி படாமல் எப்படி இருக்க முடியும்? உனது படைப்புகளில் யாருக்கும் கொடுக்காத நிஃமத்துகளை எங்களுக்கு நீ கொடுத்திருக்கிறாயே! 
 
அப்போது அல்லாஹ் கேட்பான்; இதைவிட சிறந்த ஒன்று என்னிடம் இருக்கிறது. 
 
(சொர்க்கத்திளுள்ள ஒவ்வொரு இன்பத்திலும் அவன் உலகத்தையே மறந்து விடுவான். உலகத்தில் பட்ட கஷ்ட்டங்களை மறந்து விடுவான். உலகத்தில் உள்ள இன்பங்கலெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இருக்காது. 
 
ஒரு சின்ன சின்ன நிஃமத், சொர்க்கத்திலுள்ள கொஞ்ச நீரை குடித்தால் போதும் அதனுடைய இன்பம் இந்த உலகம் இந்த உலகத்திலுள்ள வஸ்த்துக்களை விட பெரியது.
 
தனெக்கென அல்லாஹ் வைத்திருக்கக்கூடிய அந்த ஹுர் பெண்களைப் பார்த்தால் போதும், அத்தனை நிஃமத்துகளையும் மறந்து விடுவான். இப்படி சொர்க்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நிஃமத்துகளும் இந்த துன்யாவில் அவன் பட்ட கஷ்ட்டங்களை மறக்க வைக்கக்கூடியதாக இருக்கும்.)
 
அல்லாஹ் கேட்பான்; இதுவரை நீங்கள் சொர்கத்தில் அனுபவித்து வந்த எல்லா நிஃமத்துகளையும் விட சிறந்த  ஒன்றை நான் உங்களுக்கு கொடுக்கட்டுமா? என்று.
 
அவர்கள் கேட்பார்கள்; யா அல்லாஹ்! நாங்கள் இது நாள் வரை அனுபவித்து வந்ததை விட சிறந்த அமல்கள் இருக்கிறதா?
 
அல்லாஹ் சொல்லுவான்; ஆம், இருக்கிறது. உங்கள் மீது எனது பொருத்தத்தை எனது மகிழ்ச்சியை நான் இறக்குகிறேன். நான் இனிமேல் உங்கள் மீது கோபப்பட மாட்டேன். நான் உங்கள் மீது என்னுடைய திருப்தியை இறக்குகிறேன்.
 
அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : எண் : 6549, 7518.
 
அல்லாஹ்வுடைய பொருத்தம் என்பது கண்ணியத்திற்குரிய நபித்தோழர்களுக்கு மிக உயர்வாக கிடைத்தது. அவர்கள் செய்த தியாகம், அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் செய்த ஹிஜ்ரத், அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் செய்த நுஸ்ரத் என்பது அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பொருத்தத்தை மிக அதிகமாக மிக நிறைவாக தேடி தந்தது.
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்; முஃமீன்களே! நீங்களும் அந்த நபித்தோழர்ளுடைய பாதையில் பயணித்தால் அவர்களைப் பின்பற்றினால் உங்களுக்கும் என்னுடைய பொருத்தம் நிச்சயம்.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا (18) وَمَغَانِمَ كَثِيرَةً يَأْخُذُونَهَا وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا 
 
அந்த மரத்தினடியில் உம்மிடம் (கைகொடுத்து) வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். (அந்த போரில்) ஏராளமான பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படி செய்தான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 48 : 18,19)
 
நபித்தோழர்கள் அல்லாஹ்வுடைய இந்த பொருத்தம் கிடைக்கப்பெற்றவர்கள் என்று இந்த உலகத்திலேயே நற்ச்சான்று வழங்கப்பெற்றவர்கள்.
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்:
 
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ 
 
முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். மேலும், தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9 : 100)
 
குர்ஆன் குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்து விடும். ஹதீஸ் குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்து விடும்.
 
இப்படி கொடுக்காமல் விட்டுருந்தால், கொடுக்கப்பட்ட வசனங்களுக்கே குழப்பத்தை உண்டாக்கக்கூடியவர்கள் மன இச்சையை புகுத்தக்குடிவர்கள் இந்த வசனத்திற்கும் நாங்கதான் சொந்தக்கார்ர்கள் என்று சொல்லியிருப்பார்கள்.
 
அல்லாஹு தஆலா முஃமின்களைப்பற்றி வாழ்த்திச் சொல்லக்கூடிய அத்தனை வசனங்களுக்கும் எங்கள் ஜமாஅத்துதான் சொந்தக்கார்ர்கள் என்று சொல்லியிருப்பார்கள்.
 
அல்லாஹு தஆலா அப்படிப்பட்ட வீனர்களின் விளையாட்டுத்தனமான தஃபஸீருகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் தெளிவாக சொல்லிவிடுகிறான்.
 
அல்லாஹ்வுடைய பொருத்தம் நாம் தேட வேண்டிய ஒன்று. அந்த அல்லாஹ்வுடைய பொருத்தத்தை கிடைக்கப் பெற்றவர்கள் ஸஹாபாக்கள்.
 
அவர்களுடைய வழியில் நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்து நம்முடைய அமல்களை செய்யும்போது அல்லாஹ்வுடைய பொருத்தம் நமக்கு கிடைக்கப் பெறுகிறது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு நிறைய அமல்களை சொல்லித்தந்திருக்கின்றார்கள். எந்தமல்களின் மூலமாக அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைக்கும் என்பதாக. அந்த அமல்களை தேடித் தேடி வாழ்க்கையில் கவனமாக செய்யவேண்டும் 
 
அல்லாஹ்வுனடய பொருத்தத்தை நாடி, அல்லாஹ்வுடைய கோபத்தைவிட்டு தப்பிப்பதற்காக கண்டிப்பாக தெரிந்து கற்று அதை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் 
 
இந்த நேரத்தில் சில சோதனைகள் வரும். அல்லாஹ்வுடையப் பொருத்தத்திற்காக வாழும்போது கண்டிப்பாக சில சோதனைகள் வரும். 
 
யாருடைய உள்ளத்தில் ஈமான் உறுதி பெறவில்லையோ, அவர்கள் நமது குடும்பத்திலும் இருக்கலாம்.
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
 
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான். (ஆகவே, உங்கள் குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.) (அல்குர்ஆன் 64 : 14)
 
மேலும், அல்லாஹ் சொல்கிறான்:
 
وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ
 
மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8 : 28)
 
அல்லாஹ்வுடைய தீனை அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல்களை  நாம் தேடிதேடி பினப்பற்றி, அதில் உறுதியாக இருக்கும்பொது, சில நேரங்களில முதலாவதாக நம்மை சேர்நதவர்களே நம்மீது கோபித்துக் கொள்வார்கள். வெறுப்படைவார்கள். இன்னும், நட்பையே முறித்துக்கொளபவர்களும் இருக்கின்றார்கள்.
 
நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்தீர்கள் என்றால் முதலாவதாக உங்களுக்கு யார் உற்ற நண்பராக இருக்கின்றாரோ அவரே உங்களுக்கு எதிரியாக மாறிவிடலாம்.
 
இதையெல்லாம் நாம் அறவே பொருட்படுத்தக் கூடாது. அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடி பயணிக்கும்போது மக்களின் விருப்பத்தை தேடினால் அது ஒருநாளும் முடியாது.
 
மக்கள் என்னை நேசித்தாலும் சரி, வெறுத்தாரும் சரி, அல்லாஹ்வுடைய பொருத்தம் எனக்கு முதல். அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம்  என்று ஒரு கொள்கை இருந்தால்தான் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாம் அடைய முடியும். அந்த பாதையில் நாம் உறுதியாக இருக்க முடியும்.
 
இன்னெரு விஷயத்தை கவனியுங்கள்; சரி, இப்படியாக மக்கள் கோபிக்கின்றார்கள், இதன் முடிவு என்ன? கண்டிப்பாக அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடி என்று நாம் அமல்களில் உறுதியாக இருக்கும்போது அல்லாஹ் நம்மை பொருந்தி கொள்வான்.
 
யார் நம்மீது ஆரம்பத்தில் கோபப்பட்டார்களோ வெறுத்தார்களோ அவர்களும் நம்மை நேசிக்கும்படி அல்லாஹ் அவர்களை மாற்றுவான்.
 
யார் மக்களின் விருப்பு வெறுப்புக்காக அல்லாஹ் கோபப்பட்டாலும் பரவாயில்லையென்று அவர்கள் மார்க்கத்தில் அலட்சியமாக இருக்கின்றார்களோ, யாருடைய விருப்பத்திற்காக அல்லது யாருடை வெறுப்பை பயந்து அல்லாஹ்வுடைய வெறுப்பை சம்பாதித்தானோ, அல்லாஹு தஆலா அந்த மனிதனை யாருக்காக அவன் அப்படி செய்தானோ அவரகளிடத்திலேயே விட்டு விடுவான். தொலை, இனி அவர்களிடத்தில் மறுமையின் வெற்றியை தேடிக்கொள் பார்க்கலாம் என்று.
 
யார் நம்மை மறுமையில் காப்பாற்ற முடியும்? ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
 
منِ التمسَ رضا اللَّهِ بسَخطِ النَّاسِ كفاهُ اللَّهُ مؤنةَ النَّاسِ ، ومنِ التمسَ رضا النَّاسِ بسخطِ اللَّهِ وَكلَهُ اللَّهُ إلى النَّاسِ
 
யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடுவானோ…
 
(அல்லாஹ்வுடைய பொருத்தம் என்பது சும்மா வந்து விடாது. அதற்காக ஒரு தேடல் உள்ளத்தில் இருக்க வேண்டும். அதற்கான ஆசை இருக்க வேண்டும். அது தனக்கு கிடைக்கவேண்டும் என்ற தேடல் மனிதனிடத்தில் இருக்க வேண்டும் அந்த ஹதீஸுடைய வார்த்தை அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.)
 
அல்லாஹ்விடைய பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற தேடலில் யார் இருப்பார்களோ மக்கள் கோபித்தாலும் பரவாயில்லை அல்லாஹ்வுடைய பொருத்தம் இருந்தால் போதும் என்று யார் இருப்பார்களோ, இந்த மக்களுடைய பிரச்சினைகளை விட்டு அல்லாஹ் இந்த அடியானை பாதுகாத்து விடுவான்.
 
மேலும், யார் மக்களுடைய பொருத்தத்தைத்  தேடுவானோ அல்லாஹ் கோப்ப்பட்டாலும் பரவாயில்லையென்று அல்லாஹு தஆலா அந்த மனிதனை அந்த மக்களிடத்திலேயே சாட்டி விடுவான்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 2414.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடைய குடும்பாத்தார்களும் அந்த அபூதாலிப் கனவாயில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள்.
 
அவர்களை ஒட்டுமொத்த மக்காவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உணவில்லாமல் தண்ணீர் இல்லாமல் யாரும் அவர்களுக்கு எந்த வித உதவியும் செய்யக்கூடாது என்று ஊர் ஒதுக்கி வைத்திருந்தார்கள். 
 
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம், பக்கம் - 88, 89.
 
இதைவிட ஒரு சிரமமான சூழ்நிலையை அந்த இடத்தில் வேறு யாரும் சந்தித்து விட முடியாது. 
 
ஏன் அப்படிப்பட்ட துன்பத்தை அல்லாஹ்விடைய தூதர் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்?  ஏன் பொறுமையாக இருந்தார்கள்?
 
இப்போது இந்த மக்கள் தன்னை பகைத்தது, இந்த மக்கள் தன்னை ஒதுக்கி வைத்தது தான் அல்லாஹ்வுடைய தவ்ஹீதில் தஃவாவில் இருக்கின்றோம் என்ற காரணத்திற்காக, சகித்தார்கள்; பொறுமையாக இருந்தார்கள். 
 
அல்லாஹு தஆலா மீண்டும் அவர்களுக்கு அந்த மக்காவை கொடுத்தான். அங்குள்ள மக்களெல்லாம் அவர்களுக்கு கீழ்ப்படிந்து கட்டுப்பட்டு நடக்கும்படி அல்லாஹு தஆலா மாற்றினான்.
 
யார், அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடி தங்களுக்கு ஏற்ப்படக்கூடிய துன்பங்களை சகிப்பார்களோ கண்டிப்பாக அல்லாஹ் ஸுபஹானஹு தஆலா இந்த மக்களால் ஏற்படக்கூடிய அத்தனை பிரச்சனைகளுக்கும் அவன் பாதுகாப்பு கொடுப்பான்.
 
அல்லால்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடி மக்களுடைய கோபத்தை சம்பாதித்து விட்டால் அல்லாஹ் அவரை விட மாட்டான். மக்களால் ஏற்படக்கூடிய சிரமத்திலிருந்து அல்லாஹ் அவனை பாதுகாப்பான்.  
 
இன்னொரு ஹதீஸில் வருகிறது.
 
سخِط اللهُ عليه ، وأسخَط عليه الناسَ
 
மனிதருடைய பொருத்தத்தை தேடி, அல்லாஹ்வுடைய வெறுப்பை ஒருவன் சம்பாதித்தால், யாருக்காக அல்லாஹ்வுக்கு பிடிக்காத ஒன்றை செய்தானோ அவர்களே இவர்களை வெறுக்கும்படி செய்து விடுவான்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : ஸஹீஹுத் தர்கீப், எண் : 2250.
 
ஆன் தன் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தாடியை சிரைத்துக் கொள்வகிறான். ஒரு பெண் தனது ஆண்களுடைய திருப்திக்காக தனது ஹிஜாபில் சமரசம் செய்து கொள்கிறாள்.
 
இன்னும் எத்தனை விதமான அன்றாடம் வாழ்க்கையில் மனிதர்கள் சின்ன சின்ன விஷயமாக கருதியும் மார்க்கத்தின் ஒழுக்கங்களையும் சுன்னத்துகளையும் இன்னும் கட்டாயமான கடமைகளையும் மக்களுடைய திருப்திக்காக மக்களுடைய உறவுக்காகவேண்டி சமரசம் செய்துகொள்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய பொருத்தம் என்பது அவ்வளவு பெரிய ஒன்று. இந்த பொருத்தத்திற்காக வாழக்கூடியவர்கள் மற்றவர்களைப் போன்று ஒரு காலமும் ஆகமாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்தவர்கள்.
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
أَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللَّهِ كَمَنْ بَاءَ بِسَخَطٍ مِنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ
 
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவனின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும். (அல்குர்ஆன் 3: 162) 
 
நமக்கு முன்னால் இரண்டுதான் இருக்கிறது. 
 
ஒன்று, அல்லாஹ்வுடைய பொருத்தம். 
 
இரண்டாவது, அல்லாஹ்வுடைய கோபம்.
 
இந்த இரண்டுக்கும் இடையில் மூன்றாவது ஒன்று கிடையாது. நீ செய்யக்கூடிய காரியம் அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு உட்பட்டதாக இருக்கும், இல்லை அல்லாஹ்வை கோபமூட்டக்கூடியதாக இருக்கும். மூன்றாவது ஒரு நிலை இருக்காது. 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்: அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடியவன் அல்லாஹ்வுடைய கோபத்தைத் தேடியவனைப் போல் ஆவானா? இரண்டு பேரும் சமமாவார்களா?
 
அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பயங்கரமானது! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மன்றாடி, அழுது பிரார்த்தித்து கெஞ்சி கேட்கக்கூடிய துஆக்களில் ஒன்று,
 
அல்லாஹ் உன் பொருத்தத்தை கொண்டு உன் கோபத்திலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன். யா அல்லாஹ்! உன் கோபத்திலிருந்தும் நரக நெருப்பிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
 
நூல் : அபூதாவூத், எண் : 745, 1215, ஹாகிம் எண் : 796, 1009, இப்னு மாஜா எண் : 3821.
 
அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சில அமல்களை சொல்லி தந்திருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்காக அந்த அமல்கள நாம் கவனமாக செய்ய வேண்டும்.
 
" إِنَّ اللهَ يَرْضَى لَكُمْ ثَلَاثًا، وَيَكْرَهُ لَكُمْ ثَلَاثًا، فَيَرْضَى لَكُمْ: أَنْ تَعْبُدُوهُ، وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا، وَيَكْرَهُ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةِ الْمَالِ "
 
மூன்று காரியங்களை நீங்கள் செய்தால் அது அல்லாஹ்வுக்கு ரொம்ப பிடிக்கும். மேலும், மூன்று காரியங்களை அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கின்றான்.
 
அல்லாஹ் விரும்பக் கூடியதில் முதலாவது, நீங்கள் அல்லாஹ்வுக்கு இனைவைக்காமல் வணங்க வேண்டும் என்று. 
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏
 
மேலும், அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (அல்குர்ஆன் 12 : 106)
 
அல்லாஹ் உங்களுக்கு எதை விரும்புகிறான்? நீங்கள் அவனுக்கு இனைவைக்காமல் வணங்க வேண்டும் என்று. வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும். அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படக் கூடிய அத்தனை விஷயங்களையும் அல்லாஹ்வைத் தவிர வணக்க வழிபாடுகளை செய்கிறார்களோ அவற்றை விட்டு கண்டிப்பாக விலகியிருக்க வேண்டும்.
 
நீங்கள் அல்லாஹ்வுக்காக மட்டும் இணைவைக்காமல் வணங்கக்கூடிய அந்த இபாதத்துகளை அல்லாஹ் மிகவும் விரும்புகிறான்.
 
இன்னும் அல்லாஹ் விரும்புகிறான்; அல்லாஹ்வுடைய வேதத்தை ஒற்றுமையாக உங்களுக்கு மத்தியில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் பற்றிப்பிடிப்பதை. 
 
மூன்றாவதாக சொன்னார்கள்; உங்களது காரியத்தை யாருக்கு அல்லாஹ் பொறுப்பாக் கொடுத்தானோ, உங்களுக்கு தலைவராக யாரை ஆக்கினானோ அவருக்கு நன்மையை நாடுங்கள்; அவரை நீங்கள் பகைத்துக் கொள்ளாதீர்கள். அவருக்கு நீங்கள் சதி செய்யாதீர்கள். அவரோடு சண்டை சச்சரவு செய்யாதீர்கள்.
 
இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இன்றை முஸ்லிம் நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்ற அத்தனை குழப்பங்களுக்கும் காரணம், அவர்கள் செய்த பாவம்  மட்டுமல்ல, பாவங்களுக்குறிய தண்டைனையை அல்லாஹ் மறுமையில் தர இருக்கிறான். 
 
ஆனால், இந்த உலகத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்கள் சதித்திட்டம் தீட்டினால், அவர்களோடு சண்டையிட்டால் அவர்களுக்கு மத்தியில் ஏற்ப்படக்கூடிய குழப்பங்களால் அவர்களில் ஒரு கூட்டம் அவர்களுடைய இன்னொரு கூட்டத்தை வெட்டி சாய்க்கும்.
 
இன்று, அன்னியர்களின் படையெடுப்பால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை விட, அழிக்கப்பட்டதை விட, முஸ்லிம்களால் முஸ்லிம்கள் அழிக்கப்படுவது அதிகம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: கொலை அதிகமாகி விடும். எந்த அளவுக்கு என்றால், கொல்லப்பட்டவனுக்கு தெரியாது; தான் ஏன் கொல்லப்பட்டேன்? என்று. கொன்றவனுக்கும் தெரியாது; நான் ஏன் கொன்றேன் என்று. (1)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2908.
 
முஸ்லிம் நாடுகளில் ஒரு முஸ்லிம்  குழுக்கள் ஒரு கூட்டத்தை அழிப்பதற்காக கன்னி வெடிகளை வைக்கிறார்கள். அதில் அப்பாவி பொதுமக்கள்தான் சாகிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் அழகாக சென்னார்கள்; யாரை அல்லாஹ் உங்களுடைய அமீராக ஆக்கினானோ, அல்லாஹ் உங்களுடைய காரியத்திற்கு பொருப்பாளனாக ஆக்கிவிட்டானோ அவருக்கு நீங்கள் நன்மையை நாடுங்கள்.
 
கிளர்ச்சி செய்வதோ, ஆர்ம்பாட்டம் செய்வதோ, கழகங்கள் செய்வதோ, சதி திட்டம் தீட்டுவதோ, இஸ்லாமிய மார்க்கத்தை மார்க்கமாக நம்பிக்கை கொண்டவனால் செய்யமுடியாது, செய்யக்கூடாத ஒன்று.
 
அடுத்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: மூன்று விஷயங்களை அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கின்றான்; 
 
அது அப்படி பேசப்பட்டது என்று, இது இப்படி பேசப்பட்டது என்று ஆதாரமற்ற உண்மையற்ற செய்திகளை மக்களுக்கு மத்தியில் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் அவதூராக பரப்புவது. 
 
இரண்டாவது, தேவையற்ற கேள்விகளை கேட்பது. 
 
உங்களுக்கு தெரிந்த விஷயத்தை கொண்டு அமல்கள் செய்வதற்கே இன்னும் ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது. இந்த நிலையில் தேவையற்ற விஷயங்களை, எது உன் அமலோடு சம்மந்தப் படவில்லையோ, எது உனக்கு தேவையில்லையோ அதை துருவி துருவி கேட்பது.
 
இபாதத் செய்பவர்கள் கேள்வி குறைவாக கேட்பார்கள். யாருக்கு இபாதத்தில் ஆர்வம் இல்லையோ  அவர்கள் தர்க்கம் செய்வார்கள், விவாதங்கள் செய்வார்கள், இன்னும் என்னன்னமோ மார்க்கத்தைப் பற்றி இவ்வளவு துள்ளியமாக பேசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால், அந்த கல்வி எந்த விதமான பிரயோஜனத்தையும் கொடுக்காது.
 
மூன்றாவதாக சொன்னார்கள்; செல்வத்தை வீண் விரயம் செய்வது. பயணற்ற வழியில் சம்பாதித்த செல்வத்தை செலவழிப்பது.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1715.
 
செல்வம் என்பது, உழைக்கக் கூடியவர்களுக்கெல்லாம் கிடைத்து விடாது.  சோம்பேரிகளுக்கெல்லாம் கிடைக்காது என்றும் சொல்ல முடியாது.
 
படித்தவர்கள்தாம் செல்வத்தை சம்பாதிக்க முடியும் படிக்காதவர்கள் சம்பாதிக்க முடியாது என்று சொல்ல முடியாது.
 
அல்லாஹ் கொடுக்கக் கூடிய நிஃமத்துகளில் ஒன்று, அல்லாஹ் கொடுக்கக்கூடிய இந்த நிஃமத்தை வீண் விரயம் செய்வது. இது அல்லாஹ்வுக்கு பிடிக்காத காரியம்.
 
அல்லாஹ் செல்வத்தை ஏன் கொடுக்கின்றான்? அதைக்கொண்டு உன் பெற்றோரை உபசரிப்பதற்கு. உன் குடும்பத்தை நீ பாதுகாப்பதற்கு. அல்லாஹ்வுடைய பாதையில்  நீ செலவழிப்பதற்கு. ஏழைகள் மிஸக்கீன்கள் யத்தீம்கள் ஃபக்கீர்கள் தேவை உள்ளவர்கள் என்று அவர்களுக்கு நீ கொடுப்பதற்காக அல்லாஹ் உனக்கு கொடுத்திருக்கிறானே தவிர, இந்த செல்வத்தை ஆடம்பரமாக அனாவசியமாக செலவு செய்து  வீண்டிப்பதற்கு அல்ல .இதை அல்லாஹு தஆலா வெறுக்கின்றான்.
 
அல்லாஹ்வுடைய இந்த விருப்பம் என்பது இன்னும் நிறைய அமல்களில் இருக்கிறது. அல்லாஹ்வுடை தூதர் ஸல் அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
«أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالوَرِقِ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ»؟ قَالُوا: بَلَى. قَالَ: «ذِكْرُ اللَّهِ تَعَالَى» قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ»
 
உங்கள் அமல்களில் சிறந்ததை நான் உங்களுக்கு சொல்லித் தரட்டுமா? அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான ஒரு அமலை, உங்களது அந்தஸ்துகளை, தரஜாக்களை உயர்த்தக்கூடிய தங்கம் வெள்ளி செலவு செய்வதைவிட, உங்களது எதிரிகளை சந்தித்து அவர்களுடன் நீங்கள் சண்டையிட்டு நீங்கள் கொல்லப்படுவதை விட, சிறந்த ஒரு அமலை நான் சொல்லித்தரட்டுமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்.
 
அவசியம் சொல்லித்தாருங்கள் என்று தோழர்கள் கேட்டார்கள். 
 
அதற்கு அல்லாஹ்விடைய தூதர் சொல்கிறார்கள்; அதுதான் அல்லாஹ்வுடைய திக்ர். அல்லாஹ்வுடைய திக்ரை அதிகமாக செய்வது. அல்லாஹ்வை நினைத்துக்கொண்டிருப்பது.  இது அல்லாஹ்விடைய பொருத்தம் கிடைப்பதற்கு மிக சிறந்த ஒரு அமல்.
 
அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3377.
 
அல்லாஹ்வுடைய திக்ரில் ஒன்றுதான் அடியான் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லி அல்லாஹ்வை புகழ்வது.
 
எப்போதெல்லாம் அல்லாஹ்வடைய அருள் கிடைக்கிறதோ அது கிடைத்தவுடனேயே அல்ஹம்து லில்லாஹ் -எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று புகழ்வது.
 
ரஸுலுல்லாஹி ஸல் அலை சொல்கிறார்கள்:
 
«إِنَّ اللهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا»
 
அடியான் ஒரு கவலம் உணவை சாப்பிடுகிறான். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு அல்ஹம்து லில்லாஹ் சொல்கிறான். அதுபோன்று,  தாக நேரத்தில் அவனுக்கு கிடைத்த ஒரு குவளை தண்ணீரை குடித்து விட்டு அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்கிறான். அல்லாஹு தஆலா இப்படி புகழ்ந்த தன் அடியானின் மீது திருப்பதியடைகிறான்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2734.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ
 
அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். (அல்குர்ஆன் 39 : 7)
 
அல்லாஹ் பொருந்திக்கொள்கின்ற அமல்களில் ஒன்று, குர்ஆனை நேசிப்பது; அல்லாஹ்வுடைய குர்ஆனை ஓதுவது; அதை மனப்பாடம் செய்வது.
 
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
 
" يَجِيءُ القُرْآنُ يَوْمَ القِيَامَةِ فَيَقُولُ: يَا رَبِّ حَلِّهِ، فَيُلْبَسُ تَاجَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ زِدْهُ، فَيُلْبَسُ حُلَّةَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ ارْضَ عَنْهُ، فَيَرْضَى عَنْهُ، فَيُقَالُ لَهُ: اقْرَأْ وَارْقَ، وَيُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً "
 
மறுமை நாளில் குர்ஆன் வரும், ரப்பிடத்தில் சொல்லும்; இவருக்கு நீ முழுமையான ஆடை அனிவிப்பாயாக! 
 
மறுமையில் எழுப்பப்படும்போது மக்களெல்லாம் ஆடை இல்லாமல் எழுப்பப்படுவார்கள். கத்னா செய்யப்படாமல் வருவார்கள். காலில் செருப்பும் இருக்காது.
 
நூல் : முஸ்லிம், எண் : 5106.
 
குர்ஆன் அல்லாஹ்விடத்தில் பேசும்; யா அல்லாஹ்! இவருக்கு நீ ஆடை அணிவிப்பாயாக! அங்கே ஒரு பெரிய கிரீடம் இருக்கும். அந்த கிரீடம் முதலில் அவருக்கு அணிவிக்கப்படும்.
 
கராமா என்ற கண்ணியம் அவருக்கு அணிவிக்கப்படும். அதற்கு பிறகு அந்த குர்ஆன் மீண்டும் பேசும்; யா அல்லாஹ்! கிரீடம் மட்டும் இவருக்கு போதாது. இன்னும் நீ அணிகளன்களை  ஆடைகளை நீ அணிவிக்க வேண்டும் என்பதாக. அப்பொழுது கண்ணியத்தினுடைய ஆடை அந்த மனிதனுக்கு அணிவிக்கப்படும்.
 
பிறகு, அந்த குர்ஆன் அல்லாஹ் விடத்துல் பேசும்; அல்லாஹ்! இவனை நீ பொருந்திக் கொள்வாயாக!
 
அல்லாஹ் சொல்வான்; நான் இவனை பொருந்தி கொண்டேன் என்பதாக. பிறகு, அந்த அடியானுக்கு அல்லாஹ் சொல்வான்; அடியானே நீ சொர்க்கத்திற்கு வா. குர்ஆனை ஓது; சொர்க்கத்தின் பதவிகளில் உயர்நது கொண்டே செல்! நீ ஓதக்கூடிய ஒவ்வொரு ஆயத்திற்கும் ஒரு பதவி கொடுக்கப்படும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2915.
 
இன்று நமது நிலையை பாருங்கள்! நமது வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் நேரங்களை ஒதுக்கி வைத்திருக்கின்றோம். அல்லாஹ்வுடைய வேதத்தை ஒதுக்கி வைத்து விட்டோம்.
 
நம்முடைய நேரங்களிலிருந்து எல்லா வற்றுக்கும் நேரத்தை கொடுத்தோம்; நேரத்தை ஒதுக்கி வைத்தோம். அல்லாஹ்வுடைய வேதத்தை நம்முடைய நேரத்திலிருந்து வெளியாக்கி ஒதுக்கி வைத்து விட்டோம். அல்லாஹ் மன்னிப்பானாக!
 
மேலும், நம்முடைய பேச்சை கவனிக்க வேண்டும்.  நம்முடைய பேச்சு ஒன்று, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
 
இல்லை என்றால் அல்லாஹ்வுடைய வெறுப்பு நகர படுகுழியில் தள்ளக்கூடியதாக இருக்கும்.
 
ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:
 
«إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ»
 
அடியான் ஒரு வார்த்தையை பேசுவான். அது, அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்குறியதாக இருக்கும். அதை நினைத்துப்பார்த்திருக்க மாட்டான். ஆனால், அந்த வார்த்தைகளுக்காக எத்தனையோ அந்தஸ்துகளை அல்லாஹ் உயர்த்துவான்.
 
மேலும், அடியான் ஒரு வார்த்தையை பேசுவான். அது அல்லாஹ்வுக்கு கோப மூட்டக்கூடியதாக இருக்கும். அதை அவன் நினைத்து பார்த்திருக்க மாட்டான்.  அதன் காரணமாக நரகப் படுகுழியில் விழுவான்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6478.
 
ஆகவே, நாம் பேசக்கூடிய பேச்சுக்களை கவனித்துப் பேச வேண்டும். நாம் எதையும் நமது மனசு விரும்புகிறது என்பதாக எந்த ஒன்றையும் நம் இஷ்டப்படி பேசிவிடக்கூடாது.
 
ஏன் ஒருவரை சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்வது, அல்லாஹவிற்கு வெறுப்பான ஒரு காரியம். 
 
நூல் : அபூதாவூத், எண் : 4338, திர்மிதி 2237.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலும் சொல்கிறார்கள்:
 
إِنَّ اللهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ
 
அல்லாஹு தஆலா விரும்பக்கூடிய பொருந்திக்கொள்ளக்கூடிய காரியங்களில் ஒன்று,  அல்லாஹு தஆலா மென்மையானவன். அந்த மென்மையை அல்லாஹ் உங்களுக்கு விரும்புகிறான். நீங்கள் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் அதை விரும்புகிறான். (2)
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2593.
 
யார் ஒருவர் முரட்டு குணமில்லாமல் கடிண சுபாவம் இல்லாமல் மக்களிடத்தில் அன்பாக மென்மையாக நடந்து கொள்கிறார்களோ அவர்களை அல்லாஹ் பொருந்தி கொள்கிறான்.
 
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«رِضَى الرَّبِّ فِي رِضَى الوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ»
 
தந்தையுடைய பொருத்தத்தில் அல்லாஹ்வுடைய பொருத்தம் இருக்கிறது. தந்தையுடைய வெறுப்பில் அல்லாஹ்வுடைய கோபம் இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1899.
 
இன்று, எத்தனை பேர் தாய் தந்தையரை வெறுப்படைய வைக்கிறார்கள்! தங்களை நல்ல வணக்கசாலி இபாதத்தாலி என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய பெற்றோரை வெறுப்படைய செய்து விட்டு இபாத்த்தில் செல்கிறார்கள்.
 
எத்தனை பேர் அவர்களையெல்லாம் தவிக்க விட்டுவிட்டு அல்லாஹ்வுடைய பாதையென்று வீட்டை விட்டு, தனது பெற்றோரை விட்டு, குடும்பத்தை விட்டு சென்றவர்களெல்லாம் இருக்கிறார்கள்.
 
இன்னும் சிலர், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக ஜிஹாத் செய்கின்றோம் என்று பெற்றவர்களை கொலை செய்தவர்களெல்லாம் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.
 
எப்படியெல்லாம் முட்டாள் தனமாக மடத்தனமாக மார்க்கம் அவர்களுக்கு போதிக்கப்படுகிறது பாருங்கள்.
 
உன் தந்தையின் விருப்பத்தில் அல்லாஹ்வுடைய பொருத்தம் இருக்கிறது. உன் தந்தையின் கோபத்தில் அல்லாஹ்வுடைய கோபம் இருக்கிறது என்று  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். 
 
இப்படி நிறைய அமல்கள் இருக்கிறது. அந்த ஒவ்வொரு அமல்களையும் நாம் அறிந்து அல்லாஹ்வுடைய பொறுத்தத்தை நாடி அந்த அமல்களை செய்ய வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய பொறுத்தம் என்பது நாம் இந்த உலகத்தில் தேட வேண்டிய ஒன்று.  இதற்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்யவேண்டிய ஒன்று. இது கிடைத்து விட்டால்  அல்ஹம்து லில்லாஹ்! நாம் வெற்றி பெற்றவர்கள். இதை யார் இழந்தார்களோ அவர்கள் மிகப்பெரிய நஷ்டவாளிகள்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அவனுடைய பொறுத்தத்தை அவனுடைய அன்பை தருவானாக! என்னையும் உங்களையும் அவனுடைய போபத்திலிருந்து அவனுடைய வெறுப்பிலிருந்து நரக தண்டனையிலிருந்து பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
وَحَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي إِسْمَاعِيلَ الْأَسْلَمِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَذْهَبُ الدُّنْيَا، حَتَّى يَأْتِيَ عَلَى» النَّاسِ يَوْمٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ قَتَلَ، وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ " فَقِيلَ: كَيْفَ يَكُونُ ذَلِكَ؟ قَالَ: «الْهَرْجُ، الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ» وَفِي رِوَايَةِ ابْنِ أَبَانَ قَالَ: هُوَ يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي إِسْمَاعِيلَ، لَمْ يَذْكُرِ الْأَسْلَمِيَّ (صحيح مسلم -2908)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حَيْوَةُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ يَعْنِي بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا عَائِشَةُ» إِنَّ اللهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ، وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ " (صحيح مسلم – 2593)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/