HOME      Khutba      மீஸான் அமர்வு 4-4 | Tamil Bayan - 474   
 

மீஸான் அமர்வு 4-4 | Tamil Bayan - 474

           

மீஸான் அமர்வு 4-4 | Tamil Bayan - 474


மீஸான்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மீஸான் (அமர்வு 4-4)
 
வரிசை : 474
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 03-11-2017 | 14-02-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
 
உங்களுக்கும் எனக்கும் எல்லா முஃமின்களுக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய அன்பையும் மன்னிப்பையும், இம்மை மறுமையின் நன்மையையும், வெற்றிகளையும் வேண்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வுடைய பயத்தை முன்வைத்து தக்வாவை முன்வைத்து வாழுமாறு குத்பாவின் தொடக்கத்தில் எனக்கும் உங்களுக்கும் உபதேசித்துக் கொள்கிறேன். 
 
அல்லாஹ்வை பயந்து வாழக்கூடியவர்களுக்கு தான் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை, அல்லாஹ்விடத்தில் அன்பையும் மன்னிப்பையும் பெற முடியும். மறுமையில் அவர் தான் வெற்றி பெறுவார்.
 
தொடர்ந்து சில ஜும்ஆக்களில், மறுமையில் தராசு நிறுக்கப்படுகின்ற அந்த செய்தியை நாம் உங்களுக்கு கூறி வந்தோம். மறுமை என்ற அந்த பேச்சே ஒரு திடுக்கம் நிறைந்த பயம் நிறைந்த ஒன்று. 
 
நபித்தோழர்கள் ஒவ்வொருவருடைய நிலைப்பாடு எப்படி இருந்தது என்றால், காலையில் இருக்கும் பொழுது அவர்கள் அன்றைய மாலையை எதிர்பார்க்க மாட்டார்கள்.
 
மாலையில் இருந்தால் அடுத்து விடியக்கூடிய காலையை எதிர்பார்க்க மாட்டார்கள். அந்தளவு தான் உலக வாழ்க்கையை அவர்கள் சுறுக்கமாக கருதி வந்தார்கள். 
 
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு உபதேசம் செய்கிறார்கள். 
 
«كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ»
 
இந்த உலகத்தில் ஒரு பரதேசியை போன்று அதாவது அந்நிய ஊரில் வசிக்கின்றவரை போன்று அல்லது ஒரு பயணம் செய்பவரை போன்று உனது வாழ்க்கையை நீ அமைத்துக் கொள்!
 
இந்த ஹதீஸை இப்னு உமர் அவர்கள், தங்களது மாணவர்களுக்கு அறிவிக்கும் பொழுது அவர்கள் ஒரு விஷயத்தை சேர்த்து கூறுகிறார்கள்;
 
«إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ»
 
மாணவனே! நீ காலையில் இருக்கும் பொழுது மாலை வரை இருப்போம் என்ற எதிர்பார்ப்பில் இருக்காதே! 
 
(உனது மரணம் உனக்கு மிக அருகாமையில் இருக்கிறது. எனவே, அதற்குண்டான தயாரிப்போடு இரு. தவ்பாவோடு, இஸ்திஃபாரோடு, அல்லாஹ்வுடைய ஹக்குகளை சரியாக நிறைவேற்றுவதோடு, அடியாரின் ஹக்குகளில் எது உன் மீது இருக்கிறதோ அதை நீ அவர்களுக்கு ஒப்படைத்தவனாக அல்லது அதற்குரிய வஸிய்யத் செய்தவனாக, இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தான் ஒரு முஸ்லிமிடத்தில் இருக்க வேண்டும்.)
 
மேலும் கூறினார்கள், நீ மாலையில் இருந்தால் காலையை எதிர்பார்த்திருக்காதே! 
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5937, 6416.
 
அதாவது, என்னென்ன ஹக்குகளை அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அந்த ஹக்குகளை முடித்து விட்டு இரு. 
 
பொதுவாக நம்முடைய நிலைபாடு, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுகின்ற இந்த நிலை மறுமையை மறப்பதற்குரிய அடையாளம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாருங்கள். அவர்களுடைய உன்னத வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் நமக்கு எவ்வளவு அழகான படிப்பினையாக இருக்கிறது. 
 
அடியார்களுடைய ஹக்குகள் என்று ஒரு வார்த்தை கூறினேன். அதற்கு ஒரு உதாரணத்தை நான் கூற விரும்புகிறேன். எல்லாவற்றையும் அதற்குரிய வஸிய்யத்தோடு இருக்க வேண்டும்.
 
ஒருவரிடத்தில் கடன் வாங்கினால், ஒருவருடைய செல்வம் நம்மிடத்தில் இருந்தால், ஒருவருடைய பொறுப்பு நம்மிடத்தில் இருந்தால், நாம் யாருக்காவது வாக்கு கொடுத்திருந்தால் இப்படி ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய அடியார்களின் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
 
அதாவது, எந்தளவு அல்லாஹ்வுடைய ஹக்கில் நாம் கவனமாக இருக்கிறோமோ அதே அளவு அடியார்களுடைய ஹக்கிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
 
இரண்டு வசனங்களை கவனியுங்கள்; அல்லாஹு தஆலா கூறுகிறான்;
 
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
 
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 107 : 4,5)
 
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், நரகத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது. அந்த இடத்தினுடைய வேதனை எப்படி இருக்கும் என்றால், நரகத்தின் மற்ற பகுதிகள் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யும்; யா அல்லாஹ்! அதை போன்று எங்களை ஆக்கி விடாதே என்று.
 
அவ்வளவு பயங்கரமான வேதனையுடைய ஒரு இடம் என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். 
 
அல்லாஹ்வுடைய ஹக்கில் மோசம் செய்பவர்களுக்கு அல்லாஹு தஆலா இந்த ويل ஐ கூறுகிறான். ரப்புல் ஆலமீன் எப்படி தன்னுடைய ஹக்கில் மோசடி செய்தவர்களுக்கு கூறுகிறானோ இதே ரப்புல் ஆலமீன் அவனுடைய அடியார்களின் ஹக்கில் மோசடி செய்தவர்களுக்கும் கூறுகிறான்.
 
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ
 
அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். (அல்குர்ஆன் 83 : 1-3)
 
ரப்புல் ஆலமீன் தன்னுடைய ஹக்கிற்கு எந்த எச்சரிக்கையை கூறினானோ அதே எச்சரிக்கையை தன்னுடைய அடியார்களை ஏமாற்றக் கூடியவர்கள், அவர்களுக்கு வஞ்சகம் செய்பவர்கள், அவர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு கூறுகிறான்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவின் கடைத் தெருவில் வருகிறார்கள். அங்கே கிராமத்திலிருந்து வந்த மக்கள் தங்களின் தாணியங்களை, காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். 
 
அப்பொழுது ஒரு தாணியக் குவியல், அதை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடந்து செல்லும் பொழுது, அந்த குவியலுக்குள் கைவிடுகிறார்கள். அதிலிருந்து ஒரு பிடி தாணியத்தை வெளியில் எடுக்கிறார்கள்.
 
உள்ளிருந்த அந்த கோதுமை தாணியம் ஈரமாக இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்து கேட்கிறார்கள், உன்னுடைய குவியலின் மேற்பரப்பு காய்ந்திருக்கிறது. உள்ளே உள்ள தாணியம் ஈரமாக இருக்கிறதே? என்று காட்டிக் கேட்கிறார்கள். 
 
அந்த தோழர் பயந்து விட்டார் ஏனென்றால், அவருக்கு ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை பார்த்து விட்டு கூறினார்கள். 
 
مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي
 
யார் நமக்கு மோசடி செய்வார்களோ, நம்மை ஏமாற்றுவார்களோ அவர்கள் நமது சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. 
 
பதறிப்போன அந்த ஸஹாபி கூறுகிறார், அல்லாஹ்வுடைய தூதரே! நான் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை. என்னுடைய வாகனத்தில் இந்த தாணியத்தை எடுத்து வரும்பொழுது கொஞ்சம் மழை பெய்தது.
 
மதினாவிற்கு வந்து அந்த மூட்டையை கொட்டிய பொழுது நனைந்த பாகம் கீழே போய் விட்டது. நனையாமல் இருந்த அடிபாகம் மேல் வந்து விட்டது. இதை தான் நான் செய்தேனே தவிர, வேண்டும் என்றே நனைந்ததை உள்ளே வைத்து காய்ந்ததை மேல் வைத்து ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 102.
 
எவ்வளவு நுணுக்கமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கவனித்து நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்! ஒரு முஃமின் அப்படிதான் மறுமைக்காக  தயாராக இருக்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாருங்கள். தங்களை கொல்வதற்காக திட்டமிட்ட காஃபிர்கள் உடைய அமானித பொருள் அவர்களுடைய குடும்பத்துடைய அமானிதப் பொருள் தன்னிடத்தில் இருக்கிறது.
 
தன்னை கொலை செய்ய வருகிறார்கள், திட்டம் தீட்டி விட்டார்கள் என்பதையெல்லாம் அவர்களுக்கு வஹீ மூலம் தெளிவாகி விட்டது. இரவின் நடுப்பகுதிக்கு பிறகு கொல்வதற்குரிய அந்த வாலிபர்கள் வந்துவிட்டதையும் பார்க்கிறார்கள். 
 
என்ன அமானிதம் இருந்ததோ அந்த அமானிதத்தை தன்னிடத்தில் யார் யார் ஒப்படைத்தார்களோ அவர்களுடைய பெயரை கூறி, அலியே! எனது விரிப்பில் தூங்கிக் கொள். நாளை காலை நீ புறப்பட்டு வர வேண்டும். அப்படி வரும்பொழுது இன்னன்ன அமானிதங்களை இன்னன்னவர்களிடத்தில் கொடுத்து விட்டு வா என்று கூறுகிறார்கள்.
 
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம், பக்கம் எண் : 135.
 
இது தான் இஸ்லாமிய மார்க்கம். ஊர் சொத்து, குடும்ப சொத்து, அண்டை வீட்டுக்காரர் சொத்து, பள்ளி வாசல் சொத்து இப்படி எல்லா சொத்தையும் தனது வயிற்றுக்குள்ளே முழுங்கி விட்டு, பிறகு நல்லவராக நடிப்பதற்கு பெயரல்ல இஸ்லாமிய மார்க்கம்.
 
மக்களை ஏமாற்றலாம். அல்லாஹ் ரப்புல் ஆலமீனை ஏமாற்ற முடியாது. அப்படி யாராவது நினைத்தார்கள் என்றால் அல்லாஹ் சொல்வதை போன்று தான்.
 
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ 
 
அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 9)
 
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! அந்த மறுமையினுடைய நாளுக்கு முன்பு நாம் அதற்காக முழு தயாரிப்போடு இருக்க வேண்டும். 
 
மறுமையில் மனிதனுடைய அமல்கள் நிறுக்கப்படுகின்ற அந்த தராசு தட்டு ஒன்று, கனக்கும் அல்லது இலேசாகி விடும். நன்மையின் தட்டுகள் கனத்து விட்டால் அவருக்குரிய சிறந்த வாழ்க்கை, மறுமையின் மற்ற மற்ற எல்லா கட்டங்களையும் அவர் சிறப்பாக கடந்து செல்வார்.
 
நன்மையின் தட்டுகள் இலேசாகி பாவத்தின் தட்டுகள் கனத்துவிட்டால் பிறகு அவரை காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இருக்கமாட்டார்கள், அல்லாஹ் அனுமதியளித்தால் தவிர. 
 
இன்றைய ஜும்ஆவில் அப்படி அந்த நன்மையின் தட்டை இலேசாக்கக் கூடிய, பாவத்தின் தட்டை கனமாக்கக் கூடிய, நன்மைகளை அழிக்கக் கூடிய சில விஷயங்களை தான் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
 
இந்த நன்மையின் தட்டை இலேசாக்கக் கூடிய, நன்மைகளை அழிக்கக் கூடிய காரியங்களில் மிகப் பெரிய ஒரு காரியம், முகஸ்துதி. 
 
பிறர் பார்ப்பதற்காக, பிறர் புகழ்வதற்காக, பிறர் தம்மை மெச்சுவதற்காக, பிறருடைய பாராட்டிற்காக ஒரு காரியத்தை செய்வது.
 
இப்படி செய்பவர்களிடத்தில் நன்மைகள் நிறைய இருக்கலாம். தொழுதிருப்பார்கள், ஹஜ் செய்திருப்பார்கள், நோன்பு, ஜகாத், தர்மம் என்று நிறைய இருக்கலாம். 
 
ஆனால், அவையெல்லாம் இருந்தும் நாளை மறுமையில் அந்த அடியானுக்கு இவை எந்த பலனையும் தராது. காரணம், முகஸ்துதி என்ற மறைமுகமான ஷிர்க் கலந்து விடுகின்ற காரணத்தினால்.
 
எப்படி ஒரு நல்ல உணவில் சிறு துளி அசுத்தம் சேர்ந்தாலும் அதை நம்மில் எவரும் ஏற்றுக் கொள்வதற்கு, சாப்பிடுவதற்கு, பயன்படுத்துவதற்கு விரும்ப மாட்டோமோ, பரிசுத்தமான அந்த ரப்புல் ஆலமீன் மிக பரிசுத்தமானவன். அந்த ரப்பு தனக்குரிய அமல்களில் எப்படி பிறர் கலக்கப்படுவதை, பிற எண்ணங்கள் கலக்கப்படுவதை அவன் ஏற்றுக் கொள்வான்?!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
 
«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ»
 
நான் உங்கள் மீது அச்சப்படுகின்ற விஷயங்களில் மிகப் பெரிய ஒரு விஷயம் என்னவென்றால், அது தான் அந்த சிறிய ஷிர்க். சிறிய இணைவைத்தல் என்றால் யாரும் சாதாரணமாக எண்ணி விடக் கூடாது, சிறிய இணைவைத்தல் தானே என்று. 
 
(பெரிய இணை வைத்தல் நரகத்தில் நிரந்தரமாக தள்ளி விடுகின்ற ஷிர்க்கை கவனித்து சிறிய ஷிர்க் என்பதாக சொல்லப்படுகிறது அவ்வளவு தான். 
 
மற்றபடி, இந்த சிறிய ஷிர்க் என்பது லட்சோப லட்ச பெரும் பாவங்களை விட பயங்கரமானது என்பதை மறந்து விடக் கூடாது. அல்லாஹ் பாதுகாப்பானாக!)
 
அந்த சிறிய ஷிர்க் என்றவுடன் தோழர்கள் கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய ஷிர்க் என்று எதை கூறுகிறீர்கள்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், அது தான் முகஸ்துதி. 
 
(பிறர் மெச்சுவதற்காக, பிறர் புகழ்வதற்காக, பிறர் பார்ப்பதற்காக, பிறர் பாராட்டுவதற்காக, பிறரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக. 
 
எந்த நோக்கத்தில் செய்தாலும் சரி, செயலை செய்வதற்கு முன்பு அந்த எண்ணம் இருந்தாலும் சரி, செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த எண்ணம் வந்தாலும் சரி. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
சிலருக்கு ஆரம்பிக்கும் பொழுது அந்த எண்ணம் இருக்காது. ஆனால், யாராவது பார்த்து விடுவார்கள். அந்த நேரத்தில் அவனுக்கு அந்த எண்ணம் ஊசலாடுகிறது. 
 
அப்படி ஊசலாடினால் உடனே அல்லாஹ்விடத்தில், யா அல்லாஹ்! நான் யாருக்காவும் செய்யவில்லை; உனக்காக தான் செய்கிறேன் என்று, உடனே அந்த பட்ட அழுக்கை உள்ளத்திலிருந்து நீக்கி உள்ளத்தை சுத்தப்படுத்தி விட வேண்டும்.
 
அப்படி இல்லாமல், வந்த என்னத்தை உடனே அவன் அதற்காக இஸ்திஃபார் செய்து உள்ளத்திலிருந்து நீக்காமல் அதை தக்க வைத்துக் கொள்கிறான்.
 
பிறகு, இன்னும் நம்மை கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் அதை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறான் என்றால், இவனுடைய நிய்யத் கெட்டுவிடுகிறது. அதற்கு தான் அல்லாஹ் குற்றம் பிடிக்கிறான். உள்ளத்தில் அந்த தவறான எண்ணம் வந்த மாத்திரத்தில் அல்லாஹ் அதை குற்றமாக எழுதிவிடுவதில்லை.
 
அந்த தவறான எண்ணத்தை தக்க வைத்து அதை அவன் வளர்க்கும் பொழுது, அதில் அவன் மேலும் மேலும் தனது செயலை ஈடுபடும் பொழுது தான் ரப்புல் ஆலமீன் அதை குற்றமாக பதிவு செய்கிறான். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்ந்து கூறினார்கள்,
 
«يَوْمَ تُجَازَى الْعِبَادُ بِأَعْمَالِهِمْ اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ بِأَعْمَالِكُمْ فِي الدُّنْيَا، فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً»
 
அல்லாஹு தஆலா நாளை மறுமையில் இந்த முகஸ்துதியோடு அமல் செய்து வந்தவர்களை பார்த்து கூறுவான்.
 
உலகத்தில் யாருடைய முகத்திற்காக, யார் பார்க்க வேண்டும் என்பதற்காக, யாருக்கு காட்ட வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்து கொண்டிருந்தீர்களோ, அவர்களிடத்தில் நீங்கள் செல்லுங்கள்.
 
ஏதாவது, அவர்கள் உங்களுக்கு கூலி தர முடியுமா? என்று அங்கே சென்று பாருங்கள் என்று அவன் விரட்டி விடுவான்.
 
அறிவிப்பாளர் : மஹ்மூது இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23636.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (17) ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ (18) يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
 
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன் 82 : 16-19)
 
யாரும் அல்லாஹ்வுடைய விஷயத்தில் தலையிட முடியாது. அல்லாஹ் கருணை காட்டி யாருக்காவது சிபாரிசு கிடைக்க வேண்டும் என்று எண்ணி நல்லடியார்களில், நல்லவர்களில் யாரையாவது தேர்ந்தெடுத்து சிபாரிசுக்கு அனுமதி கொடுத்தால் தான். 
 
இந்த முகஸ்துதியானது இவ்வளவு மோசமானது. நம்முடைய மறுமையில், நம்முடைய தராசு தட்டில் நல்ல அமல்கள் வைக்கப்படுகின்ற அந்த நேரத்தில் இந்த முகஸ்துதி அந்த நல்ல அமல்களில் கலந்திருந்தால் அந்த நல்ல அமல்களெல்லாம் வீணாகி விடும். 
 
பாவங்களை அவன் செய்திருக்கமாட்டான். அவன் வெளிப்படையில் பெரும்பாவங்களையோ, சிறு பாவங்களையோ, மற்ற மற்ற கெட்ட செயல்களையோ செய்திருக்க மாட்டான். நல்ல அமல்களை தான் அதிகமாக செய்திருப்பான். 
 
ஆனால், அந்த நல்ல அமல்களில் இந்த முகஸ்துதி என்ற சிறிய ஷிர்க்கை கலந்து கலந்து அவன் செய்திருப்பான். நாளை மறுமையில் வரும்பொழுது இவனுடைய தராசு தட்டு இலேசாகி விடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அதுபோன்றுதான், மனிதனுடைய தராசு தட்டை நன்மையின் தட்டை இலேசாக்கக் கூடிய பாவத்தின் தட்டை கனக்க வைக்கக் கூடிய காரியங்களில் ஒன்று, அல்லாஹ்வுடைய புனிதங்களை பாழ்படுத்துவது.
 
அல்லாஹ் ஹராமாக்கிய காரியங்களை ஆபாசமான, அசிங்கமான அனாச்சாரங்களை, வெட்கக் கேடனாக செயல்களை திரை மறைவில் செய்வது,  அல்லாஹ்வுடைய ஹுருமத்துகளை பாழாக்குவது, அல்லாஹ்வுடைய புனிதங்களை மீறுவது. 
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 
 
«لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا، فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا»
 
நாளை மறுமை நாளில் எனது உம்மத்திலிருந்து பல மக்கள் வருவார்கள். அவர்களை நான் அறிவேன். அந்த மக்கள் திஹாமா உடைய மலைகளை போன்று வெண்மையான நல்ல அமல்களை அதிகமாக கொண்டு வருவார்கள்.
 
ஆனால், அந்த அமல்களை எல்லாம் காற்றில் பறக்கப்பட்ட புழுதிகளை போல, தூசிகளை போல அல்லாஹ் மாற்றி விடுவான். அவர்கள் நல்ல கனமான, வெண்மையான, சுத்தமான நிறைய அமல்களை எடுத்து வருவார்கள், பார்ப்பதற்கு அப்படி இருக்கும். 
 
அல்லாஹ் தஆலா அந்த அமல்களை எப்படி மாற்றி விடுவான் என்றால், காற்றில் பறக்கப்பட்ட தூசிகளை போல, புழுதிகளை போல மாற்றிவிடுவான்.
 
ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டார்கள். 
 
யா ரஸூலுல்லாஹ்! அவர்களை பற்றி எங்களுக்கு விளக்கம் கூறுங்கள். எங்களுக்கே தெரியாமல் அவர்களில் நாங்கள் ஆகிவிடுவதிலிருந்து எங்களை நீ பாதுகாப்பாயாக!
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
 
«أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ، وَمِنْ جِلْدَتِكُمْ، وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ، وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا»
 
அவர்கள் உங்களது சகோதரர்கள் தான், உங்களது இனத்தை சேர்ந்தவர்கள் தான்.  இரவில் நீங்கள் வணங்குவதை போன்று அவர்களும் வணக்கம் செய்கிறார்கள். அவர்கள் தனிமையில் இருக்கும் பொழுது அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பாழாக்கி விடுவார்கள். 
 
இரவில் வணக்கம் செய்வார்கள், உங்களோடு இருக்கும் பொழுது நல்லவர்களாக தோற்றம் அளிப்பார்கள். ஆனால், தனிமையில் அவர்கள் சென்று விடும் பொழுது அல்லாஹ்வின் புனிதங்களை, அல்லாஹ்வின் மார்க்க சட்ட வரம்புகளை மீறி விடுவார்கள்.
 
இத்தகையவர்கள் நிறைய அமல்கள் கொண்டு வருவதாக அவர்களுக்கு தெரியும். ஆனால், இப்படி தனிமையில் அவர்கள் பாவம் செய்த காரணத்தால், அதுவும் அல்லாஹ் தடுத்த சட்ட வரம்புகளை மீறி, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் புனிதமாக்கிய ஹுருமத்தை மீறிய காரணத்தால் அவருடைய இக்லாஸ் (மனத்தூய்மை) அடிபட்ட காரணத்தால் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவர்களுடைய அமல்களை ஒரு பறக்கப்பட்ட புழுதிகளாக ஆக்கி விடுவான்.
 
அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 4245.
 
அல்லாஹ் பாதுகாப்பானாக! அடுத்து அன்பானவர்களே! மூன்றாவது சில காரியங்களை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
 
மறுமையில் மனிதனுடைய அமல்களை பாழாக்கக் கூடிய, மனிதனுடைய நல்ல அமல்களை நாசமாக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு மனிதர் வருகிறார்.
 
அவர் கூறுகிறார், அல்லாஹ்வுடைய தூதரே! என்னிடத்தில் பல அடிமைகள் இருக்கிறார்கள். நான் அவர்களை வேலை வாங்குகிறேன். பல வியாபாரங்களை, தொழில்களை, பொறுப்புகளை நான் அவர்களுக்கு கொடுக்கிறேன். 
 
அவர்கள் மூன்று காரியங்களை செய்கிறார்கள். 1. என்னிடத்தில் பொய் பேசுகிறார்கள். 2. எனக்கு மோசடி செய்கிறார்கள்.  3. நான் சொல்கின்ற கட்டளைக்கெல்லாம் மாறு செய்கிறார்கள்.
 
இது எனக்கு நன்றாக தெரிகிறது. நான் இப்படி அவர்கள் செய்கின்ற காரணத்தால் சில நேரங்களில் ஏசி விடுகிறேன் அல்லது சில நேரங்களில் அவர்களை அடித்து விடுகிறேன். 
 
அந்த ஸஹாபியுடைய மன வேதனையை பாருங்கள். இங்கே ஒரு விஷயத்தை உள்ளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
 
நம்முடைய உள்ளம் தூய்மையான உள்ளமாக, உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் பயத்தை நாம் உணர ஆரம்பித்து விட்டால் கண்டிப்பாக இந்த உள்ளத்திற்கு ஒரு ஆற்றலை அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
 
ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.  எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். (அல்குர்ஆன் 91 : 7-10)
 
அந்த உள்ளம் செத்துவிடாமல் நாம் பார்க்க வேண்டும். அதற்கு தான் நாம் சொல்கிறோம்; அவனுக்கு உள்ளம் செத்து போய்விட்டது, அவனுக்கு மனசாட்சியே இல்லை என்று. அந்த 
 
உள்ளத்தில் உள்ள தக்வாவுடைய ஒளியை அவன் அனைத்து விடுகிறான். அவனுடைய செயலால் அவனே நிர்பந்தமாக, வலுக்கட்டாயமாக வேண்டுமென்றே அணைத்து விடுகிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
ஒரு பணியாளர் எப்படி இருக்க வேண்டும்? பொய் பேசக்கூடாது, மோசடி செய்யக்கூடாது, தனது எஜமானனின் கட்டளைக்கு மாறு செய்யக் கூடாது. அந்த மூன்றையும் அவர்கள் செய்கிறார்கள். 
 
இவர் நிர்பந்தத்தில் ஏசிவிடுகிறார், திட்டி விடுகிறார், அடித்து விடுகிறார். என்னுடைய நிலைமை என்ன? அல்லாஹ்வின் தூதரே! நானும் இவர்களும் நாளை மறுமையில் வரும்பொழுது என்னுடைய நிலைமை எப்படி இருக்கும்?
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 3165.
 
இங்கே தான் நபித் தோழர்களுடைய மறுமையின் பயத்தை நாம் பார்க்கிறோம். ஆகிரத்துடைய பயம் மிகைத்தவர்கள் தான் நபித் தோழர்கள். பல நூறு சம்பவங்களை நீங்கள் அவர்களது வரலாற்றில் பார்க்கலாம்.
 
இன்னொரு ஸஹாபி, அவர் தனது அடிமையை ஒரு சாட்டையை கொண்டோ அல்லது கையைக் கொண்டோ பலமாக அடிப்பதை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்து விடுகிறார்கள். 
 
பார்த்துவிட்டு அந்த நபித் தோழரின் பெயரை அழைத்து கூறினார்கள். 
 
«وَاللهِ لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ»
 
அல்லாஹ்வை பயந்து கொள்!  நீ இந்த அடிமையின் மீது உனக்கு இருக்கின்ற சக்தியை விட அல்லாஹ் உன் மீது சக்தி உள்ளவன்.
 
நீ அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் இவனை விடுதலை செய்வதை விட உனக்கு வேறு வழி இல்லை. 
 
உடனே அந்த ஸஹாபி கூறுகிறார், அல்லாஹ் என்னை மன்னிப்பானாக! அல்லாஹ்வின் முகத்திற்காக நான் இவரை உரிமை விட்டு விடுகிறேன். இதற்கு பிறகு என்னுடைய அடிமைகளில் ஒருவரை கூட நான் கை நீட்டி அடித்ததில்லை என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1659.
 
எப்படி பயம் பாருங்கள்! மறுமையுடைய பயம், ஆகிரத்துடைய பயம், ரப்புடைய பயம். அல்லாஹு தஆலா நாளை மறுமையில் இரண்டு தர்பாரை வைத்திருப்பான். ஒன்று, தன்னுடைய ஹக்கிற்காக, அவனுடைய ஹக்குகளில் அல்லாஹ் மன்னிப்பை விசாலமாக வைத்திருப்பான். 
 
ஏதாவது விட்டு விட்டாயா? ஏதாவது தெரியாமல் செய்து விட்டாயா? சின்ன சின்ன தவறுகளுக்காக அல்லாஹ் தஆலா மன்னிப்பை திறந்து கொண்டே இருப்பான்.
 
அல்லாஹ்வுடைய இன்னொரு தீர்ப்பு மையம் இருக்கிறது. அது, அடியார்களுடைய ஹக்கு சம்மந்தப்பட்டது, ஹுகூகுல் இபாத் சம்மந்தப்பட்டது. 
 
அந்த ஹுகூகுல் இபாதத்தில் அல்லாஹ் தஆலா அது சம்மந்தப்பட்ட அடியான் மன்னிக்காத வரை, அவன் மன்னிக்கமாட்டான். அதில் அல்லாஹ் தஆலா தலையிடவே மாட்டான் துள்ளியமாக கணக்கிட்டு அநியாயம் செய்யப்பட்டவருக்குரிய அந்த ஹக்கை அல்லாஹ் கண்டிப்பாக வாங்கி கொடுத்தே தீருவான்.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுவதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீஸ் குதிஸியில் கூறினார்கள். 
 
மூன்று மனிதர்கள் நாளை மறுமையில் அவர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான், அவர்களை அல்லாஹ் தூய்மைபடுத்தமாட்டான், அவர்களின் பக்கம் அல்லாஹ் பார்க்கவே மாட்டான்.
 
அந்த மூன்றில் ஒருவரை பற்றி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,
 
وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ
 
ஒரு மனிதரை தன்னிடத்தில் வேலைக்கு அமர்த்தி வாங்க வேண்டிய வேலைகளை எல்லாம் அவனிடத்தில் வாங்கிக் கொள்கிறான். ஆனால், அவனுடைய வேலைக்குரிய ஹக்கை அவன் கொடுப்பதில்லை. அல்லாஹ் கூறுகிறான், இந்த பாதிக்கப்பட்ட அடியானுக்காக நாளை மறுமையில் அல்லாஹ் வாதிடுவான்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2227.
 
தீர்ப்பளிப்பவனும் அல்லாஹ், வாதிடக்கூடியவனும் அல்லாஹ். நினைத்துப் பாருங்கள் மனிதர்களே! அல்லாஹு அக்பர். 
 
இங்கே எவ்வளவு அலட்சியம் பாருங்கள். இதை ஒரு திறமையாக நினைக்கிறார்கள், என்னை யாரும் எதிர்க்க முடியாது, என்னை யாரும் ஏனென்று கேள்வி கேட்க முடியாது என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
ஹதீஸின் தொடர் : ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அந்த ஸஹாபி கேட்கிறார்கள். யா ரஸூலுல்லாஹ் மறுமையில் எங்களுடைய நிலை என்ன? என்று. 
 
அப்பொழுது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 
 
«يُحْسَبُ مَا خَانُوكَ وَعَصَوْكَ وَكَذَّبُوكَ وَعِقَابُكَ إِيَّاهُمْ، فَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ بِقَدْرِ ذُنُوبِهِمْ كَانَ كَفَافًا، لَا لَكَ وَلَا عَلَيْكَ، وَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ دُونَ ذُنُوبِهِمْ كَانَ فَضْلًا لَكَ، وَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ فَوْقَ ذُنُوبِهِمْ اقْتُصَّ لَهُمْ مِنْكَ الفَضْلُ»
 
மறுமை நாளில் உனக்கு அவர்கள் மோசடி செய்தது, உனக்கு அவர்கள் மாறு செய்தது, உன்னிடத்தில் அவர்கள் பொய் பேசியது இவற்றையெல்லாம் கணக்கிடப்படும். நீ அவர்களை தண்டித்ததையும் கணக்கிடப்படும். 
 
நீ அவர்களை தண்டித்தது அவர்கள் செய்த பாவங்களின் அளவிற்கு இருந்தால் அது சமமாக ஆகிவிடும். உனக்கு சாதகமாகவும் அமையாது. உனக்கு பாதகமாகவும் அமையாது. உன்னுடைய தண்டனை அவர்கள் செய்த பாவத்தை விட குறைவாக இருந்தால் அது மேல் மிச்சமாக ஒரு நன்மையாக ஆகி விடும்.
 
அவர்கள் செய்த குற்றங்களை விட உனது தண்டனை மிகைத்திருந்தால், நீ அதிகமாக அவர்களை தண்டித்ததற்காக உன்னிடத்தில் அதற்குரிய பழிவாங்கப்படும். 
 
இவ்வளவு நீதமான ஒரு விஷயத்தை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். இதை கேட்டவுடன் அவர் அல்லாஹ்வின் தூதர் சமூகத்திலிருந்து சற்று ஓரமாக சென்று கதறி அழ ஆரம்பிக்கிறார்.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மனிதரை அழைத்து கூறுகிறார்கள். அல்லாஹ் தஆலா தனது வேதத்தில் கூறியதை நீ ஓதிப் பார்க்கவில்லையா?
 
وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ 
 
மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.) (அல்குர்ஆன் 21 : 47)
 
இந்த வசனத்தை ஓதிகாட்டியவுடன் அந்த மனிதருடைய தக்வாவை பாருங்கள்.  அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கும் எனக்கும் நாளை மறுமையில் வரும்பொழுது ஒன்று அவர்களும் பாதிப்பிற்குள்ளாகலாம். நான் அவர்களை தண்டித்தது குறைவாக இருந்து, அவர்கள் செய்த குற்றம் மிகைத்திருந்தால் அந்த பணியாளர்களுக்கு பிரச்சனை.
 
அவர்களுடைய குற்றம் குறைவாக இருந்து என்னுடைய தண்டித்தல் அதிகமாக இருந்தால் பிரச்சனை எனக்கு. 
 
எனவே, எனக்கும் அவர்களுக்கும் நீதமாக ஒரு தீர்வாக நான் பார்க்கிறேன், அவர்களை விட்டு நான் பிரிந்து விடுவதை. எனவே, அல்லாஹ்வின் தூதரே! உங்களை சாட்சியாக்குகிறேன்; இவர்கள் எல்லோரையும் நான் சுதந்திரமாக விடுதலை செய்து விட்டேன்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 3165.
 
அன்பானவர்களே! இந்த பயத்தை தான் நம்முடைய உள்ளத்தில் கொண்டு வர வேண்டும். மறுமையினுடைய நரக நெருப்பிலிருந்து விடுதலைக்காக இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய செல்வமாக இருந்தாலும் சரி, தேவையாக இருந்தாலும் சரி, அதை நாம் இழக்க தயாராகி விடுவோம். நரக நெருப்பிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பிற்காக. 
 
காரணம், இந்த உலகத்தில் நீங்கள் எந்த இன்பத்தை நாடி, எந்த சுகத்தை நாடி, எந்த செல்வத்தை நாடி மனிதன் பாவம் செய்கிறானோ அதில் ஏதாவது நிரந்தரமாக இருக்குமா? 
 
ஸலஃபுகளில் ஒருவர் கூறுகிறார்; மனிதரே! நீ ஒரு நல்ல அமலை செய்கிறாய். அதற்கு நீ சிரமப்படுகிறாய். காலையில் சுப்ஹு தொழுகைக்கு வர வேண்டும், ஜும்ஆவிற்கு முன் கூட்டியே வர வேண்டும், அதற்காக பொறுமையாக இருக்க வேண்டும், குத்பாவிற்கு வந்து குத்பாவை கேட்க வேண்டும். தூங்கக் கூடாது. 
 
இப்படியெல்லாம் பல கஷ்டங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த கஷ்டம் செய்ததற்கு பிறகு நீங்கி விடுகிறது. ஆனால், இதற்காக நாளை மறுமையில் நீ அனுபவிக்கப் போகும் இன்பங்கள் அது நிரந்தரமாக இருக்கும்.
 
அடுத்து கூறுகிறார்கள், எந்தெந்த சின்ன சின்ன சுகங்களுக்காக நீ அல்லாஹ்விற்கு மாறு செய்கிறாயோ, ரப்புடைய கட்டளையை மீறுகிறாயோ, இந்த சின்ன சின்ன சுகம், சின்ன சின்ன இன்பம் இந்த துன்யாவோடு போய் விடும். அந்த இன்பம் அந்த நேரத்திற்கு தான், அந்த சுகம் அந்த நேரத்திற்கு தான். 
 
ஆனால், இந்த சின்ன இன்பத்திற்காக, இந்த சின்ன சுகத்திற்காக நீ அல்லாஹ்விற்கு மாறு செய்து விடுகிறாய். அந்த இன்பமோ இந்த துன்யாவில் சில வினாடிகளுக்காக, சில நிமிடங்களுக்காக தான். 
 
ஆனால், இதனால் நீ நாளை மறுமையில் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய வேதனையானது நிரந்தரமானது என்பதை மறந்து விடாதே!
 
நல்ல அமல்களுக்காக நாம் படக்கூடிய துன்யாவின் கஷ்டம் கொஞ்ச நேரத்திற்கு தான் முடிந்து விடும். ஆனால், இதனுடைய இன்பம் மறுமையில் நிரந்தரமாக இருக்கும். பாவத்திற்காக மனிதன் இந்த துன்யாவில் தேடக்கூடிய ஆசை, சுகம் கொஞ்ச நேரத்திற்காக முடிந்து விடும். ஆனால், மறுமையில் இதற்காக அவன் அனுபவிக்கக் கூடிய தண்டனை நிரந்தரமானது, பயங்கரமானது.
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களை பார்த்து கேட்கிறார்கள், முஃப்லிஸ் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா? 
 
ஸஹாபாக்கள் கூறினார்கள், யாரிடத்தில் ஒரு பைசா கூட இல்லையோ அவர்களை தான் நாங்கள் பரம ஏழை என்று கூறுகிறோம். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; 
 
«إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ»
 
இல்லை, அது உங்களுடைய துன்யாவின் வழக்கில் இருக்கலாம். என்னுடைய உம்மத்தில், என்னுடைய மார்க்கத்தின் பார்வையில் பரம ஏழை யார் என்றால், ஒரு மனிதன் வருவான். அவரிடம் தொழுகை இருக்கும், நோன்பு இருக்கும், ஜகாத் இருக்கும்.  ஆனால், அதே நேரத்தில் இவனை திட்டியிருக்கிறான் என்று. இவனை பற்றி இட்டுக்கட்டி பொய் பேசியிருக்கிறான் என்று, இன்னவரின் சொத்தை அபகரித்திருக்கிறான் என்று, இன்னவருக்கு காயத்தை அல்லது இன்னவரின் உயிரை பறித்திருக்கிறான் என்று வருவார்கள். 
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், இவனுடைய நன்மைகளெல்லாம் எடுத்து அவனுக்கு கொடுக்கப்படும்.
 
யாரை திட்டினானோ, யாரை அடித்தானோ, யாருடைய செல்வத்தை அபகரித்தானோ, யாருடைய சொத்தை எடுத்தானோ, யாரை பற்றி இட்டுக் கட்டினானோ இவர்களுக்கெல்லாம் இவனுடைய நன்மையை எடுத்து எடுத்து கொடுக்கப்படும். 
 
இவனுடைய அநியாயங்களெல்லாம் முடிவதற்கு முன்பாக நன்மைகள் முடிந்து விட்டால், அவர்களின் பாவங்களை எடுத்து இவனின் தலையில் வைக்கப்படும். பிறகு, இவன் நரக நெருப்பில் வீசி எறியப்படுவான். 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2581.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இதை தான் ஆரம்பத்தில் நான் கூறினேன். அல்லாஹ்வுடைய ஹக்கில் ஒரு முஸ்லிம் எப்படி கவனமாக இருக்க வேண்டுமோ அது போன்று அடியார்களுடைய ஹக்கில் கவனமாக இருக்க வேண்டும்.
 
சிலரை பார்க்கலாம்; நல்ல தொழுகையாளியாக இருப்பார். நோன்பு, ஹஜ் என்று எல்லாம் செய்வார்கள்.
 
ஆனால், தாய் தந்தைக்கு தொந்தரவு தருவார்கள். தந்தையை மதிக்கமாட்டார்கள்,  தாய்க்கு வேதனை செய்வார்கள், சொந்த சகோதரனுக்கு மோசடி செய்வார்கள். ஊருக்கெல்லாம் நல்லவராக இருப்பார். 
 
ஆனால், சகோதரனுக்கு அநியாயம் செய்பவனாக, அவனுடைய ஹக்கை கொடுப்பதில் அவனுடைய உள்ளத்தில் கருமித்தனம். அப்படியே அந்த உள்ளத்தை ஷைத்தான் கவ்வி பிடித்து பூட்டு போட்டு வைத்திருப்பான்.
 
சிலரை பார்ப்பீர்கள், எல்லா நல்ல காரியங்களை செய்வார்கள். ஆனால், பொது சொத்தில் மோசடி செய்பவர்களாக இருப்பார்கள். 
 
இப்படி பல விதமான அநியாயங்கள் இருக்கின்றன. ஒன்று இரண்டு அல்ல. சிலர் எல்லோருக்கும் கொடுப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். இப்படியாக பல விதமான அநியாயங்கள் இருக்கின்றன.
 
ஷைத்தானுடைய வேலை, மனிதனை நரகத்தில் தள்ள வேண்டும். ஒன்று ஹுக்கூகுல்லாஹ் அல்லது ஹுக்கூகுல் இபாத் இரண்டிலும் சேர்த்து வீழ்த்த பார்ப்பான். அல்லது ஏதாவது ஒன்றில் வீழ்த்துவோமா? என்று தள்ள பார்ப்பான்.
 
ஆகவே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிக எச்சரிக்கையாக இந்த விஷயங்களை கூறினார்கள். 
 
நாம் இதை நமது சமூகத்தில் எதார்த்தமாக பார்க்கிறோம். வணக்க வழிபாட்டில் முக்கியத்துவம் தரக்கூடியவர்கள், இரவு வணக்கங்கள், குர்ஆன் ஓதுவது, திக்ர் செய்வது இன்னும் இஸ்லாமிய வெளித்தோற்றங்கள் என்று பல விஷயங்களில் கவனமாக இருக்கக் கூடியவர்கள்.
 
அடியார்களுடைய ஹக்குகளில் மோசடி செய்வதை அவர்களுடைய ஹக்குகளில் மீறுவதை, இன்னும் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் அலட்சியம் செய்வது. 
 
அது தாய் தந்தையாக இருக்கட்டும், மனைவியாக இருக்கட்டும், பிள்ளைகளாக இருக்கட்டும், நண்பர்களாக இருக்கட்டும், அண்டை வீட்டார்களாக இருக்கட்டும்.
 
இப்படி யாராக இருந்தாலும் சரி, அவர்களுடைய ஹக்குகளில் மிக கவனமாக நாம் இருக்க வேண்டும். ஏனெனில், அவர்களுடைய ஹக்குகளில் நாம் குறை செய்வது மறுமையில் நமது வெற்றியை கேள்விக்குறியாக ஆக்கி விடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அவனுடைய மன்னிப்பை தருவானாக! நாளை மறுமையில் நஷ்டமடைவதிலிருந்தும், கேவலமடைவதிலிருந்தும், இழிவடைவதிலிருந்தும் என்னையும் உங்களையும் நம்முடைய உம்மத்தையும் பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/