மீஸான் அமர்வு 3-4 | Tamil Bayan - 474
மீஸான்
ஜுமுஆ குத்பா தலைப்பு : மீஸான் (அமர்வு 3-4)
வரிசை : 474
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 27-10-2017 | 07-02-1439
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களை பேணுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடியும் மறுமையின் வீட்டை ஆதரவு வைத்தவர்களாகவும், நல்ல அமல்களில் முன்னேறுமாறும் எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக. அவன் நேசிக்கின்ற நல்லவர்களின் கூட்டத்தில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.
நாளை மறுமை தினத்தில் يوم الحساب -அந்த விசாரணை நாளில், يوم الدين -நம்முடைய அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுகின்ற அந்த நாளில், يوم الفصل -நல்லவர்கள் யார்? தீயவர்கள் யார்? என்று அல்லாஹ் பிரித்து விடுகின்ற அந்த நாளில், يوم المعاد -நாளை மறுமையில் அவரவர் தனது நிரந்தரமான தங்குமிடத்தில் தங்கக்கூடிய அந்த நாளில், يوم التغابن -யாரெல்லாம் தாங்கள் வெற்றியாளர்கள் என்று எண்ணி இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லாம் தாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் நஷ்டம் அடைந்து விட்டோம் என்று ஏமாறுகின்ற அந்த நாளில்!
யாரைப் பார்த்தெல்லாம் இந்த உலகத்தில் இவர்கள் நஷ்டவாளிகள், விவரம் அறியாதவர்கள், வாழ்க்கையில் முன்னேறாதவர்கள் என்று இறை மறுப்பாளர்களும் மறுமை நம்பிக்கை இல்லாதவர்களும் ஏளனமாக பேசிக்கொண்டு இருந்தார்களோ, அன்றைய தினம் அந்த ஏளனமாக பேசப்பட்டவர்களை, ஏளனமாக பேசியவர்கள் பார்ப்பார்கள்.
அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தில், அர்ஷின் நிழலில் இன்னும் அல்லாஹ்விற்கு நெருக்கமாக இருக்கின்ற அந்த பாக்கியத்தைப் பெற்று சொர்க்கத்திற்கு செல்லும் போது ஏளனமாக பேசியவர்கள் சொல்வார்கள்; நாங்கள் தான் ஏமாந்து விட்டோம்; நாங்கள் தான் நஷ்டவாளிகள் என்பதாக.
இப்படியாக மறுமை தினத்தில் முஃமின் சந்திக்க இருக்கின்ற, மிக முக்கியமான தருணம். அவனுடைய அமல்கள் எடைபோடப்படுகின்ற தருணம். நம்முடைய முடிவை நம்முடைய மீளும் இடத்தை நிர்ணயிக்கக் கூடிய சந்தர்ப்பம். அமல்களில் நல்ல அமல்களை பிரித்து ஒரு தட்டிலும் தீய அமல்களை ஒரு தட்டிலுமாக வைத்து அல்லாஹு தஆலா நிறுப்பான்.
அநியாயம் இல்லாத நாள். யாருக்கும் யாருடைய உரிமைகளும் பறிக்கப்படாமல், நீதமாக கொடுக்கப்படுகின்ற நாள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; அல்லாஹு தஆலா தனது நீதத்தை நிலைநிறுத்துவான். பிறகு, அதற்கு உதாரணம் சொன்னார்கள். இந்த உலகத்தில், கொம்புள்ள ஒரு ஆடு, கொம்பு இல்லாத ஒரு ஆட்டை முட்டி இருந்தால், இந்த இரண்டு ஆடுகளும் மறுமையில் எழுப்பப்பட்டு கொம்பு இல்லாத ஆட்டிற்கு கொம்பை கொடுத்து தனது கொம்பால், முட்டிய அந்த ஆட்டை முட்டும் படி அல்லாஹு ரப்புல் ஆலமீன் அனுமதி கொடுப்பான்.
பிறகு, அந்த மிருகங்களை பார்த்து சொல்லப்படும். நீங்கள் எல்லாம் மண்ணாக ஆகி விடுங்கள் என்று.
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 8401.
இப்படி மிருகங்களுக்கு மத்தியில் கூட துல்லியமாக தனது நீதத்தை நிறைவேற்றக்கூடிய அந்த ரப்புல் ஆலமீன், யாருக்கு மறுமையில் விசாரணை கண்டிப்பாக உண்டு என்று சொன்னானோ, அந்த படைப்புகளாகிய நமக்கு அவனுடைய விசாரணை எப்படி துல்லியமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஆகவேதான், ஒரு முஃமினுடைய கவலை, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் துஆ செய்ததை போன்று, என்னுடைய மறுமையில் என்னுடைய நன்மையின் தட்டுகள் கணக்க வேண்டும்.
அதற்காக நான் நிறைய அமல் செய்ய வேண்டும். என்னுடைய பாவங்களை குறைக்க வேண்டும். பாவங்களை விட்டு விலக வேண்டும் என்ற அந்த ஒரே தேட்டதில், ஒரே எண்ணத்தில், அமல்களில் முன்னேறியவனாக, தவ்பா செய்தவனாக, இஸ்திக்பார் செய்தவனாக எந்த நேரத்திலும் மரணம் வரும் என்று அதை எதிர்பார்த்து அதற்கு தயாரான நிலையில் ஒரு முஃமின் இருப்பார். முஃமினை பொருத்தவரை மரணத்திற்கு தயாரான நிலையில் இருப்பான்.
மரணத்தை மறந்தவனாக ஒரு முஃமினால் இருக்கவே முடியாது. மரணத்தை நினைவு கூறுவது நமக்கு ஒரு பெரிய பாக்கியம். மறுமையை நம்பாதவர்கள் அவர்களுக்கு மரணம் என்ற பேச்சை ஒரு துர்சகுனமாக பார்ப்பார்கள். அதை ஒரு கெட்ட வார்த்தையாக பார்ப்பார்கள்.
ஆனால், முஃமின்களுக்கு அப்படி அல்ல. முஃமின்களுக்கு மௌத் என்ற அந்த வார்த்தை ஒரு பிரியமான வார்த்தை. அதை நினைவுகூர்ந்து கொண்டே இருப்பார்கள். காரணம், அல்லாஹ்வின் பக்கம் நெறுங்குவதற்காக. நல்ல அமல்களை செய்வதற்காக. பாவங்களை விட்டு விலகுவதற்காக.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ»
அற்ப இன்பங்களை இந்த உலகத்தின் அபிலாசைகளை முறியடித்து உங்களை மறுமையின் பக்கம் திருப்பக் கூடிய அந்த மௌத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2307, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அந்த மறுமையில் நம்முடைய அமல்கள் நிறுக்கப்படுகின்ற அந்த தராசு தட்டில், என்னென்ன அமல்கள் நம்முடைய அந்த தராசு தட்டை மிக விசேஷமாக கனக்க வைக்கும் என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வந்தோம்.
அதனுடைய தொடரில் இன்னும் சில அமல்களை பார்ப்போம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
خَلَّتَانِ لَا يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الجَنَّةَ، أَلَا وَهُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ
இரண்டு குணங்கள், யார் அதை சரிவர பின்பற்றி வருவார்களோ, அதை யார் சரிவர கவனமாக கணக்கிட்டு சரியாக செய்து வருவாரோ அந்த முஸ்லிம் கண்டிப்பாக சொர்க்கம் செல்வார்.
அந்த இரண்டு அமல்கள் மிக இலகுவான அமல். ஆனால், அதை செய்பவர்கள் மிக குறைவாக இருப்பார்கள்.
அந்த விஷயம் என்ன? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஐந்து ஐந்து நேரத் தொழுகைகளில் ஒவ்வொரு தொழுகையை முடித்த பிறகும் பத்துமுறை சுபஹானல்லாஹ் சொல்லுதல். 10 தடவை அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்கள். 10 தடவை அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்.
فَتِلْكَ خَمْسُونَ، وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي المِيزَانِ
ஒரு நாளைக்கு இந்த தஸ்பீஹ்கள் பத்துமுறை. ஒரு வக்துக்கு ஐந்து வக்துகள். இது சொல்வதற்கு உங்களுக்கு 150 -ஆக ஆகி விட்டன.
ஆனால், அல்லாஹு தஆலா நீங்கள் கூறிய அந்த 150 திக்ருகளை மறுமையில் உங்களின் தராசுத் தட்டில் வைக்கும்போது 1500-ஆக வைத்து விடுவான். (1)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3410, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
அல்லாஹ் உன்னுடைய அருள் எவ்வளவு விசாலமானது! உன்னுடைய ரஹ்மத் எவ்வளவு பெரியது! நான் சொல்வதோ 150. அல்லாஹு தஆலா திருப்பி கொடுப்பதோ 1500.
எவ்வளவு பெரிய லாபகரமான வியாபாரம்! உலகத்தில் ஒருத்தனை கொள்ளையடித்து ஏமாற்றினால் தான் இப்படி சம்பாதிக்க முடியும்.
ஒரு ஹலாலான வருமானம் அதற்குரிய அளவோடு இருக்கும். மறுமையின் வியாபாரம் நஷ்டம் இல்லாத வியாபாரம்.
அல்லாஹ் சொல்கிறான்: மறுமைக்காக அமல் செய்பவர்களை பார்த்து அல்லாஹ் சொல்கிறான். இவர்கள் இப்படிப்பட்ட ஒரு வியாபாரத்தை ஆதரவு வைக்கிறார்கள் என்ன வியாபாரத்திற்கு அழிவே இல்லை. எந்த வியாபாரத்திற்கு நஷ்டமே குறைவே இல்லையோ அப்படிப்பட்ட ஒரு வியாபாரத்தை ஆதரவு வைக்கிறார்கள். (அல்குர்ஆன் 35 : 29)
ஹதீசை அறிவிக்கின்ற நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் சொல்கின்றார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது விரல்களின் அந்த முடிச்சுகளால் ஒவ்வொன்றையும் இப்படி கணக்கிட்டதை நான் பார்த்தேன் என்று.
இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்; தனது விரல்களால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எண்ணியதை நான் பார்த்தேன் என்று சொன்னார்கள்.
"தஸ்பீஹ்கள்" மிக முக்கியமான விஷயம். எங்கே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம திக்ருகளை தஸ்பீஹ்களை எண்ண சொன்னார்களோ அங்கே மட்டும்தான் எண்ணி செய்ய வேண்டும்.
தொழுகை முடிந்ததற்குப் பிறகு, தூக்கத்திற்கு பிறகு, காலை மாலையில் சில திக்ருகளை இப்படியாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எண்களை கணக்கிட்டு சொன்ன நூறு, முப்பத்தி மூன்று என்று எங்கே எண்களை கணக்கிட்டார்களோ அங்கே மட்டும் தான் திக்ருகளை தஸ்பீஹ்களை எண்ண வேண்டும்.
இது, முதலாவது விஷயம். இரண்டாவது விஷயம், அப்படி எண்ணுகின்ற முறையும் தன்னுடைய விரல்களைக் கொண்டுதான் இருக்க வேண்டும். விரல்களின் முடிச்சுகளை கொண்டுதான் எண்ண வேண்டும்.
இதற்கு மாற்றமாக, தஸ்பீஹ் மணிகள் என்று சொல்லி அந்த மணி மாலைகளை வைத்துக்கொண்டு திக்ரு செய்வது, தஸ்பீஹ்களை எண்ணுவது, அது தொழுகைக்குப் பின்னால் செய்யக்கூடிய திக்ருகளாக இருந்தாலும் சரி, தூக்கத்திற்கு முன்பு செய்யக்கூடிய திக்ருகளாக இருந்தாலும் சரி, அல்லது பொதுவான நேரத்தில் செய்யப்படக்கூடிய திக்ருகளாக இருந்தாலும் சரி, அது ஒரு பித்அத் -அனாச்சாரமான செயல்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ கண்ணியத்திற்குரிய நபித்தோழர்களோ செய்யாத ஒரு செயல். சிறப்பிற்குரிய சமுதாயமாக அறியப்பட்ட சஹாபாக்கள் தாபியீன்கள் தபஉ தாபியீன்களில் நம்முடைய முஸ்லிம் உம்மத்தில் இல்லாத ஒரு செயல்.
கிறிஸ்தவர்களும் மஜூஸிகளும் பிற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தோடு கலந்தபோது அவர்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒரு பித்அத்தான செயல்.
அதன் மூலமான ஒன்று, பித்அத்தை செய்த ஒரு குற்றம். இரண்டாவது, அது ஒரு முகஸ்துதியை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம்.
மூன்றாவதாக, அது ஒரு இஸ்ராஃபான செயல். இன்று பார்க்கிறோம்; ஐந்து ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை 5000 ரூபாய்க்கு கூட தஸ்பீஹ் மணி இருக்கிறது.
சில அரபு நாடுகளில் அது வைத்திருப்பது, அவர்களுக்கு ஒரு கலாச்சார ஸ்டைல். வைத்துக்கொண்டு சுற்றி கொண்டே இருப்பார்கள். நீங்கள் ஹஜ்ஜுக்கு சென்றால் அங்கே பார்க்கலாம்; ஒரு கையில் சிகரெட்டும் குடித்துக் கொண்டு இருப்பார்கள். இன்னொரு கையில் அந்த மணியை வைத்து சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இது மார்க்கத்தை விளையாட்டாக ஆக்கிக் கொள்ளக் கூடிய ஒரு தவறான செயல் என்பதை மறந்துவிடக்கூடாது.
எந்த இடத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வை பொதுவாக திக்ர் செய்யுங்கள் என்று சொன்னார்களோ, அங்கே எண்ணாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا
முஃமின்களே! அல்லாஹ்வை அதிகம் அதிகம் நினைவு கூறுங்கள். (அல்குர்ஆன் 33 : 41)
அல்லாஹு தஆலா கணக்கிடச் சொல்லவில்லை. எங்கே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கணக்கிட்டார்களோ அந்த இடங்களில் மட்டும் தான் எண்ண வேண்டும்.
மற்ற இடங்களில் நேரங்களில் பயணங்களில் நீங்கள் எண்ணாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
சிலரை பார்க்கிறோம்; நான் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தடவை கலிமா சொல்றேன். திக்ரு செய்கிறேன்.
எப்போது அமல்களை சொல்லி காட்டுகின்றார்களோ அதுவே அவர்களுடைய அமலை பாழாக்க போதுமானது. அந்த அமல்களை சொல்லிக் காட்டுவதற்கு அவர்களுக்கு எது தூண்டுகிறது?
சில பேரை பார்த்து இருக்கலாம்; அந்த காலத்தில் இன்ஜினியர்கள் கல் அல்லது மனிதர்களை பொருட்களை எண்ணுவதற்கு அல்லது flight குள்ள போனால் எத்தனைபேர் போய் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு மணி வைத்திருப்பார்கள்.
டிக் டிக் என்று அதை வைத்து கொண்டு டப்பு டப்பு டப்பு என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி செய்கின்ற காரணத்தினால் தான் அவர்களுக்கு தாங்கள் செய்கின்ற அமலை பிறருக்கு சொல்லத்தோன்றுகிறது. நான் இவ்வளவு செய்தேன், அவ்வளவு செய்தேன் என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக!
இந்த விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
ஹதீஸின் தொடர் : ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ تُسَبِّحُهُ وَتُكَبِّرُهُ وَتَحْمَدُهُ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ فِي المِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي اليَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ
அடுத்து நீங்கள் இரவில் படுக்கைக்கு செல்லும்போது முப்பத்தி மூன்று தடவை சுபஹானல்லாஹ், முப்பத்தி மூன்று தடவை அல்ஹம்து லில்லாஹ், முப்பத்தி நான்கு தடவை அல்லாஹு அக்பர்.
இது நாவில் சொல்வதற்கு நூறாக ஆகிவிட்டது. மறுமையின் தராசு தட்டில் ஆயிரமாக இருக்கும்.
அடுத்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்; உங்களில் யாராவது ஒரு நாளைக்கு 2500 பாவம் செய்வாரா?
அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) கேட்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! இவ்வளவு லேசான அமல்களையா நாங்கள் செய்ய முடியாமல் ஆகி விடுவோம்?
அதற்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; ஆம், ஷைத்தான் வருவான். நீங்கள் தொழுகையில் இருக்கும்போது, உங்களுக்கு அதை நினைவூட்டுவான், இதை நினைவூட்டுவான். கடைசியில் தொழுது முடிந்ததற்கு பிறகு அவசரமாக சென்று விடுவீர்கள். இந்த திக்ரை மறந்து விடுவீர்கள்.
நீங்கள் தூங்க செல்லும் போது ஷைத்தான் வருவான். உங்களுக்கு அது இது என்று நினைவூட்டுவான். உங்களுக்கு தூக்கத்தை மிகைக்க வைப்பான். ஓதாமல் தூங்கிவிடுவீர்கள். அசதி என்று அல்லது வேறு ஏதாவது வேலையில் இருந்து படுக்கைக்கு வந்து அப்படியே உங்களை தூங்க வைத்து விடுவான். (1)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3410, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
உலக விஷயங்களுக்கு ஒவ்வொரு காரியத்தையும் எப்படி கண்ணும் கருத்துமாக மெனக்கெட்டு செய்கிறோமோ அதுபோன்றுதான் மறுமையினுடைய அமல்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஷைத்தான் நமக்கு மறக்க செய்து விடுவான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
அடுத்து, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மறுமையில் நம்முடைய நல்ல அமல்களின் தராசுத் தட்டை கனக்க வைக்கக்கூடிய அமல்களில் ஒன்றாக சொன்னார்கள்; அழகிய பண்பாடு. அழகிய குணம். நற்குணங்கள்.
«مَا شَيْءٌ أَثْقَلُ فِي مِيزَانِ المُؤْمِنِ يَوْمَ القِيَامَةِ مِنْ خُلُقٍ حَسَنٍ، وَإِنَّ اللَّهَ لَيُبْغِضُ الفَاحِشَ البَذِيءَ»
மறுமையில் ஒரு முஃமினுடைய தராசுத் தட்டில் நல்ல அழுத்தமாக கனமாக்கக் கூடிய ஒன்று, அழகிய குணத்தை விட வேறு ஒன்றை நான் பார்க்கவில்லை.
அல்லாஹு தஆலா வெறுப்பு அடைகிறான், வெறுக்கிறான். யாருடைய செயல் அசிங்கமாக இருக்கிறதோ ஆபாசமாக இருக்கிறதோ யார் அறுவறுப்பான அசிங்கமான பேச்சுகளை பேசுகிறார்களோ அவர்களைப் பார்த்து.
அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2002, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
சிலரை பார்க்கலாம்; பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை கெட்டவார்த்தைகளை அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளை பேசுவார்கள்.
அது எங்களுடைய சிறுவயது பழக்கம், நாங்கள் எல்லாம் ஆரம்பகால நண்பர்கள், இப்படித்தான் பேசி பழகினோம் என்று சொல்வார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இதுபோன்று அசிங்கமான செயல்களை செய்பவர்கள்.. அசிங்கமான பேச்சுக்களை பேசக்கூடியவர்கள் அல்லாஹு தஆலா வெறுக்கின்றான் என்று.
இந்த ஹதீஸ் உடைய முதல்பகுதி நம்முடைய இந்த தலைப்புக்கு உட்பட்ட பகுதி. இரண்டாவது பகுதியில் அந்த அழகிய குணத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லித் தருகின்றார்கள்.
எத்தனையோ பேரிடத்தில் நல்ல குணங்கள் நல்ல நல்ல செயல்கள் இருக்கும். ஆனால், அவர்களுடைய பேச்சு அருவருப்பாக இருக்கும். தோற்றம் பெரிய ஒரு நல்ல ஒரு சிறந்த மனிதரை போன்று இருப்பார்கள். ஆனால் அவரிடத்தில் பேசினால் தான் தெரியும், இவ்வளவு அசிங்கமான ஆபாசமான எண்ணங்களை வைத்துக்கொண்டு அவர்கள் பேசுகிறார்கள் என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக.
எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைக் கூறி, அதற்கு எதிரான ஒன்றையும் நமக்கு நினைவூட்டி செல்கின்றார்கள்.
இந்த இடத்தில் சொல்லப்பட்ட இந்த அழகிய குணம் குறித்து நாம் பார்க்கிறோம்; ஒருவரிடத்தில் தொழுகை இருக்கிறது. ஒருவரிடத்தில் இபாதத் இருக்கிறது. இபாதத்தில் பேணுதல் இருக்கிறது.
ஆனால், அவரிடத்தில் அழகிய குணத்தை பார்க்க முடியவில்லை. அழகிய குணம் என்றால் என்ன? மென்மையான பேச்சு இருக்க வேண்டும். உண்மையான பேச்சு இருக்க வேண்டும். மன்னிக்கிற தன்மை இருக்க வேண்டும். பிறரிடத்தில் பழகும் போது முரட்டுத்தனமாக பழகக் கூடாது. விட்டுக் கொடுக்கக் கூடிய தன்மை இருக்க வேண்டும்.
இன்னும் நிறைய விஷயங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லித் தருகிறார்கள்.
அழகிய குணம் என்பது நமக்கே நம்முடைய அந்த நேரான இயற்கையை கொண்டு சிந்தித்து பார்த்தால் நமக்கு புரியவரும்.
நாம் செய்யக்கூடிய இந்த செயல் சரியா? தப்பா? என்னிடத்தில் இருக்கக்கூடிய இந்த குணம் நல்ல குணமா? இல்லையா? இந்த குணத்தை மக்கள் விரும்புகிறார்களா? மக்கள் என்று சொன்னால் அதற்காக மற்ற மக்களை சொல்லவில்லை. பொதுவாக மக்கள் எந்த ஒரு அஹ்லாக்கை விரும்புவார்களோ, யாரைப் பார்த்து அவருடைய குணம் நல்ல குணம் உடையவர், யாரைப் பார்த்து அவர் கெட்ட குணமுடையவர் என்று சொல்வார்களோ இதை வைத்து நாம் முடிவு செய்யலாம். எது அழகிய குணம்? எது தீயகுணம்? என்பதாக.
இந்த அழகிய குணம் என்பது, இது இபாதத்துகளினால் மட்டும் வந்துவிடாது. நம்முடைய ஆடை அலங்காரங்களினால் மட்டும் வந்துவிடாது. ஏனென்றால், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த அழகிய குணத்தை பற்றி சொல்லும்போது, இதற்காக வேண்டியும் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அழகிய குணம் என்பது தானாக வந்து விடாது. அதற்காக நாம் ஒரு பயிற்சி அதற்கான நாம் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
யாரொருவர் நான் பொறுமையாக இருக்க வேண்டும் என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு பொறுமையை வரவழைப்பாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பான்
யார், ஒழுக்கமாக பத்தினித்தனமாக தனது கண்ணியத்தை ஒழுக்கத்தை பாதுகாத்து இருக்க வேண்டுமென்று முயற்சி செய்வாரோ அவருக்கு அல்லாஹ் ஒழுக்கத்தை தருவான்.
யார் மக்களை விட்டு தேவையற்றவராக இருக்க வேண்டுமென்று முயற்சி செய்வாரோ அல்லாஹ் அவருக்கு மனநிறைவை கொடுப்பான்.
நூல் : புகாரி, எண் : 1376.
இந்த ஹதீஸை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கையில் பார்க்க வேண்டும்; எனக்கு எந்த நேரத்தில் கோபம் வருகிறது? எந்த நேரத்தில் நான் அவசரப் படுகிறேன்? எந்த நேரத்தில் நான் திட்டுகிறேன்?
இப்படியாக நம்மை நாமே பரிசோதித்து, அந்த இடத்தில் நம்மை நாமே திருத்த முயற்சிக்கும் போது, அல்லாஹ் தஆலா நம்மை சீர்திருத்தம் செய்கின்றான்.
நாம் நம்முடைய செயல்களை கண்காணிக்காமல், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று இருக்கும்பொழுது அல்லாஹு தஆலா வலுக்கட்டாயமாக நம்மை திருத்த மாட்டான்.
இந்த நல்ல குணத்திற்கு இரண்டு விஷயங்களை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகின்றார்கள். நல்ல அஹ்லாக் -அழகிய குணம் வர வேண்டுமென்றால் அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அழகிய குணம் தேவையா? இல்லையா? என்பது அது அவரவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். மறுமையில் நன்மையை மட்டுமே கனக்க வேண்டும் என்றால், அழகிய குணம் தேவை.
அதற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்று, அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டார்கள்.
யாரைப் பார்த்து ரப்புல் ஆலமீன், நபியே! நீங்கள் மிக மகத்தான நற்பண்புகளில் இருக்கின்றீர்கள் என்று வர்ணித்தானோ புகழ்ந்தானோ அந்த ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் தொழுகையில் கேட்கிறார்கள்;
وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ
யா அல்லாஹ்! குணங்களில் மிக அழகான குணத்திற்கு எனக்கு வழிகாட்டு. ஏனென்றால் உன்னை தவிர வேறு யாரும் அழகான குணத்திற்கு வழிகாட்ட முடியாது. யா அல்லாஹ்! குணங்களில் உள்ள கெட்ட குணங்களை விட்டு என்னை திருப்பி விடு. அந்த கெட்ட குணங்களை என்னை விட்டும் அகற்றி விடு. ஏனென்றால் உன்னை தவிர வேறு யாரும் கெட்ட குணங்களை என்னை விட்டு அகற்ற முடியாது.
அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 771.
மேலும் சொல்வார்கள்;
«اللَّهُمَّ حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي»
யா அல்லாஹ்! என்னுடைய படைப்பை நீ அழகாக்கினாய். என்னுடைய குணத்தையும் அழகாக ஆக்கு.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 959.
நாம் எத்தனை பேர் நம்முடைய முகத்தை அழகுபடுத்த ஆசைப்படுகின்றோம். நம்முடைய ஆடை உடை நம்முடைய உடல் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
என்றைக்காவது சிறிது நேரம் நாம் சிந்திக்கிறோமா? என்னுடைய குணமும் அழகாக இருக்கிறதா? என்று.
ஒவ்வொரு நாளும் பல சோதனைகளை நாம் சந்தித்து வருகிறோம். நமக்கு சோதனை பரிட்சை எந்த இடத்தில் எப்படி நடக்கிறோம். வாக்கு கொடுத்தோம், மீறுகிறோமா? நிறைவேற்றுகின்றோமா? பேசுகின்றோம். உண்மை பேசுகிறோமா? பொய் பேசுகிறோமா?
ஒரு நண்பனோடு ஒரு வியாபாரியோடு பழகுகிறோம். அமானிதமாக நடந்து கொள்கிறோமா? ஏமாற்றுகிறோமா? நல்ல குணம் என்பது, குழைந்து பேசுவது மட்டுமல்ல. சிரித்து பேசுவது மட்டுமல்ல. நல்ல குணங்கள் என்பது ஒரு கடல் போன்றது. சிரித்து பேசுவது. அன்பாக பேசுவது. மென்மையாக பேசுவது. முகமலர்ச்சியோடு சந்திப்பது.
இவையும் நல்ல குணங்கள். சிலர், நல்ல குணங்களை ஒன்றில் வைத்துவிட்டு, ஒன்றில் மறந்து விடுகிறார்கள். அல்லாஹு தஆலா எதையெல்லாம் நல்ல குணங்களாக சொன்னானோ, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நல்ல குணங்கள் என்று பட்டியலிட்டார்களோ, அவற்றை கற்று, அவற்றை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த நல்ல குணங்களுக்காக அவர்கள் செய்தது துஆ.
இரண்டாவது, அவர்களே அதற்காக முயற்சி செய்து இருக்கிறார்கள். அந்த நல்ல குணங்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னைத்தானே கட்டுப் படுத்தி இருக்கிறார்கள். அதற்காக முயற்சி செய்திருக்கிறார்கள்.
நம்மிடத்தில் இருக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை, யாராவது நமக்கு நம்முடைய குணங்களில் சிலவற்றை கூறி, ஏதாவது நமக்கு நஸிஹத் செய்தால் நமக்கு பிடிக்காது. அவ்வளவுதான். அவர் நம்முடைய நண்பர்களிடையே வெறுப்பான நண்பராக ஆகிவிடுவார்.
உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்; என்னுடைய நண்பர்களிலேயே எனக்கு இக்லாஸான நண்பர் யார் என்றால், என்னை அல்லாஹ்வுக்காக நேசிக்கக் கூடிய நண்பர் யார் என்றால், என்னுடைய தவறை எனக்கு சொல்லிக் காட்டுபவர். என்னுடைய குறையை எனக்கு உணர்த்தக்கூடியவர்.
இன்று, நம்முடைய கலாச்சாரத்தில் அப்படியே நேர் மாற்றம். யார், நம்மை பொய்யாக புகழ்கின்றார்களோ அவர்களுடைய புகழ்ச்சியை பார்த்து ஏமாந்து விடுகிறோம்.
யார், நம்முடைய நன்மையை நாடி நம்முடைய தவறுகளை நமக்கு சுட்டிக் காட்டி நமக்கு உணர்த்துகின்றார்களோ அவருக்கு நாம் ஒரு முத்திரை வைத்து இருக்கிறோம். இவருக்கு நான் வேண்டாதவர். எனவேதான் என்னுடைய குறைகளை சொல்லிக் காட்டுகின்றார். இவருக்கு என் மீது விருப்பம் இல்லை. எனவே, இவர் என்னை கண்டிக்கிறார்.
அன்பானவர்களே! அடுத்து நன்மையின் தட்டுகளில் கணக்க வைக்கக்கூடிய அமல்களில் ஒன்றை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
«مَنْ تَبِعَ جَنَازَةً حَتَّى يُصَلَّى عَلَيْهَا، وَيُفْرَغَ مِنْهَا، فَلَهُ قِيرَاطَانِ، وَمَنْ تَبِعَهَا حَتَّى يُصَلَّى عَلَيْهَا، فَلَهُ قِيرَاطٌ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَهُوَ أَثْقَلُ فِي مِيزَانِهِ مِنْ أُحُدٍ»
யாரொருவர், ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்யப்படும் போது, அந்த ஜனாசாவோடு சொல்வாரோ அந்த வீட்டிலிருந்து ஜனாஸா கிளம்பும்போது அந்த ஜனாஸாவோடு வருகிறார். வந்து ஜனாஸாவை மஸ்ஜிதில் வைத்து தொழும்போது வந்து அந்த ஜனாஸாவுக்காக தொழுகிறார். அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு.
யார் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து வந்து, அந்த தொழுகையில் மட்டும் கலந்து கொண்டு, அடக்கத்தில் கலந்து கொள்ளாமல் சென்று விடுகிறார்களோ அவர்களுக்கு ஒரு கீராத் நன்மை உண்டு.
யார் தொழுகையிலும் அந்த ஜனாஸாவை அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு இரண்டு கீராத் நன்மை.
அறிவிப்பாளர் : உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21201.
கீராத் என்றால் என்ன? அரபு நாட்டில் ஒரு மரைக்கால். ஊர்ல ஒரு படி மாதிரியான ஒரு அளவு.
ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இங்கு கூறிய கீராத் என்பது, அவர்களே அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
நீங்கள் படி மரக்கால் என்று சொல்லக்கூடிய அந்த சின்ன அளவு இல்லை. நாளை மறுமையில் இந்த நன்மையை உங்களுடைய நன்மையின் தராசுத் தட்டில் வைக்கும் பொழுது உஹது மலையை தூக்கி வைத்தால், அது எவ்வளவு கனக்குமோ அதைவிட அதிக கனம் உடையதாக இருக்கும்.
ஒரு கீராத் என்பது உஹது மலையை விட கனமானது. அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவ்வளவு பெரிய நன்மையை தருகின்றான், ஒரு முஸ்லிமுடைய ஜனாஸாவில் கலந்து கொள்ளும்போது.
அடுத்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள்; அமல்களுடைய நன்மையின் தட்டுகளை கனக்க வைக்கக்கூடிய அமல்களில் ஒன்று, அல்லாஹ்வுடைய பாதையில் முஃமின்களுக்கு முஸ்லிம்களுக்கு மார்க்கத்திற்கு பயன் தரக்கூடிய விதத்தில் நம்முடைய செல்வத்தை வக்ஃபு செய்வது.
அதற்கு ஒரு உதாரணம் சொன்னார்கள்;
«مَنِ احْتَبَسَ فَرَسًا فِي سَبِيلِ اللَّهِ إِيمَانًا بِاللَّهِ وَتَصْدِيقًا بِوَعْدِهِ، فَإِنَّ شِبَعَهُ وَرِيَّهُ وَرَوْثَهُ وَبَوْلَهُ فِي مِيزَانِهِ يَوْمَ القِيَامَةِ»
யாரொருவர், ஒரு குதிரையை வாங்கி, அல்லாஹ்வுடைய பாதையில் வக்ஃபு செய்கிறாரோ, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக, அல்லாஹ்வுடைய வாக்கை உண்மை என்று ஏற்றவராக, யார் அல்லாஹ்வுடைய பாதையில் குதிரையை வக்ஃபு செய்கிறார்களோ, அந்த குதிரை சாப்பிடுவதும், அந்த குதிரை குடிக்கக்கூடிய அந்த தண்ணீர், அந்த குதிரையினுடைய விட்டை, அந்த குதிரையின் சிறுநீர் இவற்றின் அளவுக்கு நாளை மறுமையில் இவருடைய மீசான் அமலுடைய தட்டில் நன்மைகளாக நிரப்பப்படும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2853.
இப்படி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னும் பல அமல்களை நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். அந்த அமல்களை கற்று, நம்முடைய அந்த தராசுத் தட்டை கனப்படுத்தக்கூடிய, அந்த பாதையில் நாம் முன்னேறி கொண்டே செல்ல வேண்டும்.
நாளை மறுமையினுடைய அந்தக் காட்சி என்பது, ரொம்ப பயங்கரமாக இருக்கும் யாருடைய தட்டு கனக்குமோ, யாருடைய தட்டு லேசாகுமோ என்று எல்லோரும் திகில் அடைந்து கொண்டிருக்கக்கூடிய நாள் அந்த நாள்.
ஆகவேதான், அந்த நாளுடைய திகிலை பற்றி அல்லாஹ் சொல்லும் போது, இதற்கு முன்பு அப்படிப்பட்ட ஒரு திகில், அப்படிப்பட்ட ஒரு திடுக்கம் உலக மக்கள் யாருக்கும் ஏற்பட்டிருக்காது; யாரும் அப்படிப்பட்ட ஒரு திகிலை உணர்ந்திருக்க மாட்டார்கள் என்று. (அல்குர்ஆன் 21 : 103)
ஒரு பக்கம் சொர்க்கம் நெருக்கமாக்கி வைக்கப்பட்டு இருக்கும். நரகம் ஒரு பக்கம் கொண்டுவரப்பட்டு கொண்திருக்கும். இன்னொரு பக்கம், நல்லவர்கள் தீயவர்கள் என்பதாக பிரிக்கப்பட்டு இருப்பார்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் யாருடைய அமல்களின் நன்மையின் தட்டு கனமாக இருக்கின்றதோ அவர்கள் தான் மகிழ்ச்சியாளர்கள். அவர்களுடைய ஏடு தான் வலது கரத்தில் கொடுக்கப்படும்.
அதற்கு பிறகுதான் அவரிடத்தில் லேசான விசாரணை செய்யப்படும். சந்தோஷமாக தனது குடும்பத்தாரிடத்தில் செல்வார்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா விடத்தில் அதிகமதிகம் துஆ செய்வோமாக! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொல்லிக் காண்பிப்பது போன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்லும் போது துஆ செய்வார்கள்.
«بِسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَأَخْسِئْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى»
என் இறைவா! அல்லாஹ்வே, உன்னுடைய பெயரை கொண்டு என்னுடைய விலாவை படுக்கையில் வைத்தேன். அல்லாஹ்வே! என்னுடைய பாவங்களை எனக்கு மன்னிப்பாயாக! என்னுடைய ஷைத்தானை கேவலப்பட வைப்பாயாக. நான் யாரிடத்தில் கடன் வாங்கி அமானிதத்தை வைத்திருக்கின்றேனோ அந்த அமானிதங்களை எல்லாம் நான் நீ விடுவிக்க வைப்பாயாக. (அதாவது அந்த கடன்களை அழகிய முறையில் நான் நிறைவேற்றுவதற்காக உதவி செய்வாயாக.) என்னுடைய மீஸான் என்னுடைய தராசு தட்டை கணம் ஆக்குவாயாக! உயர்ந்த நண்பர்களோடு என்னை சேர்த்து வைப்பாயாக!
அறிவிப்பாளர் : அபுல் அஸ்ஹர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 5054.
உயர்ந்த நண்பர்கள் யார்? கண்ணியத்திற்குரிய உயர்வான சங்கைமிக்க நல்லவர்களான அந்த மலக்குகளோடு அல்லாஹ் என்னை சேர்த்து வைப்பாயாக!
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக! மறுமையில் ஏமாறுவதை விட்டும், நஷ்டமடைவதை விட்டும், நம்முடைய நல்ல அமல்கள் தட்டுகள் கனமாகி, அல்லாஹ்வுடைய சோதனைக்கு ஆளாகுவதை விட்டும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நமது குடும்பத்தார்களையும் உலக முஸ்லிம்களையும் பாதுகாப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " خَلَّتَانِ لَا يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الجَنَّةَ، أَلَا وَهُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ: يُسَبِّحُ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُهُ عَشْرًا، وَيُكَبِّرُهُ عَشْرًا "، قَالَ: فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهَا بِيَدِهِ، قَالَ: «فَتِلْكَ خَمْسُونَ، وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي المِيزَانِ، وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ تُسَبِّحُهُ وَتُكَبِّرُهُ وَتَحْمَدُهُ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ فِي المِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي اليَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ»؟ قَالُوا: فَكَيْفَ لَا نُحْصِيهَا؟ قَالَ: " يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ وَهُوَ فِي صَلَاتِهِ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، حَتَّى يَنْفَتِلَ، فَلَعَلَّهُ أَلَّا يَفْعَلَ، وَيَأْتِيهِ وَهُوَ فِي مَضْجَعِهِ، فَلَا يَزَالُ يُنَوِّمُهُ حَتَّى يَنَامَ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»، وَقَدْ رَوَى شُعْبَةُ، وَالثَّوْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، هَذَا الحَدِيثَ، وَرَوَى الأَعْمَشُ، هَذَا الحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ مُخْتَصَرًا وَفِي البَابِ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، وَأَنَسٍ، وَابْنِ عَبَّاسٍ (سنن الترمذي- 3410) [حكم الألباني] : صحيح
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/