HOME      Khutba      மீஸான் அமர்வு 2-4 | Tamil Bayan - 474   
 

மீஸான் அமர்வு 2-4 | Tamil Bayan - 474

           

மீஸான் அமர்வு 2-4 | Tamil Bayan - 474


மீஸான்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மீஸான் (அமர்வு 2-4)
 
வரிசை : 474
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 13-10-2017 | 23-01-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து வாழுமாறு, மறுமையை முன்வைத்து வாழுமாறு, நல்ல அமல்களில் முன்னேறுமாறு, பாவங்களை விட்டும் எல்லா விதமான குற்றங்கள், தவறுகள், மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியங்களை விட்டு விலகியிருக்குமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது பாவங்களை மன்னித்து நன்மைகளில் நம்மை முன்னேற வைத்து பாவங்களை விட்டு நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹ்வுடைய அருளிலும் அன்பிலும் எப்பொழுதும் நிலைத்திருக்கின்ற நல்லோரின் கூட்டத்தில் என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
சென்ற ஜும்ஆவில் மறுமையை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கூறினோம். மறுமையின் ஒவ்வொரு நிலையும் மிகவும் கஷ்டமான நிலை தான். அந்த காட்சியைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.
 
خُشَّعًا أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُنْتَشِرٌ
 
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் வெளியேறுவார்கள். (அல்குர்ஆன் 54 : 7)
 
அந்த நாளின் திடுக்கிடக்கூடிய காட்சியை அல்லாஹு தஆலா மிக எச்சரித்து கூறுகிறான்,
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ (1) يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ 
 
மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். (அல்குர்ஆன் 22 : 1)
 
அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (அல்குர்ஆன் 22 : 1,2)
 
فَكَيْفَ تَتَّقُونَ إِنْ كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا (17) السَّمَاءُ مُنْفَطِرٌ بِهِ كَانَ وَعْدُهُ مَفْعُولًا
 
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள். அதில் வானம் பிளந்து விடும்; அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும். (அல்குர்ஆன் 73 : 17,18)
 
அந்த மறுமையின் அமளிகளில் துன்பம் நிறைந்த அந்த காட்சிகளில் ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் நம்முடைய அமல்கள் நிறுக்கப்படக் கூடிய அந்த காட்சி.
 
தராசை அல்லாஹ் கொண்டு வந்து வாழ்நாளெல்லாம் ஒரு மனிதன் பருவ வயதை அடைந்ததிலிருந்து காலை, மாலை, தனிமை, சபை, பொருளாதாரம், வணக்க வழிபாடு, குடும்பம், சமூகம், பேசியது, நினைத்தது, சொன்னது, வாங்கியது இப்படி அனைத்தையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கே கொண்டு வருவான்.
 
அந்த தராசு தட்டில் வைக்கப்படும். பிரித்து பிரித்து வைக்கப்படும். அதை பிரிப்பதற்கு வானவர்களுக்கு அவகாசம் தேவையில்லை, அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கு அவகாசம் தேவையில்லை.
 
وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ 
 
தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2 : 202)
 
குர்ஆனுடைய நூற்றுக் கணக்கான வசனங்களை படித்துப் பாருங்கள். அல்லாஹு தஆலா கூறுகிறான், விசாரிப்பதில் மிக விரைவானவன். அவனுடைய அந்த ஏட்டிலிருந்து எதுவும் மறைந்து விடாது. அல்லாஹு தஆலா மனிதனுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடிய அந்த ஏட்டிலிருந்து மனிதனின் எந்த செயலும் மறைந்து விடாது.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَاوَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
 
மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.   (அல்குர்ஆன் 18 : 49)
 
வசனத்தின் கருத்து : பேசியதிலிருந்து, நினைத்ததிலிருந்து, சொன்னதிலிருந்து, செய்ததிலிருந்து எல்லாம் கண்ணுக்கு முன்னால் அங்கே இருக்கும். அந்த எழுதப்பட்ட ஏடுகளில் ரெக்கார்டாக பதியப்பட்டிருக்கும்.
 
மனிதன் அந்த புத்தகத்தை பார்த்து கூறுவான், இது என்ன புத்தகம்! எனது செயலின் சிறியதை பெரியதை என்று எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் இந்த புத்தகம் பதிவு செய்து வைத்திருக்கிறதே! என்று மனிதன் புலம்புவான். அல்லாஹு தஆலா கூறுவான், உனது ரப்பு அநியாயம் செய்யமாட்டான். 
 
அன்பானவர்களே! மறுமையுடைய அந்த தராசு தட்டில் நம்முடைய அமல்கள் கனக்க வேண்டும். அதற்காக நாம் துஆக்கள் செய்ய வேண்டும். அந்த ஒரு தேட்டத்தில், குறிக்கோளில் அமல்களை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், விசாரனையில் பல கட்டங்கள் இருக்கின்றன.
 
முக்கியமான கட்டம் நன்மையின் தட்டுகள் கனக்க வேண்டும். அதற்கு பிறகு தான் அடுத்தடுத்த நிலைகளில் அவனுடைய வெற்றி முடிவு செய்யப்படும். நன்மையின் தட்டுகள் இலேசாகி விட்டால் முடிந்தது அவ்வளவு தான். அதற்கு பிறகு அவனுடைய நிலைமை அல்லாஹ் நாடினாலே தவிர அவ்வளவு தான்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதற்காகவே துஆக்களை செய்திருக்கிறார்கள். மறுமையில் நன்மையின் தட்டுகள் கனக்க வேண்டும் என்பதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்ததை பார்க்கிறோம். 
 
இரவில் தூங்கும் பொழுது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்பொழுதுமே மறுமையை நினைத்து நிறைய துஆக்கள் செய்திருக்கிறார்கள்.
 
இரவினுடைய துஆக்களை நீங்கள் பார்த்தால் தெரியும். அதில் ஒரு துஆ,
 
«رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ - أَوْ تَجْمَعُ - عِبَادَكَ»
 
என் இறைவா!  உன் அடியார்களை நீ ஒன்று சேர்க்கும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! 
 
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 709.
 
இது ஒரு முக்கியமான துஆ. இன்னொரு துஆவை கவனியுங்கள்.
 
«بِسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَأَخْسِئْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى»
 
அல்லாஹ்வுடைய பெயரைக் கொண்டு எனது விலாவை இந்த படுக்கையின் மீது வைக்கிறேன். யா அல்லாஹ்! என் பாவத்தை மன்னிப்பாயாக! எனது ஷைத்தானை இழிவுபடுத்துவாயாக! 
 
அதாவது என் மீது அவனுக்கு ஆதிக்கம் கொடுத்து விடாதே! என் மீது அவனுக்கு துணிவை கொடுத்து விடாதே! என்னை வழிகெடுப்பதற்கு உண்டான அதிகாரத்தை அவனுக்கு கொடுத்து விடாதே! யா அல்லாஹ்! எனது அடமானங்களை எல்லாம் நீ விடுவிப்பாயாக!
 
அறிவிப்பாளர் : அபுல் அஸ்ஹர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4345, 5054.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யாரிடத்திலும் கடன் வாங்கினால் அதற்குரிய அமானிதத்தை வைத்து விட்டு கடன் வாங்குவார்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட நம்பிக்கைக்குரிய ஒருவர் இருக்கிறார்களா? அவர்களை விட வாக்கை பேணக்கூடியவர்கள் யாரும் இருக்கிறார்களா?
 
அத்தகைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யாரிடத்திலும் கடன் வாங்கினால் அந்த கடனின் மதிப்பிற்குரிய அமானித பொருளை கொடுத்து விட்டு கடன் வாங்குவார்கள். 
 
எவ்வளவு நாணயம் பாருங்கள். நான் யாரிடத்திலாவது அமானிதம் வைத்து விட்டு கடன் வாங்கினால், யா அல்லாஹ்! அந்த அமானிதத்தை மீட்டி விடு. அதற்கு என்ன அர்த்தம்? அந்த கடனை அழகிய முறையில் அவருக்கு கொடுப்பதற்கு எனக்கு உதவி செய்.
 
மற்றவர்களை பற்றி நான் பேச வரவில்லை. இன்று, முஸ்லிம்களுடைய நிலையே மோசமாகிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
கடன் வாங்கும் பொழுது பணிவு, குழைந்து பேசுவது, அன்பாக பேசுவது, ஒரு நாளைக்கு பல முறை சந்திப்பது, தேடி தேடி வருவது. கடன் வாங்கியதற்கு பிறகு அவ்வளவு தான், நிலைமை மாறிவிடுகிறது.
 
கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரிடத்தில் பிச்சை கேட்கக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார். கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரிடத்தில் தனது கடனை வசூலிக்க வேண்டுமென்றால் பிச்சை கேட்பதை போன்று கெஞ்ச வேண்டும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! 
 
இது மிகப் பெரிய ஒரு கெட்ட குணங்களில் ஒன்று. ஒரு மனிதனுடைய உள்ளத்தில் ஈமான் செத்துவிட்டது. மறுமையின் அச்சம் அடியோடு இல்லாமல் போய்விட்டது. நாளை ரப்பை சந்திக்க வேண்டுமென்ற பயம் அவனுடைய உள்ளத்திலிருந்து துடைத்தெடுக்கப்பட்டது என்பதற்குரிய அடையாளம். 
 
ஒருவன் கடன் வாங்கியதற்கு பிறகு அந்த கடனை நிறைவேற்ற வேண்டுமென்ற கவலை இல்லாமல் இரவில் தூங்கினால் அவனுக்கு மரணத்தின் பயமும் இல்லை. மறுமையின் பயமும் இல்லை.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுத தொழுகைகளில், அவர்கள் கேட்ட துஆக்களில் மிக அதிகமான துஆ, அத்தஹிய்யாத்தில் தஷஹ்ஹுத் முடிந்து ஸலவாத் முடிந்து அவர்கள் கேட்கின்ற துஆ.
 
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ»
 
யா அல்லாஹ்! பாவத்தை விட்டும் கடனை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். மனைவிமார்கள் கேட்கிறார்கள், அல்லாஹ்வுடைய தூதரே! இப்படி நீங்கள் இந்த இரண்டை விட்டும் பாதுகாவல் தேடுகிறீர்களே? 
 
ஆம், அன்பு மனைவியே! பாவம் செய்தால் அல்லாஹ்விற்கு முன்னால் இழிவு, கடன் வாங்கினால் மனிதர்களுக்கு முன்னால் இழிவு. 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 789, 2397.
 
எப்படி யோசித்திருக்கிறார்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!
 
இன்று ஒரு மோசமான நிலைக்கு சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! கடன் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக பேசமாட்டார்கள். ஒருவர் ஒருவருக்கு கடன் கொடுத்திருப்பார்.
 
அந்த கடனை அவர் வசூல் செய்யும் பொழுது பல முறை கேட்டதற்கு பிறகு அவர் ஏதாவது கடினமாக கேட்டிருந்தால் யாருக்கு இப்பொழுது எதிராக பேசுவார்கள்? கடன் கொடுத்தவர் கேட்கக்கூடிய விதத்தில் இருக்கக் கூடியதை விமர்சனம் செய்வார்கள். கடன் வாங்கியவர் இத்தனை நாட்களாக தள்ளிப் போட்டு ஏமாற்றுகிறானே, அதற்கு கண்டித்து பேசமாட்டார்கள்.
 
இன்று, இதற்காக பல இயக்கங்கள் கூட இருக்கின்றன. பஞ்சாயத்து என்று சென்றுவிட்டால் போதும், அவ்வளவு தான். யார் தன்னிடத்தில் முதலில் கேஸை கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு சப்போர்ட். அவ்வளவு தான். 
 
நீதத்திற்கு சப்போர்ட் அல்ல, நான் ஒருவரிடத்தில் கடன் வாங்கினேன், அவர் இப்பொழுது என்னை நெருக்குகிறார் என்றால் பஞ்சாயத்து என்ன செய்ய வேண்டும் ?
 
உன்னிடத்தில் என்ன சொத்து இருக்கிறது? என்ன நகை வைத்திருக்கிறாய்? உன் மனைவியிடத்தில் நகை இருக்கிறதா? உன் பிள்ளையிடத்தில் நகை இருக்கிறதா? வாங்கிய கடனை திரும்ப கொடு என்றல்லவா கூற வேண்டும். கொடுத்தவரை அழைத்து அவர் கஷ்டத்தில் இருக்கிறார், கேட்காதீர்கள் என்பார்கள்.
 
அவருடைய கஷ்டத்தை பார்த்தாயா நீ? கொடுத்தவர் கஷ்டத்தில் இருந்து செத்தாலும் பரவாயில்லை. 
 
மற்றவர்களை பற்றி நான் கூறவில்லை. முஸ்லிம்களை பற்றி கூறுகிறேன். என்ன தகுதியில் பஞ்சாயத்து செய்கிறார்கள்? என்ன நீதத்தின் அடிப்படையில், என்ன அறிவின் அடிப்படையில்? 
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு யஹூதியிடத்தில் கடன் வாங்கினார்கள். அதற்குரிய அமானிதத்தை வைத்து விட்டு கடன் வாங்கினார்கள்.
 
மூன்று நாட்கள் கழித்து தான் அந்த தவனை வருகிறது. ஆனால், அந்த யஹூதி வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். மூன்று நாட்களுக்கு முன்பாகவே வந்துவிட்டார். 
 
முஹம்மதே! கடன் வாங்கியிருந்தாய். ஏன் கொடுக்கவில்லை? நீங்கள் இப்படி தான் வாங்கிக் கொண்டு காலத்தாமதம் செய்வீர்கள் என்று கோபமாக பேசியது மட்டுமல்ல. உமர் இருக்கக் கூடிய மஜ்லிஸில் நபியுடைய சட்டையை பிடித்து உளுக்கிவிட்டார்.
 
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள். யா ரஸூலுல்லாஹ்! விடுங்கள், இந்த யஹூதியின் கதையை முடித்து விடுகிறேன் என்று. 
 
இன்றைய காலகட்டமாக இருந்தால் என்ன நடந்திருக்கும்? ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யாரை கண்டித்தார்கள்? 
 
தவணை வரவில்லை, மூன்று நாட்களுக்கு பிறகு தான் தவணை வர இருக்கிறது. ஒரு மஜ்லிஸில் இருக்கும் பொழுது நபியிடத்தில் அவர்கள் தான் அப்பொழுது மதினாவின் மன்னராக இருக்கிறார்கள். 
 
ஒரு சாதாரண மனிதன், அதுவும் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கக் கூடிய சமுதாயத்தில் கடன் வாங்கியிருக்கிறார்கள். அவன் கடன் கேட்க வரும்பொழுது இப்படி ஒரு அவமரியாதையாக நடந்து கொள்கிறார்.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த யஹூதியை முரைத்துக் கூட பார்க்கவில்லை, கடின முகத்தோடு பார்க்கவில்லை. 
 
மாறாக, உமரை பார்த்து கூறினார்கள், உமரே! நீ இப்படி நடந்து கொள்ளக் கூடாது. அவர் கடன் கொடுத்திருக்கிறார். அவருக்கு உரிமை இருக்கிறது. நீ மென்மையாக நடக்க வேண்டும்.
 
ஆம், இந்த இடத்தில் நீ இப்படி செய்திருக்கலாம். என்னை பார்த்து அல்லாஹ்வுடைய தூதரே! அவர் தவணை வந்துவிட்டது என்று கூறுகிறாரே, அழகிய முறையில் அந்த கடனை திரும்ப கொடுத்து விடுங்கள் என்று நீ என்னிடத்தில் கூறி, பிறகு அந்த யஹூதியை பார்த்து, யஹூதியே! நீ நபியிடத்தில் கொஞ்சம் அன்பாக கேட்கலாமே, என்று நீ கூறியிருக்க வேண்டும்.
 
அவர் கடிந்து கொண்டதற்காக அவரை கொலை செய்து விடட்டுமா? என்று கேட்கக் கூடாது. 
 
நூல் : முஃஜம் கபீர் – தப்ரானி, எண் : 5002, 137.
 
அதற்கு பிறகு, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதருடைய கடனை அடைப்பதற்கு ஏற்பாடு செய்து உமரிடத்தில், நீங்கள் அன்சாரியிடத்தில் செல்லுங்கள். அவரிடத்தில் இவ்வளவு பேரீத்தம் பழங்கள் இருக்கின்றன. அவரிடத்தில் அதை வாங்கி கொடுத்து விடுங்கள். அதற்கு பிறகு கொஞ்சம் அதிகமாக அந்த காலத்தில் ஒரு மறைக்கால், இரண்டு மறைக்கால் என்ற அளவிற்கு எக்ஸ்ட்ரா கொடுக்க சொல்கிறார்கள்.
 
அந்த யஹூதியிடத்தில் அழைத்து சென்று அன்சாரியிடத்தில் அந்த பழங்களை பெற்று அடைக்கிறார்கள். 
 
என்ன வாங்கினார்களோ அதை கொடுத்துவிட்டார்கள். அதற்கு பிறகு எக்ஸ்ட்ரா ஒன்று அல்லது இரண்டு மறைக்கால் கொடுக்கிறார்கள். அப்பொழுது அந்த யஹூதி கேட்கிறார், இது நான் கொடுத்த அளவை விட அதிகமாக கொடுக்கிறீர்களே? இது எதற்காக? என்று.
 
உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள், நான் உன்னை மிரட்டினேன் அல்லவா? அதற்கு உனது உள்ளத்தை குளிர வைப்பதற்காக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை அதிகமாக கொடுக்க சொன்னார்கள். 
 
அந்த நேரத்தில் அந்த யஹூதி ஷஹாதா கூறுகிறார். உமருக்கு புரியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு வரை இவ்வளவு கராராக நடந்து கொண்ட யஹூதி ஷஹாதா கூறுகிறாரே! என்ன ஏற்பட்டது உனக்கு?
 
அதற்கு அந்த யஹூதி கூறுகிறார், உமரே! ரஸூலுடைய கடனுடைய தவணை இன்னும் மூன்று நாள் வரை இருக்கிறது. நான் உங்களது தூதரை சோதிக்க விரும்பினேன், அவருடைய பொறுமையை சகிப்புத்தன்மையை சோதிக்க விரும்பினேன். முட்டாள்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் அவர் சகிப்பாளராக தான் இருப்பார் என்று தவ்ராத்தில் எழுதப்பட்டிருந்தது.
 
உண்மையான இறுதி நபியின் அடையாளங்களில் ஒன்றாக எழுதப்பட்டிருக்கிறது; முட்டாள்கள் முரட்டுத்தனமாக அவரிடத்தில் நடுந்து கொண்டாலும், அந்த நபி சகிப்போடு தான் செயல்படுவார் என்பதாக. 
 
இதை நான் சோதிக்க விரும்பினேன். அல்ஹம்துலில்லாஹ் அந்த அடையாளம் அவரிடத்தில் நிறைவாக இருக்கிறது. அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று கூறினார். பிறகு, உமர் அவர்கள் ரஸூலுல்லாஹ்விடத்தில் அவரை அழைத்து வருகிறார்கள். 
 
நூல் : முஃஜம் கபீர் – தப்ரானி, எண் : 5002, 137.
 
அன்பானவர்களே! இப்படி ஒரு சமூகத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச் சென்றார்களே தவிர, கடன் வாங்கி விட்டு தலைமறைவாகக்கூடிய சமுதாயத்தை அல்ல, ஏமாற்றக் கூடிய ஒரு சமுதாயத்தை அல்ல. கடன் கொடுத்தவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கக் கூடிய கூட்டத்தை அல்ல. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
மறுமையின் அந்த தராசு தட்டில் மனிதனுடைய அமல்களெல்லாம் வைக்கப்படும். அந்த தராசு தட்டை கனப்படுத்துவதற்காகவே நாம் அமல் செய்ய வேண்டும். 
 
அப்பொழுது தான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த துஆவை உங்களுக்கு கூறினேன். என்னுடைய அடமானங்களை எல்லாம் அல்லாஹ்வே நீ விடுவித்து கொடுப்பாயாக!
 
அந்த அடமானத்தை வைத்து அவர் என்ன செய்ய முடியும் கூறுங்கள். அவர் நமக்கு பணமாக கொடுத்தார், நாணயமாக கொடுத்தார். அதை அவரிடத்தில் கொடுப்பது தான் அழகே தவிர, அதை விற்று நீ சம்பாதித்துக் கொள் என்பதாக கூறுவது, அந்த கடன் கொடுத்தவருடைய மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதை யோசித்துப் பாருங்கள்!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்து துஆ செய்தார்கள். 
 
وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى
 
என்னுடைய மீஸான் மறுமையின் அந்த தராசு தட்டை யா அல்லாஹ்! நீ கனப்படுத்துவாயாக! மிக உயர்ந்த நண்பர்களின் கூட்டத்தில் என்னை ஆக்கி வை.
 
அறிவிப்பாளர் : அபுல் அஸ்ஹர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4345, 5054.
 
அந்த மறுமையின் தராசு தட்டை கனமாக்கக் கூடிய அமல்களில் அதிகமான அமல்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.
 
அவற்றை நாம் கற்று, பேணுதலாக செய்து வர வேண்டும். அவற்றில் சில விஷயங்களையாவது நாம் தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையில் பேணுதலாக, நம்முடைய பழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 
 
ஒரு சில விஷயங்களை நாம் தொடர்ந்து பார்ப்போம்.  அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஸ்.
 
إِنَّ نَبِيَّ اللَّهِ نُوحًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ لِابْنِهِ: إِنِّي قَاصٌّ عَلَيْكَ الْوَصِيَّةَ: آمُرُكَ بِاثْنَتَيْنِ، وَأَنْهَاكَ عَنِ اثْنَتَيْنِ، آمُرُكَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّ السَّمَوَاتِ السَّبْعَ، وَالْأَرْضِينَ السَّبْعَ، لَوْ وُضِعَتْ فِي كِفَّةٍ، وَوُضِعَتْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ، رَجَحَتْ بِهِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَلَوْ أَنَّ السَّمَوَاتِ السَّبْعَ ، وَالْأَرْضِينَ السَّبْعَ، كُنَّ حَلْقَةً مُبْهَمَةً، قَصَمَتْهُنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மரண நேரம் வந்த பொழுது தனது மகனை அழைத்து கூறினார்கள். 
 
மகனே! நான் உனக்கு உபதேசம் செய்யப் போகிறேன். 
 
(நபிமார்கள் மரண நேரத்தில் உபதேசம் செய்திருக்கிறார்கள். நம்முடைய மக்கள் உபதேசம் மரண நேரத்தில் என்னென்ன உபதேசம் செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் இதற்காக ஓரு சர்வே வேண்டுமானால் செய்து பாருங்கள்.
 
இன்றைய கால கட்டத்தில் மரணிக்கக் கூடிய ஒரு மனிதர் என்ன உபதேசம் செய்கிறார் என்று. ஏதாவது ஒரு  பத்து வீடாவது சென்று ஒரு சர்வே எடுங்கள். ஒரு வீட்டிலாவது மவ்த் அங்கே நடந்திருக்கும். நபிமார்களுடைய உபதேசத்தையும் இப்பொழுது பாருங்கள்.)
 
நூஹ் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள், மகனே! நான் உனக்கு உபதேசம் செய்யப் போகிறேன். இரண்டு விஷயங்களை நான் உனக்கு கட்டாயமாக சொல்லித் தருகிறேன்.
 
கண்டிப்பாக நீ அதை செய். இரண்டு விஷயங்களை நீ செய்யாதே! இரண்டு விஷயங்களை நான் உனக்கு ஏவுகிறேன். இரண்டு விஷயங்களை நான் உனக்கு தடுக்கிறேன்.
 
1. லாயிலாஹ இல்லல்லாஹ். இதை நான் உனக்கு ஏவுகிறேன். ஈமான் கொண்ட தனது மகனுக்கு நபி கூறுகிறார்கள். லாயிலாஹ இல்லல்லாஹ்வை உனக்கு ஏவுகிறேன். ஏன் தெரியுமா? ஏழு வானங்கள் ஒரு தட்டில் வைக்கப்பட்டு, லாயிலாஹ இல்லல்லாஹ் ஒரு தட்டில் வைக்கப்பட்டால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற தட்டு அந்த தட்டுகளை எல்லாம் தூக்கி விடும்.
 
மேலும் கூறினார்கள், ஏழு வானங்கள், ஏழு பூமிகள் ஒரு உறுதியாக வளையமாக இருந்தாலும் இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் அவற்றை உடைத்து விடும். 
 
நம்முடைய மறுமையின் தராசு தட்டை கனக்க வைக்கக் கூடிய அமல்களில் ஒன்று, ஈமான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்று ஈமானோடு சொல்வது.
 
மேலும், அந்த ஈமானை உறுதிபடுத்தக் கூடிய இந்த திருக்கலிமாவை நம்முடைய வாழ்க்கையில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், நமக்கு ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் இரவு, பகல், காலை, மாலை, தூங்குகின்ற நேரம், விழிக்கின்ற நேரம், பயணம் என்று இதை அதிகமாக சொல்லிக் கொண்டே இருப்பது.
 
மேலும், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 
 
وَسُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فَإِنَّهَا صَلَاةُ كُلِّ شَيْءٍ، وَبِهَا يُرْزَقُ الْخَلْقُ
 
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்ற திக்ரையும் அதிகமாக கூறுங்கள். இந்த  சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்பது உலகத்திலுள்ள எல்லா பொருள்களும் இந்த தஸ்பீஹை கொண்டு தான் தொழுகின்றன.
 
(அல்லாஹ் கூறுகிறான் அல்லவா, வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் அல்லாஹ்வை தொழுகின்றன என்று‍. அவற்றினுடைய தொழுகை என்ன தெரியுமா? சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்பதை சொல்லிக் கொண்டே இருக்கின்றன.)
 
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்ற இந்த திக்ரின் மூலமாக படைப்புகளுக்கு ரிஜ்க் கொடுக்கப்படுகின்றன. 
 
அடுத்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள், இரண்டு விஷயங்களை விட்டு நான் உங்களை தடுக்கிறேன். 
 
1. ஷிர்க் இணை வைத்தலை விட்டு நான் உன்னை தடுக்கிறேன்.
 
2. பெருமையை விட்டு நான் உன்னை தடுக்கிறேன்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : எண் : 6583.
 
இணை வைத்தலுக்கு பிறகு அழிவில் தள்ளக்கூடிய உள்ள நோய்களில் ஒன்று பெருமை. எதனால் வந்தாலும் சரி, ஒரு நபிக்கே அந்த நபித்துவத்தாலும் பெருமை அவருக்கு இருக்கக் கூடாது. 
 
இந்த உலகத்தில் மனிதர்களில் பெருமை கொள்வதற்கு தகுதியானவர் ஒருவர் இருப்பாரேயானால் நபிமார்களை விட யாரும் இருக்க முடியாது.
 
ஏனென்றால், உண்மையில் அவர்கள் உத்தமர்கள், சுத்தமானவர்கள், பரிசுத்தமானவர்கள், நல்லவர்கள், நல்ல குணங்களை உடையவர்கள், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஒழுக்கமானவர்கள். 
 
அவர்களுக்கு அல்லாஹ்வுடைய கட்டளை என்ன? பெருமையடிக்காதீர்கள். தன்னுடைய உயர்வுகளை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பட்டியல் போட்டுக் கொண்டே வருவார்கள்.
 
ஒவ்வொரு உயர்வையும் சொல்லிவிட்டு கூறுவார்கள், 
 
«أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ القِيَامَةِ وَلَا فَخْرَ، وَبِيَدِي لِوَاءُ الحَمْدِ وَلَا فَخْرَ، وَمَا مِنْ نَبِيٍّ يَوْمَئِذٍ آدَمُ فَمَنْ سِوَاهُ إِلَّا تَحْتَ لِوَائِي، وَأَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الأَرْضُ وَلَا فَخْرَ»
 
நான் தற்பெருமைக்காக கூறவில்லை என்று. மறுமையில் அல்லாஹ் எனக்கு ஹம்துடைய கொடியை கொடுப்பான், நான் இதை தற்பெருமைக்காக கூறவில்லை. முன்னோர், பின்னோருடைய இல்மை அல்லாஹ் எனக்கு கொடுத்தான், பெருமைக்காக கூறவில்லை.
 
ஆதமுடைய சந்ததிகளின் தலைவராக அல்லாஹ் என்னை ஆக்கியிருக்கிறான், நான் தற்பெருமைக்காக இதை கூறவில்லை. 
 
அறிவிப்பாளர் : அபூசயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3615.
 
ஏனென்றால், அல்லாஹ் கொடுத்த உயர்வை எடுத்துக்கூறுவது தவறு இல்லை.
 
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
 
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. (அல்குர்ஆன் 93 : 11)
 
இது அல்லாஹ்வுடைய கட்டளை. மார்க்கத்தில் உள்ள ஒன்று. அதை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துக் கூறும் பொழுது கூட மக்கள் தன்னுடைய பெருமையை வெளிப்படுத்துவதற்காக தான் கூறுகிறேன் என்று எண்ணிவிடக் கூடாது. 
 
அப்படி பெருமை பேசுவது மார்க்கத்தில் யாருக்கும் அனுமதி இல்லை என்பதை உணர்த்துவதற்காக அல்லாஹ்வுடைய கட்டளைக்காக கூறுகிறேன். எனது பெருமைக்காக அல்ல என்று கூறுவார்கள்.
 
நம்முடைய மறுமையின் தட்டை கனப்படுத்தக்கூடிய அமல்களில் ஒரு முக்கியமான அமல், லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற தூய திருக்கலிமாவை அதிகமாக கூறுவது.
 
மேலும், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மற்றொரு ஹதீஸ். அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 
 
அல்லாஹ் தஆலா மறுமையில் ஒரு அடியானை படைப்பினங்களுக்கு முன்பாக கொண்டு வருவான். அந்த அடியானுடைய தொண்ணூற்றி ஒன்பது ஏடுகள் அவனுக்கு முன்னால் வைக்கப்படும்.
 
பார்வை எட்டக்கூடிய அளவுக்கு அவனுடைய அமல்களின் ஏடுகள் அப்படியே விரிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றிலும் அவனுடைய தவறான பாவமான காரியங்கள் பதியப்பட்டிருக்கும். 
 
அல்லாஹு தஆலா அந்த அடியானை பார்த்து கேட்பான். இதில் எதையாவது நீ மறுக்க முடியுமா? என்று.
 
பிறகு கேட்பான், உன்னுடைய அமல்களை பதிவு செய்வதற்காக நான் ஏற்படுத்திய பாதுகாவலர்களான, எழுத்தாளர்களான வானவர்கள் ஏதாவது இதில் தவறு செய்திருக்கிறார்களா? அநியாயம் செய்திருக்கிறார்களா? அதாவது, நீ செய்த நன்மைகளை பதியாமலும் நீ செய்யாத தீமையை எழுதியும் அப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா?
 
அவன் கூறுவான், அப்படி எதுவும் இல்லை. அல்லாஹ் கேட்பான், சரி, ஏதாவது நீ காரணம் சொல்லப் போகிறாயா? ஏதாவது உன்னிடத்தில் ஒரு சில நன்மைகள் இருக்கிறது என்பதாக நீ யோசித்துப் பார்க்கிறாயா? அந்த மனிதன் பேச முடியாமல் ஆகி விடுவான்.
 
அல்லாஹ்! உன் மீது சத்தியமாக, அப்படி என்னிடத்தில் இல்லை. அப்பொழுது அல்லாஹ் கூறுவான், இல்லை, ஒரு நன்மை உனக்காக என்னிடத்தில் இருக்கிறது. இன்று உன் மீது அநியாயம் இழைக்கப்படாது. ஒரு துண்டு சீட்டை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொண்டு வரும்படி கூறுகிறான்.
 
அதில் இந்த மனிதன் ஷஹாதா கூறிய அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹ் வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு என்று அவன் கூறிய அந்த தூய சாட்சியம் -வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை,  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் அவனுடைய தூதராக இருக்கிறார் என்று அவன் கூறிய அந்த ஷஹாதா அந்த துண்டில் இருக்கும்.
 
அதை கொண்டு வரும்படி அல்லாஹ் கூறுவான். அந்த மனிதன் பார்ப்பான். என்ன ஒரு துண்டை ரப்பு கொண்டு வரச் சொல்கிறான். கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் என்னுடைய பாவத்தின் ஏடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த துண்டு சீட்டு என்ன செய்யும்? என்பதாக. அவனுக்கு தெரியாது அதில் ஷஹாதா இருக்கிறது என்பதாக.
 
அல்லாஹ் கூறுவான், அந்த துண்டு சீட்டை நன்மையின் தட்டில் வையுங்கள் என்பதாக. அவ்வளவு தான். நன்மையின் தட்டில் வைத்தவுடன் கனமாகி கீழே இருந்த அந்த பாவத்தின் தட்டுகள் அப்படியே மேல் சென்று விடும். லாயிலாஹ இல்லல்லாஹ்வுடைய துண்டு அங்கே கனத்து விடும். அல்லாஹ்வுடைய பெயரோடு எந்த ஒன்றும் அதற்கு சமமாக முடியாது. (1)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 6994.
 
இப்படி நாம் பார்க்கும் பொழுது, இந்த தூய திருக்கலிமாவை நமது வாழ்க்கையில் எவ்வளவு அதிகமாக கூற வேண்டும், எவ்வளவு இதை நாம் நினைவு கூற வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றாட வாழ்க்கையில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
இன்று சிலர் பேசுவதாக கேள்விப் படுகிறோம். இப்படி அல்லாஹ்வுடைய பெயர்களையோ சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ் இவற்றை எல்லாம் திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நவீன மார்க்க பேச்சாளர்கள் அல்லது மார்க்க ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாக கேள்விப்படுகிறோம். 
 
கண்டிப்பாக அவர்கள் ஒன்று முட்டாள்களாக இருப்பார்கள் அல்லது மார்க்கத்தை புரியாத கிறுக்கர்களாக தான் இருப்பார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த திக்ரை அதிகமாக ஓதுங்கள் என்று கூறினார்களோ அதை ஒரு முறை கூறினால் போதும் திரும்ப திரும்ப கூறுவது எல்லாம் மார்க்கத்தில் இல்லை என்று கூறுவதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?
 
அதுபோன்று, நான்கு விஷயங்களை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லித் தருகிறார்கள்.
 
1. தஸ்பீஹ் -அல்லாஹ்வை அதிகமாக துதிப்பது.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்:
 
" كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيمِ "
 
இரண்டு வார்த்தைகள் கூறுவதற்கு மிக இலகுவானவை, மறுமையின் தராசு தட்டில் மிகவும் கனமானவை, ரஹ்மானுக்கு மிகவும் விருப்பமானவை. அவை, سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيمِ
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7563.
 
மேலும், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,
 
الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ
 
சுத்தமாக இருப்பது ஈமானுடைய ஒரு பெரிய பகுதியாகும். நீங்கள் الحمد لله என்று அல்லாஹ்வை புகழ்வது உங்களுடைய மறுமையின் தராசு தட்டை நிரப்பமாக்கிவிடும். அதில் ஏதாவது குறைகள், ஓட்டைகள் இருந்தால் இந்த الحمد لله என்பது மீஸானை நிரப்பமாக்கி விடுகிறது. (2)
 
அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல்அஷ்அரி  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 223.
 
மேலும், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 
 
«التَّسْبِيحُ نِصْفُ الْمِيزَانِ، وَالْحَمْدُ لِلَّهِ يَمْلَؤُهُ، وَالتَّكْبِيرُ يَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
 
அல்லாஹ்வை سبحان الله என்று புகழ்வது, மறுமையின் மீஸானுடைய சமப்பகுதியாக இருக்கும். الحمد لله என்ற தஸ்பீஹ் மீஸானை நிரப்பமாக்கி விடும். الله اكبر என்று கூறுவது வானம் பூமிக்கு இடையில் உள்ள எல்லா இடங்களையும் நன்மைகளால் நிரப்பி விடுகிறது.
 
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23073.
 
மேலும், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், 
 
لَخَمْسٌ مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّى فَيَحْتَسِبُهُ، وَالِدَاهُ
 
நாளை மறுமையில் ஐந்து காரியங்கள் அந்த தராசு தட்டை கனமாக்கி விடும். 
 
1. لا اله الا الله
 
2. سبحان الله
 
3. الحمد لله
 
4. الله اكبر
 
5. ஒரு மனிதனுடைய ஸாலிஹான குழந்தை இறந்து விடுகிறது. அல்லாஹ்விற்காக அவர் பொறுமையாக இருக்கிறார்.
 
இது அல்லாஹ்வுடைய நாட்டம், அல்லாஹ் இந்த குழந்தையை பொருந்தி கொள்வானாக! என்பதை தவிர, அநியாயமாக அல்லாஹ்வை பேசியோ, ஏசியோ, விதியை ஏசியோ, பேசியோ அவர் வார்த்தையை விட்டு விடாமல், அல்லாஹ்விற்காக நான் பொறுமை காக்கிறேன் என்று அவர் கூறுவாரே, அந்த ஒரு பொறுமை நாளை மறுமையில் தராசு தட்டை கனமாக்கி விடுகிறது.
 
எந்த குழந்தையின் இறப்பை இவர் சகித்துக் கொண்டாரோ அந்த குழந்தை இவருடைய நன்மையின் தட்டை கனப்படுத்தி விடுகிறது. 
 
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 15662.
 
இன்னும் பல விஷயங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கிறார்கள். அடுத்தடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம்.
 
இப்படியாக நம்முடைய கவலைகள், நம்முடைய சிந்தனைகள் நம்முடைய மறுமையின் வெற்றியில் இருக்க வேண்டும். அல்லாஹ்வை திருப்தி படுத்தி அந்த நன்மையின் தட்டுகளை கனப்படுத்தக்கூடிய அமல்களை சேகரிப்பதில், அதிகப்படுத்துவதில் இருக்க வேண்டும்.
 
பாவத்தின் தட்டுகளை கனப்படுத்துவதிலோ, அல்லாஹ்வை கோபமூட்டக் கூடிய காரியங்களிலோ நம்முடைய செயல்கள் அமைந்து விடக்கூடாது. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விற்கு பொருத்தமானதை செய்வதற்கும், அல்லாஹ்விற்கு வெறுப்பான விஷயங்களை விட்டு விடுவதற்கும் அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الطَّالْقَانِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ [ص:571] لَيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي عَامِرُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَسْتَخْلِصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا، كُلُّ سِجِلٍّ مَدَّ الْبَصَرِ، ثُمَّ يَقُولُ لَهُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَتْكَ كَتَبَتِي الْحَافِظُونَ؟ قَالَ: لَا، يَا رَبِّ، فَيَقُولُ: أَلَكَ عُذْرٌ، أَوْ حَسَنَةٌ؟ فَيُبْهَتُ الرَّجُلُ، فَيَقُولُ: لَا، يَا رَبِّ، فَيَقُولُ: بَلَى، إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً وَاحِدَةً، لَا ظُلْمَ الْيَوْمَ عَلَيْكَ، فَتُخْرَجُ لَهُ بِطَاقَةٌ، فِيهَا: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولُ: أَحْضِرُوهُ، فَيَقُولُ: يَا رَبِّ، مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ؟ فَيُقَالُ: إِنَّكَ لَا تُظْلَمُ "، قَالَ: «فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كِفَّةٍ» ، قَالَ: «فَطَاشَتِ السِّجِلَّاتُ، وَثَقُلَتِ الْبِطَاقَةُ، وَلَا يَثْقُلُ شَيْءٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ» (مسند أحمد- 6994)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا يَحْيَى، أَنَّ زَيْدًا، حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَّامٍ، حَدَّثَهُ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ - أَوْ تَمْلَأُ - مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا» (صحيح مسلم- 223)
 
 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/