HOME      Khutba      ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 5-5 | Tamil Bayan - 472   
 

ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 5-5 | Tamil Bayan - 472

           

ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 5-5 | Tamil Bayan - 472


ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 5
 
வரிசை : 472
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 18-08-2017 | 26-11-1438
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை கொண்டு உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ்வை பயந்த நன் மக்களில், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணி வாழக் கூடிய நல்ல மக்களில், அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறாமல் வாழக்கூடிய நன்மக்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹ்வுடைய புனித மாதங்களில் நாம் இருக்கின்றோம். குறிப்பாக ஹஜ்ஜுக்கு செல்வதற்கு நாமோ நம்மில் நமது உறவினர்களோ தயாராகிக் கொண்டிருப்பார்கள். 
 
இந்த நேரத்தில் பெரும்பாலும் ஹஜ்ஜுடைய சட்ட நுணுக்கங்களைப் பற்றி அறியாமல் மக்கள் இருக்கின்ற காரணத்தால், ஹஜ்ஜினுடைய சட்ட நுணுக்கங்களைப் பற்றி ஓரளவுக்கு தெளிவுபடுத்துவது கடமையாக இருக்கின்ற அவசிய காரணத்தினால், தொடர்ந்து குத்பாவில் நாம் ஹஜ் உடைய ஒழுக்கங்களை பற்றிய ஹஜ்ஜுடைய ருக்னுகள், வாஜிபுகள் பற்றி பேசி வருகின்றோம். 
 
சென்ற ஜும்ஆவுடைய ஒரு சுருக்கத்தை ஆரம்பத்தில் உங்களுக்கும் எனக்கும் நினைவுபடுத்தி விட்டு இன்ஷா அல்லாஹ் இருக்கக்கூடிய மற்ற விஷயங்களைப் நாம் பார்ப்போம்‌.
 
ஆரம்பமாக நாம் பேசும்போது ஹஜ்ஜுடைய உம்ரா உடைய ருக்னுகள் பற்றி பார்த்தோம். அதாவது எதை விடுவதால் அந்த வணக்கமே நிறைவேறாமல் போய்விடுமோ அதற்கு ருக்னு என்று சொல்லப்படும். 
 
அத்தகைய ருக்னுகள் என்று பார்க்கும் போது உம்ராவிற்கு மூன்று ருக்னுகள், ஒருவர் உம்ராவை நிறைவேற்ற வேண்டுமென்றால் இந்த மூன்று ருக்னுகளை கண்டிப்பாக அவர் செய்தாக வேண்டும். இந்த மூன்று ருக்னுகள் இல்லாமல் அவருடைய உம்ரா நிறைவேறாது. 
 
இந்த மூன்று ருக்னுகள் என்ன?
 
1) இஹ்ராமுடைய நிலையில்தான் கண்டிப்பாக அவர் உம்ராவை நிறைவேற்ற வேண்டும்.
 
2) இரண்டாவதாக தவாஃப். காபாவை ஏழு முறை அவர் சுற்றி ஆகவேண்டும்.
 
3) மூன்றாவதாக ஸயீ. ஸஃபா மர்வா இந்த இரண்டு மலைகளுக்கு இடையில் ஏழு முறை கண்டிப்பாக அவர் ஓடி ஆக வேண்டும்.
 
இந்த மூன்றும் உம்ராவுடைய ருக்னுகள். இந்த மூன்று ருக்னுகள் அப்படியே ஹஜ்ஜுக்கும் வரும். ஹஜ்ஜில் நான்காவதாக ஒரு ருக்னு இருக்கிறது. அதாவது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று ஹஜ் உடைய நான்காவது ருக்னு, அரஃபாவில் தங்குவது. 
 
ஆக, ஹஜ்ஜில் நான்கு ருக்னுகள் இருக்கின்றன, உம்ராவில் மூன்று ருக்னுகள் இருக்கின்றன. இந்த மூன்று ருக்னுகள் ஹஜ்ஜிக்கும் பொதுவானது. ஹஜ்ஜில் அதிகப்படியான ஒரு ருக்னு அதாவது அரஃபா மைதானத்தில் தங்குவது.
 
அடுத்ததாக, நாம் ஹஜ் உம்ரா உடைய வாஜிபுகள் பற்றி பேசினோம். அதாவது ருக்னு என்று சொன்னால் எதை விடுவதால் அந்த அமலே மொத்தமாக வீணாகி விடுமோ, திரும்ப அந்த அமலை புதிதாக செய்துதான் ஆக வேண்டும் .
 
இல்லையென்றால் அது செய்ததாக ஆகாது. அமல்களில் எந்த ஒரு ருக்னை விட்டாலும் அதை முடித்த பிறகுதான் நினைவுக்கு வருகிறது என்றால், அதற்கு பரிகாரம் இல்லை. அதை புதிதாக செய்தாக வேண்டும்.
 
வாஜிபு என்பது அதை விடுவதால் இபாதத்தில் குறைகள் ஏற்படும். அந்த குறையை நாம் ஏதாவது பரிகாரங்களை கொண்டு சீர் செய்து கொள்ளலாம். உதாரணமாக, தொழுகையில் ஏற்படக்கூடிய குறையை சஜ்தா சஹ்வின் மூலமாக செய்வது போன்று.
 
அதுபோன்றுதான், ஹஜ்-உம்ராவில் நாம் கவனிக்க வேண்டிய பேணவேண்டிய அந்த வாஜிபுகள் என்னவென்று சொன்னால், முதலாவதாக உம்ராவில் பேணவேண்டிய வாஜிபுகள் இரண்டு வாஜிபுகள் இருக்கின்றன.
 
ஒன்று, அந்த குறிப்பிடப்பட்ட எல்லையாகிய மீகாத்தில் இஹ்ராமை ஆரம்பிப்பது. இங்கே வித்தியாசத்தை புரிய வேண்டும். இஹ்ராம் உடைய நிலை என்பது வேறு, மீகாத்தில் இஹ்ராமை ஆரம்பிப்பது என்பது வேறு. 
 
ஒரு மனிதர் மீகாத்தை கடந்துவிட்டார். அவருக்கு அதற்குப் பிறகுதான் நினைவுக்கு வருகிறது. ஒன்று, அவர் மீகாதிற்கு திரும்ப சென்று அங்கிருந்து இஹ்ராமை ஆரம்பிக்க வேண்டும். அப்படி அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், எந்த இடத்தில் அவருக்கு நினைவு வருகிறதோ, அங்கிருந்தே தன்னுடைய இஹ்ராமை அவர் ஆரம்பிக்க வேண்டும். 
 
தல்பியாவை கூறி அந்த மீகாத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்ட இடத்தில் இஹ்ராமை ஆரம்பிக்காத அந்த குற்றத்திற்காக வேண்டி அவர் பரிகாரம் செய்வார். அப்போது மீகாத்தில் இஹ்ராமை ஆரம்பிப்பது இது வாஜிபாக இருக்கிறது. 
 
அதுபோன்றுதான் உம்ராவில் மற்றொரு வாஜிப், முடியை இறக்குவது. ஸயீக்கு பின்பாக முடியை இறக்குவது. 
 
அடுத்து, ஹஜ்ஜுடைய வாஜிபுகள் என்று பார்க்கும் பொழுது, ஏழு வாஜிபுகள் ஹஜ்ஜில் இருக்கின்றன. ஒன்று, இதுபோன்றுதான் மீகாத்தில் இஹ்ராமை ஆரம்பிப்பது, இரண்டாவதாக மொட்டை அடிப்பது அல்லது முடியை குறைத்துக் கொள்வது, மூன்றாவதாக அரஃபா மைதானத்தில் பிறை 9 அன்று தங்கும் பொழுது முழுமையாக தங்குவது, மதியத்திலிருந்து சூரியன் மறையும் நேரம் வரை தங்குவது, இது வாஜிப். 
 
ஏற்கனவே உங்களுக்கு கூறினோம்; அரஃபாவில் தங்குவது என்பது ருக்னு என்பதாக. அரஃபாவில் சில நிமிடங்களாவது தங்கி இருப்பது கட்டாயக் கடமை.
 
மதியத்திலிருந்து சூரியன் மறைகின்ற வரை முழுமையாக தங்கியிருப்பது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கியதை போன்று. பிறை 9 உன்னுடைய மதியத்தில் இருந்து சூரியன் மறைகின்ற நேரம் வரை. 
 
அதாவது, மஃரிபுடைய நேரம் வரை வாஜிபாகும். அடுத்ததாக ஐந்தாவது, அதாவது பிறை 10 அன்று அதிகாலை அதாவது நாம் முஸ்தலிஃபாவில் இருந்து புறப்பட்டு வந்து இருப்போம். நேரடியாக அங்கே جمرة العقبة சென்று கல்லெறிவது. 
 
அதுபோன்று, மற்ற மூன்று நாட்களில் பிறை 11, 12, 13 ஆகிய இந்த மூன்று நாட்களில் சூரியன் சாய்ந்த பிறகு, அதாவது லுஹருடைய நேரம் வந்ததற்கு பிறகு மூன்று ஜம்ராக்களில் கல்லெறிவது. இது வாஜிபாகும். இது ஐந்தாவது.
 
ஆறாவது, இந்த மூன்று இரவுகளிலும் மினாவில் தங்கி இருக்க கூடிய நாட்கள், அதாவது 11 உடைய பிற்பகுதி 12 உடைய பிற்பகுதி இந்த மூன்று இரவுகளில் மினாவில் தங்கி இருப்பது. 
 
அது போன்று நாம் 8 அன்று வருகின்றோம் அல்லவா, அது போன்று அரஃபாவுடைய முந்திய இரவு, இப்படி இந்த இரவுகளில் மினாவில் தங்கி இருப்பது. இதுவும் வாஜிபுகளில் ஒன்று .
 
ஏழாவதாக, தவாஃபுல் விதா. அதாவது, ஹஜ்ஜுக்காக வரக்கூடியவர்கள் ஹஜ்ஜை முடித்தற்குப் பிறகு அவர்கள் கடைசியாக கஅபதுல்லாஹ்வை தவாஃப் செய்துவிட்டு செல்லவேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த விஷயத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். அப்படி பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுமேயானால் தவாஃபுல் விதா அவர்களுக்கு மன்னிக்கப்பட்டது. அவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மற்றவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
 
உங்களில் யாரும் மக்காவில் இருந்து புறப்பட வேண்டாம். இறுதியாக அவர் கஅபாவை சந்திக்கும் வரை. 
 
நூல் : முஸ்னத் அஹமத், எண் : 1936, 15441.
 
இப்படி ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் தவாபுல் விதா ஆண்களுக்கு கட்டாயம் ஆக்கினார்கள். அதுபோன்று சுத்தமாக இருக்கக்கூடிய பெண்களுக்கு எந்த பெண்களுக்கு தொழுகை இல்லாத நேரம் வந்துவிட்டதோ அவர்களுக்கு மட்டும் மன்னிக்கப்பட ஒன்று. 
 
ஆகவே ஹஜ் உடைய இந்த வாஜிபுகள் என்று பார்க்கும் பொழுது, உம்ராவில் சொன்ன அந்த இரண்டு வாஜிபுகள் உட்பட அதாவது மீகாத்தில் இஹ்ராமை ஆரம்பிப்பது, முடிந்த பிறகு முடியை இறக்குவது அல்லது முடியை குறைப்பது.
 
அடுத்து கண்ணியத்திற்குரியவர்களே! ஹஜ் உம்ராவில் நாம் பேண வேண்டிய முஸ்தஹப் -விரும்பத்தகுந்த விஷயங்கள். எந்த ஒன்றை அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஆர்வமூட்டி இருக்கின்றார்களோ, எதை செய்வதால் நமக்கு நன்மை வாக்களித்திருக்கிறார்களோ, எதை விடுவதால் அது குற்றமாகி விடும் அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்க வில்லையோ, அவற்றை தான் நாம் சுன்னத் என்பதாக முஸ்தஹப் என்பதாக சொல்கிறோம்.
 
இந்த ஹஜ் உம்ராவில் நிறைய முஸ்தஹப் நிறைய ஒழுக்கங்கள் நிறைய சுன்னத்துகள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக நாம் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
 
முதலாவதாக உம்ராவிற்கு செல்பவர் அல்லது ஹஜ்ஜுல் இஃப்ராத் போன்ற ஹஜ்ஜை ஆரம்பிப்பவர்கள் அதற்கு தவாஃபுல் குதூம் என்று சொல்லப்படும். 
 
அவர்களுடைய முதல் உம்ராவுக்காக செல்லக்கூடியவர்களுடைய அந்த முதல் தவாஃபில் அதாவது ஆண்கள் இஹ்ராம் வெள்ளை ஆடை அணிந்து இருக்கக்கூடிய ஆண்கள் ரமல் இல்திபா என்ற இரண்டு சுன்னத்துகளை அவர்கள் பேண வேண்டும். 
 
இல்திபா என்றால் என்ன? இஹ்ராமுடைய ஆடையை வலது புஜம் தெரியும் படி வலது புஜம் உடைய கீழ்புறத்தில் இருந்து இஹ்ராமுடைய ஆடையை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள். பொதுவாக இங்கிருந்து அவர்கள் மீகாத்திருந்து இஹ்ராம் அணிந்து செல்லும்பொழுது தங்களுடைய உடலை முழுமையாக மறைத்து இருப்பார்கள். 
 
கஅபத்துல்லாஹ்விற்கு சென்று தவாஃபை ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த அவர்கள் மேலாடையை வலது புஜத்தினுடைய கீழ் பக்கத்திலிருந்து எடுத்து வந்து இடது பக்கத்தினுடைய தோள்பட்டையில் போட்டு அதை சொருகி கொள்வார்கள். வலது புஜம் தெரியவேண்டும். இதை இல்திபா என்று சொல்லப்படும். 
 
அடுத்ததாக ரமல். அதாவது பாதங்களை நெருக்கமாக வைத்து குதித்து ஓடுவது. இதற்குப் பெயர் ரமல் என்று சொல்லப்படும். அதாவது தவாஃப் உடைய முதல் மூன்று சுற்றில் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். ஏழு சுற்றுகளுக்கும் புஜம் திறந்திருக்கும். 
 
அதற்குப் பிறகு அவர் மக்காமே இப்ராஹீம் அருகில் சென்று தவாஃபினுடைய சுன்னத்தை தொழும் போது அந்த புஜத்தை மறைத்துக் கொள்வார். அதுவரை அந்த புஜம் திறந்திருக்க வேண்டும். 
 
இந்த இரண்டு அமல்களும் அதாவது தவாஃபை ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஆண் இஹ்ராமுடைய ஆடையை புஜதிற்கு வலது புஜதிற்கு கீழாக மாற்றிக்கொள்வது இல்திபா என்று சொல்லப்படும். இதுவும் சுன்னா முஸ்தஹப்பான விஷயம்.
 
பிறகு, தவாஃபில் ரமல் செய்வது. இதுவும் முஸ்தஃஹப்பான விஷயம். தவாஃப் உடைய அந்த இபாதத்தை ஆரம்பிக்கும் பொழுது, அல்லது தவாஃபுக்கு நடுவில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது. இது கட்டாயம் அல்ல. இதுவும் சுன்னத்தான சிறப்பான ஒன்று. 
 
அப்படி முத்தமிட முடியவில்லை என்றால், தொட்டு அந்தக் கையை முத்தமிடுவது அல்லது கையாலும் தொட முடியவில்லை என்றால், ஏதாவது தடியால் அந்த ஹஜருல் அஸ்வதை தொட்டு அந்த தடியால் இருந்து எந்த இடம் ஹஜருல் அஸ்வதை பட்டதோ அதை முத்தமிடுவது. 
 
அப்படியும் முடியவில்லை என்றால், கையாலும் தொட முடியவில்லை, தடியாலும் தொட முடியவில்லை என்றால் இஷாரா செய்வது. ஹஜருல் அஸ்வதை நோக்கி இஷாரா செய்வது. இது முஸ்தஹப் சிறப்பான விஷயம் ஆகும். கட்டாயமல்ல.
 
அதுபோன்று, ஹஜருல் அஸ்வதுடைய அந்த நேர்கோட்டிற்கு நேராக நாம் வரும் பொழுது தவாஃபை ஆரம்பிக்கும் பொழுதும் ஒவ்வொரு சுற்றை முடிக்கும் பொழுதும். ஏனென்றால் தவாஃப் என்பது ஹஜருல் அஸ்வதை ஆரம்பித்து ஹஜருல் அஸ்வத் வருகின்ற வரை ஒரு சுற்று. 
 
இதுபோன்று 7 சுற்றுகள் சுற்ற வேண்டும். கஅபத்துல்லாஹ்வில் ஹஜருல் அஸ்வத் அதாவது காபத்துல்லாவினுடைய கதவிற்கு முன்னால் இருக்கக்கூடிய அந்த ருக்னுல் ஹஜருல் அஸ்வத் என்று சொல்வார்கள். 
 
அந்தக் கருப்பு கல், அங்கிருந்துதான் தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். அங்கிருந்து முழுமையாக காபாவை இடப்பக்கமாக சுற்றிவந்து ஹஜருல் அஸ்வத் வந்தால் ஒரு சுற்று முடியும். இது போன்று ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். அப்போது ஒரு தவாஃப் முடியும். இந்தத் தவாஃபில் அந்த ஹஜருல் அஸ்வத் ஆரம்பிக்கும் போதும் அதுபோன்ற ஹஜருல் அஸ்வதை முடிக்கும் போதும் ஒவ்வொரு முறை ஹஜருல் அஸ்வத் அதற்கு நேராக நாம் வரும்பொழுதும் தக்பீர் சொல்வது. இதுவும் முஸ்தஃஹப்பாகும்.
 
அதுபோன்று, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் உடைய வழக்கமாக பிரியமான விஷயங்களில் ஒன்றுதான், ஹஜருல் அஸ்வதை முந்தி ஒரு மூலை இருக்கிறது. அதற்குப் பெயர் ருக்னுல் யமானி என்று சொல்வார்கள். 
 
அந்த ருக்னுல் யமானிக்கு அருகில் நாம் செல்வதற்கு வாய்ப்பு இருந்தால், வலது கையைக் கொண்டு அந்த மூலையை தடவுவது. ஒரே ஒருமுறை வலது கையால் அந்த மூலையை தடவுவது. இதுவும் முஸ்தஹப்பாகும்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅபத்துல்லாஹ்வில் இந்த இரண்டு மூலைகளை தவிர வேறு மூலைகளை அதாவது வேற பகுதிகளையோ வேறு சுவர்களையோ மற்ற இடங்களையோ அவர்கள் தொட்டுத் தடவியதை நான் பார்த்ததில்லை என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கின்றார்கள். 
 
நூல் : முஅத்தா இமாம் மாலிக், எண் : 710, அபூதாவூத், எண் : 1598.
 
கஅபத்துல்லாஹ் அவருக்கு நெருக்கமாக சமீபமாக சென்று எவ்வளவு க்ளோஸ் ஆக நீங்கள் சென்று நின்று துஆ கேட்க முடியுமோ அவ்வளவு சிறந்தது. 
 
ஆனால் கஅபத்துல்லாஹ்வை தொட்டுத்தொட்டு தடவி கொள்வதோ அதனுடைய திரையை பிடித்துத் தொங்குவதோ இது நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்று. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி செய்யவில்லை. அவர்களுடைய தோழர்கள், பின்னால் வந்த தாபியீன்கள் யாரும் செய்யவில்லை. இது பொது மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல் என்பதை மறந்து விடக்கூடாது.
 
அடுத்து அன்பானவர்களே! தவாஃப் முடிந்ததற்கு பிறகு, ஒரு தவாஃப் எப்போது முடியும். கஅபத்துல்லாஹ்வை ஏழு முறை சுற்றுவது. ஒரு தவாஃப் முடியும். தவாஃப் முடிந்ததற்கு பிறகு அந்த தவாஃப் ஃபர்லான தவாஃப் ஆக இருந்தாலும் சரி. 
 
உம்ரா உடைய தவாஃபை போல அல்லது ஹஜ்ஜுடைய தவாஃபை போல எப்போதெல்லாம் நீங்கள் ஒரு தவாஃபை செய்வீர்களோ அது இஹ்ராமுடைய நிலையில் செய்தாலும் சரி, அல்லது மற்றபடி பொதுவான நஃபிலான தவாஃப்கள் எப்போதெல்லாம் செய்தாலும் சரி, அந்த ஒவ்வொரு தவாஃபிற்கு பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது. இதுவும் சுன்னா. முஸ்தஃஹப்பான ஒன்று. மறந்துவிட்டால் தப்பில்லை. 
 
ஏன் நாம் சுன்னத், வாஜிப் என்று பிரித்து இப்போது தெளிவாக உங்களுக்கு நினைவூட்டுகிறோம் என்றால், அங்கு மார்க்கத்தை அறியாத மக்கள் சின்ன சின்ன செயல்களுக்கெல்லாம் அதாவது அது தவறி விடுவதற்கெல்லாம் உடனடியாக சென்று நீங்கள் ஒரு தம்மு கொடுத்துவிடுங்கள். அதாவது ஒரு பலிப்பிராணியை அறுத்து குர்பானி கொடுங்கள் என்பதாக அங்கு தவறானப் ஃபத்வாக்கள் சொல்வதை நாம் பார்க்கிறோம். 
 
ஆகவேதான் ருக்னு என்றால் என்ன? எதை விட்டால் இபாதத் நிறைவேறாது? எதை விட்டால் பரிகாரம் கொடுக்க வேண்டும்? அதுதான் வாஜிப்.
 
இப்போது நாம் பார்த்து வரக்கூடிய விஷயங்கள் எல்லாம் முஸ்தஹப் சுன்னத்தான விஷயம். வேண்டுமென்றே விடுவது பாவம் ஆகிவிடும். மறதியில் ஒருவர் விட்டு விட்டால் அது குற்றமாகி விடாது. இதை எவ்வளவு கவனமாக ஒரு மனிதர் செய்வாரோ அந்த அளவுக்கு அவருக்கு அல்லாஹ்விடத்தில் நன்மைகள் கிடைக்கும். 
 
ஆகவே, தவாஃபிற்குப் பிறகு இரண்டு ரக்அத்துகள் தொழுவது இதுவும் சுன்னா முஸ்தஃஹப்பான விஷயம். அதுபோன்றுதான் உம்ராவில் இருக்கும்பொழுது தவாஃப் முடித்ததற்கு பிறகு இரண்டு ரக்அத் தொழுவதற்கு பிறகு ஜம் ஜம் இருக்கக்கூடிய அந்த இடத்திற்கு அருகில் சென்று ஜம் ஜம் தண்ணீர் குடிப்பது. 
 
அதுபோன்று நாம் ஸயீ என்று சொன்னோம் அல்லவா, ருக்னுகளில் வரக்கூடிய ஒரு அமல். அந்த ஸயீ செய்யும்பொழுது அங்கு இருக்கக்கூடிய அந்த சஃபா மர்வா மலை அந்த இரண்டு மலையில் அந்த மலைகளுக்கு மேல் ஏறி நிற்பது. அந்த மலைகளுக்கு கீழாக நீங்கள் சுற்றி வந்தாலே ஃபர்லு நிறைவேறிவிடும். ருக்னு நிறைவேறிவிடும். அந்த மலைகளுக்கு மேல் ஏறி நிற்பது. இது சுன்னாவான விஷயம். 
 
பிறகு அந்த மலைகளுக்கு மேல் ஏறி நின்று கிப்லாவை முன்னோக்கியவர்களாக,
 
لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده انجز وعده ونصر عبده وهزم الاحزاب وحده
 
இந்த திக்ரை செய்வது. பிறகு துஆ கேட்பது, பிறகு இந்த திக்ரை சொல்வது துஆ கேட்பது. பிறகு இந்த திக்ரை சொல்வது துஆ கேட்பது. இவ்வாறாக மூன்று முறை இந்த திக்ருகளை ஓதுவதும் ஒவ்வொரு முறை திக்ரு சொன்னதற்குப் பிறகு துஆ கேட்பதும் முஸ்தஃஹப்பான ஒன்று. 
 
அதுபோன்று சஃபா மர்வா இரண்டு மலைகளுக்கு இடையில் ஸயீ செய்யும் பொழுது அந்தப் பச்சை விளக்குகளைக் கொண்டு அடையாளமிடப்பட்ட அந்தப் பகுதிகளில் ஆண்கள் குறிப்பாக மிக விரைவாக விரைந்து ஓடுவது. இதுவும் முஸ்தஃஹப்பான ஒன்று. 
 
அதுபோன்று குறிப்பாக ஹாஜிகளுக்கு பிறை எட்டு அன்று லுஹருக்கு முன்பாகவே மினாவில் சென்று லுஹர், அஸர், மஃரிப் ஆகிய தொழுகைகளை அங்கே தொழுவது. அங்கே பகல் நேரத்தில் தங்கியிருப்பது. இதுவும் முஸ்தஃஹப்பான ஒன்று.
 
அதுபோன்று, விடிந்தால் அரஃபாவுடைய நாள். அந்த நாள் முழுக்க பிறை 8 அன்று பகலில் நீங்கள் சென்று விடுவீர்கள். லுஹர், அஸர், மக்ரிப் வரை அங்கே இருப்பீர்கள். அதுபோன்று இஷா சுபுஹும் அங்கே தொழுதுவிட்டு அரஃபாவிற்கு புறப்படுவது. முஸ்தஹப்  இஷா சுப்ஹுவை தொழுதுவிட்டு சூரியன் உதித்ததற்கு பிறகு அரஃபாவிற்கு செல்வது முஸ்தஹப். 
 
ஏதாவது ஒரு நிர்ப்பந்தத்தால் இப்போது பெரும்பாலும் அந்த நிர்ப்பந்தத்தை பார்க்கிறோம். அதிகமான ஹாஜிகள் வருகின்ற காரணத்தினால் பஸ்ஸின் உடைய தட்டுப்பாடுகளினால் அதாவது இரவினுடைய நடு திசைக்கு பிறகு அங்கு உள்ள ஆலிம்கள் ஹாஜிகள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து பஸ்ஸுக்கான அந்த டைம் டேபிள் நேரம் குறிப்பிட்டு குறித்துக் கொடுத்து விடுவார்கள்.
 
ஆகவே, பெரும்பாலும் இப்போதுள்ள காலங்களில் இரவின் பிற்பகுதியில் ஹாஜிகள் மினாவிலிருந்து அரஃபாவிற்கு புறப்பட்டு விடுகிறார்கள். இது குற்றம் அல்ல. ஆனால், சுபுஹ் வரை தங்கியிருப்பது சுன்னா முஸ்தஃஹப்பாகும். ஏதாவது நிர்பந்தத்தால் இது விடுபட்டால் அது தவறில்லை. 
 
ஆனால், சும்மா வசதிக்காக வேண்டியே இரவிலேயே மினாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவிற்கு சென்று விடுவதை தவிர்க்க வேண்டும்.
 
அதுபோன்றுதான், பிறை 10 அன்று ஜம்ராவில் முஸ்தலிபாவிலிருந்து நாம் வந்ததற்குப் பிறகு கல்லெறிவோம். அதற்குப் பிறகு நேராக நாம் குர்பானி கொடுக்க சென்று விடுவோம். அல்லது குர்பானிக்கு நாம் அரசாங்கத்தில் அதற்குரிய அந்த தொகையை கட்டியிருந்தால், முடியை இறக்கி கொள்வோம். 
 
ஆகவே பிறை 10 அன்று ஜம்ராவில் கல்லெறிந்ததற்குப் பிறகு, அங்கே துஆக்கள் கிடையாது. பிறை 11, பிறை 12 பிறை 13 இந்தப் பகல்களில் ஒருவர் மினாவில் தங்கி இருப்பார். தங்கியிருந்து, லுஹருடைய நேரம் வரை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். 
 
லுஹருடைய நேரம் வந்தவுடன், அங்கிருந்து புறப்பட்டு, அவர் ஜம்ராவிற்கு வருவார். முதலாவதாக சின்ன ஜம்ரா இருக்கும். பிறகு நடு ஜம்ரா, கடைசியாக பெரிய ஜம்ரா. இந்த மூன்று ஜம்ராக்களில், முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிய வேண்டும். ஏழு கற்களை எறிந்ததற்குப் பிறகு துஆ கேட்பது. 
 
கற்களை எறிவது வாஜிப். எரிந்ததற்குப்பிறகு துஆ கேட்பது முஸ்தஹப். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜம்ராக்கலில் கல் எறிந்ததற்குப் பிறகு நீண்ட நேரம் நின்று துஆ கேட்டிருக்கிறார்கள். 
 
முதல் ஜம்ராவில் துஆ கேட்பார். இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிந்ததற்குப்பிறகு துஆ கேட்பார். மூன்றாவது ஜம்ராவில் கல்லெறிந்ததற்குப் பிறகு துஆ கேட்காமல் திரும்பிவிடுவார். மூன்று நாட்களில் மினாவில் தங்கி இருப்பார்கள். 
 
இறுதியாக ஹஜ்ஜை முடித்ததற்குப் பிறகு பிறை 11, பிறை 12, பிறை 13, இந்த மூன்று நாட்களிலும், சூரியன் நடுநிசி சாய்ந்ததற்குப் பிறகு, லுஹருடைய நேரம் வந்ததற்குப் பிறகு, ஹாஜிகள் கல்லெறிவதற்காக புறப்படுவார்கள். கல்லெறிவது வாஜிபான செயல்.
 
கல்லெறிந்ததற்குப் பிறகு, அங்கே நின்று துஆக்கள் கேட்பது, முதல் ஜம்ராவில் கல்லெறிந்ததற்குப் பிறகு துஆ கேட்பது, அது முஸ்தஹப். இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிந்ததற்குப் பிறகு துஆ கேட்பது, முஸ்தஹப். மூன்றாவது ஜம்ராவில், மக்காவிற்கு அருகிலுள்ள கடைசி ஜம்ரா, பெரிய ஜம்ரா என்று சொல்லப்படும். அந்த இடத்தில் கற்களை எறிந்ததற்குப்பிறகு, அங்கே நிற்காமல், உடனடியாக திரும்பி விட வேண்டும். 
 
அன்பானவர்களே! இவையெல்லாம் குறிப்பாக, முஸ்தஹப்பான விஷயங்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
அதுபோன்று, இந்த ஹஜ்-உம்ரா உடைய இஹ்ராம். யார் ஒருவர் ஹஜ் உம்ராவிற்காக, இஹ்ராமுடைய அந்த நிலையை பேணி விடுவாரோ, இஹ்ராமுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவாரோ, அவர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 9 விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 
 
அதில் முதலாவதாக, தன்னுடைய உடலிலுள்ள எந்தப் பகுதியில் உள்ள முடியையும், வெட்டுவதோ, பிடுங்குவதோ கூடாது. தன்னுடைய உடலில் தலையிலோ, அல்லது ஆண்கள் தாடியிலோ, மீசையி்லோ, உடலில் உள்ள எந்த பகுதியில் உள்ள முடியை சிரைப்பதோ அல்லது கையால் பிடுங்குவதோ கூடாது. 
 
அதுபோன்று, நகங்களை வெட்டுவது கூடாது. நறுமணம் பூசுவது. பெண்கள், ஆண்கள் இருபாலருமே நறுமணம் பூசுவது. உடலிலும் பூசக்கூடாது, இஹ்ராமுடைய ஆடையிலும் பூசக்கூடாது. 
 
நறுமணம் என்று சொன்னால், எதிலிருந்து ஒரு நல்ல வாடை வீசுமோ, அந்த எந்த ஒரு பொருளையுமே அவர் பயன்படுத்த கூடாது. எந்த அளவிற்கென்றால், அறிஞர்கள் சொல்கிறார்கள், உணவில் நறுமணமான பொருளாகிய ஏலக்காய் சேர்ப்பதை கூட தவிர்க்க வேண்டும் என்று. 
 
அது போன்றுதான், இந்த பேஸ்டை பயன்படுத்தக்௧கூடியவர்கள். பல பேஸ்ட்கள் பெரும்பாலும், நல்ல நறுமணமுள்ள பேஸ்ட்கள் வருகின்றன. அவற்றைத் தவிர்த்து, நறுமணம் இல்லாத சாதாரண அந்த டூத் பேஸ்ட்களை தான் பயன்படுத்த வேண்டும். 
 
அதுபோன்று, சோப்புகள், ஷாம்புகள், கண்டிப்பாக இவற்றில் நறுமணங்கள் பெரும்பாலும் கலந்திருக்கின்றன. சில சோப்புகள், ஷாம்புகள், அங்கே மக்காவில், மதினாவில், விற்பனைக்கு இருக்கின்றன. 
 
அவை வெறும் சுத்தப்படுத்த கூடியதாக இருக்கும். அதில் எந்தவிதமான நறுமணமும் இருக்காது. அப்படிப்பட்ட சோப்புகளை ஷாம்புகளை பயன் படுத்துவது தவறில்லை. 
 
நீங்கள் குளிக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும், இஹ்ராமுடைய நிலையில், உங்களுடைய அழுக்குகளை தேய்த்து குளிக்கலாம். அப்படி குளிக்கும் போது, தலை முடியிலிருந்தோ, உடலிலிருந்தோ, முடிகள் கொட்டுவதாலோ, முடிகள் விழுவதாலோ அது தவறு கிடையாது.
 
வேண்டும் என்று தெரிந்த நிலையில் முடிகளை பிடுங்க கூடாது. சீவலாம். சீவும்போது முடி விழுவதால் தப்பு கிடையாது. 
 
ஆக இஹ்ராமுடைய நிலையில் தடுக்கப்பட்ட ஒன்பது விஷயங்களில், முதலாவதாக தலை முடியையோ அல்லது உடலில் உள்ள முடியை பிடுங்குவது, சிரைப்பது, நகங்களை வெட்டுவது, நறுமணம் பூசுவது. நான்காவதாக, ஆண்கள் தங்களுடைய தலையை மறைப்பது. 
 
அதுபோன்று, முகத்தை மறைப்பதும் இதில் அடங்கும். பெண்களைப் பொருத்தவரை, அவர்கள் தலையை மறைத்திருப்பார்கள். முகத்தை, அதற்கென்று உள்ள முகத்திரையை கொண்டு மறைத்துக் கொள்ள மாட்டார்கள். பெரிய துப்பட்டா அல்லது தாவாணியை வைத்துக் கொள்வார்கள்.
 
ஆண்களுக்கு அருகில் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ, அல்லது ஆண்கள் தங்களுக்கு அருகில் வரக்கூடிய நிலை ஏற்பட்டாலோ, அந்தப் பெரிய துப்பட்டாவை தலைக்குமேல் இருந்து, முகத்தின் மீது தொங்கவிட்டுக் கொள்வார்கள். மற்றபடி முகத்தின் மீது திரையை கட்டியவர்களாக அவர்கள் முகத்தை மூட மாட்டார்கள். 
 
அதுபோன்று, ஆண்கள் குறிப்பாக தைக்கப்பட்ட ஆடைகளை அணிவது. இஹ்ராமுடைய ஆடை என்பது தைக்கப்படாத இரண்டு வெள்ளை நிற ஆடைகள். இதை தவிர்த்து விட்டு சட்டைகளையோ, பேண்ட்களையோ அல்லது பைஜமாக்களையோ, இது போன்று அணிவதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். 
 
அதுபோன்று வேட்டைப் பிராணிகளை வேட்டையாடுவது, இதையும் தவிர்க்க வேண்டும். அடுத்ததாக, திருமண ஒப்பந்தங்கள் செய்வது, திருமண பேச்சுவார்த்தைகள் செய்வது, இதுவும் தடுக்கப்பட்ட ஒன்று. 
 
அதுபோன்று மனைவிகளோடு சென்று இருக்கக்கூடியவர்கள், அவர்கள் இல்லறம் சேருவதோ, அல்லது அது சம்மந்தமாக மனைவிகளுடன் பேசுவதோ, விளையாடுவதோ, இவையெல்லாம் தடுக்கப்பட்ட ஒன்று. 
 
ஆக, இந்த ஒன்பது விஷயங்கள் தடுக்கப்பட்ட ஒன்று. இவற்றில் எந்த ஒன்றையாவது, அவர் தெரிந்த நிலையில், வேண்டுமென்றே செய்துவிட்டால், அதற்காக பரிகாரம் கொடுத்தாக வேண்டும். 
 
அதில் குறிப்பாக, கடைசியாக இருக்கக்கூடிய, அதாவது, மனைவியிடத்தில் இல்லறம் சேர்வது. ஹஜ்ஜுடைய நேரத்தில் அப்படி செய்துவிட்டால், அவருடைய ஹஜ்ஜே வீணாகிவிடும். அவர் திரும்ப ஹஜ் செய்யக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுவிடும். 
 
ஆக இந்த விஷயங்களை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் என்பது தெளிவான ஒன்று. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு விஷயத்தையும் நமக்கு அழகாக தெளிவுபடுத்தி சொல்லியிருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தீனில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், எதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கட்டாயம் ஆக்கினார்களோ, அவற்றை மிகப் பேணுதலோடு செய்ய வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் கூறுவதாக நமக்கு சொன்னார்கள். 
 
“நான் கடமையாக்கிய ஒரு கட்டாய கடமையை நிறைவேற்றுவதை விட ஒரு நெருக்கமான வழியில்லை, அடியான் என்னை வந்து சேர்வதற்கு. என்னுடைய நெருக்கத்தைப் பெறுவதற்கு.”
 
நூல் : புகாரி, எண்: 6502.
 
இன்று பலரை பாருங்கள்! பர்ளுகளை எல்லாம் விட்டு விடுவார்கள். பர்ளுகளில் அலட்சியம் செய்வார்கள். நஃபில்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஐங்கால பர்ளான தொழுகையில் எத்தனை பேர் அலட்சியம் செய்வார்கள். 
 
ஆனால் அதேநேரத்தில், ரமலான் மாதத்தில் 27-ஆம் கிழமை அன்று, அந்த 27ஆம் கிழமை இஷாவிற்குகூட அந்த முக்கியத்துவம் இருக்காது. அதனுடைய இரவு தொழுகை, நஃபிலான தொழுகைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். 
 
இது ஒரு சின்ன உதாரணம். இதுபோன்று நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். பர்ளுகளை வீணாக்கி இருப்பார்கள். ஜகாத்தை வீணாக்கி இருப்பார்கள். சதக்காவில் ஆர்வம் இருக்கும்.
 
ஜகாத்துக்குப் பிறகுதான் சதகா. பர்லான ஐங்கால தொழுகைக்குப் பிறகு தான் நஃபிலான தொழுகை. ஆகவே, பர்ளுகளை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் வேண்டும். அலட்சியம் அரவே இருக்க கூடாது. 
 
அடுத்ததாக வாஜிப். இந்த வாஜிபை கொண்டு நமது தொழுகை பூர்த்தி அடைகிறது. வாஜிபை விடுவதால், அந்த தொழுகையில் இபாதத்தில் குறை ஏற்படுகிறது. 
 
அடுத்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிக நன்மைகளை, அல்லாஹ்வுடைய அடியார்கள் பெற வேண்டும் என்பதற்காக, நமக்கு கற்றுக் கொடுத்திருக்க கூடிய ஒழுக்க மாண்புகள், சிறப்புகள், இவற்றை தான் சுன்னா முஸ்தஹப் என்று சொல்கிறோம். 
 
இந்த சுன்னா முஸ்தஹப்களை ஒரு முஸ்லிம் எந்த அளவு ஆர்வத்தோடு, ஆசையோடு பின்பற்றுவாரோ, அவற்றை நிறைவேற்றுவாரோ, அவருடைய இறைநம்பிக்கை அவருடைய ஈமானுடைய அளவு கூடிக்கொண்டே போகும்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,
 
உங்களுடைய ஆசை, மன ஆசை, நான் கொண்டு வந்த மார்க்கத்தை பின்பற்ற கூடியதாக மாறுகின்ற வரை, நீங்கள் முஃமினாக முடியாது. அதாவது முழுமையான முஃமினாக முடியாது.
 
(ஷர்ஹுஸ் ஸுன்னா)
 
எந்த அளவு ரசூலுல்லாஹ் உடைய சுன்னத்தை நாம் பேண வேண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தின் படி நம்முடைய இபாதத்துகளை அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, நம்முடைய ஈமான் முழுமை அடைகிறது. 
 
அல்லாஹுத்தஆலா சொல்கிறான்,
 
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
 
“நபியே! நீங்கள் சொல்லுங்கள்! மக்களே நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை பின்பற்றுங்கள். நபியை பின்பற்றுங்கள். அப்படி நபியை நீங்கள் பின்பற்றினால், அல்லாஹ் உங்களை நேசிப்பான். அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹுத்தஆலா மகா மன்னிப்பாலன், பெரும் கிருபையுடையவன்.” (அல்குர்ஆன் 3: 31
 
கண்ணியத்திற்குரியவர்களே! குறிப்பாக இந்த ஹஜ்ஜுடைய அமல்களில் இல்ம் இல்லாமல் வரக்கூடிய மக்கள், ஆழமான மார்க்கக்கல்வி இல்லாமல் வழிகாட்டக்கூடிய வழிகாட்டுதல் மூலமாக, தவறான காரியங்களை செய்வதை, பித்அத்தான காரியங்கள் செய்வதை, ஷிர்க்கான காரியங்கள் செய்வதை நாம் பார்க்கிறோம்.
 
ஒவ்வொரு விஷயத்தையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு துல்லியமாக எவ்வளவு நுணுக்கமாக கண்காணித்து போதித்தார்கள் என்பதை ஒரு ஹதீஸிலிருந்து நீங்கள் தெரியலாம். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது ஹஜ்ஜத்துல் விதாவில் அரஃபாவில் இருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா வந்தார்கள். முஸ்தலிஃபாவில் தங்கி அங்கு துவா செய்ததற்குப் பிறகு அங்கு காலையில் சுபுஹ் தொழுகையை முடித்துவிட்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒட்டகத்தில் வருகிறார்கள். 
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அந்த சிறுவர் அப்போது 10 அல்லது 11 வயது இருக்கும். அந்த வயதில் அந்த சிறுவனை பாருங்கள். ரசூலுல்லாஹ் உடைய ஹஜ்ஜை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆசையோடு அவர் நடந்து வருகிறார். 
 
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தில் இருக்கிறார்கள். ரசூலுல்லாஹ்விற்கு உதவ வேண்டும் என்பதற்காக ரசூலுல்லாஹ்விடம் சேர்ந்து அவர் வந்து கொண்டே இருக்கிறார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்தலிஃபாவிற்கும் மினாவிற்கும் அருகில் இடையில் ஒரு இடம் வந்த உடனே சொல்கிறார்கள். 
 
இப்போது நீ எனக்காக இப்னு அப்பாஸே! கற்களை எடுப்பாயாக! இப்னு அப்பாஸே! 
 
இங்கே ஒரு விஷயத்தை கவனியுங்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறை 10 அன்று கல் எறிவதற்காக எங்கே கல் எடுத்தார்கள். முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டதற்குப் பிறகு கல் எடுத்தார்கள். 
 
நீங்கள் ஹஜ்ஜுக்குச் சென்றால் பார்க்கலாம். அரஃபாவிலேயே ஒரு கூட்டம் கல்லை தேடிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு கூட்டம் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கி கொண்டிருக்கும்பொழுது தூங்க வேண்டிய நேரம்,, பிறகு காலையில் துஆ செய்ய வேண்டிய நேரம், அந்த இடத்திலேயே கற்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். 
 
அதுவும் எத்தனை கற்கள் 10-வது அன்று எரியக்கூடிய ஏழு கற்களை மட்டுமல்ல 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களுக்கும் எறிய வேண்டிய ஒரு நாளைக்கு இருபத்தியோரு கற்கள் இப்படி மூன்று நாட்களுக்கும் எறியக்கூடிய கற்களை அங்கே பொறுக்கி கொண்டிருப்பார்கள். அத்தனை இபாதத்துகளையும் விட்டுவிடுவார்கள்.
 
இங்கே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கற்களை எடுக்கச் சொல்லிவிட்டு இப்னு அப்பாஸிடம் சொல்கிறார்கள்.
 
"தன்னுடைய விரலை சுட்டிக்காட்டி, இது போன்ற அளவுள்ள சிறிய பொடிக் கற்களை இப்னு அப்பாஸ் எனக்கு எடுத்துக் கொடு" என்று சொன்னார்கள். 
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழு பொடி கற்களை ரசூலுல்லாஹ்விற்கு எடுத்து தருகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அந்த கற்களை எடுத்து உயர்ந்த ஒட்டகத்தின் மீது தனது அபுபா ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்கிறார்கள். ஒட்டகத்தின் மேல் இருந்து தன்னுடைய கையை உயர்த்தி இப்படி காட்டினார்கள். 
 
பாருங்கள் மக்களே! இந்த அளவுள்ள கற்களை தான் நீங்கள் எடுத்து எறிய வேண்டும். பிறகு சொன்னார்கள்; உங்களுக்கு முன் உள்ள சமுதாயம் இஸ்ரவேலர்கள் எப்போது வழிகெட்டார்கள்? எப்போது அழிந்து நாசம் ஆனார்கள் தெரியுமா? தங்களுடைய மார்க்கத்தில் வரம்பு மீறும்போது, தங்களுடைய மார்க்கச் சட்டங்களில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர்களும் எந்த அளவை நிர்ணயித்தார்களோ எந்த அளவை குறிப்பிட்டார்களோ அதற்கு அதிகமாக பேணுதல் என்று கூடுதல் ஆசை என்று செய்யும் பொழுது அவர்கள் அழிந்து நாசம் ஆனார்கள். எனவே ஜம்ராவில் கல்லெறிய வரக்கூடிய நீங்கள் இந்த அளவு பொடிக் கற்களை எடுங்கள் என்று சொன்னார்கள்.
 
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 1851, 3248.
 
இவ்வளவு தெளிவான எச்சரிக்கை கொடுத்ததற்குப் பிறகு கூட, இன்றைய ஹாஜிகளுடைய அறியாமையை பாருங்கள். செருப்பை கழட்டி வீச கூடியவர் எத்தனை பேர் தெரியுமா? பெரிய பெரிய கற்களை எடுத்துக்கொண்டு வரக்கூடியவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? மரக்கட்டைகளை எடுத்துக்கொண்டு வந்து வீசக்கூடியவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 
 
அதுபோன்று இன்னொரு விஷயம், ஏழு கற்கள் என்றால் எண்ணி சரியான நினைவோடு அந்த தக்பீர் கூறி அந்த ஏழு கற்களை மட்டும் தான் எறிய வேண்டும். சிலர் என்ன செய்வார்கள்? இன்னும் நாலு கல்லு, இன்னும் அஞ்சு கல்ல கையில வச்சுபாங்க. எறிவாங்க. கவனமாக எறிவதில்லை. எறியும் போது வேகம் இருக்குமே தவிர திக்ருகள் இபாதத்களுடைய நினைவுகள் அங்கு இருக்காது.
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இடத்தில் கேட்டார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே! மினாவில் தங்குகிறோமே, ஸஃபா மர்வா இரண்டு மலைகளுக்கிடையே ஓடுகிறோமே, ஜம்ராக்களில் கல் ஏறிகிறோமே, இதனுடைய நோக்கம் என்ன? தாத்பரியம் என்ன? 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; மினாவில் தங்குவதும் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையில் ஓதுவதும் ஜம்ராக்களில் கல்லெறிவதும் அல்லாஹ்வுடைய நினைவை உங்களது உள்ளத்தில் உறுதிப்படுத்துவதற்காக.
 
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 24351, 24468. 
 
பலர் என்ன நினைக்கிறார்கள்? அந்த ஜம்ராக்களில் ஷைத்தான் உட்கார்ந்திருப்பதை போல ஷைத்தானுக்கு கல்லெறிய செல்கிறோம். ஷைத்தானுக்கு கல்லெறிய போகிறோம் என்று சொல்வதே மிகப்பெரிய ஒரு தவறான வார்த்தை. 
 
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் தங்களுடைய குழந்தையை அறுப்பதற்காக எடுத்துச் செல்லும்போது அந்த இடத்தில் ஷைத்தான் தோற்றமளித்தான். இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் கற்களால் தக்பீர் கூறி அவனை எறிந்தார்கள். அவ்வளவு தான் இப்போது நாம் அந்த இடத்தில் கல்லெறிவது அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காக. 
 
எந்த இடத்தில் இப்ராஹிம் அலைஹி ஸலாத்தி வஸ்ஸலாம் ஷைத்தானை தோற்கடித்து ஈமானை தனது உள்ளத்தில் உறுதிப்படுத்தினார்களோ அந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அந்த ஈமானை நமது உள்ளத்தில் உறுதிப்படுத்துவதற்காக கல்லெறிகிறோமே தவிர, அந்த இடத்தில் இப்போதும் ஷைத்தான் இருக்கிறான். நான் எனது கல்லால் அவன் மண்டையை உடைக்க போகிறேன், அவனைக் கொல்ல போகிறேன் என்பதற்காக அல்ல. 
 
இந்த எண்ணத்தை கொண்டவர்கள் வருகின்ற காரணத்தினால் தான் அவர்கள் தங்களது ரூம்களில் இருந்து தங்களது டென்ட்களிலிருந்து புறப்படும் பொழுது ஏதோ பெரிய போருக்கு போற மாதிரி வருவாங்க. பயங்கரமான ஆக்ரஷத்தோட.
 
ஏன் ஷைத்தானுக்கு கல்லெறிய போறோம். இந்த ஷைத்தான் தான் நம்மளை இத்தனை நாளா வழிகெடுத்துட்டு இருக்கிறான். இன்னைக்கு இவ்ளோ கொன்று போட வேண்டியது. 
 
அந்த மாதிரியான முட்டாள்தனமான ஆக்ரோஷங்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக.
 
அன்பானவர்களே! என்ன செய்வார்கள். ஏழு கற்களை வெச்சிருப்பாங்க. எறியும் போது கவனம் இருக்கிறதல்ல. திக்ரு இருக்கிறதல்ல. சரியான அந்த கவனம் இருக்கிறதல்ல. அந்தக் கோபத்தில எறியுவாங்க. எறிஞ்சதுக்குப்பிறகு எத்தனை எறிஞ்சிருக்காங்கன்னு தெரியாது. கைல எக்ஸ்ட்ரா ஒரு அஞ்சு கல்லு வெச்சிருப்பாங்க. எடுத்து மொத்தமா எல்லாத்தையும் எறியுவாறு. எல்லாம் சேர்ந்து போயிட்டு போதுன்னு சொல்லிட்டு அஸ்தஃபிருல்லாஹ்.
 
இது மார்க்கத்தை பரிகாசம் செய்து அல்லாஹ்வுடைய தீனோடு விளையாடுவது. ஏழு கற்கள் என்றால் கவனமாக ஏழு கற்களை எறிய வேண்டும். ஏதோ கற்கள் மிஸ் ஆகிவிட்டது என்ற சந்தேகம் வந்தாலோ அல்லது உண்மையிலேயே மறந்து விட்டாளோ அப்போது வேண்டுமானாலும் கூட, மார்க்க சட்டம் என்ன சொல்கிறது? ஐந்து எறிந்தீர்களா, அல்லது நான்கா? என்று சந்தேகம் ஏற்படுகிறது. 
 
அப்படியிருந்தால் குறைவான எண்ணிக்கை வைத்துக் கொள்ள வேண்டும் 5, 4 என்ற சந்தேகம் வந்தால் 4, 6, 5 என்ற சந்தேகம் வந்தால் 5, 7, 6 என்ற சந்தேகம் வந்தால் ஆறு அப்போதும் கூட இப்படி உறுதி செய்துகொண்டு மிச்சத்தை தான் அடிக்க வேண்டுமே தவிர, கையில் வைத்திருக்க கூடிய அத்தனை கற்களையும் மொத்தமாக எரிந்து விடுவது என்பது இது மார்க்கத்தை பரிகாசம் செய்வது மார்க்கத்தோடு விளையாடுவது.
 
சுன்னா ஆபீ ஆஸிம் எண் : 15
 
இப்படி கண்ணியத்திற்குரியவர்களே! பல பித்அத்தான அனாச்சாரமான செயல்களை பார்க்கிறோம், அங்கே அரஃபாவில் தங்கியிருக்கும்போது திக்ரு துஆக்கள் செய்வதில் பலருடைய கவனம் இருக்காது.
 
அந்த ஜபலுர் ரஹ்மா என்ற அங்கே ஒரு மலை இருக்கிறது. ஜபலுர் ரஹ்மா என்ற அந்த மலைக்கு பெயர் வந்தது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைத்தது அல்ல, சஹாபாக்கள் வைத்தது அல்ல, தாபியீன்கள் வைத்தது அல்ல. 
 
பின்னால் காலத்தில் வைக்கப்பட்ட ஒரு பெயர் அது. அவ்வளவுதான். அந்த மலைக்கு அருகில் அரஃபாவுடைய எல்லைக்குள் இருந்து கொண்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காபாவை முன்னோக்கி அரஃபாவுடைய அந்த மாலைப் பொழுதில் துஆ செய்தார்கள். அவ்வளவுதான். 
 
அரஃபாவில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கி துஆ கேட்கலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் அறியாமையில் அந்த மலைக்கு அருகில் வர வேண்டும் என்பதற்காக ஒரு முயற்சி செய்கிறார்கள். இரண்டாவது அருகில் வந்தாலும் கூட அந்த மலை மீது ஏறி துஆ கேட்க வேண்டும் என்பதற்காக அடுத்த ஒரு முயற்சி. 
 
இப்படி எதில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் ஆர்வம் காட்டவில்லையோ, அவர்களுடைய வசதிக்கேற்ப செய்தார்களோ, அதில் ஒரு தனி ஒரு சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டு தன்னுடைய இபாதத்துகளை தன்னுடைய நேரங்களை வீணாக்குவதை நாம் பார்க்கிறோம்.
 
ஆகவேதான், இந்த விஷயங்களை நுணுக்கமாக சொல்ல வேண்டிய ஒரு அவசியம் நாமும் இதை தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய குடும்பத்தில் நம்முடைய நண்பர்களில் யார் ஹஜ் பயணத்துக்காக செல்கிறார்களோ அவர்களுக்கு ஹஜ்ஜுடைய விளக்கங்களை சரியாக கற்று செல்லுங்கள். அதற்குரிய சரியான ஒரு புத்தகத்தோடு செல்லுங்கள் என்று நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அல்லாஹ்வுடைய வீட்டை நாடி வரக்கூடிய ஒவ்வொரு ஹாஜிகள் ஒவ்வொரு உம்ரா பயணிக்கும் பரிபூரணமான ஏற்றுக்கொள்ளப்பட்ட உம்ராவையும் ஹஜ்ஜையும் நசிப் ஆக்குவானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/