HOME      Khutba      ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 4-5 | Tamil Bayan - 472   
 

ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 4-5 | Tamil Bayan - 472

           

ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 4-5 | Tamil Bayan - 472


ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 4
 
வரிசை : 472
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 11-08-2017 | 19-11-1438
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்தத் தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பேணி வாழும் படி அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மதித்து நடக்கும் படி அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறைகளை சுன்னாவை பின்பற்றி நடக்குமாறு உபதேசித்தவனாக இந்த குத்பாவை செய்கிறேன்.
 
தொடர்ந்து ஹஜ்ஜுடைய சிறப்புகள், பிறகு ஹஜ் பயணத்தை நாடி இருப்பவர் பேணவேண்டிய பயண ஒழுக்கங்களை பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வந்தோம். அந்த தொடரில் இது நம்முடைய நான்காவது ஜும்மா. 
 
இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆ உறையில் ஹஜ் உடைய அடிப்படை அம்சங்கள், ஹஜ் உடைய உம்ரா உடைய ருக்னுகள் என்ன? வாஜிபுகள் என்ன? மற்றும் பேண வேண்டிய சுன்னத்தான விஷயங்கள் என்ன? என்பதைப் பற்றி நாம் பார்ப்போம்.
 
பொதுவாக ஏன் ஜும்ஆவில் இந்த விஷயத்தை சொல்லவேண்டும் என்று ஒரு கேள்வி இருந்தால், பெரும்பாலானவர்களுக்கு ஹஜ் உம்ராவை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அதற்குரிய ஒரு முறையான வகுப்பை அவரது சந்திக்காமலேயே சென்றுவிடுகிறார்கள். 
 
அப்படி ஏதாவது வகுப்பு அவர்களுக்கு கிடைக்கப் பெற்றாலும் கூட, அதுவும் ஒரு நிறைவான வகுப்பாக இருப்பதில்லை. ஆகவே இந்த ஹஜ் வணக்கத்தை உம்ரா வணக்கத்தை நாடி இருப்பவர்களுக்கு இந்த குத்பா அவர்களுக்கு ஒரு தனி சட்ட போதனையாகும். 
 
அவர்கள் அப்படி நாடி இருக்கவில்லை என்றாலும் அவர்களது குடும்பத்தில் யாராவது அந்த ஹஜ் உம்ரா பயணத்தை நாடி இருந்தால் இவர்கள் இந்த விஷயங்களை தெரிந்துகொண்டு அந்த குடும்பத்தாருக்கு சொல்வதற்காக ஜும்ஆவுடைய உரையில் நாம் அந்த விஷயங்களை தொடுகிறோம். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அல்லாஹ்வுடைய தீனை சரியாக புரிந்து கற்று பின்பற்றுவதற்கு நமக்கு உதவி செய்வானாக!
 
உம்ரா ஹஜ்  இந்த இரண்டும் இரண்டு தனித்தனி வணக்கங்கள் ஆகும். அல்லாஹு ரப்புல் ஆலமீன் கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனில் சொல்லும்பொழுது,
 
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ
 
ஹஜ் வணக்கத்தையும் உம்ரா வணக்கத்தையும் அல்லாஹ்விற்காக நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன் 2 : 196)
 
இங்கே அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா இரண்டு இபாதத்தையும் நமக்கு வலியுறுத்திச் சொல்கிறான். நீங்கள் ஹஜ்ஜையும் நிறைவாக நிறைவேற்றுங்கள். உம்ராவையும் நிறைவாக நிறைவேற்றுங்கள் என்று.
 
இந்த வசனத்தை நாம் எடுத்துக் கொண்டபோது, இந்த வசனத்திலிருந்து இரு முக்கியமான படிப்பினைகளை நாம் முதலாவதாக அடையவேண்டும். 
 
ஒன்று என்னவென்றால், அல்லாஹு தஆலா இந்த ஹஜ் உம்ராவை பற்றி சொல்லும் பொழுது ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள். ஹஜ்ஜுக்கு செல்லுங்கள். ஹஜ்ஜுக்கு வாருங்கள் என்ற வாக்கியங்களை பயன்படுத்தாமல் اَتِمُّوا என்ற பதத்திலிருந்து நீங்கள் கம்ப்ளீட் ஆக, முழு நிறைவோடு, முழுமையாக எவ்வித குறையும் இல்லாமல் ஹஜ்ஜை செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அதுபோன்று நோன்பை சொல்லும்பொழுது நோன்பு நோற்கட்டும் என்று சொல்கிறான். தொழுகையை கடமையாக்கியபோது தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். அதனுடைய அத்தனை ஒழுக்கங்கள் சட்டங்கள், நேரங்கள் இப்படி அனைத்தையும் பேனி செய்வதற்காக தொழுகையை நிறைவேற்றுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று அதற்கு சற்றும் குறையாமல் தான் ஹஜ்ஜை பற்றி அல்லாஹு தஆலா குறிப்பிடும் போது اَتِمُّوا நீங்கள் ஹஜ் செய்வது பெருசல்ல. அங்கே நீங்கள் நீண்ட காலம் தங்கியிருப்பது பெருசல்ல. நீங்கள் செய்யக்கூடிய ஹஜ்ஜை முழுமையாகச் செய்யுங்கள். அரைகுறையாக அல்ல. 
 
முழுமையாக செய்வது என்றால் எப்படி? அல்லாஹு தஆலா எப்படி ஹஜ்ஜை கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி செய்து காட்டியிருக்கிறார்கள் என்ற அறிவு இருந்தால்தான், கல்வி ஞானம் இருந்தால்தான் முழுமையாக நாம் நிறைவேற்ற முடியும். 
 
இந்த இடத்தில் இன்னொரு வசனத்தை நாம் நினைவு கூறலாம். இப்ராஹீம் மற்றும்  இஸ்மாயில் அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் கஅபாவை உயர்த்தி கட்டி எழுப்பியதற்கு பிறகு ரப்பிடத்தில் துஆ கேட்கிறார்கள்;
 
وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
 
எங்கள் இறைவா! இந்த ஹஜ் இபாதத்துகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று நீ எங்களுக்கு கற்றுக்கொடு. (அல்குர்ஆன் : 2:128)
 
இந்த ஹஜ் வணக்கங்களை மண்சக் என்று சொல்வார்கள். ஹஜ்ஜுடைய அமல்களுக்கு என்று விசேஷமான ஒரு பெயர். ஹஜ்ஜுடைய மண்சக்குகளை -கிரியைகளை நீ எங்களுக்கு காண்பித்து கற்றுக்கொடு. அதில் நாங்கள் ஏதாவது குறைவு செய்துவிட்டால் தவறிழைத்துவிட்டால மறந்து விட்டால் எங்களை மன்னித்தருள்வாயாக!
 
அன்பானவர்களே! மிக கவனத்தோடு நுட்பமாக நுணுக்கமாக பேணவேண்டிய இபாதத் என்பதை இந்த இரண்டு வசனங்களும் நமக்கு உணர்த்துகின்றன. 
 
ஏதோ கூட்டத்தோடு கூட்டமாக சென்றோம். ஒருவர் செய்வதை பார்த்து ஒருவர் செய்தார். இப்படியாக ஒரு கூட்டமாக சென்று எதையும் புரியாமல் ஏன் செய்கிறோம்? ஏன் விடுகிறோம்? எதற்காக? எப்படி? என்ற விளக்கங்கள் எல்லாம் இல்லாமல் சடங்குகளாக அல்லது கற்பனையாக அல்லது தவறான வழிகாட்டுதலாக சென்று, அங்கே தங்கிவிட்டு சில அமல்களை செய்துவிட்டு வருவதற்கு பெயர் ஹஜ் அல்ல. 
 
பரிபூரணமாக நிறைவேற்றுங்கள் என்று சொல்லும்போது அதை கற்றால்தான் அதை முறையாகப் படித்து தெரிந்து கொண்டால்தான் அது சாத்தியம்.
 
ஆகவே, இந்த இடத்தில் அல்லாஹ் சொல்லி இருக்கக் கூடிய வசனத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நம்மிடமிருந்து எந்த ஒரு சிறிய பெரிய அமலோ ஹஜ்ஜில் தவறவிடக்கூடாது. ஒவ்வொரு ஒழுக்கத்தையும் கற்று அதன்படி செய்ய வேண்டும் என்ற ஒரு கொள்கை உறுதியோடு ஹஜ்ஜுக்குச் செல்பவர் இந்த ஹஜ் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அல்லாஹ் உடைய இந்த வசனம் அல்பகரா உடைய 196 ஆவது வசனம் உணர்த்துவதை நாம் பார்க்கிறோம். 
 
இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான படிப்பினை என்னவென்றால், அல்லாஹ் சொல்கிறான், லில்லாஹி -அல்லாஹ்வுக்காக முழுமைப்படுத்துங்கள். 
 
ஹஜ் உம்ரா செய்ய வருபவர்களுக்கு இக்லாசை அல்லாஹுத்தஆலா நிபந்தனையாக சொல்கிறான். இதைபற்றி முந்தைய ஜும்ஆவில் கொஞ்சம் விளக்கமாக நாம் கூறினோம். 
 
மனத்தூய்மையோடு அல்லாஹ் ஒருவனுக்காக என்னுடைய ரப்புடைய வீட்டை அந்த ரப்பின் மீது உண்டான பாசத்தினால் அந்த ரப்பின் மீது உண்டான பயத்தினால் அல்லாஹ்வுடைய அந்த புகழை மட்டுமே நாடி செய்கிறேன் என்ற எண்ணம் வரவேண்டும்.
 
இன்று பார்க்கிறோம்; விளம்பரமாக ஆக்கி கொண்டிருக்கிறார்கள். வணக்க வழிபாடுகளை பகட்டாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். எதை எதையெல்லாம் அவர்கள் வெளி உலகுக்கு சொல்வது என்று தெரியாமல் அவர்கள் ஹஜ்ஜையும் ஒரு கேளிக்கையாக ஒரு விளையாட்டாக ஆக்கி இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக. 
 
எனவேதான், சூரா ஆல இம்ரான் உடைய 97 -வது வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்;
 
وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ
 
அல்லாஹ்வுக்காக மக்கள் மீது கடமையாக இருக்கிறது, அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ் செய்ய வருவது. (அல்குர்ஆன் 3 : 97)
 
ஆக, இரண்டு வசனங்களிலும் அல்லாஹு தஆலா மிக அழுத்தமாக நமக்குச் சொல்கிறான். ஹஜ்ஜுடைய அந்த வணக்க வழிபாடுகளை உம்ரா உடைய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு என்று நிறைவேற்ற வேண்டும்.
 
இந்த ஹஜ் என்பது ஒரு நீண்ட வணக்கம். உம்ரா என்று சொல்லும்பொழுது அது ஒரு சுருக்கமான வணக்கம். ஹஜ் உம்ரா இந்த இரண்டிலும் சில அமல்கள் ஒற்றுமையாக இருக்கும். மற்ற சில அமல்கள் ஹஜ்ஜில் அதிகமாக இருக்கும் உம்ராவில் இருக்காது. 
 
உம்ரா என்பதற்கு என்ன பொருள் என்றால், அல்லாஹ்வுடைய வீட்டை செழிப்பாக்குவது. அல்லாஹ்வுடய வீட்டை நிறைவாக ஆக்குவது,  அதாவது அல்லாஹ்வுடைய வீட்டை தவாப் செய்து, ஸஃயீ செய்து, அங்கே தங்கி இபாதத் செய்வதற்காக செல்கிறார்கள் அல்லவா! அவர்கள் அல்லாஹ்வுடைய வீட்டை வீணாக இல்லாமல், காலியாக விட்டு விடாமல், தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஒரு கூட்டத்திற்கு பின் ஒரு கூட்டமாக அங்கே சென்று தங்கி இபாதத் செய்வதால் அல்லாஹ்வுடைய வீடு செழிப்பாக, வணக்க வழிபாடுகளால் செழிப்பாக இருக்கின்ற காரணத்தால் அந்த வணக்கத்திற்கு உம்ரா என்று சொல்லப்படுகிறது.
 
ஹஜ் என்றால் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடி அல்லாஹ்வுடைய வீட்டிற்கு செல்வது. ஹஜ் என்று சொன்னால் அல்கஸ்த் என்று சொல்லப்படும். அல்லாஹ்விற்காக ஒன்றை நாடுவது. 
 
பொதுவாக ஹஜ் என்பதற்கு அகராதி அர்த்தம் நாடுவது அரபியில் اراد என்று சொல்வார்களே அதே அர்த்தத்தை உடைய வார்த்தை தான் ஹஜ் என்பது. 
 
அப்போது உங்களுக்கு கேள்வி வரலாம். ஏன் அந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாமல் இந்த இடத்தில் ஹஜ் என்ற வார்த்தையை இந்த இபாதத்துக்காக பயன்படுபடுத்தகிறது என்றால், அல்லாஹ் ஒருவனை மட்டுமே ரப்புடைய வீட்டுக்கு வருவது. 
 
பிறகு அந்த ரப்புடைய கட்டளையின்படி தூதருடைய வழிகாட்டுதலின்படி அங்கே தங்கி நம்முடைய அறிவு நம்முடைய மதிப்பு மரியாதை இவை அனைத்தையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு, தன்னை ஒரு அடிமையாக வெளிப்படுத்தி, அல்லாஹ்வை மட்டுமே நாடி அந்த அமல்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பது. 
 
அந்த வணக்கத்திற்கு இந்த ஹஜ் என்ற பெயரை மார்க்கத்தில் வைக்கப்படுகிறதே! அங்கே என்ன தாத்ரியம் என்றால் அல்லாஹ்வை மட்டுமே நாடுங்கள் ஹஜ் என்பதற்கு அல்லாஹ்வை மட்டும் நாடி அல்லாஹ்வுடைய வீட்டிற்கு வருவது.
 
அன்பானவர்களே! இந்த உம்ரா ஹஜ் இரண்டிலும் பொதுவான அமல்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அவை மூன்று அமல்கள் உம்ராவிலும், ஹஜ்ஜிலும் இருக்க வேண்டிய பொதுவான அமல்கள் இது. அந்த ஹஜ் உம்ரா உடைய ருக்னு. மார்க்கத்தில் ருக்னு என்று சொன்னால் எதை விடுவதால் அந்த அமல் பாத்தில் ஆகிவிடுமோ அதற்கு ருக்னு என்று சொல்லப்படும்.
 
உதாரணமாக, தொழுகையில் நிலை நிற்பது இருக்கிறது, குர்ஆன் ஓதுவது, ருகூவு செய்வது, சுஜூத் செய்வது, கடைசியில் அத்தஹிய்யாத்தில் உட்காருவது, இவற்றில் ஒன்றை விட்டுவிட்டால் அவருடைய தொழுகையே பாத்தில் ஆகிவிடும். மீண்டும் அவர் தொழுதாக வேண்டும். இப்படிப்பட்ட செயல்களுக்கு ருக்னு என்று சொல்லப்படும். 
 
இத்தகைய ருக்னு உம்ராவிலும், ஹஜ்ஜிலும் மூன்று பொதுவான ருக்னுகளும் ஹஜ்ஜுக்கு என்று தனி விசேஷமாக இந்த மூன்றோடு சேர்த்து ஒன்றும் இருக்கிறது. 
 
அதாவது ஹஜ் உம்ரா உடைய வணக்கத்தை யார் நாடுவார்களோ, அவர்கள் விமானம் வழியாகச் சென்றாலும் சரி, தரை வழியாகச் சென்றாலும் சரி, மக்காவில் நெருங்குவதற்கு குறிப்பிட்ட ஒரு தொலை தூரத்திற்கு முன்னால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில எல்லைகளை நிர்ணயித்து இருக்கிறார்கள். 
 
அந்த எல்லைகளை உம்ரா உடைய பயணியோ, அல்லது ஹஜ்ஜுடைய பயணியோ ஒரு கட்டுப்பாடும், இந்த ஹஜ் உம்ரா உடைய நிய்யதும் இல்லாமல் தாண்டக்கூடாது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யார் ஹஜ்ஜுக்காக உம்ராவுக்காக வருவார்களோ, அவர்கள் மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பாக மக்கா நகரத்திலிருந்து பல மைல் தொலைவிலேயே உதாரணத்திற்கு மதினாவை எடுத்துக்கொண்டால் மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் ஏறக்குறைய 450 கிலோ மீட்டர் மதினாவிலிருந்து புறப்படக்கூடிய ஒருவர் மதினா நகரத்தில் இருந்து புறப்பட்டு ஒரு பத்தாவது கிலோமீட்டரில் அவர் தாண்டும் போது துல்குளைஃபா என்ற இடம் இருக்கிறது. அந்த இடத்தை அவர் இஹ்ராம் இல்லாமல் தாண்டக் கூடாது. 
 
அப்படிப் பார்த்தால் மக்கா நகரத்திற்கும் மதினாவில் இருந்து வரக் கூடியவர்கள் இந்த இஹ்ராமை பேண வேண்டிய அந்த இடத்திற்கும் இடையில் 440 கிலோ மீட்டர் தொலைவு அந்த 440 கிலோ மீட்டர்களுக்கு முன்பாகவே அவர் அந்த கட்டுப்பாட்டோடு அந்த நிய்யத்தோடு அந்தத் தர்பியாவோடு வரவேண்டும்.
 
அல்லாஹ்வுடைய நகரம் அவ்வளவு புனிதமான நகரம் என்பதை அல்லாஹு தஆலா இந்த இஹ்ராம் என்ற இபாதத்தின் மூலமாக வெளிப்படுத்துகின்றான்.
 
மரியாதையும் கண்ணியத்திற்கும் உரிய அந்த பேரரசனுடைய ஊருக்கு அவனுடைய இபாதத்தை செய்ய வரும்போது இந்த பணிவோடு தான் நீ வரவேண்டும்.
 
நீ உலகத்தில் அரசனாக, மந்திரியாக, பெரிய தலைவனாக, செல்வந்தராக இருக்கலாம். ஆனால் ரப்புக்கு முன்பு இந்த பணிவோடு வந்தால் தான் உன்னை அந்த ரப்பு அவனுடைய அப்தாக ஏற்றுக்கொள்வான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் சொன்னார்கள்,
 
هُنَّ لَهُنَّ، وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ مِمَّنْ أَرَادَ الحَجَّ وَالعُمْرَةَ
 
நான் நிர்ணயிக்கக்கூடிய இந்த எல்லைகள் மீகாத். அதாவது மக்காவிலிருந்து இப்போது சொன்னதுபோன்று அந்த குறிப்பிட்ட தொலைவில் உள்ள சில இடங்களில் இருந்து வரும்பொழுது 450 கிலோமீட்டர் சிலது 90 சிலது 170 இப்படியாக இந்த மீகாத் யாரு ஹஜ்ஜுக்காக உம்ராவிற்காக வருகிறார்களோ அவர்கள் இந்த மீகாத்தை கடக்கக் கூடாது. 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1524.
 
இஹ்ராம் என்று சொன்னால் அந்த உம்ராவோ அல்லது ஹஜ்ஜோ எந்த இபாதத்தை நாடுகிறாரா, அந்த நிய்யத்தோடு அந்த நிய்யத்தை அங்கே செய்து தர்பியா ஓத வேண்டும். அதற்கு பிறகு தடுக்கப்பட்ட காரியங்களை விட்டு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 
எப்படி ஒருவர் தொழும்பொழுது அல்லாஹு அக்பர் என்று சொல்வது تكبيره التحريم،تكبيره الاحرام என்று சொல்லப்படும். உளு செய்துவிட்டு வந்து விடுகிறார், அதற்குப் பிறகு பேசலாமா பேசக்கூடாதா, பேசலாம் வேற வேலைகள் செய்யலாமா, செய்யலாம். இங்கும் அங்கும் திரும்பி பார்க்கலாமா, பார்க்கலாம். 
 
ஆனால் உளு செய்து வந்து விட்டவர் தொழுகைக்காக நின்று அல்லாஹ் அக்பர் என்று சொல்லி விட்டால், அந்த தொழுகின்ற இடத்தைத் தவிர அவருடைய பார்வையே வேறு பக்கம் திரும்பக்கூடாது. வேறு விஷயங்களை பேசக்கூடாது. குர்ஆன் ஓதுவதை தவிர, திக்ரு செய்வதைத் தவிர, தொழுகையைத் தவிர, வேறு அமல்கள் அவர் செய்யக்கூடாது. 
 
சாப்பிட்ட உணவில் ஒரு சில பருக்கைகள் அவருடைய பல்லில் இருந்தாலும் கூட அதை கூட அவர் மென்று விழுங்கிவிட கூடாது. 
 
இப்படிப்பட்ட பேணிக்கைகளை அந்த தக்பீர் ஏற்படுத்துகிறது. எனவேதான், அதற்குப் பெயர் تكبيره التحريم அல்லது تكبيره الاحرام. 
 
அதுபோன்று தான் அந்த மீகாத்தில் நான் ஹஜ்ஜை நாடுகிறேன், உம்ராவை நாடுகிறேன், தொழுகைக்கு எப்படி அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையோ அதுபோன்று ஹஜ் உம்ராவுக்கு லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லப்பைக் லாஷரீக லக லப்பைக் இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க் லா ஷரீகலக் இந்த தர்பியாவை இது தல்பியத்துல் இஹ்ராம் என்று சொல்லப்படும். இதை அவர் ஓத வேண்டும். இதை அவர் ஓதியதற்கு பிறகு பல விஷயங்கள் தடுக்கப்படும்.
 
தைக்கப்பட்ட ஆடைகளை ஆண்கள் அணியக் கூடாது. முகத்தை மறைக்கக் கூடாது. தலைக்கு தொப்பி துண்டு போன்றவற்றை அணியக்கூடாது. காலுறைகள் அணியக் கூடாது. ஷூக்கள் போடக்கூடாது.  தன்னுடைய நகங்களை வெட்டக் கூடாது. தன்னுடைய உடலின் முடிகள் எதையும் சிரைக்க கூடாது. பிடுங்கக்கூடாது. நறுமணம் பூசக்கூடாது. 
 
இஹ்ராமுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த அமல்கள் எல்லாம் அவருக்கு தடுக்கப்பட்டதாக ஆகிவிடும். தன்னுடைய மனைவியை அவர் இச்சையோடு பார்க்கக் கூடாது. இச்சையோடு மனைவியிடத்தில் பேசக்கூடாது. தன்னுடைய மனைவியிடத்தில் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. 
 
இப்படிப்பட்ட ஹலாலான விஷயங்கள் எல்லாம் இந்த தல்பியாவிற்கு அவருக்கு ஹராமாக ஆகிவிடுகிறது. தடுக்கப்பட்ட ஒன்றாக ஆகிவிடுகிறது.
 
அதைத்தான் இஹ்ராம் என்று சொல்லப்படும். இந்த இஹ்ராம் உம்ராவுக்கும் தேவை. ஹஜ்ஜுக்கும் தேவை. இந்த இஹ்ராம் இல்லாமல் ஒருவர் மீகாத்தை கடந்துவிட்டால் அவருடைய ஹஜ் உம்ரா நிறைவேறாது. அவர் திரும்ப மீகாத்திற்கு வந்து தல்பியா கூறி செல்ல வேண்டும். 
 
ஆகவே ஹஜ் உம்ரா இரண்டுக்கும் பொதுவான மூன்று ருக்னுகளில் முதலாவது இஹ்ராம், இந்த இஹ்ராம் என்பது மீகாத்தில் செய்யப்படும். உம்ரா செய்பவர், அல்லாஹ்வே! நான் உம்ராவுக்காக தல்பியா சொல்கிறேன். யார் ஹஜ்ஜை நாடி வருகிறார்களோ அவர்கள் ஹஜ் தமத்து செய்வார்கள் தமத்து செய்யக்கூடியவர்கள், யா அல்லாஹ்! நான் உம்ராவுக்காக தல்பியா சொல்கிறேன், பிறகு உம்ராவை முடித்து நான் ஹஜ் செய்வேன் என்று இந்த நிய்யத்தோடு கலந்துவிட்ட தல்பியாவை கூறிவிட்டு பிறகு,
 
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك و الملك لا شريك لك
 
என்ற தல்பியாவை அவர் ஓதுவார். ஆகவே உம்ரா ஹஜ் உடைய முதலாவது அந்த ருக்னு இரண்டுக்கும் பொதுவான முதலாவது ருக்னு, இஹ்ராமாக இருக்கிறது. 
 
இரண்டாவதாக தவாஃப். யார் உம்ரா ஹஜ் உடைய அந்த நிய்யத்தில் இஹ்ராமை முடித்துவிட்டு அவர் மக்காவிற்கு வருகிறார்களோ, அவர்கள் செய்யவேண்டிய இரண்டாவது அமல் தவாஃப்.
 
தவாஃப் என்பது அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ்ருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து நம்முடைய இடது பக்கத்தை கஅபாவின் பக்கம் வைத்தவர்களாக, கஅபாவை இடது பக்கத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத்திலிருந்து ஆரம்பித்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை இப்படியாக ஏழு சுற்றுகள் சுற்றுவது, ஒரு தவாஃப் ஆகும். ஏழு சுற்றுகளை கொண்டது ஒரு தவாஃப்.
 
இது ஹஜ் உம்ராவுக்கு இரண்டுக்கும் பொதுவான இரண்டாவது ருக்னு. இதுவும் கட்டாயமான ஒன்று. இது இல்லை என்று சொன்னால் அவருடைய ஹஜ்ஜுடைய வணக்கம் நிறைவேறாது. உம்ரா செய்பவர் இங்கிருந்து சென்றவுடனயே இஹ்ராம் முடிந்த உடனேயே அவர் தவாபை செய்து விடுவார். 
 
ஹஜ்ஜுக்காக செல்பவர்கள் ஹஜ் تمتع செல்பவர்களோ قران குருபானியை அவர்களை அழைத்துச் செல்பவர்கள், யார் தன்னோடு தனது ஊரிலிருந்தே குர்பானிப் பிராணியை தன்னோடு எடுத்துச் சொல்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் ஹஜ் قران செய்யலாம். 
 
மற்றவர்களுக்கு ஹஜ் قران க்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதி அளிக்கவில்லை. 
 
இது ஒன்று. இரண்டாவது, ஹஜ் افراد என்றால் என்ன? அதை விளங்க வேண்டும். ஹஜ் قران என்றால் ஒரு இஹ்ராமில் உம்ராவையும் ஹஜ்ஜையும் நிறைவேற்றுவது. இங்கிருந்து எந்த இஹ்ராமில் அவர்கள் செல்கிறார்களோ, உம்ராவை முடித்துவிட்டு இஹ்ராமுடைய ஆடையைக் களையாமல் அதே கட்டுப்பாட்டில் இருப்பார்கள். அவர்கள் ஹஜ்ஜுடைய அமல்களை முடிக்கின்ற வரை நீண்டகாலம் சிரமமான ஒன்று. 
 
இது யாருக்கு அனுமதிக்கப்பட்டது என்றால், யார் தங்களது ஊரிலிருந்து வரும் பொழுது குர்பானிப் பிராணியை கையோடு கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. அப்படி இல்லை என்றால் ஒருவர் ஹஜ் قران உடைய நிய்யத்தில் வந்திருந்தாலும் கூட, ஒருவர் தனது ஊரில் இருந்து புறப்படும் பொழுது ஹஜ் கிரான் அதாவது உம்ரா உடைய இஹ்ராமிலேயே ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்வேன். இஹ்ராமை கலையாமல் என்று அவர் நிய்யத் வைத்து வந்திருந்தாலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமுடைய கட்டளை அவர் மக்கா வந்தவுடன் உம்ராவை முடித்து முடி இறக்கி அவர் இஹ்ராமை கலைந்து விடவேண்டும். 
 
அதற்குப் பிறகு அவர் ஹஜ்ஜுக்காக பிறை எட்டு அன்று புதிதாக இஹ்ராம் அணிந்து வரவேண்டும். அடுத்து ஹஜ் இஃப்ராத். அதாவது, ஹஜ் மட்டும் இஹ்ராமில் நிய்யத் வைப்பது, ஹஜ்ஜுக்காக மட்டும் உம்ரா இருக்காது, சில வெளியூர் பயணிகள், உதாரணமாக இந்தியா பாகிஸ்தான் இந்த மாதிரி வெளிநாடுகளிலிருந்து மக்காவிற்கு வரக்கூடிய சில ஹஜ் பயணிகள், ஒன்று அறியாமையினால் அல்லது அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். கஞ்சத்தனத்தால் கருமிதனத்தால் இந்த ஹஜ் இஃப்ராத்தை செய்வார்கள். 
 
ஹஜ் இஃப்ராத் என்றால் இஹ்ராம் நிய்யத் வைக்கும் பொழுது ஹஜ்ஜுக்காக மட்டும் நிய்யத் வைப்பது. உம்ரா அங்கே இருக்காது. இந்த ஹஜ் இஃப்ராத் என்பது யார் மக்காவில் இருக்கிறார்களோ, மக்காவாசியாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. 
 
யார் வெளியூர்களில் இருக்கிறார்களோ அவர்களுக்கு இது அனுமதிக்கப்பட்டது அல்ல. இந்த ஹஜ் இஃப்ராதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஹஜ் கிரான், ஹஜ் தமத்து, இந்த இரண்டிலும் கண்டிப்பாக ஹஜ்ஜுக்கு வருபவர்கள் குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும். அவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும். 
 
ஹஜ் இஃப்ராத் செய்பவர்களுக்கு குர்பானி மன்னிக்கப்பட்டது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது இறுதி காலத்தில் ஹஜ் செய்த போது வெளியூர் பயணிகள் அனைவரும் யார் குர்பானியை எடுத்து வரவில்லையோ, அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக தங்களது ஹஜ்ஜை ஹஜ் தமத்துஆக மட்டுமே ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று கட்டளையாக சொல்லிவிட்டார்கள். 
 
யார் தன்னோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் கிரான் செய்வதற்கு அனுமதி. யார் மக்காவிற்குள் இருக்கிறார்களோ, அவர்கள் ஹஜ் செய்வதற்கு ஹஜ் இஃப்ராத் இந்த வெளியூரில் இருந்து வரக் கூடியவர்கள் இந்த ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடாது. 
 
ஆனால் அறியாமையினாலோ அல்லது இந்த 450 ரியால் கட்டி குர்பானி கொடுப்பதற்கு கஞ்சத்தனபட்டோ சில நமது நாடுகளில் இருந்து செல்லக்கூடிய ஹஜ் பயணிகளும் ஹஜ் இஃப்ராத் செய்வதைப் பார்க்கிறோம். இது மார்க்கத்தை மீறக்கூடிய ஒரு செயல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
ஆகவே, இந்த ஹஜ் செய்யக் கூடியவர்கள் அவர்களுடைய ஃபர்லான தவாஃப் என்பது பிறை 10 அன்று கல்லெறிந்து விட்டு, மக்காவிற்கு வந்து தவாஃப் செய்வார்கள். அது ஹஜ்ஜில் செய்யக்கூடிய பர்லான தவாஃப், உம்ராவில் செய்யக்கூடிய பர்லான தவாஃப் என்பது, இஹ்ராமை நாம் இங்கிருந்து மீகாத்திலிருந்து முடித்துவிட்டு செல்லும் பொழுது மக்காவில் போய் தங்கியவுடன் அங்கிருந்து கஅபத்துல்லாஹ்விற்கு புறப்பட்டு செய்யக்கூடிய தவாஃப் என்பது ஒரு தவாஃப் என்பது, உம்ராவும் ஹஜ்ஜிலும் ருக்னான ஒன்று உம்ராவில் இங்கிருந்து சென்ற உடனேயே அதை நிறைவேற்றி விடுவோம்.
 
பிறை 10 அன்று அதனுடைய நேரம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. தவாஃப் சியாரா என்று அதற்கு சொல்லப்படும். அல்லது தவாஃபுல் இஃபாதா என்று சொல்லப்படும். ஃபர்லான தவாஃப் அந்த பிறை பத்திலிருந்து அவர் துல்ஹஜ் மாதம் இறுதிக்குள் தன்னுடைய ஊருக்கு திரும்புவதற்கு முன்பாக அந்த தவாஃபை செய்து விட வேண்டும். 
 
அதை அவர் செய்து முடித்தால்தான் அவருடைய மனைவி அவருக்கு ஹலாலாக ஆக முடியும். இல்லையென்றால் அவர் அந்த ஹஜ் உடைய இபாதத்தில் தான் இருப்பார்கள். மனைவி ஹலாலாக மாட்டாள். இப்படி இந்த துல்ஹஜ் மாதத்திற்குள் பயணம் திரும்புவதற்குள் அந்தத் தவாஃபை தவாஃப் சியாரா என்று சொல்லப்படக்கூடிய ஹஜ் உடைய ஃபர்லான தவாஃபை முடிக்க முடியும். 
 
மூன்றாவதாக அதாவது உம்ரா ஹஜ் இரண்டுக்கும் பொதுவான ருக்னுகள் கட்டாய கடமைகளில் மூன்றாவது ஸயீ. 
 
அதாவது காபாவிற்கு வலது பக்கத்தில் இருக்கக்கூடிய ஸஃபா மலை பிறகு அதற்கு நேர் எதிர் திசையில் இருக்கக்கூடிய மர்வா மலை, இந்த இரண்டு மலைகளுக்கு இடையில் ஸஃபாவில் ஆரம்பித்து முதலாவது சுற்றாகவும் மர்வாவில் ஆரம்பித்து ஸஃபா இரண்டாவது சுற்றாகவும் இப்படியாக சுற்றுகளை கடைசியாக ஏழாவது சுற்று மர்வாவில் அவர் முடிக்க வேண்டும். இப்படி ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஏழு சுற்றுகள், அதற்கு மார்க்கத்தில் ஸயீ என்று சொல்லப்படும்.
 
ஸஃபாவில் ஆரம்பிப்பார். மர்வாவில் முடிப்பார். பிறகு மர்வாவிலிருந்து ஸஃபா இரண்டாவது, பிறகு ஸஃபாவிலிருந்து மர்வா மூன்றாவது, மர்வாவிலிருந்து ஸஃபா, நான்காவது, ஸஃபாவிலிருந்து மர்வா ஐந்தாவது, மர்வாவிலிருந்து ஸஃபா ஆறாவது, ஸஃபாவிலிருந்து மர்வா ஏழாவது அத்தோடு ஸயீ முடிவடைந்துவிடும். 
 
இந்த மூன்று விஷயங்களும் அதாவது இஹ்ராம் மீகாத்தில் தல்பியா ஓதி அந்த கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவது. இரண்டாவது தவாஃப் செய்வது, மூன்றாவது ஸயீ செய்வது.
 
இந்த மூன்றும் ஹஜ் உம்ரா இரண்டுக்கும் பொதுவான ருக்னுகள். இதில் எதை விட்டாலும் சரி, உம்ரா நிறைவேறாது, ஹஜ் நிறைவேறாது.
 
அடுத்து இந்த மூன்றோடு சேர்த்து ஹஜ்ஜுக்கு நான்காவது ஒரு ருக்னு இருக்கிறது. ஹஜ்ஜுக்கு 4 ருக்னுகள் தேவை. உம்ராவுக்கு மூன்று மட்டும். அந்த ஹஜ்ஜுக்குள்ள நான்காவது ருக்னு என்ன? அதுதான் அரஃபா மைதானத்தில் சில நேரமாவது தங்குவது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,
 
الحج عرفة
 
ஹஜ் என்பது அரஃபா தான். 
 
அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் இப்னு யஃமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 889.
 
ஆகவே யார் ஒருவர் பிறை 10 உடைய அதிகாலை சுபுஹ் நேரம் வருவதற்கு முன்பாக குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது அந்த அரஃபா மைதானத்தில் தங்க வில்லையோ, ஹஜ்ஜுடைய அந்த மாதத்தில் பிறை 9 தில் 9 உடைய காலையிலிருந்து ஆரம்பித்து பிறை பத்தின் உடைய விடியற்காலை சுபுஹ் தொழுகைக்கு முன்பாக ஆரம்பித்து, அந்த அரஃபா மைதானத்தில் சில நிமிடங்களாவது யார் தங்க வில்லையோ, அவருக்கு ஹஜ் தவறிவிட்டது. 
 
ஆகவே ஹஜ் உடைய ருக்கூன்களை பொறுத்தவரை நான்கு ருக்னுகள் உள்ளன. ஒன்று, இஹ்ராம் இருக்க வேண்டும். இரண்டாவது, பிறை 10 அன்று அல்லது அதற்குப் பிறகு தவாஃப் சியாரா செய்ய வேண்டும். பிறகு ஸயீ செய்ய வேண்டும். பிறகு ஹஜ் உடைய அந்த முக்கியமான அரஃபா 9 அன்று அரஃபாவில் தங்க வேண்டும். 
 
இப்படி 4 அமல்கள் ஹஜ்ஜுக்காக உள்ள ருக்னுகளாக இருக்கின்றன. உம்ராவுக்கான ருக்னுகள் 3 ருக்னுகள், 1, இஹ்ராம். இரண்டாவது, தவாப். மூன்றாவது, ஸயீ. 
 
அடுத்து இந்த ஹஜ்ஜுக்காக உம்ராவிற்காக வாஜிபுகள் இருக்கின்றன. முதலாவது ருக்னு. அந்த ருக்னுக்கு அடுத்து வாஜிபுகள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ருக்னுக்கும் வாஜிபுக்கும் இடையில் எப்படி வித்தியாசப்படுத்தினார்கள்? எதனால் நாம் ஒன்றை ருக்னு கட்டாயக் கடமை என்று சொல்கிறோம்? எதனால் ஒன்றை வாஜிபு கட்டாயக் கடமை இல்லை, ஆனால் மிக அவசியமான ஒன்று என்று சொல்கிறோம் என்றால், எதை விட்டதால் எதை குறைந்துவிட்டதால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இபாதத்து பாத்திலாகிவிட்டது என்று முடிவு செய்தார்களோ அது ருக்னு என்றும், எது விடப்பட்டதால் குர்பானி பிராணி கொடுத்து அந்த குறையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார்களோ அதை வாஜிபு என்று சொல்கிறோம்.
 
உதாரணத்திற்கு தொழுகையில் ஃபாத்திஹா சூரா ஓதியதற்கு பிறகு இன்னொரு சூரா ஓத வேண்டும். மறந்துவிட்டார். ருக்குவு செய்துவிட்டார், இப்போது சஜ்தா சஹ்வு செய்து அவர் அந்த குறையை நிவர்த்தி செய்துகொள்ளலாம். 
 
ஒருவர் ருக்கூ செய்யாமல் தொழுது விட்டார். கடைசி இருப்பில் இருக்கும் போதுதான் அவருக்கு ஞாபகம் வருகிறது. ஒரு ரக்அத் உடைய ருக்உ செய்யவில்லை அல்லது ஒரு ரக்அத்தில் ஃபாத்திஹா சூராவை ஓதவில்லை, கடைசி நேரத்தில்தான் ஞாபகம் வருகிறது. இப்போது அவர் தொழுகையை திருப்பித்தான்  தொழ முடியும். இதைத்தான் ருக்னு என்று சொல்வார்கள்.
 
அதுபோன்றுதான் ஹஜ் உடைய அமல்களில் எது விடுபடுவதால் ஹஜ் முழுமையாக பாழாகி விடுகிறதோ, மீண்டும் அவர் ஹஜ் செய்தாக வேண்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தீர்ப்பு கூறினார்களோ, அது ஹஜ் உம்ரா உடைய ருக்கூன்கள் என்றும், எதை விட்டு விட்டதனால், மறந்துவிட்டதனால் அதற்கு பரிகாரம் செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார்களோ அதை வாஜிப் என்றும் சொல்கிறோம்.
 
அந்த அடிப்படையில் உம்ரா உடைய வாஜிபுகள், அதுபோன்று ஹஜ் உடைய வாஜிபுகள் என்று பார்க்கும்பொழுது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஹஜ் உம்ராவுக்காக யார் வருவார்களோ, அவர் ஹஜ் உடைய உம்ரா உடைய வணக்கத்தை முடித்ததற்கு பிறகு அவர்கள் حلق அதாவது முடியை முற்றிலுமாக சிரைத்துக்கொள்வது, அல்லது முடியை முற்றிலுமாக குறைத்து கொள்வது, இது உம்ரா உடைய வணக்க வழிபாடுகளில் வாஜிபான ஒன்று. 
 
உம்ரா உடைய வணக்க வழிபாடுகள் மொத்தமே நான்கு தான். அந்த நான்கில் முதல் மூன்று ருக்னு கட்டாயமான ஒன்று. அதாவது இஹ்ராம், இரண்டாவது தவாஃப், மூன்றாவது ஸயீ, இந்த மூன்றும் ருக்னுகளின் வகைகளைச் சார்ந்தது.
 
நான்காவது முடி இறக்கி அல்லது முடியின் உடைய பெரும் பகுதிகளை குறைத்து அந்த உம்ராவை முடிப்பது. இது வாஜிபாக இருக்கிறது. அதுபோன்றுதான் இதுவும் ஹஜ் உடைய வணக்க வழிபாட்டில் வாஜிபாக இருக்கிறது. 
 
இன்னொரு விஷயத்தை முக்கியமாக நாம் கவனித்தாக வேண்டும். அதாவது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீகாத் என்ற அந்த எல்லையை நிர்ணயித்தார்கள் அல்லவா, ஒருவர் இஹ்ராமை மாற்றுவதற்கு முன்பாக அந்த மீகாத்தை கடந்த விடுகிறார். 
 
கடந்ததற்கு பிறகுதான் தான் மீகாத்தை கடந்து விட்டோம் என்பது அவருக்கு ஞாபகம் வருகிறது. இப்போது இவர் என்ன செய்வது? ஒன்று, இவர் அந்த மீகாத்திற்கு திரும்பச் சென்று அங்கே தனது உடையை மாற்றி தல்பியா சொல்லி வர முடிந்தால் கண்டிப்பாக அவர் அங்கே திரும்ப சென்று வர வேண்டும். 
 
அப்படியில்லையென்றால் எந்த இடத்தில் இவருக்கு ஞாபகம் வந்ததோ அந்த இடத்தில் தன்னுடைய உடைகளை மாற்றிக்கொண்டு தல்பியா ஓதி வர வேண்டும். மீகாத்தில் மாற்ற வேண்டிய அந்த வாஜிபை அவர் விட்டதற்காக குர்பானி -பலிப் பிராணி கொடுத்து அவர் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
 
யார் திரும்பச் சென்று அந்த இடத்தில் இஹ்ராமை மாற்ற முடியும் என்று இருக்கிறதோ அவர்கள் திரும்ப செல்வார்கள். யார் யார் திரும்பச் செல்ல முடியாது என்று இருக்குமோ உதாரணத்திற்கு நமது இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து விமானத்தின் மூலமாக வரக்கூடியவர்கள், அந்த மீகாத்தில் இஹ்ராமை விட்டதற்காக வேண்டி அவர்கள் அதாவது ஒரு பலி பிராணியை கொடுத்து அந்த குறையை நிவர்த்தி செய்து கொள்வார்கள்.
 
ஆனால், கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ்வுடைய வீட்டிற்குள் மக்காவிற்கு வந்து தவாஃப் செய்வதோ அதற்கு பிறகு ஸயீ செய்வதோ கண்டிப்பாக இஹ்ராம் இல்லாத நிலையில் கூடாது. 
 
மக்காவிற்குள் நுழைந்து கஅபத்துல்லாஹ்வில் தவாஃப் செய்வதோ, ஸயீ செய்வதோ, அவர் இஹ்ராம் இல்லாத நிலையில் செய்தால் அது உம்ரா உடைய தவாஃப் ஆக ஆகாது. உம்ரா உடைய ஸயீ ஆகாது. அவர் சாதாரணமாக செய்த தவாஃபாக ஸயீயாக ஆகும். 
 
அதற்காக அவர் மிகப்பெரிய குற்றவாளியாக ஆவார். அதாவது அல்லாஹ் உடைய புனிதங்களை மதிக்காது, அல்லாஹ்வுடைய புனிதங்களை பாழாக்கிய குற்றவாளியாக அவர் ஆகுவார். அல்லாஹ் பாதுகாப்பானாக.
 
ஆக, உம்ராவில் கட்டாய கடமை என்று நாம் மூன்று விஷயங்களைப் பார்த்தோம். ஒன்று இஹ்ராம்  இரண்டாவது தவாஃப், மூன்றாவது ஸயீ. 
 
அதற்குப் பிறகு வாஜிப் என்று நாம் பார்க்கும் பொழுது அந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து தல்பியாவை இஹ்ராமை ஆரம்பிப்பது, அதை தவறவிட்டால் அதற்காக அவர் பரிகாரம் கொடுக்க வேண்டும். 
 
அடுத்து உம்ரா உடைய வணக்கம் முடித்தவுடன் முழுமையாக முடியை சிரைப்பதின் மூலமாகவோ, அல்லது முடியை குறைப்பதன் மூலமாகவோ அந்த உம்ரா வணக்கத்திலிருந்து அவர் வெளியேறுவது.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சொல்கிறான்;
 
لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالْحَقِّ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا
 
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்து விட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர்களாகவும், உங்கள் தலை முடிகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்படமாட்டீர்கள். (அப்போது) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான். (அல்குர்ஆன் 48 : 27)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹஜ் உம்ரா உடைய விளக்கங்களை சொல்லும் பொழுது, யார் ஹஜ்ஜுக்காக வந்து அல்லது உம்ராவிற்காக வந்து தங்களுடைய தலைமுடியை முழுமையாக சிரைத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்காக துஆ செய்தார்கள்,
 
للَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
 
யா அல்லாஹ்! முழுமையாக தலையை சிரைத்துக் கொள்பவர்களுக்கு நீ பாவ மன்னிப்பு செய்வாயாக!
 
இது ஆண்களுக்கு தான். பெண்களுக்கு அவர்களுடைய தலைமுடியிலிருந்து விரல் உடைய நுனி அளவுக்கு மட்டும் அவர்கள் குறைத்துக் கொள்வார்கள். அப்போது தோழர்களில் சிலர் கேட்டார்கள், அல்லாஹ்வுடைய தூதரே! தலைமுடியை குறைத்துக் கொள்பவர்களுக்கும் துஆ செய்யுங்கள் என்று. 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,
 
للَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
 
யா அல்லாஹ் தலைமுடியை சிரைத்துக் கொள்பவருக்கு பாவமன்னிப்பு செய்வாயாக. தோழர்கள் மீண்டும் கேட்டார்கள். அல்லாஹ் உடைய தூதரே, தலைமுடியை குறைத்துக் கொள்பவர்களுக்கும் துஆ கேளுங்கள் என்று. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீண்டும் சொன்னார்கள்.
 
للَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
 
யா அல்லாஹ்! தலைமுடியை சிரைத்து கொள்பவர்களுக்கு பாவமன்னிப்பு செய்வாயாக என்று. தோழர்கள் விட்டபாடில்லை. அல்லாஹ்வுடைய தூதரே! தலைமுடியை குறைத்துக் கொள்பவர்களுக்கும் நீங்கள் துஆ கேளுங்களேன். 
 
நான்காவதாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்,
 
وَلِلْمُقَصِّرِينَ
 
தலைமுடியை குறைத்துக் கொள்பவர்களுக்கும் யா அல்லாஹ் நீ மன்னிப்பு செய்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1728.
 
ஆக இந்த ஹதீஸிலிருந்து ஒரு விஷயத்தை நாம் தெரிய வருகிறோம். கண்டிப்பாக தலைமுடியை சிரைப்பது, அல்லது தலைமுடியை குறைப்பது அவசியம். அதில் தலைமுடியை சிரைப்பது. அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மிகப் பிரியமான உண்டு. எனவே தான் அல்லாஹு தஆலா அவனுடைய வேதத்தில் சொல்கிறான்;
 
முதலாவதாக,
 
مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ
 
உங்களது தலை முழுவதையும் முற்றிலும் முழுமையாக நீங்கள் சிரைத்த நிலையில் என்று. (அல்குர்ஆன் 48 : 27)
 
இன்று சில அறிவீனர்கள் செய்வது போன்று அல்ல. தலையுடைய ஒரு பக்கத்தில் இப்படி பிளேடால வெட்டிபாங்க, அதாவது குரைச்சிபாங்க, அல்லது இந்தப் பக்கம் ஒரு பகுதி, அல்லது இந்தப் பக்கம் ஒரு பகுதி, அல்லாஹ் எவ்வளவு தெளிவாக சொல்கிறான். உங்களுடைய தலை முழுக்க முற்றிலும் சிரைத்தவர்கள் مُحَلِّقِيْنَ என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அதனால் தலை உடைய ஒரு பகுதியில் முடியை எடுத்து விடுவதால் அவர் இஹ்ராமிலிருந்து வெளியேறிவிட முடியாது. முழு தலையை அவர் சிரைத்துக்கொள்ள வேண்டும். அல்லது முழுத் தலையிலிருந்து சமமாக அவர் முடியை எடுக்க வேண்டும்.
 
இப்படியாக உம்ராவில் நாம் பார்க்கும் பொழுது மூன்று கட்டாய ருக்னுகளை நாம் பார்க்கிறோம். ஹஜ் தமத்து யார் செய்வார்களோ அவர்கள் முதலாவதாக உம்ராவை முடிக்க வேண்டும். ஹஜ் தமத்து உடைய நிய்யத்தை எப்படி அவர் மீகாத்தை கடக்கும் பொழுது அதற்கு முன்பே இஹ்ராமுடைய நிலையில் தயாராக இருந்து ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் சரி, தொழுகை இல்லாத நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் கூட அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு செய்ய வேண்டிய தயாரிப்புகளை செய்து அவர்கள் மீகாத்தில் தல்பியா ஓதுவதற்கு தயாராக இருப்பார்கள். 
 
இஹ்ராம் இல்லாத நிலையில் மீகாத்தை அவர்கள் கடக்க மாட்டார்கள். ஆனால் அங்கு சென்று தவாஃப் செய்வதை அவர்கள் தாமத படுத்துவார்கள், அவர்கள் தொழுகைக்கு சுத்தமாகின்ற வரை. 
 
ஆகவே மீகாத்தில் இஹ்ராமுடன் தல்பியா ஓதுவது, ஹஜ்-உம்ரா உடைய நிய்யத் வைப்பது என்பது, ஆண்கள் பெண்கள் எல்லோருக்கும். வித்தியாசம் என்ன? ஆண்கள் தைக்கப்பட்ட அனைத்து ஆடைகளையும் களைந்து விட்டு தைக்கப்படாத இரண்டு வெள்ளை நிற ஆடைகளில் இருப்பார்கள். 
 
பெண்களை பொறுத்தவரை அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவர்களுக்கு அதை மன்னித்து விட்டான். அவர்கள் என்ன உடையில் எப்போதும் வீட்டில் இருப்பார்களோ, அந்த உடை அணிந்து கொண்டு அதற்கு மேலாக வீட்டிற்கு வெளியே வரும்பொழுது அணியக்கூடிய ஹிஜாபை அணிந்து கொள்ள வேண்டும். 
 
தலைமுடியெல்லாம் மறைத்திருக்க வேண்டும். முகத்தை மறைப்பதை மட்டும் அல்லாஹ் தடைசெய்து விட்டான். கையுறை அணியக் கூடாது. ஆனால் பெண்களுக்கு காலுறை அணிவதற்கு அனுமதி இருக்கிறது. 
 
ஆண்களுக்கு கையுறையும் அணியக்கூடாது. காலுறையும் அணியக்கூடாது. ஷு போன்ற அதாவது காலுடைய அதாவது கெண்டைக்காலில் மறைக்கக் கூடிய எந்த விதமான காலணிகளை அவர்கள் அணியக்கூடாது. 
 
இப்படியாக இந்த இஹ்ராம் என்பது எல்லாருக்கும் பொதுவானது. ஒரு கட்டாய கடமை. ஆகவே ஹஜ் தமத்து செய்பவர்களும், மீகாத்தில் வந்தவுடன் அவர்கள் எப்படி நிய்யத் செய்வார்கள்,
 
لبيك اللهم عمره متمتعا بها الى الحج
 
யா அல்லாஹ்! உம்ராவுக்காக நான் தல்பியா சொல்கிறேன். உம்ராவை முடித்து நான் சுகம் பெற்று மீண்டும் ஹஜ் செய்வேன் என்ற நிய்யத்தை அவர்கள் வைப்பார்கள். 
 
எனவே, குறிப்பாக இப்போது இந்த ஆண்டில் யார் ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்திருக்கிறார்களோ, அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமான விஷயங்களை இந்த ஜும்ஆவில் நாம் குறிப்பிட்டோம். 
 
முதலாவதாக உம்ரா செய்ய வேண்டும். அந்த உம்ராவில் அவர்கள் மீகாத்தில் நிய்யத் வைத்து தல்பியா சொல்ல வேண்டும். பிறகு கஅபத்துல்லாஹ் வந்து ஹஜருல் அஸ்வத் இருந்து ஆரம்பித்து ஏழு முறை சுற்றி அவரது தவாஃபை முடிக்க வேண்டும். 
 
பிறகு ஸஃபா மர்வா இரண்டு மலைகளுக்கு இடையில் ஸஃபாவிலிருந்து ஆரம்பித்து மர்வா வரை ஏழாவது சுற்றை அவர் முடிக்க வேண்டும். 
 
அதற்குப் பிறகு தலை முடியை சிரைத்தோ அல்லது குறைத்தோ அவர் தன்னுடைய உம்ராவை நிறைவேற்றி கொண்டு ஹஜ்ஜுக்காக அவர் எதிர்பார்த்திருப்பார். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அடைவார். மற்ற விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் அடுத்த அடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம்.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனுடைய இபாதத்தை ஆர்வத்தோடும் ஆசையோடும் மிகப் பேணுதலோடும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை முழுமையாக நிறைவாக அல்லாஹ்வுடைய அச்சத்தோடு பேணக் கூடிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ்ஜுக்காக உம்ராவுக்காக நாடிச் செல்லக் கூடிய ஒவ்வொரு புனித பயணிக்கும் அல்லாஹு தஆலா தவ்ஃபிக் தருவானாக! 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/