ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 3-5 | Tamil Bayan - 472
ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 3
வரிசை : 472
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 04-08-2017 | 12-11-1438
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீனை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வுடைய தக்வாவை பற்றி பிடிக்குமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் அனைவருடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அன்பையும் அருளையும் பெற்ற நன்மக்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணி நடக்கக்கூடிய அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மதித்து நடக்க கூடிய அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீராத நன்மக்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
தொடர்ந்து இரண்டு ஜும்ஆக்களில் ஹஜ் உடைய சிறப்புகள் மற்றும் ஹஜ் சம்பந்தமான சில விஷயங்களை நாம் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவிலும் அடுத்து உள்ள சில ஜும்ஆக்களிலும் ஹஜ்ஜை பற்றிய விஷயங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நம்மில் பலர், ஹஜ் செய்வதற்காக நாடி இருப்பார்கள். அப்படி இதுவரை நாட்டமில்லாதவர்களுக்கு ஹஜ் செய்வதற்கான நாட்டமும் ஆசையும் ஏற்படலாம். ஹஜ் உடைய ஒழுக்கங்களை தெரிந்து கொள்ளும்போது, அதன் மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படலாம்.
அவர்களுடைய குடும்பத்தார்களில் யாராவது ஹஜ்ஜை நாடியிருந்தால் அவர்களுக்கு இந்த விஷயங்களை எடுத்துச் சொல்லலாம் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இந்த ஜும்ஆ குத்பாவில் ஹஜ்ஜினுடைய ஒழுக்கங்கள் சட்டங்கள் மற்றும் பல முக்கியமான விஷயங்களை தொடர்ந்து நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனுடைய மார்க்கத்தை தெளிவாக புரிவதற்கு அமல்கள் செய்வதற்கு அருள்புரிவானாக!
ஒவ்வொரு வணக்க வழிபாட்டுக்கு முன்பாக அந்த வணக்க வழிபாட்டில் ஈடுபடக் கூடியவர்கள் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த இபாதத்தை செய்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த இபாதத் உடைய நன்மை முழுமையாக கிடைக்க பெறுவதற்கு தான் என்னென்ன நற்பண்பு உடையவனாக இருக்க வேண்டும் என்பதை அந்த வணக்கசாலி தெரிந்திருக்க வேண்டும். அதை பின்பற்ற வேண்டும் என்ற அந்த உறுதியில் அவர் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, தொழுகைக்காக வரக்கூடிய ஒரு மனிதர் சோம்பேறியாக வரக்கூடாது. அலட்சியமாக வேறு பல சிந்தனைகளை உள்ளத்தில் சுமந்தவனாக வரக்கூடாது. அப்போதுதான் அவருடைய தொழுகையை சரியாக தொழ முடியும்.
உற்சாகத்தோடு வரவேண்டும். அல்லாஹ்வுடைய பயத்தோடு வரவேண்டும். மறுமையின் நினைவோடு வரவேண்டும். இந்த தொழுகையின் மூலமாக அல்லாஹ் என்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டும். எனது மறுமையின் அந்தஸ்துகளை கூட்ட வேண்டும். அல்லாஹு தஆலா இந்த தொழுகையை எனது மனதிற்கு அமைதியாக ஆக்கித் தர வேண்டும் என்ற ஒரு உறுதியோடு யார் வருவார்களோ அவர்கள் அந்த தொழுகையின் நன்மையைப் பெற்றவர்களாக அந்த தொழுகையின் நற்பாக்கியங்களை பெற்றவராக திரும்பி செல்வார்கள்.
யார், அது வெறும் ஒரு கடமை, ஏதோ நாம் சடங்காக நிறைவேற்றப் போகிறோம் என்ற உணர்வோடு வருவார்களோ, அவர்கள் எந்த நிலையில் வந்தார்களோ அதே நிலையில் திரும்பிச் செல்வார்கள்.
அந்த தொழுகையின் மூலமாக கிடைக்க வேண்டிய ஆன்மீக நன்மைகளை அந்த தொழுகையின் மூலமாக கிடைக்கவேண்டிய மார்க்க நற்பேறுகளை பெறமாட்டார்.
அதுபோன்றுதான், ஹஜ் உடைய வணக்கம் எவ்வளவு சிறந்த வணக்கம், எவ்வளவு உயர்ந்த வணக்கம், ஜிஹாதுக்கு சமமான வணக்கம், ஃபர்ளுகள் பலவற்றை சுன்னத்துகள் பலவற்றை இன்னும் நஃபிலான வணக்கங்கள் பலவற்றை தன்னில் கொண்ட இந்த ஹஜ்ஜுனுடைய வணக்க வழிபாட்டை நாம் மேற்கொள்வதற்கு முன்பாக நம்மிடத்தில் பல முக்கியமான அடிப்படை ஒழுக்கம், மாண்புகள் முக்கியமான தன்மைகள் இருக்க வேண்டும்.
அவற்றில் குறிப்பாக ஹஜ்ஜுடைய பயணத்தை மேற்கொள்ளக் கூடியவர் தன்னுடைய கல்பை பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஏனென்றால், சீக்கிரமாக முகஸ்துதி, தற்புகழ்ச்சி ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ள ஒரு இபாதத்தாக இருக்கிறது. முகஸ்துதி சீக்கிரமாக ஏற்படுவதற்கு வாய்ப்பு இதில் இருக்கின்ற காரணத்தால், அந்த அடியான் அல்லாஹ்வுடைய இந்த உயர்ந்த வணக்கத்தை ஹஜ்ஜை நாடி இருக்கக்கூடிய ஒரு அடியான் மிகவும் பயந்தவராக, தன்னுடைய உள்ளத்தில் முகஸ்துதியின் அந்த அழுக்கு ஒட்டி விடாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
தனது உள்ளத்தில் அல்லாஹ்வை பயந்தவராக, யா அல்லாஹ்! இந்த ஹஜ் வணக்கத்தை உன்னுடைய முகத்திற்காக உனது பொருத்தத்திற்காக நான் நாடி இருக்கிறேன்.
பெயரையோ புகழ்ச்சியோ விரும்பக் கூடியவனாகவோ அதை எதிர்பார்க்க கூடியவனாகவோ அதனால் எனது உள்ளத்தில் ஏதாவது பெருமையின் வாடை வீசிவிடும் படியாகவோ நீ செய்து விடாதே! என்று தனது மனத்தூய்மையை அவர் எப்போதும் சுத்தப்படுத்திக் கொண்டே அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஹஜ்ஜுக்காக தயாரான போது தல்பியா சொல்லக்கூடிய அந்த நேரத்தில் ஒரு துஆவை சொல்கிறார்கள்.
அல்லாஹ்விடத்தில் அதை ஒரு வெளிப்பாடாக ஒரு விண்ணப்பமாக சொல்கின்ற அந்த நேரத்தில், அல்லாஹ்விடத்தில் துஆவையும் நபி அவர்களுடைய வார்த்தை அங்கே பொதிந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«اللَّهُمَّ حَجَّةٌ لَا رِيَاءَ فِيهَا، وَلَا سُمْعَةَ»
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா, எண் : 2890.
நபியின் இந்த வாக்கியத்திற்கு இரண்டு வகையாக நாம் அர்த்தம் கொள்ளலாம்.
இப்படி படித்தால், யா அல்லாஹ்! இதோ நான் இந்த ஹஜ்ஜை செய்கிறேன், இதில் நான் முகஸ்துதியை விரும்பவில்லை, பேரையும் புகழையும் விரும்பவில்லை, மக்கள் என்னை புகழ வேண்டும் என்பதற்காகவோ, மக்கள் என்னை போற்ற வேண்டும் என்பதற்காகவோ, மக்களின் முகத்திற்காக நான் இதை செய்யவில்லை என்று தன்னுடைய உள்ளத்தின் எண்ணத்தை அல்லாஹ்வுக்கு முன்னால் வைப்பது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி துஆ கேட்டார்கள். அல்லாஹ்வுக்கு முன்னால் விண்ணப்பித்தார்கள் என்றால், நம்மைப்போன்ற பலவீனமானவர்கள் இந்த உணர்வுக்கு எவ்வளவு தேவை உள்ளவர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
சர்வசாதாரணமாக நம்முடைய அமல்களை நம்முடைய தான தர்மங்களை இபாதத்துகளை இந்த முகஸ்துதின் மூலமாக தற்புகழ்ச்சியின் மூலமாக ஷைத்தான் பாழாக்கி கொண்டே செல்கிறான்.
நான் செய்த அமலை சொல்லிக் காட்டுவது. ஹஜ்ஜுக்கு சென்ற பலருக்கு தெரியலாம். தவாஃப் செய்து விட்டு வருவார். அவரிடத்தில் யாரும் கேட்டிருக்க மாட்டார். சாப்பிட வருவார். உட்கார வருவார். டீ குடிக்க வருவார். ரூமுக்கு வருவார்.
யாரும் அவரிடத்தில் கேட்டிருக்க மாட்டார்கள். நான் அஞ்சு தவாஃப் செய்து இருக்கிறேன் என்று சொல்வார். அவர் சொல்லி முடித்தவுடன் அடுத்தவர் தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்து உட்கார்ந்து கொண்டு, நான் பத்து தவாஃப் முடித்தேன் என்று சொல்வார்.
முடிந்தது, அவ்வளவுதான். கால் வலிக்க அவர் சுற்றி சுற்றி செய்த அந்தத் தவாஃபுகள் அதைக் கொண்டு எப்போது அவர் புகழ்ச்சியை நாடினாரோ தற்பெருமையை நாடினாரோ சொல்லி காட்டினாரோ அந்த அமலை அவர் வீணாக்கி கொண்டார்.
அல்லாஹு தஆலா சொல்கிறான்:
لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى
உங்கள் தர்மங்களை நீங்கள் சொல்லி காட்டுவதன் மூலமாக அந்த தர்மத்தை வாங்கியவருக்கு தொந்தரவு செய்வதன் மூலமாக வீணாக்காதீர்கள். (அல்குர்ஆன் 2 : 264)
தர்மம் மட்டுமல்ல, எந்த ஒரு நன்மையாக இருந்தாலும், அதை செய்தவர் அதன் மூலமாக கண்ணியம், அல்லது மக்களுடைய மதிப்பு இதை எதிர்பார்த்தவராக அந்த அமலை அவர் பிரஸ்தாபித்து சொன்னால் அந்த அமலை அவர் வீணாக்கி கொள்கிறார். அல்லாஹ் பாதுகாப்பானாக!
எனவே, இந்த ஹஜ்ஜுடைய வணக்கத்தை நாடும் பொழுது, மக்கள் தன்னை ஹாஜி என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவும், அல்ஹாஜ் என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவும், அல்லது ஊரில் இதன் மூலமாக தனக்கு ஒரு கௌரவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இன்னும் பல துன்யாவுடைய நோக்கங்களுக்காக யார் ஹஜ் செய்வார்களோ அவர்களுடைய ஹஜ் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகாது.
முகஸ்துதிக்காக செய்யப்படக்கூடிய அமல்களுக்கு அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் இல்லை. அல்லாஹ் சொல்வதாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.
"قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ، مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي، تَرَكْتُهُ وَشِرْكَهُ "
அல்லாஹ் சொல்கிறான்; நான் கூட்டாளிகளின் தேவையை விட்டு முற்றிலும் தேவையற்றவனாக இருக்கிறேன். பங்காளிகளின் தேவையை விட்டு நான் முற்றிலும் நிறைவானவனாக இருக்கிறேன். எனக்கு யாருடைய கூட்டும் தேவை இல்லை. எந்த பங்காளிகளும் எனக்கு தேவை இல்லை.
யார், ஒரு அமலை செய்து அந்த அமலில் என்னைத்தவிர பிறரையும் அந்த அமலில் சேர்த்துக் கொண்டாரோ, அவரை அவருடைய அந்த இணைவைத்தலோடு நான் விட்டு விடுகிறேன். அவர் யாருக்காக அந்த அமலை செய்தாரோ அவரிடத்தில் அந்த அமலுக்குரிய கூலியை பெற்றுக் கொள்ளட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2985.
ஆகவே, அல்லாஹ்விடத்தில் இந்த இக்லாஸுக்காக துஆ கேட்க வேண்டும். இக்லாஸ் என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.
இமாம் ஃபுழைழ் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்: இந்த இக்லாசை பெறுவதற்காக நாங்கள் கஷ்டப்படுவதைப் போன்று வேறு ஒன்றுக்காக கஷ்டப்பட்டதில்லை.
மற்ற குணங்கள் எல்லாம் சீக்கிரமாக ஈசியாக வந்து விடலாம். பொறுமையாக இருப்பது, அன்பாக பேசுவது, மென்மையாக பேசுவது, இன்னும் பல நல்ல குணங்கள் எல்லாம் ஈசியாக வந்துவிடலாம். ஏனென்றால், அவற்றின் மூலமாக ஷைத்தானுக்கு பெரிய ஆபத்து கிடையாது. அவற்றைக் கெடுப்பதினால் ஷைத்தானுக்கு பெரிய நஷ்டமும் கிடையாது. ஆனால், இக்லாஸில் ஷைத்தான் விளையாடிவிட்டால், ஈமானில் இக்லாஸ் இல்லை என்றால் அவர் முனாஃபிக்காக ஆகி விடுகிறார்.
ஹிஜ்ரத்தில் ஒருவருக்கு இக்லாஸ் இல்லை என்றால் அவருடைய ஹிஜ்ரத் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இப்படியாக இக்லாஸில் ஒரு மனிதரை வீழ்த்திவிட்டால் அந்த மனிதன் நிரந்தர நரகவாதியாக மாறிவிடுகிறான்.
எனவே, ஷைத்தான் இக்லாஸ் உடைய விஷயத்தில் ஒரு அடியான் அந்த மனத்தூய்மையிலிருந்து நீக்குவதற்காக மனதூய்மையை அந்த அடியானின் உள்ளத்திலிருந்து நீக்குவதற்காக மிகவும் போராடுவான்.
ஆகவே, யார் பொதுவாக வணக்க வழிபாடுகள் செய்கிறார்களோ குறிப்பாக இந்த ஹஜ்ஜுடைய வணக்க வழிபாட்டை யார் நாடியிருக்கின்றார்களோ தன்னுடைய மனதை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுடைய முகத்தை நாடுகின்ற அந்த ஒரே நோக்கத்துடன் இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய ஹஜ்ஜை பிரபலப்படுத்தி விளம்பரப்படுத்தி பாழாக்கி கொள்ளக்கூடிய ஒரு நிலைக்கு அவர் வந்து விடக்கூடாது.
இன்றைய காலகட்டத்தில் பார்க்கிறோம். ஹஜ்ஜுக்கு செல்வதற்காக நோட்டீஸ்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள். இப்படியாக காஃபிர்கள் உடைய கலாச்சாரத்தை பின்பற்றி இபாதத்தை ஒரு வியாபாரமாக ஒரு பிரபல்யம் தேடக்கூடிய ஒருவழியாக ஆக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
இவற்றிலிருந்து முற்றிலுமாக நாமும் தவிர்ந்து இருப்பதோடு, நம்முடைய உறவுகள் அறிமுகமானவர்களுக்கு இந்த விஷயத்தை நினைவூட்டி நாம் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
சிலர், இது ஒரு பாவமே இல்லாததை போன்று, இது ஒரு தவறே இல்லாததை போன்று செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
அதுபோன்று, ஹஜ்ஜுக்காக செல்லக் கூடியவர் ஹஜ் சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்களை தெளிவாக மார்க்க அடிப்படையில் ஆதாரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு நூலை தன்னுடன் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
ஹஜ்ஜு சம்பந்தமான தெளிவான ஆதாரங்களோடு போதுமான விளக்கங்களோடு கோர்வை செய்யப்பட்ட மூத்த மார்க்க அறிஞர்கள் உடைய தெளிவான நூல்களை தன்னுடன் கொண்டு சென்று அவ்வபோது அந்த நூலை படித்து படித்து எந்த ஒரு இபாதத்தையும் மறந்து விடாமல், அல்லாஹ்வுடைய தூதர் காட்டிக் கொடுக்காத முறையில் செய்வதிலிருந்தும் அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த நூல் மிகவும் உதவியாக இருக்கும்.
ஆகவே, ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர்கள் அப்படிப்பட்ட நூலைத் தேடி பெற்று ஹஜ்ஜுக்கு செல்வதற்கு முன்பாகவே அந்த நூலைப் பலமுறை படித்து ஹஜ்ஜுடைய வணக்க வழிபாடுகளை மனதில் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஹஜ் உடைய பயணத்திலும் அவர்கள் அந்த நூலை தன்னோடு எடுத்துச் சென்று வணக்க வழிபாடுகளில் மிகவும் கவனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அதுபோன்று, ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர் கவனிக்கவேண்டிய ஒழுக்கங்களில் மூன்றாவதாக, அவர் தன்னுடைய பயணத்தில் தன்னோடு வரக்கூடியவர்கள் யார் என்பதை அறிந்து நல்லவர்களுடைய நட்பை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
யார், தான் மறந்துவிட்டால் தனக்கு நினைவூட்டுவாரோ, தான் அறியாத மார்க்க சட்டங்களை தனக்கு கற்றுக் கொடுப்பாரோ, யாரோடு நாம் அந்த இபாதத்தில் கலந்து கொள்வதால் நமக்கு தக்வாவும் இபாதத் உடைய ஆர்வமும் பிறக்குமோ அப்படிப்பட்டவர்களோடு ஹஜ்ஜை மேற்கொள்வதற்கு அவர் நல்ல தோழர்களை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஏனென்றால், சோம்பேறிகளோடு, அலட்சியப் போக்குடையவர்களோடு, மார்க்கக் கடமைகளைப் பேணாதவர்களோடு ஹஜ்ஜுக்கு வரக்கூடிய பலர், பல இபாதத்துகளை வீணாக்கி விடுகிறார்கள்.
அவர் இருக்கக்கூடிய இடத்திலிருந்து ஜம்ராத் கல்லெறியக் கூடிய இடத்திற்கு செல்வது தூரமாக இருக்கும். ஒருவர் சோம்பேறியாக இருப்பார். அவர் சொல்லுவார்; பரவாயில்லைங்க, முடியலன்னா ஒருத்தர்ட்ட கொடுத்து விடலாம் என்று.
இது யாருக்கு சொல்லப்பட்டது? கர்ப்பிணிப் பெண்களுக்கு சொன்னார்கள். கைக்குழந்தையோடு பால் கொடுக்கக்கூடியவர்களுக்குச் சொன்னார்கள். முடியாத தள்ளாடக் கூடிய வயதில் இருப்பவர்களுக்கு சொன்னார்கள்.
வாலிபராக இருக்கிறார். நேற்று சென்றுவிட்டு வந்தாராம். இன்று கால் வலியாக இருக்கிறதாம். அதனால் தனது கல்லை இன்னொருவரிடத்தில் கொடுத்து எறிய ஆரம்பிக்கிறார்.
இப்படியாக, சோம்பேறிகளோடு, மார்க்க இபாதத்தில் அலட்சியம் செய்பவர்களோடு, சின்ன சின்ன காரணங்களுக்கெல்லாம் சலுகைகளை தேடக்கூடியவர்களோடு ஹஜ் செய்தால் அவர்கள் தங்களுடைய ஹஜ்ஜை வீணாக்குவதை போன்று தங்களோடு வந்திருப்பவர்களுக்கும் தவறான ஃபத்துவாக்களை கொடுத்து தவறான சலுகைகளை கொடுத்து இபாதத்துகளில் நாம் முன்னேற விடாமல் இபாதத்துகளில் நாம் ஆர்வமாக ஈடுபட விடாமல் நம்மைப் பின்தங்க வைத்து விடுவார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸை இந்த இடத்தில் நாம் நினைவு கூறலாம். அபூ மூஸா அல்அஷ்அரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:
" إِنَّمَا مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ، وَالْجَلِيسِ السَّوْءِ، كَحَامِلِ الْمِسْكِ، وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ: إِمَّا أَنْ يُحْذِيَكَ، وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَنَافِخُ الْكِيرِ: إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً "
நல்ல நண்பர்களை வாழ்க்கையில் அவன் எப்போதுமே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
நல்ல நண்பனுக்கும் கெட்ட நண்பனுக்கும் உள்ள உதாரணம் கஸ்தூரியை வைத்திருப்பவன் போன்று. நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரியை வைத்திருப்பவன் போல. கெட்ட நண்பனுக்கு உதாரணம் இரும்பு பட்டறையில் வேலை செய்யக்கூடிய அந்த மனிதன்.
கஸ்தூரியை வைத்திருப்பவன் உனக்கு அவன் அதை தடவி விடலாம். அல்லது அவனிடத்திலிருந்து நீ அதை வாங்கி அனுபவிக்கலாம். அல்லது அவனுடன் அமர்ந்து இருக்கின்ற வரை அந்த நறுமணத்தையாவது நீ நுகர்ந்து கொண்டிருக்கலாம்.
ஆனால் பட்டறையில் வேலை செய்யக்கூடிய அந்த கொல்லன், உன்னுடைய ஆடையை எரித்து விடுவான். அல்லது அவனோடு நீ இருக்கின்ற காலமெல்லாம் கெட்ட துர்நாற்றத்தை தான் நீ அனுபவித்துக் கொண்டிருப்பாய்.
அறிவிப்பாளர் : அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2628.
ஆகவே, நம்முடைய முன்னோர்கள் ஸலஃபுகள் உடைய வரலாறுகளில் பார்க்கிறோம். அவர்கள் எப்போதுமே இந்த ஹஜ்ஜிற்க்காக செல்லும்போது, தங்களுடைய ஊர்களில் மார்க்கை இல்மை பெற்றவர்கள் வணக்க வழிபாடுகளில் ஆர்வமுள்ள வணக்கசாலிகள் அவர்களுடைய அந்த குழுவோடு அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றதை நாம் வரலாறுகளில் பார்க்கிறோம்.
ஒருவர் தஹஜ்ஜத் தொழுகை தொழக்கூடியவராக இருப்பார். அவரை பார்க்கும்போது தஹஜ்ஜத் தொழாதவர்களுக்கு தொழ வேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஒருவர் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யும் போது, ஒரு ஆர்வம் இல்லாமல் அல்லது சாதாரணமாக துஆ செய்யக்கூடிய ஒரு வணக்கம் உள்ளவராக இருப்பார். துஆவில் அதிகம் ஈடுபாட்டோடு அழுது அல்லாஹ்விடத்தில் மன்றாடி அதிக நேரம் துஆ கேட்கக்கூடியவர்களை பார்க்கும் பொழுது, நாமும் அப்படி கேட்க வேண்டுமே என்ற எண்ணம் ஏற்படலாம்.
இப்படியாக எத்தனையோ பல வணக்க வழிபாடுகளை நம்மோடு ஆர்வத்தோடு செய்யக் கூடியவர்களை பார்க்கும்பொழுது, நமக்கும் அந்த ஆர்வம் பிறக்கும்.
ஆகவே, சரியான மார்க்க அறிஞர்களிடம், அதுபோன்று வணக்க வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய நல்லவர்கள் இவர்களுடைய நட்போடு இவர்களுடைய தோழமையோடு ஹஜ் வணக்க வழிபாடுகளை செய்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அதுபோன்று, நான்காவது ஒழுக்கமாக, ஹஜ்ஜிக்கு செல்லக் கூடியவர் தன்னுடைய இந்த ஹஜ் பயணத்திற்கு தன்னுடைய அத்தியாவசிய செலவுக்கு என்ன தேவையோ அதை கண்டிப்பாக அவர் எடுத்து வரவேண்டும்.
பிறரிடத்தில் யாசகம் கேட்கக் கூடியவராக தவக்குல் என்ற பெயரில் தன்னுடைய செலவுக்குத் தேவையான எதையும் எடுத்துக் கொள்ளாமல் அங்கே வந்ததற்குப் பிறகு நான் ஹஜ்ஜிற்கு வந்திருக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் என்று பிறரிடத்தில் கையேந்த கூடியவராக இருக்கக்கூடாது.
அல்லாஹு தஆலா இதை கட்டளையாகவே தன்னுடைய வேதத்தில் நமக்கு சொல்கிறான்:
وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَاأُولِي الْأَلْبَابِ
(ஹஜ்ஜூடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக்கொள்ள வேண்டியவற்றில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். ஆதலால், அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜூடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 197)
யமன் தேசத்தில் உள்ள சிலர் ஹஜ்ஜுக்காக வருவார்கள். எதையும் தங்களோடு எடுத்து வர மாட்டார்கள். கேட்டால், நாங்கள் அல்லாஹ்வின் மீது தவக்குல் -அல்லாஹ்வை சார்ந்து அவன் மீது மட்டும் நம்பிக்கை வைக்கக் கூடியவர்கள் என்பதாக சொல்வார்கள்.
ஆனால் பயணத்தில் வந்தவுடன் பயணத்திலும் அதுபோன்று அவர்கள் மக்காவிற்கு வந்தவுடன் மக்காவிலும் பிறர் இடத்தில் கையேந்தி யாசகம் கேட்பார்கள். நாங்கள் ஹஜ்ஜிற்கு வந்து இருக்கின்றோம் எங்களுக்கு உதவுங்கள், உணவு தாருங்கள், இப்படியாக மக்களிடத்தில் யாசகம் கேட்பார்கள்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஓர் உயர்ந்த வணக்க வழிபாட்டை செய்ய வரக்கூடிய மக்களுக்கு இப்படிப்பட்ட இழிவான குணம் இருக்க கூடாது. அவர்கள் ஒரு சுய நிறை உடையவர்களாக தன்னுடைய அவசியத் தேவைகளுக்கு என்ன செலவோ அந்த செலவை தன்னோடு எடுத்துவரக் கூடியவராக இருக்க வேண்டும்.
பிறரிடத்தில் கையேந்தி இழிநிலைக்கு ஆளாக கூடாது. பிறரையும் சங்கடப்படுத்த கூடாது.
அல்லாஹு தஆலா மிகத் தெளிவாக நமக்கு கட்டளையிட்டான்: நீங்கள் ஹஜ் பயணத்திற்கான சாமான்களை உணவுகளை தேவையானவற்றை நீங்கள் எடுத்து வாருங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ
யார், பிறரிடம் தேவையாகாமல் தன்னை சுயமாக நிறைவாக்கி கொள்ள விரும்புகிறாரோ, தன்னிடத்தில் அல்லாஹ் கொடுத்ததை கொண்டு போதுமாக்கிக்கொள்ள விரும்புகிறாரோ, அவருக்கு அல்லாஹு தஆலா மனநிறைவை கொடுப்பான்.
யார், ஒழுக்கமாக இருக்க வேண்டும், பிறரிடத்தில் கையேந்தாமல் பிறரிடத்தில் யாசகம் கேட்காமல் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அவரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒழுக்கம் உள்ளவராக ஆக்குவான்.
அறிவிப்பாளர் : அபூசயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1427, 1469.
இந்த இடத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய வழிகாட்டுதல் என்னவென்றால், நாம் அந்த உறுதி உள்ளவராக இருக்க வேண்டும்.
அதாவது நல்ல ஒழுக்கங்கள், நல்ல பண்பாடுகள் அது தானாக வந்து விடாது. அதற்காக ஒரு முயற்சி அதை தெரிந்ததற்கு பிறகு நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் உறுதி கொண்டால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.
தாம் பிறரிடத்தில் யாசகம் கேட்கக் கூடாது. தனக்கு கொடுக்கப்பட்டதை கொண்டு நாம் மனநிறைவோடு இருக்க வேண்டும் என்ற மன உறுதியில் இருக்க வேண்டும். அப்போது அல்லாஹ் உதவுவான்.
இப்படித்தான் ஒவ்வொரு ஒழுக்கங்களும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:
وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ
யார், தான் பொறுமையாக இருக்கவேண்டுமென்று தன்னை கட்டுப்படுத்த தன்னை சாந்தப்படுத்த முயற்சிப்பானோ அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை கொடுப்பான். அல்லாஹ் அவரை சாந்தமாக்குவான்.
அறிவிப்பாளர் : அபூசயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1427, 1469.
இந்த ஹஜ் உடைய பயணத்தில் நம்மோடு செல்லும்போது செல்வந்தர் வரலாம். பெரிய வசதியுள்ளவர்கள் வரலாம். அவர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப அவர்கள் செலவு செய்பவர்களாக உண்பவர்களாக தங்கும் இடத்தில் உயர்ந்ததை தேர்ந்தெடுப்பார்களாக இருக்கலாம்.
ஆனால், அவற்றையெல்லாம் பார்த்து அதுபோன்ற வசதியை தான் அடைய வேண்டும் என்று அவரிடத்தில் யாசிப்பவர்களாக ஒரு ஹாஜி ஆகிவிடக்கூடாது.
அல்லாஹ் தனக்கு எந்த அளவு உணவு சாப்பிடுவதற்கு வசதி கொடுத்தானோ எந்த ஒரு இடத்தில் தான் தங்குவதற்கு அல்லாஹ் வசதி கொடுத்தானோ அதைக் கொண்டு அவர்கள் மனநிறைவு பெற வேண்டும்.
யார், மேலதிகமான வசதிகளோடு தங்குகிறார்களோ அங்குள்ள வசதிகளை அனுபவிக்கிறார்களோ அவர்களின் பக்கம் இவர்களுடைய பார்வை சென்று விடக்கூடாது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் உடைய பொதுவான வழிகாட்டுதல் என்ன? மக்களே! உலக செல்வங்களில் உங்களுக்கு கீழ் உள்ளவரை நீங்கள் பாருங்கள். அப்போதுதான் அல்லாஹ்வுடைய அருளை நீங்கள் குறைவாக மதிப்பிட மாட்டீர்கள். வணக்க வழிபாட்டில் இபாதத்தில் ஈமானில் உங்களுக்கு மேல் உள்ள வரை நீங்கள் பாருங்கள். அப்போதுதான் நீங்கள் இபாதத்தில் ஆகிரத்தில் முன்னேற பார்ப்பீர்கள்.
நாம் அப்படியே தலைகீழாக வைத்திருக்கின்றோம். நாம் இந்த ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அகராதியை தலைகீழாக வைத்திருக்கின்றோம்.
இபாதத்தில் ஈமானில் கீழ் உள்ளவர்களை பார்ப்போம். அவரை கவனித்து பார்க்கும்போது நான் ரொம்ப மேல், நான் இவ்வளவு செய்கிறேனே என்று. துன்யாவில் எடுத்துக்கொண்டால் நம்மை விட வசதி படைத்தவர்களை பார்த்து, அவருக்கு அவ்வளவு இருக்கிறதே நம்மிடத்தில் இல்லையே என்று அதைப்போன்று அடைய வேண்டுமென்று முயற்சி செய்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
நாம் ஒரு இடத்தில் தங்கி இருக்கின்றோம் என்றால், வசதிக்கு ஏற்ப நம்மை விட வசதி குறைவாக சிரமமான இடங்களில் தூரமான இடங்களில் தங்கி இருப்பவர்களைப் பார்க்க வேண்டும். அல்லாஹ் எனக்கு இந்த அளவு வசதி கொடுத்தானே, இந்த இடத்தில் என்னை தங்க வைத்தானே, இந்த உணவை அல்லாஹ் எனக்கு கொடுத்தானே, என்று.
அப்போதுதான், அல்லாஹ்வுடைய நிஃமத்துக்கு நன்றி செலுத்தக் கூடியவராக நாம் இருக்க முடியும். ஆகவே, ஹஜ்ஜினுடைய பயணத்திற்கு செல்லக் கூடியவர் தன்னுடைய பயணத்திற்கு என்ன முடியுமோ அந்த செலவை தன்னோடு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த செலவு அந்த தகுதில் அவர் மன நிறைவடைந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடியவராக இருக்க வேண்டும்.
யாசகம் கேட்பவராக இருக்கக்கூடாது. பிறரிடத்தில் உள்ளதை எதிர்பார்க்க கூடியவராகவும் இருக்க கூடாது. தன்னை விட வசதி மிக்கவர் தங்கியிருக்கக் கூடிய இடங்களை பார்த்து அவர்கள் அனுபவிக்க கூடிய வசதிகளை பார்த்து ஏங்க கூடியவராகவும் இருக்க கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்:
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ
உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தேவையான அல்லாஹ்வின் அருளை அல்லாஹ் இடத்தில் நீங்கள் எதிர்பாருங்கள். (அல்குர்ஆன் 4 : 32)
எவ்வளவு அழகான வழிகாட்டுதல்களை அல்லாஹ் கூறுகின்றான் பாருங்கள். ஏனென்றால், ஷைத்தான் பலவிதங்களில் வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துவான். அந்த வணக்க வழிபாட்டில் நமது நிம்மதியை மன அமைதியைப் குலைப்பதற்காக பலவிதங்களில் முயற்சிகள் செய்வான்.
ஆகவே, குறிப்பாக இந்த விஷயத்திலும் ஹஜ் பயணத்திற்கு செல்லக் கூடியவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோன்றுதான், ஐந்தாவதாக, நாம் குறிப்பாக சொல்வதென்றால் ஹஜ் பயணத்திற்கு செல்லக் கூடியவர் நல்ல ஒழுக்கங்களை நல்ல பண்பாடுகளை சிறந்த நற்குணங்களை கற்று அதன்படி நடப்பவராக இருக்க வேண்டும். அதற்கான ஒரு முயற்சி அவர்களிடத்தில் இருக்க வேண்டும்.
காரணம், அவர் தொழுகைக்கு வருகிறார். தனியாக வருகிறார். தனியாக சென்று விடுவார். நோன்பு அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், ஹஜ் என்பது அப்படியல்ல. ஒரு குழுவாக ஒரு குரூப்பாக ஒரு ஜமாஅத்தாக அவர் செல்ல வேண்டும். தங்குமிடங்களில் அவர் கூட்டாக பலரோடு சேர்ந்து தங்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு பயணமும் ஒரு ஜமாஅத்தாக ஜமாஅத்தில் ஒருவராக இருந்து பல நபர்களில் ஒருவராக இருந்து செய்யப்படுகின்ற வணக்கம் இந்த ஹஜ்ஜினுடைய வணக்கம்.
ஆகவே, இவரிடத்தில் நற்குணம் இல்லையென்றால் சிறந்த மேன்மையான பண்பாடுகள் இல்லையென்றால் ஒன்று, இவராலும் பிறருக்கு தொந்தரவு, பிறராலும் இவர் தன்னை தொந்தரவுக்கு ஆளாகி கொள்வார்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸை நாம் பார்க்கின்றோம்.
«اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ»
மூஃமினே! நீ அல்லாஹ்வை பயந்து கொள். தக்வா உடையவனாக இரு. நீ எங்கிருந்தாலும் பரவாயில்லை. எந்த காலத்தில் இருந்தாலும் பரவாயில்லை.
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1987.
எவ்வளவு அழகான அறிவுரை பாருங்கள்! இந்த இடத்தில் இன்னொரு ஹதீஸை நான் நினைவு கூறுகிறேன்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். நமக்கெல்லாம் மிக பெரிய ஒரு நற்செய்தி. இது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறத்திலிருந்து நமக்காக சொல்லப்பட்டதை போன்ற ஒரு வாக்கு.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய உறவினராக ஆக வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படுகிறார். இது நம்மால் தேர்ந்தெடுக்க முடியுமா? ரசூலுல்லாஹ் உடைய குடும்பத்தில் ஒருவராக ஆக வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படுகிறார். ஆனால் அல்லாஹு தஆலா இதை தன் விதியின் படி தேர்ந்தெடுக்கிறான்.
தாய் தந்தையை பரம்பரையை உறவுகளை முடிவு செய்வது, அல்லாஹ்வுடைய விதி முடிவு செய்வது, மொழிகளை முடிவு செய்வது, இது அல்லாஹ்வுடைய விதி.
இதில் மனிதன் தன்னுடைய அறிவைக் கொண்டு தன்னுடைய தேர்வு உரிமையைக் கொண்டு அவன் எதையும் செய்துவிட முடியாது. எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது.
ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் நமக்குச் சொன்னார்கள்:
ஏனென்றால் நான் ரசூல் உடைய பரம்பரை என்று கூடச் சொல்லி யாரும் பீத்திக் கொள்ள முடியாது. அல்லாஹ்விடத்தில் அந்தப் பரம்பரை பெயரைச்சொல்லி சொர்க்கத்தை வாங்க முடியாது. ரசூலுல்லாஹ் உடைய மகள் ஃபாத்திமா என்று சொல்லவில்லை.
وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا
முஹம்மதுடைய மகள் பாத்திமாவே! அல்லாஹ்வைப் பயந்து கொள். எனது உடல் செல்வத்தில் எது வேண்டுமானாலும் கேள், கொடுத்துவிடுவேன். நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து நான் உன்னை காக்க முடியாது. அதற்கு நீ தான் பொறுப்பு.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2753.
என்னுடைய நெருக்கமான உறவினர்கள், என்னுடைய நெருக்கமான உறவுகள். என்னுடைய நேசர்கள், யார் தெரியுமா? அவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்தால் என்ன? எந்த ஊரில் வசித்தால் என்ன?
மறுமையில் நாளை ரசூலுல்லாஹ் உடைய குடும்பத்தாரில் ஒருத்தராக அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவராக சொர்க்கத்தில் நுழைய வேண்டுமென்றால் அதற்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் வழி சொன்னார்கள்.
நீங்கள் தக்வா உள்ளவர்களாக இருங்கள். என்னுடைய நெருக்கமான உறவுகளில் ஒருவராக இருங்கள்.
ஹதீஸின் தொடர் : ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நீ எங்கிருந்தாலும் சரி, நீ ஒரு பாவத்தை செய்து விட்டாலும் உடனடியாக அந்தப் பாவத்திலிருந்து பிறகு ஒரு நன்மையை செய்து அந்த பாவத்தை அழித்து விடு.
தவ்பாவின் மூலமாகவும் மற்ற சதக்கா, நோன்பு, தொழுகை, போன்ற அமல்களின் மூலமாக செய்த பாவத்தை உடனடியாக உனது ஏட்டிலிருந்து அழித்துவிடு. அதை வைத்துக் கொள்ளாதே!
பிறகு சொன்னார்கள்; மக்களோடு பழகும் பொழுது நல்ல குணத்தோடு பழகு.
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1987.
ஹஜ்ஜுடைய வணக்கம் என்பது பயணம். வீட்டிலிருந்து ஆரம்பித்ததிலிருந்து திரும்பி வருகின்ற வரை பயணத்தில் தான் நாம் இருக்கிறோம். இந்த பயணத்தில் இருக்கும் பொழுது ஷைத்தான் மிக அதிகமாக கோபத்தை உண்டாக்குவான்.
பல நேரங்களில் பார்க்கிறோம்; இங்கே பொறுமையாளர்களாக இருந்தவர்கள் எல்லாம் அங்கே சென்றதற்கு பிறகு எரிமலை வெடிக்க கூடியவர்களாக மாறி இருக்கிறார்கள். இங்கே சகிப்பு உடையவர்களாக இருந்தவர்கள் எல்லாம் அங்கே சென்று சண்டை போட கூடியவர்களாக மாறி இருப்பதை பார்க்கிறோம்.
இதற்கெல்லாம் பின்னால் ஷைத்தானுடைய ஊசலாட்டங்களும் ஷைத்தானுடைய வழிகெடுத்தலும் இருப்பது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், நீங்கள் மக்களிடத்தில் பழகும் பொழுது நல்ல அழகிய குணத்தோடு பழகுங்கள் என்று.
இன்னொரு ஹதீஸைப் படியுங்கள்.
فَمَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ، وَيُدْخَلَ الْجَنَّةَ، فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ
யார் நரக நெருப்பிலிருந்து தான் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ, அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய மறுமை நாளையும் அவர் நம்பிக்கை கொண்டவராக இருக்கின்ற நிலையில் அவருடைய மரணம் அவருக்கு வரட்டும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1844.
அதாவதும், எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதுண்டான நம்பிக்கையை புதுப்பித்தவனாக அதற்காக துஆ செய்தவனாக இருக்கட்டும்.
அப்படியிருந்தால் அவரது மரணம் வரும் போதும் அந்த நிலையில் இருப்பார். அப்போது கண்டிப்பாக நரக நெருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுவான்.
அடுத்து, இந்த ஹதீஸினுடைய இரண்டாவது பகுதி, நாம் சொன்ன இந்த ஒழுக்கத்தோடு சம்பந்தப்பட்டது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,
وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ
தன்னோடு பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரோ, அப்படி நீயும் பிறரிடம் நடந்து கொள். மக்கள் உன்னிடத்தில் எப்படி பழக வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மக்களிடம் பழகிக் கொள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1844.
இதுதான், நற்குணங்கள் நற்பண்புகள் உடைய அடிப்படை இலக்கணம். இதை நீங்கள் விவரிப்பதாக இருந்தால் பக்கம் பக்கமாக அல்ல, நூல் நூல்களாக இதற்கு விளக்கங்களை எழுதி செல்லலாம்.
பல சூழ்நிலைகளில் இந்த ஒரு ஹதீஸை நினைவு வைத்து நம்முடைய பயணத்தை நாம் அமைத்துக் கொள்ளவேண்டும்.
அன்பானவர்களே! பயணத்தில் முதலாவதாக முடியாதவர்களுக்கு உதவ வேண்டும். வயதானவர்கள் இருக்கிறார்கள். பெண்கள் இருக்கிறார்கள். சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் பயணத்தில் முதலில் வாகனத்திற்கு அமர்வதற்காக இவர் உதவி செய்ய வேண்டும். இதுதான் நம்முடைய பண்பாடு.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களுடைய ஹஜ்ஜுடைய பயணத்தில் எப்போதுமே முதலில் பெண்களில் பலவீனமானவர்களை, பெண்களில் வயதானவர்களை, அதற்குப் பிறகு பொதுவாக ஆண்களில் வயதானவர்களை, பலவீனமானவர்களை, முற்ப்படுத்துவார்கள். அவர்களுக்கு சலுகை வழங்குவார்கள். அதற்குப் பிறகுதான் மற்றவர்களை பயணிப்பதற்கு அனுமதிப்பார்கள்.
ஆனால், இன்று பெண்களையெல்லாம் தள்ளி விட்டுவிட்டு, வயதானவர்கள் எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு விட்டு, முன்னால் சீட்டில் உட்காருவதை பார்க்கிறோம்.
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை சச்சரவுகள் மனக்கசப்புகள் நிகழ்வதை பார்க்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: மக்களோடு அழகிய குணத்தோடு பழகுங்கள். உங்களுக்கு எதை நீங்கள் விரும்புகிறீர்களோ, மக்கள் உங்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி நீங்களும் மக்களோடு நடந்து கொள்ளுங்கள்.
நாம் என்ன விரும்புவோம்? நமக்காக பிறர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று விரும்புவோமா இல்லையா? நம்மை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று நாம் விரும்புவோமா இல்லையா? அப்படி நீ விரும்பினால் நீயும் பிறருக்கு விட்டுக் கொடு, நீயும் பிறருக்கு முன்னுரிமை கொடு.
இந்த விட்டுக்கொடுத்தலில் பிறரை நாம் முன்னிலைப்படுத்துவதில் மனது விசாலம் அடைகிறது. அங்கே மலர்ச்சி ஏற்படுகிறது. நட்பு ஏற்படுகிறது. மதிப்பு மரியாதை ஏற்படுகிறது.
உதாரணத்திற்கு, சுய தேவைக்காக வேண்டி பாத்ரூமில் நாம் இருக்கிறோம். அப்போது ஒரு வயதான மனிதர் வருகிறார். நாம் ஒரு வாலிபர். நம்முடைய தேவையை நம்மால் கொஞ்சம் சுருக்கிக் கொள்ளலாம். அல்லது தாமதப்படுத்தலாம். அந்த வயதானவர்களுக்கு நீங்கள் செல்லுங்கள் என்று, அவர் அவசரத்துடன் வரும்பொழுது விட்டுவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது?
இப்படிப்பட்ட விட்டுக்கொடுத்தல் நமக்கு மத்தியில் ஈமானிய உணர்வுகளை அன்பை ஏற்படுத்துகிறது. ஆனால், விட்டுக் கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பலர் தன்னுடைய பயணத்தை அமைத்துக் கொள்வதால், ஒன்று அவர்கள் பிறருடைய துஆவை இழந்துவிடுகிறார்கள்.
இரண்டாவதாக, அவர்கள் தங்களையும் பல நேரங்களில் சங்கடப் படுத்திக்கொண்டு பிறரையும் சங்கடப் படுத்தி விடுகிறார்கள் .
இப்படி நிறைய விஷயங்களை நாம் பார்க்கலாம். ஆகவே, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: யார் தன்னிடத்தில் மக்கள் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களோ அது போன்றே பிறரிடத்தில் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த ஒரு அடிப்படையோடு நம்முடைய ஹஜ் பயணத்தை வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து பயணம் திரும்பி வருகின்ற வரை நாம் அமைத்துக் கொண்டால், அல்ஹம்துலில்லாஹ் அதைவிட ஒரு ராஹத்தான பயணம் இருந்திருக்காது.
அந்தப் பயணத்தில் எந்த அளவு மக்களுடைய நட்பையும் மக்களுடைய முஹப்பத்தையும் மக்களுடைய துஆவையும் சம்பாதித்தீர்களோ, அதுபோன்று நீங்கள் எந்த ஒரு பயணத்திலும் சம்பாதித்து இருக்க முடியாது.
நீங்கள் விட்டுக் கொடுத்து பாருங்கள், மக்களை முன்னுரிமைப்படுத்தி பாருங்கள், மக்களுக்கு பணிவிடை செய்து பாருங்கள். உங்களுக்கு துஆ கொட்டிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் கேட்டிருக்காத துஆக்களையெல்லாம் உங்களுக்காக அவர்கள் கேட்பார்கள். இப்படிப்பட்ட ஒரு பணிவிடையை தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்வார்கள்.
நம்முடைய ரசூல் எவ்வளவு மதிப்பிற்குரியவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். அவர்களை விட இந்த உலகத்தில் நாம் மதிப்பதற்கு தகுதியானவர்கள் யாராவது இருக்க முடியுமா?
அவர்கள் என்ன செய்வார்கள்? என்றால், எல்லோரையும் அனுப்பி தயார்படுத்தி பிறகு கடைசி ஆளாக குழுவில் கடைசியாக இருப்பார்கள்.
மக்களுக்கு பணிவிடை செய்வதற்காக, அவர்களுடைய சாமான்கள் ஏதாவது விழுந்துவிட்டால் அதை எடுப்பதற்காக, ஒரு ஒட்டகத்தில் குதிரையில் அவர்கள் பயணங்களை கட்டிக் கொண்டு செல்லும் பொழுது அந்தக் கூட்டத்தில் செல்லும்பொழுது ஏதாவது சாமான்கள் சிறிய பெரிய சாமான்கள் விழுந்துவிட்டால் அதை எடுப்பதற்காக அவர்கள் கொஞ்சம் இடைவெளிவிட்டு வருவார்கள்.
அந்த சாமான்களை எடுத்துக்கொண்டு வந்து உரியவர் இடத்தில் கொடுப்பதற்காக. எப்போதுமே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் தங்களுடைய பயணத்தில் பிறருக்கு உதவுவது பிறருக்குப் பணிவிடை செய்வதில் எந்த அளவும் குறைத்துக் கொள்ளவில்லை.
(அல்காஃபி - லி இப்னி குதாமா உசைமீன் அவர்களின் விளக்கம்,)
எப்படி இபாதத்துகளில் கவனம் உள்ளவர்களாக இருந்தார்களோ அதுபோன்று பணிவிடையில் கவனம் உள்ளவர்களாக இருந்தார்கள். ஒரு பயணத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சென்றிருக்கும் பொழுது ஒரு ஆட்டை அறுத்து உணவு சமைக்க வேண்டிய நிலையில் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இந்த ஆட்டின் தோலை உரித்து அதை விற்றுக் கொடுப்பது என்னுடைய பொறுப்பு என்று சொன்னார்கள். சஹாபாக்கள் சொன்னார்கள்; யா ரசூலுல்லாஹ்! நாங்கள் இருக்கிறோம், நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? என்று.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உங்களை விட்டு என்னை நான் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
ஆகவே, நீங்கள் பெரிய படித்தவர்களாக பெரிய செல்வந்தராக பதவி உள்ளவராக இருக்கலாம். ஆனால், பயணத்தில் செல்லும்பொழுது அந்த தோழர்களில் ஒருவராக இருந்து, அந்த பயண நண்பர்களில் ஒருவராக இருந்து, அவர்களோடு இன்முகத்தோடு சிரித்த முகத்தோடு மென்மையான வார்த்தைகளோடு பேசி அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலமாக, உங்களுக்கு ஒரு பக்கம் இபாதத் உடைய நன்மை, இன்னொரு பக்கம் அல்லாஹ்வுடைய அருள்.
இந்தப் பணிவிடையின் மூலமாக நல்லவர்களுடைய துஆக்கள் கிடைக்கப் பெற்றவர்களாக இருப்பீர்கள்.
அதுபோன்று, ஆறாவது ஒழுக்கமாக, இந்தப் பயணத்தில் வீண் பேச்சுக்களில் ஈடுபட்டு விடாமல், அனாவசியமான கதைகள், அனாவசியமான பேச்சுகளை பேசி, நேரங்களை வீணடிக்காமல், அல்லாஹ்வுடைய திக்ரு, துஆக்கள், இஸ்திஃபார், குர்ஆன் மனனம் செய்வது, துஆக்கள் மனனம் செய்வது போன்ற இபாதத்தில் ஈடுபட வேண்டும்.
ஏனென்றால் 30 நாட்கள் 40 நாட்கள் தங்கி இருக்கக் கூடிய அந்த பயணத்தில் அவர்களுக்கு நிறைய நேரங்கள் கிடைக்கும். அந்த நேரங்களில் வெட்டி பேச்சுகள், வீணாக சுத்தி பார்ப்பது, வீணாக அலைவது என்று இல்லாமல், குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, துவாக்கள் மனப்பாடம் செய்வது, இல்ம் உடைய நூல்களைப் படித்து, இல்மை தேடிக்கொள்வது. இப்படியாக தங்களுடைய நேரங்களை பேணிக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஏழாவதாக, யாருக்கும் தன்னால் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது. தன்னுடைய குணமோ செயலோ தன்னுடைய எந்த ஒரு காரியமுமோ பிறருக்கு தொந்தரவு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய கூற்றை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ரஹிமதுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
ஒரு முஸ்லிம் என்பவர், யாருடைய கரத்தாலும் நாவாலும் மக்கள் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவர்தான் முஸ்லிம் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 10.
குறிப்பாக மினாமில் அரபாவில் முஸ்தலிஃபாவில் தங்கியிருக்கக் கூடிய காலங்களில் மிகப்பெரிய ஒரு தொந்தரவை மக்கள் பிறருக்கு செய்வதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக.
இப்படியாக பல நேரங்களில் அந்த இடத்தில் ஷைத்தான் நம்மை தூண்டுவான். ஷைத்தான் நமக்கு வஸ்வஸாக்களை ஏற்படுத்துவான். நம்மை கட்டுப்படுத்த வேண்டும். என்னால் பிறருக்கு எந்த தொந்தரவும் ஏற்பட்டுவிடக் கூடாது.
ஆகவே, இப்படிப்பட்ட ஒழுக்கங்களை நாம் படித்து, அல்லாஹ்வுடைய ஹஜ் வணக்கத்தை செய்பவர்களாக இருக்க வேண்டும். நமது குடும்பத்தார்களில் உறவுகளில் நண்பர்களில் யார் இந்த ஹஜ் வணக்கத்தை நாடி இருக்கிறார்களோ, அவர்களுக்கும் இந்த ஒழுக்கங்களை நினைவூட்டி, அதன் மூலமாக நாமும் நன்மையை பெறுவோமாக!
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்த ஆண்டு குறிப்பாக ஹஜ் உம்ரா உடைய வணக்க வழிபாட்டை யார் நாடி இருக்கிறார்களோ, அவர்களுக்கு அதை லேசாக்கி கொடுப்பானாக!
அவருடைய ஹஜ்ஜை மறுமைக்கான வெற்றியாக, அல்லாஹ்வுடைய பொருத்தமாக கொடுத்து, சலாமத்தோடு அவர்கள் இல்லம் திரும்புவதற்கு உதவி செய்வானாக!
எல்லா விதமான ஆபத்துகளில் இருந்தும் குழப்பங்களிலிருந்தும் ஷைத்தானின் ஊசலாட்டங்களில் இருந்தும் அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய வீட்டுக்கு வரக்கூடிய எல்லா முஸ்லிம்களையும் பாதுகாத்து அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/