HOME      Khutba      ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 2-5 | Tamil Bayan - 472   
 

ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 2-5 | Tamil Bayan - 472

           

ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 2-5 | Tamil Bayan - 472


ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் (அமர்வு 2)
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் (அமர்வு 2)
 
வரிசை : 472
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 21-07-2017 | 27-10-1438
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்துக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாகவும், அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பேணி வாழும்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பின்பற்றி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய பாவங்களை மன்னித்து நல்லோர்களோடு சேர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைந்த கூட்டத்துடன் வைப்பானாக. அல்லாஹ் எதை தனது தூதரின் நாவின் வாயிலாக நமக்கு மார்க்கமாக்கினானோ, அந்த மார்க்கத்தை வெளிப்படையாகவும் உள்ரங்கமாகவும் தனிமையிலும் சபையிலும் எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றி வாழக்கூடிய பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள் புரிவானாக!
 
ஹஜ்ஜுடைய மாதத்தில் நாம் இருக்கின்றோம். அல்லாஹ் கூறுகின்றான்:
 
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ
 
ஹஜ் அறியப்பட்ட மாதம் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் : 2:197)
 
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுகின்ற அந்த மாதங்கள் ஷவ்வால் உடைய மாதங்கள் துல்கஅதா மற்றும் துல்ஹஜ் உடைய ஆரம்பப் பகுதி இந்த நாட்களில் ஹஜ்ஜினுடைய வணக்க வழிபாட்டை பற்றி எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டுவதை பொருத்தமாக நினைக்கின்றேன். 
 
சென்ற ஜும்ஆவில் ஹஜ் உடைய சிறப்புகள் சிலவற்றை நாம் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் அதைத் தொடர்ந்து இந்த ஜும்ஆவிலும் ஹஜ் சம்பந்தமான மேலும் பல விஷயங்களை நாம் கேட்டு பயன் பெறுவோமாக. 
 
பொதுவாக ஹஜ் என்று வந்து விட்ட உடனே மக்களுக்கு இல்லாத தேவைகள் எல்லாம் கண்முன்னே வந்து விடும். ஷைத்தான் இல்லாத சிந்தனைகள் எல்லாம் அவர்களுக்கு கொண்டு வருவான். இல்லாத தேவைகளை எல்லாம் தன்னுடைய கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்துவான். 
 
தூரமான விஷயங்களை எல்லாம் மிக அருகாமையில் கொண்டு வந்து நிறுத்துவான். இப்போதுதான் பிள்ளை பெரிய பிள்ளையாகி இருப்பான். இவரிடத்தில் போதுமான செல்வம் இருக்கும். அவர் நினைப்பார்; 
 
ஓ! ஹஜ் செய்துவிட்டால் எனது பிள்ளையை நான் எப்படி திருமணம் முடித்துக் கொடுப்பது? பிள்ளையை எப்படிப் படிக்க வைப்பது? இப்படியாக பல காரணங்களை பல விஷயங்களை தனது சிந்தனைக்கு கொண்டு வந்து ஹஜ்ஜை தள்ளி போடுகின்ற பலரை நாம் பார்க்கின்றோம்.
 
கண்ணியத்துக்குரியவர்களே! முதலாவதாக இது குறித்த விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,
 
من أراد الحجَّ فليتعجَّلْ
 
"யார் ஹஜ் செய்ய வேண்டும் என்று நாடி விட்டாரோ ஹஜ்ஜுக்கான செல்வம் அவரிடத்தில் கிடைக்கப்பெற்று, ஹஜ் செய்வதற்கான எண்ணம் அவருக்கு வந்து விடுமோ அவர் உடனடியாக அதில் தீவிரம் காட்டட்டும்" என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாக்ம், எண் : 1645.
 
இங்கே நாம் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் நன்மையில் அவசரம் காட்ட மாட்டோம். நன்மை என்று வந்துவிட்டால் பொறுமையை மார்க்கம் சொல்லியிருக்கிறது என்று சொல்வோம். துன்யா என்று வந்துவிட்டால் அவசரம் காட்டுவோம். அங்கே நமக்கு பொறுமை பொறுத்திருப்பது வராது. 
 
அங்கே என்ன சொல்வோம்? கஷ்டப்பட்டால் தானே முயற்சி செய்தால் தானே காலம் இருக்கும்போதே தூற்றிக் கொண்டால் தானே என்பதாக அங்கே சில பழமொழிகள் நமக்கு நினைவுக்கு வரும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். உங்களுக்கு ஹஜ் உடைய நாட்டம் வந்துவிட்டதா? அதில் அவர் அவசரம் காட்டட்டும். விரையட்டும். ஏன் தெரியுமா? சில நேரங்களில் சிலருக்கு நோய் ஏற்படலாம். அவருடைய வாகனங்கள் தவறி விடலாம். சில தேவைகள் அவருக்கு ஏற்பட்டு விடலாம். 
 
ஆகவே இப்படி குறுக்கிடக் கூடிய காரணங்கள் இருக்கின்ற காரணத்தினால் யார் ஹஜ்ஜை நாடி விட்டாரோ அவர்கள் உடனடியாக ஹஜ் செய்து கொள்ளட்டும்‌.
 
கண்ணியத்துக்குரியவர்களே! ஹஜ்ஜுக்காக செலவழிக்கும் போது அல்லாஹு தஆலா நம்முடைய செல்வத்தில் எப்படி குறைவு செய்துவிடுவான்? நஷ்டத்தை ஏற்படுத்துவான்? நம்மை எப்படி தேவை உள்ளவர்களாக ஆக்கிவிடுவான்? 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
تابِعوا بينَ الحجِّ والعمرةِ ، فإنَّهُما ينفيانِ الفقرَ والذُّنوبَ ، كما ينفِي الكيرُ خبثَ الحديدِ 
 
ஹஜ்ஜையும் உம்ராவையும் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு ஹஜ்ஜுக்குப் பின் ஒரு ஹஜ் ஒரு உம்ராவுக்கு பின் ஒரு உம்ரா என்று ஹஜ்ஜுக்காக உம்ராவுக்காக நீங்கள் பயணம் செய்து கொண்டே இருங்கள். 
 
ஏன் தெரியுமா? இந்த இரண்டும் வறுமையையும் பாவத்தையும் போக்கி விடுகிறது. எப்படி கொல்லனின் துருத்தி இரும்பினுடைய அசுத்தங்களை நீக்கி விடுகிறதோ அதுபோன்று.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 810.
 
ஹஜ்ஜும் உம்ராவும் ஒரு மனிதனுடைய ஏழ்மையை பிறரிடத்தில் தேவையாக கூடிய அந்த ஏழ்மையை போக்கிவிடுகிறது. நீக்கிவிடுகிறது.
 
அல்லாஹு தஆலா அவருடைய தொழிலில் அவருடைய வியாபாரத்தில் அவருடைய ரிஸ்கில் பரக்கத்தை செய்கிறான் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.
 
ஒருவர் நினைக்கிறார், என்னிடத்தில் இருக்கக்கூடிய செல்வத்தைக் கொண்டு நான் ஹஜ் செய்து விட்டால் பிறகு எப்படி வியாபாரம் செய்வது? பிறகு எப்படி என் பிள்ளையை படிக்க வைப்பது? பிறகு எப்படி என் மகளை திருமணம் முடித்துக் கொடுப்பது? என்பதாக.
 
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இது ஒரு வேளை ஷைத்தான் இவருக்கு பயன்படுத்தக்கூடிய வறுமையின் பயமாகவும் இருக்கலாம். அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்வதைப் படியுங்கள்,
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ (267) الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (268) يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ (269) وَمَا أَنْفَقْتُمْ مِنْ نَفَقَةٍ أَوْ نَذَرْتُمْ مِنْ نَذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ
 
நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாகவே தவிர வாங்கிக்கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.
 
(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ‘ஹிக்மா' (ஞானம், நுண்ணறி)வை கொடுக்கிறான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகிறாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, ஞானத்தைக்கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெற மாட்டார்கள். (நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிகிறான். மேலும், (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை. (அல்குர்ஆன் 2 : 267-270)
 
ஹஜ்ஜுக்காக அந்தக் காலத்திலிருந்தே ஒரு பெரிய பொருள் செலவு ஆனதை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்.
 
நம்முடைய சிறந்த முன்னோர்கள் எவ்வளவு குறைவாகச் செலவு செய்து ஹஜ் செய்ய முடியுமோ செலவு செய்தார்கள். ஹஜ் பயணத்திற்கு செலவு கண்டிப்பாக தேவையான ஒன்றுதான். ஆனால் எந்த செலவை நீங்கள் ஹஜ்க்காக செய்கிறீர்களோ, அதில் ஆடம்பரமோ, பகட்டோ, வீண்விரயமோ, மார்க்க வரம்புகளை மீறுவதோ இருக்கக்கூடாது.
 
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ஜுக்காக வருகிறார்கள். திரும்பும் போது தன்னுடைய அந்த பொருளாளர் இடத்தில் கேட்கிறார்கள். இந்த ஹஜ்ஜிற்க்காக நாம் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம்? என்று. 
 
அவர் சொல்கிறார், 18 தீனார் 18 தங்க காசுகளை செலவு செய்தோம் என்று. உமர் ரலியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்; நாம் மிக அதிகம் செலவு செய்து விட்டோம் என்று. 
 
எவ்வளவு பெரிய கலிஃபா! அவர்கள் மட்டுமா? அவர்களோடு குடும்பத்தார்கள் தோழர்கள் இப்படி எல்லோருக்கும் சேர்த்து 18 தங்க காசுகள் செலவழித்து, அதை நாம் அதிகம் செலவழித்து விட்டோம். இன்னும் சிக்கனமாக செலவழித்து இருக்க வேண்டுமே என்று சொல்கிறார்கள்.
 
இபாதத்திற்கு செலவழிப்பதற்கு நன்மை இருக்கிறது. ஆனால் அந்த செலவு வீண் விரயமாக ஆடம்பரமாக தேவையற்ற சொகுசுகளின் தேடலாக இருந்துவிடக்கூடாது. 
 
இன்று பலர் ஹஜ்ஜுக்கு வருவதற்கு பயப்படுகிறார்கள். என்ன காரணம் என்று சொன்னால் செலவு அதிகமாகும் என்று. இப்படி ஒரு கூட்டம். இன்னொரு கூட்டம், தன்னிடத்தில் இருப்பதைக் கொண்டு, தன்னுடைய சக்திக்கு உட்பட்ட அது ஒரு நிறுவனத்திலோ அரசாங்க நிறுவனத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ சென்றால் மக்கள் என்னை கேட்பார்களே! எந்த டிராவல்ஸ் இல் போனீர்கள் என்று. இந்த ட்ராவல்ஸ் அந்த ட்ராவல்ஸ் என்று அதிலும் பெருமையை தேடக்கூடிய மன நிலையை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் .
 
கண்ணியத்துக்குரியவர்களே! இந்த பெருமைக்காக இவர்கள் சென்றார்களா? அல்லாஹ்வுடைய வீட்டை தரிசிப்பதற்காக, கஅபாவை தவாஃப் செய்வதற்காக, ரப்புக்கு முன்னால் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதற்காக சென்றார்களா? யார் எந்த திட்டத்திற்காக செல்கிறார்களோ அந்த நிய்யத் அவர்களுக்கு நிறைவேறும்.
 
அல்லாஹ் சொல்கிறான். ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயமுறுத்துகிறான். அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்தால் பிறகு உனக்கு தேவை ஏற்படும் போது என்ன செய்வாய்? என்று. 
 
அல்லாஹ் அவன் உங்களுக்கு தனது மன்னிப்பையும் வாக்களிக்கின்றான். மேலும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்தால் உங்களுடைய வணக்க வழிபாடுகளுக்கோ, உங்களுடைய உறவுகளுக்கோ தேவையுள்ளவர்களுக்கோ அல்லாஹ்வின் மார்க்கத்திற்கோ நீங்கள் செலவு செய்தால் உங்களுக்கு மேலும் மேலும் பரக்கத்தை கொடுப்பதாக அல்லாஹ் வாக்களிக்கின்றான்.
 
மேலும், அல்லாஹ் இறுதியாக சொல்கிறான்; நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் எதை தர்மம் செய்தாலும் சரி, அல்லது அல்லாஹ்வுடைய மார்க்க கடமைகளில் எதையும் நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் உறுதி செய்தாலும் சரி, அல்லாஹ் அதை அறிந்து வைத்திருக்கின்றான்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வை உணவளிப்பவனாக தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்றவனாக ஒருவன் நம்பிக்கை கொண்டு, அதற்குப் பிறகு அல்லாஹ் கடமையாக்கிய ஒரு பெரிய கடமைகளில் தனது செல்வத்தைச் செலவு செய்தால், அதனால் தனக்கு செல்வத்தில் குறைவு நஷ்டம் ஏற்பட்டு விடும்; தான் தேவை உள்ளவர்களாக ஆகிவிடுவோம் என்று ஒருவர் நினைத்தால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அவனுடைய ஈமான் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது. 
 
ஆகவே இந்த ஹஜ்ஜை பொருத்தவரை யார் மீது கடமை ஆகிவிட்டதோ அவர்கள் உடனடியாக மற்ற எல்லா தேவைகளையும் தன்னுடைய மற்ற எல்லா விதமான செயல்பாடுகளையும் தள்ளிவைத்துவிட்டு இந்த ஹஜ்ஜுக்கான முக்கியத்துவத்தை முதன்மையை தர வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
 
அல்லாஹ் இந்த ஹஜ் என்ற நமது இந்த கடமையில் நமக்கு மிகப்பெரிய நற்பாக்கியங்களைத் வைத்திருக்கின்றான். குறிப்பாக அல்லாஹ்வுடைய வீட்டின் அல்லாஹ்வுடைய கஅபாவை தரிசிக்க கூடிய அங்கே தொழக்கூடிய அங்கே தவாஃப் செய்யக் கூடிய அங்கே தங்கியிருக்கக் கூடிய ஒரு பெரிய பாக்கியத்தை இந்த ஹஜ் உம்ராவில் அல்லாஹ் வழங்குகிறான். 
 
ஒரு முஃமினுக்கு அவருடைய இறை நம்பிக்கை, அவருடைய தொழுகை, அவருடைய நோன்பு, அவருடைய ஜகாத், இது போன்று அவருக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கக்கூடிய அவர் ஆசைப்படக் கூடிய மிகப் பெரிய நற்பாக்கியங்களில் ஒன்று, அல்லாஹ்வுடைய வீட்டை பார்க்க வேண்டும்; அல்லாஹ்வுடைய கஅபாவை தவாஃப் செய்ய வேண்டும்; அங்கே தங்க வேண்டும்; அங்கு இபாதத்துகள் செய்ய வேண்டும். 
 
இந்த ஹஜ் கடமையில் அல்லாஹ் புனிதமாக்கிய இடங்களில் தங்கி வணக்க வழிபாடுகள் செய்ய வேண்டும். அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:
 
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ (96) فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
 
(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாதுகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 96,97)
 
மேலும், அல்லாஹ் சொல்கிறான்:
 
وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏
 
இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது. (அல்குர்ஆன் 22 : 32)
 
அல்லாஹ்வுடைய அடையாளங்கள் என்றால் என்ன? எந்த ஒன்றை அல்லாஹ் என்னுடைய மார்க்க அடையாளமாக ஆக்கினானோ, தன்னுடைய தீனுடைய அடையாளச் சின்னங்களாக ஆக்கினானோ, அது இடமோ காலமோ அல்லது பொருள்களோ எதைக் கொண்டு அல்லாஹ்வை நீங்கள் அறிந்து கொள்கிறீர்களோ எதை புனிதப்படுத்த வேண்டும், எதை கண்ணியப்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டு இருக்கின்றானோ, எங்கே பாவங்கள் செய்யக் கூடாது, அவற்றை மதித்துப் பேணிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறானோ அவை எல்லாம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள். அல்லாஹ்வின் அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை நமக்கு உணர்த்தக்கூடிய அல்லாஹுவை நினைவு படுத்த கூடிய விஷயங்கள். அது இடமாக இருக்கலாம், அல்லது காலமாக இருக்கலாம், அல்லது சில பொருள்கள் ஆக இருக்கலாம்.
 
அல்லாஹ் சொல்கிறான்: யார் அல்லாஹ்வுடைய அடையாள சின்னங்களை கண்ணியப் படுத்துவார்களோ, அதை மதிப்பு மரியாதை செய்வார்களோ, அது அவர்களுடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய இறை அச்சத்தினால் ஏற்படக்கூடியதாகும்.
 
ஒரு முஃமின் இந்த தக்வாவிற்கு எவ்வளவு தேவை உள்ளவனாக இருக்கிறான்! ஒரு முஃமினுக்கு தக்வா என்பது அவருடைய வாழ்க்கையில் இரவு பகல் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தேவையான ஒன்று. 
 
எந்த இபாதத்தாக இருந்தாலும் அதனுடைய நோக்கமாக தக்வாவை தான் அல்லாஹ் சொல்கிறான். நோன்பாக இருக்கட்டும், ஹஜ்ஜாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும் என்று அல்லாஹ் சொல்லும் பொழுது நீங்கள் மஸ்ஜிதிற்கு வரும்பொழுது அலங்காரமான நல்ல ஆடைகளை அணியுங்கள் என்று சொல்கிறான். பிறகு அல்லாஹ் சொல்கிறான், ஆடைகளில் சிறந்த ஆடை தக்வா உடைய ஆடை என்று.
 
அன்பானவர்களே! எல்லா வணக்க வழிபாடுகளை கொண்டும் அடியான் அல்லாஹ்வுடைய தக்வாவை தேட வேண்டும். அந்த தக்வாவை உள்ளத்தில் கொண்டுவரவேண்டும் என்ற அந்த குறிக்கோளோடு செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
அந்த தக்வா யாருக்கு கிடைக்கப்பெறுகிறது? யார் அல்லாஹ்வுடைய வீட்டுக்கு வருகிறார்களோ, ஹஜ்ஜுக்கு வருகிறார்களோ, இந்த கஅபாவை பார்க்கிறார்களோ, அங்கேயே தங்குகிறார்களோ, தவாஃப் செய்கிறார்களோ அவர்களுக்கு.
 
ஆகவேதான், அங்கே பல சூழ்நிலைகளில் பார்க்கின்றோம். வாழ்நாளெல்லாம் அல்லாஹ்வுடைய பயத்தால் அழாதவர்கள், தங்களுடைய பாவத்தை நினைத்து கதறாதவர்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய வீட்டை பார்க்கும் பொழுது அல்லது அல்லாஹ்வுடைய வீட்டை அங்கே சுற்றி தவாப் செய்யும் போது அங்கே தங்கியிருக்கும்போது அவர்களை அறியாமலேயே அல்லாஹ்வுடைய அச்சத்தால் அவர்களுடைய கண்கள் தாரை தாரையாக கண்ணீர் சிந்துவதை பார்க்கிறோம்.
 
அப்படி அல்லாஹு தஆலா உள்ளத்தை மென்மையாக்கி விடுகிறான். அல்லாஹ்வையே அறியாத, அல்லாஹ் என்றால் யார் என்று கேட்டு, ஆனால் முஸ்லிமான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய குடும்பத்தார்களோடு வலுக்கட்டாயமாக ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் எல்லாம் முஃமீனாக முஸ்லிமாக தக்வா உள்ளவர்களாக திரும்பி இருப்பதை வாழ்க்கையில் பார்க்கிறோம்.
 
அல்லது எல்லோரும் செல்கிறார்கள், நானும் செல்கிறேன் என்ற எண்ணத்தில் வந்தவர்கள் எல்லாம் அங்கே உள்ள ஈமானிய இறையச்சத்தின் சூழ்நிலையில் ஈமானை படித்து ஈமானுடைய உணர்வு பெற்றவர்களாக திரும்பியதை பார்க்கிறோம்.
 
ஆகவேதான், அங்கு உண்மையிலேயே வந்து வணக்க வழிபாடுகளில் கொஞ்சமாவது உணர்வுகளோடு அந்த ஆரம்ப நாட்களில் ஈடுபட்டு விட்டால் அல்லாஹ்வுடைய அருளால் இறுதிவரை அந்த வணக்க வழிபாடுகளில் இருந்து பிறகு தன்னுடைய இல்லம் திரும்பியதற்குப் பிறகுகூட அந்த ஹஜ்ஜின் உடைய வணக்க வழிபாட்டை நினைத்து நினைத்து தனது இறுதி காலங்களில் அல்லாஹ்வுடைய ஒரு வணக்க சாலியாக வாழ்வதைப் பார்க்கிறோம்.
 
ஆகவே, இந்த ஹஜ் உடைய வணக்க வழிபாட்டின் மூலமாக நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பாக்கியம் அல்லாஹ்வுடைய வீட்டை கண்ணியப்படுத்தக் கூடிய பாக்கியம். அங்கே சென்று நம்முடைய ஈமானை நம்முடைய தக்வாவை புதுப்பித்துகொள்வதற்கு அதிகப்படுத்துவதற்கு உள்ள பாக்கியம். 
 
அதுபோன்றுதான், இந்த ஹஜ்ஜின் மூலமாக நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளில் ஒன்று, அல்லாஹு தஆலா முஃமின்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் அங்கே அன்பை நேசத்தை பரஸ்பர ஒற்றுமையை ஏற்படுத்துகின்றார். 
 
அங்கு வரக் கூடியவர்கள் மொழியினால் வேறுபட்டவர்கள், நிறத்தால் வேறுபட்டவர்கள், வசிக்கின்ற நாடுகளால் வேறுபட்டவர்கள். ஆனால், இவர்கள் எல்லாம் அங்கே ஒரே மைதானத்தில் ஒன்று சேர்ந்து ஒரே ரப்பை அழைக்கின்றார்கள். ஒரே கஅபாவை நோக்கி முன்னோக்கி அங்கே தங்குகிறார்கள். 
 
அவர்களுடைய நோக்கம் ஒன்றாக இருக்கிறது. ஒரே மனிதனுடைய உள்ளத்தில் ஒரே மனிதனுடைய கல்பை போன்று அங்கே அவர்களுடைய கல்புகள் மாறுகின்றன. இதைதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ، وَتَرَاحُمِهِمْ، وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
 
முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் நேசித்து கொள்வது தங்களுக்கு மத்தியில் பிரியம் காட்டுவதில் உதாரணம், ஒரு உடலின் உதாரணத்தபோல. உடலில் ஏதாவது வலி ஏற்பட்டால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலுக்கு ஆளாகின்றன. விழித்திருக்கின்றன.
 
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2586.
 
இதுபோன்றுதான் ஹஜ்ஜிற்க்கு வரக்கூடிய ஹாஜிகள் எல்லாருடைய நோக்கம் அல்லாஹ்வுடைய வீட்டை தவாஃப் செய்ய வேண்டும், அல்லாஹ்வை வணங்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சிறந்த நோக்கத்தை முஸ்லிம் அங்கே அடையப் பெறுகிறான். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதைப் போன்று,
 
الْمُسْلِمُونَ تَتَكَافَأُ دِمَاؤُهُمْ
 
முஸ்லிம்களுடைய ரத்தங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று நிகரான ரத்தங்கள் தான்.
 
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 959.
 
செல்வந்தர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சாதாரணமானவர்கள் இப்படி அல்ல. எல்லாருடைய இரத்தமும் ஒரே இரத்தம் தான். யார் யாருடைய விஷயத்தில் குற்றம் இழைத்தாலும் அல்லாஹ்வுடைய தண்டனை என்பது அரசனுக்கும் ஆண்டிக்கும் படித்தவனுக்கு படிக்காதவனுக்கும் சமமான ஒன்றுதான். 
 
அவர்களுடைய இரத்தங்கள் எல்லாம் ஒருவருடைய இரத்தம் மற்றவரின் ரத்தத்திற்கு நிகரானது தான். முஸ்லிம்களில் வசதி படைத்தவர்கள் அல்லது அதிகாரம் படைத்தவர்கள் தான் கட்டளை இடுவதற்கு எனது மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்கோ தகுதியானவர்கள் என்றல்ல. 
 
ஒரு சாதாரண முஸ்லிம் கூட உடன்படிக்கைகளை கொடுப்பதற்கும் செய்வதற்கும் உரிமை உள்ளவர். அதாவது ஒரு முஸ்லிம் வேறு ஒரு நாட்டில் இருக்கக்கூடிய தன்னுடைய நெருக்கமான ஒரு உறவினரையோ, அல்லது அந்த நாட்டில் இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு சண்டை சச்சரவு செய்யாத ஒரு சாதாரண ஒரு காஃபிரையோ, ஒரு முஸ்லிம் நாட்டுக்கு தன்னுடைய நாட்டுக்கு வர வைப்பதற்காக பாதுகாப்பு கொடுத்து விட்டால் அவன் கொடுத்த அந்த பாதுகாப்பை அந்த நாட்டினுடைய அரசரிலிருந்து அந்நாட்டு அரசாங்கத்திலிருந்து ராணுவத்திலிருந்து எல்லோரும் காப்பாற்ற வேண்டும். 
 
ஒரு முஸ்லீம் ஒரு வாக்கை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டால் அவருடைய வாக்கை மற்ற எல்லா முஸ்லீம்களும் காப்பாற்ற வேண்டும். இப்படியாக ரசூலுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறிய அந்த ஈமான் இஸ்லாமிய குடும்பத்தார்கள் உடைய சகோதரத்துவத்தை ஒற்றுமையை அல்லாஹ்வுடைய அருளால் ஹஜ்ஜுடைய வணக்க வழிபாட்டில் நாம் பார்க்கிறோம். 
 
அல்லாஹ்வுடைய வீட்டிற்கு ஹாஜிகள் திரும்பத்திரும்ப வரும் பொழுது அந்த வீடு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய வீடாக இருக்கின்றது. அந்த ஒரு புனிதமான இல்லத்தில் ஒன்று சேரக்கூடிய அல்லாஹ்வின் விருந்தினர்கள். 
 
அந்த முஃமின்கள் தங்களுடைய உயிர் பொருள்களை பாதுகாப்பதில் ஒருவரை ஒருவர் உற்ற துணையாக இருக்க வேண்டும் என்ற ஈமானிய உணர்வுகளை பெறுகிறார். 
 
அதுபோன்றுதான் நமக்கு இந்த ஹஜ்ஜின் மூலமாக கிடைக்கக்கூடிய மிகப் பெரிய நன்மைகளில் ஒன்று, நாம் நினைத்தே பார்த்திருக்க மாட்டோம். அதாவது, இப்ராஹீம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் இந்த இரண்டு மாபெரும் ஏகத்துவ வழிகாட்டிகளான அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலைநிறுத்தி குடும்பமே அதற்காக அற்பமான அந்த திருத்தூதர்கள் உடைய வராசத்து சொத்தை அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற அந்த ஈமானிய சொத்தை நாம் பார்க்க செல்கிறோம்.
 
அவர்களுடைய புனித இடங்களை நாம் பார்க்க செல்கிறோம். அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:
 
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ (127) رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
 
இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது ‘‘எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்கள் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன். எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்கள் சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! (‘ஹஜ்ஜூ' காலத்தில்) நாங்கள் புரியவேண்டிய வணக்கங்களை எங்களுக்கு அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன். (அல்குர்ஆன் 2 : 127,128)
 
ஒரு விஷயத்தை இந்த இடத்தில் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த அளவு அல்லாஹ்விடத்தில் உங்களுடைய ஈமானுக்காக இஸ்லாமிய பற்றுக்காக தக்வாவுக்காக துஆ கேட்பீர்களோ, அந்த அளவு ஈமானிய பற்று இஸ்லாமிய அந்த அடிப்படை தக்வா உடைய குணங்களை கொடுக்கப்படுவீர்கள். 
 
யார் இதிலிருந்து தேவையற்றவராக இதற்காக துஆ செய்வதை விட்டவராக இருப்பாரோ அவர் அந்த அளவுக்கு அதிலிருந்து பலவீனப்பட்டு கொண்டே இருப்பார். 
 
இங்கே இந்த இரண்டு இறைதூதர்களை பாருங்கள். எந்த இறைதூதர் அல்லாஹ்வுடைய அத்தனை கட்டளைகளையும் உடனுக்குடன் சரியாக செய்தார் என்று அல்லாஹ்வால் சான்று கொடுக்கப்பட்டாரோ,
 
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ 
 
(அல்குர்ஆன் 2 : 124)
 
இப்ராஹீமை அவருடைய இறைவன் பல விஷயங்களில் சோதித்தான். அனைத்தையும் அவர் சரியாக முழுமையாக நிறைவேற்றினார் என்று சான்று கொடுக்கப்பட்ட அந்த தூதர் அல்லாஹ்விடத்தில் சொல்கிறார். அவருடைய மகனார் சொல்கிறார்,
 
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
 
யா அல்லாஹ்! எங்களை உனக்கு முற்றிலும் பணிந்த அடிமைகளாக உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக ஆக்கு. எங்களது வழித்தோன்றல்களும் உனக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கக் கூடிய முஸ்லிமான உம்மத்தை ஏற்படுத்து. யா அல்லாஹ் ஹஜ்ஜுடைய வணக்க வழிபாடுகள் எப்படி செய்ய வேண்டும் என்பதை நீ எங்களுக்கு காட்டிக்கொடு. எங்களை மன்னித்து விடுவாயாக. (அல்குர்ஆன் 2 : 128)
 
அல்லாஹ்விடத்தில் ஒரு அடியான் கேட்க வேண்டிய அந்த முக்கியமான துவா வணக்க வழிபாடுகள் செய்பவனாக இருக்கட்டும், அல்லாஹ்வை அதிகம் பயந்தவனாக இருக்கட்டும், எந்த ஒரு நன்மையின் தரத்தில் உயர்ந்தவனாக இருந்தாலும் அவன் அல்லாஹ்விடத்தில் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். 
 
யா அல்லாஹ்! எங்களை மன்னித்துவிடு. அல்லாஹ்வுடைய மன்னிப்பு என்பது நன்மைகளை அதிகமாக செய்ய உதவும். பாவங்களை விட்டு நம்மை பாதுகாப்பதற்கு உதவும். 
 
பிறகு சொன்னார்கள்;
 
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
 
எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன் வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த ஞானங்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன், ஞானமுடையவன்'' (என்று பிரார்த்தித்தனர்). (அல்குர்ஆன் 2 : 129)
 
அன்பானவர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வருகைக்காக இப்ராஹிம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஅபத்துல்லாஹ்வின் அருகில் செய்த அந்த துஆவை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 
 
எந்த கஅபாவை இப்ராஹிம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் ஏற்றி எழுப்பினார்களோ, அங்கே தவாப் செய்தவர்களாக அங்கே இபாதத் செய்தவர்களாக நமக்காக துஆ கேட்டார்களோ, அவர்களுடைய துஆ என்ன? யா அல்லாஹ்! எங்களுக்கு இங்கு வசதியான வாழ்க்கை கொடு என்று கேட்கவில்லை. யா அல்லாஹ் சாப்பிடுவதற்கு உணவு குடு என்று தான் கேட்டார்கள்.
 
யா அல்லாஹ்! எங்களுடைய இந்த சந்ததிகளுக்கு கோட்டைகளை அரசாங்கங்களை ஆட்சிகளை அதிகாரங்களை கொடு என்று அவர்கள் கேட்கவில்லை. நமக்காக அவர்கள் கேட்ட துஆ என்ன தெரியுமா?
 
யா அல்லாஹ் எங்களுடைய சந்ததிகளில் இஸ்லாமை பின்பற்றக்கூடிய உனக்கு முற்றிலும் பணிந்த உம்மத்தை ஏற்படுத்திக் கொடு என்று.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இஸ்லாம் நம்மிடம் இருக்குமேயானால் இந்த உலகத்தில் நமக்கு வேறு எதுவும் இல்லை என்றாலும் நாம் நஷ்டவாளி அல்ல. இஸ்லாம் நம்மிடத்தில் இல்லை என்றால் (அல்லாஹ் பாதுகாப்பானாக) இந்த உலகத்தில் என்னென்ன செல்வங்கள் அவர்கள் இடத்தில் கொட்டிக் கிடந்தாலும் குவிந்து கிடந்தாலும் சரி, அவருக்கு அந்த செல்வதால் நன்மை இல்லை. இந்த உலகத்திலும் அவர் நஷ்டவாளி. மறுமையிலும் அவர் நஷ்டவாளி.
 
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த கஅபாவை கட்டி எழுப்பிய அந்த காட்சி அந்த ஒரு நினைவை நாம் கொண்டு வருவதற்குரிய இடமாகும். 
 
எனவேதான் அல்லாஹு தஆலா அதை சொல்லும் பொழுது "நபியே இப்ராஹிம் இந்த காபாவை உயர்த்திய அந்த தினத்தை அந்த நாளை அந்த நேரத்தை நினைவு கூறுங்கள். நீங்கள் நினைத்துப் பாருங்கள். 
 
உங்களது அறிவால் உங்களது சிந்தனையால் இப்பேர்ப்பட்ட ஒரு அந்த நெருக்கடியான இக்கட்டான நேரத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து நடந்து வந்து எந்த வசதியும் இல்லாத அந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய வீட்டை கட்டி எழுப்பி மக்களை ஹஜ்ஜுக்காக அழைக்க வேண்டும் என்பதற்காக, அந்த இரண்டு இறைத்தூதர்கள் செய்த தியாகம் மிகப்பெரிது.
 
அல்லாஹு தஆலா இன்று அங்கு செல்வதற்கு உரிய அந்த வாய்ப்பை வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் உடைய அந்த ஒரு காலகட்டத்தை அங்கு நாம் நினைத்துப் பார்ப்போம். 
 
இப்ராஹீம் நபி இஸ்மாயில் நபி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸல்லம் அவர்களை மட்டும் அல்லாமல் நம்முடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம், யாரை நாம் உயிருக்கும் மேலாக மதிக்க வேண்டும் நம்முடைய தாய், தந்தை, பெற்றோர், பிள்ளை நம்முடைய உயிரை விட நேசிக்க வேண்டுமோ, அந்த நபியுடைய ஊர் அல்லவா! அந்த மக்கா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய இறுதி ஹஜ்ஜில் சகோதரர்களைப் பார்த்து சஹாபாக்களை பார்த்து முஸ்லிம்களைப் பார்த்து சொன்னார்கள்,
 
قِفُوا عَلَى مَشَاعِرِكُمْ فَإِنَّكُمْ عَلَى إِرْثٍ مِنْ إِرْثِ أَبِيكُمْ إِبْرَاهِيمَ
 
உங்களுடைய ஹஜ்ஜுக்கான இந்த இடங்கள் அது கஅபாவாக இருக்கட்டும், மினாவாக இருக்கட்டும், அரஃபாவாக இருக்கட்டும், முஸ்தலிஃபாவாக இருக்கட்டும், இந்த ஹஜ்ஜுக்குண்டான இந்த இடங்களில் நீங்கள் தங்குங்கள். ஏன் தெரியுமா?
 
உங்களுடைய தந்தை இப்ராஹிம் விட்டுச் சென்ற சொத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அவர்கள் விட்டுச்சென்ற ஈமானிய கலாச்சாரத்தில் அந்த ஈமானிய சொத்தில் நீங்கள் தங்கி இருக்கிறீர்கள். 
 
நூல் : அபூதாவூது, எண் : 1919.
 
எப்படிப்பட்ட ஈமானிய உணர்வை அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கொண்டுவருகிறார்கள் பாருங்கள். 
 
காலத்தால் இப்ராஹிம் அலைஹிசலாத்து வஸல்லம் நம்மைவிட எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முந்தையவர்கள். நமக்கும் அவர்களுக்குமிடையே பிரிக்கக்கூடிய எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் ஈமானிய உணர்வானது நம்மை அவர்களோடு நெருக்கமாகி வைக்கிறது. 
 
அன்பானவர்களே! நம்முடைய தந்தை நமக்காக எங்கேயாவது ஒரு இடத்தில் ஒரு வீடு கட்டி வைத்திருந்தால், அல்லது ஒரு தோட்டம் வாங்கி வைத்திருந்தால், இப்படி ஏதாவது ஒரு இடத்தில் நமது தந்தையினுடைய சொத்து ஒரு ஊரில் இருந்தால், அந்த சொத்தை தேடி அந்த இடத்தைத் தேடிச் சென்று அந்த இடத்தில் தங்குவதற்கு நாம் ஆசைப்படுவோமா?
 
என்னுடைய தந்தை ஒரு காலத்தில் எனக்காக வாங்கி வைத்த வீடு எனக்காக வாங்கி வைத்த தோட்டம் இந்த இடத்தை எனக்காக வாங்கினார், இப்படியாக சொல்லி அந்த இடத்தைத் தேடிச் செல்கிறோம், சாதாரணமாக நம்முடைய உடலுக்கு தந்தையாக இருக்க கூடியவர், நம்முடைய தந்தை நமக்காக வாங்கிய ஒரு இடத்தை பார்ப்பதற்கு அங்கு தங்கி மகிழ்வதற்காக ஆசைப்படுகிறோம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்; உங்களுடைய தந்தை இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாது வஸல்லம் உங்களுக்காக விட்டுச்சென்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
 
மேலும், அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதரை நினைத்துப் பாருங்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த அரஃபா உடைய மைதானத்தில் நின்று கொண்டு சொன்னார்கள்;
 
تَأْخُذُوا مَنَاسِكَكُمْ، فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ
 
சஹாபாக்கள் ஒன்று கூடியிருந்த அந்த நாளை கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அரஃபா மைதானத்தில் தங்களது தோழர்களைப் பார்த்து சொன்னார்கள். 
 
மக்களே! ஹஜ்ஜுடைய வணக்க வழிபாடுகளை என்னிடமிருந்து படித்துக்கொள்ளுங்கள். என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஒருவேளை இந்த வருஷத்திற்கு பிறகு என்னுடைய இந்த ஆண்டிற்குப் பிறகு உங்களை சந்திக்க முடியாமல் போய்விடலாம். 
 
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 14419, அபூதாவூத் – 1970.
 
எனவே ஹஜ்ஜுடைய வணக்க வழிபாடுகளை கற்றுக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே, அந்த அரஃபா மினா முஸ்தலிஃபா உடைய அந்த இடங்களில் நிற்கும்பொழுது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் எத்தனை ஈமானிய உணர்வுகளோடு மார்க்கப்பற்றோடு வணக்க வழிபாட்டின் மீது ஆசை கொண்டவர்களாக மறுமையின் தேடல் உள்ளவர்களாக நின்றிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதற்குரிய மிகப் பெரிய ஒரு பாக்கியம்.
 
எந்த இடத்தில் அல்லாஹ்வுடைய தூதரும் அந்த தூதருடைய தோழர்களும் ஒன்றுகூடி நின்றார்களோ, அந்த இடத்தில் நிற்கக்கூடிய பாக்கியங்களை அங்கு வணக்க வழிபாடுகளை செய்யக்கூடிய பாக்கியங்களை ஹஜ்ஜுக்காக செல்கிறவர் பெறுகிறார்.
 
அன்பானவர்களே! அது போன்றுதான் இந்த ஹஜ்ஜில் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, நம்முடைய தவ்ஹீத் -ஏகத்துவத்தை வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, என்னுடைய வணக்க வழிபாடுகள், என்னுடைய பணிவு, என்னுடைய துணிவு, என்னுடைய சுஜூத், என்னுடைய துவா இப்படி ஏதேனும் அல்லாஹ்விற்கு இணையாக வேறு யாரையும் ஆக்க மாட்டேன் என்ற தவ்ஹீதை உறுதிப்படுத்தக் கூடிய அந்த ஒரு பெரிய பாக்கியம் ஒரு ஹாஜிக்கு கிடைக்கிறது .
 
ஆனால், இன்று ஹஜ் செய்கிறவர்கள் அந்த ஒரு உறுதியை பெறுகிறார்களா என்றால் அதற்குரிய பாடம் அவர்களுக்கு கொடுக்கப்படாததால், அதற்குரிய கல்வி அவர்களுக்கு போதிக்கப்படாததால், இந்த உணர்வற்றவர்களாக திரும்புவதை நாம் பார்க்கிறோம். 
 
சிலரை பார்க்கிறோம்; நாகூர் தர்காவில் சென்று பாவாவிடத்தில் அனுமதி கேட்கிறார், ஹஜ்ஜுக்கு செல்வதற்காக அங்கே தங்குகிறார். கனவில் வந்து பாவா அனுமதி கொடுப்பாராம். அதற்குப் பிறகு இவர் ஹஜ்ஜுக்கு வருவாராம். 
 
ஹஜ்ஜுக்கு வந்ததற்குப் பிறகு உடனே அவர் சந்திக்க செல்கிறார். யாரை? தாயையா? தந்தையையா? தன்னுடைய சகோதரனா? தன்னுடைய மனைவியா? பிள்ளையா? இல்லை. நாகூர் தர்காவில் சென்று பாவாவை சந்திக்கச் செல்கிறார். 
 
பாவாவிற்கு சலாம் சொல்லிவிட்டு, சலாமத்தாக வந்ததற்கு பாவாவிற்கு நன்றி செலுத்திவிட்டு, அவர் வீட்டுக்கு செல்வாராம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 
 
எந்தச் ஹஜ் தவ்ஹீதின் உச்சத்தை போதிக்கிறதோ அந்த ஹஜ்ஜை செய்வதற்கு முன்பும் ஷிர்க், அந்த ஹஜ்ஜை செய்ததற்கு பின்பும் ஷிர்க். 
 
இதைத்தான் அன்றைய காலத்தில் ரசூலுல்லாஹ் உடைய அந்த காலத்தில் ஹஜ் செய்து கொண்டிருந்த அந்த முஷ்ரிகளும் செய்தார்கள்.  ஹஜ்ஜுக்கு முன்பும் ஷிர்க் செய்வார்கள்.  ஹஜ்ஜிலும் ஷிர்க் செய்வார்கள். ஹஜ்ஜுக்கு பின்னாலும் ஷிர்க் செய்வார்கள். 
 
இவர்களுடைய ஹஜ்ஜால் என்ன நன்மை இருக்கிறது? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தர்பியாவை பாருங்கள்.
 
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ "
 
நிச்சயமாக அல்லாஹ் நான் உன்னிடத்தில் ஆஜராகி விட்டேன். உன்னிடத்தில் ஆஜராகி விட்டேன். உனக்கு இணை துணை அறவே இல்லை. உனக்கு உன்னிடத்தில் ஆஜராகி விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்கொடையும் ஆட்சி அதிகாரமும் உனக்கே உரியது. உனக்கு இணை துணை இல்லை. 
 
இப்படிப்பட்ட இந்த வார்த்தையை அதிகமதிகம் ஹஜ்ஜுக்காக உம்ராவுக்காக வரக்கூடியவர்கள் தன்னுடைய தர்பியாவில் சொல்லி சொல்லி ஈமானிய தவ்ஹீதினுடைய உணர்வை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். 
 
அதுமட்டுமல்லாமல் அங்கே தங்கியிருக்கக் கூடிய காலங்களில் அல்லாஹ்வை வணங்குவது அல்லாஹ் சொன்னான் என்பதற்காக, ஏன்? எதற்கு? என்று கேட்காமல் அந்த கட்டளைகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி தாத்ரியங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யாமல் அல்லாஹ் மொட்டை அடிக்க சொன்னானா? மொட்டை அடித்து விடுகிறேன். அல்லாஹ் அறுத்துப் பலியிட சொன்னானா? அறுத்துப் பலியிட்டு விடுகிறேன்.
 
 இந்த எட்டாவது நாளில் அல்லாஹ் மினாவில் தங்கச் சொன்னானா? தங்கி விடுகிறேன். ஒன்பதாவது நாளில் அரஃபாவில் தங்க சொன்னானா? தங்கி விடுகிறேன். பிறகு இரவில் முஸ்தலிஃபாவிற்கு வர சொல்கிறானா? வந்துவிடுகிறேன். 
 
பிறகு அல்லாஹு தஆலா மினாவிற்கு வரச் சொல்கிறான். வந்துவிடுகிறேன். பிறகு அல்லாஹ் கஅபாவில் சென்று தவாஃப் செய்ய சொன்னானா? செய்துவிடுகிறேன். பிறகு மினாவில் வந்து தங்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னானா? வந்து தங்கி விடுகிறேன். 
 
பிறகு கற்களை எறிய வேண்டும் என்று அல்லாஹ் சொன்னானா? கற்களை எறிகிறேன். ஒவ்வொரு இடத்திலும் ஏழு கற்களை. 
 
இப்படியாக ஒவ்வொரு கட்டளைகளையும் அல்லாஹ் சொன்னான். அவருடைய தூதர் சொன்னார்கள் அதற்குப்பின்னால் என்னென்ன நுட்பங்கள், ஞானங்கள், தாத்பரியங்கள், இருக்கும் என்பதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் என்னுடைய ரப்புடைய கட்டளையை நான் செய்யப் போகிறேன், என்னுடைய தூதருடைய வழிகாட்டுதலை நான் செய்யப் போகிறேன் என்பதாக கொடுக்கக்கூடிய ஒரு ஈமானிய உணர்வுகள் அங்கு ஏற்படுகின்றன.
 
அன்பானவர்களே! இந்த பாக்கியங்கள் எல்லாம் நமக்கு ஹஜ்ஜின் மூலமாக கிடைக்கப்பெறுகிறது. அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா மேலும் பல நன்மைகளை நமக்கு இந்த ஹஜ் வணக்க வழிபாட்டில் வைத்திருக்கிறான். 
 
அல்லாஹு தஆலா நாம் அனைவருக்கும் அந்த ஹஜ் உடைய நசீபை அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக. மேலும் பல விஷயங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/