HOME      Khutba      ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 1-5 | Tamil Bayan - 472   
 

ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 1-5 | Tamil Bayan - 472

        

ஹஜ் சிறப்புகள் - சட்டங்கள் - ஐயங்கள் - தெளிவுகள் அமர்வு 1-5 | Tamil Bayan - 472


ஹஜ்ஜின் சிறப்புகள், சட்டங்கள், ஐயங்கள், தெளிவுகள்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹஜ்ஜின் சிறப்புகள், சட்டங்கள், ஐயங்கள், தெளிவுகள் (அமர்வு -1)
 
வரிசை : 472
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 14-07-2017 | 20-10-1438
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாகவும், அல்லாஹ்வின் மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி வாழும் படியும், அல்லாஹு தஆலா எதை ஹலாலாக்கினானோ அந்த சட்ட வரம்புக்குள்ளும் அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டு விலகி வாழும் படியும் எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா அவன் படைத்த 12 மாதங்களில் நான்கு மாதங்களை புனிதமாக்கினான். அந்த நான்கு மாதங்களில் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் என்ற மூன்று புனித மாதங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, அந்த மூன்று மாதங்களில் அல்லாஹு தஆலா ஹஜ் என்ற உயர்ந்த வணக்கத்தை நம் மீது கடமையாக்கினான். 
 
நம்மை நோக்கி அந்த புனித மாதங்கள் நகர்ந்துகொண்டு இருக்கின்றன. ஷவ்வாலில் நாம் இருக்கின்றோம். அடுத்து துல்கஅதா, துல்ஹஜ். இப்போதிலிருந்தே அந்த ஹஜ்ஜுக்கான ஏற்பாட்டில் நாம் இருக்க வேண்டும். 
 
இன்று பொதுவாக ஹஜ் பற்றிய ஒரு விழிப்புணர்வு நமது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் மிகவும் பலவீனமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
ஹஜ் யார் மீது கடமை? எப்போது செய்ய வேண்டும்? ஹஜ் உடைய சிறப்புகள் என்ன? என்ற விஷயங்களைப் பற்றி எல்லாம் நம்முடைய சகோதர சகோதரிகள் மிகவும் குறைவாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். 
 
இந்த பலவீனம் தான் அவர்களை ஹஜ் கடமையை தள்ளிப்போட செய்கிறது. இதனால் பலர் ஹஜ் கடமை ஆகியும் ஹஜ் செய்யாமலேயே இறந்துவிடக் கூடிய ஒரு அபாய நிலையை நாம் பார்க்கிறோம்.
 
ஏனென்றால், எந்த ஒரு கடமை தன் மீது கடமையாகி விட்டதோ, அதை நிறைவேற்றாத நிலையில் மரணிப்பதும் அவருடைய ஈமானுக்கு அவருடைய இஸ்லாமுக்கு மிகப்பெரிய பாதகத்தை சேதத்தை உண்டாக்கக் கூடியது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவிலும் இதைத் தொடர்ந்து சில ஜும்ஆக்களிலும் ஹஜ் உடைய சிறப்புகள், அதனுடைய முக்கியத்துவம், அதனுடைய சட்ட திட்டங்கள் மற்றும் அது விஷயமாக நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய சில தவறான புரிதல்களை சீர்திருத்தம் செய்வது தொடர்பாக நாம் பார்ப்போம்.
 
ஹஜ் உடைய சிறப்பைப் பற்றி பார்க்கும் பொழுது, இந்த ஹஜ் உடைய வணக்க வழிபாட்டை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்களுக்கு கூறிய வலியுறுத்தல் அந்த அவசியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது, இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
 
خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللهُ عَلَيْكُمُ الْحَجَّ، فَحُجُّوا»، فَقَالَ رَجُلٌ: أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللهِ؟ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَوْ قُلْتُ: نَعَمْ لَوَجَبَتْ، وَلَمَا اسْتَطَعْتُمْ "، ثُمَّ قَالَ: «ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَدَعُوهُ»
 
و فى رواية ابى داود «بَلْ مَرَّةً وَاحِدَةً، فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ»
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுக்கு உரையாற்றினார்கள். மக்களே! உங்கள் மீது ஹஜ் கட்டாயக் கடமையாக்கப் பட்டிருக்கிறது. ஆகவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்.
 
அப்பொழுது ஒரு மனிதர் எழுந்து கேட்கிறார்; அல்லாஹ்வுடைய தூதரே! ஹஜ் கடமை என்பது ஒவ்வொரு ஆண்டுமா? ஒவ்வொரு ஆண்டும் நாம் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமா? 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அந்த மனிதர் மூன்று முறை இந்தக் கேள்வியைக் திரும்ப கேட்கிறார். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்றாவது முறைக்கு பிறகு பதிலளித்தார்கள். 
 
நான் ஆம் என்று சொல்லி இருந்தால் அப்படியே உங்கள் மீது கடமையாகி விடும். ஆனால் நீங்கள் நிறைவேற்ற முடியாமல் பலவீனப் பட்டு இருப்பீர்கள். 
 
பிறகு சொன்னார்கள், நான் உங்களுக்கு எதை கொடுத்தேனோ, உங்களுக்கு எதை சொல்லி விட்டேனோ, எந்த அளவோடு சொல்லி நிறுத்தினேனோ, அந்த அளவோடு என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு போதிக்க வேண்டிய விஷயங்களில் எந்த அளவு நான் போதித்து நிறுத்தினேனோ, அந்த அளவோடு என்னை விட்டு விடுங்கள். 
 
உங்களுக்கு முன்னுள்ள சமுதாயங்கள் அவர்கள் அழிவுக்கு ஆளானதற்கு காரணம் தங்களது இறை தூதர்கள் இடத்தில் அதிகமாக கேள்வி கேட்டார்கள். அவர்களிடத்தில் கருத்து மாறுபட்டார்கள். அவர்களுடைய கூற்றுக்கு முரண் பட்டார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1337, அபூதாவூத், 1721.
 
அல்லாஹு தஆலா தனது படைப்பினங்களுக்கு வெற்றியை கொடுப்பதற்காகத்தான் தூதர்களை அனுப்புகிறான். தனது படைப்பினங்களை பொருந்தி கொள்வதற்கும், அவர்களை ஏற்றுக் கொள்வதற்கும், அவர்களை மன்னிப்பதற்கும்தான் தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். 
 
அப்படி இல்லையென்றால் தூதர்களை அனுப்பாமல் படைப்பினங்கள் செய்த பாவங்களின் காரணமாக, அவர்களின் அழிச்சாட்டியத்தின் காரணமாக, அல்லாஹ் அழித்து இருப்பான். 
 
ஆனால் அந்தத் தூதர் வந்ததற்குப் பிறகு அந்த தூதர் போதித்ததற்குப் பிறகு அந்த தூதர் இடத்திலேயே எதிர்கேள்வி கேட்டால், அந்த தூதரை ஏற்றுக் கொண்டோம் என்று சொன்னதற்கு பிறகு, அந்த தூதருக்கு மாறு செய்தால், அவருடைய கூற்றுக்கு மாறாக கருத்து தெரிவித்தால், இதைதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
 
உங்களுக்கு முன் உள்ள சமுதாயம் அழிந்து நாசம் ஆனார்களே, ஏன் தெரியுமா? தூதர் இடத்தில் துருவித்துருவி ஏன்? எதற்கு? எப்படி? என்று அவர்கள் விசாரணை செய்தார்கள். விசாரிக்கப்பட கூடியவர்கள் நாம், தூதர்கள் அல்ல! விசாரிக்கப்படக் கூடியவர்கள் நாம். நாம் பின்பற்ற வேண்டியவர்கள், பின்பற்றப்பட கூடியவர்கள்.
 
நம்மிடத்தில் தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஏன்? எதற்கு என்று கேட்பதற்கு உரிமை உள்ளவர்களே தவிர, நாம் அல்லாஹ்விடத்திலோ அல்லாஹ்வுடைய தூதர் இடத்திலோ ஏன்? எதற்கு? எப்படி? இப்படியா? அப்படியா? சாத்தியமா? சாத்தியமில்லையா? என்று கேள்வி கேட்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. 
 
நமக்கு அல்லாஹுத்தஆலாவின் கட்டளை, நாங்கள் கேட்போம். அப்படியே கட்டுப்பட்டு விடுவோம் என்பதற்கு தான்.
 
பிறகு சொன்னார்கள்: நான் உங்களுக்கு ஒரு காரியத்தை ஏவினால் நீங்கள் உங்களால் முடிந்த அளவு அதை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். நான் உங்களை ஒரு காரியத்தில் இருந்து தடுத்து விட்டால் அதை விட்டு விடுங்கள்.
 
ஒரு பாவத்தை ஒரு தடையை விடுவதற்கு தனி ஒரு முயற்சி தேவை இல்லை. சிரமம் தேவை இல்லை. ஒரு காரியத்தை செய்வதற்கு தான் முயற்சி தேவை. அதற்குத்தான் உழைப்பு தேவை. அதற்கு தான் சிரமம்.
 
பொய் பேசாமல் இருப்பது, புறம் பேசாமல் இருப்பது, கோல் சொல்லாமல் இருப்பது, விபச்சாரம் செய்யாமல் இருப்பது, மது அருந்தாமல் இருப்பது, தவறான பார்வையை பார்க்காமல் இருப்பது, இதற்கெல்லாம் அந்த காரியத்தை விட்டு விடவேண்டியது அவ்வளவுதான். 
 
அதற்கான ஒரு சிரமமும் இல்லை. செலவு இல்லை. ஆனால் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஏவிய கடமையை நிறைவேற்றுவதற்கு தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். கஷ்டப்பட வேண்டும்.
 
அல்லாஹ் கூறியிருக்கிறான் என்றால், அல்லாஹ்வுடைய தூதர் கூறியிருக்கிறார் என்றால், அந்தக் காரியத்தை செய்வதற்கு தான் முயற்சி தேவை. எனவே உங்களால் முடிந்த அளவுக்கு அதற்கு முயற்சி செய்யுங்கள் என்று கூறிவிட்டு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கேட்ட மனிதருடைய கேள்விக்கு பதில் சொன்னார்கள். ஹஜ் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான். 
 
யார் மேலும் ஹஜ்ஜை அதிகப்படுத்துவாரோ அதிகப்படி செய்வாரோ அது அல்லாஹ்வுக்கு செய்யக்கூடிய விருப்பமான நஃபிலான வணக்கமாக மாறும்.
 
இந்த இடத்தில் நமக்கு ஒரு பெரிய சந்தேகத்திற்குரிய பதிலும் இங்கே கிடைக்கப் பெறுகிறோம். சிலர் சொல்கிறார்கள், சிலர் ஆண்டுக்கு ஒரு முறையோ ஒவ்வொரு ஆண்டுமோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு முறையோ அல்லது தொடர்ச்சியாக ஹஜ்ஜுக்கு செல்கிறார்களே, இவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லாமல் அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்யலாமே என்பதாக சிலர் சொல்வதை நாம் கேட்கிறோம்.
 
நல்ல காரியங்களை செய்வதற்கு ஹஜ் தடையாக இருக்காது. ஆனால் ஒருவர் அவர் விருப்பத்தோடு ஹஜ் வணக்கங்களில் அவர் நாட்டம் கொண்டு அங்கே செல்வதால் அல்லாஹ்விடத்தில் அழுது துஆ செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது. அல்லாஹ்வுடைய வீட்டை பார்க்கும் போது அங்கு தவாஃப் செய்யும் போது அங்கே அரஃபா, முஸ்தலிஃபா என்ற இடங்களில் தங்கும்போது படக்கூடிய சிரமங்கள் அங்கே செய்யக்கூடிய இபாதத்துகளால் தன்னுடைய உள்ளம் பக்குவம் அடைகிறது. 
 
தன்னுடைய ஈமானிய அதிகரிப்பு ஏற்படுகின்றது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் ஒரு மனிதர் ஹஜ்ஜை திரும்பத் திரும்ப அதிகபடியாக ஆண்டுக்கு ஒரு முறையோ இரண்டு ஆண்டிற்கு ஒரு முறையோ அவருக்கு வசதி ஏற்படும்போதெல்லாம் செய்தார் என்றால், அவரை பழிப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. 
 
காரணம் என்னவென்றால் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், "யார் ஹஜ்ஜை மீண்டும் மீண்டும் அதிகபடியாக செய்வாரோ அது உபரியான ஒரு நஃபிலான நல்ல வணக்கமாகும்" என்று சொல்லியிருக்கிறார்கள்.
 
எனவே அப்படியான ஆட்சேபணைகளை நாம் செய்யக் கூடாது. அவர்களுக்கு நாம் வழிகாட்டலாம், அவருடைய உறவுகளிலோ குடும்பங்களிலோ அவருடைய நண்பர்களிலோ தேவையானவர்கள் இருந்தால் அவர்களுக்கும் நீங்கள் உதவி செய்யுங்கள் என்று வழி காட்டலாமே தவிர, அவர் செய்யக்கூடிய இபாதத்திலிருந்து தடுப்பதற்க்கோ திருப்புவதற்கோ நமக்கு அதிகாரம் இல்லை.
 
இந்த ஹஜ் என்பது, இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை தூண்களாகிய ஐந்து தூண்களில் ஒன்றாகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கக்கூடிய ஹதீஸை இமாம் புகாரி இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்.
 
"‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏"‏‏‏
 
இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது அமையப் பெற்றிருக்கிறது. ஒன்று நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார் என்று சாட்சி சொல்வது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஜகாத்தை கொடுப்பது, ரமலானில் நோன்பு நோற்பது, அல்லாஹ்வுடைய வீட்டை ஹஜ் செய்வது.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 8.
 
இப்படியாக இந்த ஹஜ்ஜுடைய வணக்கம் என்பது நமது மார்க்கத்தினுடைய அடிப்படை கடமையாகும். அதிலிருந்து ஒரு முஸ்லிம் விலக வேண்டும் என்றால் அதில் மார்க்கம் என்ன காரியங்களை சொல்லியிருக்கிறதோ, அந்த ஆகுமான காரணங்களை தவிர. 
 
இன்று மக்களாக சில காரணங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தக் காரணங்கள் ஹஜ்ஜை தள்ளிப் போடுவதற்கோ ஹஜ்ஜை தாமதபடுத்துவதற்கோ காரணமாக ஆகாது என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அதைப்பற்றி நாம் விரிவாகப் பேசுவோம்.
 
இந்த ஹஜ்ஜினுடைய வணக்கம் அல்லாஹ்விடத்தில் நன்மைகளில் மிக உயர்ந்த நன்மையாக கணிக்கப்படுகிறது என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
 
அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாகி வைக்கக் கூடிய நல்ல காரியங்களில் அல்லாஹ்வின் பொருத்தத்தை அன்பை மறுமையின் நன்மைகளை நமக்கு சேகரித்துக் தரக்கூடிய உயர்ந்த அமல்களில் சிறந்த அமல்களில் இதுவும் ஒன்றாகும்.
 
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்படுகிறது.
 
أَيُّ العَمَلِ أَفْضَلُ؟ فَقَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ». قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مَبْرُورٌ»
 
அமல்களில் எது சிறந்தது என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப் படுகிறது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
அமல்களில் சிறந்தது அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் ஈமான் கொள்வது. நம்பிக்கை கொள்வது. 
 
(இதிலிருந்து நாம் ஒன்றை விளங்குகிறோம். ஈமானும் அமல்களில் ஒன்று அந்த ஈமானை புதுப்பிப்பது. அல்லாஹ்வையும் ரசூலையும் நான் நம்பிக்கை கொள்கிறேன் என்று நம்முடைய ஈமானை புதுப்பித்துக் கொண்டே இருப்பது.
 
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற அந்த திரு கலிமாவை நாம் நினைவுஊட்டிக் கொண்டே இருப்பது. லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற அந்த திக்ரை அதிகப்படுத்திக் கொண்டே இருப்பது.)
 
பிறகு கேட்கப்பட்டது, பிறகு என்ன? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவது. 
 
பிறகு கேட்கப்பட்டது பிறகு என்ன என்பதாக. நன்மைகள் நிறைந்த ஹஜ் என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 26.
 
ஈமானை ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் வலுப்படுத்தக்கூடிய அமலாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியது நன்மைகள் நிறைந்த ஹஜ் என்று சொன்னார்கள்.
 
அந்தப் புனிதமான இடத்திற்கு செல்லும்போது எந்த இடத்தில் இறைத்தூதர்கள் வாழ்ந்தார்களோ, இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தியாகத்தின் வெளிப்பாடுகள் இருக்கிறன எனவும், அல்லாஹ்வுடைய வீடு இருக்கிறதோ அல்லாஹ்வுடைய நினைவிடங்கள் எங்கே முழுக்க முழுக்க அடியான் தன்னைத்தானே துளைத்துக்கொண்டு தன்னை முற்றிலுமாக இல்லாத ஒருவனாக இயலாதவனாக ஆக்கிக்கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் மன்னிப்பையும் அடைவதற்காக ஒரு சாதாரண ஒரு ஏழையை போல ஒரு இல்லாதவனை போல அந்த சூழ்நிலை ஒரு முஃமினுடைய உள்ளத்தை எவ்வளவு பன்படுத்தும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
 
ஆகவேதான், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் அமல்களில் சிறந்தது எது? என்று கேட்கும் பொழுது எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஹஜ்ஜை சொன்னார்கள்.
 
ஏனென்றால், மத்த நேரங்களிலும் ரசூலுல்லாஹ்விடம் கேட்கப்பட்டிருக்கிறது. அமல்களில் சிறந்தது எது? என்று. அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேறுவேறு பதில்களை சொல்லியிருக்கிறார்கள். 
 
சில நேரத்தில் சலாம் சொல்வதை சொன்னார்கள். சில நேரத்தில் உறவுகளுக்கு கொடுப்பது சில நேரத்தில் பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது. 
 
இப்படியாக பல கட்டங்களில் பல பதில்களை சொல்லியிருக்கிறாகளே, அமல்களில் சிறந்தது எது என்று கேட்கப்பட்டதற்கு. அவையெல்லாம் ஒரு சூழ்நிலையை கவனித்து ஒவ்வொரு சந்தர்ப்பத்தை கவனித்து சில காரணங்களை குறித்து சொல்லப்பட்டது. 
 
ஆனால் இந்த ஹதீஸில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அமல்களில் சிறந்தது எது? என்று கேட்கப்பட்ட போது, பதில் சொன்னார்களே! இது பொதுவாக எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் கேட்டு வரக்கூடிய எல்லா மக்களுக்கும் எல்லா காரணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
அடுத்து ஒரு ஹதீசை பார்க்கும்போது நமக்கு மிகதெளிவாக இன்னும் புரிய வரும். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لاَ، لَكِنَّ أَفْضَلَ الجِهَادِ حَجٌّ مَبْرُورٌ»
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்கிறார்கள்,
 
அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறந்த அமலாக நாங்கள் ஜிஹாதை கருதுகிறோம். நாங்கள் ஜிஹாத் செய்ய வேண்டாமா! நாங்கள் ஜிஹாதிருக்கு புறப்பட வேண்டுமே அதாவது எங்களுக்கு அனுமதி தாருங்கள். 
 
(அதாவது, பெண் சமுதாயத்தை சொல்கிறார்கள். ஆண்கள் மீது ஜிஹாது கடமை என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். ஆண்கள் அந்த ஜிஹாதில் ஈடுபட்டு வந்தார்கள். பெண்களாகிய இவர்கள் சந்தர்ப்பங்களிருக்கு ஏற்ப தேவைப்பட்டால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். 
 
பெரிய பெரிய போர் அந்தப் போர்களில் காயம் பட்டவர்களுக்கு மருந்து இடவேண்டும் தண்ணீர் கொடுக்கவேண்டும். இதுபோன்று ஏதாவது தேவைகள் இருந்தால் பெண்கள் பெரிய பெரிய போர்களுக்கு பின்னால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். 
 
சிறு குழுக்களாக அனுப்பப்பட்ட போருக்கு பெண்கள் அனுப்பப்படவில்லை. பெரிய போர்களில் பெரிய யுத்தங்களில் பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆண்களுக்கு உதவுவதற்காக நோயாளிகளுக்கு மருந்து இடுவதற்காக. 
 
ஆனால், சிறு யுத்தங்கள் சிறு போர்கள் குழுக்களாக நடந்த அந்த நிகழ்வுகளில் பெண்கள் அழைத்துச் செல்லப்படவில்லை. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு இரு விதமான விருப்பங்கள். ஒன்று, போர் செய்யக்கூடிய முஜாஹித்களுக்கு உதவுவது மட்டுமல்ல. யுத்த களத்திலேயே நாங்கள் இறங்க வேண்டும். எதிரிகளோடு நாங்களும் நேரடியாக சண்டை செய்ய வேண்டும் என்ற ஆசை. 
 
இரண்டாவது சிறு சிறு குழுக்கள் செல்கிறது அல்லவா. அந்தக் குழுவிற்க்கும் நாங்கள் உதவிக்காக அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்ற ஆசை.)
 
இந்த அடிப்படையில் தான் அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் இப்படி கேள்வி கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு அல்லாஹ்வுடைய தூதர் பதில் சொன்னார்கள்.
 
உங்களுக்கும் ஜிஹாத் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு ஜிஹாதில் சிறந்தது நன்மைகளோடு நிறைவேற்றப்பட்ட ஹஜ் என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 1520.
 
ஆண்களே ஹஜ்ஜுக்குச் செல்வது மிகச் சிரமமான ஒரு காரியம். ஹஜ் என்பது ஒரு சாதாரணமான வணக்கம் அல்ல. நம்முடைய ஊரில் செய்யப்படக்கூடிய இபாதத் அல்ல. எத்தனையோ ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள ஒரு வேறு ஒரு நாட்டில் வேறு மொழி பேசக்கூடிய நாட்டில் சென்று அங்கே நிறைவேற்றப்பட கூடிய ஒரு அமல்.
 
அதுவும் எல்லா வசதிகளும் நமக்கு அங்கே ஒன்றாக கூடி இருக்கும் என்று சொல்ல முடியாது. அறைகளில் தங்கியிருக்கக் கூடிய வசதிகள் நமக்கு பயணத்தில் இருக்காது. அதிலும் குறிப்பாக மினாவிற்கு சென்று விட்டால் அங்கிருந்து மறுமையின் காட்சிகள் மௌத் உடைய காட்சிகள் மறுமையின் உடைய அந்த காட்சிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்பதைப் போன்ற ஒரு சூழல் ஏற்பட்டுவிடும். 
 
யா நஃப்ஸி யா நஃப்ஸி அந்த ஒரு காட்சிகள் அங்கே தென்பட ஆரம்பித்து விடும். மினாவில் படுக்கக் கூடிய இடமே கபுரை நினைவூட்ட படக் கூடியதாக இருக்கும். அங்கே மக்கள் இருக்கக் கூடிய அந்த சூழ்நிலைகள் அவருடைய பயணங்கள் ஏற்பாடுகள் இவை ஒவ்வொன்றுமே சாதாரண ஒரு சூழ்நிலையில் இருந்து அப்பாற்பட்ட ஒன்று. ஆண்களுக்கே சிரமமாக இருக்கும் பொழுது அது பெண்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்.
 
ஆகவேதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். உங்களுக்கு ஜிஹாதுக்கு சமமான கூலி கிடைக்கும். பெண்களுக்கு குறிப்பிட்டுச் சொன்னார்கள் நீங்கள் ஹஜ் செய்தால் ஜிஹாதுக்கு சமமான கூலி கிடைக்கும். 
 
எப்படி ஜிஹாதில் சிரமம் இருக்கிறதோ அதற்கு ஈடான சிரமம் பெண்களுக்கு ஹஜ்ஜில் கண்டிப்பாக இருக்கிறது. எனவே உங்களுக்கு ஜிஹாதுடைய நன்மை கிடைக்கப்பெறும் ஹஜ் மூலமாக.
 
அன்பானவர்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் செல்லும் போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஹஜ் செய்கிறார்கள் ஹிஜ்ரி 9 ல். அதற்குப் பிறகு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணிக்கிறார்கள்.
 
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இரண்டு ஆண்டு காலங்கள். பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆரம்ப ஒரு நான்கைந்து ஆண்டுகள், ஃபித்னாக்களை தடுப்பது ஆட்சி அதிகாரங்களை இஸ்லாமிய அந்த ஆட்சியை சரிப்படுத்துவது, சமப்படுத்துவது, இதில் கழிகிறது. 
 
அதற்குப் பிறகு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய மனைவிமார்கள் குறிப்பாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கலிஃபா இடத்தில் அனுமதி கேட்கிறார்கள்; நாங்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்று.
 
கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்கள் ஹஜ் செய்வதற்கான ஏற்பாடு செய்கிறார்கள். அதற்குண்டான பாதுகாப்பை பலப்படுத்துகிறார்கள். 
 
அதிலிருந்து ஹிஜ்ரி 58 -ல் அதாவது ஏறக்குறைய ஹிஜ்ரி 16 அல்லது 17 ல் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது ஹஜ் பயணத்தை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு தொடங்குகிறார்கள். 
 
அதிலிருந்து ஹிஜ்ரி 58 -ல் தான் மரணிக்கிற வரை ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்ய கூடிய வழக்கம் உள்ளவர்களாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா இருந்தார்கள் .
 
எத்தனை ஆண்டுகள் ஹஜ்  செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஹிஜ்ரி 16 அல்லது 17ல் இருந்து ஹஜ்ஜை ஆரம்பித்த ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 58 ல் மரணிக்கிறார்கள். அதிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்கிறார்கள். 
 
அப்போது கேட்கப்படுகிறது; அன்னை அவர்களே! இவ்வளவு பலவீனப்பட்டு விட்டீர்கள்! இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்! இந்த சிரமத்தோடும் இந்த ஹஜ்ஜை நிறைவேற்ற வருகிறீர்களே என்று கேட்டபோது, எப்போது அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து ஜிஹாது ஹஜ் என்பதை நான் கேட்டேனா நான் மரணிக்கின்ற வரை இந்த இபாதத்தை விடமாட்டேன் என்று சொன்னார்கள்.
 
அன்பானவர்களே! இங்கே ஒரு வித்தியாசத்தை நாம் புரிய வேண்டும். நமக்கும் மறுமையின் மீது ஆசை இருக்கிறது. நமக்கும் சொர்க்கத்தின் மீது ஆசை இருக்கிறது. ஆனால் நாம் எப்படி எதிர்பார்க்கிறோம் என்று தெரியுமா? 
 
சிரமப்படாமல் அந்த சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்று, சிரமப்படாமல் மறுமை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 
 
சொர்க்கம் கிடைப்பதற்கு அமல்களில் மிகவும் லேசான அமல்கள் இருக்கிறதா? அதைக்கொண்டு பொருந்தி கொள்வோம். ஆனால் துன்யா, உலகம், காசு, பணம், பதவி என்று வந்துவிட்டால் எவ்வளவு சிரமப்பட்டாலும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதற்காக எதை விலை கொடுக்க வேண்டியது வந்தாலும், அதை விலை கொடுத்து அந்தத் துன்யாவை அடைவதற்கு நாம் முயற்சி செய்கிறோம்.
 
இவை, மறுமையில் அந்த உயர்ந்த பதவிகளில் இருந்து நம்மை தடுப்பதற்காக நப்ஸ் என்று சொல்லக்கூடிய ஏமாற்றம் என்பதை மறந்து விடக்கூடாது. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அழிந்துவிடக் கூடிய இந்த துன்யா, கைவிட்டுப் போகக் கூடிய இந்த துன்யா, மாறக்கூடிய இந்த துன்யா, ஏமாற்றக் கூடிய இந்த துன்யா, நிரந்தரமற்ற இந்த துன்யா, அதற்காக நாம் எல்லா விதமான முயற்சிகளை செய்வோம். 
 
ஆனால், மறுமை என்றால் சோம்பேறிகளாக மறுமை என்றால் முயற்சி குறைவானவர்களாக இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சொர்க்கவாசி என்று குர்ஆனில் சொல்லப்படவில்லையா? ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் தஹஜ்ஜுத் உடைய வணக்கம் இல்லையா? தொழுகையில் பேணுதல் இல்லையா? அல்லது நஃபிலான நோன்புகள் இல்லையா? 
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மரணத்தின் பின்பிலிருந்து ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பெருநாட்களை தவிர மற்ற எல்லா நாட்களிலும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். 
 
பெருநாட்களை தவிர மற்ற எல்லா நாட்களிலும் உடல் சவுகரியம் குறைந்தாலே தவிர உடல் பலவீனம் பட்டாலே தவிர மற்ற ஆண்டின் எல்லா நாட்களிலும் நஃபிலான நோன்பு நோற்க கூடியவர்களாக இருந்தார்கள். 
 
இன்று ஆண்களாலேயே அதை செய்ய முடியாத ஒரு பலவீனமாக இருக்கிறது. இப்படியெல்லாம் நன்மையில் முந்திக் கொண்டு இருந்தவர்கள் இந்த நன்மைகளில் ஒரு நன்மை ஆகிய ஹஜ் விட்டு வைத்தார்களா? 
 
நாம்தான் இதை செய்ய சிரமப்படுகிறோம். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூட்டை மூட்டையாக தங்க காசுகளை காலையில் அனுப்பினால், மாலை சூரியன் மறைவதற்கு முன்பு அத்தனை தங்கக் காசுகளையும் முஹாஜிர் அன்சாரிகள் உடைய ஃபகீர்களுக்கு பங்கு வைப்பவர்களாக இருந்தார்கள். 
 
தான் நோன்பு திறப்பதற்கு அதிலிருந்து சில சாமான்களை வாங்க வேண்டும் என்பதற்கு கூட அதிலிருந்து அவர்கள் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் தர்மத்தில் உயர்ந்தவர்களாக இருந்தார்களே! ஹஜ்ஜை அவர்கள் மறந்தார்களா?
 
இதுதான் மறுமையுடைய நம்பிக்கை என்று சொல்லப்படும். மறுமையின் மீது உண்டான உறுதி என்று சொல்லப்படும். இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான்:
 
وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
 
மற்ற விஷயங்களுக்கெல்லாம் يؤمنون என்று சொல்லி வருகின்ற அல்லாஹுதஆலா ஆகிரத்தை சொல்லும்போது மறுமையை மிக மிக உறுதியாக நம்பிக்கை அவர்கள் உறுதி கொள்வார்கள் என்று சொல்கிறான். (அல்குர்ஆன் : 2:4)
 
மறுமை உடைய நம்பிக்கை யாருக்கு அதிகரிக்கிறதோ அவர்களால் தான் இந்த மார்க்கத்தை பின்பற்ற முடியும். இந்த மார்க்கத்திற்காக சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இந்த ஹஜ் ஜிஹாதிருக்கு சமமானது. உங்களுக்கு ஜிஹாத் ஹஜ் என்பதை நான் கேள்விப்பட்டதில் இருந்து நான் இந்த ஜிஹாதை இந்த ஹஜ்ஜை விடமாட்டேன் என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொன்னார்கள்.
 
மற்றுமொரு அறிவிப்பில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய இந்தக் கேள்விக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படியும் பதில் கூறினார்கள்:
 
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ نَغْزُو وَنُجَاهِدُ مَعَكُمْ؟ فَقَالَ: «لَكِنَّ أَحْسَنَ الجِهَادِ وَأَجْمَلَهُ الحَجُّ، حَجٌّ مَبْرُورٌ»، فَقَالَتْ عَائِشَةُ «فَلاَ أَدَعُ الحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
 
அல்லாஹ்வின் தூதரே! உங்களுடன் நாங்களும் போருக்கு வர வேண்டாமா? உங்களுடன் நாங்களும் எதிரிகள் இடத்தில் சண்டை செய்ய வேண்டாமா? 
 
அதற்க்கு நபியவர்கள் சொன்னார்கள், ஆயிஷாவே! உங்களுக்கு ஜிஹாதில் அழகானது மிக சிறப்பானது حَجٌّ مَبْرُورٌ .
 
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்: அல்லாஹ்வுடைய தூதரிடம் இருந்து இதை நான் கேட்டதற்கு பிறகு ஒரு காலமும் ஹஜ்ஜை நான் விடமாட்டேன்.
 
நூல் : புகாரி, எண் : 1861.
 
இந்த ஹஜ் உடைய நன்மையைப் பற்றி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய இந்த ஹதீஸை இமாம் புகாரி உடைய கிரந்தத்திலும், இமாம் முஸ்லிம் உடைய கிரந்தத்திலும் பார்க்கிறோம். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
 
«العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ»
 
ஒரு உம்ராவில் இருந்து இன்னொரு உம்ரா இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள பாவங்களை அந்த உம்ராக்கள் மன்னித்து விடுகின்றன. 
 
பிறகு சொன்னார்கள்: நன்மைகள் நிறைந்த ஹஜ். அதாவது எந்த ஹஜ்ஜில் ஆபாசமாக பேசவில்லையோ, அசிங்கமாக பேசவில்லையோ, அருவருப்பான வார்த்தைகளை பேசவில்லையோ மக்களோடு சண்டை சச்சரவு செய்யவில்லையோ, தடுக்கப்பட்ட காரியங்களை செய்யவில்லையோ அதைத்தான் وَالْحَجُّ الْمَبْرُورُ என்று சொல்லப்படும்.  அதற்கு அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை. 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1773.
 
அல்ஹம்துலில்லாஹ்! யார் இப்படிப்பட்ட ஒரு ஹஜ்ஜினுடைய பாக்கியத்தைப் பெற்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கூலி சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.
 
இதற்கு என்ன விளக்கம்? அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகிறது. அவருடைய நன்மையுடைய ஏடுகள் நிரப்பமடைந்து விடுகின்றன. இதற்குப் பிறகு பாவம் செய்யாத நிலையில் ஹஜ்ஜிக்ற்குப் பிறகு பெரும்பாவங்களில் ஈடுபடாத நிலையில் ஒருவர் வந்து விட்டால், அதற்குப் பிறகு அவருக்கு மரணம் ஏற்படுகிறது என்றால் அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் இந்த ஹஜ் மூலம் மன்னிக்கப்பட்டு விடுகின்ற காரணத்தினால், இவருக்கு மறுமை விசாரணை இருக்காது.
 
ஆனால், அடியார்களுடைய ஹக்குகளில் அவர் ஏதாவது குறைவு செய்து இருந்தாலே தவிர. கடனோ அல்லது வேறு ஏதாவது அடியார்களுடைய ஹக்குகளில் ஏதாவது குறைவு செய்திருந்தால் இந்த சட்டம். 
 
இது ஷஹீத்கும் உரியது. அல்லாஹ் உடைய பாதையில் ஒருவர் ஷஹீதாகி விட்டால் அவருடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கடனைத் தவிர என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 
 
நம்முடைய இந்த மார்க்கம் அல்லாஹ்வுடைய தீன் மிக நீதமானது. அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை அதற்குரிய அந்தஸ்து அதற்குரிய கண்ணியம் அடியார்களுடைய கடமை அதற்குரிய உரிமையும் கண்ணியமும் அல்லாஹ்விடத்தில் உண்டு. ஒன்றைச் செய்து ஒன்றை பாழாக்கி வெற்றி அடைய முடியாது. இரண்டிலும் சமமாக நீதமாக இருக்க வேண்டும்.
 
அடுத்து அன்பானவர்களே! ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸை புகாரில் நாம் பார்க்கின்றோம். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
 
‏ "‏ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ ‏"‏‏
 
யார் அல்லாஹ்வுக்காக பாவம் செய்யாமல் குற்றம் புரியாமல் ஹஜ் செய்வாரோ அவர் அன்று பிறந்த குழந்தையைப் போன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு திரும்புவார்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1521.
 
ஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன்பே நிய்யத்தை சரிப்படுத்த வேண்டும் என்பதாக இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. பெயர்களுக்காகவோ புகழுக்காகவோ மக்கள் கேட்பார்கள் என்பதற்காகவோ அல்ல. எந்த நோக்கமும் இருக்கக் கூடாது. 
 
அப்படித்தான் அல்லாஹ் சொல்கிறான்:
 
وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ
 
உங்கள் ரப்புக்காக நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:196)
 
அன்பானவர்களே! நடந்ததை உங்களிடம் சொல்கிறேன். அந்த ஹஜ்ஜினுடைய காலகட்டங்களில் நடைப்பயணம் அதிகமாக இருக்கும். சிரமமான ஒன்றுதான் சில. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். சொல்வதற்கே பயமாக இருக்கிறது. 
 
மினாவிலிருந்து கொண்டு தொழாதவர்கள் இருக்கிறார்கள். காரணம், நடந்து வந்தோம். களைப்பாக இருக்கிறது. தொழுகையை அப்புறமா பார்த்துக்கலாம். ஒருநாள் கல்லெறிய சென்றால் அடுத்தநாள் கால் வலிக்கிறது போக முடியாது என்பதாக படுத்து தூங்க கூடியவர்கள். 
 
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ்வின் மார்க்கத்தில் துணிவு கொண்டு எப்படி தெரியுமா கேட்பார்கள். சட்டங்களை சொன்னால் இதுனால அல்லாஹ் எங்கள நரகத்தில் போடுவானா? போட்டா போட்டு கட்டும்.
 
இப்படி செய்ய வேண்டும், இப்படி செய்யக்கூடாது என்று சட்டங்களை சொன்னால், உதாரணமாக ஏழு கற்களை எறிய வேண்டும் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், ஏன் எட்டாவது கல்ல தூக்கி நரகத்தில் போட்டுட்டு வாடா, இதெல்லாமா எண்ணிக்கை இருக்க முடியும். 6 எறிஞ்சிட்டு போ இல்ல 8 எறிஞ்சிட்டு போ ஏதோ ஒன்னு. 
 
எப்படியெல்லாம் மார்க்கத்தை புரிந்து வருகிறார்கள் பாருங்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
அன்பானவர்களே! எனவேதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது யாருடைய நிய்யத்து அல்லாஹ்வை திருப்திப் படுத்த வேண்டும் என்று வந்து இருக்கிறதோ, அவன் கண்டிப்பாக சட்டங்களை அறிவான். இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.
 
ஒருமுறை ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் பொழுது டிசம்பர் மாதத்தில் கடுமையான குளிர், அதுவும் முஸ்தலிஃபாவின் இரவு என்பது பொதுவாக மக்காவில் வெயில் இருந்தாலும் கூட முஸ்தலிஃபா உடைய இரவு என்பது லைலத்துல் கத்ர் என்று சொல்லப்படும். இரவு குளிராக ஒரு இதமாக இருக்கும். 
 
டிசம்பர் மாதத்தில் எப்படி இருக்கும் பாருங்கள். கடுமையான குளிர் இரவு, நீண்ட இரவு. ஒரு சகோதரர் எங்களோடு வந்திருந்தவர் கேட்கிறார், நாங்கள் எல்லாம் ஒரு மணி இரண்டு மணிக்கு மேல குளிர் தாங்கவில்லை. எங்களோடு வந்த பெண்கள் குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். எல்லோருக்கும் நடுக்கிறது என்ன அடுத்து ஆகுமோ என்று. 
 
அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உடைய ஒரு ஹதீஸ் இருக்கிறது. பலவீனமானவர்கள் பெண்கள் நீங்கள் முன்கூட்டி கூப்பிட்டு செல்லலாம் என்று. அந்த அடிப்படையில் குளிர் தாங்க முடியாத காரணத்தால் நாங்கள் இந்த பத்வாவை சொல்லி பெண்கள் சிறுவர்களோடு வந்திருப்பவர்கள் புறப்படலாம். ஆண்களிலும் யாரால் இங்கே தங்க முடியவில்லையோ இந்தக் குளிரினால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று இருக்கிறதோ அவர்களும் புறப்படலாம் என்று சொன்னபோது, ஒரு சகோதரர் இத்தனைக்கும் மார்க்கத்தை அதிகமாக படித்தவர் அல்ல, அவர் கூறினார்; 
 
நான் அல்லாஹ்வுடைய பயம் உடையவர். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கொடுத்த அனுமதி இப்படி இப்படிப்பட்ட பெண்களுக்கு என்று சொல்கிறீர்களே! கொஞ்சம் சிரமம்தானே பரவாயில்லை, மௌத்தா போனாலும் பரவாயில்லை, முஸ்தலிஃபா உடைய இரவை முழுமையாக முடித்து சுப்ஹுத் தொழுது விட்டு வருகிறேன் என்று தங்கிக் கொண்டார்கள். இப்படியும் ஈமான் உள்ளவர்கள் அங்கே வந்ததற்குப் பிறகு ஈமான் அதிகரிப்பவர்களையும் பார்க்கிறோம்.
 
அன்பானவர்களே! ஈமான் அதிகரிக்க வேண்டிய இடம், சிரமப்பட்டு சொர்க்கத்தை வாங்க வேண்டிய இடம், அல்லாஹ்வுக்காக நான் சிரமப்படுகிறேன் நான் அல்லாஹ்வுடைய அடிமை, அவனுக்காக சிரமப்படுவதை தவிர வேறு என்ன வேலை இருக்கிறது? அவனை திருப்தி படுத்துவதை தவிர என் வாழ்க்கையில் என்ன நோக்கம் இருக்கிறது? 
 
என்று நம்முடைய இக்லாசை உறுதிப்படுத்த வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். ஷைத்தான் நம்மை பலவீனப்படுத்தி விடக்கூடாது.
 
 எனவேதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: யார் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து ஆபாசமாக அசிங்கமாக பேச வில்லையோ, அவரை தன்னுடைய தாய் பெற்றெடுத்த தினத்தில் எப்படி இருப்பாரோ அதைப் போன்று அவர் திரும்பி வருவார்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1521.
 
அன்பானவர்களே! மேலும் இந்த ஹஜ்ஜின் மூலமாக நம்முடைய வறுமைகளை அல்லாஹ் நீக்கி விடுகின்றான். நம்முடைய பொருளாதார நெருக்கடிகளை நீக்கி விடுகின்றான். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஹஜ் உம்ராவை தொடர்ந்து செய்யுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்வதால் உங்களுடைய வறுமைகளையும் பாவங்களையும் போக்கி விடுகிறது. எப்படி கொல்லன் உடைய துருத்தி இரும்பின் அசுத்தங்களை போக்கிவிடுகிறதோ அதுபோன்று.
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 810.
 
மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்யக்கூடியவர் ஹஜ் செய்யக் கூடியவர் உம்ரா செய்யக் கூடியவர்கள் இவர்கள் அல்லாஹ்வுடைய விருந்தினர்கள். அல்லாஹ்வை சந்திப்பதற்காக வந்த குழுக்கள்.
 
அல்லாஹ் இவர்களை அழைத்தான். இவர்கள் அல்லாஹ்வுக்கு பதில் சொன்னார்கள். இவர்கள் அல்லாஹ்விடத்தில் கை ஏந்தினார்கள் அல்லாஹ் இவர்களுக்கு கண்டிப்பாக கொடுப்பான். அல்லாஹ் அழைத்து இவர்கள் வந்தார்கள். இவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு கண்டிப்பாக கொடுப்பான். 
 
மற்றொரு அறிவிப்பில் சொன்னார்கள். ஹஜ் செய்ய வருபவர்களும் உம்ரா செய்ய வருபவர்களும் அல்லாஹ்வுடைய குழுக்கள். அல்லாஹ் இவர்களை அழைத்தான். இவர்கள் பதில் கொடுத்தார்கள். இவர்கள் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடினால் கண்டிப்பாக அல்லாஹுத்ஆலா இவர்களுடைய பாவங்களை மன்னிப்பான்.
 
அன்பானவர்களே! இப்படி ஏராளமான சிறப்புகளை உடைய நன்மைகளை உடைய இந்த ஹஜ்ஜை நாம் தள்ளிப் போடக்கூடாது. அல்லாஹ்விடத்தில் நாம் துஆ செய்ய வேண்டும். இதற்காக நம்முடைய பொருளாதாரத்தை சேர்க்க வேண்டும். 
 
நம்முடைய செலவுகளை சுருக்கமாக்கிக்கொண்டு எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ வாலிப காலத்தில் இந்த ஹஜ் வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். மற்றும் பல விஷயத்தை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து அடுத்து வரக்கூடிய ஜும்ஆக்களில் பார்ப்போம்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னித்து, அல்லாஹ்வுடைய நேரான பாதையில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த சுன்னா உடைய பாதையில் நபித்தோழர்களின் அந்த சிறந்த வழி முறையில் நாம் செல்வோமாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/