மீஸான் அமர்வு 1-4 | Tamil Bayan - 474
மீஸான்
ஜுமுஆ குத்பா தலைப்பு : மீஸான் (அமர்வு 1-4)
வரிசை : 474
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 13-10-2017 | 23-01-1439
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீனை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ அவரை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமது பாவங்களை மன்னித்து, அல்லாஹ் நேசிக்கின்ற நல்ல கூட்டத்தாரில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! நம்முடைய இம்மை வாழ்க்கையின் எல்லா காரியங்களையும் சீர்படுத்தி, மறுமையில் வெற்றி அடைந்த நல்ல மக்களில் என்னையும் உங்களையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
மறுமை வாழ்க்கையில் திடுக்கிடக்கூடிய நிறைய விஷயங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிட்டுள்ளான். மறுமை என்பதை நாம் நினைத்து பார்த்தாலே நமது உள்ளங்களெல்லாம் நடுங்க வேண்டும், நமது தூக்கங்கள் எல்லாம் போய்விட வேண்டும்.
அத்தகைய திடுக்கங்கள், பயங்கள் நிறைந்த ஒரு இடம்தான் மறுமை என்பது. யார் சொர்க்கவாசி என்று முடிவு செய்யப்பட்டு விடப்படுகிறதோ, அந்த முடிவு செய்யப்படும் நேரம் வரை நபிமார்கள் உட்பட எல்லோரும் மிகப்பெரிய பதற்றத்தில் இருப்பார்கள்.
அடுத்து என்ன நடக்குமோ, அல்லாஹுடைய தீர்ப்பு எதுவாக இருக்கும் என்று மிகப்பெரிய ஒரு கலக்கத்தில் இருப்பார்கள். நபிமார்களுடைய நிலைமையே திடுக்கம் என்றால், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் நிலையை பற்றி என்ன சொல்வது?
ஆகவேதான், அந்த மறுமையை நினைத்து ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நாளும் மறுமையை சீர் செய்வதற்காக, மறுமையில் சொர்க்கவாசி ஆகுவதற்காக இந்த உலகத்தில் என்ன செய்ய வேண்டும்? எனது வாழ்க்கையை எப்படி நான் மாற்ற வேண்டும்? என்னென்ன அமல்களை நான் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்? என்னென்ன செயல்களை நான் விட்டு விலக வேண்டும்? என்பதை பற்றி அவர் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அவற்றை செயல்படுத்திக் கொண்டே இருக்க வெண்டும்.
மறுமையினுடைய திடுக்கமான காட்சிகளில் திடுக்கம் நிறைந்த ஒன்றுதான் நம்முடைய அமல்கள் எடை போடப்படுகின்ற நேரம். ஒவ்வொரு மனிதனுடைய அமல்களும் கண்டிப்பாக எடை போடப்படும். அந்த தராசை ஒவ்வொரு மனிதனும் சந்தித்தே ஆகவேண்டும்.
தான் செய்த செயல்கள் நன்மைகளாக இருந்தாலும் சரி, பாவங்களாக இருந்தாலும் சரி, அந்த தராசில் நன்மை ஒரு பக்கமும் பாவம் ஒரு பக்கமும் கண்டிப்பாக வைக்கப்பட்டு மிக நீதமாக, துல்லியமாக, சரியாக நிறுக்கப்படும்.
அந்த தராசை ஏற்படுத்தக்கூடியவன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். அவனுடைய ஆட்சியில் அநீதம் என்பதற்கு பேச்சேயில்லை, அநீதத்திற்கு அங்கே இடமேயில்லை.
அந்த தராசைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போதே அது நீதமான தராசு என்றுதான் சொல்கின்றான். (அல்குர்ஆன் 21 : 47)
தன்னை பற்றி அல்லாஹ் சொல்லும் போது, நான் அநியாயம் செய்யவே மாட்டேன், (அல்குர்ஆன் 3 : 182, 8 : 51) நன்மை செய்பவர்களின் நன்மைகளை குறைத்தோ, பாவங்கள் செய்வோரின் பாவங்களை கூட்டியோ ஒருபோதும் நான் என் அடியார்களுக்கு அநியாயம் செய்யவே மாட்டேன்.
இந்த அநியாயத்தை பற்றி அல்லாஹ் பல வகையில் சொல்கிறான். ஒரு பேரீத்தம் பழத்தினுடைய கொட்டையின் வெளிப்படுதியில் இருக்கக்கூடிய மெல்லிய தொலி. அந்த தொலி அளவிற்குகூட தான் தன் அடியார்களை அநீதம் செய்யமாட்டேன் என கூறுகின்றான். (அல்குர்ஆன் 4 : 124)
இன்னொரு இடத்தில், 'அந்த பேரீத்தம் பழத்தின் கொட்டையின் மேல்பகுதியில் உள்ள மெல்லிய கோடளவிற்கு கூட நீங்கள் அநீதம் செய்யப்பட மாட்டீர்கள்' என கூறுகின்றான்.
இப்படி அல்லாஹ் நீதமான தராசை அங்கே கொண்டு வருவான். அல்லாஹ் கூறுகிறான்:
وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ
மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.) (அல்குர்ஆன் 21 : 47)
அங்கே அல்லாஹுவிற்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்றெல்லாம் இருக்க மாட்டார்கள். அல்லாஹுவிற்கு வேண்டியவர்கள் அல்லாஹ்வை ஈமானைக் கொண்டும், நல்ல அமல்களைக் கொண்டும் திருப்திப் படுத்தியவர்கள்தான்.
செல்வத்தால், பரம்பரையால், அதிகாரத்தால் அல்லது மற்ற பிற விஷயங்களால் ஒரு மனிதன் அல்லாஹுவை திருப்திப்படுத்த முடியாது. அல்லாஹுவை அடியான் தனது ஈமானைக் கொண்டும், அமல்களைக் கொண்டும் தான் திருப்திப்படுத்த முடியும்.
யார் இவ்வாறு அல்லாஹுவை திருப்திப்படுத்தினார்களோ அவர்கள்தான் அல்லாஹுவிற்கு வேண்டியவர்கள். அவர்கள்தான் 'அவ்லியாவுர் ரஹ்மான்' அவர் எந்த இனத்தையோ, மொழியையோ, குலத்தையோ சேர்ந்தவராக இருந்தாலும் சரி.
உங்களது அமல்கள் ஒரு கடுகின் விதையளவு இருந்தாலும் சரியே. நமது மறுமை நிலையை யோசித்துப் பாருங்கள்.
இரவின் இருள் நம்முடைய அமல்களை மறைத்து விடாது, கடலின் ஆழம் மறைத்து விடாது, ஏன், ஆகாயத்தில் எங்கோ ஒரு கோடியில் இருந்தாலும் சரி, எல்லா அமல்களும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும்.
சூரா லுக்மானில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். லுக்மான் தன் மகனுக்கு கூறினார்:
يَابُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ
(மேலும், லுக்மான் தனது மகனை நோக்கி) ‘‘ என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும் போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனும் ஆவான். (அல்குர்ஆன் 31 : 16)
அல்லாஹ் சொல்கின்றான்; ஒரு கடுகின் விதையளவு சரியே, நாம் அதை கண்டிப்பாக கொண்டு வருவோம். விசாரிப்பதற்கு நாம் போதுமானவர்கள். (அல்குர்ஆன் 21 : 47)
அல்லாஹுடைய அறிவு, ஒன்றை கேட்பதால் ஒன்று தவறிவிடாது, ஒன்றை பார்ப்பதால் இன்னொன்று தவறி விடாது, உலக மக்களெல்லாம் ஒன்றை பேசினாலும், மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், கடலுயிரினங்கள், ஜின்கள் என அனைத்து படைப்புகளும் ஒன்று சேர்ந்து பேசினாலும் ஒவ்வொன்றுடைய மொழியையும், ஓசையையும், தனித்தனியாக, தெள்ளத் தெளிவாக கேட்பான், புரிவான். ஒன்றும் அவனுக்கு தவறிவிடாது.
அந்த ரப்புல் ஆலமீனுடைய பார்வை எவ்வளவு துல்லியமானது! செவி எவ்வளவு துல்லியமானது! நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்கள், 'சமீஃ, பசீர்' மிகத் துல்லியமாக கேட்பவன், மிக நுனுக்கமாக பார்ப்பவன் என உள்ளன.
அல்லாஹ் ரப்புல் அலமீன் தன்னுடைய நீதத்தை நிலை நாட்டும் விதமாக அந்த மஹ்ஷரில் தராசை ஏற்படுத்துவான். அதில் நம்முடைய அமல்கள் எடை போடப்படும். அந்த தராசை இந்த உலகத்தின் நம்முடைய சிற்றறிவால் புரிந்து கொள்ள முடியாது.
தராசை அங்கே வைத்திருக்கின்றான் என்று ஒவ்வொரு முஃமினும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த தராசில் அமல்கள் எடை போடப்படும், எந்த அமல்களை நாம் பார்க்க முடியாதோ, அந்த அமல்களுக்கெல்லாம் அங்கே பார்க்கும்படியான உருவம் கொடுக்கப்பட்டு அந்த அமல்கள் அங்கே நிறுக்கப்படும்.
அல்லாஹ் கூறுகிறான்:
فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
யாருடைய நன்மையின் தட்டு கணத்து விடுமோ அவர்கள் தான் அங்கே வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 23 : 102)
இந்த உலகத்தில் செல்வத்தை சேர்த்துவிட்டு வந்தவர்கள் அல்ல, ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும், ஆடம்பர வாழ்விற்கும் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் அல்ல, மாறாக, யாருடைய நல்ல அமல்களின் எடை கணத்ததோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.
யாராக இருந்தாலும் சரி, பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நன்மையின் எடை எவ்வளவு கணமாக இருக்கும் நினைத்து பாருங்கள்! அம்மார் ரழியல்லாஹு அன்ஹு, சுமையா ரழியல்லாஹு அன்ஹா ஆகியோரின் எடை எவ்வளவு கணமாக இருக்கும் என நினைத்து பாருங்கள்!
அடிமை அரசன் என்று அல்லாஹ் பார்க்க மாட்டான், அமல்களை மட்டுமே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பார்ப்பான், அமல்கள் மட்டுமே அங்கே பேசும். பரம்பரையோ, உறவுகளோ பேசாது.
அல்லாஹ் கூறுகிறான்:
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்). அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும். (அல்குர்ஆன் 80 : 34-37)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا
(அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்ற நாளாகும் அது.) (அல்குர்ஆன் 31 : 33)
தனது தந்தைக்கு எந்த இலாபத்தையும் மறுமையில் ஒரு மகனால் செய்ய முடியாது. அங்கே எடை போடப்படும் அமல்கள் மட்டும்தான் அங்கு பேசும். மனிதர்களால் ஒரு காரணமும் சொல்ல முடியாது.
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ
நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதற்காக ஒரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும், அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 48)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ (28) هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே! என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்). (அல்குர்ஆன் 69 : 28,29)
அமல்களை தவிர இந்த உலகத்திலிருந்து மனிதன் நாளை மறுமைக்கு எதுவும் கொண்டு செல்ல முடியாது.
எனவேதான், அல்லாஹ் சொல்கின்றான்:
وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا
நன்மையான காரியங்களில் எவற்றை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவற்றையே, மேலான நன்மைகளாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (அல்குர்ஆன் 73 : 20)
அல்லஹ் உங்களது அமல்களில் எதையும் மறக்க மாட்டான், எதையும் விட்டு விட மாட்டான். உங்களது நல்லமல்களை அவன் பாதுகாப்பது மட்டுமல்ல, அவற்றை அல்லாஹ் வளர்த்துக் கொண்டே இருப்பான்.
அல்லாஹுக்காக இஃக்லாஸோடு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு சிறிய பெரிய அமல்களையும் வளர்த்துக் கொண்டே இருக்கின்றான். செய்யக்கூடிய தர்மங்கள், சொல்லக்கூடிய தஸ்பீஹுகள் வளர்கின்றன.
பாவங்களைப் பொருத்தவரை அப்படியல்ல, எந்த பாவத்தை செய்தானோ அந்த பாவம் மட்டும்தான். இதுதான் ரப்புல் ஆலமீனுடைய நீதம். நன்மையை அல்லாஹ் வளர்க்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ
எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே அன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 6 : 160)
அல்லாஹ் கூறுகிறான்: யாருடைய நன்மையின் தட்டு கணத்துவிடுமோ, அவர்கள்தான் வெற்றியாளர்கள்". (அல்குர்ஆன் 23 : 102)
இன்று நம்முடைய போட்டி எதிலிருக்கிறது? என யோசித்துப் பாருங்கள். செல்வத்தில் படிப்பில். ஹலாலான முயற்சியில் நாம் விரைவதை அல்லாஹ் தடுக்கவில்லை, பழிக்கவில்லை.
ஆனால், மறுமையை மறந்து அமல்களை மறந்து துனியாவை விட்டு விடுவதை அல்லாஹ் பழிக்கின்றான்.
முஃமின்களின் அடையாளத்தைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:
رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ
பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 24 : 37)
நாம் போட்டி போட வேண்டியது அமல்களில், மறுமையில் நன்மையின் தட்டு கணக்க வைக்க வேண்டும் என்பதில்தான்.
தொடர்ந்து அல்லாஹ் சொல்கிறான்:
وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ
யாருடைய நன்மையின் தட்டு இலேசாகி விடுமோ, இவர்கள் தங்களுக்கு தாங்களே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். (அல்குர்ஆன் 23 : 103)
அல்லாஹ் தூதர்களை அனுப்பவில்லையா? அறிவுரை கூறி நினைவூட்டக்கூடியவர்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லையா? எல்லாவற்றையும் அல்லாஹ் செய்தான். மறுமையில் அல்லாஹுவும் மலக்குகளும் கேட்கக்கூடிய கேள்விகளில் ஒன்று,
أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ
அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களுக்கு வரவில்லையா. (அல்குர்ஆன் 67 : 8)
அவர்களால் அல்லாஹுக்கு ஒரு நஷ்டமில்லை, மலக்குகளுக்கு ஒரு நஷ்டமில்லை, யார் சொர்க்கத்தை இழந்தாரோ அவருக்கு நஷ்டம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மிக தெளிவாக சொல்கின்றான்; நீங்கள் நன்றி கெட்ட தனமாக நடந்து கொள்வதால் எனக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது என்று.
وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا
நீங்கள் உங்கள் குதிங்கால்கள் மீது திரும்பி விடுவதால், எனக்கு என்ன தீங்கை நீங்கள் ஏற்படுத்த முடியும், அவன்தான் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டான். (அல்குர்ஆன் 3 : 144)
அல்லாஹ் நன்றியுள்ளோருக்கு எப்பொதும் நன்றி உள்ளவன், நன்றி அறியக்கூடியவன். நம்முடைய ஒவ்வொரு அமலுக்கும் அதற்குரிய கூலியை கொடுக்கின்றான். அவனுடைய நஷ்டம் அவனுக்கு. மறுமையில் தங்குமிடங்கள் இரண்டுதான்.
இந்த உலகத்தில் இருந்து செல்வதற்கு முன்பே எந்த இடத்திற்காக நாம் அமல் செய்கிறோம்? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ (13) وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
நல்லவர்களாக இருந்தால் சொர்க்கம் கிடைக்கும். பாவிகளாக இருந்தால் நரகப்படுகுழியில். (அல்குர்ஆன் 82 : 13-14)
فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ
ஒரு கூட்டம் சொர்க்க நிழல்களில் இருப்பார்கள், இன்னொரு கூட்டம் ஜுவாலை விட்டு எறிகின்ற நெருப்பில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 42 : 7)
அல்லாஹ் பாதுகாப்பானாக! சற்று நினைத்துப் பாருங்கள். நம்முடைய நல்ல அமல்களின் தட்டு இலேசாகி விட்டால் என்ன நஷ்டம்? என்று நினைத்துவிட வேண்டாம். இந்த உலகத்தில் நஷ்டத்தை ஈடு செய்து விடலாம், மறுமையின் நஷ்டத்தை எதைக் கொண்டு ஈடு செய்ய முடியும்?
நபிமார்கள் சிபாரிசுக்கு வருவார்களா? உறவுகள் வருவார்களா?
وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى
அல்லாஹ் யாரை திருப்தி படுகின்றானோ அவரைத் தவிர யாரும் யருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. (அல்குர்ஆன் 21 : 28)
مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ
அங்கே யார் இருக்கிறார்கள்? அவனது அனுமதி இல்லாமல் சிபாரிசு செய்வதற்கு. (அல்குர்ஆன் 2 : 255)
இந்த உலகத்தில் மக்களை ஏமாற்றலாம், தரீக்கா என்ற பெயரில், தஸவ்வுஃப் என்ற பெயரில் அல்லது வேறு வேறு பெயர்களில், மக்களே என்னிடம் பைஅத் செய்து கொள்ளுங்கள், நான் மறுமையில் காப்பாற்றுவேன், எனக்கு இங்கே அதற்கு இவ்வளவு கொடுத்து விடுங்கள், நாளை மறுமையில் சிபாரிசு செய்து சொர்க்கத்தை வாங்கி தருவேன் என இந்த உலகத்தில் ஏமாற்றலாம்.
நாளை மறுமையில் யாறும் யாரையும் ஏமாற்ற முடியாது. அங்கே அல்லாஹுடைய கிதாபு மட்டும்தான் பேசும்.
அல்லாஹ் சொல்கின்றான்: இதோ நமது புத்தகம், சத்தியத்தை பேசப் போகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு கிதாபு கொடுக்கப்படும், அது மறுமையில் நிறுக்கப்படும். அன்றைய தினத்தில் கண்டிப்பாக அமல்கள் நிறுக்கப்படுவது உண்மைதான். உங்களுக்கு புத்திக்கு புரிந்தாலும் சரி, புரியவில்லை என்றாலும் சரி.
இன்று, சில விஞ்ஞானிகள், அறிவாளிகள் என்று இந்த உலகத்தில் மேற்கத்தியவர்களின் படிப்பை படித்து விட்டு மார்க்கத்தில் குதர்க்கம் செய்யக்கூடியவர்களை பார்க்கிறோம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவற்றுக்கெல்லாம் மறுப்பாக அன்றே சொல்கிறான்:
وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (8) وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ
(ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கிறதோ அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர். (அல்குர்ஆன் 7 : 8-9)
அன்றாடம் நாம் ஓதக்கூடிய சூரத்துல் காரிஆவில் அல்லாஹ் சொல்கிறான்:
فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ (6) فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ (7) وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ (8) فَأُمُّهُ هَاوِيَةٌ
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ, அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். (அல்குர்ஆன் 101 : 6-9)
சொர்க்கத்தில் சென்று விட்டால் வேறு என்ன கவலை இருக்கிறது! இந்த உலகத்தில் ஆட்சி இல்லாமல், வசதியில்லாமல் இருந்ததை, எதிரிகளால் தாக்கப்பட்டதை, அல்லது இந்த உலகத்தில் அவன் சந்தித்த எந்த துன்பத்தை நினைத்தாவது அவனுக்கு கவலை இருக்குமா? இங்கே அனுபவித்த ஒவ்வொரு கஷ்டத்திற்கும் அவனுடைய அளவையில் அளந்து நன்மையை தரும்போது கவலையில்லாத உலகம் அல்லவா அந்த சொர்க்கம்!
அல்லாஹ் கூறுகிறான்:
فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (மறுமையில் சொர்க்கத்திலுள்ள) உன்னதமாகச் சிங்காரிக்கப்பட்ட பூங்காவனத்தில் மகிழ்விக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 30 : 15)
சொர்க்கத்தில் அவர்களுக்கு இன்பம்தான், அவர்களை கவலைப்படுத்தக்கூடிய எதுவும் அங்கே இருக்காது.
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
கண்களுக்கு குளிர்ச்சியான ஏராளமான அருட்கொடைகள் அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த உலகத்தில் யாரும் அதை அறிந்து கொள்ள முடியாது. (அல்குர்ஆன் 32 : 17)
ஒரு மனிதன் நரகத்தில் சென்று விட்டால், அல்லாஹ் பாதுகாப்பானாக! தான் இந்த உலகத்தில் அனுபவித்த எந்த நிஃமத்தைக் கொண்டு அவர் நரகத்தில் அவன் இன்பமாக இருக்க முடியும்?
வசதியான நாட்டில், வசதியான வாழ்க்கை வாழுகின்ற, கவலை, துன்பம், நோய் ஏற்படாமல் வாழுகின்ற எத்தனை நபர்கள், நாளை மறுமையில் நரகத்தில் சென்று விட்டால் இந்த உலகத்தில் தான் அனுபவித்த எந்த இன்பங்களை நினைத்து நரகத்தில் இன்பமாக இருக்க முடியும்? அது சாதாரணமான நரகமா?
எத்தனை நரகங்கள் இருக்கின்றன! சகர் நரகத்தை பற்றி தெரியுமா? ஹுதமா நரகத்தைப் பற்றி தெரியுமா? ஜஹீமை பற்றி தெரியுமா? ஜஹன்னமை பற்றி தெரியுமா? (அல்குர்ஆன் 74 : 27-29) இவ்வாறு எத்தனை நரகங்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். பல வகையான அதாபுகள் பற்றி சொல்கிறான்.
وَآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ
இன்னும் பல வகையான வேதனைகள் இருக்கிறது என்று ரப்பு சொல்கிறானென்றால் அது எவ்வளவு கடுமையாக இருக்கும். (அல்குர்ஆன் 38:58)
நாளை மறுமையில் நரகத்தில் ஜக்கூம் அல்லது பாவிகளின் குடிபானங்களில் இருந்து ஒரே ஒரு சொட்டு இந்த பூமியில் விழுந்து விட்டால் இந்த பூமியையே அது நாசமாக்கிவிடும். அந்த பானம் முழுமையாக குடிபானமாக ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டால் நிலைமை எப்படி இருக்கும்! அல்லாஹ் பாதுகாப்பானாக!
நூல் : திர்மிதி, எண்: 2510.
அந்த மறுமையின் தராசில் நமது அமல்கள் மட்டும்தான் ஈடேற்றத்தை தர முடியும், அங்கு நன்மையின் தட்டு கணக்க வேண்டும். அந்த தராசைப் பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸ் வருகிறது.
நாளை மாறுமையில் அல்லாஹ் தராசு தட்டை வைப்பான், வானங்கள் பூமி எல்லாம் அந்த தராசில் நிறுக்க நினைத்தாலும், அந்த தராசு அதை விட பெரிதாக இருக்கும். மலக்குகள் சொல்வார்கள்; "எங்கள் இறைவா, இந்த தராசு யாருக்காக" என்பதாக.
அல்லாஹ் சொல்வான், "என்னுடைய அடியார்களில் நான் யாருக்கு நாடுகிறேனோ அவர்களுக்காக. அவர்கள் சொல்வார்கள்; "இறைவா! நீ மகா பரிசுத்தமானவன், உன்னை வணங்க வேண்டிய நாங்கள் வணங்க செய்யவில்லை என.
நூல் : ஸஹீஹ் தர்கீப் – அல்பானி, எண்: 3626, ஹாகிம், எண் : 8891.
அல்லாஹுடைய படைப்பு என்பது மிகப் பெரியது. அந்த படைப்பை இந்த மனிதனுடைய அறிவால் அறிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு முஃமினும் மறுமையின் தராசை ஈமான் கொள்ள வேண்டும். என்னுடைய செயல் ஒவ்வொன்றையும் செய்யும் போது, இது நாளை மறுமையில் நன்மையின் தட்டில் வைக்கப்படுமா? என்றால் தொடருவோம்.
இந்த செயல் என்னுடைய தீமையின் தட்டில் வைக்கப்படுமா? அந்த செயலில் இருந்து வெளியேறு.
நன்மையை நாடக்கூடியவனே! முன்னேறு, தீமையை நோக்கக்கூடியவனே! நீ அதிலிருந்து விலகிக்கொள்.
நூல் : திர்மிதி, எண் : 6198.
இப்படியாக நமது வாழ்க்கையை கழிக்க வேண்டும், அவர்கள்தான் வெற்றியாளர்கள். இந்த துன்யாவில் நமது ஆசைக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், மறுமையின் ஆசை நிறைவேற வேண்டுமா?
அல்லாஹ் சொல்வானே, "உன்னுடைய எல்லா ஆசையும் இந்த சொர்க்கத்தில் உண்டு. (அல்குர்ஆன் 41 : 31) அந்த சொர்க்கத்தில் நமது ஆசைகளை பெறுவதற்காக இந்த துன்யாவில் ஹராமான ஆசைகளை மனிதன் விட்டே ஆக வேண்டும்.
அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை மறுமையில் அந்த நன்மையின் தட்டுகளை கணக்க வைக்கக்கூடிய விசேஷமான அமல்களை நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள், அவற்றை நாம் தெரிந்து அதன்படி செயல்படுவோமாக! அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்முடைய நன்மையின் தட்டை கணமாக்குவானாக! ஆமீன்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/