HOME      Khutba      ரமழான் - இறுதி பத்து...!! | Tamil Bayan - 471   
 

ரமழான் - இறுதி பத்து...!! | Tamil Bayan - 471

           

ரமழான் - இறுதி பத்து...!! | Tamil Bayan - 471


ரமழான் - இறுதி பத்து

ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழான் - இறுதி பத்து

வரிசை : 471

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 16- 06-2017 | 21-09-1438

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

பொதுவாக இந்த உலக நாட்கள் சுருங்கிக் கொண்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.மறுமையின் அடையாளங்களில் ஒன்று, காலங்கள் மிக சுருங்கிவிடும்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் : ஓராண்டு ஒரு மாதத்தை போன்று ஆகிவிடும். ஒரு மாதம் ஒரு வாரத்தை போன்று ஆகிவிடும். ஒரு வாரம் ஒரு நாள் போன்று ஆகிவிடும்.

இப்போதுதான் ரமலானை எதிர்பார்த்தது போல் இருந்தது, ரமலான் நுழைந்தது, 20நாட்கள் ஆகிவிட்டன. மிஞ்சி இருக்கக்கூடிய நாட்கள் அல்லாஹு ரப்புல் ஆலமீன் யாருக்கு அதை முழுமையாக எழுதுவான் என்பதும் தெரியாது.

ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு இரவும் மரணத்தை பார்க்கும் பொழுது நாமல்லாம் அதன் வாயிலின் வரிசையில் நின்றுகொண்டு இருப்பதைப் போன்று தான்.

தன் தூதருக்கு அல்லாஹ் நினைவூட்டுகின்றான் :

إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ

(நபியே!) நிச்சயமாக நீரும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தான். (அல்குர்ஆன் 39 : 30)

ஆகவே மிஞ்சி இருக்கக்கூடிய நாட்கள் மிகமிக விலை மதிக்க முடியாத நாட்களாகும்.மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும்.

கடைசி பத்து நாட்கள்,அதில் தான் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது.

நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்களுடைய ஹதீஸை பாருங்கள்!இமாம் முஸ்லிம் அறிவிப்பு செய்கிறார்கள் :

 

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாடுகளில்) மற்ற நாட்களில் காட்டாத (அதிக) ஈடுபாட்டை, (ரமளானின்) இறுதிப்பத்து நாட்களில் காட்டுவார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2009.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அமல்களோடு யாருடைய அமலையும் இந்த உலகத்தில் ஒப்பிட முடியாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நன்மையில் விரைந்தவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடித் தரக் கூடிய சிறிய பெரிய ஒவ்வொரு காரியத்தையும் முனைப்புடன் வேகத்துடன் மிகுந்த ஆர்வத்துடன் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

எந்த ஒரு நன்மையையும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறக்கணித்தது இல்லை, தவறவிட்டதில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ரமலான் அல்லாத மாதத்தில் இரவில் தொழுததை நபித்தோழர்கள் சொல்வதை நாம் பார்க்கிறோம்; ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகராவை ஓதினார்கள்; நிஸாவை ஓதினார்கள்; ஆல இம்ரான் ஓதினார்கள்; மாயிதாவை ஓதினார்கள்; அன்ஆம் ஓதினார்கள் என்று ரமலான் அல்லாத மாதத்தில் தொழுததை நபித்தோழர்கள் சொல்வதை நாம் பார்க்கிறோம்.

இரவுத்தொழுகையைப் பொறுத்தவரை நபித்தோழர்களுக்கு அது கட்டாயக் கடமையாக இருந்தது. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இரவுத்தொழுகை கட்டாயக் கடமையாக இருந்தது.

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا

(தஹஜ்ஜுது தொழுகை உம் மீது கடமையாக இல்லாவிடினும்) நீர், நஃபிலாக இரவில் எழுந்து ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வருவீராக! (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்' என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உமது இறைவன் உம்மை அமர்த்தலாம். (அல்குர்ஆன் 17 : 79)

ஒருநாள் அண்ணை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் பாதங்களை பார்க்கிறார்கள். பாதங்கள் வீங்கி இருக்கிறது. எனவே கேட்டார்கள் : அல்லாஹ்வுடைய தூதரே! உங்களை நீங்கள் வருத்திக் கொள்ககிறீர்களே என்று.

ரசூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்சொன்னார்கள் :

أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا

நான் எனது ரப்புக்கு நன்றியுள்ள அடிமையாக இருக்க வேண்டாமா?! (1)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 4460.

அல்லாஹ் எனக்கு கொடுத்த கண்ணியங்கள் நிஃமத்துகள் நன்மைகள் அதற்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன்! நன்றிகாகத்தான் நான் அல்லாஹ்வை திருப்திப்படுத்த சிரமப்படுகிறேன் என்று சொல்லிக் காட்டினார்கள்.

இன்னொரு பக்கம் மறுமையுடைய பயம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுக்கு இருந்தது.

உலக மக்களின் பயத்தை எல்லாம் ஒரு தட்டிலும் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய பயத்தை இன்னொரு தட்டிலும் வைத்தால் ரசூலுல்லாஹ் உடைய பயத்தின் தட்டு தான் கனமாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ

உங்களில் நான் அதிகம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவன். உங்களில் நான் அதிகம் அல்லாஹ்வை பயந்தவன். உங்களில் நான் அல்லாஹ்வை அதிகம் அஞ்சி கூடியவன்.(2)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4675.

அல்லாஹ்வுடைய தூதருக்கு தலைமுடி நரைத்தது. நபித்தோழர்கள் கேட்டார்கள்: இவ்வளவு குறுகிய வயதில் உங்களுக்கு தலைமுடி நரைக்கிறது? என்று. அந்தக் காலத்தில் தள்ளாத வயதில் தான் தலைமுடி நரைக்கக்கூடிய வழக்கமாக இருந்தது.

ரஸுலுல்லாஹ் சொன்னார்கள் :

"شَيَّبَتْنِي هُودٌ وَأَخَوَاتُهَا"

சூரா ஹூதும் அதுபோன்ற சூராக்களும் என்னை நரைக்க வைத்துவிட்டது.

மறுமையைப் பற்றி அல்லாஹ் சொல்லக்கூடிய வசனங்கள் மறுமையைப் பற்றி அல்லாஹ்வின் திடுக்கம் என்னை நரைக்க வைத்துவிட்டது. (3)

அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானி, எண் : 14209.

நபி (ஸல்) இப்படிச் சொன்னார்கள் என்றால் எந்த அளவுக்கு மறுமையை குறித்த பயம் அவர்களுக்கு இருந்திருக்கும்!

நமக்கெல்லாம் அந்த பயத்திலிருந்து ஒரு சிறிய பகுதியாவது கிடைத்துவிடாதா! நம்முடைய நிம்மதியான தூக்கத்தைப் பாருங்கள். கவலை இல்லாத வாழ்க்கையை பாருங்கள்.

கவலை இருக்கிறது. எதைப்பற்றிய கவலை? உலகத்தைப் பற்றிய கவலை. மறுமை பற்றிய கவலை, கப்ரின் விசாரணை பற்றிய கவலை, ஆகிரத்தை பற்றிய கவலை, சிராத்துல் பாலம் பற்றிய கவலை கிடையாது.

சலஃபுகள் ஒருவரிடத்தில் கேட்கப்படுகிறது : நீங்கள் குறைவாக சிரிக்கிறீர்கள், மிகுந்த கவலையோடு இருக்கிறீர்கள் என்ன காரணம் என்று?

நான்கு விஷயத்தைப் பற்றி அறியாமல் இருக்கும் போது என்னால் எப்படி சிரிக்க முடியும் என்று கேட்கிறார்.

குழந்தை வயிற்றில் இருக்கும் போது நான்கு விஷயத்தைப் பற்றி மலக்கு எழுதுகிறார்:அவர் நல்லவரா? கெட்டவரா?

என்னுடைய வானவருக்கு அல்லாஹ் என்னைப்பற்றி என்ன எழுத சொன்னான் தெரியாதே!

என்னுடைய முடிவு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று முடியுமா?இல்லையா?என்று எனக்குத் தெரியாது.

மூன்றாவதாக அல்லாஹ் கட்டளையிடுவான்: மறுமையில் ஏடுகள் எல்லாம் அப்படியே பறக்கும்.அவரவர் கையில் போய் விழுந்துவிடும். அப்படி ஏடுகள் கொடுக்கப்படும் அந்த நாளில் வலது கரத்தில் கொடுக்கப்படுவேனா அல்லது இடது கரத்தில் கொடுக்கப்படுவேனா என்று நான் அறிய மாட்டேனே!

நல்லவர்களை பிரிக்கப்படும் போது நல்லவர்களில் இருப்பேனா அல்லது பாவிகளில் இருப்பேனா என்று தெரியவில்லையே!

இந்த நான்கு விஷயங்களைப் பற்றி நான் அறியாமல் இருக்க எதைக் கொண்டு நான் இவ்வுலகில் மகிழ்ச்சி அடைவேன்?!

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் எல்லோருக்கும் இமாமாக இருந்தார்கள்.

சாதாரண நாட்களிலேயே அவர்கள் அதிகமாக தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நஃபில்களை விட்டுவிட்டால் கூட அதை அஸருக்குப் பின் மீட்டி தொழக் கூடியவர்களாக இருந்தார்கள். அந்த அளவுக்கு நபில்களில் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

ஆனால் இன்று எத்தனையோ பேர் ஃபர்ளுகளை பாழாக்குகிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுக்கு இபாதத்தில் ஆர்வமும் முனைப்பும் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் அளவுக்கு ஈமான் இருந்தது.

ரமலான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அறிவிக்கப்படுகிறது; மற்ற மாதங்களில் சிரமப்படாத அளவிற்கு இந்த ரமலான் மாதத்தில் இறுதிப் பத்தில் சிரமப்படுவார்கள்; முயற்சி செய்வார்கள்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்ற நாட்களில் செய்த அமலை கூட நம்மால் வாழ்நாளெல்லாம் செய்ய முடியாமல் இருக்கிறது.

அப்படியிருந்தும் கூட ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் :

இந்தக் கடைசி பத்தில் அல்லாஹ்வுடைய தூதர் பள்ளியிலேயே தங்கிவிடுவார்கள். லைலத்துல் கத்ரை தேடிக் கொண்டிருப்பார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2008.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் எந்த அளவு இபாதத்தில் ஆர்வம் உடையவர்களாகவும் அந்த இரவில் நன்மையைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள் என்றால் நம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இந்த கடைசி பத்து எவ்வளவு முக்கியமானது என்பதை கவனிக்க வேண்டும்.

காலங்கள் நம் முதுகை பலவீனப்படுத்தி விட்டன. வாழ்க்கையில் அந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் நாம் செய்த பாவங்களை எடுத்து நம் முன்னால் வைத்து அல்லாஹ் கேள்வி கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்?

தொழுகையில் யாரை நினைக்கிறோம்? தக்பிரில் என்ன நினைக்கிறோம்? என்ன ஓதுகிறோம் என்று நம்மை நாமே பரிசோதித்து பார்த்தால் மிக்க வெக்கப்படக் கூடிய நிலையில் இருக்கின்றோம்.

நம்மைப் போல பலவீனமனவர்களுக்கு சாதாரண மக்களுக்கு இந்த ரமலானுடைய இறுதிப் பத்து அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அருளையும் அடைவதற்கு எவ்வளவு முக்கியமான நேரம் இந்த இறுதி பத்து என்பதை கவனித்துக்கொள்ளுங்கள் :

இமாம் புகாரி முஸ்லிம்அறிவிக்கிறார்கள் :

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடைசி பத்தில் இரவை முழுமையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்துவார்கள். தங்களுடைய குடும்பத்தார்களையும் எழுப்பி விடுவார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2008.

இஷாவில் இருந்து ஸஹர் வரை இரவில் கியாமுல் லைல் தொழுகையை நின்று நிறைவேற்றுவார்கள்.

ஒருமுறை ரமலான் நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது தொழுகையில் நின்றுகொண்டு ஓதினார்கள், ஓதினார்கள். மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் பயந்து விட்டார்கள். இன்று சஹருக்கு நேரம் கிடைக்குமா? இல்லை சுப்ஹுடைய அதான் வந்துவிடுமா? என்று.

கடைசியாக நபி (ஸல்) தொழுகையை முடித்தார்கள். மக்கள் தாங்கள் வைத்திருந்த சிறு அளவு பாலை குடித்தார்கள். சில பேரித்தம் பழங்களை சாப்பிட்டார்கள்.

சுபுஹுக்கு அதான் சொல்லப்பட்டு விட்டது. எவ்வளவு நேரம் இடைவெளி இருந்திருக்கும். குறைவான இடைவெளிதான்.

ஆனால் நாம் உண்பதிலும் தின்பதிலும் அதிக நேரம் செலவு செய்கிறோம். இப்படி உண்பதில் நேரங்களை வீணாகக் கூடிய காலமல்ல இந்த கடைசி பத்து உடைய காலம். நம் தேவைகளை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும். நம் உணவு தேவையாக இருக்கட்டும் வேற எந்த தேவையாக இருந்தாலும் சுருக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

இஸ்திக்பார் செய்வது, குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது என்று இபாதத்தில் ஈடுபட்டால்தான் இந்த கடைசி பத்துடைய பாக்கியங்களை அடைய முடியும்.

குறிப்பாக இந்த கடைசி பத்தில் லைலத்துல் கத்ர் உடைய நன்மையை அடைய வேண்டுமென்றால் நாம் இந்த இரவுகளில் இபாதத்தில் இருக்கவேண்டும்.

அது நின்று தொழுவதிலோ திக்ரு துஆக்கள் ஓதுவதிலோ இஸ்திஃபார் செய்வது போன்ற இபாதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் இந்த நன்மையை அடைய முடியும்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவை முழுமையாக உயிர்பித்து விடுவார்கள். தங்களுடைய குடும்பத்தார்களையும் எழுப்பி விடுவார்கள்.

மற்ற நாட்களில் இரவுகளில் வித்ரு தொழுவதற்காகவும் கடைசி இரவில் தொழுவதற்காகவும் இரவுத்தொழுகை தொழுவதற்கும் எழுப்புவார்கள்.

அவர்களின் மனைவிமார்கள் எவ்வளவு களைப்பாக இருந்தாலும் இரவுத் தொழுகையை தொழுவதற்கு எழுப்புவார்கள்.

மேலும் தங்களுடைய மனைவிமார்களை விட்டு விலகி கொண்டு இருந்தார்கள். முந்திய இரவுகளில் மனைவிமார்களுடன் சுன்னத்தை நிறைவேற்றக்கூடியவர்கள் இந்த கடைசி இரவுகள் வந்துவிட்டால் முற்றிலுமாக மனைவிமார்களை விட்டு விலகி இபாதத்தில் கழிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இந்த இரவு வணக்கங்கள் நமக்கு ஒரு படிப்பினை பாடம் இருக்கின்றது.

அல்லாஹ்வுடைய தூதரே இரவு வணக்கத்திற்காக இவ்வளவு சிரமப்பட்டு இருக்கும்பொழுது நாம் நம்முடைய தொழுகையின் நிலையை பரிசோதனை செய்ய வேண்டும்.

நம் சலஃபுகள் வாலிபர்களை பார்த்து கூறுவார்கள் : இரவு உங்களுக்கு ஆரோக்கியம் இருக்கும் போதே இரவுத் தொழுகையை நின்று தொழுக பழகிக்கொள்ளுங்கள். எனக்கு வயோதிகம் ஏற்பட்டுவிட்டது. என்னால் சூரா பகரா ஆல இம்ரான் ஓதக்கூடிய அளவிற்கு தான் எனக்கு நிற்க முடிகிறது என்று கூறுவார்கள்.

ரப்பு நம்மைப் பார்த்து சொல்கிறான் :

فَفِرُّوا إِلَى اللَّهِ

அல்லாஹ்வின் பக்கம் விரண்டோடி வாருங்கள். (அல்குர்ஆன் 51 : 50)

வசனத்தின் கருத்து : முஃமின்களே! உங்களைச் சுற்றி ஆபத்துகள் இருக்கிறது. ஷைத்தான் வலைவிரித்து வைத்திருக்கிறான். உங்களுடைய நஃப்ஸுடைய ஆசைகள் உங்களை சுற்றி இருக்கின்றன. மறுமையோ எவ்வளவு பயங்கரமானது; எவ்வளவோ அழிவை ஏற்படுத்தக் கூடியது. திடுக்கத்திற்கு மேல் திடுக்கம். எனவே அல்லாஹ்வின் பக்கம் வாருங்கள்.

அல்லாஹ்விடமிருந்து ஒதுங்க முடியாது, தப்பிக்க முடியாது. அல்லாஹ்விடம் வந்தால் தவிர. அல்லாஹ்விடம் தான் வர வேண்டும். அல்லாஹ் தான் பாதுகாக்க முடியும்.

நரகத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமா? அல்லாஹ்வினால் தான் பாதுகாக்க முடியும். ஷைத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டுமா? அல்லாஹ்விடம் வரவேண்டும். ஒவ்வொரு கெடுதி சூழ்ச்சி அனைத்திலிருந்தும் பாதுகாக்க வேண்டுமா? அல்லாஹ்விடம் தான் வர வேண்டும்.

எப்பொழுது நபித்தோழர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு நமக்கு ஒதுங்குவதற்கு இடம் இல்லை என்று அல்லாஹ்விடம் வந்தார்களோ அப்பொழுது அல்லாஹ் அவர்களை மன்னித்தான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்மீது கருணை காட்டுவானாக!

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமளானுடைய கடைசி பத்தில் லைலத்துல் கத்ர் உடைய இரவை அடைய ஆர்வம் காட்டினார்கள்.

அல்லாஹு தஆலா இந்த இரவைப் பற்றி சூரா துகானில் கூறுகிறான் :

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ

நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ("லைலத்துல் கத்ரு" என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். (அல்குர்ஆன் 44:3)

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன. (அல்குர்ஆன் 44:4)

வசனத்தின் கருத்து : இந்த இரவில்தான் எல்லா விஷயங்களும் முடிவு செய்யப்படுகிறது

லவ்ஹூல் மஹ்ஃபூலிலிருந்து யார் மரணிப்பார்? யார் பிறப்பார்? யாருக்கு என்ன உணவு? என எல்லாம் முதல் வானத்திற்கு அதை கொண்டுவரப்பட்டு பிறகு சம்பந்தப்பட்ட வானவருக்கு அந்தந்த காரியங்களுக்கு ஒப்படைக்கப்படுகிறது.

குர்ஆன் இறக்கப்பட்ட இரவு தான் முபாரக்கான இரவு. ரமலானில் கடைசிப் பத்தில் அல்லாஹு தஆலா லைலத்துல் கத்ர் என்ற மிகப்பெரிய இரவை வைத்திருக்கிறான். அது சாதாரணமான இரவல்ல.

இந்த இரவின் சிறப்பை பற்றி அல்லாஹ் ஒரு சூராவையே இறக்கி வைத்திருக்கிறான்.

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் 97:1)

وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?(அல்குர்ஆன் 97:2)

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ

கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். (அல்குர்ஆன் 97:3)

تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ

அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். (அல்குர்ஆன் 97:4)

سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).(அல்குர்ஆன் 97:5)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இரவைப் பற்றி சொன்னார்கள் :

مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

 

யார் ரமலானில் ஈமானோடும் நன்மையை ஆதரவு வைத்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவமெல்லாம் மன்னிக்கப்படும். யார் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானோடும் நன்மையை ஆதரவு வைத்தும் முழுமையாக நின்று வணங்குவார்களோ அவர்களுடைய முந்தைய பாவம் அனைத்தும் மன்னிக்கப்படும்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1875.

அன்பானவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் கடைசி பத்து நாட்களில் அதை தேடச் சொன்னார்கள். குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளில் தேடச் சொன்னார்கள். அதற்காக இஃதிகாப் இருந்திருக்கிறார்கள்.

ரமலானுடைய நாட்களை நாம் கிடைக்கப்பெற்று இருக்கிறோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களிடத்தில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கேட்கிறார்கள் : யா ரசூலல்லாஹ்! லைலத்துல் கத்ர் உடைய இரவை கிடைக்கப் பெற்று விட்டால் அதில் எந்த துஆ ஓத வேண்டும்? என்று.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

ஆயிஷா அப்படிப்பட்ட இரவு கிடைக்கப்பெற்றால், யா அல்லாஹ்! பாவங்களை மன்னிக்கிறவனே! மிக தயாள குணமுடையவனே! நீ மன்னிப்பதை விரும்புகிறாய்; என்னை மன்னித்து விடுவாயாக!

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா, எண் : 3840.

இது பாவமன்னிப்பு உடைய துஆ. அல்லாஹ்வுடைய மன்னிப்பை தேடக்கூடிய துஆ.

நாம் துஆ கேட்க வேண்டும் என்றால் துன்யாவை கேட்க கூடிய துஆ கட்டுக்கட்டாக வைத்திருப்போம். ஆனால் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டவர்கள் அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் கேட்டது அல்லாஹ்வுடைய பாவமன்னிப்பு தான்.

பாவமன்னிப்பின் துஆக்களில் இந்த துஆவை பெரிய துஆவாக ஆக்கிக் கொள்வோமாக! முக்கியமான துஆவாக ஆக்கிக் கொள்வோமாக!

அல்லாஹுத்தஆலா உலகில் உள்ள அனைத்து முஃமின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த லைலத்துல் கத்ருடைய இரவை கிடைக்கப் பெற்றவர்களாக அதில் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக ஆக்கியருள்வானாக!

இந்த இரவில் அல்லாஹ்வுடைய மார்க்கம் பக்கம் அவர்கள் திரும்புவதற்கும் அவர்கள் வெற்றி கொள்வதற்கும் அல்லாஹ்வை நெருங்குவதற்கும் அல்லாஹ்வின் எதிரிகளின் மீது அவர்கள் வெற்றி கொள்வதற்கும் இந்த இரவை காரணமாக அல்லாஹுத்தஆலா ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى أَخْبَرَنَا حَيْوَةُ عَنْ أَبِي الْأَسْوَدِ سَمِعَ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنْ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ فَقَالَتْ عَائِشَةُ لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ أَفَلَا أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَقَرَأَ ثُمَّ رَكَعَ (صحيح البخاري 4460 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ أَبِي حُمَيْدٍ الطَّوِيلُ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلَا أُفْطِرُ وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَقَالَ أَنْتُمْ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي (صحيح البخاري 4675 -)

குறிப்பு 3)

حدثنا مُحَمَّدُ بن مُحَمَّدٍ التَّمَّارُ الْبَصْرِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثُ بن سَعْدٍ، عَنْ يَزِيدَ بن أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بن عَامِرٍ، أَنَّ رَجُلا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، شِبْتَ؟ قَالَ:"شَيَّبَتْنِي هُودٌ وَأَخَوَاتُهَا"(المعجم الكبير للطبراني14209-)

المحدث: شعيب الأرناووط | خلاصة حكم المحدث: إسناده ضعيف |المحدث: الألباني | خلاصة حكم المحدث: ضعيف

ஹதீஸின் தரம் குறித்து மேலும் அறிய கீழுள்ள லிங்கைப் பயன்படுத்தவும் :

https://islamqa.info/amp/ar/answers/146446

https://www.dorar.net/%D8%A7%D9%84%D8%A8%D9%88%D8%A7%D8%A8%D8%A9_%D8%A7%D9%84%D8%AD%D8%AF%D9%8A%D8%AB%D9%8A%D8%A9?q=%22%D8%B4%D9%8E%D9%8A%D9%91%D9%8E%D8%A8%D9%8E%D8%AA%D9%92%D9%86%D9%90%D9%8A+%D9%87%D9%8F%D9%88%D8%AF%D9%8C+%D9%88%D9%8E%D8%A3%D9%8E%D8%AE%D9%8E%D9%88%D9%8E%D8%A7%D8%AA%D9%8F%D9%87%D9%8E%D8%A7%22

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/