HOME      Khutba      சோதனைகளில் நல்லோரின் பண்புகள்!!! | Tamil Bayan - 630   
 

சோதனைகளில் நல்லோரின் பண்புகள்!!! | Tamil Bayan - 630

           

சோதனைகளில் நல்லோரின் பண்புகள்!!! | Tamil Bayan - 630


بسم الله الرّحمن الرّحيم
 
சோதனைகளில் நல்லோரின் பண்புகள்.
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் பயம் தான் எனக்கும் உங்களுக்கும் வெற்றிக்குரிய அடிப்படை என்பதை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக. அல்லாஹ்வை பயந்தவர்கள் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய எல்லா காரியங்களையும் அல்லாஹு தஆலா எளிதாக்கி கொடுப்பான். நன்மையாக்கி கொடுப்பான். 
 
இம்மை மறுமையில் அவர்களை தன்னுடைய  அரவணைப்பிலும், அன்பிலும், தன்னுடைய உதவியிலும் அவன் வைத்து இருப்பான் என்பதை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உலகத்தில் அவன் படைத்த எல்லா படைப்புகளையும் சோதிக்கிறான். அல்லாஹ்வுடைய படைப்புகளில் சோதனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் இல்லை. அல்லாஹ்வுடைய படைப்புகளில் சோதனைக்கு அப்பாற்பட்டு ஒரு கூட்டம் இருக்குமேயானால் கண்டிப்பாக நபிமார்கள் சோதிக்கப்படாமல் இருந்திருப்பார்கள். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலகத்தில் அதிகமாக சோதிக்கப்பட்டது நபிமார்கள் தான். பிறகு அந்த நபிமார்களை போன்று அவர்களின் வழியில் வந்த நல்லவர்கள் சோதிக்கப்பட்டார்கள். 
 
இந்த  பிரபஞ்சத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா படைத்த எல்லா படைப்புகளும் சோதிக்கப்படுகின்றன. மனிதன் மட்டுமல்ல பறவைகளும் சோதிக்கப்படுகின்றன. மிருகங்களும் சோதிக்கப்படுகின்றன. கால்நடைகளும் சோதிக்கப்படுகின்றன. இந்த உலகத்தில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படைப்புகளுக்கும் சோதனை இருக்கிறது. சிரமங்கள் இருக்கின்றன. 
 
குறிப்பாக மனிதனை பொறுத்தவரை அவனுக்கு மறுமை என்ற வாழ்க்கை இருக்கிறது. அங்கே அவனுக்கு விசாரணை இருக்கிறது. மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் மட்டும்தான் சொர்க்கம், நரகம் என்ற இறுதி இருக்கிறது. மற்ற படைப்புகளுக்கு அது கிடையாது. ஆகவே இந்த மனிதனைப் பொறுத்தவரை இந்த வாழ்க்கையில் பல கட்டங்களை அவன் தாண்டியாக வேண்டும் .
 
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ
 
(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கின்றது. (அல்குர்ஆன் 84 : 19)
 
ஒரு சோதனையிலிருந்து அடுத்த சோதனை, அதிலிருந்து இன்னொரு சோதனை, இப்படியாக இந்த உலக வாழ்க்கை மரணம்வரை சோதனைகளோடு சூழப்பட்டுள்ளது. மனிதனே! நீ கடினமாக உழைத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். உனக்கு கஷ்டம், சிரமம் இதெல்லாம் இருந்துகொண்டு தான் இருக்கும். உன்னுடைய ரப்பை நீ சந்திக்கின்ற வரை.
 
يَاأَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
 
மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரையில் (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டுக்) கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய். (பின்னர் மறுமையில்) அவனை நீ சந்திக்கின்றாய். (அல்குர்ஆன் 84 : 6)
 
அல்லாஹ்வின் அடியார்களே! யார் இந்த உலகத்திலேயே எப்போதுமே தனக்கு தான் விரும்பியது கிடைக்கும் வரை தனக்கு கவலை ஏதும் வரக்கூடாது என்று நினைக்கிறாரோ, அவர்கள் ஏமாற்றத்தை தான் அடைவார்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் ஏமாற்றம்தான் மிஞ்சும். 
 
யார்  அல்லாஹ்வுடைய விதியைப் புரிந்து கொண்டாரோ, அல்லாஹ்வுடைய விதியில் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும், நன்மையைக் கொண்டு சந்தோஷப்படுகின்ற நன்றி செலுத்துகின்ற, அதேநேரத்தில் நமக்குத் தீமை ஏற்பட்டால் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். 
 
எந்த ஒரு அடியான் நன்மையில் சந்தோஷப்பட்டு தீமை ஏற்படும் போது, அல்லாஹ்வின் மீது வருத்தப்படுகிறானோ, அல்லாஹ்வையோ விதியையோ அவன் குறைவாக ஏசி பேசி விடுகின்றானோ அவன் நஷ்டவாளியாக ஆகிவிடுவான்.
 
நிஃமத்துகளில் மகிழ்ச்சியாக இருப்பது போன்று, அல்லாஹ்வைப் புகழ்வது போன்று, சோதனைகளில் பொறுமையை கற்றுக்கொள்ளவேண்டும்; சகிப்பை கற்றுக்கொள்ள வேண்டும்; மன உறுதியை கற்றுக்கொள்ளவேண்டும்; தடுமாற்றத்தை தவிர்க்கவேண்டும். 
 
நாவுக்கு வந்தபடி வந்ததை எல்லாம் பேசி விடலாம் என்று இல்லாமல் அல்லாஹ்வுக்கு பொருத்தமானதை தவிர நான் எதையும் பேசமாட்டேன். இந்த சோதனை, இந்த தீங்கு, இந்த கஷ்டம் என்னுடைய பாவத்தினாலும் ஏற்பட்டிருக்கலாம். என்மீது கருணை உள்ள ரப்பு, ரஹ்மான் இந்த நோயை, இந்த கஷ்டத்தை, இந்த நெருக்கடியை, இந்த பிரச்சனையை, இந்த நஷ்டத்தை, என்னுடைய பாவங்கள் மன்னிப்பதற்கு காரணமாக ஆக்கி வைப்பான். 
 
நிச்சயமாக இதற்கு பிறகு அல்லாஹ் ஒரு நல்ல நிலைமையை ஏற்படுத்தி கொடுப்பான். இந்தச் சிரமத்திற்குப் பிறகு என்னுடைய ரப்பு கண்டிப்பாக நன்மையான இலகுவான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பான்.
 
سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
 
சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான். (அல்குர்ஆன் 65 : 7)
 
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (5) إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
 
நிச்சயமாக கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. (அல்குர்ஆன் 94 : 5, 6)
 
அறிஞர்கள் சொல்வார்கள்; கஷ்டம் என்று ஒன்று இருக்கும் என்றால் அதற்குப் பிறகு வரக்கூடிய இலகுவான விஷயம் இரண்டாக இருக்கும் என்று. சிரமம் ஒன்று என்று சொன்னால் அதற்கு பிறகு சௌகரியமாக வரக்கூடியது இரண்டாக இருக்கும். 
 
அல்லாஹ் அப்படித்தான் சொல்கிறான்; வசனத்தில் الْعُسْرِ என்பது ال ஐக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது مغرفة  வாக உள்ளது.
 
يُسْرًا  என்பது نكرة வாக ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே சிரமம் ஒன்றாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு அல்லாஹ்விடம் இருந்து வரக்கூடியஉதவிகள் பல உதவிகளாக இருக்கும்.
 
இங்கு நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு குறிப்பிட்டு கூறுகிறேன். சோதனைகளின் போது நாம் கவனிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்களில், நாம் பேண வேண்டிய முக்கியமான பேச்சுகளில் ஒன்று அல்லாஹ்விற்கு பொருத்தமில்லாததை நாம் பேசிவிடக்கூடாது. ரப்பை கோபப்படுத்தக்கூடிய, ரப்புடைய அதிருப்தியை நம்மீது இறக்கிவிடக்கூடிய எந்த வார்த்தையாலும், எந்த சொல்லாலும் நம்மை படைத்த ரப்பு நம்மீது கோபப்படுவானோ அந்த வார்த்தையை பேசிவிடக் கூடாது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒருமுறை தன்னுடைய மகனார் இப்ராஹீம், அது போன்று இன்னொரு முறை தன்னுடைய மகளின் மகனார் இறந்த நேரத்தில் அவர்களுடைய கண்களிலிருந்து அப்படியே கண்ணீர் ஓடுகிறது. அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் அந்த குழந்தையை மடியில் எடுத்துக்கொண்டு வைத்து இருக்கின்றார்கள். அழுகையினால் அவர்களின் கன்னங்கள் நனைகின்றன. 
 
பக்கத்தில் இருந்த சஹாபாக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களும் முன்னால் அழுதவர்கள்  தான். ஆனால் இஸ்லாம் வந்ததற்கு பிறகு  விதியை நம்பிய பிறகு சோதனைகளில் பொறுமையாக இருக்கவேண்டும் என்பதை அவர்கள் படித்து விட்ட பிறகு அவர்கள் மரண நேரங்களில் அழக் கூடாது என்பதை புரிந்து கொண்டார்கள்.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழுகையை அவர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். நமக்கு பொறுமையை கற்றுக்கொடுத்த நபி, மனம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்த நபி அவர்கள் அழுகிறார்களே! அவர்கள் கேட்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! என்ன இது என்பதாக. 
 
அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள்; இது அல்லாஹ் மனிதர்களுடைய உள்ளத்திலே ஏற்படுத்தியுள்ள கருணை, இரக்கம். 
 
பிறகு சொன்னார்கள்; கண்களிலிருந்து கண்ணீர் வருகின்றன. கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. ஆனால் நமது ரப்பை திருப்திப்படுத்த கூடிய பேச்சை தவிர, சொல்லைத் தவிர, வார்த்தையை தவிர, வேறு எதையும் பேச மாட்டேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அல்லாஹ்விடமே நாம் திரும்ப செல்ல இருக்கிறோம்.
 
ஒருவர் கொஞ்சம் முன்னே செல்வார். அடுத்தவர் பின்னே செல்வார். ஒருவர் நேற்று என்றால் இன்று நம்மில் சிலர். நாளை நம்மில் சிலர். இப்படியாக அந்த வரிசையில் இருந்து கொண்டே இருக்கிறோம். 
 
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى
 
நிச்சயமாக அல்லாஹ் தஆலா எதை எடுத்தாலும் அது அவனுக்கு உரியது. எதைக் கொடுத்தாலும் அதுவும் அவனுக்கு உரியது. எடுப்பதற்கும், கொடுப்பதற்கும் அவன் ஒரு காரணத்தை வைத்து இருக்கிறான். குறிப்பிட்ட தவணையை வைத்திருக்கிறான். (1)
 
அறிவிப்பாளர்: உசாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 1284.
 
காரணங்கள் பல காரணங்களாக இருக்கலாம். நோய் என்ற பொதுவான காரணம். அந்த நோய்களில் பல நோய்கள் இருக்கலாம். மரணம் என்பது ஒரு முடிவு. அந்த முடிவுக்கு அல்லாஹு தஆலா பல காரணங்களை வைத்திருக்கிறான். யாரை, எந்த காரணத்தை கொண்டு தன் பக்கம் அழைக்க வேண்டுமோ, அந்த காரணத்தை கொண்டு அல்லாஹ் தன்பக்கம் அழைத்துக் கொள்கிறான்.
 
நம்பிக்கையாளர்களை பொருத்தவரை அல்லாஹ்வை நம்பிக் கொண்டிருக்கிற காரணத்தால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிற காரணத்தால், ரஹ்மானுக்கு தங்களை அர்ப்பணித்து விட்ட காரணத்தால், அவர்கள் படக்கூடிய கஷ்டங்களை, சோதனைகளை, சிரமங்களை, துன்பங்களை, இன்னல்களை, துயரங்களை, அல்லாஹு தஆலா அவர்களுடைய பாவப் போக்கிகளாக ஆக்கி விடுகின்றான். அவர்களுடைய அந்தஸ்துகளை உயர்த்த கூடிய நன்மைகளாக ஆக்கிவிடுகிறான்.
 
சகோதர்களே! தொழுவது மட்டும் அல்ல நன்மை. நோன்பு வைப்பது மட்டுமல்ல நன்மை. தர்மங்கள் கொடுப்பது மட்டுமல்ல நன்மை. சிரமம், துன்பம், துயரம், சோதனை, கஷ்டம், நோய், பிரச்சினை என்று வரும்போது பொறுமையாக இருந்து அல்லாஹ்வை முன்னோக்கி இருப்பதும் நன்மை.  
 
நம்மில் பலருக்கு தெரிவது கிடையாது. தொழுகை, தர்மத்தை ஹஜ், உம்ராவை நன்மையாக கருதக்கூடிய நாம் பொறுமையை ஒரு அமலாக கருதுவதே இல்லை.
 
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; 
 
الصَّبرُ نصفُ الإيمانِ
 
பொறுமை ஈமானுடைய சமபாதி என்று.
 
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: ஷுஃபுல் ஈமான், எண்: 3180.
 
ஆகவே தான் அல்லாஹ் தஆலா  அவனது கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனிலே,
 
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
 
என்று  ஒன்றுக்கு மேற்பட்ட இடத்திலேயே கூறுகிறான். ஸப்ர் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கிறான். முஃமின்களில் யார் ஸப்ரோடு இருக்கிறாரோ அவர்களோடு அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 2 : 153)
 
ஸப்ர் என்பது விசாலமான ஒன்று. அதை வாழ்க்கையிலே படிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அந்த அல்லாஹ்வை திருப்திப் படுத்தக் கூடிய வார்த்தைகளால் அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நன்றி செலுத்த வேண்டும். இவ்வளவு காலம் எங்களை நிம்மதியாக வாழவைத்தாயே அந்த காலங்களை நினைத்து பார்க்க வேண்டும். 
 
சிலர் சிரமமப்படக்கூடிய இந்த காலத்தை தனது கண்ணுக்கு முன்னால் வைத்துக்கொண்டு, தன்னுடைய கஷ்டத்தை கூறி புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வைக் குறை சொல்வார்கள். அல்லாஹ்வுடைய விதியைக் குறை சொல்வார்கள். இவர்கள் தங்களுடைய உலகத்தையும் இழந்தார்கள். மறுமையையும் இழந்தார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
சகோதரர்களே! இந்த நாவு இருக்கிறதே, இது மிக ஆபத்தான ஒன்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; சோதனையில் எங்களுடைய ரப்பை திருப்திபடுத்தாத எதையும் நான் கூற மாட்டேன் என்று.
 
அல்லாஹ் தஆலா இந்த நாவினால் மனிதன் கூறக்கூடிய அதிருப்தியான வார்த்தையைக் கொண்டு அடியான் மீது கடும் சினம் கொள்கிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
இஸ்ரவேலர்களில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஒருவர் கொஞ்சம் மனக்கவலை ,கொஞ்சம் உலக வாழ்க்கை இப்படியாக உலக வாழ்க்கையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். இன்னொருவரோ ஒரு வணக்கசாலி. எப்போதும் அல்லாஹ்வை வணங்குவது, நன்மைகள் செய்வது, அல்லாஹ்வை முன்னோக்கி இருப்பது, இப்படியாக தன்னை முழுமையாக அல்லாஹ்விற்கு அர்ப்பணித்து கொண்டிருந்தார். 
 
தன்னுடைய சகோதரனை பார்த்து நீ இப்படியாக துன்யாவில் மூழ்கினாயே! இப்படி செய்கிறாயே! என்று அவரை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த சகோதரன் கூறினார். என்னை விட்டு விடு. நீ உன் வேலையை பாரு என்று. இவருக்கு கோபம் வந்துவிட்டது. -நாமும் கூட சிலருக்கு தாவா கொடுக்கும்போது அவர்கள் கூறுவார்கள். அந்த நேரத்திலும் கூட நாம் பொறுமையை இழக்காமல் அழகிய வார்த்தைகளை கொண்டு நாம் அவருக்கு நல்லுபதேசம் செய்ய வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு ஆதாரம்-
 
இவர் என்ன செய்தார்? அதற்கு எப்படி அழகிய முறையில் பதில் சொல்ல முடியுமோ அப்படி அழகிய பதிலை விட்டுவிட்டு அல்லாஹ் மேலே சத்தியமாக சொல்கிறேன். அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான் என்று சொல்லிவிட்டார். நான் இவ்வளவு சொல்கிறேன். இவ்வளவு உனக்கு உபதேசம் செய்கிறேன். நீ புறக்கணிக்கிறாயா? அல்லாஹ் மீது சத்தியமாக சொல்கிறேன் அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான் என்று கூறிவிட்டார் .
 
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் இந்த சம்பவத்தை அறிவித்த பிறகு அல்லாஹ் கூறியதாக சொன்னார்கள்; அவன் சொன்ன அதே நொடியில் அல்லாஹ் அர்ஷின் மேல் பேசினான். யார் அவன்? என் மீது சத்தியம் செய்வது? நான் அவரை மன்னிக்க மாட்டேன் என்று. அவனை மன்னித்து விட்டேன் உன்னை தண்டிக்கிறேன் நரகத்திலே என்பதாக. (2)
 
அறிவிப்பாளர்: ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2621.
 
சகோதரர்களே! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். நம்முடைய வாழ்க்கையிலே, நம்முடைய நாவிலே இருந்து வரக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை.
 
அல்லாஹ்வுடைய தூதர் எச்சரிக்கை செய்தார்கள். சிலர் சில பேச்சுகளை உள்ளத்தில் நாட்டமில்லாமல், அதைப் பற்றி சிந்திக்காமல் பேசி விடுவார்கள். அனால் அதன் காரணமாக அவர்கள் மறுமையில் நரகப் படுகுழியில் விழுவார்கள். (3)
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6478.
 
இந்த உலக வாழ்க்கையில் குறிப்பாக நாம் இப்போது எதிர்கொண்டு இருக்கக்கூடிய இந்த நோய் காலங்களில் நமக்கு மிக மிக பொறுமை தேவை. சகிப்புத்தன்மை தேவை. அல்லாஹ்வை முன்னோக்குதல் தேவை. 
 
வணக்க வழிபாடுகள் ஒரு பக்கம், துஆக்கள் ஒரு பக்கம் இருக்க, அது போன்று நாம் பேண வேண்டிய மற்ற சுகாதார ஆரோக்கியம் பேணுதல் ஒரு பக்கமிருக்க, நம்முடைய நாவைக் கொண்டு அல்லாஹ்வை அதிருப்திப்படுத்தும் கோபப்படுத்தும் பேச்சுகளை நாம் பேசிவிடக் கூடாது. இது என்ன பெரிய சோதனை? இது என்ன பெரிய முஸீபத்? ஏன் இந்த முஸீபத்தை அல்லாஹ் கொடுத்தான்? முஸீபத் என்று சொல்வது தப்பு அல்ல. ஏன் இதை அல்லாஹ் கொடுத்தான்? இது ஏன் எனக்கு வந்து தொலைத்தது? இதனால் எவ்வளவு பெரிய கஷ்டம் பார்? என்று அந்த முஸீபத்தை திட்டுவது.
 
சகோதரர்களே! இந்த முஸீபத்துக்கு என்ன அறிவு அல்லது ஆற்றல் இருக்கிறது? நம்மை வந்து பிடிப்பதற்கு. செய்பவன் யார்? அல்லாஹ். அல்லாஹ் நாடாமல் மரத்திலிருந்து ஒரு இலை கூட உதிராது. பூமியில் ஒரு விதை புதைய வேண்டுமென்றால், அல்லாஹ்வின் நாட்டம் தேவை. பூமியிலே அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டு புதையுண்ட விதை முளைத்து செடியாக வரவேண்டும் என்றால், அல்லாஹ்வுடைய அனுமதி தேவை என்று இருக்கும் போது, அல்லாஹ் இந்த உடலிலே படைத்த இந்த உயிரையே பறிக்கக் கூடிய அளவுக்கு ஒரு நோய் மனிதனுக்கு ஏற்பட வேண்டும் என்றால் அல்லாஹ் நாட்டமில்லாமல் ஏற்படுமா? காரணங்கள் பல காரணங்களாக இருக்கலாம். அல்லாஹ்வுடைய நாட்டம் இல்லாமல் அந்த காரணங்களும் மனிதனுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது. அல்லாஹ் அனுமதித்தால் தவிர.
 
சகோதரர்களே! ஆகவே நம்மில் பலருடைய குடும்பங்களிலே மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம். நம்முடைய சகோதரர்கள் சகோதரிகளுக்கு பல இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு இருக்கலாம். வறுமை ஏற்பட்டு இருக்கலாம். நமக்கு முன் சென்ற வழிகாட்டிகளான நபிமார்கள், அவர்களுடைய வழிவந்த நல்லவர்கள், அவர்களை நம் கண்ணுக்கு முன்னால் வைக்க வேண்டும். 
 
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
 
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்.சகோதரர்களே! இந்த காலகட்டம் என்பது நம்முடைய ஈமான் சோதனை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய அமல்கள் சோதனை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அல்லாஹ்வின் பக்கம் நாம் நெருங்குவதற்கு அல்லாஹ் கொடுத்த சோதனை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த நோயின் மூலமாக இந்த உலகத்திற்கு என்ன நன்மையை நாடி இருக்கிறான் என்று அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 214)
 
யாருக்கு இதை ரஹ்மத்தாக ஆக்கவேண்டும்? யாருக்கு இதை அதாபாக ஆக்கவேண்டும்? யாருடைய பெருமையை, தலைக்கணத்தை, மமதையை, ஆணவத்தை, இதைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதை அல்லாஹ் அறிந்தவன். 
 
ஆகவே அல்லாஹ்வுடைய செயல்களுக்குரிய ஹிக்மத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடவேண்டும். 
 
அல்லாஹ் நம்மீது கடமை ஆக்கியது என்ன? மஸ்ஜிதில் தொழ முடியவில்லையா? வீடுகளில் தொழுகையை அழகாக நிறைவேற்றுவது, குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, தனிமையில் அல்லாஹ்வை வணங்கி இரவு நேரங்களை கழிப்பது. நம்முடைய ஓய்வுகள் அதிகமாக கிடைக்கின்றனவா? நம்மால் முடிந்த அளவு உறவுகளுக்கு, அண்டை வீட்டாருக்கு என்ன நன்மையை செய்ய முடியுமோ அந்த நன்மையை செய்வது. இப்படியாக முஃமினுக்கு நன்மையின் வாசல்கள் விசாலமாக இருக்கின்றன.
 
அறிஞர்கள் சொல்கிறார்கள்; மஸ்ஜிதை செழிப்பாக்க முடியவில்லையா? 
 
وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً
 
அல்லாஹ் மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் கூட்டத்தாருக்கு சொன்னது போன்று உங்களுடைய வீடுகளையே மஸ்ஜிதுகளாக ஆக்கி அதை நீங்கள் செழிப்பாக்குங்கள் என்று. (அல்குர்ஆன் 10 : 87)
 
ஆகவே அல்லாஹ்வுடைய அடியார்களே! நாம் இந்த நேரத்தில் நம்முடைய ஈமானை பாதுகாக்க வேண்டும். நம்முடைய அமல்களை சரிசெய்ய வேண்டும். எல்லோரும் தவ்பா இஸ்திக்ஃபார் செய்து இறைவனின் பக்கம் முன்னோக்கி நம் சகோதர சகோதரிகளுக்காக துஆ செய்யவேண்டும். 
 
யா அல்லாஹ்! எங்களுடைய ஈமானிலே தடுமாற்றத்தை கொடுத்து விடாதே! எங்களது மார்க்கத்தில் எங்களை சோதித்து விடாதே! எங்களது யகீனை உறுதிப்படுத்தி கொடு. சோதனைகளை எல்லாம் இலேசாக்க கூடிய அளவுக்கு எங்களுக்கு இறை நம்பிக்கையில் உறுதியை கொடு. யா அல்லாஹ்! நீ கொடுத்த நிஃமத்தை திடீரென்று எங்களிடமிருந்து பிடித்து விடாதே! நீ ஒரு கூட்டத்திற்கு சோதனையை, கஷ்டத்தை, ஒரு பிரச்சினையை நாடும்போது எங்களை பாதுகாக்கபட்டவர்களாக உன்னிடத்தில் கைப்பற்றிக் கொள்வாயாக.
 
இந்த உலகத்திலே எதை நாம் இழந்தாலும் சரி, ஈமானோடு ஷிர்க் இல்லாமல் இந்த உலகத்தை விட்டு நாம் பிரிந்து விட்டால், நமக்கு எதுவுமே இழப்பு கிடையாது. இஸ்லாமோடு, ஈமானோடு, ஷிர்க்  இல்லாமல் நாம் பிரிந்து விட்டால் அல்லாஹ்வுடைய அன்பும், இரக்கமும், மன்னிப்பும், சொர்க்கமும், நான் இந்த உலகத்தில் அனுபவிக்காத அனைத்தும், இந்த உலகத்தில் நாம் இழந்த அனைத்து நற்பாக்கியங்களுக்கும்,  மிகப்பெரிய ஈடு  மறுமையில் கிடைக்கும்.
 
சகோதரர்களே! இந்த உலகத்தில் ஒரு மனிதன் ஈமானை இழந்துவிட்டு, இந்த உலகத்தின் அனைத்து இன்பங்களையும், ஆசைகளையும், இந்த உலகத்தின் அனைத்து நற்பாக்கியங்களையும் அனுபவித்து விட்டு அவன் உலகத்தை விட்டுப் பிரிந்தால், அவன் எந்த நற்பாக்கியத்தையும் இன்பங்களையும் அனுபவிக்கவில்லை. 
 
காரணம் நரக நெருப்பில் அனுபவிக்கக்கூடிய ஒரு நொடியின் வேதனை உலகத்திலே அவன் அனுபவித்த அத்தனை இன்பங்களையும், அத்தனை நற்பாக்கியங்களையும், அத்தனை சுகங்களையும், அவனுக்கு மறக்க வைத்து விடும். அவன் எதையும் அடைய போவது இல்லை. 
 
ஆகவே அல்லாஹ்விடத்தில் நமக்கு சிறந்த பகரம் இருக்கிறது; நமக்கு சிறந்த ஈடு இருக்கிறது. நாம் இழக்கக்கூடிய ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ்விடத்தில் நமக்கு சிறந்த நன்மை இருக்கிறது என்பதை ஆதரவு வைத்து, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை சரிவர செய்து, அல்லாஹ்வை முன்னோக்கி நன்மைகளை செய்வோமாக! 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா  நம்மிலே யார் இறந்துவிட்டார்களோ, அவர்களுடைய பாவங்களை மன்னித்து கப்ரை பிரகாசமாக ஆக்கி வைப்பானாக! நம்மிலே யாருடைய குடும்பத்தார்கள் இறந்து விட்டார்களோ அந்த குடும்பத்தாருக்கு அல்லாஹு தஆலா அழகிய பொறுமையை கொடுப்பானாக. அவர்களுக்கு அல்லாஹ் தஆலா இம்மை மறுமையின் பாதுகாப்பையும், உலக தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய பாதுகாப்பை தருவானாக! கொடிய நோயிலிருந்து என்னையும், உங்களையும் பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ - قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ» (صحيح البخاري 1284 -)
 
குறிப்பு 2).
 
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، عَنْ مُعْتَمِرِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ جُنْدَبٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَ " أَنَّ رَجُلًا قَالَ: وَاللهِ لَا يَغْفِرُ اللهُ لِفُلَانٍ، وَإِنَّ اللهَ تَعَالَى قَالَ: مَنْ ذَا الَّذِي يَتَأَلَّى عَلَيَّ أَنْ لَا أَغْفِرَ لِفُلَانٍ، فَإِنِّي قَدْ غَفَرْتُ لِفُلَانٍ، وَأَحْبَطْتُ عَمَلَكَ " أَوْ كَمَا قَالَ (صحيح مسلم  - (2621)
 
குறிப்பு 3).
 
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ يَعْني ابْنَ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ» (صحيح البخاري 6478 -)
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/