HOME      Khutba      முஹ்ஸின் யார்? அமர்வு 2-2 | Tamil Bayan - 459   
 

முஹ்ஸின் யார்? அமர்வு 2-2 | Tamil Bayan - 459

           

முஹ்ஸின் யார்? அமர்வு 2-2 | Tamil Bayan - 459


முஹ்ஸின் யார்?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : முஹ்ஸின் யார்? (அமர்வு -2)
 
வரிசை : 459
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 31-03-2017 | 03-07-1438
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ஜும்ஆ உரையின் தொடக்கத்தில் அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டி, அல்லாஹ்வின் மார்க்கத்தை பேணி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசித்து, அல்லாஹ் சுபஹானஹு வதஆலா அவன் கட்டளை இட்டது போன்று, அவனுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றி வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு தஆலா நமது பாவங்களை மன்னித்து, அவனுடைய விருப்பத்தையும், அன்பையும், அவனுடைய மன்னிப்பையும், இம்மை மறுமையின் நன்மைகளையும் நம் அனைவருக்கும் வாரி வழங்குவானாக! ஆமீன். 
 
அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து நடக்கின்ற ஒரு முஸ்லிம், அவனுடைய எண்ணங்கள் எல்லாம், அவனுடைய தேடல்கள் எல்லாம் தன்னுடைய ரப்பாகிய அல்லாஹ்வை திருப்திபடுத்துவதாகத்தான் இருக்க வேண்டும். 
 
ஒரு முஸ்லிம் உடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் தன்னுடைய ரப்பின் பொருத்தத்தை இலக்காக நோக்கமாகவே கொண்டு இருக்க வேண்டும். 
 
நாம் அடிமை, அல்லாஹ் நம்முடைய எஜமானன், அந்த எஜமானன் உடைய பொருத்தத்தை தேடுவதுதான் நம்முடைய வாழ்க்கையாகவே வாழ்க்கையின் குறிக்கோளாகவே வாழ்க்கையின் லட்சியமாகவே இருக்க வேண்டும். 
 
எந்த சொல் அல்லாஹ்விற்கு பிடிக்கும்? எந்த செயல் அல்லாஹ்விற்கு பிடிக்கும்? இப்படியே ஒவ்வொன்றையும் அல்லாஹ்விற்கு பிடித்தமான சொல் செயல்களை தேடிதேடி செய்பவன்தான் அல்லாஹ்வுடைய உண்மையான அடியான். அல்லாஹ்வுடைய விருப்பத்திற்க்காக ஏங்கக்கூடியவன்தான் உண்மையான முஸ்லிம்.
 
அந்த அடிப்படையில் அல்குர்ஆன் உடைய வசனங்களில் நாம் சிந்தித்து பார்க்கும் பொழுது, அல்லாஹ் நேசிக்கின்ற அந்த கூட்டங்களில் அல்முஹ்ஸினீன் என்ற ஒரு கூட்டம் இருக்கிறார்கள். 
 
அல்லாஹு தஆலா அதிகம் நேசிக்கின்ற நன்மக்களில் ஒரு வகை மக்கள் முஹ்ஸின் என்று சொல்லப்படுகிறார்கள். அல்லாஹ் சுபஹானஹு வதலா அல்குர்ஆன் உடைய பல வசனங்களில் சொல்லி காட்டுகின்றான்.
 
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
 
அல்லாஹு தஆலா முஹ்ஸின்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 5 : 13)
 
ஆகவே, அல்லாஹ் நேசிக்கக்கூடிய அந்த முஹ்ஸின்கள் யார்? அவர்களிடத்தில் அப்படி என்ன சிறந்த பண்புகள் இருக்கின்றன? 
 
அவர்களை அல்லாஹ் நேசிக்கின்ற அளவிற்கு நாம் அல்லாஹ்வை நேசிக்கின்றோம். நேசித்து ஆக வேண்டும். அவன் நம்முடைய ரப்பு. நம்மிடத்தில் இருக்கும் எல்லா நிஃமத்துகளும் அல்லாஹ் நமக்கு கொடுத்தது. 
 
அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிக்கின்றான். நம்முடைய துஆக்களை ஏற்கின்றான், நம்முடைய தேவைகளை நினைவேற்றுகின்றான். கண்டிப்பாக நாம் அவனை நேசித்து ஆக வேண்டும். 
 
அல்லாஹ் இந்த வசனங்களில் சொல்லிக்காட்டுகின்றான். அல்லாஹு தஆலா இந்த முஹ்ஸின்களை நேசிக்கிறான் என்பதாக. 
 
அதுமட்டுமா? இந்த முஹ்ஸின்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்று தனது விசேஷமான மஇய்யத் -உடன் இருக்கின்ற தன்மையை அல்லாஹ் சொல்லி காட்டுகின்றான். (அல்குர்ஆன் 29 : 69)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَاصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
 
இன்னும், பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான். (அல்குர்ஆன் 11 : 115)
 
அப்படியென்றால் அல்லாஹ் சுபஹானஹு வதஆலா சொல்லக்கூடிய அந்த முஹ்ஸின்களுடைய பண்பு என்ன? என்று தெரிந்து, அவர்களில் நாமும் ஆக வேண்டும். 
 
அந்த பண்புகளை நாமும் நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தேடல், குறிக்கோள், லட்சியம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும். 
 
இப்படி குர்ஆனுடைய வசனங்களை நாம் எடுத்து பார்க்கும் பொழுது, அல்லாஹு தஆலா இந்த முஹ்ஸின்களுக்கென்றே சில பண்புகளை சொல்கின்றான். அவற்றில் சிலவற்றை நாம் இந்த ஜும்ஆவில் பார்ப்போம்.
 
சூரா ஆலு இம்ரான் 3 -வது அத்தியாயத்தினுடைய 133,134,135 இந்த 3 வசனங்களில் அல்லாஹு தஆலா சில வழிகாட்டுதல்களை சொல்லுகிறான். முஹ்ஸின்களை பற்றிய சில குறிப்புகளை அல்லாஹ் சொல்லுகின்றான். 
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான், 
 
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ (133) الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ (134) وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
 
இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள், செல்வத்திலும் வறுமையிலும் தர்மம் செய்வார்கள்; இன்னும், கோபத்தை மென்றுவிடுவார்கள்; இன்னும், மக்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான். இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 133-135)
 
முஹ்ஸின் என்ற அந்த உத்தமர்கள், நன்மையையே இலக்காக கொண்டு வாழ்பவர்கள், அல்லாஹ்விற்கும் நன்மை செய்வது, அவனுடைய அடியார்களுக்கும் நன்மை செய்வது. 
 
முஹ்ஸின் என்ற வார்த்தையின் ஒரு சுருக்கமான விளக்கத்தை சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் தங்களை படைத்த ரப்புக்கும் நன்மையை நாடுவார்கள். அதுபோன்று தங்களை படைத்த ரப்புடைய அடியார்களுக்கு மிக அழகிய முறையில் நன்மை செய்வார்கள். 
 
முதலாவது விஷயத்தை எடுத்து கொள்ளுங்கள்ல்; அல்லாஹ்வுடைய அடியார்களில் பலர், அல்லாஹ்வை வணங்குகிறார்கள். சிலர், தான் செய்யக்கூடிய இந்த இபாதத்தை கொண்டு அல்லாஹ் சந்தோஷப்பட வேண்டும், என்னுடைய ரப்பு மகிழ்ச்சி அடைய வேண்டும், என்னுடைய ரப்பை திருப்தி படுத்த வேண்டும். என்னுடைய ரப்பை அவனுடைய கண்களை குளிர்ச்சி ஆக்க வேண்டும், இந்த அடிப்படையில் இபாதத்து செய்பவர்கள்.
 
தாஃபியீன்களில் இமாம் அபுமுஸ்லிம் சொல்கிறார்கள்; நபித்தோழர்கள் தெரிந்து கொள்ளட்டும்; அவர்களுக்கு பின்னால் இப்படியும் சில தோழர்களை விட்டு சென்றிருக்கிறார்கள், அவர்களை விட அமலில் எந்த வகையிலும் குறை இல்லாதவர்களை. அந்த நபித்தோழர்களிடத்தில் நாங்களும் போட்டி போடுவோம்.
 
நமக்கு நபியின் தோழமை கிடைக்கவில்லை அவர்களுக்கு நபியின் தோழமை கிடைத்தது. ஆனால், மற்ற அமல்களில் அந்த நபித்தோழர்களை போன்று அமல் செய்வதற்கு நாங்களும் போட்டி போடுவோம். நாளை மறுமையில் அவர்கள் நம்மை பார்த்தால் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்; இந்த உலகத்தில் அவர்களை போன்று அமல் செய்பவர்களையும் இந்த உலகத்தில் அவர்கள் விட்டு சென்றிருக்கிறார்கள் என்று.
 
தாஃபியீன்களுடைய உன்னதமான மேலான எண்ணத்தை சிந்தித்துப் பாருங்கள். நபியின் தோழமை நமக்கு கிடைக்கவில்லையென்றால், அதற்க்காக வருத்தப்படக்கூடிய அந்த நேரத்தில் அந்த நபி நமக்கு போதித்த அமல்கள் இருக்கின்றனவே. எந்த அமல்களை கொண்டு சஹாபாக்கள் அல்லாஹ்வுடைய அன்பையும், நபியின் அன்பையும் பெற்றார்களோ அந்த அமல்கள் இன்றும் இஸ்லாமில் இருக்கின்றனவே. 
 
அந்த அமல்களை செய்து அல்லாஹ்வுடைய அன்பையும் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் தேடுவோம். ஸஹாபாக்களுக்கு போட்டியாக இதைத்தான் அல்லாஹ் சொல்லி காட்டுகின்றான். 
 
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
 
(இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இன்னும், இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். இன்னும், சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9 : 100)
 
அந்த நபித்தோழர்களுடைய உள்ளத்தில் அமலுக்கு என்ன போட்டி அமலுக்கு என்ன ஆசை இருந்ததோ அந்த ஆசை நம்முடைய உள்ளத்திலும் வர வேண்டும்.
 
இங்கே நாம் விளங்க வேண்டும்; அல்லாஹு தஆலா முஹ்ஸின்களுக்கு சொல்லக்கூடிய அடையாளங்களில் முதல் அடையாளம் என்ன? அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அல்லாஹ்வுடைய சொர்க்கத்தையும் தேடித்தரக்கூடிய அந்த அமல்களை செய்வதிலும் எப்போதும் விரைந்து கொண்டே இருப்பார்கள். 
 
ஆகவே, யார் அமல் செய்வதில் சோம்பேறித்தனம் காட்டுகிறார்களோ அவர்கள் ஒரு போதும் இந்த முஹ்ஸின்களுடைய தரத்தை அடையவே முடியாது. 
 
முஹ்ஸின்களுடைய தரம் யாருக்கு உரியது? யார் அல்லாஹ்வுடைய மன்னிப்பை அடைவதற்கும் பிறரை விட வேகமாக முந்துகிறார்களோ அவர்களுக்கு தான் முஹ்ஸின் என்ற பெயர் கிடைக்கும். அவர்கள் தான் அல்லாஹ் விரும்பக்கூடிய, நேசிக்கக்கூடிய முஹ்ஸின்களில் ஆவார்கள். (அல்குர்ஆன் கருத்து 3 : 133)
 
இன்று, நமக்கோ மார்க்க விஷயங்களில் சோம்பேறித்தனம். துன்யா விஷயங்களில் நம்மை விட சுறுசுறுப்பானவர் யாருமே இருக்கமாட்டார்கள். 
 
பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதை பாருங்கள். பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது, தயார் ஆகுங்கள். பரீட்சைக்கு நேரம் ஆகிவிட்டது, பரீட்சையின் காலம் நெருங்கிவிட்டது, படியுங்கள். 
 
இப்படியெல்லாம் இந்த துன்யாவின் விஷயங்களை கொண்டு உற்சாகப்படுத்தி கொண்டே இருப்பார்கள். ஆனால், மார்க்கம் என்று வந்து விட்டால் பிள்ளைகளை அவர்களுடைய போக்கிற்கு விட்டு விடுவார்கள். 
 
அதுபோன்றுதான், நம்முடைய வாழ்க்கையில் உலக லாபம் என்று வந்து விட்டால், அதற்க்காக எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும், எவ்வளவு லாபம் கூடுதலாக கிடைக்கிறதோ அவ்வளவு அதிகமாக உழைப்பை தர தயார்.
 
மார்க்கம் என்று வந்து விட்டால், அந்த மார்க்கத்தில் எவ்வளவு குறைவான அளவை எடுக்க முடியுமோ எதை எடுப்பதால் அதோடு நமக்கு பிரச்சனை முடிந்து விடும். குற்றவாளிகளாக ஆக மாட்டோம் என்று இருக்குமோ அந்த அளவோடு நிறைவேற்றிகொள்வது.
 
இத்தகைய கெட்ட குணத்தை விட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு பாதுகாவல் தேடினார்கள். 
 
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ
 
யா அல்லாஹ்! உன்னுடைய வணக்க வழிபாட்டில் நான் இயலாமையில் ஆகி விடுவதில் இருந்து, உன்னுடைய இபாதத்துகளில் நான் பலவீனப்பட்டு விடுவதில் இருந்து, உன்னுடைய இபாதத்துகளில் நான் சோம்பேறியாக ஆகி விடுவதிலிருந்து உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். (1)
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2823.
 
இதை நாம் மிகவும் தெளிவாக கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று, துன்யாவுடைய விஷயத்தில் உற்சாகமாக இருக்கின்ற நாம், நம்முடைய பயணமாக இருக்கட்டும் அல்லது நம்முடைய வியாபாரம் சம்மந்தமான ஒரு appointment ஆக இருக்கட்டும், அல்லது நம்முடைய மற்றமற்ற உலக அலுவலுக்கு நாம் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம், அதற்கு நாம் காட்டக்கூடிய அந்த முனைப்பும் அதில் நாம் எடுத்து கொள்ளக்கூடிய அந்த தீவிரமும் அல்லாஹ்வுடைய இபாதத்தில் இருக்கிறதா? 
 
யார் துன்யாவிற்கு காட்டக்கூடிய தீவிரத்தை விட முனைப்பை விட தீனுக்கு காட்டுகிறார்களோ அவர்கள் முஹ்ஸின்களில் சேருவார்கள்.
 
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா முஹ்ஸின்களுடைய 2-வது தன்மையாக சொல்லிக்காட்டுகின்றான். 
 
மிக முக்கியமான விஷயம்; இந்த முஹ்ஸின்கள் தங்களுக்கு செல்வம் இருந்தாலும் சரி, தங்களுக்கு வறுமையான நிலை இருந்தாலும் சரி, அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்வதில் இருந்து ஒருக்காலும் தங்களது கைகளை மடக்கி கொள்ளாதவர்கள். அவர்கள் தர்மம் செய்து கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் கருத்து 3 : 134)
 
அல்லாஹு தஆலா வசதியை கொடுத்திருக்கும்போது அதிலிருந்து கொஞ்சத்தை கொடுப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. அதற்கு ஒரு சிறிதளவு ஈமான் இருந்தால் போதுமானது. 
 
ஆனால், தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது, தான் சிரமப்பட்டு கொண்டிருக்கும்போது, தனக்கே அந்த செல்வம் தேவை என்ற நிலையில் இருக்கும்போது, அந்த செல்வத்தை தனது சகோதரனுக்கு கொடுக்கின்றார்களே, ஒரு தேவையுள்ள முஸ்லிமுக்கு கொடுக்கின்றார்கள். 
 
அல்லாஹ் சொல்கிறான்; அவர்கள் முஹ்ஸின்கள், அவர்களை நான் நேசிக்கிறேன் என்று. ஆகவேதான், குர்ஆன் உடைய பல வசனங்களில் அல்லாஹ் சொல்கிறான்;
 
وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ
 
அவர்கள் தங்கள் செல்வத்தின் மீது தங்களுக்கு முழு விருப்பம் இருந்தும் மற்றவர்களுக்கு தர்மம் செய்வார்கள். (அல்குர்ஆன் 2 : 177)
 
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا
 
இன்னும், அவர்கள் உணவை - அதன் பிரியம் (-அதன் தேவை தங்களுக்கு) இருப்பதுடன் - ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிப்பார்கள். (அல்குர்ஆன் 76 : 8)
 
இது ஒரு தர்மமாக இருந்தாலும் கூட, இதற்கும் அல்லாஹ்விடத்தில் நன்மைகள் இருந்தாலும் கூட, இந்த தர்மம் உங்களை முஹ்ஸின்களில் ஆக்கி விடாது. உங்களை முஹ்ஸின்களில் ஆக்க கூடிய தர்மம் எது? 
 
எந்த செல்வத்தின் மீது உங்களுக்கு முழு விருப்பம் இருக்குமோ, எந்த செல்வம் உங்களுக்கு உங்களது வாழ்நாளில் மிக தேவையுள்ளதாக இருக்கிறது என்று நீங்கள் மனதில் எண்ணி வைத்து இருக்கிறீர்களோ, அந்த செல்வத்தை அல்லாஹ்விற்காக கொடுப்பது. 
 
அபூதல்ஹா ஓடி வருகிறார். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! அல்லாஹு தஆலா ஒரு வசனத்தை இறக்கியதாக நான் செவியுற்றேன்.
 
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
 
நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தர்மம் செய்யும் வரை நன்மையை அறவே அடையமாட்டீர்கள். இன்னும், பொருளில் எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 92) 
 
எது உங்களுக்கு பிரியமாக இருக்கிறதோ அதிலிருந்து நீங்கள் தர்மம் செய்யாதவரை நீங்கள் பிர் -நன்மையை அந்த உயர்ந்த தரத்தை அடையவே முடியாது என்று அல்லாஹ் சொல்கிறானே?
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; ஆம். அபூதல்ஹா! அப்படித்தான் அல்லாஹ் சொல்கிறான் என்று சொன்னார்கள். 
 
யா ரஸூலல்லாஹ் இந்த மதீனாவுடைய செல்வந்தர்களிலேயே பெரிய செல்வந்தன் நான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நிறைய தோட்டங்கள் எனக்கு இருக்கின்றன. என்னுடைய தோட்டத்திலேயே எனக்கு மிக விருப்பமான தோட்டம் இதோ இந்த பைருஹா தோட்டம். 
 
பேரீத்தம் பழங்கள் பழுத்து குலுங்க கூடிய அவ்வளவு பெரிய அழகான தோட்டம். பல நூறு பேரீத்தம் மரங்கள் இருக்கக்கூடிய தோட்டம். 
 
யா ரசூலுல்லாஹ்! இந்த தோட்டம் தான் எனக்கு மிக விருப்பமான தோட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லாஹ்விற்காக இன்றிலிருந்து இந்த தோட்டத்தை நான் அல்லாஹுடைய பாதையில் ஸதகாவாக ஆக்கிவிடுகிறேன். 
 
(எப்படிப்பட்ட ஒரு ஈமானிய உணர்வு! நாம் எப்படி எடுத்துக் கொள்வோம். இதற்கு முன்னால் நான் நிறைய செய்திருக்கிறேன், அதில் எனக்கு அது கிடைத்துவிடும். இப்படி மறுமை என்று வரும் பொழுது எவ்வளவு குறுகிய கணக்குகளை போட முடியுமோ அவ்வளவு குறுகிய கணக்குகளை போட்டுகொண்டு இருக்கிறோம்.)
 
அந்த நபித்தோழர் யா ரசூலல்லாஹ்! நான் இதை அல்லாஹுடைய பாதையில் ஸதகாவாக வைத்துவிடுகிறேன். அந்த தோட்டத்தையும் அதன் வருவாயையும் நீங்கள் எங்கு விரும்புகிறீர்களோ அங்கே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; அபூதல்ஹா! இது ரொம்ப பெரிய ஒரு விலை மதிக்க முடியாத, அதிகம் லாபம் தரக்கூடிய ஒரு செல்வம் ஆயிற்றே! 
 
சரி, நான் ஒன்றை சொல்கிறேன், இந்த தோட்டத்தை உனது உறவுகளுக்கு ஸதகா செய்து விடு. 
 
உடனே, அபூதல்ஹா சொன்னார்கள்; யா! ரஸூலல்லாஹ்! என்னுடைய தந்தையின் சகோதரர்கள் சாஜ்ஜா மக்கள் இருக்கிறார்கள். சின்னத்தா பெரியத்தா மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் இதை தர்மமாக கொடுத்து விடுகிறேன் என்று ரஸூலுல்லாஹ் உடைய அதே சபையில் சொல்லி விட்டு சென்றார்கள். (2)
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : எண் : 1461, 2318, 2758, 4554.
 
وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ (24) لِلسَّائِلِ وَالْمَحْرُومِ
 
இன்னும், அவர்களுடைய செல்வங்களில் குறிப்பிட்ட உரிமை உண்டு, யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும். (அல்குர்ஆன் 70 : 25)
 
வசனத்தின் கருத்து : அல்லாஹ்வுடைய பாதையில் தன்னுடைய நெருக்கமான உறவுகள் ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதில் அவர்கள் எப்போதும் முந்திக்கொண்டே இருப்பார்கள். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த செலவளிக்கக்கூடிய, அல்லாஹ் உடைய பாதையில் கொடுக்கக்கூடிய அந்த தன்மையை விரும்புகிறான். 
 
இதை அல்லாஹு தஆலா முஹ்ஸின் உடைய 2 -வது குணமாக சொல்லிக் காட்டுகிறான். முந்திய குணத்தில் இருந்து நாம் புரிந்து கொள்கிறோம்; அல்லாஹுடைய இபாதத்தை மிக அழகிய முறையில் மிக உயர்வாக செய்வார்கள். 
 
2 -வது சொல்லப்பட்ட குணம், அல்லாஹுடைய அடியார்களுக்கு செய்யக்கூடிய உதவியையும் அவர்கள் அழகாக செய்வார்கள். தங்களுக்கு இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, அல்லாஹு தஆலா இப்படிப்பட்ட ஸஹாபாக்களை பார்த்து தான் சொல்கின்றான்:
 
وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
 
தங்களுக்கு (வறுமையும்) கடுமையான தேவை(யும்) இருந்தாலும் தங்களை விட (முஹாஜிர்களைத்தான்) தேர்ந்தெடுப்பார்கள். (-அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.) யார் தனது உள்ளத்தின் கருமித்தனத்தை விட்டும் பாதுகாக்கப்படுவாரோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள். 59 : 9)
 
இதே அபூதல்ஹா ரழியல்லாஹு அன்ஹு, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சபையில் அமர்ந்து இருக்கிறார். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்த விருந்தாளிக்கு உணவுக்காக தன்னுடைய மனைவிமார்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள். 
 
மனைவிமார்களிடமிருந்து பதில் வருகிறது; அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வீட்டில் தண்ணீரை தவிர வேறு எதுவுமே இல்லை. 
 
அன்றைய இரவு 9 மனைவிமார்களிடத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டு அனுப்புகிறார்கள். 
 
அத்தனை மனைவிமார்களும், சொல்லக்கூடிய பதில், தண்ணீரை தவிர வீட்டில் எதுவுமே இல்லை. 
 
இன்றைய காலத்து பெண்களை போன்று கிடையாது. வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்பவர்கள், தங்களை வசதி இருந்தும் வசதி இல்லை என்று சொல்பவர்களை போல அல்ல. 
 
அந்த காலத்தில் பொய் சொன்னால் உடனே வசனம் இறங்கி விடும். மறுத்துப் பேசினால் மாற்றிப் பேசினால் உடனே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் காண்பித்து கொடுத்து விடுவான். 
 
மனைவிமார்கள் சொல்கிறார்கள்; யா ரஸூலுல்லாஹ்! உங்களை சத்திய மார்க்கத்தை கொண்டு அனுப்பிய அல்லாஹ் மீது சத்தியமாக இன்று நமது வீட்டில் தண்ணீரை தவிர எதுவும் இல்லை.
 
மற்ற தோழர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். அபுதல்ஹா தனது மனைவி இடத்தில் வந்தார். இதுபோன்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய விருந்தினருக்கு நாம் உணவு அளிக்க வேண்டும். ஏதாவது இருக்கிறதா?
 
பிள்ளைகளின் உணவு தவிர எதுவும் நம்மிடத்தில் எதுவும் இல்லையே என்று சொன்னவுடன், பரவாயில்லை ஏதாவது பாசாங்கு காட்டி பிள்ளைகளை தூங்க வைத்து விடு. விருந்தாளியை அழைத்து வருகிறேன். விளக்கை சரி செய்வது போன்று விளக்கையும் அணைத்து விடு. நாமும் சாப்பிடுவது போன்று பாசாங்கு செய்வோம். விருந்தினர் நல்ல முறையில் சாப்பிட்டு செல்லட்டும். 
 
அதுபோன்றே நடக்கிறது. அன்றைய காலை சுபுஹு தொழுகைக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சபையில் அபுதல்ஹா வருகிறார்கள். ரஸூலுல்லாஹ் சிரிக்கிறார்கள். 
 
கேட்கிறார்கள்; யா ரஸூலுல்லாஹ்! உங்களது சிரிப்பின் காரணம் என்ன? சொல்லுகிறார்கள், அபுதல்ஹா! அல்லாஹ் உங்களது செயலை பார்த்து சிரித்து விட்டான். எனது விருந்தாளியை அழைத்து சென்று, உங்களது வீட்டில் நீங்கள் நடந்து கொண்டீர்களே! அதை பார்த்து அல்லாஹ் சிரித்து விட்டான்.
 
உங்களை போற்றி அல்லாஹு தஆலா வசனத்தை இறக்கி விட்டான். அபூதல்ஹாவுக்காக இவ்வளவு பெரிய நீண்ட வசனத்தை இறக்கினான். இந்த அன்சாரி யார்? தங்களுக்கு தேவை இருந்தாலும் தங்களது தேவையை விட அந்த முஹாஜிர்களின் தேவைகளுக்கு தான் இவர்கள் முன்னுரிமை, முக்கியத்துவம் தருவார்கள். தங்களுக்கு வறுமை இருந்தாலும் சரி. அந்த வறுமையை பார்க்கிலும் தங்களது முஹாஜிர்களுடைய தேவைகளையே அவர்கள் தேர்ந்தெடுத்து கொள்வார்கள். (3)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3798.
 
இந்த இடத்தில் நாம், அந்த ஸஃது இப்னு ரபீஃ யையும் கொஞ்சம் நினைத்து பார்ப்போம். ஒருவன் எதை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கலாம். எதை வேண்டுமானாலும் பங்கு போட தயாராக இருக்கலாம். தன்னுடைய மனைவியை விட்டு கொடுக்க முடியுமா? 
 
அன்போடு பாசத்தோடு விரும்பி திருமணம் முடித்து இருக்கின்ற அந்த மனைவியை, அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்விற்காக தலாக் விட்டு, அதை முஹாஜிரான தனது சகோதரனுக்கு மணம் முடித்து வைக்கக்கூடிய அளவுக்கு அவர்களுடைய அந்த ஈகை குணம், விட்டு கொடுக்கக்கூடிய குணம் உயர்ந்து இருந்தது. 
 
ஸஃது இப்னு ரபீஃ, அப்துர் ரஹ்மானை அழைத்துச் செல்கிறார். எல்லா செல்வத்தையும் அவருக்கு முன்னால் எதோ ஒரு கணக்கு கொடுப்பது போன்று சொல்லிக் காட்டுகிறார். என்னிடத்தில் எனக்கு இங்கே செல்வம் இருக்கிறது. இந்த தோட்டத்தில் இவ்வளவு செல்வம் இருக்கிறது. வியாபாரத்தில் இவ்வளவு முதலீடு இருக்கிறது. இவற்றில் எல்லாவற்றிலும் பாதியை நான் உனக்கு தருகிறேன் என்று சொல்கிறார். 
 
அதுமட்டுமில்லை, தனது மனைவிமார்கள் இருவரை வீட்டில் இருந்து அழைக்கிறார். இருவரும் வருகிறார்கள், இதோ பார்! எனக்கு அல்லாஹ் இரண்டு மனைவிகளை கொடுத்து இருக்கின்றான். இந்த இருவரில் உனக்கு யாரை பிடிக்கிறதோ அவளை நான் தலாக் விட்டு விடுகிறேன். இத்தா முடிந்தவுடன், நீ அவளை திருமணம் செய்து கொள்ளலாம். (4)
 
அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2048.
 
அல்லாஹ்விடத்தில் அந்த முஹ்ஸின் என்ற அந்த உயர்ந்த தரத்தை அடைய வேண்டும் என்றால், அல்லாஹ்விற்க்காக நாம் விரும்பியதை இழக்காதவரை, நாம் விரும்பியதை விட்டுக்கொடுக்காதவரை அடைய முடியாது. 
 
இந்த உலகத்தில் நாம் ஒரு பெரிய பதவிக்காக அல்லது பெரிய ஒரு படிப்பிற்க்காக, ஒரு பெரிய செல்வத்திற்காக, தகுதிக்காக எத்தனையோ விஷயங்களை தியாகம் செய்கிறோம்.
 
எந்த தேவைக்காக நாம் ஒன்றை இழந்தோமோ, அந்த தேவையையும் நாம் அதிவிரைவிலேயே இழக்கத்தான் போகிறோம். ஒரு மனிதன் பதவிக்காக ஒன்றை இழக்கிறான். அப்போ பதவி என்ன அவனுக்கு நிரந்தரமானதா? இந்த உலகத்திற்க்காக நாம் எதை இழந்தாலும் அந்த உலகமும் நம்முடைய மரணத்தோடு முடிந்து விடும். 
 
நாம் எதற்காக இழந்தோமோ, எதை இழந்தோமோ அதையும் ஏற்கனவே நாம் இழந்து விட்டோம். இரண்டையும் நாம் இழக்கத்தான் போகிறோம்.
 
மறுமைக்காக அல்லாஹ்வுடைய அன்பிற்காக அவன் பொருத்தத்திற்க்காக ஒன்றை நாம் இழக்கும் போது, இந்த உலகத்தில் எதை நாம் இழக்கிறோமோ அதை விட சிறந்ததை பன்மடங்காக அல்லாஹ் நமக்கு கொடுப்பான். மறுமையிலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சிறந்ததை கொடுப்பான். 
 
சான்றோர்  கூற்று - உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹு
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களுடைய ஸஹாபாக்களுக்கும் அல்லாஹ் கொடுத்த நிஃமத்துகளை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 
 
அல்லாஹு தஆலா அவர்களுக்கு மதினாவை கொடுத்தான், ஆட்சியைக் கொடுத்தான், உலக செல்வத்தை கொடுத்தான். இன்னும் எத்தனையோ நிஃமத்துகளை கொடுத்து அல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்தினான். 
 
அவர்கள் அல்லாஹ்விற்க்காக தூய்மையான எண்ணத்தோடு எதையும் இழக்க தயாரானார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு கொடுத்ததிலும் பரக்கத் செய்தான். அவர்களிடத்திலிருந்து எது எடுக்கப்பட்டதோ அதிலும் பரக்கத் செய்யப்பட்டது. நாளை மறுமையுடைய கூலியோ அவர்களுக்கு மிக மகத்தானது.
 
ஆகவே, இந்த 2 -வது தன்மையை நாம் நமது வாழ்க்கையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ்விற்காக அல்லாஹ்வுடைய பாதையில் கொடுக்கக்கூடிய அந்த குணம் எந்தளவு நாம் அதிகப்படுத்துவோமோ அந்த இஹ்சான் என்ற தன்மை நம்மிடத்தில் வரும். அந்த முஹ்ஸின் என்ற நல்லவர்களின் கூட்டத்தில் நாம் சேர முடியும். 
 
நஃப்ஸ் -நம்முடைய உள்ளம், இது எப்போதுமே கொடுப்பதற்கு விரும்பாது, வாங்குவதற்குதான் விரும்பும். நஃப்ஸ்- அதனுடைய இயற்கை தன்மையே ஒரு கஞ்சத்தனத்தின் மீதே அமைக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆகவேதான், அல்லாஹ் சொல்கிறான்; யார் தனது நஃப்ஸுடைய கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டாரோ அவர் வெற்றி அடைந்து விட்டார். 
 
நஃப்ஸ் சொல்லும்; கொடுக்காதே, கொஞ்சம் கொடுத்தால் போதும். இப்பவே கொடுக்கணுமா, நாளைக்கு கொடுக்கலாமே, அப்புறமா கொடுக்கலாமே என்பதாக நப்ஸ் நமக்கு எப்போதும் கருமித்தனத்தை தூண்டிக்கொண்டே இருக்கும்.
 
அப்படி அந்த நஃப்ஸ் தூண்டக்கூடிய கருமித்தனத்திற்கு கட்டுப்பட்டு விட்டால், அந்த மனிதனை விட உள்ளத்தால் நெருக்கடி உள்ளவன் யாரும் இருக்க முடியாது. 
 
அல்லாஹ்வுடைய பாதையில் கொடுக்க கொடுக்க நம்முடைய உள்ளம் விரிந்து கொண்டே போகும். அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கக்கூடியவரின் உள்ளம் விசாலமாக இருக்கும். 
 
அவர்களது மனம் மிகவும் திருப்தியாக இருக்கும். தர்மம் செய்யாத உறவுகளுக்கு ஏழைகளுக்கு கொடுக்காத செல்வந்தர்களை பாருங்கள், அவர்கள் எப்போதும் நெருக்கடியில் மன உளைச்சலிலேயே இருப்பார்கள். 
 
இதைதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஸஹீஹான ஹதீஸ் நமக்கு மிக அழகாக தெளிவுபடுத்துகிறது. 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்யக்கூடியவருக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்யாதவருக்கும் உதாரணம் என்னவென்றால், ஒரு மனிதன் உடைய முழு உடலும், மிகவும் இறுக்கமான இரும்பு கவச உடையால் நெருக்கமாக அப்படியே கட்டப்பட்டிருக்கிறது. 
 
ஆங்காங்கே ஆணிகளால் கவச இரும்பு ஆடை அவனை பின்னிப்பிணைந்து இருக்கிறது. அவன் அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்ய செய்ய அந்த ஆணிகள் ஒவ்வொன்றாக கழன்று அவனை சிரமப்படுத்திக் கொண்டிருந்த அந்த இரும்பு ஆடை ஒவ்வொன்றாக விலகி விலகி அவன் சுதந்திரம் அடைந்து விடுகிறான். ராஹத்தை பெற்று விடுகிறான்.
 
எவன் ஒருவன் தன்னுடைய செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் அந்த தேவை வரும் பொழுது செலவழிக்காமல் இருக்கிறானோ, அவனுக்கு ஏற்கனவே நெருக்கமாக்கி கொண்டிருந்த ஆடையானது மேலும் மேலும் அவனை இறுக்கமாக்கி கொண்டே செல்கிறது. (5)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5797.
 
அதுதான், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்யக்கூடியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்யத்தவர்களுக்கும் உள்ள உதாரணம். 
 
ஆகவே, அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நமக்கு செல்வத்தை கொடுத்து, அதில் ஹலால் ஆனதைக் கொண்டு அதில் ஒரு சிறிய அளவைக் கொண்டு நாமும் பயன் பெறுவதற்க்காக, அதைபோன்று அந்த செல்வத்தை பிறருக்கு கொடுப்பதற்க்காக அல்லாஹ் நமக்கு கொடுத்து இருக்கிறான்.
 
நாம் உங்களுக்கு கொடுத்ததிலிருந்து நீங்கள் தர்மம் செய்து கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 2 : 254)
 
தர்மம் என்பது ஒரு முஃமினுக்கு ஒரு நேரத்தில் செய்து முடித்துவிட்டு, அடுத்த நேரத்தில் இல்லை என்பதில்லை. 
 
அதாவது, இந்த மாதம் தர்மம் செய்தோம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் தர்மம் செய்ய மாட்டோம். அப்படியல்ல. 
 
ஒரு முஃமினுடைய வாழ்க்கையில் இரவு பகல் என்று தர்மம் கலந்திருக்கும். அல்லாஹ் சொல்கிறான்:
 
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
 
எவர்கள் தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 274)
 
அல்லாஹு தஆலா ஒரு முஃமினுடைய தர்மத்திற்கு உண்டான விளக்கத்தை சொல்லும் பொழுது, இரவு பகல், தனிமை, சபை என்று பார்க்காமல் அவன் தர்மம் செய்து கொண்டே இருப்பான். 
 
மேலும், அல்லாஹ் சொல்கிறான்:
 
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
 
தர்மங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் அவை நன்றே. அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ஏழைகளுக்குத் தந்தால் அதுவும் உங்களுக்குச் சிறந்ததுதான். இன்னும், உங்கள் பாவங்களில் (அல்லாஹ் நாடிய) சிலவற்றை உங்களை விட்டு போக்கிவிடுவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 271)
 
இப்படி, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு நன்மை செய்வது. அதுவும் சாதாரணமான வகையில் அல்ல, மிக சிறந்த முறையில் நன்மை செய்வது. அவர்களை அல்லாஹு தஆலா முஹ்ஸின்கள் என்று சொல்கிறான். 
 
அடுத்து 3 -வதாக முஹ்ஸின்களுடைய குணத்தில் அல்லாஹ் மிக முக்கியமாக சொல்வது, இந்த முஹ்ஸின்கள் தங்களது உள்ளத்தில் மன்னிப்பின் வாசலை மிக விசாலமாக திறந்து வைத்திருப்பார்கள். மக்களை மன்னித்து கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் 3 : 134)
 
சாதாரணமான விஷயமா இது. சொல்வதற்கு லேசாக இருக்கலாம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«يَا عُقْبَةُ بْنَ عَامِرٍ، صِلْ مَنْ قَطَعَكَ، وَأَعْطِ مَنْ حَرَمَكَ، وَاعْفُ عَمَّنْ ظَلَمَكَ»
 
உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்து விடு. உனக்கு கெடுதி செய்தவர்களுக்கு இஹ்ஸான் -நன்மை செய். உனது உறவை துண்டித்தாரே அவரோடு நீ சேர்ந்து வாழு. 
 
அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 17334, 17452.
 
எவ்வளவு உயர்ந்த குணத்தை சொல்கின்றார்கள்! அல்லாஹ் நேசிக்கக்கூடிய அளவுக்கு உள்ளம் பண்பட்டவர்கள் என்றால், அது சாதாரணமான விஷயமா? ரப்புல் ஆலமீன் அர்ஷ் உடைய இறைவன் அந்த கூட்டத்தை நேசிக்கிறான் என்றால், அந்த ரப்புடைய ஸிஃபத்துகளில் ஒன்று தான் மன்னிப்பது.
 
அல்லாஹு தஆலா மிக விசாலமாக மன்னிப்பாளன். அல்லாஹு தஆலா தனது பண்பை பற்றி சொல்லும் பொழுது (காஃபிர்) என்று சொல்கிறான். (கஃபூர்) என்று சொல்கிறான். (கஃப்பார்) என்று சொல்கிறான். (வாஸியுல் மஃக்பிறா) என்று சொல்கிறான். (அஃபுவ்வுன்) என்று சொல்கிறான். 
 
இப்படி மன்னிப்புக்குள் அத்தனை பெயர்களையும் அல்லாஹ் தனக்கு சேர்த்து கொள்வதில் பெருமைப்படுகிறான். 
 
இன்னும் பல இடங்களில் அல்லாஹ் கேட்கிறான்:
 
أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். (அல்குர்ஆன் 24 : 22)
 
அவர் நமக்கு செய்த தவறுக்காக நாம் பிறரை மன்னிக்கும் போது நாம் அல்லாஹ்வுக்கு செய்த தவறுக்காக அல்லாஹ் நம்மை மன்னிக்க மிக நெருக்கமாகி விடுகின்றோம். 
 
நாம் அல்லாஹ்விற்கு எத்தனை தவறுகளை செய்து இருக்கிறோம். நாம் செய்யாத பாவங்களா? நாம் செய்யாத தீமைகளா? அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மன்னிப்பானாக! 
 
நம்முடைய பாவங்கள் மன்னிக்க வேண்டுமா? அல்லாஹ் சொல்கிறான்; உன் சகோதரன் உனக்கு செய்த துரோகங்களை, அநியாயங்களை மன்னித்து விடு. 
 
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் சொல்லி காட்டினார்கள். உனக்கு யார் தீங்கு செய்தார்களோ அவர்களை நீ மன்னித்து விடு. 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். பொதுவாக இதை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இதற்காக ஒரு முறையான பயிற்சி எங்கிருந்து வர வேண்டுமென்றால், குடும்பத்திலிருந்து வர வேண்டும். 
 
எந்த ஒரு நற்குணமாக இருக்கட்டும், எந்த நற்குணம் குடும்பத்தில் பிறக்க வில்லையோ அது சமூகத்தில் உருவெடுக்க முடியாது. 
 
உதாரணத்திற்கு, கணவன், மனைவியை மன்னிப்பது, மனைவி கணவனை மன்னிப்பது, சகோதரர்கள் சகோதரிகளை மன்னிப்பது. இப்படிப்பட்ட மன்னிப்பின் மனப்பக்குவம் குடும்பத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும். 
 
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும். இன்று, பெரும்பாலும் நம்முடைய குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு மத்தியில், உடன் பிறப்புகளுக்கு மத்தியில் அவ்வளவு போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள், கோபதாபங்கள் ஏற்படுகின்றன.
 
காரணம், பெற்றோர்கள் அங்கே அவர்களை முறைப்படுத்தவில்லை. சகோதரர்கள் தங்களுக்கு மத்தியில் கோபதாபங்களை பகைமையை வெளிப்படுத்தும் போது, அங்கே பெற்றோர்கள் மன்னிப்பிற்க்கான வழிகாட்டுதலை அவர்களுக்கு தர வேண்டும். உன் சகோதரனை மன்னித்து விடு. அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக! என்று பண்படுத்த வேண்டும்.
 
ஆனால், பெரும்பாலான வீடுகளில் பகைமையின் தீ பெற்றோர்களாலேயே மூட்டப்படுகிறது. 
 
இப்படி குடும்பத்தில் சகிப்பற்ற தன்மை, மன்னிப்பற்ற தன்மை உருவாகி, அது சமூகமெல்லாம் பரவி இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ் மன்னிப்பானாக!
 
ஆகவேதான், அல்லாஹ்வுடை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு முஸ்லிம் உடைய குடும்பத்தின் உருவாக்கத்தை மன்னிப்பின் மீது அமைத்தார்கள். 
 
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا (23) وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
 
மேலும், (நபியே!) உம் இறைவன் (உமக்கும் உமது சமுதாயத்திற்கும்) கட்டளையிடுகிறான்: “அவனைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்காதீர்கள்; இன்னும், பெற்றோருக்கு நல்லுபகாரம் புரியுங்கள்!” (மனிதனே!) உன்னிடம் அவ்விருவர்களில் ஒருவர்; அல்லது, அவர்கள் இருவரும் முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் (உதாசினப்படுத்தி) ‘ச்சீ’ என்று சொல்லாதே; இன்னும், அவ்விருவரையும் அதட்டாதே; இன்னும், அவ்விருவரிடமும் மிக கண்ணியமாக பேசு. இன்னும், அவர்களுக்கு முன் கருணையுடன் பணிவாக நடந்துகொள்! இன்னும், “என் இறைவா! நான் சிறியவனாக இருக்கும்போது என்னை அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி!” என்று கூறு! (அல்குர்ஆன் 17 : 23,24)
 
முதலாவதாக, பிள்ளைகள் பெற்றோர்களுக்கு இஹ்ஸான் செய்வது. பெற்றோர்களுடைய குறைகளை மன்னிப்பது. பெற்றோர்கள் தங்களுக்கு செய்த தவறுகளை மன்னிப்பது. அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்வது. அவர்களுக்கு முன்னால் பணிவாக நடப்பது. 
 
இப்படிப்பட்ட ஒரு குணம் நம்மிடத்தில் மிக முக்கிய தேவை. முதலாவதாக அல்லாஹ்விற்காக, அல்லாஹ்விடத்தில் இஹ்ஸான் என்ற தன்மையை அடைவதற்காக, பிறகு 2 -வதாக யார் இந்த குணத்தை உடையவர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் மீது அன்பை அல்லாஹ் சுபஹானஹு வதஆலா அவனது அடியார்களுடைய உள்ளங்களிலும் ஏற்படுத்தி விடுகிறான்.
 
இன்னும் இது குறித்து நிறைய விளக்கங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி இருக்கிறார்கள். மக்களை மன்னிப்பது, மக்களின் தவறுகளை மன்னிப்பது. அவர்களுடைய குற்றங்களை மன்னிப்பது என்பது இஸ்லாமுடைய மார்க்கத்தில் மிக உயர்ந்த ஒரு பண்பு. 
 
நன்மை செய்தவர்களுக்கு நம்மை செய்வதல்ல. தனக்கு தீங்கு இழைத்தவர்களுக்கும் நன்மை செய்வது.
 
அதைத்தான் அல்லாஹ்வுடைய மார்க்கம் சொல்லிக்காட்டுகிறது. உன்னோடு யார் பகைமையோடு நடந்து கொள்கிறார்களோ, உனக்கு யார் தீங்கு செய்கிறார்களோ, அவர்களோடு இஹ்ஸான் உடன் நடந்துகொள். மிக அழகியதை கொண்டு நீ அதை தடுத்துக்கொள். அப்போது உனக்கு பகைவனாக இருப்பவனும் உனக்கு நெருங்கிய நண்பனாக ஆகி விடுவான். 
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ
 
நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு (தீமையை) தடுப்பீராக! அப்போது உமக்கும் எவர் ஒருவருக்கும் இடையில் பகைமை இருக்கிறதோ அவர் ஓர் நெருக்கமான உறவுக்காரரைப்போல் ஆகிவிடுவார். (அல்குர்ஆன் 41 : 34)
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அத்தகைய குணத்தை எனக்கும் உங்களுக்கும் தருவானாக! இப்படி இன்னும் பல பண்புகளை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம்.
 
ஆகவே, அல்லாஹ் எந்த பண்பை விரும்புகிறானோ, அந்த பண்பு நம்மிடத்தில் வர வேண்டும். அல்லாஹ் எந்த கூட்டத்தை நேசிக்கிறானோ, அந்த கூட்டத்தில் நான் இருக்க வேண்டும் என்று நம்முடைய வாழ்க்கையில் ஒரு முயற்சியை செய்ய வேண்டும். 
 
அந்த அடிப்படைகளில் ஒன்று தான், அல்லாஹ் விரும்புகின்ற அந்த நல்ல கூட்டத்தார்களில் முஹ்ஸின் என்ற கூட்டத்தார்கள். 
 
அவர்களுடைய நல்ல பண்புகளை அல்லாஹ் சூரா ஆல இம்ரானுடைய 133,134,135 ஆகிய வசனங்களில் சொல்லி காட்டுகின்றான். இந்த வசனங்களில் 3 பண்புகளை அல்லாஹ் சொல்கின்றான். 
 
ஒன்று, அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய இபாதத்துகளை மிக அழகிய முறையில் செய்வது, அதிலும் சுறுசுறுப்பாக, விரைந்து செய்வது, ஆர்வத்தோடு செய்வது. 2 -வது அல்லாஹ்வுடைய பாதையில் ஏழை எளியவர்களுக்கு எல்லா நிலைகளிலும் தர்மம் செய்வது. 3 -வது மக்களுடைய தவறுகளை குற்றங்களை மன்னித்து வாழ்வது.
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் அனைவருக்கும் இத்தகைய உயர்ந்த நற்பண்புகளை நிறைவாக தருவானாக! அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து, அல்லாஹ் விரும்பக்கூடிய நல்ல கூட்டத்தார்களில் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، وَالجُبْنِ وَالهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»  (صحيح البخاري- 2823)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ [ص:120] سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ، وَكَانَ أَحَبُّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُحَاءَ، وَكَانَتْ مُسْتَقْبِلَةَ المَسْجِدِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ، قَالَ أَنَسٌ: فَلَمَّا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ: {لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُحَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ، أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَخٍ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ» فَقَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ، تَابَعَهُ رَوْحٌ، وَقَالَ يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْمَاعِيلُ: عَنْ مَالِكٍ «رَايِحٌ» (صحيح البخاري- 1461)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ: مَا مَعَنَا إِلَّا المَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا»، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: أَنَا، فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ: أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي، فَقَالَ: هَيِّئِي طَعَامَكِ، وَأَصْبِحِي سِرَاجَكِ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً، فَهَيَّأَتْ طَعَامَهَا، وَأَصْبَحَتْ سِرَاجَهَا، وَنَوَّمَتْ صِبْيَانَهَا، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ، فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلاَنِ، فَبَاتَا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ، أَوْ عَجِبَ، مِنْ فَعَالِكُمَا» فَأَنْزَلَ اللَّهُ: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ المُفْلِحُونَ} [الحشر: 9] (صحيح البخاري- 3798)
 
குறிப்பு 4)
 
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمَّا قَدِمْنَا المَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ: إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالًا، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَيَّ [ص:53] زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ، تَزَوَّجْتَهَا، قَالَ: فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ: لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ؟ قَالَ: سُوقُ قَيْنُقَاعٍ، قَالَ: فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ، فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ، قَالَ: ثُمَّ تَابَعَ الغُدُوَّ، فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجْتَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: «وَمَنْ؟»، قَالَ: امْرَأَةً مِنَ الأَنْصَارِ، قَالَ: «كَمْ سُقْتَ؟»، قَالَ: زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ - أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ -، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ» (صحيح البخاري- 2048)
 
குறிப்பு 5)
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنْ الحَسَنِ، عَنْ طَاوُسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلَ البَخِيلِ وَالمُتَصَدِّقِ، كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطُرَّتْ أَيْدِيهِمَا إِلَى ثُدِيِّهِمَا وَتَرَاقِيهِمَا، فَجَعَلَ المُتَصَدِّقُ كُلَّمَا تَصَدَّقَ بِصَدَقَةٍ انْبَسَطَتْ عَنْهُ، حَتَّى تَغْشَى أَنَامِلَهُ وَتَعْفُوَ أَثَرَهُ، وَجَعَلَ البَخِيلُ كُلَّمَا هَمَّ بِصَدَقَةٍ قَلَصَتْ، وَأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ بِمَكَانِهَا» قَالَ أَبُو هُرَيْرَةَ: فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِإِصْبَعِهِ «هَكَذَا فِي جَيْبِهِ، فَلَوْ رَأَيْتَهُ يُوَسِّعُهَا وَلاَ تَتَوَسَّعُ» تَابَعَهُ ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، وَأَبُو الزِّنَادِ، عَنْ الأَعْرَجِ: «فِي الجُبَّتَيْنِ» وَقَالَ حَنْظَلَةُ: سَمِعْتُ طَاوُسًا: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «جُبَّتَانِ» وَقَالَ جَعْفَرُ بْنُ حَيَّانَ، عَنْ الأَعْرَجِ: «جُبَّتَانِ» (صحيح البخاري- 5797)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/