HOME      Khutba      நானும் பொருப்பாளனே| Tamil Bayan - 453   
 

நானும் பொருப்பாளனே| Tamil Bayan - 453

           

நானும் பொருப்பாளனே| Tamil Bayan - 453


நானும் பொறுப்பாளனே!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : நானும் பொறுப்பாளனே!
 
வரிசை : 453
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 01-08-2014 | 05-10-1435
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் நம்மீது பேரருள் புரிந்திருக்கிறான், நம்மை எல்லாம் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களாக அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஃமின்களாக ஆக்கியிருப்பதோடு, அல்லாஹ்வை வணக்க வழிபாடு செய்யக்கூடிய நல்ல வாய்ப்பையும் நமக்கு தந்திருக்கிறான்.
 
ஈமான் -இறை நம்பிக்கைக்கு பிறகு இஸ்லாம் என்ற மார்க்கத்திற்கு பிறகு, இந்த உலகத்தில் ஒரு இறையருள் நமக்கு பெரிதாக மிக மகத்துவமாக மதிக்கப்பட வேண்டிய ஒன்று இருக்குமென்றால், அது ஒரு மனிதன் நன்மைகள் செய்வதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதற்குரிய வாய்ப்பை பெறுவது தான்.
 
பொதுவாக நாம் என்ன புரிந்து வைத்திருக்கிறோம் என்றால், இந்த உலகத்தில் செல்வத்தோடு வாழ்வது, உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வது, இந்த உலக வாழ்வில் நல்ல ஒரு தொழிலில் அல்லது ஒரு நல்ல வேலையில் நல்ல ஒரு பதவியில் வாழ்வது, ஒரு பெரிய அருளாக இறைவனின் பெரிய அருட்கொடையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். 
 
ஆம், கண்டிப்பாக சந்தேகமில்லை. இந்த உலகத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய மன மகிழ்ச்சிகள் அனைத்தும், அது எதன் மூலமாக கிடைத்தாலும் சரி, அவை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு கிடைத்த அருள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
உங்களிடம் இருக்கக்கூடிய எல்லா அருட்கொடைகளும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு வழங்கப்பட்டதுதான், அல்லாஹ்தான் உங்களுக்கு கொடுத்திருக்கிறான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
 
ஆனால், இந்த உலகத்திலேயே எந்த ஒரு மனிதனும் உயர்ந்த பதவிகள் இல்லாமல் வாழ்வதால், சிறந்த வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதால், உடல் ஆரோக்கியம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதால், நாளை இவருடைய மறுமை வாழ்க்கை கேள்விக்குரியதாக நஷ்டத்திற்கு உரியதாக ஆகிவிடாது.
 
ஆனால், இந்த உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் இபாதத்கள் இல்லாமல் வாழ்ந்து விட்டால், அல்லாஹ்வை வணங்குவதற்காக அதற்குரிய வாய்ப்பை அவன் சேராமல் அவன் வாழ்ந்து விட்டால், அல்லாஹ்விற்கு முன்னால் ஸுஜூது செய்வதற்குரிய வாய்ப்பை பெறாமல் அவன் வாழ்ந்து விட்டால், நாளை மறுமையில் அவன் அடையக்கூடிய கேவலம் இன்னல்கள் துன்பங்கள் இந்த உலகத்தில் மனிதனால் சொல்லி முடிக்க முடியாது.
 
يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ (42) خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ
 
கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
 
அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.) (அல்குர்ஆன் 68 : 42,43)
 
வசனத்தின் கருத்து : நாளை மறுமையில் மஹ்ஷருடைய ஒரு காட்சியை அல்லாஹு தஆலா நமக்கு விவரித்துச் சொல்கிறான். அல்லாஹு ரப்புல் ஆலமீன் நாளை மஹ்ஷரில் அவனுடைய அடியார்களுக்கு முன்பாக ஒரு காட்சி தருவான். தன்னுடைய கண்ணியத்திற்குரிய உருவத்தை தனது அடியார்களுக்கு காட்டுவான்.
 
அப்பொழுது அந்த அடியார்களைப் பார்த்து கேட்பான்; நான் தான் உங்களுடைய இறைவன் என்பதாக. அப்பொழுது அந்த அடியார்கள் சொல்வார்கள்; எங்களுக்கும் எங்களுடைய இறைவனுக்கும் இடையில் அல்குர்ஆனில் வர்ணிக்கப்பட்ட ஒரு அடையாளம் இருக்கிறது.
 
அந்த அடையாளத்தைக் கொண்டு நாங்கள் எங்கள் இறைவனை அறிந்து கொள்வோம், என்று சொல்லும்பொழுது, ஸஹீஹ் புகாரியில் வரக்கூடிய அறிவிப்பு கிதாபுத் தவ்ஹீத் என்ற இறுதி பாடத்தில் நீங்கள் படித்தால், இந்த ஹதீஸ் நீண்ட விவரத்தோடு வருவதை காணலாம்.
 
 «يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا»
 
அப்போது அல்லாஹ் சொல்வான், ஆம்! அந்த அடையாளத்தை நான் உங்களுக்கு காட்டப் போகிறேன் என்று தனது காலில் பிற்பகுதியில் இருந்து கெண்டைக்காலில் இருந்து தனது ஒளியின் திரையை அகற்றுவான். 
 
அல்லாஹ்வுடைய கெண்டைக்காலில் இருந்து அந்த திரையை அகற்றும் பொழுது வரக்கூடிய அந்த ஒளிக்கு முன்னால் யாரெல்லாம் ஈமானோடு இக்லாஸோடு இந்த துனியாவில் வணங்கிக் கொண்டிருந்தார்களோ அல்லாஹ்வை இபாதத் செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லாம் அப்படியே அல்லாஹ்விற்கு முன்னால் சுஜூதில் விழுந்து விடுவார்கள்.
 
அந்த ஒளி வெளிப்படுத்தப்படும் பொழுது, உங்கள் இறைவனுக்கு சஜ்தா செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கப்படும். 
 
அப்பொழுது யாரெல்லாம், இந்த துன்யாவில் அல்லாஹ்வை மனத்தூய்மையோடு ஈமான் கொண்டு, இக்லாஸோடு இபாதத்கள் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்கள் எல்லாம் சுஜூதில் விழுந்து விடுவார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்; யாரெல்லாம் இந்த துனியாவில் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்வதற்கு அழைக்கப்பட்ட பொழுது, ஸுஜூது செய்யாமல் இருந்தார்களோ அல்லது சுஜூது செய்தார்கள்; ஆனால் முகஸ்துதிக்காக பெயருக்காக புகழுக்காக இபாதத் செய்து கொண்டிருந்தவர்கள், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள், இவர்களெல்லாம் ஸுஜூது செய்வதற்கு முயற்சிப்பார்கள்.
 
அவர்களால் சுஜூது செய்ய முடியாது. அவர்கள் கீழே குனிவதற்கு முன் பக்கமாக முயற்சிக்கும் பொழுது அவர்கள் பின்பக்கமாக விழுவார்கள். அவர்களுடைய பார்வைகள்எல்லாம் அந்நாளில் கேவலப்படும். அவர்களை கேவலமும் அவமானமும் சூழ்ந்துகொள்ளும். (அல்குர்ஆன் 68 : 42,43)
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4919.
 
அல்லாஹ் சொல்கிறான்; இதுதான் அவர்களுக்கு எச்சரிக்கை செய்த நாள். இந்த நாளை குறித்துதான் இறைதூதர்கள், இறைத்தூதரின் போதகர்கள் எச்சரித்துக் கொண்டிருந்தார்கள் என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து சொல்லப்படும்.
 
சகோதரர்களே! இரண்டு விசயங்களை இங்கு நாம் பார்க்கிறோம், ஒன்று அல்லாஹ்வை வணங்காது இருந்த மக்கள் அடையப்போகும் கேவலத்தை பற்றி அல்லாஹ் சொல்கிறான். 
 
இரண்டாவது, இபாதத் செய்தார்கள்; வணக்க வழிபாட்டில் கழித்தார்கள்; அவர்களுடைய உள்ளத்தில் மனத்தூய்மை இல்லை, அல்லாஹ்வுக்காக என்ற அந்த ஈமான் இல்லை. இந்த இரண்டு வகையான மக்களும் நாளை மறுமையில் அடையப்போகும் கேவலத்தை அல்லாஹ் இந்த வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இபாதத் குறித்து அவ்வளவு அழுத்தமாக ஆழமாக நமக்கு சொல்லுகிறார்கள். 
 
இந்த உலகத்திலிருந்து செல்லக்கூடியது இபாதத்தை தவிர வேறு எதுவுமில்லை. நாம் நமது மறுமையை நோக்கி வெகு விரைவாக வெகு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் மறுமையை நோக்கி, நமது மரணத்தை நோக்கி, நமது கபுரை நோக்கி நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
 
நமக்கு முன்னால் வாழ்ந்த நம்முடைய மூதாதையர்கள் எத்தனை ஆயிரக்கணக்கான மக்களை நாம் கபூருக்கு அனுப்பியிருக்கிறோம். அவர்கள் கப்ருக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் தனக்குள் விழுங்கி இருக்கிறது. 
 
அவர்களுக்குப் பின்னால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும். நமது காலமோ சொற்ப வாழ்க்கை. நமக்கு முன்னால் இருந்தவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். நாம் வாழ்வதோ வெறும் பத்து கணக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
 
ஆனால், இந்த உலக வாழ்க்கைக்காக நம்முடைய திட்டங்கள், நம்முடைய ஏற்பாடுகள் எப்படி எல்லாம் இருக்கின்றன? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வதற்குரிய திட்டங்களை போட்டு இந்த உலகத்திற்கான திட்டங்களை நாம் தீட்டிக் கொண்டிருக்கிறோம். 
 
ஆனால், மறுமை வாழ்க்கையை நோக்கி நாம் உறுதியாக நடந்து கொண்டிருக்கிறோமா? ஒவ்வொரு நாளும் ௭ந்த மறுமையை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறோமோ, அந்த மறுமை வாழ்க்கைக்கான தயாரிப்பில் எப்படி ஒரு அலட்சியத்தில் இருக்கிறோம்?
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُعْرِضُونَ
 
மக்களுக்கு விசாரணை நெருங்கிவிட்டது. ஆனால், அவர்களோ அலட்சியத்தில் விழுந்து நமது அத்தாட்சிகளை புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் 21 : 1)
 
நாம் மறுமைக்காக எதை சேகரித்துக் கொண்டிருக்கிறோமோ அதைத்தான் இந்த துனியாவிலிருந்து நாம் எடுத்துச் செல்ல முடியும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அழகிய உதாரணத்தைக் கொண்டு நமக்கு எப்படி புரிய வைக்கிறார்கள் என்று கவனியுங்கள். 
 
ஒரு மையத் இறந்து விடும் பொழுது ஒன்று, அந்த மையத் தமக்கு இருந்த தொடர்புகளை அது முறித்து கொண்டது.
 
இன்னொன்று, அது மண்ணறைக்கு செல்லும்வரை அந்த உறவு தொடர்கிறது.
 
மூன்றாவது உறவு, கப்ருக்குள்ளும் அது நீடித்து செல்கிறது. இந்த உறவு, மறுமை வரை அது நீடிக்கும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த 3 உறவுகளையும் விவரித்துச் சொல்கிறார்கள்.
 
மனிதன் இந்த துனியாவில் சேகரித்துக் கொண்டிருந்த செல்வம், அது பதவியாக இருக்கட்டும், அல்லது பொருளாதாரமாக இருக்கட்டும், தங்கம், வெள்ளி குவியலாக இருக்கட்டும், மாட மாளிகையாக இருக்கட்டும் அல்லது நிலங்களாக இருக்கட்டும்.
 
இவையெல்லாம், எப்பொழுது ஒரு மனிதன் இறந்து விடுவானோ அப்போது அந்த மனிதனுக்கும் அதற்கும் இருக்கும் உறவை முடித்துக் கொள்கிறது. அவ்வளவு தான். 
 
நாம் இறந்த பிறகு, நாம் அணிந்திருக்க கூடிய ஆடை கூட, நமக்கு சொந்தமான ஆடையில்லை. எப்படிப்பட்ட ஒரு அற்பமான தொடர்பு! 
 
எந்த செல்வத்திற்காக இரவை பகலாக்கி, பகலை இரவாக்கி நம்முடைய உடல் உழைப்பை எல்லாம் செலவழித்து கொண்டிருக்கிறோமோ, அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோமோ, எல்லா கேவலங்களையும் இதற்காக நாம் சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறோமோ, பசி பட்டினி என்று எல்லாவிதமான இன்னல்களையும் இந்த செல்வத்திற்காக நாம் தாங்கிக் கொண்டிருக்கின்ற போது, இந்த செல்வத்திற்கும் நமக்கும் இருக்கக்கூடிய அற்பமான இந்த தொடர்பை கவனியுங்கள்.
 
எனது செல்வம் எனது பணம் எனது சொத்து என்று மாறி மாறி எந்த செல்வத்திற்காக அவன் பெருமையடித்துக் கொண்டிருந்தானோ, எதை எண்ணி எண்ணி பார்த்து அவன் மமதையில் இருந்தானோ, அந்த செல்வத்தின் அற்பமான உறவை பாருங்கள்.
 
அந்த மனிதன் இறந்து விட்டால், அந்த மனிதனோடு இருக்கின்ற உறவை அப்பொழுதே அடுத்த நொடியில் அது துண்டித்துக் கொள்கின்றன.
 
அடுத்து, இந்த செல்வம் அவனுக்குரிய செல்வம் என்று சொல்லப்படாது. இது இவருக்கு உரியதாக இருந்தது என்று சொல்லப்படும். இது இவருடையது என்பதாக சொல்லப்படாது.
 
அடுத்து இரண்டாவது, உறவினர்கள், மனைவியாக இருக்கட்டும், பெற்ற தாய், தந்தையாக இருக்கட்டும், பிள்ளைகளாக இருக்கட்டும், இவர்களெல்லாம் கொஞ்ச நேரம் இவர்கள் கவலை கொள்வார்கள்; பிடிவாதமாக அழுவார்கள்; துக்கத்தால் அவர்கள் துவண்டு போவார்கள்.
 
ஆனால், கப்ரில் கொண்டுபோய் அடக்கம் செய்த பிறகு, எப்படி மண்ணை  கொண்டு அந்த மையத்தை மூடப்படுகிறதோ அதற்க்கு பிறகு இவர்களுடைய அந்த கவலைகள் எல்லாம் மறதியால் மூடப்பட்டுவிடும். 
 
மறதி என்ற ஒன்றை அல்லாஹ்  மனிதனுக்கு  கொடுத்திருக்கிறான், கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்து விடுவார்கள், மறந்து விடுவார்கள்.
 
எப்படி மறந்து விடுவார்கள் என்றால், நாம் அவர்களோடு வாழாதது போன்று ஒரு நிலைக்கு அவர்கள் வந்து விடுவார்கள். நாம் பெற்றெடுத்த பிள்ளைகளாக இருக்கட்டும், நான் கட்டிய மனைவியாக இருக்கட்டும், தாய் தந்தையாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் சரி, இந்த ஒரு நிலையை அவர்கள் வந்தடைவார்கள். நம்மை முழுமையாக மறந்து விடுவார்கள். 
 
எப்போதாவது சில காரியங்களில் ஒரு சில நினைவுகள்  வந்தால் கூட, அந்த நினைவு என்பது ஒரு சாதாரண மேலோட்டமான எண்ணமாக இருக்குமே தவிர, அவர்களுக்கு அப்படிப்பட்ட மறதியை அவ்வாறு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மறந்துவிடுவார்கள்.
 
மூன்றாவது உறவு எது? மனிதன் இந்த உலகத்தில் செய்த அமல்கள், நல்ல காரியங்கள் செயல்கள். இந்த செயல்கள் தான் அவனோடு கப்ருக்குள்ளும் செல்லும். எனவே, உங்களுடைய அந்த செயல்களை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த உறவை நீங்கள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். 
 
எந்த உறவு உங்களோடு கடைசிவரை உறவாடுமோ, அதை எப்படி சேகரித்து வைத்திருக்கிறோம்? என்பதை நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள். 
 
இன்று, நாம் எப்படி இருக்கிறோம் என்றால், முந்திய இரண்டு உறவுகளோடு நம்முடைய தொடர்பை உறுதியாக வைத்திருக்கிறோம். எந்த உறவு பலவீனமானதோ, எந்த உறவுகள் நமக்கு கை கொடுக்க முடியாதோ அதோடு உறுதியாக இருக்கிறோம்.
 
எங்கேயாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ? ஒரு மனைவி இறந்து விட்டால் கணவன் கபுருக்கு உள்ளே சென்று, அங்கே அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தான் என்று? உதவி செய்ய முடியுமா? தாய் தந்தையருக்கு உதவி செய்ய முடியுமா? யாரும் அந்த இடத்திற்கு வர இயலாது. அப்படிப்பட்ட ஒரு வெறுட்சியான இடம் தான் கப்ர் என்பது.
 
அது தனிமையின் வீடு. யாரும் அங்கு துணை இருக்க மாட்டார்கள். அமல்களைத் தவிர அல்லாஹ்வுக்காக செய்யப்பட்ட வணக்க வழிபாடுகளை தவிர எந்த ஒன்றும் அங்கு நமக்கு துணை இருக்காது. 
 
ஸஹாபாக்களுக்கும் நமக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி சொல்லும் பொழுது, சஹாபாக்கள் மறுமைக்காக எப்படி அமல் செய்வார்கள் என்றால், நாளை அவர்களுடைய மரணம் வந்து விட்டதைப் போன்று, மறுமைக்காக அவர்கள் சேகரித்து கொண்டிருப்பார்கள்.
 
நாம் எப்படி அமல்கள் செய்கிறோம் என்றால், என்னமோ நமக்கெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த உலகத்திலேயே வாழ்வதற்கு அல்லாஹு தஆலா நமக்கு விதியை முன்பே எழுதிக் கொடுத்துவிட்டான் போல, இந்த மறுமையை தூரமாக பார்த்து, மறுமையை வருகையை எதிர்பார்க்காமல் இந்த துனியாவில் மூழ்கிக் கிடக்கிறோம். 
 
அல்லாஹு தஆலா கண்ணியத்திற்குரிய குர்ஆன் இறக்கப்பட்ட மாதத்தை கொடுத்தான். அந்த மாதம் எப்படி வந்தது? எப்படி அது நம்மை விட்டு பிரிந்து சென்றது? என்பதை நாம் இப்பொழுது நினைவுபடுத்த முயற்சி செய்தால் கூட முடியவில்லை. 
 
அந்த அளவுக்கு அந்த மாதம் வந்ததும் பிரிந்ததும் ஒரு கண் சிமிட்டும் நேரத்தை போன்று இருந்ததை பார்க்கிறோம்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9 : 36)
 
இதுபோன்று, எத்தனை ரமழான்கள், எத்தனை கண்ணியத்திற்குரிய குர்ஆனுடைய மாதங்கள் வந்து சென்றிருக்கின்றன.
 
அல்லாஹு தஆலா புகழ்ந்திருக்கக்கூடிய இந்த ஷவ்வால் உடைய மாதம், துல்கஅதா உடைய மாதம், துல்ஹஜ் மாதம், இவையெல்லாம் அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய மாதங்கள் ஆகும்.
 
மற்ற மாதங்களில் செய்யக்கூடிய பாவங்களை விட, இந்த மாதத்தில் செய்யக்கூடிய பாவம் தண்டனைகளில் பயங்கரமானது. அல்லாஹ்வுடைய கோபத்தால் கடுமையானது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
 
ஏன் இப்படிப்பட்ட காலங்களை எல்லாம் மாற்றி மாற்றி கொடுக்கின்றான் என்றால், எப்பொழுதுமே அவன் பாவங்களை விட்டும் தூரமாக இருக்க வேண்டும், பாவங்களை நினைத்து அவன் பயந்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப்பட்ட புனித காலங்களை அல்லாஹ் கொடுக்கிறான்.
 
அப்படிப்பட்ட புனித காலங்களில் நம்மிடத்தில் இருக்கக்கூடிய இறையச்சம், மற்ற மாதங்களிலும் பாவத்தை விட்டு நம்மை தூரமாக்கி விட வேண்டும். அல்லாஹ்வின் பயத்தை நமக்கு அதிகப்படுத்த வேண்டும். இபாதத்களில் நமது கவனத்தை திருப்ப வேண்டும்.
 
ஏன் இப்படி அல்லாஹ் நமக்கு மாதங்களில் சிலதை கண்ணியத்திற்குரியதாகவும், சில மாதங்களை புனிதமானதாகவும், சில மாதங்களை அமலுக்குரியதாகவும் ஏன் இப்படி மாற்றி மாற்றி அமைத்து இருக்கிறான்?
 
காரணம், இந்த காலங்களில் சரியாக இருந்து, இதற்குப் பின்னுள்ள மாதங்களில் இறையச்சத்தோடு இந்த அடியான் வாழவேண்டும்; இபாதத்களோடு இந்த அடியான் வாழவேண்டும்; மறுமையை நினைத்து வாழ வேண்டும்; அல்லாஹ்வின் சட்டங்களை பேணுவதற்குரிய பக்குவத்தோடு அவன் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு பயிற்சி.
 
ஏதோ மாற்று மதத்தவர்கள் வைத்திருப்பது போல, ஒரு மாதத்தை சடங்குக்காக வைத்துக்கொண்டு, ஒரு நாளை சடங்குக்காக வைத்துக்கொண்டு, மற்ற மாதங்களில் பாவங்களும் அழிச்சாட்டியகளும் அநியாயங்களும் ஆடல் பாடல் என்று உலக ஆபாசங்களில் ஈடுபடுவதை போன்று ஒரு முஸ்லிமானவன் இருக்க முடியாது.
 
ஒரு முஸ்லிம், ரமழான் உடைய மாதத்தில் வணக்க வழிபாடுகளை செய்கிறான், குர்ஆனை ஓதுகிறான். ஆனால் ரமழான் முடிந்ததற்கு பிறகு, அவன் தொழவில்லை என்றால், இவன் அல்லாஹ்வை தொழுததாக எண்ணாதீர்கள்; இவன் அல்லாஹ்வை இபாதத் செய்தவனாக எண்ணாதீர்கள்.
 
இந்த ரமலான் என்ற அந்த மாதத்தை வணங்கியிருக்கிறான். அந்தக் காலத்தை தான் இவன் தொழுது இருக்கிறானே தவிர, அல்லாஹ்வை அவன் தொழவில்லை. 
 
காரணம், இவன் அல்லாஹ்வைத் தொழுதவனாக இருந்தால், இவன் அல்லாஹ்வை இபாதத் செய்தவனாக இருந்திருந்தால் அந்த அல்லாஹ் ரமலானிலும் இருக்கிறான், ரமழானுக்கு பிறகும் இருக்கிறான்.
 
எனவே, அவன் எப்பொழுதும் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு ஏற்ப வணங்கி இருப்பான். ரமலானில் மட்டும் தொழுதுவிட்டு, ரமலானில் மட்டும் மஸ்ஜிதிற்கு வந்துவிட்டு, ரமழான் முடிந்ததற்கு பிறகு அவன் அல்லாஹ்வை தொழுகவில்லை என்றால், மஸ்ஜிதிற்கு வரவில்லை என்றால், ரமலானுடைய மாதத்தில் பாவங்களிலிருந்தும் மனோ இச்சைகளிலிருந்தும் தன்னைத் தடுத்துக் கொண்டிருந்தவன், அசிங்கமான ஆபாசமான செயல்களில் இருந்து தன்னைத் தடுத்துக் கொண்டிருந்தவன்,  ஹராமில் இருந்து தன்னைத் தடுத்துக் கொண்டிருந்தவன், ரமலான் முடிந்ததற்கு பிறகும் மீண்டும் அந்த தடுக்கப்பட்ட ஹராமான அசிங்கமான ஆபாசமான தடுக்கப்பட்ட காரியங்களில் அவன் திரும்ப செல்வானேயானால், அவன் உண்மையில் அல்லாஹ்வைப் பயந்து அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவன் அந்த பாவங்களிலிருந்து விலகி இருக்க வில்லை.
 
ஒரு மாதத்தை சடங்காக அவன் செய்து, அந்த மாதத்திற்காக அவன் அவ்வாறு செய்து கொண்டிருந்தானே தவிர, அல்லாஹ்வுக்காக அல்ல.
 
ஆகவே, அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமக்கு இபாதத்துக்காக கொடுத்திருக்கக் கூடிய இந்த உலக வாழ்க்கை, ஒவ்வொரு நாளும் ஒரு சுய பரிசோதனையில் தான் இருக்க வேண்டும். நம்முடைய வணக்க வழிபாடுகள் அதிகரிக்கின்றனவா? நம்முடைய மார்க்கத்தின் பற்று அதிகரிக்கின்றனவா?
 
ஏன் இந்த விஷயத்தை ரமலானுடைய இந்த ஒரு பிரிவுக்கு பிறகு நாம் ஆழமாக சிந்தித்து உணர வேண்டுமென்றால்,  சமீப காலங்களில் நம் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய சோதனைகளை பார்க்கும்பொழுது, எதிரிகள் நம் மீது சாட்டப்படுவதைப் பார்க்கும் பொழுது, கண்டிப்பாக ஒரு சுய பரிசோதனைக்கும் சுய சீர்திருத்தத்திற்கும் நாம் தள்ளப்பட்டே ஆகவேண்டும்.
 
அல்லாஹ் சுபஹானஹு வதஆலா கண்டிப்பாக சோதிப்பான். ஆனால், முஃமின்களை பொறுத்தவரை அந்தச் சோதனைக்குப் பிறகு உடனடியாக அல்லாஹு தஆலா வெற்றியை கொடுப்பான்.
 
ஆனால், காலங்காலமாக உலகமெல்லாம் முஸ்லிம் சமுதாயம் சோதிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அவர்களுடைய உறவில் இருந்து, அவர்களுடைய குடும்பத்தில் இருந்து, அவர்கள் பிறந்து வளர்ந்த அவர்களுடைய சொந்த நாட்டிலிருந்து, அவர்கள் அந்நியப்படுத்தப்பட்டு கொண்டு வருகிறார்கள். 
 
அவர்கள் மீது எதிரிகள் சாட்டப்பட்டு குழந்தைகளையும், பெண்களையும் மிருகத்தனமாக கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இதற்கு அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழக்கூடிய முஸ்லிம்களுடைய செயல்கள் தான் காரணம் என்று யாரும் நினைத்து விடாதீர்கள்!
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா இந்த முஃமின்களை ஒரு கட்டிடத்தை போன்று அமைத்திருக்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
«المُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا»
 
முஃமின்கள் உடைய உதாரணம் எப்படி என்றால், உறுதியாகக் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை போன்று. அந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது. 
 
அதுபோன்று, கட்டடத்தின் ஒரு பகுதி பாழாகி விடுமேயானால் அது முழு கட்டிடத்தையும் வந்து சேரும்.
 
அறிவிப்பாளர் : அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2446.
 
ஒரு முஸ்லிம் பாவம் செய்கிறானேயானால் அந்த பாவத்திற்காக இறங்கக் கூடிய தண்டனை என்பது அந்த முஸ்லிமின் மீது மட்டும்தான் வரும் என்பதாக நினைத்து விடாதீர்கள். 
 
அதனுடைய பாதிப்பு நல்ல மக்களின் மீதும் இறங்கும். நல்ல மக்களும் அதனால் பாதிப்புக்கு ஆளாவார்கள். 
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
 
நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8 : 25)
 
அந்த வேதனை பாவிகளுக்கு மட்டும் வராது. அல்லாஹ்வுடைய வேதனை வந்தால் அந்த வேதனையில் நல்லவர்களும் ஆளாவார்கள்.
 
ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் கேட்கிறார்கள்; 
 
يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ»
 
யா ரசூலல்லாஹ்! எங்களில் நல்லவர்கள் இருக்கும் பொழுதும் நாங்கள் அழிக்கப் படுவோமா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; ஆம் தீமை மிகைத்து விடுமேயானால், அப்பொழுது தண்டனை வரும்பொழுது நல்லவர்களும் அந்த தண்டனையில் சிக்குவார்கள்.
 
அறிவிப்பாளர் : ஜைனப் ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 3598.
 
உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கலாச்சாரச்  சீரழிவுகளை பார்ப்போமேயானால், அந்நியர்களை போன்ற ஒரு வாழ்க்கை அவர்களுடைய ஆடை அலங்காரங்கள், அன்னியர்களை போன்று குறிப்பாக பெண்கள் இடத்தில் ஏற்பட்ட கலாச்சார சீரழிவு, கல்வி என்ற பெயரில் உலக செல்வத்தை சம்பாதிக்க வேண்டும், தரமான வாழ்க்கை வேண்டும் என்ற பெயரில் இஸ்லாமிய கலாச்சாரத்தை புறந்தள்ளி, மாற்றார்களைப் போன்று தங்களுடைய உடைகளையும், பாவனைகளையும், கலாச்சாரங்களையும் மாற்றிக்கொண்டு வணக்க வழிபாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு வெட்கமற்ற கேவலமான ஒரு கலாச்சாரத்தில் நமது முஸ்லிமான பெண்கள் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அதுபோன்றுதான், குறிப்பாக இஸ்லாமிய வாலிபர்கள் அவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் கொஞ்சம் எடுத்துப் பாருங்கள்! இவர்களது வழிகாட்டிகளாக யார் இருக்கிறார்கள்? யார் சினிமாவில் நடிக்கிறார்களோ, யார் பாடல்களில் வருகிறார்களோ, இவர்கள்தான் இன்று நமது இஸ்லாமிய வாலிபர்களுடைய வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். 
 
இஸ்லாமிய வாலிபர்களுடைய நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்படியோ அப்படித்தான் இவர்கள்; அவர்களுடைய உடைகள் எப்படியோ அப்படித்தான் இவர்களுடைய உடை; அவருடைய பேச்சு எப்படியோ அப்படித்தான் இவர்களுடைய பேச்சு; ஒட்டுமொத்தமாக ஒட்டு மொத்த வாழ்க்கையே அவர்களைப் பார்த்து தான் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
எத்தனை முஸ்லிம் வாலிபர்கள், அவர்களிடத்தில் இபாதத்கள் இல்லாமல் இருப்பது ஒருபுறம், இன்னொரு பக்கம், எல்லா விதமான கெட்ட பழக்கங்களும் அவர்களிடம் இருக்கின்றன.
 
ஒவ்வொரு வாலிபனுக்கும் ஒரு தோழி என்றல்ல, எத்தனை பெண் நண்பர்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டு, அவர்களோடு தங்களது நேரத்தை வீணாக்கி, அல்லாஹ் தடுத்த ஹராமான பாவங்களில் அவர்கள் தங்களது காலங்களை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
நமது சமுதாயத்தில் அன்றாடம் நாம் பார்க்கிறோம்; வீட்டை விட்டு வெளியேறினால் நமது முஸ்லிமான ஆண் பெண் வாலிபர்கள், அந்த இளம் வயதுடைய நமது சமுதாய தலைமுறை, எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்கிறோம். 
 
பெண்களிடத்தில் முறையான ஹிஜாப் இல்லை, பெண்களிடத்தில் வெட்க உணர்வுகள் இல்லை, அந்நிய ஆண்களோடு பழகக் கூடிய ஒரு சூழ்நிலை.  எத்தனை பெண்கள் எத்தனை ஆண்கள் ஒவ்வொரு நாளும் காஃபிர்களோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 
 
இவையெல்லாம் அல்லாஹ்வின் கோபத்தை உடனடியாக இறக்கக்கூடிய பாவங்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சோதிக்கக் கூடிய இந்த சோதனை என்பது ஒரு குறைந்த அளவு சோதனை தான். ஆம்! அப்படித்தான் அல்லாஹ்வும் சொல்கிறான்:
 
وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
 
மறுமையின் பெரிய வேதனைக்கு முன்பாக சிறிய வேதனையை நாம் அவர்களுக்கு சுவைக்கச் செய்வோம், அவர்கள் பாவத்திலிருந்து திரும்ப வேண்டும் என்பதற்காக. (அல்குர்ஆன் 32 : 21)
 
இன்று பாலஸ்தீனில் காஸாவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதும், நேற்று செசன்யாவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, பர்மாவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, இவையெல்லாம் அல்லாஹ் உடைய ஒரு சோதனையாக இருக்குமோ, அல்லாஹ்வினுடைய ஒரு தண்டனையாக இருக்குமோ என்று பயந்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.
 
அந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனை கண்டிப்பாக உலகத்தில் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று கூறக்கூடிய முஸ்லிம்களுடைய சோதனை.
 
அங்கு ஒரு முஸ்லிம் குழந்தை அநியாயமாக கொடூரமாக கொல்லப்படுகிறது என்றால், கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் தனது வீட்டில் நடப்பதாக நினைப்பார்கள்.
 
அங்கு ஒரு முஸ்லிம் கொடூரமாக எதிரிகளால் கொல்லப்படுகிறார் என்றால், அல்லது சிறைக்கூடங்களில் சித்திரவதை செய்யப்படுகிறார் என்றால், நமது உறவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள். 
 
ஏதோ நம்மை விட்டு அவர்கள் தூரமாக இருக்கிறார்கள், நமக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமில்லை, அல்லது ஏதோ சில கோஷங்களை செய்து விட்டாலோ, அல்லது சில எம்பசிகளை முற்றுகையை செய்து விட்டாலோ நமது பொறுப்பு நீங்கிவிடும், கடமை நீங்கிவிடும் என்று நினைத்துவிடாதீர்கள்.
 
அதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அல்லாஹ்விடத்தில் திரும்ப திரும்பத் தவ்பாச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து விடு! அவர்களின் பாவங்களையும் மன்னித்து விடு! என்று கேட்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நமக்காகவும், முதலில் அவர்களுக்காகவும் விரைவாக பாவமன்னிப்பு தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
நாம் அல்லாஹ்வின் பக்கம் திரும்பாமல், அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்காமல், அமல்களை சீர் செய்து கொள்ளாமல், உலகம் எல்லாம் நமக்கு உதவி செய்ய வந்தாலும், உலகம் எல்லாம் ஒன்றுகூடி வந்து நம்மை காப்பாற்ற முயற்சி செய்தாலும், நம்மை காப்பாற்ற முடியாது.
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
 
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 3 : 160)
 
அல்லாஹு தஆலா தன் மீது சத்தியம் செய்து கடமையாக்கிக் கொண்டான். அல்லாஹ் கூறுகிறான்:
 
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
 
நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 30 : 47)
 
அல்லாஹு தஆலா முஸ்லிம் என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தவில்லை, எங்கெல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உதவி என்று வருகிறதோ, ஈமான் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
 
நம்முடைய இறைநம்பிக்கை, அந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செயல்கள், நம்முடைய தொழில்துறை, வணக்க வழிபாடுகள், குடும்பம், அல்லாஹ்வுடைய கட்டளைக்கு ஏற்ப இல்லாதவரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவி பாதுகாப்பை நாம் பெற முடியாது.
 
ஆகவே, அந்த முஸ்லிம்களுக்கு இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்க கூடிய அந்த துன்பங்களை அந்த முஸ்லிம்களுக்காக நாம் வருத்தப்படுவதோடு மட்டும் நின்று விடாமல், கோஷங்களை மட்டும் எழுப்புவது மட்டுமல்லாமல், உளப்பூர்வமாக அல்லாஹ்வின் பக்கம் நமக்கும் அவர்களுக்கும் தவ்பா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
யா அல்லாஹ்! எங்களையும் உனது மார்க்கத்தின் பக்கம் திருப்பு, அவர்களையும் உன்னுடைய மார்க்கத்தின் பக்கம் திருப்பு!
 
எங்களில் வழி தவறியவர்களை நேரான வழியின் பக்கம் திருப்பு! யா அல்லாஹ் எங்கள் பாவங்களின் காரணமாக எங்கள் மீது எங்களது எதிரிகளைச் சாட்டி விடாதே!
 
யா அல்லாஹ்! பலவீனமான நாங்கள் மீண்டும் உனது மார்க்கத்திற்கு வருவதற்கு எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று கேட்கக்கூடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
இன்னொரு பக்கம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று, எதிரிகளை குறித்து எப்போதும் அச்சமற்ற நிலையில், பயமற்ற நிலையில், அலட்சியமான நிலையில் நீங்கள் இருந்து விடாதீர்கள் என்ற தெளிவான கட்டளையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
 
அல்லாஹு தஆலா, முஃமின்களைப் பார்த்துச் சொல்கிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ
 
முஃமின்களே! எப்போதும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். (அல்குர்ஆன் 4 : 71)
 
எப்போதும் நீங்கள் பாதுகாப்போடு இருங்கள், எப்போதும் நீங்கள் உஷாராக இருங்கள் என்று சொல்லியிருக்கிறான். 
 
நாம் என்ன செய்கிறோம்? நம்முடைய துனியாவின் வாழ்வில் சீரழிந்து கொண்டிருக்கக்கூடிய நாம் முதலில் நாம் நம்முடைய ஒற்றுமையை இழந்துவிட்டோம். கூட்டங்களாக, பல பிரிவுகளாக, பல இயக்கங்களாக பிரிந்து நமது ஒற்றுமையை குலைத்து வைத்திருக்கிறோம்.
 
எந்த சமுதாயத்தில் ஒற்றுமை இல்லையோ அந்த சமுதாயத்தின் பெரிய வீரனை கூட மிகப் பெரிய பலசாலி கூ,ட எதிரி சமுதாயத்தில் உள்ள ஒரு சிறுவன் அடித்து செல்வான். ஒரு சிறுவன் கேவலப்படுத்துவான்.
 
காரணம், இவனை அடித்தால் கேட்பதற்கு நாதியில்லை. அவர்களை பொறுத்தவரை அந்த சிறுவனுக்கு இருக்கக்கூடிய மனதைரியம் நம்மில் உள்ள வீரர்களுக்கு இருக்காது, ஒற்றுமை இல்லாத காரணத்தால்.
 
ஆகவே, நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய பிளவுகளை கருத்து வேற்றுமைகளை குர்ஆன் ஹதீஸைக் கொண்டு நாம் தீர்த்து, நமக்கு மத்தியில் ஒற்றுமை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
ஒவ்வொரு முஸ்லிமும் தன்னைப் பொறுத்தவரை தனது உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதோடு, ஒவ்வொரு முஸ்லிமும் எப்பொழுதும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்கு, அல்லாஹ்வின் பாதையில் தனது சமுதாயத்தை பாதுகாப்பதற்கு, தன்மீது தனது சமூகத்தின் மீதும் கொடுமைகள் எடுக்கப்பட்டால், அதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய உடல் வலிமையை மன தைரியம் உடையவராக இருக்க வேண்டும்.
 
அவருடைய செல்வமோ அல்லது அவருடைய வேறு எந்த ஒன்றுமோ அவரை கோழைபடுத்தி விடக்கூடாது. உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. 
 
குறிப்பாக பலவீனத்தை ஏற்படுத்தக்கூடியது எது என்றால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; 
 
«يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا»، فَقَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ: «بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ، وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ، وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ»، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْوَهْنُ؟ 
 
நாளை மறுமைக்கு முன்னால் ஒரு காலம் இப்படி வரும், மாற்றார்கள் உங்கள் மீது இப்படி பாய்வார்கள். எப்படி என்றால், உணவு விரிப்பில் வைத்திருக்கக்கூடிய உணவின் மீது சாப்பிடக் கூடியவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த உணவை எடுத்து சாப்பிடுவது போன்று. உங்கள் மீது அப்படி போட்டி போட்டுக் கொண்டு பாய்வார்கள்.
 
ஸஹாபாக்கள் கேட்டார்கள்; யா ரசூலல்லாஹ்! நாங்கள் அந்த நேரத்தில் எண்ணிக்கையில் குறைந்து இருப்போமா? என்று கேட்டார்கள் 
 
நபியவர்கள் சொன்னார்கள்; இல்லை, நீங்கள் அதிகமாக இருப்பீர்கள். ஆற்றின் வெள்ளத்தில் மேல் ஓடக்கூடிய அந்த நுரை போன்று நீங்கள் இருப்பீர்கள். அந்த அதிகம் உங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் கொடுக்காது. காரணம் ஒன்றுமில்லாத அதிகமாக இருப்பீர்கள். பலவீனம் உங்களது உள்ளத்தில் வந்துவிடும்.
 
சஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! பலவீனம் என்று எதை நீங்கள் சொல்கிறீர்கள்? நபியவர்கள் சொன்னார்கள்;
 
قَالَ: «حُبُّ الدُّنْيَا، وَكَرَاهِيَةُ الْمَوْتِ»
 
துனியாவினுடைய முஹப்பத் உங்களுக்கு வந்துவிடும். மவுத் உடைய வெறுப்பு உங்களுக்கு வந்துவிடும்.
 
அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4297.
 
இந்த நோய் நமது உள்ளத்தில் இருப்பதை பார்க்க வேண்டும், அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு (அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக) பெரும் படைகளை அழைத்துச் சென்று, பெரும் ஆயுதங்களை எடுத்துச் சென்று, அந்த பாரசீகப் பேரரசை வீழ்த்தவில்லை!
 
அவர்கள் அழைத்துச் சென்றது, ஒரு குறைந்த அளவில் உள்ள படையை தான். ஆனால், அந்த படையைப் பற்றி காலித் சொல்வதைப் பாருங்கள்!
 
அவர்கள் கடிதம் எழுதும் பொழுது, என்னோடு ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு மரணம் எப்படி விருப்பம் என்றால், உங்களுக்கு எப்படி மதுவின் மீதும், வாழ்வின் மீதும் விருப்பம் இருக்கிறதோ அந்த அளவிற்கு மரணத்தை விரும்பக்கூடிய கூட்டத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார்கள்.
 
ஆகவே, அல்லாஹ்வுடைய தீனை முதலில் நமது வாழ்க்கையில் பாதுகாப்பது நமது கடமை. நமது சமுதாயத்தில் பாதுகாப்பது நமது கடமை.
 
நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய பொறுப்பை கண்டிப்பாக நமது குடும்பத்தில் இருந்து, நமது சமுதாயத்தில் இருந்து, நமது நண்பர்களிலிருந்து, மற்றும் எல்லா மக்களுக்கு மத்தியிலும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 
 
அடுத்ததாக, உலகத்தில் பாதிக்கப்படக்கூடிய அந்த பலவீனமான முஸ்லிம்களுக்காக, அல்லாஹ்விடத்தில் தனிமையில் துஆ கேட்க வேண்டிய கண்ணீர் சிந்தி அல்லாஹ்விடத்தில் மன்றாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
அந்த துஆவில், யா அல்லாஹ்! அவர்களுக்கு உதவி செய் என்ற வார்த்தை மட்டும் நாம் சொல்லாமல், யா அல்லாஹ்! எங்களையும் அவர்களையும் மார்க்கத்தின் பக்கம் திருப்பு! பாவங்களிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்! எங்களை முழு முஸ்லிம்களாக முஃமின்களாக ஆக்கிவிடு!
 
இந்த துஆக்களோடு, அவர்களுடைய மறுமை வாழ்க்கைக்காக, அவர்களில் யார் இறந்துவிட்டார்களோ அவருடைய மறுமை வாழ்க்கைக்காகவும், எஞ்சி இருக்கக்கூடிய மற்றும் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய முஸ்லிம்களுடைய பாதுகாப்பிற்காகவும், அவர்களுடைய நல்ல வாழ்க்கைக்காகவும் துஆ செய்வோமாக!
 
அல்லாஹு தஆலா அவர்களுடைய மார்க்கத்தையும் அவர்களுடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட நம்மையும் பாதுகாத்து அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/